களிற்றியானை நிரை - 1
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-**1**
தொலைவுகள் அறியமுடியாதவை. ஆகவே ஊழ் என, சாவு என, பிரம்மமே என மயங்கச்செய்பவை. குழவிப்பருவத்தில் அருகே வந்தணையும் ஒவ்வொரு பொருளும் விந்தையே. அறியத் தந்து முற்றறியவொண்ணாது விலகி விளையாடுபவை. பொருட்களால் கவ்வி அழுத்தி மண்ணோடு பிணைக்கப்படுகிறது குழவி. ஒவ்வொன்றும் தானாகி ஒவ்வொன்றிலும் தங்கி மீள்கிறது. அப்போதும் ஒவ்வொரு கணமும் அதை தொலைவு ஈர்த்தபடியே இருக்கிறது. ஒவ்வொன்றிலிருந்தும் விழிதூக்கி அது தொலைவைத்தான் பார்க்கிறது.
அத்தனை குழவிகளும் கைநீட்டி ‘அங்கே அங்கே’ என்கின்றன. அன்னையர் அதை புரிந்துகொள்வதில்லை. “அதுவா?” என்கிறார்கள். “அங்கா?” என்று சுட்டிக் கேட்கிறார்கள். அத்தையா? தந்தையா? தாதனா? அவ்வையா? எவர்? நீ கோருவது எதை? அவர்கள் சுட்டிக்காட்டுவது ஒவ்வொன்றும் தொலைவுக்கு இப்பாலுள்ளது. குழவி மேலும் மேலும் என விழைகிறது. தொலைவு என்பதே மேலும் என்பதன் மறுவடிவம்தான். இங்கிருக்கும் அனைத்துக்கும் அப்பால். இங்கிலாதவற்றாலான ஒரு வெளி. அது அன்னை இடையிலிருந்து எம்பி எம்பி தாவுகிறது. தந்தை தோளிலிருந்து பறந்தெழ விழைகிறது. அவர்கள் இறுகப்பிடித்துக்கொள்கிறார்கள். புகையை வான் என ஈர்க்கிறது குழவியை தொலைவு.
ஆதன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நெடுந்தொலைவை பார்க்கமுடிந்தது. அவனுடைய சிற்றூரில் மிகத் தொலைவை பார்க்கத் தக்க இடம் அது ஒன்றுதான். இல்லையேல், முழு நாளும் நடந்து கடற்கரைக்குச் செல்லவேண்டும். அவன் கடற்கரைக்கு செல்வதில்லை. அங்கே தொலைவை அலைகள் மறைத்துவிடுகின்றன. தொலைவுக்கு முன் அமைதிகொள்ள அறியாதது கடல். தொலைவான் கவிந்து ஊழ்கத்தில் அமர்ந்த கடல் ஒன்று எங்கோ இருக்கக்கூடும். நீர்வெளி உறைந்து படிகப்பரப்பென்று ஆகி உருவாவது அது. அவன் அதை தன் கற்பனையில் உருவாக்கிக் கொள்வதுண்டு. இக்கடல்களுக்கு அப்பால் அது உள்ளது. ஆனால் இந்த அலைகள் வழியாக அங்கே செல்லவியலாது.
அந்தச் சிறுகுன்றை ஊரில் சித்தன்மேடு என்றார்கள். அங்கே எப்போதும் சித்தர் என ஒருவர் இருப்பதுண்டு. அவர் அங்கிருக்கும்வரை அவரை கிழவர் என்றோ பண்டாரம் என்றோ கூறுவார்கள். அவர் குன்றிறங்கி தெருக்களில் நடந்து இல்லந்தோறும் நாடிவந்து “அன்னையே, அன்னமென வருக!” என்று குரலெழுப்பினால் மட்டும் அவருடைய திருவோட்டில் பிடியரிசியை போடுவார்கள். அவரை வணங்குவதோ அவரிடமிருந்து வாழ்த்துபெறுவதோ இல்லை. அவர் அந்த மேட்டிலெழுந்த மரங்கள்போல் ஒருவர். அவர் ஒருநாள் அங்கே உயிரிழந்து கிடந்தால் அக்கணமே அவரை சித்தர் என்பார்கள். அவருடைய உடல் மண்புகுந்த இடத்தில் சிறு சிவக்குறியை நாட்டுவார்கள். முழுநிலவுநாளில் ஒருமுறை அங்கே பூவும் நீரும் அன்னமும் கொண்டு வழிபடுவார்கள். ஆனால் ஓராண்டில் அவரை முற்றிலும் மறந்துவிட்டிருப்பார்கள். சித்தன்மேடு என்னும் சொல்லை மட்டும் சூடி அச்சிறுகுன்று ஊருக்கு மேல் உறைந்த அலையென எழுந்து மரங்கள் செறிந்து, பாறைகள் சூடி நின்றிருக்கும்.
நெடுநாள் பிந்துவதில்லை, பிறிதொருவர் கையில் திருவோட்டுடன், புழுதிபடிந்த கால்களுடன், சடைமுடிக்கொண்டை அணிந்து தன்னந்தனியராக அங்கே வந்துசேர்வார். தனக்குரிய சிறு குடிலை அங்கே கட்டிக்கொள்வார். அவர் அங்கே வந்திருப்பதை குன்றின்மேல் அடுபுகை எழுவதைக் கண்டு ஊரார் அறிவார்கள். அவர் முகத்தை பார்ப்பதற்கு மட்டும் ஆவல்கொள்வார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே முகம். ஆகவே வேறுபாடுகளை பேசிக்கொள்வார்கள். “அவரைப்போல இவர் மேனிவண்ணம் கொண்டவரல்ல” என்பார்கள். “அவரிடம் இருந்த நிமிர்வு என்ன!” என வியப்பார்கள். “அவர் கண்கள் தீக்கங்குகள் அல்லவா?” என்பார்கள். அப்பேச்சினூடாக புதியவரை அன்றாடத்துள் கொண்டுவந்து அமையச்செய்வார்கள். அதனூடாக அவருக்கு ஒரு பெயரை சூட்டுவார்கள். அப்பெயரில் அவரை அடைத்தபின் அவர் கப்பரையுடன் தெருக்களில் வந்தால் இயல்பாக கடந்துசெல்ல முடியும். அப்பெயரை உதறி அவர் எழும்போதுதான் அவர் சித்தர்.
ஆதன் சிறுவனாக இருந்தபோது அங்கே முதியவர் ஒருவர் இருந்தார். அவரை பானைச்சித்தர் என்றனர். அவர் மறைந்த பின்னர் இன்றிருப்பவர் வந்தார். அவருக்கு வெற்றிலைச்சித்தர் என்று பெயரிட்டிருந்தனர். அவர்களுக்கு அந்த இடம் எப்படி தெரிகிறது என்பது அவனுக்கு என்றும் விந்தைதான். ஊருக்கு அப்பால் உமணர்களின் வண்டிப்பாதை செல்கிறது. அங்கே நின்று நோக்கினால் சித்தன்மேடும் அதன் நெற்றி என எழுந்த கவளப்பாறையும் தெரியும். அது அவர்களை அழைக்கிறது போலும் என எண்ணிக்கொள்வான். ஆனால் அவன் அச்சாலையில் நின்று நோக்கியபோது அது செறிந்த முள்மரங்களுக்குமேல் எழுந்த ஒரு மேடு என்றன்றி ஏதும் தோன்றவில்லை.
ஊரிலிருந்து எவரும் அங்கே செல்வதில்லை. மேட்டின் சரிவெங்கும் சித்தர்களின் நிறைவிடங்கள் புதர்களுக்குள் எழுந்த சிறிய சிவக்குறிகளாக நின்றிருந்தன. திருத்தப்படாத நிலமாகையால் முட்புதர் மண்டியிருந்தது. அங்கே சென்று பாம்பு தொட்டு மறைந்தவர்கள் பலர். அவன் இளமையிலேயே அங்கே வரத்தொடங்கிவிட்டிருந்தான். முதல்முறை பானைச்சித்தர் மறைந்தபின் நிகழ்ந்த வழிபாட்டுக்காக முழுநிலவுநாளில் அன்னையுடன் அங்கே வந்தான். நிலவொளியில் எழுந்து வான்நோக்கி நின்ற கவளப்பாறையையே நோக்கிக்கொண்டிருந்தான். மழை விழுந்து அரித்து நீண்ட கோடுகளும் பொருக்குகளுமாக கருமைகொண்டு எழுந்து நின்ற புடைப்பு. அறிந்த எந்த வடிவங்களுடனும் அதை ஒப்பிட முடியாது. பெரும்பாலான பாறைகளுக்கு அவை ஒப்புமைகொள்ளும் ஒன்றுடன் இணைத்தே அங்கே பெயர்களிருந்தன. எவற்றுடனும் ஒப்பிட இயலாத அது வெறும் உருளை எனப்பட்டது.
அவன் முதலில் அதைப் பார்த்ததும் எவரோ புதர்களுக்கு அப்பாலிருந்து மெல்ல தலைதூக்குவதாகவே எண்ணினான். மிகப் பெரிய ஒரு விலங்கு. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதை முன்னரே கண்டிருக்கிறோம் எனத் தோன்றியது. அன்றுவரை அவன் நோக்கி அறிந்த எதிலும் இல்லாத ஒன்று அதில் இருந்தது. அது என்ன என்று எண்ணும் அகவையை அவன் அடைந்திருக்கவில்லை. அவன் அன்னையிடம் கைசுட்டி அப்பாறையை காட்டினான். அன்று அவன் பேசத்தொடங்கியிருக்கவில்லை. அவனுக்கு ஐந்து அகவை முடிந்துவிட்டிருந்தது. அவன் அன்னைக்கு அவனொருவனே மைந்தன். பொற்கொல்லராக இருந்த அவன் தந்தை இறந்தபின் அவன் ஒருவனே அவள் வாழ்வின் பிடிப்பு என்றிருந்தான். அவனை பேசவைப்பதற்காகவே அவள் அனைத்து ஆலயங்களுக்கும் அழைத்துச் சென்றாள்.
பார்க்கும் பொருட்கள் அனைத்தையும் கூர்ந்து நெடும்பொழுது நோக்கிக்கொண்டிருப்பது அவன் வழக்கம். அவன் நோக்கு நிலைகுத்தியிருப்பதைக் கண்டு அவன் அன்னையும் அயலாரும் அவனுக்கு வலிப்பு வந்துவிட்டதென எண்ணியதுண்டு. அவன் அன்னை வெறிகொண்டு கூவியபடி அவனை தூக்கி குலுக்குவாள். அவன் கலைந்து அவளை நோக்கி புன்னகைசெய்யும்போது உளமுடைந்து அழுவாள். அவனை நெஞ்சோடணைத்தபடி புலம்புவாள். பின்னர் அது அவன் இயல்பென்று தெளிந்தாள். அவன் பொருட்கள் எதையும் எடுக்க முற்படுவதில்லை. கைநீட்டுவதுகூட இல்லை. நோக்கியபடி அமர்ந்திருப்பான். அப்பொருள் அளிக்கும் மலர்வு அவன் முகத்தில் தெரியும்.
அவனை அன்னை மூத்த பொற்கொல்லரின் பட்டறையில் கல்விக்கு சேர்த்தாள். அவன் அங்கிருந்து நழுவி தனித்து நடந்து சித்தன்மேட்டின்மேல் ஏறி கவளப்பாறைக்குமேல் சென்று அமர்ந்து தொலைவை நோக்கிக்கொண்டிருந்தான். பகலெல்லாம் அவனைக் காணாமல் ஊரெல்லாம் தேடிய அவன் அன்னை ஊர்ச்சாவடியில் மயங்கி விழுந்தாள். ஊரார் நான்கு பக்கமும் தேடினர். கள்வர்கூட்டமோ இரவலர்குழுக்களோ பிடித்துக்கொண்டு சென்றிருக்கக்கூடும் என்றனர் சிலர். ஊருக்கு வடக்கே அமைந்த ஏரியிலோ கைவிடப்பட்ட தொன்மையான ஊருணியிலோ விழுந்திருக்கலாகும் என்றனர் சிலர். எவரும் செய்வதற்கேதும் இருக்கவில்லை. “நீர் அவனை கொண்டுவருவது வரை காத்திருக்கவேண்டியதுதான்” என்று ஊர்முதல்வர் சொன்னார். “அல்லது அரசக்காவலர்கள் அவனை கண்டுபிடித்து மீட்டுவரவேண்டும்… எங்குள்ளவன் என்று சொல்வதற்கும் நாவற்றவன் என்பதனால் அது நிகழப்போவதில்லை.”
அன்று மாலை சித்தன்மேட்டில் புகை எழுந்தது. “புதிய சித்தர் போலும்… எங்கிருந்துதான் இவர்கள் வருகிறார்களோ!” என்றார் ஊர்முதல்வர். “தொலைவிலிருந்து ஒருவர் தோன்றி முழுத்து அணைவதை ஒருநாள் கண்டேன்… முதல் மழையின் முதல் மழைத்துளி விசும்பிலிருந்து வருவது போலிருந்தது” என்று முதியவரான மிளையன் சொன்னார். மறுநாள் சித்தன்மேட்டிலிருந்து நிமிர்ந்த மெல்லிய உடலும் நெஞ்சில் படர்ந்த கரிய தாடியும் சுருட்டி தலைமேல் கட்டிய சடைப்புரிகளும் கொண்ட துறவி தோளில் அவனை தூக்கியபடி ஊர்ச்சாவடி நோக்கி வந்தார். “உச்சிப்பாறைமேல் இவனை பார்த்தேன்” என்றார். அவன் அன்னை வெறியுடன் கூச்சலிட்டபடி ஓடிவந்து அவனை ஓங்கி ஓங்கி அறைந்து கதறி அழுதாள். அவன் “அங்கே, மிகத் தொலைவு!” என்று கைநீட்டி சொன்னான். “மிகப் பெரிய வானம்… நிறைய வெயில்!” அன்னை மேலும் கதற ஒரு பெண்மணி “கருப்பி, அவன் பேசுகிறான்!” என்றாள்.
அதன் பின்னரே அன்னை அவன் குரலை செவிகளால் கேட்டதை உணர்ந்து நெஞ்சில் கைவைத்து விக்கித்தாள். அவள் அவன் குரலை தன்னுள் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தவள். அக்குரலை அவனுடையதென ஏற்க அப்போதும் அவள் அகத்தால் இயலவில்லை. அவள் வெறித்து நோக்கிக்கொண்டிருக்க ஒரு கிழவி அருகணைந்து “என்ன பார்த்தாய்?” என்றாள். “நெடுந்தொலைவு!” என்று அவன் சொன்னான். “அங்கே, நெடுந்தொலைவு…” அன்னை அழுதபடி தளர்ந்து மண்ணில் உடல்படிய படுத்துவிட்டாள். ஒவ்வொரு பெண்ணாக வந்து அவனை சூழ்ந்துகொண்டார்கள். “நீ எப்படி அங்கே சென்றாய்?” “அங்கே நாகங்களை பார்த்தாயா?” “இரவு எங்கே துயின்றாய்?” அவன் அவர்களை மாறிமாறி பார்த்து ஒற்றைச் சொற்களில் மறுமொழி உரைத்தான்.
அந்நிகழ்வை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் துறவி கப்பரையுடன் ஊருக்குள் அரிசிகொள்ளச் சென்றார். “நன்று, அங்குள்ள சித்தர்களின் அருளே என்று கொள்க!” என்றார் ஊர்த்தலைவர். அன்னை துயரா களிப்பா என்றறியாத நிலையில் நெடுநேரம் இருந்தாள். எங்குளாள், எவ்வகையில் என்றே அறியாதவள்போல. அவனை அள்ளி அணைத்து காற்றுக்கு சுடரை என முந்தானையால் மூடிக்கொண்டு இல்லத்திற்கு கொண்டுசென்றாள். “எரிபொரி காட்டி சுற்றிப்போடு… எத்தனை விழிகள் பட்டிருக்குமோ” என்றாள் முதுமகள் ஒருத்தி. அன்னை அவனை முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். இல்லத்திற்குள் கொண்டுசென்று அவனை அமரச்செய்து அன்னம் பரிமாறியபின் அருகமர்ந்து வினாக்களை எழுப்பிக்கொண்டே இருந்தாள். விடைகள் அவளுக்கு புரியவில்லை. அவன் குரலொன்றே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
ஆனால் அதன்பின் அவன் பொற்கொல்லர் கூடத்திற்கு செல்லவில்லை. பெரும்பாலான நாட்களில் கவளப்பாறைமேல் சென்றமர்ந்துகொண்டான். முதலில் அதை கடிந்து தடுத்த அன்னை பின்னர் சீற்றம் கொள்ளலானாள். துறவியிடமும் கடுஞ்சொல் உரைத்தாள். அவர் எவர் சொல்லையும் செவிகொள்பவரல்ல. அவனை தடுக்கமுடியாது என அவள் புரிந்துகொள்ள ஈராண்டாகியது. அதன்பின் அவள் அமைதியடைந்தாள். பகலோ இரவோ அவன் இல்லம் திரும்பும்போது ஒரு சொல்கூட பேசாமல் சென்று தாலமெடுத்திட்டு அன்னம் பரிமாறினாள். அவன் கிளம்பும்போது எங்கு செல்கிறாய் என்று கேட்காமலானாள். எவரேனும் அவனைப்பற்றி உசாவினால் ஒரு சொல்லும் மறுமொழி உரைப்பதில்லை.
ஆதன் அத்துறவியிடம் பேசிக்கொண்டிருப்பான். அவர் பெரும்பாலான வினாக்களுக்கு வெடித்துச் சிரிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆயினும் அவரிடம் பேசவே அவனுக்கு பிடித்திருந்தது. ஊரில் அவன் கண்ட அனைவரும் ஒற்றைமுகமும் ஒற்றைவிழிகளும் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசும் சொற்களும் ஒன்றே. இளமையில் அவன் அத்துறவியிடம் “அவர்கள் அனைவரும் ஏன் ஒன்றுபோல் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். அவர் கண்களில் நகைப்புடன் தாடியை உருவியபடி “வேறுபட்டிருந்தால் தனித்திருக்கவேண்டுமே?” என்றார். அவன் அதை உடனே புரிந்துகொண்டான். அவனுக்கு புரிகிறது என்று அவருக்கும் தெரிந்தது. “நீர் தன்னை கலக்கிக்கொண்டே இருக்கிறது” என்று அவர் மீண்டும் சொன்னார். “நெருப்பு தன்னில் எதுவும் கலக்க விடுவதில்லை.”
அவன் அச்சொற்களினூடாக நெடுந்தொலைவு சென்றான். ஊரிலுள்ள அனைவரும் ஓயாது உரையாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் தனித்திருந்தால் இன்னொருவர் அருகே வந்தமர்ந்து பேசத் தொடங்கினார். அவர்கள் பூசலிடுவதும் அணுகுவதன்பொருட்டே. பேசிப்பேசி தங்களை கலந்துகொண்டே இருந்தனர். மானுடமே இடைவிடாது தன்னை ஒன்றுடனொன்று இணைத்துக்கொண்டே இருக்கிறது. பேசுகிறது, பாடுகிறது, நடிக்கிறது, அழுகிறது, சிரிக்கிறது. “தனித்திருந்தால் என்ன ஆகும்?” என்று அவன் அவரிடம் கேட்டான். “நீர் மண்ணெங்கும் பரவுகிறது. வேர்களும் அன்னமும் மலர்களும் தேனும் மணமும் ஆகிறது. நெருப்பு விண்ணிலேறி முகிலாகிறது. கரைந்து விண்ணே ஆகிவிடுகிறது” என்று அவர் சொன்னார்.
அவன் அவரிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான். பின்னர் அப்பேச்சும் நின்றுவிட்டது. அவன் அங்கே வந்து அவர் இருப்பதை இயல்பாக உணர்ந்து அங்கே தானுமிருந்தான். ஊரிலும் எவரிடமும் அவன் பேசுவதில்லை. அவன் பேசுவதில்லை என்பதனால் அவனுக்கு செவி கேட்கும், மொழி தெரியும் என்பதையே ஊர்மக்கள் மறந்தார்கள். அவன் முன் எந்தத் தடையுமில்லாமல் பேசத்தொடங்கினர். அதன் பின்னர் அவன் அவர்கள் தங்கள் மொழியால் மறைத்துக்கொண்டிருந்தவற்றை கேட்கலானான். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அகத்தைக் கலந்து அழித்ததுமே வெறுமைகொண்டு தங்களுக்கென ஓர் அகத்தை சமைத்துக்கொள்ளலாயினர். அது ஆணவத்தாலானதாக இருந்தது. அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் தன்னைப்பற்றித்தான். அதன் நூறாயிரம் நுண்வடிவங்களைப் பற்றி மட்டும்தான். அங்கே அவர்கள் அனைவரைப்பற்றியும் அறிந்தவனாக அவன் ஒருவனே இருந்தான்.
அவர்கள் அவனை மிக எளிதாக அவன் தந்தை என ஆக்கிக்கொண்டார்கள். அவர் விடுத்துச்சென்ற இடத்தில் அவன் சரியாகப் பொருந்தினான். அவன் தந்தை பொருள்மெய்க்கலை பயில்பவராக இருந்தார். அவருக்கு பொன்னுருக்கும் கலை கற்றுக்கொடுத்த முன்னோடிகளில் ஒருவர் இரும்பை பொன்னாக்க முயன்று அதில் கலம் வெடித்து உயிர்துறந்தார். அவருடைய சுவடிகள் அவன் தந்தையிடம் வந்தன. இளமையிலேயே மிகக் குறைவாகப் பேசுபவராக இருந்த அவருக்கு விழிநாகன் என்று அங்குள்ளோர் பெயரிட்டிருந்தனர். ஒரு அணிநகையை உறுத்து சிலகணங்கள் நோக்கிவிட்டாரென்றால் எந்த அளவுகளும் இல்லாமல் அதை திரும்ப உருவாக்கிவிடுபவர் என்று புகழ்பெற்றிருந்தார். அந்தச் சிற்றூரில் எங்கும் அவர் சென்றமர இடமிருக்கவில்லை. அவருக்கான இடம் அச்சுவடிகளில் இருந்தது.
பன்னிரு ஆண்டுகள் அவர் அச்சுவடிகளில் இருந்து பொருள்மெய்க்கலையை நிகழ்த்திக்காட்ட முயன்றார். ஓய்வுப்பொழுதுகளில் தன் இல்லத்துக்குப் பின்புறம் அமைத்த கொட்டகையில் அப்பணியை செய்துவந்தவர் பின்னர் முழு நேரமும் அங்கே வாழலானார். ஒவ்வொருநாளுமென அவரிடம் சொல் அடங்கியது, விழிகள் ஒளிகொண்டன. அவர் அவர்களின் விழிகளுக்கு முன்னிருந்து மறைந்தே போனார். ஒருநாள் இரவு கலம் கருகி எழுந்த நச்சுப்புகையால் இருமித் துடித்து அவர் உயிர்துறந்ததையே அவருடைய துணைவி மறுநாள்தான் அறிந்தாள். அவள் சென்று பார்த்தபோது அவர் உடல் நீலமாக இருந்தது. கண்களில் நிலைகுத்திய வெறிப்பு எஞ்சியிருந்தது. பொன்னாக்கும்பொருட்டு அவர் எடுத்துவைத்திருந்த பொருட்களில் ஒன்று குதிரையின் லாடம் என்பதை ஊர்த்தலைவர் கண்டார்.
அவர்கள் அந்த இறப்பை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தனர். “பொருட்களின் மெய் என்பது ஒன்றே என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த மெய்யை சுவையென, வடிவென, வண்ணமென, அசைவென வகுத்து அவற்றின் இணைவையும் பிரிவையும் நெறிப்படுத்தியிருக்கிறது பிரம்மம். மானுடர் வாழும் உலகம் அந்த வகைமாறுபாடுகளால் ஆனது. பொருட்களை அவற்றின் மெய்மட்டுமே என ஆக்கலாகும் என நம்புகின்றனர் இவர்கள். அது பிரம்மத்திற்கு எதிரானது என்று நான் சொன்னேன். இச்சிற்றூரிலேயே பல தலைமுறைகளாக அந்த ஆய்விலிறங்கி உயிர்நீத்தோர் பலர்” என்றார் ஊர்த்தலைவர்.
மிளையன் “இரும்பை பொன்னாக்கியபின் என்ன செய்வீர் என்று நான் அவரிடம் கேட்டேன். அதை உம்மிடம் கொடுத்து பெரும்பணம் பெற்றுக்கொள்வேன். அதைக்கொண்டு பொன்னை இரும்பாக்குவேன். ஒரு கழஞ்சு இரும்பு பொன்னானால் அதைக்கொண்டு ஒரு வண்டிச்சகடமளவு பொன்னை இரும்பாக்க முடியும் என்றார்” என்றார். பிறிதொரு தருணத்திலென்றால் பொருளற்றவை எனத் தோன்றி சிரிக்கவைத்திருக்கக்கூடிய அச்சொற்கள் அப்போது அனைவரையும் திகைக்க வைத்தன. “எண்ணுக, இப்புவியில் உள்ள பொன்னெல்லாம் இரும்பாகிவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று மிளையன் கேட்டார். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தனர். “அனைத்தும் அனைத்துமாகும் என்றால் எதுவும் இல்லையென்றாகுமென்றால் இங்கே என்னதான் எஞ்சும்?” என்று மிளையன் மீண்டும் கேட்டார். அவர்களை சொல்லடங்கச் செய்துவிட்ட நிறைவு அவரிடமிருந்தது.
அவன் அவரை அப்பால் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அவர் அவனை அருகே அழைத்து “ஆனால் ஒன்று, இந்தச் சிறுவனின் கண்களிலும் அவன் தந்தையிடமிருந்த அதே திகைப்பு இருக்கிறது…” என்றார். அனைவரும் அவனை திரும்பி நோக்கினர். “அவன் ஏன் பேசவே இல்லை தெரியுமா? அவன் தந்தை அவனிடம் பேசவேயில்லை என்பதனால்தான். சில குழந்தைகள் அன்னையிடமிருந்தும் சில குழந்தைகள் தந்தையிடமிருந்தும் மொழியை கற்றுக்கொள்கின்றன” என்றார். அவருடைய பேச்சுக்கு நெறி என ஒன்றில்லை. அறிவும் அறிவின்மையும் ஒன்றே எனத் தோன்றுவது அது என்று ஊரில் கூறப்படுவதுண்டு. “இவனும் எட்டாத எதற்கோ கைநீட்டவிருக்கிறான்… ஐயமே தேவையில்லை.” ஊரில் எவரும் அவனிடம் பேசாமலான பின்னரும்கூட அவர் மட்டும் அவனிடம் விடாமல் பேசிக்கொண்டிருந்தார்.
அங்கிருந்தவர்களில் மிளையன் மட்டுமே வேறுபட்டிருந்தார். பிறர் கூறாத, முன்பிலாத ஒரு சொல் எழும் வாய் எனத் திகழ்ந்தார். ஆகவே அவர்கள் அவரை அஞ்சினர். பெருவம்பர் என்று அவரைப்பற்றி சொல்லிக்கொண்டனர். ஆனால் எந்தப் பேச்சிலும் அவர் புகுந்தால் அதை தன் நாவால் சுழற்றி மேலே கொண்டுசென்றார். அங்கே அனைவரையும் கழற்சிக்காய்களென சுழற்றி விளையாடினார். “அவருடைய தனிமையை அவர் எவ்வண்ணம் எதிர்கொள்கிறார்?” என்று அவன் துறவியிடம் கேட்டான். “தீமைபோல் இயல்பான நற்றுணை வேறில்லை” என்றார் அவர். அச்சொல் அவனை திடுக்கிடச் செய்தது. மிளையனின் ஒவ்வொரு சொல்லிலும் மெலிதாக ஊறி வரும் தீமையை எப்போதும் அவன் உணர்ந்திருந்தான். அது கசப்பென, பகடி என, குத்தல் என வெளிப்பட்டது. அதை தொட்டவர்கள் பிறகெப்போதும் அதை மறக்கவில்லை.
அவன் கவளப்பாறைமேல் அமர்ந்து பகல்தொடங்கி இருளடைவதுவரை தொடுவானை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் எதை பார்க்கிறான் என அவனே உணர்ந்ததில்லை. பலமுறை மிளையன் “அங்கே என்னதான் செய்கிறாய்?” என்றார். அவன் மறுமொழி உரைத்ததே இல்லை. ஒருமுறை மிளையன் குன்றேறி வந்து அவன் கவளப்பாறையின்மேல் அமர்ந்திருப்பதைக் கண்டபின் அவனிடம் “நீ எதை பார்க்கிறாய்?” என்று கேட்டபோதும் அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் சலித்து கீழிறங்கிச் சென்ற பின்னர் துறவி அவனிடம் “அவர் கேட்பதுவரை நான் எண்ணவில்லை. நீ எதை பார்க்கிறாய்?” என்றார்.
அவன் “தொலைவை” என்று சொன்னான். அது மிக இளமையில் அவன் சொன்ன மறுமொழி. நாவில் இயல்பாகவே அது எழுந்தது. அதேபோலவே கைசுட்டி அவன் அவ்வாறு சொன்னான். ஆனால் சொன்னதுமே அது சரியான மறுமொழி என்று தெளிவடைந்தான். அதன் பொருள் அவனுள் தெளிவடைந்துகொண்டே வந்தது. “தொலைவில் எதை?” என்று அவர் மீண்டும் கேட்டார். “தொலைவை…” என்று அவன் சொன்னான். அவர் புன்னகைத்தார்.
அதன்பின் அவன் அகச்சொற்கள் தெளிவடைந்தன. அதுவரை ஒன்றுடனொன்று முட்டிப்பெருகிச் சென்றுகொண்டிருந்த உள்ளோட்டம் சீரடைந்து எண்ணங்கள் என ஆயிற்று. அவ்வெண்ணங்களை அப்பாலிருந்து அவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு எண்ணத்தையும் முன்பிருந்த எண்ணங்களுடன் கோத்துக்கொண்டான். சொற்கள் பெருகிப்பெருகி தன் அகத்தை நிறைத்தபோது அவன் ஒருமுறை சலிப்புடன் துறவியிடம் கேட்டான் “இச்சொற்களை என்ன செய்வது? இப்போது நான் தொலைவை பார்க்கவில்லை, அச்சொற்களைத்தான் உணர்ந்துகொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.” அவர் “அதை அவ்வண்ணமே விட்டுவிடு” என்றார். “நீராவி பனித்து துளிக்கும்… அசைவன அனைத்தும் அமையவே விரும்புகின்றன. காத்திரு!”
அவன் பல நாட்கள் காத்திருந்தான். தன் சொற்களை அளைந்தபடி, விண்சரிவு வரை விரிந்த தொலைவை பார்த்தபடி. தொலைவு, தொலைதலுக்குரியது, தொன்மையானது. அது கனியுமொரு தருணம் அமையும். எவ்வண்ணம் அது துளிவடிவு கொள்ளும்? இவ்விழைவே பொய்யோ? இந்தப் பறதியால் நான் அதை தள்ளி ஒதுக்குகிறேனா? ஆயினும் வேறுவழியில்லை. இங்கே இருந்து அதை காத்திருப்பதை தவிர. ஒருநாள் துறவி மறைந்தார். அவருடைய மண்மேட்டில் சிவக்குறி எழுந்தது. அவருக்கான சித்தர்கொடை நிகழ்ந்தது. அவர் மறக்கப்பட்டார். பிறிதொருவருக்காக அங்குள்ள மரங்களும் பாறைகளும் காத்திருந்தன. அவன் அகவை முதிர்ந்து விழிகள் மேலும் ஒளிகொள்ள உடல் வற்றிச்சுருங்கி உள்ளொடுங்க அங்கே அமர்ந்திருந்தான். ஒருநாள் முற்புலரியில் அவன் தொலைவு சுருங்கி உருக்கொண்ட அச்சொல்லை கேட்டான்.