வெய்யோன் - 40

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 17

தேரின் சகடஒலியே ஜயத்ரதனின் சொற்களுக்கு தாளமாக இருந்தது. தேர் கர்ணனின் மாளிகைமுகப்பில் நின்றபோது அவன் நிறுத்திக்கொண்டு நெடுமூச்சுவிட்டான். “வருக இளையோனே” என்றான் கர்ணன். அவன் சிறுவனைப்போன்ற உடலசைவுகளுடன் இறங்கினான். கர்ணன் அவன் தோளில் கைபோட்டு அழைத்துச்சென்றான். “நான் ஏதாவது அருந்த விழைகிறேன் மூத்தவரே” என்றான். “ஆம்… வருக!” என்றான் கர்ணன்.

தன் உள்ளறையில் அமர்ந்ததும் சிவதரிடம் இன்னீர் கொண்டுவரச் சொன்னான். சிவதர் கொண்டுவந்த இன்சுக்குநீரை அவன் ஒரேமூச்சில் குடித்து கோப்பையை வைத்துவிட்டு மீண்டும் நீள்மூச்சுவிட்டான். “சொல்” என்றான் கர்ணன். அவன் சிவதரை நோக்க அவர் வெளியேறினார். “நான் தந்தையை அறியாதவனாக வளர்ந்தவன் மூத்தவரே” என்றான் ஜயத்ரதன். “மூத்தவரோ இளையவரோ இன்றி பாலையில் நின்றிருக்கும் பனைபோல வாழ்ந்தவன்.”

“ஈற்றறைவிட்டு சென்றபின் எந்தை ஒருமுறைகூட என்னை பார்க்க விரும்பாதவரானார். செவிலியரின் கைகளில் நான் வளர்ந்தேன். தந்தை என்னை முழுமையாக புறக்கணித்துவிட்டார் என்றே நான் எண்ணினேன். வளர்ந்து இளைஞனாகி அவர் உள்ளம் கொண்ட துயரென்ன என்று அறிந்த பின்னரே அவரை நான் புரிந்துகொண்டேன். அன்று அவரை நான் வெறுத்தேன். தந்தை என்று எவர் சொன்னாலும் சினந்தேன். அவரை இழித்துரைத்தேன்.

‘தந்தை உங்கள் மேல் பேரன்பு கொண்டவர் அல்லவா அரசே? இங்கு ஒவ்வொன்றையும் நோக்கி நோக்கி செய்பவர் அவரே. ஒவ்வொருநாளும் நான்குமுறை தங்களைப்பற்றிய செய்திகளை தனக்கு தெரிவிக்கவேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறார்’ என்று செவிலி சொன்னபோது சினத்துடன் ‘நான் இறப்பதற்காக காத்திருக்கிறாரா? அச்செய்திக்காகவே அவர் அனைத்தையும் சித்தமாக்கி வைத்திருக்கிறார்’ என்றேன்.

அச்சொல் எப்படியோ என் தந்தையிடம் சென்று அவர் உள்ளத்தை தைக்கும் என்று எண்ணியிருந்தேன். அவரை புண்படுத்தி அதன் வழியாக அவர் அன்பை பெற்றுவிடலாம் என்று என் இளையமனம் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் எந்தை அஞ்சிக்கொண்டிருந்தார். அச்சத்தில் பெரியது அறியாத எதிரிமேல் கொள்வதே. விருஷதர்புரத்தில் ஒவ்வொரு நாளுமென அறக்கொடைகள் நிகழ்ந்தன. முகிலென வேள்விப்புகை எப்போதும் நகரை மூடியிருந்தது. குறியுரைப்போரும் நிமித்திகருமே எந்தையின் அவையில் நிறைந்திருந்தனர்.

என் களியாட்டறையைச் சுற்றி ஆயிரம் படைக்கலங்கள் ஏந்திய வீரர்கள் எப்போதும் காவல் இருந்தனர். என் களியாட்டுக்களத்திலும், தோட்டத்திலும் எப்போதும் எனக்கு காவல் இருந்தது. மாளிகைகளைச் சுற்றி நுண்சொல் ஓதி கட்டப்பட்ட காப்புச்சுருள்கள் தொங்கின. ஒவ்வொருநாளும் ஒரு பூசகர் வந்து அங்கே மறைவழிபாடு இயற்றினார். உடுக்கோசை கேட்டுத்தான் நான் நாளும் கண்விழித்தெழுந்தேன். ஐயத்துடன் தன் அறையில் ஒவ்வொரு கணமும் விழித்திருந்தார் தந்தை.

என் தனிமை என்னை கடும்சினம் கொண்டவனாக ஆக்கியது. செவிலியரை அறைந்தேன். சேடியரை முடிந்தவகையில் எல்லாம் துன்புறுத்தினேன். எளியோரை ஒறுப்பதில் இன்பம் காணத்தொடங்கினேன். தொடக்கத்தில் அச்செயல்களுக்காக என்னை கடிந்துகொள்ள என் தந்தை தேடிவருவாரென எண்ணினேன். பின்னர் அதுவே என் கேளிக்கையாகியது. சாலையில் தேரில் செல்லும்போது வழிநடையர்கள் மேல் கற்களை விட்டெறிவேன். பின் அதற்கென சிறிய அம்புகளையே சேர்த்துவைத்துக்கொண்டேன். என் செயல்கள் அனைத்தும் எந்தையின் செவிகளுக்குச் சென்றன. அவர் எதையும் அறியத்தலைப்படவில்லை.

ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருந்த ஓரு முதிய அந்தணரின் கூன்முதுகைக் கண்டு அதன் மேல் என் கையிலிருந்த வெண்கலப்பாத்திரத்தை வீசி எறிந்தேன். அவர் என்னை நோக்கி கைநீட்டி ‘குருடன் மகனே! நீ உன் அச்சத்தால் அழிவாய்’ என்றார். நான் அவரை தூக்கிவரச் சொன்னேன். அவரிடம் ‘யார் குருடு? சொல்’ என்றேன். ‘நெறியறியா மைந்தர் குருட்டுத் தந்தைக்கு பிறந்தவர்களே. உனக்கு உன் தந்தை விழியளித்திருக்கவேண்டும். உன் பிழைகாணும் கண் அவருக்கு இருக்கவேண்டும்’ என்றார். ‘யாருக்கு அச்சம்? எனக்கா?’ என்றேன். ‘அச்சம் உன்னை தேடிவரும்’ என்றார். அவர்மேல் என் தேரின் கரிப்பிசினை பூசவைத்து துரத்தினேன். ஆனால் இம்முறை அவர் சினக்காது சிரித்தபடியே சென்றார்.

என் செயலை அரசரிடம் அமைச்சர் சொன்னார்கள். ‘அவன் அவ்வண்ணம் செய்திருந்தால் அவரது சொற்களில்தான் பிழை இருந்திருக்கும்’ என்றார் எந்தை. அவர் சொன்ன தீச்சொல்லை அவர்கள் சொன்னதும் சினந்து கொதித்தெழுந்து ‘என் மைந்தன் அஞ்சுவதா? நான் இருக்கும் வரை அவன் எதையும் அஞ்சவேண்டியதில்லை’ என்று கூவினார். ஆனால் அன்றிரவெல்லாம் துயிலாமல் அதையே சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார்.

பிறிதொரு நாள் அவர் எண்ணியதே நிகழ்ந்தது. விளையாடச் சென்ற நான் வழிதவறி அரண்மனைக்கு நீரிறைக்கும் பெருங்கிணறு ஒன்றுக்குள் விழுந்தேன். நீச்சல் அறியாது நீரில் மூழ்கி உயிர்த்துளிகள் குமிழிகளென மேலெழுந்து செல்வதை பார்த்தபடி இருண்ட அடித்தளம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். அந்தத் தோட்டத்திற்கு மிக அருகே தோட்டத்தை நன்கு பார்க்கும்படி அமைந்த மாளிகை ஒன்றின் மாடியில் எந்தை இருந்தார். நான் விளையாடுவதை தொலைவில் இருந்து நானறியாமல் பார்த்துக்கொண்டிருந்தார். கிணற்றருகே நான் சென்று காணாமல் ஆனதை உணர்ந்ததுமே அலறியபடி அங்கிருந்தே தோட்டத்துக்குள் குதித்து ஓடிவந்து நீரில் பாய்ந்து இறுதிக்குமிழி எஞ்சியிருக்கையில் என்னை மீட்டார். என்னை அள்ளி தன் நெஞ்சோடணைத்தபடி கதறி அழுதார்.

மருத்துவர்கள் என்னை மீட்டனர். அனல் கொண்ட உடம்பும் அலைபாயும் உள்ளமும் சீறும் சொற்களுமாக நான் ஏழு நாட்கள் கிடந்த ஆதுரசாலையின் வாயிலில் ஒரு கணமேனும் துயிலாமல் ஒரு துளிநீரேனும் அருந்தாமல் எந்தை அமர்ந்திருந்தார். பின்பு நான் மீண்டு வந்துவிட்டேன் என்று மருத்துவர் அறிவித்தபோது இருகைகளையும் தலைமேல் ஓங்கி அறைந்தபடி பெருங்குரலெடுத்து அழுதார்.

அவர் மேலும் எச்சரிக்கை கொண்டவரானார். இரண்டாம் முறை நான் துயின்றிருந்த மெத்தைமேல் சாளரத்தண்டிலிருந்த நெய்விளக்கு சரிந்து விழுந்து தீப்பற்றியது. அனல் எழுந்து பட்டுத் திரைச்சீலைகளைக் கவ்வியதுமே அம்மாளிகைக்கு எதிர்ப்புறம் இருந்த மாளிகையில் சாளரத்தினூடாக என்னை நோக்கிக்கொண்டிருந்த எந்தை அங்கிருந்தே நடுவிலிருந்த மரம் ஒன்றின் வழியாக பாய்ந்து எனது மாளிகைக்கு வந்து உப்பரிகையில் தாவி என் அறைக் கதவை உடைத்துத் திறந்து நுழைந்து என்னை மீட்டார். என் ஆடைகளில் பற்றியிருந்த தீயை தன் உடலாலேயே அணைத்தார்.

மூன்றாம் முறை நான் மதகளிறு ஒன்றால் தாக்கப்பட்டேன். அரண்மனை முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான் அப்பால் இருந்த மண்சுவர் ஒன்றை உடைத்துக்கொண்டு பிளிறலுடன் எழுந்து வந்த மதகளிறு ஒன்றை பார்த்தேன். அதை ஓர் இருளசைவென நான் பார்த்த மறுகணமே இருவெண்தந்தங்கள் எனக்கு இருபக்கமும் எழுந்தன. துதிக்கை என்னை நீர்ச்சுழி என பற்றிச் சுருட்டி மேலேற்றியது. அருகே இருந்த உப்பரிகையிலிருந்து என்னை நோக்கிக் கொண்டிருந்த தந்தை குதித்து வேலால் அதன் விழியை தாக்கினார். என்னை விட்டுவிட்டு பெரும் பிளிறலுடன் அவரை தாக்கச்சென்றது. அவர் ஓடி சுவரில் ஒட்டி நிற்க தலைகுலுக்கி துதிக்கை சுழற்றி பெரும்பிளிறலுடன் சென்று அவரை தந்தங்களால் தாக்கியது. ஒரு விழி பழுதடைந்திருந்ததால் அன்று அதன் குறிதவறி அவர் பிழைத்தார். அதற்குள் வீரர்கள் பறைமுழங்க ஓடிவந்து என்னை காப்பாற்றினர்.

மும்முறை நான் நுண்முனையில் உயிர்பிழைத்தபின் அவர் அஞ்சத்தொடங்கினார். பன்னிரு நிமித்திகர்களை வரவழைத்து பெருங்களம் வரையச்செய்து சோழிகள் பரப்பி நுண்ணிதின் கணக்கிட்டு என் ஊழென்ன என்று வினவினார். என் ஊழ்நிலைகளில் எங்கும் இறப்புக்கான கண்டம் தெரியவில்லை. என் முன்வினைப் பயன் வந்து உறுத்தவுமில்லை. ‘ஆனால் ஐங்களம் அறியாத இருளாற்றல் ஒன்று இளவரசரை சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது அரசே’ என்றார் நிமித்திகர்.

சோழிகளின் கணக்கில் எதிலும் அது இல்லை. ஏனெனில் அது முன்னைவினை அல்ல. ‘தந்தையரின் வினையும் தனயனுக்குரியதே. ஈட்டிய வினை உறுத்த வினை தொட்டுத் தொடரும் வினை என ப்ராப்தம் தெய்வங்களாலும் அழிக்கப்படமுடியாதது’ என்றனர் நிமித்திகர். எந்தை ‘எவ்வினையாயினும் அழிப்பேன். எழுதிய ஊழுக்கு இறைவனை வரவழைத்து என் மைந்தனை மீட்பேன். எதுவென்று மட்டும் எனக்கு சொல்லுங்கள்’ என தன் நெஞ்சிலறைந்து கூவினார்.

பின்பு தென்றிசையில் முக்கடல்முனையிலிருந்து வந்த சொல்தேர் கணியர் பதினெண்மர் எந்தையின் ஆணைக்கு ஏற்ப மறைச்சடங்கு ஒன்றை சுதுத்ரியின் கரையில் இருந்த ஆற்றிடைக்குறை ஒன்றில் நிகழ்த்தினர். ஆறு தழுவியபின் மானுடர் காலடி படாத நிலம் வேண்டும் என்று அவர்கள் கோரியதற்கேற்ப அவ்விடம் தேரப்பட்டது. அங்கு பன்னிருகோண வடிவில் எரிகுளம் அமைத்து அதில் ஆறுவகை சமித்துகளை படைத்து எண்வகை விலங்குகளின் ஊனை ஊற்றி எரிஎழுப்பி அன்னமும் மலரும் நிணமும் சொரிந்து அவியிட்டு பன்னிரு படையலர்கள் அமர்ந்து எரிசெய்கை இயற்றினர். அறுவர் தென்னகத் தொல்வேதமொன்றின் அறியாமொழிச் சொற்களை எடுத்து விண்ணிறைஞ்சினர்.

எரியெழுந்து செங்குளமென ஆகி திரையென நிலைத்தது. அதில் என் பெரிய தந்தையார் மிதந்தெழுந்து வந்தார். கனிந்த கண்களுடன் என் தந்தையை நோக்கி ‘இளையோனே, என் தோளில் உன்னை தூக்கி வளர்த்திருக்கிறேன். என் கையால் உனக்கு உணவூட்டியிருக்கிறேன். உன் கையால் அடிபட்டு இறக்கும் இறுதிக் கணத்தில் இதனால் நீ எவ்வளவு துன்புறுவாய் என்ற இறுதி எண்ணம் எழுந்து அது முடிவடையாமலேயே நான் உயிர் துறந்தேன். எனக்கென நீ இறைத்த நீரையும் உணவையும் உளம்கனிந்து பெற்றுக்கொண்டேன் இங்கு விண்ணவர் உலகில் உனக்கென அகமுவந்து காத்திருக்கிறேன். உன் மைந்தனுக்குத் தந்தையென என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு’ என்றார்.

அவரது முகத்தை தள்ளி ஒதுக்கியபடி என் பெரிய அன்னை சுமதிதேவியின் முகம் நீலஅழலென தோன்றியது. குழல் செந்தழலென எழுந்து பறந்தது. கண்கள் இரு எரிசுடர்களென மின்னின. செவ்விதழ்களை விரித்து அவர் சிம்மக்குரலில் கூவினார் ‘நான் அவனை ஒருபோதும் விடப்போவதில்லை. சிறியவனே, என் கொழுநனை உன் கைகளால் அடித்துக் கொன்றாய். என் மகனென உன்னைக் கருதி என் கைகளால் அள்ளி அமுதிட்டிருக்கிறேன். உனக்கென பல்லாயிரம்முறை கனிந்த நெஞ்சு இன்று நஞ்சுக்குடமாகிவிட்டது. இங்கு ஆழுலகில் அந்நஞ்சுடன் நான் தனித்தலைந்து கொண்டிருக்கிறேன். இதன் ஒருதுளி எஞ்சும்வரை நான் விண்ணுலகு செல்ல இயலாது. நீ அளித்த அன்னம் நாறும் மலமென இங்கு வந்தது. நீ அளித்த நீர் இங்கு அமிலமென என்மேல் பொழிந்தது. ஒரு கணமும் உன்னை நான் பொறுத்ததில்லை.’

‘அன்னையே! அன்னையே!’ என்று எந்தை கைநீட்டி கதறி அழுதார். ‘சொல்லுங்கள்! நான் என்ன செய்யவேண்டும்? நான் தங்களுக்கு என்ன பிழையீடு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்!’ அன்னை வெறிநகைப்புடன் ‘வீணனே, இங்கு இருளுலகில் பேருருக்கொண்டு எழுந்த கருங்கனல் நான். நீ எனக்கு என்ன அளிக்க முடியும்? உன் சிற்றுலகிலுள்ள மண்ணும் கல்லும் ஊனும் உதிரமும் எனக்கு எதற்கு? உன் மைந்தனுக்கு நான் அளித்த தீச்சொல் அவன் பின்னால் நிழலென தொடர்கிறது. அவன் தலை உன்முன் அறுபட்டுவிழக்காண்பாய். தந்தைக்கு நிகரான தமையனை கொன்றவன் நீ. மைந்தர்துயரத்தால் நீ மடிவாய்’ என்றார்.

குருதியை உமிழ்வதுபோல செங்கொப்புளங்களாக அவர் சொற்களை எய்தார். ‘ஒவ்வொருநாளும் நான் சிதைமேல் அமர்ந்து அடைந்த வலியை நீ அறிவாய். அதுவே உனக்கு நான் அளிக்கும் பிழையீடு.’ நெஞ்சில் அறைந்து எந்தை கதறினார் ‘அன்னையே! அன்னையே! நான் அறியாது செய்தபிழை. என் மைந்தனை விட்டுவிடு. அவன் மேல் இப்பழியை ஏற்றாதே. ஏழுபிறவிக்கும் நான் எரிகிறேன். ஏழுநரகுகளில் உழல்கிறேன்.’ அன்னை பற்களைக் காட்டி வெறுப்புடன் ‘மைந்தர்துயருக்கு ஏழுநரகங்களும் நிகரல்ல… அதுவே உனக்கு’ என்றார்.

எந்தை தளர்ந்து அனல்குளமருகே விழுந்துவிட்டார். ‘மூத்தவரே, எனக்கு நீங்களே துணை மூத்தவரே’ என தரையில் கையால் அறைந்து கதறினார். தழற்பரப்பில் தோன்றிய மூத்தவர் ‘இளையோனே, அவள் இருக்கும் அவ்வுலகில் வஞ்சம் ஒன்றே கதிரவன் என ஒவ்வொரு நாளும் விடிகிறது. நான் ஒன்றும் செய்வதற்கில்லை. இதுவும் உன் பிராப்தம் என்று கொள்க. புத்திரசோகத்தின் பெருந்துயர் அடைந்து ஊழ்வினை அறுத்து இங்கு வா’ என்று சொல்லி மறைந்தார். அந்த வினைக்களத்திலிருந்து எந்தையை மயங்கிய நிலையில் கட்டிலில் தூக்கி வந்து அரண்மனை சேர்த்தார்கள்.

உடலில் தீப்பற்றிக்கொண்டதுபோல நெஞ்சில் அறைந்து அழுதபடி அவர் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். ‘என்ன செய்வேன்! நான் என்ன செய்வேன்! எந்தையரே இனி நான் என்ன செய்வேன்!’ என்று கதறினார். பின்பு ஒரு நாளிரவு எவரும் அறியாமல் இருளில் அரண்மனை விட்டிறங்கி நடந்து நகர்துறந்து காடேகி மறைந்தார். காலையில் அவர் அரண்மனை மஞ்சம் ஒழிந்து கிடப்பதை கண்டு ஏவலர்கள் வேட்டைநாய் கொண்டு அவர் சென்ற தடம் முகர்ந்து தேர்ந்து சென்றபோது சிந்துவின் பெருக்குவரை அது சென்று நின்றதைக் கண்டு அவர் இறந்து விட்டார் என்று எண்ணி மீண்டனர்.

அன்று ஏழுவயதான எனக்கு மணிமுடிச் சடங்குகளை செய்து அரியணை அமர்த்தினர். எதிரிகள் என்னை கொன்றுவிடக்கூடும் என்ற அச்சம் இருந்ததால் எப்போதும் ஏழு செவிலியரும் ஆயிரம் படைவீரரும் என்னை சூழ்ந்திருந்தனர். நான் உண்ணும் உணவும், அமரும் இருக்கையும், துயிலும் மஞ்சமும் ஒவ்வொரு நாளும் மாற்றப்பட்டது ஒவ்வொருவரும் பிறிதொருவரை உளவறியும் ஒரு வலை என்னை வளைத்திருந்தது. என் ஒவ்வொரு செயலும் எண்ணி கட்டுப்படுத்தப்பட்டது. என் சொல் மட்டுமே என்னுடன் உரையாடும் தனிமையில் வளர்ந்தேன்.

காடேகிய எந்தை சிந்துவில் இறங்கி நீந்தி மறுகரைக்குச் சென்று அங்கிருந்த ஆற்றிடைக் குறை ஒன்றில் ஏறினார். அங்கு குடில் ஒன்றை அமைத்து மூன்று வருடம் மகாருத்ரம் உள்நிறைக்க ஊழ்கத்தில் அமர்ந்தார். தன் உடலின் ஒவ்வொரு செயல்பாடாக யோகம் மூலம் நிறுத்திக் கொள்வது அது. இறுதிச் செயலையும் நிறுத்துவதற்குள் விரும்பும் தெய்வம் உருக்கொண்டு எழவேண்டுமென்பது நெறி. சித்தத்தின் இறுதித் துளியை எந்தை நிறுத்தும் கணத்தில் புல்வாயும் மழுவும் புலித்தோல் ஆடையும் முப்பிரிவேலும் முடிசடையும் துடிபறையும் திசைக்கனலும் கொண்டு அவர் முன் பெருந்தழல் வடிவமென எம்பெருமான் தோன்றினார்.

அவர் அங்கை நீண்டு வந்து எந்தையின் நெற்றிப்பொட்டை தொட்டது. அவரும் எரிதழலென எழுந்து இறைவனுக்கு நிகராக நின்றாடினார். ‘சொல்! நீ விழைவதென்ன? மூவுலகும் வெல்லும் திறனா? முனிவர்க்கு நிகரான மூப்பா? மூவாமுதலா பெருவாழ்வா? முதல்முழுமையா?’ என்று சிவன் கேட்டார். ‘எந்தையே, ஏதும் வேண்டேன். என் மைந்தனுக்கென்றொரு நற்சொல் வேண்டும். அவன் படுகளம் படுவான் என்று என்னிடம் சொன்னார்கள். அவ்வண்ணம் நிகழுமென்றால் எவன் அவன் தலையை மண்ணில் இடுவானோ அவன் தலை அக்கணமே நீர்த்துளியென உடைந்து சிதறவேண்டுமென அருள்க!’ என்றார்.

உரக்க நகைத்து சிவன் ‘ஆம், கங்கை பெருகிச் சென்றாலும் நாய் நாக்குழியாலேயே அள்ள முடியும். அவ்வண்ணமே ஆகுக!’ என்றபின் மறைந்தார். உளமகிழ்ந்த எந்தை அங்கிருந்து என் நகருக்கு வந்தார். மட்கிய மரவுரி அணிந்து தேன்கூடென கற்றைச்சடை தோளிலும் மார்பிலும் விழ பற்றியெரியும் விழிகளுடன் வந்த அவரை எந்தை என அறியவே அரண்மனைக் காவலரால் முடியவில்லை. பேரமைச்சர் சுதர்மர் அவரைக்கண்டதும் ஓடிச் சென்று ‘அரசே!’ என்று கைகளை பற்றிக்கொண்டார். ‘அரண்மனைக்கு வாருங்கள்!’ என்றார்.

‘அனைத்தையும் துறந்து காடு சென்றவன். இறந்தவனும் துறந்தவனும் மீளலாகாது. இத்தவத்தால் நான் பெற்ற நற்சொல் என்ன என்று இங்கே அறிவித்துவிட்டுச் செல்லவே வந்தேன். என் மைந்தன் இனி விடுதலை அடையட்டும். இனி அவனை எந்தத் தீச்சொல்லும் சூழாது. எதிரிகள் அறிக! அவனை கொல்லத் துணியும் எவனும் அக்கணமே தானும் இறப்பான். என் மைந்தன் தலை அறுந்து மண்தொடும் என்றால் அவனை வீழ்த்தியவன் எவனோ அவன் தலையும் அக்கணமே வெடித்தழியும். இது மூவிழி முதல்வனின் அருள்’ என்று கூவினார்.

அமைச்சர் பணிந்து ‘நீங்கள் என்னை முனியினும் ஏற்பேன். ஆனால் அந்தணன் நான் அறவுரை சொல்லியாக வேண்டும். தண்டிக்கப்பட முடியாதவன் தெய்வங்களிடமிருந்து விடுதலை பெற்றவன். அவ்விடுதலை அறியாப்பிள்ளை கையில் கொடுக்கப்படும் கூர்வாள். பிழைசெய்துவிட்டீர்கள் அரசே’ என்றார். ‘நீர் எனக்கு அறமுரைக்க வேண்டியதில்லை. என் மைந்தன் பிழை செய்ய மாட்டான். செய்தாலும் அது பிழையல்ல எனக்கு’ என்றார் எந்தை. ‘அரசே, அவர் அறம்பிழைத்தால் உங்கள் சொல்லே கூற்றாகட்டும். உங்கள் தவ வல்லமையால் ஒரு சொல்லுரைத்துச் செல்லுங்கள்’ என்றார் சுதர்மர். ‘என் மைந்தன் எனக்கு அறத்தைவிட மேலானவன்’ என்றார் எந்தை.

அப்போது எனக்கு பத்து வயது. உப்பரிகையில் நின்று அச்சொற்களை கேட்டேன் அக்கணம் எனக்குத் தோன்றியது ஒன்றே. அதுவரை நான் வாழ்ந்த சிறைவாழ்வு முடிந்தது. ‘காவலர்தலைவரே, நான் இப்போது வெளியே செல்லலாமா?’ என்று கேட்டேன். ‘செல்லுங்கள் அரசே! பாரதவர்ஷம் முழுக்க செல்லுங்கள். இனி ஒருவரும் உங்களை தொடப்போவதில்லை’ என்றார் அவர். கை வீசி ஆர்ப்பரித்தபடி நான் படிகளில் இறங்கி முற்றத்திற்கு ஓடினேன். அங்கு நின்றிருந்த என் தந்தையை நோக்கி இரு கைகளையும் விரித்து அருகே சென்றேன். அவர் அஞ்சி தன் கைகளை பின்னுக்கு இழுத்தபடி ‘நன்று சூழ்க!’ என்றபின் மேலும் பின்னால் சென்று ‘நலம் திகழ்க! முழுவாழ்வு பெறுக!’ என்றார்.

எந்தை மீண்டும் சிந்துநதிக் கரைக்கே சென்று அங்குள்ள சப்ததளம் என்னும் ஆற்றங்கரைக் காட்டில் தங்கி தவமியற்றினார். சிந்துநாட்டில் இருந்து சென்று அவரை தொழும் மூத்தோரும் சான்றோரும் இருந்தனர். அரசமுறைமை என பலமுறை நான் சென்று வணங்கியிருக்கிறேன். அகம்பழுத்து விலகி அவர் ஒரு தவமுனிவர் என்றே ஆகிவிட்டார். பின்னர் அங்கிருந்தும் ஒருநாள் மறைந்து போனார். எந்தையின் இருப்பை நான் நிமித்திகரைக்கொண்டு ஆய்ந்து நோக்கினேன். எங்கோ ஒரு காட்டில் அவர் ஒவ்வொரு நாளும் எனக்காக நீர் அள்ளி விட்டு தெய்வங்களை தொழுது வேண்டிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தேன். காட்டுவிலங்குபட்ட புண் என என் மேல் அவர்கொண்ட அன்பு அவர் உயிர் உண்டே அமையும் என்று உரைத்தனர்.”

கர்ணன் “ஆம், கொல்லப்படமுடியாதவன் என்று உன்னைப்பற்றி சூதர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன். அது உங்கள் குலதெய்வத்தின் அருள் என்று சொன்னார்கள். இப்பெரும் கதையை இபோதுதான் அறிகிறேன்” என்றான். ஜயத்ரதன் பெருமூச்சுடன் “மூத்தவரே, விந்தையான ஒன்றை உங்களிடம் சொல்ல விழைந்தேன். திருதராஷ்டிர மாமன்னரைக் கண்டதும் நான் இன்று ஏன் நிலையழிந்தேன் என்றறிவீர்களா?” என்றான். கர்ணன் நோக்க அவன் மெல்லிய குரலில் “இன்று அஸ்தினபுரியின் அரண்மனைக்குள் பேரரசரின் அறை முன்புள்ள இடைநாழியில் எந்தையை கண்டேன்” என்றான்.

கர்ணன் நடுங்கும் குரலில் “யார்?” என்றான். “என் தந்தை பிருஹத்காயர். மரவுரி அணிந்து கல்மாலையும் உருத்திரவிழிமணி குண்டலங்களும் சடைமுடிப்பரவலுமாக தூணருகே அவர் நின்றிருந்தார்.” கர்ணன் மூச்சொலித்தான். “ஆனால் அவர் விழிகள் இரண்டும் தசை கொப்புளங்களாக இருந்தன” என்றான் ஜயத்ரதன். கர்ணன் சொல்லுறைந்த உதடுகளுடன் அவனை நோக்கினான். “முதலில் அது உண்மையுரு என்று எண்ணி நான் அவரை நோக்கி ஓடப்போனேன். என்னுடன் வந்த பிற எவரும் அவரை காணவில்லை என்று அடுத்த கணமே உணர்ந்து விழிமயக்கென்று தெளிந்தேன். ஆனால் விழிமயக்கு என்று எண்ணும்போதும் அவ்விழிமயக்கு அப்படியே நீடிக்கும் விந்தையை என் உளம் தாங்கவில்லை.”

VEYYON_EPI_40

அவன் கர்ணனை அணுகி கைகளை பற்றிக்கொண்டான். “பின்பு பேரரசரின் இசைக்கூடத்திற்குள் மூன்றாவது தூணின் அருகே அவர் நின்றிருந்தார். ஆனால் என்னை நோக்கவில்லை. விழிப்புண்கள் ததும்ப பேரரசரை நோக்கிக் கொண்டிருந்தார். இருவரின் விழியற்ற நோக்குகளும் சந்தித்து உரையாடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது.” கர்ணன் நீள்மூச்சுடன் தன் உடலை எளிதாக்கி “நீயே சொல்லிவிட்டாய் இளையோனே, அது உளமயக்கு என்று. உன் தந்தையை எவ்வண்ணமோ பேரரசருடன் இணைவைக்கிறாய்” என்றான்.

ஜயத்ரதன் “ஆம், மீண்டும் கூடத்திற்கு வரும்போது அங்கு அவர் நின்றிருக்கக்கூடும் என்று எண்ணினேன். அவர் இல்லை” என்றான். “பேரரசர் உன்னிடம் சொன்னதையே நானும் சொல்லவேண்டியிருக்கிறது… அஞ்சாதே” என்றான் கர்ணன். “அவர் சொன்னது உண்மை மூத்தவரே… முற்றிலும் உண்மை அது” என்றான் ஜயத்ரதன். “இளமையிலேயே என்னைச் சூழ்ந்திருந்தது எக்கணமும் நான் கொல்லப்படுவேன் என்ற எண்ணமே. அதுவே நான் அறிந்த முதல் கல்வி. அவ்வச்சத்தால்தான் அல்லும்பகலும் வில்பயின்று வீரனானேன். அவைகளில் தருக்கி அமர்ந்தேன். ஆடற்களங்கள் ஒவ்வொன்றையும் தேடிச்சென்றேன்.”

“அத்தனைக்குப் பின்னும் அவ்வச்சம் அங்கேயே அசைவின்றி அமர்ந்திருந்தது. முகிலென நின்றது மலையெனத் தெரிவது போல. பின்பு அறிந்தேன் எப்போதும் அவ்வச்சம் அங்குதான் இருக்குமென்று. முதல்முறையாக நேற்று அஸ்தினபுரியின் பேரரசர் தன் கைகளால் என்னை தோளணைத்து தன் உருப்பெருக்கென நிறைந்திருந்த தம்பியர் நடுவே அமரவைத்தபோதுதான் அச்சமின்றி இருந்தேன். பேரரசரின் பெருங்கைகளால் வளைக்கப்படுகையில் அச்சமின்மையின் உச்சியில் நின்று திரும்பி அவ்வச்சத்தின் பொருளின்மையை நோக்கத்தொடங்கினேன். இன்று தங்கள் கைகள் என் தோளில் இருக்கையில் இப்புவியில் அல்ல விண்ணிலும் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை என்றே உணர்கிறேன்” என்றான் ஜயத்ரதன்.