வெய்யோன் - 41

பகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 1

முன்புலரியிலேயே கர்ணனின் அரண்மனைமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி காலடிகள் ஓசையிட விரைந்து காவலரை பதறி எழச்செய்து “எங்கே? மூத்தவர் எங்கே?” என்றான் சுஜாதன். அவர்கள் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே கூடத்தில் ஓடி, படிகளில் காலடி ஒலிக்க மேலேறி இடைநாழியில் விரைந்தபடி “மூத்தவரே!” என்று கூவினான். கர்ணனின் துயிலறை வாயிலில் நின்ற காவலன் திகைத்தெழுந்து நோக்க “எங்கே மூத்தவர்? சித்தமாகிவிட்டாரா?” என்றான்.

கதவைத் திறந்த சிவதர் “கூச்சலிடாதீர்கள் அரசே, அரசர் அணிபுனைகிறார்” என்றார். “அணிபுனைவதற்கு நாங்கள் என்ன பெண்கொள்ளவா செல்கிறோம்? வேட்டைக்கு! சிவதரே, நாங்கள் வேட்டைக்கு செல்கிறோம்!” என்றான். “இதற்குமுன் வேட்டைக்கு சென்றதே இல்லையா?” என்றார் சிவதர். “பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் மூத்தவருடன் இப்போதுதான் நான் செல்லப்போகிறேன்” என்றான் சுஜாதன். கைகளைத் தூக்கி வில்லம்புபோல காட்டி “இம்முறை நானே தன்னந்தனியாக மதகளிறு ஒன்றை எதிர்கொள்ளப்போகிறேன்” என்றான்.

புன்னகையுடன் “நன்று” என்று சொன்ன சிவதர் “அதற்கு எளிய வழியொன்று உள்ளது” என்றார். “என்ன?” என்றான் சுஜாதன். “யானைக்குப் பிடிக்காத மணங்களை உடலில் பூசிக்கொள்வதுதான். தங்கள் உடலில் இருக்கும் இந்த யவனப்பூஞ்சாந்து காட்டில் உள்ள அத்தனை யானைகளையும் மிரண்டு இருளுக்குள் ஓடச்செய்துவிடும்” என்றார். சுஜாதன் உரக்க நகைத்து “ஆம், அதை நானும் எண்ணினேன். யானையை நான் எதிர்கொள்ள வேண்டும்… யானை என்னை எதிர்கொள்ளக்கூடாதல்லவா!” என்றான்.

உள்ளிருந்து கர்ணன் வெளிவந்து “என்ன, புலரியிலேயே பேரோசை எழுப்புகிறாய்?” என்றான். அவன் அருகே ஓடிச்சென்று ஆடை நுனியைப்பிடித்து ஆட்டி “வேட்டைக்கு! மூத்தவரே வேட்டைக்கு!” என்றான் சுஜாதன். “ஆம், வேட்டைக்குத்தான்” என்றபடி கர்ணன் “சென்று வருகிறேன் சிவதரே” என்றான். சிவதர் “படைக்கலங்கள் தேரில் உள்ளன” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் நடக்க சுஜாதன் அவனுக்குப்பின்னால் ஓடிவந்து “நான் மூன்று விற்களையும் பன்னிரு அம்பறாத்தூணிகளையும் என் தேரில் வைத்திருக்கிறேன்” என்றான். “என்ன செய்யப்போகிறாய்? காய்கனிகளை அடித்து விளையாடப்போகிறாயா?” என்றான் கர்ணன்.

“மூத்தவரே” என்றபடி சுஜாதன் அருகே வந்து அவன் கைகளைப் பற்றி தன் தோளில் வைத்தபடி “நான் இம்முறை உண்மையிலேயே களிறு ஒன்றை எதிர்கொள்வேன்” என்றான். “நாம் களிறுகளை கொல்லச் செல்லவில்லை இளையோனே” என்றான் கர்ணன். “அவை வேளாண்குடிகளுக்குள் இறங்காமல் உள்காடுகளுக்குள் துரத்திச் செல்கிறோம். அவற்றின் நினைவில் சில எல்லைகளை நாம் வகுத்து அளிக்கிறோம். அங்கு வந்தால் வேட்டையாடப்படுவோம் என்பதை அவை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லும். அந்நினைவே காட்டுக்கும் விளைநிலத்திற்குமான எல்லையாக அமையும்” என்றான்.

“நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் அந்நினைவு நெஞ்சில் பதியாதா?” என்றான் சுஜாதன். “பதியும். ஆனால் அவற்றை மீறுவதைப்பற்றியே அவை எண்ணிக்கொண்டிருக்கும். யானைகள் நெறிகளுக்குள் வாழ்பவை.” அவன் கையை அசைத்து “ஏன்?” என்றான் சுஜாதன். “ஏனெனில் அவை மிகப்பெரிய உடல் கொண்டவை. ஒளிந்து கொள்ள முடியாதவை. அவற்றின் மேல் தெய்வங்கள் அமர்ந்துள்ளன.”

சுஜாதன் அச்சொற்களால் விழிசற்று மயங்கி கனவுக்குள் சென்று மீண்டு “எவ்வளவு பெரிய உண்மை! ஒளிந்து கொள்ள முடியாதவர்கள் நெறிகளுக்குள்தான் வாழ்ந்தாக வேண்டும் இல்லையா?” என்றான். “நீ சிந்திக்கத் தொடங்கிவிட்டாய் இளையோனே. விரைவிலேயே சிறந்த சூதனாகிவிடுவாய்” என்றபடி சிரித்துக்கொண்டே கர்ணன் இடைநாழியைக் கடந்து படிகளில் இறங்கினான். அவனுக்குப் பின்னால் ஒவ்வொரு படியாக தாவி இறங்கி முன்னால் சென்று நின்று “இம்முறை புரவியில் உள்காடுகளுக்குள் செல்லலாம் என்று மூத்தவர் சொன்னார்” என்றான் சுஜாதன். “ஆம்” என்றான் கர்ணன்.

“வெண்புரவிகளை முற்றிலும் தவிர்த்துவிட்டோம். முழுக்க முழுக்க கரிய புரவிகள்தான்” என்றான் சுஜாதன். “ஆம், காட்டில் வெண்புரவிகள் தனித்து தெரிகின்றன. அவற்றை யானைகள் விரும்புவதில்லை.” “அப்படியானால் வெண்புரவிகள் எங்கே வாழ்கின்றன?” என்றான் சுஜாதன். “வெண்புரவிகள் நம் நிலத்தைச் சார்ந்தவை அல்ல இளையோனே. அவை வெண்மணல் விரிந்த பெரும்பாலை நிலங்களிலிருந்து இங்கு வரும் சோனகப்புரவிகள்.” “ஓ” என்று சொன்ன சுஜாதன் “இங்கே அவை தனித்துத் தெரிவதனால் எப்போதும் நாணிநடுங்குகின்றன” என்றான். கர்ணன் “ஆம், களத்திலும் அவையே முதற்பலியாகின்றன” என்றான்.

கர்ணன் முற்றத்திற்குச் சென்று அங்கு தலைவணங்கிய வீரர்களின் தோள்களைத் தொட்டும் தலைகளை வருடியும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு வாயிலில் நின்ற தன்தேரில் ஏறிக்கொண்டான். சுஜாதன் ஓடிச்சென்று தன்னுடைய தேரில் ஏறியபடி “நீங்கள் முன்னால் செல்லுங்கள் மூத்தவரே. நான் தொடர்ந்து வருகிறேன்” என்றான். “நாம் எங்கு செல்கிறோம்?” என்று கர்ணன் கேட்டான். “கோட்டைவாயிலுக்கே வருகிறோம் என்று சொல்லிவிட்டேன். இங்கிருந்து நாம் கிளம்பும் சங்கொலி கேட்டால் நூற்றுவரும் கோட்டை வாயிலுக்கு வந்துவிடுவார்கள்” என்றான்.

கர்ணன் “காட்டைக் கலக்குகிறோமோ இல்லையோ, வேட்டைக்கு செல்லுமுன் அஸ்தினபுரியை கலக்குகிறோம்” என்றான். “கலக்கவேண்டுமே. நாங்களெல்லாம் அரண்மனையில் வீணே தின்று சூதாடி பொழுது கழிக்கிறோம் என்று சொல்கிறார்கள். அவ்வாறில்லை என்று மக்கள் அறிய வேண்டுமே” என்றான் சுஜாதன். கர்ணன் சிரித்தபடி பாகனின் தலையை மெல்ல தொட அவன் கடிவாளத்தை சுண்டி புரவிகளை கிளப்பினான். மூன்று புரவிகள் இழுத்த குறுகிய விரைவுத்தேர் அதிர்ந்து சகடங்கள் குடத்தில் முட்டும் ஒலியுடன் முற்றத்திலிருந்து சாலையை நோக்கி ஏறியது.

சகடஒலி மாறுபட்டு தேர் விரிசாலையில் கோட்டையை நோக்கி செல்லத்தொடங்கியதும் கர்ணன் இருக்கையில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு நன்கு சாய்ந்துகொண்டான். சகடஒலி நகரத்தின் அனைத்து சுவர்ப்பரப்புகளிலும் பட்டு எதிரொலித்து வௌவால்களை பதறி மேலெழச்செய்தது. எரியும் காட்டில் புகையில் பறக்கும் சருகுப்பிசிர்கள் போல வானெங்கும் வௌவால்கள் பறப்பதை அவன் கண்டான். அவற்றின் கருமையே வானத்தை வெளிர் நிறமாக்கியது என்று தோன்றியது.

அச்சாலைக்கு இணையாக வந்துகொண்டிருந்த பெருஞ்சாலையில் கௌரவர்களின் தேர்கள் பேரொலி எழுப்பியபடி இடிந்து சரியும் பாறைக்கூட்டங்கள் போல கோட்டையை நோக்கி சென்றுகொண்டிருந்தன. அவ்வொலியில் நகரத்தின் அனைத்து மரங்களில் இருந்தும் பறவைகள் கலைந்தெழுந்து வானில் சிறகடித்து கூச்சலிட்டன. நகரம் பல்லாயிரம் முரசுத்தோல்பரப்புகளாக மாறியது.

கிழக்கிலிருந்து சுழன்று வந்து வீசிய காற்றில் மேற்குவாயில் ஏரியிலிருந்து எழுந்த நீர்மையும் புழுதிமணமும் இருந்தது. சுஜாதனின் தேர் அவனுக்கு சற்று பின்னால் வந்தது. அதன் குதிரை தன் மூக்கால் கர்ணனின் தேரின் பின்பகுதியின் கட்டையை முகர்வது போல் மூச்சுவிட்டது. சுஜாதன் “விரைவு மூத்தவரே, விரைவு!” என்று கூவினான். கர்ணன் அவனை திரும்பிப் பார்த்து புன்னகைத்தான்.

அங்காடியை அணுகியபோது மட்கிய கூலமும் தென்னக மிளகும் பலவகையான எண்ணெய்க் கசடுகளும் நறும்பொருட்களும் கலந்த கடைமணம் எழுந்தது. மூடிய அங்காடிகளிலும் முற்றத்திலும் சாலையிலும் மேய்ந்தலைந்த எலிக்கூட்டங்கள் அஞ்சி பலகைப்பரப்புகளுக்கு அடியில் சென்று ஒதுங்க தூங்கிக் கொண்டிருந்த தெருநாய்கள் வால்சுழற்றியபடி குரைத்து ஓடிவந்து தங்கள் எல்லைக்கு அப்பால் நின்றபடி ஊளையிட்டு துள்ளின.

கார்த்திகைவிழவின் எரிபனை போல நூறுபந்தங்களுடன் நின்ற காவல்மாடம் ஒன்று கடந்து சென்றது. அதன்மேல் குளிர்காலத்து நிலவென தெரிந்தது பந்தஒளி பட்ட முரசுத்தோல்பரப்பு. அதன் காவலர்கள் எழுந்து அவன் கடந்து செல்கையில் வாள்களைத்தாழ்த்தி வாழ்த்தினர். தொலைவில் அஸ்தினபுரியின் கோட்டையின் விளிம்பில் எரிந்த பந்தங்களின் ஒளிச்சரடு தெரிந்தது. அங்கிருந்த காவல்மாடங்களில் எரிந்த பந்தங்களின் வெளிச்சத்தில் சிறகு ஓய்ந்து அமைந்திருந்த கழுகுகள்போல கொடிகள் தெரிந்தன.

பெருமுற்றத்தை நோக்கி அவன் செல்கையில் அவனுக்குப்பின்னால் கௌரவர்களின் தேர்ப்படை வந்து இணைந்துகொண்டது. முதல் தேரில் இருந்த துச்சலன் கையைத்தூக்கி “மூத்தவரே!” என்று கூவினான். கர்ணன் திரும்பி அவனை நோக்கி கையசைத்துவிட்டு புன்னகைக்க துர்மதன் “மூத்தவரே, புலர்வதற்குள் நாம் செல்லவேண்டியிருக்கிறது” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் அவனை நோக்கியும் கையசைத்தான்.

தேர்கள் அஸ்தினபுரியின் கோட்டை முகப்பின் முற்றத்தை அடைந்தன. அங்கெழுந்த தூசியை இருளின் மணமாகவே அறிய முடிந்தது. தேர்கள் ஒவ்வொன்றாக வந்து நின்று முற்றத்தை நிறைத்ததும் கர்ணன் படிகளில் மிதித்து ஓசையுடன் இறங்கி புழுதியில் கால்புதைய நடந்து இடையில் கைவைத்து நின்று கோட்டையை அண்ணாந்து நோக்கினான். தேர்களில் இருந்து ஓசையுடன் குதித்த கௌரவர்கள் அவனை நோக்கி ஓடிவந்து சூழ்ந்து கொண்டனர். துச்சலன் “நல்ல குளிர் மூத்தவரே. காலை இத்தனை இனிதாக இருக்குமென்று நான் எப்போதும் அறிந்ததில்லை” என்றான்.

“நீங்களெல்லாம் காலையில் விழிப்பதே இல்லையா?” என்றான் கர்ணன். “விழிப்பதுண்டு. ஆனால் முன்காலையில் அல்ல” என்றான் சுபாகு. “முன்காலையில் மட்டுமே கல்வி உள்ளத்தில் படியுமென்று மூத்தோர் சொல்கிறார்கள்” என்றான் கர்ணன். “ஏனெனில் இளங்காற்றுகளாக தெய்வங்கள் மண்ணைநோக்கி மூச்சுவிடுகின்றன. காலையில் அனைத்து கால்தடங்களையும் அழித்து அவை உலகை தூய்மைப்படுத்தி வைத்திருக்கின்றன.” கர்ணனின் தோளைப்பற்றி உலுக்கி “எங்கள் உள்ளம் மேலும் தூய்மையானது” என்றான் சுஜாதன். “ஏனெனில் இளங்காற்றால் தூய்மைப்படுத்தப்பட்டபின் இவ்வுலகம் இளவெயிலாலும் தூய்மைபடுத்தப்பட்ட பின்பே நாங்கள் எழுகிறோம்.”

கர்ணன் சிரித்தபடி “மூடன்” என்றான். “ஆனால் இவனுக்குத்தான் உரிய முறையில் சொல்லெடுக்கத் தெரிகிறது.” கையை வீசி உரக்க “ஆம் மூத்தவரே, இவன் ஒன்றை சொன்னவுடனே அதைத்தானே நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் எண்ணுவதுண்டு” என்றான் துச்சலன். கர்ணன் “அப்படியென்றால் நீங்கள் அனைவரும் இவனைப்போல் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்” என்றான். “அப்படியில்லை மூத்தவரே. நாங்கள் எண்ணுவதற்கு முன்னரே அவனைப்போல் எண்ணுவதில்லை. அவன் எண்ணியபிறகு அப்படி எண்ணியிருப்பதை கண்டுகொள்கிறோம்” என்றான் துச்சலன். “உங்களிடம் பேசி புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவாற்றல் இல்லை” என்று இருகைகளையும் விரித்த கர்ணன் வானத்தை நோக்கி “விடியத்தொடங்குகிறது” என்றான்.

சுஜாதன் “நாம் ஏன் இங்கு காத்திருக்கிறோம்? கிளம்பவேண்டியதுதானே?” என்றான். “நகர்வாயில் திறக்க வேண்டாமா?” என்றான் கர்ணன். “ஆம், நகர்வாயில் திறக்கவேண்டியுள்ளது” என்று சுஜாதன் சொன்னான். “நாம் ஆணையிட்டால் திறக்கமாட்டார்களா?” என்றான் பீமபலன். துச்சலன் “மூடா, பிரம்மமுகூர்த்தத்தில்தான் நகர்வாயிலை திறக்கவேண்டுமென்று ஆணை உள்ளது. ஏனெனில் இந்நகர் முழுக்க குடியிருக்கும் மூதாதையரும் குலதெய்வங்களும் பிரம்மமுகூர்த்தத்தில் மட்டுமே விண்ணுக்கு மீள்கின்றனர். அதன்பிறகு கோட்டை வாயிலை திறந்தால்தான் நமக்கு தெய்வங்களின் அருள் உண்டு.”

“இந்நேரம் கோட்டைக்கு அப்பால் நான்குகாதத் தொலைவிற்கு வணிகர்களும் ஆயர்களும் அயலவர்களும் நிரை வகுத்திருப்பார்கள்” என்றான் சுஜாதன். “கோட்டை வாயிலை திறந்ததும் பெருவெள்ளம் உள்ளே புகுவதுபோல அவர்கள் வருவார்கள். நான் பலமுறை கண்டிருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவர் விழிகளிலும் இந்நகரம் அளிக்கும் வியப்பைப் பார்க்கையில் அத்தனைபேரும் புதிதாக உள்ளே வருவதைப்போல் இருக்கும். ஆனால் அவர்களில் பாதிப்பேர் ஒவ்வொரு நாளும் உள்ளே வருபவர்கள்.” கர்ணன் “நான் காலையில் வரும்போது எண்ணிக் கொண்டேன், காலையில் இந்நகரம் துயிலெழும் குழந்தைபோல் புன்னகைக்கிறது என்று” என்றான்.

சுபாகு அதை புரிந்துகொள்ளாமல் “பெரும்பாலான குழந்தைகள் துயிலெழுந்தவுடன் உளம்சுருங்கி அழுகின்றன” என்றான். கர்ணன் சலிப்புச்சிரிப்புடன் தலையை அசைத்தபடி “விடிவெள்ளி எழுவதை பாருங்கள்…” என்றான். “நான் இதுவரை விடிவெள்ளியை பார்த்ததே இல்லை” என்றான் சுஜாதன். “விடிவெள்ளி நீலமாக பெரிதாக இருக்கும் இளையோனே. அதை நோக்குவதற்கு வெறும் விழிகளே போதும்” என்றான் கர்ணன். “அது எத்திசையில் வரும்?” என்றான் சுஜாதன். கர்ணன் சிரித்தபடி “இதை யாராவது அவனுக்கு கற்றுக் கொடுங்கள்” என்றான்.

துச்சலன் “நான் கற்றுக் கொடுக்கிறேன்” என்றான். “தம்பி, விடிவெள்ளி கிழக்கே உதிக்கும்.” ஆர்வத்துடன் “கிழக்கே என்றால் இங்கே எந்தத் திசை?” என்றான் சுஜாதன். துச்சலன் மேலும் கூர்மைகொண்டு “தென்கிழக்குள்ள நமது அரண்மனைக்கருவூலமுகடுகள் தெரிகிறதல்லவா அதற்குப் பின்னால்” என்றான். சுஜாதன் நோக்கி வியப்புடன் “ஆம், அதற்குப் பின்னால் நிறைய விண்மீன்கள் உள்ளன” என்றான். “பார்த்துக் கொண்டே இரு. அங்கொரு நீலப்புள்ளிதோன்றி மேலே வரும். அதுதான் விடிவெள்ளி” என்றான் சுபாகு. துச்சலன் “அது தோன்றிய பிறகுதான் அரண்மனை வாயிலை திறப்பார்கள்” என்றான். “ஏன்?” என்றான் சுஜாதன்.

“விடிவெள்ளி கதிரவனின் தூதன். சூரியன் மண் நிகழ்ந்துவிட்டான் என்பதை அது அறிவிக்கிறது. அதன்பின்பு இந்நகரில் மானுடரன்றி தெய்வங்கள் இருக்க இயலாது.” சுஜாதன் திரும்பி நோக்கியபின் “அப்படியானால் பகல் முழுக்க நாம் வணங்கும் குலதெய்வங்கள் வெறும் கல்லாகவா அமர்ந்திருக்கின்றன?” என்றான். “இதற்குமேல் இவனுக்கு எதையும் சொல்ல மானுடரால் இயலாது” என்று கைவிரித்தபடி கர்ணன் விலகிச் சென்றான். “இல்லை மூத்தவரே, நான் என்ன கேட்கிறேன் என்றால்…” என்றான் சுஜாதன். “அவனுக்கு விளக்குங்கள்” என்று கர்ணன் கைகாட்டினான்.

துர்மதன் “இளையோனே, கல்லாக இருப்பவைதான் நமது குலதெய்வங்கள். ஆனால் நாம் அவற்றுடன் பேசமுடியும். ஏனென்றால் அந்தக் கல்லில் விண்ணிலிருக்கும் தெய்வங்கள் தங்கள் காதுகளை வைத்திருக்கின்றன” என்றான். சுபாகு உரக்க நகைத்தபடி “மூத்தவரே, இவன் இன்னும் அறிவாளியாக இருக்கிறான்” என்றான். கர்ணன் “அதில் ஒரு போட்டி நிகழுமென்றால் உங்கள் மூத்தவரே வெல்வார். அறிவில்லை என்பதுடன் அது தேவையில்லை என்றும் தெளிந்திருக்கிறார்” என்றான்.

“மூத்தவரே, உண்மையில் என் உடன்பிறந்தார் அனைவரும் என்னை அறிவற்ற இளையோன் என்று எண்ணுகிறார்கள். மூத்தவர்கள் அப்படி எண்ணுவதைப்பற்றி எனக்கு வருத்தமில்லை. ஆனால் என் வயதையொட்டிய இவர்களும் அவ்வாறே எண்ணுவதை எண்ணும்போதுதான் நான் வருந்துகிறேன்” என்று விரஜஸின் மண்டையை அடித்தான் சுஜாதன். “அதை மறுத்து என்னை நிறுவத்தான் இன்று வேட்டைக்கு வருகிறேன். நாம் காட்டுக்குச் செல்வோம். பெருங்களிறு ஒன்றை நான் ஒற்றை வேலுடன் சென்று எதிர்கொள்வேன். அதை வீழ்த்தி அதன் கொம்புகளுக்கு நடுவே என் வேலை கொண்டு செலுத்தி வளைவு நிமிர்த்து நிற்பேன். அதை சூதர்கள் பாடத்தான் போகிறார்கள்.”

கர்ணன் “இவன் சொல்வதைப்பார்த்தால் ஏற்கெனவே சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டார்கள் போல் தோன்றுகிறதே” என்றான். “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றான் சுபாகு. “சூதர்கள் இப்போதெல்லாம் கௌரவர்களைப்பற்றி பாடும் பெரும்பாலான பாடல்கள் மடைப்பள்ளியில் தயாராகின்றன என்று தோன்றுகிறது.” சுஜாதன் “இது இழிவுபடுத்துவது. என் வீரத்தை நான் நிறுவியபிறகு இச்சொற்கள் ஒவ்வொன்றையும் எண்ணி நீங்கள் வருந்துவீர்கள்” என்றான். “மடைப்பள்ளியில் சோற்றுக்கட்டிக்குப் பாடும் சூதர்கள் என்னை பாடவேண்டியதில்லை.” துச்சலன் “நீ எப்போதும் என்னை இழிவுசெய்துபேசுகிறாய் இளையோனே” என்று சினத்துடன் சொன்னான்.

சுபாகு சிரித்தபடி “நம்மைப்பற்றி நமக்கிருக்கும் எண்ணத்தை நமது எதிரிகள் அறியவில்லை என்பது எவ்வளவு பெரிய நல்லூழ்! எவரேனும் ஒருவனுக்கு அது தெரிந்தால் பெரும்படையுடன் அஸ்தினபுரியின்மேல் கொடிகொண்டு வருவான்” என்றான். துச்சகன் அப்பால் தெரிந்த கோட்டைவாயிலை நோக்கி “அங்கொரு ஒளி தெரிகிறது” என்றான். கர்ணன் நோக்க கோட்டையின் திட்டிவாயில் ஒன்று மெல்ல திறந்து சிறிய ஒளிக்கட்டம் ஒன்று தெளிந்தது. அதை நோக்கி வீரர்கள் சென்றதும் அது மறைந்தது. அவர்கள் விலக மீண்டும் தெளிந்து மீண்டும் மறைந்தது.

“யாரோ வந்திருக்கிறார்கள்” என்றான் கர்ணன். “பெருவணிகர்களாக இருக்கும். கங்கையில் இருந்து இங்கு வருவதற்கான தொலைவை சற்றுமிகையாக கணக்கிட்டிருப்பார்கள்” என்றான் துச்சலன். “அருமணிகள் கையிலிருப்பதனால் கோட்டைக்குள் வர விரும்புகிறார்கள்.” கோட்டைக்கு மேலிருந்த பெருமுரசு அதிரத்தொடங்கியது. மான்கால் நடையில் அது ஒலிக்க “புலரி! புலரிமுரசு!” என்றான் சுஜாதன். “மூடா புலரிமுரசு என்றால் சங்கொலியும் மணியொலியும் இருக்கும்” என்றான் துச்சலன். “புலரி முரசு கேட்டதுமே மூத்தவர் எழுந்து உண்ணத்தொடங்கிவிடுவார்” என்றான் சித்ரகுண்டலன். “ஆம்” என்றான் துச்சலன்.

கர்ணன் “எவரோ வந்திருக்கிறார்கள்” என்றான். “எவரோ என்றால் யார்?” என்றான் துச்சலன். “அரசகுடியினர். அஸ்தினபுரியை சேர்ந்தவர்கள்” என்றான். “அஸ்தினபுரியைச் சேர்ந்த அரசகுடியினர் என்றால் இப்போது யார்?” என்றபின் “பிதாமகர் பீஷ்மர்!” என்றான் துச்சலன். “இருக்கலாம்” என்றான் கர்ணன். “அவர் இருக்கும் காட்டில் மும்முறை சென்று பார்த்தேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளவேயில்லை. அஸ்தினபுரியையும் தன் குலமுறையையும் மறந்து காட்டுமனிதராக இருந்தார். உயிர் தங்கியிருக்கும் அழிக்கூடு போல் இருந்தது உடல். மூங்கில்வில்லும் நாணல்அம்புமாக நாளெல்லாம் காட்டில் அலைகிறார். எவருடனும் பேசுவதில்லை என்று உடனிருந்த மாணவர்கள் சொன்னார்கள்.”

துர்மதன் “இப்போது ஏன் இங்கு வருகிறார்?” என்றான். துச்சலன் “யாரறிவார்? ஏதேனும் செய்தி இருக்கும்” என்றான். “மூத்தவரைப்பற்றி ஏதேனும் செய்தி சென்றிருக்குமோ?” என்றான் துர்மதன். சமன் “மூத்தவர் என்ன பிழை செய்தார்?” என்றான். “அவர் எதுவும் செய்யாமல் இருப்பதுதான் பெரும்பிழை. மதுவுண்கிறார், உண்டாட்டில் திளைக்கிறார்.” துச்சகன் “நம்முடன் இன்று வேட்டையாட வருவதற்கு விரும்பினார். விதுரர் தடுத்துவிட்டார்” என்றான். கர்ணன் “அவர் அரசர். அஸ்தினபுரியை விட்டு அவர் நீங்குவதற்கு முறைமைகள் பல உள்ளன இளையோனே” என்றான்.

“இங்கு அவர் இருந்து என்ன செய்யப்போகிறார்? நாடாள்வது அரசியல்லவா?” என்றான் துச்சலன். “அரியணையில் கோல்தாங்கி முடிசூடி அமர்ந்திருக்க அவர் வேண்டுமல்லவா?” என்றான் கர்ணன். “ஆம், அவர் செய்வது அது ஒன்றைத்தான்” என்று துச்சகன் சொன்னான். துச்சலன் “அரியணையில் அமர்ந்திருக்கையில் அவரைப்போல் அதை நிறைக்கும் ஒருவரை நான் பார்த்ததே இல்லை” என்றான். “ஆம். அவர் அதன்மேலேயே துயிலாமல் இருந்தால்…” என்றான் பின்னால் நின்ற வாலகி. துச்சலன் “வாயை மூடு!” என்று உரக்க சொன்னான். “அத்தனை பேர் அத்தனை விதமாக பொருளற்று பேசிக்கொண்டிருக்கையில் எப்படி துயிலாமல் இருக்க முடியும்?”

துர்மதன் “அதை எவரேனும் பிதாமகருக்கு சொல்லியிருப்பார்கள். மூத்தவரை கண்டித்து நல்வழிப்படுத்தும் பொருட்டு கிளம்பி வந்திருக்கிறார்” என்றான். கர்ணன் கோட்டையை நோக்கியபடி “இருக்கலாம். ஆனால்…” என்றபின் நினைவுகூர்ந்து “நேற்று நான் தந்தையிடம் பேசுகையில் துரியோதனர் விழைவது ஒரு எதிரியை என்றார்” என்றான். “எதிரியையா?” என்றான் சுபாகு. “ஆம், எதிரிகள் முன்னால் இருக்கையில் மட்டுமே அவரால் செயலூக்கம் கொள்ள முடிகிறது என்கிறார்” என்றான் கர்ணன்.

“அவருக்கு எதிரி என்றால் ஒருவன் மட்டுமே” என்றான் சுஜாதன் இயல்பாக. அச்சொல்லால் அங்கிருந்த அத்தனை பேருமே சற்று உடல்மாறுபட்டனர். அவன் அதை உணர்ந்து “எதிரி என்றால், அதாவது அவர் எதிரி என்று நினைப்பவர் அல்ல” என்று ஏதோ சொல்லவர “வாயை மூடு” என்றான் துச்சலன். சுபாகு “அவருக்கு எதிரி அவரேதான்” என்றான். துச்சலன் மேலும் சினத்துடன் “என்ன சொல்கிறாய்?” என்று கேட்க “இல்லை… நான் அவன் சொன்னதை நிகர்ப்படுத்துவதற்காக சொல்ல முயன்றேன். அது மேலும் பிழையாக போய்விட்டது” என்றான்.

கர்ணன் “அவருக்குத்தேவை அவருக்கு நிகரானவன் என அவர் எண்ணும் ஓர் எதிரி. அவனை நாளும் எண்ணி அவனுக்கு மேலாக தன்னை அமைக்கையில் மட்டுமே அவர் செயலூக்கம் கொள்கிறார். அதற்காகத்தான் இங்கு அவர் காத்திருக்கிறார் என்று தோன்றுகிறது” என்றான். “ஆம்” என்றான் துச்சலன். அத்தனைபேரும் அச்சொற்களால் குழப்பம் அடைந்தவர்களைப்போல பேசாமலானார்கள்.

பந்தவெளிச்சத்தில் கொடிஒன்று கம்பத்தில் ஊர்ந்து ஏறுவதை கர்ணன் நோக்கினான். “தேவாங்குபோல் ஏறுகிறது” என்றான் சுஜாதன். துச்சலன் “இந்த இருட்டில் அந்தக் கொடியை எவர் பார்க்க முடியும்?” என்றான். “தெரிகிறது” என்று சொல்லி கர்ணன் நிமிர்ந்தான். “சொல்லுங்கள் மூத்தவரே, யார்?” என்றான். “பிதாமகர் அல்ல” என்றான் கர்ணன். “அப்படியென்றால்…” தன் சால்வையை சீரமைத்துக்கொண்டு “காத்திருப்போம்” என்று கர்ணன் சொன்னான். “பிதாமகர் அல்ல என்றால் அது யார்?” என்று துர்மதன் உரக்க கேட்க துச்சகன் “காத்திருக்கும்படி மூத்தவர் சொல்கிறாரல்லவா? அதற்கப்பால் என்ன உனக்கு சொல்?” என்றான். “ஆணை” என்றான் அவன்.

பீமபலன் உரக்க “விடிவெள்ளி” என்று கூவினான். அங்கே கிழக்கே சுடர் போல தெரிகிறது!” அத்தனை பேரும் திரும்பி அஸ்தினபுரியின் கருவூலமாளிகைகளின் குவைகளுக்கு அப்பால் மெல்ல தெளிந்து வந்த சிவந்த புள்ளியை பார்த்தனர். “இதுவா விடிவெள்ளி? இதை நான் எவ்வளவோ முறை பார்த்திருக்கிறேன்” என்று சுஜாதன் சொன்னான். கோட்டைக்கு மேல் மூன்று முரசுகள் குதிரைநடைத் தாளத்தில் முழங்கத்தொடங்கின. நகரெங்கும் அதைக்கேட்டு காவல்மாடங்களின் முரசுகள் ஒலித்தன. சங்கொலிகளும் மணியோசைகளும் அதனுடன் இணைந்து கொண்டன. அப்பால் குறுங்காட்டிலிருந்து பறவைகள் எழுந்து இருண்ட வானில் கூவிச்சுழன்றன.

கோட்டையில் இருபக்கத்திலிருந்து இரண்டு யானைகள் பாகர்களால் அழைத்துச் செல்லப்பட்டன. நெடுநேரமாக காத்திருந்த அவை உடல்களை ஊசலாட்டியபடி துதிக்கையை எட்டிஎட்டி மண்ணில் வைத்து சென்று கோட்டைவாயிலைத் திறக்கும் பொறியின் இரும்பாழியின் அருகே நின்றுகொண்டன. கோட்டை மேலிருந்து எரியம்பு ஒன்று எழுந்து அணைந்ததும் பாகர்கள் ஆணைகளை கூவ அவை ஆழியின் பிடிகளைப்பற்றி சுழற்றத்தொடங்க அவற்றுடன் இணைந்த வடங்கள் மலைப்பாம்பு போல மெல்ல நகர்ந்து மேலும் பல இணையாழிகளை இழுத்து சுழலச் செய்தன. எண்ணையும் மெழுகும் புரட்டப்பட்டிருந்தாலும் எடையினால் அவை சீவிடு போல ஒலிஎழுப்பியபடி சுழல அஸ்தினபுரியின் கோட்டைக் கதவு பேரோசையுடன் மெல்ல திறந்தது.

கதவின்நடுவே சுதையாலான வெண்தூணொன்று தோன்றி இருபக்கமும் அகன்று பெரிதாகியது. பின்பு மேலிருந்து கட்டித்தொங்கவிடப்பட்ட பெரிய பட்டுத்திரையென தெரிந்தது. மறுபக்கம் எழுந்த செவ்வொளி விழுந்த நிலம் கீழெல்லையில் தெரிய பொற்பின்னல் வேலைகள் செய்த முந்தானை கொண்ட திரைச்சீலையாக அது தோன்றியது. காற்றில் பந்தங்கள் ஆட அத்திரைச்சீலை நலுங்கியது. வாயிலுக்கு மறுபக்கமிருந்து பந்தங்கள் ஏந்திய புரவிகள் உள்ளே வந்தன. “யார்?” என்று துச்சலன் மெல்லிய குரலில் கேட்டான். கௌரவர்களில் எவரோ மூச்செறிந்தது கேட்டது.

“அரசமுறைத்தூதாக வருகிறான்” என்றான் கர்ணன். “நாம் சென்று வரவேற்க வேண்டுமா?” என்று துச்சலன் கேட்டான். “வேண்டியதில்லை” என்று கர்ணன் சொன்னான். “அரசத்தூதர்களை அஸ்தினபுரியின் அரசகுடியினர் சென்று வரவேற்கும் முறைமை இல்லை. அதை நம்மவர்க்கு அறிவி.” அதை துச்சலன் திரும்பி துர்மதனிடம் சொல்ல அவ்வாணை காற்று அசைக்கும் பட்டுத்திரைச்சீலையின் சரசரப்பு போல பரவிச் செல்வது கேட்டது. அவ்வாணையாலேயே ஆர்வம் கொண்ட கௌரவர்கள் மெல்லிய உடலசைவு ஒலிகளுடன் காத்து நின்றனர்.

பந்தஒளியைத் தொடர்ந்து தனிப்புரவி ஒன்றில் ஒருவன் தோன்ற சுஜாதன் “மூத்தவர்!” என்றான். பிரமதன் “அரசர்தான் நம்மை வழியனுப்பினார். இப்போது எங்கிருந்து வருகிறார்?” என்றான். “வாயை மூடு! மூடா…” என்றான் துச்சகன். பந்தஒளி சற்றே திரும்ப சிவந்த பட்டாடை அணிந்தவனாக பீமன் தெரிந்தான். “பீமசேனர்! மூத்தவர்” என்று சுஜாதன் கூவினான். அறியாமல் அவன் முன்னால் நகர “நில்” என்றான் துச்சகன். “மூத்தவரின் ஆணை!”

41

சுஜாதன் குரலைத்தாழ்த்தி “மூத்தவர் பீமன்! அவரது தோள்களைப் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன! நமது அரசரின் உடலென்றே அவருடையதும்” என்றான். துச்சலன் “பேசாதே” என்றான். அனைத்துக் கௌரவர்களின் உடல்களும் முழுத்த நீர்த்துளிகள் என உதிரத் தவித்தன. கர்ணன் தன் மீசையை நீவியபடி இறுகிய உடலுடன் அசையாமல் நின்றிருந்தான். எதிர்பாராத கணத்தில் சுஜாதன் “மூத்தவரே!” என்று கூவியபடி பீமனை நோக்கி ஓடினான். “மூடா, நில்! நில்!” என்று துச்சலன் கூவ கர்ணன் “வேண்டாம்” என்றான்.

சுஜாதனைத் தொடர்ந்து சகனும் பீமவேகனும் அப்ரமாதியும் கூவியபடி ஓடினர். சில கணங்களுக்குள் கௌரவர்கள் அனைவரும் விடாய்முழுத்த பாலைநிலத்து ஆடுகள் சுனையை நோக்கி என முட்டிமோதி கூச்சலிட்டபடி ஓடினர். “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவியபடி பீமனை அணுகி சூழ்ந்துகொண்டனர். அவர்களின் கைகள் பலநூறு நாய்க்குட்டிகளாக எம்பி எம்பி பீமனை முட்டி முத்தமிட்டு தவித்தன. பீமன் புரவியிலிருந்து இறங்கி அவர்களை தன் பெருங்கைகளால் சேர்த்து அணைத்தான். அவர்கள் கூச்சலிட்டு சிரித்துக்கொண்டு துள்ளிக்குதித்தனர். ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்தேறி அவனிடம் பேசினர். “மூத்தவரே… முத்தவரே…” என்று கூவினர்.

துச்சலன் தவிப்புடன் “பொறுத்தருள்க மூத்தவரே! இவர்கள் வெறும் அறிவிலிக்கூட்டம்” என்றான். “தங்கள் ஆணையை கைக்கொள்ள மறுத்துவிட்டார்கள் மூத்தவரே” என்றான் துர்மதன். கர்ணன் அருகே அவர்கள் இருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். கர்ணன் உடலை எளிதாக்கி “நான் ஆணையென ஏதும் சொல்லவில்லை. எது மரபோ அதை சொன்னேன்” என்றான்.

துச்சலன் புரியாமல் “ஆனால்…” என்று ஏதோ சொல்ல வர “நான் விழைந்தது இதைத்தான். கௌரவர் பெருந்தந்தையின் மைந்தர்கள். அவர்கள் இப்படித்தான் நடந்துகொள்ள முடியும். அவர்களை இணைப்பது குருதி” என்றான். “ஆம் மூத்தவரே. முதற்கணம் பீமசேனரை பார்த்தபோது என் உடல் மெய்ப்பு கொண்டது” என்றான் துச்சலன். துர்மதன் “எத்தனைநாள் அத்தோள்களில் ஏறி விளையாடி இருக்கிறோம்!” என்றான். “சென்று அவரை வரவேற்று உள்ளே கொண்டு செல்லுங்கள்” என்றான். “நாங்களா?” என்றான் துச்சலன். “ஆம், நீங்கள்தான். உங்கள் உள்ள விழைவை நான் அறிவேன்.” துர்மதன் “நீங்கள்…?” என்றான். “நான் உங்களில் ஒருவன் அல்ல. அரசவைக்கு செல்லுங்கள்! நான் சென்று நீராடி முறையாடை அணிந்து அங்கு வருகிறேன்” என்றான் கர்ணன்.