வெய்யோன் - 52
பகுதி ஏழு :நச்சாடல் 1
மகதத்தின் பெரும்படகு கரிய அலைகளுக்கு அப்பால் நீர்வழிந்த தடங்களை அணிந்துநிற்கும் செங்குத்தான பாறைபோல் தெரிந்தது. கர்ணனின் படகு அணுகிச்சென்றபோது அது குகைக்கூரை போல சரிந்து மேலேறியது. நீரில் நின்ற தடங்கள் வரிகளெனப் படிந்த அதன் பேருடலுக்குள் இருந்து தேரட்டையின் கால்களென துடுப்புகள் நீண்டு நீரில் நடந்தன. அவன் படகு பெரும்படகின் அலைகளால் விலக்கித்தள்ளப்பட்டது. அவன் மேலே நோக்கி கைகாட்ட அங்கிருந்தவர்கள் கயிற்றை இழுத்து அவனை அருகே கொண்டுசென்றனர்.
ஆலமரத்தின் வேரென தொங்கி ஆடிய படகின் பரப்பில் தொற்றி மேலேறினான். மேலே நின்ற குகர்கள் “மேலே! ஆம் மேலே!” என ஓசையிட்டபடி அவனைத் தூக்கி மேலேற்றினர். கலவிளிம்பைப் பற்றி கால்தூக்கி வைத்து மறுபக்கம் குதித்து பலகைப் பரப்பில் அவன் நின்றான். அவன் உயரம் குகர்களை மலைக்க வைத்தது. ஒருவன் தலைவணங்கி “என் பெயர் சரபன். இக்கலத்தின் அமரக்காரன். தாங்கள் யாரென்று நான் அறியலாமா?” என்றான்.
“தங்களை சந்தித்தமை மகிழ்வளிக்கிறது சரபரே. என் பெயர் வசுஷேணன். அங்கநாட்டுக்கு அரசன்” என்றான் கர்ணன். அவன் முகம்மலர்ந்து தலைவணங்கி “ஆம், நான் எண்ணினேன். பாரதவர்ஷத்திலேயே உயரமானவர் நீங்கள் என்று சூதர் சொல்லும்போது என் நெஞ்சில் ஒர் ஓவியம் இருந்தது. அது மேலும் ஒளி கொண்டதாகிறது” என்றான். பரபரப்புடன் “வருக அரசே! தங்கள் வருகையால் இந்நாள் விழவுகொள்கிறது” என்றான். “தங்களை அறிவிக்கிறேன்” என்றபடி திரும்பி ஓடினான்.
கலமுகப்பிலிருந்த அத்தனைபேரும் கர்ணனை அணுகி பற்களும் விழிகளும் ஒளிவிட்ட முகங்களை ஏந்தி நோக்கினர். கர்ணன் அருகே நின்ற ஒருவன் தோளில் கைவைத்து “தங்கள் பெயரென்ன?” என்றான். “கலன்” என்று அவன் சொன்னான். “நான் ஜலஜ குடியை சேர்ந்தவன். அரசே, இரண்டு தலைமுறைகளுக்கு முன் எங்கள் குடியில்தான் நிருதர் பிறந்தார். காசி நாட்டரசி அம்பையை படகில் அஸ்தினபுரிக்கு கொண்டு சென்றவர் அவர். அஸ்தினபுரியின் படகுத்துறை வாயிலில் கொற்றவை வடிவில் அமர்ந்திருக்கும் அன்னை அருகே காவல் தெய்வம் என அவர் அமர்ந்திருக்கிறார்.”
இன்னொருவன் சற்று முன்வந்து “எங்கள் குடியைச் சேர்ந்த பிருகி என்னும் மூதன்னையைத்தான் நிருதர் மணந்திருந்தார். பிருகியன்னை தன் குடிலில் பதினெட்டு நாட்கள் வடக்கு நோக்கி இருந்து உயிர் துறந்தார். எங்கள் குடி அவரை தெய்வமென இன்று வழிபடுகிறது” என்றான். பிறிதொருவன் “அரசே, என் பெயர் சாம்பன். குகர்களின் பன்னிரண்டு குலங்களுக்கும் நிருதர் தெய்வமென்றே கருதப்படுகிறார். எங்கள் தெய்வத்தாதையர் நிரைகளில் அவருக்கும் இடமுண்டு. பலியும் கொடையும் அளித்து நாங்கள் அனைவரும் வணங்குகிறோம்” என்றான்.
கர்ணன் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு “நன்று” என்றான். முதியகுகர் ஒருவர் முந்தி முன்னால்வந்து “அனலை என நாங்கள் அன்னையை வணங்குகிறோம். பெண்ணொருத்தி பெருந்தழலென எரியமுடியும் என்று அன்னை மண்ணுக்குக் காட்டினாள். அத்தழலை கையில் அகல்விளக்கென ஏந்திச் சென்றவர் நிருதர்” என்றார். இளைய குகன் “நாங்கள் அவளைப்பற்றித்தான் இப்போது பேசிக்கொண்டிருந்தோம். அதோ பேருருக்கொண்டு எழுந்துள்ளது நகரமன்று, காட்டுத்தழல். அனலையன்னையெனும் பொறியிலிருந்து பெருகியது அது” என்றான்.
“ஆம்” என்றான் கர்ணன். “அப்போதுதான் தங்களை பார்த்தோம். இங்கிருந்து பார்த்தபோது விண்ணில் எழுந்த எரியம்புகளின் ஒளியில் உங்கள் படகின் நிழல் ஒரு பெரும் நாகமென நெளிவதை கண்டோம்” என்றான் கலன். “நாகம் எழுந்து படமெடுத்து உங்களைக் காப்பது போல் தெரிந்தது” என்றான் சாம்பன். ஒருவன் “ஆம், நானும் பார்த்தேன். நான்தான் சொன்னேன் வருபவர் எளிய மனிதர் அல்ல தெய்வங்களால் கைதூக்கி வாழ்த்தப்படுபவர் என்று” என்றான். “உங்களை சந்தித்ததில் உவகைகொள்கிறேன்” என்றான் கர்ணன். “எங்கள் நன்னாள் இது அரசே” என்றான் கலன்.
உள்ளிருந்து மகதத்தின் அமைச்சர் பொன்னூல் பின்னலிட்ட தலைப்பாகையும் வெண்ணிற மேலாடையும் அணிந்து காதுகளில் நீலக்குண்டலங்கள் அசைந்து ஒளிவிட கைகூப்பியபடி நீரென ஒலித்த ஆடையோசையுடன் விரைந்து வந்தார். “வருக! வருக! அங்கநாட்டரசே, என் பெயர் சுதேவன். காசியப குடியினன். அங்கநாட்டு அரசரை வாழ்த்தி வணங்கும் பேறு பெற்ற நாள் இது” என்றார். கர்ணன் வணங்கி “நெறியறிந்த அந்தணரை முதற்புலரியில் காண்பதென்பது எனது நல்லூழ்” என்றான்.
அவர் முறைமைப்படி தலைவணங்கி “வருக அரசே! தாங்கள் இதுவரை மகதத்தின் எல்லைக்குள் வந்ததில்லை. முறைமைப்படி இக்கலம் மகதத்தின் நிலமே. அரசர் நகர் நுழைவதற்குரிய அனைத்து முறைமைகளும் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார். கர்ணன் “இல்லை, நான் இன்று உடனே இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்தாக வேண்டும். அஸ்தினபுரியின் அரசருடன் படைத்துணையாக வந்தேன். இங்கு நான் அறிந்த ஒருவரை பார்ப்பதற்காக தனிப்படகில் சென்றேன்” என்றான்.
சுதேவர் “எங்கள் அரசர் இப்படகில் இருக்கிறார்” என்றார். கர்ணன் சற்று திகைத்து “யார்?” என்றான். “மகதத்தின் பேரரசர் ஜராசந்தர்.” “இந்தப்படகிலா?” என்றான் கர்ணன் மேலும் திகைப்புடன். சுதேவர் நகைத்து “ஆம். அது அவரது இயல்பு. அரசப் பெருங்கலத்தில் விண்ணவர்க்கு அரசர் போல அணித்தோற்றத்தில் எழுந்தருளுவதும் அவருக்கு உகந்ததே. எளிய மலைமக்களுடன் அவர்களில் ஒருவராக அமர்ந்து உண்டாடுவதும் அவர் விரும்புவதே. இன்று இதை தேர்வு செய்துள்ளார்” என்றார்.
கர்ணன் “அவரை சந்தித்து வணங்கும் நல்வாய்ப்புக்கு விழைகிறேன்” என்றான். “ஆம், கீழ்த்தளத்தில் அமர்ந்திருக்கிறார். தங்கள் வருகையை அறிவிக்கிறேன்” என்றார். கர்ணன் கைகூப்பினான். “வருக அரசே!” என்று அமைச்சருடன் வந்த காவலர்தலைவன் அவனை அழைத்துச்சென்றான். அமைச்சர் காலடி ஓசைகள் ஒலிக்க உள்ளே இறங்கி கீழ்த்தளத்திற்குள் சென்றார். “முதல்தளத்தில் துடுப்புந்திகள்தானே இருப்பார்கள்?” என்றான் கர்ணன். “ஆம், அரசர் நேற்றிரவு முழுக்க அவர்களுடன்தான் உண்டாட்டில் இருந்தார். இரவு நெடுநேரம் அவரும் துடுப்பு வலித்தார். அங்கே கள்ளும் ஊனுணவும் சென்றுகொண்டே இருந்தன” என்றான் காவலர்தலைவன்.
கீழே பலகைகள் மிதிபடும் உரத்த ஒலி கேட்டது. கதவு பேரோசையுடன் வெடித்துத் திறக்க இருபெருங்கைகளையும் விரித்தபடி உரத்த நகைப்பொலியுடன் வந்த ஜராசந்தன் “வருக அங்கநாட்டரசே! தங்களை மீண்டும் நெஞ்சுதழுவும் நல்லூழ் கொண்டேன்” என்றபடி வந்து கர்ணனை இறுகத் தழுவிக்கொண்டான். ஆலமரக்கிளைகள் என பேருடலில் எழுந்த கைகளால் அவனை தோள்வளைத்தபடி “காம்பில்யத்தின் அவையில் நான் அணைத்த பெருந்தோள்கள் என்றும் என் கைகளைவிட்டு மறைந்ததில்லை அங்கரே” என்றான்.
“அன்று அவையில் தாங்கள் சொன்ன உளச்சொற்களால் வீழாதிருந்தேன். மகதரே, இன்றும் நான் கால்மடியும் தருணத்தில் தங்கள் பெருங்கைகளால் என்னை அள்ளி எடுத்திருக்கிறீர்கள்” என்றான் கர்ணன். “வரும்பிறவிகளிலெல்லாம் நான் இதற்கு கடன்பட்டிருக்கிறேன்” என்றபோது அவன் சொற்கள் இடறின. ஜராசந்தன் “எப்படி இங்கு வந்தீர்கள்?” என்றபின் “நான் எதையும் கேட்கவில்லை. எதுவாயினும் இந்நாள் இனியது. இத்தருணம் என் அன்னையின் அருள்” என்றான்.
பின்னர் தானே தலையசைத்து “முகமன்கள்! வெறும் சொற்கள்!” என்று கர்ணனின் தோளில் அறைந்தான். அவன் உடலை இறுக்கி கட்டிக்கொண்டு தன் தலையை அவன் தோளில் மெல்லமுட்டி “என்னால் அவற்றை திறம்படச் சொல்ல இயலாது அங்கரே. நான் அசுரகுடிமகளாகிய ஜரையின் மைந்தன் என்று அறிந்திருப்பீர்” என்றான். அவனுக்கு மூச்சிரைத்தது. “வில்கொண்டு காம்பில்யத்தில் நீங்கள் எழுந்ததை ஓவியங்களாகத் தீட்டவைத்து என் அரண்மனையில் வைத்திருக்கிறேன். ஒருநாளையேனும் உங்களைப்பற்றிச் சொல்லாமல் அந்தியாக்கியதில்லை.”
கர்ணன் விழிகள் மின்ன புன்னகைத்தான். ஜராசந்தன் கர்ணனின் கையைப்பற்றி தன் நெஞ்சில் வைத்து “இன்று உளம் நிறைந்திருக்கிறேன். அங்கரே, இந்நாளுக்காக காத்திருந்தேன். இதுநிகழும் என அறிந்திருந்தேன்” என்றான். கர்ணன் அவன் கைகளை பற்றிக்கொண்டு “தங்களை நானும் மறந்ததில்லை. என் தோழரின் அதே பெருந்தோள்கள் தங்களுக்கும் என எண்ணிக்கொள்வேன்…” என்றான்.
“ஆம், என்னிடமும் சொல்வார்கள்” என்று ஜராசந்தன் உரக்க நகைத்தான். “என்றோ ஒருநாள் நானும் அவரும் களத்தில் தோள்கோக்கப்போகிறோம் என்று எண்ணியிருக்கிறேன்.” “ஆம், அது நிகழ்க! மல்லர்கள் தழுவுவதே இம்மண்ணில் தெய்வங்களுக்கு மிக உரியது என்பார்கள்” என்றான் கர்ணன் நகைத்தபடி. “ஆனால் அது களிக்களத்தில் நிகழ்வதாக!” “ஆம், ஆம்” என்றான் ஜராசந்தன்.
கர்ணனின் இருகைகளையும் பற்றி தன் நெஞ்சில் மும்முறை மெல்லஅறைந்து “என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அத்தனை சொற்களும் பொருளின்றி சிதறிக்கிடக்கின்றன. இந்நாள் இந்நாள் என்று என் உள்ளம் அரற்றிக் கொண்டிருக்கிறது” என்ற ஜராசந்தன் தன்னிலைகொண்டு “வருக, தங்களுக்கு நான் எதை அளிக்கவேண்டும்? இப்போதுதான் உண்டாட்டை முடித்தேன். வருக!” என்று அழைத்துச் சென்றபின் நின்று “வேண்டாம்! இது கீழ்த்தளம். என் இயல்பால் நான் அங்கு குகர்களுடன் களியாடிக் கொண்டிருந்தேன். அங்க நாட்டரசரை என் அரசமுகப்பறையில்தான் சந்திக்க வேண்டும். அங்கு வருக!” என்றான்.
கர்ணன் அவன் தோளை அறைந்து “கள்ளருந்தி குகர்களுடன் களியாடும் ஜராசந்தரையன்றி பிற எவரையும் நான் எனக்கு அணுக்கமாக எண்ண இயலாது” என்றான். ஜராசந்தன் சிரித்து “அங்குதான் என்னால் முழுமையாக வாழமுடிகிறது. கைகளை அறைந்து உரக்க நகைத்தாட முடிகிறது. அரியணை அமர்வதும் வெண்குடை சூடுவதுமெல்லாம் நடிப்பு அங்கரே. எனக்குள் ஓடுவது என் அன்னை ஜராதேவியின் முலைப்பால். அடர்காடுகளில் உழன்று சினவேழங்களை தோள்விரித்து எதிர்கொள்ளும்போதே நான் முழுமை அடைகிறேன்” என்றான்.
கர்ணன் அவன் தோள்களை கைசுழற்றி அள்ளிப்பற்றி “ஆம், வேழத்தைப் பற்றவேண்டிய தோள்கள் இவை” என்றான். “என் நெஞ்சோடு தழுவவிழையும் தோள்களெல்லாமே இத்தகையவை மகதரே. திருதராஷ்டிர மாமன்னரின் தோள்கள். என் தோழர் துரியோதனரின் தோள்கள்.” ஜராசந்தன் ஊஊ என ஊளையிட்டு சிரித்து “ஒன்றை விட்டுவீட்டீர்கள். இளையபாண்டவர் பீமனின் தோள்கள்…” என்றான். கர்ணன் ஒருகணம் விழிசுருங்க ஜராசந்தன் “நகையாடினேன் அங்கரே. நான் அனைத்தையும் அறிவேன்” என்றான்.
சிரித்தபடி “அடுத்து விராடநாட்டு கீசகனையும் சொல்லிவிடுவீர்களோ என எண்ணினேன்” என்றான் கர்ணன். ஜராசந்தன் “கீசகனா? ஆம், அவனும் தசைமலைதான்… அவனை அறைந்து நிலம்சேர்த்தாகவேண்டும். இல்லையேல் என்னை அவனுடன் சேர்த்துப்பேசும் சூதர்களை நிறுத்தமுடியாது” என்றான். பின் கர்ணனின் கைகளைப் பற்றி அசைத்தபடி “வருக! தாங்கள் எந்த ஊனுணவை விரும்புகிறீர்கள்? எந்த நன்மது?” என்றான். கர்ணன் “தங்கள் உளமுவந்து தருவது எதையும். ஆனால் இது புலரி” என்றான்.
படிகளில் இறங்கி முதற்கூடத்திற்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கு படகின் வளைந்திறங்கிய மரச்சுவரையொட்டி நீண்ட இருநிரைகளாக போடப்பட்ட சிறுபீடங்களில் நால்வர் நால்வராக அமர்ந்து தங்கள் முன் நீட்டியிருந்த பெரிய துடுப்புக்கழிகளைப்பற்றி சுழற்றிக் கொண்டிருந்த மல்லர்களுக்கு முன்னால் அவர்களை தாளத்தில் நிறுத்தும்பொருட்டு ஒருவன் கைமுழவை முழக்கினான். படகின் விலாத்துளைகள் ஊடாக வெளியே நீண்டு சிறகுகள் போல ஒற்றைஅசைவாகி நீரை உந்திக் கொண்டிருந்த துடுப்புகளின் ஓசை சிறுதுளைகளின் வழியாக குதிரைக்கூட்டங்கள் நீர்பருகுவதுபோல கேட்டது.
“ஒருபடகில் நான் இருக்க விழையும் இடம் இந்த கீழ்த்தளம்தான்” என்றான் ஜராசந்தன். “படகின் கால்கள் இங்குதான் உள்ளன. மேலே எழுந்து பூத்திருக்கும் பாய்கள் இப்படகைச் செலுத்தலாம். நிறுத்துபவை இவையே.” யமுனையின் அலைகள் எழுந்து கலத்தின் வளைவை அறைந்த நுரைத்துமிகள் துளைகள் வழியாக உள்ளே வந்து பரவியிருக்க உடல்களின் வெய்யாவியும் கள்ளின் எரியாவியும் ஊடே நிறைந்திருந்தன. அங்கே கள்மயக்கு கலந்த பேச்சும் கூச்சல்களும் எழுந்தன.
இருவரும் உள்ளே வந்தபோது அனைவரும் ஒரே குரலில் “வருக! வருக!” என்று கூவினர். ஒருவன் “அரசே, அவர் யார்? தங்களைவிடப் பேருடலுடன் இருக்கிறார்!” என்றான். “இவர் அங்க மன்னர் வசுஷேணர். நம் கலத்தில் புலரியில் இறங்கிய கதிரவன்” என்றான் ஜராசந்தன். ஒருகணம் குகர்கள் அனைவரும் மலைத்து செயலிழக்க துடுப்புகள் நின்றன.
ஒருவன் “அங்கநாட்டரசா?” என்றான். இன்னொருவன் “கர்ணன்!” என்றான். அனைவரும் ஒரே சமயம் துடுப்புகளைவிட்டு எழுந்தோடி கர்ணனை நோக்கி வந்தனர். ஒருவன் கால்தடுக்கி விழுந்தான். ஒருவன் அவன் கைகளைப்பற்றி தன் தலையில் வைத்தபடி “இன்று நான் வெய்யோனால் வாழ்த்தப்பட்டேன். என் உள்ளம் கரந்த சிறுமைகள் அனைத்தும் எரிந்தழிக! என் குலம் கைமாறிய கீழ்மைகள் அனைத்தும் மறைக! என் எண்ணங்களிலும் எல்லாம் ஒளி நிறைக!” என்று கூவினான். அவன் வாயிலிருந்து கள்மணம் எழுந்தது. கர்ணன் அவனை தலைசுற்றிப் பிடித்து தன் மார்புடன் அணைத்தபடி “நம்மனைவரையும் விண்ணெழும் ஒளி வாழ்த்துக!” என்றான்.
“இனியவர்களே, இந்தப்புலரியை நாம் கதிர்மைந்தனுடன் கொண்டாடுவோம். துடுப்புகளை கட்டிவிட்டு அனைவரும் மேல்கூடத்திற்கு வாருங்கள். விண்ணில் விடிவெள்ளி எழுந்துவிட்டது. சற்றுநேரத்தில் வானம் ஒளிகொள்ளும். இவர் வெய்யோன் அளித்த கவசமும் குண்டலமும் அணிந்தவர் என்கிறார்கள். நம் விழிகளில் வெய்யோன் அருளிருந்தால் இன்று அதை நாம் காண்போம்” என்றான் ஜராசந்தன். “ஆம்! காண்போம்! வெய்யோன் ஒளிமணிகளை காண்போம்!” என்று அனைவரும் கூச்சலிட்டனர்.
அச்சொல் செவிபரவ மகதத்தின் பெருங்கலம் நீர்ப்பறவைகள் செறிந்த ஆற்றிடைக்குறையென ஓசையிடத்தொடங்கியது. ஜராசந்தன் கர்ணனின் கைகளைப்பற்றியபடி “வருக அங்கரே! சற்று உணவருந்தி இளைப்பாறுக!” என்றான். அவனை தன் தனிச்சிற்றறைக்கு அழைத்துச்சென்று பீடத்தை இழுத்திட்டு “அமர்க!” என்றான். கர்ணன் அமர்ந்ததும் தான் ஒரு சிறுபீடத்தை இழுத்து அருகே இட்டு அமர்ந்தபடி “தங்களை நான் மும்முறை பார்த்திருக்கிறேன்” என்றபின் தொடைகளைத் தட்டி உரக்க நகைத்து “மும்முறையும் மணத்தன்னேற்பு நிகழ்வில்” என்றான். “ஒருமுறை நீங்கள் தோற்றீர்கள். பிறிதொருமுறை வென்றீர்கள். ஒருமுறை நாம் கைகலந்தோம்” என்றான்.
கர்ணன் புன்னகையுடன் “ஆம்” என்றான். “அங்கரே, காம்பில்யத்தில் அந்த வில்லை நீங்கள் எடுத்து குறிபார்க்கையில் நீங்கள் வெல்ல வேண்டும் என்று நான் விழைந்தேன். என் இரு கைகளையும் நெஞ்சில் வைத்து என் மூதாதையரை அதற்காக வேண்டிக்கொண்டேன்” என்றான். கர்ணன் “ஏன்?” என்றான். ஜராசந்தன் மீண்டும் நகைத்து தன் முழங்காலைத்தட்டி “எப்படியும் எனக்கு வெற்றியில்லை. கதாயுதமன்றி வேறெதிலும் நான் எவரையும் வெல்ல முடியாது. அதனாலாக இருக்கலாம்” என்றான். கர்ணன் நகைத்து “அப்படியென்றால் பார்த்தன் வெல்வதை நீங்கள் விரும்பியிருக்கலாமே?” என்றான்.
ஜராசந்தன் முகம் சற்று மாறியது. “அவன் ஷத்ரியன். தூயகுருதி கொண்டவன் அங்கரே. இந்த பாரதவர்ஷத்தை என்றும் ஆட்டிவைக்கும் எண்ணம் என்பது குருதித்தூய்மைதான். குருதி கலக்காமல் இங்கு எவரும் வல்லமை கொள்ள இயலாது. மறுபக்கம், தூயகுருதி என்று சொல்லாமல் இங்குள்ள மக்களிடம் தலைமைகொள்ளவும் இயலாது. இவ்விரு நிலைகளுக்கு நடுவே என்றும் இப்பெருநிலம் அலைக்கழியும் என்றே எண்ணுகிறேன்.” கர்ணன் தலையசைத்தான். ஜராசந்தன் “நான் உங்களை நானாகவே எண்ணுவதுண்டு” என்றான். “தங்களைப்போலவே நானும் என் அன்னையால் புறக்கணிக்கப்பட்டு காட்டில் வீசப்பட்டேன். அசுரகுல அன்னை ஜராதேவியால் மீட்கப்பட்டேன். இவ்வுடலில் ஓடுவது அவள் முலைப்பால்.”
“மீண்டும் தலைநகருக்கு வந்தபோது நான் முற்றியிருந்தேன். காட்டுவிலங்கை ஒருபோதும் முற்றிலும் பழக்க முடியாது. ஒரு குருதி துளி கிடைப்பது வரைதான் அது சொல்கேட்கும்” என்றான் ஜராசந்தன். “அரண்மனையும் நகரமும் நாடும் எனக்கு கூண்டுகள் போல. இரவும் பகலும் நிலையற்று அதற்குள் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.” கர்ணன் புன்னகையுடன் அவன் தோளை தொட்டான். “என்னைப்போலவே நீங்களும் இரவுகளில் துயில்கொள்ளாது புரள்பவர். அவைநடுவே அடையாளமற்றவராக உணர்பவர்…” கர்ணன் “ஆம்” என்றான்.
உரத்த குரலில் “என்னருகே இருங்கள் அங்கரே. இந்திரப்பிரஸ்தத்தின் இவ்விழவு முடிந்ததும் தாங்கள் என் விருந்தினராக மகதத்திற்கு வரவேண்டும்” என்றான் ஜராசந்தன். கர்ணன் “ஜராசந்தரே, தங்கள் அழைப்பு முதலில் செல்லவேண்டியது அஸ்தினபுரியின் அரசருக்கு. அவரது துணைவனாகவே நான் மகதத்திற்கு வரமுடியும். அஸ்தினபுரிக்கும் மகதத்துக்குமான பகைமை என்பது நூறு ஆண்டுகள் கடந்தது” என்றான். “ஆம், உண்மை” என்றான் ஜராசந்தன். “ஆனால் தங்கள் விழைவுக்கப்பால் ஒரு சொல்லையும் துரியோதனர் எண்ண மாட்டார் என்று அறிந்திருக்கிறேன்.”
“ஏனென்றால் அவர் விரும்பாத ஒன்றையும் நான் விழையமாட்டேன்” என்றான் கர்ணன். ஜராசந்தன் இரு முழங்கால்களிலும் மீண்டும் அடித்து நகைத்து “நான் என்ன செய்யவேண்டும்? தாங்கள் என்னுடன் மகதத்தில் சில நாட்கள் இருக்கவேண்டும், அவ்வளவுதான் என் விழைவு. நாம் இணைந்து வேட்டையாட வேண்டும். தோள்கோத்து மல்லிட வேண்டும். கதைவிளையாடவேண்டும். கங்கையின் இருகரை தொட்டு நீச்சலிடவேண்டும்” என்றான்.
அவன் குரல் மென்மையானது. கைநீட்டி கர்ணனின் கால்களை தொட்டபடி “அங்கரே, நானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு இதுவரை எனக்கு அமைந்ததில்லை. ஏனென்றால் நான் அசுரனுமல்ல ஷத்ரியனுமல்ல. எந்த ஆண்மகனும் அத்தகையதோர் நட்புக்கென உள்ளூற தவித்திருப்பான் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். என் கற்பனையில் தாங்கள் ஒருவரே அணுக்கமாக இருந்தீர்கள். தாங்கள் என்னுடன் இருக்கும் சில நாட்களாவது அவ்வாழ்வை முழுமையாக வாழ்வேன்” என்றான்.
கர்ணன் “தாங்கள் அஸ்தினபுரியின் அரசரையே அழைக்கவேண்டும்” என்றான். ஜராசந்தன் புன்னகைத்து “ஆம், அதை செய்கிறேன். என் முதன்மை அமைச்சரை பரிசுகளுடனும் வாழ்த்துகளுடனும் அஸ்தினபுரியின் அவைக்கு அனுப்புகிறேன். துரியோதனரை என் தோள்தோழராக தழுவி ஏற்றுக்கொள்கிறேன். அதற்கென ஆணையிடப்படும் அனைத்தையும் ஆற்றுகிறேன். தங்களுக்காக…” என்றான். கர்ணன் “தங்கள் அழைப்பு வருமென்றால் அக்கணமே அவை விட்டிறங்கி தேரை ஒருக்கும்படி ஆணையிடுவார் துரியோதனர். ஏனென்றால் உங்கள் தோள்களை ஒவ்வொரு நாளும் எண்ணி வாழ்பவர் அவர்” என்றான்.
“அது போதும்” என்றபின் எதிலோ உளம் சென்று தொட “விந்தைதான், நானும் துரியோதனரின் தோள்களையே எண்ணி வளர்ந்திருக்கிறேன். இளம் மைந்தனாக நான் மகதத்தின் பொறுப்பை ஏற்றபோதே என் முதல் எதிரி நாடு அஸ்தினபுரி என்று சொல்லப்பட்டது. கதைபயில்கையில் என் அடியேற்று தலை சிதறும் பாவைகள் அனைத்துமே துரியோதனரின் முகம் கொண்டவை.” என்றான். “ஒவ்வொருநாளும் ஒருவரை எதிரியென எண்ணினால் அவ்வெண்ணத்தாலேயே அவரை அணுகி அறியத்தொடங்குகிறோம்.”
மேலும் உளம்சென்று “அவ்வறிதல் நமக்கு உருவாக்கும் நெகிழ்வினால் நம் பகைமை குறைவதைக் கண்டு மேலும் மேலும் உணர்வுகளை ஊதிப்பற்றவைத்து எழுப்பி பகைபெருக்குகிறோம்” என்றான் ஜராசந்தன். “இன்று ஒரு கணம் உங்களுக்காக அவர்முன் செல்வதைப்பற்றி எண்ணியபோது அனைத்தும் தலைகீழாக திரும்பிவிட்டன. இன்று நான் இளமை முதலே விரும்பியிருந்த என் தோழர் என்று அவர் தோற்றமளிக்கிறார்.” “அதுவே உண்மையாக இருக்கலாம்” என்று கர்ணன் சொன்னான். “இன்று தெளிந்திருக்கும் இதுவே உண்மையாக இருக்கட்டும்.”
ஏவலன் பெரிய மரத்தாலத்தில் பொற்குடுவை நிறைய பழச்சாறும் ஊன்சேர்த்து அவிக்கப்பட்ட அப்பங்களும் இன்கூழுமாக வந்து தலைவணங்கி அதை பீடத்தில் வைத்தான். ஜராசந்தன் எழுந்து சிறிய பொற்தாலத்தில் அப்பங்களை அவனே எடுத்து வைத்து கர்ணனுக்கு முன் நீட்டி “உண்ணுங்கள் அங்கரே!” என்றான். கர்ணன் ஒரு அப்பத்தை எடுத்து மென்றபடி “நன்று!” என்றான்.
ஜராசந்தன் பழச்சாறை பொற்கிண்ணத்தில் ஊற்றி கர்ணனிடம் அளித்தபடி “வெறும் பழச்சாறு இது. புலரி இல்லையேல் தாங்கள் என்றென்றும் மறக்க இயலாத யவன மதுவை அளித்திருப்பேன்” என்றான். கர்ணன் “ஆம், இத்தருணத்திற்குரிய மதுவை யவனர்களே அளிக்கமுடியும்” என்றான். “என்னிடமுள்ளது தயானீசர் என்னும் யவனதெய்வத்தின் மது. இருநூறு ஆண்டுகாலம் மண்ணுக்குள் புதைத்து நொதிக்கச் செய்யப்பட்டது. அதன் சுவையென்பது அத்தவத்தின் விளைவு” ஜராசந்தன் சொன்னான். பெரிய செம்மண்ணிற முகத்தின் சிறிய கண்களை விரித்து “ஒவ்வொரு துளியாக நொதித்துக் குமிழியிட்டு, மெல்ல மெல்ல நிறம்மாறி, இயல்பு மாறி பிறிதொன்றாகியபடி எவருமறியாமல் மண்ணுக்குள் காத்திருப்பது எவ்வளவு மகத்தானது. தெய்வங்கள் அருகே அமர்ந்து அதை பார்த்துக் கொண்டிருக்கும்” என்றான்.
“தங்கள் அவைச்சூதர்கள் திறமையானவர்கள்” என்றான் கர்ணன். “ஏன்?” என்றான் ஜராசந்தன். “சிறந்த சொற்களை எடுக்கக் கற்றிருக்கிறீர்கள்.” ஜராசந்தன் உரக்க நகைத்தபடி “உண்மை. நான் முடிசூடியபோது ஜரை குலத்தைச் சேர்ந்த அசுரச்சிறுவனென்றே எண்ணப்பட்டேன். எந்தையின் ஷத்ரிய மைந்தர்களை வென்றேன். பொல்லா அசுரமகனொருவனை அரசனாக ஏற்றுவிட்டோம் என்ற எண்ணம் மகதர்களுக்கு இருந்தது. எனவே மிகச்சிறந்த சூதர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து காவியங்கள் கற்றேன். என்னைச் சுற்றி எப்போதும் மதிசூழ் அந்தணர் நிறைந்து நூலாய ஆணையிட்டேன். நான் அறியாத ஒன்றும் இங்கு எஞ்சியிருக்கலாகாது என்று உறுதி கொண்டேன்” என்றான்.
“நன்று” என்றான் கர்ணன். “அதுவே உங்களை பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசராக ஆக்கியது.” ஜராசந்தன் “நான் தங்களைப் போன்றவன் அல்லன். தாங்கள் வெய்யோனின் அருள் பெற்று காலைச்செவ்வொளி வழியாக மண்ணில் இறங்கியவர். நான் புதைந்து மறைந்த ஏதோ தொல்வேரிலிருந்து பாறைபிளந்து மேலெழுந்து வந்தவன்” என்றான். கர்ணன் பெருமூச்சுடன் “நான் வெய்யோன் மைந்தன் அல்ல அரசே. புரவிச்சூதனாகிய அதிரதனின் மைந்தன். அதையன்றி எதையும் நான் ஏற்பதில்லை. சூதர்பாடல்களால் உளமழிந்தவர் காணும் மயலே என் கவசகுண்டலங்கள். நானே அவற்றை ஒருமுறை கண்டதுண்டு” என்றான்.
“நான் அவற்றை காண்பேன்” என்றான் ஜராசந்தன். “ஏனென்றால் நான் சூதர்களை நம்புகிறேன்.” கர்ணன் “அப்படியென்றால் நான் மறுக்கப்போவதில்லை. இந்த ஒரு புராணம் என்னை பட்டத்துயானை போல எந்தத் திரளிலும் வழிசமைத்து இட்டுச்செல்கிறது” என்றான். மேலே கொம்போசை எழுந்தது. தொடர்ந்து சங்கும் மணியோசையும் இணைந்து ஒலித்தன. “புலரி எழுகிறது!” என்று ஜராசந்தன் எழுந்தான். கர்ணன் ஏவலன் நீட்டிய அகல் தாலத்தில் கைகளையும் வாயையும் கழுவிக்கொண்டு “செல்வோம்” என்றான்.
மகதத்தின் படகின் அகல்விரிவில் அதிலிருந்த அனைத்து ஏவலர்களும் படகோட்டிகளும் காவலரும் வந்து தோள்முட்டக் கெழுமி நின்றிருந்தனர். அவர்களின் காலடியோசை கேட்டதுமே அங்கே வாழ்த்தொலிகள் எழத் தொடங்கிவிட்டிருந்தன. ஜராசந்தனும் கர்ணனும் கைகளைக் கூப்பியபடி வாயில்விட்டு மேலேறி அகல் கூடத்திற்கு வந்தபோது “மகதம் ஆளும் மாமன்னர் வாழ்க! ஜரை மைந்தன் வாழ்க! வெய்யோன் மகன் வாழ்க! ஒளியவர் வாழ்க! அங்க நாட்டரசர் வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன.
சுதேவர் வந்து தலைவணங்கி அவர்களை அங்கே இருந்த சிறு மேடையொன்றுக்கு இட்டுச்சென்றார். அவர்களுக்குப் பின்னால் படகின் இரு பெருமுரசங்கள் தோற்பரப்பு காற்றில் மெல்ல விம்ம காத்திருந்தன. நான்கு நிரைகளாக கொம்பேந்தியவர்களும் சங்குஊதுபவர்களும் மணிமுழக்குபவர்களும் கின்னரிஇசைப்பவர்களும் நின்றிருந்தனர். மறு எல்லையில் பொன்னிறப்பட்டில் முடி சூடிய துதியானை பொறிக்கப்பட்ட மகதத்தின்கொடி கம்பத்தின் கீழே சரடில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்தது.
இரவுக்குரிய வெண்ணிறக்கொடியை பாய்மரங்கள் சூழ்ந்த கொடிக்கம்பத்தின் உச்சியில் இருந்து இறக்குவதற்காக இருவர் காத்து நின்றனர். வானொளி காற்றிலிறங்கி யமுனையின் நீர் பளபளக்கத் தொடங்கியிருப்பதை கர்ணன் கண்டான். வானம் மகரசுறாமீனின் உடலென கருமையோ ஒளியோ என விரிந்திருந்தது. யமுனையின் இரு கரைகளில் இருந்தும் வெண்பறவைகள் பூசெய்கையில் அள்ளி வீசப்படும் முல்லைமலர்கள் போல சிறியகூட்டங்களாக எழுந்து நீர்ப்பரப்பின்மேல் பறந்திறங்கின. படகின் வடங்கள்மேலும் புடைத்த பாய்களின் விளிம்பிலும் வந்தமர்ந்து வாலும் சிறகும் காற்றுக்கு விரித்தும் பிசிறியும் நிகர்நிலை செய்து கழுத்தை நீட்டி அலகுபிளந்து கூச்சலிட்டன. எண்ணிய ஏதோ ஒன்று குரல் எழுப்பியபடி எழ அவை சேர்ந்து பறந்து வானில் சுழன்று மீண்டும் வந்தமைந்தன.
பொன்னிறச் சருகுகள் போன்ற சிறுபறவைகள் படகு விளிம்பில் அமர்ந்து சிறகடித்து எழுந்து நீர்ப்பரப்பின் மேல் தாவி சிற்றுயிர்களைப் பிடித்து மீண்டும் திரும்பி வந்தமர்ந்து படகைச் சூழ்ந்தன. விடிவெள்ளி ஒளியிழந்து வான்பரப்பில் ஒரு சிவந்த வடுபோல மாறிவிட்டிருந்தது. தொலைகிழக்கில் நூறு வெண்பட்டுத் திரைசீலைகளால் மூடப்பட்ட செவ்விளக்குபோல் சூரியனின் ஒளிக்கசிவு தெரிந்தது. கூடியிருந்த அனைவரும் கிழக்கை நோக்கியபடி காத்திருந்தனர். முகில்கள் விளிம்புகள் மெல்லத் துலங்க வானிலிருந்து புடைத்து எழுந்து வந்தன. அவற்றின் குடைவுகளும் துருவல்களும் ஒளிகொண்டன. உள்ளிருந்து ஊறிய செம்மை அவற்றை மேலும் மேலும் துலங்க வைத்தது.
யமுனையின் அலைவளைவுகள் கரிக்குருவி இறகின் உட்புறமென கரியமெருகு கொண்டன. படகின் பலகைப்பரப்புகளில் அலையொளிவரிகள் நெளிந்தன. எடைமிக்க எதையோ எடுத்துச்செல்வதுபோல வலசைப் பறவைகள் சிறகுதுழாவி வானை கடந்துசென்றன. செவ்வொளி மேலும் மேலும் பெருகிவர அதுவரை இல்லாதிருந்த முகில்பிசிறுகள்கூட வானில் உருக்கொண்டன. தாடி சூழ்ந்த மூதாதையர் முகங்கள். செம்பிடரி சிலிர்த்த சிம்மங்கள். பொன்னிற உடல் குறுக்கிய வேங்கைகள். அசையாது நின்ற பருந்துகள். சாமரங்கள். சிந்திய செம்பஞ்சு. விரல்தொட்டு நீட்டிய குங்குமம். மஞ்சள் வழிந்தோடிய ஓடைகள்.
ஒவ்வொரு பறவையும் சூரியன் எழுவதற்காக காத்திருக்கிறது என்று கர்ணன் எண்ணினான். எழுந்தும் அமைந்தும் அவை இரைதேடுகையிலும் கரையிலிருந்து நீருக்கு மீண்டும் என சிறகடித்துச் சூழ்கையிலும் அவற்றில் ஒன்று சூரியனை நோக்கிக் கொண்டிருந்தது. மிகத்தொலைவில் வெற்றிக்களிப்பில் மேலே தூக்கப்பட்ட குருதிபடிந்த உடைவாளின் வளைவு என சூரியனின் விளிம்புவட்டம் தெரிந்ததும் அத்தனை பறவைக்கூட்டங்களும் ஒருசேர வாழ்த்தொலி எழுப்பின. அவர்களைச் சூழ்ந்து பறவைகளின் பேரொலி நிறைந்தது.
அதை ஏற்று மறுமுழக்கம் எழுப்புவதுபோல மகதத்தின் இருபெரும் முரசுகள் முழங்கத் தொடங்கின. முரசுகளுக்கு நடுவே நின்ற கோல்காரன் வெள்ளிக்கோலை உயர்த்தி மும்முறை சுழற்றி இறக்க அத்தனை இசைக்கருவிகளும் ஒலிகொண்டு ஒன்றையொன்று நிரப்பி ஒற்றைப் பேரிசையாக எழுந்து “ஒளிப்பெருக்கே! பொன்றாப்பெருஞ்சுடரே!” என்று கூவின.
அங்கிருந்த அனைவரின் விழிகளும் தன்னை நோக்கி வியந்து நிற்பதை கர்ணன் கண்டான். ஒவ்வொருவர் விழிகளாக தொட்டுத் தொட்டுச் சென்று ஜராசந்தனை நோக்கியபின் மீண்டும் விலகி விழிகளை நோக்கினான். அவர்கள் பார்ப்பது எதை? விழிமயக்கு அன்றி உண்மையிலேயே அவன் நெஞ்சில் சூடும் கவசமென்று ஒன்று உள்ளதா என்ன? இசை எழுந்து, கிளை விரித்து, மலர்ந்து, வண்ணம் பொலிந்து நின்றது. ஒவ்வொரு ஒலிச்சரடும் பின்ன, ஒவ்வொரு வண்ணமும் ஒன்றையொன்று முற்றிலும் நிரப்ப, ஒலியின்மை என்றாகி ஓய்ந்து எஞ்சிய இறுதிச் சொட்டும் முடிந்தபின் ஒளியன்றி பிறிதெதுவும் உள்ளும் புறமும் எஞ்சவில்லை.
வெள்ளிக்கோல் தாழ்த்தி கோல்காரன் பின்னகர்ந்ததும் மகதத்தின் வீரர்கள் அனைவரும் ஒற்றைப்பெருங்குரலில் “வெய்யோன் வாழ்க! அவன் மணிக்குண்டலங்கள் வாழ்க! அவன் நெஞ்சணிந்த பொற்கவசம் வாழ்க!” என்று கூவினார்கள். ஜராசந்தன் கண்ணீர் வழிந்த கன்னங்களுடன் கைகளும் இதழ்களும் துடிக்க கர்ணனின் இருகைகளையும் பற்றிக்கொண்டான்.