வெய்யோன் - 51

பகுதி ஆறு : விழிநீரனல்- 6

கர்ணன் மறுபக்கம் வலசையானைகளின் கூட்டம்போல ஆடியாடிச் சென்றுகொண்டிருந்த பெரிய மரக்கலங்களின் நிரையை நோக்கினான். அவற்றில் மகதத்தின் துதிக்கைதூக்கி நின்றிருக்கும் மணிமுடிசூடிய யானை பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறமான பட்டுக்கொடி பறந்தது. பாய்கள் செவ்வொளியுடன் அந்தித்தாமரை என கூம்பியிருந்தன. ஒரு நோக்கில் அவை நின்றுகொண்டிருப்பவைபோலவும் அப்பால் கரை பெருநாகம்போல ஊர்ந்துகொண்டிருப்பதாகவும் தெரிந்தது.

அவன் நோக்குவதைக் கண்ட நாகன் “நான்குநாட்களாக அந்நிரை ஒரு கணமும் ஒழியவில்லை” என்றான். கர்ணன் “ஐம்பத்தாறுநாடுகளின் அரசர்களும் வருவார்கள். அந்த நிரையில் இல்லாத மச்சர்களும் நிஷாதர்களும் அசுரர்களும் வருவார்கள். ஒவ்வொருவரும் பிறரைவிடப் பெரியவர்கள் எனக் காட்டியாகவேண்டும்” என்றான். “அரசர்கள் பெரியவர்களாக வேண்டும். பெரிதாவதென்பது பிறிதொருவரை விஞ்சுவதே.”

நாகன் “நாளை காலை அங்கே அரண்மனையில் அணையாச்சுடர் ஏற்றப்படுகிறது என்றார்கள். அதைச் சொன்ன பாணனிடம் நான் சொன்னேன், இப்புவியில் அணையாச்சுடர் என்பது ஒன்றே. அதுவும் ஊழிமுடிவில் அணைந்துபோகும் மூடா என்று.” அவன் உரக்க நகைத்து “மூடர்கள்… முழுமூடர்கள்” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்த பெண் “மூடத்தனமே வெல்லும் என்று அறிந்தாயிற்றே? வாயைமூடு!” என்றாள்.

“வெல்வது மூடத்தனம் அல்ல. ஒரு பெண்ணின் பேராசை. பெண் தன்னை சக்ரவர்த்தினியாக உணர பிறரை வென்றால் மட்டும் போதாது. தன்னை வென்றாகவேண்டும்” என்றாள் முதுமகள். “தன் முலைகளையும் கருப்பையையும் வெல்லவேண்டும்.” கர்ணன் சற்றே சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள் அன்னையே? அவ்வாறென்றால் பெண் நாடாளலாகாது என்று சொல்லவிழைகிறீர்களா?” என்றான்.

“ஆளலாம். அன்னையென்று அமரலாம்” என்றாள் முதுமகள். “அவள் முடிசூடி கோலேந்தி அரியணையில் அமர்ந்திருக்கையிலும் ஒரு சிறுகுழந்தை வந்து அன்னையே எனக்கு கால்கழுவிவிடு என்று கேட்குமென்றால் அவள் கோல் அமுதத்தால் ஆனது.” கர்ணன் பொறுமையின்றி தலையசைத்தான். “ஆணவத்தின் நகரம் இது!” என்றான் அர்க்கன்.

“அத்தனை நகரங்களும் ஆணவத்தின் நகரங்களே. ஒரு பெண் அதன் அரியணையில் அமர்ந்தால் மட்டுமே இந்தப் பொறாப்பொருமல்கள் எழுகின்றன” என்று கர்ணன் சொன்னான். “இன்று பாரதவர்ஷத்தின் அத்தனை ஷத்ரிய அரசர்களும் அவளை எண்ணி துயில்நீக்கிறார்கள். பெண் வெல்ல தான் அமைவதா என்று அவர்களின் சிறுமை சீறி எழுகிறது.”

“அவள் சொல்லால்தான் காண்டவம் எரிந்தது” என்றான் அர்க்கன். “இங்கு இப்பெருநகரைக் கட்ட அவள் இளமையிலேயே எண்ணம்கொண்டிருந்தாள். இந்நிலத்தை அளந்து அத்தனை கணக்குகளையும் அவள் போட்டிருந்தாள். கலிங்கச்சிற்பிகள் நகரின் சித்திரத்தையே வரைந்துவிட்டிருந்தனர். அதை தன் தலையணைக்கருகே சுருட்டி வைத்துக்கொண்டு அவள் துயின்றாள். அக்கனவையே அங்கு பொருண்மையாக்கி எழுப்பியிருக்கிறாள்.”

அவனருகே அமர்ந்திருந்த பெண் சீறும் ஒலியில் “அவளுக்காக எங்கள் மைந்தர்கள் அனலில் எரிந்தனர். அவர்களின் வெள்ளெலும்புகள் சாம்பலில் சிதறிக்கிடந்தன…” என்றாள். குரல் உடைந்து நெகிழ “சிறுவர் எலும்புகள். சிறிய கைகள். சின்னஞ்சிறிய விரல்கள்… என் தெய்வங்களே, என் குலமெழுந்த மொட்டுகளே, என் செல்லங்களே” என்று கூவி நெஞ்சில் ஓங்கியறைந்து விம்மியழுதாள். வள்ளத்திலிருந்த அனைவரும் தேம்பி அழத்தொடங்கினர்.

முதுமகள் மட்டும் கர்ணனை நோக்கி புன்னகைத்து “அவள் சக்ரவர்த்தினி. அதற்கென்றே பிறந்தவள்” என்றாள். “விழிகளால் பெரும்படைகளை ஆள்பவள். ஒரு சொல்லால் விரிநிலங்களைச் சுருட்டி கையில் எடுத்துக்கொள்பவள்.” இரு கைகளையும் விரித்து “அவள் குலதெய்வங்கள் அவளுக்கு அருள்வதாக! அவள் மைந்தர் அவளுடன் இருக்கட்டும்” என்றாள்.

அவளருகே இருந்த இன்னொரு பெண் “அவள் மைந்தரும் அனலில் உருகி நின்றெரிவார்கள். அறிக தெய்வங்களே! அறிக மானுடமே! அவள் மைந்தரும் சாம்பலென்று எஞ்சுவார்கள். அவர்கள் எரிவதை என் குடிமைந்தர் நின்று நோக்குவார்கள்” என்றாள். அவள் தன் முலைகள் மேல் ஓங்கி அறைந்தாள். “நாகம் ஒன்றையும் மறக்காது! நாகம் ஒருபோதும் மறக்காது. எங்கள் தெய்வம் மகாகுரோதை. அவள் வஞ்சம்எரியும் பெருங்கனல் வடிவத்தோள்! தேவி, பெருவஞ்சப் பேருருவே! நீ அறிக! நீ அறிக!”

முதுமகள் “எங்கள் குலம் முழுக்க இவ்வஞ்சம் எரியும் நெஞ்சுடன்தான் இங்கிருந்து செல்கிறது மைந்தா” என்றாள். “எங்கள் அன்னை மகாகுரோதை மரத்தில் உறையும் தீ என எங்களில் வாழ்பவள். நீர்பருகும் வேரிலும் நிலைகொண்ட அடியிலும் இலைசெறிந்த கிளையிலும் தளிரிலும் மலரிலும்கூட எங்கள் அனல் எழுந்து விட்டது. எரிந்தபடி இவ்விடம்விட்டு நீங்குகிறோம்.”

கர்ணன் இருகைகளையும் கூப்பி “வஞ்சங்கள் ஊடும்பாவுமெனப் பின்னி இந்த மண்ணில் நானறியாத எதையோ அமைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை காண்கிறேன். நான் எளியவன். திகைத்து இப்பகடைவெளிக்கு வெளியே நின்றிருப்பவன்” என்றான். அவர்களின் விசும்பல்கள் கேட்டன. பற்கள் கடிபடும் ஒலிகள். மூச்சொலிகள். சுற்றி வள்ளங்களின் விலாவிலறையும் அலைகளின் ஓசை.

விண்மீன்கள் அசைவதறியாமல் இடம்மாறிக்கொண்டிருந்தன. அந்த அமைதியிலிருந்து எழுந்து சூழிருளை நோக்கி “இந்த இரவு இத்தனை நீள்வதை எண்ணி வியக்கிறேன்” என்றான் கர்ணன். “நான் என் கலத்திலிருந்து கிளம்பி பலநாட்களாகின்றன என்று எண்ணினேன்.” மெல்ல சிரித்து “துயரம் நனைந்த இரவுதான் எடைமிக்கதாகிறது. எண்ண எண்ண இழுபட்டு நீள்கிறது” என்று திரியை சொன்னாள். “இவ்விரவு எங்கள் குலங்களால் என்றும் எண்ணப்படும். எங்கள் கதைகளில் பேருருக்கொள்ளும்.”

நீரில் விழும் துடுப்புகளின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. கீழ்ச்சரிவில் ஒரு குருதித்தீற்றலென எரிவிண்மீன் ஒன்று இறங்கியது. அதை நோக்கிய முதுமகள் மெல்லிய உடல்விதிர்ப்புற்று “பொழுதென்ன என்று நோக்கு… என் விழிகள் ஒளிகுன்றியிருக்கின்றன” என்றாள். “பிரம்மகாலம் இன்னும் கால்நாழிகையில் தொடங்கும்” என்றான் கர்ணன். “ஆம், பன்னகப்பொழுது சென்று அமைகிறது. உரகப்பொழுது எழவிருக்கிறது” என்றான் அர்க்கன்.

“எங்கேனும் நிறுத்து” என்றாள் திரியை. “கரைகளில் நிறுத்தமுடியாது அன்னையே. அங்கே மானுடப்பெருக்கு” என்றான் அர்க்கன். “பார், அன்னை வழிகாட்டுவாள்” என்றாள் திரியை. சிறுவன் ஒருவன் “அங்கொரு ஆற்றிடைக்குறை தெரிகிறது” என்றான். கர்ணன் “ஆம், அது நாணலெழுந்த ஆற்றிடைக்குறைதான்” என்றான். “அங்கு நிற்கட்டும் வள்ளங்கள்” என்றாள் திரியை.

அர்க்கன் தன் இடையிலிருந்து ஒரு சிறிய காயை வெளியே எடுத்து அதை விரைவாக வீசினான். அது மின்மினி போல ஒளிகொண்டு கோடாகச் சுழன்றது. அதன் சுருள்கள் மறைந்ததும் கர்ணன் திரும்பி நோக்கினான். உரகர்கள் அனைவரும் அதைக் கண்டாயிற்று என்று தெரிந்தது. நெடுந்தொலைவில் இன்னொரு ஒளிக்கோடு அதேபோல் சுழன்றது.

ஆற்றிடைக்குறையை நோக்கி வள்ளங்கள் மரம்கண்ட வான்கொக்குக் கூட்டம்போல் குவிந்தன. முதலில் அவர்களின் வள்ளம் நாணல்பரப்பை ஊடுருவிச்சென்று மென்தசையில் அம்புபோல மண்கலந்த சதுப்பில் முட்டி பதிந்து நின்றது. இருபக்கமும் நாணல்களிலிருந்து சிறிய தவளைகள் துள்ளி எழுந்து விலகின. நீரில் தவளைகள் பாயும் ஒலி கேட்டது. அர்க்கன் எழுந்து சதுப்பின்மேல் நாணல்களைச் சரித்து அதன்மேல் இருதுடுப்பைகளை குறுக்காகப் போட்டு அதன்நடுவே கால்வைத்து இறங்கினான். மேலும் ஒரு கால்வைத்து “அன்னையே, இங்கு மேலேதான் மண் உறுதியாக உள்ளது” என்றான்.

முதுமகள் கைநீட்ட அவன் அவளைப்பற்றி மெல்ல இறக்கினான். அவளைத்தொடர்ந்து கர்ணன் இறங்கினான். சற்றுநேரத்தில் ஆற்றிடைக்குறையை மீன்கூட்டம்போல நான்குபக்கமும் வள்ளங்கள் மொய்த்தன. அதிலிருந்து நாகர்கள் இறங்கி நாணல்பரப்பின்மேல் நிறைந்தனர். முதுமகள் தன் முதலைத்தோல் மூட்டையை நெஞ்சோடணைத்தபடி அர்க்கனிடம் “கிழக்கு அதுதானே? எனக்கு திசை மறைந்துவிட்டது” என்றாள். “ஆம், அன்னையே” என்றான் அர்க்கன்.

அவள் தன் மூட்டையை பிரித்தாள். அதற்குள் இருந்த மரவுரியை அவிழ்த்து உள்ளிருந்து கையளவான நீளுருளைக்கல் ஒன்றை எடுத்தாள். அதில் கரியால் இரு பெரிய விழிகளும் செந்நிறத்தில் நீண்டு தொங்கும் நாக்கும் வரையப்பட்டிருந்தன. “அன்னை மகாகுரோதை. எங்களுக்காக மானசாதேவி என்னும் வடிவம் கொண்ட தண்ணளியள். ஒவ்வொரு முதற்பொழுதிலும் அன்னைக்கு நாங்கள் படையலிட்டு வணங்குவோம்” என்றபின் தரையில் மண்டியிட்டமர்ந்து மணலைக் குவித்து அந்தக்கல்லை அதன்மேல் வைத்தாள்.

இருநாகர்கள் சிக்கிக்கற்களை உரசி குந்திரிக்கம் பூசிய திரியை எரியச்செய்தனர். ஊன்நெய்யில் சுருட்டிய பெரியதிரிகளை பற்றவைத்து அவற்றை இரு குச்சிகளில் சுற்றிக்கட்டி பந்தமாக்கி அன்னையின் இருபக்கமும் நிறுத்தினர். காற்றில் சுடர்கள் எழுந்து கிழிபட்டு பறந்தன. சுழன்று குறுகி நீலநிறமாகி அஞ்சியதுபோல் எழுந்து சீறின. அன்னையின் வெறிமுகம் உயிர்கொண்டு எழுந்ததுபோல் தோன்றியது. அவள் கண்களில் சினம் அலையடித்தது. கேளாச்சொற்கள் அவள் உதடுகளில் துடித்தன.

அர்க்கன் ஒரு சிறிய பொதியைப் பிரிக்க உள்ளிருந்து மூன்று சிறிய அப்பங்களையும் சிறிய புட்டியில் புளித்த மதுவையும் எடுத்து இலையில் பரப்பி அன்னையின் முன் வைத்தாள் திரியை. இரு நாகர்குலப்பெண்கள் சுற்றிலும் நோக்கி நாணலுக்குள் பூத்திருந்த சிறிய வெண்ணிற மலர்களை கொய்து வந்தார்கள். மலர்களை அப்பத்தின் மேல் வைத்தபின் அவள் இரு விரல்களையும் சேர்த்து முத்திரைகள் காட்டியபடி மூச்சொலியாக நுண்சொற்களை சொல்லத்தொடங்கினாள்.

அவள் கைகளில் பசு கண்விழித்தது. மான் எழுந்தது. மீன் நீந்தியது. கொக்கு சிறகடித்தது. தாமரை மலர்ந்தது. அது அனலாகியது. அனல் நீரென்றாகி நெளிந்து நாகமாகியது. நாகக்குழைவுகளுடன் கைகள் அசைய ஒரு கட்டத்தில் அங்கு ஒரு நாகமெழுந்தாடுவதாகவே உள்ளம் மயங்கியது. கண்கள் கைகள் என்றன. சித்தம் நாகமென்றது. சித்தம் கைகள் என்றபோது கண்கள் நாகம் நாகம் என்றன.

அப்பால் ஒரு சிறிய எலி வந்து நீள்மூக்கை நீட்டி, மீசைமயிர்களை விடைத்தபடி அஞ்சியது. இரு செம்மலர்கள் போல அதன் முன்கால்கள் இதழ்விரிந்து மண்ணில் பதிந்திருந்தன. கண்களில் சுடர்ச்செம்மணிகள். அங்கிருந்த எவரோ மெல்ல அசைய அது கால்களை அசைக்காமலேயே உடலால் பின்னகர்ந்தது. சற்று நேரம் கழித்து மேலுமொரு காலடியை வைத்து அணுகியது.

திரியையின் நுண்சொல்லின் ரீங்காரத்தை அது கேட்டு மயக்குறுவதுபோல் தோன்றியது. அதன் மீசை சிலிர்த்து அசைந்தபடியே இருந்தது. மெல்ல அதன் கண்கள் இமைசரிந்து மூடின. தலை இருமுறை ஆடியது. சரிந்து விழுந்து வால்நெளிய கால்களின் விரல்களை சுருக்கி விரித்தபின் அமைதியானது. அதன் அடிவயிற்று மயிர்ப்பரப்பு மென்மையான சாம்பல்பூச்சாக தெரிந்தது.

அர்க்கன் அதை எடுத்து இலைமேல் வைத்தான். திரியை அதன் கழுத்தைப்பற்றி தன் கட்டைவிரல் நகத்தால் ஆழமாகக் குத்தி இறக்கினாள். அதன் கால்கள் மட்டும் விதிர்த்தன. அவள் அதை தூக்கி அழுத்த சிறிய ஊற்றாக குருதி பீரிட்டு அப்பங்களின் மேல் விழுந்தது. கூடிநின்றிருந்த நாகர்கள் ஒற்றைக்குரலில் “அன்னையே! மகாகுரோதே! மாயே! மாமங்கலே! தேவீ!” என்று வீரிட்டனர். பெண்கள் குரவையிட்டனர்.

எலியை அப்பங்களுடன் வைத்துவிட்டு திரியை கைகூப்பினாள். உரகர்களின் வாழ்த்தொலிகள் தாழாமல் நின்றன. கர்ணன் தொலைவில் சென்ற பெருங்கலங்களிலிருந்துகூட பலர் கலமுனைகளில் ஏறி அங்கு நிகழ்வதை நோக்குவதை கண்டான். குளிர்காற்று மேலும் வலுக்க பந்தங்கள் குறுகி அந்திமலர் போல கீழே இதழ்தழைந்தன. மெல்லிய சீறலோசையை செவி கேட்பதற்குள்ளாகவே அகப்புலன் ஒன்று கேட்டது. அவன் உடல் மெய்ப்பு கொண்டது.

அன்னையின் பின்னாலிருந்த நாணலில் இருந்து சேனைத்தண்டு போன்ற உடலும் தலையும் வாலும் ஒரே பருமனும் கொண்ட சிறிய பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. நாகம்போல வளையாமல் புழுப்போல உடல்சுருக்கி நீட்டி அணுகியது. அப்பங்களின் மேலேறி எலியை அது முகர்ந்தது. குரவைகளும் வாழ்த்தொலிகளும் உச்சம் கொண்டன. பாம்பு வாய்திறந்து எலியின் தலையை கவ்வியது. கவ்வக்கவ்வ அதன் வாய் விரிந்தபடியே செல்ல கண்கள் விழித்து உறைந்திருந்தன.

எலி குனிந்து உடல் சுருக்கி உள்ளே செல்லத்தொடங்கியது. அதன் வால் புழுதியில் அசைந்தது. அது முழுமையாக உள்ளே சென்று மறையும்வரை குரவையொலியும் வாழ்த்தொலியும் எழுந்தன. அவை அடங்கியபோது அமைதி செவிகுடைவதாக ஆகியது. கர்ணன் பெருமூச்சுவிட்டான். திரியை அவனை நோக்கி திரும்பி “சூரியனின் மைந்தன் வருக!” என்றாள். கர்ணன் குனிந்து அவளருகே அமர்ந்தான். “நீ இங்கு வந்தது உன் ஊழ் எனக்கொள்க!” என்றாள் திரியை. “அன்னை மகாகுரோதையின் பேரருள் உன்னை சூழ்க!”

கர்ணன் தலைவணங்கினான். “பெருவஞ்சமும் பெருங்கனிவும் ஒற்றைஇலையின் இருபக்கங்கள். தொட்டால் நச்சூட்டி தோலை எரியவைக்கும் மலைச்செந்தட்டியின் அடியில் மென்மை நிறைந்திருப்பதை கண்டிருப்பாய்.” கர்ணன் தலையசைத்தான். “அன்னை மானசையின் விழிகளை நோக்கு. அவளை உன் உள்ளம் திறந்து எழும் பேரன்பால் அணுகு!” கர்ணன் கைகூப்பினான். “ஆனால் உன் உள்ளம் கரந்துள்ள ஒருதுளி வஞ்சமும் வணங்கியாக வேண்டும். இருதட்டுத்துலா கொண்டு சென்றால் மட்டுமே அன்னையின் ஆலய வாயில் திறக்கும்.”

கர்ணன் “வஞ்சம் என்றால்…” என்றான். “ஏக்கம் அல்ல. ஆற்றாமை அல்ல. வெறுப்பு அல்ல. சினமும் அல்ல” என்றாள் முதுமகள். “அவையனைத்தும் அடங்குபவை. அடைந்தால். அறியப்பட்டால். அன்பினால். அடைக்கலமானால். வஞ்சம் என்பது முழுமையாக எதிரியை அழித்தால் மட்டுமே வெல்வது. வென்றபின் தன்னையும் அழித்தபின்னரே முழுமைகொள்வது. அது உரக நஞ்சு. ஒரு துளி உள்ளே சென்றால் பெருகிச்சென்று சித்தத்தை நிறைக்கும். எத்தனை தொலைவு ஓடினாலும் உரகம் மெல்ல பின்னால் வந்துகொண்டுதான் இருக்கும்.”

கர்ணன் அந்தப் பாம்பை நோக்கினான். அது முதுபிரம்பு வளைந்ததுபோலச் சுருண்டு அசைவற்றுக் கிடக்க அதன் உடலுக்குள் எலியின் வடிவம் தெரிந்தது. “இல்லை அன்னையே. அத்தகைய வஞ்சமேதும் என்னுள் இல்லை” என்றான். “நீ அறிய இருப்பது வஞ்சமாகாது. அது விதை. கரந்திருப்பதனால் மட்டுமே உயிர்கொள்வது.” கர்ணன் பெருமூச்சுடன் “நான் அறியவில்லை அன்னையே” என்றான்.

“உன் வலக்கையை அன்னையின் படையல்கள் மேல் வை” என்று அவள் சொன்னாள். கர்ணன் ஒருகணம் தயங்கியபின் தன் கையை வைத்தான். “எண்ணுக… உன் உள்ளத்து இருளுக்குள் குவிந்துகிடக்கும் அனைத்தையும் எண்ணிநோக்குக! வஞ்சமென ஒன்று மிகமிகச்சிறிய பாம்புமுட்டை போல எங்கேனும் உள்ளதா என்று நோக்குக!” என்றாள் முதுமகள். “அவ்வஞ்சமே உன்னை மகாகுரோதையிடம் கொண்டுசேர்க்கும்.”

கர்ணன் அதை தொட்டபடி “இல்லை” என்றான். “என்னால் எதையும் எண்ணக்கூடவில்லை அன்னையே. என் உள்ளம் எண்ணங்களால் நிறைந்துள்ளது. நஞ்சென்று அதில் எதையும் நான் காணவில்லை. எதிரிகளென்று எவருமில்லை எனக்கு.” அவள் முகம் சுருக்கங்கள் விரிய நகைத்தது. “மைந்தா, வஞ்சம் என்பது எப்போதும் நமக்கு மிகமிக அண்மையானவர்களிடம்தான். எதிரிகளிடம் வெறுப்பும் சினமும் மட்டுமே இருக்கும்.”

கர்ணன் பெருமூச்சுவிட்டான். “கண்முன் இருந்து மறைந்தால் ஒருவன் கருத்திலிருந்தும் மறைவானென்றால் அவனே எதிரி. இவ்வுலகே அழிந்தாலும் நீ இருக்கும் வரை தானுமிருப்பதே வஞ்சமென்றறிக!” கர்ணன் நடுங்கியபடி “இல்லை, ஏதுமில்லை” என்றான். “அன்னைவிழிகளை நேர்நின்று நோக்க உன் நெஞ்சு துணியவில்லை என்றே எண்ணுகிறேன்.” கர்ணன் “இல்லை அன்னையே. என் நெஞ்சு எதையும் உணரவில்லை” என்றான்.

“எழுக!” என அவள் சொன்னபோது அவன் கையை பின்னுக்கிழுக்க எண்ணிய கணம் அவன் உடல் மெய்ப்புகொண்டது. மானசையின் கல்விழிகள் அவனை நோக்கி அசைந்தன. அவை அவன் விழிகளை சந்தித்து ஒருகணம் நிலைத்து பின் கல்லோவியமாயின. கர்ணன் மூச்சிழுத்து உடலை இயல்பாக்கியபோது முதுமகள் “உன் கையிலுள்ள அக்கணையாழி ஏது?” என்றாள்.

கர்ணன் அதை நோக்கி அதன் நடுவிலிருந்த அருமணி கனலென சுடர்விட்டுக் கொண்டிருப்பதை கண்டான். “என் அன்னை என்னை கண்டடைந்தபோது இந்தக் கணையாழியும் உடனிருந்தது என்றாள். இதை என் இடைமணிகளுடன் அணிந்திருந்தேன். பின்னர் கணையாழியாக்கிக் கொண்டேன்.” அவள் கைநீட்ட அவன் அதை உருவி அவளிடம் அளித்தான்.

“மைந்தா, நீ அறிந்திருப்பாய் உன் வஞ்சத்தை” என்றாள் முதுமகள். “இல்லை” என்றான் கர்ணன். “நான் ஒரு விழிமயக்கில்…” அவள் சிரித்தபடி “நீ அறிந்தாய். நீ எதை அறிந்தாயோ அது உண்மை. அன்னை அதை அறிந்தாள்” என்றாள். “இல்லை, இல்லை” என்றான் கர்ணன். அவளைக் கடந்து காலெடுத்து வைத்து ஆற்றிடைக்குறையின் நாணலை மிதித்தான்.

“இதை நோக்கு” என்று அவள் தன் நகத்தால் அந்த மணியைப் பெயர்த்தாள். அதனடியிலிருந்து மிகச்சிறிய செந்நிறப்புழு ஒன்று நெளிந்து தலைதூக்கியது. “உரகம்” என்றாள். “உன்னுடன் இருந்திருக்கிறது. நீ மகவாய் மைந்தனாய் இருந்த காலம் முழுக்க… இதன் துணையின்றி நீ இருந்ததே இல்லை.” கர்ணன் தன் கால்கள் குளிர்ந்து தள்ளாடுவதை உணர்ந்தான்.

“இதுவே நான் உன் பின்னால் பேருருவெனக் கண்ட நாகம். உன்னை என்றும் இது தொடர்ந்திருக்கிறது. உன் காவலென உடனிருந்திருக்கிறது. உன் கனவுகளில் இதையே நீ கண்டாய்.” கர்ணன் மேலும் ஒரு காலடி பின்னால் வைத்து “இல்லை… இல்லை” என்றான். எதற்காக இவளிடம் இப்படி கெஞ்சுகிறோம் என்று தோன்றியதுமே சினம் தலைக்கேறியது. “நான் யாரென நான் அறிவேன். இந்த மாயங்களுக்கு நான் அஞ்சமாட்டேன்…” என்று கூவினான். “விழிமயக்குகள் கொண்டு விளையாடுகிறாய். நீங்கள் நாகர்கள். மானுடரின் உள்ளங்களுடன் சூதாடும் விழிகள் கொண்டவர்கள்.”

அவன் தன் படகை நோக்கி சென்றான். அதை நாணல்மேல் ஏற்றி வைத்திருந்தனர். “இளையோனே, இது உன் மணி” என்றாள் முதுமகள். “இல்லை, அது என்னுடையதல்ல. நீ செய்யும் விழிமயக்கு” என்றபடி அவன் படகை இழுத்து நீரில் இட்டான். அவளை நோக்கியபடி முழங்காலளவு நீரில் இறங்கி அதை அவன் தூக்கியபோது அந்த சிறிய நாகப்புழு உடல்வளைத்து தலையை சொடுக்குவதை கண்டான். அவன் எண்ணுவதற்குள் அது தெறித்து அவன் முழங்கைமேல் ஒட்டியது.

“ஆ ஆ” என்று பதறிய குரலில் கூவியபடி அவன் அதை தட்டி வீழ்த்தினான். பாய்ந்து படகிலேறி வெறிகொண்டவன் போல துடுப்பை இழுத்தான். அது நீரில் விழுந்து துள்ளித் துள்ளி எழுவதைக் கண்டான். அவன் கைகளில் முழுஉயிரும் குவிந்தது. அவன் துடுப்புகள் சுழன்று சுழன்று நீரில் விழ படகு அலைகள் மேல் ஏறி அமிழ்ந்து ஏறிச் சென்றது. சற்றுநேரத்திலேயே ஆற்றிடைக்குறை அப்பால் சென்றது.

மெல்ல மூச்சுதளர்ந்தபடி அவன் படகின் மேல் கால்நீட்டினான். விழிகளால் நீர்ப்பரப்பை நோக்கினான். அதிலிருந்த ஒவ்வொரு குமிழியும் அவன் உடலை விதிர்க்கச்செய்தது. ஒலிகேட்டு ஆற்றிடைக்குறையை நோக்கினான். உரகர்கள் கைகளை விரித்து வானைநோக்கி குரவையும் வாழ்த்தொலிகளுமாக நின்றனர். கீழ்வானில் விடிவெள்ளி எழுந்தது. செம்மஞ்சள்நிறப் புழு ஒன்றை எவரோ தூண்டிலில் கட்டி வீசியெறிந்ததுபோல.

மறுபக்கம் ஒளி தெரிய கர்ணன் திரும்பி நோக்கினான். வானில் எரியம்புகள் நூற்றுக்கணக்கில் எழுந்து வெடித்து மலர்களாகி கீழிறங்கின. இந்திரப்பிரஸ்தம் அத்தனை அருகிலா இருக்கிறது? மீண்டும் எரியம்புகள் எழுந்தமைந்தன. அவை மிகமிகப்பெரிய எரியம்புகள் என உணர்ந்தான். அத்தனை தொலைவில் அவை செம்மையும் மஞ்சளும் நீலமுமாக இதழ்விரித்து மலர்ந்து சிதறி துளிகளாகி உதிர்ந்தன. ஆற்றிடைக்குறையில் நாகர்கள் கைகளை விரித்து மெல்ல ஆடியபடி வாழ்த்துக்கூவினர். அங்கே நாகங்கள் பத்தி விரித்து நின்றாடுவதுபோல் தெரிந்தது.

அறியாது ஓரவிழி எதையோ நோக்க உடல் விதிர்த்தது. “ஆ!” என்றபடி அவன் திரும்பி நோக்கிய கணத்தில் நீருக்குள் அவன் படகைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பெருநாகத்தை பார்த்தான். அதன் கரியஉடல் நீரோட்டமென நெளிந்தது. தலை மூழ்கி எழ தொலைவில் வால்நுனி நெளிந்தது. கால்கள் நடுங்க எழுந்து நின்றபோது அது படகின் நிழலாக மாறியது. தொலைவிலெழுந்த ஒளிக்கேற்ப அது நெளிந்தது.

அவன் அமர்ந்து துடுப்பால் அந்நிழலை துழாவிக் கலைத்தான். மெல்ல நெஞ்சின் எடை கரைய துடுப்பிடத்தொடங்கினான். ஆற்றிடைக்குறையிலிருந்து நாகர்கள் படகுகளில் கிளம்பிச்செல்வதை கண்டான். நோக்கியிருக்கவே அவர்கள் நீரில் எழுந்து மறைந்தனர். எங்கு செல்கிறார்கள்? கிழக்கே. அவர்களின் தெய்வத்தின் ஆணை. அங்கே ஓடும் பெருநதி. அது பிரம்மபுத்திரையா? அப்படியென்றால் காமரூபத்திற்கும் அப்பால். மணிபூரகநாட்டுக்கும் அப்பால். அப்பாலிருப்பது பெருங்காடு. அங்கே மானுடர் வாழ்வதரிது என்பார்கள்.

மீண்டும் அவன் உடல் விதிர்த்தது. ஒருகணத்தின் ஒரு துளியில் அவன் அந்த நாகத்தை மீண்டும் கண்டான். அதன் விழிகளின் இமையாமணிகளை கூர்ந்தநாய்முகத்தை இரட்டைமண்டையை செதிலடுக்குகளை நெளிவை வால் அலைவை. விழிமயக்கல்ல. மீண்டும் அதை நோக்கினான். மிக அப்பால் எழுந்த எரியம்புகளின் வெளிச்சம் காட்டிய விழிமயக்குத்தான் அது. மயங்கியது விழியல்ல. உள்ளம். அஞ்சியிருக்கிறது. அச்சம் மயலாகிறது.

மயல் புவியை மாற்றுமா என்ன? இப்புவியே ஒரு மயல் என்கிறார்கள் வேதமுடிவறிந்தோர். கயிற்றரவு. கயிற்றைப் பாம்பென எண்ணும் அறிவீனம். பாம்பைக் கயிறென எண்ணும் அறிவீனத்தைவிட அது சிறந்தது. பாம்பு கடிக்கப்போவதில்லை. ஆம். எண்ணங்கள் எப்படி பீரிடுகின்றன! எண்ணங்களுக்கும் பொருளுக்கும் உறவே இல்லை. பொருள் என்பது எண்ணங்களின் கடிவாளம். மீறிப்பாய எப்போதும் துடிப்பவை அவை.

எண்ணங்கள் நன்று. அவை சிதறச்சிதற அச்சம் வடிந்தது. அனைத்தும் எளிதாகியது. அவ்வலைகளுக்கு நடுவிலிருந்து உறுதியான கரும்பாறைபோல சீரெண்ணம் எழுந்து வந்தது. அனைத்தும் அவற்றின் இடங்களில் சென்று அமைந்தன. இருள்கள் வழிந்தோடின. எங்கும் அசைவின்மை எழுந்தது. பின் அவை அறியப்பட்ட அசைவுகளாயின. இனிய நடனங்களாயின. சித்தம் இனிது. அடக்கப்பட்ட சித்தம் இனிது. அது பழகிய புரவி.

அவன் பெரும்படகு ஒன்றை நோக்கி சென்றான். அதன் கொடி கம்பத்தில் சுற்றியிருந்தமையால் அது எந்நாட்டின் கொடி என அறியக்கூடவில்லை. துழாவுபடகில் இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்லமுடியாது. கரையேறி அம்மக்களுடன் சென்றால் காலை வெயிலெழாது சென்றணைய முடியாது. அவன் மீண்டும் அப்படகின் கொடியையும் கீழ்வளைவில் பொறிக்கப்பட்ட அடையாளத்தையும் நோக்கினான்.

படகிலிருந்து ஒருவன் கைவீசி அவன் கலமேற விழைகிறானா என்று சைகையால் கேட்டான். கர்ணன் ஆம் என்று சொன்னதும் அவன் நீள்வடத்தை நீரில் வீசினான். அதனுடன் இணைந்த தக்கை வெண்ணிறவளையமாக நீரில் மிதந்தது. அதன்பின்னரே கர்ணன் மகதத்தின் யானைக்கொடியை பார்த்தான். ஒருகணம் தயங்கியபின் ஒன்றும் செய்வதற்கில்லை என்று முடிவெடுத்தான். படகோட்டி வருக வருக என்று கையசைத்தான். கர்ணன் அதை நோக்கி படகைச் செலுத்தினான்.

அது மகதத்தின் இரண்டாவது படகணி என்று தெரிந்தது. பொதிகொண்டுசெல்லும் பெரும்படகு. பதினெட்டு பாய்கள் எழுந்து மேற்குநோக்கி புடைத்துநின்றன. அவற்றில் சுழன்ற காற்றின் விசையால் கொடிமரம் நடுங்கியது. சுற்றியிருந்த கொடி விடுபட்டு எழுந்து துடிதுடிக்கத் தொடங்கியது. மகதப்படகு அசையாமல் நிற்பதாகத் தோன்றினாலும் அவன் துடுப்பை வலித்து அணுகுவதற்குள் நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தது. அதன் தக்கை மட்டும் கயிறு நீள நீள விலகாமல் அங்கேயே அசைந்தபடி நின்றது.

கர்ணன் தக்கையை பற்றிக்கொண்டதும் அதைத் தூக்கி தன் படகில் இட்டு நங்கூர வளையத்துடன் பிணைத்தான். கயிற்றை அவன் இருமுறை அசைத்ததும் படகிலிருந்து அதை இழுக்கத்தொடங்கினார்கள். மிகவிரைவாக அவன் மகதத்தின் படகை நோக்கிச் சென்றான். ஓரவிழி அருகே நீருக்குள் நெளிந்துவந்த மாநாகத்தை பார்த்துவிட்டது. ஆனால் விழிதிருப்பி நோக்கினால் அது மீண்டும் நிழலாகிவிடும் என அறிந்திருந்தான். கழுத்தை இறுக்கியபடி அசையாது அமர்ந்திருந்தான்.