வெய்யோன் - 55
பகுதி ஏழு: நச்சாடல் 4
கர்ணன் ஜராசந்தன் எழுந்ததை ஒருகணம் கழித்தே உள்வாங்கினான். அவன் கைநீட்டி ஏதோ சொல்ல இதழெடுப்பதற்குள் ஜராசந்தன் “நன்று, அஸ்தினபுரியின் அரசரையும் அவர் மாற்றுருக்களான தம்பியரையும் பார்க்கும் பேறு பெற்றேன். என் மைந்தரிடம் சென்று சிறிய தந்தையை பார்த்தேன், என்னைப்போன்றே ஆற்றலுடையவர் என்று சொல்வேன்” என்றான். கர்ணனிடம் “விடை கொடுங்கள் அங்கரே. இவ்வரசாடலுக்கு அப்பால் என்றேனும் உளமெழுந்து ஓர் நெஞ்சுகூர் நண்பரென என்னை எண்ணுவீர்கள் என்றால் ஒருசொல் செலுத்துங்கள். எங்கள் குலமே வந்து உங்களுக்காக தலைவணங்கி நிற்கும்” என்றான்.
துரியோதனன் அவனை அசையாத விழிகளால் நோக்கியபடி மீசைமேல் ஓடிய கைகளுடன் “தங்களைப்பற்றி சூதர்கள் பாடுகையில் மற்போரில் நிகரற்றவர் என்கிறார்கள்” என்றான். ஜராசந்தன் “ஆம், எங்கள் காட்டில் போர் என்றால் அது மட்டுமே. நான் மற்போரைக் கற்றது கொம்பு தாழ்த்தி வரும் காட்டெருமைகளிடமும் மதவேழங்களிடமும்” என்றான். துரியோதனன் தன் கையில் இருந்த கோப்பையை கீழே வைத்துவிட்டு “நாம் ஒருமுறை தோள்கோப்போம்” என்றான். “வேண்டியதில்லை. தங்கள் கண்களில் சினம் உள்ளது. களம் காண நான் இங்கு வரவில்லை. களியாடல் என்றால் மட்டுமே சித்தமாக உள்ளேன்” என்றான் ஜராசந்தன்.
மீசையை நீவியபடி “அஞ்சுகிறீர்களா?” என்றான் துரியோதனன். “அச்சமா?” என்றபின் மெல்ல நகைத்து “அப்படி எண்ணுகிறீர்களா?” என்றான். துரியோதனன் “அச்சமில்லை என்றால் வேறென்ன? இங்கு தங்கள் தோள் தாழுமென்றால் அது அஸ்தினபுரியின் சூதர்களால் இளிவரலாக பாடப்படும் என்று எண்ணுகிறீர்களா?” என்றான். “தோள்தாழ்வதில்லை. இதுவரை எங்கும் என் தோள்தாழ்ந்ததில்லை” என்றான் ஜராசந்தன்.
துரியோதனன் நகைத்து “இன்று அதற்கான நாள் என்று நினைக்கிறேன்” என்றபின் தன் சால்வையை சுருட்டி பீடத்தில் போட்டபின் “வருக மல்லரே” என்றான். ஜராசந்தன் அவன் விழிகளை தன் சிறிய கண்களைச் சுருக்கி நோக்கியபடி “அரசே, தங்கள் உள்ளத்தில் சினம் உள்ளது. இத்தருணத்தில் அதை நான் எதிர்கொள்ள விரும்பவில்லை” என்றான். சினம் முகத்திலும் உடலிலும் மெய்ப்பாவை அனலெனப்பற்றி திரும்பிய துரியோதனன் “ஆம், சினம்தான். நீர் யார்? மலைமகள் ஜரையின் மைந்தன். தந்தையின் குருதியில் எழுந்த மூன்று ஷத்ரியர்களை கழுவிலேற்றி அமர்ந்து நோக்கி மகிழ்ந்த அரக்கன்” என்றான்.
அச்சொற்களைக்கொண்டே அவன் மேலும் சினத்தை தூண்டிக்கொண்டான். “என்ன சொன்னாய்? யாதவரை உன் குருதிப்பகைவர்கள் என்றா? இழிமகனே, ஆம், நான் யாதவ குருதியுடன் உறவு கொண்டவன். எந்தையின் இளையவர் பாண்டு. அவர் மைந்தரே யாதவ பாண்டவர்கள். உடன் பிறந்தவருக்கென வாளேந்தவே இங்கு வந்தேன். என் முன் வந்து அவர்களுக்கெதிராக ஒருசொல் உரைத்த நீ என்முன் தோள் தாழ்த்தாமல் இங்கிருந்து செல்லலாகாது” என்று கூவினான். கௌரவர் திகைத்துப்போய் கர்ணனை நோக்கினர். கர்ணனால் துரியோதனனின் கண்களை நோக்கமுடியவில்லை.
ஜராசந்தன் “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக!” என்றபின் திரும்பி கர்ணனிடம் “வருந்துகிறேன் அங்கரே” என்றான். கர்ணன் துரியோதனனிடம் “இப்போது போர் வேண்டியதில்லை அரசே. இது படகு. நாம் இந்திரப்பிரஸ்தத்திற்குள் ஒரு களியரங்கை அமைப்போம். அங்கு கைகோத்துப் பாருங்கள்” என்றான். “இது களியரங்கல்ல மூத்தவரே” என்று துரியோதனன் சொன்னான். “இத்தருணத்தில் என் சினத்தைக் காட்டாமல் இவனை இங்கிருந்து அனுப்பப் போவதில்லை. வருக!” என்று திரும்பி பாதங்கள் முரசொலிக்க படிகளில் ஏறி வெளியே சென்றான்.
புன்னகையுடன் கர்ணனின் தோளில் கைவைத்தபின் ஜராசந்தன் மேலே சென்றான். துச்சாதனன் கர்ணனிடம் “மூத்தவரே, என்ன இது?” என்றான். கர்ணன் “அறியேன். இது எவ்வண்ணம் ஏன் நிகழ்கிறது என்று என் உள்ளம் வியக்கிறது. நாமறியாத தெய்வங்கள் களம்கொள்கின்றன. ஆவது அமைக!” என்றான். “போரில் மூத்தவர் வெல்வாரென உறுதிசொல்லமுடியாது. இருவரும் முற்றிலும் நிகரானவர்” என்றான் துச்சாதனன். “ஆம், அதுவே என் அச்சம்” என்றான் சுபாகு. கர்ணன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடந்தான்.
படியேறி அவர்கள் மேலே வரும்போது படகின் அகல்முற்றத்தில் தன் இடையில் இருந்த கச்சையை இறுக்கி தோலாடையை இழுத்துக்கட்டி துரியோதனன் தோள்பெருக்கி நின்றிருந்தான். மேலாடையை எடுத்து பெருவடத்தில் சுற்றிவிட்டு கழுத்தில் இருந்த மணியாரத்தை அருகே நின்ற குகனிடம் அளித்தபின் ஜராசந்தன் தன் ஆடையைச் சுற்றி அதன்மீது கச்சையை இறுக்கினான். இருவர் உடல்களையும் கௌரவர் மாறி மாறி நோக்கினர்.
“களநெறிகள் என்ன?” என்று ஜராசந்தன் கர்ணனிடம் கேட்டான். கர்ணன் வாயெடுப்பதற்குள் துரியோதனன் “நெறிகள் ஷத்ரியர்களின் போர் முறைகளில் மட்டுமே உள்ளவை. அசுரர்களுக்கு போர்நெறிகள் இல்லையல்லவா?” என்றவன் உதடுகளை சுழித்து “விலங்குகளைப்போல!” என்றான். ஜராசந்தன் கண்களில் மென்சிரிப்புடன் “ஆம், விலங்குகளைப்போல. விலங்குநெறி ஒன்றே. கைகோத்துவிட்டால் இருவரில் ஒருவரே உயிருடன் எஞ்சவேண்டும்” என்றான். “ஆம், அவ்வாறே ஆகட்டும்” என்றான் துரியோதனன்.
துச்சாதனன் “என்ன இது மூத்தவரே?” என கர்ணனின் தோளை பற்றினான். கர்ணன் அக்கையை விலக்கினான். சுபாகு “இறப்புவரை போர் என்றால்…” என்றான். “எவர் இறந்தாலும் அனைத்தும் நிலைகுலைந்துவிடும்” என்றான் துச்சாதனன். கிளர்ச்சியுடன் பேசியபடி குகர்கள் அனைத்துப் பணிகளையும் விட்டுவிட்டு முற்றத்தில் கூடி மானுடவளையமொன்றை அமைத்தனர். அதன் முன் அரைமண்டியில் கால் வைத்து இருபேருடலர்களும் ஒருவரையொருவர் விழிசூழ்ந்து கைகளை விரித்து நின்றனர்.
“முற்றிலும் நிகர் நிலையில் உள்ள இருமல்லர்கள் தோள்கோக்கையில் விண்ணின் தெய்வங்கள் எழுகின்றன. அவை நமக்கு அருள்க!” என்றான் சூதன் ஒருவன். “கிழக்கே இந்திரனும் சூரியனும் வந்து நிற்கின்றனர்! மேற்கே வருணனும் நிருதியும் எழுகின்றனர். தெற்கே யமனும் அக்னியும், வடக்கே குபேரனும் வாயுவும் தோன்றுகின்றனர். வாசுகியும் ஆதிசேடனும் வானில் சுழிக்கின்றனர். திசையானைகள் தங்கள் செவியசைவை நிறுத்தி ஒலிகூர்கின்றன. இங்கு மானுடரில் கைகளாகவும் குருதியாகவும் பகையாகவும் வாழும் அனைத்து தேவர்களும் எழுந்து அவிகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!”
நான்கு பெருங்கைகளும் சினந்தயானைகளின் துதிக்கைகளென நெளிந்தன. நான்கு இறுகிய கால்களும் நாணேற்றிய விற்களென மரப்பலகை மேல் ஓசையின்றி ஒற்றி நடந்தன. விழிகளால் ஒருவரை ஒருவர் தொடுத்துக்கொண்டு அச்சரடில் சுற்றிவந்தனர். முடிவிலாது சுற்றும் பெருநதிச்சுழல் என அது நிகழ்ந்துகொண்டிருந்தது. சூழ்ந்திருந்தவர்களும் அதில் சுற்றிவந்தனர். வியர்வையின் மணம் காற்றிலெழுந்தது.
ஒவ்வொன்றும் விளைந்து கனிந்து முழுத்த ஒரு கணத்தில் பேரோசையுடன் இரு தசைமலைகளும் ஒன்றையொன்று முட்டி அதிர்ந்தன. அறையோசையில் சூழ்ந்திருந்த உடல்கள் விதிர்ப்பு கொண்டன. கைகள் பின்ன, கால்கள் ஒன்றையொன்று தடுக்க, தோள்தசைகள் இழுபட்ட நாண்களெனப் புடைத்து எழ கழுத்து நரம்புகள் தொல்மரத்து வேர்களென நீலமுடிச்சுகளுடன் புடைக்க மூச்சுக்கள் நீர்பட்ட கனலெனச் சீற அவை ஒன்றாயின. ஒருவரையொருவர் தடுத்து வானெடை அனைத்தையும் தசைகளில் வாங்கியவர்கள்போல் தெறித்து விரலிடைகூட முன்னும் பின்னும் நகராத இருவர் தங்கள் முன்வைத்த கால் ஊன்றிய அச்சுப்புள்ளி ஒன்றில் மெல்ல சுற்றி வந்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த திசைகளும் அவ்விசையால் மெல்ல சுழற்றப்பட்டன.
கௌரவர் ஒவ்வொருவரின் உடற்தசைகளும் இறுகி புடைத்து அதிர்ந்து கொண்டிருப்பதை கர்ணன் கண்டான். அவனருகே நின்றிருந்த துச்சாதனனின் கைகள் குவிந்து இறுகி நரம்புகள் நீலம் கொண்டிருந்தன. அரவைக்கல்லில் உலோகம் விழுந்ததுபோல பற்கள் கடிபட்டு உரசும் ஒலி கேட்டது. பின்பொரு கணத்தில் வெடித்துச் சிதறியவர்போல் இருவரும் இரு திசையிலாக சென்று விழுந்து அக்கணமே சுழன்று மரப்பலகை வெடிப்பொலி எழுப்ப கையூன்றி எழுந்து மீண்டும் பாய்ந்து ஒருவரை ஒருவர் ஓங்கி அறைந்து தழுவிக்கொண்டனர். மீண்டும் இறுகி மேலும் இறுகி அசைவற்ற ஒன்றில் சிக்கி நின்றனர்.
துரியோதனன் ஜராசந்தனின் கால்களுக்கு நடுவே தன் காலை சற்றே நகர்த்தி அவ்விசையில் அவனை தலைக்குமேல் தூக்கி நிலத்தில் அறைந்தான். பேரோசையுடன் அவன் விழ கலமே சற்று அசைந்து அங்கிருந்த ஒவ்வொருவரும் உடல் உலைந்தனர். ஜராசந்தன் தன் கால்களை நீட்டி துரியோதனனின் காலை அறைய அவன் நிலையழிந்து ஜராசந்தன் மேலேயே விழுந்தான். இருகைகளாலும் துரியோதனனின் தோள்களை பற்றிக்கொண்டு அதே விரைவில் புரண்டு அவனை கீழே அழுத்தி மேலேறி ஓங்கி தன் கையால் அவன் தலையை அறைந்தான் ஜராசந்தன். வலியில் முனகியபடி பற்களைக் கடித்து தலைதிருப்பிய துரியோதனன் அடுத்த அடிக்கு அவன் கணுக்கையை பற்றிக்கொண்டு தலையை அடியில் கொடுத்து சுருண்டு மேலெழுந்தான்.
கீழே விழுந்த ஜராசந்தன் காலைத் தூக்கி அவன் தொடையை ஓங்கி உதைத்தான். கணுக்கை பிடியிலிருந்து விடுபடாமலேயே மறுபக்கம் மறிந்து உடல் தரையை அறைய விழுந்தான் துரியோதனன். தன் வலக்காலை சுழற்றி ஊன்றி எழுந்து பாய்ந்து துரியோதனன் மேல் விழுந்து அவன் தோள்களைப்பற்றி கைகளை முறுக்கி மேலெடுத்தான் ஜராசந்தன். துரியோதனன் வலக்காலை இடக்காலின் அடியில் கொண்டுவந்து இடைசுழற்றி இறுகி ஒரு கணத்தில் துள்ளி ஜராசந்தனை கீழே வீழ்த்தி அவன் மேல் ஏறி அவன் தலையை ஓங்கி அறைந்தான். வலி முனகலுடன் பற்களைக் கடித்து தலையை ஓங்கி துரியோதனனின் மார்பில் அறைந்தான் ஜராசந்தன்.
இருவரும் எழுந்து இரு நிலைகளிலாக மூச்சு வாங்கியபடி உடல் விசையில் நடுங்க நின்றனர். இருதிசைகளிலாக கால்வைத்து நடுவே இருந்த எடைமிக்க வெற்றிடம் ஒன்றை சுற்றி வந்தார்கள். பின்பு மத்தகம் உருண்டு வந்து முட்டும் பாறைகள்போல் இருபுறமும் வந்து மோதி கைசுற்றிப் பற்றினர். தசைகள் ஒன்றையொன்று அறிந்தன. துலாக்கோல் முள் இருபுறமும் நிகர் பேரெடைகளாக அழுத்தப்பட்டு அசைவிழந்தது. மீண்டும் முடிவிலா இறுக்கம். விழிகள் திகைத்துச்சூழ காலமின்மை.
கர்ணன் கைகளைத் தூக்கி “இப்போர் இக்களத்தில் அடுத்த பறவைக்குரல் எழுவதுவரை மட்டுமே இங்கு நிகழும்” என்று உரக்க அறிவித்தான். “அதனூடாக இருவரும் நிகரே என்று தெய்வங்கள் வந்து அறிவித்தால் போரை நிறுத்துவேன், அறிக!” என்றபடி இருவருக்கும் அருகே வந்து நின்றான். துச்சாதனன் அவன் பின்னால் வந்து “வேண்டாம், உடனே போரை நிறுத்துங்கள்” என்றான். சுபாகு “மூத்தவரே, தாங்கள் மட்டுமே இப்போரை நிறுத்தமுடியும்” என்றான். “ஆம், நிறுத்துங்கள் மூத்தவரே. அவர்கள் இருவரும் வெல்லப்போவதில்லை. இருவரும் தோற்கலும் ஆகும்” என்றான் பீமபலன்.
எவரையும் கேளாத பிறிதொரு உலகில் அவர்கள் நின்று உருகி உறைந்து உருகிக் கொண்டிருந்தனர். தலைதூக்கி ஜராசந்தனின் நெற்றியை ஓங்கி மோதினான் துரியோதனன். திருப்பி அதே விசையில் அவனும் மோதினான். இரு தலைகளும் உள்ளே சுழன்ற மின்னற்குமிழிகளினூடாக ஒன்றையொன்று அறிந்தன. அந்த வலி சூழ்ந்திருந்த ஒவ்வொருவரின் முதுகுத் தண்டையும் கூச வைத்தது. அள்ளிப்பற்றியிருந்த கைகள் தசைகளில் ஆழ்ந்தன. குருதி ஊறி வியர்வையுடன் கலந்து வழிந்தது.
“பறவைகளுக்காக காத்திருக்க வேண்டாம் மூத்தவரே” என்றான் சுபாகு. “தெய்வங்கள் இருவரின் குருதியையும் விரும்பும் மூத்தவரே” என்றான் சலன். அவர்களை கையசைவால் தடுத்தபின் கர்ணன் அசைவற்று நோக்கி நின்றான். ஒரு கணத்தில் தசை உரசும் ஒலியுடன் இருவரும் விடுபட்டு இருதிசைகளிலாக பாய்ந்து விழுந்தனர். அக்கணமே புரண்டெழுந்து ஓங்கியறைந்தபடி மீண்டும் சந்தித்தனர். சரிந்து விழுந்து ஒருவரையொருவர் பற்றியபடி புரண்டனர். நான்கு கைகளும் நான்கு கால்களும் ஒன்றையொன்று சுழன்று பற்றி உருகி மீண்டும் பற்றி தவித்தன.
ஜராசந்தனின் கால்களுக்கு நடுவே தன் காலை கொண்டுசென்று அவனைத்தூக்கி நிலத்தில் அறைந்து அவனுடனேயே விழுந்து புரண்ட துரியோதனனின் விலாவில் கைவைத்து எழுந்து அவன் தோளை அறைந்து தூக்கி சுழற்றி அடித்தான் ஜராசந்தன். ஜராசந்தனின் மார்பை தன் தலையால் முட்டி அகற்றி மேலே பாய்ந்து கைகளாலும் கால்களாலும் பாறையை ஆலமரத்து வேர்கள் என பற்றிக்கொண்டான் துரியோதனன். துரியோதனனின் தோள்தசையை ஆழக்கடித்து பிறிதொரு கையால் அவன் தசைகளுக்குள் நகம்புகும்படி பற்றி அவனைத்தூக்கி சுழற்றி அடித்தான் ஜராசந்தன்.
மீண்டும் இருவரும் ஒருவரையொருவர் கவ்வியபடி தரையில் புரண்டனர். ஜராசந்தன் காலூன்றி எழுந்து துரியோதனனை சுழற்றி அடிக்க கால்களை ஊன்றி அதே விரைவில் அவன் தோள்களை பற்றிக்கொண்டு நிகர்நிலை கொண்டான் துரியோதனன். மீண்டும் இருவரும் ஒருவரையொருவர் உடல் கவ்வியபடி முட்டிநின்று சிலைத்தனர்.
இரு உடல்கள் மட்டும் அங்கிருந்தன. பிணைந்து ஒன்றாகி ஒற்றை தசைத்திரளாயின. ஒவ்வொரு தசையும் தன்னை இருப்பின் உச்சத்தில் உணர்ந்தது. நான் நான் என விதிர்த்தது. ஒவ்வொரு மயிர்க்காலும் உயிர்நிறைந்து நின்றது. குருதி அழுத்தி பிதுங்கிய விழிகள் நோக்கிழந்து சிலைத்தன. மூச்சு இருசீறல்களாக ஒலிக்க, கால்கள் தரையை உந்திப் பதிந்து நிலைக்க, அக்கணம் மறுகணம் அதுவே காலம் என்று நின்றது. இறைஞ்சும் குரலில் “போதும் மூத்தவரே! போதும்” என்றான் துச்சாதனன். “மூத்தவரே, போதும். தங்களால் மட்டுமே அவரை நிறுத்த முடியும்” என்றான் சுபாகு.
கர்ணன் இரு கைகளையும் இடையில் வைத்து பாதி மூடிய கண்களுடன் காத்து நின்றான். படகின் மறுமுனையில் பாய்த்தொகுதிக்கு அப்பால் இருந்து பறந்தெழுந்த வெண்பறவை ஒன்று ‘வாக்!’ என்று கத்தியபடி அவர்களின் தலைக்குமேல் பறந்து சென்றது. கர்ணன் ஒற்றை கால்வைப்பில் அவர்களை அணுகி இருவரின் தோள்களையும் பற்றித்தூக்கி இரு திசைகளிலாக வீசினான். இருவரும் விழுந்த விசையிலேயே வெறிகொண்ட காட்டு விலங்குகளென கனைப்போசை எழுப்பி பாய்ந்து மீண்டும் தாக்க வர தன் நீண்ட பெருங்கரங்களால் துரியோதனனை அறைந்து சுழற்றித்தூக்கி மீண்டும் வீசிவிட்டு ஜராசந்தனின் இரு கைகளையும் பற்றி பின்சுழற்றி தரையிலிட்டான்.
அவர்கள் மீண்டும் எழும் அசைவை ஓரவிழிகளால் நோக்கி இருகைகளையும் விரித்து போதும் என்றான். தரையில் புரண்டெழுந்த ஜராசந்தன் குருதிக்கனல் கொண்ட விழிகளுடன் நீர்த்திரையெனத் தெரிந்த கர்ணனின் உடலைநோக்கி நீள்மூச்சுவிட்டு தளர்ந்தான். துரியோதனன் கால்மடக்கி எழுந்து தள்ளாடியபடி ஓரடி முன்னால் வந்தான். “போதும்! போர் முடிந்தது!” என்று கர்ணன் சொன்னான்.
துரியோதனன் தளர்ந்து தோள்கள் தொய்வடைய தள்ளாடியபடி சற்று பின்னால் நகர துச்சாதனன் ஓடிச்சென்று அவன் தோள்களை பற்றிக்கொண்டான். சுபாகு “தண்ணீர்!” என்று கூவ ஒரு குகன் நீர்க்குடத்துடன் ஓடி வந்தான். துரியோதனன் நீர்வேண்டாம் என்று தலையசைக்க “அருந்துங்கள் மூத்தவரே” என்றான் துச்சலன். இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி எழுந்து நிலையற்று உடல் அலைபாய நின்ற ஜராசந்தனை நோக்கி சென்ற துச்சகன் “மூத்தவரே” என்றான். ஜராசந்தன் “நீர்! பருகுநீர்!” என்றான். துச்சகன் தோளில் கைவைத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்ட அவன் மூச்சை இழுத்து இழுத்துவிட்டு நிலைமீண்டான்.
துச்சலன் ஜராசந்தனை தோள் தாங்கி அழைத்துச்சென்று கவிழ்த்துப் போடப்பட்டிருந்த மரத்தொட்டி ஒன்றின் மேல் அமர்த்தினான். சலன் கொண்டு வந்த நீரை வாங்கி அருந்தி மிச்சத்தை தலைவழியே விட்டுக்கொண்டான் ஜராசந்தன். முகத்தில் வழிந்த வியர்வையை மூச்சால் சிதறடித்து சிலிர்த்து முகத்தை வழித்து மூச்சிரைத்து நெஞ்சை எளிதாக்கிய துரியோதனன் துச்சாதனனை நோக்கி “என்ன?” என்றான். துச்சாதனன் உதடுகளை அசைத்து “நிகர்நிலை மூத்தவரே” என்றான்.
கர்ணனின் தசைகள் தளர்ந்தன. கைகளைத்தாழ்த்தி நடுவே நின்று சுற்றிலும் நோக்கினான். உரத்த குரலில் “தெய்வங்களின் ஆணை இது! நீங்கள் இருவரும் முற்றிலும் நிகர்நிலையுடையவர்கள், இருவரும் இக்களத்தில் வென்றுளீர்” என்றான். கூடி நின்றிருந்த காவலர்களும் குகர்களும் ஒற்றைப் பெருங்குரலில் “நிகர்மாவீரர் வாழ்க! தெய்வங்களுக்கு இனியவர் வாழ்க! ஜராசந்தர் வாழ்க! அஸ்தினபுரியின் அரசர் வாழ்க! துரியோதனர் வாழ்க!” என்று குரலெழுப்பி துள்ளிக் குதித்தனர். இடைக்கச்சைகளை அள்ளித் தூக்கி காற்றில் சுழற்றியும் தலைப்பாகைகளை எறிந்து பிடித்தும் கைகளை விரித்து துள்ளி நடனமிட்டும் ஆர்ப்பரித்தனர்.
தன்னைச் சூழ்ந்து அசைந்த பற்களையும் ஒளிக்கண்களையும் கண்டு கர்ணன் மெல்ல புன்னகைத்தபடி வந்து துரியோதனனின் கைகளைப்பற்றி “தங்கள் தோள் தோழரை வாழ்த்துங்கள் அரசே” என்றான். “ஆம்” என்றபடி துரியோதனன் எழுந்து நின்றான். வலி தெறித்த தோள்களை மெல்ல நிமிர்த்தியபடி ஜராசந்தனை நோக்கி நடந்து சென்றான். கையில் இருந்த கலத்தை கீழே வைத்துவிட்டு ஜராசந்தன் முகம்சுளித்து பற்களைக்கடித்து வலியுடன் எழுந்தான். கழுத்துத்தசைகள் இழுபட புன்னகையுடன் அவன் கைவிரிக்க துரியோதனன் பாய்ந்து சென்று அவனை அணைத்து தோளுடன் இறுக்கிக்கொண்டான். ஜராசந்தனும் அவனை அள்ளிவளைத்தான். இருவரும் மூச்சொலி சீற கண்களை மூடினர்.
“பிறிதொருமுறை நாம் எக்களத்தில் சந்திப்போம் என்றாலும் நான் உயிர் கொடுப்பேனேயன்றி உங்களை வெல்வதில்லையென்று வாக்களிக்கிறேன் துரியோதனரே” என்றான் ஜராசந்தன். திகைத்து தலைதூக்கிய துரியோதனன் “என்ன சொல்கிறீர்? உயிர் கொடுப்பதா?” என்றபடி மீண்டும் அவனை தழுவிக்கொண்டு “எக்கணத்திலும் உங்களுக்கு எதிரியென்று களம் நிற்கமாட்டேன் மகதரே. உங்களுக்கென என் உயிரும் என் தம்பியர் உயிரும் இன்று அளிக்கப்படுகிறது” என்றான்.
இருவர் கண்களும் நீர்பெருகி வழிந்தன. கர்ணன் அருகே வந்து இருவர் தோள்களிலும் தன் கைகளை வைத்து நெஞ்சோடணைத்தபின் “இதை நான் எதிர்பார்த்தேன். தசைகளினூடாக நீங்கள் ஒருவரை ஒருவர் அறிவதுபோல் வேறெவ்வழியிலும் அறிய முடியாது” என்றான். “ஆம், உண்மை. நான் இந்த மற்போரில் தழுவியதுபோல எப்போதும் எவரையும் தழுவியதில்லை” என்றான் ஜராசந்தன். “ஏதோ ஒரு கணத்தில் ஒரு பெரும் கருப்பை ஒன்றுக்குள் இரட்டையராக நாங்கள் உடல் பின்னி குருதிக்குள் சுழன்று கொண்டிருப்பதை உணர்ந்தேன்.”
துரியோதனன் “அஸ்தினபுரிக்கு வாருங்கள் மகதரே. என் தந்தையை பாருங்கள். தங்களுடன் தோள்தழுவுவதுபோல் அவர் மகிழ்ந்து கொண்டாடும் பிறிதொன்று இருக்கப்போவதில்லை” என்றான். “ஆம், நான் என்றும் விழைவது அஸ்தினபுரியின் மதகளிற்றின் கால்களை என் சென்னி சூடவேண்டுமென்றுதான்” என்றான் ஜராசந்தன். “இளமையில் அவரது ஓவியத்திரைச்சீலை ஒன்றன் முன் நாளெல்லாம் அமர்ந்திருப்பேன்.”
கர்ணன் திரும்பி கைகாட்ட கௌரவர்கள் ஓடிவந்து அவர்களை சூழ்ந்தனர். ஜராசந்தனின் கைகளைப்பற்றி தங்கள் தோள்களில் அமைத்துக்கொண்டனர். முகங்களுடன் சேர்த்தனர். அவன் தோளையும் மார்பையும் தம் உடல்தொட்டு நின்றனர். அனைவரும் ஒன்றுடன் ஒன்று கைகள் பின்னி உடல் நெருக்கி ஒற்றை உடல் என்றாயினர். “உடல்வழியாகவே அறிபவர்கள் நாம்” என்றான் துச்சாதனன். “உணவு வழியாகவும் அறியலாமே” என்றான் துச்சகன்.
“ஆம், இனி மது அருந்தலாம். இன்று முழுவதும் களிமயக்கில் இருக்கும் உரிமையை தெய்வங்கள் நமக்கு அளித்துவிட்டன” என்றான் துச்சாதனன். ஜராசந்தன் “இன்று மறுபடியும் பிறந்தவனானேன்” என்றபின் கர்ணனின் கைகளைக் குத்தி “ஒரு தோழரை அடைந்தவன் ஒருநூறு தோழரை அடைவான் என்று சூதர்சொல் ஒன்றுள்ளது. அது மெய்யாயிற்று” என்றான்.
அவர்கள் வெற்றுமகிழ்வென ஒலித்த நகைப்புடனும் இனிய பொருளின்மை கொண்ட சொற்களுடனும் மீளமீள ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர். ஜராசந்தன் கர்ணனின் கைகளைப்பற்றி “ஆனால் இன்றொரு மாயை எனக்கு கலைந்தது. மற்போர் என்பது எடையாலும் தோள் முழுப்பாலும் நிகழ்வதென்று எண்ணியிருந்தேன். எங்கள் இருவரையுமே இருகைகளால் தூக்கி வீசும் ஆற்றல் தங்களுக்கு இருக்கிறதென்று கண்டேன். என் வாழ்வின் பேரறிதல்களில் ஒன்று” என்றான். துரியோதனன் “ஆம் மூத்தவரே, நிகரற்ற வில்லவர் நீங்கள் என்று அறிந்திருந்தேன். பெரும் மற்போர்திறன் கொண்டவர் என்று இன்று அறிந்தேன்” என்றான். கர்ணன் “நான் பரசுராமரிடம் மட்டுமே மற்போரில் தோற்க முடியும். ஏனெனில் அது அவர் எனக்கு அருளியது” என்றபின் அவர்களின் தலையை வருடி “வருக!” என்றான்.
“போதும், இனி சொற்களில்லை. இனி உண்டாட்டு மட்டுமே” என்றான் பீமபலன். “மதுவாட்டு! மதுவாட்டு!” என்று துர்மதன் கூவினான். சுபாகு “யாரங்கே? ஏவலர்கள் அனைவரும் வருக! இங்கு எழப்போவது நூற்றியிரண்டு கதிர்கள் எழும் எரிகுளம். வேள்விக்கு அவியூட்டுங்கள். ஒருகணமும் தழல் தாழலாகாது” என்றான். உரக்க நகைத்தபடி அவர்கள் உள்கூடத்தை நோக்கி சென்றனர்.