இந்திரநீலம் - 92

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 5

துவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு வெள்ளித்தேர்கள். நூறு வெண்கலப் பேழைகளில் அடுக்கப்பட்ட நீலப்பளிங்குப் புட்டிகளில் யவனர் மட்டுமே வடிக்கத் தெரிந்த நன்மதுத்தேறல். அந்த மதுவளவுக்கே மதிப்புள்ளவை அந்தப்புட்டிகள். நூறு மரப்பேழைகளில் பீதர்நாட்டு பட்டுத்துணிகள். சோனகர்களின் மலர்மணச்சாறு நிரப்பப்பட்டு உருக்கி மூடப்பட்ட பித்தளைச் சிமிழ்கள் கொண்ட பன்னிரு பேழைகள். வெண்பளிங்கில் செதுக்கப்பட்ட யவனக் களிப்பாவைகள். ஆடகப் பொன்னில் வடிக்கப்பட்ட காப்பிரிகளின் தெய்வச்சிலைகள். கிளிச்சிறையில் சமைக்கப்பட்டு அருமணிகள் பதிக்கப்பட்ட யவனநாட்டு அணிகலன்கள்.

நிகரற்ற பெருஞ்செல்வம் என திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். துவாரகைக்கு வருவதற்கு முன் என்றால் அச்செல்வக்குவையை அன்றி பிறிது எதையும் எண்ணியிருக்க மாட்டான். அப்பேழைகளை உள்ளமும் கணம்தோறும் சுமந்துகொண்டிருக்கும். முந்தையநாளே அவனுக்காக இளைய யாதவர் தன் கைகளால் தேர்வுசெய்த பரிசில்களைப்பற்றி அவனுடைய ஏவலர் தலைவன் வந்து சொன்னான். “பெருஞ்செல்வம் என்கிறார்கள். பாரதவர்ஷத்தின் பேரரசர்கள்கூட வியந்து நின்றுவிடும் அளவு நிகரற்ற செல்வம்” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் “அவர் எட்டு திருமகள்களின் அரசர். அவர் அளிக்கக் கூடாதது என இப்புவியில் ஏதுமில்லை” என்றான்.

முதல் நற்தருணத்தில் நீராடி ஆடையணிந்து கொண்டிருக்கையில் சாத்யகி வந்து கீழே காத்திருப்பதாக ஏவலன் சொன்னான். அவன் பயணத்துக்கான ஆடை அணிந்து உடைவாளை பூட்டியபடி கீழே பெருங்கூடத்திற்கு வந்தபோது அங்கே சாளரத்தருகே வெளியே நோக்கியபடி நின்றிருந்த சாத்யகி காலடி ஓசையில் திரும்பி நோக்கி புன்னகை செய்தான். அவன் கண்கள் துயில்நீப்பால் வீங்கியிருந்தன. புன்னகையும் ஒளியற்றிருந்தது. முன்புலரியின் குளிர் நிறைந்த கடற்காற்று சாளரங்கள் வழியாக வந்து கூடத்தில் சுழன்றது. ஆழத்தில் ஒரு நாவாய் மெல்லப் பிளிறியது.

“நம்முடைய நாவாய்தான்” என்று சாத்யகி சொன்னான். “காலையிலேயே அதில் பரிசுப்பொருட்களை ஏற்றத்தொடங்கிவிட்டனர்.” திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அவற்றை பாஞ்சாலத்திற்கு கொண்டுசென்று சேர்ப்பது வரை நான் கண் துஞ்ச முடியாது” என்றான். சாத்யகியும் புன்னகைத்தபடி “அரசன் என்பவன் காவலன் அல்லவா?” என்றான். பொருளற்ற வெற்று உரையாடல். ஆனால் அத்தருணத்தில் பிறிது எதுவும் சொல்வதற்கு இருக்கவில்லை.

ஏவலர்தலைவன் வந்து “தேர் காத்திருக்கிறது இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியை நோக்கிவிட்டு “தேர் வேண்டியதில்லை. நாங்கள் புரவிகளிலேயே செல்கிறோம்” என்றான். சாத்யகியின் கண்களில் முதல்முறையாக புன்னகை வந்தது. “ஆம்” என்றான். இருவரும் படிகளில் இறங்கி முற்றத்திற்கு சென்றனர். அவர்களின் புரவிகளை சூதர்கள் கொண்டுவந்து நிறுத்தினர். திருஷ்டத்யும்னனின் புரவி அவனை நோக்கி மூச்சு சீறியபடி காலெடுத்து வைத்து தலையை அசைத்தது. சேணத்தில் கால் வைத்து கால் சுழற்றி தாவியேறியபடி “யாதவரே, இறகுபோல…” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று புன்னகைத்தபடி சாத்யகியும் ஏறிக்கொண்டான்.

திருஷ்டத்யும்னன் புரவியை குதி முள்ளால் எழுப்பி கற்பாதையில் ஓசை உருண்டு தொடர விரைந்தான். ‘ஏய் ஏய்’ என குதிரையை ஊக்கியபடி சாத்யகியும் தொடர்ந்து வந்தான். இரவெல்லாம் துயின்று எழுந்த துடிப்புடன் இருந்த புரவிகளும் முழுக்கால்களில் விரைய விரும்பின. ஒழிந்து கிடந்த விடியாத பொழுதின் சாலைகள் வழியாக வால் சுழற்றி குளம்புகள் அறைய புரவிகள் சென்றன. சுழல் பாதைகளில் காற்று இருபக்கமும் கிழிபட்டுப்பீரிட சென்றபோது வானிலிருந்து இறங்கும் சிறிய இறகு என உணரமுடிந்தது. குளம்படியோசை அனைத்துச் சுவர்களிலும் இருந்து பொழிந்து அவர்களை சூழ்ந்தது. அடுக்கடுக்காக எழுந்த துவாரகையின் வெண்முகில் மாளிகைகளிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக கேளாத்தொலைவு வரை இடியோசை என அவ்வொலி எதிரொலித்தது.

சுருளவிழ்ந்து கொண்டே இருந்த சாலையின் கீழே அனல் அவிந்து கங்கு நிறைந்த வேள்விக்குளம் போல பல்லாயிரம் செவ்வொளி விளக்குகளுடன் துவாரகையின் துறைமுகப்பு தெரிந்தது. எட்டு பீதர் பெருங்கலங்கள் பொதிகளை ஏற்றிக்கொண்டிருந்தன. நான்கு கலங்கள் அப்பால் அலைகளில் ஆடியபடி காத்து நின்றிருந்தன. நூற்றுக்கணக்கான சிறுகலங்கள் கனல்சூடி கரையோரமாகச் செறிந்து நின்று அசைந்தன. பொதிகளை தூக்கி வைக்கும் பெருந்துலாக்களின் மீது எரிந்த மீன்நெய் ஊற்றிய பீதர்நாட்டு விளக்குகள் எரிவிண்மீன்கள் போல இருண்ட வானில் சுழன்று இறங்கின. எரியம்புகள் போல சீறி மேலே எழுந்து சென்றன. பீதர்கலம் ஒன்று நூறு யானைகளுக்கு நிகராக பிளிறியது. அவ்வொலி மூடிக்கிடந்த கடைகளின் தோல் திரைகளில் எல்லாம் அதிர்ந்தது. பகைப்புலமென அலைகள் பாறைகளை அறையும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

விழுந்துகொண்டே இருந்தனர். கீழே காலுக்கு அடியில் மிகத்தொலைவில் ஒளித்துளிகள் அலையடித்த கடல் விண்மீன்கள் மண்டிய வானம்போல. விழுகிறோமா எழுகிறோமா என உளம் மயங்கினான். அறைய வருபவை போல சாலையின் விளக்குத்தூண்கள் அவர்களை அணுகி கடந்துசென்றன. துறைமேடை அருகே வந்ததும் இருவரும் மூச்சிரைக்க நின்றனர். வியர்வை குளிர்ந்து முதுகில் வழிந்தது. காதுகளில் வெப்பம் எழுந்தது. நெடுந்தூரம் வந்துவிட்டதாக திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். துவாரகை மிகமிக அப்பால் எங்கோ இருந்தது. துறைமேடையின் நூற்றுக்கணக்கான விளக்குத்தூண்கள் சீரான கோடாக நிரைவகுத்திருந்தன. மீன்எண்ணை விளக்குகள் எரிந்த ஒவ்வொரு தூணுக்குக் கீழேயும் பொன்னிறமான ஒளிவட்டம் விழுந்து கிடந்தது. அங்கே சிறிய பூச்சிகள் கனல் துளிகளாக சுழன்று கொண்டிருந்தன. ஒளிசிந்திய மண்ணில் கூழாங்கற்கள் பொன்னிறமாக மின்னின. உதிர்ந்துகிடந்த சருகுகள் பொற்தகடுகளாக பளபளத்தன.

அந்த விரைவோட்டம் தன் உள்ளத்தில் முந்தைய நாள் இரவு முதலே இருந்த அத்தனை அழுத்தத்தையும் இல்லாமலாக்கிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். சாத்யகி சிரித்துக் கொண்டிருப்பதை கண்ட பின்னர் தான் தானும் சிரிப்பதை முகத்தசைகளின் இழுபடலில் இருந்து உணர்ந்தான். “எப்போது பாஞ்சாலம் வருகிறீர்கள் யாதவரே?” என்றான். “விரைவில்” என்றான் சாத்யகி. “இங்கு சில பணிகள் உள்ளன. முடிந்ததும் கிளம்பிவிடுவேன்.” திருஷ்டத்யும்னன் “இந்திரப்பிரஸ்தத்தின் கட்டுமானப்பணிகளை மேல்நோட்டமிட நான் செல்வேன். அங்கு வாரும். நாமும் ஓரு நகரை அமைத்தோமென்றிருக்கட்டும்” என்றான். “ஆம், நானும் அதை பார்க்க விழைகிறேன்” என்றான் சாத்யகி.

அவன் முகம் மாறுபடுவதை திருஷ்டத்யும்னன் கண்டான். “எப்போது அஸ்தினபுரிக்கு செல்வீர்கள்?” என்றான் சாத்யகி. “முதலில் காம்பில்யம் சென்று தந்தையையும் தமையர்களையும் சந்திக்கவேண்டும். அதன் பிறகு தான்.” சாத்யகி நோக்கை விலக்கி இயல்பானதென ஆக்கப்பட்ட குரலில் “சுஃப்ரையை சந்திப்பீர்களா?” என்றான். “நான் தந்தையையும் தமையர்களையும் சந்திக்கவிருப்பதே அவளுக்காகத்தான்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி திரும்பவில்லை, ஆனால் அவன் உடலில் ஓர் அசைவு தெரிந்தது. “என் உடல் முழுமைகொண்டுவிட்டது யாதவரே. இந்தப் புரவியோட்டத்தில் அதை நன்குணர்ந்தேன். அதை தந்தையிடம் சொல்லப்போகிறேன். நான் மணம்செய்யவிருக்கும் பெண் எவர் என்றும் உரைப்பேன்.”

சாத்யகி மெல்லிய குரலில் “ஆனால் அவள்…” என்று சொல்லவந்து நிறுத்திக்கொண்டான். “ஷத்ரியர் என்னை ஏற்கவேண்டியதில்லை. குடியவைகள் ஒப்பவேண்டியதில்லை. என் தோள்கள் இருக்கின்றன. இணையென நீர் இருக்கிறீர். அழியாத் துணையாக அவர் இருக்கிறார். என் மண்ணை நான் வென்றெடுக்கிறேன். என் நாட்டை என் வாளால் அமைக்கிறேன். அதன் அரியணையில் பட்டத்தரசியாக அவள் அமர்வாள். அவள் கால்களைப் பணியாதவர்கள் என் வாளுக்கு மறுமொழி சொல்லட்டும்.” சாத்யகி திரும்பி நோக்கியபோது திருஷ்டத்யும்னன் பொற்சிலையென சுடர்விட்டுக்கொண்டிருந்தான். நோக்கை விலக்கி அவன் நீள்மூச்செறிந்தான்.

திருஷ்டத்யும்னன் மேலும் பேச விழைந்தான். எதையும் சொல்வதற்காக அல்ல. அவ்வுணர்ச்சியை சொல்லாக ஆக்கிவிட்டால் அதன் அழுத்தம் குறையும் என்பதற்காக. “நேற்று அவர் எனக்காகவே அதை சொன்னார். யோகம் என்றால் என்ன என்று.” அவன் சொற்கள் சாத்யகியின் உடலைச் சென்று தொடுவது போல அசைவு எழுந்தது. “அன்று அவள் என் வாள்வீச்சை எதிர்கொண்டது எப்படி என்று புரிந்துகொண்டேன். அது யோகம். மலையேறி தவம் செய்து மாமுனிவர் அடைவதை இந்தப் பேதையர் இல்லத்தில் அமர்ந்தே அடைந்துவிடுகிறார்கள்.”

சாத்யகி திரும்பி நோக்கினான். அவன் கண்களின் நீர்ப்பளபளப்பை திருஷ்டத்யும்னன் கண்டான். நடுங்கிய குரலில் “பேரரசிக்கு என் அடிபணிதல்களை தெரிவியுங்கள் பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் “ஆம்” என்றான். பின்னால் அவர்களின் தேர் வரும் ஒலி கேட்டது. “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். இருவரும் புரவிகளில் பெருநடையாக துறைமுகப்பு நோக்கி சென்றனர். அதன்பின் ஒரு சொல்லும் தேவையிருக்கவில்லை. தன் உள்ளம் ஒரு துளி குறையாமல் ஒரு துளி கூடாமல் நிறைந்திருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான்.

துறைமேடையில் அவர்களுக்காக துறைமுக காவலர்தலைவர் காத்து நின்றிருந்தார். உடன் துவாரகையின் சிற்றமைச்சர் பார்த்திபரும் நின்றிருந்தார். பார்த்திபர் அருகே வந்து வணங்கி “பாஞ்சாலரை வணங்குகிறேன். அரசர் ஆணையிட்ட பரிசுப்பொருட்கள் அனைத்தும் நாவாயில் ஏற்றப்பட்டுள்ளன” என்றார். “பயண நன்னேரம் எப்போது?” என்றான் சாத்யகி. “புலரி முதல்சாமம் முதல்நாழிகை… இன்னும் அரைநாழிகை நேரம் உள்ளது. பேரமைச்சர் வருவதாக சொன்னார்” என்றார் பார்த்திபர். “பேரமைச்சரா?” என்றான் திருஷ்டத்யும்னன். “அது முறைமை அல்ல, ஆயினும் வரவேண்டும் என அவர் விழைவதாக சொன்னார்” என்றார் பார்த்திபர்.

மீண்டும் சாத்யகியிடம் ஏதாவது சொல்ல விழைந்தான் திருஷ்டத்யும்னன். ஆனால் என்ன சொன்னாலும் அது வெறும் ஓசையென ஒலிக்கும் என அப்போது தோன்றியது. அவனை தொடவேண்டுமென விரும்பினான். ஆனால் கைநீட்டி அவன் கைகளை பற்றவும் தயக்கமாக இருந்தது. அண்ணாந்து மேலே தெரிந்த பெருவாயிலின் விளக்குகளை நோக்கினான். அவை செந்நிற விண்மீன்கள் போல வானில் நின்றன. இயல்பாக என சாத்யகியின் தோளைத் தொட்டு “எரிவிழிகள்” என்றான். சாத்யகி அண்ணாந்து நோக்கி “ஆம்” என்றான். “இந்நகரை பிரிந்துசெல்கையில் இவை எவ்வண்ணம் பொருள்கொள்ளும் என நான் எண்ணிக்கொள்வதுண்டு.”

அவனும் தன் தொடுகையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறான் என்று திருஷ்டத்யும்னன் அறிந்தான். புரவித்தொடை என இறுகிய தசைகள் கொண்ட தோள்கள். மேலும் இயல்பாக தோளைப் பற்றியபடி “நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். கடலுக்குள் சென்றபின் திரும்பி இந்தப் பெருவாயிலை நோக்கவேண்டும்” என்றான். இருவரும் அதை நோக்கியபடி ஒருவர் தொடுகையை ஒருவர் உணர்ந்தபடி நின்றனர். “நான் உம்மைப்பற்றி உணர்ந்ததை அவையில் அரசரிடம் சொல்லவேண்டுமென நினைத்தேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “அதற்கான சொற்களை எண்ணி எண்ணி கோத்து வைத்திருந்தேன். அதற்கான களம் அமையவில்லை.”

சாத்யகி “ஆனால் அவர் அறிவார்” என்றான். “நேற்று என்னிடம் சொன்னார். இரவு ஆணைகளைப் பெறும்போது இன்றுகாலை நீங்கள் விடைபெறுவதைப்பற்றி சொன்னேன். புலரிக்குமுன்னரே விடையளிக்கச் செல்வாய் அல்லவா என்றார். நான் ஆம் என்றேன். சிரித்தபடி ஒவ்வொருமுறை பார்த்தர் இங்கு வந்துசெல்லும்போதும் நகர் எல்லைவரை சென்று விடையளிப்பது தன் வழக்கம் என்றார்.” திருஷ்டத்யும்னன் உடல்சிலிர்த்தான். “உண்மையாகவா? அப்படியா சொன்னார்?” சாத்யகி புன்னகையுடன் “ஆம்” என்றான். “யாதவரே, நாம் உணர்வதைச் சொல்ல அதைவிட சிறந்த சொல் எது? கிருஷ்ணார்ஜுனர்களைப் போன்றவர் நாம்” என்றான். சாத்யகி “ஆம்” என்றான்.

பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டுவிட்டதைச் சொல்ல கலக்காவலன் கொம்பூதினான். அந்த ஓசையை அங்கே நின்றிருந்த பிற காவலர்த்தலைவர்களும் திருப்பி எழுப்பினர். யானைக்கூட்டங்களின் உரையாடல் போல ஒலித்தது அது. அவர்களின் கலம் கிளம்பவிருக்கிறது என்னும் செய்தியை அறிந்த பீதர்நாட்டு பெருங்கலம் ஒன்று முழக்கமிட்டபடி மெல்ல மூக்கைத் திருப்பத்தொடங்கியது.

தேர்கள் துறைமேடைக்குள் நுழையும் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் கைகளை எடுத்துக்கொண்டான். புரவிக் காவலர் முன்னால் வர அக்ரூரரும் ஸ்ரீதமரும் ஊர்ந்த தேர்கள் வந்து நின்றன. காவலர் தலைவனும் அமைச்சரும் சென்று வரவேற்றனர். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் தலைவணங்கி வாழ்த்து கூறினர். அக்ரூரர் இறங்கி அவர்களை கைதூக்கி வாழ்த்தினார். “இளையவரே, அரசர் உங்களிடம் ஒரு சொல் சொல்லும்படி என்னைப் பணித்தார். நீங்கள் மண் வென்று முடிசூடும்போது வலப்பக்கம் துவாரகையின் படைத்தலைவன் வாளுடன் நின்றிருப்பான் என்றார். அவ்வாறே ஆகுக!” என்றார். திருஷ்டத்யும்னன் மெய்ப்பு கொண்டான். மெல்லிய குரலில் “அது என் தெய்வத்தின் சொல்” என்றான்.

“சென்றுவருக பாஞ்சாலரே. தங்கள் மீது இளையவர் கொண்ட அன்பு வியப்புக்குரியது” என்றார் ஸ்ரீதமர். “நேற்றிரவெல்லாம் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் சாத்யகியின் நட்புக்காக உயிர் கொடுக்க முன்வந்ததாக சொன்னார். அத்தருணம் ஏதென்று நான் அறியேன். ஆனால் அச்செயல்வழியாக நீங்கள் இளையவரின் நெஞ்சம் புகுந்துவிட்டீர். மெய்நட்பை அறிந்தவன் தெய்வங்களுக்கு மிக உகந்தவன் என்று அவர் சொன்னார்.” அழுதுவிடக்கூடாது என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். நல்லவேளையாக பந்தவெளிச்சமிருந்தாலும் முகங்கள் நிழலிருளில் இருந்தன. கடற்காற்று முகத்தை குளிர்ந்த கரிய பட்டுத்துணியால் என துடைத்துக்கொண்டே இருந்தது.

அருகே வந்து பணிந்து “இளவரசே” என்றான் துறைநாயகம். “ஆம், நன்னேரம் ஆகிவிட்டது” என்றார் அக்ரூரர். “கிளம்புங்கள் பாஞ்சாலரே. முடிசூடிய மன்னராக நான் மீண்டும் தங்களை சந்திக்கிறேன்.” ஸ்ரீதமர் சிரித்து “ஆம், அப்போது துணையும் மகவும் அமைந்திருக்கும். மங்கலங்கள் சூழ்ந்திருக்கும்” என்றார். திருஷ்டத்யும்னன் முன்னால் சென்று குனிந்து இருவர் கால்களையும் தொட்டு வணங்கினான். “வெற்றியும் புகழும் அமைக!” என அக்ரூரர் தலைதொட்டு வாழ்த்தினார். “குருவருள் துணைவருக!” என்றார் ஸ்ரீதமர்.

அவன் திரும்பி சாத்யகியை நோக்கினான். இருளில் இரு நீர்த்துளிகள் என அவன் கண்கள் தெரிந்தன. கைநீட்டி அவன் வலக்கையை பற்றிக்கொண்டான். மரத்தாலானது போல காய்ப்பேறிய போர்வலனின் கை. அது குளிரில் என மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. திருஷ்டத்யும்னன் தன் பிடியை இறுக்கிவிட்டு கையை இழுக்க முயல சாத்யகி மீண்டும் ஒருமுறை பற்றி இறுக்கினான். ஆனால் விழிகளை விலக்கிக் கொண்டான். திருஷ்டத்யும்னன் தன் கையை இழுத்து விலக்கிக்கொண்டு சென்று நடைபாலத்தில் ஏறினான். கலத்தின் மீது நின்று மீண்டுமொருமுறை அக்ரூரரையும் ஸ்ரீதமரையும் வணங்கினான்.

கலம் கரைவிலகி அலைகளில் ஏறிக்கொண்டபோதும் அவன் கரையில் நின்றவர்களை நோக்கிக் கொண்டு நின்றிருந்தான். அவர்கள் சிறுத்து மறைந்தனர். துறைமேடை ஊசல்படி என ஆடியபடி விலகியது. கரையணைந்திருந்த ஒரு பீதர்நாட்டுப் பெருங்கலம் துறையை மறைத்து பெருஞ்சுவராக எழுந்து வந்துகொண்டே இருந்தது. மீண்டும் தெரிந்தபோது துறைமேடை மிகச்சிறியதாக ஆகி அலைகளுக்கு அப்பால் ஆடிக்கொண்டிருந்தது. அதன்மேல் விண்மீன்கள் மின்னிய வானில் இரட்டைக்குன்றுகள் எழுந்திருந்தன. பெருவாயிலின் சுடர்கள் இரு விண்விழிகள் போல நோக்கு நிலைத்திருந்தன. செங்கனல் குவை போலிருந்தது துவாரகையின் சுருள்பாதைகளால் ஆன குன்று.

அவன் நீள்மூச்சுகள் எழுந்து உலைந்த நெஞ்சுடன் கலத்தின் அமரத்தில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். விழி தெளிந்தது போல வான் விடிந்தது. கீழ்ச்சரிவில் முகில்களின் கிழக்குமுகங்கள் சிவந்து பற்றிக்கொண்டன. வானப்பரப்பு ஒளிபரவி விரிந்து கொண்டே வந்தது. கடற்பறவைகள் எழுந்து அலைகள் மேல் பறந்து இறங்கி எழுந்தன. அவன் கலத்தின் வடத்தின்மேல் ஒரு வெண்பறவை வந்து அமர்ந்து துயர்கொண்ட காகம்போல கரைந்தது. தொலைவில் துவாரகையின் பெருவாயில் ஒரு வெண்கல உருளியின் பிடி போல தெரிந்தது. ஒருகணம் உளஅதிர்வொன்றை அவன் உணர்ந்தான். அவன் அதைவிட்டு விலகுவதாகத் தோன்றவில்லை, அணுகிக்கொண்டிருப்பதாகவே தோன்றியது. விழிகளை மூடி மூடித்திறந்து அந்த உளமயக்கை வெல்ல முயன்றான். அவ்வெண்ணம் கற்பாறையில் செதுக்கப்பட்டதுபோல நின்றது. அவன் அதைநோக்கித்தான் சென்றுகொண்டிருந்தான்.

[இந்திரநீலம் முழுமை]