வெய்யோன் - 57

பகுதி எட்டு: நூறிதழ் நகர்- 1

இந்திரப்பிரஸ்தத்தின் துறைமேடையிலிருந்து கிளம்பிய அணியூர்வலம் பலநூறு பாதக்குறடுகளின் இரும்பு ஆணிகளும் குதிரை லாடங்களும் ஊன்றிய ஈட்டிகளின் அடிப்பூண்களும் பாதைபரப்பில் விரிந்திருந்த கற்பாளங்களில் மோதி அனற்பொறிகளை கிளப்ப, வாழ்த்தொலிகளும் மங்கலப்பேரிசையும் எழுந்து சூழ, வண்ணப்பெருக்கென வளைந்து மேலேறியது. அவர்களுக்கு முன்னால் மேலும் பல அரசர்களின் அணி ஊர்வலங்கள் சென்றன. மலரும் இலையும் சருகும் புழுதியும் அள்ளிச்சுழற்றி மேலே செல்லும்காற்றுச் சுழலென அவை தெரிந்தன.

முகிற்குவைகளென நிரைவகுத்து வந்துகொண்டே இருந்த மாளிகைகளை கர்ணன் நோக்கினான். அனைத்திலும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் கொடி பறந்துகொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றில் எவரும் குடியிருக்கவில்லை என்பது தெரிந்தது. அரைவட்ட, நீள்சதுர, முற்றங்களில் நின்றிருந்த பல்லக்குகளின் செம்பட்டுத் திரைச்சீலைகளில் காற்று நெளிந்தது. பிடரிமயிர் உலைய தலைதாழ்த்தி செவிகூர்த்து சாலையில் ஓடும் ஓசைகளைக் கேட்டு விழிகளை உருட்டி கால்களை முன்னும் பின்னும் தூக்கி வைத்து நின்ற இடத்திலேயே பயணம் செய்தன புரவிகள். அவற்றின் அசைவுகளுக்கு ஏற்ப மணி குலுங்கி நிலைகுலைந்து கொண்டிருந்தன தேர்கள்.

சூழலின் காட்சிகள் நெளிந்தலைந்த இரும்புக்கவசங்களுடன் பெரிய நீர்த்துளிகளெனத் தெரிந்த வீரர்கள் ஆணைகளைக் கூவியபடி, செய்திகளை அறிவித்தபடி, படிகளில் இறங்கியும் ஏறியும் அலைபாய்ந்தனர். ஏவலர் பாதைகளிலும் முற்றங்களிலும் காற்றில் சருகுகள் என தங்கள் உள எழுச்சியின் விசையால் அலைக்கழிக்கப்பட்டனர். இந்திரப்பிரஸ்தத்தின் பொற்பூச்சு மின்னிய வெள்ளித்தேரில் ஜராசந்தனும் துரியோதனனும் அமர்ந்திருக்க பின்னால் துச்சாதனனும் கர்ணனும் நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் துச்சலனும் துச்சகனும் நின்றனர். ஒரு கையால் மீசையை நீவியபடி அரைத்துயிலில்என சரிந்த விழிகளுடன் கர்ணன் பக்கவாட்டில் நோக்கிக்கொண்டிருந்தான். வளைந்துசென்ற பாதையின் கீழே இந்திரப்பிரஸ்தத்தின் மிகப்பெரிய படித்துறை தெரிந்தது.

விரிக்கப்பட்ட பீதர்நாட்டு விசிறிபோல பன்னிரண்டு துறைமேடைகள் யமுனைக்குள் நீட்டி நின்றன. அனைத்துத் துறைகளிலும் கலங்கள், படகுகள், அம்பிகள் மொய்த்து யமுனையின் பெருக்கையே மறிப்பதுபோல் நிரம்பியிருந்தன. அவற்றில் பறந்த கொடிகள் பறவைக்கூட்டங்கள் வானில் நிலைத்து சிறகடிப்பவை என தெரிந்தன. படகுத்துறைக்கு மேலே பலநூறு தோணிகளை யமுனையின் மீது நிறுத்தி அவற்றுக்கு மேல் மூங்கில்பரப்பில் சேர்த்துக்கட்டி மிதக்கும் பாலம் ஒன்றை அமைத்திருந்தனர். அதன்வழியாக யமுனையின் மறுகரையில் பெருகி வந்துகொண்டிருந்த மக்கள் திரள் இணைந்து ஒன்றாகி பாலத்தை நிறைத்து, வழிந்து, இப்பாலிருந்த குறுங்காடுகளுக்குள் புகுந்து, இடைவெளிகளில் எல்லாம் வண்ணங்களாகத் தெரிந்து, மீண்டும் கைவழிகளாகப் பிரிந்து, மேலேறும் பாதைகளை அடைந்தது.

அனைத்துப் பாதைகளிலும் குனிமுத்துக்களும் மஞ்சாடிமுத்துக்களும் செறிந்துருண்டு வருவதுபோல் மக்கள்திரள் நகர்நோக்கி எழுந்து வந்தது. துச்சாதனன் கர்ணனிடம் “நிகரற்ற கோட்டை வாயில் மூத்தவரே!” என்றான். கர்ணன் திரும்பி நோக்க இரண்டு மாபெரும் கோபுரங்கள் என பதினெட்டு அடுக்குகளுடன் எழுந்து நின்றிருந்த கோட்டைமுகப்பை பார்த்தான். அவற்றின் மேலிருந்த குவைமாடங்களில் பூசப்பட்டிருந்த வெண்சுண்ணப்பரப்பு இளவெயிலில் பட்டென, வாழைப்பட்டை என, மின்னியது. அவற்றின் அடுக்குகள் அனைத்திலும் முழுக்கவசம் அணிந்த படைவீரர்கள் விற்களும் வாள்களும் வேல்களும் ஏந்தி நின்றிருந்தனர். கோட்டைவாயில் விரியத் திறந்திருக்க அவர்களுக்கு முன்னால் சென்ற கலிங்கனின் படை அவற்றினூடாக உள்ளே சென்றது. அகன்றசாலையில் கிளைகளாக விரிந்த படைநிரை சற்றும் சுருங்காமல் உள்ளே செல்லும் அளவு அகன்றிருந்தது வாயில்.

துச்சாதனன் “மாளிகைகள் அனைத்தும் செந்நிறக் கற்கள். கோட்டைமுழுக்க சேற்றுக்கல். இக்கற்களுக்கே இவர்களின் கருவூலம் அனைத்தும் செலவாகியிருக்கும் மூத்தவரே. ஒவ்வொன்றும் ஒரு சிறு யானையளவு பெரியவை” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் தலையை ஆட்டினான். “எப்படி இவற்றை மேலேற்றினர்?” என்றான் துச்சகன். துச்சலன் “சிலந்திவலைபோல மூங்கில்களை பின்னிக்கட்டி பெரிய கற்களையும் வடங்களால் இழுத்து மேலேற்றமுடியுமாம். கலிங்கத்தின் சிற்பிகளின் வழிமுறை அது. கலிங்கச்சிற்பி கூர்மரின் தலைமையில் இந்நகர் கட்டப்பட்டது என்றார்கள்” என்றான்.

“ஒன்றினுள் ஒன்றாக ஏழு கோட்டைகள் என்றார்கள்” என்றான் துச்சலன். ஆனால் ஒரு வாயிலினூடாக இன்னொரு கோட்டைதான் தெரிந்தது. அணியூர்வலங்கள் சிறிய இடைவெளிகளுடன் ஒரே ஒழுக்காக சென்றபடியே இருந்தன. துரியோதனன் அண்ணாந்து கர்ணனிடம் “கோட்டைவாயிலில் பீமனும் அர்ஜுனனும் வருவதாகச் சொன்னார் அல்லவா?” என்றான். கர்ணன் ஒருகணம் அதை எவரேனும் சொன்னார்களா என்று நினைவுகூர்ந்து “ஆம், அங்கிருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றான். “மாபெரும் கோட்டைவாயில்! ஒரு மலைக்கணவாய் போல. அங்கரே, பாரதவர்ஷத்தில் இதற்கிணையான ஒரு கோட்டைவாயில் இல்லையென்றே நினைக்கிறேன்” என்றான் துரியோதனன்.

ஜராசந்தன் உரக்க நகைத்து “ஆம், இதற்கிணையான பெரும்படையை கொண்டுவந்துதான் இவ்வாயிலை கடக்க வேண்டும்” என்றான். துரியோதனன் உடன் நகைத்து “போர் யானையை அணிபூட்டிக் கொண்டுவந்து ஆலயமுகப்பில் நிறுத்தியதுபோல் இருக்கிறது இக்கோட்டை” என்றான். கோட்டைக்கோபுரங்கள் அவர்கள்மேல் சரிந்துவிழுபவை போல அணுகிவந்தன. அணியூர்வலம் கோட்டைமுகப்பை அடைந்ததும் அறிவிப்புமேடையில் நின்ற நிமித்திகன் தன் வெள்ளிக்கோலைத் தூக்கி சுழற்றித் தாழ்த்த கோட்டையின் அனைத்து பெருமுரசுகளும் நடைமாற்றி அவர்களை வரவேற்கும் மான்நடைத்தாளத்தை எழுப்பின. கோட்டை மீதிருந்த அனைத்து வீரர்களும் கோட்டைமுகப்பின் இருபுறமும் கூடிநின்றிருந்தவர்களும் “அஸ்தினபுரியின் மாமன்னர் வாழ்க! குருகுலத்தோன்றல் வாழ்க! துரியோதனர் வாழ்க!” என்று வாழ்த்துரை எழுப்பினர். “மகத மன்னர் ஜராசந்தர் வாழ்க! ஜரை மைந்தர் வாழ்க! ராஜகிருகத்தின் பெரும்புதல்வர் வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்து கலந்தன.

ஜராசந்தனும் துரியோதனனும் இருபுறமும் திரும்பி கைகளை கூப்பியபடியே சென்றனர். கோட்டைவாயிலுக்குள் தேர்கள் நுழைந்ததும் கோட்டைக் காவலன் ஒளிபுரண்டலைந்த இரும்புக்கவச உடையில் பாதரசத்துளிபோல புரவியில் வந்து அவர்களின் தேருக்கருகே நின்று “இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்கோட்டைக்குள் அஸ்தினபுரியின் அரசரையும் மகதமன்னரையும் வரவேற்கிறேன். தங்கள் வரவு இங்கு மங்கலம் நிறைக்கட்டும்” என்றான். துரியோதனன் திரும்பி கர்ணனை நோக்க கர்ணன் தன் பார்வையை விலக்கிக்கொண்டான். கோட்டை வாயிலுக்கு அருகே சென்றதும் அவர்களை வழிநடத்திச் சென்ற நகுலனும் சகதேவனும் விரைவழிந்து இருபக்கமுமாக பிரிந்தனர்.

சகதேவன் தன் தேரிலிருந்து இறங்கி நடந்து அவர்கள் அருகே வந்தான். “தாங்கள் நகர்புகுந்து மாளிகைக்குச் செல்லலாம் மூத்தவரே. அங்கு ஓய்வெடுங்கள். அவைகூடுகை மாலையில். இரவுதான் இந்திரனின் பேராலயத்தின் கொடைநிகழ்வு உள்ளது. நாங்கள் கீழேசென்று படகுத்துறைகளில் வந்தணையும் பிறமன்னர்களை வரவேற்க வேண்டியிருக்கிறது” என்றான். துரியோதனன் “ஆம் இளையோனே, நானே அதைச் சொல்லலாம் என்று எண்ணினேன். நீங்கள் உங்கள் பணிகளை ஆற்றுங்கள்” என்றான். பிறகு ஜராசந்தனிடம் “ஒரு விழவின் மிகக்கடினமான பணி என்பது விருந்தினரை வரவேற்று அமரச்செய்வதுதான்” என்றான். “ஆம்” என்று ஜராசந்தன் நகுலனை நோக்கி புன்னகைத்து கையசைத்தபடி சொன்னான்.

பாகன் கடிவாளத்தை இழுக்க தேர் சற்றே குலுங்கி முன்னால் சென்றது. முதற்கோட்டைக்கு அப்பாலிருந்த சந்தனமரங்களும் நெட்டிமரங்களும் செறிந்த குறுங்காட்டுக்குள் புரவிகளும் யானைகளும் இளைப்பாறின. அருகே வீரர்கள் கவசங்களுடனும் படைக்கலங்களுடனும் நிழலாடினர். ஐந்தாவது கோட்டையில்தான் கதவுகளிருந்தன. அவற்றின் முதற்குமிழுக்கு கீழேதான் அருகணைந்த யானைகளே தெரிந்தன. ஒவ்வொரு கதவிலும் அமைந்த பன்னிரு பெருங்குமிழ்களிலும் காலையொளி சுடர்கொண்டிருந்தது. வலப்பக்கக் கதவில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் முத்திரையும் இடப்பக்கக் கதவில் தழலலை முத்திரையும் வெண்கலத்தால் செய்யப்பட்டு பொறிக்கப்பட்டிருந்தன. அணுகுந்தோறும் அவை மேலெழுந்து சென்றன.

அப்பால் படைத்தலைவர்களின் செந்நிறக்கற்களாலான மாளிகைகள் வரத்தொடங்கின. அவற்றின் முற்றங்களிலெல்லாம் பல்லக்குகளும் தேர்களும் புரவிகளும் நிறைந்திருந்தன. பெருவீதிகளில் வண்ண ஆடைகளும் தலைப்பாகைகளும் அணிந்த மக்கள் தோளோடுதோள்முட்டி குழுமியிருந்தனர். ஜராசந்தன் “அனைவருமே யாதவர்களா?” என்றான். “இல்லை. பலதொழில் செய்பவர்களும் என்று நினைக்கிறேன்” என்றான் துச்சாதனன். “அனைவருக்கும் இங்கு ஏதோ வாய்ப்புகள் உள்ளன என்று தோன்றுகிறது. வளரும் ஒரு நாடோ நகரமோ அனைவருக்குமே வாய்ப்பளிக்கும். அதிலுள்ள அனைத்துமே வளர்ந்து கொண்டிருக்கும் என்பதனால்” என்றான். அவர்களுக்குப் பின்னால் தேர்களில் வந்து கொண்டிருந்த துர்மதனும் ஜலகந்தனும் பீமபலனும் சலனும் இருபுறங்களையும் நோக்கி மலைத்து உருட்டிய விழிகளுடன் திறந்த வாய்க்குள் தெரிந்த வெண்பற்களுடன் காற்றில் மிதக்கும் முகங்கள்போல் தோன்றினர்.

இந்திரப்பிரஸ்தத்தின் நகர் எல்லைக்குள் நுழைந்ததும் அவர்களை எதிர்கொள்ள அமைச்சர் சௌனகர் தொலைவில் மஞ்சலில் வருவது தெரிந்தது. துரியோதனன் தலைதூக்கி புன்னகைத்து “சௌனகரைப் பார்த்தே நெடுநாட்கள் ஆகின்றன” என்றான். “ஆம், இங்கு அவர் இடத்தில் அவர் மகிழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது” என்றான் கர்ணன். துச்சாதனன் “நமது அவையில் சற்று தனிமைப்பட்டிருந்தார். அறநூல்களை பிரித்து ஆராய்வதற்கு மூத்தவர் தர்மர்தான் உகந்த இணையர்” என்றான். துரியோதனன் உரக்க நகைத்து “உண்மை, எனக்கு அவர் அறநூல்களை பேசத் தொடங்குகையிலேயே அச்சொற்கள் அனைத்தும் மறைந்து வெண்பிசின் வழிந்தது போன்ற அவரது தாடி மட்டும்தான் தெரியத்தொடங்கும்” என்றான்.

சௌனகர் பல்லக்கை நிறுத்தி மெல்ல இறங்கி சற்று கூன்விழுந்த உடலில் சுற்றப்பட்ட வெண்பட்டு மேலாடை பறக்க, தலைப்பாகைக்கு மேல் சூடிய வெண்நிற வைரம் ஒளியசைய, அவர்களை நோக்கி நடந்து வந்தார். கைகூப்பி “துரியோதனரை, அஸ்தினபுரியின் அரசரை வரவேற்கிறேன்” என்றார். அவர் தன் வயதுக்கு மீறிய முதுமையை குரலிலும் அசைவிலும் கொண்டிருக்கிறார் என கர்ணன் எண்ணினான். குரலில் மெல்லிய நடுக்கத்துடன் “மாமன்னர் யுதிஷ்டிரர் இப்போது சிற்றவையமர்ந்து அரசர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அரசியும் அவையில் இருக்கிறார். தங்களுக்கு மாளிகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அங்கு இளைப்பாறி மாலையில் கூடும் ஐங்குலப்பேரவையில் தாங்கள் அமரவேண்டுமென்று அரசியும் அரசரும் விண்ணப்பிக்கிறார்கள்” என்றார்.

அவரது முதுமை அவர் கொண்ட தலைமையமைச்சர் பொறுப்பிலிருந்து உருவாகி அவர்மேல் படிந்தது என கர்ணன் அறிந்தான். அது அவருக்கு அங்கே மேலாண்மையை அளித்தது போலும். சௌனகர் ஜராசந்தனை நோக்கி கைகூப்பி “மகத அரசருக்கென வேறு மாளிகை அமைந்துள்ளது. உங்கள் அரசிலிருந்து வந்த அனைவரையும் அங்கு தங்க வைத்திருக்கிறோம்” என்றார். “நான் இவர்களுடனே தங்கிக்கொள்கிறேனே?” என்றான் ஜராசந்தன். முகம் மாறாமல் சௌனகர் “அல்ல அரசே, தாங்கள் அங்கு தங்குவதே முறை. அங்கு தங்கியதாக ஆனபின் தாங்கள் எங்கு இருந்தாலும் அது பிழையில்லை” என்றார். “எனில் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றபின் ஜராசந்தன் எழுந்து துரியோதனனின் தோள்களில் மெல்ல அறைந்து “நான் கிளம்புகிறேன்” என்றான்.

சௌனகர் பதற்றத்துடன் “இங்கு இறங்க வேண்டியதில்லை அரசே. தங்களுக்கான பொற்தேர் இன்னும் இங்கு வரவில்லை” என்றார். ஜராசந்தன் “தாழ்வில்லை. ஒரு புரவி எனக்குப் போதும். வழிகாட்ட ஒரு வீரனை அனுப்புங்கள்” என்றபடி கர்ணனிடம் “மீண்டும் சந்திப்போம் அங்கரே” என கைநீட்டி தோளைத்தொட்டு இறுக்கியபின் தேரிலிருந்து எடைமிக்க காலடிகளால் தேர்த்தட்டு சற்றே உலைய இறங்கினான். சௌனகர் “இல்லை, அது முறையல்ல, தாங்கள்…” என்று சொன்னபின் திரும்பி கர்ணனை பார்த்தார். கர்ணன் புன்னகைக்க ஜராசந்தன் அருகே சென்ற வெண்புரவி ஒன்றின் சேணத்தைப்பற்றி அந்த வீரனை விழிகளால் இறங்கும்படி ஆணையிட்டான். அவன் இறங்கியதும் கால்சுழற்றி ஏறி கைகளைத்தூக்கி விடை பெற்றபின் புரவியை முன்னால் செலுத்தினான். சௌனகர் முன்னால் சென்ற வீரனை நோக்கி “மகத மாளிகைக்கு அரசரை இட்டுச் செல்க!” என்றார். அவன் பதற்றமாக தலைவணங்கினான். இரு புரவிகளும் வால் குலைத்து அணி ஊர்வலத்தை மீறி கடந்து சென்றன.

சௌனகர் “மகதமன்னர் இவ்வண்ணம் வருவாரென்று எவரும் இங்கு எதிர்பார்க்கவில்லை. இங்குள்ள அனைத்து வரவேற்பு முறைமைகளும் நிலைகுலைந்துவிட்டன” என்றார். கர்ணன் “பாண்டவர்களிடம் சொல்லுங்கள், எவ்வகையிலும் நிலைகுலைவு கொள்ளவேண்டாம் என்று” என்றான். “ஜராசந்தர் முறைமைகளுக்கு அப்பாற்பட்ட நட்புள்ளம் கொண்டவர். உளம் நிறைந்த நட்புடன் மட்டுமே இங்கு வந்திருக்கிறார்.” சௌனகர் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. “நன்று, நான் அதை சொல்கிறேன்” என்றார். “செல்வோம்” என்றான் கர்ணன். அவர்களின் தேர் முன்னகர்ந்தது.

அஸ்தினபுரியின் கொடி பறந்த மாளிகை நோக்கி தேர் திரும்பியதுமே துச்சாதனன் உரத்த குரலில் “இதுவா நமக்கான மாளிகை?” என்றான். இருபத்துநான்கு உப்பரிகைகள் மலர்செறிந்த செடிகளுடன் நீண்டிருக்க நூறுபெருஞ்சாளரங்கள் அரைவட்ட முற்றம் நோக்கி திறந்த ஏழடுக்குமாளிகைக்கு மேல் பன்னிரண்டு வெண்குவைமாடங்கள் வெயிலாடி நின்றிருந்தன. தேர் நெருங்க மாளிகை திரைச்சீலை ஓவியம் ஒன்று மடிப்பு விரிந்து நெளிந்து அகல்வதுபோல் அவர்களை நோக்கி வந்தது. முந்நூறு வெண்சுதைத்தூண்கள் தேர்களின் கூரைக்குமேல் எழுந்த அடித்தளப்பரப்பில் ஊன்றியிருந்தன. “மாளிகை இத்தூண்கள்மேல் எழுந்து நடந்துவிடும்போல் தோன்றுகிறது” என்றான் துச்சாதனன். துரியோதனன் நகைத்து “இவன் சூதர்களின் பாடல்களை நன்கு கேட்கிறான் அங்கரே” என்றான்.

கர்ணன் அம்மாளிகையின் சுவர்களை நோக்கிக் கொண்டிருந்தான். முழுக்க வெண்பளிங்குக் கற்களால் கட்டியிருப்பார்களோ என்ற எண்ணம் வந்தது. முற்றத்தில் நின்றிருந்த திரையசைந்த பல்லக்குகளும் மின்னும் தேர்களும் தோள்பட்டமணிந்த புரவிகளும் தூண்வளைவுகளிலும் சுவர்களிலும் வண்ணங்களாக எதிரொளித்தன. “எழுந்து நிற்கும் வெண் தடாகம்” என்றான் துச்சாதனன். “இவன் ஒப்புமைகளாலேயே இம்மாளிகையை இடித்துத் தள்ளிவிடுவான் போலிருக்கிறதே!” என்று துரியோதனன் சொல்ல “இப்படியெல்லாம்தான் இதை புரிந்துகொள்ள முடிகிறது மூத்தவரே” என்றான் துச்சாதனன்.

முன்னரே வந்து முற்றத்தில் அணிநிரை கொண்டு நின்றிருந்த அஸ்தினபுரியின் படை வீரர்கள் துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் வாழ்த்துரை கூவினார்கள். மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் முன்னால் சென்று இருபுறங்களிலாக விரிந்து விலகிச்செல்ல அவர்களின் தேர் சென்று முகப்பில் நின்றது. வரவறிவிப்பாளன் தன் வெள்ளிக்கோலைத் தூக்கி “அஸ்தினபுரியின் அரசர், குருகுலத்தோன்றல், துரியோதனர்! இளவரசர் துச்சாதனர்!” என்று அறிவித்தான். வெள்ளிக்கோலை மறுபுறம் தூக்கிச் சுழற்றி “அங்க நாட்டரசர் கர்ணன்!” என்றான். மாளிகையின் இருபெரும்தூண்களுக்கு நடுவே மிகச்சிறிய உருவென விதுரர் தோன்றினார். படிகளில் விரைவாகத் தாவி இறங்கி அவர்களை நோக்கி வந்தார். துச்சாதனன் “வெண்காளானுக்கு அடியிலிருந்து ஒரு சிறுவண்டு வருவதைப்போல” என்றான்.

விதுரர் அவர்களை அணுகி “வருக அரசே! இங்கு அனைத்துமே உரியமுறையில் சித்தமாக உள்ளன. தாங்கள் நீராடவும் அணிகொள்ளவும் ஏவலர் அமைக்கப்பட்டுள்ளனர். அணிச்சேடியரும் பிறரும் தங்குவதற்கான இல்லங்கள் மாளிகைக்குப் பின்புறம் உள்ளன” என்றார். துரியோதனன் எழுந்து படிகளில் இறங்கி விதுரரை வணங்கியபின் நிமிர்ந்து கண்மேல் கைவைத்து அம்மாளிகையை பார்த்தான். “அஸ்தினபுரியில் எங்கும் இப்படியொரு மாளிகையை பொருத்திப்பார்க்கவே முடியாது” என்றான். விதுரர் தானும் திரும்பி நோக்கி “ஒரு நகரின் ஒட்டுமொத்தச் சிற்ப அமைப்பின் பகுதியாகவே தனி மாளிகை அமைய முடியும். இது முழுமையாகவே திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம். அஸ்தினபுரி விதையென விழுந்து முளைத்து தளிரும் கிளைகளும் கொண்டு விரிந்தது” என்றார்.

சரிந்த சால்வையை இழுத்துப் போர்த்தி நோக்கி மீசையை நீவியபடி துரியோதனன் “முற்றிலும் பளிங்கால் ஆனதா? அத்தனை பளிங்குக் கற்களை எங்கிருந்து கொண்டுவந்தார்கள்?” என்றான். விதுரர் “பெருமளவு வெண்பளிங்கு. ஆனால் தூண்களும் சுவர்களும் சுதையால் ஆனவை” என்றார். “சுதையா?” என்றபடி சற்று முன்னால் சென்று கண்களை சுருக்கி நோக்கி திரும்பி “சுதை எப்படி இத்தனை ஒளிகொள்கிறது?” என்றான். “நானும் வந்தவுடன் அவ்வண்ணமே எண்ணினேன். கலிங்கச் சிற்பிகள் இதை அமைத்திருக்கிறார்கள். சுதைக்கலவையின் மென்களிம்பை மட்டும் எடுத்து சிலவகையான தைலங்கள் சேர்த்து பசையாக்கிப் பூசி பளிங்குப்பரப்பால் தேய்த்து ஒளிபெறச் செய்திருக்கிறார்கள். அருகே சென்றால் சுவர்களில் நம் முகம் தெளிவாகவே தெரிகிறது. சாளரங்களையும் எதிர்ப்புறம் அவற்றின் ஒளிப்பாவைகளையும் பிரித்தறிவதே கடினம்” என்றார் விதுரர்.

துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “வென்றுவிட்டார்கள் பாண்டவர்கள். பாரதவர்ஷத்தில் இனி ஒரு நகரம் இதற்கிணையாக வருவது எப்போதென்றே சொல்ல முடியாது. விண்ணில் உறையும் என் சிறியதந்தையார் மகிழ்வதை பார்க்கிறேன்” என்றான். துச்சாதனன் “நான் அங்கே சென்று அவற்றில் முகம் பார்க்க விழைகிறேன் மூத்தவரே” என்றான். மலர்ந்த முகத்துடன் துரியோதனன் நடக்க விதுரரும் கர்ணனும் அவனை தொடர்ந்தனர். விதுரர் கர்ணனிடம் மெல்லிய குரலில் “ஜராசந்தர் எப்போது கலத்தில் ஏறினார்?” என்றார். அவர் முன்னரே அனைத்து செய்திகளையும் அறிந்திருப்பதை அக்குரலில் இருந்தே உணர்ந்த கர்ணன் “நான் அவரை அழைத்துவந்தேன். அவரது கலத்தில் நான் ஏறுமாறாயிற்று. ஓரிரவில் அஸ்தினபுரிக்கும் மகதத்துக்குமான நூற்றாண்டுப் பகை முடிவுக்கு வந்தது” என்றான்.

விதுரர் சினம் கொள்வதும் அடக்குவதும் தெரிந்தது. “அங்கரே, பலநூறு துலாத்தட்டுகளால் நிகர்செய்யப்படும் ஒரு மையம்தான் அரசியல். நிகர்நிலையழிவது என்பது போராயினும் அமைதியாயினும் வேறெங்கோ நிகர்மாற்றமொன்றை நிகழ்த்தும். அது நன்றென இருக்கவேண்டியதில்லை” என்றார் விதுரர். துரியோதனன் திரும்பி விதுரரை நோக்கி “அரசியரும் தோழிகளும் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்?” என்றான். “அவர்களுக்கு மகளிர் மாளிகை இக்கோட்டைவளைப்பின் மறுபக்கம் ஒருக்கப்பட்டுள்ளது” என்றார் விதுரர். “மாலை அரசவைக்கு அவர்கள் வரவேண்டியதில்லை. இரவில் கொற்றவைப் பூசனைக்கு அரசியர் செல்லும்போது இவர்களும் செல்லலாம் என்று சொன்னார்கள்.”

கர்ணன் “அவையில் அரசியர் அமரும் முறை ஒன்று உள்ளதல்லவா இங்கு?” என்றான். “ஆம். இங்கு பட்டத்தரசியே அரியணையில் அமர்கிறார். செங்கதிர் அரியணை ஒன்றை அதற்கென அமைத்துமிருக்கிறார்” என்றார் விதுரர். கர்ணன் மேலும் ஏதோ கேட்க வாயெடுத்தபின் சொற்களை தடுத்தான். துரியோதனன் “இது ஒரு பெண்ணின் கற்பனையில் பிறந்த நகரம். அதை பார்க்கும் எவரும் உணர்வார்கள். இத்தனை பெருவிரிவு அழகிய ஆணவம் கொண்ட கனவாகவே இருக்கமுடியும்” என்றான். துச்சாதனன் “ஆம், மூத்தவரே. நானும் அதையே எண்ணினேன். பாஞ்சாலத்து அரசியின் ஆணவம்தான் எத்தனை அழகியது” என்றான். அப்பேச்சிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விழைபவர்போல விதுரர் சற்று முன்னால் சென்று கனகரிடம் ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்கினார்.

துச்சாதனன் “உள்ளே மரமே பயன்படுத்தப்படவில்லை என்று தோன்றுகிறது. படிகளையும் சிறு சட்டங்களையும் கூட வெண்பளிங்கிலே அமைத்திருக்கிறார்கள்” என்றபடி முன்னால் சென்றான். துரியோதனன் நின்று “நம்மை பீமனும் அர்ஜுனனும் எப்போது சந்திப்பதாக சொன்னார்கள்?” என்றான். கர்ணன் “எப்படியும் சற்று கழிந்து அவையில் நாம் சந்திக்கத்தானே போகிறோம்?” என்றான். துரியோதனன் “ஆம். ஆனால் ஒருவேளை மேலும் மன்னர்கள் வந்து கொண்டிருக்கலாம். முறைமைக்காகவாவது அவர்கள் வந்திருக்கலாம். நான் ஜராசந்தர் என்ன நினைத்துக்கொள்வார் என்றுதான் அஞ்சினேன். அவரை பீமசேனனிடம் தோள்கோக்கச் செய்வதாக சொல்லியிருந்தேன்” என்றான்.

கர்ணன் “நல்லூழாக அவர் ஏதும் எண்ணிக்கொள்ளவில்லை. முகம் மலர்ந்துதான் இருந்தது” என்றான். “ஆம், நானும் அதை நோக்கினேன். இயல்பாகவே இருந்தார். அங்கரே, இனிய மனிதர். இத்தனை எளிய உள்ளம் கொண்டவர் அவர் என்பதை நான் எண்ணியிருக்கவே இல்லை” என்று துரியோதனன் சொன்னான். “எளிய உள்ளம்தான். ஆனால் மறுபக்கம் நிகரான பெருவஞ்சமும் கொண்டது” என்றான் கர்ணன். “நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றான் துரியோதனன்.

“அரசே, ஷத்ரியர் படைக்கலம் கொண்டு பிறப்பவர்கள். ஆனால் இந்தப் பழங்குடிஅரசர்கள் ஆற்றும் உச்சகட்ட வன்முறைகளை அவர்கள் ஒருபோதும் செய்வதில்லை. எதிரிகளை நாம் வெல்வோம், கொல்வோம். அவர்கள் அவ்வெற்றியை திளைத்து கொண்டாடுவார்கள். தலைகளை வெட்டி கொண்டு சென்று தங்கள் இல்லங்களின் வாயில்களில் தொங்க விடுவார்கள். தலைமுறைகள்வரை அம்மண்டை ஓடுகளை சேர்த்து வைப்பார்கள். எதிரிகளின் பற்களைக் கோத்து மாலையாக அணிவார்கள். எலும்புகளை வீட்டுப்பொருட்களாக மாற்றிக்கொள்வார்கள். நான் கண்ட கிராதகுலத்து அரசன் ஒருவன் தன் எதிரி குலத்து கைக்குழந்தைகளின் மண்டையோட்டை தன் இல்லத்தில் மதுக்கோப்பைகளாக நிரப்பி வைத்திருக்கிறார்” என்றான் கர்ணன்.

துரியோதனன் அப்பேச்சை மாற்ற விரும்பி “இருக்கலாம். ஆனால் இங்கு அவர் நன்நோக்கத்துடன்தான் வந்தார். விரித்த பெருங்கைகளுடன் பீமனை அணைக்க சித்தமாக இருந்தார். அவன் வந்திருக்கலாம். அந்தக் கலமுகப்பிலேயே அனைத்தும் முடிந்திருக்கும்” என்றான். கர்ணன் “அவர் வந்தார். நானும் நீங்களும் ஜராசந்தரும் வந்ததைக்கண்டு நம்மிடையே நெடுங்காலப் புரிதல் ஒன்று உருவாகிவிட்டதென்று எண்ணி சினம் கொண்டு திரும்பிச் சென்றார். தம்பியையும் உடன் அழைத்துச்சென்றார்” என்றான்.

ஒருகணம் கழித்தே அது துரியோதனனுக்குப் புரிந்தது. ”அவ்வாறென்றால்கூட அது இயல்பே. அவர்கள் நம்மை சந்தித்தால் சில சொற்களில் அந்த ஐயத்தை களைந்துவிட முடியும்” என்றான் துரியோதனன். “அங்கரே, நாம் இங்கு வந்ததே ஐயங்களைக் களைந்து நெஞ்சு தொடுப்பதற்காகத்தான். நாளை இப்பெருநகரத்தின் அவை நடுவே விண்ணவர் விழவு காண இறங்கும் வேளையில் என் ஐந்து உடன்பிறந்தாரை நெஞ்சாரத் தழுவிக்கொள்ள விழைகிறேன். ஆற்றிய அனைத்து பிழைகளுக்கும் நிகர் செய்ய விழைகிறேன். அதிலொன்றே ஜராசந்தரை நான் இங்கு அழைத்து வந்தது.”

“அதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை அரசே. அவர்களின் உள்ளம் இப்பெருநகரத்தால் பிறிதொன்றாக மாற்றப்பட்டுள்ளது” என்றான் கர்ணன். துரியோதனன் மறித்து “என் இளையோரை எனக்குத் தெரியும்” என்றான். கர்ணன் “மாபெரும் மாளிகைகள் மானுடரின் உள்ளத்தை மாற்றுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த விண்தொடும் நகரம் அவர்களை அறியாமலேயே அவர்களின் அகத்தை மறுபுனைவு செய்து கொண்டிருக்கும். அரசே, பெருங்கட்டுமானங்கள் வெறும் பொருட்களல்ல. அவற்றுக்குப்பின் கலைஞனின் உள்ளம் உள்ளது. அவ்வுள்ளத்தை கையில் எடுத்து ஆட்டும் தத்துவம் ஒன்று உள்ளது. அத்தத்துவத்தை புனைந்தவனின் நோக்கத்தின் கல்வடிவமே கட்டுமானங்கள்” என்றான்.

“இந்நகருக்கு என்ன நோக்கம் இருக்கும் என்று நினைக்கிறீர்?” என்றான் துரியோதனன். “இதன் உச்சியில் இந்திரன் ஆலயம் அமைந்திருக்கிறது. விழைவின் அரசன். வெற்றிக்கென அறத்தை கடப்பவன். ஆணவமே உருவானவன். இந்நகரம் அவன் ஏறி அமர்ந்திருக்கும் வெள்ளையானை.” துரியோதனன் புன்னகைத்து “மிகையுணர்வு கொள்கிறீர் அங்கரே. அவ்வண்ணம் என் உடன்பிறந்தார் உள்ளம் மாறுபட்டு இருந்தாலும் அதுவும் இயல்பே என்று கொள்கிறேன். அதைக் கடந்து சென்று அவர்களுடன் கனிவுடன் உரையாட என்னால் இயலும். எந்தையிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட அன்பை அவர்கள் மேல் வைப்பேன்” என்றான்.

“கதவுகளில்லாத வாயில் கொண்டவர் அஸ்தினபுரியின் பேரரசர் என்பது சூதர்மொழி. இனி அவரது மைந்தராக இருக்க மட்டுமே நான் விழைகிறேன். அவர்கள் என்னிடம் கொள்வதற்கு மட்டுமே உள்ளது, தடுப்பதற்கு ஏதுமில்லை எனும்போது எப்படி பகைமை உருவாக முடியும்?” நெகிழ்ந்த அவன் முகம் புன்னகையில் ஒளி கொண்டது. “அத்தனைக்கும் அப்பால் பீமசேனனின் தோள்கள் எனது தோள்கள். ஜராசந்தரின் தோள்கள். பார்த்தீர்களல்லவா? இன்று மாலை நாங்கள் ஒரு களிக்களத்தில் தோள்கோத்தோமென்றால் தழுவி இறுக்கி சிரிப்பும் கண்ணீருமாக ஒன்றாவோம். அது மல்லர்களின் மொழி. வெறும் தசையென்றாகி நிற்கும் கலையறிந்தவர்கள் நாங்கள்.”

கர்ணன் புன்னகைசெய்தான். “இன்று நீங்களே பார்ப்பீர்கள் அங்கரே” என்ற துரியோதனன் புன்னைகையால் விடைபெற்று நடந்தான்.