எழுதழல் - 1

ஒன்று : துயிலும் கனல் – 1

fire-iconகுந்தியின் இளஞ்சேடி பார்க்கவி படகிலிருந்து முதலில் இறங்கினாள். அவள் காலடியில் பாலப் பலகை அசைந்தது. நிலத்தின் உறுதியை கால்கள் உணர்ந்ததும் அவள் திரும்பிநோக்கி தலைவணங்கினாள். குந்தி நடைபாலத்தின் மீது ஏறி மேலாடையை சீரமைத்துக்கொண்டாள். பார்க்கவி “தேர் வந்துள்ளது, பேரரசி” என்றாள். குந்தி தலையசைத்தாள். அவளுடைய அணுக்கக் காவலர் வேல்களுடன் இறங்கி அவளுக்கு இரு பக்கமும் குரல் கேட்காத தொலைவில் நின்றனர். அவள் நடந்ததும் உடன் வந்தனர்.

காற்றே இல்லாமல் கங்கை ஒளிவழிவாக விழிநிறைத்துச் சென்றுகொண்டிருந்தது. பின்னிரவில் துறைமுற்றத்தின் அலுவல்கள் ஓய்ந்து அனைவரும் அப்பாலிருந்த சாவடிகளில் துயில்கொண்டிருந்தனர். கங்கையின் மைய ஒழுக்கில் பாய்விரித்த படகுகள் ஒன்றுடன் ஒன்று தொட்டு சரடென்று ஆகி சென்றுகொண்டிருந்தன. சாளர விளக்குகள் எரிய அவை மின்மினிகள்போலத் தோன்றின. பாய்மர உச்சியின் தூக்குவிளக்கு வானில் விண்மீன் என அவற்றை வழிகாட்டிச் சென்றுகொண்டிருந்தது.

பயணப் படகுகளுக்கான துறைக்கு அப்பால் பன்னிரு பெருந்துறைகளில் எட்டடுக்குப் பாய்கள் கொண்ட பொதிப்படகுகள் பாய்களை அவிழ்த்துச் சுருட்டிவிட்டு தோளுடன் தோள்முட்ட ததும்பியபடி நின்றிருந்தன. அவற்றுக்கான அகன்ற நடைபாலத்தின்மேல் அத்திரிகள் நிரையாக ஊர்ந்து படகுக்குள் சென்று மறுவழியினூடாக பொதிகளுடன் வெளியே சென்றன. அவற்றை ஓட்டுபவர்களின் குரல்களும் சவுக்கு காற்றில் சொடுக்கும் ஓசையும் குளம்புகள் மரப்பரப்பில் விழும் தாளமும் மெல்ல அசையும் படகுகளில் கயிறுகளும் பலகைகளும் இறுகி நெகிழும் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தன. கண்விலக்கி காதுகொடுத்தால் ஒரு படைநகர்வின் ஒலி எனத் தோன்றியது.

பெரிய சுமைப்படகுகள் ஏதும் இல்லை என்பதனால் எடைத்துலாக்கள் கைகளை வானில் தூக்கி நின்றிருந்தன. அவற்றின்மேல் நீர்ப்பறவைகள் சில வந்தமர்ந்து எழுந்தன. துலாச்சகடங்களை இழுக்கும் யானைகள் காட்டுக்குள் அனுப்பப்பட்டிருக்க அவற்றின் சங்கிலிகள் மட்டும் இரும்பு நாணயக் குவியல்களைப்போல ஆங்காங்கே தெரிந்தன. மீனெண்ணை விளக்குகளின் ஒளி கற்தூண்களுக்குச் சுற்றும் செந்நிறமாக விரிய அவை பூத்த வேங்கை எனத் தோன்றின.

குறுங்காட்டின் விளிம்பில் நீண்ட கோட்டைபோல் அமைந்திருந்த பண்டநிலையங்களுக்குள் அத்திரிகளின் நிரை சென்று பொதிகளை வைத்துவிட்டு பிறிதொரு பாதையினூடாக வெளிவந்தது. அரசச் சாலையின் தொடக்கத்தில் அஸ்தினபுரியின் பெரிய அணிவாயிலின் வளைவுக்கு நடுவே அமுதகல முத்திரை அதன் கீழே ஏற்றப்பட்டிருந்த ஏழு சுடர் விளக்கின் குவியாடி அள்ளி வீசிய ஒளியில் இருளிலெழுந்ததுபோலத் தெரிந்தது. அதன் இரு பக்கங்களிலும் இருந்த தேர்முற்றங்களில் ஒரே ஒரு தேர் மட்டும் மார்திகாவதியின் சிம்மக்கொடியுடன் நின்றுகொண்டிருந்தது.

குந்தி இயல்பாக விழிதிருப்பியபோது அப்பால் ஆலமரத்தின் நீண்ட கிளைகளுக்கு அடியில் வேர்தூண்களுக்கு நடுவே சருகு மூடி அமைந்திருந்த இரு சிற்றாலயங்களை நோக்கினாள். அவற்றை அவள் விழிதிருப்பி நோக்கியே நெடுங்காலமாகிறதென்று உணர்ந்தாள். அவள் நோக்குவதை உணர்ந்த பார்க்கவி “அம்பாதேவியின் ஆலயம், பேரரசி” என்றாள். அங்கே செல்வோம் என்று கைகாட்டிவிட்டு அவள் நடக்க இரு காவலர்கள் முன்னால் ஓடி அவள் செல்லும் பாதையில் விழுந்துகிடந்த சுள்ளிகளை விலக்கினர். சருகுக் குவைகளுக்குள் வேல்களை நுழைத்து நாகங்கள் உள்ளனவா என்று நோக்கினர்.

ஆற்றுச்சரிவின்மேல் விளிம்பில் குறுங்காட்டின் ஓரமாக அமைந்திருந்த காவல்மாடத்திலிருந்து காவலர்தலைவன் அவள் செல்வதைக் கண்டபின்னர்தான் அவள் என அறிந்தான். ஆனால் எந்த விரைவுமில்லாமல் எழுந்து நடந்து அவளருகே வந்து தலைவணங்கி “அங்கே காலையில் மட்டும்தான் நாள்பூசெய்கை, அரசி. மாலையில் நாங்கள் எவராவது விளக்கு வைப்போம்” என்றான். அவன் குரலில் இருந்த மதிப்பின்மையை அறியாதவள்போல “நான் வழிபட்டுச் செல்ல விழைகிறேன்” என்றாள்.

“ஆனால் இப்போது பூசகர்கள் இல்லை. இங்கே முதிய குகர்களே பூசனை செய்கிறார்கள்.” குந்தி “பொதிவண்டிகளில் எதிலாவது முதிய குகர்கள் எவரேனும் இருப்பார்கள். அவர்களுக்குப் பூசனை முறைமையும் தெரிந்திருக்கும்” என்றாள். காவலர்தலைவன் “இவ்வேளையில் அவர்களை…” என்று சொல்லத் தொடங்க “சென்று அழைத்துவருக!” என அவள் ஆணையிட்டாள். “ஆணை, அரசி” என்றபின் அவன் சென்றான். நடையிலேயே எரிச்சலைக் காட்டியபடி பெரிய பாதையை அடைந்து அங்கு நின்றிருந்த வேலேந்திய காவலனிடம் ஆணைகளை இடத்தொடங்கினான்.

குந்தி அம்பையின் சிற்றாலயத்தை அடைந்து அதன்முன் காத்து நிற்க காவலர்கள் அங்கே கிடந்த சுள்ளிகளை எடுத்துச்சேர்த்து சுற்றிலும் குவிந்திருந்த சருகுகளை அகற்றினர். ஆலயத்திற்குள் சிறிய நெய்விளக்கின் மொட்டு எரிய வெறிக்கும் வெள்ளிவிழிகளும் செம்பட்டு ஆடையுமாக அம்பை அமர்ந்திருந்தாள். அருகிலிருந்த சிறிய ஆலயத்தில் அவளை நோக்கி கைகூப்பியபடி நிருதனின் சிலை நின்றிருந்தது. அம்பைக்கு செங்காந்தள் மாலையும் நிருதனுக்கு வெண்முல்லை மாலையும் போடப்பட்டிருந்தன.

முதிய குகர் ஒருவருடன் காவலர்தலைவன் வந்தான். “இவர் தனக்கு பூசெய்கை தெரியும் என்கிறார்” என்றான். அவர் தலைவணங்கி நிற்க குந்தி “உமது பெயர் என்ன?” என்றாள். “நிருதன், பேரரசி” என்றார் முதியவர். “நன்று, இங்கே அன்னைக்கு பூசெய்கை நிகழ்த்தவேண்டும்.” அவர் “நான் என் ஊரிலிருக்கும் அம்பையன்னைக்கு பூசெய்கை செய்வதுண்டு. வேண்டியன செய்கிறேன்” என்றார். “இப்போதே செய்யவேண்டும்” என்றாள் குந்தி. அவர் “இப்போதே என்றால்…” என்று தயங்க “என்னென்ன வேண்டுவன என்று சொல்க! அவற்றை இவர்கள் இங்கேயே தேடிக் கொண்டுவருவார்கள்” என்றாள் குந்தி.

அவள் அங்கே வேர்ப்புடைப்பு ஒன்றில் அமர்ந்தாள். இரவு குளிருக்குள் நீராவியின் வெக்கையையும் கொண்டிருந்தது. கங்கையிலிருந்து வந்த காற்றில் நீர்ப்பாசி மணம் இருந்தது. அருகே அலைகள் கரையை நாய்கள் நீர் குடிக்கும் ஒலியுடன் நக்கிக்கொண்டிருந்தன. ஆலமரத்தின் கிளைகள் சரிந்து கங்கைநீருக்குள் விழுந்து அலைகளிலாடின. நீர்ப்பரப்பில் கொம்பொலி எழுந்தது. ஒரு படகு ஒவ்வொன்றாக பாய்களைச் சுருக்கியபடி கரைநோக்கி மூக்கை நீட்டியபடி அணுகியது. துறைமேடையில் நின்ற கலத்தார் விளக்கைச் சுழற்றி ஆணையிட அங்கிருந்தும் விளக்குச் சுழற்சியால் மறுமொழி அளிக்கப்பட்டது. கலத்தின் அமரத்தில் தோன்றிய குகர்கள் வாயில் கைசேர்த்துக் கூவி ஏதோ சொல்ல அந்த ஓசை எதிரொலிகளுடன் இணைந்து சொல்லில்லா முழக்கமாக மெலிதாகக் கேட்டது.

சற்றுநேரத்தில் காவலன் வந்து “பேரரசி முழுமையாகப் பூசெய்கை நிகழ்த்தவேண்டும் என்றால் குருதிபலி கொடுக்கவேண்டும் என்கிறார் முதுகுகர். அவர்கள் உண்ணும்பொருட்டு வைத்திருந்த ஆடுகளில் ஒன்றை வாங்கிவிட்டேன். பூசைக்குரிய காந்தள் மலர்களைச் சேர்த்துவர இருவர் சென்றிருக்கிறார்கள். மற்ற நறுமணங்களும் புகைப்பொருட்களும் படகுகளில் உள்ளன” என்றான். குந்தி கையசைத்து அதை ஒப்பினாள்.

நிருதர் சுள்ளிகளில் துணிசுற்றி அதில் எண்ணையூற்றி ஏழு தீப்பந்தங்களைக் கொளுத்தி ஆலய முற்றத்தில் நட்டார். காவலர் கொண்டுவந்த காந்தளும் செண்பகமும் கலந்த செம்மலர்குவையை வாழையிலையில் ஆலய முகப்பில் படைத்தார். பார்க்கவி மலர்களை வாழைநாரில் தொடுக்க நிருதர் உள்ளே சென்று தேவியின் ஆடையையும் மலர்களையும் களைந்தார். மரக்குடத்துடன் கங்கைக்குச் சென்று நீரள்ளிக் கொண்டுவந்து தேவியை நீராட்டினார். காவலன் அளித்த பொதியிலிருந்து புதிய செம்பட்டை எடுத்து அணிவித்து பார்க்கவியிடமிருந்து செம்மலர் மாலையை வாங்கிச் சூட்டினார். ஆலயத்திற்குள் இருந்த ஆறு கல்லகல்களில் நெய்யூற்றி விளக்கேற்றியபோது அப்போது இருள்திரை விலக்கித் தோன்றியவள்போல அம்பையன்னை எழுந்துவந்தாள். நிருதனுக்கும் ஆடை அகற்றி நீராட்டு செய்து மாற்றாடையும் மலரும் அணிவித்தார்.

வெள்ளாடு ஒரு வீரனால் இழுத்துவரப்பட்டது. அது நெருப்பைக் கண்டு அஞ்சி கால்பரப்பி நிற்க அவன் அதை இழுத்துக்கொண்டுவந்து பலிபீடத்தின் அருகே நிறுத்தினான். அது கரைந்துகொண்டே இருந்தது. பின்னர் மலர்க்குவை நோக்கி நாக்கு நீட்டி எட்டியது. நிருதர் “பேரரசி, எவர் அன்னைக்கு பலிகொடுக்கிறார்களோ அவர்களே தங்கள் கைகளால் குருதியளிக்கவேண்டும் என்பது எங்கள் மரபு” என்றார். குந்தி தலையசைத்தபடி எழுந்துகொண்டாள்.

இரு வீரர்கள் ஆட்டை இழுத்துச்சென்று பலிபீடத்தின் அருகே நிறுத்தி அதன் கழுத்தை பீடத்தின்மேல் வளைத்தனர். குந்தியிடம் ஒருவன் குறுவாளை அளித்தான். அவள் ஆலய முகப்பில் நின்று அம்பையன்னையை வணங்கி உதடுகளுக்குள் வேண்டுதலை முணுமுணுத்துக்கொண்டு ஆட்டை நோக்கி குனிந்தாள். பார்க்கவி கண்களை விலக்கிக்கொண்டு அப்பால் நகர்ந்தாள். குந்தி இடக்கையால் ஆட்டின் குரல்வளையைத் தடவி இடம்பார்த்தபின் குறுவாளைப் பாய்ச்சி இழுத்தாள். குருதி பீறிட்டு அவள் முகத்திலும் தோள்களிலும் தெறித்தது.

புறங்கையால் புருவத்திலிருந்து கண்மேல் வழிந்த குருதியை துடைத்தபின் மேலும் நன்றாக அறுத்து கழுத்தை விலக்கினாள். மூச்சுக்குழாய் திறந்ததும் குருதியுடன் காற்று பீறிட்டது. ஆடு கால்களை உதைத்துக்கொண்டு ஓடுவதுபோல படுத்தபடியே அசைந்தபின் இழுத்துக்கொள்ளத் தொடங்கியது. நிருதர் கொடுத்த மரக்குவளையில் ஆட்டின் குருதியைப் பிடித்து நிறைத்து நீட்டினாள் குந்தி. அவர் அதை வாங்கிக்கொண்டு சென்று அம்பையின் காலடியில் வைத்தார். கத்தியை பீடத்தில் வைத்தபின் குந்தி கைகூப்பி நின்றாள்.

நிருதர் உள்ளே தொங்கவிடப்பட்டிருந்த உடுக்கையை எடுத்து ஒருகையால் சுழற்றி ஓசையெழுப்பியபடி மறுகையால் குருதியை அம்பையின் தலைமேல் ஊற்றினார். “எரிசினத்தோளே, அணையா நெருப்பே, வேங்கைநாவிலும்  வேழமருப்பிலும் செம்பருந்தின் விழிகளிலும் நச்சரவின் பல்லிலும் வாழ்பவளே, பழிசூடியவளே, சொல்லில் நிற்பவளே, சுடரானவளே, வாழ்க உன் வஞ்சம்! வாழ்க உன் வீரம்! எந்நெருப்பும் அணையாதிருக்கட்டும். இப்புவியில் எச்சொல்லும் பொருளிழக்காதிருக்கட்டும். அன்னையே, இப்புவியில் எவ்விழிநீரும் உலராதிருக்கட்டும். எப்பசியும் அணையாதிருக்கட்டும்” என்று குகர்களின் மொழியில் பாடியபடி குருதியை ஏழுமுறை ஊற்றிவிட்டு அவள் காலடியில் வழிந்த குருதியில் சிறிதளவை மரச்சிமிழில் பிடித்துக் கொண்டுவந்து நீட்டினார். குந்தி அதைத் தொட்டு நெற்றியிலணிந்தாள்.

குருதியில் ஒரு துளியை கொண்டுசென்று நிருதனின் நெற்றியிலும் இட்டு மலரும் சுடரும் காட்டி பூசனை செய்தார். பின்னர் அம்பையின் ஆலயத்திற்கு வெளியே முழங்கால் மடித்து அமர்ந்து உடுக்கை மீட்டியபடி அம்பையின் கதையை பாடத்தொடங்கினார்.

“நெய்விழும் எரி என சிவந்தும் தணிந்தும்

தழன்றும் குழைந்தும் எழுந்து விரிந்தாடியும்

படகுமூலையில் எழுந்தவளே. அன்னையே,

நீ சுடரென்றாக இப்படகு அகலென்றாயிற்று

இரவென விரிந்தன பலகோடி மீன்கள்

அன்னையே அவற்றின் நடுவே எழுந்தன உன்விழியொளிகள்

இரவென்றாயிற்று உன் கைவளை ஓசை

அன்னையே இரவென்று ஒலித்தது உன் நீள்மூச்சொலி

பகலுடன் நீயும் விடிந்தாய்

கதிரவனுடன் இணைந்து படகின்

கிழக்குமுனையில் உதித்தெழுந்தாய்.

நெய்விளக்குகளின் ஒளி தூபப்புகையுடன் கலந்து செங்குழம்பென கருவறையை நிறைத்திருந்தது. அதற்குள் அம்பை தழலென பற்றி எரிந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. நிருதரின் குரல் குறுமுழவின் ஓசையென ஒலித்தது.

இலைகள் உலையும் ஓசையுடன் கங்கையிலிருந்து காற்று எழுந்து வந்தது. கலங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டன. கயிறுகள் ஓசையிட பாய்கள் கட்டுகளுக்குள் துடித்தன. பந்தச் சுடர்கள் அஞ்சிய மான்கள் என தலைதூக்கின. அகல் சுடர்கள் அலைபாய ஒரு சுடரிலிருந்து வெடித்து அனல்துளி தெறித்தது. தூபக்கலம் பற்றிக்கொண்டது. புகையும் அனலும் எழ பார்க்கவி கைதூக்கி ஏதோ சொல்லப்போனாள். குந்தி விழிகளால் அவளை தடுத்தாள்.

Ezhuthazhal _EPI_01

கருவறைக்குள் இருந்த நெய்யனைத்தும் பற்றிக்கொண்டன. சுடர்கள் இணைந்து ஒற்றைத் தழலென்றாயின. அம்பையின் ஆடை பற்றிக்கொள்ள அவள் உருவம் முழுமையாக அனலில் அமிழ்ந்தது. கருவறை அனல்நிறைந்த வாய் எனத் தெரிந்தது. கல்லாலான ஆலயத்தின் சிறிய துளைகளினூடாக தழல்நாக்குகள் வெளியே நீண்டன. காவலர்தலைவன் அங்கிருந்து ஓடி வந்து பின் அப்பால் நின்றான். நிருதர் அந்நெருப்பை நோக்கியபடி விழிகளும் நெருப்பென்று எரிய பாடிக்கொண்டே இருந்தார்.

fire-iconகுந்தி அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பை அடைவதுவரை தேருக்குள் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவள் விழிகளும் இமைக்கவில்லை என்று தோன்றியது. அருகே அமர்ந்திருந்த பார்க்கவி அடிக்கடி அவளை திரும்பிப் பார்த்தாள். வெளியே உடன்வந்த காவல்வீரர்களின் பந்தங்களிலிருந்த செவ்வொளியில் குந்தியின் நரைமுடி தழலெனத் தோன்றியது. விழிகளில் தழல்புள்ளிகள். அவள் பெருமூச்சுடன் நோக்கை விலக்கிக்கொண்டாலும் மீண்டும் நோக்காமலிருக்க முடியவில்லை.

அஸ்தினபுரியின் மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் தொலைவில் தெரியத் தொடங்கியது. அதன் மேலிருந்த காவல்மாடங்களில் எரிந்த பந்தங்கள் யானை முதுகில் விழுந்த வேங்கைமலர்கள் எனத் தோன்றின. பார்க்கவி நிலைகொள்ளாமல் அசைந்து அமர்ந்தாள். அவ்வசைவை இயல்பாகத் திரும்பி நோக்கிய குந்தியின் விழிகள் தன்னை அறியவேயில்லை என்ற எண்ணம் பார்க்கவிக்கு ஏற்பட்டது. அங்கிருப்பவள் பிறிதொருத்தி என்று எண்ணினாள். ஆனால் அவள் பேரரசியின் பணிக்கு வந்தபின்னர் ஒருபோதும் அவளை இயல்புநிலையில் கண்டதில்லை. வெவ்வேறு தெய்வங்கள் வெறிகொண்டெழுந்து மறையும் ஆலயப்பூசகி என்றே அவளை எண்ணமுடிந்தது.

கோட்டைமுகப்புக்கு அவர்கள் வந்ததும் அவளுடன் வந்த காவலன் சென்று அங்கிருந்த சிறிய மாடத்தில் இருந்த காவலனிடம் பேசிவிட்டுத் திரும்பிவந்து தேர் அருகே நின்றான். குந்தி அவனை நோக்கியதும் “எவராயினும் புலரியில் கோட்டை திறந்தபின்னரே உள்ளே செல்ல ஒப்புதல் என்கிறான்” என்றான் காவலன். குந்தி ஒன்றும் சொல்லாமல் நோக்கை விலக்கிக்கொண்டாள். “நடந்தோ புரவியிலோ செல்லலாம். தேர் செல்லவேண்டுமென்றால் பெரிய வாயில் திறக்கவேண்டும் என்கிறான்” என்று காவலன் தொடர அவன் செல்லலாம் என குந்தி கைகாட்டினாள்.

ஏற்கெனவே முற்றம் விழித்தெழத் தொடங்கிவிட்டிருந்தது. பாய்களில் படுத்திருந்தவர்கள் எழுந்து அவற்றைச் சுருட்டிக் கட்டினர். சாவடிகளில் ஒவ்வொன்றாக விளக்குகள் கொளுத்தப்பட்டன. ஏவலர் குதிரைகளையும் அத்திரிகளையும் காளைகளையும் அவிழ்த்துக்கொண்டு நீர்காட்டச் சென்றனர். சிலர் அவற்றின் சாணிகளை சேர்த்து கூடைகளில் அள்ளிக் கொண்டுசென்று குறுங்காட்டுக்குள் உரக்குழிகளில் கொட்டிவிட்டு வந்தனர்.

அவர்களின் தேர் மானுடத்திரள் இரு பக்கமும் பெருகிய இடைவெளியினூடாகச் சென்று கோட்டைமுகப்பில் நின்றது. கோட்டைக்கதவு பொருந்திய விளிம்பில் செங்குத்தான அனல்கோடுபோல இடைவெளி தெரிந்தது. மறுபக்கம் பந்தங்கள் ஏற்றப்பட்டிருக்கலாம். ஒரு கணம் அப்பால் அஸ்தினபுரி நகரே தீப்பற்றி எரிவதுபோலத் தோன்றி பார்க்கவி உளம் அதிர்ந்தாள்.

அப்பால் மெல்லிய ஓசை கேட்டது. யாரோ முழவில் தொட்டுப்பார்க்கிறார்கள். மீண்டும் ஒரு முழவுத்தாளம். பின்னர் இலைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அப்பால் அணிவகுப்பதை அவள் உளவிழியால் கண்டாள். விடிவெள்ளி எழுகிறதா என்று பார்த்தாள். காவலர்களும் அப்பால் முற்றத்தில் நின்றிருந்தவர்கள் அனைவரும் அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டாள். அக்கோட்டையே புலரிக்காகக் காத்திருந்தது. முதற்கதிர் வந்ததும் இருபுறமும் நீண்ட மதிலை சிறகுகள் என அடித்து அது வானில் பறந்தேறிவிடக்கூடும். பார்க்கவி அவ்வெண்ணத்தால் மகிழ்ந்து புன்னகைத்தாள்.

கோட்டையின் காவல்மாடத்தின் உச்சியில் நின்ற காவலன் புலரியின் முதற்சங்கை ஒலித்ததும் மறுபக்கம் நின்றிருந்த யானை வடத்தைப் பிடித்திழுத்து முகவளைவு மீது தொங்கிய சுருதகர்ணம் என்னும் கண்டாமணியை அடித்தது. அந்த ஒலி நகர்மீது பரவியபோது நகர் நடுவே அரண்மனையின் உள்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி ஒலிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நகரமெங்குமுள்ள அனைத்து ஆலயங்களிலும் புலரியின் சங்கொலிகளும் மணியோசைகளும் எழுந்தன. அஸ்தினபுரி துயிலெழுந்தது.

தலைக்கோல் சூதர் தன் வெண்சங்கை ஊதியதும் சூதர்கள் அஸ்தினபுரியின் துதியை பாடத்தொடங்கினார்கள். “விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்தான். பிரம்மனின் மைந்தன் சந்திரன். அவன் புதனை ஈன்றான். புதனின் மைந்தன் புரூரவஸ் அரசகுலங்களுக்கு முதல் தந்தையென்றானான். அவன் மைந்தன் ஆயுஸ் அறத்தில் நின்றான். அவன் மைந்தன் நகுஷன் அலைக்கழிக்கப்பட்டான். மாகதரே, சூதரே, நாம் நகுஷனின் மைந்தனும் மாமன்னனுமாகிய யயாதியின் கதையை பாடுவோம்.”

“யயாதியின் கொடிவழி வந்த புருவை, ஜனமேஜயனை, பிராசீனவானை வாழ்த்துவோம். பிரவீரனை, நமஸ்யுவை, வீதபயனை, சுண்டுவை, பகுவிதனை, சம்யாதியை வணங்குவோம். ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் எனத் திகழும் மாமன்னர் நிரை இப்பாரதவர்ஷம் அணியும் மணியாரம். அது என்றும் புகழுடன் திகழ்க!”

“சந்திரகுலத்து பிருஹத்ஷத்ரன் இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற ஹஸ்தியின் மதயானைத் தோள்கள், அவன் முழக்கம் கேட்டு நிரைவகுத்த யானைகள் வாழ்க! பன்னிரண்டாயிரம் துதிக்கைகளால் கட்டப்பட்ட மகாமரியாதம் தேவர்கள் வியக்கும் கோட்டை. அதில் ஹஸ்தி தன் கையால் தூக்கிவைத்த இப்பெருவாயிலோ ஆரத்தின் நடுவே பதக்கம் போன்றது. யானைகளின் தலைவனாகிய ஹஸ்திவிஜயனை, அவன் அமைத்த மாநகர் ஹஸ்தினபுரியை என்றும் பாடுக! யானைகளின் எழிலைக் காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் மழைநீங்காத மாநகர் என்று புகழ்கொண்டது இந்நகர். தெய்வங்கள் தங்கள் அருளைப்பொழியக் கண்டடைந்த பொற்கலம் இது. இது வாழ்க!”

“அஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக அமைந்த நீலத் தடாகங்கள் புலரியொளியில் இமை மலர்க! அவள் நீலக் கூந்தலைப்போலப் பொலிந்த பூம்பொழில்கள் மணம் கொள்க! நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகளும் நீர்பெருகும் மாநதிகள் என சாலைகளும் விழித்தெழுக! சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல்ஒலியும், குழந்தைகளின் களிச்சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் இந்நகரம் இரவெல்லாம் தேவர்கள் விளையாடி மானுடருக்கு விட்டுச்செல்லும் களம்.”

“மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக! குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக!” என்று ஒலித்தது சூதர்களின் பாடல். “குருவின் மைந்தர் ஜஹ்னுவும் அவர் கொடிவழிவந்த சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன் என்னும் மாமன்னர்களும் இந்தப்புலரியில் எங்கள் சொற்களை அனலில் அவியென ஏற்றருள்க!”

மங்கல இசை பெருகி அலையலையென ஒலித்தது. “மாமன்னர் பிரதீபரும் சந்தனுவும் விசித்திரவீரிய மாமன்னரும் எங்கள் சொற்களால் மகிழ்க! மாகதரே, சூதரே, திருதராஷ்டிர மாமன்னர் நெடுநாள் வாழ்க! அவர் மைந்தர் துரியோதன மாமன்னர் நூறாண்டுகள் கோல்கொண்டமைக! ஆம், அவ்வாறே ஆகுக! ஆம், அவ்வாறே ஆகுக! ஆம், அவ்வாறே ஆகுக!”

விழியொளி துலங்கத் தொடங்கியதும் சூதர்களின் பாடல் முடிந்து தலைக்கோலர் தன் வெண்சங்கை ஊதினார். மங்கலவாத்தியங்கள் முழங்க ஏழு யானைகள் வடம்பற்றி இழுத்து கோட்டைவாயிலை திறந்தன. கோட்டையைச் சுற்றியிருந்த அகழிமீது அமைந்த பெரிய மரப்பாலத்தில் வெளியிலிருந்து நகருக்குள் நுழைவதற்காகக் காத்திருந்த வணிகர்களின் வண்டிகளின் காளைகள் கழுத்துச்சரடு இழுபட்டு மணிகுலுங்க காலெடுத்து வைத்தன. சிறிய மரப்பாலத்தில் நெய்யும் பாலும் கொண்டுவந்த ஆய்ச்சியர் பானைகளை மாறிமாறி உதவிக்கொண்டு தலையில் ஏற்றிக்கொண்டனர். நறுஞ்சுண்ணமும் தேனும் கொம்பரக்கும் கொண்டுவந்த வேட்டுவர்கள் தங்கள் காவடிகளை தோளிலேற்றிக்கொண்டனர். பல்லாயிரம் குரல்கள் இணைந்து எழுந்த ஒற்றை முழக்கத்துடன் அனைவரும் ஒழுகிச்சென்று வாசலுக்குள் நுழைந்து உள்ளே செல்லத்தொடங்கினர்.

குந்தியின் தேர் நடுவே அமைந்த அரசப் பாதையின் வழியாக உள்ளே சென்றது. வாயிற்காவலர் இருவர் அவளை தலைவணங்கி வரவேற்றனர். முகமனோ அரசமுறைவாழ்த்தோ உரைக்கப்படவில்லை. உள்ளே சென்றதும் குந்தி திரும்பி கோட்டைமேல் தன் குலக்கொடி ஏறியிருக்கிறதா என்று பார்த்தாள். பின்னர் “விதுரர் வந்துசென்றிருக்கிறார்” என்றாள். பார்க்கவி திரும்பி நோக்க “அவருடைய பல்லக்கு கடந்துசெல்வதை காவல்மாடத்தின் கொம்புகள் சொல்கின்றன” என்றாள்.

அவள் தன்னிடம் எதையும் சொல்வதில்லை என்பதை பார்க்கவி உணர்ந்திருந்தமையால் மறுமொழி உரைக்கவில்லை. அவளுக்கு தான் ஓர் ஆடிப்பாவை என்று அவள் எப்போதும் உணர்வதுண்டு. குந்தி “கணிகர்வீதிக்கு செல்லச் சொல்” என்றாள். அவள் தனக்கே என முணுமுணுக்கும் சொற்களைக் கேட்கும்படி தன் காதுகளை பார்க்கவி பழக்கியிருந்தாள். அவள் அவ்வாணையைச் சொன்னதும் தேர்வலன் கடிவாளத்தை இழுத்து புரவியை சிலகணங்கள் தயங்கச்செய்தபின் தேரை திருப்பினான்.

கணிகர்வீதி அப்போதுதான் துயிலெழுந்திருந்தது. சிறிய இல்லங்கள் நெருக்கமாக அமைந்திருந்த அகலம்குறைவான வீதியை கணிகர்குலத்துப் பெண்கள் பெருக்கிக்கொண்டிருந்தனர். சிலர் புடவை முந்தானையை தூளியாக்கி சிறுகுழவிகளை துயிலச்செய்திருந்தனர். தேர் வரக்கண்டு அவர்கள் எழுந்து விலகினர். அவர்களருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமைந்தரை கைகளால் இடையுடன் அணைத்துப் பிடித்துக்கொண்டனர். திண்ணைகளில் துயின்ற முதியவர்கள் எழுந்து நோக்கினர். ஆசிரியர்களின் இல்லங்களில் அகன்ற திண்ணைகளில் பாடம் பயின்றுகொண்டிருந்த சிறுவர்கள் திரும்பி நோக்கி அவளை அடையாளம் கண்டுகொண்டனர்.

மூன்றுதெரு சந்திப்பில் பிரஹஸ்பதியின் ஆலயத்தில் ஆலய நடைதிறப்புக்காக கணிகர்கள் கூடியிருந்தனர். பூசெய்கை நிகழ்த்தும் முதுகணிகர்கள் மூவர் ஆலயத்தின் காவலென அமைந்த சிறுதெய்வங்கள் ஒவ்வொன்றுக்கும் மலரும் நீரும் காட்டி நிறைவுசெய்து வானுக்கு அனுப்பிவிட்டு பிரஹஸ்பதியின் மைய ஆலயக் கதவை திறந்தனர். கணிகர்கள் உரத்த குரலில் “முக்காலமும் அறிந்தவரே, முதற்குருவே, நூலோரின் சொல்முதலே, வாழ்க!” என்று கூவி வாழ்த்தினர்.

குந்தி பிரஹஸ்பதியின் ஆலயத்தின் பெருமண்டபத்திற்கு முன்னால் சுவரோடு ஒட்டி இருந்த சின்னஞ்சிறு ஆலயத்தருகே தேரை நிறுத்தச் சொன்னாள். பார்க்கவி வெளியே இறங்கி நிற்க பாகன் படிகளை பொருத்தினான். குந்தி இறங்கி அந்தச் சிற்றாலயத்தின் அருகே சென்று நின்றாள். அவள் வருவதைக் கண்டு பிரஹஸ்பதியின் ஆலயத்திலிருந்து முதுகணிகர் கைகூப்பியபடி விரைந்து வந்தார். அவருடன் பிற கணிகர்களும் ஓடிவந்தனர்.

முதுகணிகர் “எனக்கு முதுமை… இங்கே பெரும்பாலும் எவரும் வருவதில்லை… ஆகவே பொழுதுவிடிந்தபின்னரே திறந்து நீரும் மலரும் அளிப்பது வழக்கம்… பேரரசி பொறுத்தருளவேண்டும்” என்றபடி குனிந்து சிற்றாலயத்தின் கதவை திறந்தார். உள்ளே ஒருகையில் ஒருமை முத்திரையும் மறுகையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாக அமர்ந்திருந்த தெய்வத்தை அவள் முன்னர் பார்த்ததில்லை. தெய்வச்சிலை போலன்றி மானுடர் போலவே தோன்றினார்.

முதுகணிகர் சிக்கிமுக்கியை உரசி கற்பூரத்தை எரியச்செய்து கல்லகலை பொருத்தினார். சுடர்மணி அசையாமல் நின்றது. அந்த துயரம் நிறைந்த கண்களையே அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். பித்தனின் விழிகள் எனத் தோன்றியது.

மீண்டும் அவ்விழிகளை நோக்கியபோது நெஞ்சு திடுக்கிட்டது. அவை அவளை உயிருள்ள விழிகளென நோக்கிக்கொண்டிருந்தன. முதுகணிகர் அவளிடம் “கணிகர்குலத்துப் பெருந்தந்தை அஜபாகர் இவர். இவை அவர் விண்ணுலகில் சூடியுள்ள விழிகள். இவ்விழிகளை நோக்கலாகாது. அவை நம்மை பித்தாக்கிவிடும்” என்றார்.

மலர்களை அஜபாகர்மேல் சூட்டியபடி முதுகணிகர் “முதற்றாதை அஜபாகர் சந்திரகுலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றாகத் திரட்டி ஒரு களத்தில் அமைத்து முழுமைச் சித்திரத்தை அமைக்க முயன்றவர். சந்திரகுலப்பிரபாவம் என்னும் அந்நூல்தான் இன்றும் கணிகர்களின் முதல்நூல். ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் அவருக்கு பெருஞ்சுடரேற்றும் அன்னக்கொடையும் நிகழ்கின்றன” என்றார்.

மாலையைச் சூட்டி தூபத்தையும் பற்றவைத்துவிட்டு “மாமன்னர் சந்தனு மண்நிறைந்த நாளுக்கு மறுநாள் அஜபாகர் விண்புகுந்தார் எனப்படுகிறது. அவர் இறக்கும் முன் சொன்ன நான்கு வரிகளை கணிகநூலோர் ஆராய்ந்து அஜபாகரகஸ்யம், அஜபாகசித்தம், அஜபாககாமிகம் என்னும் மூன்று நூல்களாக்கினர்” என்றார் முதுகணிகர்.

குந்தி “என்ன வரிகள் அவை?” என்றாள். “தர்மத்தின்மேல் விழைவின் கொடி ஏறிவிட்டது என்பது முதல் வரி. வெற்று விழைவு வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச் செய்கிறது. ஆற்றலிழந்த விதைகளை மண் வதைக்கிறது. வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது ஆகியவை எஞ்சிய வரிகள்” என்றார் முதுகணிகர். குந்தி பெருமூச்சுவிட்டாள்.

“சுடராட்டு காட்டலாமா?” என்றார் முதுகணிகர். குந்தி தலையசைத்ததும் இரு கணிகர்கள் வெண்கல மணியை அடிக்க அவர் சுடராட்டு காட்டினார். ஒளியில் அந்த முகம் சுழல்வதுபோலத் தோன்ற பார்க்கவி விழிதாழ்த்திக்கொண்டாள். கணிகர் கொண்டுவந்து வைத்த சுடரை குந்தி தொட்டு வணங்கினாள். பார்க்கவிக்கு அந்நெருப்பை நோக்கவே அச்சம் எழுந்தது.