செந்நா வேங்கை - 23

tigபூரிசிரவஸ் தன்னுடைய பெருந்தோலாடையை அணிந்து அதன் கயிறுகளை முடிச்சிட்டு நிறுத்தி கைகளைத் தூக்கி அதை சரியாக உடல் பொருந்த சுருக்கிக்கொண்டான். அருகில் நின்றிருந்த பிரேமையை நோக்கி திரும்பி அவள் தோள்களில் தன் இரு கைகளையும் வைத்து “நான் மீண்டும் வருவேன். இங்குதான் நான் வந்தணைய வேண்டியிருக்கிறது” என்றான். அவள் சுண்ணக்கூழாங்கற்கள் போன்ற பற்களைக் காட்டி சிரித்து “ஆம், நீங்கள் மீண்டு வருவீர்கள். எனக்கு தெரியும்” என்றாள். அவள் முகம் கண்களைச் சுற்றியும் வாயைச் சுற்றியும் சுருக்கங்கள் கொண்டிருப்பதை அவன் கண்டான். முதல் பார்வையில் தெரிந்த அவளுடைய இளமை ஒவ்வொரு நாளாக சிறிய முதுமைத் தடங்களை காட்டத் தொடங்கியிருந்தது. அவன் அவள் காதுகளைப் பற்றி மெல்ல கசக்கியபடி “நான் எப்போதும் உன்னுடன்தான் இருப்பேன்” என்றான்.

அச்சிலநாட்களில் அவன் அந்தக் கொஞ்சலை கற்றுக்கொண்டிருந்தான். கசக்கினால் அவளுடைய வெயில்படாத வெண்காது சிவந்து செம்பலாச்சுளைகளைப்போல ஆகும். குருதிவெம்மையுடன் கதுப்பாக அது மாறியபின் அதை மெல்ல வாயால் கவ்வுவான். அவள் உடல்கூச துள்ளிப்புரண்டு சிரிப்பாள். அவனை வெறிகொண்டு தழுவிக்கொள்வாள். “நீங்கள் திரும்பி வரும்போது இன்னொரு மைந்தன் இருப்பான்” என்று அவள் சொன்னாள். “அத்தனை உறுதியா உனக்கு?” என்று அவன் கேட்டான். “உறுதிதான், ஐயமே இல்லை” என்று அவள் சொன்னாள். “வருகிறேன்” என்றபின் அவன் அவள் மீதிருந்த கையை எடுத்தான்.

விலகிய அசைவு அவனிலிருந்து எழுந்ததுமே அவள் மெல்லிய முனகலோசையுடன் முன்னால் பாய்ந்து அவனை அள்ளி தன் உடலோடு அணைத்துக்கொண்டு முகத்திலும் தோள்களிலும் முத்தமிடத் தொடங்கினாள். மெல்ல மூச்சுவாங்க ஓய்ந்த பின்னரே அதிலிருந்து விடுபடமுடியும் என்றுணர்ந்து அவன் அதற்கு தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தான். சிறிய இரையைக் கொத்தி தின்றுவிட முயலும் பறவை போலிருந்தாள். பின்னர் மூச்சிரைக்க இயல்படைந்து அவனைப் பிடித்து சற்று முன்னால் தள்ளி “கிளம்புங்கள்” என்றாள். மீண்டும் “கிளம்புகிறேன்” என்று சொல்லி அவன் வெளியே வந்தான்.

அவனுடைய பொதிகளை கட்டிக்கொண்டிருந்த யாமா எழுந்து “தந்தையே, தாங்கள் கீழே செல்லும்வரை தேவையான அனைத்தும் இடப்பக்கத்திலுள்ளன. அங்கு சென்றபின் என் உடன்பிறந்தாருக்கு கொடுக்கவேண்டிய பரிசுப்பொருட்களை வலப்பக்கப் பொதியில் வைத்திருக்கிறேன்” என்றான். “என்ன பரிசுப் பொருட்கள்?” என்று அவன் கேட்டான். “மலைப்பொருட்கள்தான். அவர்கள் விளையாடுவதற்கு” என்றான். “அவர்கள் விளையாட்டுமைந்தர்கள் அல்ல” என்று பூரிசிரவஸ் சொன்னான். “என்னைவிட இளையவர்கள்தானே? நான் விளையாடுகிறேனே?” என்றான். “நீ வாழ்நாள் முழுக்க இங்கிருந்து விளையாடுவாய். கீழ்நிலத்தில் மைந்தர்கள் நெடுநாள் விளையாட இயலாது” என்றான் பூரிசிரவஸ். “இவை இங்கு மலையில் நான் நெடுங்காலமாக கண்டடைந்து சேர்த்த விளையாட்டுப்பொருட்கள். அழகானவை. கூழாங்கற்கள், விந்தையான வண்ணமுடையவை. மலைகளின் இடுக்குகளிலிருந்து ஆற்றுநீரில் இவை வருகின்றன. அவர்களுக்கு அளியுங்கள். அவர்கள் அதை விரும்புவார்கள்” என்றான் யாமா. “வருகிறேன் மைந்தா, மீண்டும் இங்கு வருவேன்” என்றான் பூரிசிரவஸ்.

அவன் “தங்களுடன் போருக்கு வந்து என் வீரத்தை காட்டியிருந்தால் நிறைவுற்றிருப்பேன், தந்தையே” என்றான். “நீ இங்கு இவ்வாறு இருக்கிறாய் என்பதுபோல எனக்கு நிறைவளிப்பது பிறிதொன்றில்லை. எப்பொழுதெல்லாம் நான் உளம் சோர்வடைகிறேனோ, இவ்வாழ்வு பயனற்றது என்ற ஐயம் எழுகிறதோ, அப்பொழுதெல்லாம் திரும்பி இப்பனிமலைகளை பார்ப்பேன். இங்கு நீயிருக்கிறாய் என்று எண்ணிக்கொள்வேன்” என்றபின் கைவிரித்தான். மைந்தன் கைவிரித்து அவனை அள்ளி தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு மும்முறை சுழற்றினான். பின்னர் குனிந்து அவன் கன்னங்களிலும் நெற்றியிலும் முத்தமிட்டான். அவன் வாயிலிருந்து மெல்லிய ஊன் மணமடித்தது. இனிய விலங்கு ஒன்றின் மயிர்நாற்றம் அவன் கழுத்திலும் தோள்களிலும் இருந்தது.

பூரிசிரவஸின் தோள்களை தட்டியபடி “ஊருக்குச் சென்றபின்னர் நன்கு உண்ணத் தொடங்குங்கள், தந்தையே. தாங்கள் மிக மெலிந்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம், உண்ணவேண்டியதுதான். உன்னை நினைத்தால் உண்ணாமலிருக்க இயலாது. இங்கிருந்த நாட்களில் மிகுதியாகவே உண்டுவிட்டேன். புரவி மூச்சுவாங்கப்போகிறது” என்றபின் அவன் கைகளை பற்றிக்கொண்டு “கிளம்புகிறேன்” என்றான் பூரிசிரவஸ். யாமா தன் பெரிய மேலாடையை எடுத்து அணிந்து கட்டுகளை இறுக்கிக்கொண்டான். பொதியை எடுத்துக்கொண்டு “நான் இவற்றை புரவியில் கட்டி அந்த குலத்தூண் அருகில் நிற்கிறேன். நீங்கள் உங்கள் மூதாதையிடம் வாழ்த்துபெற்று வருக!” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்துவிட்டு குடில்களினூடாக தன் நீண்ட நிழல் வெள்ளை பூசப்பட்ட சுவர்களில் மடிந்தும் தரையில் நெளிந்தும் தொடர மெல்ல நடந்தான்.

இல்லங்களின் முகப்பில் முதியவரும் பெண்டிரும் வந்து நின்று அவனைப் பார்த்து சுருக்கங்கள் விழுந்த முகங்களில் புன்னகை விரிய, கண்கள் இடுங்க சிரித்தனர். ஒவ்வொருவரிடமாக கைவீசி முகமனுரைத்து விடைபெற்றபடி அவன் நடந்து சென்றான். பால்ஹிகரின் சிறுமைந்தர்கள் குச்சிகளால் ஒருவரை ஒருவர் அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். மூத்தவன் அவனை நோக்கி ஓடிவந்து “முதுதந்தை நேற்று எங்கள் இல்லத்திற்கு வந்துவிட்டார்” என்றான். அவனுக்கு ஐந்து அகவைதான் என்பதை இரு நாட்களுக்கு முன்னரே பூரிசிரவஸ் அறிந்திருந்தான். “ஏன்?” என்றான் பூரிசிரவஸ்.

அவன் உவகையுடன் குதித்தபடி கைகளை வீசி, மெல்ல திக்கியும் மூச்சுத்திணறியும் சொன்னான் “அவர் தங்கியிருந்த மைந்தரும் அவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அவர் மைந்தரைத் தூக்கி இல்லத்திலிருந்து வெளியே எறிந்து கதவை மூடினார். அவர் இரவெல்லாம் குளிரில் நின்றுவிட்டு காலையில் காய்ச்சல் வந்து படுத்திருக்கிறார். அவர் மனைவி முதுதந்தைக்கு உணவு அளிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஆகவே அவர் பொதியை தூக்கிக்கொண்டு எங்கள் இல்லத்திற்கு வந்தார். குத்துக்கத்தியைக் காட்டி என் தந்தையிடம் வீட்டில் இடமளிக்காவிட்டால் குத்தி கொன்றுவிடுவேன் என்றார். என் தந்தை அஞ்சி பின் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டார். அவர் உள்ளே வந்து இருந்து என் அன்னையிடம் ஊனுணவு சமைக்கும்படி சொன்னார். அன்னை சமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் அனைவரையும் வசை பாடியபடி அமர்ந்திருக்கிறார்.”

பூரிசிரவஸ் புன்னகைத்தபடி “அவரது துணைவி என்ன செய்கிறார்?” என்றான். “அவர் அஞ்சுவது மூதன்னையை மட்டும்தான். இருவரும் போர் புரிந்தால் முதுதந்தை திருப்பி அடிப்பதில்லை. மூதன்னை அடிக்கிற அடிகளை வாங்கிக்கொண்டு திரும்பிவிடுவார். ஆகவே அந்தக் குடிலுக்குள் அவர் செல்வதில்லை” என்றான். “வாருங்கள்! உங்களை முதுதந்தையிடம் நான் கூட்டிச் செல்கிறேன். நீங்கள் கொடுத்த குத்துக்கத்தியை வைத்து மெருகிட்டுக்கொண்டே இருக்கிறார். அதன் கொம்புப்பிடியில் எருமைகளும் மான்களும் இருக்கின்றன. என்னிடம் மானைக்காட்டி அது மான் என்று சொன்னார். நான் மான்களை பார்த்திருக்கிறேன் என்றேன். அல்ல, அவை வேறு வகையான மான்கள் என்றார்” என்றபடி சிறுவன் அவனுடன் நடந்தான்.

பூரிசிரவஸ் குடிலின் முன்னால் சென்று நின்றபடி உரத்த குரலில் “வணங்குகிறேன், பிதாமகரே” என்றான். உள்ளிருந்து “யார்?” என்று பால்ஹிகர் கேட்டார். “நான் பூரிசிரவஸ்” என்றான். “உள்ளே வா” என்றார் பால்ஹிகர். அவன் தலைகுனிந்து உள்ளே நுழைந்தான். அங்கே தரையில் அமர்ந்து குத்துக்கத்தியின் பிடியை ஒரு தோலால் தேய்த்து மெருகிட்டுக் கொண்டிருந்த பால்ஹிகர் தலைநிமிர்ந்து அவனை பார்த்தார். “கிளம்பிவிட்டாயா?” என்றார். “ஆம் மூதாதையே, தங்கள் வாழ்த்துபெற்று கிளம்புகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “எழுந்து நில்லுங்கள். நான் என் வாளை எடுத்து தங்கள் காலடியில் வைப்பேன். அதை எடுத்து என்னிடம் அளித்து வெற்றி பெறுக புகழ் சேர்க என்று வாழ்த்துக!” என்றான்.

அவர் ஐயத்துடன் “நான் அவ்வாறு சொன்னால் அவை உனக்கு கிடைக்குமென்று உறுதியா?” என்று கேட்டார். “ஆம், இப்புவியில் அல்லது வேறெங்காவது” என்றான் பூரிசிரவஸ். அவர் குழப்பத்துடன் தலையசைத்து, எண்ணி நோக்கி தெளிவடையாமல் கைவீசி அவ்வெண்ணங்களை கலைத்து, கையை முழங்காலில் ஊன்றி எழுந்து நின்றார். பூரிசிரவஸ் தன்னுடைய உடைவாளை எடுத்து அவர் காலடியில் வைத்தான். அவர் குனிந்து அந்த உடைவாளை எடுத்து “என்ன இது, இவ்வளவு மெலிதாக இருக்கிறது? ஒடித்துவிடலாம் போல!” என்று வளைத்தார். “பாம்புபோல வளைகிறது” என்றார். “ஆம், இதற்கு நாகம் என்றுதான் பெயர். இது வெட்டுவதற்கல்ல, நுனியால் மெல்ல முத்தமிடுவதற்குரியது” என்றான் பூரிசிரவஸ். அவர் அதை அவனிடம் கொடுத்தார். பின்னர் “என்ன சொல்லச் சொன்னாய்?” என்றார். “வெற்றியும் புகழும் அணைக என்று வாழ்த்தச் சொன்னேன்.”

அவன் அவர் காலடியில் மீண்டும் பணிய அவர் “ஆம், அவையிரண்டும் உனக்கு அமையட்டும்” என்று அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினார். பூரிசிரவஸ் “வருகிறேன், பிதாமகரே” என்றபின் திரும்பினான். பால்ஹிகர் அவனை நோக்கி “நானும் உன்னுடன் வருகிறேன்” என்றபடி தன் மேலாடையை எடுத்தார். “பிதாமகரே, நான் மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு செல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நானும் உன்னுடன் பால்ஹிகபுரிக்கு வருகிறேன். அங்கிருந்து நானும் உன்னுடன் போருக்கு வருகிறேன்” என்றார் பால்ஹிகர். “நான் பெரிய மற்போர்களை பார்த்ததே இல்லை. ஆயிரம்பேர் மற்போரிட்டால் ஆயிரம் மண்டைகள் உடையும் அல்லவா?”

பூரிசிரவஸ் தவிப்புடன் “அங்கு என்ன போர் நிகழ்கிறது என்றே உங்களுக்கு தெரியவில்லை. தாங்கள் அங்கு வந்து ஆகவேண்டிய எதுவுமில்லை” என்றான். பால்ஹிகர் “தெரியும். சந்தனுவுக்கும் அவன் இளையோனுக்குமான போர்” என்றார். “இல்லை” என அவன் சொல்லப்போக “ஆ, இல்லை, போர் நிகழ்வது சந்தனுவின் மைந்தர்கள் நடுவே. நான் இருவரில் ஒருவரை ஆதரிக்கிறேன். அவனுக்காக போர்புரிகிறேன்” என்றார். “பிதாமகரே, இது தங்கள் போர் அல்ல. மேலும் கீழிருக்கும் உலகு முற்றாக மாறிவிட்டது. அதற்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. தங்களால் அங்கு இருக்க முடியாது” என்றான் பூரிசிரவஸ். “இங்கும் மாறித்தான் விட்டது. மூத்தவர்களை இளையோர் மதிப்பதில்லை. நான் உன்னுடன் வருவேன்” என்றார் பால்ஹிகர்.

பூரிசிரவஸ் “அங்குள்ள வெப்பமே உங்களுக்கு தாங்கவொண்ணாதது” என்றான். அவர் “நான் அங்கு இருப்பதற்காக வரவில்லை, போர்புரிவதற்காக வருகிறேன். போரில் நான் இறந்தால் அது நன்று” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “நேற்று இரவு பொருத்தமில்லாமல் பல எண்ணங்கள். பல ஆயிரம் பேர் இறப்பார்கள் என்று நீ சொன்னாய். ஒரு போரில் பல ஆயிரம் பேர் இறந்துவிழும் இந்த உலகில் ஒருவன் நெடுநாள் இருந்தென்ன இறந்தென்ன? வாழ்கிறோம் என்று நினைப்பதும் வாழ்வதும் பொருளற்றவையல்லவா? அதை எண்ணிய கணமே எனக்கு அனைத்துமே சலித்துவிட்டன. நான் மேலும் வாழ விரும்பவில்லை. பல்லாயிரம் பேர் இறக்கையில் நானும் இறந்துவிடுவேன். இங்கே மலைகளில் இறப்பதைவிட அங்கே இறப்பது பொருத்தமானது என்று தோன்றுகிறது.”

அவர் முற்றாக பிறிதொருவராக தோன்றினார். அவருடைய சொற்கள்தானா என பூரிசிரவஸ் ஐயுற்றான். “இங்கே நான் தனிமையில் இறக்கவேண்டும். தனிமையில் விலங்குகள்தான் இறக்கவேண்டும். ஏனென்றால் இறக்கும் விலங்குடன் அதன் தெய்வம் இருக்கும். மலைகளில் தனியாக இறப்பவன் அங்கேயே அமைதியிலாது அலைவான். அங்கென்றால் பெருங்கூட்டத்தில் ஒருவனாக இறந்து கிடக்கலாம். ஆகவே உன்னுடன் வருவதாக முடிவு செய்தேன்” என்றார். “எப்போது முடிவெடுத்தீர்கள்?” என்று அவன் கேட்டான். “சற்று முன்பு, நீ விடைபெற்று திரும்பினாயே அப்போது” என்றபின் அவர் தன் மேலாடையின் முடிச்சுகளை இழுத்துக் கட்டி தலையில் பெரிய மென்மயிர் தொப்பியைச் சுற்றி கழுத்தருகே முடிச்சிட்டு கட்டிக்கொண்டார். சுறுசுறுப்புடன் “கிளம்புவோம்” என்றார்.

“தங்கள் மைந்தர்கள், மைந்தரின் துணைவியர் இங்கிருக்கிறார்கள். தங்கள் மனைவி இருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அவர்கள் இங்கே மகிழ்ச்சியாக இருப்பார்கள். எப்போதும் நான் உணரும் ஒன்றுண்டு, நான் முற்றிலும் இந்த மலைகளுக்குரியவன் அல்ல. கீழே பால்ஹிகபுரியின் ஒரு சிறுபகுதி என்னிடம் எஞ்சியுள்ளது. இந்த மைந்தர்கள், இவர்கள் வாழும் இந்த இல்லங்கள், இவர்கள் செல்லும் வழிகள் அடங்கிய இந்த மலை அனைத்தும் எனக்கு வேறுதான். இந்த மலைகளின் வட்டத்தைக் கடந்து அப்பால் என்ன இருக்கிறது என்று ஒருபோதும் இவர்கள் பார்த்ததில்லை. சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக நான் மட்டும் ஒவ்வொரு நாளும் இங்கு இருக்கும் அனைத்து எல்லைகளையும் மீறவே முயன்றுகொண்டிருக்கிறேன். புதிய மலைகளுக்கு ஏறிச் செல்கிறேன், புதிய விலங்குகளைக் கொன்று உண்டு பார்க்கிறேன்.”

அவனை விழிசுருக்கி நோக்கியபடி “அவ்வாறெனில் இவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று என்னிடம் இருக்கிறது. அது எப்போதும் எல்லையைக் கடக்க விழைவது. அது நன்றோ தீதோ அது என்னை இவர்களில் ஒருவராக அல்லாமல் ஆக்குகிறது. இவர்கள் என்னை வெறுக்கிறார்கள். இவர்கள் எவரேனும் என்னை கொல்லக்கூடும்” என்றார். “உங்களை எவராலும் கொல்ல இயலாது” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், இன்று கொல்ல இயலாது. ஆனால் மைந்தர் கொல்வார்கள். இன்னும் பல ஆண்டுகாலம் கழித்து அவர்கள் என்னை கொல்லக்கூடும். கொன்றால் அவர்கள் எனக்கு நடுகல் நாட்டி படையலிடுவார்கள். அதைவிட உன்னுடன் வந்தால் போரில் இறக்கலாம். போரில் இறந்தாலும் இவர்கள் இங்கே எனக்கு ஒரு சிறு ஆலயம் கட்டி படையலிடுவார்கள். இரண்டும் ஒன்றே. எவ்வேறுபாடும் இல்லை. ஆனால் எனக்கென்னவோ உன்னுடன் வருவதே உகந்ததென்று தோன்றுகிறது. தோன்றியபிறகு மறுபடியும் எண்ணும் வழக்கம் எனக்கில்லை. கிளம்புவோம்” என்றார்.

“நீங்கள் அவர்களிடம் விடைபெற வேண்டாமா?” என்றான் பூரிசிரவஸ். “வேண்டியதில்லை” என்றார் அவர். “நான் முன்னரே அறிவித்துவிட்டு இங்கு வரவில்லை அல்லவா?” பூரிசிரவஸ் “இங்கு உங்கள் பெயர்மைந்தர் நிரம்பியிருக்கிறார்கள். அவர்கள் எவரையும் நீங்கள் மறக்க இயலாது” என்றான். “இல்லை, உன்னுடன் வந்தால் புரவி ஏழடி எடுத்து வைப்பதற்குள் இந்த நகரை, இந்த ஊரை, இந்த மலைகளை முற்றாக மறந்துவிடுவேன். இவர்கள் என்னை மறக்கமாட்டார்கள், அது இவர்களுடைய இயல்பு. ஆனால் நான் இறந்த செய்தி வந்தால் நடுகல் நாட்டி மதுவுடன் ஊன் அளித்து வணங்கி உண்டு அன்றே மறந்துவிடுவார்கள். பிறகெப்போதும் எண்ணமாட்டார்கள்” என்றபின் “ஏன் இத்தனை பேச்சு? வா” என்றபடி அவர் முற்றத்தில் இறங்கினார்.

அவருடைய மருமகள் உள்ளிருந்து வந்து வாயிலில் நின்றாள். பூரிசிரவஸ் திரும்பி “மூதாதை என்னுடன் வருவதாக சொல்கிறார்” என்றான். அவள் எந்த உணர்ச்சி மெய்ப்பாடும் இன்றி தலையசைத்தாள். “ஒருவேளை மீண்டு வரமாட்டார். போரில் பங்குகொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அதற்கும் அவள் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள். பால்ஹிகர் முற்றத்தில் இறங்கி நின்று இரு கைகளையும் விரித்து “குழந்தைகள் எல்லாரும் கேளுங்கள்! நான் கிளம்பி செல்கிறேன். முன்பு நான் இங்கு வந்தது போலவே. என் குடிலுக்குச் சென்று முதியவளிடம் நான் கிளம்பிச் சென்றுவிட்டேன் என்று சொல்லுங்கள். உங்கள் தந்தையர் வந்தால் அவர்களிடம் சொல்லுங்கள்!” என்றபின் “வருக!” என்று பூரிசிரவஸிடம் சொன்னார்.

சிறுவர்கள் அவர்களைச் சூழ்ந்து நின்று வியந்து நோக்கினர். பின்னர் ஒரே குரலில் கைதூக்கி கூச்சலிட்டனர். ஒரு சிறுவன் ஓடிவந்து அவர் காலைப்பற்றி “நீங்கள் போருக்குச் சென்றபின் பெரிய எருதை கொண்டுவருவீர்களா?” என்றான். “நான் வரமாட்டேன். அங்கேயே அமர்ந்து அந்த எருதை தின்பேன்” என்றபின் பூரிசிரவஸிடம் “வழக்கமாக இவர்களுக்கு நான் எருதின் கொம்புகளை கொண்டுவந்து கொடுப்பேன். இவர்கள் எல்லாரிடமும் எருதின் கொம்பினால் நான் செய்த பாவைகள் உள்ளன” என்றார். இன்னொருவன் “முதுதந்தையே, நீங்கள் மலையிறங்கிச் செல்லும்போது அங்கே பறக்கும் புரவிகள் உண்டா?” என்றான். “ஆம், அங்கே பறக்கும் புரவிகள், மிதக்கும் மலைகள், அனல் வீசும் பறவைகள் எல்லாம் உண்டு. அங்கே நீரில் மிதக்கும் மிகப் பெரிய பல்லிகள் உண்டு, அவற்றின்மேல் ஏறி நாம் ஆற்றை கடக்க முடியும்” என்றார்.

இன்னொருவன் “நீங்கள் திரும்பி வந்து அந்தக் கதைகளை என்னிடம் சொல்லுங்கள்” என்றான். இன்னொரு சிறுவன் “நான் வளர்ந்தபின் கீழே சென்று பல்லிமேல் ஏறி நீந்துவேன்” என்று சொன்னான். “வருகிறேன், வந்து கதை சொல்கிறேன்” என்றபின் “இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால் பொழுதாகிவிடும், வா” என்றபடி பால்ஹிகர் முன்னால் நடந்தார். பூரிசிரவஸ் திரும்பி அக்குழந்தைகளைப் பார்த்து கையசைத்து சிலர் கன்னங்களையும் சிலர் தலைகளையும் தொட்டு இன்சொல் உரைத்தபடி, அவருக்குப் பின்னால் நடந்தான். அவர்கள் தங்கள் எல்லைவரை வந்து அங்கே கூடி நின்று நோக்கினர்.

பால்ஹிகர் அங்கு கட்டப்பட்டிருந்த புரவிகளில் பெரிய புரவி ஒன்றை அவிழ்த்தார். அதன் முதுகில் சேணத்தை எடுத்து கட்டினார். உள்ளே அவருடைய வேட்டைப்பொதி இருந்தது. அதை அவிழ்த்து உலருணவும் நீரும் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். அதை புரவியில் வைத்து கட்டி “நாம் சில நாட்களில் கீழிறங்கிவிடமுடியும் அல்லவா? என்னிடம் ஏழு நாட்களுக்கான உணவும் நீரும் இருக்கின்றன” என்றார். “முடியும், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் காலை சேணத்தில் ஊன்றி ஏறி அமர்ந்தபின் “உன் புரவி எங்கே?” என்றார். “அதோ அங்கு குலத்தூண் அருகே நின்றிருக்கிறது. மைந்தன் அருகே நின்றிருக்கிறான்” என்றான். “அவனைத் தூக்கி நிலத்தில் அடிக்காமல் செல்கிறேன். நான் சென்றபின் இப்பகுதிக்கு அவனே தலைவனாக இருப்பான்” என்றபடி பால்ஹிகர் புரவிமேல் அமர்ந்து வந்தார்.

பூரிசிரவஸ் இணையாக நடந்து “அவன் அதற்கு தகுதியானவன் அல்லவா?” என்றான். “ஆம், அவன் தூய பால்ஹிகன்” என்றார் பால்ஹிகர். குலத்தூண் அருகே அவர்கள் சென்றதும் யாமா அவன் புரவியுடன் அருகே வந்து “ஏறிக்கொள்ளுங்கள், தந்தையே” என்றான். “அனைத்தும் முறைப்படி கட்டப்பட்டுள்ளன.” பூரிசிரவஸ் “என்னை வணங்கி வாழ்த்துபெறு, மைந்தா” என்றான். “ஆம்” என்று அவன் குனிந்து பூரிசிரவஸின் கால்களைத் தொட்டு தலையில் வைத்தான். அவன் தலைமேல் கைவைத்து “குன்றாத மகிழ்வுடன், இளமையுடன் என்றும் இங்கிரு, மைந்தா” என்று வாழ்த்தினான். பிறிதெப்போதும் எவரையும் அதுபோல நெஞ்சு நிறைந்து அவன் வாழ்த்தியதில்லை என்று உணர்ந்தான்.

பால்ஹிகர் புரவியிலிருந்து இறங்கி கீழே நின்று “மைந்தா, என் காலையும் தொட்டு வணங்கு. உன்னை நான் தூக்கி அறையாமல் செல்கிறேன். எனக்குப் பின் இந்த ஊர் உனக்கு கட்டுப்படும்” என்றார். “ஆம், முதுதந்தையே” என்றபின் மைந்தன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவன் தலையில் கை வைத்து “அவன் சொன்னதையே நானும் சொல்கிறேன்” என்றார். பின்னர் “ஆனால் ஒரு ஆணை. நீ என் மைந்தர்களை கொல்லக்கூடாது” என்றார். “இல்லை, எந்நிலையிலும் கொல்லமாட்டேன்” என்று யாமா சொன்னான். பால்ஹிகரின் புரவி முன்னால் செல்ல அவன் புரவி தொடர்ந்தது. வளைவு திரும்பி ஆழத்தில் இறங்கிய பின் அவன் திரும்பிப் பார்த்தபோது மேலே மலைவிளிம்பில் சுண்ணப்பாறையாலான சிற்பமென தன் மைந்தன் நிற்பதை பார்த்தான்.

மலையிறங்கும்போது பால்ஹிகர் அமைதியாக இருந்தார். சுழன்று சுழன்று இறங்கிக்கொண்டிருக்கையில் பூரிசிரவஸ் மலைகள் தன்னை சுற்றிச் சுற்றி வருவதாக உணர்ந்தான். உச்சிவெயில் வெக்கையை நிரப்ப வியர்வை வழிந்தது. அவன் தன் தோல்மேலாடையை அவிழ்த்து திறந்தான். சில கணங்களிலேயே வியர்வை குளிர்ந்து நெஞ்சு குளிரத் தொடங்கியது. மீண்டும் மூடி நாடாக்களை கட்டிக்கொண்டான். முதல் சுனை அருகே புரவிகளை நிறுத்தினர். பால்ஹிகர் இறங்கி புரவியை நீர் அருந்தவிட்டார். பூரிசிரவஸின் புரவி கனைத்தது. அவன் இறங்கியதும் சென்று குனிந்து நீர் குடிக்கத் தொடங்கியது. பால்ஹிகர் “ஆ!” என்றார். பூரிசிரவஸ் “என்ன?” என்றான். “உனக்கு மைந்தர்கள் உள்ளனர் அல்லவா?” பூரிசிரவஸ் “ஆம்” என்றான். “அவர்களுக்காக நான் சில கொம்புப்பாவைகளை எடுத்து வந்திருக்கலாம். நாம் திரும்பிச்சென்று மீண்டால் என்ன? அருகேதானே?”

பூரிசிரவஸ் “இல்லை பிதாமகரே, ஏற நெடுநேரமாகும். இன்றிரவுக்குள் நாம் முதற்சாவடிக்கு சென்றாகவேண்டும்” என்றான். “ஆனால் மைந்தருக்கு நான் பரிசுகளை அளிக்கவேண்டுமே?” என்றார். “மைந்தன் பரிசுகள் கொடுத்தனுப்பியிருக்கிறான். அவற்றையே கொடுப்போம்” என்றான் பூரிசிரவஸ். “அவனா? அவனுக்கென்ன தெரியும் அறிவிலி. நீ அந்த பரிசுகளை காட்டு” என்றார் பால்ஹிகர். “அவை உள்ளே பொதிக்குள் உள்ளன” என்றான். “எடுத்துக் காட்டு” என்றார். அவரே சென்று அவன் பொதியை அவிழ்த்து நீட்டலானார். “இருங்கள், அனைத்தையும் அவிழ்க்கவேண்டாம்… பொறுங்கள்” என அவன் பொதியை அவிழ்த்தான். அதன் உள்ளே ஒரு தோல்பொதி. அதை எடுத்து விரித்தான். இளவெயிலில் ஒரு கணம் அவன் கண்கள் கூசின. குனிந்து நோக்கிய பின் நடுங்கும் கைகளை கொண்டுசென்று அவற்றை தொடப்போனவன் தயங்கினான். அவை அருமணிக் கற்கள். செவ்வைரங்கள், நீலவைரங்கள். பச்சைநிறமான மரகதக்கற்கள் சில.

பால்ஹிகர் குனிந்து நோக்கி “கற்கள்… அந்த மூடன் இவற்றையே அளிப்பான் என எனக்கு தெரியும். என்னிடம் மிக அரிய கொம்புகள் இருந்தன” என்றார். பூரிசிரவஸ் புன்னகையுடன் “இவற்றில் சிலவற்றை நீங்கள் அளித்தவை என மைந்தருக்கு கொடுக்கலாம்” என்றான். “இவற்றையா? கற்களையா?” என்றபின் பால்ஹிகர் புரவியில் ஏறிக்கொண்டார். “அவர்களுக்கு நான் மலையின் கதைகளை சொல்கிறேன்… அவர்கள் விரும்புவார்கள்.” பூரிசிரவஸ் அந்த மணிகளை மீண்டும் நோக்கினான். நெல்லிக்காய் அளவுள்ள வைடூரியங்கள். சற்று அசைத்தாலே உருண்ட நிறமற்ற அரிய வைரங்கள். பேரரசுகளின் கருவூலங்களிலேயே அவற்றுக்கு நிகரான செல்வம் இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டான்.