நீலம் - 1
பகுதி ஒன்று: 1. திருப்பல்லாண்டு
‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத் திறந்து வானை நோக்கியது. இன்நறும் வாசம் எழுப்பி பெருமூச்சுவிட்டுக்கொண்டது.
‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்றது அன்னை நீர்க்காகம் தன் குஞ்சுகளை நெஞ்சுமயிர்ப்பிசிறில் பொத்தியணைத்து, கருங்கூர்வாய் திறந்து. ‘இறையோய்! இங்குளாய்!’ என்றன மரங்களில் விழித்தெழுந்த பிற காகங்கள்.
சோலைக்குள் பல்லாயிரம் பறவைச்சிறகுகள் முதல்துடிப்பைப் பெற்றன. பல்லாயிரம் சிறுமணிவிழிகளில் இமைகள் கீழிறங்கி பிறக்கவிருக்கும் ஒளியை கண்டுகொண்டன. சிறகசைவில் கிளையசைய மலர்ப்பொடிகள் தளிர்களில் உதிர்ந்தன. ‘இங்குளாய்! அங்குளாய்! எங்குளாய் எந்தாய்?’ என்றுரைத்தது மணிக்கழுத்து மரகதப்புறாத் தொகை.
‘கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்! கருநீலத் தழல்மணியே!’ என்றது நாகணவாய்க்கூட்டம். சோலையின் மேல் விரிந்த வானில் மேகங்கள் நாணத்தின் ஒளி கொண்டன. உச்சிமரங்களின் நுனித்தளிர்கள் முதல் அமுதத்துளி உண்டு ததும்பி முறுக்கவிழ்ந்தன. பறவைச்சிறகுகள் தாங்கள் மேகங்களால் ஆனவை என்றறிந்து கொள்ளும் பெருங்கணம்.
‘ஞாலப்பெருவிசையே. ஞானப்பெருவெளியே. யோகப்பெருநிலையே இங்கெழுந்தருளாயே’ என்றது நீலமாமயில்கூட்டம். விழிதிறந்த விரிதோகைகள் என்றோ கண்ட பெருங்கணம் ஒன்றில் அவ்வண்ணமே திகைத்து விழித்துச் சமைந்து தோகைத் தலைமுறைகளில் யுகயுகமென வாழ்ந்து காத்திருந்தன. சொடுக்கிய நீள்கழுத்துக்களில் மின்னிமறைந்த பசுநீல மணிவெளிச்சம் அக்காட்சியை தான் அறிந்திருந்தது.
‘இதுவே நீ! இவையே நீ’ என்றது நீலமணிக்குருவி..குருத்துகளில் இருந்து தண்ணொளி இலைகளுக்குச் சொட்டி பரவித் ததும்பி வழிந்தது. நீலம் பசுமைகொள்ளத்தொடங்கியபோது கண்விழித்தெழுந்துவந்தது பறக்கும் வேய்ங்குழல். ‘கண்ணா வாராயோ! கண்ணா வாராயோ!’ என்றது. சோலையெங்கும் பின் அச்சொல்லே நிறைந்தது
இனியவளே, உன் ஆயர்குடி இல்லத்தின் அழகிய சிற்றில் அறைக்குள் புல்பாய்மீது தலையணையை மார்போடணைத்து அன்னையின் மீது இடக்காலைத் தூக்கிப்போட்டு நீ துயின்றுகொண்டிருக்கிறாய். உன் சிறுசெவ்விதழ்களில் இருந்து வழியும் மதுரத்தை நீ இனி ஒரு துளியும் வீணாக்கலாகாது தோழி. இதோ புதுவசந்தத்தின் மலர்ப்பொடியும் குளிர்த்துளிகளும் புள்ளொலியும் சுமந்து உன் சாளரவாயிலை மெல்லத்திறந்து வந்து உன்னருகே அமர்கிறேன்.
ஓவியம்: ஷண்முகவேல்
மண்ணிலினி ஒரு போதும் நிகழமுடியாத பேரழகி நீ. ஆயர்குலச் செல்வி, அழகால் நீ இப்புவிக்கே பேரரசி. பொன்னுருகி வழிந்த உன் நெற்றி வகிட்டின் நுனியில் அசையும் குறுங்குழல் சுருள்களை நீவுகின்றேன். உன் மூக்கின் மலர்வளைவை முத்தமிடுகிறேன். உன்மேலுதட்டின் பூமயிர் பரப்பில் என் மூச்சு பரவுகிறது. உன் மொட்டு விரியா இதழ்களை சுவைக்கிறேன். கன்னி, உன் அழகிய கழுத்தின் மூன்று பொன் வரிகளையும் என் விரல்களால் வருடி அறிகிறேன்.
அங்கெலாமில்லை என்பதுபோல் தளிர் விரல் விரித்து விழுந்து கிடக்கும் உன் இடக்கையின் கைவெண்மையில் எழுந்த அவன் சங்குக்கு முத்தம். பொன்பதக்கத்தில் ஓடிய பொன்வரிகளுக்கு முத்தம். உன் இடக்கையைத் தூக்கி இவ்வுலகை வாழ்த்து. தேவி, சக்கரம் திகழும் உன் அழகிய வலக்கை இங்குளான் என்று உன் நெஞ்சிலமர்ந்திருக்கிறது. நாளை அவனை சிறுசெல்லக்கோபம் கொண்டு அடிக்கவிருப்பது அது. இவ்வுலகில் காமத்தைப் படைத்தளித்து விளையாடும் கயவனை நீயன்றி வேறுயார்தான் தண்டிப்பது?
முத்தத்தால் மட்டுமே அறியமுடிபவளே. உன் முத்தங்களை எல்லாம் சேர்த்து வை. இளவியர்வையின் மணம் பரவிய உன் முகிழா இளமுலைக்குவைகளை நான் அறிகிறேன். மலர்க்காம்பு நாணம் கொண்டு மலருக்குள் மறைவதுண்டோ தோழி? என் நாவால் தீண்டி அவற்றை விழிப்புறசெய்கிறேன். இதோ, பொற்குவை ஆவுடை மேல் எழுந்தன இரு இளநீல சிவக்குறிகள். தேவி, உன் மென்வயிற்றுக் குழைவில் விழுந்தால் அப்பொன்நதியின் சுழியில் மறைந்து எந்த யுகத்தில் விழித்தெழுவேன்?
உன் நீலச்சுடர் அல்குலுக்குள் மட்டும் நான் உன் மைந்தனாகிறேன். அது கரந்திருக்கும் பெருநதிகளின் ஊற்றுமுகங்கள் இன்னும் தவம் முடிக்கவில்லை. ஒன்றையொன்று தழுவி உறங்கும் உன் இளந்தொடைகள் தங்கள் கனவில் இன்னும் சற்று திளைக்கட்டும். அவை ஓடும் தொலைவுகள் அப்பால் காத்திருக்கின்றன. வெள்ளிச்சரமணிந்த உன் பாதங்கள் வைரமுடிசூடிய பேரரசியரின் முகங்கள். தேவி, அப்பாதங்களை தலையில் சூடுபவன் யாரென்றறிவாயா?.
நானறிவேன், ஆனால் சொல்ல மாட்டேன். உன் சிற்றில் பருவத்தில் மண்பறந்தமைக்காக என்னை வசைபாடினாயல்லவா? உன் ஊஞ்சலை நான் ஆட்டியதையும் மறந்தாயல்லவா? பொய்யில்லை, நான் அறிவேன். நானறியாத ஏதும் இம்மண்ணில் இல்லை. ஏனென்றால் இங்குள்ள அனைத்தையும் தீண்டும் வரம்பெற்றவன் நான்.
புவனமுழுதாளும் பெரும்பொற்புள்ளவளே, நான் தீண்டிய மலர்களே தெய்வங்களுக்கு. நான் தழுவிய பெண்களே மாமன்னர்களுக்கு. இதோ உன்னை அவனுக்காகக் கனியச்செய்கிறேன். ஊதி ஊதி பொன்னை உருக்கி நகையாக்குவதைப்போல. அவனுக்காக மலர்களை விரியவைத்து கனிகளைச் சிவக்கவைத்து நதிகளைச் சிலிர்க்கவைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.
கோபியர்களின் தாயே, என் பெயர் தென்றல். நான் நில்லாதவன். நின்றது உன் அழகைக் கண்டு மட்டுமே. அதனால் இதோ கண்ணுக்குத்தெரியாதவனாகிய நான் பேரழகனானேன்.
இன்னமும் துயிலுதியோ இளநங்காய்? இனியும் வேளை வருமென்று எண்ணினாயா? எத்தனை பிறவிப்படிகளில் ஏறி ஏறி இங்கு வந்துசேர்ந்திருக்கிறாயென்று அறிவாயா?
ஆம், இன்னும் அரைநாழிகைவேளை. அதற்குப்பின் உனக்குத் துயிலே இல்லை. பிரம்மன் படைத்தவற்றில் யுகங்களுக்கு ஒரு கனி மட்டுமே விண்ணை நோக்கி உதிர்கிறது. உன் புளிப்பும் துவர்ப்பும் மறைந்துவிட்டன தோழி. மதுரமாகி நிறைந்துகொண்டிருக்கிறாய்.
என்ன பெயரிட்டனர் உனக்கு? ராதை! இளையவளே, அப்பெயரை உனக்கிட்டமைக்காக உன் அன்னைக்கும் உன் தந்தைக்கும் அவர்களின் ஏழுதலைமுறைக்கும் இதோ விண்ணுலகை அளிக்கிறேன். அப்பெயரிட்டநாளில் அங்கிருந்த அனைவருக்கும் விண்ணுலகை அளிக்கிறேன். அவனுக்கு அப்பெயரன்றி வேறில்லை என்றால் உனக்கு இப்பெயரன்றி வேறேது? ராதை, இக்கணம் நீ உன் துயிலில் தாண்டிய யுகங்கள் எத்தனை என்றறிவாயா?
ஒருபோதும் ஆணுக்கு அவன் நியாயம் செய்ததில்லை தோழி. சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும் அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. உண்ணப்படுவதற்கான உதடுகளையும் பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை. கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை..
விண்சுருங்கி அணுவாகும் பெருவெளியை வெறும்சிறகால் பறந்துசெல்ல ஆணையிட்டான் ஆணிடம். சென்றடைந்தோரெல்லாம் கண்டது கடுவெளியே அதுவாகி எழுந்து நின்ற கழலிணைகளை மட்டுமே. பெண்களுக்கோ பெற்றெடுத்து முலைசேர்த்தால் மட்டுமே போதுமென்று வைத்தான் பாதகன்! அப்பிழையாலே அவன் தானும் ஆணாகப் பிறக்கவேண்டுமென்றானான்.
பெண்மையின் முழுநிறையே, மலரிதழ் ததும்பித்திரண்டு ஒளிரும் பனித்துளி போன்றது கன்னிமை. நீ அழியா பெருங்கன்னி. பெறாத கோடிப் பிள்ளைகளால் இப்புவியை நிறைக்கவிருக்கும் பேரன்னை! நீ வாழ்க! உன் பெயர் இனி யுகயுகங்களுக்கு வாழும். அடி, ஆயர்குலச்சிறுக்கி! பிரம்மகணத்தில் அவன் பெயர் அழிந்த பின்னும் அரைக்கணம் உன் பெயர் வாழும்.
நாதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் இதழ்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. வேதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் முலைக்கண்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. கீதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் நாபிக்கமலத்துக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.
ஆழிமுதல்வன் விரும்பிய பாற்கடலே, உனக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.
ராதை, அமுதமாகி வந்தவளே, இனி உன் பெயர் பிரேமை என்றும் ஆகக் கடவதாக! இக்கணம் எழுந்தமர்க கண்ணே. அதோ அவன் பெயர் சொல்லி ஆர்க்கின்றது குயில்கூட்டம்.