வெய்யோன் - 32
பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 9
கங்கைச்சாலையில் மரக்கூட்டங்கள் மறைத்த தொலைவில் முரசொலி வலுத்துக்கொண்டே வந்தது. காட்டிற்குள் அவ்வொலி சிதறிப்பரந்து மரங்களால் எதிரொலிக்கப்பட்டு அனைத்து திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்தது. பின்பக்கம் கோட்டைமேல் மோதிய காற்று செம்புழுதி சுழல மீண்டு வந்து அவர்கள்மேல் படிந்து அடங்கியது. தொலைவொலிகள் அஸ்தினபுரியின் கோட்டையில் மோதி மீண்டுவந்தன. காத்துநின்ற புரவிகள் சற்றே பொறுமையிழந்து கால்களை தூக்கிவைத்து பிடரிகுலைத்த மணியோசை எழுந்தது. யானைகள் காதுகளை ஆட்டியபடி முன்னும்பின்னும் உடலாட்டும் அசைவு இருண்ட நீர்நிலையில் சிற்றலைகள்போல் தெரிந்தது.
அஸ்தினபுரியின் கொற்றவை ஆலயத்தின் பூசனைக்காக எழுந்த மணியோசை நெடுந்தொலைவிலென கேட்டது. பின்பு ஒரு காற்று அதை அள்ளிக்கொண்டு வந்து மிக அண்மையிலென ஒலிக்க வைத்தது. கர்ணன் பெருமூச்சுடன் உடலை அசைத்தான். அவ்வசைவால் அகம் கலைந்து சொல்முளைத்த துச்சலன் “நூறு யானைகள் என்றார்கள்” என்றான். கர்ணன் “சிந்துவிலிருந்தே நூறு யானைகளில் வருகிறாரா?” என்றான். “ஆம், எதையும் சற்று மிகையாகவே செய்யும் இயல்புடையவர். அத்துடன் அஸ்தினபுரியைவிட சற்றேனும் மாண்பு தென்படவேண்டும் என்று அவர் விழைவதில் பொருளுண்டு” என்றான் துச்சலன்.
துர்முகன் “புதிய அரசர்கள் அனைவருமே இவ்வண்ணம் எதையேனும் செய்கிறார்கள்” என்றான். “நூறு யானைகள் என்றால் ஆயிரம் புரவிகளா?” என்றான் கர்ணன். “எப்படி தெரியும்?” என்றான் சுபாகு. “உண்மையிலேயே ஆயிரம் புரவிகள்தான். நூறு ஒட்டகங்களும், அத்திரிகள் இழுக்கும் நூறு பொதிவண்டிகளும் அகம்படி கொள்கின்றன என்கிறார்கள். அரசரும் பிறரும் பதினெட்டு பொன்னணித்தேர்களில் வருகிறார்கள்.” கர்ணன் சிரித்து “என்ன இருந்து என்ன? நாம் ஆயிரம் மைந்தரை அனுப்பி வரவேற்கிறோமே. அதற்கு இணையாகுமா?” என்றான். துச்சலன் நகைத்து “ஆம், உண்மை மூத்தவரே” என்றான்.
“இவ்வணி ஊர்வலம் இன்று நகர்நுழைந்து அவைசேர்வதற்கு உச்சி வெயிலாகிவிடும் போலிருக்கிறதே” என்றான் துச்சகன். “முதல்வெயில் கண்களை கூசச்செய்கிறது.” துச்சலன் “பல்லாண்டுகளுக்கு முன் காந்தாரத்திலிருந்து மாதுலர் சகுனி நகர்நுழைந்த செய்திகள் சூதர் பாடலாக இன்றுள்ளன. அப்பாடலைக் கேட்டபின் எவரும் எளிமையாக நகர்புகத் துணியமாட்டார்கள்” என்றான். “ஆம், அது ஒரு மலைவெள்ளம் கோட்டையை உடைத்து உட்புகுந்து நகரை நிறைத்தது போலிருந்தது என்கிறார்கள். அந்த ஆண்டுதான் புராணகங்கை இந்நகரை மூழ்கடித்தது. அதன்பின் மாதுலர்சகுனி வந்த படைவெள்ளமும் அனல்வெள்ளமும் பெருகிவந்தன.”
எரியம்புகள் எழுந்து வானில் வெடித்தன. கோட்டைக்கு மேல் இளைய கௌரவர்களின் கூச்சல்கள் எழுந்தன. கர்ணன் திரும்பி நோக்கி “அத்தனை பேரும் கோட்டை மேல் ஏறிவிட்டார்களா?” என்றான். “ஆம்” என்றான் துச்சலன். “அது நன்று. அவர்கள் கோட்டையிலிருந்து இறங்காமல் இருக்க படிக்கட்டின் வாயில்களை மூடச்சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “அவர்களுக்கெதற்கு படிக்கட்டு? குதிக்கக்கூட செய்வார்கள்” என்றான் துச்சகன். “ஆம், ஓரளவு கால் வளர்ந்தவர்கள்தான் அதை செய்யமுடியும். எஞ்சியவர்கள் தடுக்கப்பட்டாலே நகரம் சற்று நிறைவாக உணரும்” என்றான் சுபாகு.
எரியம்புகள் மேலும்மேலும் எழுந்து விண்ணில் வெடித்து பொறிமலர்களை விரியவைத்தன. கனல்மழையென காற்றில் இறங்கின. பெரியதோர் அணிக்குடைபோல் மாபெரும் எரியம்பு விண்ணிலெழுந்து வெடித்துப்பரவி மெல்ல இறங்கியது. செந்நிறத்தில் ,இளநீலநிறத்தில் பொன்மஞ்சள்நிறத்தில் என சுடர்க்குடைகள் வெடித்து விரிவு கவித்து இறங்கிக்கொண்டிருந்தன. “அனலவனை ஏவல் பணிசெய்ய அமைத்தான்” என்றான் சுபாகு. “என்ன?” என்றான் கர்ணன். “அப்படித்தானே சூதர்கள் பாடப்போகிறார்கள்?” என்றான் சுபாகு. துச்சலனும் துர்முகனும் உரக்க நகைத்தார்கள்.
எட்டு வெண்புரவிகள் சிந்துநாட்டின் கரடிக்கொடிகளுடன் புழுதித்திரைக்கு அப்பால் இருந்து மெல்ல பிறந்தெழுந்து உருத்திரட்டி விரைவுகொண்டு அவர்களை நோக்கி வந்தன. இரும்புக்கவசங்கள் ஒளிர அமர்ந்திருந்த அவ்வீரர்கள் வெண்மலர்களில் அமர்ந்த தேனீக்கள்போல தோன்றினர். கொடிகள் சிறகென அடித்து அவர்களை தூக்கிவருவதுபோல. புரவிக்குளம்புகள் காற்றில் துழாவுவதுபோல. ஆனால் காடு குளம்படியோசைகளால் அதிர்ந்துகொண்டிருந்தது.
அஸ்தினபுரியின் படைமுகப்பை அடைந்ததும் புரவிகளைத் திருப்பி விரைவழியச்செய்து குதித்திறங்கி அதே விரைவில் கால்மடித்து அக்கொடியை தரையில் நாட்டி தங்கள் உடைவாள்களை உருவிச்சுழற்றி தரையைத்தொட்டு தலைதாழ்த்தி “தொல்புகழ் அஸ்தினபுரியை ஏழுநதிகளால் இமயம் வாழ்த்திய சிந்துநாடு வணங்குகிறது. பாரதவர்ஷத்தின் பேரரசர் ஜயத்ரதர் நகர்புகுகிறார்!” என்றார்கள். கர்ணன் தலைதாழ்த்தி வணங்கி “நன்று! இந்நகர் சிந்துவின் தலைவருக்காக காத்துள்ளது” என்றான். அவர்கள் வாளைச்சுழற்றி உறையிலிட்டு விலக துச்சலன் “நாடகம் போலுள்ளதே!” என்றான். சுபாகு “வாயை மூடுங்கள் மூத்தவரே, இவையெல்லாம் அங்குள்ள அரசச் சடங்குகள்” என்றான்.
இரும்பு பெருகி வழிவதுபோல இருநிரைகளாக சிந்துநாட்டுக் கவசவீரர்கள் வந்தனர். அவர்களுக்கு நடுவே பதினெட்டு அணிப்புரவிகள் பொன்பூசியசேணங்களும் பட்டுமெய்யுறைகளும் அணிந்து அலையலையாக உடல் எழுந்தமைய வந்தன. அவற்றின் இருபக்கங்களிலும் அணிசூழ்கையர் பூத்தமரமெனத் திரும்பிய பட்டுப்பாவட்டாக்களும் மணிக்குச்சங்கள் சிலுசிலுத்த மலர்க்குடைகளுமாக சீராக நடையிட்டு அணுகினர். தொடர்ந்து பொன்னலை குழைந்து இளகிய முகபடாமணிந்து இட்டஅடி மெத்தையென எழுந்தமைய அம்பாரியில் அணிப்பரத்தையரைச் சுமந்த யானைகள் அசைந்து வந்தன.
அவை பொன்வண்டுத் தொகைபோலத் தோன்றி, உருப்பெருக்கி, கரிய மலைப்பாறைகள் மேல் கொன்றை பூத்ததுபோல் பேருருக்கொண்டு எழுந்து, கண்களை நிறைக்கும் இருளென்றாகி அவர்களை கடந்து சென்றன. தொடர்ந்து ஒளிரும் வேல்களும் வாள்களும் ஏந்திய குதிரைப்படையினர் உச்சிப்பொழுதில் ஒளிகொண்டு செல்லும் ஓடை என நெறிநடையில் கடந்து சென்றனர். அவர்களுக்கு மேல் கோட்டையிலிருந்து பொழிந்த அரிமலர்கள் மழையென்றாகின.
அவற்றுக்குப் பின்னால் இருபுறமும் உயர்ந்த பொன்மூங்கில்களில் பட்டுச்சித்திர எழினிகளையும் செந்திரைகளையும் தூக்கியபடி காலாட்படையினர் வர, தொடர்ந்து பொன்மணி குலுங்கும் குடைக்கூரை நலுங்க, சகடங்களின் இரும்புப்பட்டைகள் சுருள்வாள்களென சுழன்று ஒளிவிட,, வெண்புரவிக்கால்கள் நீர்வெளியில் நடமிடும் நாரைகளென எழுந்தமைய, அணித்தேர்கள் நிரைவகுத்தன. மாபெரும் சித்திரத் திரைச்சீலையொன்று நலுங்குவதுபோல என்று கர்ணன் நினைத்தான். விழிவிரித்து அக்காட்சியையே நோக்கி நின்றான்.
பின்பு அவன் உள்ளம் பெருமுரசுமேல் கோல் வருடுவதுபோல் அதிரத் தொடங்கியது. சற்று கழித்தே அவன் ஜயத்ரதனின் அரசத்தேரை பார்த்துவிட்டிருப்பதை உணர்ந்தான். கரடி இருகைகளையும் விரித்து கால்களைப்பரப்பி ஒருகையில் வாளும் மறுகையில் தாமரை மலரும் ஏந்தி நின்றிருந்தது. காற்றில் கொடி பறக்கையில் அது உயிர்கொண்டு துள்ளியது. அஸ்தினபுரியின் கோட்டைச்சுவர் நாண்இழுக்கப்பட்ட வில்லென அதிர்ந்து முழக்கம் எழுப்பியது. இசைச்சூதர்களின் முரசுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் இணைந்து எழுந்த மங்கலப்பேரிசை அதனுடன் இணைந்துகொண்டது.
வீரர்களும் குடிகளும் எழுப்பிய வாழ்த்தொலிகள் செவிகளை அடைத்து ஒலியின்மையை உணரவைத்தன. ஏன் ஒவ்வொரு தருணத்தையும் வாழ்த்தொலிகளால் நிறைக்கவேண்டுமென முன்னோர் வகுத்தனர் என்று கர்ணன் எண்ணிக்கொண்டான். உணர்வெழுச்சிகள் ஒலியென வெளிப்படுத்தப்படுகையில் அவை அவ்வுள்ளங்களை உதறி காற்றில் எழுந்து புட்களென சிறகடித்துத் திரண்டு ஒற்றைச்சுழலென்றாகிவிடுகின்றன. பின்னர் அவை பேருருக் கொண்டு ஒவ்வொரு உள்ளத்தையும் கவ்வி தூக்கிச்செல்கின்றன.
இந்த இசைப்பெருக்கும் குரல்கொந்தளிப்பும் இல்லையேல் இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இவ்வுணர்வுச்சத்தில் இருப்பார்களா? இவர்களை வெறிகொண்டு காற்றில் துள்ளி எழச்செய்யும் அந்த உணர்வு அவர்களுக்குள் இருந்து எழுவதா? பிறிதொருவருக்காக அத்தனை உணர்வு எழுமா என்ன? இதோ விழிவிரித்து கழுத்து நரம்புகள் புடைத்து தெய்வமெழுந்த வெறியாட்டன் என கையசைத்துக்கூவும் இவனுள் ததும்புவது எது? புயல் அள்ளிச்சுழற்றும் சருகுகள் இவர்கள். சொல்லிச்சொல்லி, கூவிக்கூவி ஒற்றைப் பேருணர்வாக அனைத்தையும் ஆக்குவதற்குத்தான் இவ்வொலிப்பெருக்கு.
இக்குரல்கள் இன்றிருக்கும் மானுடர்களின் வாயிலிருந்து எழுந்து திரண்டவை என்றால் கொம்பும் குழலும் முரசும் முழவும் சங்கும் மணியுமென ஒலிப்பவை மறைந்தழியா ஒலியுலகை அடைந்த மூதாதையரின் குரல்கள். இன்று நாளையென பிளவுறாது நின்று ஒலித்துக்கொண்டிருந்தது அஸ்தினபுரி என்னும் ஒற்றைச்சொல்லில் திரண்ட மானுடம். தங்களுக்கென இருண்ட கரவுப்பாதைகளும் தாங்கள் மட்டுமே ஏறிச்செல்லும் தேர்களும் கொண்ட தனித்த ஆத்மாக்கள். பிறப்பும் விடுதலையும் தனித்து மட்டுமே என்று பிரம்மத்தால் விதிக்கப்பட்டவை. இக்குரலால் அவற்றை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிற்றுயிர்களை துடைப்பத்தால் கூட்டி கூடையில் அள்ளுவதைப்போல.
முதன்முதலில் வாழ்த்துக்குரல் எழுப்ப மானுடரை பயிற்றுவித்த தலைவன் எவன்? அவன் ஆழிவெண்சங்கு கொண்டு மலைநின்ற மால். வெள்விடையேறி விழிநுதல்கொண்டு இருந்த செவ்வேள். கொல்வேல் மயிலோன். மதகளிறுமுகத்தோன். விரிகதிர் வெய்யோன். அனலோன். கடலோன். வேழமூர்ந்த வேந்தன். மூத்தோன், முன்னோன். முதல்பறவை. திசையறிந்தோன். தனித்தோன். மானுடரை ஒற்றைத்திரளாக்க அவனால் முடிந்தது. அது மழைச்சரடுத்திரளை அள்ளிமுறுக்கி ஒரு வடம் செய்வதுபோல. அதிலேறி விண்ணேறி அமர்ந்தான். குனிந்து மானுடரை நோக்கி புன்னகை செய்துகொண்டிருக்கிறான்.
என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று அவன் தன்னை வியந்து மீட்டபோது கரடி மிக அணுக்கத்தில் வந்துவிட்டிருந்தது. அரசப்பெருந்தேரின் சகடங்களின் அதிர்வு கால்கள் வழியாக தன்உடலை வந்தடைவதுபோல் உணர்ந்தான். சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த அத்தனை உணர்வுகளில் இருந்தும் தனித்துவிடப்பட்டவன்போல் தன் உடல் பதறிக்கொண்டிருப்பதை உணர்ந்து சால்வையை பற்றிக்கொண்டான். அவனுக்கு மட்டுமேயான ஒரு காற்று அதை நழுவச் செய்தது. அவனை மட்டுமே சூழ்ந்த வெம்மை அவனை வியர்வை கொள்ளவைத்தது.
துச்சலன் மெல்லிய குரலில் “மூத்தவரே, வேண்டுமென்றே துவாரகையின் இளையயாதவருக்கு நிகரான பொற்தேரை அமைத்திருக்கிறான் சைந்தவன். அதை சிந்து நாட்டிலிருந்து இத்தனை தொலைவு கொண்டுவரவும் செய்திருக்கிறான். என்ன ஓர் ஆணவம்!” என்றான். “சிந்து தொல்நிலம் இளையோனே” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இளைய யாதவர் வெல்லற்கரியவர். விண்ணென விரிந்தவர்” என்றான் துச்சலன். “இவன் மானுடன். ஊழ்முன் நின்று கலங்கும் உள்ளம் கொண்டவன்.”
ஜயத்ரதனின் அணிப்பொற்தேர் விழியறியா விண்செவிமடல் ஒன்றின் குண்டலம்போல் ஆடிக்கொண்டிருந்தது. ஈயக்கலவையால் மஞ்சள்கிளியின் சிறகெனப்பொலிந்த கிளிச்சிறைப்பொன் பூசிய சிற்பச்செதுக்குத் தூண்களும் குவைமுகடும் கூம்பும். மணிதூங்கும் தொங்கல்கள் குலுங்கின. ஏழு வெண்புரவிகளும் பழுதற்ற நேருடல் கொண்டவை. தேர்ந்த இசைச்சூதரின் முரசுக்கோல்களென அவற்றின் கால்கள் மண்ணை அறைந்து தாளமிட்டன. தேரின் எட்டு உருளாழிகளும் அவற்றின்மேல் ஏற்றப்பட்ட மூங்கில்விற்களை மெல்ல அழுத்தி அசைக்க மெல்லிய நீரலைகளில் ஏறிஅமைந்து வரும் படகுபோல் செந்நிறப்பட்டுத் திரைச்சீலைகள் நலுங்க அது வந்தது.
தேரின் முன்னால் அமரபீடத்தில் பொன்னிறத் தலைப்பாகைமேல் மலைநாரை பனியிறகு சூடி, மார்பில் மகரகண்டியும் கைகளில் பொற்கங்கணமும் அணிந்து வாள்மீசையுடன் அமர்ந்திருந்த தேர்ப்பாகன் சவுக்கை காற்றில் நாகபடமெனச் சொடுக்கி மெல்லிய ஓசையெழுப்பி தேரை செலுத்தினான். தேருக்கு இருபுறமும் இரண்டு நீள்நிரைகளாக பதினெட்டு வெண்புரவிகள் கொக்குக்கூட்டங்கள்போல் கழுத்தை முன்சரித்து, தலைமேல் சூடிய காமரூபத்து மலையணில்வால்கள் நாணல்பூங்கொத்துகள் என காற்றில் உலைந்தாட வந்தன. தேரின் வெண்சிறகுகள் போல தோன்றின அவை.
அரசத்தேர் அணுகியதும் அதன் முகப்பில் வந்த புரவியில் அமர்ந்திருந்த காவலர்தலைவன் கைதூக்க தொடர்ந்த தேரில் அமர்ந்திருந்த இசைச்சூதர்கள் எழுந்து கொம்புகளையும் சங்குகளையும் முழக்கினர். பெருந்தேரை தொடர்ந்துவந்த அணித்தேர்கள் ஒவ்வொன்றிலும் சங்கொலி எழுந்து அணிநிரையின் பின்பக்கம்வரை படர்ந்துசெல்ல அனைத்து தேர்ப்பாகரும் கடிவாளங்களை இழுத்து புரவிகளை நிறுத்தினர். தேர்கள் விரைவழிந்து சகடஒலிகளும் குளம்பு மிதிபடும் கலைந்த தாளமுமாக தேங்கிநின்றன. அவற்றில் ஆடிய மணிகள் சிணுங்கின. தேர்நிரைக்குப் பின்பக்கம் வந்து நின்ற சீர்வரிசை வண்டிகள் விரைவழியும் ஒலிகேட்டது. தொலைவில் வண்டிகளை ஒழுங்குபடுத்தும் படைவீரர்களின் கூச்சல்களும் கொம்பொலிகளும் எழுந்தன.
“மூத்தவரே” என்று மெல்லிய குரலில் அழைத்துவிட்டு துச்சலனும் துச்சகனும் முன்னால் நடந்துசெல்ல கர்ணன் விழிப்படைந்து தன்னருகிருந்த அணுக்கனிடமிருந்து பொற்தாலத்தை வாங்கியபடி அவர்கள் நடுவே நடந்துசென்றான். ஜயத்ரதனின் தேருக்குப் பின்னால் வந்த வெண்திரையிட்ட தேர்களிலிருந்து சிற்றமைச்சர்கள் இறங்கி அரசத்தேருக்கு வலப்பக்கமாக வந்து அணிவகுத்தனர். அவர்களுக்குப் பின்னால் வந்த இளஞ்சிவப்புத் திரையிடப்பட்ட தேர்களிலிருந்து அணிப்பரத்தையர் இறங்கி மங்கலத்தாலங்களுடன் இடப்பக்கமாக வந்து வரிசையாயினர். அவர்களுக்குப் பின்னால் வந்த இளநீலத் திரையிடப்பட்ட தேர்களிலிருந்து இசைச்சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் இறங்கிவந்து தேருக்குப் பின்னால் நின்றனர்.
தலைக்கோலன் முன்னாலெழுந்து கோல்சுழற்ற மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. தேருக்கு முன்புறம் கர்ணனும் இளையகௌரவர்களும் நின்றனர். மூச்சிரைக்க ஓடிவந்த அமைச்சர் கனகர் திரும்பி பின்னால் நோக்கி கையசைத்து ஆணைகளை பிறப்பித்தார். கோட்டைமுகப்புவாயிலில் நின்ற வைதிகர்கள் வேதம் ஓதியபடி வந்து அவர்களை கடந்துசென்று ஜயத்ரதனின் தேரை அணுகினர். இடப்பக்கத்திலிருந்து அஸ்தினபுரியின் அணிப்பரத்தையரும் மங்கலச்சூதரும் அவர்களை தொடர்ந்துசென்றனர்.
கனகர் இருகைகளையும் விரித்து சிந்துநாட்டின் அமைச்சருக்கு செய்திசொல்ல அவர் கண்களை அசைத்து அச்செய்தியை பிறருக்கு சொன்னார். மூத்தஅமைச்சர் ஒருவர் தேரின் படிகளில் ஏறி திரைவிலக்கி உள்ளே சென்று ஜயத்ரதனை அழைத்தார். கனகர் சிறியமேடை ஒன்றில் ஏறி கோட்டைமேலிருந்து அவரை நோக்கிக் கொண்டிருந்த காவலனை நோக்கி கையசைத்து ஆணையிட்டார். கோட்டைமேல் பெருமுரசுகளருகே கோல்காரர்கள் எழுந்து கையோங்கினர். கொம்புகள் இளங்களிறின் துதிக்கைகள் என எழுந்து வாய்களுடன் பொருந்தின. கோட்டை காத்திருந்தது.
திரைவிலக்கி அரசமுழுதணிக்கோலத்தில் ஜயத்ரதன் வெளித்தோன்றியதும் ஆயிரம்கைகளால் கோட்டை ஏந்திக்கொண்டிருந்த அத்தனை பெருமுரசுகளும் கொம்புகளும் முழவுகளும் சங்குகளும் ஒற்றைப்பேரொலியாக ஆயின. விண்ணகம் முழுக்க இடிநிறைந்ததுபோல் இருந்தது. பலநூறு எரியம்புகள் எழுந்து வானில் வெடித்து விண்மீன் மழையென பொழிந்தன. வாழ்த்தொலிப் பெருக்கு ஒளியையும் காற்றையும் அதிரச்செய்து பார்வையையே மறைத்ததுபோல் தோன்றியது.
இருகைகளையும் கூப்பியபடி ஜயத்ரதன் இறங்கி அஸ்தினபுரியின் மண்ணில் நின்றதும் வைதிகர்கள் வேதம் ஓதியபடி கங்கைநீரை அவன்மேல் தெளித்து அரிமஞ்சளும் மலருமிட்டு வாழ்த்தினர். மங்கலப்பரத்தையர் குரவையொலியுடன் அவன் எதிரே சென்று தாலங்களை அவன்முன் நீட்டினர். அவன் திரும்பி தன் பின்னால்நின்ற மங்கலச்சேடியரின் தாலங்களிலிருந்து பொன்நாணயங்களை எடுத்து தாலத்திற்கொன்றாகப் போட்டு ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு நறுமணப்பொருளை எடுத்து தன் சென்னியில் தொட்டு மறுபக்கமிருந்த தாலத்தில் போட்டான்.
பதினெட்டு மங்கலத்தாலங்கள் காட்டப்பட்டபின் சேடியர் விலக இசைச்சூதர் கௌரவரின் இருபக்கமும் சூழ்ந்துகொண்டனர். இசைமுழங்க கர்ணன் நீள்சீரடிவைத்து நடந்து ஜயத்ரதனை அணுகி கைகூப்பி “சிந்து நாட்டரசே, தாங்கள் அஸ்தினபுரிக்குள் எழுந்தருளும் இந்நாள் மங்கலம் கொள்க! திருவுடை அரசர் திருமாலே என்பார்கள். தங்கள் வருகையால் எங்கள் களஞ்சியங்களில் கூலமும், கருவூலங்களில் பொன்னும், கன்னியர் நெஞ்சங்களில் கனலும், அன்னையர் முலைகளில் அமுதும்,, கற்றோர் சொற்களில் மெய்யும் நிறைவதாக!” என்றான்.
ஜயத்ரதன் விழிதூக்கி கர்ணனை நோக்கினான். அவன் கர்ணனை அறியாதவன் போலிருந்தான். புன்னகை அரசர்களுக்குரிய விழிதொடாத பொதுமலரலாக இருந்தது. கற்றும் சொல்லியும் சொல்லன்று ஒலியே என்று ஆகிவிட்ட சொற்களில் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று கூறி அவன் தலைவணங்கினான்.
கர்ணன் ஜயத்ரதனின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். ஆனால் தான் நோக்குவதை அவன் உணரக்கூடாது என்றும் நுண்ணிதின் உளம் தேர்ந்திருந்தான். ஜயத்ரதன் முகம் அப்போதுதான் அச்சிலிருந்து எடுக்கப்பட்ட செப்புப்படிமையின் சீர்வடிவும் உறைந்த ஒற்றை உணர்வும் கொண்டிருந்தது. விழிகள் தாலத்தையும் ,அவற்றை ஏந்தி நின்ற கௌரவர்கள் முகத்தையும் இணையாக நோக்கின. அசையாச் சுடர்போல் ஓர் அசைவு அவனில் இருப்பதை கர்ணன் கண்டான். அவன் தன்னை நோக்கவில்லை என முதற்கணம் உணர்ந்து மறுகணமே அவன் தன்னையன்றி பிறர் எவரையும் நோக்கவில்லை என்றும் அறிந்துகொண்டான்.
இப்படி கரந்துநோக்கும் கலையை அவன் அறிவான் என்பதே அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. ஒருபோதும் பிறர் தன்னை நோக்குவதை அவன் பொருட்டென எண்ணியதில்லை. அது பெண்டிர் இயல்பென்று இளவயதிலேயே ஒரு விலக்கம் கொண்டிருந்தான். இன்று தன் ஆணிலை அழிந்து பேதைப்பெண்ணென உள்ளம் நீர்மைகொள்ள அங்கு நின்றிருப்பதை உணர்ந்தபோது நாணுற்று அதனாலேயே தருக்குற்று தன்தோள்களை நிமிர்த்தி தலையைத்தூக்கி முழங்கிய குரலில் “அஸ்தினபுரிக்கு தங்கள் வருகை சிறப்புறுக! குலமன்று அமர்ந்து இந்நாட்டை ஆளும் பேரரசர் திருதராஷ்டிரரும் அவர் உளமாளும் பிதாமகர் பீஷ்மரும் அவைச்சொல்லாளும் கிருபரும் துரோணரும் முடியாளும் துரியோதனரும் அவ்வாறே விழைகிறார்கள் அரசே” என்றான்.
எந்த மாறுதலுமின்றி “நன்று” என்றான் ஜயத்ரதன். கர்ணன் தலைவணங்கி பின்னால் நகர துச்சலனும் துர்முகனும் சென்று ஜயத்ரதனை வணங்கி முகமன் உரைத்தனர். கௌரவர்கள் ஒவ்வொருவராகச் சென்று முறைமைச்சொல் உரைத்து வரவேற்றபின் கர்ணன் வலம்நின்று ஜயத்ரதனை நகர்நோக்கி அழைத்துச்சென்றான். துச்சலனும் துர்முகனும் இருபக்கமும் உடைவாள்தொட்டு நடந்துவர நடுவே கைகூப்பியபடி ஜயத்ரதன் நடந்தான். அவனைத் தொடர்ந்து அவனது அமைச்சர்களும் மங்கலச்சேடியரும் சென்றனர்.
சாலையின் இருபுறமும் கூடிநின்ற அஸ்தினபுரியின் குடிமக்களும் வீரர்களும் வாழ்த்தொலிகள் முழங்க அவன்மேல் அரிமலர் தூவி வாழ்த்தினர். அவர்கள்மேல் கோட்டைக்குமேல் எழுந்த இளங்கதிரவனின் ஒளி பொழிந்தது. “மாமன்னர் ஜயத்ரதர் வாழ்க! சைந்தவர் வாழ்க! ஏழுநீர் ஆளும் எழுகதிர் வாழ்க!” என்று வீரர்கள் கூச்சலிட்டனர். அப்பாலிருந்து ஒரு குரல் “பொற்கதிர் பெற்ற மைந்தர் கர்ணன் வாழ்க! ஒளிமணிக்குண்டலம் வாழ்க! எரியொளிர் கவசம் வாழ்க!” என்று ஓங்கி ஒலித்தது.
திகைத்து கர்ணன் திரும்பி நோக்கினான். வெறிகொண்டவர்போல உடம்பெல்லாம் பதைபதைக்க கைகளிலும் கழுத்திலும் இழுத்துக்கட்டிய நீலநரம்புகளுடன் ஒரு முதியவர் பட்டுத்திரைநின்ற பொன்மூங்கில் கணுவில் மிதித்து மேலேறி கைகளை வீசி “செய்யோன் சேவடி வாழ்க! வெய்யோன் மைந்தன் வாழ்க!” என்று கூவினார். “வாழ்க! அளிகொள் அங்கைகள் வாழ்க! அழியாப்பெருங்கருணை வாழ்க! அங்கமன்னர் வாழ்க!” என்று கூட்டம் கூவியது. சற்றுநேரத்தில் அங்குள்ள அத்தனைபேரும் கர்ணனை வாழ்த்தி கூவத்தொடங்கினர்.
கர்ணன் திகைத்து துச்சலனிடம் ஏதோ சொல்ல முயல அவன் மலர்ந்தமுகத்துடன் தானும் கையசைத்து அவர்களுடன் இணைந்திருப்பதைக் கண்டு கனகரை நோக்கினான். கனகர் கைகாட்ட வீரர்கள் அதை புரிந்துகொண்டு “சிந்துமைந்தர் வாழ்க! எழுநீர் ஏந்தல் வாழ்க!” என்று கூவினர். அதை பிற வீரர்களே ஏற்றுக்கூவினர். அவ்வொலி தனித்தெழாது கரைந்தது. கர்ணன் ஜயத்ரதனை நோக்கினான். அவன் முகம் முதற்கணம் போலவே மென்சிரிப்பும் விழிமலர்வுமென சிலைத்திருந்தது.
அவர்களின் ஊர்வலம் கோட்டையின் முகப்பைக் கடந்து உள்ளே சென்றபோது கோட்டைக்காவலர்கள் இருபக்கமும் நின்று வாழ்த்துக்கூவினர். மறுபக்கம் இளவெயில் நிறைந்து நின்றிருந்த பெருமுற்றத்தில் பொற்பூச்சுமின்னிய தேர்களும், திரைச்சீலைகள் நெளிந்த பல்லக்குகளும், முகபடாமிட்ட யானைகளும், அல்லிமலர்ப்பரப்பு போன்ற புரவித்திரளும் நிறைந்திருந்தன. அணிப்பந்தலில் நின்றிருந்த அமைச்சர் விதுரரும் ஏழு சிற்றமைச்சர்களும் வணங்கியபடி ஜயத்ரதனை நோக்கி வந்தனர்.
ஜயத்ரதன் விதுரரை தலைகுனிந்து வணங்கி “பேரமைச்சரை வணங்குகிறேன். நெடுநாட்களுக்குப்பின் தங்களை சந்திக்கும் நல்லூழ் பெற்றேன்” என்றான். விதுரர் நகைத்தபடி அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு “நன்று. மேலும் தோள்பெருத்து தலை உயர்ந்திருக்கிறீர்கள் அரசே” என்றார். “சிந்துநாடு தனக்கென்று ஒரு விண்ணரசனை பெற்றிருக்கிறது என்றொரு சூதன் இங்கு பாடினான். இன்று அதை காண்கிறேன். இந்நகர் ஊர்வதற்கு தங்களுக்குரிய ஊர்தி ஐராவதமே” என்றார்.
ஜயத்ரதன் நகைத்து “வெண்ணிறயானை ஒன்று இங்கு கொண்டுவரப்பட்டதை முன்னரே ஒற்றர்கள் சொன்னார்கள் அமைச்சரே” என்றான். விதுரர் அவன் தோளைத் தட்டியபடி சிரித்தார். சிற்றமைச்சர் கைகாட்ட முற்றத்தின் மறுபக்கம் அணிகொண்டு நின்றிருந்த வெண்களிறு இருபாகன்களால் கொம்புபற்றி அழைத்துக்கொண்டு வரப்பட்டு ஜயத்ரதன்முன் வந்துநின்றது. அதன் செந்நிறக்காதுகளில் காளானின் தளிர்த்தண்டுகள்போல வெண்முடிகள் எழுந்திருந்தன. முகமெங்கும் நீர்க்கலங்கல் போல செந்தேமல் பரவியிருந்தது. சிவந்த துதிக்கையால் அவர்களின் மணம்கொள்ள முயன்றது.
ஜயத்ரதன் “இதன் பெயரென்ன?” என்றான். “இதை நாங்கள் ஐராவதம் என்றே அழைக்கிறோம்” என்றார் விதுரர். கனகர் “இங்கு வந்து எட்டு மாதங்களே ஆகின்றன. நன்குபயின்ற களிறு. ஆனால் பார்வை மிகவும் குறைவு. துதிக்கைபற்றி அழைத்துச்சென்றாலொழிய பகலில் எங்கும் செல்லாது” என்றார். ஜயத்ரதன் அதன் அருகே சென்று அதன் மத்தகத்தை கையால் அறைந்து வளைந்த கொம்பைப்பற்றி உடலைத்தூக்கி பின் இறங்கினான். யானை சிவந்த துதிக்கையால் அவன் தோளை வருடி தோலுரசும் ஒலியுடன் இறக்கியது.
ஜயத்ரதன் முகம்மலர்ந்து விதுரரிடம் “பெரியதோர் வெண்தாமரைபோல் இருக்கிறது” என்றான். “ஆம், இதற்கு பத்மன் என்றுதான் முன்னர் பெயரிட்டிருந்தார்கள்” என்றார் விதுரர். “ஏறிக்கொள்ளுங்கள் அரசே! இந்திரன் எங்கள் நகரிலும் எழுந்தருளட்டும்.” ஜயத்ரதன் “ஆம், இன்று ஒரு நாள் இங்கே விண்ணில் ஊர்கிறேன்” என்றபடி யானையின் அருகே செல்ல பாகன் அதன் காலை தட்டினான். வலக்காலை மடித்து தூக்கி அது மெல்ல பிளிறியது. அதன் காலை மிதித்து தொடைக்கணுவைப்பற்றி ஏறி கால்சுழற்றி அம்பாரிமேல் அமர்ந்தான். அவன் ஒருகணமேனும் தன் விழிகளை சந்திப்பான் என கர்ணன் நினைத்தான். ஆனால் அவன் கர்ணனை முற்றிலும் அறியாதவன் போலிருந்தான்.
யானையின் பின்பக்கக்கால் வழியாக ஏறிஅமர்ந்த காவலன் வெண்கொற்றக்குடையை ஜயத்ரதனுக்கு மேலாக பிடித்தான். பிற இரு காவலர்கள் அவனுக்குப்பின்னால் அமர்ந்து வெண்சாமரங்களை இருபக்கமும் வீசத்தொடங்க விண்ணிலெழுந்த வெண்சிறகுப்பறவைபோல் அவன் யானைமேல் ஊர்ந்து முன்சென்றான். சீர்நடையில் கால்களை எடுத்துவைத்து யானை அரண்மனையை நோக்கிய அரசவீதியில் நுழைந்தது.
இருபக்கமும் கூடியிருந்த அஸ்தினபுரியின் குடிமக்கள் மலர் பொழிந்து பெருங்கூச்சலுடன் அவனை வாழ்த்தி வரவேற்றனர். இரு கைகளையும் விரித்து இளைஞர்களை வாழ்த்தியும் கைகூப்பி முதியவர்களை வணங்கியும் ஜயத்ரதன் வெண்களிறுமேல் ஊர்ந்தான். அவனுக்குப் பின்னால் அஸ்தினபுரியின் குழந்தைகளும் பெண்களும் ஆர்ப்பரித்தபடி அணிஊர்வலமாக சென்றனர். அவன் குடைமேலும் கவரியிலும் காலையொளி சுடர்விட்டது. கர்ணன் அவனையே நோக்கியபடி நின்றான்.