வெண்முகில் நகரம் - 1
பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 1
முகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக! அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக! தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக!
கற்களில் கடினமாக, தசைகளில் மென்மையாக, நீரில் குழைவாக கரந்திருப்பவன். வேர்களில் திசையாக, வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக வாழ்பவன். விழிகளில் அறிவாகவும், நெஞ்சில் நெறியாகவும், சொல்லில் மெய்யாகவும் திகழ்பவன். பசுக்களில் விழியாக, பாம்பில் நாவாக, கன்னியரில் செவ்விதழ்களாக, மரங்களில் தளிர்களாக சிவந்திருப்பவன் மெய்யறிந்த ஜாதவேதன். வானறிந்த பேரமைதியை பாடும் நாக்கு. மண் தொட்டு நின்றாடும் விண். அனைத்துக்கும் சான்றானவனை, எங்குமுள்ளவனை, எப்போதுமிருப்பவனை வணங்குக!
பிரம்மத்திலிருந்து விஷ்ணு தோன்றினார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்தான். பிரம்மன் தன் ஒளிமுகத்தை வெறும்வெளியை ஆடியாக்கி நோக்கிய படிமை ஒரு மைந்தனாகியது. முடிவிலா ஒளியாகிய அங்கிரஸ் என்னும் பிரஜாபதி பிறந்தார். காலம் மறைந்த யோகத்திலமைந்து தன் அசையாத சித்தத்தை அறிந்த அங்கிரஸ் அதை சிரத்தா என்னும் பெண்ணாக்கினார். அவரது கருணையும் அன்பும் புன்னகையும் நெகிழ்வும் சினிவாலி, கஹு, ராகை, அனுமதி என்னும் நான்கு பெண்மக்களாக பிறந்து ஒளிக்கதிர்களென விண்திகழ்ந்தனர்.
தன் அகத்தின் அசைவின்மைக்கு அடியில் வாழ்ந்த முடிவின்மையை அறிந்த அங்கிரஸ் அதை ஸ்மிருதி என்னும் பெண்ணாக்கினார். அவள் வயிற்றில் அவரது அறிவாண்மை உதத்யன் என்னும் மைந்தனாகியது. அவரது கடும் சினம் பிரஹஸ்பதி என்னும் இளமைந்தனாக எழுந்தது. தன்னுள் எஞ்சிய கனிவை யோகசித்தி என்னும் மகளாக்கி தன் மடியிலமர்த்தி நிறைவுற்றார்.
அணையா அனலாக பிரஹஸ்பதி வானில் வாழ்ந்தார். அவர் விழிதொட்டவை கனன்று எழுந்தன. அவர் சித்தம் தொட்டவை வெந்து விபூதியாகின. அவர் சென்ற பாதை விண்ணில் ஒளிரும் முகில்தடமாக எஞ்சியது. அவரது ஒளியால் ஒளிபெற்றன திசைகள். செந்தழல் வடிவினனாகிய தன் பெயர்மைந்தனை குளிர்விக்க விண்ணின் கருமையைக் குழைத்து ஒரு நீர்ப்பெருக்காக்கி அனுப்பினார் பிரம்மன். சாந்த்ரமஸி என்னும் அப்புனலொழுக்கில் பிரஹஸ்பதி தன் அனலைக் கண்டார். அவரது விழிகளும் செவியும் மூக்கும் நாவும் கைகளும் கால்களும் அப்பெருக்கிலிருந்து ஆறு அணையா நெருப்புகளாக பிறந்தன.
ஓவியம்: ஷண்முகவேல்
அவர் நாவில் பிறந்தவன் கம்யு. விண்கரந்த விழுச்சொல்லென வாழும் அவனை வைஸ்வாநரன் என்றனர் தேவர். எரிந்து எரிந்து முடிவிலாக்காலம் அழிந்து பிறந்து அவன் அறிந்த மெய்மை சத்யை எனும் பெண்ணாகி அவள் அவன் முன் எழுந்தாள். அவளை மணந்து அவன் அக்னிதேவனை பெற்றான். சொல் துளித்து எழுந்தவனை வாழ்த்துவோம்! மெய்மையின் முலையுண்டு வளர்ந்தவனை வாழ்த்துவோம்!
தென்கிழக்கு மூலையின் காவலனை வாழ்த்துக! அங்கே உருகும் பொற்குழம்புகளால் ஆன தேஜோவதி என்று பெயர்கொண்ட அவன் பெருநகரை வாழ்த்துக! எழுதலும் விழுதலுமென இருமுகம் கொண்டவனை, ஏழு பொன்னிற நாக்குகள் திளைப்பவனை, நான்கு திசைக்கொம்புகள் முளைத்தவனை, மூன்றுகால்களில் நடப்பவனை வாழ்த்துவோம்! ஸ்வாகையின் கொழுநனை, தட்சிணம் ஆகவனீயம் கார்ஹபத்தியமெனும் மூன்று பொற்குழவிகளின் தந்தையை வாழ்த்துவோம்!
விண் நிறைந்தவனே, எங்கள் நெய்த்துளிக்கென நாவு நீட்டு! அழியாதவனே, எங்கள் சமதைகளில் எழு! அனைத்துமறிந்தவனே, எங்கள் சொற்களுக்கு நடமிடு! அடங்காப்பசி கொண்டவனே, எங்கள் குலங்களை காத்தருள்! எங்குமிருப்பவனே, எங்களுக்கு அழியாச்சான்றாகி நில்! ஓம்! ஓம்! ஓம்!
வெண்முரசு அனைத்து விவாதங்களும்