இந்திரநீலம் - 91

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 4

இளைய யாதவரின் குரலை திருஷ்டத்யும்னன் விழிகளால் என கேட்டு அமர்ந்திருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த கடற்காற்றில் எழுந்து பறந்த அக்குரல் அறையின் அனைத்து இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.

யமுனைக்கரையில் நிறுத்திச் சென்ற படகை அடைந்தோம். ஓசையின்றிப்பெருகிய யமுனையின் கரிய நீரில் தலைகீழாகத்தெரிந்த நிழல் மேல் ஏறிக் கொண்டோம். பல்லாயிரம் கோடி மீன்விழிகள் செறிந்த பரப்பில் உச்சிவெயிலில் மிதந்தோம். ஒற்றை நிலவு மட்டும் நீராடிய அலைப்பரப்பின் மேல் ஒரு சொல் எஞ்சியிராது ஒழுகினோம். பின்பு ஒரு கணத்தில் தன் உள்ளம் பொறாதவன் போல் அவன் எழுந்து இரு கைகளையும் விரித்து “எத்தனை வெளிப்படையான பேருண்மை!” என்றான். பின்னர் ஒவ்வொன்றாக நோக்கி “இத்தனை நோக்கியும் இதை உணர முடியாமலாக்கிய மாயம்தான் என்ன?” என்றான்.

“நீ வேதாந்தத்தை போதிய அளவு அருந்தி விட்டாய். இனி மலர்மாந்திய தேனீ போல உன் இல்லத்திற்கு திரும்பு. உன் கூட்டின் கலவறையில் அதை உமிழ். அங்கிருந்து அது நுரைக்கட்டும். இல்லையேல் உன் சிறகுகள் நனைந்து இற்றுவிடும்” என்றேன். “இல்லை, யாதவனே! இப்பேருண்மையைத் தாங்கியபடி என்னால் நிற்க முடியவில்லை. இதன் எடையால் என் ஒவ்வொரு உயிர்க்காலும் அழுந்துகிறது. என் தலை வெடித்து நெற்றிப்பொட்டினூடாக அனல் பீறிடுமென்று தோன்றுகிறது” என்றான்.

அக்கணமே இரு துடுப்புகளையும் அசைத்து படகை கவிழ்த்துவிட்டேன். நீரில் விழுந்து சுழலில் இழுபட்டு மூழ்கிச் சென்ற அவன் எழுந்து நீருமிழ்ந்து “என்ன செய்கிறாய் மூடா?” என்றான். “தூயவேதாந்தத்தால் நீந்த முடியாது பார்த்தா, உன் கைகளாலேயே முடியும்” என்றபடி நானும் நீந்தினேன். என்னைத் தொடர்ந்து அவன் வந்தான். மலைப்பாம்பு என ஓசையற்றிருந்த நீரின் பெருவல்லமையை தோள் வலியால் மீறி இருவரும் கரை சேர்ந்தோம். சேற்றில் நடந்து கரை அணைந்து நாணல் மண்டிய மணல் மேல் நின்றேன். சிரித்தபடி ஏறி வந்து “ஆம், பித்தம் தெளிந்தது, இந்நதியை என் கைகளால் நீந்தி வந்தேன்” என்றான். நான் நகைத்து “பாண்டவனே, நதியையும் நான் வேதாந்தத்தாலேயே நீந்திக் கடந்தேன்” என்றேன்.

இருவரும் மணல் மேட்டில் ஏறி அங்கிருந்த குறுங்காட்டை அடைந்தோம். “பசிக்கிறது. நான் இங்கு விளைந்த கனிகளை உண்கிறேன். நீ வேதாந்தத்தை உண்” என்றான். “ஒவ்வொருவரும் உண்பது தங்கள் உள்ளே விளைந்த அமுதை மட்டுமே” என்றேன். “யாதவனே, உன்னிடம் சொல்லாட இனி எனக்கு உள்ளமில்லை. பசியாறிய பின்னரே என் செவிதிறக்கும்” என்று சொல்லி அருகே நின்ற அத்தி மரம் ஒன்றில் அவன் ஏறினான். கீழே நான் நின்றிருந்தேன். மரத்தின்மேலிருந்து பார்த்தன் வியப்புடன் “யாரிவள்?” என்றான்.

“யார்?” என்றேன். “ஒரு பெண்… மஞ்சள் ஆடை அணிந்து அடர்காட்டினூடாக செல்கிறாள்” என்றான். “அது சிறுத்தையாக இருக்கும். அல்லது பூத்த கொன்றை. உனக்கு வண்ணமேதும் பெண்ணே” என்றேன். அவன் குனிந்து “உனக்கு?” என்றான். “பெண் ஏதும் வண்ணமே” என்று சிரித்தேன். “ஒரு பெண், ஐயமில்லை. இவ்வேளையில் இங்கு எவர் வருவார்கள்? கந்தர்வப் பெண்ணோ? வனதேவதையோ?” என்றான். “அவள் கால்கள் மண்தொடுகின்றனவா?” என்றேன். அவன் “ஆம், மண் தொட்டுதான் நிற்கிறாள். காய்கனி கொய்கிறாள்” என்றான். “அவளிடம் சென்று எவளென்று அறிந்து வருக” என்றேன்.

தயக்கமில்லாமல் பெண்ணிடம் பேச பார்த்தனைப்போல் என்னாலும் இயல்வதில்லை. மரத்திலிருந்து இறங்கி புதர்களை விலக்கிச் சென்று அவளை அணுகினான். அவள் அவனைக் கண்டு திகைத்து ஓடமுயல எளிதில் தாவி வழிமறித்தான். அவள் அவனை கந்தர்வன் என எண்ணி அஞ்சுவது தெரிந்தது. அவன் நிலத்தில் காலை ஊன்றி தன்னை மானுடன் என்று காட்டினான். தன் தோளில் பொறிக்கப்பட்ட குலக்குறியைக் காட்டி தன்னை அறிமுகம் செய்தான். அச்சொற்களினூடாக இயல்பாக அவள் அழகை புகழ்ந்திருப்பான் என அவள் முகம் கொண்ட நாணம் காட்டியது. விழிகள் அலைய, உடல் காற்றிலாடும் கொடியென உலைய, அவள் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் மரத்தில் நன்றாக சாய்ந்துகொண்டாள். கொடிநுனியைப் பற்றி கைகளால் சுழித்தபடி கன்னத்துக் குழல்சுருள் அலைபாய தலையசைத்து முகவாய் தூக்கி விழிகள் படபடக்க பேசிக்கொண்டிருந்த அவளை நோக்கி நான் காத்து நின்றேன்.

நெடுநேரம் கழித்து அவன் அருகே வந்தான். “யாதவனே, அவள் பெயர் கார்க்கி. இப்பகுதியின் எழுபத்திரண்டு மச்சர்குலங்களுக்கு அரசனாக உள்ள சூரியன் என்பவனின் இரண்டாவது மகள். அவள் தமக்கை பெயர் காளிந்தி. அவள் இங்கே ஒரு நாணல்மேட்டில் அமைந்த சிறுகுடிலில் ஏழாண்டு காலமாக தவம் செய்கிறாளாம்” என்றான். “எதன்பொருட்டு தவம்?” என்றேன். “வேடிக்கையாக இருக்கிறது. அவளுக்கு ஏழுவயதாக இருக்கையில் ஒரு முதுவைதிகன் இங்கு வந்திருக்கிறான். அவள் பிறவிநாளை கணித்து அவள் விண்ணாளும் திருமகளின் மண்வடிவம் என்றானாம். அவள் சந்தானலட்சுமி என்றும் அவளுக்கு நூற்றெட்டு மைந்தர் பிறப்பார்கள் என்றும் சொல்லி கைநிறைய பொன் பெற்று சென்றிருக்கிறான்.”

“வைதிகர் சொல்லறிந்தவர்கள்” என நகைத்தேன். “ஆம். இந்த மச்சர்கள் இப்போதுதான் மீனை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். படகோட்டி புளிந்தபுரிக்குச் சென்று மீன்கொடுத்து பொருள்கொண்டு மீள்கிறார்கள். அங்குள்ள கோட்டைகளையும் மாளிகைகளையும் படைகளையும் நூல்களையும் கலைகளையும் காண்கிறார்கள். அவர்களுக்குள் எழும் விழைவை பொன்னாக்கிக்கொள்ள வைதிகர் தேடிவந்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் பார்த்தன். “பாவம், அந்தப்பெண் அதை அவ்வண்ணமே நம்பிவிட்டிருக்கிறாள். தன்னை திருமகள் என்றே எண்ணிக்கொண்டு மண்ணில் எந்த மானுடரையும் மணக்கமாட்டேன், விண்ணளந்த பெருமாளுக்கே துணைவியாவேன் என்று உறுதிகொண்டு நோன்பு கொண்டிருக்கிறாள். அவள் தங்கை இவள், ஒவ்வொருநாளும் வந்து உணவு தேடித்தந்துவிட்டு செல்கிறாள். மற்றநேரமெல்லாம் அவள் இங்கே குடிலில் தனித்திருக்கிறாள்.”

“எளியவள்” என்றேன். “அந்த நோன்பையும் அம்முதிய வைதிகனே சொல்லியிருக்கிறான். இங்கே யமுனையின் கரையில் தவக்குடில் அமைத்துத் தங்கும்படியும் இப்புவியில் எவையெல்லாம் அவளுக்கு இனியவையோ அவையனைத்தையும் துறக்குமாறும் வகுத்துரைத்திருக்கிறான்” என்றான் பார்த்தன். “அவளுக்கு அவன் ஒரு தவநெறியையும் சொல்லியிருக்கிறான். யமுனையில் மின்னும் அத்தனை மீன்களையும் எண்ணி முடிக்கையில் அவளுக்கு விஷ்ணுவின் பேருருவத் தோற்றம் தெரியுமாம்.” அவனுடன் நானும் நகைத்தேன். “அந்த எளிய மச்சர்குலத்துப்பெண் அதை நம்பி இங்கு வந்து விழித்திருக்கும் நேரமெல்லாம் நதியில் மீன்களை நோக்கி எண்ணிக்கொண்டிருக்கிறாள்.”

“அவள் அதை ஈடுபட்டுச்செய்தால் அதுவும் தவமே” என்றேன். “வேதாந்தத்தை மறுபடியும் எடுக்காதே. மீன்களை எண்ணி முடித்துவிடுவாள் என்கிறாயா?” என்றான். “எண்ணவும்கூடும்” என்றேன். “அவள் தவத்தை இன்றே முடிக்கலாமென நினைக்கிறேன்” என்றான் பார்த்தன். “எப்படி?” என்றேன். “அவள் முன் சங்குசக்கர கதாயுதமேந்தி விண்நீல வடிவுகொண்டு நிற்கப்போகிறேன். பேருருவத் தோற்றம் கண்டு அவள் காதல் கொள்வாள்” என்றான். நான் சிரித்துக்கொண்டேன். “அவள் சூதர்பாடல்களிலும் சித்திரங்களிலும் கண்ட விண்ணளந்த பெருமாளை எண்ணிக்கொண்டிருக்கும் பேதை. அந்தச் சொற்களில் இருந்தும் வண்ணங்களில் இருந்தும் உருவாக்கப்பட்டதே கூத்தர்களின் விண்ணவன்” என்றபடி அவன் தன் ஆடைகளை களையத் தொடங்கினான்.

கூத்தர்களிடம் அவன் ஒப்பனைக்கலையை செம்மையாக கற்றிருந்தான். உருமாறுவதில் அவனுக்கு நிகரென பிறிதொருவனை நான் கண்டதில்லை. நீலமலர் சாறெடுத்து உடலில் பூசிக்கொண்டான். வண்ணக்கொடிகளால் மலராடை அமைத்தான். ஆழியும் சங்கும் செய்தான். “இருட்டுகிறது” என்றேன். “ஆம், அந்தியிருளில் செம்பந்தஒளியில் தோன்றினால்தான் கூத்துவேடம் விழிகளை ஏமாற்றும்” என்றான். “ஒரு பெண்ணுக்காக இத்தனை அணியமா?” என்றேன். “பெண்ணுக்காக அணிகொள்ளாத ஆடவன் உண்டா என்ன?” என்றான். “பெண்ணுக்கென பேடியும் ஆகலாம் என்றொரு சொல் உண்டு. தெய்வமாகலாகாதா என்ன?”

சங்கு சகடம் ஏந்தி கதை ஊன்றி அருள்புரியும் நான்கு தடக்கைகளுடன் அணிகொண்டு அவன் எழுந்தபோது விண்ணவன் என்றே தெரிந்தான். “திருமகளே நம்பிவிடுவாள் போலுள்ளது பாண்டவனே” என்றேன். “இவள் மச்சர்மகள். இவள் நம்பாமலிருக்க மாட்டாள்” என்றான். காய்ந்த எண்ணைப்புல் பிடுங்கி பந்தங்களாக கட்டிக்கொண்டான். “என்ன செய்யவிருக்கிறாய்?” என்றேன். “இப்பந்தங்கள் திடீரென அவள் குடில்முன் பெருந்தழலாக எரியும். நிழல்கள் எழுந்து கூத்தாட அவ்வொளியில் நான் எழுவேன். திருமகளே, உன் தவம் முடிந்தது. இன்னும் சற்று நேரத்தில் நான் மானுட உருக்கொண்டு உன்னிடம் வருவேன் என்பேன்” என்றான். “பந்தங்கள் சிலகணங்களில் அணைந்துவிடும். இருளுக்குள் மறைந்தபின் அணிகலைத்து என்னுருவில் அவளிடம் செல்வேன்” என்றான்.

“வென்று வருக!” என்று அவனை அனுப்பிவிட்டு யமுனைக்கரைப் பாறையிலேயே படுத்துக்கொண்டேன். விண்மீன்களை எண்ணிக்கொண்டிருந்தேன். சற்றுநேரம் கழித்து அவன் தொய்ந்த தலையுடன் வந்தான். “என்ன நடந்தது?” என்றேன். “நான் அனலில் பேருருக் கொண்டு எழுந்தேன். மச்சர்குலத்திருமகளே, உன் தவம் நிறைந்தது. நான் விண்ணளந்த பெருமாள் என்றேன். சீ, கூத்தனே விலகிப்போ என்று அருகிலிருந்த தூண்டில்முள்ளை எடுத்தபடி என்னை குத்தவந்தாள். அப்படியே ஓடிவந்து புதர்களுக்குள் ஒளிந்து தப்பினேன்” என்றான். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “சிரிக்காதே யாதவனே, என் மாறுதோற்றம் இதுவரை பிழைத்ததில்லை. இந்த மீனவப்பெண் எப்படி அறிந்தாள் என எண்ண எண்ண உளம் ஆறவில்லை” என்று சலித்தபடி என்னருகே அமர்ந்தான்.

“ஒருவேளை அவள் பெருமாளை முன்னரே கண்டிருப்பாள்” என்றேன். “நகையாடாதே. நான் உளம் சோர்ந்திருக்கிறேன்” என்றான். “நான் சென்று முயன்றுபார்க்கவா?” என்றேன். “இப்படியே செல்லப்போகிறாயா? வேடமிட்டுச் சென்றபோதே வெட்டவந்தாள்.” நான் “முயன்றுபார்க்கலாமே” என்றேன். “என் சங்குசகடத்தைக் கழற்றி அங்குள மகிழமரத்தடியில் போட்டேன். வேண்டுமென்றால் எடுத்துக்கொள்” என்றான். “தேவையில்லை” என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் சென்றேன்.

நாணல்புதர் நடுவே நாணலாலும் ஈச்சையோலையாலும் கட்டப்பட்ட சிறிய தவக்குடில் தெரிந்தது. நான் நேராகச்சென்று அதன் மூடிய மூங்கில்படல் கதவை திறந்தேன். உள்ளே அவள் தர்ப்பைப்பாயில் அமர்ந்து ஊழ்கத்திலிருந்தாள். என் ஓசைகேட்டு கண் திறந்து அஞ்சாமல் என்னை நோக்கினாள். நான் “பெண்ணே, யமுனையில் எத்தனை மீன்கள் உள்ளன?” என்று கேட்டேன். “ஒன்று” என்றாள். “உன் தவம் நிறைந்தது. உன்னை கொள்ளவந்த விண்ணளந்த பெருமாள் நானே, எழுக!” என்றேன். எழுந்து கைகூப்பி கண்ணீருடன் “என்னை ஆள்க என் தேவா” என்று சொல்லி அருகே வந்து பணிந்தாள். அவள் தோள்தொட்டு அணைத்துக்கொண்டேன்.

அரசியர் புன்னகை செய்தனர். திருஷ்டத்யும்னன் வியப்புடன் “நீங்கள் எப்படி தோற்றமளித்தீர்கள்?” என்றான். “இதோ உங்கள்முன் எப்படி இருக்கிறேனோ அப்படி” என்றார் இளைய யாதவர். “அவள் நம்பிவிட்டாள். ஏன் என்று அவளுக்கே தெரியும். பலமுறை முன்னரும் கேட்டிருக்கிறேன். சிரித்தபடி தலைகுனிவாள். அவள் என்ன கண்டாள் என்று அறிய நானும் விழைகிறேன்” என்று நகைத்தபடி காளிந்தியை நோக்கினார். அவள் நாணப்புன்னகையுடன் தலைகுனிந்தாள். “எப்போதும் இவள் மறுமொழி இதுதான்” என்றார் இளைய யாதவர். “மிகமிகக் கழிந்து ஒருநாள் கேட்டேன், அவள் கண்டதென்ன என்று. ஆழிவெண்சங்கு ஏந்திய பரந்தாமனின் பேருருவம் என்கிறாள். எப்படி என்று அறியேன்.”

ருக்மிணி “வேறென்ன, மது அருந்தியிருப்பாள்” என முணுமுணுத்தாள். சத்யபாமா “இதிலென்ன ஐயம் இருக்கிறது? தங்கள் தோள்களில் ஆழியும் சங்கும் உள்ளது. துவாரகைத் தலைவர் என நோக்கும் எவரும் அறியமுடிடியும். மீன்பிடித்து கூழுண்டு வாழும் பெண்ணுக்கு அதைவிட நல்ல தருணம் ஏது அமையப்போகிறது?” என்றாள். நக்னஜித்தி புன்னகைசெய்தாள். பத்ரை “அத்துடன் தங்களுக்கும் அவளை கைகொள்ளவேண்டிய தேவை இருந்தது. இந்த மணம் வழியாக புளிந்தர்நாட்டு எல்லையில் துவாரகையின் நட்பரசு ஒன்றை அமைத்துக்கொண்டீர்கள். புளிந்தர்களை அதைக் காட்டியே அச்சுறுத்தி அடிபணியச்செய்தீர்கள். இவளை தாங்கள் மணக்கையில் இவள் தந்தை சூரியர் நூறு படகுகளுக்குத் தலைவர் மட்டுமே. இன்று தன்னை மச்சர்குலத்து அரசர் என்று சொல்லிக்கொள்கிறார். பொன்னால் ஒரு மணிமுடி செய்து சூடிக்கொள்வதாகவும் அரியணையும் வெண்குடையும் வைத்து சாமரமும் கூட கொண்டிருப்பதாகவும் கேள்வி” என்றாள்.

“இவள் அன்னை தன்னை மச்சர்குலப்பேரரசி என்று அறிவித்து அரசோலை ஒன்றையும் கோசலத்துக்கு ஒருமுறை அனுப்பினாள்” என்றாள் நக்னஜித்தி. பிற அரசியர் அனைவரும் புன்னகை செய்தனர். “ஆம், இவளை மணந்தது எனக்கு அரசியல் நலன்களை அளித்தது. புளிந்தநாட்டுக்கு அருகே வலுவான மச்சர்கூட்டமைப்பு ஒன்று எனக்கிருப்பதனால் யமுனை முழுமையாகவே மதுராவின் ஆட்சியின்கீழ் இன்று உள்ளது” என்றார் இளைய யாதவர். “இன்று நான் இவளைப் பார்த்த நன்னாள். ஆகவேதான் எண்மரையும் இங்கே வரும்படி சொன்னேன். அப்போதுதான் சியமந்தகத்துக்கான பூசல் நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்தேன்.”

சத்யபாமை “என்ன பூசல்? எனக்கொன்றும் பூசலில்லை. நான் அதை தங்களுக்கே அளித்துவிட்டேன். தங்களுக்குரியது அரசியர் எண்மருக்கும் பொதுவானதே. அதை ஜாம்பவதியிடம் அளிக்கக்கோரி பாஞ்சாலரிடம் நேற்றே அளித்துவிட்டேன்” என்றாள். ருக்மிணி “அரியகற்களை அரசகுடியினரன்றி பிறர் சூடும் வழக்கம் இல்லை. அதை ஷத்ரிய அவை ஏற்காது… நான் அதை மட்டும்தான் சொன்னேன்” என்றாள். நக்னஜித்தி “ஆம், நானும் அதைமட்டுமே சொன்னேன்” என்றாள். பத்ரை “நான் அக்ரூரரை அழைத்து சியமந்தகம் ஜாம்பவதிக்கு அளிக்கப்படலாகாது என்று ஆணையிட்டேன். மறுக்கவில்லை” என்றாள். “அதுவே குலமுறை. நான் சொன்னதில் பிழையேதும் உண்டு என நினைக்கவில்லை.” திரும்பி அக்ரூரரிடம் “அந்த ஆணையை அவர் மேற்கொண்டாரா என அறியவிழைகிறேன்” என்றாள்.

“அரசி, சியமந்தகம் ஜாம்பவதியிடம் அளிக்கப்படவில்லை” என்றார் அக்ரூரர். முகம் மலர்ந்த பத்ரை “நான் விரும்பியது அதுவே” என்றாள். “பிற எவரிடமும் அளிக்கப்படவில்லை, பத்ரை” என்றார் இளைய யாதவர். “அதை நேராக இங்கே கொண்டுவரும்படி நான் பாஞ்சாலரிடம் ஆணையிட்டேன். கொண்டு வந்துள்ளீர் அல்லவா?” ஒருகணம் திகைத்த திருஷ்டத்யும்னன் “ஆம், என்னிடம் உள்ளது” என்றான். தன் கச்சையிலிருந்து அந்தச் சிறிய பேழையை எடுத்து குறுபீடத்தில் வைத்தான்.

“அரசே, இது தங்கள் ஆடல் என நாங்கள் அறிவோம். இந்த மணி அரசகுடியினருக்குரியது. இதை எங்களில் எவர் சூடவேண்டுமென தாங்கள் ஆணையிடவேண்டும்” என்றாள் பத்ரை. ஜாம்பவதி “இந்த மணியை என் கழுத்தில் அணிந்து விளையாடியிருக்கிறேன். என் தந்தையால் கன்யாசுல்கமாக அளிக்கப்பட்டது இது. யாதவ அரசிக்குப்பின் இதில் உரிமைகொண்டவள் நானே” என்றாள். ருக்மிணி “பட்டத்தரசியாக எனக்கு இல்லாத உரிமை இங்கு எவருக்கும் இல்லை” என்றாள். “துவராகையின் அரசியாக ஆனபின்னர் நான் எவரென ஆக்குவது குலமோ குடியோ அல்ல. நான் இந்நகரின் அரசி, என் உரிமையை ஒருநாளும் விட்டுத்தரமாட்டேன்” என்றாள் லக்ஷ்மணை.

“இதைத்தான் பூசல் என்றேன்” என்று இளைய யாதவர் சிரித்தார். “நான் என்ன சொன்னாலும் அது மேலும் பூசலையே வளர்க்கும். ஆகவே அருமணிதேரும் அலைநோட்டக்காரர் ஒருவரை வரச்சொல்லியிருக்கிறேன்” என்றபின் திரும்பி “அக்ரூரரே, சாந்தரை வரச்சொல்லும்” என்றார். அக்ரூரர் தலைவணங்கி உள்ளே சென்று பெரியதலைப்பாகை அணிந்த பழுத்த முதியவருடன் திரும்பிவந்தார். பெருவணிகர்களுக்குரிய மணிக்குண்டலங்கள் அணிந்து மார்பில் பவள ஆரம் அணிந்திருந்தார். “துவாரகை அரசரையும் எட்டு திருமகள்களையும் வணங்குகிறேன்” என்றார் சாந்தர். அவரது நடையில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. அவர் தன்னைநோக்கி திரும்பியபோதுதான் அவரது விழிகளை திருஷ்டத்யும்னன் கண்டான். மரத்தில் செதுக்கப்பட்டவை போலிருந்தன அவை.

“சாந்தர் தெற்கே கிருஷ்ணையின் கரையிலுள்ள குந்தலர்களின் நகரான விஜயபுரியை சேர்ந்தவர். அங்கே வைரங்கள் நதிகளில் விளைகின்றன. மணிநோட்டத்தை பன்னிருதலைமுறைகளாக அவர் குலம் செய்துவருகிறது” என்றார் இளைய யாதவர். விழியிழந்தவரா மணிநோக்குவது என திருஷ்டத்யும்னன் வியந்தான். அவருக்கு விழியில்லை என்பதை அப்போதும் உணராமல் “நமது கருவூலத்து மணிகளை நோக்கும்பொருட்டு அவரை நான் வரச்சொன்னேன்” என்ற சத்யபாமா “சியமந்தகத்தை எவர் நோக்கி மதிப்பிடவேண்டும்? அது முழுமைகொண்ட மணி என்பதை உலகறியும்” என்றாள். “அரசி, மணிகள் அனைத்தும் முழுமை கொண்டவை. நாம் ஆராய்வது அவற்றுக்கும் அவற்றைச் சூடும் மானுடருக்குமான உறவென்ன என்பதைப்பற்றி மட்டுமே” என்றார் சாந்தர். அவரது விழியின்மையை அப்போது உணர்ந்துகொண்ட சத்யபாமா திகைத்து பிறரை நோக்கினாள். அத்தனை முகங்களிலும் குழப்பம் தெரிந்தது.

இளைய யாதவர் “ஆம், நான் அதை நோக்கவே வரச்சொன்னேன். பதிட்டை பெயர்ந்து பலிகொள்ளத்தொடங்கும் தெய்வம் போலிருக்கிறது சியமந்தகம். இதற்குள் அது தன்னை உரிமைகொண்டிருந்த இருவரை உண்டுவிட்டிருக்கிறது. ஆகவே அதை சூடத்தக்கவர் எவர் என நோக்கலாமென்று தோன்றியது” என்றார். சத்யபாமா “அதை எப்படி கணிப்பீர்கள் சாந்தரே? பிறவிநூல்படியா?” என்றாள். “இல்லை அரசி, அரியமணிகள் மானுடர் தொடும்போது உயிர்கொள்கின்றன. அவற்றின் ஒளியில் நுண்ணிய வண்ண மாற்றம் நிகழ்கிறது. அந்தமாற்றத்தைக் கொண்டு அவருக்கும் மணிக்குமான உறவை அறியமுடியும்.” அவர் தன் தோல்பையை வைத்து உள்ளிருந்து ஒரு சந்தனப்பெட்டியை வெளியே எடுத்தார். அதனுள் சிறிய நிறமற்ற படிகக்கல் இருந்தது. “அருமணி அடையும் நிறமாற்றத்தை பெரிதாக்கி அந்த புதுநிறத்தை மட்டும் இது காட்டும்.”

“அரசியரே, உயிர்கள் மானுடரின் தொடுகையை அறிகின்றன. நாய்க்குட்டிகள் சிலர் கைகளில் அஞ்சாது உறங்கும். சிலரிடமிருந்து தவழ்ந்து வெளியேறத்துடிக்கும். சிலர் கைகளில் நடுங்கிக்கொண்டே இருக்கும். அருமணிகளும் அவ்வாறே. அவை மண்ணின் ஆழத்திலிருந்து வந்தவை என்று உணர்க! அவற்றில் ஆழத்தின் தெய்வங்கள் குடிகொள்கின்றன. அவை மானுட ஆழத்தையும் நன்கறியும்.” அவர் பேசியபடியே தந்தப்பேழையைத் திறந்து சியமந்தகத்தை வெளியே எடுத்தார். அவர் கையில் நீலத்துளி போல மெல்லிய ஒளியுடன் அது இருந்தது. அதை தன் முகத்தருகே தூக்கி “அரிய கல். மருவற்றது. யுகங்களுக்கு ஒருமுறை தன்மேல் நிகழும் வாழ்க்கையை நோக்க நிலத்தாள் எழுப்பி அனுப்பும் விழிகளில் ஒன்று” என்றார்.

“எப்படி தெரியும்?” என்றாள் ருக்மிணி. “என் விழிகளுக்கு அருமணிகளின் ஒளி மட்டும் ஓரளவு தெரியும்…” என்றார் சாந்தர். “ஆனால் இது தழலென எரிகிறது.” அவர் அதை திருப்பித்திருப்பி நோக்கினார். “இருளின் ஒளி. காமாந்தகமும் மோகாந்தகமும் குரோதாந்தகமும் கடந்த சியாமாந்தகம்…” அவர் முகம் விரிந்தது. முகச்சுருக்கங்கள் இழுபடும் வலையென அசைந்தன. புன்னகையுடன் “அத்தனை ஆழத்திலிருந்து ஒரு பொருள் மண்ணுக்கு வரக்கூடாது அரசியரே. யானையின் மத்தகத்தில் சிற்றுயிர்கள் வாழ்வதுபோல மண்மீது மானுடர் வாழ்கிறார்கள். ஆழத்தில் உறையும் கன்மதத்தை அவர்கள் தாளமாட்டார்கள்.”

பெருமூச்சுடன் அதை திரும்ப வைத்தார். “ஏதோ ஒரு தீயகணத்தில் ஆழத்திலிருந்து இதையன்றி பிறிது எதையும் காணமுடியாத விழி ஒன்றால் இது மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. நாளோன் பேரொளியிலிருந்து அனலோன் கொண்ட விழி.” சத்யபாமா “இதை சூரியவடிவமாக என் குலம் வழிபடுகிறது” என்றாள். “சூரியனை வழிபட அருமணி எதற்கு? அன்று மலரும் ஓர் எளிய மலர்போதுமே?” என்றார் சாந்தர். “எட்டு தேவியரில் இந்த மணிக்குரியவர் எவர் என்று சொல்லுங்கள் சாந்தரே” என்றார் அக்ரூரர். “ஆம், அதைத்தான் எனக்குப் பணித்தார்கள்” என்றார் சாந்தர். “முதல் அரசி தன் வலக்கையை நீட்டட்டும்.”

சத்யபாமா கைநீட்டினாள். அவர் அதில் சியமந்தகத்தை வைத்தார். “அரசி, மணி என்பது பொருளற்றது. ஒளியுமிழும் வெறும் கல் அது. உங்கள் உள்ளத்திலிருந்து பெற்ற ஒளியைப் பெற்று அது சுடர்கிறது. இந்த மணி உங்களுக்கு எப்படிப் பொருள்படுகிறதென எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் அகஒளி இதில் எழட்டும்.” சத்யபாமா தயங்கியபடி இளைய யாதவரை நோக்கினாள். பின்பு கண்களை மூடினாள். அவள் கையில் இருந்த மணியினுள் மெல்லிய ஒளிமாற்றம் ஒன்று நிகழ்வதை திருஷ்டத்யும்னன் கண்டான். சாந்தர் அந்தப் படிகத்தை அதன் மேல் வைத்தார். அதிலிருந்த குழிக்குள் சியமந்தகம் அமைந்தது.

படிகம் செவ்வொளி வீசத்தொடங்கியது. முதலில் குருதி நிறைந்த பளிங்குக் கிண்ணம் போலிருந்தது. பின்பு காற்றில் சீறும் கனலாக ஆகியது. அந்த செங்கதிர் அங்கிருந்த அத்தனை விழிகளிலும் தெரிந்தது. சாந்தர் படிகத்தை எடுத்தார். மணியை திரும்ப எடுத்து தந்தப்பேழையில் வைத்தபடி “தூய ரஜோ குணம் தேவி. உங்களுள் இருக்கும் இறைவன் மூன்றாவது அடி மண் விழைந்து பேருருவக் கால் தூக்கி நின்றிருக்கிறான். வென்று மேல்செல்ல மண்கொள்ள விழைகிறீர்கள். இந்த மணி உங்களுக்கு குருதிபூசிய ஒரு வாள். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

ருக்மிணியின் கைகளில் சியமந்தகத்தை வைத்தார். அவள் கண்களை மூடிக்கொள்ள மணி ஒளிபெறத் தொடங்கியதும் அதன்மேல் படிகத்தை வைத்தார். பால்நிறைந்த பளிங்குக்குவளை என ஆயிற்று படிகம். “சத்வ குணம் தேவி. உங்களுள் எழுந்த பாலாழியில் இறைவன் நாவாயிரம் கொண்ட நச்சரவம் மீது விழிமூடி அறிதுயிலில் பள்ளிகொள்கிறார். பிற ஏதுமின்றி அவனை முழுதடைய விழைகிறீர்கள். பணிந்து காலணைத்து பணிவிடைசெய்ய எண்ணுகிறீர்கள். இந்த மணி உங்களுக்கு ஒரு பால்கிண்ணம். ஆம் அவ்வாறே ஆகுக!”

ஜாம்பவதியின் கையில் அதை வைத்தபோது கருநீல ஒளி எழுந்தது. “முழுமையான தமோகுணம் அரசி. உங்களுள் எழுந்த தேவன் மண்மகளை வாளெயிற்றில் ஏற்றிவைத்த வராகம். கரிய மேனி. எரிமதம் கொண்ட கண்கள். அடியளந்து எழுந்து விண் தொட்ட பேருருவம். நீங்கள் அறிந்த அவனை அவனும் அறியலாகாதென்று எண்ணுகிறீர்கள். இந்த மணி நீங்கள் இளமையில் வழிதவறிச்சென்ற ஓர் இருட்குகை. அதன் சுவரில் முகமயிர் சிலிர்க்க விழிச்செம்மை எரிய நீங்கள் கண்ட கரிய பன்றி. ஓம் அவ்வாறே ஆகுக!”

லக்ஷ்மணைக்கு பொன்னிறம் எழுந்தது. “சத்வ ரஜோகுணங்களின் கலவை. பொற்சிறகுகள் கொண்ட கருடனின் மேல் ஏறிவரும் ஒளிமயமானவனை எண்ணுகிறீர்கள் அரசி. பீதாம்பரன். அவனை இசைவடிவாக எப்போதும் உள்ளத்து யாழில் மீட்ட விழைகிறீர்கள். ஆம் அவ்வாறே ஆகுக!” மித்திரவிந்தைக்கு பச்சை நிறம் தெரிந்தது. “சத்வ தமோகுணக்கலவை. அரசி, உங்களுக்குள் எழுந்தருளியிருப்பவன் நீங்கா நிலைபேறுடைய அச்சுதன். அனைத்து வளங்களுக்கும் முழுமுதலானவன். அவனை உங்களுக்குள் நிறைத்து முடிவிலாது மலர்ந்து எழ எண்ணுகிறீர்கள். ஓம் அவ்வாறே ஆகுக!”

பத்ரைக்கு செந்நீலம். “தமோரஜோ குண இணைவு அரசி. செம்பிடரித் தழலென கதிரலைய உறுமியெழும் ஆளரி உங்கள் இறைவன். அவனுக்கிணையாக எரியுமிழும் விழிகளுடன் எழும் சிம்மம் மீதேறி போரிட விழைகிறீர்கள். ஓம் அவ்வாறே ஆகுக!” நக்னஜித்திக்கு கருஞ்செம்மை நிறம். “ரஜோதமோகுணம் அரசி. உங்களுக்குள் அமர்ந்திருப்பவன் ஜனார்த்தனன். பிறவிப்பெரும்பாதையை வெல்பவன். இறப்பை வென்று முடிவின்மையை அவனுடன் கொள்ள விழைகிறீர்கள். ஓம் அவ்வாறே ஆகுக!”

“தங்கள் அருட்கையை நீட்டுங்கள் அரசி” என்றார் சாந்தர். காளிந்தி சற்று தயங்க “இன்று உன்னுடைய நாள் அரசி. நீட்டு” என்றார் இளைய யாதவர். அவள் நாணத்துடன் எழுந்து முன்வந்து அவர் காலடியில் முழந்தாளிட்டு தரையில் அமர்ந்து கைநீட்டினாள். சாந்தர் சியமந்தகத்தை அவள் கையில் வைத்தார். அவள் விழிமூடி எண்ணிக்கொள்ள அது நீலநிறமான கூழாங்கல் போல தெரிந்தது. சாந்தர் கூர்ந்து அதை நோக்கியபடி நன்றாக குனிந்தார். திருஷ்டத்யும்னனும் அது விழிமயக்கா உளமயக்கா என்று அறியாதவனாக கண்களை இமைகொட்டினான்.

மேலும் சற்றுநேரத்தில் அது விழியறியும் உண்மையே என தெளிந்தது. அரசியரும் குனிந்து அதை நோக்கினர். சத்யபாமா சற்று முன்னால் சரிய அவள் அமர்ந்திருந்த பீடம் கிரீச்சிட்டது. சியமந்தகம் கதிரவன் மறைகையில் அணையும் மலர்கள்போல நோக்கியிருக்கவே மேலும் ஒளியணைந்தது. நீலம் இளநீலமாகத் தெளிந்து நிறமிழந்து வெறும் பளிங்குத்துண்டென ஆயிற்று. ஒரு நீர்த்துளி என அவள் கையில் இருந்தது.

சாந்தர் “என்ன ஆயிற்று?” என நடுங்கும் குரலில் கேட்டார். “என்னால் எதையும் பார்க்கமுடியவில்லை.” குழப்பத்துடன் “அது முற்றிலும் நிறமிழந்துவிட்டது” என்றார் அக்ரூரர். “நிறமிழந்ததா? அவ்வண்ணமெனில் இவ்வறைக்குள் நீல ஒளி இருந்தாகவேண்டும்” என்றார் சாந்தர். “இல்லை, அறைக்குள் இயல்பான வானொளியே உள்ளது” என்றார் அக்ரூரர். சாந்தர் அதன் மேல் தன் படிகத்தை வைத்தார். படிகம் வெறும் வெண்கல் போல ஒளியிழந்திருந்தது. அவர் “எனக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்றார்.

“படிகம் சுண்ணம்போலிருக்கிறது சாந்தரே” என்றார் அக்ரூரர். “அனைவருக்குமா?” என்றார். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “அப்படியென்றால் இது அருமணி அல்ல. ஐயமே இல்லை.” சத்யபாமா சீற்றத்துடன் “என்ன பேசுகிறீர்கள் என்று தெரிகிறதா? இதே அவையில் சற்றுமுன் யுகங்களுக்கு ஒருமுறை மானுடர் அறியும் அருமணி என்றீர்கள்” என்றாள். சாந்தர் “ஆம், அப்போது அப்படி தெரிந்தது. ஆனால் இப்போது அது வைரமல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. என்ன மாயமென்று அறியேன். ஆனால் அந்த வைரம் அல்ல இது.”

அவர் நடுங்கும் கைகளால் சியமந்தகத்தை எடுத்து தன் கண்ணருகே நீட்டினார். சிப்பி போன்ற வெண்விழிகள் நடுவே கூழாங்கற்கள் போல புடைத்த மணிவிழிகள் உருண்டு உருண்டு தவித்தன. “என் தொடுகை இதுவரை பிழைத்ததில்லை. உறுதியாகச் சொல்வேன், இது ஒன்பது அருமணிகளிலோ ஒன்பது நல்மணிகளிலோ ஒன்று அல்ல” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்றாள் ருக்மிணி. “ஐயமே இல்லை. இது தெய்வங்கள் எனக்களித்த ஆணவச்சிதைவு. ஆம், நான் பிழைசெய்துவிட்டேன், இது மணியே அல்ல. வெறும் கூழாங்கல்.”

“ஆம் சாந்தரே, வெறும் கூழாங்கல்தான்” என்றார் இளைய யாதவர். “முன்பொருகாலத்தில் விழியிழந்த ஒருவரின் உளமயக்கால் அது தன்னை அருமணியாக ஆக்கிக்கொண்டது. பலநூறு விழியின்மைகள் வழியாக இக்கணம் வரை வந்தடைந்தது.” சாந்தர் கைகூப்பினார். காளிந்தி விழிகளைத் திறந்து திகைத்து அமர்ந்திருந்த அவையை ஒன்றும் புரியாமல் நோக்கினாள். “அருமணி கூழாங்கல்லாக ஆனதென்றால் என்ன குறி அதற்கு? சொல்லும்!” சாந்தர் “அப்படி நான் கண்டதில்லை. நூலறிவால் மட்டுமே சொல்லமுடியும்” என்றார். “சொல்லும்” என்றார் இளைய யாதவர்.

“கதாம்ருத சாகரம் ஒரு கதையை சொல்கிறது. முன்பொருமுறை குபேரன் தன் கருவூலத்தை நிறைத்திருந்த அருமணிகளை எண்ணி ஆணவம் கொண்டிருந்தான். அவனைக் காணவந்த நாரதரிடம் அவற்றைக் காட்டி பெருமை பேசினான். உன் கருவூலத்திலேயே மதிப்புமிக்க மணி எது என்று கேட்டார். அதிலிருந்த ஷீரபிந்து என்னும் மணி விண்ணளந்தோன் பள்ளிகொண்ட பாலாழிக்கு நிகரானது என்று அவன் சொன்னான். அப்பாலாழியை தன் ஆயிரமிதழ்த் தாமரையில் திறந்த நுண்விழியால் நோக்கி அமர்ந்திருக்கிறார் அருந்தவத்தாரான பிருகு. அவர் இந்த மணியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று நோக்கு என்றார்.”

“குபேரன் ஷீரபிந்துவை கொண்டுசென்று தவத்தில் மூழ்கியிருந்த பிருகுமுனிவரின் கைகளில் வைத்தார். அவர் விழிதிறந்து நோக்கி அதன் ஒளியைக் கண்டு உளமழிந்து தவத்தை கைவிடுவார் என எண்ணினான். ஆனால் அந்த மணி அவரது கைகளில் வைக்கப்பட்டதும் எளிய கூழாங்கல்லென ஆயிற்று. பதறிப்போன குபேரன் ஓடிச்சென்று அதை எடுத்து நோக்கினான். அது கூழாங்கல்லாகவே இருந்தது” சாந்தர் சொன்னார். “மகா யோகிகள் அருமணிகளை தொடமாட்டார்கள், தொட்டால் அவை கூழாங்கற்களென ஆகிவிடும் என்பார் என் தந்தை.”

இளைய யாதவர் புன்னகைத்து “சாந்தரே அவர்கள் பிழையாகச் சொல்லவில்லை. என்னருகே அமர்ந்திருக்கும் இவள் மானுடம் அறிந்த மாபெரும் யோகிகளுக்கு நிகரானவள். இந்த மணியை கையில் வைத்திருக்கையில் இவள் எண்ணியது இருமையென ஏதுமற்ற பரம்பொருளின் மெய்த்தோற்றத்தை” என்றார். “என் தேவியரில் எனக்கு அணுக்கமானவள் இவளே. என் குழந்தைப்பருவத்தில் இன்பெருக்கோடும் கரிய நதியென வந்து என்னை ஆட்கொண்டவள். என் வேய்குழல் போல என்னுடன் எப்போதும் இருப்பவள். என்றும் என்னுடன் முதலில் இணைத்துப் பேசப்படவேண்டியவள் இவளே” என்றார்.

திருஷ்டத்யும்னன் ஒருகணம் உளம்பொங்கிவிட்டான். அதன் ஒலியென சாத்யகி மெல்ல விம்முவதை கேட்டான். இளைய யாதவர் தன்னருகே நீலமலர் ஒன்றை வைத்திருந்தார். பனியீரத்துடன் அப்போது அலர்ந்தது போலிருந்தது அது. “இம்மலர் இவள் குழலில் என்றும் வாடாது ஒளிவிடுக!” என்று அவள் குழலில் சூட்டினார். “இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மணப்பரிசை அளித்தேன். பொன்னை, மணியை, மண்ணை. இவளை மணம் கொள்ளச் செல்லும்போது இவள் தந்தைக்கு நீலமலர் ஒன்றை மட்டுமே கன்யாசுல்கமாக அளித்தேன்” என்றார்.

உளஎழுச்சியால் காளிந்தி கைகளை விரித்து முகம்பொத்தி தலைகவிழ்ந்தாள். அவள் கழுத்தும் கன்னங்களும் புல்லரித்து பாலையில் மழைத்துளி விழுந்ததுபோல புள்ளிகளாக ஆகிவிட்டிருந்தன. சத்யபாமா எழுந்து சென்று அவள் வலக்கையைப்பற்றி “இப்புவியில் நீயே பேரருள் பெற்றவள் இளையவளே, நீடூழி வாழ்க!” என்று இடறிய குரலில் சொன்னாள். ருக்மிணியும் எழுந்து சென்று அவள் மறுகையைப் பற்றி “எழுக துவாரகையின் முதன்மை அரசி!” என்றாள். பிற ஐந்து அரசியரும் எழுந்து கண்களில் நீருடன் கைகூப்பினர்.

இளைய யாதவர் சுபத்திரையிடம் “இளையவளே, இந்தக்கல்லை எடுத்துக்கொள்” என்றார். தலைவணங்கிய சுபத்திரை முன்னால்வந்து இயல்பாக சியமந்தகத்தை எடுத்து சாளரம் வழியாக வெளியே போட்டாள். அது சென்று அலையோசையாகக் கேட்ட கடலில் விழுந்த தொடுகையை ஒவ்வொருவரும் தங்கள் உடலால் உணர்ந்தனர். சாத்யகி நீள்மூச்செறிந்தான். திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி புன்னகை செய்தான். நீல ஆழத்தில் அது சென்று அமையும் காட்சியை காணமுடிந்தது. இளைய யாதவர் “நாம் இன்னமுது உண்போம்” என்றார்.