எழுதழல் - 3

ஒன்று : துயிலும் கனல் – 3

fire-iconவிதுரர் தன் அமைச்சை அடைந்தபோது கனகர் அவருக்காகக் காத்து நின்றிருந்தார். அவர் பல்லக்கிலிருந்து இறங்குவதற்குள்ளாகவே அருகே வந்து பணிந்தார். அவர் விழிதூக்க “பேரரசர் உடனே அழைத்துவரச் சொன்னார்” என்றார். விதுரர் “அங்கே எவரெல்லாம் இருக்கிறார்கள்?” என்றார். “காந்தாரர் இருக்கிறார். அரசரும் இருக்கிறார்.” விதுரர் “கணிகர்?” என்றார். “அவரை அழைத்துவரச் சென்றிருக்கிறார்கள். அங்கரையும் அழைத்துவரும்படி ஆணை.”

விதுரர் தன் அறைக்குச் சென்று அமர்ந்து இன்னீர் கொண்டுவரச்சொல்லி அருந்தினார். ஆலய வழிபாட்டுக்குரிய வெண்பட்டுச் சால்வையை அகற்றிவிட்டு பொன்னூல் பின்னலிட்ட செம்பட்டுச் சால்வையை அணிந்துகொண்டு எழுந்தார். கனகர் அவர் ஆணையை எதிர்பார்த்து நிற்க “யாதவப் பேரரசி நகர்புகுந்திருக்கிறார்கள்” என்றார். “ஆம், நேற்றிரவே செய்தி வந்தது. ஆனால் இங்கே அவருக்கான அரசமுறைமைகள் அனைத்தும் நின்று நெடுநாட்களாகின்றன” என்றார் கனகர்.

“அவரிடமிருந்து செய்தி வந்தால் நான் பின்னுச்சிப்பொழுதில் அவரை சந்திப்பதாக சொல்லும்” என்றபின் ஒருகணம் தயங்கி நின்று சிற்றறையில் இருந்து ஓலைச்சுருள் அடங்கிய மூங்கில் குழல் ஒன்றை எடுத்தார். அதை கனகரிடம் கொடுத்து “படித்துப் பாரும்” என்றார். அவர் படித்துவிட்டு எந்த உணர்வுமில்லாமல் திரும்ப அளித்தார். “இந்தச் செய்தி அத்தனை குலத்தலைவர்களுக்கும் தனித்தனி ஓலையாக சென்று சேரட்டும்” என்றபின் ஓலையை மீண்டும் குழலில் இட்டு மூடி கையில் எடுத்தபடி நடந்தார்.

புஷ்பகோஷ்டத்தில் திருதராஷ்டிரரின் தனியறையில் அவர் இருப்பதாக அவரை எதிர்கொண்ட சிற்றமைச்சர் ஏகசக்ரர் சொன்னார். அவர் அறைவாயிலில் நின்று தன்னை தொகுத்துக்கொள்கையில் ஏவலன் உள்ளே செல்லும்படி சொல்லி தலைவணங்கினான். திருதராஷ்டிரர் பெரிய கற்பீடத்தில் கால்களை நன்றாக நீட்டி செவி முன்னாலிருக்க முகம்திருப்பி அமர்ந்திருந்தார். அவர் முன் சிறிய பீடத்தில் சகுனி வீங்கி கட்டுபோட்ட தன் வலதுகாலைத் தூக்கி நீட்டி வைத்தபடி சாய்வுபீடத்தில் அமர்ந்திருந்தார். இன்னொரு கதவருகே தோட்டத்தை நோக்கித் திறந்த சாளரத்தருகே சாய்ந்தவனாக துரியோதனன் நின்றான். அறைமூலையில் கைகளை மார்பில் கட்டியபடி துச்சாதனன் நின்றிருந்தான்.

விதுரர் தலைவணங்கி முகமனுரைத்தார். “விதுரா, மூடா, காலையிலேயே உன்னைத் தேடி ஆளனுப்பினேன். எங்கே சென்றிருந்தாய்?” என்றார் திருதராஷ்டிரர். “கொற்றவை ஆலயத்திற்குச் சென்றுவிட்டு கிழக்குக்கோட்டை வழியாக வந்தேன்…” என்றார். “எங்கு போகிறாய் என்று சொல்லிவிட்டுச் செல்வதில்லையா?” என்று முனகிய திருதராஷ்டிரர் “ஓலை வந்துள்ளது என்றாயே, அதை காந்தாரருக்கு சொல்” என்றார். “ஓலை அரசரிடம் உள்ளது…” என்றார் விதுரர். “ஆம், அதை இருமுறை படித்துவிட்டோம். அதன் நடைமுறைப்பொருள் என்ன, உய்பொருள் என்ன, அதைச் சொல் மூடா…” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் சகுனியிடம் “நேரடியாக எழுதப்பட்ட கடிதம்தான். நேர்பொருளும் உட்பொருளும் ஒன்றே. அவர்கள் நாம் கூறியதுபோல பன்னிரண்டு ஆண்டுகால கான்வாழ்வும் ஓராண்டு மறைவாழ்வும் முடித்து மீண்டிருக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசும் நிலமும் உடனே கையளிக்கப்படவேண்டும்” என்றார்.

அறைக்குள் அமைதி நிலவியது. திருதராஷ்டிரர் அசைந்து அமர்ந்து “அவர்களுக்குரிய நிலம் என்றால் அவர்கள் சென்றபோது நம்மிடம் ஒப்படைத்துச் சென்றது மட்டும்தானே? அதன்பின் சென்ற பதின்மூன்றாண்டுகளில் அரசனும் கர்ணனும் சேர்ந்து படைகொண்டுசென்று வென்ற நிலங்களையும் சேர்த்தது இன்று நம் நாடு. அதில் பாதியை கேட்கமுடியாதல்லவா?” என்றார். துரியோதனன் சினத்துடன் “அவர்கள் ஒப்படைத்த நிலத்தை அளிக்கப்போவதாக யார் சொன்னது? நான் என் நாட்டை சென்ற பதின்மூன்று ஆண்டுகளாக ஒற்றைப்பெரும்பரப்பென ஆண்டுவருகிறேன். அதை கூறுபோடுவதென்பது என் உடலை வெட்டிப்பிளப்பதற்கு நிகர்” என்றான்.

திருதராஷ்டிரர் “அவ்வாறு செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை” என்று தணிந்த குரலில் சொன்னார். “இங்கே அரசு எப்படி நிகழ்கிறதென்று பாருங்கள். பாரதவர்ஷத்தில் இதற்கிணையாக ஆளப்படும் ஒரு நிலம் உண்டா? வளம்பேணி காவல்நிறுத்தி முறைநாட்டி இதை ஆள்கிறேன். விதுரர் சொல்லட்டும், ஒருமுறையேனும் இங்கே நெறிகள் வழுவியதுண்டா? என் மக்களுக்கிடையே அணுவிடையேனும் நான் வேறுபாடு நோக்கியதுண்டா?” என்றான் துரியோதனன். “சொல்லுங்கள் விதுரரே, நான் ஆட்சிசெய்வதில் பிழையோ குறையோ உண்டா?”

விதுரர் “இன்றுவரை அவ்வாறு ஒரு சொல் என் செவியில் விழுந்ததில்லை. ஒருமுறையேனும் நானும் எண்ணியதில்லை” என்றார். “நேரடியாகவே கேட்கிறேன், உங்கள் நெஞ்சில் வாழும் அறத்தெய்வத்தை எண்ணி மறுமொழி சொல்க. நான் அளித்தது யுதிஷ்டிரனைவிட நல்லாட்சி அல்லவா?” விதுரர் அவன் விழிகளை நோக்கி “ஆம், அரசே. நீங்கள் தருமனை விடவும் திரௌபதியை விடவும் சிறந்த ஆட்சியாளர். நானறிந்தவரை இந்த மண்ணில் இன்றுவரை தோன்றிய மாபெரும் ஆட்சியாளர்களில் நீங்களும் ஒருவர். யயாதியையும் ஜனகரையும் ராகவராமனையும் மட்டுமே அவ்வகையில் உங்களுக்கு இணைசொல்ல முடியும்” என்றார்.

திருதராஷ்டிரர் முகம் மலர்ந்து “ஆம், அவன் சிறந்த ஆட்சியாளனாக இருப்பான் என நான் எண்ணினேன்” என்றார். “நான் எண்ணியிருக்கவில்லை. ஆகவே எனக்கு அது வியப்புதான். ஏன் அவ்வாறென்று சூழ்ந்து நோக்கியிருக்கிறேன். எனக்குக் கிடைத்த விடை ஒன்றே. யுதிஷ்டிரனுக்கு அறத்தில் முதன்மை விருப்பு. திரௌபதிக்கு புகழில் முதல் விருப்பு. மூத்த கௌரவருக்கு மண்மீதுதான் முதல் விழைவு. அதுவே அவரை விடாப்பிடி கொண்டவராக்குகிறது. நல்லரசரும் ஆக்குகிறது. இந்த பதின்மூன்றாண்டுகளில் இந்த மண்ணின் ஒவ்வொரு அங்குலமும் செழிப்பதற்கென்று அவர் அரும்பாடுபட்டிருக்கிறார். இதன் ஒவ்வொரு குடியையும் தன் மைந்தரென்றே எண்ணியிருக்கிறார்.”

துரியோதனன் அச்சொற்களால் உளநெகிழ்வடைந்து விழிதிருப்பிக்கொண்டான். அவன் தாடை இறுக குரல்வளை அசைந்தது. துச்சாதனன் உரத்த குரலில் “அவ்வாறென்றால் ஏன் இந்நாட்டை பகுக்கவேண்டும்? அமைச்சரே, அரசுசூழ்தலின் முதல்நெறி அது மக்களுக்கு நலம்பயப்பதாக இருக்கவேண்டும் என்பதல்லவா? அதையன்றி வேறெதை தலைக்கொள்வீர்?” என்றான். விதுரர் “இளவரசே, அரசனின் பணி ஆட்சிசெய்வது மட்டும் அல்ல. அது இரண்டாவது பொறுப்பே. அரசன் முன்செல்லும் பறவை. அவன் ஒவ்வொரு சிறகசைவுக்கும் பின்செல்லும் திரளில் பொருள்விரிவுண்டு” என்றார்.

“சொன்ன சொல்லை அரசன் மறந்தால் அதை அவன் தன் குடிகளுக்கு நெறியாக்கும் தகுதிகொண்டிருக்கிறானா என்ன? அறத்தானாகிய அரசனின் தண்டத்தை தந்தையின் சினமென்று கொள்வார்கள் குடிகள். அவன் நெறியிலான் என்றால் அது தங்கள் மீதான வன்செயலென்றே அவர்களால் எண்ணப்படும். அந்நாடு ஒருபோதும் நெறியிலமையாது. நெறியழியும் என்றால் நிலம் வளம் கொழிப்பினும் நோயின்றி மானுடம் செழிக்கினும் அரசு நிலைகொளினும் அந்நாடு வாழாது அழியும் என்றே நூல்கள் சொல்கின்றன” என்றார் விதுரர்.

“நெறிகளின்படியே பார்த்தால்கூட பன்னிரண்டு ஆண்டுகாலம் ஒரு நிலத்தை கையில் வைத்திருப்பவன் அதற்கு உரிமைகொண்டவன் ஆகிறான்” என்றார் சகுனி. விதுரர் “காந்தாரரே, வியாழவட்ட நியாயம் என்பது ஒப்பளிக்கப்பட்ட நிலத்திற்கு இல்லை. பன்னிரண்டு தலைமுறை ஆனாலும் அது அளித்தவருக்குரியதே. பெற்றவர் அதன் காப்பாளர் மட்டுமே” என்றார். துச்சாதனன் “அவ்வண்ணமென்றால் இந்த நாடு சிறிய தந்தைக்கு எந்தையால் ஒப்பளிக்கப்பட்டது அல்லவா?” என்றான்.

விதுரர் சீரான குரலில் “இளையோனே, நாட்டை ஒப்பளித்தது உங்கள் தந்தை அல்ல. உங்கள் தந்தைக்கும் அவர் இளையோருக்கும் இங்கிருக்கும் அரசருக்கும் இனி வருபவர்களுக்கும் நிலத்தை ஒப்பளிப்பவர்கள் குலத்தலைவர்கள். அவர்கள் எடுத்தளிக்கும் முடியையே இங்கு அரசர்கள் சூடுகிறார்கள். கொடியும் கோலும் முடியும் உருவாகி சில தலைமுறைகள்தான் ஆகின்றன. குலங்கள் முன்பே உள்ளன. நாளை இவ்வரசர்களும் இவர்களின் கொடிவழியினரும் மறையக்கூடும். அப்போதும் குலங்கள் நீடித்திருக்கும்” என்றார்.

சினத்துடன் கையை நீட்டி முன்னால் ஓரடி எடுத்துவைத்த துரியோதனன் “அவர்கள் வந்து சொன்னார்களா நாட்டை துண்டுபோட?” என்றான். “குலம் என்பது தொல்நெறிகளால் கட்டமைக்கப்படுவது. குலத்தலைவர் அந்நெறிகளையே தன் கைக்கோல் எனக் கொண்டிருக்கிறார். சொல்நெறியென நம் முன் வந்து நிற்பது குலத்தலைவர்களின் ஆணையேயாகும்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் “நாம் பூசலிடவேண்டியதில்லை. எது முறையோ அதை செய்வோம்” என்றார்.

“எந்த முறையின்படியும் நான் என் மண்ணை இழக்கப்போவதில்லை. ஒரு காலடிகூட விட்டுத்தரமாட்டேன்” என்றான் துரியோதனன். “மூடா, உன் மண்ணா? இது இங்குள்ள குலங்களின் மண். இங்கு வாழ்ந்த யானைகளிடமிருந்தும் மான்களிடமிருந்தும் குரங்குகளிடமிருந்தும் அவர்கள் கடன்பெற்ற மண்… உன்னை நீக்க அவர்களுக்கு நெடுங்காலமாகாது.” துரியோதனன் “நீக்குவார்களா? எவர்? நீக்கிப் பார்க்கட்டுமே” என்றான். சகுனி “மருகனே, நம் பூசல் குலத்தலைவர்களுடன் அல்ல. அலைகளுடன் வாள்போரிடுவது அது…” என்றார்.

ஏவலன் வந்து தலைவணங்கி “கணிகர்” என்றான். திருதராஷ்டிரர் வரும்படி கைகாட்ட கணிகரை இரு வீரர்கள் பட்டுத் தூளியில் வைத்து தூக்கிவந்தனர். அவர் அமர்வதற்காக நிலத்தில் மெத்தை போடப்பட்டது. அதில் மெல்ல அமர்ந்து வலியுடன் முனகியபடி கண்களை மூடிக்கொண்டார். முகத்தில் நரம்புகள் எழுந்து நின்றன. மெல்ல தணிந்து விழிதிறந்து அரசரை நோக்கி முகமனை முணுமுணுத்தார்.

திருதராஷ்டிரர் “கணிகரே, ஓலையை முன்னரே வாசித்துவிட்டீர்… இதை கடக்கும் வழி என்ன?” என்றார். கணிகர் “அறியா வாழ்வை அவர்கள் முடிக்கவில்லையே?” என்றார். துரியோதனன் திகைப்புடன் முன்னால் வந்து “எப்படி சொல்கிறீர்கள்?” என்றான். “அவர்களின் காலக்கணிப்புப்படி…” என்று அவன் சொல்ல அவர் கைகாட்டித் தடுத்து “எந்தக் காலக்கணிப்புப்படியும் அர்ஜுனன் போரில் தன்னைக் காட்டியது நெறி வழுவலே” என்றார். “கணிகரே, அவன் தன்னைக் காட்டவில்லை. பிருகந்நளை என்னும் பேடியாக, தேர்ப்பாகனாகவே இருந்தான். உண்மையில் அவன் முகத்தைக்கூட நானும் கர்ணனும் பார்க்கவில்லை” என்றான் துரியோதனன். “பார்த்திருந்தால் அங்கேயே அவனை கண்டுவிட்டதை அறிவித்திருப்போம். பார்த்தோம் என்று பொய்யுரைப்பது என் இயல்பல்ல.”

கணிகர் “விழிகளால் நோக்கவேண்டுமென்பதில்லை” என்றார். “கர்ணனின் விலாவில் பாய்ந்த அம்பு ஒன்று நம்மிடம் உள்ளது. அது தன் அம்பு அல்ல என்று அர்ஜுனன் தன் மூதாதையரை தொட்டு ஆணையிடட்டும். நாம் ஒப்புக்கொள்வோம்.” அறைக்குள் அமைதி நிறைந்தது. விதுரர் “அதில் அர்ஜுனனின் இலச்சினை இருந்ததா?” என்றார். “இல்லை, அது விராடபுரியின் அம்பு, உத்தரனால் ஏவப்பட்டது” என்றார் கணிகர். “ஆனால் அம்பென்பது உளத்தில் இருந்து எழுவது. அந்த அம்பு தன்னால் எவ்வகையிலும் செலுத்தப்படவில்லை என்று அவர் சொல்வாரென்றால் மறுபேச்சில்லை.” விதுரர் “கர்ணனின் உடலில் தைத்துள்ளது என்றால் அது எவர் கையில் எழுந்தாலும் அர்ஜுனனின் அம்புதான்” என்றார்.

“அர்ஜுனன் அம்பென வெளிக்காட்டிக்கொண்டார். மறைந்திருத்தல் என்றால் முற்றிலும் அறியப்படாமலிருத்தல்… இச்சான்றே போதும்” என்றார் கணிகர். “அதை அவர்கள் ஏற்பார்களா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “ஏற்பதும் மறுப்பதுமல்ல இங்கே எழுவினா. இதுவே உண்மையில் நிகழ்ந்தது. வஞ்சினப்பாடு மீறப்பட்டது. ஆகவே அவர்கள் தங்கள் அறச்சான்றின்படி நிலம் கோரமுடியாது” என்றார் கணிகர். “ஆம், அதை நாம் எழுதியறிவிப்போம். அமைச்சரே…” என்று துரியோதனன் திரும்பினான்.

“அரசே, அதை நாம் அவையில் வைப்போம். பிதாமகரும் துரோணரும் கிருபரும் அமரும் அவை அந்த ஓலையை அனுப்பட்டும்.” என்றார் விதுரர்.துரியோதனன் “அவர்கள் எதற்கு? இது அரசப்பணி…” என்றான். “அல்ல அரசே, இது முடியுரிமைப் பூசல். முடிக்குரியவர் இன்றும் பிதாமகரே.” என்று விதுரர் மெல்லிய அழுத்தமானகுரலில் சொன்னார். திருதராஷ்டிரர் “இது அவர் துறந்த நிலம்” என்றார். துரியோதனன் எரிச்சலுடன் “துறந்தாரென்றால் ஏன் வந்து அவையில் அமர்ந்திருக்கிறார்?” என்றான்.. கணிகர் “இப்பேச்சை விடுவோம். இதை அவையில் வைத்தால் வீண் சொல்லாடலே நிகழும், முடிவு என ஏதும் எழாது” என்றார்.

கணிகரை நோக்காமல் “மாறாக ஓலையை அனுப்பினால் அதில் பிதாமகரின் கைச்சாத்தில்லை என்பதனால் ஏற்கமுடியாது என்று அவர்கள் சொல்லக்கூடும்” என்றார் விதுரர். “அத்துடன் நம் குலத்தலைவர்களும்கூட அதை சுட்டிக்காட்டலாம்.” துரியோதனன் சினத்துடன் “நம் குலத்தலைவர்கள் இதை இப்போது அறியவேண்டியதில்லை… இது நம் குடிப்பூசல்” என்றான். மேலும் அமைதிகொண்ட குரலில் “அரசே, நான் எனக்கு வந்த ஓலையின் செய்தியை அனைத்து குலத்தலைவர்களுக்கும் அறிவித்துவிட்டேனே” என்றார் விதுரர்.

“உனக்கு ஓலை வந்ததா? பிறிதொரு ஓலையா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், அது தங்களுக்குத் தெரியும் என எண்ணினேன்” என்றார் விதுரர். “அந்த ஓலையை நீ அவைமுன் வைக்கவில்லை…” என்று திருதராஷ்டிரர் கூவினார். “அதில் மந்தணம் ஏதுமில்லை. இதே செய்தியுடன் இதே சொற்களுடன் எழுதப்பட்ட ஓலை” என்றபின் விதுரர் தன் கையிலிருந்த மூங்கில் குழாயில் இருந்து ஓலையை எடுத்து பீடத்தில் வைத்தார். “இது குலத்தலைவர்களுக்கும் உரியது என அந்த ஓலையிலேயே எழுதப்பட்டிருந்தது. ஆகவே இதை அவர்களிடம் கொண்டுசெல்லவேண்டியது என் கடமை.”

துரியோதனன் எரிச்சலுடன் தலையை அசைத்தான். வெண்பற்கள் தெரிய முகத்தைச் சுளித்து “அவர்களின் ஓலையை கொண்டுசெல்வதுதான் உன் பணியா?” என்றார் திருதராஷ்டிரர். “அவர்களுக்கு அஸ்தினபுரியின் குலத்தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கே உரிமையுள்ளது. நேரடியாகப் பேசவேண்டாம் என்று எனக்கு அவர்கள் எழுதியது நம் மீதான மதிப்பாலும் முறைமீறவேண்டாம் என்பதாலும்தான்” என்றார் விதுரர். “மேலும் அவர்கள் யாதவ அரசிக்கும் ஓலையை அனுப்பியிருக்கிறார்கள். அவ்வோலையை அவர் குலத்தலைவர்களிடம் அளித்து நாம் அச்செய்தியை அவர்களிடமிருந்து மறைத்தோமென்றால் மிகுந்த இழிவுக்குள்ளாவோம்.”

“மார்த்திகாவதியின் அரசிக்கும் ஓலை வந்துள்ளதா?” என்றார் சகுனி. கணிகர் “ஆம், அவர் இன்று காலை நகர்புகுந்துவிட்டிருக்கிறார். அவைக்கு அவரும் வருவார்” என்றபின் விதுரரை நோக்கி புன்னகை புரிந்தார். விதுரர் “ஆம், அவ்வாறுதான் எண்ணுகிறேன்” என்றார். திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டு மெல்ல உடலை அசைத்து முன்சாய்ந்து “பிறகென்ன? இனி ஏதும் செய்வதற்கில்லை” என்றார். விதுரர் “மாலையே அவைகூட ஒருங்குசெய்கிறேன்” என்று தலைவணங்கினார். திருதராஷ்டிரர் ஏதும் சொல்லாமல் கைநீட்ட துச்சாதனன் அவரை பிடித்துக்கொண்டான். அவர்கள் பக்கவாட்டு அறைக்குள் நுழைய சகுனி எழுந்து துரியோதனனை நோக்கிவிட்டு வெளியே சென்றார். துரியோதனன் சகுனியைத் தொடர்ந்தான்.

கணிகர் “குலத்தலைவர்களுக்கான ஓலைகள் எப்போது சென்றன, அமைச்சரே?” என்றார். “நான் இங்கே வருவதற்கு முன்பு” என்றார் விதுரர் அவர் விழிகளை நேர்நோக்கியபடி.

fire-iconஅவையை ஒட்டிய சிற்றறையில் சகுனி அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற ஏவலன் இன்னீரை சிறிய மரக்குவளையில் ஊற்றி அளிக்க அதை வாங்கி அருந்தினார். கதவு திறந்து ஏவலன் “கணிகர்” என்றான். சகுனி கைகாட்ட அவன் வெளியே சென்று கணிகரை அனுப்பினான். பட்டு மஞ்சலில் கணிகரை கொண்டுவைத்தவர்கள் தலைவணங்கி வெளியே சென்றனர். கணிகர் மெல்ல அமர்ந்து இயல்பாகி ஏவலனிடம் இன்னீருக்கு கைநீட்டினார். அவன் அளித்ததை வாங்கி மெல்ல அருந்தினார்.

“பிதாமகரும் துரோணரும் வந்துவிட்டனர். கிருபருக்காகக் காத்து மறுபக்க அறையில் சொல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் சகுனி. “அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று ஐயம் கொண்டிருக்கிறேன்.” கணிகர் “அவர்கள் மகிழ்ச்சியே அடைவார்கள். பாதி நாட்டை பாண்டவர்களுக்குத் திருப்பியளிக்கவே விழைவார்கள்” என்றார். “ஆம், அவர்கள் முன்பு திரௌபதியை சிறுமைசெய்தபோது அவையில் வெறுமனே இருந்தார்கள் என்னும் பழி இத்தனை ஆண்டுகளில் பெருகியே வருகிறது. அதை ஈடுசெய்ய ஒரு நற்தருணம் இது” என்றார் சகுனி.

காவலன் வந்து வணங்கி “அரசர் அவைபுகவிருக்கிறார்” என்றான். இருவர் வந்து கணிகரை தூக்கிக்கொண்டார்கள். சகுனி “ஒரு சான்றையேனும் எஞ்சவிடாமல் மறைவதற்குப்பெயர்தான் அக்ஞாதம். இங்கே கண்முன் சான்று ஒன்று உள்ளது. அவன் அதை மறுக்கவும் போவதில்லை. இதற்குமேல் பீஷ்மர் என்ன சொல்லப்போகிறார்?” என்றார். கணிகர் “உள்ளமிருந்தால் தர்க்கம் ஆயிரம் வாயில்களை திறக்கும்” என்றார். பின்னர் கோணலாகச் சிரித்து “அதனால்தான் ஆயிரமாண்டுகளாக மானுடர் தர்க்கத்தை நம்புகிறார்கள்” என்றார்.

அவர்கள் அவைக்குள் நுழைந்தபோது பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அவையில் அமர்ந்திருந்தார்கள். சகுனி அவர்களை வணங்கிவிட்டு அமர கணிகரை அவருக்கான மூலைக்கு கொண்டுசென்றனர். நிமித்திகன் வெள்ளிக்கோலுடன் தோன்றி துரியோதனனின் அவைபுகுதலை அறிவித்தான். அதன்பின் அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் முதன்மைக் கொடிவீரன் வந்தான். தொடர்ந்து அரவுக்கொடியுடன் துரியோதனனின் கொடிவீரன் வர மங்கல இசையுடன் சூதரும் அணித்தாலமேந்திய சேடியரும் வந்தனர். துரியோதனன் அரசணிக்கோலத்தில் வந்து அவையைத் தொழுது பீஷ்மரையும் துரோணரையும் கிருபரையும் கால்வணங்கி வாழ்த்துகொண்டபின் அரியணையில் அமர்ந்தான்.

அதன்பின்னரே திருதராஷ்டிரர் அவைபுகும் அறிவிப்பு எழுந்தது. சஞ்சயன் கைபற்றி அழைத்துவர அவைக்குள் நுழைந்த திருதராஷ்டிரர் கைகூப்பிவிட்டு பீஷ்மரையும் துரோணரையும் கிருபரையும் அணுகி வணங்கிவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு இடப்பக்கமாக சஞ்சயன் நின்றான். சகுனி விழிகளால் தேடி கர்ணனின் இருக்கை ஒழிந்துகிடப்பதைக் கண்டார்.

குலமூத்தோர் தொட்டுக்கொடுத்த மணிமுடியையும் செங்கோலையும் திருதராஷ்டிரர் பெற்றுக்கொண்டதும் வரிசைமுறைமைகளும் குலச்சடங்குகளும் நடந்தன. அவை தொடங்கவிருப்பதை கனகர் அறிவித்தார். வணிகர்கள் சிலர் எழுந்து சகடங்கள் அனைத்துக்கும் ஒரே நிகுதி போடப்படுவதை தவிர்க்கவேண்டும் என்றும் வண்டிகளின் சகடங்களையும் விலங்குகளையும் கொண்டு நிகுதி வரையறை செய்யப்படவேண்டும் என்றும் கோரினர். ஏரிக்கரையின் கால்வாய் குறித்த பூசல் ஒன்றை குடித்தலைவர் ஒருவர் சொன்னார்.

துரியோதனன் விழிகளையும் உள்ளத்தையும் முற்றாக அளித்து அவற்றை கேட்டான். குறையை முன்வைப்பவர்கள் தங்கள் தரப்பை முழுமையாக சொல்லவிட்டான். மேலும் மேலும் வினாக்களைக் கேட்டு அவர்கள் அவற்றை நன்கு சொல்லியாகிவிட்டது என்ற நிறைவை அடையச்செய்தான். அதிலேயே அவர்களின் முகங்கள் தெளிந்தன. அதன்பின் அவர்கள் முன்னிலையில் அமைச்சர்களிடம் அக்குறையை உசாவினான். குறைசொல்பவர்களிடமுள்ள பிழைகள் இயல்பாகவே அவையில் எழுந்துவரச் செய்தான். அவர்கள் தங்கள் மீறலை உணர்ந்து தயங்கியபோது அதைப் பொறுத்து அவர்களிடம் இன்சொல்லால் நகையாடி அரசால் இயல்வதென்ன என்று சொன்னான். அவர்களே தங்கள் கோரிக்கைகளை குறைத்துக்கொள்ள அதற்குமேல் சற்று அளித்து அவ்வழக்கை முடித்தான்.

சகுனி எப்போதும் துரியோதனனின் குடியாள்கையை வியப்புடன் பார்ப்பதுண்டு. சில தருணங்களில் குடிகளின் அறியாமையையும் பெருவிழைவையும் முரட்டியல்பையும் கண்டு அவர் சினம் கொள்வார். ஆனால் துரியோதனனின் முகம் மலர்ந்தேயிருக்கும். குழந்தைகளின் பிழைகண்டு அதையும் ஓர் ஆடலென எண்ணும் அன்னையைப்போல. “இந்தச் சிறியோரை எப்படி பொறுத்துக்கொள்கிறாய், மருகனே?” என்று ஒருமுறை கேட்டபோது “அவர்கள் எளியோர், மாதுலரே. ஆகவே காக்கப்படவும் விரும்பப்படவும் தகுதிகொண்டோர். செடிகளுக்கே வேலிகட்டி நீரூற்றப்படவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான்.

எட்டு வழக்குகள் முடிந்தபின்னர் விதுரர் எழுந்து பாண்டவர்களின் ஓலையைப்பற்றி சொன்னார். குலத்தலைவர்கள் அதை முன்னரே அறிந்து எதிர்பார்த்துக்கொண்டிருந்தாலும் அவையில் பிறர் அறிந்திருக்கவில்லை. விதுரர் அந்த ஓலையைப்பற்றி சொல்லி அதை அளிக்க நிமித்திகன் முழுமையாக அதை படித்தான். மீண்டும் ஒரு நிமித்திகன் அதை படித்து முடித்தபோது அவை ஓசையிழந்து அமர்ந்திருந்தது.

விதுரர் “நாம் முடிவெடுக்கவேண்டிய இடத்தில் இருக்கிறோம். பிதாமகரும் ஆசிரியரும் அமர்ந்துள்ள இந்த அவையில் எடுக்கப்படும் முடிவு குலநெறிக்கும் தெய்வங்கள் அமைத்த அறத்திற்கும் நாளை எழப்போகும் கொடிவழிகளின் எண்ணத்திற்கும் உகந்ததாக அமையும் என எண்ணுகிறேன்” என்றார். அவை மெல்ல கலைந்து தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கியது. பெருவணிகரான சுவர்ணர் எழுந்து “இதில் பிதாமகரின் கருத்தை அறிய விரும்புகிறோம்” என்றார். பீஷ்மர் “முடிவெடுக்கவேண்டியவர்கள் குலத்தலைவர்களே. ஏதேனும் இடர் இருந்தாலொழிய நான் ஏதும் சொல்லலாகாது” என்றார்.

வேளிர்களின் தலைவராகிய அஜகர் “என் கருத்து எங்கள் குலவழக்கை ஒட்டியதே. நிலம் தெய்வங்களுக்குரியது. அதை மானுடர் முழுமுற்றாக உரிமைகொள்ளமுடியாது. அதன் ஆழத்தில் இரண்டு அடிக்கு அப்பால் உள்ளவற்றை நாம் அறிவதில்லை. அதில் வளரும் பசுமையில் பத்தில் ஒரு பங்கு, அதில் வாழும் சிற்றுயிர்களில் நூறில் ஒரு பங்குகூட நம்மால் அறியப்படக்கூடுவதல்ல. நிலம் நமக்கு தன் ஆயிரம் முலைகளில் ஒன்றை மட்டுமே அளிக்கும் அன்னை. எனவே நிலத்தின்மேல் முற்றுரிமை பேசுவதுபோல தெய்வச்சிறுமை பிறிதில்லை” என்றார்.

“நிலமல்ல, நிலத்தின்மேல் நாம் இடும் அளவுகளே நம்முடையவை” என்று அஜகர் தொடர்ந்தார். “அந்த அளவுகள் நாம் ஒருவருக்கொருவர் பேசி ஏற்றுக்கொண்டவை மட்டுமே. ஒரு குடியினரின் அளவு பிறிதொரு குடிக்கு முற்றிலும் அயலானது. இங்கே ஆயர்குடிகள் அமர்ந்திருக்கிறார்கள். நிலத்தை அவர்கள் அளப்பதும் மதிப்பதும் முற்றிலும் பிறிதொரு நோக்கில்.” மறக்குடித் தலைவர் அஹுண்டர் “நடக்கும் உயிர்களின் நோக்குக்கும் பறக்கும் உயிர்களின் நோக்குக்கும் இடையேயான வேறுபாடு அங்குள்ளது” என்றார். அவை சிரித்தது.

“எனவே நிலத்தைப்பற்றி நாம் இங்கே பேசவில்லை. நாம் பேசுவது மானுடர் போட்டுக்கொண்ட அளவுகளையும் அடையாளங்களையும் பற்றி மட்டுமே. அவை கூறியவர்களும் கேட்டவர்களும் கொண்ட புரிதல் வழியாக மட்டுமே நிலைகொள்பவை. ஆகவே நாம் சொல் குறித்துப் பேசுவோம். இரு சாராருக்கிடையே என்ன சொல் அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டது என்று மட்டுமே நாம் நோக்கவேண்டும்” என்றார் அஜகர். “பன்னிரண்டாண்டு காடு. ஓராண்டு மறைவு. மீண்டு வருகையில் அனைத்தும் முன்புபோல. அதுவே சொல். இருவரும் ஏற்றுக்கொண்டது” என்றார் விதுரர். “அதை அவர்கள் முடித்துவிட்டிருக்கிறார்கள்.”

“அப்படியென்றால் பிறிதேதும் பேசவேண்டியதில்லை. சொல் திகழ்க!” என்றபடி அஜகர் அமர்ந்தார். அஹுண்டர் “ஆம், எங்களுக்கும் பிறிதேதும் சொல்வதற்கில்லை” என்றார். மற்ற குடித்தலைவர்களும் கோல்களைத் தூக்கி “ஆம், எங்கள் கருத்தும் அதுவே” என்றார்கள். ஆயர்குடித் தலைவர் நிரந்திரர் “பிறகென்ன? பிதாமகர் முடிவை சொல்லட்டும்… அவை அதை முழுதேற்கும்” என்றார். அவையின் முழக்கத்தை சகுனி திரும்பாமல் அரைக்கண்மூடி கேட்டுக்கொண்டிருந்தார். பீஷ்மர் “அவையில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை என்றால் அவர்களுக்கு மாற்றோலை செல்லட்டும். அவர்கள் இங்கு வந்து அவை நிற்கட்டும். நாடு பிரிந்தால் குலம் ஒன்றாகுமென்றால் அது நிகழட்டும்” என்றார்.

துச்சாதனன் “இல்லை, இதிலொரு தடை உள்ளது. அவர்கள் ஓராண்டுகாலம் மறைவுவாழ்வை முடிக்கவில்லை. அதற்கு மூன்று நாட்களிருக்கையிலேயே அஸ்தினபுரியின் படைகள் விராடநாட்டிற்கு சென்றன. விளையாட்டாக என் மூத்தவரும் அங்கநாட்டரசர் கர்ணனும் விராடபுரியின் கன்றுகளை கவர்ந்தனர். அவற்றைக் காக்க மாற்றுருகொண்டு அர்ஜுனன் வந்தான். அவனுக்கும் எங்கள் படையினருக்கும் இடையே போர் நிகழ்ந்தது. அதில் அவன் வெளிப்பட்டான்” என்றான்.

அவையினர் அதை எதிர்பார்க்கவில்லை. குழம்பிய குரல்களுக்கு நடுவே அஜகர் உரத்த குரலில் “அவர் தன் மாற்றுருவை களையவில்லை என்றல்லவா கேட்டோம்? போர் முடிந்தபின்னர் எப்படி தோற்றோம் என எண்ணும்போது அல்லவா வென்றது அர்ஜுனராக இருக்கலாம் என்று உய்த்தறிந்தோம்?” என்றார். அஹுண்டர் “அதற்கு முன்னரே அங்கே பாண்டவர் இருப்பதை உய்த்தறிந்திருந்தோம் என சொன்னார்கள். இறந்தது கீசகர் என்றால் கொன்றது பீமனே என்று காந்தாரர் சொன்னதாக கேள்விப்பட்டோம்” என்றார்.

சகுனி அவ்வுரையாடலை கேளாதவர்போல் அமர்ந்திருந்தார். அஜகர் “அவ்வாறென்றால் அங்கே களத்திலேயே அர்ஜுனரின் மாற்றுருவை கலைத்திருக்கவேண்டும். அங்கே முரசறைந்திருக்கவேண்டும்” என்றார். துச்சாதனன் தன் கையிலிருந்த அம்புமுனை ஒன்றை கொண்டுவந்து அவைநடுவே மேடையில் வைத்தான். “அவையீரே, இது அங்கநாட்டு அரசர் கர்ணன் விலாவில் தைத்திருந்த அம்பு. அவர்மேல் அம்பு என ஒன்று படுமென்றால் அது அர்ஜுனனின் அம்பு மட்டுமே என அனைவரும் அறிவார்கள்…” என்றான். “மறைந்திருத்தல் என்றால் முற்றாக அறியப்படாமலிருத்தல். இது அவர்கள் வெளிப்பட்டமைக்கு சான்று” என்றான்.

“அவர்களின் குலக்குறி இதில் உள்ளதா?” என்றார் துரோணர். “இல்லை. இதிலுள்ளது விராடர்களின் காகம். ஆனால் இதை தான் எவ்வகையிலும் செலுத்தவில்லை என அர்ஜுனன் சொல்லட்டும். இங்கு வரவேண்டுமென்பதுகூட இல்லை, மறுத்து ஓர் ஓலையை தன் முத்திரையுடன் இங்கு அனுப்பினால்கூட போதும். அவ்வாறு அவன் மறுத்தால் நாங்கள் ஏற்கிறோம் மறைவுவாழ்க்கை நிறைவுற்றதென்று. இல்லையேல் அவர்கள் வெளிப்பட்டார்கள் என்றே பொருள்.”

அவை பீஷ்மரை நோக்கி அமர்ந்திருக்க திரையிடப்பட்ட பெண்களின் பகுதியிலிருந்து குந்தியின் சேடி பார்க்கவி எழுந்து நின்று “பேரரசி தன் சொற்களை சொல்ல விழைகிறார்” என்றாள். அவையில் ஓசை எழுந்து அடங்கியது. விதுரர் “அரசி தன் எண்ணத்தை சொல்லலாம்” என்றார். குந்தி உரத்த உறுதியான குரலில் “அது அர்ஜுனனின் அம்புதான். நான் உறுதி சொல்கிறேன்” என்றாள். அவை முழக்கமிட்டது. விதுரர் கையமர்த்திவிட்டு “அவ்வாறெனில்…” என இழுத்தார். “ஆனால் அதை எப்போது அர்ஜுனனின் அம்பு என அரசரும் அங்கரும் அறிந்தனர்? அதை இந்த அவையில் சொல்லட்டும்” என்றாள்.

அனைவரும் துரியோதனனை நோக்கினர். “நான் கேட்பது ஒன்றே, மறைவுவாழ்க்கையின் இறுதிநாள் போர் நிகழ்ந்த அன்றிரவு. அன்றிரவுக்குள் அது அர்ஜுனனின் அம்பு என அவர்கள் அறிந்தார்களா?” துரியோதனன் “இல்லை, அன்னையே. அன்று நாங்கள் இருளில் விராடபுரியிலிருந்து பின்வாங்கினோம். ஏராளமான படைவீரர்கள் சிதறிவிட்டிருந்தனர். நள்ளிரவுக்குப்பின் அவர்களைத் திரட்டிவிட்டு மருத்துவர் வந்தபோதுதான் அம்பு தைத்திருப்பதே எங்கள் நோக்குக்கு வந்தது. அப்போதுதான் அர்ஜுனன் படைநிலத்திற்கு வந்ததை அறிந்தோம்” என்றான்.

“ஆசிரியர் துரோணர் சொல்லட்டும் நாம் ஒன்றை அறியாதபோது அதற்கு இருப்பு உண்டா?” என்றாள் குந்தி. துரோணர் “உண்டு, ஆனால் அது தெய்வங்களுக்கு. நமக்கல்ல. மானுடர் அறிவதெல்லாம் அறிவொன்றையே” என்றார். “எவருமே அறியாதபோது ஒவ்வொன்றும் எங்குள்ளன?” என்றாள் குந்தி. “அவை பிரம்மமாக உள்ளன. இது என்றும் இங்கு என்றும் இத்தகையது என்றும் பிளவுபடாத முற்றொருமையாக.” குந்தி “அவ்வண்ணமென்றால் சொல்லுங்கள், அந்த அம்பு அர்ஜுனனுடையதென்றாவது எப்போது?” என்றாள்.

துரோணர் சில கணங்களுக்குப் பின் “அது அர்ஜுனனுடையது என்று எப்போது எவரேனும் ஒருவர் அறிந்துகொண்டாரோ அப்போது” என்றார். “அரசர் சொல்லட்டும், எப்போது அது அவ்வாறு அறியப்பட்டது? மறைவுவாழ்க்கையின்போதா, அக்காலக்கெடு முடிந்த பின்னரா?” துரியோதனன் “அக்காலக்கெடு முடிந்த பின்னர்தான், அன்னையே” என்றான். குந்தி “இனி என்ன அறிந்துகொள்ளவேண்டும் இந்த அவை? என் மைந்தருக்கான நிலமும் முடியும் அவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். பிறிதொரு சொல்லும் நான் கேட்க விழையவில்லை” என்றபடி எழுந்துகொண்டாள். அவள் விலகிச்செல்லும் ஆடையோசை அவை முழுக்க கேட்டது. காற்றில் மெல்லிய வெண்பட்டுத் திரை உலைந்தபடியே இருந்தது.

Ezhuthazhal _EPI_03

பீஷ்மர் “அவர்களுக்கு ஓலை செல்லட்டும்…” என்றார். துரோணர் “ஆம், அதுவே நெறி” என்றார். “என் எண்ணமும் அதுவே” என்றார் கிருபர். அஹுண்டர் “இந்த அவையின் குடித்தலைவர்களுக்கும் பிறிதேதும் சொல்வதற்கில்லை” என்றார். விதுரர் “மாற்றுரை உண்டா?” என்றார். அவை சகுனியையும் கணிகரையும் நோக்கியது. விதுரர் அவர்களை நோக்காமல் மீண்டும் இருமுறை அவ்வாறு கேட்டுவிட்டு துரியோதனனிடம் “அரசாணை பிறப்பிக்கவேண்டும், அரசே” என்றார். திருதராஷ்டிரர் “அவையும் மூத்தோரும் சொன்னபின் அரசாணை என்பது வெறும் சடங்குதானே?” என்றார். விதுரர் துரியோதனனை நோக்கியபடி நின்றார். துரியோதனன் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்தான்.