நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை2

மைந்தன் சென்றபின் போத்யர் தன் இல்லத்தின் சிறிய திண்ணையிலேயே நாளின் பெரும்பகுதியை கழித்தார். ஒவ்வொரு நாளும் அவர் இளையோன் இல்லத்திலிருந்து எவரேனும் அவருக்கு இரு வேளை அன்னம் கொண்டுவந்து படைத்தனர். முதலில் அவர் தயக்கமும் அச்சமும் கொண்டிருந்தார். முதல் நாள் அவரிடம் வந்து “மூத்தவரே, தாங்கள் விழைந்தால் நான் சமைக்காத அரிசியை கொண்டுவந்து படைக்கிறேன். அதில் தீட்டு இல்லை. தாங்கள் வேண்டுமெனில் தங்கள் அன்னக்கலத்தை திண்ணையில் வைக்கலாம். எவரென்றே அறியாமல் அதில் நான் பிச்சையிட்டுச் செல்கிறேன். சூதர் பிச்சை பெறலாம் என்று நெறியுள்ளது. அப்பிச்சை அன்னமென்றால் அதை எவரளித்தார் என்பது பொருட்டல்ல என்பதும் அதன் பொருட்டு அவருக்கு பழி சேராது என்பதும் நமது நூல் கூற்று” என்றார்.

போத்யர் அவரை நேர்நோக்கி “சமைத்த அன்னமே கொண்டுவருக! உன் இல்லத்தில் இல்லாள் உலையில் அரிசி இடுகையில் முதல் கைப்பிடியை வழக்கம்போல நீத்தோர் வடிவிலெழும் காகங்களுக்கு என இடுக! இரண்டாம் கைப்பிடியை எனக்கென எண்ணி இடுக!” என்று கூறினார். முல்கலர் விழிகளில் தத்தளிப்பு தெரிந்தது. “மூத்தவரே, நான் இன்றும்கூட சூதுக்களத்தில் பாடியே பொருளீட்டுகிறேன்” என்றார். “ஆகுக!” என்றார் போத்யர். “பழி சேர்த்த அன்னம் அது. தாங்கள் இதுகாறும் வாழ்ந்து ஈட்டிய அனைத்தையும் அதனூடாக இழக்கிறீர்கள் என உணர்க!” என்று அவர் சொன்னார்.

“ஈட்டிய அனைத்தையும் இழந்தாகவேண்டும் நான்” என்று போத்யர் சொன்னார். “நான் எந்நெறியையும் பேணுவதில்லை. குலநெறியை, குடிநெறியை. மானுடநெறியையும்கூட” என்று முல்கலர் சொன்னார். “ஆகுக!” என்று மீண்டும் போத்யர் சொன்னார் “தங்கள் குடிமூத்தார் ஈட்டியவையும் இவ்வண்ணம் பழி கொள்கின்றன” என்று அவர் மீண்டும் சொல்ல “ஆகுக!” என்று அவர் மூன்றாம் முறையும் மறுமொழி சொன்னார். முல்கலர் அவரை நோக்கி நின்றார். அவரால் மூத்தவரின் உள்ளத்தில் ஓடுவதென்ன என்று உணர முடியவில்லை. அந்தத் தெளிவின்மை அச்சத்தை அளித்தது. அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

முல்கலரின் இல்லத்திலிருந்து அவர் இல்லாள் சமைத்த அன்னம் அவருக்கு வந்தது. அவர் அதை அத்திண்ணையில் வைத்து உண்டார். ஒவ்வொரு முறையும் அன்னத்தை மூன்றாகப் பகுத்து ஒரு பகுதியை மூத்தோருக்கென காகங்களுக்கும், ஒரு பகுதியை இரவலருக்கும் வைத்துவிட்டு, ஒரு பகுதியை தான் உண்பது அவர் வழக்கம். அவ்வன்னத்தையும் அவ்வாறே பகிர்ந்தார், அவ்வன்னத்தை உண்ண காகங்கள் வந்தன. ஒவ்வொரு நாளும் அவர் இடும் அன்னத்தை எதிர்நோக்கி இரவலன் ஒருவன் திண்ணையருகே காத்து நின்றிருந்தான். காகத்திற்கு உணவளிக்கையில் அவர் விழிகள் வெறிப்புகொண்டிருந்தன. இரவலருக்கு அளிக்கையில் அவர் விழிகள் கனிந்திருந்தன. உண்டு முடித்து கைகளையும் வாயையும் கலத்தையும் கழுவி அமர்ந்து வெயில் விரித்த சாலையை பொருளின்றி வெறித்துக்கொண்டிருந்தார்.

அவர் விழிகளின் முன்பாக நகரம் உருமாறிக்கொண்டிருந்தது. போர் நிலைத்தபின் நகர் முற்றொழிந்தது. ஓசையவிந்து இடுகாடென்றாகியது. காற்று வெறுமையில் துழாவி அலைந்தது. பின்னர் புது மக்கள் நகருக்குள் குடிவரத் தொடங்கியதும் மீண்டும் அங்கே பொருள் செறியலாயிற்று. சந்தைகள் முளைத்தெழுந்தன. அங்கு மானுடரின் குரல் எழுந்தது. நுரை நுரையென ஓசைகள் எழுந்து நகர் நிறைந்தது. முல்கலர் முதலில் தயங்கிக்கொண்டிருந்தார். “மூத்தவருக்கு உணவளிக்கிறோம். நாம் இன்றேனும் இதை ஒழியலாம்” என்று அவர் சொன்னார். அவர் மனையாட்டி “வேறென்ன செய்வதாக எண்ணம்? நம் களஞ்சியம் ஊற்று அல்ல” என்றாள். அவர் அவளை சில கணங்கள் நோக்கியபின் பெருமூச்சுவிட்டார். “ஆம், நான் வேறெங்கும் செல்ல இயலாது” என்றார்.

கேளிக்கைநிலைகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. நின்றிருக்க இடமில்லாமல் செறிந்து அவை பக்கவாட்டில் பெருத்தன. முல்கலர் பொருள் மிகுந்தவர் ஆனார். பட்டு அணிந்து, அணிகள் சூடி, பல்லக்கில் ஏறி அவர் நகரத்திற்குள் சென்றார். ஒவ்வொரு நாளும் மது அருந்தி நிலையழிந்து மடி நிறைய பொன்னுடன் பல்லக்கில் படுத்து திரும்பி வந்தார். முதல் சில நாட்களில் அவரிடமிருந்த பணிவு மெல்ல மெல்ல அகன்றது. அவருக்கு அன்னமிடுபவர் தானே என்ற எண்ணம் முதலில் ஓர் கூடாக் கருத்தென எழப்பெற்று நடுங்கி திகைத்து அதை ஒதுக்கினார். பின்னர் தன் ஆழத்திலிருந்து அச்சமும் பதற்றமுமாக அதை எடுத்து எடுத்து நோக்கினார். பின்னர் அதை உடன் வைத்துக்கொண்டார் அதை ஒரு மந்தணப் படைக்கலமெனப் பயின்றார். அது தனக்கு காவலும் துணையுமாவதை பின் உணர்ந்தார். அதில் மகிழலானார்.

பின்பு தன் இல்லாளிடம் அதை சொல்லத் தொடங்கினார். தன் மைந்தரிடம் சொன்னார். ஒவ்வொரு முறையும் அவருக்கு உணவு அனுப்பும்போது அதை கூறினார். பின்னர் ஒருநாள் மெல்லிய மதுக்களியில் அவர் முன் வந்துநின்று அதை உரைத்தார். “அன்னம் வந்துகொண்டிருக்கிறது அல்லவா? அன்னம் நிறைவு அளிக்கிறதா? உண்க, உண்க… அது நான் ஈட்டிய அன்னம்” என்றார். “ஆனால் தங்களுக்கு அன்னமிடுவதென்பது எவ்வகையிலும் என் கடமை அல்ல. ஏனெனில் நெடுநாட்களுக்கு முன்னரே நான் குலமொழிவு செய்யப்பட்டவன். எனக்கு குலமில்லை. மூதாதையரின் வாழ்த்துகள் எனக்கில்லை என்று அறிவேன். எனில் மூதாதையர் எனக்கு அளித்த எக்கடமையையும் நான் செய்யவேண்டியதில்லை. எனக்கு மானுட அறம்கூட பொறுப்பென இல்லை.”

“எனினும் இவ்வன்னம் ஏன் இங்கு வருகிறதென்றால் அது எனது பெருந்தன்மையால். அல்லது நான் ஊழுடன் கொண்ட ஆடலால். அல்லது என் ஆணவத்தால். தங்கள் மேல் கொண்ட அளியால் அல்ல. உடன்குருதியினர் பசித்திருக்க உண்ணமுடியாத எனது நேர்மையாலும் அல்ல. இதை உண்கையில் என்னை பழித்தபடி என் வாழ்வை இகழ்ந்தபடி உண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் பழி சேர்வது எனக்கல்ல, உங்களுக்குத்தான்” என்றார். போத்யர் புன்னகையுடன் அவரை நோக்கியிருந்தார். “புன்னகையுடன் இதை நீங்கள் கடக்க முடியாது. ஏனென்றால் இது குருதிச்சோறு. நிணச்சோறு. சீழ்ச்சோறு. பழிசேர்ந்த கீழ்ச்சோறு. அன்றாடம் நான் உண்பதன் மிச்சில்” என்றார்.

அன்று தன் அறைக்குத் திரும்புகையில் அவர் உடல் பலமடங்கு வீங்கிவிட்டிருப்பதைப்போல் உணர்ந்தார். நிலைகொள்ளாமல் பல இடங்களில் முட்டிக்கொண்டார். மனைவியிடம் “நான் இன்று தெய்வங்களுக்கு மறுமொழி சொன்னேன். என்னைப் பழித்த அத்தனை தெய்வங்களும் தலைகுனிந்து நிற்கக் கண்டேன்” என்று நகைத்தார். “இனி நான் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. எந்தத் தெய்வமும் என் முன் வந்து நின்றிருக்க அஞ்சும்” என்றார். ஆனால் அன்று இரவு களிமயக்கு உடல்நீங்கியதும் விழிப்புகொண்டு திகைப்புடன் இருளை நோக்கிக்கொண்டிருந்தார். உளமுருகி இருளுக்குள் தனிமையில் அழுதார். “தந்தையே, தந்தையே” என்று விசும்பினார். அவர் மனைவி அவ்வழுகையை முன்பும் கண்டவள். அவள் அதை பொருட்படுத்தவில்லை. நெடும்பொழுதுக்குப் பின் அவர் தன் அன்னையை நினைவுகூர்ந்தார். பின் அமைந்து துயில்கொண்டார்.

ஆனால் இரு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அவரிடம் வந்து “இன்று நான் உணவு உண்ணும்போது உணர்ந்தேன் என் உணவு இத்தனை சுவையாக இருப்பது ஏன் என்று”
என்றார். எக்களிப்பும் விக்கலுமாக “அது வெற்றியின் சுவை! ஆம் வெற்றி!” என்று கூவினார். நடுத்தெருவில் நின்று “கேளுங்கள் சூதர்களே, இழிமக்களே, கேளுங்கள். இதோ நான் வென்றிருக்கிறேன். இதோ, நீங்கள் துறந்துசென்ற இத்தெருவில் அரசன் என நின்றிருக்கிறேன். இந்தத் தெருவையே விலைக்கு வாங்கும் பொருள்கொண்டவன் நான். என்னை அடிபணிந்தவர் அனைவருக்கும் அன்னமிடும் ஆற்றல் கொண்டவன்” என்று கூவினார்.

தன் வீட்டுக்குள் புகுந்து கை நிறைய வெள்ளி நாணயங்களை அள்ளிக்கொண்டு வந்தார். அவர் மனைவி பின்னால் ஓடிவந்தாள். “என்ன செய்கிறீர்கள்? நில்லுங்கள்… என்ன செய்கிறீர்கள்?” என்று கூச்சலிட்டாள். அவர் நாணயங்களை தெருவில் அள்ளி வீசினார். “பொறுக்கிக்கொள்ளுங்கள்… நாய்களே, வந்து பொறுக்கிக் கொள்ளுங்கள்” என்று கூவினார். நான்கு பக்கமிருந்தும் வறிய சூதர்கள் பஞ்சை உடல்களுடன் பாய்ந்து வந்து புழுதியில் விழுந்து புரண்டு ஒருவரோடொருவர் போரிட்டு அவற்றை பொறுக்கினர். ஒருவரை ஒருவர் கடித்துக் கீறி கூச்சலிட்டனர். அவர் அவர்களை நோக்கி நின்றார். ஒரு விழியிலிருந்து நீர் வழிந்தது.

அவர் திரும்பி நோக்கியபோது போத்யர் அவ்வண்ணமே அமர்ந்திருப்பதை கண்டார். அவர் எதையுமே பார்க்கவில்லை என்று தோன்றியது. முல்கலர் சென்று தன் இல்லத்திண்ணையில் அமர்ந்தார். அங்கிருந்து போத்யரை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கேயே சுருண்டு படுத்துக்கொண்டார். அவர் மனைவி திகைத்து சொல்லற்று நோக்கி நின்றாள். பின்னர் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள். அவர் மேலும் நாணயங்களை வீசக்கூடும் என இரவலர் காத்து நின்றனர். பின்னர் மெல்ல மெல்ல அகன்றனர்.

 

முல்கலர் விழித்துக்கொண்டபோது இருள் பரவியிருந்தது. தெரு வானொளியில் மின்னியது. எதிர்த்திண்ணையில் போத்யரின் விழிகளை அவர் கண்டார். நெடுநேரம் அவற்றை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் எழுந்து அவர் அருகே சென்று அமர்ந்தார். “மூத்தவரே, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றார். போத்யர் மறுமொழி சொல்லவில்லை. “கூறுக, என்னைப் பற்றி நீங்கள் எண்ணுவதென்ன?” என்றார் முல்கலர். போத்யர் மறுமொழி சொல்லமாட்டார் என உணர்ந்ததும் சிலம்பிய குரலில் “ஆம், நான் இழிமகன்தான். கீழோன்தான். என்றுமே அதை மறுக்கமாட்டேன்” என்றார்.

“ஆனால் நான் என்ன செய்யக்கூடும்? சொல்க, எனக்கு என்ன வழி இருந்தது?” அச்சொற்களுடன் அவர் உள்ளம் திறந்துகொண்டது. பலநூறுமுறை அவ்வாறு அவ்வண்ணம் அவரிடம் அவற்றை சொல்லிக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தார். “நான் எவரிடமும் சொல்லவேண்டியதில்லை. எவரிடமும் எனக்கு கணக்குகள் இல்லை. உங்களிடம் சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என தெரியவில்லை. மூத்தவரே, இளமையில் நான் மன்றுபாடல் பயிலும்பொருட்டு சூதர்களத்திற்குச் செல்லும்போதெல்லாம் என்னை ஒரு பெரும் தோல்வியென்றே எண்ணினேன். என்னால் பாடல் கூற முடியவில்லை. குலமுறைகளை பிழையின்றி சொல்ல இயலவில்லை. என் குரல் பிறழ்ந்து இசையொழிந்தது. அனைத்து அவைகளிலும் தோற்கடிக்கப்பட்டேன். உடன் வந்த சூதர்களால் இளிவரல் செய்யப்பட்டேன். வாழும் பொருட்டு அவர்களின் இழிந்த சொற்களை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

மூத்தவரே, சிறுமைகொண்டு வாழ்வதென்றால் என்ன என்று தெரியுமா?. அச்சிறுமையை ஒவ்வொருநாளும் அன்னமென உண்டு மூச்சென உயிர்த்து வாழ்வதன் துயரை உங்களால் உணரமுடியுமா? உடலே ஒரு விழுப்புப்பொதியாக ஆகிவிடுகிறது. நாறும் கூண்டு. விடுதலைக்காக உள்ளிருந்து ஏங்குகிறது ஆத்மா. உடலை ஒழிக்கவேண்டும். உடைத்து திறக்கவேண்டும். எத்தனை நாள் கோட்டைமேலிருந்து குதிப்பதைப் பற்றிய கனவுடன் மேலேறிச் சென்றிருக்கிறேன் என அறிவீர்களா? ஒருநாள் துணிந்து மதுக்கடைக்கு சென்றேன். கோட்டையிலிருந்து இறங்கி நேராக அங்கே சென்றேன். மது என்ன செய்யும் என அறிவேன். ஆனால் மதுக்கடையில் குடிப்பதன் பொருளென்ன என்று தெரிந்திருக்கவில்லை.

அது ஒரு குப்பைமேடு போலிருந்தது. மானுடக் குப்பைமேடு. எச்சில்கள், உமட்டல்கள், ஏப்பங்கள், உடல்நாற்றங்கள். சொற்கள் சிதைந்து நாறின. சிரிப்பு அதைவிட உடைந்து கிடந்தது. அங்கு ஓரமாக அமர்ந்துகொண்டிருந்தபோது ஒருவன் என்னைக் கண்டு நீ சூதனா என்றான். ஆம் என்றேன். நீ அரசச்சூதன் அல்லவா என்றான். அக்கணம் என் உள்ளம் பெருமிதம் கொண்ட விந்தைதான் என்ன! நான் ஆம் என்றேன். ஆ, இங்கே ஒரு அரசச்சூதன் வந்துள்ளான். அரசர்களே, நம்மை அவன் பாட விழைகிறான். பாடுக, சூதா. பொன் கொள்க என்று அவன் கூவினான். களிமகன்கள் கூச்சலிட்டனர். ஆயிரம் அரசர்கள் இங்கே என்று கூவினர்.

அங்கே பாடுவதா என்று என் உள்ளம் திகைத்தது. ஆனால் பாடாமலிருக்க என்னால் இயலாது என்று அப்போது அறிந்தேன். ஏனெனில் எனக்கு மீண்டும் மது தேவையாக இருந்தது. என்னிடம் ஒரு செம்புநாணயம்கூட எஞ்சியிருக்கவில்லை. ஆகவே நான் அறிந்தவற்றிலேயே கீழ்மை மிகுந்த காம கேலிப்பாடல் ஒன்றை பாடினேன். அங்கிருந்தோர் கைதட்டி என்னை ஊக்கினர். களிவெறியில் சிரித்து கூச்சலிட்டனர். என்னை இருவர் தூக்கி வைத்து நடனமாடினர். என்னை மாறி மாறி முத்தமிட்டனர். வாழ்வில் முதல் முறையாக பாராட்டை அடைந்தேன். கொண்டாடப்பட்டேன். அன்று திரும்புகையில் பை நிறைய வெள்ளிக்காசும் இருந்தது.

மறுநாள் விழித்தெழுந்து என் அறையில் அமர்ந்து வெதும்பி அழுதேன். வீழ்ந்தேன் என்று, இழிவடைந்தேன் என்று, எஞ்சாதொழிந்தேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இங்கிருந்து கிளம்பிச்சென்றபோது இருந்தவனல்ல திரும்பிவந்தவன் என்று, என் உடல் மாசடைந்துவிட்டது என்று, இனி மூதாதையர் குடிகொள்ளும் எந்த இடத்திற்கும் என்னால் சென்று நின்றிருக்க இயலாதென்று சொல்லிக்கொண்டேன். இனி இல்லை இனி இல்லை என்று எனக்கு நானே வஞ்சம் கூறிக்கொண்டேன். அன்றே இறுதி என்று உறுதி பூண்டேன்.

ஆனால் இரு நாட்களுக்குக் கூட அவ்வுறுதி நீடிக்கவில்லை. அவ்வெள்ளி நாணயங்கள் என்னை ஈர்த்தன. அவற்றை கையிலிட்டு திருப்பித் திருப்பிப் பார்த்தபோது அவற்றின் மென்மையும் தண்மையும் என்னை மெய்ப்பு கொள்ளச் செய்தன. நானே ஈட்டிய வெள்ளி. ஆணென நிமிர்ந்து நின்ற களம். அதை ஒழிய என்னால் இயலாது. மீண்டும் அங்கே சென்றேன். மதுக்களத்தில் பலர் ஓடி வந்து என்னை எதிர்கொண்டனர். அள்ளித் தூக்கி உள்ளே கொண்டுசென்றனர். சூதுக்களத்தில் அமர்ந்து அன்று பாடினேன். அன்று தயக்கங்களை களைந்துவிட்டிருந்தேன். வஞ்சத்துடன் எவருக்கோ விடுத்த அறைகூவலென அன்று பாடினேன்.

“இதோ என்னை கீழிறக்கிக்கொள்கிறேன். இன்னும் கீழிறங்குவேன் பார் என்று எவருக்கோ அறைகூவிக்கொண்டேன்” என்றார் முல்கலர். கள்மயக்கில் உதடுகள் கோண நகைத்துக்கொண்டு “சூதுக்களத்தில் பாடுவதன் கலைகளை நான் முனைந்து கற்றுக்கொண்டேன். அது அத்தனை எளிதல்ல. நீங்கள் அரச அவைகளில் அரச உள்ளங்களை அக்கணம் கணித்து கணித்து பாடுவதற்கு ஒரு படி மேல் என்பேன். சூதில் வென்றவனை பாடவேண்டும், தோற்றவனை மேலும் வீறுகொண்டு எழச் செய்யவேண்டும். சூதுக்களத்தில் வென்று கொக்கரிப்பது ஆணவம். தோற்றுச் சீறுவதும் ஆணவம்” என்றார்.

சூதுக்களத்தில் நின்றிருக்கின்றன தெய்வங்கள். அடுத்த கணத்தை முடிவு எடுக்கும் ஆற்றல் கொண்டவை. முந்தைய கணத்தை திரட்டி ஒவ்வொருவருக்கும் ஊழ்ப்பயனென அளிப்பவை. மனிதனின் பெருவிழைவை, ஆணவத்தை ஆள்பவை. அனைத்துக் கீழ்மைகளுக்கும் மேல் தங்கள் சொல்லாற்றல் கொண்டவை. அத்தெய்வங்கள் அனைத்தையும் சொற்கள் அங்கு எழுப்பி நிறுத்தும். என் சொற்களுக்காக அவை ஆடும். என் சொற்கள் அவற்றுக்கு ஆணையிடும். நான் அத்தெய்வங்களின் பூசகன்.

என் சொற்கள் திகழும் சூதுக்களம் புகழ்பெறலாயிற்று. பெருவணிகர் அங்கு தேடிவந்தனர். என் புகழ் சூதுக்களங்கள் அனைத்திலும் பரவியிருந்தது. மேலும் மேலும் பொருள் கொடுத்து என்னை சூதுக்களங்களுக்கு அழைத்தனர். என் சொற்களால் சூதுக்களத்தை ஆளும் தெய்வங்களை ஆட்டுவிக்க முடியுமென்றும், வெறும் சொல்லால் பகடைகளை பன்னிரண்டாக்க இயலுமென்றும் புகழ் பரவியது. அப்புகழில் நான் திளைத்தேன். என் மடி பொன்னொழிந்ததே இல்லை. என் இல்லத்தில் களஞ்சியம் ஒருபோதும் வறண்டதில்லை. என் மைந்தர் பட்டன்றி உடுத்ததில்லை, பல்லக்கிலன்றி பயணம் செய்ததில்லை.

என் மனையாட்டி முதலில் என்னை இகழ்ந்ததுண்டு, இத்தொழில் வேண்டாமென்று. அவளை குலத்தார் பழித்தனர். பிறந்தகமே எதிரியாயிற்று. பிறிதொன்று தேரும்படியும் விழிநீருடன் மன்றாடியதுண்டு. இந்நகர்விட்டுச் செல்வோம் என்றும் பலமுறை அழைத்ததுண்டு. எனக்கு வேறுவழியில்லை என்பேன். பொன் எவரையும் மாற்றும். பசியின்மைக்குப் பழகிய பின்னர் பசி மீதான அச்சம் பெருகுகிறது. வேறுவழியின்றி அமைந்த இடத்தை மானுடர் மெல்ல மெல்ல சொல்லி நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். அவ்வண்ணம் நான் இதில் அமைந்தேன். என்னைவிட உறுதியாக என் மனையாட்டி அமைந்தாள். இன்று அவள் அதன்மேல் அரியணையிலென அமர்ந்திருக்கிறாள். அறத்தின் மேலும் ஒழுக்கத்தின் மேலும் பெண்டிருக்கும் பற்று உறுதி மிக்கது. ஆகவே அறத்தையும் ஒழுக்கத்தையும் துறந்தபின் அவர்கள் அடையும் விடுதலையும் பெரியது.

இழந்ததொன்றுமில்லை என்று நானே எண்ணிக்கொண்டேன். அல்ல என்று என் இல்லத்திற்கு முன் அமைந்த உங்கள் சிறுகுடில் ஒவ்வொருநாளும் எனக்குக் காட்டியது. மூன்றடுக்கு மரவீட்டை கட்டிக்கொண்டபோது எவ்வண்ணமேனும் உங்களை என் முன்னிருந்து அகற்றவேண்டும் என்று பலமுறை முயன்றேன். உங்கள் மைந்தன் ஒப்புக்கொள்ளவில்லை. பொன் கொடுத்து நோக்கினேன். அச்சுறுத்தியும் பார்த்தேன். உங்கள் மூதாதையர் வாழ்ந்த வீட்டிலேயே நீங்கள் வாழ்ந்து இறக்கப்போவதாக கூறினார்கள். நான் இடம்பெயரலாமென்று எண்ணினேன். ஆனால் சூதர்தெருவை விட்டு நீங்கினால் நான் இழிசினர் தெருவுக்கே செல்லவேண்டியிருக்கும். இங்கே இவ்வண்ணம் அரண்மனை என இல்லம் எழுப்பி நான் தங்கியிருப்பது ஓர் அறைகூவல். ஒரு பழிவாங்கல்.

அத்துடன் என்றேனும் நான் மறைந்து பழியும் மறக்கப்பட்ட பின் என் மைந்தர் மீண்டும் குடியில் இணையவும் இந்த இல்லமே வழிவகுக்கும். ஆகவே வேறுவழியில்லை. ஒவ்வொரு நாளும் உங்களைப் பார்த்த பின்னரே என் இல்லம் விட்டு வெளியே வரவேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. மூத்தவரே, உங்கள் விழி ஒவ்வொரு நாளும் என்னை சுட்டியது, உங்கள் கண்ணுக்குப் படாமல் இல்லம் விட்டு வெளியேறவேண்டும் என்று எண்ணுவேன். உங்களை எண்ணாமல் ஒரு நாளை கடந்து செல்ல வேண்டும் என்று திட்டமிடுவேன். ஒருநாளும் இயன்றதில்லை.

என்னைக் காண்பவர் அனைவரும் உங்களைப் பற்றி எண்ணினார்கள். வஞ்சச் சூது ஆடும் இழிசினர் கூட. பிறிதொருவரை நினைவுறுத்துகிறீர்கள் சூதரே, நீங்கள் யார் அரண்மனை முதன்மைச் சூதரின் மைந்தரா இளையவரா என்றார்கள். நான் அச்சொற்களை கேட்காததாக நடிப்பதுண்டு. வேறெவராவது அச்சொற்களை ஏற்று “ஆம், இவர் அவருடைய இளையவரேதான்” என்பார்கள். உயர்ந்தோன் ஒருவன் இழிந்து இங்கு வந்தது அத்தனை உவகையை அவர்களுக்கு அளிக்கிறதா என்று எண்ணிக்கொள்வேன். அவர்கள் இழிந்து வந்த பாதையைவிட மேலும் இழிந்த ஒரு பாதையைக் காண்பது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறதா?

ஆம், அதுவே உண்மை. அதை நான் கண்டிருக்கிறேன். பெருவணிகர் ஒருவர் வந்தால் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். அவன் பொருள் இழந்து வறியவனாகி இரந்து பிழைக்கும் தெருவாழ்பவனாகி அங்கு வந்து நின்றால் அதைவிட கூச்சலிட்டு நகைக்கிறார்கள். அவன் மீண்டும் மீண்டும் அங்கு வரும்பொருட்டு அவனுக்கு சிறு செம்பு நாணயங்களை வீசுகிறார்கள். அன்னமளிக்கிறார்கள். அவன் வேண்டும் அளவுக்கு மது அளிக்கிறார்கள். அவன் களிகொண்டு கீழ்மையில் திளைக்கும்போது கொண்டாடுகிறார்கள். அவர்களால் கொண்டாடப்படும் பொருட்டு அவன் தன்னை மேலும் கீழ்மை நோக்கி செலுத்திக்கொள்கிறான். அவனை இளிவரல் உயிரெனப் பேணுகிறார்கள்.

மூத்தவரே, என் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு கணமும் உணர்ந்து வந்த வலி நீங்கள். என் வெற்றி வெற்றி அல்ல என்று உள்ளிருந்து முணுமுணுக்கும் ஒரு குரல். இதோ முழு வெற்றி அடைந்துவிட்டிருக்கிறேன். இனி இப்புவியில் நான் அடைவதற்கொன்றுமில்லை. அவ்வெற்றியை தங்கள் தோல்வியினூடாகத்தான் ஈட்ட முடியும் என்பதனால்தான் இந்தச் சிறு அமைதியின்மை. இந்த வெற்றி எனக்கு பிடித்திருந்தது, ஆனால் உங்கள் குருதி மேல் அது நிகழ்வதை நான் விரும்பவில்லை என்று உணர்கிறேன். ஆயினும் அதுவே ஊழின் வழி என இன்று அறிகிறேன்.

நீங்கள் அறியாதது உலகியல் மெய்மை. நூல்களால் அவை சொல்லும் பொய்யறங்களால் மறைக்கப்பட்டது அது. அறிக, இப்புடவி அமைந்துள்ளது பொருட்களால். பொருட்களை இணைக்கும் பொருண்மை நெறிகளால். ஒவ்வொரு பொருளுக்கும் இன்னொன்றுடன் ஒப்பிட மதிப்பு உருவாகிறது. அனைத்துப் பொருளையும் ஒப்பிடும் ஒரு பொருள் பொன்னே. பொன்னில் அளவிடப்படுகின்றன அனைத்துப் பொருள்மதிப்புகளும். பொன்னென்பது இப்புவியே. இப்புவியிலுள்ள அனைத்தும் ஆகும் ஆற்றல் கொண்ட பொருள் அது. எனவே பொன்னன்றி இப்புவியில் வேறு விழுப்பொருள் இல்லை.

பொன்னுக்கு அப்பால் பிறிதொன்றை வைத்த பிழையே நீங்கள் செய்தது. தன்னை மதிக்காது பிறிதொன்றைச் சூடிய ஒவ்வொருவரையும் பொன் தண்டிக்கும். வஞ்சம் கொண்டு பின்னால் வரும். விழிநீர் சிந்தி தன் முன்னால் பணிய வைக்கும். அவர்கள் தலைமேல் கால் வைத்து அழுத்தி மண்ணோடு மண்ணாக்கும். பொன் தன்னை வழிபடுபவரை வாழ்த்துவது. அறியாதோரை விழைவு காட்டி இழுப்பது. அறிந்து புறக்கணிப்போரை அழித்து மகிழ்வது. இவ்வெற்றி என்னுடையதல்ல, பொன்னின் வெற்றி. நான் பொன்னின் எளிய பூசகன். அடிபணிந்து வாழும் அடியோன்.

பொன்னே திருமகள். அவளை கனகை என்கின்றனர் கவிஞர். புவியளந்து, விண்ணளந்து, திசை விரிந்து படுத்திருப்போனின் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஒளி. மங்கலங்களில் முதன்மையானது. அழகுகளில் தலையாயது. திருமகள் பொன்வடிவிலேயே உறைகிறாள். என் இல்லத்தில் திகழ்கிறாள். என் நாவில் சொல்லெனவும் என் மைந்தர் விழிகளில் ஒளியெனவும் அவள் வாழ்கிறாள். என் குடி இங்கு பெருக வழிவகுப்பாள். இங்கு அமர்ந்து இன்று எண்ணம்கூர்க! எங்கு பிழைசெய்தோம் என்று உணர்க! அன்னம் அன்னம் என இரந்து அமர்ந்திருக்கையில் ஒருகணத்திலேனும் உங்கள் ஆணவத்தை அழித்து பொன்னுக்கு உங்களை அளியுங்கள். கனகை முன் பணியுங்கள். அவளிடம் உங்களை பொறுத்தருளும்படி கோருங்கள்.

அவர் போத்யரை கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் புன்னகைத்து “பொன்மகளுக்குத் தடையாக இருப்பவள் சொல்மகள் என்பார்கள். சொல்மகளே பொன்மகளை பெற்றுதான் வாழ்கிறாள் என்று உணருங்கள். ஒருமுறையேனும் உங்கள் சொல்லுடன் எங்காவது அமர்ந்து நீங்கள் பொன் பெறாது எழுந்துவந்தது உண்டா? உங்கள் சொல்லுக்கு பொன் மதிப்பே இல்லையென்றால் அதை எவரேனும் மதிப்பார்களா? சொல்மகள் பொருள்மகளின் கொழுநனின் உந்திச்சுழியில் உதித்தவனின் மனைவி. எங்கு இருக்கவேண்டுமோ அங்குதான் அவள் இருக்கவேண்டும்” என்றார்.

போத்யரின் பழுத்த விழிகள் அவரை நோக்கிக்கொண்டிருந்தன. அவர் உரக்க நகைத்து “சொல் நன்று. பொன் எழுத்தாணியால் பொறிக்கப்படுமெனில் மேலும் நன்று” என்றபின் திரும்பிச்சென்றார்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை 1

அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு உள்ளே பெருமுற்றத்தின் விளிம்பென அமைந்திருந்த நூற்றெட்டு அன்னையர் ஆலயங்களில் முதலாவதாக ஓரத்தில் இருந்த புலரியன்னையின் ஆலயத்தின் முகப்பில் எழுபத்திரண்டு சூதர்கள் பன்னிரு குழுக்களாக தங்கள் இசைக்கலங்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த யாழையும் முழவையும் கிணையையும் சல்லரியையும் மெல்லிய பதற்றத்துடன் உடலோடு அணைத்திருந்தனர். அந்நிகழ்ச்சிக்கு அவர்கள் புதியவர்கள் என விழிகளும் அடக்கப்பட்ட மூச்சுகளும் காட்டின.

அன்னையர் ஆலயங்கள் அனைத்தும் வாயில் திறந்து அகல்சுடர் ஒளியில் தெய்வத்திருவுருக்கள் அலைகொண்டமைய விழிதொடும் தொலைவுவரை வளைந்து தெரிந்தன. அவற்றின் சிறு குவைமாடத்தின் உச்சியில் அவ்வன்னையரின் அடையாளங்கள் கொண்ட கொடிகள் காற்றில் துடிதுடித்தன. பீதர்நாட்டு நெய்விளக்குகள் அமைந்த கல்தூண்கள் ஒற்றை மலர்சூடிய மரங்கள் என நிரைவகுத்திருந்தன. அப்பால் கிழக்குக் காவல்மாடத்தின் முரசுக்கொட்டில் வானில் மிதந்ததுபோல் செவ்வொளியுடன் தெரிந்தது.

சூதர்களில் மூத்தவரான போத்யர் கூன்விழுந்த உடலை நிமிர்த்து இடையில் கைவைத்து நின்று கிழக்குச் சரிவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். வானில் விண்மீன்கள் செறிந்திருந்தன. அவற்றின் அதிர்வு சொல் சொல் என உதிர்ந்துகொண்டிருந்தது. அப்பால் மேற்குக்கோட்டையை ஒட்டி அமைந்த ஏரியின் மேலிருந்து பாசிமணம் கொண்ட காற்று வீசியது. அது கோட்டைச்சுவரின் வளைவில் முட்டி அகன்று மீண்டும் சுழன்று வந்தபோது புராணகங்கையின் சதுப்புக்காட்டிலிருந்து பச்சிலைவாடை வந்தது. நரிகளின் ஊளை மிகமிக அப்பால் எழுந்தமைந்தது.

முற்காலையின் இருளில் கோட்டையின் வெண்பரப்பு பட்டுத் திரைச்சீலையென மெல்ல நெளிவதாக விழிமயக்கு அளித்தது. கோட்டைக்குமேல் காவல்மாடங்களில் இளஞ்சிவப்பு வட்டங்களென முரசுத்தோலின் பரப்புகள் தெரிந்தன. அங்கிருந்த காவலர்களின் இரும்புக் குறடோசையும், அவர்களின் ஆழ்ந்தகுரல் பேச்சொலியும் எழுந்தன. கவசங்களின் நீர்ப்பளபளப்பும் படைக்கலக்கூர்களின் விழிமின்களும் தெரிந்தமைந்தன. கோட்டை ஒரு கணத்திற்கு முன்னர்தான் ஒரு சொல்லில் இருந்து எழுந்து விரிந்து விரிந்து தன்னை அங்கு நிறுவிக்கொண்டதுபோல் தோன்றியது. எல்லா நோக்குகளும் அதில் சென்று முட்டி மீண்டன. எல்லா எண்ணங்களும் அதைத் தொட்டு வளைந்தன. அதை சேர்க்காமல் அங்கிருக்கும் எவரும் சித்தம் கொள்ளமுடியவில்லை.

கோட்டைக்கு உள்ளிருந்து அஸ்தினபுரியின் அணிப்படை ஓசையில்லாத நீர்ப்பெருக்கென கவசங்கள் அலைகொண்டு பளபளக்க வழிந்து சென்று வெளிமுற்றத்தில் தேங்கி அணிகளாகப் பிரிந்து உறைந்து அமைந்துகொண்டிருந்தது. புரவிகள் அவ்விருளில் நீந்துவனபோல் கால்களை துழாவியபடி ஒழுகின. மையப்பெருஞ்சாலையில் வந்த படையின் இறுதிப் பகுதி வளைந்து கோட்டைக்கு வெளியே சென்று மறைந்தது. முற்றத்தின் செம்மண் பரப்பில் பாதச்சுவடுகள்மேல் பந்தங்களின் செவ்வொளி பரவிக்கிடந்தது. ஒளிகொண்ட கொடிகள் துடித்தன. அத்தனை ஒலிகளையும் மூடியபடி அங்கு ஓர் ஒலியின்மை நிறைந்திருந்தது. எவ்வொலி எழுந்தாலும் அதை தன்னுள் இழுத்துக்கொள்ளும் அழுத்தம் கொண்டிருந்தது அது.

கவசம் அணிந்த பெரிய புரவியில் வந்து இறங்கிய சுதமை கைகளை நீட்டி முற்றத்தையும் கோட்டைச் சுவர்களையும் சுட்டி ஆணைகளை இட்டாள். அவள் சொற்களும் அப்பால் எழுந்த நூற்றுவர்தலைவனின் ஆணைக்குரலும் அந்த அமைதிக்குள் நிகழ்ந்தன. புரவியொன்று கனைத்தது. சகடங்கள் ஒலிக்க கடந்து சென்ற வண்டியொன்றின் ஓசை. கீழே விழுந்த கேடயம் ஒன்றின் உலோகக் கூரொலியும் அந்த அமைதியின்மைக்குள் விழுந்து அதன் அடியில் மறைந்தது. போத்யர் கிழக்குச் சரிவை விழிகளால் துழாவிக்கொண்டிருந்தார். “இன்றென்னவோ விண் முழுக்க மீன்கள்!” என்று அமர்ந்திருந்த தென்னிலத்துச் சூதன் சொன்னான். போத்யர் அவனைத்திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் கீழ்ச்சரிவை நோக்கிக்கொண்டிருந்தார்.

ஆனால் தென்னகத்துச் சூதன் பேச விழைந்தான். “விடிவெள்ளி என்பது கதிரவனின் ஒரு துளி. ஓர் ஒற்றன்” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்தவன் முனகிக்கொண்டான். போத்யர் மீண்டும் திரும்பி உறுத்து நோக்கி “பேசவேண்டாம்” என முகம் காட்டினார். அவர்கள் அனைவருமே பொறுமையிழந்திருந்தார்கள். தங்கள் முழவுகளையும் யாழ்களையும் தேவையின்றி தொட்டு முறுக்கினார்கள். ஆணிகளை திருகியும் தோல்பரப்பையும் நரம்பு அடுக்கையும் விரல்களால் வருடியும் அந்த கணங்களை ஒவ்வொன்றாகக் கடந்தனர். சிலர் தேவையில்லாமல் இருமிக்கொண்டனர்.

தென்னகச் சூதன் திரும்பி மகாமரியாதம் பந்த ஒளியில் ஆங்காங்கே சிவந்து இருப்பதை நோக்கி “சில தருணங்களில் பந்த ஒளியில் இது காட்டெரி எழுந்துவிட்டதோ என்ற விழிமயக்கை ஏற்படுத்துகிறது” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்தவன் மட்டுமே அதை தெளிவுறக் கேட்டான். பிறர் அதை மெல்லிய முணுமுணுப்பென உணர்ந்தனர். முரசுத்தோல்பரப்பில் காற்று படும்போது வரும் ஒலிபோல எழுந்த அவ்வோசை போத்யர் காதில் விழுந்தது. “ம்” என்று அவர் உறுமினார். அவர்கள் சலிப்புடன் அசைந்தார்கள்.

போத்யர் அவர்கள் ஒவ்வொருவரையும் மாறி மாறி பார்த்தார். அவர்கள் வெவ்வேறு நிலங்களையும் குலங்களையும் சார்ந்தவர்கள். வெண்ணிறம் கொண்ட வடமேற்கு நிலத்தவர், பீதர்களைப்போன்ற காமரூபத்தினர், கன்னங்கரிய தென்னிலத்தவர், கூரிய முகமும் செம்மண் நிறமும் கொண்ட வேசர நாட்டவர். கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அவர்கள் அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டைவாயிலருகே அமைந்த சூதர் தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட பெரிய இசை மண்டபத்தில் அமர்ந்து அந்நாளுக்கான புகழ்ப்பாடலை ஒத்திகை பார்த்திருந்தனர். இரவும் பகலுமென அந்த ஒத்திகை நிகழ்ந்தது.

“பிறழும் ஒரு மாத்திரைகூட தவறு என்றே கருதப்படும். பிழையுள்ள பாடல் மங்கலத்தை அழிக்கும். இசையென்பது இசைமை என்று உணர்க!” என்று அவர் மீள மீள கூறியிருந்தார். அவர்கள் விழிகளால் ஏற்றுக்கொண்டனர். ஆனால் முதல் நாளில் அவர்களிடமிருந்த பணிவு மூன்றாம் நாள் இருக்கவில்லை. முதல் நாள் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகவே உறுதியுடன் அதை ஏற்றனர். மூன்றாம் நாள் அந்த ஒத்திகைகள் வழியாகவே அவர்கள் நம்பிக்கை இழந்தனர். ஆகவே அதை இளிவரலாக ஆக்கிக்கொண்டனர்.

போத்யர் பெருமூச்சுவிட்டு ஐயத்துடனும் நம்பிக்கையின்மையுடனும் சூதர்களை மீண்டும் பார்த்தார். கோட்டைக்கு மேல் பந்தங்கள் ஒன்றிலிருந்து ஒன்றென தங்களை தொடுத்துக்கொண்டு செந்நிறச் சரடென்றாகி, ஒழுக்கென நீண்டு விரியத்தொடங்கின. அனல்முடி சூடிய கோட்டைக்கு மேலிருந்து ஒரு கொம்பொலி அறைகூவ கோட்டையின் நான்கு நுழைவாயில் முகடுகளில் இருந்தும் மூன்று எதிரொலிகள் அதற்கு மறுமொழியளித்தன. “கோட்டை ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்று ஒரு சூதன் சொன்னான். போத்யர் “பேசவேண்டியதில்லை” என்றார். “சரி, பேசவில்லை” என்றான் அவன். அனைவரும் மெல்ல சிரித்தனர்.

போத்யர் அவர்களில் இளையவனாகிய சூதனை நோக்கி சற்று கவலையுடன் “உன் முழவை இன்னும் இறுக்குக!” என்றார். அவன் அதை தொட்டு நோக்கி “பதமாகவே உள்ளது, ஆசிரியரே” என்றான். விரல்களால் சுண்டி அதன் ஓசையைக் காட்டி “போதுமல்லவா?” என்றான். பற்களைக் கடித்து ”ஆம்” என்று உரைத்த போத்யர் விழிதிருப்பிக்கொண்டார். அவ்விளையோன் கரிய முகமும், பெரிய பற்களும், சிப்பி போன்ற வெண்பரப்பு கொண்ட கண்களும் கொண்டிருந்தான். தென்னிலத்தவன். அவனிடம் ஓர் அடங்காமை இருந்தது. ஆனால் அவனால்தான் எளிதில் கற்றுக்கொள்ள முடிந்தது.

அவனை அந்தச் சூதர் குழுவுக்குள் சேர்ப்பதற்கு முதலிலேயே அவருக்கு தயக்கமிருந்தது. ஏற்கெனவே அவன் பல அவைகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தான். ஆனால் சுரேசர் அவன் அந்தக் குழுவில் இருக்கட்டும் என முடிவுசெய்திருந்தார். அவர் அவனை வெறுப்புடன் பார்த்தார். அவனுடைய குரல் இளமையின் விசையும் தாளமும் கொண்டிருந்தது. அவர் “ஓலமிடுவதற்கு இங்கே கொம்புகள் உள்ளன” என்று முணுமுணுத்தார். சுரேசர் நகைத்து “நீங்கள் இளமையில் இதே குரல் கொண்டிருந்தீர், சூதரே” என்றார். திடுக்கிட்டு இளையோனை நோக்கியபின் போத்யர் “ஆம்” என முனகிக்கொண்டார்.

 

அஸ்தினபுரியின் அரண்மனையில் இருந்து துச்சளையின் அழைப்பு அவருக்கு வந்தபோது அவர் தன் இல்லத்திலிருந்து கிளம்புவதற்கே இயலா நிலையில் இருந்தார். அவருடைய மைந்தரும் குடிகளும் அவரை விட்டு சென்றுவிட்டிருந்தனர். அவருடைய குடிவழி இளையோன் அருகே குடியிருந்தமையால் மட்டும்தான் அஸ்தினபுரிக்குள் அவரால் உயிர்வாழ முடிந்தது. போர் முடிந்த செய்தி வந்ததுமே அவருடைய மைந்தன் “இனி இந்நகர் சொல் திகழும் தகுதி கொண்டதல்ல. நம் முன்னோர் வாழ்த்திய அனைத்தும் இங்கிருந்து மறைந்துவிட்டன” என்றான். அவர் நகரிலிருந்து மக்கள் ஒழிந்து செல்வதை பல நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய குடியினரிலேயே பெரும்பாலானவர்கள் சென்றுவிட்டிருந்தனர்.

“இனி இங்கு ஒருபோதும் நெய்மணக்கும் ஊன்சோறு பெருகப்போவதில்லை. கருவூலப்பொன் பெருகப்போவதுமில்லை. அத்தனை பேரும் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கிளம்புகிறேன்” என்றான் மைந்தன். அப்போது அவர் தன் இல்லத்திண்ணையில் இளவெயிலை உடலில் ஏற்று அமர்ந்திருந்தார். நெடுநாட்கள் அங்கு திகழ்ந்த உணவின்மையால் அவர் உடல் மெலிந்து, எலும்புகளின் மேல் தோல் படிந்து, அதன் மேல் பூசணம் எழுந்து ஈரமண்ணில் மட்கிக்கிடக்கும் பழைய மரம் போலிருந்தார். அவர் பற்கள் உதிர்ந்துவிட்டிருந்தன. தலை நடுங்கிக்கொண்டிருந்தது. குளிரிலென துள்ளி அதிர்ந்துகொண்டிருந்த கைகளை இரு தொடைகளுக்கும் அடியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார். இரு முழங்கைகளும் நடுங்கின.

மைந்தன் “இந்நிலையில் தாங்கள் எங்களுடன் நெடுந்தொலைவு வருவது கடினம். ஆயினும் தாங்கள் வருவதே நல்லது. எவ்வகையிலேனும் தங்களை இங்கிருந்து கொண்டு செல்கிறேன். ஒரு சிறு சகடம் ஒன்றை ஒருக்கியிருக்கிறேன். சற்றே பொறுத்துக்கொண்டீர்கள் என்றால் போதும்” என்றான். “அறுநீர் பறவையென எழுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்று அவர் சொன்னார். “சூதர்களுக்கு நிலமில்லை, நீருமில்லை. வானமே நம்முடையது. நாம் நிறைகதிர் கண்ட இடங்களில் சென்று இறங்குவோம், வானுக்கே மீள்வோம்” என்று மைந்தன் சொன்னான். “இச்சொற்களை சொல்ல வேண்டியவர்கள் உழவர்கள், ஆயர்கள். வணிகர்களும் சூதர்களும் அல்ல.”

“நீ எனக்கு நூல் கற்பிக்க வேண்டியதில்லை” என்று அவர் சலிப்புடன் கூறினார். அவன் சீற்றத்துடன் அவர் முன்னால் வந்து நின்று “அதை விடுங்கள். நான் நேரடியாகவே சொல்கிறேன், நாம் பேசும் மொழியையும் நாம் சொல்லும் கதையையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புகிறார்கள். பெருவணிகர்கள், ஆயர்குடிகள், வேளாண்குடிகள். எஞ்சுவது யார்? களத்தில் மாண்ட மறவர்களின் ஆவிகள். இந்நகரை கைப்பற்றவிருக்கும் இழிசினர். இருளுலக தெய்வங்கள். இவர்களிடம் சொல்பெருக்கி உயிர்வளர்க்கலாகும் என்று எண்ணுகிறீர்களா?” என்றான்.

அவர் அவனுடைய சீற்றத்தை நோக்கிக்கொண்டிருந்தார். “சேர்த்துவைக்கும் கலை நாமறியாதது. இங்கே நாம் கைவிடப்பட்டோம். உணவில்லாது துயருற்றோம். இங்கிருந்தோர் வீசிய சிற்றுணவால் உயிர்பேணிக்கொண்டோம். இதோ அவர்கள் அனைவரும் கிளம்பிச் செல்கிறார்கள். அவர்களே நம்மை புரந்தவர்கள். அவர்களுடன் செல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றான். “ஊன் பொதியைத் தொடரும் காகங்கள்போல, அல்லவா?” என்று அவர் கேட்டார். அவன் பற்களைக் கடித்து கைகளை இறுக்கி சீற்றத்தை அடக்கி “நான் தங்களை எவ்வகையிலும் அறிவுறுத்தவில்லை. நான் கிளம்புவதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் வரவில்லை என்றால் இதுவரை இங்கே எவ்வண்ணம் இருந்தீர்களோ அதை இழக்கப்போகிறீர்கள். இரவலனாக தெருவில் அமர்ந்து பிடி உணவு பெற்று வாழப்போகிறீர்கள். வேண்டாம், அப்பழியை என்மேல் சுமத்தாதீர்கள். கிளம்புக!” என்றான்.

“இந்நகர் விட்டு எங்கும் நான் செல்வதாக இல்லை. எனது பொழுது ஓடிவிட்டது. என் உடலில் ஒவ்வொரு நாளும் குளிர் மிகுந்து வருகிறது. எலும்புகள் ஆற்றடிக் கற்கள் என விறைத்திருக்கின்றன. இனி நெடுநாள் இங்கு வாழப்போவதில்லை. இங்கிருந்து கிளம்பி புது நிலங்களைக் கண்டு வாழும் ஆற்றல் இவ்வுடலில் இனி இல்லை” என்றார் போத்யர். மைந்தன் குரல் தணிந்தான். “நான் என்ன செய்வது? என் மைந்தருடன் நான் என்ன செய்து வாழ்வது?” என்று மீண்டும் கேட்டான். “கிளம்பிச்செல்க, புது நிலம் நாடுக! இங்கே உன்னைப் புரந்த குடிகள் உன்னையும் உன் குடியையும் இன்னமும் வாழச்செய்க! எனக்கு இச்சிறு இல்லம் போதும். இங்கு இயன்றவரை உணவு எஞ்சவிட்டுச் செல்க! நன்று நிகழும்” என்றார் போத்யர்.

அவன் சினம் ஏற அவரை கூர்ந்து நோக்கிவிட்டு இன்னொரு எண்ணம் எழ உடல் தளர்ந்து, குரல் உடைய, விழிகள் நனைய “தங்கள் சொற்களை என்னால் உளம்கொள்ள இயலவில்லை, தந்தையே. நான் இருமுனையில் இருக்கிறேன்” என்றான். “சென்று முல்கலனிடம் கூறுக! அவன் என்னை புரப்பான். கைப்பிடி உணவு ஒருநாளுக்கு, அது போதும் எனக்கு” என்றார் போத்யர். மைந்தன் விழிகளில் எழுந்த திகைப்பைக் கண்டு புன்னகைத்து “என்றேனும் இந்நகர் மீளுமென்றால் நீ திரும்பி வருக! அன்று நானோ என் சொல்லோ உன்னைக் காத்திருப்போம்” என்று மென்மையாக சொன்னார்.

திரும்பி வருதல் எனும் சொல் அவனை மீட்டது. அவன் விழிகள் தெளிந்தன. “ஆம், இப்புலம்பெயர்தல் எப்போதைக்குமென அல்ல. இம்மக்கள் அஸ்தினபுரிக்கு மீண்டு வருவார்கள். இங்கு அறம் நிலைகொள்ளும் கோல் எழுமெனில், மூதாதையர் சொல் திகழுமெனில் அவர்கள் இங்கு தங்கள் தொல்வாழ்வை மீண்டும் தொடங்குவார்கள். அவர்களுடன் நானும் வருவேன். யார் அறிவார், மிகச் சில நாட்களுக்கே நீளும் ஒரு செலவாக இருக்கலாம் இது” என்றான். “ஆம், மிகச் சில நாட்கள்தான்” என்று அவர் சொன்னார். புன்னகைத்து “செல்க, உளம்செழித்த வாழ்த்துகள் என்னிடம் இருந்து உனக்கும் உன் மைந்தருக்கும் வந்தமைக! நீ செல்லும் இடமெல்லாம் என் பெயரும் என் குடிப்பெயரும் உனக்கு துணையும் கோலும் ஆகுக!” என்று வாழ்த்தினார்.

அவர் மைந்தன் முல்கலரிடம் சென்று தந்தையை அவரிடம் ஒப்படைப்பதாகச் சொன்னபோது அவர் நகைத்து “அவ்வண்ணம் அவர் கூறினாரா?” என்றார். “ஆம்” என்று அவன் கூறினான். “அவரே தன் வாயால் அதை உரைத்தாரா?” என்று முல்கலர் மீண்டும் கேட்டார். “மெய்யாகவே அவரே உரைத்ததுதான் இது” என்று அவன் சொன்னான். அவர் உரக்க நகைத்து “நன்று, இவ்வண்ணம் ஒரு காலம் அமைந்தது. இதை நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் இவ்வண்ணமே இது நிகழ்ந்தாகவேண்டும் என இப்போது உணர்கிறேன்” என்றார்.

மைந்தன் தலைகுனிந்தான். ஊசல்பீடத்தில் மெல்ல காலால் உந்தி அதை ஆட்டியபடி அமர்ந்திருந்த முல்கலர் தளிர்வெற்றிலை எடுத்து நீறு தேய்த்து சுருட்டியபடி அவனை சிரிக்கும் விழிகளால் நோக்கி “நீ அறிவாய், நான் களிச்சூதன். சூதுக்களங்களில் என் சொல்லை வைத்து ஆடுபவன். சூதர்கள் இழிந்து சென்றடையும் அடித்தட்டில் அமைந்திருப்பவன். ஆகவே உன் தந்தை முதல்கொண்ட ஏழு பெருங்குலங்களால் கீழ்மகன் என்றே எண்ணப்பட்டவன்” என்றார். அவர் உரக்க நகைத்து “இந்த நாற்பதாண்டுகளில் ஒருமுறைகூட நான் சூதர்மன்றுகளில் அமரச்செய்யப்பட்டதில்லை. ஒருமுறைகூட குடித்தெய்வ ஆலயங்களில் பூசனைசெய்ய எனக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில்லை. சாவு, பிறப்பு, மணம் என எதற்கும் எனக்கு அழைப்பில்லை. என் கைதொட்ட அன்னமும் நீரும் சூதர்களுக்கு விலக்கு என ஆணையிட்டவர் உன் தந்தை” என்றார்.

மைந்தன் தலையசைத்தான். “நன்று, இவ்வண்ணமும் அமைந்தது” என்றார் முல்கலர். “உன் தந்தையும் நானும் இரு எல்லைகள். என் தந்தையின் மூத்தவரின் மைந்தர் அவர். நாங்கள் இருவரும் ஒரு குருதியின் இரு தரப்புகள்” என்றார். அவர் மிகுதியாகப் பேசுபவர் அல்ல என்று மைந்தன் அறிந்திருந்தான். அன்று அவரிடம் பேச்சு ஊறி ஊறி பெருகியது. “உன் தந்தை என்னிடம் சொன்னவை நினைவிலெழுகின்றன. முல்கலா, சூதர்களின் நெறி ஒன்றுண்டு. சொல் என்பது நிலைபேறு கொண்டிருக்கவேண்டும். அதன் பொருள் மட்டுமே பெருக வெண்டும். நிலைபெறாத சொல் பொருளை இருட்தெய்வங்களின் ஆடலுக்கு அளிக்கிறது. நீ சூதுக்களத்தில் வைத்து ஆடும் சொல் உன் மூதாதையரின் குருதி என்று உணர்க என்றார். அவருடைய விழிகளை நான் நேர்நோக்கவில்லை அன்று. ஆகவே சொல்லிலேயே அவருடைய நோக்கு படிந்திருக்கிறது.”

“தன் சொல்லுக்கு அடிமையாகியிருக்கும் சூதன் தெய்வங்களுக்குரியவன். தன் சொல்லை அவைநிறுத்தி வாழ்பவன் மூதாதையரால் வாழ்த்தப்பட்டவன். சொல்லை முச்சந்திகளில் ஒலிக்கவிடுபவன் தன் மைந்தரால் வணங்கப்படுவான். சொல்லை வைத்து களமாடும் சூதன் ஏழு பிறவியிலும் இகழப்படுவான். இதுவும் உன் தந்தை சொன்னது” என்றார் முல்கலர். மைந்தன் “ஆம்” என்று தலையசைத்தான். “நாற்பதாண்டுகள் இரு எதிரெதிர் இல்லங்களில் வாழ்கிறோம். ஒருமுறையேனும் உன் தந்தை எனக்கு வாழ்த்துரைத்ததில்லை. என் விழி நோக்கி புன்னகைத்ததில்லை. உன் இல்லத்தில் நிகழும் நன்று தீதுகள் எதிலும் கலந்துகொள்ள நான் அழைக்கப்பட்டதில்லை” என்றபோது அவர் முகம் இறுகியது. விழிகள் வஞ்சம்கொண்டன.

“என் குருதியினர் அவர் என்று எங்கள் முகங்களே காட்டுவதனால் இந்நகரில் ஒவ்வொருமுறை அவரை காணுகையிலும் ஒவ்வொருவரும் என்னை நினைவுகூர்கிறார்கள்.” அவர் வஞ்சத்துடன் புன்னகைத்தார். “ஆனால் அது மட்டுமல்ல. பெரிதென்றும் மெய்யென்றும் மானுடர் உணரும் ஒவ்வொன்றுடனும் ஒரு கீழ்மையையும் பொய்மையையும் இணைத்துக்கொள்ள அவர்களின் ஆழத்திலிருந்து ஒரு தெய்வம் ஆணையிடுகிறது. உயர்ந்தவை வீழுமென்றும் நன்றென்பவை அனைத்தும் மறுபக்கம் கொண்டவை என்றும் அவர்களுக்கு அது உரைக்கின்றது. மானுடர் ஆடும் முடிவிலாக் களங்கள் அமையும் நெறி இது.”

“உன் தந்தையைப் பார்க்கும் ஒவ்வொரு வணிகனும் என்னை நினைவுகூர்வதுண்டு. என்னைப்பற்றி ஒரு சொல்லும் கூறாமல் இருக்கமாட்டான். ஒவ்வொரு நாளும் அவர் என்னை எண்ணி வெதும்பியபடியேதான் இல்லம் மீண்டிருக்கிறார். இந்நகரில் பழுதுறாச் சொல் கொண்டவர் என்று புகழ்பெற்ற பெருஞ்சூதர் அவர். இவ்வரண்மனையின் தொல்கதைகள் அனைத்தையும் முற்றறிந்தவர். ஆகவே அரசர்களும் எழுந்து நின்று வரவேற்கும் தகைமை கொண்டவர். அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரர் பிறந்த நாளில் அங்கு அரண்மனை அவையில் அமர்ந்து அவர் பிறப்பை பாடியவர்களில் ஒருவர். நன்று, இத்தருணம் இவ்வண்ணம் வாய்க்கும் என்று தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன போலும்” என்றார்.

“தந்தையே, தாங்கள் அவரை பார்த்துக்கொள்ள முடியாதா?” என்று மைந்தன் கேட்டான். அவர் வெடிப்புறச் சிரித்து “நான் ஒழியும் தருணமா இது? இதுகாறும் நான் வாழ்ந்த வாழ்க்கை இங்கல்லவா நிறைவடைகிறது? இனி இங்கு உன் தந்தை நான் அளிக்கும் சிற்றுணவில் வாழப்போகிறார். அறத்தை மறம் அன்னம் ஊட்டவிருக்கிறது. சூதுக்களத்தில் எஞ்சிய சோற்றில் இறுதி நாட்களைக் கழிக்கவேண்டும் என்பது அவரது ஊழெனில் அதை நிறைவேற்றுவதல்லவா என் பொறுப்பு?” என்றார்.

அவன் சீற்றத்துடன் “அதில் மகிழ்கிறீர்களா?” என்றான். “ஆம், மகிழ்கிறேன். அது என் வெற்றி என்று ஒருபுறம் உளம் தருக்குகிறது. அது என் ஈடேற்றம் என்று மறுபுறம் உளம் அமைகிறது” என்றார். அவன் பற்களைக் கடித்து “எனில் வருக! வந்து என் தந்தையிடம் கூறுக, தாங்கள் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக! அவரது இறுதிநாள் வரை சிற்றுணவை அளிப்பதாக எனில் மட்டுமே நான் இங்கிருந்து கிளம்ப இயலும்” என்றான். அவன் குரல் உடைந்தது. “தந்தையே, என் குழந்தைகளும் பசியில் மெலிந்து உயிர் துறந்துகொண்டிருக்கின்றன. இங்கிருந்து கிளம்புவதைக் குறித்து நான் எண்ணவே இல்லை. என் இளைய குழந்தை பூழி மண் அள்ளித்தின்பதை இன்று நான் கண்டேன். இனி இங்கு இருக்கலாகாதென்று உறுதி கொண்டேன். என்னை வாழ்த்துக!”

அவர் புன்னகைத்து அவன் தோளில் கைவைத்து சொன்னார் “நன்று, நானே வந்து உன் தந்தையிடம் கூறுகிறேன். இத்தருணமும் ஊழால் முன்பே வடிக்கப்பட்டதென்றும் அதை மீள நடிப்பதொன்றே நான் இயற்றுவதென்றும் இப்போது உணர்கிறேன்.” அவன் கண்ணீருடன் தலைவணங்கினான். அவர் மேலாடையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் மனைவி வந்து அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு “வேண்டியதில்லை. எண்ணிச் செய்யவேண்டும். அவர் வரவழைத்து தீச்சொல்லிடக்கூடும்” என்றாள். “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் என்ன நிகழ்கிறதென்று அறியவேண்டாமா? இப்புதிருடன் என்னால் வாழமுடியுமா என்ன?” என நடந்தார்.

முல்கலர் தன் முன் வந்து நின்று வணங்கியபோது போத்யர் வெறுமனே விழி தூக்கி நரைத்த விழிகளால் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். “மூத்தவரே, தங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார் தங்கள் மைந்தர். இதுகாறும் இங்கு நாமிருவரும் ஒன்றின் இரு பக்கங்களென இருந்தோம் என்றும் ஒருவரை ஒருவர் புரந்துகொண்டிருந்தோம் என்றும் இப்போது உணர்கிறேன். அதை மீண்டும் நிகழ்த்தவே இங்கு ஊழ் அமைந்துள்ளது. இதனூடாக நான் நிரப்பும் மறுபுறம் உள்ளதுபோல் உங்கள் வாழ்வால் நீங்கள் நிரப்பும் பக்கமும் ஒன்று உள்ளது என்றும் தோன்றுகிறது. என்னை வாழ்த்துக!” என்றார் முல்கலர்.

“ஆம், இதில் எனக்கு நிறைவே” என்று அவர் கைதூக்கி அவர் தலையில் வைத்து “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். தன் மைந்தனை நோக்கி திரும்பி “நன்று மைந்தா, இனி நீ கிளம்பலாம்” என்றார். அத்தருணம் அத்தனை எளிதாக முறுக்கவிழ்ந்து நிகழ்ந்து முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் உடல் தளர்ந்து உள்ளம் நிலை கொண்டபோதுகூட எதையோ இழந்த சலிப்பை அடைந்தான். அதை தன் மீதான சினமாக மாற்றிக்கொண்டான். கையறு நிலையில் அது கண்ணீராக மாறியது. “நான் பெரும்பிழை எதையோ ஆற்றுகிறேன் என்று உணர்கிறேன், தந்தையே. ஆனால் மைந்தர் பொருட்டு எதையும் செய்ய தந்தையருக்கு உரிமையுண்டு என்று கற்றறிந்திருக்கிறேன். என் மூதாதையர் என்மேல் கனிவு கொள்க! இது பிழையெனில் இதற்கான தண்டம் முற்றிலும் எனக்கென அமைக! எந்தை சொல் அனல் ஆகுமெனில் அது என்னை மட்டும் எரிக்கட்டும். என் மைந்தர் அன்னம் கொண்டு வாழட்டும். சொல் பெருகி வளரட்டும். குலம் நிலைகொள்ள அவர்கள் மண்ணில் திகழட்டும்” என்றான்.

அவன் குனிந்து தந்தையின் கால்களை தொட்டபோது அவர் அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினார். அவன் விழிநீரை துடைத்தபடி மைந்தருடனும் மனையாட்டியுடனும் இல்லம் ஒழிந்து கிளம்பிச் சென்றான். திரும்பித் திரும்பி நோக்கியும் அவ்வப்போது நின்று விழிநீர் துடைத்தும் அவன் செல்வதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50

பகுதி ஐந்து : விரிசிறகு – 14

யுதிஷ்டிரன் களைப்புடன் இருந்தார். சுரேசரை வரவேற்கக்கூட அவருடைய குரல் எழவில்லை. சுரேசர் அமர்ந்ததும் அவர் சம்வகையிடம் அமரச்சொல்லும்பொருட்டு திரும்பினார். இயல்பாகவே அவர் விழிகள் விலகிக்கொண்டன, அவர் அமரும்படி சொல்லவில்லை. சம்வகை சுவர் அருகே நின்றாள். சுரேசர் அவளை திரும்பி நோக்கிவிட்டு யுதிஷ்டிரனிடம் “பேரரசி விடுத்த ஆணை குறித்து செய்தி அனுப்பியிருந்தேன்” என்றார். “ஆம், அது அரசியின் ஆணை. நம் அனைவரையும் ஆள்வது அவள் சொல்” என்றார் யுதிஷ்டிரன். சுரேசர் “அதை சிந்துநாட்டுக்கு முறைப்படி தெரிவித்துவிட்டேன்” என்று சொன்னார்.

யுதிஷ்டிரன் “இதில் இனி நாம் செய்வதற்கு என்ன? நம் படைகளை அனுப்பவேண்டுமா?” என்று கேட்டார். “அரசே, நமது நான்கு படைகள் பாரதவர்ஷத்தை ஊடுருவியிருக்கின்றன. இதுவரை நூற்றிப்பதினேழு நாடுகளை அவை கடந்துள்ளன. ஓர் இடத்தில்கூட போர் என ஏதும் நிகழவில்லை” என்று சுரேசர் சொன்னார். “நம் நகரின் பெயரே ஒரு பெரும் படைக்கலம். நம்மை அஞ்சாதவர்கள் எவரும் இங்கில்லை. இனி நெடுங்காலம் அது அவ்வண்ணமே இருக்கும்.”

யுதிஷ்டிரன் புன்னகைத்தார். அவருடைய சோர்வு அகன்றதை சம்வகை கண்டாள். அவர் “ஆம், அதைத்தான் நான் விந்தையென எண்ணிக்கொண்டிருந்தேன். இளையோர் வென்றவை தொலைநாடுகள். சகதேவன் தெற்கே மலைகளையும் நதிகளையும் காடுகளையும் கடந்து சென்றிருக்கிறான். அங்கெல்லாம்கூட நம் மீதான அச்சம் சென்றடைந்திருக்கிறது” என்றார். “நாம் குருக்ஷேத்ரத்தில் வென்றது பாரதவர்ஷத்தைத்தான்” என்று சுரேசர் சொன்னார். “மெய், அதை இங்கிருக்கையில் ஒவ்வொரு செய்தியிலும் உணர்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

சம்வகை சலிப்புடன் அவரை பார்த்துக்கொண்டிருந்தாள். அவருடைய சோர்வு எதனால் என அவளுக்கு அப்போது சற்றே புரிந்தது. அதை அவள் உணர்ந்ததை புரிந்துகொண்டவர்போல அவர் திரும்பி அவளிடம் “இன்று பேரரசிக்கு இந்நகர் பெரும் வரவேற்பை அளித்தது என்று அறிந்தேன்” என்றார். “ஆம் அரசே, மக்கள் கொந்தளித்தனர்” என்று அவள் சொன்னாள். “நன்று, எனக்கு வரவேற்பளித்ததுபோல நீ கடுஞ்செயல் எதையும் செய்ய நேரவில்லை” என்றார் யுதிஷ்டிரன். உடனே வாய்விட்டு சிரித்தபடி “அல்லது இதுவும் உன் கடுஞ்செயலேதானா?” என்றார்.

அவர் வாய்விட்டு நகைக்கும்போதும் விழிகள் நகைப்பில்லாமல் இருப்பதைக் கண்டு சம்வகை விழிவிலக்கிக்கொண்டாள். அவருடைய விழிகள் ஒருபோதும் நகைப்பதில்லை என்று அவள் அப்போது புரிந்துகொண்டாள். சுரேசர் ”இது மக்கள் திரண்டு எழுந்து அளித்த வரவேற்பு. நகரே மக்களால் நிறைந்துள்ளது. அவர்கள் எதையேனும் கொண்டாட விழைகிறார்கள்” என்றார். “ஆம், அவர்களுக்கு கொண்டாடுவதற்கு தெய்வங்கள் தேவை” என்றார் யுதிஷ்டிரன். “பேரரசி ஒருங்கிக்கொண்டிருக்கிறார், அவர் அவையமையும் பொழுது எழுகிறது” என்று சுரேசர் சொன்னார்.

“இது குடியவையா என்ன?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இல்லை அரசே, இது அரசவை மட்டுமே. எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் மட்டுமே இடம்பெறுகின்றன. பேரரசிக்கு அவைவணக்கம் செலுத்தும்பொருட்டு” என்றார் சுரேசர். “அவள் வென்று நகர்புகும் தருணம் இது. நன்று” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இத்தருணத்தைப் பாட நமக்கு கவிஞர்கள் தேவை. அரசி பழிமுடித்து கூந்தல்முடிந்து அவைபுகுந்ததை அவர்கள் பாடட்டும். அவள் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்த தருணம் சொல்லில் நிலைகொள்ளட்டும்.”

சுரேசர் “ஆம், இது காவியத் தருணமே. ஆனால் நம்மிடம் உரிய முறையில் சொல்லெடுக்கக் கற்ற பாவலர் இன்றில்லை. நம் மொழி இங்கே மாறிக்கொண்டிருக்கிறது. சூதர்கள்கூட அயல்நிலத்தவர்” என்றார். “கேகயத்திற்கும் கோசலத்திற்கும் ஏவலரை அனுப்பியிருக்கலாமே?” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அதற்குப் பொழுதில்லை. ஆனால் இங்கே உருவாகி வந்துள்ள புதிய மொழியிலேயே பாட்டிசைக்கும் பாவலர்கள் சிலரை வரச்சொல்லியிருக்கிறேன். அவர்கள் பாடட்டும்” என்று சுரேசர் சொன்னார்.

“முச்சந்திப் பாடகர்களா?” என்று யுதிஷ்டிரன் முகம் சுளித்தார். “அமைச்சரே, இது பெருங்காவியங்களுக்குரிய தருணம். சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் அணியிலக்கணமும் அறிந்த நாவலர் பாடவேண்டிய பொருள் இது.” சுரேசர் “ஆம், ஆனால் இந்த வெற்றி வெறுமொரு போர்வெற்றி அல்ல. இது புதிய வேதம் எழுந்த வெற்றியும்கூட. புதியவை புதிய மொழியிலேயே பாடப்பட முடியும். அரசே, நீங்கள் கூறும் அந்தப் பழைய மொழி இலக்கணத்திற்கு பழகிவிட்டிருக்கிறது. இலக்கணம் மொழியின்மேல் யானையின் சங்கிலிபோல கிடக்கவேண்டும் என்கின்றது தொன்மையான அணிநூலான குசுமாலங்காரம். யானையை அது ஆளவேண்டும், ஆனால் அதை யானை ஆழத்தில் உணர்ந்திருக்கவும்கூடாது. அகத்தே சங்கிலியை உணர்ந்துவிட்ட யானை வெறும் ஓர் ஊர்தி மட்டுமே” என்றார்.

யுதிஷ்டிரன் “ஆனால் இந்த மொழி… இதை அங்காடிமொழி என்கின்றனர்” என்றார். “முன்பும் இச்சொல் எழுந்ததுண்டு. வேதங்களை ஆராய்ந்த முனிவர்களின் மொழியை கான்மொழி என்றனர் வைதிகர். ஆரண்யகங்கள் என அவற்றை விலக்கினர். ஆனால் ஆரண்யகங்களினூடாகவே வேதம் மலர்சூடி ஒளிகொண்டது என்பது வரலாறு. ஏற்கெனவே எழுதப்பட்ட மொழியில் பெருங்காவியங்கள் எழுவதில்லை. அவை புதுக்கருக்கு அழியாத மொழியிலேயே நிகழ முடியும். எங்கே கான்மொழியை நகர்மொழி அறிகிறதோ அங்கே. எந்த மொழியில் சேறும் பொன்னும் ஒன்றே என ஆகிறதோ அதிலேயே காவியம் பிறக்கும்” என்று சுரேசர் சொன்னார்.

“புது மொழியில் இந்நிகழ்வு பாடப்படட்டும். கட்டில்லாததாக, இலக்கணமற்றதாக அப்பாடல்கள் திகழட்டும். அவற்றை ஆளும் சொல்லுடன் பெருங்காவிய ஆசிரியன் ஒருவன் எழுவான். அவன் நாவில் இருந்து அழிவிலா நூல் பிறந்தெழும்.” யுதிஷ்டிரன் அவருடைய சொற்களை மறுக்க முடியாதவராக ஆனால் ஒப்புதலும் அற்றவராக திரும்பிக்கொண்டார். அவரிடம் அந்த ஒவ்வாமை மீண்டும் எழுந்தது. “நம் இளையோர் வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா?” என்றார். அவர் அப்பேச்சை மாற்ற முயல்கிறார் என்று உணர்ந்து சுரேசர் “ஆம் அரசே, நாளை மறுநாள் நகுலன் நகர்புகுவார்” என்றார்.

“நாளை நாளை என்கிறீர்கள். அவன் அணுகுவது பிந்திக்கொண்டே இருக்கிறது” என்று யுதிஷ்டிரன் சலிப்புடன் சொன்னார். “சகதேவனும் வந்துகொண்டிருக்கிறான் என்றீர்கள்.” சுரேசர் “அதற்கு அடுத்த நாள் அவர் வந்தணைவார். மேலும் இரு நாட்களில் பீமசேனனும் பார்த்தனும் நகர்புகுவார்கள். அவர்கள் வந்தமைந்ததும் நாம் ராஜசூயம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம்” என்றார். யுதிஷ்டிரன் “ஏன் அதை இப்போதே அறிவித்தாலென்ன?” என்றார். “அஸ்வமேத நிறைவுக்குப் பின் அதை அறிவிப்பதே மரபு” என்றார் சுரேசர். யுதிஷ்டிரன் “மரபுகளை அவ்வப்போது தொட்டுக்கொள்கிறோம். நன்று” என்றார்.

ஏவலன் வந்து வணங்கினான். ”நாம் அவைக்கு கிளம்பவேண்டிய பொழுது” என்றார் சுரேசர். “ஆம், ஆனால் அவைகள் எனக்கு சலிப்பூட்டுகின்றன” என்று சொன்னபடி யுதிஷ்டிரன் எழுந்தார். ஏவலர்கள் அருகணைந்து அவருடைய ஆடைகளை சீரமைத்து அணிகளையும் ஒத்திசைவாக்கினர். “அவை என நான் எண்ணுவது சான்றோர் அமைந்தது. புலவரும் கலைஞரும் செறிந்தது. இந்த அவை ஒரு அங்காடிபோல் இருக்கிறது.” கசப்புடன் சிரித்து “அங்காடிமொழியில் காவியம் எழவும் வழியமைத்துவிட்டீர்கள். நன்று” என்றார். சுரேசர் “அங்காடியில் திருமகள் வாழ்கிறாள் என்பது மரபு. அரசவை, கருவூலம், அடுமனை, ஈற்றறை, அங்காடி, வயல், ஆநிலை, நீர்நிலை என்னும் எட்டு இடங்களில் திருமகள் நிலைகொள்கிறாள்” என்றார். “நான் பேச விழையவில்லை” என்றார் யுதிஷ்டிரன்.

இடைநாழி வழியாக நடக்கையில் “நகுலன் நகர்புகும்போது மேலும் திரள் இருக்கவேண்டும்” என்றார். “அதை நிகழ்த்துவதற்கு உரியவற்றை செய்க! இம்மக்கள் பொன்னை விழைகிறார்கள் என்றால் அதை அளிக்கவும் தயங்க வேண்டியதில்லை.” சுரேசர் ஒன்றும் சொல்லவில்லை. “அர்ஜுனன் நகர்நுழைகையில் அதுவரை காணாத கொண்டாட்டம் இங்கே நிகழவேண்டும்.” சுரேசர் “நாம் மக்களை ஆளலாம், அவர்களை நடத்தமுடியாது” என்றார். “மக்கள் என இங்கே திரண்டிருப்போர் யார்? எவருக்காக நாம் போரிட்டு வென்றோம்? எவர் பொருட்டு எல்லாவற்றையும் செய்தோமோ எவரும் இங்கில்லை. இருப்பவர்கள் எளிய மக்கள். விழைவுகொண்டு வந்தமைந்தோர்” என்றார் யுதிஷ்டிரன்.

“அரசே, அவர்கள் நம்மை முழுதேற்று வந்தவர்கள். புத்துலகொன்றை சமைப்பவர்கள்” என்று சுரேசர் சொன்னார். “மெய்யாகவே என்னால் ஏற்க முடியவில்லை. இந்த நகரைப்போல் எனக்கு அயலான பிறிதொன்று இல்லை. இதற்கும் எனக்கும் எந்த உறவுமில்லை. இதன் எந்த உணர்வும் எனக்கு புரியவில்லை. முற்றிலும் அயலான ஒரு நிலத்திற்கு வந்துவிட்டவன்போல் உணர்கிறேன்.” அவர் முதுமைகொண்டு புலம்புபவர் போலிருந்தார். சம்வகை அவருடன் நடந்தபடி அவருடைய மெலிந்த தோள்களையும் தள்ளாடும் சிற்றடிகள் கொண்ட நடையையும் நோக்கிக்கொண்டிருந்தாள்.

அவர் “இந்நகரில் இனி என்ன நிகழ்ந்தால் எனக்கென்ன? இந்நகரில் இனி என் ஆணையும் செல்லாதென்று நினைக்கிறேன். அவள் தனக்குரிய நகரில் தனியரசு காண்பாள் என்றார்கள். இன்று இதோ இந்நகரமும் அவளுக்கென பொங்கி எழுகிறது. அங்கே இந்திரப்பிரஸ்தம் அவளையே அன்னையென எண்ணுகிறது என்றார்கள். என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. நான் கிளம்பி துறவுபூணவேண்டும் என்று நினைக்கிறேன். என் இளையோர் வரட்டும். அவர்களில் ஒருவர் அரசனாகட்டும். எனக்கு இந்த அரியணை ஒரு பொருட்டே அல்ல. நான் விழைவது விடுதலை… உண்மையில் எப்போதும் அதை மட்டுமே நான் விழைந்து வந்திருக்கிறேன். பிற அனைத்துமே எனக்கு பொருளில்லாமல்தான் தோன்றியிருக்கிறது” என்றார்.

 

அவைக்கு அருகிலிருந்த சிறு கூடத்திற்குள் அவர்கள் நுழைந்தார்கள். அங்கே அவர் அமர்வதற்கான பீடம் வெண்ணிறப் பட்டு விரிக்கப்பட்டு ஒருக்கப்பட்டிருந்தது. அவர் அமர்ந்துகொண்டு ஏவலனை நோக்கி “இன்நீர்… சற்று சூடாக” என்றார். அவன் கொண்டுவந்த இன்நீரை அருந்தியபடி பெருமூச்சுவிட்டார். சுரேசர் “அங்கநாட்டிலிருந்து இளவரசர் வந்துகொண்டிருக்கிறார். இங்கே ஒரு சொல் உலவிக்கொண்டிருக்கிறது, ஒருவேளை அவரை நாம் அரியணைக்குரியவராக தெரிவுசெய்யலாம் என்று” என்றார். யுதிஷ்டிரன் “அதெப்படி? அவர்கள் அங்கநாட்டுக்கு அல்லவா இளவரசர்கள்?” என்றார்.

“ஆம், ஆனால் இங்கே மூத்தவரின் மைந்தர் அவர்” என்றார் சுரேசர். “அவ்வண்ணம் சொல்லலாம். ஆனால் அவன் ஷத்ரியன் அல்ல. அவன் அன்னை சூதப்பெண். அந்த அடையாளத்தை நம்மால் மாற்றமுடியாது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “புதிய வேதத்தின் பிறப்பு என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் மெய்யாக ஒன்றுண்டு, அது ஷத்ரியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது. ஷத்ரியர்கள்கூட இன்று ஏற்றுக்கொள்வார்கள், அசுரரும் அரக்கரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூதமைந்தனை அஸ்தினபுரியின் அரியணைக்குரியவனாக ஆக்கினால் இப்பேரரசு அவன் கண்ணெதிரே சிதறும். இதை ஈட்டியது அவ்வண்ணம் அழிப்பதற்காகவா என்ன?”

“நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று மட்டும் சொன்னார் சுரேசர். “நாம் முன்னரே முடிவுசெய்துவிட்டோம், அஸ்தினபுரியின் முடிக்குரியவன் பரீக்ஷித். அவன் துவாரகையில் வளர்கிறான். அவன் உடல் தேறிவருகிறது என செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவன் ஆற்றல்மிக்கவனாக வந்து இந்நகரில் கோலேந்தி அமர்வான்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அவன் நிஷாதகுடியின் அன்னைக்கு ஷத்ரிய குடியில் பிறந்தவன். யாதவ குடியின் அன்னையின் பெயர்மைந்தன். ஆகவே அத்தனை குடிகளாலும் ஏற்கப்பட்டவன். ஆகவே அவனே இந்தப் பெருநகரை ஆளமுடியும். வேறு எண்ணமே தேவையில்லை.”

“பேரரசி திரௌபதி வருகை” என ஏவலன் உள்ளே வந்து வணங்கி அறிவித்தான். யுதிஷ்டிரன் “வருக!” என்றபின் மேலாடையை சீரமைத்தார். சம்வகை வெளியே கிளம்ப “நிற்கலாம். இங்கே அரசமுறைச் சந்திப்புக்கு அப்பால் யாதொன்றுமில்லை” என்றார் யுதிஷ்டிரன். அவள் சுவர் சாய்ந்து நின்றாள். யுதிஷ்டிரன் திரும்பி சுரேசரிடம் “அவள் எந்த அணிகளையும் கொள்ளவில்லை என்றார்கள். இன்று அவையமர்கையிலும் அவ்வண்ணம்தான் அமரவிருக்கிறாளா?” என்றார். “அவர் என்ன செய்கிறார் என அறியேன். அங்கே ஒற்றரை வைப்பது உகந்தது அல்ல என்று எனக்குத் தோன்றியது” என்றார் சுரேசர்.

திரௌபதியின் முதன்மைச் சேடி உள்ளே நுழைந்து “அஸ்தினபுரியின் அரசி!” என கட்டியம் சொன்னாள். அவள் தன் கையில் இருந்த மங்கலத்தாலத்துடன் முன்னால் வந்து அதை பீடத்தில் வைத்தாள். தொடர்ந்து திரௌபதி உள்ளே வந்தாள். சுரேசரும் சம்வகையும் தலைவணங்கினர். திரௌபதி எந்த அணியாடையும் நகைகளும் அணிந்திருக்கவில்லை. சிறிய செந்நிற மலர்களால் ஆன கரை கொண்ட வெண்ணிற ஆடையை மட்டும் அணிந்திருந்தாள். அதன் நுனியை தலைமேல் வளைத்து கொண்டையை மூடியிருந்தாள். கைகளும் தோள்களும் செவிகளுமெல்லாம் ஒழிந்திருந்தன.

யுதிஷ்டிரன் ”வருக, அரசி!” என முறைமைச்சொல் கூறினார். “அமர்க… இது தங்களின் நகரம், தங்களின் அவை. தாங்கள் வஞ்சினநிறைவு கொண்டு அரியணை அமரவிருக்கும் நாள் இது.” அந்த வேளையில் அந்த முறைமைச்சொல் அவப்பேச்சு என சம்வகைக்கு கேட்டது. திரௌபதி பீடத்தில் அமர்ந்து மேலாடையை மடிமேல் இழுத்து வைத்துக்கொண்டாள். மறுமொழியாக அவள் ஏதும் சொல்லவில்லை. யுதிஷ்டிரன் அதை எதிர்பார்த்து சற்று இடைவெளிவிட்டார். அறியாமல் விழிதூக்கி சம்வகையைப் பார்த்துவிட்டு “நீண்ட பயணம்… இன்றே அவைச்சந்திப்பை வைத்துக்கொள்ளவேண்டாம் என்று எண்ணினேன். ஆனால் நாளை ஒருவேளை நகுலன் நகர்புகக்கூடும். அது மிகப் பெரிய நிகழ்வு. அதில் இந்த அவைநிகழ்வு மறைந்துவிடக்கூடாது…” என்றார்.

திரௌபதி புன்னகைத்தாள். “இந்நகரையும் அரண்மனையையும் பழைய காலத்திலிருந்து மீட்டு எடுத்தேன். அரண்மனையிலுள்ள ஓவியங்களை அரசி பார்த்திருக்கலாம். அனைத்தும் புதியவை. தொல்கதைகளைக் கூட புதியவை என வரைந்திருக்கிறோம்” என்றார். “நகரமே விழிகொண்டுவிட்டிருக்கிறது… நான் நகரில் நுழைகையில் ஒவ்வொரு மாளிகையும் என்னை நோக்கி புன்னகை செய்தது.” அவர் அப்பேச்சினூடாக அதுவரை இருந்த இறுக்கத்தை இழந்து இயல்படைந்தார். அவரில் ஒரு சிறுவன் தோன்றினான்.

“உண்மையில் நான் பழைய நகரை மறக்க விழைந்தேன். அங்கே எனக்கு கசப்பான நினைவுகளே இருந்தன என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் இன்று இதை மாற்றியமைத்த பின் உணர்கிறேன், நான் அந்தப் பழைய நகரை முற்றாக இழந்துவிட்டேன். இனி அதை திரும்ப கொண்டுவர முடியாது. இவையனைத்தையும் அகற்றினாலும்கூட காலத்தில் முன்னால் நகரவே முடியும். இன்று திரும்பி நோக்கும்போது என் நினைவுகள் இனிக்கின்றன. இங்கே இளமைந்தனாக உலவியிருக்கிறேன். இளைஞனாக வாழ்ந்திருக்கிறேன். இளமைக்காலம் இனியது, அதில் நிகழ்ந்த துயர்களில்கூட இனிமை கலந்திருக்கிறது…”

“அன்னை நகர்நுழையக்கூடுமா?” என்று திரௌபதி கேட்டாள். அதை யுதிஷ்டிரன் எதிர்பார்க்கவில்லை. “அன்னையா?” என்றார். “ஆம், அன்னை” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “இல்லை, அன்னை நாங்கள் அனுப்பிய எந்தச் சொல்லுக்கும் மறுமொழி அளிக்கவில்லை. அவர் விதுரரின் குடிலில் அவருக்குப் பணிவிடைகள் செய்தபடி தங்கியிருக்கிறார். அவர் சொல்லடங்கும் தவத்திலிருக்கிறார்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இன்று அவர்களின் உலகில் நாங்கள் இல்லை. அன்னை இனி இந்நகரில் நுழைய வாய்ப்பே இல்லை.”

அவரே பெருமூச்சுடன் தொடர்ந்தார். “மூதரசி காந்தாரியும் நகரை மறந்துவிட்டிருக்கிறார். அவர்கள் இருவரும் காட்டில் தங்கள் நினைவுகளுடன் தனித்திருக்கிறார்கள். அவர்களுடன் ஓர் இரும்புச்சிலை உள்ளது. முன்பு துரியோதனன் செய்த பாவை அது. அதை அவர்கள் கொண்டுசென்றிருக்கிறார்கள். அவர் காட்டில் நடக்கையில் அதுவும் உடன் செல்கிறது என்று ஒற்றர்கள் சொன்னார்கள். அவர் அதனுடன் பேசிக்கொண்டே காட்டில் உலவுகிறார். அவர்களுக்குக் காவலாகவும் அவர்களால் பேணப்படும் மைந்தனாகவும் அது உடனிருக்கிறது. அவர்கள் அதை தங்கள் இருவருக்கும் நடுவே படுக்கவைத்துக்கொள்கிறார்கள். அதை அருகிருத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”

திரௌபதி “அவர்களுக்கு விடுதலை இல்லை” என்றாள். யுதிஷ்டிரன் உரக்க “எவருக்கும் விடுதலை இல்லை” என்றார். “இந்த நற்பொழுதில் ஏன் இதை நான் நினைவுகூர்கிறேன்? ஏன் துயரடைகிறேன்? எனக்கு இதிலிருந்து விடுதலையே இல்லை. அந்தப் பாவையை எண்ணிய மறுகணமே என் மைந்தர் நினைவிலெழுந்தனர். அவர்களையும் அவ்வண்ணம் பாவையெனச் செய்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். இனி அவர்களை அவ்வாறு செய்யமுடியாது. அவர்கள் மறைந்துவிட்டனர். இத்தனை விரைவில் அவர்கள் நம் கண்ணில் இருந்தும் கைகளிலிருந்தும் கரைந்தழிவார்கள் என எண்ணியிருக்கவே இல்லை. ஆனால் சாவென்பது அதுதான். எச்சமிலாதாகுதல். எச்சமென எஞ்சுவதெல்லாம் எச்சமல்ல, அவை வெறும் நடிப்புகள். வெறும் ஏமாற்றுக்கள்…”

அவர் சினம்கொண்டு எழுந்தார். “ஏன் இப்போது அதை கேட்டாய்? சொல், ஏன் அந்தப் பேச்சை எடுத்தாய்?” அவர் குரல் உடைந்தது. “நீ அறிவாய், என் நெஞ்சு எவ்வண்ணம் என நீ அறிந்ததுபோல் அறிந்தோர் எவருமில்லை. என் நெஞ்சை தொட்டு உலுக்க உனக்கு ஒரு விழியசைவே போதும். நீ அன்னையைப் பற்றிக் கேட்டது அதனால்தான். அங்கே தொடங்குமென நீ அறிவாய். இத்தருணத்தில் நான் கொண்ட இந்த மகிழ்ச்சியை அழித்தாகவேண்டுமென முடிவெடுத்தே அதை கேட்டாய்.”

அவர் விம்மலோசையுடன் மீண்டும் அமர்ந்தார். தலையை தன் கைகளால் பற்றிக்கொண்டார். “நான் இங்கே இதை நடித்துக்கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியை, வெற்றியை, நிறைவை நடித்து நடித்து எனக்குள் அதை செலுத்திக்கொண்டிருக்கிறேன். நீ ஒரு கணத்தில் அதை அழித்தாய். பெண்களில் உன்னைப்போல் இரக்கமற்றவளை இப்புவி இதற்கு முன் கண்டிருக்காது” என்றார். திரௌபதி ஒரு சொல்லும் கூறாமல் அவரை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் மெல்ல மூச்சடங்கி உடலை ஒடுக்கி தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

திரௌபதி திரும்பி சம்வகையிடம் மெல்லிய குரலில் “அவை கூடிவிட்டதா?” என்றாள். “ஆம் அரசி, அவைநிறைவை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது” என்று சம்வகை சொன்னாள். “நாம் கிளம்பவேண்டியதுதான்” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “இல்லை, நான் அவைக்கு வரப்போவதில்லை. அங்கே சென்று அமர்ந்து நடிக்க என்னால் இயலாது. நீயே முடிசூடுக! இது உன் வஞ்சம், உன் குருதிப்பசியின் நிறைவு. நீயே கொண்டாடுக!” என்றார். “ஆம், எல்லாக் குருதியும் எனக்காகவே” என்றபடி திரௌபதி எழுந்தாள். அவள் முகத்திலிருந்த கனிவு சம்வகையை குழப்பியது. அது கனிவா என்ன? எனில் அதன் பொருள் என்ன?

முதுசேடி உள்ளே வந்து தாலத்தை எடுத்துக்கொண்டாள். சுரேசர் “அரசே, எழுக!” என்றார். “இதற்கெல்லாம் என்னதான் பொருள், சுரேசரே?” என்று யுதிஷ்டிரன் சிலம்பும் குரலில் கேட்டார். “எவரால் அதற்கு மறுமொழி சொல்லமுடியும்?” என்றார் சுரேசர். திரௌபதி “பீஷ்ம பிதாமகர் எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று சுரேசரிடம் கேட்டாள். “அவரை கங்கர்குடி பிணிநோக்கி சூழ்ந்திருக்கிறது, அரசி. அவர் உடலில் நோய் முதிரவுமில்லை, தளரவுமில்லை” என்று சுரேசர் சொன்னார். “அவர் பேசுகிறாரா?” என்று திரௌபதி கேட்டாள். “ஆம், சிலமுறை விழிப்பு வந்துள்ளது. ஐவரில் பீமசேனனை மட்டும் உசாவுகிறர்” என்று சுரேசர் சொன்னார்.

யுதிஷ்டிரன் எதனாலோ சீற்றம்கொண்டவர்போல எழுந்துகொண்டு “கிளம்புவோம்… அவை கூடிவிட்டதென்றால் ஏன் இங்கே நின்றிருக்கிறோம்?” என்றார். திரௌபதி “ஆம், கிளம்பவேண்டியதுதான்” என்றாள். யுதிஷ்டிரன் அவளை நோக்காமல் சம்வகையிடம் “ஆணையிடுக… அனைத்தும் ஒருங்கட்டும்!” என்றார். அரசியும் அரசரும் இணையாக நடந்து அவைநோக்கி சென்றனர். சம்வகை வெளியே ஓடி கைகாட்ட காத்து நின்றிருந்த அவைக்காவலர் சங்கும் முழவும் மணியும் கொம்பும் சேங்கிலையும் என ஐந்திசை முழக்கத்தை எழுப்பினர். அவர்கள் இருவரும் மெல்ல அரசமென்நடையில் அவை நோக்கி சென்றனர்.

சம்வகை அவர்களுக்குப் பின்னால் சென்றாள். மங்கல இசையுடன் சூதர்கள் அவைநுழைந்தனர். தொடர்ந்து அணிச்சேடியர் சென்றனர். நிறைந்த அவையின் ஓசை முழக்கமென எழுந்து அவளைச் சூழ்ந்தது. அரசரும் அரசியும் அவை நுழைவதை அவள் ஓசையிலிருந்தே அறிந்தாள். “பேரரசி வாழ்க! அனல்மகள் வாழ்க! வெல்க கொற்றவை! வெல்க பாஞ்சாலக்குலமகள்!” என அவை முழக்கமிட்டது. அலையலையென வாழ்த்தொலி எழுந்தபடியே இருந்தது. அனைத்து இடைவெளிகளினூடாகவும் ஒலி பீறிட்டு காற்றில் அதிர்ந்தது. அவள் வாயிலில் நின்று அவைக்குள் நோக்கினாள். குடித்தலைவர்கள் அனைவருமே களிவெறிகொண்டு கூவிக்கொண்டிருந்தனர். அரிமலர்மழையால் அவை நிறைந்திருந்தது.

அந்த அவையிலிருந்த எவருமே அவளை அறிந்தவர்கள் அல்ல. அவர்கள் அஸ்தினபுரிக்கே புதியவர்கள். அந்நகரை கதைகளினூடாக வந்தடைந்தவர்கள். அவளையும் அவ்வண்ணமே அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் வஞ்சநிறைவின் பெருங்களிப்பை கொண்டிருந்தனர். கதைகளினூடாகவே அவர்கள் அடைந்த வஞ்சம். அவர்கள் ஒவ்வொருவரையாக அவள் பார்த்தாள். பீதர்முகங்கள் கண்கள் இடுங்க மரப்பாவைகள் என தெரிந்தன. கரிய தென்னிலத்து முகங்களில் வெண்விழிகள் துறித்திருந்தன. மேற்குநிலத்து யவனர் முகங்கள் குருதியெனச் சிவந்திருந்தன.

அந்தணர் வேதமோதி கங்கைநீர் தூவி அரியணையை வாழ்த்தினர். முதிய அந்தணர் வந்து அழைக்க திரௌபதி கைகூப்பியபடி சென்று அரியணையில் அமர்ந்தாள். அவள் அருகே யுதிஷ்டிரன் அமர்ந்தார். அந்தணர் அவர்களை நீரிட்டு வாழ்த்தினர். முதிய குடிகள் எழுவர் அஸ்தினபுரியின் தொன்மையான மணிமுடியை பொற்தாலத்தில் அரசமேடைக்கு கொண்டுசென்றனர். அதுதான் தேவயானியின் மணிமுடிபோலும் என சம்வகை எண்ணிக்கொண்டாள். குடித்தலைவர் அதை எடுத்து அவள் தலையில் சூட்டினர். அவள் முகம் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிலையெனத் தெரிந்தது. அவையினர் எழுப்பிய வாழ்த்தொலியும் இசைமுழக்கமும் அவளை தொடவில்லை. வேறெங்கோ என அவள் குளிர்ந்து அமைந்திருந்தாள்.

அருகே அமர்ந்த யுதிஷ்டிரன் அவளை ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் வியந்ததுபோல, அஞ்சுவதுபோல, ஒவ்வாமைகொண்டதுபோல உணர்வுகள் மாறிக்கொண்டிருந்தன. குடித்தலைவர்கள் கொண்டுவந்த ஹஸ்தியின் மணிமுடியை சூட்டினர். அவையின் வாழ்த்தொலிகளும் இசைமுழக்கங்களும் சூழ அவர்கள் அளித்த செங்கோலைப் பெற்று அவர் அரியணையில் நிமிர்ந்து அமர்ந்தார். அவையை நோக்கியபோது அவர் முகம் மலர்ந்தது. தோள்கள் விரிந்து நெஞ்சு நிமிர்ந்தது. செங்கோலை நாட்டிப்பற்றியபடி அவர் கனவு விரிந்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். அவர் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை சம்வகை கண்டாள்.

அவையினரின் வாழ்த்தொலிகளுக்கு நடுவே வெள்ளிக்கோலுடன் நிமித்திகன் மேடைக்கு வந்தான். அவன் கோலை மும்முறை சுழற்றியபோது அவை அமைதியடைந்தது. “வெற்றி சிறக்கட்டும்! வெற்றியே நிகழட்டும்! வெற்றியே என்றென்றும் தொடரட்டும்!” என்று அவன் உரத்த குரலில் கூவினான். “இந்நாளில் மகிழ்க தேவர்கள்! நிறைவடைக அஸ்தினபுரியின் மூதாதையர்! கொண்டாடுக குடிகள்! நினைத்து நினைத்து நெஞ்சுநிறைக நம் கொடிவழிகள்! இதோ கொற்றவை என நம் அரசி எழுந்தார். அவையில் உரைத்த வஞ்சம் முடித்து கொழுங்குகுருதி கொண்டு பழி துடைத்து நகர்நுழைந்தார். வெற்றிச்சிறப்புடன் அரியணை அமர்ந்தார்!”

“பாடுக பாவலர், புகழ் பாடுக சூதர்! இது தெய்வங்களின் தருணம். பொலிக அஸ்தினபுரியின் அரியணை! தேவயானியும் தபதியும் சத்யவதியும் அமர்ந்த பீடம் நிறைவுறுக! அன்னை அமர்ந்த இந்த மேடை என்றென்றும் ஆலயத்தூய்மை கொள்க! சொல்பெற்று அழிவின்மை சூடுக! ஆம், அவ்வாறே ஆகுக!” அவை வெறிகொண்டு ஆர்ப்பரித்தது. குடித்தலைவர்கள் எழுந்து கைகளை வீசி தொண்டைநரம்புகள் புடைக்க கூச்சலிட்டனர். கொம்புகளும் முரசுகளும் முழக்கமிட வெளியே முற்றத்தில் நின்றிருந்த இசைக்குழு அதை ஏற்று முழக்கமிட்டது. அதிலிருந்து பற்றிக்கொண்டு நகரமெங்கும் இருந்த காவல்கோட்டங்களில் முரசுகளும் கொம்புகளும் முழங்கின. நகரமே ஒரு இசைக்கலமென்றாகியது.

அதன் நடுவே திரௌபதி அயலவள் என அமர்ந்திருந்தாள். அவள் முகமும் விழிகளும் முற்றிலும் பொருளில்லாதவையாக இருந்தன. அந்நிகழ்வுகளின் மையமெனத் திரண்ட பொருளின்மை அது என சம்வகை எண்ணிக்கொண்டாள்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49

பகுதி ஐந்து : விரிசிறகு – 13

பேரரசி திரௌபதியின் தேர் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவளுக்கு அருகே புரவியிலமர்ந்து சம்வகை சென்றாள். பேரரசி தன் மூடுதேரில் இருந்து இறங்கி திறந்த தேரில் ஏறிக்கொண்டாள். அவளை நோக்கும்பொருட்டு இருபுறமும் நின்றிருந்த மக்கள் முண்டியடித்தனர். அத்தனை கட்டுப்பாடுகளும் அழிய சாலை மழைவிழும் ஓடைநீர் என கொந்தளித்தது. அதன் நடுவே அவளுடைய தேர் சுழன்றும் அமைந்தும் சென்றது. வாழ்த்தொலிகளின் அதிர்வு தன் பற்களை கூசவைப்பதுபோல் உணர்ந்து சம்வகை வாயை இறுக்கிக்கொண்டாள். அவள் விழிகள் கூசி நிறைந்து நீர்வழிந்து உலர்ந்து மீண்டும் கலங்கின.

பேரரசியின் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தாள். கோட்டையை முதலில் நோக்கியபோது அவள் விழிகளில் எந்த மாறுதலும் தென்படவில்லை. தேர் மாற்றிக்கொண்டபோது, கோட்டைவாயிலுக்குள் நுழைந்தபோது, கோட்டைக்குள் கிழக்கு உள்முற்றத்தில் பெருகிநிறைந்திருந்த மக்கள்திரளை நோக்கியபோது அவள் முகம் உறைந்ததுபோல் இருந்தது. உவகையென்றோ நெகிழ்வென்றோ கசப்பென்றோ ஏதுமில்லை. எதையும் நினைவுகூர்பவளாகவோ எதிர்பார்ப்பவளாகவோ தோன்றவில்லை. கற்சிலை முகம். தெய்வங்களுக்குரியது கல்முகமே.

சம்வகை விழிகளால் துழாவிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒற்றர்கள் சார்வாகர்களின் ஒரு குழு நகருக்குள் நுழைந்துவிட்டிருக்கும் செய்தியை அளித்திருந்தனர். அவர்கள் நகருக்கு வெளியே இடுகாட்டில் தங்கியிருந்தனர். முதலில் அவர்களில் ஒருவரே தோன்றினார். மேலும் எழுவர் பின்னர் வந்தனர். சுடுகாட்டின் பெருச்சாளிகளையே அவர்கள் உணவாக்கினர். பெருச்சாளித்தோலையே ஆடையென அணிந்தனர். கையிலேந்திய ஞானக்கோல் அன்றி துணையின்றி இருந்தனர். இரவும் பகலும் இன்றி சிவமூலிகையின் புகையில் மெய்மறந்து அகமழிந்து விழிசிவந்து அமர்ந்திருந்தனர்.

அவர்கள் நகர்நுழைய ஒப்புதல் இல்லை. ராஜசூயம் போன்ற பெருவேள்விகளின்போது மட்டுமே ஞானத்தின் தரப்பினரும் உள்ளே வர அழைக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை எவரும் தடுக்கவும் முடியாது. மக்கள் அவர்களை அஞ்சினர் என்பதொன்றே அவர்களை தடுத்தது. அவர்களைக் கண்டதும் அனைவரும் விலகி வழிவிட்டனர். எந்தப் பெருந்திரளிலும் அவர்கள் தன்னந்தனியர்களாகவே நடந்தனர். அவள் அவர்களில் எவரேனும் விழிக்கு தென்படுகிறார்களா என்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவர்களில் ஒருவர் எக்கணமும் அங்கே தோன்றக்கூடும். ஏதேனும் ஒன்றை சொல்லக்கூடும். அந்த நாளின் மங்கலங்களை அழிக்கும் ஒரு சொல்லை. அவர்களின் தோற்றமே மங்கலங்களை சிதைப்பது. அவர்கள் வாழ்வது அதற்காகவே.

“மங்கலங்களுக்கு எதிர்நிற்பதே அவர்களின் செயல்பாடு. அதன்பொருட்டே தங்களை அவ்வண்ணம் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அமங்கலர் என்றே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்” என்றார் சுரேசர். “அதுவே அவர்களின் பணி. அவர்களின் கொள்கை. ஏனென்றால் எந்த மங்கலமும் நிலைபேறின் விளைவு, எந்த நிலைபேறும் அடித்தளத்தில் குருதி கொண்டது என அவர்களின் நூல்கள் சொல்கின்றன.” அவள் அதை தன்னுள் சொல்லிக்கொண்டே இருந்தாள். பின்னர் சுரேசரிடம் “அது மெய் என்று என் அகம் சொல்கிறது” என்றாள்.

“நன்று” என்று அவர் வெடித்து நகைத்தார். “இன்றுவரை பாரதவர்ஷத்தில் மாறாத ஒரு வரலாறு உள்ளது. இளமையில் எளியோருக்கு இரங்கி அரசை வெறுத்தவர்களே பின்னாளில் அரசின்பொருட்டு ஏழைகளை வெறுப்பவர்களாக ஆனார்கள். அரசாண்ட கொடுங்கோலர்களோ முடிதுறந்து கானேகிக் கனிந்தனர்.” அவள் சுரேசரிடம் வெறுத்தது அதைத்தான். அவரிடம் இரக்கமற்ற ஓர் இளிவரல் இருந்தது. கூரியது, துணித்துக் கடந்துசெல்கையிலும் குருதிபடியாத ஒளிகொண்டது.

உள்கோட்டை முற்றத்தில் சுரதன் தன் இளையோன் சுகதனுடன் அரசஉடை அணிந்து நின்றிருந்தான். அவனைச் சூழ்ந்து அணியுடையுடன் வீரர்கள் நின்றனர். அவர்கள் இருவரும் மலர்ந்த முகங்களுடன் இருப்பதை சம்வகை கண்டாள். பேரரசி சற்றே திரும்ப அவள் உதடசைவாக “சிந்துநாட்டு அரசர் ஜயத்ரதனின் மைந்தர்கள் சுரதனும் சுகதனும்” என்றாள். பேரரசி அச்சொற்களை புரிந்துகொண்டு விழிமலர மைந்தர்களை நோக்கினாள். முதல்முறையாக அவள் முகத்தில் புன்னகை எழுந்தது. அது கனிந்து மானுடத்தன்மை கொண்டது. அவள் உதடுகளில் ஒரு சொல் எழுந்து அமைந்தது. “மைந்தர்கள்” என்று அவள் சொன்னாள். மேலும் கனிந்து “இனியவர்கள்” என்றாள்.

பெருந்திரளிலும் பேரோசையிலும் உதட்டுமொழியே உதவுவது என்று அவளிடம் சுரேசர் பலமுறை சொல்லியிருந்தார். நெடுநாள் அவளால் அதை கற்க இயலவில்லை. ஓசையெழாதபோது அச்சொல் நாவை விட்டு வெளியே கிளம்பவில்லை என்று எப்போதுமே தோன்றியது. ஆனால் பின்னர் அதை கற்றேயாகவேண்டுமென்ற நிலை எழுந்தது. முயன்றபோது ஒரே நாளில் அதை உள்வாங்க முடிந்தது. அதன்பின் ஒன்றை அவள் உணர்ந்தாள், ஒலியிலாச் சொல் முற்றிலும் பிறிதொன்று. அது செய்திகளை மட்டுமே சொல்லமுடியும், உணர்வுகளை அல்ல. ஆகவே அதில் கரவுகளும் மடிப்புகளும் இல்லை. அது இலக்கு நோக்கிச் செல்லும் அம்பு, அதனால் வளைய இயலாது. அதன் சொற்கள் அனைத்துமே முனைமழுங்காமல், தேய்வுகொள்ளாமல் அன்று செய்தவை போலிருந்தன.

அதை கற்றுக்கொண்ட நாள் முதல் அவளைச் சூழ்ந்திருந்த உலகம் முற்றாக மாறியது. நெடுந்தொலைவில் சேடிப்பெண் பேசுவதை அவளால் அறியமுடிந்தது. காவல்மாடத்திலிருக்கும் படைவீரர்கள் சொல்லும் இழிசொற்கள் குருதித்தசைத் துண்டுகள் என வந்து முன்னால் விழுந்தன. அகன்று கூடி நின்றிருக்கும் மக்கள்திரளின் பேச்சொலி ஒற்றை முழக்கமாகவே எப்போதுமிருந்தது. அது தனித்தனியான பல்லாயிரம் உரையாடல்களாக உடைந்து பெருகி விரிந்தது. விழிகளால் சாலையில் செல்லும் தெய்வவடிவை நோக்கிக்கொண்டிருக்கும் அன்னை தன் இடைக்குழவியிடம் இன்சொல்தான் உரைக்கிறாள். இளம்பெண் எங்கோ நின்று நோக்கும் காதலனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். வசைச்சொற்கள், பழிச்சொற்கள், இளிவரல்கள்.

மானுடர் தனித்துச் சொல்லும் சொற்களை அவள் கேட்கலானாள். அவர்கள் துயருற்றிருக்கையிலும் இன்புற்றிருக்கையிலும் அரற்றினார்கள். நினைவுகளின் பெருக்கு சொற்களென உதடுகளில் கசிந்தது. காதலின் போதையில் பிதற்றினார்கள். அவர்களின் உள்ளத்திலிருந்து உதடுகளுக்கு அவர்களே அறியாத பாதை ஒன்றிருந்தது. அதை உணர்ந்தபின் அவள் மானுடரை விரும்பலானாள். “இன்னும் செல்லும் தொலைவு உண்டு. பட்டாம்பூச்சிச் சிறகடிப்பில், விலங்குகள் அசைபோடுவதில் எல்லாம் சொல்லெழத் தொடங்கும். நாய்வாலும் மான்செவியும் உன்னிடம் பேசத்தொடங்கும்” என்றார் சுரேசர்.

திரௌபதி மைந்தரின் பெயர்களை சொல்லிக்கொண்டிருப்பதை அருகே சென்றபடி அவள் பார்த்தாள். அஸ்தினபுரியின் மீட்டுக் கட்டிய சாலையினூடாகச் செல்கையில் பேரரசி புது விழிகள் கொண்டு நின்ற மாளிகைகளை பார்க்கிறாளா என்று சம்வகை நோக்கினாள். அவள் எதையுமே நோக்கவில்லை என்று தோன்றியது. மெய்யாகவே எவையும் அவள் கண்ணுக்குப் படவில்லையா என்ன? அவள் தன்னுள் மட்டுமே நோக்குபவளாக ஆகிவிட்டிருக்கிறாளா என்ன? மைந்தர்துயர் அவளை அவ்வண்ணம் ஆக்கிவிட்டிருக்கிறதா? அஸ்தினபுரியை அவள் வென்றெடுத்திருக்கிறாள். வஞ்சநிறைவு செய்து நகர்புகுந்திருக்கிறாள். இத்தருணம் காவியங்களால் பாடப்படவிருப்பது. முடிவற்று மீள நிகழ்த்தப்படவிருப்பது. இன்று அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் காலம் பல்லாயிரம் கைகள் நீட்டி பெற்றுக்கொள்ளவிருக்கிறது.

“அரசருக்குரிய இயல்பென்ன என்று கேட்கப்பட்டபோது முதுமன்னர் யயாதி சொன்ன சொல் ஒன்று உண்டு, யானைமேல் இயல்பாக இருத்தல்” என்று சுரேசர் ஒருமுறை சொன்னார். “அது எவருக்கும் இயல்வதல்ல என்றே நான் உணர்கிறேன். யானையின் மேலிருக்கையில் யானை என தன்னை ஆக்கிக்கொள்ளா மானுடர் அரிது. யானையை தானாக்கிக்கொள்வதை நோக்கி செல்லாதவருமில்லை. யானையென எளிய மானுடத்திரள் நடுவே செல்கையில் நிலத்தில் காலூன்றி எளியோன் என உணர்வதென்பது யோகியர் மட்டுமே அடையும் பெருநிலை. பிரம்மவடிவென்றும் ஊனுடலென்றும் ஒரே தருணத்தில் தன்னை உணர்தலுக்கு நிகரானது அது.”

சுரதனும் சுகதனும் மெய்யான உவகையுடன் இருப்பதாகவே அவளுக்குப் பட்டது. அவர்கள் பேசிக்கொள்வதை அவள் கேட்டாள். அவர்கள் இன்சொற்களையே சொன்னார்கள். சுரதன் அகஎழுச்சியுடன் “பேரரசி என்னை அறிந்திருக்கிறார். என் பெயர் அவருக்கு முன்னரே தெரிந்திருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டிருந்தான். சுகதன் “நான் அவர் தேரிறங்கியதுமே சென்று பேசுவேன்” என்றான். சுரதன் “அவ்வாறு செல்ல முறைமை இல்லை…” என்றான். “நான் அவர் மைந்தன்… எனக்கு எந்த முறைமையும் தேவையில்லை” என்றான் சுகதன். “எனில் நீ முன்னால் செல்… நான் உன்னைப் பிடிக்க வருபவன்போல தொடர்ந்து அவர் அருகே வந்துவிடுகிறேன்” என்றான் சுரதன்.

அவள் அவன் விழிகளை நோக்க விழைந்தாள். மேலும் அருகே சென்று, மேலும் ஆழமாக. அங்கே அந்தப் பித்து எஞ்சியிருக்கிறதா என்று. அது பேரரசியைக் கண்டதும் கரைந்தழிந்துவிட்டிருக்கக் கூடும். அவனுடைய உள்ளம் ஒரு சிறு நுரைக்குமிழி. அது அத்தனை பெரிய விசையை தாளாது. அவன் விழைந்ததே பேரரசியின் விழிகளுக்கு முன் திகழவேண்டும் என்பதாக இருக்கலாம். எளியோனாக ஆகிவிடக்கூடாதென்பதே அவனை அவ்வண்ணம் ஆக்கியிருக்கலாம். ஆனால் அவன் காணும் தந்தையுருவென்பது ஒரு மெய்மை. விழியற்ற தந்தையால் ஆட்டுவிக்கப்படுபவன் அவன் என்பது உண்மை. ஆனால் அவன் பித்தன். பித்து தன்னை மறைக்கவும் கற்றிருக்கக் கூடும்.

அஸ்தினபுரியின் காவல்கோட்டங்களில் முரசு முழங்கிக்கொண்டிருந்தது. ஆனால் பெருமுரசுகளின் இடியோசை நகரில் நிறைந்திருந்த பேரோசையில் குமிழிகளென உடைந்தழிந்தது. தலைக்குமேல் எழுந்த காவல்மாடத்தில் முரசுத்தோல்மேல் முழைக்கழிகள் ஓசையில்லாமல் துள்ளி நடமிடுவதை அவள் கண்டாள். அவற்றின் தோலதிர்வை மட்டுமே உணரமுடிந்தது. அரண்மனைக் கோட்டைக்குமேலிருந்து கொம்புகள் ஒலித்தன. குருவிகளின் அகவலோசை என. பாஞ்சாலத்து அரசியின் விற்கொடி எழுந்து பறக்கத் தொடங்கியது. தேர் உள்கோட்டையைக் கடந்து அரண்மனை முகப்பை அடைந்தது.

சம்வகை விழிகளைச் செலுத்தி சிந்துநாட்டு அரசி அங்கே நின்றிருப்பதை கண்டாள். சிந்துநாட்டு அரசி முதலில் தன் மைந்தர்களையே நோக்கினாள். அவர்கள் மெய்யான மகிழ்வுடன் வருவதைக் கண்டதும் அவள் கொண்ட உளக்குழப்பம் அழிய புன்னகை புரிந்தாள். அவர்கள் அருகணைந்ததும் சிந்துநாட்டு அரசியின் அணிச்சேடிகள் முன்னால் வந்து அவளை வாழ்த்தி மங்கலத்தாலம் காட்டி வரவேற்றனர். இசைச்சூதர் முழங்க சேடியர் வாழ்த்துரை எழுப்பினர். சிந்துநாட்டு அரசி சுடரேற்றிய பொன்னகல் விளக்குடன் முன்னால் வந்து புன்னகையுடன் அவளை வரவேற்றாள். “அஸ்தினபுரிக்கு பாரதவர்ஷத்தின் பேரரசியை வரவேற்கிறேன்” என்றாள். “இந்நாள் இனிவருவோர் சித்தத்தில் இனிதென என்றும் திகழ்க! தங்கள் வருகையால் திருவும் சொல்லும் பெருகி இந்நகர் பொலிவுறுக! அன்னை கொற்றவை என இங்கே அமைக! இங்குள்ளோர் தேவர்களென மகிழ்க!”

பேரரசி அச்சொற்களால் உளம்நெகிழ்வதை சம்வகை கண்டாள். அது அவளுக்கு உடனே உருவாக்கியது ஒரு சிறு ஏமாற்றத்தைத்தான். பேரரசி மெல்லுணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கையில் ஒரு மெல்லிய எரிச்சலை உருவாக்கினாள். ஆனால் அவள் அவ்வண்ணம் இருப்பது நிறைவையும் அளித்தது. அவள் எண்ணிய வடிவம் அது. நெகிழும் கொற்றவையை கோயிலில் அமைக்க முடியாது. அவள் விழிநீர்விடுவதைக் கண்டால் தன் உள்ளம் கசந்துவிடும் என்று தோன்றியது. அவ்வாறு நிகழலாகாது என அவள் வேண்டிக்கொண்டாள். ஆனால் அஞ்சுவதெல்லாம் நிகழும் என்று எங்கோ எவரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அஞ்சுவன எல்லாம் அகத்தே வாழ்வன, அவை அச்சமென எழுந்து தங்களை காட்டுகின்றன.

பேரரசியை சிந்துநாட்டு அரசி உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு கையில் நிறைநீர் பொற்குடமும் மறுகையில் ஏற்றிய பொன்னகலுமாக பேரரசி அஸ்தினபுரியின் அரண்மனைக்குள் நுழைவதை சம்வகை நோக்கி நின்றாள். மெல்ல அவள் உள்ளம் சலித்து தளர்ந்து மண்ணுடன் படிந்தது. எங்கேனும் படுத்து துயிலவேண்டும் என்று தோன்றியது.

 

சம்வகை விழித்துக்கொண்டபோது சுரேசரின் ஏவலன் அவளுக்காக காத்திருந்தான். அவள் ஆடைமாற்றி வந்ததும் வணங்கி “அமைச்சர் காணவிழைகிறார்” என்று அவன் சொன்னான். அவள் தன் கவசங்களை அணிந்துகொண்டு அரண்மனைக்குச் சென்றாள். அஸ்தினபுரியின் அரண்மனை மையக்கோட்டத்திற்கு வெளியே முந்தைய படைத்தலைவரின் மாளிகையை அவளுக்கு அளித்திருந்தார்கள். அங்கே ஏவலரும் பணிப்பெண்களுமாக அவள் தனித்து தங்கியிருந்தாள். பின்னிரவில் மட்டுமே அவள் அங்கே வந்தாள். புலரிக்கு முன்னரே கிளம்பிச் சென்றாள். அந்த மாளிகை அவள் உள்ளத்தில் எவ்வகையிலும் பதியவில்லை. ஆனால் அவள் கால்கள் அதை அறிந்திருந்தன. அவை அவ்விடத்தை பல பிறவிகளாக அறிந்திருக்கின்றன என அவள் எண்ணியதுண்டு.

சுரேசர் தன் அறையில் இருந்தார். காலடியோசை கேட்டு திரும்பி நோக்கி புன்னகைத்து “வருக!” என்றார். அவள் வணங்கி முகமன் உரைத்து தலைக்கவசத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தாள். சுரேசர் புன்னகையுடன் “ஒரு பெரும்பணியை முடித்துவிட்டீர்கள்” என்றார். “நான் எனக்கான ஆணைகளை நிறைவேற்றினேன்” என்று அவள் சொன்னாள். “நீங்கள் ஓய்வெடுக்கச் சென்றிருப்பீர்கள் என எண்ணினேன்” என்றார் சுரேசர். “ஆம், அரண்மனைக்குள் செல்லலாகாது என முடிவெடுத்திருந்தேன். அப்பொறுப்பை சிந்துநாட்டு அரசியிடம் அளிப்பதே முறை எனத் தோன்றியது” என்றாள். “துணைக்கு சுஷமையும் இருக்கையில் நான் செய்வதொன்றுமில்லை.”

“ஆம், அனைத்தும் முறைப்படி முடிந்தன” என்று சுரேசர் சொன்னார். “பேரரசி அரண்மனையில் தன் பழைய அறையையே விரும்பினார். அதை நான் உணர்ந்திருந்தேன். அது ஒருக்கப்பட்டிருந்தது, என்றாலும் வேறு அறைகளையும் ஒருக்க ஆணையிட்டிருந்தேன். ஆனால் நானும் எதையும் சிந்துநாட்டு அரசியின் தெரிவை மீறி செய்ய முனையவில்லை. பேரரசி தன் அறைக்குள் சற்று முன்னர்தான் சென்றார். இப்போது அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்” என்றார் சுரேசர். “அவரது தனிப்பணிக்குரிய ஏவற்பெண்டுகள் உடன் வந்திருக்கிறார்கள். ஆகவே நாம் பெரிதாக இனி ஏதும் செய்வதற்கில்லை. நகரம் அவர்களை எவ்வண்ணம் எதிர்கொள்ளும் என்ற சிறு ஐயம் எனக்கிருந்தது. பொருந்தாத ஒன்றை நான் எதிர்பார்த்தேன். உங்கள் ஆட்சியே நகர்நுழைவை மங்கலம்மிக்கதாக நிகழ்த்தி முடித்தது.”

“என் கடமை” என்றாள் சம்வகை. “பேரரசியிடம் நான் ஓரிரு சொற்களே பேசினேன். அவர் களைத்திருந்தார்.” சுரேசர் “ஆம், அது பயணக்களைப்பு. இந்த இடத்திற்கு அவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து கிளம்பி வரவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து, பாஞ்சாலத்தில் இருந்து கிளம்பி வந்திருக்கிறார்” என்றார். சம்வகை பெருமூச்சுவிட்டாள். “அந்தியில் அரசவை கூடவிருக்கிறது. அதில் பேரரசியை அரசர் முறைப்படி சந்திக்கிறார். நெடுநாளாகிறது அவர்கள் சந்தித்துக்கொண்டு” என்று சுரேசர் சொன்னார். “அதில் சிந்துநாட்டு இளவரசர்களை அரசர் சந்திக்கிறாரா?” என்று சம்வகை கேட்டாள். ”ஆம், அதை தவிர்க்கமுடியாது” என்றார் சுரேசர். “அவர்கள் சந்திப்பதே முறை.”

“சிந்துநாட்டரசியின் கோரிக்கையை இன்னமும் முறைப்படி நாம் அரசர்முன் வைக்கவில்லை” என்றாள் சம்வகை. “ஒருவேளை துணிந்து சிந்துநாட்டரசியோ அல்லது அந்த இளவரசர்களோ அதைப்பற்றி அவையில் பேசுவார்களென்றால்…” சுரேசர் இடைமறித்து “அதைப்பற்றிப் பேசத்தான் நான் உங்களை அழைத்தேன்” என்றார். “சிந்துநாட்டரசிக்கு பேரரசி சொல்லளித்துவிட்டார்.” சம்வகை திகைப்புடன் “எதைப்பற்றி?” என்றாள். “சிந்துநாட்டை அஸ்தினபுரியின் படைகள் கைப்பற்றி ஜயத்ரதனின் முடியை சுரதனுக்கு அளிப்பார்கள்” என்றார் சுரேசர். சம்வகை சொல்லவிந்துவிட்டாள். “எப்போது?” என முனகலாகக் கேட்டாள்.

“பேரரசி அரண்மனைக்குள் புகுந்து அகத்தளத்திற்குச் சென்றபோதே அச்சொல் பெறப்பட்டுவிட்டது” என்று சுரேசர் சொன்னார். “மூதரசி காந்தாரியின் அகத்தளத்தை அப்படியே பேணவேண்டுமென ஆணையிட்டிருந்தேன். அரசியின் இருப்பென அங்கே ஓர் அகல் எப்போதும் எரிந்துகொண்டிருக்கட்டும் என்று நிமித்திகர் சிந்துநாட்டு அரசியிடம் சொன்னார்கள். அரசி அவ்வண்ணம் அங்கே ஒரு நெய்விளக்கை ஏற்றினார். பின்னர் அவர் தன் கனவில் அது ஒரு நீலப் பட்டால் மூடப்பட்டிருப்பதாகக் கண்டார். ஆகவே அந்த அகல்சுடர் நீலப் பட்டால் சுற்றப்பட்டுள்ளது. அங்கே நின்றிருக்கையில் அச்சொல் அளிக்கப்பட்டது.”

சம்வகை பேசாமல் நோக்கி அமர்ந்திருந்தாள். “சிந்துநாட்டரசி பேரரசி திரௌபதியை அங்கே அழைத்துச்சென்றார். அச்சுடருக்கு மலரிட்டு வணங்கிவிட்டு அரண்மனைக்குள் குடியேறுவதே முறை என்று அவர் சொன்னார். பாஞ்சாலத்துப் பேரரசி அங்கே நுழைந்தபோது உணர்வுருகிய நிலையில் இருந்தார். அவரால் காலெடுத்து வைத்து உள்ளே நுழைய முடியவில்லை. மலரிட்டு வணங்கியபோது அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் சிந்துநாட்டு இளவரசர்களுடன் வெளியே நின்றிருந்தேன். அறையிலிருந்து வெளியே வந்தபோது பேரரசியின் முகம் அனல்கொண்டதுபோலிருந்தது.”

“எதிர்பாராத தருணத்தில் சிந்துநாட்டு இளையோன் அந்த இடத்தின் உணர்வுநிலையை பொருட்படுத்தாமல் பாஞ்சாலத்துப் பேரரசியின் அருகே சென்று அவரது ஆடைமுனையை பற்றிக்கொண்டு அன்னையே நான் சிந்துநாட்டு இளவரசனாகிய சுகதன் என்றார். பேரரசி முகம் மலர்ந்து அவரை இழுத்து தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டார். அவர் விழிகளில் நீர்த்துளிகளைக் கண்டேன். உதடுகள் விம்முவதுபோல குவிவதைக் கண்டேன். அவர் தோளையும் கைகளையும் வருடியபடி நான் உன்னை இளமைந்தனாகக் கண்டதுண்டு என்றார். ஆம், நானும் உங்களை இளமைந்தனாகக் கண்டேன் என்று அவர் சொன்னார். பேரரசி நகைத்துவிட்டார். எப்படி என்றார். நீங்கள் என்னை கண்டால் நானும் கண்டிருப்பேன் அல்லவா என்றார். நானே புன்னகைத்துவிட்டேன்.”

“அத்தருணத்தில் மூத்த இளவரசராகிய சுரதன் முன்னகர்ந்து அன்னையே, எங்கள் நிலத்தை எதிரிகள் கைப்பற்றிக்கொண்டுவிட்டார்கள். எங்கள் தந்தைக்குக் கீழே கோல்கொண்டிருந்த சிற்றரசர் வஜ்ரபாகுவால் நாங்கள் நிலம்விட்டு துரத்தப்பட்டோம்… நாடிலியாக உங்களை நம்பி வந்தோம்” என்றார். பேரரசியின் விழிகள் ஒருகணம் சற்றே மாறின. “அவனைக் கொன்று சிந்துநாட்டு முழு நிலமும் உனக்கு அளிக்கப்படும். உன் கோலுக்கு எதிராக எவரும் ஒரு சொல்லும் உரைக்கமாட்டார்கள்” என்றார். பதைப்புடன் மைந்தனை பேசாமல் தடுக்கமுயன்ற சிந்துநாட்டரசி அச்சொற்களைக் கேட்டு திகைத்து நெஞ்சை பற்றிக்கொண்டார்.”

“பேரரசியின் கால்களைத் தொட்டு சுரதன் வாழ்த்து பெற்றார். அவர் தலைதொட்டு வாழ்த்தியபின் தோளைப் பற்றிக்கொண்டு இன்மொழி சொன்னார். இளையவரைத் தழுவி தன் அறைக்கு அழைத்துச்சென்றார். சிந்துநாட்டரசி விழிநீர் பொழிய அமர்ந்துவிட்டார். சுரதன் என்னை நோக்கி பிறிதொரு ஆணை தேவையா என்றார். இல்லை, அனைத்தும் முடிவுசெய்யப்பட்டுவிட்டன என்றேன். சுரதன் புன்னகையுடன் அறைநீங்கினார். நான் இங்கே வந்தேன். உங்களை அழைத்துவர ஏவலனை அனுப்பினேன்.”

சம்வகை பெருமூச்சுவிட்டாள். “பாரதவர்ஷத்தில் இனி என்றும் மறுசொல் என ஒன்று திகழப்போவதில்லை” என்றார் சுரேசர். “உண்மையில் வஜ்ரபாகுவின் அமைச்சர் இங்கே நேற்றே வந்து தங்கியிருக்கிறார். அந்தணர், அனைத்தும் அறிந்தவர். நான் இங்கே வருவதற்கு முன் அவர் இங்கே வந்துவிட்டார். என்னிடம் வஜ்ரபாகுவின் உயிரை மட்டும் விட்டுவிடமுடியுமா என்றார். முடியாது, அவர் அடிபணிந்தாலும் தலைதுணிக்கப்படும். இங்கே அரசியின் சொல் வேறு தெய்வ ஆணை வேறு இல்லை என்றேன். நான் என்ன செய்வது என்றார். வஜ்ரபாகு அங்கிருந்து தப்பி ஓடட்டும். எவ்வண்ணமேனும் இங்கே நகர்புகுந்து அரசியின் கால்களில் விழுந்து அளி இரக்கட்டும். அரசி சொல்மாற்றுவார் என்றால் அவர் உயிர்நிலைக்கும். அன்றி பாரதவர்ஷத்திலோ வெளியிலோ எங்கும் அவர் வாழமுடியாது என்றேன். ஆவன செய்கிறேன் என சற்றுமுன் கிளம்பிச்சென்றார்.”

சம்வகை ஒன்றும் சொல்லாமலிருந்தாள். “சொல்க!” என்றார் சுரேசர். “சுரதன் நிலையுள்ளம் கொண்டவர் அல்ல” என்று சம்வகை சொன்னாள். “ஆம், ஆனால் நச்சுவண்டுகளால் யானைக்கு தீங்கில்லை” என்று சொல்லி சுரேசர் சிரித்தார்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48

பகுதி ஐந்து : விரிசிறகு – 12

சம்வகை நெடுந்தொலைவில் முதல் கொம்பொலியை மிக மெல்லிய செவித்தீற்றலென கேட்டாள். அது வானில் ஒரு பறவை புகைத்தீற்றலென, ஒளிச்சுழல்கை என வளைந்து செல்லும் அசைவுபோல் அவளுக்குத் தோன்றியது. அவளைத் தவிர அங்கு காவல்மாடத்தில் நின்றிருந்த எவரும் அதை கேட்கவில்லை. அவள் மீண்டுமொரு கொம்பொலி எழுவதற்காக விழியும் செவியும் கூர்ந்தாள். அவ்வொலியை தன் விழிகளால் பார்த்ததாக அவளுக்குத் தோன்றியது. அவள் படிகளில் இறங்கி கீழே வர சுதமை அவளை நோக்கி ஓடி வந்தாள். “கொம்பொலியை நான் கேட்டேன். அணுகிக்கொண்டிருக்கிறார்” என்றாள். “ஆம், அணிவகுப்பை பிறிதொரு முறை சீர்நோக்குக! அது பிழையற்றிருக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். “ஆணை தலைவி, அதைத்தான் செய்யவிருக்கிறேன்” என்று சுதமை சொன்னாள்.

முழுக் கவசஉடையில் நின்றிருந்த சம்வகை உள்கோட்டை முற்றத்தில் நான்கு நிரைகளாக அணிவகுத்து நின்றிருந்த கவசப் படைவீரர்களையும், அவர்கள் அருகே வலப்பக்கம் நீள்நிரையென நின்ற அணிச்சேடியரையும் இடப்பக்கம் நின்றிருந்த இசைச்சூதர்களையும் பார்த்தாள். அவர்கள் அனைவருமே அஸ்தினபுரிக்கு புதியவர்கள். அங்கு முன்பு நிகழ்ந்த எந்த அரச வரவேற்பு நிகழ்ச்சியையும் பார்க்காதவர்கள். அவர்களுக்கு இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒவ்வொரு முறையும் பயிற்சியில் ஏதேனும் ஒன்றை பிழையாகவே செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்ன நிகழவேண்டும் என்பது புரிந்திருந்தது. ஆனால் எப்போதும் சடங்குகளை உடல்கள் கற்று மறந்து சலித்து பின் தன்னியல்பாக இயற்றுகையிலேயே ஒழுங்காக அமைந்தன.

பிழையின்றி ஒன்று இருக்காது என்று அவள் அறிந்திருந்தாள். அது அவர்கள் மட்டுமே அறிந்ததாக, நிகழ்கையில் அரசி அறியாது கடந்து செல்வதாக அமையும் என்றால் அது வெற்றி. ஆனால் எப்பிழை நிகழும் என்று அங்கே நின்று மீளமீள நோக்கியபோது கண்டுபிடிக்க முடியவில்லை. கைவிடுபடைகளும் படைத்திரளும் எந்நிலையிலும் நிகழவிருக்கும் பிழையொன்றை தன்னுள் முன்னரே கொண்டிருக்கின்றன என்றன அரசநெறிநூல்கள். அது மிகத் திறமையாக மறைந்திருக்கிறது. அவ்வாய்ப்பு ஏன் விழிகளுக்குப் படுவதில்லை? நிகழும் வரை அது எங்கிருக்கிறது? அது எவருடைய உள்ளத்தில் முளைத்துக்கொண்டிருக்கிறது? பொருளில் அது வெளிப்படுவதில்லை. பொருளில் வெளிப்படுகையில் மட்டுமே உள்ளத்தில் அது நிகழ்ந்திருப்பது தெரிகிறது.

அனைத்து வீரர்களும் உள்ளம் கிளர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்வின் முதன்மையான தருணம் ஒன்றை இயற்றவிருப்பதாக எண்ணினர். ஆனால் மீளமீள அளிக்கப்பட்ட பயிற்சிகளால் சலிப்பும் அடைந்திருந்தனர். ஆகவே இருநிலை கொண்டிருந்தனர். அந்த அலைவால் அவர்களால் அந்தத் தருணத்தை முழுமையாக நிறைக்க முடியவில்லை. பயின்று பழகிய முந்தைய வீரர்கள் அத்தருணத்தில் முற்றிலும் ஆர்வம் இழந்தவர்கள்போல, முழுமையாக வேறெங்கோ உளம்சென்றுவிட்டவர்கள்போல இருப்பார்கள் என சுரேசர் சொல்வதுண்டு. அவர்களிடம் தெரியும் அந்த ஆர்வமின்மை சடங்கு தொடங்குவதற்கு முன்புவரை பதற்றம் அளிப்பது.

இளமையில் சுரேசர் ஒவ்வொரு முறையும் அந்தப் பதற்றத்தை அடைவதுண்டு என்றார். ஒருமுறை அவருடைய நிலைகொள்ளாமையைக் கண்ட அமைச்சர் கனகர் “அமர்ந்திருக்கும் பறவையைக் கண்டால் அது பறக்குமென எவராலும் எண்ண இயலாது. சிறகு விரிக்கையில் பறவை பிறிதொன்று என ஆகிறது” என்றார். அன்றைய சடங்கில் அர்ஜுனன் நகர்நுழைந்தபோது அத்திரள் வாழ்த்தொலி கூவியது. என்றும் அங்கே அவ்வண்ணம் வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருப்பதுபோல. பிறிதொன்றை அறியாததுபோல. அவ்வாழ்த்தொலியின் உணர்வுகளால் அள்ளிக் கொண்டுசெல்லப்பட்டது. அக்கணம் புதிதென நிகழ்ந்ததுபோல அங்கே நிறைந்து அலைகொண்டது.

அதை பின்னர் எண்ணிக்கொண்டபோது சுரேசர் ஒரு அறியாத் தெய்வம் வந்திறங்கி ஆடி பின்னடைந்ததாகவே கருதினார். “ஆம், அது அனைவரின் கனவுக்குள்ளும் கருவடிவில் உறங்குகிறது. அங்கிருந்து வந்தால் மட்டுமே அது இயல்பாக நிகழும், இல்லையேல் அது வெறும் நடிப்பு” என்றார் கனகர். “அந்த தெய்வம் இங்குள்ள அனைவரையும் வாழ்த்துகிறது. ஒருவரை வாழ்த்தும்போதும் வணங்கும்போதும் மட்டும் மானுடரில் வந்திறங்கும் ஒன்று உண்டு. மானுடரை மானுடர் வாழ்த்துவதில்லை என்று உணர்க! மானுடரில் எழுந்த பிறிதொன்றையே அவர்கள் வாழ்த்துகிறார்கள். வீரத்தை, தன்னளிப்பை, அழகை, மாண்பை, மூப்பை, இளமையை.”

“எந்த வாழ்த்தும் மெய்யாக எழுகையில் தான் எழும் நெஞ்சை கிளரச் செய்கிறது. வாழ்த்தப்படுவது அதிலும் வந்தமைகிறது. அவ்வுள்ளம் விரிவுகொள்கிறது. அதன் ஆழங்கள் வரை ஒளி நிறைகிறது. ஆகவேதான் நூல்கள் வாழ்த்துக என்கின்றன. மூத்தவரை, பெரியவரை, கடந்தவரை வணங்கி வாழ்த்துக! இளையவரை, எழுபவரை, சிறியோரை கனிந்து வாழ்த்துக! வாழ்த்து சொல்லில் எழும் ஒளி. வாழ்த்து நிறைந்திருக்கும் இடங்களில் இருள் திகழ்வதில்லை. வாழ்த்தொலிபோல் மங்கலம் பிறிதொன்றில்லை. இனிய இல்லத்தில் வாழ்த்தொலி ஒழியாதமைய வேண்டும். வெற்றிச்சிறப்புகொள் நகரில் வாழ்த்தொலி என்றும் நிறைந்திருக்க வேண்டும். வாழ்த்தச் சித்தமான மானுடர் தெய்வங்களால் வாழ்த்தப்படுகிறார்கள்.”

சம்வகை அதை முன்னரே கண்டிருந்தாள். வாழ்த்துகூவும் பொருட்டு சாலையோரங்களில் கூடியிருப்பவர்களை. அவர்கள் அரசப்படையினரால் திரட்டப்பட்டோர் என அவளுக்குத் தோன்றும். அமைப்போர் பதறி அலைவார்கள். எண்ணி எண்ணி ஒவ்வொன்றையும் ஆராய்வார்கள். வாழ்த்தொலிப்போர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. சில தருணங்களில் அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருப்பார்கள். விரல்களாலோ படைக்கலங்களாலோ ஒருவரை ஒருவர் தொட்டு செய்திகளை சொல்லிக்கொள்வார்கள். விழிகள் ஒன்றையொன்று நோக்கி உரையாடிக்கொண்டிருக்கும். அத்திரளை நோக்காமல் செவி மட்டும் கூர்ந்தால் மெல்லிய காற்று உலாவும் புதர்போல் ஓசை எழுவதை கேட்க முடியும். அறியாத ஒருவர் அத்திரளைப் பார்த்தால் அது முற்றிலும் ஒழுங்கற்றது என்று தோன்றும்.

ஆனால் உரிய தருணம் எழுந்ததும் அது மிக இயல்பாக செயல்களை செய்யத்தொடங்கும். அவர்களின் குரல்கள் வெடித்தெழும். களிகொண்டு கூச்சலிடுவார்கள். கூத்தாடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அதற்கென்றே வடிவமைக்கப்பட்டவர்கள்போலத் தோன்றுவார்கள். சம்வகை தன் தந்தையுடன் பலமுறை அணிவகுப்புகளை காண வந்திருக்கிறாள். மக்கள்திரளில் இருந்து பார்க்கையில் அங்கே ஒற்றை உயிர் ஒன்று முட்களுடனும் பீலிகளுடனும் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவே தோன்றும். அவளுடைய இளம்விழிகளுக்கு அது ஒரு விந்தைப் பெருவிலங்கென மாயம் காட்டும்.

சம்வகை மீண்டும் மீண்டும் கொம்புகள் எழுவதை கண்டாள். சுதமையிடம் கைகாட்டிவிட்டு அவள் தன் புரவியிலேறி கோட்டைக்கு வெளியே சென்றாள். வெளி முற்றத்தின் விரிந்த பிறைவடிவப் பரப்பில் முந்தையநாளே அங்கிருந்த அயலாரையும் வணிகர்களையும் விலக்கி மையவெளி ஒழித்து இடப்பட்டிருந்தது. அங்கு தங்கியிருந்தவர்கள் இருபுறமும் பிளந்து விலகி காடுகளை ஒட்டி திரண்டிருந்தார்கள். கங்கையிலிருந்து அஸ்தினபுரி வரைக்குமான நெடும்பாதை முழுக்க நிலம்நிறைத்து வந்துகொண்டிருந்த மக்கள்திரளுக்கு நடுவே ஒரு பலகைப்பாதை உருவாக்கப்பட்டிருந்தது.

ஒரே இரவில் அதை தென்னகத்து தச்சர்கள் அமைத்தனர். பலகைகளை நீள்வாட்டில் அமைப்பதே அஸ்தினபுரியில் வழக்கம். சிந்துகங்கை நிலம் முழுக்கவே அவ்வண்ணம்தான். தென்னகத்தார் அதை குறுக்காக அடுக்கினர். அது விந்தையெனத் தோன்றியது. ஆனால் அதை விரைவாகச் செய்ய முடிந்தது. எல்லா வகையான பலகைகளையும் அடுக்க முடிந்தது. பலகையின் ஒருமுனையில் தேர் ஏறும்போது மறுமுனை மேலெழுவதனால்தான் பலகைப்பாதை உடைந்து உருமாறுகிறது எனப் புரிந்தது. “தென்னகத் தச்சர்கள் திறன்கொண்டவர்கள்” என்றார் சுரேசர். “இச்சிறு உண்மை இங்குள்ள தச்சர்களுக்கு ஏன் தோன்றவில்லை?” என்று சம்வகை கேட்டாள். “இங்கே குடிகள் வேரூன்றிவிட்டிருந்தன. புதியவர்கள் எவரும் சேரமுடியாமல் குடிவாயில்கள் மூடப்பட்டிருந்தன. தென்னகம் வளரும் குழவி என ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டிருக்கும் நிலம்” என்றார் சுரேசர்.

சம்வகையும் காவல்படையும் கோட்டைமுகப்பில் வந்து நின்றதும் இரு மருங்கிலும் செறிந்துநின்று நோக்கிக்கொண்டிருந்த மக்கள் உரத்த குரலில் ஓசையிட்டனர். பலர் அவர்களை நோக்கி கைநீட்டி எதையோ கூறினர். பலர் நகைத்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். மீள மீளக் காண்பது அந்த நகைப்பு. தொடக்கத்தில் அவர்களுக்கு ஒரு பெண் அத்தகைய பொறுப்பிலிருப்பது உடன்பாடாக இல்லையோ என்று தோன்றியது. ஆனால் நகைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதை கண்ட பின்னர்தான் அது உவகை வெளிப்பாடுதான் என்றும், அவ்வாறு மட்டுமே அவர்களால் அதை வெளிப்படுத்த இயல்கிறது என்றும் தெரிந்தது. தன்னியல்பாக எழும் சிரிப்பு அது. அவர்களை அவள் பொருட்படுத்துவதில்லை எனினும் அவர்களின் நோக்குகளுக்கு முன்பாக வந்தவுடன் அவள் உடல்மொழி மாறத் தொடங்கியிருக்கும். ஒருபோதும் கடுமையான ஆணைகளை அவர்களை நோக்கி செலுத்த அவளால் இயலாது.

ஆனால் அந்தத் தருணத்தில் அவர்களின் சிரிப்பு சிறு ஒவ்வாமையை உருவாக்கியது. அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடும் என்று அவள் அஞ்சினாள். பொதுமக்களுக்கும் முற்றத்தின் திறந்த வெளிக்கும் நடுவே படைவீரர்கள் தங்கள் வேல்களாலும் ஈட்டிகளாலும் ஒரு வேலியை உருவாக்கியிருந்தனர். ஆகவே அவர்கள் முற்றம் நோக்கி பிதுங்கி வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் அவ்வீரர்கள் அனைவருமே புதியவர்கள். அவர்களுக்கு படைக்கலப் பயிற்சி இருந்தது, படைப்பயிற்சியும் இருந்தது, ஆனால் அவை பிறிதொரு நிலத்தில் பிறிதொரு படையில் இணைவதற்கான பயிற்சி இல்லை. அஸ்தினபுரியின் நிலத்தில் அமைந்த அந்தப் புதிய படையில் அவர்கள் இன்னும் தங்களை முழுமையாக பொருத்திக்கொள்ளவில்லை.

சம்வகை காத்து நின்றாள். அத்தகைய தருணங்களில் காலம் துளித்துத் துளித்து சொட்டத் தொடங்கிவிடுகிறது. உள்ளம் பதறிப்பதறி சூழப் பறந்து பின் சலித்து அமர்கிறது. மிகத் தொலைவில் ஒரு முரசொலி. நீரில் ஒரு கொப்புளம்போல தோன்றிய கணமே மறைந்தது. ஒரு கொம்பொலி. ஓர் அலையெனத் தோன்றி மறைந்தது. அவள் நெஞ்சு படபடத்தது. எத்தனை பெரிய தருணம்! பேரரசி நகர்புகுகிறாள். பாரதவர்ஷத்தின் மும்முடியை சூடவிருப்பவள். அழியாச் சொற்களில் இங்கே வாழவிருப்பவள். ஆனால் அவளன்றி எவரும் அதை அப்போது உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதை உணரும் தனிமை அவளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் மீண்டும் முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. அதை அத்திரள் கேட்டுவிட்டிருந்தது. அவர்கள் அமைதியடைந்தனர். கோட்டை மேலிருந்த பெருமுரசு முழங்க கொம்புகள் தொடுத்துக்கொண்டு நீளொலியாகி எழுந்து சுழன்றன. கோட்டை பிளிறி நெளிவதாகத் தோன்றியது. அவள் திரும்பி நோக்கினாள். நீர்ப்பரப்பென ஒளியலைகள் பரவிய வெண்ணிறக் கோட்டை. அதற்கு முகில்கோட்டை என்று பெயர் வந்துவிட்டிருந்தது. அதற்கு ஐராவதீகம் என சூதர்கள் பெயரிட்டிருந்தனர். வெண்களிற்றுயானைநிரை. “முகில்களே யானைகளென்று எழுந்த கோட்டை. தேவர்கள் வந்திறங்குவது அந்த வெண்மதில்களுக்குமேல் என உணர்க!”

கோட்டைக்கு வெண்மை பூசப்பட்டபின் ஒவ்வொரு நாளும் பலநூறு பறவைகள் வந்து அதில் முட்டிமுட்டி இறகொடிந்து விழுந்துகொண்டிருந்தன. அவற்றின் உடல்கள் சருகுகள் என கோட்டைக்குக் கீழே கிடந்தன. யானைகள் கோட்டையைக் கண்டதுமே பிளிறியபடி உடல்குறுக்கி நின்றன. துதி நீட்டி துழாவி உடல் அதிர்ந்தன. காளைகளும் அத்திரிகளும் விழிசுருக்கி நின்று மெய்ப்புகொண்டன. நகரில் நிறைந்திருந்த ஒளி அனைத்து நிழல்களையும் அழித்திருந்தமையால் மக்கள் கோட்டையருகே வருவதை தவிர்த்தனர். பெருஞ்சாலைகள் மேலும் பெரிதாகத் தெரிந்தன. அங்கிருந்த கூழாங்கற்கள்கூட ஒளிகொண்டன. ஆனால் சில நாட்கள்தான். விரைவிலேயே அது விழிகளுக்குப் பழகியது. என்றும் அவ்வண்ணமே இருந்தது எனத் தோன்றியது.

அவள் கோட்டையின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தாள். அது வீசிய ஒளியில் அவள் நிழல் காலடியில் விழுந்து மண்ணில் கரைந்ததுபோல் தெரிந்தது. அந்நிழல் முரசொலியில் அதிர்ந்தது. இக்கணத்தில் என் அகம் இத்தனை எண்ணங்களாகப் பிரிவது ஏன்? இதன் கூர்மையை ஏன் இப்படி தவிர்க்கிறேன்? இக்கோட்டையின் கற்கள் என, இந்த அறியா மக்கள் என, இவ்விலங்குகள் என ஏன் இத்தருணத்தில் மிதந்து நிற்க என்னால் இயலவில்லை? அறிந்தோர் அறிவின் சுமை பொறுத்தாக வேண்டிய பொறுப்பை கொள்கிறார்கள். அறிந்தோர். அறிந்தோர். அறிந்தோர். அது முரசொலியின் தாளம். அறிந்தோர் அறிந்தோர் அறிந்தோர் என ஓசையிடுகின்றன தொலைவில் முரசுகள்.

உடைவாளின் பிடியில் கைவைத்தபடி நிமிர்ந்து நின்றாள். அவளுடைய அசைவே ஆணையென்றாக அவளுக்குப் பின்னால் அணிப்படையினர் வெள்ளி மின்னும் கவசங்களுடன் நான்கு நிரைகளாக சீர் நடையிட்டு வந்தனர். தனக்குப் பின்னால் அவர்களின் ஓசைகள் திரள்வதை அவள் கேட்டாள். அவ்வோசையிலிருந்தே அவர்களின் அணிநிரையை உணர முடிந்தது. இசைச்சூதர்கள் இடப்புறமும் மங்கலச்சேடியர் வலப்புறமுமாக திரண்டனர். உள்ளிருந்து நூற்றெட்டு அந்தணர்கள் நிறைகுடங்களுடன் வந்து முகப்பில் மூன்று நிரைகளாக அணிவகுத்தனர். அவள் தலையைத் திருப்பி அவர்களை பார்க்கவில்லை. ஆனால் அந்த அணிவகுப்பு முற்றிலும் சீராக அமைந்திருப்பதை ஓசைகளிலிருந்து உணர்ந்தாள்.

முழுமை, பிழையின்மை, முழுமை. பிழையெழுவது அம்முழுமையின்மேல்தான். பெருமரத்தில் நாய்க்குடை என அது முளைக்கிறது. அவள் கவலை பெருகி வந்தது. அவள் பெருமூச்சுடன் தன்னை எளிதாக்கிக்கொண்டாள். தொலைவிலிருந்து முரசொலியும் கொம்பொலிகளும் பெருகி எழுந்து வந்தன. கோட்டைச்சுவரில் அறைந்து திரும்ப அதே விசையுடன் எழுந்தன. கோட்டையை அவள் ஒருகணம் திரௌபதியின் பார்வையில் பார்த்தாள். அங்கு அவள் எதிர்பார்க்கக்கூடியது கரிய இருட்திரை என்று எழுந்து நின்ற தொன்மையான கோட்டையை. மகாமரியாதம் என்று அது சூதர்களால் அழைக்கப்பட்டது. கருங்களிற்றுயானைநிரை. அதன் மீதமைந்த மரத்தாலான காவல்மாடங்களை. இரும்புக் கீல்களும் உருளைகளும் கொண்டு கல்லென்றே மாறிவிட்டிருந்த கதவுகளை.

இதோ வெண்ணிற ஒளியுடன் புதிய கோட்டை நின்றிருக்கிறது. “பாற்கடலின் அலையொன்று எழுந்து நின்றதுபோல!” என்று அதை ஓர் அயல்நிலத்துச் சூதன் பாடினான். “ஒரு மாபெரும் புன்னகை. ஒளிரும் பல்நிரை” என்றான் அவன் தோழன். “மண்மகள் அணிந்த வெண்பட்டு மேலாடை” என்றான் இன்னொருவன். அதன் காவல்மாடங்கள் அரக்கு மின்னும் மரத்தாலானவை. அனைத்துக் கீல்களும் குமிழ்களும் பொன்னென மின்னின. உள்ளே நகரத்தெருக்களின் இருமருங்கும் அன்று கட்டப்பட்டவை போன்ற கட்டடங்கள். அவை பீதர்நாட்டு ஆடிகளால் விழிகள் கொண்டன. அஸ்தினபுரி சற்று முன்னர் கருவூலத்திலிருந்து எடுத்து வெண்பட்டுத் துணியால் துடைத்து பீடத்தின்மேல் வைக்கப்பட்ட அருநகை போலிருந்தது.

நகர் மாறிவிட்டிருப்பதை பேரரசி அறிந்திருப்பாள். ஆனால் அவள் விழிகள் இயல்பாக பழைய நகரையே தேடும். புதிய நகர் அவளை துணுக்குறச் செய்யும். அவள் எதை காண்பாள், எவ்வண்ணம் உணர்வாள்? ஒருகணம் அவள் விழி விரிவதை தான் காணவேண்டும் என்று சம்வகை எண்ணினாள். அத்தனை நாட்கள் அங்கு பணியாற்றியதன் உளநிறைவை அப்போது அவள் அடையக்கூடும். இந்திரப்பிரஸ்தத்தை எழுப்பிய அரசியின் முன் இந்நகரின் புதுமை ஒன்றும் பெரிதல்ல எனினும்கூட அந்த ஒருகண விழியசைவே போதுமானது.

அத்தனை விரைவாக அந்நகர் மீண்டெழுமென்று அப்பணிகளைத் தொடங்கியபோது அவள் எண்ணவே இல்லை. யுதிஷ்டிரன் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சினம் கொண்டு விசையூட்டிக்கொண்டே இருந்தார். “அவர் என்ன எதிர்பார்க்கிறார்? ஒரு முழு நகரையும் ஏழெட்டு நாட்களில் திருப்பிக்கட்டுவதா?” என்று அவள் சொன்னாள். “இயலும், மீண்டெழுபவை மிகமிக விரைவாகவே எழுந்திருக்கின்றன” என்று சுரேசர் சொன்னார். “நம்மிடம் செல்வம் உள்ளது. கைகள் உள்ளன. காலம் ஒரு பொருட்டா என்ன?” அவள் எண்ணியதைவிட பலமடங்கு விசையுடன் அப்பணி நடந்தது. ஒவ்வொரு பணிக்கும் பத்துபேர் செய்யவேண்டிய இடத்தில் நூறுபேர் வந்தமர்ந்தனர். நூறு பேரும் திறன் மிக்கவர்களாக, அத்துறையில் தேர்ச்சிமுதன்மை கொண்டவர்களாக இருந்தனர். அஸ்தினபுரி தன்னை தானே பழைய அஸ்தினபுரியிலிருந்து கீறி வெளியே எடுத்துக்கொண்டது.

சம்வகை திரௌபதி அங்கு வந்து அவ்வரவேற்பை ஏற்று கடந்துபோவதை உள்ளத்திற்குள் ஒருமுறை நடித்துவிட்டாள். பின்னர் ஒருகணம் திகைப்பெழுந்து அதை திரும்பப் பார்த்தபோது அரசி அணிகளேதுமின்றி இருப்பதை தான் கண்டதைப்போல் உணர்ந்தாள். நெடிய மெல்லுடல் கொண்ட கரிய அன்னைவடிவம். நிமிர்ந்த தலை சற்றே சரிய, பெரிய குழல்சுருள்கள் தழைய, கடுமையும் கனிவுமென விரிந்த தெய்வ விழிகள் கொண்டு நோக்குபவள். உடலில் பொன்னென்றும் அணியென்றும் ஒரு துளி மின்கூட இல்லை. கருவறையில் முதற்புலரியில் அணியிலி கோலத்தில் நின்றிருக்கும் கற்சிலை.

அவள் படபடப்படைந்தாள். முந்தைய நாளே அனைத்து அணிகளையும் கங்கைக்கரைக்கு அனுப்பியிருந்தார்கள். துணையமைச்சர் சுதமன் அவ்வணிகளுடன் உடன் சென்றார். அவர் அங்கே தங்கி, அரசி வந்திறங்கியதும் நேரில் கண்டு, அனைத்து அணிகளையும் கொடுத்து அவை பேரன்புடன் யுதிஷ்டிரனால் அவளுக்காக தேர்ந்தெடுத்து அளிக்கப்பட்டவை என்று கூறவேண்டும் என பணிக்கப்பட்டிருந்தார். அவற்றை அணிந்தே அரசி நகர்புக வேண்டுமென்று அரசர் கனிந்து கோருகிறார் என்று கூற ஆணையிடப்பட்டிருந்தது. அவர் அங்கு சென்று காத்திருந்தார். முந்தைய நாள் அந்தியிலேயே அங்கு திரௌபதி வந்திருந்தாள். அவளிடம் அணிகளை அளித்த செய்தியும் வந்துவிட்டிருந்தது.

அரசி இரவு துயின்று புலரியில் எழுந்து கிளம்பியிருந்தாள். அவள் அணிநகை அணிந்திருக்கிறாளா என்பதை சுதமன் செய்தியென அனுப்பியிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. அதை சுதமன் செய்ய இயலாது. அரசி தன் தனியறையில் அந்நகைகளை அணிந்திருக்கலாம். மூடுதேரில் அவளை நோக்க அவரால் இயலாமலிருக்கலாம். அந்நகைகளை அணிவிக்கும் பொருட்டு ஏழு அணிச்சேடியர் சுதமனுடன் அங்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் உசாவி அச்செய்தியை சுதமன் அஸ்தினபுரிக்கு அனுப்பியிருக்கலாம். ஒருவேளை அச்செய்தி சுரேசரை வந்தடைந்திருக்கலாம்.

அவள் காலையிலிருந்து சுரேசரை பார்க்கவில்லை. கோட்டையையும் அரண்மனையையும் முழுமையாக சுற்றி அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தானே சீர்நோக்கிவிட்டு அவள் கிழக்குமுகப்பிற்கு வருவதற்குள் இளவெயில் வாளொளி கொண்டிருந்தது. அஸ்தினபுரிக்குள் பேரரசி அணியேதும் இல்லாமல் நுழைவதைப் பற்றி அவளால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. அது அங்கு திரளென கூடியிருக்கும் அனைத்து விழிகளையும் ஏமாற்றம் அடையச்செய்யும். எளிய குடியினர் மானுடரை அரசரென்று பார்ப்பது அணிகளினூடாகவே. முடிசூடுகையிலேயே அரசர்கள் தெய்வச் சாயல் கொள்கிறார்கள். ‘அகல் விளக்குக்கு சுடர் என அரசருக்கு மணிமுடி’ என்று சூதர் பாடல் உண்டு. சுடரிலா விளக்கு ஒரு வெற்றுச் சிமிழ் மட்டுமே.

அணிகள் இன்றி ஓர் அரசி மணிமுடிசூடி அமர்ந்தது முன்பெப்போதேனும் நிகழ்ந்திருக்கிறதா என்று அவள் எண்ணிப்பார்த்தாள். அரசநூல்கள் எவையும் அவ்வண்ணம் சொன்னதாக அவள் நினைவுக்குப் படவில்லை. முன்பு தேவயானியும் தபதியும் தமயந்தியும் சத்யவதியும் அவையமர்ந்தபோது சூடிய அணிநகைகளின் நீண்ட அட்டவணையையே நூல்கள் கூறின. அவர்கள் மண்ணில் உள்ள அனைத்து அழகுகளையும் நகைகளாக்கி தங்கள்மேல் அணிந்திருந்தனர். தளிர்களை, மலர்களை, கற்களை, நீரை, நெருப்பை, முகிலை. ‘நிலம் அனைத்து அழகுகளையும் சூடுவதுபோல பெண்டிர் நகைகொள்கிறார்கள்’ என்று அதை அரசநூல் கூறியது.

அவள் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற எண்ணத்தை அடைந்தாள். இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கலக் கொடியுடன் தொலைவில் முதல் வீரன் வருவதை பார்த்தாள். அக்கொடி மட்டும் ஒரு பொன்னிறப் பறவை என வருவதாகத் தோன்றியது. தொடர்ந்து கவசஉடை அணிந்த புரவிவீரர்கள் அணிவகுத்து அணைந்தனர். அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் நெருங்கி வந்தன. வாழ்த்தொலி எழுப்பியபடி சூதர்கள் நிறைந்திருக்க தட்டுத்தேர் முதலில் வந்தது. இசைச்சூதருடன் இன்னொரு தேர். அவை வளைந்து இருபுறமும் விலக நடுவே புரவிவீரர்களால் காக்கப்பட்ட திரௌபதியின் தேர் தொலைவில் அணுகி வந்தது.

இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியுடனும், அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடனும், பாஞ்சாலத்தின் விற்கொடியுடனும் வந்த மூன்று கவசவீரர்கள் ஒளிரும் வெள்ளிக் கவசமணிந்த புரவிகளில் மூன்று அம்புகள் பாய்ந்துவருவதுபோல் சுடர் கொண்டு அணுகினர். விரைவழிந்து புரவிகள் நிரைகொள்ள அவர்கள் கொடியை ஊன்றி உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். “பாஞ்சாலத்தின் அனல்மகள், இந்திரப்பிரஸ்தத்தின் தலைவி, அஸ்தினபுரியின் அரசி, குருகுலத்தின் அன்னை, குடிகளின் தெய்வம், பேரரசி திரௌபதி அணுகுகிறார்!” என்று கூவினர்.

அங்கு கூடிநின்ற படைவீரர்கள் அனைவரும் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி “பேரரசி வாழ்க! பேரரசி வாழ்க! வெல்க பாஞ்சாலப் பேரரசி! வெல்க கொற்றவை! வெல்க திருமகள்! வெல்க கலைமகள்!” என்று கூவினர். கொடிவீரர்கள் இருபுறமும் விலகி அகல திரௌபதியின் தேர் அணுகி புரவிகள் குளம்புகள் மாற்றி மிதித்து நிலைகொள்ள விசையழிந்து கரையணுகும் படகென அசைந்தாடி நின்றது. வேதியர் பொற்குடங்களில் கங்கை நீருடன் வேதம் ஓதியபடி மூன்று நிரைகளாக தேரை அணுகினர்.

திரௌபதி திரைவிலக்கி தேரின் படிகளில் இறங்கி மண்ணில் கால் வைத்தாள். வேதியர் வேத முழக்கத்துடன் அவள் மேல் கங்கை நீர் தெளித்தனர். மஞ்சள் அரிசியும் மலர்களுமிட்டு அவளை வாழ்த்தினர். கைகூப்பி குனிந்து அவள் அந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டாள். வேதியர் வாழ்த்தியபடி பிரிந்து அப்பால் விலக அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் அவளை அணுகி வாழ்த்துரைத்தனர். “மங்கலச்செல்வி, பெருவளத்தாட்டி, விளைபெருகும் பெருநிலமென்றானவள், குடிகாக்கும் அன்னை, அஸ்தினபுரியின் பேரரசி திரௌபதிக்கு நல்வரவு” என்று மூத்த சேடி கூறினாள். அவள் மேல் மஞ்சள் நீர் மலருடன் தெளித்து வாழ்த்தி அவர்கள் இடப்பக்கமாக விலக இசைச்சூதர் இருபிரிவினராக பிரிந்து வழிவிட்டு நின்று மங்கல இசைமுழக்கினார்கள்.

சம்வகை சீர்நடையிட்டு முன்னால் செல்ல அவளுக்குப் பின்னால் கவசஉடை அணிந்த வீரர்கள் சீரான நடையோசையுடன் வந்தனர். அவள் அருகணைந்து தன் உடைவாளை உருவி நிலம் நோக்கி தாழ்த்தி தலைவணங்கினாள். திரௌபதி புன்னகைப்பதை அவள் நோக்காமலேயே உணர்ந்தாள். நிமிர்ந்தபோது அப்புன்னகையைக் கண்டு தானும் புன்னகைத்தாள். “உன் பெயர் சம்வகை அல்லவா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அரசி” என்றபோது சம்வகை மெய்ப்பு கொண்டாள். “உன்னைப்பற்றி யுயுத்ஸுவிடம் கேட்டறிந்தேன். அவன் விழிகளில் ஒரு சிறு மின்னலைக் கண்டேன்” என்றாள். சம்வகை நெஞ்சு படபடக்க நின்றாள்.

“நன்று” என்றபடி பேரரசி திரும்பும்போதுதான் அவள் அணி நகைகள் எதுவுமே அணிந்திருக்கவில்லை என்பதை சம்வகை கண்டாள். தேரிலிருந்து இறங்கி வரவேற்புகளையும் வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளும் போதெல்லாம் அது தெரியவும் இல்லை. அவள் முழுதணிக்கோலத்தில் இருப்பவள் போலத்தான் தோன்றினாள். எண்ணியிராக் கணத்தில் பின்னால் அணிவகுத்து நின்ற படைவீரர்களில் ஒருவன் நிரைமுறித்து முன்னால் பாய்ந்து தனது ஈட்டியை வான் நோக்கி வீசி “பேரரசி திரௌபதி வெல்க! பாரதவர்ஷத்தின் பேரரசி வெல்க! எரியெழுந்த மங்கை வெல்க!” என்று கூவினான். அணிவகுத்து நின்றிருந்த அனைத்து வீரர்களும் கலைந்து அவனை திரும்பிப்பார்த்தனர். சம்வகை திகைத்து உடல் செயலிழந்து நின்றாள்.

ஆனால் அதற்குள் இருபுறங்களிலும் கூடி நின்ற பொதுமக்கள் பெரும் வாழ்த்துக் கூச்சலுடன் தங்களைக் காத்து நின்றிருந்த படைவேலியை உடைத்தபடி முற்றத்தை நிறைத்து அவர்களை நோக்கி வந்தனர். கைகளை வீசி, துள்ளிக்குதித்து, வெறிகொண்டு வாழ்த்தொலி எழுப்பினர். கையிலிருந்த ஆடைகளை வான் நோக்கி வீசிப்பிடித்தனர். கண்ணீரும் சிரிப்பும் அழுகைகளுமாக முகங்கள் வெறித்து மிதந்து அலைந்து கொந்தளித்தன. ஒரு கணத்தில் அஸ்தினபுரி அதன் முந்தைய யுகத்தை சென்றடைந்தது. முதல் முறையாக அதில் குடிகள் உருவாகி வந்துவிட்டிருப்பதை சம்வகை கண்டாள். முதலில் எழுந்த பதற்றமும் திகைப்பும் அகல உளம் நிறைந்து விழிநீர் மல்கி அவள் புன்னகைத்தாள்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47

பகுதி ஐந்து : விரிசிறகு – 11

சம்வகை இடைநாழியினூடாகச் செல்கையில் எதிரே சுஷமை வந்தாள். அவள் அவளைக் காத்து நின்றிருந்தாள் என்பது தெரிந்தது. விசைகொண்ட காலடிகளுடன் அவள் அருகணைந்தாள். அக்காலடி ஓசை கேட்டு சம்வகை ஒருகணம் குனிந்து அவள் கால்களை பார்த்தாள். அவள் எண்ணியது போலவே அவள் கால்களும் பெரிதாக இருந்தன. இரு குறடுகளும் சிறு பன்றிக்குட்டிகள் என தாவி வந்தன. அருகணைந்து தலைவணங்கி “தாங்கள் சென்று மீள்வதற்குள் இங்கு பிறிதொன்று நிகழ்ந்துவிட்டது. தாங்கள் உடனிருந்தீர்கள் என்று அறிவேன். ஆகவே தாங்கள் அனைத்தையும் அறிந்திருப்பீர்கள் எனினும்…” என்றாள். “கூறுக!” என்று சம்வகை சொன்னாள்.

“இளவரசர்களை அரசர் அடித்துவிட்டார் என்றார்கள். நான் சூதர் பாடல்களிலோ அன்றி செவிவழிச் செய்திகளிலோ அவர் அவ்வண்ணம் செய்ததாக அறிந்ததே இல்லை. ஆகவே அதை நம்ப என்னால் முடியவில்லை. ஆனால் அது நிகழ்ந்தது என உறுதி செய்துகொண்டேன். இரு இளவரசர்களும் முகம் சிவக்க வந்து தங்கள் அன்னையின் அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் சீற்றத்துடன் உரக்கப் பேசியதை கேட்டேன். அனைவரையும் வெளியே அனுப்பிய பின் அரசி அவர்களிடம் மேலும் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர்கள் மஞ்சத்தறைக்குச் சென்று தாழிட்டுக்கொண்டனர். பிறகு எவரும் அவர்களை இதுவரை பார்க்கவில்லை. அங்கு என்ன நிகழ்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால்…”

சம்வகை தலையசைத்தாள். “தந்தையின் இடத்தில் மூத்தார் என இருந்து மாதுலர் தண்டிப்பதென்பது குடியில் வழக்கம்தான். ஆனால் அரசர் அவ்வாறு இயற்றலாகுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவரது தந்தையை அகற்றி தமையனின் முடியை கைப்பற்றி அரியணையில் அமர்ந்திருப்பவர் அரசர். அவரோ கைம்பெண்ணென இங்கு வந்திருக்கிறார். தந்தையை இழந்த மைந்தரென தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அவர்களின் உளநிலையை என்னால் புரிந்துகொள்ள இயல்கிறது” என்றாள் சுஷமை. “எவ்வண்ணம் இருக்கிறார் அரசி என்று தெரியவில்லை. நான் சென்று பார்க்கிறேன்” என்று சம்வகை சொன்னாள்.

அவள் நடக்க உடன் வந்தபடி “அவரிடம் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் சென்று கதவைத் தட்டி ஏதேனும் தேவையா என்று கேட்கவில்லை. எக்கணமும் அவர் கதவைத் திறந்து வெளிவந்து  தேரைப் பூட்டுக, நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறக்கூடும் என்று உணர்ந்தேன்” என்றாள். “அவர்கள் உள்ளே பேசிக்கொண்டிருந்த குரலோசை அப்படிப்பட்டது. அதிலிருந்த சீற்றம் அச்சுற வைப்பது.” அவளை நோக்காமல் நடந்தபடி “அவ்வண்ணம் நிகழாது” என்று சம்வகை சொன்னாள். “என்ன நிகழும் என்று பார்ப்போம்” என்றபின் செல்க என்று கைகாட்டி முன்னால் சென்றாள்.

சம்வகை துச்சளையின் அறைவாயிலில் தன் வரவை அறிவிக்கும்பொருட்டு ஏவல்பெண்டிடம் சொன்னாள். ஏவற்பெண்டு கதவை பலமுறை தட்டி அதன் பின்னரே உள்ளிருந்து தாழ் திறக்கப்பட்டது. ஏவற்பெண்டு உள்ளே சென்று மீண்டு வந்தபோது முகத்தில் எதுவும் தெரியவில்லை. “உள்ளே செல்க, தலைவி!” என்று அவள் சொன்னபோது சம்வகை உள்ளே சென்றாள். உள்ளே மஞ்சத்தில் சுகதன் துயின்றுகொண்டிருந்தான். அவனுடைய பருத்த உடலும் குழைந்த தோள்களும் அப்போது குழந்தையுடையவைபோல் தோன்றின. வெயில்படாது குகைக்குள் எழுந்த மரம்போல. துச்சளை எழுந்து அவளை நோக்கி வந்து “வருக!” என்றாள். அவள் கன்னத்தில் விழிநீர் உலர்ந்திருந்தது. அதை இரு கைகளால் துடைத்த பின் “கூறுக!” என்றாள்.

“அரசி, என்ன நிகழ்ந்தது என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்று சம்வகை தொடங்க துச்சளை “ஆம், மைந்தர் சொன்னார்கள்” என்றாள். “நானும் உடனிருந்தேன். அத்தருணத்தில்…” என்று சம்வமை தயங்க துச்சளை உரக்க “நீ எதையும் கூற வேண்டியதில்லை. அச்செய்தியை அறிந்த கணமே என் உள்ளம் நிறைவுற்றுவிட்டது. இங்கு நான் வந்தது செல்வத்தின் பொருட்டோ, அரசுகோரும் பொருட்டோ அல்ல. அதற்கப்பால் என் குடியின் முதன்மையென நின்றிருக்கும் ஆண்தகை ஒருவருக்காக. இன்று என் மைந்தருக்குத் தந்தையென்றும் மூதாதை என்றும் எவரும் இல்லை. அங்கு நிலைகொண்டு இவர்களுக்கு ஆணையிடும் குரல் ஒன்றுக்காகத்தான் நான் வந்தேன். இன்று அக்காட்சியை அகத்தில் கண்டபோது மெய்ப்படைந்தேன். தன் மைந்தர் பிழை கண்டு பொங்கி எழும்போதே ஆண்தகை தந்தையாகிறார். இன்று அவர்களின் குடிமூதாதையர் அனைவரும் திரண்டு எழுந்துவந்து தலைதொட்டு வாழ்த்தியதாகவே உணர்கிறேன்” என்றாள்.

அச்சொற்களை அவள் முன்னரே முழுமையாக தன்னுள் கேட்டுவிட்டிருந்தாள் எனினும் சம்வகை மெய்ப்புகொண்டாள். “இன்று அவர்களுக்கு விழுந்த இந்த அடி என்றும் அவர்களின் நினைவில் நிற்கவேண்டும். தாங்கள் யாருமற்றவர்களல்ல, விண்ணிலும் மண்ணிலும் மூதாதையர் சூழ வாழ்கிறோம் என்று அவர்கள் உணரவேண்டும். இதற்கப்பால் நான் இனி இங்கு விழைவதும் மகிழ்வதும் பிறிதொன்றுமில்லை” என்றாள் துச்சளை. அவள் விழிகள் நிறைந்து வழியத்தொடங்கின. “ஆம், அரசி அதையே நானும் உணர்ந்தேன்” என்றாள் சம்வகை. “தந்தையின் இடத்தில் தாய்மாமன் இருப்பார். அவர்கள் அதை உணர்ந்தாகவேண்டும்.” துச்சளை விழிதுடைத்து சிறிய வெண்பற்கள் தெரிய புன்னகைத்து “அதைத்தான் நானும் அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதை உணரும் நிலையில் இன்றில்லை. அவர்கள் அதிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை உணர்வார்கள். ஏனெனில் மெய்யான உணர்வு அவர்களை எப்படியும் சென்றடையும்” என்றாள்.

சம்வகை “அரசி, நான் பிறிதொன்று உரைப்பதற்காக தங்களைத் தேடி வந்தேன்” என்றாள். “கூறுக!” என்றாள் துச்சளை. “இன்று இவ்வரண்மனையின் இல்லமகளென்று தாங்களே இருக்கிறீர்கள். நாளை புலரியில் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அரசி திரௌபதி நகர்நுழைகிறார். தாங்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்று அரியணை அமர்த்தவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். அதற்கான முறைமைச்சடங்கு என்ன என்று தங்களுக்குத் தெரியும்” என்றாள். “ஆம், அது நான் செய்ய வேண்டியதுதான். என் பொறுப்பு அது” என்றாள் துச்சளை. “தாங்கள் உளம் சுணங்கக்கூடும் என்று சுரேசர் கூறினார்” என்றாள் சம்வகை.

“ஆம், ஒருவேளை உளம் சுணங்கியிருக்கக் கூடும்” என்று துச்சளை கூறினாள். “பேரரசியாக அவள் வருகிறாள் என்று எனக்குச் சொல்லப்பட்டதுமே என் உள்ளத்தில் சிறு முள் எழுந்தது என்பதை நான் மறைக்கவில்லை. என் தமையனின் தெய்வத்தின் முன் விளக்கேற்றியபோது அது வஞ்சமென வளர்ந்தது. அவள் நிமித்தமே என் தமையன் உயிர்துறந்தான் என்பதை நான் ஒருபோதும் மறக்க இயலாது. இவ்வவையில் அவள் சிறுமைப்படுத்தப்பட்டாள், அதன் பொருட்டு என் கொழுநனையோ என் மூதாதையரையோ நான் பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. ஆனால் அவள் கொண்ட வஞ்சம் என் குடியை முற்றழித்தது. எந்தை கைவிடப்பட்ட தெய்வமென காட்டில் அலைகிறார். எண்ண எண்ண என் குருதி துடிக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்று என் தந்தையென்றும் மூதாதையென்றும் இருப்பவர் மூத்தவராகிய யுதிஷ்டிரன். இத்தருணத்திற்குப் பின் பிறிதொன்று எண்ணுவதற்கோ மாற்று கருதுவதற்கோ எனக்கு உரிமையில்லை” என்று துச்சளை சொன்னாள்.

“ஆம் அரசி, முற்றளிப்பதே அன்னையர் செய்ய வேண்டியது. ஆராய்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை” என்றாள் சம்வகை. துச்சளை மீண்டும் விழிநீரை துடைத்து புன்னகைத்து “அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அன்னையர் விரும்புவது மைந்தர் வளராத குழந்தைகளாக தன் கையில் இருக்கவேண்டும் என்றுதான். வளர்ந்த பின் அவர்கள் ஆற்றும் செயல்கள், கொள்ளும் பொறுப்புகள் அனைத்திற்கும் தந்தையர் பொறுப்பேற்க வேண்டும். அதை ஏதேனும் ஆணிடம் அளித்துவிட்டு முற்றிலும் விடுதலை பெறுகையிலேயே அன்னை தன் அன்பை முழுதளிக்க முடியும்” என்றாள். “இன்று அதன் நிறைவை நான் அடைந்தேன். எவ்வளவு தவித்துக்கொண்டிருந்தேன்! எத்தனை பெரிய விடுதலை… அவர்களின் தந்தை இறந்ததிலிருந்து இதுநாள் வரை என் உள்ளத்தை அழுத்திய எடை இதுதான். இனி கவலையில்லை.”

துச்சளை மேலும் சிரித்து “இன்னும் சில நாட்களில் அவர்கள் பொருட்டு மூத்தவரின் மேல் சினம்கொள்ளவும், மூத்தவரை எதிர்த்துப் பேசவும், அவர்கள் பொருட்டு மூத்தவரிடம் சொல்லாடவும் கூடியவளாக நான் மாறிவிடுவேன்” என்றாள். துச்சளையின் புன்னகை என்றுமிருந்ததைவிட அழகாக இருக்கிறது என சம்வகை எண்ணிக்கொண்டாள். “மூதன்னையாக ஆகும்போது மைந்தரை மைந்தரின் தரப்பில் மட்டுமே நின்று பார்ப்பவர்களாக மாறிவிடுகிறார்கள் பெண்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றாள் சம்வகை. துச்சளை “இன்று நான் துயில்வேன். நாளை எழுகையில் இந்த மாளிகையில் அன்னை இருந்த நிலைக்கு நான் வந்துவிடுவேன். என் மாளிகைக்கு அரசியை வரவேற்கும் உணர்வை அடைந்துவிடுவேன்” என்றாள். சம்வகை “நன்று அரசி, அவ்வாறே ஆகுக!” என்று வெளியே சென்றாள்.

 

தன் அறைக்குள் அவள் அமர்ந்ததுமே அங்கே சுரதனை எதிர்பார்க்கலானாள். நேரம் செல்லச்செல்ல அந்த எதிர்பார்ப்பு மிகையானதோ என்னும் ஐயமெழுந்தது. அவன் வந்தாகவேண்டும். அவனுக்கென ஒரு நாடகம் இருக்கிறது, அதை ஆடியாக வேண்டும். வாழ்க்கையின் தருணங்களில் தங்களுக்குரிய நாடகத்தை ஆடாமல் அகல்பவர்கள் சிலரே. அதை தானுணர்ந்து தடுத்துக்கொள்ளும் நுண்ணறிவுள்ளவர்கள் யோகியரேதான். அவள் புன்னகைத்தாள். அரசுசூழ்தலும் ஓர் யோகம். நாடகத்தை ஆடாமல் பிறரை நடத்தவிட்டு நோக்கியிருத்தலே அதன் வழிமுறை. அவள் புன்னகைப்பதைக் கண்டு காவலர்தலைவனான காளியன் ஐயத்துடன் திரும்பி நோக்கினான்.

வெளியே காலடியோசை கேட்டதும் அவள் புரிந்துகொண்டாள். ஏவலன் வந்து அறிவித்ததும் முகத்தை செறிவாக்கிக்கொண்டு அவனை அகத்தே வரச்சொன்னாள். அவன் வந்ததும் அமரச்சொல்லி கைகாட்டினாள். அவன் உரத்த குரலில் “நான் அரசகுடியினன். அரசனின் மைந்தன். சிந்துநிலம் இன்னும் என் கையைவிட்டுச் செல்லவில்லை” என்று கூவினான். “அரசகுடியினர் வருகையில் நாலாம்குலத்தோர் அமர்ந்திருந்து வரவேற்பதா அஸ்தினபுரியின் நெறி?” சம்வகை “ஆம்” என்றாள். அந்த ஒற்றைச் சொல்லை புரிந்துகொள்ளாமல் அவன் திகைத்தான். ஒருகணம் கழித்து “என்ன சொல்கிறாய்? எவரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா?” என்று உடைந்த குரலில் கூவியபடி அருகே வந்தான்.

“இது படைத்தலைவியின் அறை. இனி ஒரு மிகைச்சொல் எழுப்புவீர்கள் என்றால் இக்கணமே தலைவெட்டி வீழ்த்த ஆணையிடுவேன்” என்று அவள் அவன் விழிகளை நோக்கி சொன்னாள். அவன் அடிபட்டதுபோல உடல் விதிர்க்க கால் தளர்ந்தான். கைகள் நடுங்க அவற்றை கோத்துக்கொண்டான். “அமர்க!” என்று அவள் சொன்னாள். அவன் அமர்ந்துகொண்டான். “என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் என்பதை சொல்க! இது சிந்துநாடு அல்ல, புதிய வேதம் எழுந்த அஸ்தினபுரி” என்றாள். அவன் கைகளை நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டான். “இங்குள்ள நெறிகளை புரிந்துகொள்க! அரசுடன் பணிகொள்பவர்கள் யானையுடன் உறவாடுபவர்கள்போல என்று அஜிதநீதி சொல்கிறது. எக்கணமும் எவரையும் கொல்லக்கூடுமென்ற வாய்ப்பை எப்போதும் யானை தன் உடலில் கொண்டிருக்கிறது என்று உணர்க!”

அவன் பெருமூச்சுவிட்டான். கண்கள் கலங்கியிருந்தன. முகம் சிவந்து நீல நரம்புகள் துடித்துக்கொண்டிருந்தன. மூச்சு அப்போதும் சீரடையவில்லை. “கூறவந்தவற்றை கூறுக!” என்றாள். “நான் பேரரசி திரௌபதியை வரவேற்க களமுற்றத்திற்கு வரப்போவதில்லை. என் அன்னை வரலாம், அதை என்னால் விலக்க முடியாது. நான் வரமாட்டேன். எனக்கு ஆணையிட எவரையும் ஒப்பப்போவதில்லை” என்று சுரதன் சொன்னான். “ஆணையிட்டால் எவரும் ஒப்பியே ஆகவேண்டும். அன்றி கழுவிலேறவேண்டும்” என்று அவள் அவன் விழிகளை நோக்கி சொன்னாள். அவன் விழிகள் தழைந்தன. “ஆனால் ஆணையிடப் போவதில்லை. பேரரசிக்கு உளம்நிறைந்த வாழ்த்தே அமையவேண்டும் என விழைகிறோம்.”

“அவர் என் தந்தையை கொன்றவர்…” என்று அவன் சொன்னான். “எந்தை தலையறுந்து களம்பட அவரே வழியமைத்தார். நான் அவரை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.” அவன் குரல் விந்தையாக உடைந்து சிறுவனுடையதுபோல் ஆகியது. விழிகள் பித்துகொண்டு உருளத்தொடங்கின. “அவர்மேல் நான் போரிலிருக்கிறேன். இந்த அஸ்தினபுரி நகர்மேல் போரிலிருக்கிறேன். என்னை இன்று உங்கள் அரசர் அடித்தார். அக்கணமே நான் வாளை உருவியிருக்கவேண்டும். காத்திருக்கிறேன். ஆம், நான் காத்துக்கொண்டிருக்கிறேன். இங்குள்ள எவர் நெஞ்சிலும் என் வாள் பாயலாம். உங்கள் அரசர், அவர் இளையோர், அரசியர். எவராயினும் என் எதிரிகளே. அதை அவர்களும் அறியட்டும். அதை சொல்லவே வந்தேன். நான் வாயில்நின்று உங்கள் அரசியை வரவேற்றால் எந்தை என்மேல் சினம்கொள்வார். என் மூதாதையரின் தீச்சொல் என்மேல் எழும்…”

அவன் உடனே எழுந்துவிட்டான். “அவ்வளவுதானா?” என்று அவள் கேட்டாள். “அவ்வளவுதான், இனி நான் சொல்லவேண்டியதொன்றுமில்லை. நான் செய்துகாட்டவே எஞ்சியிருக்கிறது. அதை நீங்கள் காண்பீர்கள்” என்றபின் அவன் வெளியே சென்றான். அறைவாயிலில் நின்று திரும்பி நோக்கி “ஆனால் ஒன்று உணர்க! அதையும் சொல்லியாகவேண்டும். உன்னை நான் இன்று இவ்வண்ணம் விட்டுச்செல்வது அஞ்சி அல்ல. தயங்கியும் அல்ல. நீ சூதர்குலத்தவள். உன் குருதியால் என் வாள் நனையலாகாது. என்றேனும் என் தலையில் முடி அமையுமென்றால் அன்று உன் தலைகொய்ய என் படைவீரர்களில் இழிந்தோனை அனுப்புவேன்” என்றான். சம்வகை புன்னகைத்தாள். அவன் சிவந்த பித்துக்கண்களால் அவளை நோக்கிவிட்டு வெளியேறினான்.

அவள் எழுந்து தன் கவசங்களை அணியும்பொருட்டு செல்லத் தொடங்கியபோது விசைகொண்ட காலடிகளுடன் சுரேசர் அவள் அறைவாயிலில் வந்து நின்றார். ஏவலன் அவளிடம் செய்தி சொல்ல உள்ளே வருவதற்குள் அவள் வெளியே சென்று அவரை எதிரேற்றாள். வணங்கி “வருக, உத்தமரே!” என்றாள். “அவர் செல்வதை பார்த்தேன், என்ன சொல்கிறார்? அவரால் பேரரசியை எதிர்கொண்டு வரவேற்க முடியாது என்கிறாரா?” என்றபடி அமர்ந்தார். “ஆம், அதை எதிர்பார்த்திருந்தேன்” என்று அவள் சொன்னாள். “அவர் ஏன் அப்படி தன்னை காட்டுகிறார் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.” சுரேசர் சிரித்தபடி “அவர் தன்னை நிறுவிக்கொள்கிறார். நம் முன் அல்ல, தன் முன். தன் இளையோன் முன், அன்னையின் முன்” என்றார்.

“அவரைப்பற்றி அரசரிடம் விரிவாக சொல்லியாகவேண்டும்” என்று சம்வகை சொன்னாள். “அவர் என்ன நினைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.” சுரேசர் “சிந்துவின் இளவரசர்கள் தன் மைந்தர்களைப்போல என்று அவர் என்னிடம் சற்றுமுன் சொன்னார்” என்றார். “அவ்வாறே அவரால் எண்ண முடியும். இவ்விரு இளவரசர்களும் இங்கே இருப்பார்கள் என்றால் ஆறே மாதங்களில் அவர் இவர்களை இங்கே அரசர்களென மணிமுடி சூட்டி அமரவைக்கவும்கூடும். அவர் உள்ளம் குற்றவுணர்வால் நெகிழ்ந்திருக்கிறது. சொல்லச் சொல்ல விழிநீர் பெருகுகிறது. அவர் களம்பட்ட அத்தனை இளவரசர்களுக்காகவும் இவர்களிடம் நிகர்செய்ய எண்ணுகிறார். இந்த அரண்மனையில் இளையோர் குரல் ஒலித்து எத்தனை காலமாகிறது அமைச்சரே என்றபோது குரல் இடற தலைகுனிந்தார்…”

சம்வகை சுரேசர் எண்ணுவதென்ன என்று நோக்கிக்கொண்டிருந்தாள். “அவர் இவர்களுக்கு ஏதேனும் ஈடுசெய்யவேண்டும். அதை இந்நகரமும் எதிர்பார்க்கும்” என்றார். சம்வகை “ஆனால் இவர்கள் ஜயத்ரதனின் மைந்தர். அதை எந்நிலையிலும் மறக்கலாகாது” என்றாள். “அவர்களை நாம் இப்போது மதிப்பிட வேண்டியதில்லை” என்று மட்டும் சுரேசர் சொன்னார். அவள் அவருள் ஓடுவனவற்றை புரிந்துகொள்ளாமல் குழம்பினாள். “அவர்கள் இருவரும் இங்கே தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வகையிலேனும் அவர்கள் தங்களை வகுத்துக்கொள்ள இவ்வாழ்க்கை அவர்களுக்கு உதவட்டும்” என்று சுரேசர் சொன்னார். “ஆனால்…” என அவள் தொடங்க இடைமறித்து “சில தருணங்களில் இவ்வாறுதான். நாம் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டே ஆகவேண்டுமென்ற நிலை உருவாகிறது. அதை அளிமடம் என்கின்றன நூல்கள்” என்றார் சுரேசர்.

ஏவலன் உள்ளே வந்து வணங்கி “சிந்துநாட்டு இளவரசர் சுரதன்” என்றான். சுரேசர் புன்னகைக்க அதன் பொருள் என்ன என வியந்தபடி “அனுப்புக!” என்று சம்வகை சொன்னாள். அவன் சென்றபின் “மீண்டும் வருகிறார். சில சொற்கள் எஞ்சியிருக்கின்றன போலும்” என்றாள். சுரேசர் அதற்கும் புன்னகைத்தார். உள்ளே வந்த சுரதன் சுரேசரை நோக்கி ஒரு கணம் திகைத்தான். பின்னர் தன்னை திரட்டிக்கொண்டு “நான் பேரரசியை வரவேற்க வருகிறேன். என்ன செய்யவேண்டும்? அன்னையுடன் அரண்மனைமுகப்பில் நிலைகொள்ளவேண்டுமா? அல்லது கோட்டைமுகப்புக்கே செல்லவேண்டுமா?” என்றான். சம்வகை “நீங்கள் இளவரசர். இந்த அரண்மனையில் இன்று அரசகுடி என எஞ்சுபவர்கள் நீங்கள் இருவருமே. கோட்டைவாயிலுக்குச் சென்று வரவேற்பதே முறை” என்றாள். “ஆம், அதை செய்கிறேன்” என்றான் சுரதன்.

அவள் மேலும் சொல்லாமல் அவனை நோக்கினாள். “நான் என் வஞ்சத்தை மறக்கவில்லை. ஆனால் இது என் தந்தையின் ஆணை” என்று அவன் சொன்னான். “தந்தை உங்களிடம் சொன்னாரா?” என்று சம்வகை கேட்டாள். “ஆம், நான் என் அறைநோக்கி சென்றேன். ஓர் எண்ணம் எழுந்தது. மீண்டும் சென்று சூதாடுவதல்லவா என் எதிர்ப்பை வலுவாக நிலைநாட்டும் வழிமுறை என்று. ஆகவே நேராக சூதாட்ட அறைநோக்கி சென்றேன். அது பூட்டப்பட்டிருந்தது. வாயிலில் எந்தை நின்றிருந்தார். விழியில்லாத தோற்றம். என்னை உணர்ந்ததும் கைநீட்டி உரத்த குரலில் ஆணைகளை இட்டார். சூதாடாதே, திரும்பிச் செல் என்றார். எந்தையே நான் என்ன செய்யவேண்டும் என்றேன். இப்போது இங்கிருக்கும் எல்லா நெறிகளுக்கும் கட்டுப்படு. யுதிஷ்டிரனுக்கு அணுக்கமானவனாக, அனைவருக்கும் வேண்டியவனாக திகழ்க என்று எந்தை சொன்னார். ஆணை என தலைவணங்கினேன். நேராக இங்கே வந்தேன்.”

“நன்று, இனி சிக்கலேதும் இல்லை” என்று சம்வகை சொன்னாள். “நான் இன்னமும் அதே வஞ்சத்துடன்தான் இருக்கிறேன். என் உள்ளம் எரிந்துகொண்டிருக்கிறது. அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்று சுரதன் சொன்னான். “நான் என் சொற்களில் ஒன்றையேனும் திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை. அதைக் குறித்த ஐயமே தேவையில்லை.” அவன் சுரேசரை நோக்கிவிட்டு “ஒருபோதும் நான் அந்தணரின் சூழ்ச்சிகளுக்கு ஆட்படப்போவதில்லை. என் அறத்தை என் வாளே முடிவுசெய்யும்” என்றபின் வெளியே சென்றான். சுரேசர் அவன் செல்வதை நோக்கியபின் திரும்பி சம்வகையிடம் “ஒவ்வொருவரும் தங்கள் இடங்களை நடிக்கும்பொருட்டு உரிய உரு கொண்டு, உரிய சொற்கள் கொண்டு அரங்குக்கு வருகிறார்கள்” என்றார்.

சம்வகை அவரை கூர்ந்து நோக்கி “இவர் நடிக்கப்போகும் இடம் என்ன?” என்றாள். “அதை எவரும் இப்போது சொல்லமுடியாது. உண்மையில் அவர் இனிமேல்தான் அதை நமக்கு காட்டவேண்டும். அவரை ஆட்டுவிக்கும் தெய்வங்கள் மட்டுமே அதை இன்று அறியும்” என்றபடி சுரேசர் எழுந்துகொண்டார். “பேரரசி வந்துகொண்டிருக்கிறார். அரசரின் அணிகள் சென்று சேர்ந்துவிட்டன. அணிகளை பார்த்தேன். நன்று. அவ்வெண்ணம் எல்லா வகையிலும் நன்று. பெண்களுக்கு மட்டுமே அவ்வாறு தோன்றும். அரசுசூழ்தலில் எப்போதும் பெண்ணின் இடம் என ஒன்று இருக்கவேண்டும். அதை உணர்ந்ததும் உங்களிடம் சொல்லவேண்டும் என தோன்றியது. ஆகவேதான் வந்தேன்” என்றார். அவள் புன்னகையுடன் “என் நல்லூழ்” என்றாள். அவர் வாழ்த்திவிட்டு கிளம்பினார்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46

பகுதி ஐந்து : விரிசிறகு – 10

சம்வகை யுதிஷ்டிரனின் அறைவாயிலை அடைந்து நின்றாள். ஏவலன் தலைவணங்கி அவள் வருகையை அறிவிக்க யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று மீள்வதற்குள் அவள் அங்கே ஆற்ற வேண்டியதென்ன என்பதை முடிவு செய்துவிட்டிருந்தாள். யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று தலைவணங்கும்போது அவள் சற்றே சலிப்புற்ற உடல்பாவனையை அடைந்திருந்தாள். நூல் நோக்கிக்கொண்டிருந்த யுதிஷ்டிரன் “கூறுக!” என்றார். அவருக்கு தன்மேல் மெல்லிய ஆர்வமும் உள்ளார்ந்த விலக்கமும் உண்டு என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அல்லது அதற்கும் அடியில் ஓர் அணுக்கம் இருக்கலாம். அவ்வாறு ஆழத்தில் ஓர் அணுக்கம் இன்றி எவரிடமும் ஆர்வம் கொள்ள இயலாது.

“பேரரசி நகர்நுழைகிறார். அதற்கான அனைத்தும் இங்கு ஒருக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிறு எண்ணம் இன்று எழுந்தது” என்றாள். அவ்விரு சொற்றொடர்களிடையே இருந்த இடைவெளி அவரை விழிகூரச் செய்தது. “இந்திரப்பிரஸ்தத்தில் பேரரசியின் அணிகள் உள்ளனவா? அங்கு அணிகள் இருந்தாலும் அவற்றை அவர் அணிந்து இங்கு வருவாரா? ஒற்றர் செய்திகளின்படி அவர் அங்கு ஒரு அணியைக்கூட உடலில் அணியாமல்தான் அங்கிருக்கிறார். அவ்வண்ணமே இங்கு எழுந்தருளவே வாய்ப்பு மிகுதி.” யுதிஷ்டிரனின் விழிகள் மாறின. “ஆம், என்னிடமும் அவ்வாறு சொல்லப்பட்டது” என்றார். “அவள் அணிகளேதுமின்றித்தான் வருகிறாள்.”

“அணிகளேதுமின்றி அரசி நகர்புகுவார் என்றால் அது இங்குள்ளோருக்கு விந்தையாகத் தெரியலாம். இன்று இங்கிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் முன்னரே அரசியை பார்த்திராதவர்கள். அவர்களுக்கு மும்முடி சூடி இந்திரப்பிரஸ்தத்தின் அரியணை அமர்ந்த பேரரசி திரௌபதியைத்தான் தெரியும். அவர்கள் அவரைத்தான் எதிர்பார்ப்பார்கள். பேரரசி இன்றிருக்கும் நிலையில் இவ்வண்ணம் தேரில் நகர்புகுவார் என்றால் அது பிறிதொன்றாக பொருள்கொள்ளப்படலாம்” என்றாள். யுதிஷ்டிரன் அவளை கூர்ந்து நோக்க “இன்று அரசியிடமிருந்தும் அரசரிடமிருந்தும் ஒவ்வாத ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் சூதர்கள். அவர்களின் கதைகள் அதை அவ்வண்ணம் முடித்துவைக்க விழைகின்றன” என்றாள்.

“ஆம், அதை நான் எண்ணவில்லை” என்றார் யுதிஷ்டிரன். சம்வகை “ஒன்று இயற்றலாம், பேரரசிக்குரிய அணிகளெல்லாம் இங்கு அஸ்தினபுரியிலேயே உள்ளன. அவற்றை தெரிவுசெய்து நாம் அரசிக்கு அனுப்பலாம். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அவர் கங்கைக்கரை மாளிகைக்கு வந்ததுமே அங்கு சென்று அந்நகைகளைக் கொடுத்து அணிந்து வரும்படி தங்கள் ஆணையை தெரிவிக்கலாம்” என்றாள். “ஆனால் அவள் அதை விரும்பவில்லை என்றால் என்னால் எதையும் சொல்ல முடியாது” என்றார் யுதிஷ்டிரன். “அதைத்தான் நான் தங்களிடம் தனியாக கூற வந்தேன். அணிகளை தெரிவுசெய்து அங்கே அனுப்புவதை நானே செய்ய முடியும். ஏன் அணிகளுடன் நகர்புகவேண்டுமென்பதை நானோ அமைச்சர் சுரேசரோ சென்று உரைக்கவும் கூடும். ஆனால் தாங்கள் கருவூலத்திலிருந்து தங்கள் கைகளால் அவ்வணிகளை தெரிவுசெய்து தங்கள் அன்பின் பொருட்டு அனுப்பினால் அதை அவரால் தவிர்க்க இயலாது” என்றாள் சம்வகை.

“மேலும் அது ஒரு அழகிய தருணமாகவும் ஆகும். அரசர் தன் கையாலேயே தெரிவுசெய்த அணிகளை அரசிக்கு கொண்டுசெல்வதையே ஒரு சிறுநிகழ்வென ஆக்கலாம். பசித்த ஓநாய் போன்றது சூதரின் நாக்கு. அவற்றுக்கு இனிய தேனை அளித்தால் ஊன்வெறியை தணிக்கமுடியும்.” யுதிஷ்டிரன் புன்னகைத்தார். “நன்று, அதை செய்க!” என்றார். “ஆனால் நம் கருவூலத்தில் பேரரசி திரௌபதியின் நகைகள் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று கருவூலத்தை அறிந்தவர்களும் இல்லை. தாங்கள் வந்தால் அவற்றை எளிதில் தொட்டு எடுத்துவிட முடியும்” என்றாள் சம்வகை.

“இப்போதே வருகிறேன்… உடனே” என்றபடி யுதிஷ்டிரன் தன் மேலாடையை எடுத்து தோளில் இட்டார். “இந்நாளின் இனிய பணி அதுவென்றே ஆகுக!” சம்வகை “தங்கள் அலுவல்கள் சற்று முடிந்து… ” என இழுக்க “இல்லையில்லை. அலுவல்கள் அனைத்தையும் திரும்ப வந்து செய்யக்கூடும். இதை முதலில் முடிக்கலாம்” என்றபடி யுதிஷ்டிரன் நடந்தார். விரைந்த காலடிகளுடன் இடைநாழியில் சென்றபடி “இது மிக முதன்மையான செயல். ஆனால் எனக்கு தோன்றவில்லை. எண்ணி எண்ணி ஒவ்வொன்றையும் இங்கு சீரமைத்துக்கொண்டிருந்தேன். எப்படி இதை நோக்க மறந்தேன்?” என்றார். சம்வகை “இது பெண்களுக்குத் தோன்றுவது” என்றாள். “மெய் மெய், இது பெண்களுக்கு மட்டுமே தோன்றுவது” என்றபின் “நாளை பேரரசி நகர்புகுகையில் சிந்துநாட்டரசி இங்கு இல்லமகள் என்று முற்றத்திற்குச் சென்று நின்று அணிமங்கலம் காட்டி வரவேற்பதற்கு வாய்ப்பிருக்கிறதா?” என்றார்.

“அது அவரிடம் கூறப்பட்டுவிட்டது” என்றாள் சம்வகை. யுதிஷ்டிரன் “நீ நேரில் கூறினாயா?” என்றார். “நேரில் ஒருமுறை உரைக்கவேண்டியுள்ளது. ஆனால் ஏற்கெனவே இவ்வரண்மனையின் பொறுப்பை இல்லமகளென சிந்துநாட்டரசி ஏற்றுக்கொண்டிருப்பதனால் இதை மறுக்க வாய்ப்பில்லை” என்றாள். “என் ஆணையெனச் சொன்னால் அவள் மறுக்கப்போவதில்லை. ஆனால் ஆணையென உரைப்பதில் எனக்கு தயக்கம் இருக்கிறது” என்று யுதிஷ்டிரன் கூறினார். “தங்கள் தங்கை அவர்” என்றாள் சம்வகை. “ஆம், ஆனால் இது அவள் தந்தை வாழ்ந்த அரண்மனை. அவள் தமையன் கோலூன்றி அமர்ந்திருந்த அரியணை. நான் அவளுக்கு மூத்தோன் எனினும் அந்நிலையில்தான் அவள் உள்ளத்தில் இருக்கிறேனா என எனக்குத் தெரியவில்லை.”

குரல் மாறுபட “ஒருமுறை என்னை நேரில் கண்டால், என் விழிகளை அவள் நேருக்கு நேர் உணர்ந்தால் என் நெஞ்சில் அவள் பொருட்டு எழும் அன்பை அவளால் புரிந்துகொள்ள முடியும். ஆனால்…” என்றபின் கைவீசி “அதைப் பேசி பயனில்லை. ஒவ்வொன்றும் விந்தையாக குலைந்து சிக்கலாகிக் கிடக்கிறது இன்று” என்று யுதிஷ்டிரன் கூறினார். சம்வகை அவரை இடைநாழியிலிருந்து படிகளினூடாக அழைத்துச் சென்றாள். கீழ்த்தளத்தின் இடைநாழிகளினூடாக நடந்து சிறுகூடத்திற்குள் நுழையும்போது “கருவூலத்திற்கு இவ்வழியாக ஏன் செல்கிறோம்?” என்று அவர் கேட்டார். “மைய அறையினூடாகச் செல்கையில் தாங்கள் அங்கு செல்வது காவலருக்கு தெரியவரக் கூடும். இவ்வேளையில் தாங்கள் கருவூலத்திற்குச் செல்வது அனைவரும் அறிந்ததாக ஆகவேண்டியதில்லை. அரண்மனையின் காவலர்களைக் குறித்தே நமக்கு முழு அறிதல் இன்றில்லை. பெரும்பாலானவர்கள் சென்ற ஒருமாத காலத்திற்குள் இந்த நகருக்குள் புகுந்தவர்கள்” என்று சம்வகை சொன்னாள்.

யுதிஷ்டிரன் களியறைக்கு முன் நின்று “அவ்வறைக்குள் யார்?” என்றார். “சிந்துநாட்டின் இளவரசர்கள் உள்ளே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் சம்வகை. “விளையாடும் பொழுதா இது? இங்கென்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்?” என்றார் யுதிஷ்டிரன். “அரசர்களுக்குரிய விளையாட்டு படைக்கலக் களத்தில் அல்லவா?” என்றபடி யுதிஷ்டிரன் அவ்வறை நோக்கி சென்றார். “அவர்கள் அங்கு நாற்களமாடி பயில்கிறார்கள்” என்றபடி சம்வகை பின்னால் சென்றாள். “நாற்களமா? இந்த அகவையிலா?” என்றபடி கதவை உந்தி உள்ளே சென்ற யுதிஷ்டிரன் “என்ன செய்கிறீர்கள் இங்கு?” என்று உரக்க கூவினார். “என்ன செய்கிறாய்? யார் நீ?”

சுரதனும் சுகதனும் திகைத்து எழுந்து நிற்க அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த வஜ்ரன் எழுந்து கைகூப்பி “நான் நூற்றுவர்தலைவன் வஜ்ரன். நாற்களம் பயிற்றுவிக்கும்படி ஆணை” என்றான். “யாருடைய ஆணை? யாருடைய ஆணை?” என்று கூவினார் யுதிஷ்டிரன். “என்ன செய்கிறீர்கள்? அறிவிலிகளே, என்ன செய்கிறீர்கள் இங்கே?” சுகதன் “இங்கு நாற்களமாடுதல்…” என்று சொல்ல சினத்துடன் திரும்பி சுரதனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் யுதிஷ்டிரன். “அறிவிலி! உன் இளையோனையும் இதற்கா இழுத்து வந்தாய்?” அடிவாங்கிய கன்னத்தைப் பொத்தியபடி அவன் தலைகுனிந்து நின்றான். “இது என் ஆணை! இனி ஒருபோதும் உன் கைகள் இந்த நாற்களக் கருக்களை தொடக்கூடாது. இனி ஒருமுறை நீ இவ்வறைக்குள் வந்தால், இனி எங்கேனும் நீ நாற்களத்தை தொட்டாய் என்று அறிந்தால்….” என அவர் நடுங்கினார்.

பின்னர் மெல்ல தளர்ந்து, தாழ்ந்த குரலில் “நான் இதை தொட்டேன். இதிலாடினேன். இது எனக்களித்ததென்ன என்று உனக்குத் தெரியாது. இன்று இங்கு இதோ நின்றிருக்கிறேன். எங்கோ எவ்வண்ணமோ சென்று அடையவேண்டிய இடம் அனைத்தையும் இழந்து வந்து நின்றிருக்கிறேன். இனி என் குடியில் எந்த மைந்தனும் இதை தொடமாட்டான். இனி என் நகரில் எவரும் இந்த நாற்களத்தை தொடப்போவதில்லை” என்றார். மைந்தர்கள் கண்ணீருடன் தலைகுனிந்து நிற்க சம்வகை மெல்ல பின்னால் வந்து “மிக இளையோர். நாம் சுரேசரிடம் உரிய முறையில் இவர்களிடம் பேசச் சொல்லலாம்” என்றாள். “பேசச் சொல்… அவரிடம் இனி ஒருமுறை இதை பொறுக்கமாட்டேன் என்று சொல். குருவின் குலத்தில் இனி எந்த அரசனும் நாற்களத்தை தொடமாட்டான்” என்றபின் யுதிஷ்டிரன் வெளியே சென்றார்.

 

செல்லும் வழியெல்லாம் யுதிஷ்டிரன் புலம்பிக்கொண்டே இருந்தார். ஒரே நாளில் அவர் மீண்டும் முதுமையடைந்துவிட்டதுபோல் தோன்றியது. அஸ்தினபுரி மீண்டெழுந்தோறும் அவரில் தோன்றிய உயிர்த்துடிப்பு அடங்கிவிட்டிருந்தது. முதியவர்களுக்கே உரிய பிறர் கேட்கிறார்களா என்று நோக்காத தற்பேச்சு சிந்திக்கொண்டே சென்றது. “இது ஒரு தீய தெய்வம். இதில் நம் ஆற்றலை வெளிப்படுத்துகிறோம் என்று எண்ணிக்கொள்கிறோம். ஆம், நம் ஆற்றலை வெளிப்படுத்துகிறோம் என்பது உண்மைதான். ஆனால் அது எதிரிலிருக்கும் இன்னொரு மனிதரிடம் வெளிப்படுத்தப்படுவதல்ல. ஊழென்று மாற்றுருவம் கொண்டு எதிர் நின்றிருக்கும் தீயதெய்வம் ஒன்றிடம் வெளிப்படுத்துவது. சூதின் தெய்வம்…”

“சூதின் தெய்வம் கலி என்கிறார்கள். அல்ல, கலி சூது உருவாக்கும் விளைவுகளின் மேல் ஆட்சிகொண்டவர் மட்டுமே. கலியின் தேவியாகிய தியூதையே சூதின் தெய்வம். அவளை நான் கண்டுள்ளேன். வேசரநாட்டில் ஒரு சிறுகுகையில். அங்கே அவள் மழுங்கலான கற்செதுக்கு வடிவில் எழுந்திருந்தாள். கல்லாலான திரையிட்டு மூடிய உருவென. தொன்மையான சிலை. நான்கு கைகளில் கீழ்வலக்கையில் பகடை. கீழ்இடக்கை ஆட வரும்படி அழைக்கும் சுட்டு. அச்சுட்டுவிரலில் சுற்றிய நாகம். மேல்வலக்கையில் அமுதகலம். மேல் இடக்கையில் பாசம். அகலே நின்று நோக்கினால் அவள் விழிகளில் காமமெழுந்த அழைப்பு. அருகணைந்தால் வஞ்சவெறிப்பு. அவளுக்கு பின்புறமும் முகம் உண்டு என்கின்றன நூல்கள். முன்முகம் சிரிக்கையில் பின்முகம் சீறும். முன்முகம் சீற பின்முகம் நகைக்கும். அவள் கைகளின் நிழல்களும் கைகளே. எண்ண எண்ண கைபெருகுபவள். அறியாக் கைகளாலும் ஆடுபவள்.”

“அவளை நோக்கி அங்கே நான் நின்றிருந்தேன். அச்சமூட்டும் இடம் அது. என் உடன்பிறந்தார் அகன்றனர். அவர்கள் அவளுடைய வஞ்சச் சிரிப்பைக் கண்டு நடுக்கு கொண்டனர். நான் அவளை நோக்கியபோது அவள் கனிந்த அன்னையென்றே தெரிந்தாள். அந்தக் குகை காபாலிகர்களுக்குரியது. அவர்கள் தங்களுக்குள் சூதாடுவதுண்டு. தோற்றவன் அக்கணமே எழுந்து தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளவேண்டும். அவ்வண்ணம் பலநூறுபேர் விழுந்த குகை. அவர்களின் மண்டையோடுகள் பதிக்கப்பட்ட சுவராலானது. ஆனால் அங்கு நின்று நான் மெய்ப்பு கொண்டேன். அத்தலைகளுக்குமேல் நின்றிருப்பதாக எண்ணினேன். சுவரிலிருந்து என்னை நோக்கி நகைகொண்டிருந்தாள் அன்னை.”

“எவராலும் வெல்லப்படாத தெய்வம் அது. பிற தெய்வங்களே கண்டு அஞ்சும் தெய்வம் அது. அது தன்னுடன் ஆட வரும்படி ஒவ்வொருவரையும் அழைக்கிறது. இளிப்புடன் அங்கே அமர்ந்திருக்கிறது. சிறு வெற்றிகளை அளிக்கிறது. நீ வல்லவன் அல்லவா, நீ பல்லாயிரத்தில் ஒருவன் அல்லவா என கொஞ்சுகிறது. நம் ஆணவமே அதன் படைக்கலன். கொடிய ஆடல். போரைவிடக் கொடிது. பழிகள் அனைத்தையும்விட இழிந்தது. ஆனால் இந்த ஆடல் ஒருபோதும் எவரையும் வெளியே விடுவதில்லை. எத்தனை இழப்பிற்குப் பிறகும் மனிதர்கள் இதில் கிடக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் நானும் இதை விட்டு விலகுவேன் என்று சொல்ல முடியவில்லை. ஆம், நேற்றுகூட நான் விளையாடினேன். இன்றும் விளையாடுவேன். என்னால் இதிலிருந்து மீளவே முடியாது.”

“இதை ஒருபோதும் தொடலாகாது என்று எனக்கு நானே ஆயிரம் முறை ஆணையிட்டுக்கொண்டேன். என்னால் இயல்வதில்லை. இதில் அமர்கையில் இவ்வுலகை ஆள்பவனாக, ஊழுடன் நிகர்நின்று போராடுபவனாக நான் உணர்கிறேன். அந்த தெய்வத்தைப்போல என் ஆழத்தை அறிந்தது பிறிதொன்றில்லை. அது என் ஆணவத்தை சீண்டுவதற்காக தோற்றுக்கொடுக்கிறது. நான் அகலும்போது அள்ளிக்கொடுத்து மீண்டும் உள்ளே இழுக்கிறது. அனைத்தையும் அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டு நம்மை வெறுமையில் தள்ளுகிறது. உடைந்து அமர்கையில் தோள்தொட்டு மேலும் ஒரு சிறுவாய்ப்பு உள்ளது என்கிறது. இத்தனை தோல்வியும் அறுதி வெற்றிக்கே என்கிறது. அது மானுடரை சிறுமைசெய்து மகிழும் தெய்வம். மண்ணோடு மண்ணாக மானுடரை மிதித்துத் தேய்த்து புழுவென்று அருவருத்து காறி உமிழ்ந்த பின் கடந்துசெல்வது. அதைப்போல மானுடரை வெறுக்கும் பிறிதொன்று இல்லை.”

“இருந்தும் ஏன் அதை தழுவிக்கொண்டிருக்கிறேன்? ஏனென்றால் அது இல்லாத வெற்றிடம் வேறெதைக் கொண்டும் நிறைக்கக்கூடியதல்ல. கானகங்களில் பயணம் செய்திருக்கிறேன். ஏதும் எஞ்சாப் பெரும்போரையும் கண்டாயிற்று. வெற்றியையும் தோல்வியையும் பேருருவில் அறிந்தாயிற்று. அதற்கப்பாலும் என் அகம் அதைக்கொண்டே நிறைக்கக் கூடியதாக இருக்கிறது. சூதாடியைப்போல் சூதாடப்படுபவன் வேறில்லை. இப்புவியில் சூதாடியைப்போல் தீச்சொல் பெற்றவனும் வேறில்லை” என்றார் யுதிஷ்டிரன். சலிப்புடன் தலையாட்டியபடி நின்று அவளை திரும்பி நோக்கினார். “எப்படி இவ்விளையோருக்கு இதில் ஆர்வம் வந்தது?” என்றார்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. “நான் அறிவேன், கதைகளாக சொல்லிச் சென்று அடையவைத்திருக்கிறார்கள் வீணர்களாகிய சூதர்கள். அக்கதைகளில் எல்லாமே சூதின் சூழ்ச்சியும் சூதாடியின் சரிவும்தான் உள்ளது. ஆனால் கேட்பவர்களுக்கு அது ஈர்ப்பை அளிக்கிறது. கூரிய வாளும் தீயும் நாகமும் அளிக்கும் கவர்ச்சி. பாம்பு படமெடுத்தாடுகையில் உள்ளத்தாலெனினும் அதன் முன் கைநீட்டிப் பார்க்காத எவருமுண்டா? தீயைத் தொட்டு விளையாடாத குழந்தை உண்டா? சூது விளையாடத் தொடங்கிய எவரும் அதிலிருந்து விலக இயலாது” என்றார் யுதிஷ்டிரன்.

“அனைத்தையும் மறக்கவேண்டுமென எண்ணினேன். இந்தப் போர்வெற்றிக்குப் பிறகு, இங்கே மும்முடி சூடி அமர்ந்த பிறகு, பேரறத்தான் என்று பேர் வாங்கி இங்கிருந்து விண் புகுந்த பிறகும் கூட குலமகளை வைத்தாடிய கீழ்மகனென்ற பழி என்னிலிருந்து போகாது. இப்புவியில் நான் இனி அதன் பொருட்டே எண்ணப்படுவேன். இப்புவியில் நாற்களம் குறித்த எப்பேச்சிலும் என் கீழ்மை ஒரு சொல்லென என் நினைவில் கடந்து வரும்.” யுதிஷ்டிரன் நின்று சீற்றத்துடன் “என் அறைக்கு திரும்புகிறேன். என்னால் இன்று இவ்வணிகளை தெரிவுசெய்ய இயலாது. என் உள்ளம் கலங்கியிருக்கிறது” என்றார்.

சம்வகை “தாங்கள் இவ்வுணர்விலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி இந்நகைகளை பார்ப்பதுதான்” என்றாள். “என் நினைவுகள் கொந்தளித்தெழுகின்றன. குலமகளை அவை முன் நிறுத்திய கீழ்மகன் நான். அவளுக்காக அணி தேர்வதிலிருக்கும் சிறுமை என்னை கூச வைக்கிறது” என்றார். “அணிகள் தங்களை உளம் மாறச் செய்யும்” என்று அவள் மீண்டும் சொன்னாள். “இல்லை, என்னால் இயலாது. நீயே தெரிவுசெய்” என்றார் யுதிஷ்டிரன். அவள் “அணிகளை அவ்வாறு தெரிவுசெய்ய இயலாது என்பதனால்தான் தங்களிடம் கூறினேன்” என்றாள். “ஏனென்றால் அதில் ஒரு அணி வேறெவருடையதாக இருந்தால்கூட அது மங்கலக் குறை. அரசியின் விழிகளில் அதுதான் முதலில் படும். தாங்களே தெரிவுசெய்யாத ஓர் அணியை தாங்கள் தெரிவுசெய்தது என்று சொல்லி அவர்களிடம் அளிக்கவே இயலாது. ஒவ்வொரு அணியுடனும் நினைவுகள் கலந்திருக்கின்றன” என்றாள். அவளை சற்றுநேரம் நோக்கி நின்றபின் “ஆம், மெய்தான்” என்றபின் பெருமூச்சுடன் யுதிஷ்டிரன் நடந்தார்.

அவர்களின் காலடிகள் பலகைப்பரப்பில் ஓசையிட்டன. யானை விலாவெனப் பருத்து வளைந்த பெருஞ்சுவர்கள் அவற்றை எதிரொலித்தன. மேலும் மேலுமென அவர்கள் இறங்கிச் சென்றனர். அஸ்தினபுரியின் ஆழம் என அவள் எண்ணிக்கொண்டாள். அங்கே செல்கையில் யுதிஷ்டிரன் தன் மூதாதையரை எண்ணி துயர்கொள்வது இயல்பென்றே தோன்றியது. அங்கே அவர்களின் மூச்சு எஞ்சியிருக்கும். வென்று வென்று அவர்கள் அடைந்தவை அங்கே எஞ்சியிருக்கின்றன. விண்புகுந்தாலும் அவர்களின் ஒரு சிறு துளி அங்கே இல்லாமல் இருக்காது. அங்கே யயாதியை பார்க்கமுடியும். குருவை, ஹஸ்தியை, பிரதீபரை பார்க்கமுடியும். அவர்களின் பெருவிழைவுகளே நாகங்கள் என்றாகி அங்கே புதையல் காக்கின்றன என அவள் இளமையில் கதைகேட்டிருந்தாள்.

 

அவர்கள் கருவூலத்தை அடைந்தபோது சுந்தரர் எழுந்து வணங்கி நின்றார். “அரசியின் அணிகளை அரசர் பார்க்க விரும்புகிறார்” என்று சம்வகை சொன்னாள். சுந்தரர் அதை முன்னரே அறிந்திருந்தார். ”ஆணை” என்றபின் ஏவலனை அழைத்து கருவூலக் கதவை திறந்தார். அவனும் தாழ்க்கோல்களுடன் ஒருங்கி நின்றிருந்தான். சுந்தரர் அரசரை அவ்வாறு அருகிருந்து நோக்கியவரல்ல என்பதனால் படபடப்புடன் இருந்தார். கையளவுத் தடிப்பு கொண்ட மூன்று இரும்புக் கதவுகளுக்கு அப்பால் அணிகளின் கருவூலம் இருந்தது. ஒவ்வொரு கதவும் ஓலமிட்டபடி திறந்தது. உள்ளிருந்து சிறைப்பட்ட காற்று அவிந்த வாடையுடன் வெளியேறியது. அவர்கள் பேசிய ஒற்றைச் சொற்களை உள்ளே எவரோ முணுமுணுத்தனர்.

யுதிஷ்டிரன் உள்ளே சென்று பெருமூச்சுவிட்டார். “இங்கு வெளிக்காற்று வருவதே இல்லையா?” என்றார். அது மறுமொழிக்கான சொல் அல்ல என அவர்கள் அறிந்திருந்தனர். “புழுதியின் மணம். செல்வம் குவியுமிடத்தில் எல்லாம் இவை வந்துவிடுகின்றன. மூத்தவளின் மணம்… இருட்டு, புழுதி, பூசணம், சிற்றுயிர்கள்” என்றார். சம்வகை அவருடைய உள்ளம் நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தாள். “மூத்தவள் இல்லாத இல்லம் இல்லை என்று இதனால்தான் சொல்கிறார்கள் போலும். களஞ்சியத்திலும் கருவூலத்திலும் காவலென மூத்தாளே அமையமுடியும். ஒட்டடை, சிலந்திகள், பல்லிகள்… இருள் வடிவ தெய்வங்கள் அவை. திருமகளுக்குக் காவலென சூழ அமர்ந்திருக்கும் பூதகணங்கள் இவை. உலகியலோர் செல்வத்தை விழைகிறார்கள். அதன்பொருட்டு மூத்தவளை வரவேற்று குடியமர்த்துகிறார்கள்.”

அந்த மறுப்பினூடாக அவர் அதை அகத்தே மெல்லமெல்ல ஏற்றுக்கொள்கிறார் என அவள் உணர்ந்தாள். “செல்வத்துடன் ஒரு கெடுமணம் அமையுமென்றால் அது செல்வத்தின் மணமென்றே ஆகிவிடுகிறது” என்றார். சூழ நோக்கியபின் அவளை நோக்கி புன்னகைத்து “மானுடனுக்கு இனியவை அனைத்தும் ஏதேனுமொரு கெடுமணம் கொண்டவை என்கின்றது காமநூல்” என்றார். சுந்தரர் வந்து நிற்க அவர் பேழைகளைத் திறந்து காட்டும்படி கையசைத்தார். ஏவலர் ஒவ்வொரு பெட்டியாக திறந்து காட்டினார்கள். பேழைகள் பூதங்கள் என வாய்திறந்தன. அவற்றுக்குள் இருந்த சிறிய அறைகளுக்குள் நாகங்கள் சுருண்டு வளைந்து செறிந்திருப்பவைபோல் அணிகள் அமைந்திருந்தன. அவை இருளில் ஆழ்துயிலில் அமைந்திருந்தன. ஒளிகொண்டு விழிகூசி நெளிந்தன. சீறி தலைதூக்கின. அவள் விழிகளை விலக்கிக்கொண்டாள்.

யுதிஷ்டிரன் ஒரு பேழையிலிருந்து ஒரு நகையை எடுத்தபின் திரும்ப வைத்தார். “நெடுநாட்களுக்குப் பின் இதை பார்க்கிறேன். இங்கு நாங்கள் இருந்தபோது ஒரு கொற்றவை விழவின்போது அவள் அணிந்தது அது. அன்று சுடரெனப் பற்றி தழலாடி எழுந்துவிடுவாளென எனக்குத் தோன்றியது” என்றார். பிறிதொரு பெட்டியைத் திறந்து நோக்கி “முற்றிலும் வெண்ணிற அருமணிகள் இவை. பாண்டியநாட்டு வெண்முத்துக்கள். இவற்றை பகலில் அணிந்தால் நீர் விழுந்த சுனைபோல் தோன்றும் அவள் உடல்” என்றார். அவர் முகம் மாறத் தொடங்கியிருப்பதை அவள் கண்டாள். இறுகியிருந்த முகத்தசைகள் நெகிழ்ந்தன. உடலிலிருந்த மெல்லிய நடுக்கு ஓயத்தொடங்கியது. ஒவ்வொரு அருமணியாக எடுத்து நோக்கி தனக்குள் ஆழ்ந்து தனக்குள் முணுமுணுத்து மீள வைத்து மீண்டும் ஒன்றைத் திறந்து அவர் சென்று கொண்டே இருந்தார்.

உடன் செல்லலாகாது என்பதுபோல் சம்வகை தயங்கி நின்றாள். ஒவ்வொரு நகையிலும் ஒருபொழுது நின்று பின் சென்றார். ஒவ்வொரு பொருளிலும் ஒரு நினைவு. வாழ்வின் விரைவென்பது தன்னை இவ்வண்ணம் ஆங்காங்கே உதிர்த்து முன்னெழல். மீளச் சென்று மீண்டும் ஒருகணம் கற்பனையில் வாழ்தல் ஒன்றே முதுமையில் எஞ்சியிருக்கும் இன்பம் போலும். அவள் அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். யுதிஷ்டிரன் இளமை கொண்டபடியே செல்வது போலிருந்தது. அவர் உடலில் அசைவுகளில் விசை எழுந்தது. சிறு துள்ளலே கூட நிகழ்ந்தது. திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தபோது இளைஞன் போலிருந்தார். “இவை மொத்தமாக ஒன்றே. இந்நகைத் தொகுதியை அனற்குவை என்பார்கள். இவை அவளுக்கு தந்தையால் அளிக்கப்பட்டவை. பொருளெண்ணிச் சொல்லமுடியா மதிப்புகொண்டவை.”

“நீ அறிந்திருப்பாய், அவளை அனல் மகள் என்பார்கள். கன்னியென்றே அனலில் எழுந்தவள் அவள் என்று சூதர் கதைகள் சொல்கின்றன. இவையனைத்துமே செந்நிற வைரங்கள், செம்பவளங்கள். இச்செம்மணிகள் பதிந்திருக்கும் பொன் ஆடகம். செம்பு கலந்து அனலுக்கு அணுக்கமென வண்ணம் கொள்ளச்செய்யப்பட்ட பொன். செம்பட்டாடையும் செம்மலர்களும் அணிந்து அவள் இவற்றை உடலெங்கும் அணிந்து வருகையில் தழலே எழுந்து அணுகுவது போலிருப்பாள்.” அவர் விழிகளில் பித்து எழுந்தது. “தழல் என்று அவள் இந்நகருக்குள் நுழையட்டும். தழலென்றுதான் அவளை இந்நகர் மக்கள் அறிந்திருப்பார்கள். அவ்வண்ணமே காணட்டும்” என்றார். அவள் “ஆணை” என்றாள்.