வெய்யோன் - 71

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 8

கதிர்மைந்தா கேள், அனல்வலம் வந்து ஐவரை கைப்பிடிக்கையிலேயே ஐங்குலத்து இளவரசி அறிந்திருந்தாள், அது எதன் பொருட்டென்று. அவர்கள் காமம் கொண்டு களியெழுந்து கண்மயங்கி இருக்கையில் ஒவ்வொருவரிடமும் தன் உளவிழைவை சொன்னாள். “அவ்வாறே ஆகுக!” என்றான் மூத்தவன் யுதிஷ்டிரன். “இளையவனே அதற்குரியவன்” என்றான் பீமன். “ஏற்கிறேன்” என்றான் வில்லேந்திய விஜயன். அச்சொல் பெற்றபின் அவள் அதை மறந்தவள் போலிருந்தாள். அவர்கள் அதை மறந்துவிட்டனர்.

அஸ்தினபுரிக்கு அவர்கள் குடிவந்து குருகுலத்துப் பெருநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யமுனைக்கரை சதுப்புநிலம் அவர்களுக்கு அளிக்கப்பட்டபோது உளம் மகிழ்ந்தாள். நச்சுப் பெருங்காடு அமைந்த அப்பாழ் நிலத்தை அவள் பெற்றுக்கொள்வாளென்று கௌரவர் எண்ணவே இல்லை. உவகையை வெளிக்காட்டாமல் அது போதும் என்று அவள் ஒப்பியபோது அரசுசூழ்தல் அறிந்தவர்கூட அவள் சித்தம் நிலையற்றதோ என்று ஐயுற்றனர்.

விதுரர் ஒருவரே “அவள் தான் செல்லும் வழியை முன்னரே வரைந்து வைத்திருப்பவள். யமுனைக் கரையில் நாம் காணாத எதையோ அவள் கண்டிருக்கிறாள்” என்றார். ஒற்றர்களை அனுப்பி அந்நிலத்தை அவள் முன்னரே அறிவாளா என்று ஆய்ந்து வரச்சொன்னார். பன்னிருமுறை படகுகளில் ஏறி அப்பெருங்காட்டை நோக்கி அவள் வந்திருப்பதை ஒற்றர்கள் சொன்னார்கள். நான்கு முறை கலிங்கச் சிற்பிகளை அவள் அழைத்துச் சென்றிருப்பதை அறிந்ததும் விதுரர் “ஆம், அங்குதான் அவள் தன் நகரை அமைக்கவிருக்கிறாள்” என்றார்.

கனகர் “அங்கு எப்படி நகர் அமைக்கமுடியும்? நச்சுப்பெருங்காடு அது. அங்கு வாழ்பவர் எவரென்றும், விளைவது எதுவென்றும் தொல்நூல்கள்கூட சொல்லவில்லை” என்றார். “நாம் காண்பது காட்டை மட்டுமே. அக்காடு அங்கில்லையென்று எண்ணியபின் பாருங்கள். பெருநகரொன்று அமைவதற்கு அதைவிடப் பொருத்தமான இடம் ஒன்றில்லை. யமுனைக் கரையில் எழுந்த மண்குன்று. மாறாது மழை நின்று பெய்யும் மையம் அது. எனவே குளங்களையும் சோலைகளையும் அக்குன்றுமேல் அமைக்க முடியும். துவாரகைக்கு இணையானதொரு பெருநகரம். துவாரகையோ ஒவ்வொரு நாளும் நீரை கீழிருந்து மேலே கொண்டு செல்கிறது. இங்கு அப்பணியை இந்திரன் ஆற்றுகிறான்” என்றார் விதுரர்.

“ஆனால்…” என கனகர் தொடங்க “ஆம். அக்காட்டை வெல்ல இன்று மானுடரால் இயலாது” என்றார் விதுரர். “ஆனால் தெய்வங்களால் இயலும். அவள் ஒரு தெய்வம். பிறிதொரு போர்த்தெய்வத்தை நாடி இங்கு வந்திருக்கிறாள்.” அவர் சொல்வதென்ன என்று அறியாமல் கனகர் நோக்கியிருந்தார். அவ்வறைக்குள் அப்பால் வேலேந்தி நின்றிருந்த எளிய காவலரின் உள்ளத்தில் அமர்ந்து குலநாகர் அதை கேட்டனர். அச்சொல்லை முழுதுணர்ந்த முதுநாகர் திகைத்து “அவளா? காண்டவப் பெருங்காட்டை வெல்ல ஸ்வேதக வாசுகியால் இயலவில்லை. அன்று கைவிடப்பட்டபின் பல்லாயிரம் ஆண்டுகளாக எவரும் அங்கு படை சூழவுமில்லை” என்றார்.

முதுநாகினி “இந்த ஷத்ரிய நாடுகளும் இவர்களின் கொடிவழிகளும் இங்கு தழைத்தது காண்டவம் மொழியிலிருந்து முழுதாக மறைந்த பின்னரே. இவர்கள் அக்காட்டின் விளிம்பையன்றி பிறிதை அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை” என்றாள். “அவர்களின் தெய்வங்கள் அறியும், அவை அவர்களின் மொழியைவிட கனவைவிட தொன்மையானவை” என்றான் இளையநாகன் ஒருவன். அச்சொல்லின் உண்மையை உணர்ந்து அவர்கள் திகைத்து அவனை நோக்கினர். முதுநாகினி “ஆம்” என்றாள்.

பின்பு ஒரு நாள் வேனில்நீராட மகளிரை துணைக்கொண்டு யமுனைக்கரையில் சோமவனம் என்னும் சோலைக்கு சென்றனர் இளைய யாதவனும் இளைய பாண்டவனும். அங்கு அப்பெண்டிருடன் களியாடி நகைத்து கந்தர்வர்கள் என அவர்கள் இருந்தனர். அரசே அறிக! பெருந்துயரில் இருப்பவனும் பெருங்களியாட்டில் மலர்ந்தவனும் பிறவியியல்பை, குலப்பண்பை, கல்வியை, நுண்ணுளத்தை இழந்திருக்கிறார்கள். ஆணிவேரற்ற ஆற்றங்கரை மரமென நின்றிருக்கிறார்கள். அச்சோலையை நோக்கி அந்தணன் ஒருவன் வந்தான். செந்நிற உடல் கொண்டவன். செங்கனல் வண்ணக்குழலை சுருட்டி வலப்பக்கமாகக் கட்டி செம்மணி ஆரம் அணிந்து செம்பட்டாடை சுற்றி தழலென நடந்துவந்தான்.

அவனை எதிர்கொண்டு வணங்கிய காவலர் இளவரசரும் யாதவரும் களியாட்டில் இருப்பதாக அறிவித்தனர். “இக்கணமே அவர்களை காண விழைகிறேன்” என்றார் வேதியர். ஒப்புதல் கோரி அவர்கள் அருகே அவனை அழைத்துச்சென்றனர். வைதிகரைக் கண்டதும் எழுந்து வணங்கினர் யாதவனும் பாண்டவனும். “நான் பாஞ்சாலத்து ஐங்குலத்தில் துர்வாச முதற்பிரிவின் குலப்பூசகன். என் பெயர் ஜ்வாலாமுகன்” என்றார் முதுவைதிகர். “எனது ஆசிரியர் துர்வாசரின் ஆணை பெற்று இங்கு வந்துள்ளேன். முன்பொருமுறை அவர் நிகழ்த்திய வேள்வி முடிவடையாது நின்றது. நூறாண்டுகாலம் நிகழ்த்தப்பட்டும் கனி உதிராது அனல் அவிந்த அவ்வேள்வியின் முடிவை நான் இயற்ற விரும்புகிறேன். என் மூதாதை வஜ்ரகேது அவ்வெரிக்கு முதலனலை அரணி கடைந்து எழுப்பினார். அதனை இங்கு முடித்து வைத்து விண்ணேகுதலே என் பிறவியின் நோக்கமென்றுணர்கிறேன்.”

அர்ஜுனன் எழுந்து கை நீட்டி “அவ்வேள்வியை வாளேந்தி நின்று காக்கிறேன். முடித்து வைக்க என் உடல் பொருள் ஆவியை அளிக்கிறேன்” என்றான். அவன் நா எழுந்ததுமே கை நீட்டி அவனை தடுக்க முனைந்த யாதவன் அதற்குள் அச்சொற்கள் சொல்லப்பட்டுவிட்டதை உணர்ந்தான். வேதியர் புன்னகைத்து “யாதவரே, இளையவரின் தோள்துணையென தாங்களும் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். “ஆம், இனி நான் செய்வதற்கொன்றில்லை. இது ஊழின் கணம். முன்னரே நிகழ்த்தப்பட்ட சொற்களின் மறு ஒலிப்பு” என்றான் நீலன். இளைய பாண்டவன் “பிழையென ஏதும் சொன்னேனா? யாதவரே, வேள்வி காத்தலென்பது ஷத்ரியர்களின் அகமல்லவா? நம்மை நாடி வந்த இவ்வந்தணர் அதைக்கோரிய பின் நான் மறுத்தல் பீடுடைய செயலாகுமா?” என்றான்.

இளைய யாதவன் நகைத்து “இனி அதை பேசி பயனில்லை. எடுத்ததை இயற்றுவோம்” என்றான். வேதியர் “நான் அரண்மனைக்குச் சென்று மூத்தவரின் அவையை அணைந்து தாங்கள் இருவரும் சொல்லளித்த செய்தியை அறிவிக்கிறேன்” என்றார். “இப்பெருவேள்விக்குரிய அவிப்பொருள் அனைத்தையும் பாஞ்சாலத்து ஐங்குலமே அளிக்கும். அவர்களுடன் இணைந்து படையெடுத்து வர திருஷ்டத்யும்னனும் சித்தமாக இருக்கிறான். வில்லேந்தி முன்நின்று படை பொருத வில்கலை நுட்பரான தாங்களே வரவேண்டும். தங்கள் துணையர் அருகமைய வேண்டும். அதற்கு பாண்டவ மூத்தவர் ஆணையிடவேண்டும்.”  அர்ஜுனன் “ஆம், என் சொல் மூத்தவரை கட்டுப்படுத்தும். அதற்குமுன் பாஞ்சாலத்து அரசியிடமும் ஆணை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

இளைய யாதவன் நகைத்து “பார்த்தா, அவர் வருவதே இளைய அரசியின் அரண்மனையிலிருந்துதான்” என்றான். வைதிகர் தலைவணங்கி “ஆம், நேற்றுமாலை நான் அஸ்தினபுரி வந்தடைந்தேன். பாஞ்சாலத்து அரசியின் மாளிகையை சென்றடைந்து வணங்கி அவர் சொல் பெற்ற பின்னரே இங்கு வந்தேன்” என்றார். “இவ்வேள்வியில் அவர் பங்கென்ன?” என்றான் அர்ஜுனன். “இது பாஞ்சாலத்து ஐங்குலத்து முதன்மைப் படிவரின் வஞ்சினம் என்பதனால் அதை தலைகொள்ள அவர் சித்தமாக இருக்கிறார். அத்துடன் அவர் நாளை அமைக்கவிருக்கும் பெருநகர் ஒன்றின் முதல் அனற்கோளும் ஆகும் இவ்வேள்வி” என்றார் வேதியர்.

அப்போதுதான் ஒவ்வொன்றாக இணைந்து பொருளென மாறியது அர்ஜுனனின் சித்தத்தில். “தாங்கள் எண்ணுவதும் சரியே” என்றார் வேதியர். “அதோ யமுனைக்கு மறுபுறம் பெருகி நின்றிருக்கும் காண்டவப் பெருங்காட்டை முழுதழிப்பதே என் சத்ரவேள்வியின் வெற்றி. நான் எரிகுளமாகக் கொள்வது அப்பசுங்காட்டை. அங்கு அவியென அனல் வந்து விழ வேண்டியது நாகங்களே. அங்கு வாழும் அனைத்து உயிர்களும், அவர்களுக்குத் துணையென நிகழும் அனைவரும் எனக்கு அவிப்பொருளாகவேண்டும்.” அர்ஜுனன் திகைத்து திரும்பி நோக்கி “அதையா?” என்றான். “ஆம், அங்குதான் அரசியமைக்கவிருக்கும் பெருநகர் எழவிருக்கிறது.” அர்ஜுனன் “ஆனால்… அக்காடு எந்தை இந்திரனால் புரக்கப்படுவது. அழியாது மழை முகில் நின்று காப்பது. அதை எரியூட்டுவது எவராலும் இயலாது” என்றான்.

புன்னகைத்து வேதியர் சொன்னார் “இயலாதென்றறிவேன். இயலாததை இயற்றவே பெருவீரரை நாடி வந்துளேன்.” திரும்பி மீண்டும் நோக்கிய அர்ஜுனன் “பசும்பெருங்காடு. இதை படைகொண்டு வளைக்கவே இன்று எம்மால் இயலாது” என்றான். வேதியர் “பாஞ்சாலப்பெரும்படைகளும் அஸ்தினபுரியில் உங்கள் படைகளும் துவாரகையின் துணைப்படைகளும் ஒருங்கிணையட்டும்” என்றார். அர்ஜுனன் “வேதியரே, நீர் இங்கு வந்தது ஒரு வேள்விக்காக. இப்போது ஆணையிடுவது பாரத வர்ஷத்தின் மாபெரும் போர் ஒன்றுக்காக” என்றான். “அனைத்துப்போர்களும் வேள்விகளே” என்றார் வைதிகர்.

அர்ஜுனன் அஸ்தினபுரிக்கு வந்து சேர்வதற்குள்ளாகவே அரசன் தருமனும் தம்பியர் பீமனும் நகுலனும் சகதேவனும் அவன் அரண்மனைக்கு வந்து காத்திருந்தனர். அவனைக் கண்டதுமே தேர்முற்றம் நோக்கி ஓடிவந்த தருமன் “இளையோனே, நீ வாக்களித்தாயா? காண்டவத்தின் மேல் எரிப்போர் தொடுப்பதாக வஞ்சினம் கூறிவிட்டாயா?” என்றான். “ஆம், மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “வைதிகர் இங்கு வந்து சொன்னபோது ஒரு கணம் நான் நடுங்கிவிட்டேன். நீ அறிவாய், இன்னமும் நமது படைகள் பகுக்கப்படவில்லை. எனவே நாம் இன்னும் திருதராஷ்டிர மாமன்னரின் ஆணைக்குக் கீழ் இருக்கும் குடிகளே. இன்று ஒரு போர் தொடுப்பதற்கான உரிமை நமக்கில்லை” என்றான் தருமன்.

“நான் அதை எண்ணவில்லை. நான் இளவரசன், பாண்டுவின் மைந்தன், நான் கருதியது அதைமட்டுமே” என்றான் அர்ஜுனன். தருமன் “இளையோனே, இன்னமும் நாம் நாடுகொள்ளவில்லை, நகர் அடையவில்லை. என் முடி என்பது ஒரு விளையாட்டுப்பொருள் மட்டுமே. நீயோ பாரதம் கண்டதிலேயே பெரிய போர் ஒன்றுக்கு அறைகூவிவிட்டு வந்திருக்கிறாய். என்ன எண்ணியிருக்கிறாய்?” என்றான். அர்ஜுனன் பேசுவதற்குள் இளைய யாதவன் முன்வந்து “அரசே, படைகொள்வது எளிதல்ல. ஆனால் இத்தருணத்தில் ஒரு போர் நிகழ்த்தி வெல்வதென்பது உங்களுக்கு பெரும்புகழ் சேர்க்கும்” என்றான். “பாஞ்சாலத்துப் படைகள் உங்களுக்கு துணை வருகின்றன. யாதவப் படைகளை நான் கொண்டு வருகிறேன். உங்கள் படைகளுடன் இணைந்து காண்டவத்தை சூழ்வோம். அதை வென்று கைக்கொள்வோம். அச்செய்தியை பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு அரசரும் அறிவார். அதைவிட இங்கு அஸ்தினபுரியின் ஒவ்வொரு வீரனும் அறிவான். அர்ஜுனனின் புகழ்மகுடத்தில் ஒரு மணியாக அவ்வெற்றி திகழும். ஒவ்வொரு அரசும் அதன் தொடக்கத்திலேயே பெரு வெற்றி ஒன்றை அடைவதென்பது மிகப்பெரும் அரசு சூழ்கை.”

“ஆனால் வெற்றி அடையவேண்டுமே?” என்றான் தருமன். “காண்டவத்தைப் பற்றி நான் நூல்கள்தோறும் தேடினேன். அங்கு என்ன உள்ளதென்று எவரும் அறியார். அது நச்சுக்காடு என்பதற்கப்பால் ஒரு சொல்லும் நூலிலோ நாவிலோ இல்லை.” இயல்பாக “அது தட்சநாகர்கள் வாழும் காடு” என்றான் இளைய யாதவன். “முன்பொரு முறை அங்கு சென்றிருக்கிறேன்.” தருமன் திகைத்து “உள்ளேயா?” என்றான். “ஆம், உள்ளேதான். அங்கு தட்சநாகர்களின் மூன்று பெருங்குடிகள் வாழ்கின்றன. உரகர்கள் குகைகளிலும் பன்னகர்கள் மரக்கிளைகளிலும், உரகபன்னகர்கள் நிலத்திலும் வாழ்கிறார்கள். அவர்களின் நூற்றெட்டு நாகதெய்வங்கள் அங்கு கோயில் கொண்டுள்ளன. அவர்களின் குடித்தெய்வமாகிய மகாகுரோதை செஞ்சதுப்புக் காட்டின் நடுவே கொப்பளிக்கும் சுனை ஒன்றின் அருகே சிலை நிறுத்தப்பட்டுள்ளாள். முழுநிலவுதோறும் அவளுக்கு குருதிபலி கொடுத்து குரவையிட்டு வழிபடுகிறார்கள்” என்றான்.

“அவர்களை யாருமே பார்த்ததில்லையே!” என்றான் பீமன். “அவர்கள் எங்கும் வருவதில்லை. அக்காட்டிற்கு வெளியே மானுடர் வாழும் செய்தியையே அவர்கள் அறிந்ததில்லை” என்றான் இளைய யாதவன். “அவர்களின் ஆற்றல்கள் என்ன?” என்றான் சகதேவன். “நாகங்களாக உருமாறி விண்ணில் பறக்க அவர்களால் முடியுமென்கிறார்கள். மண் துளைத்துச் சென்று பாதாள உலகங்களின் இருளில் பதுங்கிக்கொள்ளவும் முடியும். மழையென நஞ்சை நம்மீது பெய்ய வைப்பார்கள் என்றும் நீலக்கதிர்களை எழுப்பி நம் புரங்களை சுட்டெரிப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்” என்றான் நீலன். “ஆழ்பிலங்கள் வழியாக தங்கள் மூதாதையர் வாழும் பாதாங்களுக்குச் சென்று மீள அவர்களால் முடியும்.”

“ஆம். அத்திறன்கள் அவர்களிடம் இருக்கலாம். அதற்கப்பால் திறன் திரட்டி நாம் சென்று போரிட வேண்டியதுதான். இனி எதிரியின் ஆற்றலை அஞ்சி பயனில்லை. அறைகூவிவிட்டோம். போர் எழுந்தாக வேண்டும்” என்றான் பார்த்தன். சினத்துடன் இருகைகளையும் இறுகப்பற்றி பற்களைக் கடித்து “இது எவரது திட்டம் என்று நன்கறிவேன். இப்போது நான் நினைவு கூர்கிறேன்… முதல்நாள் இரவிலேயே இச்சொல்லை அவள் என்னிடமிருந்து பெற்றாள்” என்றான் தருமன். அர்ஜுனன் “என்னிடம் இருந்தும்” என்றான். பீமன் “ஆம்” என்றான். “நாம் ஐவரும் அவளுக்கு கடமைப்பட்டுள்ளோம். நம்மை சிக்கவைத்திருக்கிறாள்” என்றான் தருமன்.

யாதவன் நகைத்து “ஏன் அப்படி எண்ணவேண்டும்? நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றால் விண்ணவரும் மண்ணவரும் கொண்டாடும் பெருவெற்றி ஒன்றை உங்களுக்கு பரிசளித்தவள் என்றல்லவா அவள் கருதப்படுவாள்? அதுவரை முடிவுகள் சொல்ல காத்திருக்கலாமே” என்றான். தருமன் துயருடன் தலையசைத்தபடி “இல்லை யாதவரே, எந்தப்போரும் அழிவே என்பதில் எனக்கு ஐயமில்லை. வென்றாலும் அறியாமக்களின் குருதியில் அரியணை அமர்ந்திருப்பவனாவேன். அறிக, உளமறிந்து ஒருபோதும் எப்போருக்கும் நான் ஆணையிடமாட்டேன்” என்றான்.

“ஆம், நான் அறிவேன். குருதி கைக்குழந்தை போன்றது. தன்னை மறுப்பவர்களையே அது நாடிவருகிறது” என்றான் இளைய யாதவன். “இப்போது வேறுவழியில்லை.” தருமன் பெருமூச்சுவிட்டு “ஆம், காண்டவம் என் சொல்லாலேயே சூழப்படப்போகிறது. எளிய உயிர்கள் கொன்றழிக்கப்படவிருக்கிறார்கள். அப்பழி சுமந்துதான் நான் விண்செல்வேன். பிறிதொன்றும் இன்று நான் சொல்வதற்கில்லை. ஆயினும் நான் இங்கு எனக்குள்ளே என சொல்லிக் கொள்கிறேன். நான் ஒப்பி இவ்வாணையை அளிக்கவில்லை” என்றபின் தொய்ந்த தோள்களுடன் திரும்பிச் சென்றான்.

பீமன் முன்னால் வந்து “இளையவனே, நீ தயங்க வேண்டியதில்லை. வெல்லும் பொருட்டே ஷத்ரியனாக பிறந்தோம். வெற்றிக்குப்பின் அளிக்கும் நல்லாட்சி ஒன்றினால் அனைத்து குருதிக்கும் ஈடு செய்வோம். நம் குலமகள் விழைந்த அம்மண்ணிலேயே அமைக நமது நகரம்” என்றான். ஐயத்துடன் நின்ற அர்ஜுனனின் தோள்தொட்டு புன்னகைத்த யாதவன் அருகே நின்ற வீரனின் உள்ளமைந்திருந்த நாகமூதாதையை நோக்கி புன்னகை செய்தான்.

காண்டவப் படைபுறப்பாடு முறைப்படி கொற்றவை ஆலயமுகப்பில் குருதிபலிக்குப்பின் தருமனால் அறிவிக்கப்பட்டது. பன்னிரு வாரங்கள் படையொருக்கம் நடந்தது. மதுராவில் இருந்து ஆயிரம் படகுகளில் யாதவப் படைகள் வந்து காண்டவக் காட்டை சுற்றி பாடிவீடுகள் அமைத்தன. பாஞ்சாலப் பெருநகர் காம்பில்யத்திலிருந்து எட்டாயிரம் படகுகளில் விற்களும் வேல்களும் ஏந்திய வீரர்கள் வந்திறங்கி காண்டவக்காட்டின் மறுபக்கம் பாடி வீடுகள் அமைத்தனர். அஸ்தினபுரியின் வில்லவர்களின் பெரும்படை அர்ஜுனனின் தலைமையில் வந்து யமுனைக்கரைமுகத்தில் பாடிவீடு அமைத்தது.

படை முற்றெழுந்து முற்றுகை முழுமை அடைய மேலும் எட்டு வாரங்கள் ஆயின. தொலைவு எழுந்து சென்று அமையும் ஐம்பதாயிரம் பெருவிற்கள் கொண்டு வரப்பட்டன. அவை எடுத்துச் சென்று வீழ்த்தும் எரிபந்தங்களுக்காக ஐம்பதாயிரம் பீப்பாய்களில் மீன்நெய்யும், ஊன்நெய்யும், மலையரக்கும், தேன்மெழுகும், குந்திரிக்கமும், குங்கிலியமும் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. “அக்காட்டை அனல்போர்த்தி முற்றிலும் எரித்தழிப்பதே நாம் செய்யக்கூடுவது” என்றான் இளைய யாதவன். “அங்குள செடிகளும் பூச்சிகளும் ஊற்று நீரும் கூட நஞ்சு. அக்காட்டுக்குள் காலடி வைப்பதே இறப்பு. அனைத்தையும் அமுதென்று ஆக்கி உண்ணும் அனல் மட்டும் அங்கு செல்லட்டும்.”

குறித்த நாளில் முதற்கதிர் பொழுதில் வேதியர் ஜ்வாலாமுகர் தலைமையில் நூற்றெட்டு வேதியர் வந்து காண்டவத்தின் யமுனைக்கரை முகப்பில் வேள்விக்களம் அமைத்தனர். எரிகுளம் அமைத்து அங்கே சமித்து சேர்த்து வேதம் ஓதி நெய்யிட்டு எரிவளர்த்தனர். மூவெரியும் எழுந்து அவிகொண்டு ஒளி சூடியபோது அர்ஜுனன் அவ்வெரியில் தன் பந்தத்தை பற்றவைத்து காண்டீபத்தை நாணிழுத்து அம்பு பொருத்தி பெரும்பறைபோல் ஒலியெழுப்பி வில்செறிவு கொள்ள இழுத்து குறிதேர்ந்து விண் நோக்கி ஏவினான். தழல்பந்து எழுந்து செஞ்சிறகு அலைபாய வானில் பறந்து காண்டவத்தின்மேல் இறங்கியபோது அஸ்தினபுரியின் படைவீரர்கள் “இளைய பாண்டவர் வெல்க! இளைய யாதவர் வெல்க! வெற்றி கொள் பாண்டுவின் பெருங்குலம் வாழ்க!” என்று முழங்கினர். போர் முரசுகள் இடியோசை எழுப்பின.

அவ்வொலி கேட்டு மறுபக்கம் பாஞ்சாலர்களும் யாதவர்களும் போர்க்குரல் எழுப்பினர். அர்ஜுனனின் அம்பு காண்டவக்காட்டில் விழுந்த மறுகணமே நான்கு திசைகளிலிருந்தும் பல்லாயிரம் எரிபந்தங்கள் எழுந்து காண்டவத்தின்மேல் அனல்மழையென இறங்கின. மூன்று நாட்கள் ஒரு கணமும் குறைபடாமல் பல்லாயிரம் எரிபந்தங்கள் சென்று விழுந்தபின்னும் காண்டவக்காடு பசும்பாறையால் ஆனது போல் அங்கிருந்தது. சோர்வுற்று அர்ஜுனன் இளைய யாதவனிடம் “யாதவரே, அது காடல்ல, அங்கு பச்சை நீர்நிழல் ஆடும் பெரும் குளமொன்று உள்ளது என்று தோன்றுகிறது” என்றான். “ஒருவகையில் அது உண்மை” என்றான் இளைய யாதவன். “அங்குள்ள நிலம் கால்புதையும் சதுப்பு. அங்குள்ள மரங்கள் அனைத்தும் நீர் குடித்து எருமைநாக்குகள் போல தடித்த இலைகள் கொண்டவை. இவ்வம்புகளால் அக்காடு எரியாது.”

“அங்குள்ளோரை அறியவே இத்தாக்குதலை நிகழ்த்த ஆணையிட்டேன்” என்றபின் நகைத்து “விண்ணிலிருந்து எரிமழை பெய்வதையே அறியாது அங்கு வாழ்கிறார்கள். இக்கணம் வரை அப்பசும் கோட்டைக்கு மேலே ஒருவன்கூட எட்டிப்பார்க்கவில்லை. என்ன நிகழ்கிறது என்று அறிய எவரும் எல்லை தாண்டி வரவும் இல்லை” என்றான் யாதவன். “ஆம், நமது அனல் அங்கு சென்று சேரவே இல்லை. கொசு கடிக்கும் எருமையென இருக்கிறார்கள்.” இளைய யாதவன் நகைத்து “வானிலிருந்து கரிமழை பெய்வதை அவர்கள் இப்போது கண்டுகொண்டிருக்கிறார்கள் போலும்” என்றான். “நகைக்கும் இடமல்ல இது யாதவரே. போர் என்று வந்துவிட்டோம். நான் இதில் தோற்று நகர் மீள மாட்டேன். என் வாழ்நாளெங்கும் எக்களத்திலிருந்தும் வெல்லாமல் உயிர் மீளமாட்டேன். இது ஆணை” என்றான் அர்ஜுனன்.

“வழி உள்ளது, சொல்கிறேன்” என்றான் இளைய யாதவன். அதன்படி மதுராவிலிருந்து முந்நூறு படகுகளில் நெய்க்குடங்கள் கொண்டுவரப்பட்டன. நான்குதிசைகளிலும் சூழ்ந்திருந்த படைகளிலிருந்து ஆயிரம் அத்திரிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் மேல் ஒருபக்கம் தோற்பைகளில் நெய் நிறைத்துக் கட்டப்பட்டது. மறுபக்கம் குந்திரிக்கம் கட்டப்பட்டது. அவை காண்டவக்காட்டுக்குள் துரத்திச் செலுத்தப்பட்டன. துளையிடப்பட்ட தோற்பைகளுடன் காட்டுக்குள் நுழைந்த அத்திரிகள் காடெங்கும் நெய்பரப்பின. பின்பு அங்குள நச்சுப் பூச்சிகளால் கடிக்கப்பட்டு செத்து விழுந்தன. அந்நெய்ப்பரப்பின் மேல் வந்து விழுந்தன எரியம்புகள்.

செவ்வரளி மலர் பொழிந்ததுபோல் காட்டின்மீது விழுந்து கொண்டிருந்த அனலுருளைகளை நோக்கிக் கொண்டிருந்த அர்ஜுனன் உவகையுடன் கைநீட்டி “பற்றிக்கொண்டுவிட்டது! அதோ!” என்று கூவினான். கருநாகம் ஒன்று வஞ்சத்துடன் தலையெடுப்பதுபோல் பசுங்காட்டுக்கு மேல் புகைச்சுருள் எழுவதை அனைவரும் கண்டனர். கைவிரித்து கூச்சலிட்டு போர்க்குரல் எழுப்பி நடனமிட்டனர். மேலும் மேலும் அம்புகள் எழுந்து அனல் பொழிந்து காண்டவக்காடு பல இடங்களில் பற்றிக்கொண்டது. எரியத்தொடங்கியதும் அவ்வெம்மையாலேயே மேலும் மேலும் பற்றிக்கொண்டது. நெய் உருகி அனலென மாறி அடிமரங்களை கவ்வியது. பச்சை மரங்கள் அனல் காய்ந்து எரிந்தன. எரிந்த மரங்கள் மேலும் அனலாயின. சற்று நேரத்தில் காண்டவக்காடு அலைபிழம்பணிந்தது.

71

பலநூறு இடங்களில் செந்தழல் எழுந்து நின்றது. “காடு பூக்கிறது யாதவரே” என்று கிளர்ச்சியுடன் அர்ஜுனன் கூவினான். “விடாதீர்கள். கணமறாதீர்கள். அனல் பெய்யுங்கள்” என்று ஆணையிட்டான். மேலும் மேலுமென்று விழுந்த அம்புகளால் அனற்பெருங்குளமென ஆயிற்று காண்டவம்.