எழுதழல் - 2

ஒன்று : துயிலும் கனல் – 2

fire-iconமுதற்காலைக்கும் முந்தைய கருக்கிருளில் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பு அதன்மேல் எரிந்த பந்தங்களின் ஒளியாக மட்டும் தெரிந்தது. மலைவளைவுகளில் காட்டெரியின் சரடுபோல. சகுனி புரவியின் கடிவாளத்தைப் பற்றி அதை பெருநடையில் ஓடவிட்டுக்கொண்டு சென்றார். அவர் சென்ற குளம்படியோசையை குறுங்காடு வெவ்வேறு இடங்களில் எதிரொலித்துக் காட்டியது. காடெங்கும் இலைநுனிகளிலிருந்து பனித்துளிகள் சொட்டும் ஓசை மழைவிட்ட பொழுதென கேட்டது.

கோட்டைமுகப்பின் பெருமுற்றத்தில் வணிகர்களின் தட்டிக்குடில்களும் பாடிவீடுகளும் செறிந்திருந்தன. அப்பால் கோட்டைவாயிலுக்கு இரு பக்கமும் நீண்டிருந்த சாவடிநிரைகளின் சாளரவிளக்குகள் நீண்ட செவ்வொளிக்கோடென வடக்கு தெற்கு எல்லைகள் வரை தெரிந்தன. அவிழ்த்திட்ட வண்டிகளுக்கு அடியிலேயே துணிகட்டி மறைத்து பெண்கள் துயில முற்றங்களிலேயே பாய் விரித்து தேன்மெழுகு சேர்த்து இறுகப் பின்னப்பட்ட நாணல்பாய்களால் தலைமூடிப் போர்த்திக்கொண்டு ஆண்கள் துயின்றனர். பனி துளித்து வழிந்த அவற்றின் சரிவுகளில் பந்தங்களின் ஒளி மின்னியது. புரவிகளும் மாடுகளும் மெழுகுப்பரப்பு கொண்ட பாய்களை உடல்மேல் அணிந்தபடி குளிருக்கு மெய்ப்புகொண்டும் கால்மாற்றிவைத்தும் நீள்மூச்செறிந்தும் அரைத்துயிலில் வால்சுழற்றியபடி நின்றன.

அவருடைய புரவியின் குளம்படியோசை கோட்டைமேல் முட்டி திரும்பிவந்தது. அங்கிருந்து புரவிகள் சில கிளம்பி அருகணைவதுபோலத் தோன்றியது. முற்றத்தின் எல்லையில் ஒருவர் மட்டும் அமருமளவுக்கு சிறிய மரக்குடிலுக்குள் வேலுடன் அமர்ந்திருந்த காவல்வீரன் எழுந்து வேல்நீட்டி “சொல்!” என்றான். சகுனி சொல்வதற்குள்ளாகவே அடையாளம் கண்டுகொண்டு தலைவணங்கினான். விரைவழியாமலேயே சகுனி கோட்டை நோக்கி சென்றார். காவல்வீரன் சிறுநெய்விளக்கை சுழற்றிக்காட்டியமையால் கோட்டைவாயிலில் காவலர் சொல்லின்றித் தலைவணங்கி திட்டிவாயிலை திறந்தனர்.

புரவி உடல் குறுக்கிக் காலெடுத்துவைத்து உள்ளே நுழைந்தது. அஸ்தினபுரிக்குள் நுழைந்ததும் காணாக் கைகள் வந்து உடலைப் பற்றிக்கொள்ளும் உணர்வை அவர் அடைவதுண்டு. வலக்கையால் தலைப்பாகையையும் மேலாடையையும் சீரமைத்துக்கொண்டார். உள்கோட்டைமுற்றம் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. முந்தையநாள் இரவின் காவல்மாற்றத்தின்போது பதிந்த காலடிச்சுவடுகள் பூழியில் பரவியிருந்தன. சூழ்ந்திருந்த மரங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் குதிரைக்குளம்படி கேட்டு கலைந்து ஓசையிட்டன. சில எழுந்து இருளில் சிறகடித்துச் சுழன்று வந்து அமைந்தன. அவர் புரவியை இழுத்து நிறுத்தி நகரின் தெருக்கள் அந்த முற்றத்திலிருந்து பிரிந்து செல்வதை நோக்கிக்கொண்டு நின்றார்.

அஸ்தினபுரி ஒரு மாபெரும் நாற்களப் பலகை என ஒருமுறை அவர் பேச்சின்போது கணிகரிடம் சொன்னார். ஒவ்வொரு முறை அதன் முகப்பில் நிற்கையிலும் ஒரு புதிய ஆடலுக்காக கருநிரத்தும் உணர்வையே அடைந்தார். மெல்லிய முரசதிர்வை கேட்டு திரும்பி நோக்கினார். கோட்டைமேல் அவர் வருகையை உணர்த்தும் காந்தாரத்தின் கொடி மேலேறிக்கொண்டிருந்தது. இருளில் அவரால் கொடியை பார்க்கமுடியவில்லை. கொடிக்கம்பம் மேலிருந்த ஈச்ச இலைக் குறி மட்டும் வானப்புலத்தில் தெரிந்தது. கொடி மேலே சென்று அமைவது வரை அவர் நோக்கிக்கொண்டு அசையாமல் நின்றார்.

பின்னர் புரவியைத் தட்டி மெல்ல நடக்கவிட்டார். தரையில் கிடந்த கருகிய வாழையிலை ஒன்று காற்றில் அலைபாய்ந்து எழுந்து அவரை நோக்கி வந்து தயங்கி நின்றது. மிக அப்பால் எங்கோ அவர் மணத்தை பெற்றுக்கொண்டு களிறு ஒன்று உறுமியது. பிடியானை ஒன்று மறுமொழி இறுத்தது. அவர் வருகை கோட்டைக்காவல்மாடங்களிலிருந்து சுடர்ச்சுழற்சி வழியாக அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த காவல்மாடங்கள் வழியாக வானில் கடந்து செல்வதை அவர் கண்டார். மேற்கிலிருந்து வந்த காற்றில் ஏரியின் பாசிமணம் இருந்தது. அது சுழன்று சென்றுமறைந்தபின் வடக்கிலிருந்து திரும்பிவந்தது. அதில் பச்சிலைமணம் இருந்தது.

அந்தக் களிறு ஏன் ஓசையிட்டது என்று எண்ணிக்கொண்டார். புண்ணின்மேல் வருடும் மெல்லிய தூவல்போல அந்த ஓசை ஏதோ நினைவை எழுப்பியது. அது எதுவென்று உணரமுடியவில்லை. ஆனால் விடியலுக்கு முன்பு உள்ளம் நெகிழ்நிலையில் இருக்கிறது. இது பிரம்மனின்பொழுது. புடவி இன்னும் உருவாகி வரவில்லை. ஒவ்வொன்றும் அதன் கருநிலையில் உள்ளது. உள்ளமும் கூட. அவர் புரவியைத் திருப்பி வடக்குவாயிலை நோக்கி சென்றார். அங்காடித்தெருக்கள் மட்கிய உமி, எண்ணைக்காறல், அழுகல்காய், உலர்மீன் என வெவ்வேறுவகை கெடுமணங்கள் கலந்த காற்று அலையடித்துக் கொண்டிருக்க தோல்கூரைகள் கொப்பளித்து எழுந்தமைய அமைதியில் மூழ்கிக்கிடந்தன. தெருநாய்கள் எழுந்து குரைத்தபடி புரவியின் கூடவே ஓடின. குளம்படியோசை கேட்டு அதிர்ந்த பெருச்சாளிகள் சுவர்மூலைகளில் செவி விடைக்க கண்மின்ன அசைவிலாது நின்றன.

சூதர்த்தெருக்களையும் தச்சர்தெருக்களையும் கடந்து வடக்குவாயிலை நோக்கிச் செல்லும் அரசப் பாதையை அடைந்தார். அவர் வருகையை உணர்ந்து அந்த வேழம் எங்கோ கொட்டிலில் நின்றபடி மீண்டும் குரலெழுப்பியது. இரண்டு பிடிகள் மீள்குரல் கொடுத்தன. பாகன் ஒருவன் எழுந்துகொண்டு அதட்டி ஏதோ கேட்டான். வடக்குவாயிலுக்கு அப்பால் புராணகங்கையிலிருந்து காற்றின் ஓசை கேட்டது. அங்கே காந்தாரக் குடியிருப்புகள் நெடுந்தொலைவுக்கு வளர்ந்து சென்றுவிட்டபோதிலும்கூட அடர்காடு மிகுந்திருந்தது. புராணகங்கையின் காட்டுக்குள் எப்போதாவது வேட்டைக்குச் செல்லும் அரசகுடியினர் அன்றி எவரும் நுழைவதில்லை. அது கதைகளால் அறியமுடியாததாக ஆக்கப்பட்டிருந்தது.

அறுபதாண்டுகளுக்கு முன்பு ஒரு பெருமழையில் வெள்ளம் பெருகிவந்து கோட்டைக்கதவை உடைத்துக்கொண்டு நகருக்குள் புகுந்தது. அவர் முதல்முதலாக நகர்நுழைந்தபோது தெருக்களெங்கும் மென்சேறு மண்டியிருந்தது. சுவர்களனைத்திலும் நீர்நின்ற மட்டம் கோடெனப் பதிந்திருந்தது. கூரைகள்மேல் நீர் கொண்டுவந்த குப்பைகள் எஞ்சியிருப்பதை அவர் கண்டார். அதைப்பற்றிய சூதர்பாடல்களை அவர் நினைவுகூர்ந்தார். வரிகளென ஏதும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அந்த வெள்ளத்தின்மேல் அனல் ஒழுகிவந்தது என ஒரு பாடலில் சொல்லப்பட்டதை எண்ணிக்கொண்டார்.

யானைக்கொட்டிலில் பந்தங்கள் எரிந்தன. ஒரு பந்தத்தின் விரியும் ஒளியில் அங்கே நின்றிருந்த யானையின் நிழல் பெருகி பேருருவ யானை ஒன்றை வானில் நிறுத்தியிருந்தது. வடக்குக் கோட்டைமேல் ஓரிரு பந்தங்களே எரிந்தன. அனுமன் ஆலயத்திற்கு முன்னிருந்த களமுற்றத்தில் மல்லர்கள் பயிலும் பெரிய உருளைக்கற்கள் கிடந்தன. தொலைவிலிருந்த ஒளியை பெற்றுக்கொண்டு கண் துலங்கியதும் அவர் அனுமனின் வால்சுழற்றித் தூக்கிய சிறிய சிலையைக் கண்டார். இயல்பாகத் திரும்பிய விழி சென்று தொட அவர் அந்த மாபெரும் கதாயுதத்தை சிறிய திடுக்கிடலுடன் நோக்கினார், அது அங்கிருப்பதை முதல்முறையாக அறிபவர்போல.

அருகே சென்று அவர் அதை நோக்கினார். கரிய இரும்பின்மேல் வானொளி வழிந்து அதன் குளிரை நோக்கிலேயே உணரமுடிந்தது. துதிக்கை நீட்டிப் படுத்திருக்கும் யானைக்குட்டி என்று தோன்றிய அதே எண்ணம் முதல்முறை அதை நோக்கியபோதும் எழுந்தது என நினைவுகூர்ந்தார். செதுக்குப்பணிகள் கொண்ட பிடி. அதை ஒரு மனிதன் ஏந்தியிருந்தான் என்றால் அவன் இருபதடி உயரமிருக்கவேண்டும். மும்மடங்கு எடை, மும்மடங்கு நீளம். யானைக்கொட்டில் காவலராக இருந்த வைராடர் அது அனுமனுக்குரியது என்று சொன்னார். “எங்கோ அனுமனின் பெருஞ்சிலை ஒன்று இருந்திருக்கலாம். அதன் கையிலிருந்த கதைபோலும் இது. அச்சிலைகூட இச்சேற்றுப்படுகைக்கு அடியில் மறைந்திருக்கலாம்.”

சென்ற அறுபதாண்டுகளில் நூற்றுக்கணக்கான முறை அவர் அவ்வழியாக கடந்துசென்றதுண்டு, ஒருமுறைகூட அதை நோக்கியதில்லை. கண்ணுக்குப் பழகிய மரம்போல, மண்டபம்போல அது அங்கிருந்தது. எவ்வகையிலும் சடங்குகளுடன் இணையாதது என்பதனால் அஸ்தினபுரியின் வீரர்களுக்கும் குடிகளுக்கும்கூட அது சித்தத்தை சென்றுசேர்வதில்லை. அதை நோக்குபவர் எப்போதும் இளமைந்தர்கள்தான். அவர்கள் அங்கு வந்தால் அதைத்தான் முதலில் பார்ப்பார்கள். “அது… பெரியது” என்று சுட்டிக்காட்டுவார்கள். “அது எனக்கு வேண்டும்” என்பார்கள். “நீ பெரிதானதும் அதை எடுத்துச் சுழற்றலாம்” என்பார்கள் அன்னையர்.

அதன்மேல் சிறுவர்கள் ஏறி விளையாடுவதுண்டு. சிறுவர்களின் கதைகளில் அது ஹனுமானின் கையிலிருந்த கதை. புராணகங்கையை பாதையாக்கி அவர் இமயமலைக்குச் செல்லும்போது அதை அங்கே வைத்துவிட்டுச் சென்றார். மீண்டும் அவ்வழியாகத் திரும்பிவரும்போது அதை எடுத்துக்கொள்வார். “ஹனுமான் அவ்வளவு பெரியவர்… இந்த மரம்போல” என்று அந்தக் கதையைக் கொண்டு ஹனுமானின் உயரத்தை கற்பனை செய்வார்கள். ஆனால் அதைப்பற்றிய சூதர்கதை ஏதும் உருவாகவில்லை. அஸ்தினபுரியின் மக்கள் சூதர்கதைகளினூடாகவே தங்கள் நகரத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பதனால் அவர்கள் அதை காணவேயில்லை.

சகுனி புரவியிலிருந்தபடியே கையை நீட்டி அதை தொட்டார். உள்ளீடுள்ள இரும்பு. அது அகழ்ந்தெடுக்கப்பட்ட நாள் அக்கணம் விரிந்துகொண்டது என மீண்டும் நிகழ்ந்தது. மூத்தவள் காந்தாரிக்கு நோவு நீண்டுகொண்டே சென்ற நாட்கள். கொடுங்கனவுகளால் அவள் அலைக்கழிக்கப்பட்டாள் என்னும் செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டிருந்தன. “அது உறைகிழித்து எழும் விதைபோலும்” என ஒரு ஏவலன் சொன்னபோது அவர் சினந்தெழுந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவன் கன்னத்தைப் பற்றியபடி “அறியாச் சொல், இளவரசே. பொறுத்தருள்க” என்றபின் விலகிச்சென்றான்.

Ezhuthazhal _EPI_02

அன்று முழுக்க உள்ளம் எரிய அவர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக்கொண்டிருந்தார். வேறெப்போதும் அறிந்திராத கடுங்கோடை அது. சூழ்ந்திருந்த காடுகளில் தீப்பிடித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து கூட்டம்கூட்டமாக காகங்கள் நகருக்குள் புகுந்து அத்தனை மரங்களையும் கூரைகளையும் நிறைத்து நகரை இருளச் செய்திருந்தன. காற்றில் புகையும் எரிமணமும் எப்போதுமிருந்தது. இரவில் மென்பனி என கரிச்சுருள்கள் இறங்கி உருகி கூரைவிளிம்புகளில் கருந்துளியெனச் சொட்டின. இரவில் மேற்குக்கோட்டையருகே ஏரியின் கால்கண் வழியாக உள்ளே நுழைந்த நரிக்கூட்டம் ஒன்று நகருக்குள் ஊளையிட்டு அலைந்தது. அன்றிரவு முழுக்க அவர் ஓர் யானையின் பிளிறலை கேட்டுக்கொண்டிருந்தார்.

அவர் சித்தம் நாகம்கண்ட புரவி என விதிர்த்து நிலைத்தது. அவர் அந்த யானையின் பெயரை நினைவுகூர்ந்தார். உபாலன். அந்நினைவைச் சென்றடையும் வழியே அத்தனை எண்ணங்களும். அல்லது அந்நினைவை முடிந்தவரை தள்ளி அப்பால் நிறுத்தும் முயற்சிகள். உபாலன், பீஷ்மபிதாமகருக்குப் பிடித்த நூறாண்டுகண்ட களிறு. அதைக் காண அங்கே வந்த நாளை நினைவிலிருந்து எடுத்தார். நஞ்சுண்டவைபோல கொட்டிலின் அத்தனை யானைகளும் உடல் விதிர்க்க, துதிக்கை தவித்து அலைபாய, அவ்வப்போது செவி நிலைத்து மெல்ல உறுமியபடி அசைவிழந்தவை என நின்றிருந்தன. அவற்றின் நோவுநிறைந்த விழிகளைக்கூட மிக அருகிலென அவர் கண்டார்.

கோட்டைமுகப்பில் பெருங்கண்டாமணியாகிய சுருதகர்ணம் முழங்கத் தொடங்கியது. அப்பால் அரண்மனையின் மணியாகிய காஞ்சனம் ஒலித்தது. தொடர்ந்து நகரெங்கும் நூற்றுக்கணக்கான ஆலயங்களில் இருந்து மணியோசை எழுந்து முழக்கமாகியது. மரங்களிலிருந்து பறவைகள் எழுந்து பறந்து ஓசையிட நகரம் ஒரே கணத்தில் விழித்துக்கொண்டது. இனி பின்னிரவு வரை இந்த ஓசை அவியாது ஒலிக்கும். அத்தனை அறைகளையும் கார்வையால் நிறைக்கும். அத்தனை நீர்ப்பரப்புகளிலும் அதிர்வலைகளாக ஆகும்.

சகுனி புரவியை மெல்ல இழுத்துத் திருப்பி அரண்மனை நோக்கி சென்றார். குளம்படியோசை கல்பாவப்பட்ட தரையில் சீராக ஒலித்தது. அப்பால் அரண்மனையின் சுவர்கள் அவ்வோசையை கற்களை என பிடித்து திரும்ப வீசின. அரண்மனைச் சாளரங்கள் நெய்விளக்கொளியுடன் செம்பட்டுத் திரைச்சீலைகள் என கடந்துசென்றன. முற்றாக மூடி சட்டம் அடிக்கப்பட்ட சாளரம் ஒன்றை அவர் கண்டார். அங்கே ஒருகணம் பதிந்த விழிகளை விலக்கிக்கொண்டு மேலே சென்றார். அங்கே முன்பொருகாலத்தில் ஒருத்தி அமர்ந்திருந்தாள். சிவை என்னும் பணிப்பெண். விதுரரின் அன்னை. அவளை எவரேனும் நினைவுகூர்கிறார்களா? விதுரர் நினைவுகூர்வதுண்டா? அவளை மறக்காமல் அவர் அன்றாட வாழ்க்கையை கோக்கமுடியாது. அவர் தன் நெஞ்சு படபடப்பதை உணர்ந்த பின்னரே சம்படையை நினைவுகூர்ந்தார். அக்கணமே அவள் நினைவை விலக்கினார். புரவியைத் தட்டிவிட்டு மேற்குவாயிலை நோக்கி விரைந்தார்.

காவல்மாடத்திலிருந்தவர்கள் அவரை கண்டுவிட்டிருந்தனர். ஒளிச்செய்தி வான்வழியாகச் சென்றது. அவர் ஏரிக்கரையை அடைந்து மதகின்மேல் ஏறி நின்றார். வானின் ஒளியில் ஏரி நீர் காற்றில் நெளியும் இலைப்பரப்புகள் என சிற்றலை கொண்டிருந்தது. அவர் அதை நோக்கியபடி நின்றார். அலையசைவுகளிலிருந்து விழிகளை விலக்கமுடியவில்லை. அந்த ஒழுங்கமைவு உள்ளத்தை அடுக்கிச் சீராக்கியது. அவ்வப்போது பெருமூச்சுவிட்டுக்கொண்டு அவர் மீண்டுவந்தார். மூன்றாம் முறை மீண்டுவந்தபோது “ஆலயவாயிலின் கதவு தெறித்துத் திறந்து விழுகிறது. அதன்பின் தேவன் எழுந்தருள்கிறான்” என்ற சொல்லை நினைவுகூர்ந்தார்.

அதை சொன்ன முகம் தெரிந்தது. விழியின்மையால் ஒரு திரையென ஆகிவிட்டிருந்த தீர்க்கசியாமரின் முகம். விழியற்றவரின் சொற்கள் அவரைக் கடந்தமைந்த பெருவெளியொன்றிலிருந்தென ஒலிக்கின்றன. ஆலயக் கற்சிலை பேச முற்பட்டதுபோல. அச்சொல்லாட்சியை அவர் அறுபதாண்டுகளுக்குப்பின் முதல்முறையாக நினைவுகூர்ந்தார். ஆனால் அந்த ஒலி செவியிலெழுந்தது. திருதராஷ்டிரரின் இசைக்கூடம். தீர்க்கசியாமரின் கையிலிருந்த யாழ். அவர் அதில் தன் கிழிந்தகன்று கழுகுச்சிறகுபோல் ஆகிவிட்டிருந்த விரல்களால் வாசித்த கலிங்கப்பண். அது நீருக்குள் இருந்து யானை எழுந்து வருவதுபோலத் தோன்றுவதாக திருதராஷ்டிரர் சொன்னார். விழிகளால் அவர் கண்டிராத யானை. அவர் பெருமூச்சுவிட்டார்.

நீரலைகளின் வளைவுகள் ஒளிமிளிர்வு கொண்டன. பின் பளிங்குச்செதுக்காயின. கருமை நீலமெனத் தெளிந்தது. முகில்கள் செம்மை பற்றிக்கொண்டன. அவர் நிழல் நீண்டு நீர்ப்பரப்பில் விழுந்தது. நீர்ப்பரப்பின்மேல் பறவை நிழல்கள் விழத்தொடங்கின. சேற்றுக்கதுப்பில் முதல் கொக்குக்கூட்டம் காற்றில் பறந்தமையும் வெண்ணிறச் சால்வைபோல வந்து அமர்ந்தது. அவர் புரவியை மெல்ல தட்டினார். அது அவர் எண்ணத்தை உணர்ந்ததுபோல திரும்பி நடந்தது.

மிக மெல்ல தளர்நடையில் அவர் அரண்மனைசாலையில் சென்றார். நீர்த்துளி விழுவதுபோன்ற குளம்புத்தாளம். அரண்மனையின் மேற்குச்சாளரங்களில் ஒன்றில் வண்ணம் தெரிந்தது. அவர் புரவியை இழுத்து நிறுத்தி ஏறிட்டு நோக்கினார். சாளரத்தின் இரு மூலைகளிலுமாக இருவர் அமர்ந்திருந்தனர். மெலிந்து எலும்புருக்களாக மாறியவர்கள். வண்ணப் பட்டாடையும் நகைகளும் அணிவிக்கப்பட்டவர்கள். மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும் அங்கே இருபதாண்டுகளுக்கும் மேலாக அவ்வாறு விழிமட்டுமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர் புரவியின் கழுத்தை மெல்ல தட்டி அதை முன்செலுத்தினார்.

fire-iconவிதுரர் கொற்றவை ஆலயத்திலிருந்து கையில் மலருடன் வெளியே வந்தபோது சகுனி நகர்நுழைந்ததை அறிவிக்கும் முரசொலியை கேட்டார். திரும்பி ஆலயக் கருவறைக்குள் நூற்றெட்டு நெய்விளக்குகளின் ஒளியில் அமர்ந்திருந்த கொற்றவையை நோக்கினார். அன்னையின் கோட்டெயிறுகள் வெள்ளி மின்ன தெரிந்தன. அவர் விழிதாழ்த்தி அவள் கழல்களை நோக்கி மீண்டுமொருமுறை தலைவணங்கினார். பல்லக்கை நோக்கி அவர் நடந்துவரக் கண்டதும் தூக்கிகள் எழுந்து நின்றனர். காவலர் வேல்தாழ்த்தி வணங்கினர். ஏறிக்கொண்டதும் அவர் ஒருகணம் எண்ணியபின் “கோட்டைமுகப்புக்கு” என்றார். காவலன் வியப்பேதும் காட்டாமல் தலைவணங்கினான்.

தூக்கிகளின் சீரான மூச்சொலியுடம் பல்லக்கு மெல்லிய நீரலைகளின்மேல் என அலைபாய்ந்தபடி சென்றது. அவர் கால்களை நீட்டிக்கொண்டு பல்லக்கின் திரைச்சீலைகளை அசைத்த காற்றில் பறந்த மேலாடையை சீரமைத்துக்கொண்டார். எண்ணியிராது எழுந்த காற்றில் திரைச்சீலை ஒன்று சிறகை முகத்திலறைந்து செல்லும் பறவைபோல அவர்மேல் முட்டியது. அதைப்பற்றி தூணில் சுற்றிவைத்தபின் வெளியே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

சூதர்களின் தெருக்கள் விழித்துக்கொள்ளத் தொடங்கியிருந்தன. புரவிகளைப் பற்றியபடி தேர்வலர் சென்றுகொண்டிருந்தனர். கற்தூண்களின் பந்த வெளிச்சத்திற்குள் புகுந்து குளிருக்கு உடல் சிலிர்த்தும் பிடரி உலைய தலைசிலுப்பியும் தோன்றி இருளுக்குள் சென்ற புரவிகள் இரவுக்கொட்டிலின் சாணிமணம் கொண்டிருந்தன. இசைச்சூதர்களின் தெருவில் சுவர்ணாக்ஷரின் ஆலயத்தின் அருகே அன்று இசைத்தொடக்கம் செய்யும் இளமைந்தனுடன் சுற்றத்தார் கூடியிருந்தனர். பல்லக்கு அணுகியபோது அவர்கள் தலைவணங்கினர். விதுரர் பல்லக்கை நிறுத்தச்சொல்லி இறங்கியபோது மைந்தனின் தந்தையும் தாய்மாமன்களும் வந்து வணங்கி வாழ்த்துரைத்தனர்.

“இளையவன் பெயர் என்ன?” என்றார். “அஸ்வஹ்ருதயன்” என்று அவன் தந்தை சொன்னார். “பொன்விழி மூதாதையின் அருளால் அவன் விரல்களில் தெய்வங்கள் எழவேண்டும்.” சிறுவன் நாணத்துடன் தலைகுனிந்து நின்றான். “நல்லூழ் தொடர்க!” என அவன் தலையைத் தொட்டு வாழ்த்தினார். சிறுவனுக்கு அங்குலிசேதனம் என்பது எத்தனை வலிமிக்கது, அதன்பின் தொடர்வது எவ்வளவு கடுமையான தவம் எனத் தெரியவில்லை என எண்ணிக்கொண்டார். அவர் திரும்பி நோக்க காவலன் ஒரு கழஞ்சுப்பொன்னை கொண்டுவந்து நீட்டினான். அதை வாங்கி ஒரு மலருடன் மைந்தன் கையில் அளித்து “சொல் திகழ்க!” என வாழ்த்தினார். ஆலயத்திற்குள் பொன்விழி சூடி அமர்ந்திருந்த தீர்க்கசியாமரின் சிலைக்கு பூசகர் சுடராட்டு காட்டி மலரளித்தார். அதை வாங்கி வணங்கியபின் பல்லக்கிலேறிக்கொண்டார்.

பல்லக்கு மீண்டும் எழுந்தபோது அவர் தீர்க்கசியாமரை நினைவுகூர்ந்தார். விழியின்மையின் அச்சமூட்டும் விலக்கம் கொண்ட முகம். எங்கோ எதையோ நோக்கி அவர் எடுக்கும் சொற்கள். “இவ்விளஞ்சூதன் பாடப்போவது எதை?” என்று எவரோ கேட்டதுபோல உணர்ந்து உளம் அதிர்ந்தார். என்ன கீழெண்ணம் இது என அதை அள்ளி ஒதுக்கினார். எண்ணங்களை விலக்கும்பொருட்டு வெளிக்காட்சிகளில் விழியூன்றினார். இந்திரமுற்றத்தில் விற்பயிற்சி நிகழ்ந்துகொண்டிருந்தது. அவர் அர்ஜுனனை நினைத்துக்கொண்டார். பின்னர் அபிமன்யூவை.

மீண்டும் எண்ணங்களைத் திருப்பி களமுற்றத்தை நோக்கினார். செந்நிற மண்ணில் செங்குருதி விழுந்து பரவியதுபோல பந்தங்களின் ஒளி. அதில் காலடிகள், குளம்படிகள். குருஷேத்ரத்தின் மண்ணும் சிவப்புதான். தொலைவில் சுருதகர்ணம் ஒலிப்பதை அவர் கேட்டார். கைகூப்பியபடி காஞ்சனத்தின் ஒலியை செவிநிறைத்தார். பின்னர் நகரம் மணியோசைகளால் நிறைந்தது. வானில் பறவைகள் அந்த ஒலியலைகள்மேல் அலைததும்பிச் சுழன்றன.

அவர் அரசப்பெருவீதியை அடைந்தபோது மணிவெளிச்சம் தோன்றத் தொடங்கியிருந்தது. மணியின் சங்கிலியை இழுத்த யானை கோட்டைச்சுவர் மடிப்புக்குள் இருளுக்குள் செவிகளின் அசைவாக நின்றிருந்தது. ஏன் அங்கே வந்தோம் என எண்ணிக்கொண்டார். அங்கே சகுனி புரவியில் நுழையும் காட்சி உள்ளத்திலெழுந்ததும் அறியாது அம்முடிவை எடுத்தது அவர் உள்ளம். சகுனி பன்னிரு நாட்களுக்கு முன்னர் தனியாகக் கிளம்பி உத்தரபாஞ்சாலத்திற்கு அஸ்வத்தாமனை சந்திக்கச் சென்றிருந்தார். நேற்று காலை வந்த ஓலைச்செய்தியை அவருக்கு பறவை சென்று அளித்திருக்கும். இரவெல்லாம் படகில் வந்து புரவியூர்ந்து நகர்நுழைந்திருக்கிறார்.

கோட்டைமுகப்பில் ஏவலர் நீண்ட துடைப்பங்களால் குப்பைகளைப் பெருக்கி ஒதுக்கிக்கொண்டிருந்தனர். மணல்மேல் துடைப்பங்கள் வரைந்த அலைகள். சாணியால் வழிக்கப்பட்ட சுவர்கள்போல. திரைச்சீலை வளைவுகள்போல. பாறை வளைவில் ஒழுகும் மழைநீர்போல. புறக்காட்சிகளைப்போல உள்ளத்தை ஒருங்கிணைப்பது பிறிதொன்றுமில்லை. இவை எண்ணங்களின் அலைகள் சென்று சென்று அறைந்தாலும் உரு மாறாதவை. விழிப்பென்றும் கனவென்றும் கருநிலையென்றும் பெருநிலையென்றும் நிறைந்திருக்கும் அகத்திற்கு அப்பால் நானறியேன் என நின்றிருப்பவை. காலத்தை பிறிதொன்றாக அறிந்தவை.

அவருடைய பல்லக்கைக் கண்டதும் பெருக்கிக்கொண்டிருந்தவர்கள் விலகி தலைவணங்கினர். அவர் கோட்டைமுகப்புவரை சென்றார். பல்லக்கை நிறுத்திவிட்டு அவர் இறங்கியதும் கோட்டைக்காவலர்தலைவன் நாசத்யன் வந்து வணங்கி நின்றான். விதுரர் அவனிடம் “இன்று என்ன செய்தி?” என்றார். “காந்தார இளவரசர் புலரியில் தனியாகப் புரவியில் வந்தார்” என்றான். அவர் நடக்க அவன் உடன் நடந்தபடி “அவர் வடக்குவாயிலுக்குச் சென்றார். அங்கிருந்து மேற்குவாயிலுக்கு… இப்போது ஏரிக்கரையில் நின்றிருக்கிறார்” என்றான். விதுரர் “வடக்குவாயிலில் என்ன செய்தார்?” என்றார். நாசத்யன் “வடக்குவாயிற்காவலனை உடனே வரச்சொல்கிறேன்” என்றான்.

அவர் கோட்டையின் குறுகலான படிகளில் ஏறி மேலே சென்றார். காற்று அவர் மேலாடையை எழுந்து பறக்கச்செய்தது. காவல்வீரர்கள் வேல்தாழ்த்தி வணங்கினர். கோட்டைக்காவல்மாடத்தின் மரப்படிகளில் ஏறி மூன்றாவது நிலையில் நின்றபடி வெளியே பார்த்தார். கோட்டைக்கதவம் திறக்கப்போகும் பொழுதென்பதனால் வெளியே புறமுற்றத்தில் அனைவரும் விரைவுகொண்டிருந்தனர். சாவடிகளில் உள்ளும் வெளியேயுமாக எறும்புகள்போல வணிகர்கள் விரைந்தனர். முற்றத்தில் துயின்றுகொண்டிருந்த அனைவரும் எழுந்து தங்கள் பொதிகளை கட்டிக்கொண்டிருந்தனர். அப்பால் குறுங்காட்டுக்குள் ஓடிய செயற்கை ஆற்றில் எறும்புகள்போல மொய்த்துக்கொண்டு நீராடினர். வண்டிகளில் குதிரைகளும் காளைகளும் கட்டப்பட்டன. கோட்டைக்கதவுக்குள்ளே சூதர் குழு ஒன்று நின்று மங்கல இசையுடன் ஹஸ்தியின், குருவின் கொடிவழியினரை போற்றிப் பாடிக்கொண்டிருந்தது.

விதுரர் கோட்டையின் மீதிருந்த பாதை வழியாக மேற்கெல்லை வரை நடந்து நோக்கிவிட்டு திரும்பிவந்தார். எதிரே காவலன் ஒருவனுடன் வந்த நாசத்யன் “இவன் கண்டிருக்கிறான், அமைச்சரே” என்றான். அவன் தலைவணங்கி “காந்தார இளவரசர் யானைக்கொட்டிலருகே ஆஞ்சநேயர் ஆலயமுற்றத்தில் சற்றுநேரம் நின்றபின் மேற்குக்கோட்டைவாயில் நோக்கி சென்றார்” என்றான். “அங்கே என்ன செய்தார்?” என்றார் விதுரர். அவன் “ஒன்றும் செய்யவில்லை. வெறுமனே புரவியில் சுற்றிவந்தார்” என்றான். விதுரர் “எதை?” என்றார். “அனுமனின் கதையை” என்றான் காவலன். விதுரர் விழிகூர்ந்து “எத்தனை முறை?” என்றார். “இரண்டுமுறை. கைநீட்டி அதை தொட்டார். பின்னர் சென்றுவிட்டார்.”

விதுரர் நோக்கை விலக்கி விடிந்துகொண்டிருந்த கிழக்குவானை சற்றுநேரம் நோக்கினார். சங்கிலி ஓசையுடன் ஏழு யானைகள் வடக்குவாயிலில் இருந்து கிழக்குக்கோட்டைமுகப்பு நோக்கி வந்தன. முகில்களின் விளிம்புகள் ஒளிரத் தொடங்கின. மரங்களின் நிழல்கள் நீண்டு முற்றத்தில் நிழல்காடொன்றை அமைத்தன. அவனை செல்லலாம் என கையசைத்து அனுப்பிவிட்டு நடந்து மீண்டும் கோட்டைமுகப்பு வரை வந்தார். காவல்மாடத்தில் அவர் ஏறிக்கொண்டிருந்தபோது வாயில் திறப்பதற்கான கொம்பொலி எழுந்தது. முரசு முழங்கத்தொடங்கியது. கடற்பறவைக் கூட்டம் கலைந்ததுபோல ஒலியெழுப்பியபடி முற்றத்தில் கூடியிருந்தவர்கள் நிரைகொள்ளத் தொடங்கினர். வண்டிகள் ஒரு நிரையாகவும் கால்நடையர் இன்னொரு நிரையாகவும் ஒதுங்கி நடுவே அரசத்தேர்களுக்கும் புரவிகளுக்கும் இடம்விட்டனர்.

மறுபக்கம் கோட்டையைத் திறக்கும் பற்சகடத்தை முறுக்கியபின் யானைகள் விலகிச் சென்று நிரையாக நின்றன. மணியின் சங்கிலியை இழுக்கும் யானை அங்கேயே நின்று தன் முன் குவிக்கப்பட்ட தழைகளை ஒடித்து வலக்காலில் அடித்து சுருட்டி வாயிலிட்டு தொங்குதாடை அசைய நெற்றிக்குழி நெகிழ மென்று தின்றது. அவற்றின் பாகர் அவை அசையாமல் நிற்க கோலைச் சாற்றி வைத்துவிட்டு கூடி அமர்ந்து பேசிக்கொள்ளத் தொடங்கினர்.  அரண்மனையிலிருந்து காவல்படை ஒன்று எட்டு புரவிகளில் கிழக்குவாயில் நோக்கி அரசப்பெருவழியினூடாக வருவது தெரிந்தது.

விதுரர் இறங்குவதற்காக படிமுகப்பை அடைந்தபோது உயர்ந்த மேடைகள்மேல் அமைந்திருந்த கைவிடுபடைகளை கண்டார். உடல்நிலைக்க உள்ளமும் அசைவிழந்து மீள அவற்றை மீண்டும் நோக்கினார். அவற்றின் விற்கள் இறுகி திணர்த்து நின்றன. அம்புகள் தொடுக்கப்பட்டு உச்சவிசை அசைவின்மையென்றாக வானை நோக்கி கூர்கொண்டிருந்தன. அவர் அவற்றை நோக்கியபடி படிகளில் இறங்கினார். அந்த கூர்முனைகளை அன்றி எதையும் அவரால் நோக்க முடியவில்லை. முற்றத்தில் இறங்கியதும் அந்தக் கைவிடுபடைகள் அமைந்த மேடைகளை நோக்கி சென்றார்.

நெடுங்காலத்திற்கு முன்பு ஒருமுறை அங்கே வந்து அவற்றை நோக்கி உளக்கிளர்ச்சி அடைந்ததை நினைத்துக்கொண்டார். அன்று அறியாத எதிர்காலத்தை  அவை இலக்கு கொண்டிருந்தன. இன்று அவை அச்சமூட்டின. ஒரு மெல்லிய தொடுகை போதும் அம்புகள் வானில் புள்கூட்டமென எழுந்து மழையெனப் பொழியும். அனலுருளைகள் எரிவிண்மீன்களென மண்ணில் பரவும். அவை ஒவ்வொருநாளும் பேணப்படுகின்றன என்று தெரிந்தது. அத்தனை விற்சுருள்களிலும் மீனெண்ணை பூசப்பட்டிருந்தது. அக்கொழுப்பு மட்கி ஊன்நாற்றம் வீசியது.

அவர் ஒரு கைவிடுபடையின் சிறிய இரும்புப் படிகளில் ஏறி அதன் உள்பொறிகளை நோக்கினார். இருபது யானைகளால் முறுக்கப்பட்ட விற்கள். விசை தேங்கி இறுகி பாறைபோலாகுமா என்ன? இதோ நின்றிருக்கும் யானைக்குள் அதன் ஆற்றல் இப்படித்தான் உறங்குமா? விற்களை முறுக்கும் யானைகளைக் கட்டவேண்டிய கந்துகள் நிரையாக தெரிந்தன. அவர் கோட்டைத்தலைவர் வஜ்ரபாகுவின் வினாவை நினைவுகூர்ந்தார். ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து அந்த விழிகளின் ஆவல் நிறைந்த ஒளி எழுந்து வந்தது. “அமைச்சரே, நான் வினவுவது பிழை எனில் பொறுத்தருளவேண்டும். போர் வருகிறதென நான் நம்பலாமா?”

அவர் பெருமூச்சுடன் தான் சொன்ன மறுமொழியை எண்ணிக்கொண்டார். “போர் வந்துதானே ஆகவேண்டும்? இத்தனை ஆயுதங்களுக்கும் உரிய தேவதைகள் வானிலிருந்து வேண்டிக்கொள்வது அதைத்தானே?” அங்கே காற்றில் இருளாக நிறைந்திருக்கும் தெய்வங்களில் மூச்சுருவாக வஜ்ரபாகுவும் நின்றிருக்கக்கூடும். அதே விழிகளுடன் காத்திருக்கக்கூடும். அவருடன் வந்த நாசத்யன் “இளையவர்கள் துச்சாதனரும் துர்முகரும் நாளும் வந்து இவற்றை பார்த்துச்செல்வதுண்டு” என்றான். அவன் குரலை வஜ்ரபாகுவின் குரலாகக் கேட்டு விதுரர் திடுக்கிட்டார். பின்னர் நீள்மூச்சுடன் மீண்டுவந்தார். “நேற்று முன்னாள் துச்சாதனர் என்னிடம் இந்தக் கைவிடுபடைகள்மேல் குருதிமழை பெய்தது என்கிறார்களே, ஏதாவது செய்தி உண்டா அதைப்பற்றி என்று கேட்டார். அவ்வாறு ஒரு கதையை நானும் கேட்டுள்ளேன். பிறிதொன்று அறியேன் என்றேன்” என்றான் நாசத்யன். “அன்று பெருமழையென குருதி வானிலிருந்து பொழிந்து அத்தனை காவலர்களையும் கருக்குழவி என நிணநீராட்டியது என்கிறார்கள். இந்த அம்புமுனைகள் அனைத்தும் குருதிசொட்ட வான் நோக்கி நின்றிருந்தனவாம்.”

விதுரர் அவனை கையமர்த்திவிட்டு விரைந்து நடந்து பல்லக்கில் ஏறிக்கொண்டார். கிளம்பலாம் என அவர் கைகாட்டியதும் கோட்டைக்குமேல் முரசு முழங்கியது. ஏறிட்டு நோக்கியபோது குந்தி நகர்நுழைவதை அறிவிக்கும்பொருட்டு மார்த்திகாவதியின் சிம்மக்கொடி மேலெழுவதைக் கண்டார். சில கணங்கள் எண்ணிநோக்கிவிட்டு “செல்க!” என்றார்.