செந்நா வேங்கை - 22

tigபுலரியில் பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது சாளரம் திறந்து உள்ளே ஒளி சரிந்து விழுந்திருந்தது. கண்கள் கூச மீண்டும் மூடிக்கொண்டு போர்வைக்குள்ளிருந்த வெப்பத்தை உடலால் அளைந்தபடி கவிழ்ந்து படுத்தான். போர்வைக்குள் இருந்த வெம்மை உணர உணர கூடி வருவதாகவும் புழுங்கத் தொடங்குவதாகவும்கூட தோன்றியது. துயின்றுகொண்டிருந்தபோது இமைகளுக்குமேல் விழுந்த ஒளி உள்ளே செந்நிறத்தை நிரப்பியிருந்தமையால்தான் விழிப்பதற்கு முன்பு புலரியிலும் அந்தியில் செவ்வொளி பரவிய கங்கையின் கரையில் நின்றிருப்பதாக கனவு கண்டோம் என்று எண்ணிக்கொண்டான். பின்னர் அது மலைமுகடுதானா என்ற ஐயம் எழுந்தது. திடுக்கிட்டவன்போல கையூன்றி புரண்டு அவ்வொளியை பார்த்தான்.

அறையை பார்த்த பின்தான் முந்தைய நாள் தான் துயின்ற அதே இடம் என்பதை உறுதி செய்துகொண்டான். போர்வையை காலால் விலக்கி எழுந்து நின்றான். கைகளை உதறி உடலை விரித்துக்கொண்டபோது புதிதாக பிறந்தெழுந்ததுபோல் தோன்றியது. கைகளை சிறுவன்போல் விரித்து அவ்வொளியில்காட்டி அளைந்தான். மெல்லிய தூசுத்துகள்கள் அதற்குள் பறந்துகொண்டிருந்தன. போர்வையை விலக்கியபோது அதிலிருந்து எழுந்த பொடி. பெரும்பாலும் மெல்லிய மயிர்த்துகள்கள் அவை. அவன் சாளரத்தினூடாக வெளியே பார்த்தான். வெளியே ஒளிரும் நீர்போல வெயில் நிரம்பி நிற்கக் கண்டான்.

அவன் எழுந்த ஓசை கேட்டு உள்ளே வந்த பிரேமை “நன்கு புலர்ந்துவிட்டது. மைந்தன் காட்டுக்குச் சென்றிருக்கிறான்” என்றாள். “இவ்வளவு வெயில் இங்கு வருமா?” என்றான். “காலையில் எப்போதும் நல்ல வெயில் இருக்கும். உச்சிப்பொழுதுக்குப் பின்னர்தான் இருளத் தொடங்கும்” என்றபின் “முகம் கழுவி வந்தால் உங்களுக்கு இன்நீர் அளிக்கிறேன்” என்றாள். “ஆம்” என்றபடி அவன் தன்னுடைய மேலாடையையும் கழற்றிவிட்டு மெல்லிய உள்ளாடையுடன் இல்லத்தின் பின்பக்கம் சென்றான். மரக்குடைவுத் தொட்டியில் நிரம்பியிருந்த நீரில் கையால் அள்ளி முகத்தை கழுவினான். நீர் பனியென குளிர்கொண்டிருந்தது. தொட்டிக்குள் பனிக்கட்டி கரைந்து முனைகள் கல்லுடைசல்போல கூர்கொண்டிருந்தன.

தண்ணீர் பட்டதுமே உடல் குளிரத்தொடங்கியது. சற்று நேரத்திலேயே உடலில் நடுக்கம் வருவதை உணர்ந்தான். அவ்வளவு வெயிலிருந்தும்கூட காற்றிலிருந்த குளிரை குறைக்க இயலவில்லை. முகம் கழுவிவிட்டு வந்து பிரேமை அளித்த கொதிக்கும் இன்நீரை துளித்துளியாக அருந்தினான். அவள் “மேலாடையை அணிந்துகொள்ளுங்கள். இங்கு நெஞ்சு மறைக்காமல் இருக்கலாகாது. நெஞ்சுக்குள் இருக்கும் அனல் நம்மை நெடுநேரம் வெம்மையுடன் வைக்கும். ஆனால் எண்ணியிராது அணைந்துவிடும். அதன்பின் வாழ்நாளெல்லாம் மூச்சுத் திணறல் வரும்” என்றாள். “ஆம்” என்றான். அவன் மலைவணிகர்கள் மூச்சுத்திணறல் நோய் வந்து துன்புறுவதை கண்டிருக்கிறான். தரைக்கு வந்த மீன்போல வாய்திறந்து மூச்சுக்கு தவிப்பார்கள். மூச்சுவிடும்போது குழலோசை கேட்கும். அவர்களின் விழிகளிலேயே மூச்சுக்கு தவிப்பதன் ஒளி இருக்கும்.

அவள் எடுத்துக்கொடுத்த தோலாடையை அணிந்து அதன் முன்புற கயிறுகளை முடிச்சிட்டுக் கொண்டிருந்தபோது வெளிமுற்றத்தில் உரத்த குரலில் “என்னைத் தேடி வந்தவன் யார்?” என்று குரல் ஒலித்தது. அவன் திடுக்கிட்டு பின் உவகைகொண்டு கதவைத் திறந்து வெளியே சென்றான். இரு பெரும்கைகளையும் விரித்து முற்றத்தில் நின்றிருந்தவர் பால்ஹிகர் என்று அவன் உள்ளம் உணர்ந்தது, விழிகள் திகைத்தன. அவர் தன் முதுமையை இழந்து அகவை மீண்டு சென்றிருந்தார். கழுத்தில் தொங்கிய தசைப் பை மறைந்திருந்தது. உடலெங்கும் தளர்ந்து சுருங்கியிருந்த தசைகள் பருத்து இறுகிச் செறிந்திருந்தன. இமைகளில் மயிர் தோன்றியிருந்தது. நரையிலாத கருமயிர். அவர் “நீயா என்னைத் தேடி வந்தாய்?” என்றபோது அவருடைய பற்கள் தெரிந்தன. மஞ்சள் நிறமான மாட்டுப்பற்கள். அவருக்கு பற்கள் இருக்கவில்லை என்பதை அவன் நினைவுகூர்ந்தான்.

“நான் பால்ஹிகன். நீ என் எதிரி என்றால் வெளியே வா” என்றார் பால்ஹிகர். அவருடைய இமைகள் மட்டும் சற்றே தளர்ந்து தொங்கியதுபோல் கண்ணுக்குமேல் கிடந்தன. பச்சை விழிகள் சிறுவர்களுக்குரிய ஒளியுடன் புதியனவாக இருந்தன. பூரிசிரவஸ் முற்றத்தில் இறங்கி “நான்தான், பிதாமகரே. பால்ஹிக இளவரசனும் சோமதத்தியுமாகிய பூரிசிரவஸ். தங்களை காணும்பொருட்டு வந்தேன்” என்றான். “ஆம், நீ பால்ஹிகன். நீ சிபி நாட்டில் என்னை பார்க்க வந்தாய். என்னை ஒரு கல்லறைக்குள் போட்டு புதைத்திருந்தார்கள். நீ என் கனவின் வழியாக உள்ளே வந்தாய்…” என்றார் பால்ஹிகர். “ஆனால் நீ அன்று ஆணும்பெண்ணும் அற்றவனாக இருந்தாய்… உன் பெயர் சிகண்டி என்றாய்.” பூரிசிரவஸ் அப்பேச்சை தெளிவுபடுத்த முனையாமல் அவரை அணுகி “பிதாமகரே, என்னை வாழ்த்துக!” என்று சென்று அவர் காலைதொட்டு வணங்கினான்.

அவர் தனது பெரிய கையால் அவன் தலையை மெல்ல அடித்து “உன்னை நான் மறந்துவிட்டேன். நேற்று யாரோ என்னை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அவள் சொன்னபோது என்னால் உன்னை நினைவுகூர முடியவில்லை. எனக்காக நீ கொண்டு வந்த குத்துக்கத்தியை நான் இளைய மகனுக்கு கொடுத்துவிட்டேன். இன்னொரு குத்துக்கத்தி எனக்கு இப்போது வேண்டும். நான் அதன்பொருட்டே வந்தேன்” என்றார். “இன்னொன்றும் இருக்கிறது. நான் அளிக்கிறேன், உள்ளே வருக!” என்றான். “இது அவன் வீடு, இதற்குள் நான் நுழையக்கூடாது. அவன் என்னை தூக்கி அறைவதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான். பார்த்துக்கொண்டே இரு, இன்னும் சில நாட்களில் நான் அவனை மும்முறை தூக்கி அறைகிறேன். இந்த ஊரில் எவரும் எனக்கு நிகர் அல்ல” என்றபின் “ஊரிலிருந்து யவன மது கொண்டு வந்தாயா?” என்றார்.

“ஆம் பிதாமகரே, ஆனால் இங்குள்ள எவரும் அதை அருந்துவதில்லை என்றார்கள்” என்றான் பூரிசிரவஸ். “இங்குள்ள மூடர்கள் அருந்துவதில்லை. நான் அருந்துவேன்” என்றபின் “எத்தனை நாள் இருப்பாய்?” என்றார் பால்ஹிகர். “நான் தங்களைப் பார்த்து வாழ்த்து பெற்று செல்வதற்காக வந்தேன், வாழ்த்து பெற்றதும் கிளம்பிவிடுவேன்” என்றான். “என்னிடம் எதற்கு வாழ்த்து பெறவேண்டும்? மறுபடியும் பெண்களை மணக்கப்போகிறாயா?” என்றார். “இல்லை பிதாமகரே, கீழே பெரும்போரொன்று வரவிருக்கிறது. அதில் நான் கலந்துகொள்கிறேன், உயிர்துறக்கவும் நேரலாம். அதற்கு முன் மூத்தவர்களிடம் வாழ்த்துபெற வேண்டும். எங்கள் குடியில் இப்போது இருப்பவர்களில் தாங்களே மூத்தவர். தங்கள் கால்தொட்டு வாழ்த்து பெற்று செல்லவேண்டும் என்று தோன்றியது. எச்சமின்றி போருக்கு செல்லவேண்டுமென்ற சொல்லை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.”

“யாருக்கு நடுவே போர்?” என்று அவர் கேட்டார். “பாண்டவர் தரப்புக்கும் கௌரவர் தரப்புக்கும்” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் யார்?” என்று அவர் கேட்டார். பூரிசிரவஸ் சில கணங்கள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பிதாமகரே, தங்களுக்கு தேவாபி என்றொரு மூத்தவர் இருந்ததை நினைவுகூர்கிறீர்களா?” என்றான். அவர் தன் முடியற்ற தலையில் தட்டி “ஆம்… தேவாபி… தேவாபி… அப்பெயர் நினைவிருக்கிறது. யார் அவர்?” என்றார். “அவரை நீங்கள் தோளில் சுமந்தீர்கள். உங்கள் மூத்தவர்” என்றான் பூரிசிரவஸ். “ஆ! நினைவுகூர்கிறேன். அவர் என் கனவில் வருவதுண்டு. என் தோளில் ஒரு எடையற்ற விலங்கை சுமந்துகொண்டு மலையில் செல்வதுபோல் கனவு காண்பேன். அது என்னிடம் பேசுவது போலிருக்கும். விழித்துக்கொண்டால் அவரை நினைவுகூர்வேன். இப்போது அவர் எங்கே?”

பூரிசிரவஸ் “விண்ணுலகடைந்துவிட்டார். நெடுங்காலமாகிறது” என்றான். “பிதாமகரே, நீங்கள் யயாதியின் கொடிவழியில், குருவின் குலத்தில், பேருடலராகிய பீமனின் சிறுமைந்தனாக, பிரதீபருக்கு மைந்தனாக பிறந்தீர்கள். உங்கள் அன்னை சிபிநாட்டு அரசி சுனந்தை. உங்களுக்கு மூத்தவர் தேவாபி. இளையவர் சந்தனு” என்றான் பூரிசிரவஸ். “ஆம், சந்தனு. அவனும் விண் சென்றுவிட்டானா?” என்று அவர் ஆர்வமாக கேட்டார். பூரிசிரவஸ் “ஆம், நெடுங்காலமாகிறது” என்றான். “ஆம், சந்தனுவுக்கு இரு மைந்தர். அக்குழவிகளை நான் பார்த்ததில்லை” என்ற பால்ஹிகர் “ஆனால் ஒருமுறை பார்த்தேனா என்றும் ஐயமாக உள்ளது” என்றார். மயிரற்ற மண்டையை கையால் தட்டி “ஆனால் இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன?” என்றார்.

“சந்துனுவின் முதல் மைந்தர் தேவவிரதராகிய பீஷ்மர். அவருடன் நீங்கள் மற்போரிட்டிருக்கிறீர்கள்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் முகம் மலர்ந்து இரு கைகளையும் ஓங்கி ஒன்றுடன் ஒன்று தட்டியபடி “ஆம், அவனை நினைவுகூர்கிறேன். என்னைவிட உடல் மெலிந்தவன், என்னளவுக்கே உயரமானவன். என்னுடன் நிகர்நின்று போரிட்டான்” என்றார். “அவனுடன் மீண்டும் போரிட விரும்புகிறேன். இப்போது நான் மேலும் பேருடல்கொண்டிருக்கிறேன். இன்று அவனை கால்நாழிகையில் தூக்கி நிலத்திலறைவேன்.” பூரிசிரவஸ் “சந்தனுவின் மற்ற இரு மைந்தர்கள் சித்ராங்கதரும் விசித்திரவீரியரும்” என்றான். “ஆம், பல தலைமுறைகள்” என்றார். “அவர்கள் என்ன செய்கிறார்கள்? பீஷ்மன் உயிரோடு இருக்கிறானா?” என்றார். “ஆம், அவர் மட்டும் இருக்கிறார்” என்றான்.

அவர் கையை பின்னால் கட்டிக்கொண்டு “ஆம், அவன் என்னைப்போல, எளிதில் சாகமாட்டான். இம்முறை அவனுடன் நெறிகளற்ற வன்போர் செய்யவேண்டும் என்று விழைகிறேன். இங்கே மலைகளில் நான் விண்ணிலிருந்து உயிராற்றலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். அதோ அந்த வெண்ணிற மலை. அதன் மேல்தான் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அமுது இறங்குகிறது. வெண்ணிற பால் பொழிவு போலிருக்கும். அங்கு சென்று நின்றால் அதை அருந்தலாம். நான் ஏழுமுறை அங்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் எனது இறப்பை பல ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கிறேன்” என்றார். “கீழிருப்பவர்கள் உண்ணுவதும் உயிர்ப்பதும் நஞ்சு. ஆகவே நாள்தோறும் அவர்கள் நலிகிறார்கள்.”

பேச்சு திசை மாறாமலிருக்க வெறுமனே தலையசைத்தபடி ஒருசொல்லும் பேசாமல் நின்ற பூரிசிரவஸ் மீண்டும் தொடங்கினான். “பிதாமகரே, விசித்திரவீரியருக்கு இரண்டு மைந்தர்கள். மூத்தவர் விழியற்றவரான திருதராஷ்டிரர். இரண்டாமவர் நோயுற்றவர், அவர் பெயர் பாண்டு. மூத்தவருக்கு நூறு மைந்தர்கள். அவரில் மூத்தவர் துரியோதனன். அவரே இப்போது அஸ்தினபுரியின் அரசர்.” பால்ஹிகர் “அவன் மல்லனா?” என்றார். “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “பாண்டுவுக்கு ஐந்து மைந்தர்கள்” என்று அவன் சொல்ல “ஆம்! ஆம்!” என்று அவர் தன் தொடையில் ஓங்கி தட்டினார். “அதில் இரண்டாமவனை நினைவுகூர்கிறேன். அவன் பெயர் பீமசேனன். பிற நால்வரையும் அவன் தோளில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் செல்வதைப்போன்று ஒரு கனவு எனக்கு வந்துள்ளது.” பூரிசிரவஸ் “அவரேதான். அவர் பெருந்தோளர்” என்றான்.

பால்ஹிகர் எண்ணத்திலாழ்ந்தார். முதியவர் அனைத்தையும் நினைத்து எடுத்துவிட்டார் என்று உறுதி செய்தபின் “அஸ்தினபுரியை இப்போது ஆள்பவர் துரியோதனர். மூத்தவர் திருதராஷ்டிரர் என்ற வகையில் அவரே அந்நிலத்திற்கும் மணிமுடிக்கும் உரிமையானவர். ஆனால் ஓரிரு நாட்கள் முன்னதாக பிறந்துவிட்டார் என்பதனால் யுதிஷ்டிரரும் அவரது உடன்பிறந்தவர்களும் அந்நாட்டையும் மணிமுடியையும் கோருகிறார்கள். ஆகவேதான் அங்கு போர் நிகழ்கிறது” என்றான். விழிப்புகொண்டு “யுதிஷ்டிரர் யார்?” என்று பால்ஹிகர் கேட்டார். பூரிசிரவஸ் பொறுமையை தக்கவைத்து “அவர் விசித்திரவீரியரின் இரண்டாவது மைந்தர் பாண்டுவின் மைந்தர்” என்றான். “விசித்திரவீரியன் யார்?” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் கையை வீசி அதை கலைத்து “பிதாமகரே, அஸ்தினபுரி உங்களுடைய நாடு. உங்கள் தந்தையர்நிலம் அது. அங்குள்ள இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் போரிடுகிறார்கள். துரியோதனர் நெறிகளின்படி நாடாள்கிறார். யுதிஷ்டிரர் நெறிமீறி அந்நிலத்தை கோருகிறார்” என்றான். “அவ்வாறு ஷத்ரியரிடையே போர் நிகழ்வது அரிதாயிற்றே? அரக்கர்கள்தானே போர் புரிவார்கள்?” என்றார் பால்ஹிகர். “ஷத்ரியர்களும் போர் புரிவார்கள்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

பால்ஹிகர் இரு கைகளையும் விரித்தபடி உடல்தசைகள் ததும்ப முற்றத்தில் சிறுவளையங்களாக நடந்தார். பின்னர் “ஆகவே அங்கு போர் நிகழவிருக்கிறது, இல்லையா? மற்போர்தானா?” என்றார். “இல்லை, பிதாமகரே. இரு தரப்பிலும் பல லட்சம் படைவீரர்கள் திரண்டிருக்கிறார்கள். அங்கு நிகழவிருப்பது பலநாட்கள் நீடிக்கவிருக்கும் மாபெரும் போர். பல லட்சம் வீரர்கள் இறந்து விழக்கூடும்” என்றான் பூரிசிரவஸ். “லட்சம் என்றால்?” என கைகளை விரித்து “அந்த அளவுக்கா?” என்றார். “எண்ணமுடியாத அளவுக்கு” என்றான். அவர் முகம் மலர்ந்தது. “எண்ணமுடியாத அளவுக்கு! இந்த மலைகளைப்போல?” என்றார். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அப்போரில் நானும் கலந்துகொள்ளவிருக்கிறேன். நான் களம்படக்கூடும். அதற்கு முன் தங்களைப் பார்த்து வாழ்த்துபெறவே வந்தேன். நாளை நான் கிளம்பும்போது வந்து தங்களைப் பணிந்து வாளை தங்கள் காலடியில் வைத்து முறைப்படி விடைபெறுகிறேன். என்னை சொல்லளித்து அனுப்புங்கள்.”

அவர் “ஆனால் ஏன் அவ்வாறு இறக்கவேண்டும்? வென்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? அவர்களுக்கு என்ன பரிசு அளிக்கப்படும்?” என்றார். “அவர்கள் நிலத்தை அடைவார்கள், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். அவர் அவனை ஐயமாக கூர்ந்து நோக்கினார். “நிலத்திற்காகவா?” என்று அவனுக்கு மட்டுமாக கேட்டார். “ஆம்.” அவர் “நிலத்தை என்ன செய்வார்கள்?” என்றார். “உரிமைகொள்வார்கள்” என்றான். “உரிமையா?” என அவர் சுற்றிலும் பார்த்தார். “இங்கே முடிவிலாமல் நிலம் இருக்கிறதே. இங்கிருந்து கிளம்பி இப்படியே சென்றால் ஆயிரம் ஆண்டுகாலம் எந்த மானுடரையும் சந்திக்காமல் சென்றுகொண்டே இருக்குமளவுக்கு நிலம் உள்ளது. ஆனால் இதை எப்படி மானுடன் உரிமைகொள்ளமுடியும்?”

பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவர் எண்ணங்கள் மலைத்து உறைய தலையை உலுக்கி விடுபட்டு “அந்தக் குத்துவாளை நீ எடுத்துக்கொடுத்தால் நான் இப்போதே கிளம்புகிறேன். மலைகளுக்குமேல் நான் ஒரு காட்டு ஆட்டை பார்த்திருக்கிறேன். என்னைப்போன்றே முதியது. அதை நான் உண்டால் இருவருக்குமே நன்று” என்றபின் கண்சுருக்கங்கள் இழுபட்டுக் குவிய சிரித்து “கனிந்த பழம்போல அது மலைகளில் காம்பு இற்று காத்திருக்கிறது” என்றார். “பொறுங்கள்! நான் வாள்களை எடுத்துவருகிறேன். தங்களுக்குரிய குத்துவாளை தாங்களே எடுத்துக்கொள்ளலாம்” என்று சொல்லி பூரிசிரவஸ் உள்ளே சென்று தனது பொதியை தூக்கி வந்தான். அதை முற்றத்தில் விரித்து அதிலிருந்த குத்துவாட்களை காட்டினான். பால்ஹிகர் முழந்தாளிட்டு அமர்ந்து அந்தக் குத்துவாட்களை கைகளால் புரட்டினார். முழந்தாளிட்டு அமர்ந்தபோதே அவர் நின்றிருந்த பூரிசிரவஸின் நெஞ்சளவுக்கு இருந்தார். அவரது கைகளுக்கு குத்துவாள்கள் மிகச் சிறியவையாக தெரிந்தன.

மிகக் கூர்மையான நோக்குடன் முழுதாக ஈடுபட்டு அவர் வாள்களை எடுத்து நோக்கினார். வீசியும் குத்தியும் வீசியெறிந்து பிடித்தும் கூரை வருடியும் அவர் அவற்றை ஆராய்ந்தார். அவற்றின் நாவை மட்டுமே அவர் நோக்கினார். பிடி அவருக்கு பொருட்டாகவே தோன்றவில்லை. ஊரில் குறுவாட்கள் அணிச்செதுக்குப் பிடிகளுக்காகவே மதிப்பு கொள்கின்றன. ஆனால் மலைகளில் அதற்கு பொருளே இல்லை. அவர் முதலிலேயே எடுத்துக்கொண்ட, அவற்றில் பெரிய குத்துவாளை இறுதியாகவும் எடுத்துக்கொண்டு “இதை நான் வைத்துக்கொள்கிறேன்” என்றார். பிறகு மற்ற குத்துவாட்களை பார்த்து “இவற்றை எவருக்கு கொடுக்கப் போகிறாய்?” என்றார். “இங்குள்ளவர்களுக்குத்தான்” என்றான் பூரிசிரவஸ். அவருடைய விழிகள் மாறுபட்டன. இன்னொரு குத்து வாளை எடுத்துக்கொண்டு “இதையும் நான் வைத்துக்கொள்கிறேன். எனக்கு இரண்டு குத்துவாட்கள் வேண்டும்” என்றார்.

“தாங்கள் விழைந்ததை எடுத்துக்கொள்ளுங்கள், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். அவர் மீண்டும் ஒன்றை எடுத்துக்கொண்டு “மூன்று குத்துவாட்கள் வைத்துக்கொள்கிறேன். இனி இவ்வூரில் மூன்று குத்துவாட்கள் உள்ள ஒரே ஒருவன் நானே” என்றார். பின்னர் எழுந்துகொண்டு அவனை பார்த்து “ஆனால் மூன்று குத்துவாட்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யவிருக்கிறேன்? ஏற்கெனவே என்னிடம் இரண்டு உள்ளன. ஐந்து குத்துவாட்கள் எதற்கு?” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான். அவர் “ஐந்து குத்துவாட்கள் பெரிய பொறுப்பு. அவற்றை நான் காவல் காக்கவேண்டும். ஒரு குத்துவாள் என்றால் என் இடையிலேயே வைத்துக்கொள்வேன்” என்றபின் பிற இரு குத்துவாட்களையும் வைத்துவிட்டு “நன்று, நீ செல்லும்போது என்னிடம் வா. உன்னிடம் என்ன சொல்லவேண்டுமென்பதை என்னிடம் முன்னரே சொல்லிவிடு. அச்சொற்களை நான் திருப்பி சொல்வேன்” என்றபின் தனது பெரிய கைகளால் அவனது தோளை தட்டினார்.

“ஆம், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். “நான் என்னிடமிருக்கும் குத்துவாட்களை மைந்தர்களுக்கு கொடுக்கிறேன். அவர்கள் விரும்புவார்கள்” என்றபின் அவர் “நீ நல்லியல்பு கொண்டவன். நீ ஏன் திரும்பிச் செல்லவேண்டும்? இங்கேயே இரு. உன்னை நான் அமுதுபெய்யும் மலைக்கு கூட்டிச்செல்கிறேன்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான். அவர் “நாளை என்னை வந்துபார். உனக்கு நான் அரிய ஊன்கொழுப்பு தருகிறேன். சோள அப்பத்தில் உருகவிட்டு உண்டால் மணமாக இருக்கும். நானே காட்டுமாட்டின் நெஞ்சுக்குமிழியை வெட்டி எடுத்தது. அது ஆண்மைமிக்க மாடு. அகவை முதிர்ந்தது. காட்டுமாடுகள் இரவில் மலையுச்சியின் அமுதத்தை உண்கின்றன. அந்த அமுது அவற்றின் முன்கால்களின் நடுவே அமுதகலமென தொங்கிக்கிடக்கும்…” என்றார். மீண்டும் அவன் முதுகை அறைந்தபின் கிளம்பிச் சென்றார்.

அவன் அவர் செல்வதை நோக்கிக்கொண்டு நின்றான். பிரேமை வந்து அவனருகே நின்றாள். “அவர் பற்கள் பதித்திருக்கிறாரா?” என்று அவன் கேட்டான். “இல்லை, பற்கள் அவருக்கு முளைத்தன. நூற்றைம்பது அகவை கடந்தால் மீண்டும் பற்கள் முளைக்கும்.” அவன் நம்பாமல் திரும்பி நோக்கினான். “ஆம், அவர்களை தெய்வங்கள் மீண்டும் குழவிகளாக எண்ணுகின்றன. அவர்களின் முகம் குழந்தைபோலவே தோன்றும். உள்ளமும் குழந்தைகளுக்குரியது” என்றாள். “அவர் எவர் எதை கேட்டாலும் கொடுத்துவிடுவார். எவர் அளித்தாலும் உண்பார். அவருக்கு அச்சமென்பதே இல்லை” என்று அவள் சொன்னாள். “மூத்தவள் ஹஸ்திகை இறந்தபோது ஒருநாள் முழுக்க மலைமடிப்பொன்றில் சென்று படுத்துக்கொண்டு அழுதார். திரும்பி வந்தபோது ஒரு காட்டு ஆடு அவர் தோளிலிருந்தது. முகம் மலர்ந்திருந்தது. அவர் அவளை நினைப்பதே இல்லை.”

“நான் இறந்தபின் நீ என்னை நினைப்பாயா?” என்றான். அவள் விழிதாழ்த்தி “இருப்பவர்களை மட்டுமே நினைக்கவேண்டும் என்பது மலைவழக்கம்” என்றாள். அவன் சீற்றம்கொண்டான். “மறந்துவிடுவாயா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “மறந்தால்தான் கனவில் நான் நீங்கள் இருக்கும் உலகுக்கு வரமுடியும்.” அவன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீ மறுமணம் செய்துகொண்டிருப்பாய் என நினைத்தேன்” என்றான். “ஆம், அதுவே இங்குள்ள வழக்கம். மூன்று வசந்தகாலம் வரை கணவர் திரும்பவில்லை என்றால் மலையுச்சியில் நின்று தெற்குநோக்கி ஒரு கல்லை தலைசுற்றி வீசியெறிய வேண்டும். அதன்பின் உள்ளத்திற்கு உகந்தவரை மணக்கலாம்” என்றாள் பிரேமை. “நீ ஏன் மணக்கவில்லை?” என்றான். “என்னிடம் பலர் கோரினர். ஆனால் நீங்கள் கனவில் வந்துகொண்டே இருந்தீர்கள். ஆகவே நான் அவர்களை மணக்கவில்லை.”

அவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். “பெண்ணின் கருப்பை ஒழிந்துகிடக்கக் கூடாது என்று அன்னை சொன்னாள். ஆனால் நான் ஒவ்வொருநாளும் உங்களுடன் இருந்தேன். விழாக்காலங்களில் மதுவருந்தினால் மட்டும் நான் அழுவேன்” என்றாள். அவன் அவள் தோளை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான். பெருமூச்சு எழுந்து நெஞ்சை அசையச் செய்தது. “நீங்கள் உண்ணவேண்டும் அல்லவா? நான் அடுமனைக்கு செல்கிறேன்” என அவள் திரும்பிச் சென்றாள். அவன் அப்பால் இளவெயிலில் தன் பெயர்மைந்தர்களுடன் குறுவாளை வீசி விளையாடும் பால்ஹிகரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் ஓட அவர்கள் கூச்சலிட்டபடி துரத்திச் சென்றார்கள். அவரைப் பிடித்து வீழ்த்தி அவர்மேல் ஏறி உருட்டினார்கள். அவர்களை திசைக்கொருவராக உதறிவிட்டு அவர் எழுந்து ஓடினார். வால் சுழற்றியபடி நாய்கள் உடன் ஓடின. அவர்களின் நிழல்களும் உடன் ஆடின. கூச்சல்கள், சிரிப்புகள், நாய்க்குரைப்புகள்.

அவர்களுக்குமேல் மலைச்சரிவுகளில் முகில்நிழல்கள் விழுந்துகிடந்தன. பனிமலைமுகடுகள் வெண்குவைநிரைகள் என ஊழ்கத்திலமர்ந்திருந்தன. வானில் வெண்முகில்கள் மெல்ல சென்றுகொண்டிருந்தன. அவன் மலைப்பக்கங்கள் ஒளிகொண்டு மின்னுவதை நோக்கிக்கொண்டிருந்தான். உள்ளத்திலிருந்த அனைத்து எண்ணங்களும் அசைவிழந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பழிந்து உதிரிச்சொற்களாக ஆகி பின் கரைந்து மறைந்தன. அவன் உள்ளமும் அதே ஒளியையும் அமைதியையும் கொண்டிருந்தது. இல்லத்தின் முகப்பிலமர்ந்தபடி மலைகளை நோக்கிக்கொண்டிருந்தான். நெடுநேரம் கழித்து அவன் பிரேமையின் அழைப்பால் தன்னிலை உணர்ந்தான். பிதாமகரும் மைந்தரும் அப்போதும் விளையாடிக்கொண்டிருந்தனர். இளவெயிலையும் மலைகளையும் நோக்கியபடி அச்சிற்றூரின் அனைவருமே ஆங்காங்கே வெறுமனே அமர்ந்திருப்பதை அவன் கண்டான். மலைகளைப்போல அவர்களும் ஊழ்கத்திலிருந்தனர். அங்கே ஊழ்கமே அன்றாட வாழ்வென்று திகழ்கிறது என எண்ணிக்கொண்டான்.