காண்டீபம் - 1

பகுதி ஒன்று : கனவுத்திரை – 1

அஸ்தினபுரியின் குருகுலத்து சுபாகுவின் மகன் சுஜயன் தனது யவன வெண்புரவியை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி உடைவாளை உருவி வலக்கையில் ஏந்தியபடி தலை நிமிர்ந்து அதுவரை தன்னை தொடர்ந்து வந்த ஏழு பெருங்கழுகுகளை ஏறிட்டான். அவற்றில் நான்கின் கால்களில் பேருடல் கொண்ட காட்டு யானைகள் உகிர்களால் கவ்வப்பட்டிருந்தன. துதிக்கைகளைச் சுழற்றியும் கால்களை காற்றில் தூக்கி வைத்து நடக்க முயன்றபடியும் பிளிறி குறிய வால் சுழற்றி அவை விண்ணில் தவித்தன.

மரக்கலங்களின் பெரும் பாய்களைப் போல கரிய சிறகுகளை விரித்து மயிரற்ற நீண்ட கழுத்தை சற்று தாழ்த்தி வளைந்த அலகுகளை நீட்டி நெருப்புக் குழிகளென எரிந்த கண்களால் உறுத்து நோக்கியபடி அவை அணுகி வந்தன. அவற்றின் நிழல்கள் முகில்களைப்போல தரையில் இழுபட்டு அணுகின. அடிமரம் முறிந்து விழும் ஒலியில் கூவியபடி அவை அவனை சூழ்ந்துகொண்டன. வாளை சுழற்றியபடி, “குருகுலத்தோன் ஒரு போதும் தோற்பதில்லை பறவைகளே” என்று கூவியபடி சுஜயன் குதிரையை குளம்பு வைத்து சுழலச்செய்தான்.

அவன் இடையில் அணிந்திருந்த பட்டு ஆடை நெகிழ்ந்து நழுவி இறங்கியது. களமிறங்கும்போது இடைக்கச்சையை சரியாகக் கட்டவில்லை என்று எண்ணி ஒரு கையால் அவிழும் ஆடையை வயிற்றுடன் சேர்த்து பற்றிக்கொண்டான். தொடைகளில் சூடாக குருதி வழிவதை உணர்ந்த போதுதான் தன் நெஞ்சில் ஒரு வாள் புதைந்திருப்பதை உணர்ந்தான். சற்று முன் அவனிடம் போர்புரிந்த ஏழு ஒற்றைக்கண் அரக்கர்களில் ஒருவன் வீசிய வாள் அது. அதன் கூர்நுனி உடைந்து தசைக்குள் ஆழ இறங்கியிருந்தது. குமிழியிட்டு எழுந்த கொழுங்குருதி வெம்மையாக தொடைகளை நனைத்து வழிந்து கால் விரல்களிலிருந்து சொட்டியது.

மூச்சிரைத்தபடி சலிக்காமல் அவன் வாளைச் சுழற்றி அக்கழுகுகளின் இறகுகளை வெட்டினான். சருகுகள் போல அவை அவனைச்சுற்றி பறந்து காற்றில் மிதந்து இறங்கின. குருதி பட்ட ஆடை உடலுடன் ஒட்டிக்கொண்டு சற்று குளிரத் தொடங்கியது. வாள் என வளைந்த ஒளிமிக்க உகிர்களை விரித்தபடி அவனை அணுகிய முதற்கழுகின் காலை ஓங்கி வெட்டி துணித்தான். வெட்டுண்ட கால்கள் தரையில் விழ உகிர்கள் விரிந்து அதிர்ந்து சுருங்கின. கால்களை இழந்த கழுகு அலறியபடி சிறகை விம் விம் என்ற உறுமலோசையுடன் வீசி சுழன்று மேலெழ அந்தக் காற்றில் அவனுடைய நீண்ட குழல் எழுந்து பறந்தது. தோளிலிட்ட பட்டு மேலாடை உடன் எழுந்து அலைவுற்றது.

அவன் தன் முன் இரு உகிர் எழுந்த கால்களின் நிழலைக் கண்டு போர்க்குரலுடன் திரும்புவதற்குள் அக்கழுகு அவன் இடை பற்றி தூக்கிக்கொண்டது. வாளைச் சுழற்றியபடி சுஜயன் “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவினான். புரவியிலிருந்து அவனை அள்ளித் தூக்கிய கழுகு காற்றில் அவன் கால்கள் துழாவித் தவிக்க, நனைந்த குருதிப் பட்டாடை இழுபட்டு கீழிறங்கி மண்ணில் உதிர்ந்து குவிய, முகில்களுக்கு மேலே கொண்டு சென்றது. அருகே சுழன்ற பிறிதொரு கழுகு ஏதோ சொல்ல அப்பால் பிறிதொரு கழுகு சிரித்தது.

பெண்குரல் சிரிப்பு! கழுகுகளில் பெண்கள் உண்டா? பெண் குரலில் சிரிக்குமென்றால் அவை கூவும்போது மட்டும் ஏன் ஒரே போன்று, கொம்புகள் பிளிறுவது போல குரலெழுப்புகின்றன? சுஜயன் கையிலிருந்து வாள் நழுவியது. “என் வாள்! எனது வாள்! அதோ” என்று அவன் கூவினான். இடையை நெளித்து கால்களை உதைத்து எம்பி நழுவி கீழே விழுந்த தன் வாளை பற்ற முயன்றான். அவன் விரல் தொட்ட எல்லைக்கு அப்பால் மின்னி மெல்ல புரண்டபடி வாள் கீழே மண்ணை நோக்கி சென்றது. “வாள் செல்கிறது… வாள்” என்று அவன் மீண்டும் கூவினான்.

வானம் மண்ணை ஓங்கி வெட்டியது போல அந்த வாள் சென்று கீழே மணலை அடைந்து புதைந்தது. அந்த வெட்டின் வலியை கூச்சமாக தன் உடலில் உணர்ந்தபடி “குருதி! குருதி!” என்றான். “என்ன சொல்கிறீர்கள் இளவரசே?” என்று கேட்டபடி செவிலியன்னை அவனை உலுக்கினாள். கண்களைத் திறந்து கீழே தெரிந்த செவிலி சுஜாதையின் முகத்தை நோக்கி யாரிவள் என வியந்தான். வாயிலிருந்து ஒழுகிய நீர் அவன் மார்பைத் தொட்டது. சுஜாதை “விழித்தெழுங்கள்… பொழுதாகிவிட்டது” என்றாள்.

மல்லாந்து மண்ணை நோக்கி விழுந்து கொண்டிருந்தான். வானிலிருந்து குனிந்து அவனை நோக்கியது செவிலியின் முகம். கேலிப் புன்னகை ஒளிரும் கண்கள். கழுகு எப்போது தன்னை விட்டது? கீழே விழுந்து மணலில் உடல் அறைபட்டு சிதறப் போகிறான். ஆனால் கைகளால் மெல்ல தாங்கிக்கொண்டு செல்லப்படுவது போல விரைவின்றி காற்றில் அமிழ்ந்து கொண்டிருந்தான். “ஏதோ கனவு” என்றபடி செவிலி முகத்தருகே சேடி முஷ்ணையின் முகம் தெரிந்தது. “விழித்தெழுங்கள் இளவரசே… பகல் ஆகிவிட்டது.”

“இவன் கண்களில் எப்போதுமே கனவுதான்” என்றாள் சுஜாதை. “கருவறை விட்டு வெளியே வரும்போது குழவியர் கண்களில் பாலாடை போல் கனவு படிந்திருக்கும். காலுதைத்து கையசைத்து அவை அள்ளி அள்ளி விலக்குவது அவர்கள் மேல் சுருண்டு சுழன்று படிந்து கொண்டிருக்கும் அக்கனவின் திரைச்சீலையைத்தான். பிறகெப்போதோ அக்கனவு அவர்களை வந்து தொட்டுச் செல்கிறது. மூன்று வயதாகியும் இவன் அத்திரையை முற்றிலும் விலக்கவில்லை.” முஷ்ணை “இவர் கனவை அள்ளி அள்ளி அணைத்துக்கொள்கிறார்” என்றாள்.

சுஜயன் கண்களை விழித்து இருவரையும் மாறிமாறி பார்த்தபடி உதட்டைக் குவித்தான். பின்பு புருவம் தூக்கி விழிகளை விரித்து உதடுகளைக் குவித்து கைகளைத் தூக்கி ஆட்டி “பெரிய கழுகுகள்! ஏழு கழுகுகள்” என்றான். முஷ்ணை சிரித்தபடி “எங்கே?” என்றாள். அவன் விழி சாய்த்து நினைவு கூர்ந்து “அங்கே” என்றான். “வான்?” என்று முஷ்ணை வாய் பொத்தி நகைத்தாள். “சும்மா இரடி… என்ன சிரிப்பு? குழந்தை கனவு கண்டிருக்கிறது” என்றாள் சுஜாதை.

“ஆனாலும் யானைகளை தூக்கிக்கொண்டு போகும் கழுகுகள் சற்று பெரிய கனவுதான்” என்றாள் முஷ்ணை. சுஜாதை அப்போதுதான் கீழே மஞ்சத்தில் கிடந்த அவன் ஆடையை பார்த்தாள். “மறுபடியுமா?” சலிப்புடன் சொல்லி அவனை முஷ்ணையிடம் கொடுத்துவிட்டு பாலாடைபோல சுருங்கி ஒட்டிக்கிடந்த பட்டாடையை எடுத்தாள். முஷ்ணை “நனைந்திருக்கிறதா?” என்றாள். சுஜாதை “ஊறியிருக்கிறது” என்றாள். முஷ்ணை உரக்க நகைத்தபடி “எந்தக் காலையிலாவது இளவரசர் உலர்ந்து கண் விழித்திருக்கிறாரா செவிலியே?” என்றாள்.

சுஜாதை சுஜயனை திரும்பிப் பார்த்து “சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் என்னை கூப்பிடுங்கள் என்று சொன்னேனல்லவா?” என்றாள். சுஜயன் உதடுகளை சற்று வளைத்து மெல்லிய திக்கலுடன் “குருதி!” என்றான். “நிறைய குருதி… ஒற்றைக்கண் அரக்கன்… அவன் பெயர்… அவன் பெயர்… அதாவது அவனுக்கு பெயரே இல்லை தெரியுமா?” என்றபின் கைகளை அசைத்து “நான் அவன் கழுத்தை வெட்டினேன். இன்னொருவன் பின்னாலிருந்து வந்து மிக நீளமான வாளால் என் நெஞ்சை வெட்டினான். குருதி பெருகி…” என்றபின் சிந்தனை செய்து தன் ஆடையைப் பார்த்து “அந்த குருதிக்கு நிறமே இல்லை. நிறமே இல்லாத குருதி… தண்ணீர் போல” என்றான்.

சுஜாதை முஷ்ணையை நோக்கி கண்ணசைத்து “பார், எப்படி விளக்கமளிக்கிறார். அது சிறுநீரல்ல… நிறமற்ற குருதி, தெரிந்துகொள்” என்றாள். “யானைகள் என்னை துரத்தின” என்றான் சுஜயன். “மூன்று யானைகள்! இல்லை, ஏழு யானைகள். அவற்றின் மீது கந்தர்வர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்கள் கையில் மிகப்பெரிய வாள் வைத்திருந்தார்கள்…” அவன் கைநீட்டுவதற்காக சற்று எம்பிக்குதித்தான். “அவ்வளவு பெரிய வாள்!” முஷ்ணையின் இடையில் காலை உதைத்து திரும்பி அருகே நின்ற மரத்தூணை சுட்டிக்காட்டி “இவ்வளவு பெரிய வாள்!” என்றான்.

“இதென்ன இரவெல்லாம் போர்க்கனவுகளாக இருக்கின்றன இளவரசருக்கு?” என்றாள் முஷ்ணை. “சரியான கோழை, அதனால்தான். வேறென்ன? இவரோடொத்த இளையோரெல்லாம் இதற்குள்ளாகவே குறுவாள் ஏந்தி களம் புகத்தொடங்கிவிட்டார்கள். இவரோ இரவெல்லாம் கதை கேட்டு பின்னிரவில் தூங்கி விடியலில் சிறுநீர் கழித்து கண்விழிக்கிறார். முன்பகல் முழுக்க காய்ச்சல் அடித்த கண்களுடன் உடல்குன்றி உலகை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். தோளை பார்த்தாயா? இதை பெருந்தோள் கொண்ட குருகுலத்து இளவரசனின் தோள்கள் என்று எவரேனும் சொல்வார்களா? வெண்பல்லிக் குஞ்சு போலிருக்கிறார்” என்றாள் சுஜாதை.

பிறிதெவரையோ சொல்லக் கேட்பது போல சுஜயன் சுஜாதையை உற்று நோக்கி அச்சொற்களை கேட்டான். ஆம் என்பது போல தலையசைத்தபிறகு எம்பி கைநீட்டி சுஜாதையின் தோள்களைத் தொட்டு “சுஜாதை, அந்த யானைகளை கழுகுகள் என்ன செய்யும்?” என்று கேட்டான். “கொண்டு சென்று கூண்டிலடைத்து வளர்க்கும். போதுமா? எனக்கு வேலை இருக்கிறது” என்று சுஜாதை அவன் மஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த பட்டை இழுத்து தரையிலிட்டாள். “இறகுச் சேக்கையிலே இனி இவரை படுக்கவைக்கக் கூடாது. எத்தனை முறைதான் வெயிலில் இட்டு காய வைப்பது? வெறுமனே மரக்கட்டிலில் படுக்க வைக்க வேண்டும்” என்றாள்.

சுஜயன் திரும்பி முஷ்ணையின் கன்னத்தை தன் இரு கைகளாலும் பற்றித் திருப்பி “எனக்குத் தெரியும். அந்த யானைகளை அவை இமயமலை உச்சியில் கொண்டு வைத்து கொத்திக் கொத்தி கிழித்து சாப்பிடும்” என்றான். பிறகு சில கணங்கள் சிந்தனையில் ஆழ்ந்து விழிகளை மேலே செருகி உறைந்தான். அவன் தோள்கள் தொய்ந்து கைகள் விழுந்தன. வாயிலிருந்து எச்சில் குழாய் போல வழிந்தது. பின்பு அதிர்ந்து எழுந்து கால்களை உதைத்து எம்பி அவள் காதைப்பற்றி “ஆனால் அவற்றின் தந்தங்கள் அந்தக் கழுகுகளின் தொண்டையிலே சிக்கிக் கொள்ளும். தந்தங்கள் சிக்கிக் கொள்ளும்போது அவற்றால் சத்தம் போட முடியாது. ஆகவே அவை மலை உச்சியில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும்” என்றான்.

“ஆம், பாவம்” என்றாள் முஷ்ணை. சுஜயன் “ஏழு கழுகுகள் மலை உச்சியில் செத்துவிட்டன என்று கந்தர்வர்கள் வந்து சொல்வார்கள்… நாளைக்கு சொல்வார்கள்” என்றான். சுஜாதை “இந்தக் கதைகளை கேட்டுக் கேட்டு எனக்கே இதே போன்ற கனவுகள் வரத் தொடங்கிவிட்டன” என்றாள். “நானே நேற்று ஒரு கனவு கண்டேன். ஒரு சிம்மத்தின் மேல் அமர்ந்து செல்லும் கரிய பெருங்குரங்கு ஒன்றை… காலையில் எழுந்தபோது என்ன கனவு இது என்றெண்ணி எனக்கே சிரிப்பாக இருந்தது.” “குரங்கு என்ன செய்துகொண்டிருந்தது?” என்றாள் முஷ்ணை. சுஜாதை மறுமொழி சொல்லாமல் நகைத்தாள்.

சுஜயனைத் தூக்கியபடி இருவரும் மஞ்சத்தறையைவிட்டு வெளியே சென்றனர். சுஜயன் சேடியின் இடையிலிருந்து சறுக்கி கீழே இறங்கி “நான் வரமாட்டேன். எனக்கு இடை ஆடை கொடு” என்றான். “ஏன்?” என்றாள் முஷ்ணை. “அங்கே பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப்பார்த்து சிரிப்பார்கள்.” சுஜாதை “ஆமாம், இதற்கு மட்டும் நாணம் கொள்ளுங்கள். இத்தனை வயதாகியும் மஞ்சத்தில் சிறுநீர் கழிக்கிறீர்கள். அதற்கு நாணமில்லை” என்றாள். “அது குருதி தெரியுமா? என் நெஞ்சில் வாள் வாள் வாள்… அவ்வளவு பெரிய வாள் அப்படியே பாய்ந்து…” என்று கையை அசைத்தபடி சுஜயன் சொல்லத்தொடங்க “மறுபடியும் அதை சொல்லிக் கொண்டிராதீர்கள்…” என்றாள் சுஜாதை.

சுஜயன் பகைமையுடன் அவளைப் பார்த்து சேடியை அணுகி அவள் முந்தானையைப் பற்றி சுழற்றிப் பிடித்தபடி “அது குருதி… அவ்வளவு பெரிய வாளால் என்னை வெட்டினான்… அப்போது…” என்றான். “சரி, குருதியேதான். பிறகென்ன?” என்றபடி சுஜாதை வெளியே சென்றாள். முஷ்ணை அங்கிருந்த சிறு பீடத்திலிருந்து செம்பட்டு ஆடையொன்றை எடுத்து அவன் இடையில் சுற்றிக் கட்டி கால்களிடையே கொண்டு சென்று வரிந்தாள். அவள் கைகள் தன் கால் நடுவே பட்டபோது சுஜயன் கூசி சுருங்கி வளைந்து சிரித்தான். சேடி அவனை தன் முலைகளோடு அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு “படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்கள் பின்னாளில் மிகச்சிறந்த காதலர்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள், தெரியுமா இளவரசே?” என்றாள்.

“காதலர்கள் என்றால்?” என்றான் சுஜயன். “ஏராளமான இளவரசிகளை திருமணம் செய்து கொள்வீர்கள். அதன் பின் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உங்களுக்கு பிறக்கும்” என்றாள். “நூறு குழந்தைகளா?” என்று சுஜயன் விழிகளை விரித்து கேட்டான். “ஆமாம். ஏன் நூறு போதாதா?” என்றாள் சேடி. “ஒன்று குறைகிறதா?” சுஜயன் “நான் இளவரசிகளை தேரில் இழுத்து ஏற்றி விரைவாக இப்படியே குதிரைகளை அறைந்து…” என்று சொன்னபடி திரும்பி கைகளை அசைத்து அவன் முன் விரைந்து கொண்டிருந்த புரவிகளை சவுக்கால் வீசினான். அவற்றின் குளம்படி ஓசை அறையை நிறைத்தது. “ஏழு இளவரசிகள்!” என்றான். மூன்று விரல்களை தூக்கி ஆட்டி “ஏழு இளவரசிகள்!” என்றபின் திரும்பி சேடியின் முலையைத் தொட்டு “இதைவிட பெரிய முலைகள் உள்ளவர்கள்” என்றான்.

அவள் கூசிச் சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்டாள். தாழ்ந்த குரலில் அவன் காதில் “இதைவிடப்பெரிது வேண்டுமா?” என்றாள். “அவ்வளவு பெரியது!” என்று அவன் இரு கைகளையும் காட்டினான். “அவ்வளவு பெரிதாக இருக்கும். நிறைய பால்” என்றான். “பாலை எங்கே பார்த்தீர்கள்?” என்றாள் முஷ்ணை. “நான் மகளிரறைக்கு செல்லும்போது உதயனுக்கு செவிலி பால் கொடுப்பதை பார்த்தேன். பால் வேண்டுமென்று கேட்டபோது அந்தச் செவிலி என்னை கை நீட்டி அடித்தாள்” என்றான். “இதோ இங்கே அடித்தாள். அவள் அரக்கி. அவளை நான் கொன்று…”

“இன்னும் கொஞ்சம் பெரிதாகும்போது பாலருந்துவீர்கள். இப்போது நீராடுங்கள்” என்று முஷ்ணை அவன் கையைப்பற்றி அழைத்துச் சென்றாள். சுஜயன் சற்று தளர்வாகக் கட்டப்பட்ட பட்டாடையை ஒரு கையால் பற்றியபடி அவளுடன் நடந்தான். “ஏழு பருந்துகள். அவை ஏழு குதிரைகளை…” என்று சொல்லிக் கொண்டு நடந்தான். முஷ்ணை “ஏழு குதிரைகளா? ஏழு யானைகள் என்றீர்கள்?” என்றாள். அவன் நின்று “இவை வேறு கழுகுகள்… இவை வடக்கிலிருந்து வந்தவை அல்ல. இவை தெற்கிலிருந்து வந்தவை. அவற்றில் ஒன்று தன் காதில் ஒரு பெரிய தூணை வைத்திருந்தது” என்றான். “தூணா?” என்றாள் முஷ்ணை. “இதோ இந்தத் தூணளவுக்கு பெரியது. நான் அந்தத் தூணைப் பிடுங்கி…” என்று சொல்லிக் கொண்டே அவன் சென்றான்.

குளியலறைக்குச் செல்லும் வழியெல்லாம் சுஜயன் கைகளை ஆட்டி கால்களைத் தூக்கி சிறிய தாவல்களாக நடந்தபடி சற்றே திக்கும் சொற்களுடன் பேசிக் கொண்டே வந்தான். “கழுகுகளை அவற்றின் நிழலிலேயே நான் பார்த்துவிடுவேன். பெரிய கழுகு மலையைத் தாண்டி சிறகடித்து வரும்போது பெரிய பாறை உருண்டு வருவது போலிருக்கும். தண்ணீரில் அதன் நீர்ப்பாவையை நான் பார்த்தேன். தண்ணீரில் பார்த்தால் அதன் கண்கள் தெரியும். சிவப்புக் கண்கள்… தீ போன்று எரியும் கண்கள் தெரியுமா? தீயில்லை தீயில்லை… செவிலி அன்னையின் குங்குமச் சிமிழைத் திறந்தது போலிருக்கும். அதில் குருதி…” என்றபின் நின்று திகைத்து “என்னுடைய ஆடையில் சிவந்த குருதி வழிந்தது” என்றான்.

முஷ்ணை அவனை கைபிடித்து சற்றே இழுத்து “விரைவாக வாருங்கள் இளவரசே” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இப்பொழுது பொழுது என்ன என்று எண்ணுகிறீர்கள்? பார்த்தீர்களா, உள்அங்கணத்தில் வெயில் பொழிந்து கொண்டிருக்கிறது” என்றாள் முஷ்ணை. “நான் காலையிலேயே எழுந்துவிட்டேன்” என்றான் சுஜயன். “காலையில் எழுந்து இங்கே வந்தபோது இங்கே வானத்தில் நிலவு இருந்தது. அதன் பின் நான் இந்த வாயிலைக் கடந்து வெளியே போய் முற்றத்தில் நின்று…” கையை விரித்து “அவ்வளவு பெரிய நிலவை பார்த்தேன். வட்டமான நிலவு” என்றபின் சற்றே சிந்தித்து “சிவப்பான நிலவு” என்றான்.

முன்னால் சென்ற சுஜாதை நின்று “நானும் பார்த்திருக்கிறேன்… முழுப் பொய்யை இந்த அளவுக்கு நம்பி சொல்லும் இன்னொரு குழந்தையை இந்த அஸ்தினபுரியில் எங்குமே பார்க்கமுடியாதடி” என்றாள். “நான் பார்த்தேன், நான் பார்த்தேன்” என்றபடி சுஜயன் ஓடிச் சென்று இருகைகளாலும் அவள் இடையை முட்டினான். “போ, நீ பொய் சொல்கிறாய். நான் உண்மையிலேயே அவ்வளவு பெரிய நிலவை பார்த்தேன்” என்றான். “அந்த நிலவு உங்களைப் பார்த்ததா இளவரசே?” என்றாள் முஷ்ணை.

சுஜயன் நின்று அவளை ஏறிட்டு நோக்கி சில கணங்கள் சிந்தித்தான். அவனுடைய சிறிய இதழ்கள் சற்றே பிரிந்து இரண்டு வெண் முன்பற்களைக் காட்டியபடி உறைந்திருந்தன. கண்கள் வெண்படலத்தில் உருண்டன. பின்பு பெருமூச்சுவிட்டு கைகளை விரித்து “இல்லை” என்றான். நெடுநேரம் அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் தோள்கள் குறுகி கண்கள் எதையும் நோக்காமலாயின. சிலகணங்களில் அவன் அங்கில்லை என்று ஆனான்.

படிகளில் இறங்கி இடைநாழிக்குச் சென்று அதன் எல்லையை அடைந்து வளைந்து உள்ளே தைலமணம் ஏறிய நீராவி எழுந்து கொண்டிருந்த குளியலறைக்கு சென்றபோது அவன் முற்றிலும் மறைந்துவிட்டவன் போலிருந்தான். “என்ன குரல் அடங்கிவிட்டது?” என்றாள் முஷ்ணை. “அவ்வளவுதான். பேச்சு பேச்சென்று பேசுவது, பின்பு அப்படியே அடங்கி நாள் முழுக்க அமர்ந்திருப்பது… இதுதான் வழக்கம். இப்போது அவர் இருப்பது இவ்வுலகிலா இதைச் சூழ்ந்த வேறு உலகங்களிலா என்பது எவருக்குத்தெரியும்?” என்றாள் சுஜாதை. “இளவரசே, தாங்கள் நீராடி வரவேண்டிய நேரம் இது” என்றாள்.

நீராட்டறையிலிருந்து பருத்த பெரிய முலைகளும் நீர்நிறைந்த தோற்பைகள் போல ததும்பும் புயங்களும் கொண்ட நீராட்டறைச் செவிலி தான் அமர்ந்திருந்த பீடத்தில் கையை ஊன்றி எழுந்து சிரித்தபடி அவனை நோக்கி வந்தாள். அவன் அவளை ஒரு பெரிய வெண்ணிற யானையாக பார்த்தான். யானையின் உள்ளங்கால்கள் அத்தனை சிறியதாக இருப்பது அவனை வியப்புறச் செய்தது. அவள் கைகளும் மிகச் சிறியவை. அவன் தலைக்கு மேலிருந்த அவள் வயிற்றில் தொப்புள் சுழி சேற்றில் எழுந்த ஆழமான ஊற்றுக் குழி போல சுருங்கி உள்ளிழுக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழே மணல் வரிகள் போல தசைக்கோடுகள்.

அவள் குனிந்து சிரித்தபடி “இன்றென்ன கனவு? சிம்மங்களா?” என்றாள். அவன் மயக்கம் நிறைந்த விழிகளால் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். அவள் பெரிய வட்ட முகத்தில் மிகச்சிறிய மூக்கும் மிக மெல்லிய உதடுகளும் அதற்குள் சிறிய உப்புப் பரல்கள் என ஒளிவிடும் பற்களும் கொண்டிருந்தாள். குனிந்து அவன் தோள்களை அவள் பற்றியபோது இரு முலைகளும் வெண்ணிற அலைகளாகப் பொங்கி அவன் முன் வந்தன. அவன் திரும்பி சுஜாதையைப்பார்த்து ஏதோ சொல்ல எண்ணினான். அச்சொற்கள் அவன் நாவில் வருவதற்குள்ளே உலர்ந்து மறைந்தன.

சுபகையின் கைகள் மிக மென்மையானவை. அவள் விரல்கள் வாழைப்பூ அல்லிகள் போல. அவள் அவன் கைகளைப்பற்றி “இன்னும் தூக்கம் விழிக்கவில்லை போல” என்றாள். சுஜாதை அவன் சிறுநீர் கழித்த ஆடைகளை தூக்கிக் காட்டி “சிம்மமோ யானையோ கழுகோ ஏதோ ஒன்று. ஆனால் காலையில் ஆடை நனைவது மட்டும் தவறுவதே இல்லை” என்றாள். சுபகை அவன் இடைபற்றி சுற்றி தூக்கி தன் முலைகள் மேல் அழுத்திக் கொண்டாள். அவன் அவள் கழுத்தை சுற்றி வளைத்து தோள்களில் முகம் புதைத்தான். “அச்சமுள்ள குழந்தைகள் படுக்கையை நனைக்கும் என்பார்கள். பொதுவாக பெண் குழந்தைகள்தான் இத்தனை வயதுக்குப் பிறகும் இப்பழக்கம் கொண்டிருக்கும். குருகுலத்து இளவரசர் இதைச் செய்கிறாரென்று சூதன் ஒருவனுக்குத் தெரிந்தால் போதும். பாரத வர்ஷத்திற்கு அழியா புராணமொன்று கிடைத்துவிடும்” என்றாள் சுபகை.

முஷ்ணை “இரவெல்லாம் கதை சொல்லு என்று மாறி மாறி ஒவ்வொரு சேடியாக அழைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை கதை சொன்னாலும் துயில்வதில்லை. கதை கேட்கக் கேட்க கண்கள் விரிந்துகொண்டேதான் போகும். சொல்லாமலிருந்தால் அக்கணமே ஆடை அனைத்தையும் அவிழ்த்து வீசிவிட்டு தரையில் புரண்டு அழத்தொடங்குவார். அத்தனை கதையும் கனவாக உள்ளே போய் இதோ இப்படி சிறுநீராக வெளியே வருகிறது” என்றாள். சிரித்தபடி சுபகை அவனை தோளுடன் இறுக அணைத்து அவன் முகத்தைத் திருப்பி கன்னத்தில் முத்தமிட்டு “இளையோர் நாமறியா உலகங்களுக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவர்கள் முஷ்ணை. அவர் எங்கு சென்றார் என்று நாம் என்ன அறிவோம்? நாம் பார்க்கும் இவ்வுலகில் சிம்மங்களும் கழுகுகளும் பறக்கும் யானைகளும் இல்லை. நாம் காணாததனால் அது இல்லையென்று ஆகிவிடுமா என்ன?” என்றாள்.

“சரிதான். இவருக்கு சரியான இணை நீதான். அவர் விண்ணுலகின் கதைகளை சொல்லட்டும். நீ கேட்டுக்கொண்டே நீராட்டு” என்றாள் சுஜாதை. “எனக்கு இன்று முழுக்க வேலையிருக்கிறது. இவரிடம் உரையாடிக் கொண்டிருக்க நேரமில்லை. காலையில் எழுத்தரையர் வந்து அமர்ந்து பிற இளவரசர்களுக்கு ஏடு தொட்டளித்துவிட்டார். இவரைவிட ஒரு வயது இளையவர் ஹரிதர். எறும்புகள் அணி வகுத்து செல்வது போல் ஏடெழுதுகிறார். எழுதிய ஒவ்வொன்றையும் விரல் தொட்டு வாசிக்கிறார். நூறு பாடல்களை நினைவு கூர்ந்து சொல்கிறார். இவரோ இன்னமும் அகரத்தையே எழுதத் தொடங்கவில்லை. அகரமுதல்வியின் புகழ் மாலையை ஐந்து வரிகளுக்கு மேல் சொல்லவும் தெரியவில்லை. சொல்வது எதுவும் செவி நுழைவதில்லை என்கிறார் எழுத்தரையர்.”

“அதெப்படி நுழையும்? சொல்லத் தொடங்கும்போதே விழி திறந்துவிடுகிறதே” என்றாள் முஷ்ணை. “இதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார்கள். ஊன்துளியாக என் கைக்கு வந்தபோதே இப்படித்தான் இருந்தார் என்று நான் சொன்னால் எவராவது நம்புவார்களா? அதெப்படி குருகுலத்து வீரர்பெருங்குடியில் நாவும் கையும் தேறாத ஒரு மைந்தர் பிறக்க முடியும் என்று என்னை கேட்பார்கள். பிறந்திருக்கிறதே இதோ. விழித்திருக்கும் பொழுதில் மூன்று நாழிகைகூட இப்புவியில் இல்லாத ஒரு குழந்தை. இதன் பழி முழுக்க என்மேல்…” என்றாள் சுஜாதை. “பழியை பகிர்ந்து கொள்வோம் செவிலியே. பிறகென்ன?” என்றபடி நீராட்டறைச் செவிலி அவனைத் தூக்கி உள்ளே கொண்டு சென்றாள்.

சுஜாதை பின்னால் வந்து “நீராட்டி ஆடை மாற்றி எழுத்தறைக்கு கொண்டு செல்லவேண்டும். அரைநாழிகையில் அனைத்தும் முடியட்டும். இல்லையேல் இவர் செல்லும்போது அங்கு எழுத்தவை முடிந்திருக்கும்” என்றாள். “இதோ…” என்றாள் சுபகை. “இதோ, என் செல்லத்தை நீராட்டி துடைத்து ஒளி பெறச்செய்து வெண்முத்தென ஆக்கி உன் கையில் தருகிறேன். போதுமா?” என்றாள். “அவரை கதை சொல்ல மட்டும் விடாதே. வாயில் ஒரு துணியை எடுத்து செருகிவிடு. வாயை திறக்கவிட்டால் நீ நீராட்டி முடிக்க உச்சிவேளை ஆகிவிடும்” என்றாள் சுஜாதை. சுபகை சிரித்தபடி அவனுடன் உள்ளே சென்றாள்.