வெய்யோன் - 56

பகுதி ஏழு : நச்சாடல் 5

அஸ்தினபுரியின் கலநிரையின் முகப்பில் நின்றிருந்த காவல்படகிலிருந்து உரத்த கொம்பொலி எழுந்தது. குதிரைகள்போல அனைத்துப் படகுகளும் அதை ஏற்று கனைத்தன. உண்டாட்டறைக்குள் எட்டிப்பார்த்த காவலர்தலைவன் “அரசே, நமக்கு துறையளிக்கப்பட்டுள்ளது” என்றான். ஜராசந்தன் சரியும் விழிகளைத் தூக்கி “நாம் இப்போது கரையிறங்கப் போவதில்லை. நாம் மகதத்திற்கே திரும்புகிறோம். படகுகள் திரும்பட்டும்” என்றான்.

துச்சாதனன் பீரிட்டுச் சிரித்து “மகதரே, இது எங்கள் படகு” என்றான். துச்சலன் “ஆம், இது அஸ்தினபுரியின் படகு” என்றான். “அஸ்தினபுரியின் படகு எப்படி மகதத்தின் படகுக்குள் வந்தது… யாரங்கே?” என்றான் ஜராசந்தன். “முட்டாள்கள்… கலங்களை வழிதவறச் செய்கிறார்கள்.” கர்ணன் திரும்பி காவலர்தலைவனிடம் “கலங்கள் சித்தமாகட்டும்…” என்றான். காவலர்தலைவன் மேலும் தயங்கி “நாம் இந்திரப்பிரஸ்தத்திற்குள் அணிநுழைவுக்கு எழவேண்டும் அரசே” என்றான். அப்போதுதான் கர்ணன் அதன் முழுப்பொருளையும் உணர்ந்து துரியோதனன் தோளைத்தட்டி “அரசே” என்றான்.

துரியோதனன் கண்களைத் திறந்து “யார்?” என்றான். பின்னர் “என்ன?” என்று தன் சால்வையை இழுத்து எடுத்தான். “இன்னும் சற்றுநேரத்தில் நாம் இந்திரப்பிரஸ்த நகருக்குள் நுழையவேண்டும்” என்றான் கர்ணன். “ஏன்?” என்றான் துரியோதனன். “நாம் நகர்புக நேரமாகிறது. தாங்கள் முழுதணிக்கோலம் கொண்டாகவேண்டும்.” துரியோதனன் மெல்ல அவ்வெண்ணத்தை உள்வாங்கி “ஆம்” என்றான். திரும்பி ஜராசந்தனை நோக்கி “மகதர்?” என்றான். “அவர் திரும்பி அவரது படகுக்கே செல்லட்டும். இது நமக்கான நிகழ்வு” என்றான்.

“நான் செல்லப்போவதில்லை” என்றான் ஜராசந்தன். “நான் என் நண்பருடன் இங்கே இறங்கவிருக்கிறேன். ஏனென்றால் நாங்கள் மீண்டும் மற்போர் செய்யவிருக்கிறோம்.” கர்ணன் “அது முறையல்ல அரசே” என்றான். “முறைகளை நான் பார்ப்பதில்லை. முறைகளை நானே உருவாக்கிக்கொள்வேன்” என்றான் ஜராசந்தன். “இனிமேல் நான் கிளம்பிச் செல்லமுடியாது. நான் இப்படகிலிருந்தே இறங்குவேன்.” துரியோதனன் “ஆம், அதற்கு நூலொப்புதல் உண்டா என்று விதுரரிடம் கேட்போம்” என்றான். “விதுரர் முதல்படகில் இருக்கிறார் மூத்தவரே” என்றான் சலன்.

சுபாகு “மூத்தவரே, ஏன் மகதர் நம் படகிலிருந்து வரக்கூடாது?” என்றான். “மூத்தவர் கர்ணன் அவரை இங்கே அழைத்து வந்ததைப்போல தாங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்குள் அழைத்துச்செல்லுங்கள். பீமசேனரை அவருக்கு அறிமுகம் செய்யுங்கள். இருவரும் தோள்கோக்கட்டும். அனைத்தும் முடிந்துபோகும்.” துச்சாதனன் “ஆம் மூத்தவரே, எனக்கும் அது நல்ல வழி என்று தோன்றுகிறது” என்றான்.

“மூடா!” என்றான் துரியோதனன். “நாம் இங்கு வந்திருப்பது முறைமைச்சடங்குக்கு. நாம் இந்திரப்பிரஸ்தத்தின் உறவினர். இவர் நான்கு தலைமுறைகளாக எதிரி.” சுபாகு “யாருக்கு எதிரி? அஸ்தினபுரிக்குத்தானே எதிரி? நாமே இவரை நம்முடன் அழைத்துச்செல்வோம். அதன்பின் எதிரி என எவர் சொல்லமுடியும்?” என்றான். கர்ணன் “அது மிகைநடத்தை. எதையும் முறையாக அறிவித்துவிட்டே செய்யவேண்டும்” என்றான். “நீங்கள் அறிவித்துவிட்டா செய்தீர்கள்?” என்றான் சுபாகு. “நாம் வேறுவகையினர். எனக்கு அரசரை நன்குதெரியும்” என்றான் கர்ணன்.

“எங்களுக்கு பீமசேனரை நன்கு தெரியும். மூத்தவரும் அவரும் ஒரே குருதியினர். ஒரே தோளினர். அவர் ஜராசந்தரை வந்து அணைத்துக்கொள்வார், ஐயமே இல்லை” என்றான் சுபாகு. “இல்லை” என்று கர்ணன் சொல்லத்தொடங்க “நானும் அவ்வாறே எண்ணுகிறேன் அங்கரே” என்றான் துரியோதனன். “இளையோர் சொல்வதிலும் உண்மை உள்ளது. இது பாரதவர்ஷத்தின் மாமங்கலத்தருணம். இன்று அனைத்து வஞ்சங்களும் மண்ணில்புதைந்து அமுதுஎன முளைக்குமென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்.”

“அமுது முளைக்குமா என்று நான் ஐயம் கொள்கிறேன். ஆனால் உங்களுடன் சேர்ந்து நகர்புகவே விரும்புகிறேன்” என்றான் ஜராசந்தன். “பிறகென்ன? முடிவெடுப்போம்” என்றான் துரியோதனன். “அவர் அணிகொள்ளவேண்டுமே?” என்றான் கர்ணன். “அவருக்கு நம் அணிகளை கொடுப்போம். மணிமுடிமட்டும்தானே இல்லை? நானும் முடிசூடாமல் இறங்குகிறேன். அங்கே சென்றபின் நாளை அவையமர்கையில் முடிசூடிக்கொள்வோம்” என்றான் துரியோதனன். “ஆம், அவ்வாறே முடிவெடுத்துவிட்டோம்” என்றான் துச்சாதனன்.

கர்ணன் எழுந்து “அவ்வாறெனில் நன்று நிகழ்க என்றே நான் விழைவேன். தெய்வங்கள் நம்முடன் இருக்கட்டும்” என்றபின் காவலர்தலைவனிடம் “அரசர்கள் அணிகொள்ளவேண்டும். சமையர்கள் வருக!” என்றான். அவன் தலைவணங்கி வெளியேறினான். கர்ணன் விடைபெற்று தன் அறைக்கு சென்றான். அவன் குறைவாகவே மது அருந்தியிருந்தபோதிலும் இரவில் துயில்நீத்ததும் காலையின் விரைவுப்பயணமும் தலையை களைக்க வைத்தன. கண்ணிமைகள் சரிந்தன. சற்றுநேரம் தலையைப் பற்றியபடி அமர்ந்திருந்த பின்னர் சமையன் வந்து எழுப்பியதும்தான் எழுந்தான்.

சமையன் அவனை வெந்நீரால் ஆவிநீராட்டினான். அதன்பின் அகல்கலத்தின் குளிர்நீரால் முகத்தை அறைந்து கழுவினான். குடல் புரட்டி ஏப்பம் வந்தது. அதில் ஊன்கலந்த மதுமணம் நிறைந்திருந்தது. ஏவலன் அளித்த இன்கடுநீரை அருந்தியபோது அதன் ஏலக்காய்மணம் மதுவை சற்று மறைத்தது. ஏவலன் உதவியுடன் பட்டாடையை அணிந்து கச்சையை இறுக்கிக் கட்டினான். மார்புக்கு மணியாரமும் தோளணியும் கங்கணங்களும் அணிந்தான். தலையை நெய்பூசிச் சீவி பின்னால் கருங்குழல்கற்றைகளை புரளவிட்டு ஆடியில் நோக்கினான். கணையாழியை செஞ்சாந்தில் முக்கி நெற்றியில் சூரியமுத்திரையை பதித்தான்.

அப்பால் வெடிச்சிரிப்புகள் கேட்டுக்கொண்டே இருந்தன. “அவர்கள் அணிசெய்கிறார்களா?” என்றான். “ஆம் அரசே, களிமயக்கில் இருக்கிறார்கள்” என்றான் ஏவலன். கர்ணன் தன்னை இன்னொருமுறை ஆடியில் பார்த்தபின் வெளியே சென்று சிறியபடிகளில் ஏறி அகல்முகப்புக்கு வந்தான். கீழே மீண்டும் சிரிப்பொலிகள் எழுந்தன. ஜராசந்தன் உரக்க ஏதோ சொல்வது கேட்டது. அவன் நாக்கு கள்ளால் தடித்திருந்தது. “மீசை! அதுதான்” என்று அவன் சொன்னான். மெல்லிய குரலில் சுபாகு ஏதோ சொல்ல ஜராசந்தன் துரியோதனன் இருவரும் சேர்ந்து பேரோசையுடன் நகைத்தனர். யாரோ கதவை முட்டிக்கொள்ள வெடிப்பொலி கேட்டது. “ஆனால் நாம் இனிமேல் பெண்கொண்டு பெண்கொடுக்க முடியாது” என்றான் ஒருவன்.

அகல்முகப்பில் ஏவலர்களும் ஆடைமாற்றி புதியதலைப்பாகைகள் அணிந்து காத்து நின்றனர். படகு படிப்படியாக முன்னகர்ந்து இந்திரப்பிரஸ்தத்தின் ஏழாவது துறைமேடைக்கு அருகே நின்றிருந்தது. அவர்களுக்கு முன்னால் நின்றிருந்த அஸ்தினபுரியின் படகுகளில் இருந்து மங்கலச்சேடியரும் அணிப்பரத்தையரும் இசைச்சூதர்களும் நடைபாலம் வழியாக வண்ண ஓடையாகச் சென்று சிறிய சுழிகளாக தேங்கினர். காவலர் அவர்களை நிரைவகுக்கச் சொல்லி மேலே அழைத்துச்சென்றனர்.

இந்திரப்பிரஸ்தத்தினர் அனைவரும் வெள்ளியில் வஜ்ராயுத முத்திரை பொறித்த செந்நிறத் தலைப்பாகையும் இளஞ்செந்நிற ஆடையும் அணிந்திருந்தனர். அவர்களை ஆணையிட்டு வழிநடத்தும் தலைமைக்காவலர் சிறிய மரமேடைகளில் கொம்புகளும் கொடிகளுமாக நின்றனர். அவை அளித்த ஆணைகளுக்கேற்ப இணைந்தும் பிரிந்தும் நீண்டும் இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலரும் காவலரும் வினையாற்றினர். யானைகள்கூட அவ்வாணைகளை தலைக்கொண்டன. தங்களுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்படுகையில் அவை செவிகளைச் சாய்த்து எடுத்தகாலை காற்றில் நிறுத்தி கூர்வதைக் கண்டு கர்ணன் புன்னகைசெய்தான்.

அஸ்தினபுரியின் கலங்களில் வெயிலில் திரும்பி கண்களை சீண்டிச்சென்ற வாட்களையும் வேல்களையும் ஏந்திய படைவீரர்கள் நிரைவகுத்து நின்றிருந்தனர். இந்திரப்பிரஸ்தநகரியின் துறைமுகப்பின் காவல்கோபுரத்தின் மேலிருந்த பெருமுரசு உறுமி கலங்களின் முரசுகளுடன் உரையாடியது. எறும்புகளுக்குமேல் யானைகள் பேசிக்கொள்வதுபோல. பொதியொழிந்த ஒருபெருங்கலம் விலகியதும் இன்னொரு கலம் துடுப்புகளால் உந்தப்பட்டு துறைமேடையை நெருங்கி நீட்டி நின்றிருந்த அதிர்வுதாங்கிகளில் முட்டி அசைந்து நின்றது. அதிலிருந்து நடைபாலம் கிளம்பி தரையைத் தொட்டு வேர் என ஊன்றிக்கொண்டது. அதனூடாக ஏவலர் பொருட்களைச் சுமர்ந்தபடி இறங்கத் தொடங்கினர்.

அப்பால் பெரிய துலாக்கள் அவர்களின் தலைக்குமேல் கந்தர்வர்களின் விண்கலங்கள் என சுழன்றிறங்கி சுமைகலங்களில் இருந்து பெரும்பொதிகளை தூக்கியபடி பருந்தொலியுடன் முனகி எழுந்து சுழன்று சென்றன. துலாக்கள் அமைந்த மேடைகளே பெரிய கட்டடங்களென தலைக்குமேல் எழுந்து நின்றன. அவற்றுடன் இணைந்த இரும்புச்சங்கிலிகள் இழுபட்டு நீண்டு கீழே அமைந்த பேராழிகளை சுற்றியிருந்தன. அங்கே யானைகள் அவற்றில் இணைந்த நுகங்களை இழுத்தன. அவற்றுக்கு ஆணையிட்ட பாகர்களின் ஓசைகளும் சங்கிலிக்குலுங்குதலும் ஆழிப்புரி முறுகுதலும் விழிதொட்டபின் தனியாக கேட்டன.

கீழே பேச்சுக்குரல்கள் கேட்க கர்ணன் திரும்பி நோக்கினான். துரியோதனன் ஜராசந்தன் இருவரும் கௌரவர் சூழ சிரித்தபடி மேலேறி வந்தனர். கௌரவர்கள் வெண்பட்டாடை சுற்றி அமுதகல முத்திரை பதித்த பொற்பட்டுத் தலைப்பாகையும் மார்பில் மலர்ப்பொளிச்சரமும் முத்துச்சரமும் காதுகளில் மணிக்குண்டலங்களும் அணிந்திருந்தனர். ஜராசந்தன் முழுதணிக்கோலத்தில் உடலெங்கும் மணிகள் சுடர அரசமுடிமட்டும் இல்லாமலிருந்தான். துரியோதனனின் ஆடைகளை அணிந்திருந்தான். அவர்களைக் கண்டதும் சூழ்ந்திருந்த அஸ்தினபுரியின் காவலர் வாழ்த்தொலி கூவினர். அவர்களின் கண்களில் தெரிந்த குழப்பத்தைக் கண்டபின் கர்ணன் திரும்பி நோக்கினான். துரியோதனனும் ஜராசந்தனும் ஆடிப்பாவைகளெனத் தெரிந்தனர்.

முதற்கலத்தில் இருந்து கனகரும் பிரமோதரும் பலகைப்பாலங்கள் வழியாக மூச்சிரைத்தபடி வந்தனர். கனகர் “அமைச்சர் இறங்கிவிட்டார். அவர் அரண்மனைக்குச் சென்று ஆவன செய்வதாக சொன்னார். தங்களை வரவேற்க நகுலசகதேவர்கள் வந்துவிட்டார்கள். கலிங்கரை அழைத்துச்சென்று தேரிலேற்றிவிட்டு பார்த்தர் வந்துகொண்டிருக்கிறார். வங்கரைக் கொண்டு தேரேற்றிவிட்டு பீமசேனர்…” என்ற கனகர் திகைத்தார்.

“நான் ஜராசந்தன். நேற்றிரவு இங்கே அஸ்தினபுரியின் அரசரை சந்திக்கவந்தேன்” என்றான் ஜராசந்தன். கனகர் தலைவணங்கி “மகதமன்னரை வணங்குகிறேன்… நான்… ஆனால்…” என்றார். “அரசமுறைமைகள் ஏதும் தேவையில்லை. நான் அரசமுறைமைப்படி வரவில்லை” என்றான் ஜராசந்தன். துரியோதனன் “ஆம் அமைச்சரே, அவர் என் நண்பராகவே இங்கே இருக்கிறார்” என்றான். “ஆம், ஆனால் நாம் அறிவிக்கவேண்டும். இந்திரப்பிரஸ்தத்திற்கு மகதம் மாபெரும் அண்டைநாடு. அவர்களுக்கு பல முறைமைகள் உள்ளன” என்றார் கனகர்.

“முறைமைகளை நானே செய்கிறேன்… பீமன் வரட்டும்” என்றான் துரியோதனன். நகைத்தபடி ஜராசந்தனிடம் “அமைச்சர்கள் முறைமைகள் இல்லாமலாவதை அஞ்சுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் பணியே நின்றுவிடுமே” என்றான். துச்சாதனன் உடன் நகைத்து “எங்கள் கொட்டிலில் சங்கமன் என ஒரு யானை உள்ளது. அது காலில் சங்கிலி இல்லாமல் நடக்காது. அஞ்சி நின்றுவிடும்” என்றான். கர்ணன் “ஏதும் தேவையில்லை கனகரே. நாங்களே இதை பார்த்துக்கொள்கிறோம்” என்றான்.

“அரசரும் மகதரும் இறங்கும்போது வாழ்த்தொலிகள் எழவேண்டுமே! மகதருக்கான முறைமுரசும் ஒலிக்கவேண்டும்” என்றார் கனகர். “தேவையில்லை. அவர் வந்திருப்பதை நான் சொல்லி பாண்டவர் அறிந்தால்போதும்…” ஜராசந்தன் “என் அரசப்படைகள் முன்னரே சென்றுவிட்டன. அவை இப்போது துறையமைந்திருக்கக்கூடும்” என்றான். துரியோதனன் “அவர்கள் அனைத்து முறைமைகளையும் அடையட்டும்…” என்று சொல்லி தேவையில்லாமலேயே உரக்க சிரித்தான். சிரிக்கும் உளநிலையுடன் அவன் இருந்தான் என்பதை கர்ணன் கண்டான்.

“தாங்கள் நாங்கள் இறங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் கனகரே” என்றான் கர்ணன். கனகர் தலைவணங்கி குழப்பத்துடன் பிரமோதரை நோக்கியபின் சென்றார். அவர்களைத் தொடர்ந்து பாலத்தில் வந்துகொண்டிருந்த கைடபரை இருவரும் வழியிலேயே சந்தித்து பேசிக்கொண்டார்கள். கைடபர் திகைப்பதும் ஜராசந்தனை நோக்குவதும் தெரிந்தது. அவர்கள் சென்றபின் குகன் ஏதோ சொல்ல கலம் முழுக்க நகைத்தது.

ஜராசந்தன் “நான் ஒரு வடத்தில் மேலேறிச்சென்று நோக்கவிரும்புகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் இந்தப் படித்துறையே ஒரு சிறிய நகரம்போலிருக்கிறது” என்றான். துச்சாதனன் “பன்னிரு படித்துறைகளில் ஒன்று இது” என்றான். “இதிலிருந்து இருபெரும்சாலைகள் சுழன்றேறி நகருக்குள் நுழைகின்றன. அப்பால் கற்களை ஏற்றியிறக்க வேறு படித்துறைகளும் உள்ளன.” ஜராசந்தன் “சிறிய படகுகள் அங்கே காட்டுக்குள் இறங்குகின்றன…” என்றான். சிரித்தபடி திரும்பி “இந்நகரம் அமைவதைப்பற்றி கேட்டபோது நான் என்ன சொன்னேன் தெரியுமா?” என்றான்.

“இதை வெல்லும் ஒரு நகரை அமைக்கவேண்டும் என்று எண்ணியிருப்பீர்கள், வேறென்ன?” என்றான் துரியோதனன். “இல்லை, தேனீ கூடுகட்டுவது கரடி சுவைப்பதற்கே என்றேன்” என்றபின் நகைத்தான் ஜராசந்தன். “இதன்மேல் நான் படைகொண்டு வரமுடியாதபடி செய்துவிட்டீர்களே அரசே!” கர்ணன் “இந்நட்புக்குப்பின் துவாரகையும் உங்களுக்கு நட்பு அல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அதற்கு முன் துவாரகைத்தலைவன் என் மகளிரிடமும் என் குலத்திடமும் பொறுத்தருளக் கோரவேண்டும்.” துரியோதனன் “தேவையென்றால் அவன் அதையெல்லாம் செய்ய தயங்கமாட்டன். மகதரே, அவன் நூறு பீஷ்மர்களுக்கு நிகரானவன்” என்றான்.

இந்திரப்பிரஸ்தத்தின் காவல்மாடத்திலிருந்த முரசு குதிரைநடையில் முழங்கத்தொடங்கியது. அனைத்து பெருமுரசுகளும் அதை ஏற்றொலிக்க அஸ்தினபுரியின் கலங்களிலிருந்த முரசுகளும் ஒலித்தன. கைடபர் மேலே நோக்கி கைகளை வீசியபடியே பாய்ந்து வந்து கர்ணனிடம் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர்கள் எழுந்தருளிவிட்டனர் அரசே” என்றான். “நால்வரும் வந்துள்ளனர். இதற்குமுன் நால்வரும் வந்து எதிர்கொண்டது துவாரகைத்தலைவரை மட்டுமே.” கர்ணன் “அவர்கள் தம்பியர், இளவரசர்கள் அல்ல” என்றான். அதை புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்ற கைடபர் கைவீசி ஆணைகளை இட்டபடி ஓடினார்.

இந்திரப்பிரஸ்தத்தின் அணிப்படை ஒன்று நீர்மின்னும் இரும்புக்கவசங்களும் சுடர்துள்ளும் படைக்கலங்களுமாக நெறிநடையிட்டு வந்தது. அவர்களுக்கு முன்னால் வெண்குதிரையில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் கொடியுடன் பொற்பட்டுத் தலைப்பாகையும் வெள்ளிக்கவசமும் அணிந்த அணிமுதல்வன் வந்தான். துறைமேடையில் ஏற்கெனவே இறங்கிய அனைவரும் விலக்கப்பட்டிருந்தமையால் அலைத்துமி படர்ந்த கருங்கற்பரப்பு வண்ணங்கள் சிதறிப்பரந்து தெரிந்தது.

அப்பால் தெரிந்த பெருஞ்சாலை வளைவிலிருந்து படை ஒழுகியிறங்கியது. அணிப்பரத்தையர் இளஞ்செந்நிறப் பட்டாடைகளும் பொன்னணிகளும் கையிலேந்திய மங்கலத் தாலங்களுமாக நான்குநிரைகளாக வந்தனர். அவர்களுக்கு அப்பால் இசைச்சூதர்கள் இசையின் அதிர்வுகளுக்கேற்ப துள்ளியாடியபடி வந்தனர். காற்றிலெழுந்த இசை வந்து அலையடிக்க அலைக்காற்றால் அள்ளிக்கொண்டுவரப்படும் ஒளிச்சருகுகள்போல அவர்கள் தெரிந்தனர்.

யானைகளின் உடலசைவுகளில் அந்த இசைத்தாளம் எதிர்நிகழ்வதை கர்ணன் வியப்புடன் நோக்கினான். அவற்றின் உடலுக்குள் கரியதோலைப்போர்த்தி இன்னொரு இசைக்குழு துள்ளி நடனமிடுவதைப்போல. தொடர்ந்த படைநிரைக்குமேல் நகுலனின் சரபக்கொடியும் சகதேவனின் அன்னக்கொடியும் தெரிந்தன. துச்சாதனன் “இளையோர்!” என்றான். “நான் அவர்களைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன… இன்று அவர்களை நெஞ்சுதழுவுகையில் எலும்புகளை உடைக்கவேண்டும் என்று தோன்றுகிறது.”

பீமனின் சிம்மம் பொறிக்கப்பட்ட கொடியும் அர்ஜுனனின் குரங்குக்கொடியும் அவற்றுக்குப் பின்னால் தெரிந்தன. “இருவரும் வருகிறார்கள்!” என்றான் துச்சலன். திருஷ்டத்யும்னனின் கோவிதாராக்கொடி தெரிய துச்சாதனன் திரும்பி “மூத்தவரே, பாஞ்சாலனும் வருகிறான்” என்றான். “நன்று” என்றான் துரியோதனன். “இளைய யாதவனும் வருவானென்றால் எல்லாவற்றையும் இக்கலத்துறையிலேயே முடித்துவிடலாம்.” “அவர் வரமாட்டார்” என்று துர்மதன் உளம்கூராமல் சொல்ல துரியோதனன் திரும்பி நோக்கி புன்னகை செய்தான்.

நூற்றுக்கணக்கான மணிக்குடைகள் குலுங்கிச்சுழன்றபடி வந்தன. தலைகீழாக மலர்ந்த பூக்களாலான காடுபோல தெரிந்தது அணியூர்வலம். பட்டுப்பாவட்டாக்களும் அணிக்கொடிகளும் காற்றில் உலைந்தன. பெண்களின் ஆடைகளையும் குடைகளையும் கொடிகளையும் அள்ளி கீழ்த்திசை நோக்கி நீட்டியபடி காற்று ஒன்று கடந்துசென்றது. ஓடையில் நீர்ப்பாசிகள்போல அவை இழுபட்டு நெளிந்தன.

“எத்தனை துலாக்கள்!” என்றான் ஜராசந்தன். “பாரதவர்ஷத்தில் எந்தத் துறையிலும் இத்தனை துலாக்கள் இல்லை. இந்த ஒருமேடையிலேயே பதினெட்டு பெருந்துலாக்களும் இருபது சிறுதுலாக்களும் உள்ளன…” நுனிக்காலில் நின்று எட்டிப்பார்த்து “இப்படி பன்னிரு துறைமேடைகள் என்றால்…” சிரித்து “வேறுவழியில்லை, யமுனையை வெட்டி பெரியதாக்க வேண்டியதுதான்” என்றான். துரியோதனன் “இது பன்னிரு இதழ்கள் கொண்ட கொடி. இங்கே வரும் ஒவ்வொருவரும் இதை ஊர்தோறும் சென்று பேசுவார்கள் அல்லவா?” என்றான்.

அவர்கள் எண்ணியிருக்காத கணத்தில் ஜராசந்தன் ஒரு வடத்தைப்பற்றி மேலேறி பிறிதொன்றின்மேல் நின்றபடி “அடுத்த துறைமேடையில் இருபது துலாக்கள்!” என்றான். பெருகி வந்துகொண்டிருந்த இந்திரப்பிரஸ்தத்தின் படைகளில் முன்னால் வந்த சிலர் ஜராசந்தனைப் பார்த்து திகைப்பதை கர்ணன் கண்டான். “மகதரே, கீழிறங்குங்கள்” என்றான். “இத்தனை நீளமான துலாக்கோல்கள் எப்படி இவர்களுக்கு அமைந்தன என்று பார்த்தேன்” என்றபடி ஜராசந்தன் இறங்கிவந்தான். “துலாமரத்தின் எடையில் அல்ல, பல மரங்களை ஒன்றுடனொன்று பின்னி அமைத்திருப்பதிலுள்ளது அந்த நுட்பம். அது கிழக்கே காமரூபத்திலிருந்தோ அல்லது மேலும் அப்பால் மணிபூரகத்திலிருந்தோ வந்திருக்கவேண்டும்…”

துரியோதனன் “அதை ராஜகிருகத்தில் அமைத்தேயாகவேண்டும், இல்லையா?” என்றான். “ஆம், அது அரசனாக என் கடமை. முடிந்தால் இங்குள்ள சிற்பிகளையே அழைத்துச்செல்வேன்” என்றான். கௌரவர்கள் நகைத்தபடி அவனை சூழ்ந்தனர். துச்சலன் “நீங்கள் புகையாலான உடல்கொண்டவர் போல மேலெழுந்தீர்கள்…” என்றான். “இந்த கலத்தின் உச்சிக்கொடியை சென்று தொட்டுவர எனக்கு பத்து எண்ணும் நேரம் போதும்” என்றான் ஜராசந்தன். “அவ்வளவு விரைவாகவா?” என்றான் துர்மதன். “பார்க்கிறாயா?” என்றான் ஜராசந்தன்.

கர்ணன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த அணிநிரையில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்ந்தான். அவர்களின் உடலசைவுகளில் ஓசையில் அல்லது நிரையில். அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. ஆனால் அதுவல்ல. மேலுமொரு மாற்றம். அவன் திரும்பி கனகரின் கண்களை நோக்கினான். உடனே அதை அவன் அகம் கண்டுகொண்டது. திடுக்கிட்டு அணிநிரையை பார்த்தான். அதில் சிம்மக்கொடியும் குரங்குக்கொடியும் இல்லை. பின்னால் கோவிதாரா கொடியும் இருக்கவில்லை.

அவன் சிலகணங்களுக்குப் பின்னரே மூச்சை இயல்பாக விட்டான். கனகரிடம் அருகே வர கைகாட்டியபடி இயல்பாக முன்னால் நடந்தான். “அவர்கள் மகதரை அறிந்துவிட்டனர்” என்றார் கனகர். “உடனே அங்கு ஏதோ நடந்தது. பீமசேனர் திரும்பிச்சென்றார். அவருக்கும் பார்த்தருக்கும் ஏதோ சொல்லாடல் நடந்திருக்கும். பின்னர் மூவருமே விலகிச்சென்றனர்.” கர்ணன் “விலகிச்செல்வதை பார்க்கமுடியவில்லையே?” என்றான். “செல்லவில்லை. கொடிகள் உடனே தாழ்த்தப்பட்டன. அவர்கள் தேரிறங்கி அதோ தெரியும் அந்த சுங்க மாளிகைக்கு பின்பக்கம் மறைந்தனர்.”

“நாம் இறங்குகையில் நம்மை வரவேற்க மறுக்கிறார்களோ?” என்றான் கர்ணன். “இல்லை, மகதமன்னரை முறைப்படி வரவேற்கலாமென நினைக்கிறார்கள்போலும்” என்றார் கனகர். அவர் அறிந்தே பொய்சொல்கிறார் என்பது தெரிந்தது. “நாம் இறங்கும்போது அவர்கள் இருக்கமாட்டார்கள். புரவிகளில் ஊடுபாதையினூடாக சென்றுவிட்டிருப்பார்கள்” என்றான் கர்ணன். கனகர் ஒன்றும் சொல்லவில்லை.

“இதை இப்போது மகதரும் அரசரும் இளையோரும் அறியவேண்டியதில்லை” என்றான் கர்ணன். “இளைய பாண்டவர் இருவரும் வந்து முறைசெய்யட்டும். மகதரிடம் நாம் மூத்தபாண்டவர் இருவரும் அரண்மனைக்கே வருவார்கள் என்று சொல்லிக்கொள்வோம்.” “ஆம்” என்றார் கனகர். “என்ன ஆயிற்று அந்த மூடர்களுக்கு?” என்றான் கர்ணன் சினத்துடன். “ஐயுறுகிறார்கள்” என்றார் கனகர். “ஏன்?” என்றான் கர்ணன். உடனே அவனுக்கும் புரிந்தது. “நாம் இவர்களுக்கு எதிராக மகதருடன் உடன்படிக்கை கொண்டிருக்கிறோம் என எண்ணியிருப்பார்கள்.”

கர்ணன் “அதெப்படி?” என எண்ணியதுமே அதை உண்மை என உணர்ந்துகொண்டான். கீழே இருநாட்டு படைத்தலைவர்களும் கொடிமாற்றச்சடங்கை செய்துகொண்டிருந்தனர். அஸ்தினபுரியின் காவலர்தலைவன் கவசங்களில் சூழ்ந்திருந்த வண்ணங்கள் மின்னி அலையடிக்க சீர்நடையிட்டுச்சென்று தன் கையிலிருந்த அமுதகலசக் கொடியை தூக்கி மும்முறை ஆட்டி இந்திரப்பிரஸ்தத்தின் காவலர்தலைவனிடம் அளிக்க அவன் தன்னிடமிருந்த மின்கொடியை மும்முறை ஆட்டி திரும்ப அளித்தான்.

“அவ்வண்ணமே ஆயினும் வந்திருப்பவர் அவர்களின் உடன்குருதியினர். எப்படி அவர்களை எதிர்கொள்ளாமல் புறக்கணிக்கலாகும்?” என்றான் கர்ணன். “முறைப்படி இரு இளவரசர்கள் வந்துள்ளனர். அவர்களே போதும்” என்றார் கனகர். “முறைமையா? வந்திருப்பவர் அவர்களின் பெரியதந்தையின் மண்வடிவமான மகன். நெஞ்சு நிறைந்த பேரன்புடனும் நிகரற்ற பெருஞ்செல்வத்துடனும் அணைந்திருக்கிறார். வங்கனையும் கலிங்கனையும் எதிர்கொண்டவர்களால் அவர்களை எதிர்கொள்ளமுடியாதா என்ன?”

கனகர் மறுமொழி சொல்லவில்லை. இந்திரப்பிரஸ்தத்தின் பெருமுரசுகளும் கொம்புகளும் யானைநடையில் ஒலிக்கத்தொடங்கின. முன்னால் வந்து நின்ற ஏழு இசைச்சூதர் வெண்சங்குகளை ஊதினர். கனகர் ஓடிச்சென்று துரியோதனனிடம் “அரசே, தாங்கள் இறங்கலாம்” என்றார். “ஆம், நல்வேளை” என்றபின் ஜராசந்தனிடம் “வருக அரசே” என்று அழைத்து அவன் கைமுட்டைப் பற்றியபடி துரியோதனன் நடந்தான். கௌரவர்கள் ஆடைகளை சீரமைத்தபடி தொடர்ந்தனர்.

அவர்கள் கலவிளிம்பை அடைந்ததும் கீழே அவர்களைப் பார்த்து இந்திரப்பிரஸ்தத்தின் வீரர்கள் வாள்களை மேலே தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். மங்கலஇசை சேர்ந்து எழுந்தது. வண்ணங்கள் கொப்பளிக்கும் நதியொன்று பெருகிவந்து சூழ்ந்ததுபோலிருந்தது. ஜராசந்தன் தொடர துரியோதனன் செம்பட்டு போர்த்தப்பட்ட மரவுரி விரித்த பாலத்தில் நடந்து கீழே சென்றான். அவன் வலப்பக்கம் ஜராசந்தனும் இடப்பக்கம் கர்ணனும் நடந்தனர். தொடர்ந்து கௌரவர் சென்றனர்.

மங்கலப்பரத்தையர் தாலங்களுடன் வந்து அவர்களை எதிர்கொள்ள அவர்கள் ஒவ்வொரு தாலத்தையும் தொட்டு சென்னி சூடினர். இசைச்சூதர் வந்து வணங்கி இருபக்கமும் பிரிந்தனர். நகுலனின் சரபக்கொடி ஏந்திய வீரன் முன்னால் வந்து தலைவணங்கி கொடிதாழ்த்தினான். தொடர்ந்து நகுலன் கூப்பிய கைகளுடன் வந்தான். அன்னக்கொடி ஏந்திய வீரன் வந்து தலைவணங்கி கொடிதாழ்த்தி விலக சகதேவன் கைகூப்பியபடி வந்தான்.

“இந்திரப்பிரஸ்தநகரிக்கு வருக அரசே. இந்நாள் எங்கள் மூதாதையர் உங்கள் வடிவில் நகர் நுழைகிறார்கள்” என்றான் சகதேவன். “எங்கள் பெரியதந்தையின் வருகையென இதை எண்ணுகிறோம்” என்றான் நகுலன். இருவரும் துரியோதனன் கால்களைத் தொட்டு வணங்க “வெற்றியும் புகழும் திகழ்க!” என அவன் வாழ்த்தினான். தன் பெரிய கைகளால் இருவரையும் சுற்றி அணைத்தபடி “இளைத்துவிட்டீர்கள், இளையோரே” என்றான். “இல்லை மூத்தவரே, தங்கள் விழிகளுக்கு அப்படி தெரிகிறோம். உண்மையில் பருத்துவிட்டோம்” என்றான் சகதேவன்.

“என் கைகளுக்கு போதவில்லை உங்கள் உடல்…” என்றான் துரியோதனன். இருவரும் முகமன் உரைத்தபடி துச்சாதனன் கால்களைத் தொட்டு வணங்கினர். அவன் அவர்களை அணைத்துக்கொண்டு “முதியவர்களாகிவிட்டீர்கள்… இன்னமும் நெஞ்சில் இளையோராக இருக்கிறீர்கள்” என்றான். கௌரவர் நகைத்துக்கொண்டு அவர்களை மாறிமாறி அணைத்தனர். சகதேவன் கர்ணனிடம் “இந்திரப்பிரஸ்த நகருக்கு நல்வரவு ஆகுக அங்கரே!” என்றான். “ஆம், நான் நற்பேறுகொண்டேன்” என்றான் கர்ணன்.

துரியோதனன் விழிகள் அலைந்ததை கர்ணன் கண்டான். கனகர் “பீமசேனரும் பார்த்தரும் மறுதுறையில் மன்னர்களை வரவேற்கச் சென்றுள்ளார்கள் அரசே” என்றார். துரியோதனன் “ஆம், அவர்களை வரவேற்பதே முதன்மையானது” என்றான். சிரித்தபடி ஜராசந்தனிடம் “இங்குள்ள ஷத்ரியர் தங்களை எவர் வரவேற்கிறார்கள், எவர் முதலில் வருகிறார்கள் என்பதையே கணித்துக்கொண்டிருப்பார்கள்” என்றான். ஜராசந்தன் புன்னகைசெய்தான்.

“இளையோனே, உங்களுக்கு ஒரு நற்செய்தி… இவர் மகதமன்னர் ஜராசந்தன். என் தோழர்” என்றான் துரியோதனன். நகுலன் ஏதோ சொல்வதற்குள் “அவர்கள் அறிவார்கள்” என்றான் ஜராசந்தன். சற்று நகைத்து “அவர்கள் விழிகளிலேயே தெரிந்தது” என்றான். நகுலன் “அமைச்சர் சொன்னார்கள்…” என்றான். சகதேவன் “மகதமன்னர் ஜராசந்தரை இந்திரப்பிரஸ்தநகரிக்கு வரவேற்கிறோம். தங்கள் வரவால் இந்நகர் பொலிவுகொள்கிறது” என்றான்.

ஜராசந்தன் “நான் வருவதைப் பார்த்துத்தான் பீமனும் அர்ஜுனனும் மறைந்தார்களா?” என்றான். நகுலன் கண்களில் திகைப்புடன் “இல்லை. அவர்கள்…” என தொடங்க “பொய் சொல்லவேண்டியதில்லை இளையோனே. அதில் பிழையென ஏதுமில்லை” என்றான் ஜராசந்தன். துரியோதனன் உரக்க நகைத்து “மறைந்துவிட்டானா பீமசேனன்? சரி, அவனை நாம் அரண்மனைக்குச் சென்றே பிடிப்போம். தோள்பொருதுவோம்…” என்றபின் “வருக!” என்று ஜராசந்தன் தோளைப்பற்றினான்.

சகதேவன் கண்கள் கர்ணனை வந்து தொட்டுமீண்டன. நகுலன் “இந்திரப்பிரஸ்தநகரிக்கு மூன்று அரசர்களையும் வரவேற்கிறோம்” என்றான். இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர் கைகாட்ட மீண்டும் மங்கலப்பேரிசையும் வாழ்த்தொலிகளும் பொங்கிக் கிளம்பின. கைடபர் பின்னால் திரும்பி கையசைவால் ஆணைகளை இட கலங்களிலிருந்து பிறர் இறங்கத்தொடங்கினர்.