வெய்யோன் - 33

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 10

விதுரர் கர்ணனிடம் “இனிமேல்தான் இளவரசரின் நகர்நுழைவுச் சடங்கு அரசே” என்றார். கர்ணன் புன்னகையுடன் “அந்த வெள்ளையானை வீணாகக் கொட்டிலில் நின்று உண்கிறதே என எண்ணியிருக்கிறேன். அதற்கும் ஒருநாள் வந்தது” என்றான். விதுரர் வாய்க்குள் புன்னகைத்து “காலையில்தான் தோன்றியது, தேவைப்படும் என்று” என்றார்.

கர்ணன் துச்சலனிடம் “இளைய கௌரவர்களை இறங்கவைக்கலாமே” என்றான். “இல்லை மூத்தவரே, இன்னும் சடங்குகள் உள்ளன” என்றான் துச்சலன். “அவர்கள் இங்கு வந்து என்ன செய்வார்கள் என்றே சொல்லமுடியாது.” கர்ணன் “அவர்கள் வரட்டும். இந்த நகரம் அவர்களால் பொலிவதையே துச்சளை பார்க்க விழைவாள்” என்றபடி மீண்டும் கோட்டைமுகப்பை நோக்கி சென்றான். துச்சலன் கையசைத்து கோட்டையை நோக்கி ஆணையிட்டான். துர்முகன் உடன்வந்தபடி “கோட்டைக்காவலர் கொள்ளும் விடுதலைமகிழ்ச்சியைக் காண நிறைவாக இருக்கிறது…” என்றான்.

கர்ணன் கோட்டைவாயிலை கடப்பதற்குள் மேலிருந்து கீழே வரும் இரும்புவாயில்கள் அனைத்தும் திறக்கப்பட பேரொலியுடன் இளைய கௌரவர்கள் அத்தனை வழிகளிலும் வெள்ளமென பீரிட்டு வந்து அவனைச் சுற்றி நிரம்பினர். கூச்சலும் சிரிப்புமாக அவர்கள் முன்னால் ஓடினர். தமையனின் தோளில் அமர்ந்திருந்த கரியகுழந்தை துச்சலனைப் பார்த்து கைசுட்டி “ஆ! ஆ!” என்று கத்திக்கொண்டிருந்தது. கர்ணன் துச்சலனிடம் “அது யார்? உன் மைந்தனா?” என்றான். “என் மைந்தனா என்று ஐயமாக இருக்கிறது” என்றான் துச்சலன். “இருக்கலாம். அவனுக்கு தெரிந்திருக்கிறது.”

இளைய கௌரவர்களை பார்த்ததும் கோட்டைக்குமுன் கூடிநின்றிருந்த அத்தனைபேரும் கலைந்து சிதறி விலக கூட்டம் கூச்சலிட்டு சிரித்தபடி அலையிளகத் தொடங்கியது. வாளேந்திய வீரர்கள் இருகைகளாலும் வாள்களை மேலே தூக்கி “அருகே வராதீர்கள்! கூர்வாள்! அருகே வராதீர்கள்” என்று கூவினர். அவர்கள் கால்கள் நடுவே சிறியகுழந்தைகள் பாய்ந்தோடினர். பல வீரர்கள் காலிடறி கீழே விழுந்தனர். அவர்கள்மேல் குழந்தைகள் ஏறி ஓடின. சிலர் ஆடையவிழ பதறித்திரும்பிச் சுழன்றனர். யானைகள்கூட அஞ்சி கால்களை தூக்கிவைத்து வயிறதிர பிளிறின. சற்றுநேரத்தில் புயல்சுழற்றிய பெருங்காடு போலாயிற்று கோட்டைமுகப்பு.

கர்ணன் வெளியே சென்றபோது அவனைச் சூழ்ந்துவந்த இளைய கௌரவர்கள் கைக்குச் சிக்கிய அனைத்தையும் தூக்கிவீசி கூச்சலிட்டனர். “பெரீந்தையே! யானையை இவன் அடித்தான்” என்றது ஒரு குரல். ”பெரீந்தையே நான் வாளால் வெட்டினேன்” “பெரீந்தையே என் ஆடை எங்கே?” புரவி ஒன்றின் வால் இழுக்கப்பட அது மிரண்டு கனைத்தது. தூண் ஒன்று சரிந்து யானைமேல் விழ அது சுழன்று திரும்பி துதிக்கைநீட்டி அதைப்பிடித்து ஆராய்ந்தது. கர்ணனுக்குப் பின்னால் ஓடிவந்து இன்னொருவன் தோள்மேல் மிதித்து ஏறிப்பாய்ந்து தோளை கவ்விக்கொண்ட ஒருவன் “பெரியதந்தையே! என்னை வானை நோக்கி விட்டெறிடா” என்றான். கர்ணன் அவனைச் சுழற்றி வானை நோக்கி விட்டெறிந்து பிடித்துக் கொண்டான். “என்னை! என்னை!” என்று நூறு குட்டிக்கைகள் அவனைச் சூழ்ந்து குதித்தன.

“வேண்டாம்! யாராவது வாளை நீட்டினால் சென்று விழுவீர்கள்” என்றான் கர்ணன். “விழமாட்டோம், நாங்கள் வானில் பறப்போம்” என்றான் ஒருவன். “நான் அனுமன்! நான் அனுமன்!” என்று ஒரு சின்னஞ்சிறுவன் துள்ளித்துள்ளி குதித்தான். அவனை தள்ளிவிட்டு ஓடிய ஒருவனை பின்னால் துரத்திச்சென்று அள்ளிப்பற்றி அவன் தொடையில் கடித்தான். கர்ணன் ஓடிச்சென்று அவனை தோளைப்பிடித்து தூக்கினான். அவன் திரும்பி கர்ணனின் கையை கடிக்க முயன்றான். கையை இழுத்துக்கொண்டு “உன் பெயரென்ன?” என்றான் கர்ணன். “அவன் பெயர் துர்மீடன்” என்றான் கீழே நின்ற அதேயளவான ஒருவன். “உன் பெயர் என்ன?” என்றான் கர்ணன். “என் பெயரும் துர்மீடன். நான் என் பெயரை அவனுக்கு போட்டேன்” என்றான்.

கர்ணன் சிரித்து துச்சலனிடம் “குழந்தைகளைப்பற்றிய அத்தனை நூல்களையும் கடந்து நான்கு திசையிலும் பெருகி வழிந்துவிட்டார்கள்” என்றான். “முதலில் இதெல்லாம் குழந்தைகளே அல்ல என்ற பேச்சு இங்கு உள்ளது” என்றான் துர்முகன். “இவர்கள் எண்ணங்கள் எப்படி ஓடுகின்றன என்பதை எவராலும் சொல்ல முடியாது” என்றான் துச்சலன். “நான் ஒருமுறை என் இல்லத்துக்கு சென்றபோது குட்டியானை ஒன்றை படிகள் வழியாக மேலேற்றி ஏழாவதுமாடியில் உள்ள களஞ்சிய அறைக்குள் கொண்டு சென்றிருந்தார்கள். யானையை மாடிக்கு கொண்டுசெல்லும் குழந்தைகளைப்பற்றி முதுதாதை வியாசர்கூட அவரது காவியத்தில் எழுதியிருக்கமாட்டார்.”

”அந்த யானைக்குட்டியும் இவர்களின் கணத்தைச் சேர்ந்தது. இல்லையேல் அது ஏன் ஏறுகிறது?” பேரொலியுடன் தரையில் ஒரு எரியம்பு வெடித்தது. அங்கு கூடிநின்ற அத்தனைபேரும் சிதறி ஓட உரத்தகுரலில் “என்ன ஆயிற்று?” என்றான் கர்ணன். வீரன் ஒருவன் கரிபடிந்து பதறி ஓடிவந்து “நான் கையில் வைத்திருந்த எரியம்பை இளைய கௌரவர் இருவர் எரியூட்டிவிட்டனர் அரசே” என்று தழுதழுத்தான். மேலும் மூன்று எரியம்புகள் கீழேயே வெடித்தன. அனைவரும் விலகி உருவான வட்டத்தில் உடலெங்கும் புழுதியும் கரியுமாக மூன்று இளையகௌரவர்கள் நின்றனர். “அனல் சுட்டிருக்கிறது” என்றான் கர்ணன். “அதைப்பற்றி யாரும் இங்கு எண்ணப்போவதில்லை. அவர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்” என்றான் துச்சகன்.

கர்ணன் முன்னால் சென்று அங்கு கருகியமுடியுடன் நின்ற இளைய கௌரவன் ஒருவனை பற்றி “நீயா தீயை வைத்தாய்?” என்றான். “நான் தீயை வைக்க எண்ணினேன் பெரியதந்தையே” என்றான் அவன். “ஆனால் தீயை வைத்தவன் அவன்.” கர்ணன் “அவன் எங்கே?” என்றான். அவன் உவகையுடன் பற்களைக் காட்டி “அவன் ஓடிவிட்டான். நான் எண்ணிக்கொண்டிருந்தபோது அவன் தீயை வைத்துவிட்டு ஓடிவிட்டான்” என்றான். “உன் பெயரென்ன?” என்றான் கர்ணன். “நான் மூத்தவன்,மிகப்பெரியவன்” என்றான். “உன் பெயரென்ன?” என்றான் கர்ணன். அத்தனை நேரடியான கேள்வியை எதிர்கொள்ளமுடியாத அவன் குழம்பி “என் பெயர்…” என்றபின் அருகே நின்ற இளையவனை நோக்கினான். அவன் “இவன் பெயர் குடீரன்” என்றான். “குடீரனா உன் பெயர்? என்றான் கர்ணன். அவன் குழப்பமாக தலையசைத்தான்.

“உனக்கு புண்பட்டிருக்கிறதா?” என்றான் கர்ணன். “இல்லை பெரியதந்தையே, புண்படவில்லை. ஆனால் உடம்பெல்லாம் எரிகிறது” என்றான் அவன். “நீரில் சென்று விழு, போ!” என்றான் கர்ணன். “நான் குழந்தையை பார்த்துவிட்டு நீரில் சென்று விழுவேன்” என்று அவன் சொன்னான். “எரியம்புகளை எல்லாம் எடுத்துச்செல்லுங்கள். படைக்கலங்கள் எவையும் இங்கிருக்க வேண்டியதில்லை” என்று கர்ணன் ஆணையிட்டான். “வரவேற்புக்கென அனைத்தையும் ஒருக்கியிருந்தோம்… எல்லாமே சிதைந்துவிட்டன” என்றான் ஒரு வீரன். கர்ணன் “எதுவும் தேவையில்லை. துச்சளையை வரவேற்கவேண்டியவர்கள் இவர்கள்தான்” என்றான்.

அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் தொலைவில் வந்துகொண்டிருந்த அணிப்பல்லக்கைக் கண்டு துச்சலன் கைவீசி எம்பிக்குதித்து “வந்துவிட்டாள்! வந்துவிட்டாள்!” என்றான். துச்சகன் “ஆம், துச்சளை!” என்று கூச்சலிட்டான். கர்ணன் பல்லைக்கடித்து “கூச்சலிடாதீர்கள்… நீங்கள் அரசகுடியினர்” என்றான். இருபக்கமும் மங்கலச்சேடியர் தாலங்களுடன் அணிவகுக்க நடுவே திறந்ததேர்களில் சூதர்கள் இசைக்கலங்களை மீட்டியபடி வந்தனர். அதைத் தொடர்ந்து எட்டுமங்கலங்கள் கொண்ட தட்டுத்தேர் ஒன்று வந்தது. ஒவ்வொன்றாக அவர்களை கடந்துசெல்ல இளைய கௌரவர்கள் கூவியபடி அவற்றைத் தொடர்ந்து ஓடினர்.

“ஓடும் எதையும் இவர்களால் துரத்தாமலிருக்க முடியாது” என்றான் துச்சலன். சிந்துநாட்டு அணிஊர்வலம் அவர்களை அணுகஅணுக சிதறிப்பரந்து கட்டற்ற பெருங்கூட்டமாக ஆகியது. மங்கலச்சேடியர் தாலங்களை மேலே தூக்கி பிடித்தார்கள். அவர்களின் ஆடைகளை குழந்தைகள் பிடித்து இழுக்க மறுகையால் அவற்றை அள்ளிப்பற்றிக்கொண்டு கூச்சலிட்டனர். வீரர்கள் படைக்கலங்களையும் சூதர்கள் இசைக்கலங்களையும் தலைக்குமேல் தூக்க துச்சலன் “ஆ! அனைத்தும் எடையிழந்து நீரில் மிதக்கின்றன” என்றான்.

துச்சளையின் பல்லக்கை அடையாளம் கண்டுகொண்ட இளைய கௌரவர் பெருந்திரளாக ஓடிச்சென்று அதை தூக்கிவந்தவர்களை பற்றிக்கொண்டனர். அவர்கள் உதறியபடி சுழல பல்லக்கு நீரில் சுழியில்பட்ட படகுபோல சரிந்து முன்னும்பின்னுமாக ஆடி ஒருபக்கமாக குடைசாய்ந்தது. துச்சலன் “கீழே வையுங்கள்! பல்லக்கை கீழே வையுங்கள்!” என்று கூவினான். அவர்கள் “என்ன?  என்ன?” என்றனர். “கீழே! கீழே வையுங்கள்” என்று துச்சலன் கூவ அதற்குள் அவர்களே பல்லக்கை கீழே வைத்துவிட்டனர்.

நான்கு இளைய கௌரவர்கள் பல்லக்கின் அனைத்து திரைச்சீலைகளையும் பிடுங்கிவீச ஒருவன் அதன் மலர்மாலையைத் தொற்றி மேலேறமுயன்று அறுபட்டு கீழே விழுந்தான். இன்னொருவன் தூணைப்பற்றி அதன்மேலே ஏற ஒருவன் அவனைப் பிடித்து இழுத்தான். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பல்லக்கின் அணிமுகடு ஆடி ஒருபக்கமாக சாய்ந்து உடைந்தது. உள்ளிருந்து சிரித்தபடி துச்சளை வெளியே வந்து அவளை நோக்கி பாய்ந்துசென்ற நான்கு இளைய கௌரவர்களை அள்ளி தன்மார்புடன் அணைத்துக்கொண்டாள். அத்தனைபேரும் ஒரேசமயம் பாய்ந்து அவள் உடலை மொய்த்தனர். அவள் குழலையும் ஆடைகளையும் அணிகளையும் பிடித்திழுத்தனர். அவள் பெரிய கைகளுக்கு மூவராக தொற்றிக் கொண்டனர்.

தொலைவிலிருந்தே அவள் கரியமுகத்தில் ஒளிவிட்ட வெண்பற்களை கர்ணனால் பார்க்க முடிந்தது. உரக்கச்சிரித்து அவர்களைத் தூக்கி தோளிலும் இடையிலும் வைத்துக்கொண்டாள். கர்ணன் சிரித்தபடியே அவளை நோக்கி சென்றான். துச்சலன் “பெருத்துவிட்டாள்! எங்களைவிட பேருடல் கொண்டுவிட்டாள்!” என்றான். துச்சகன் “அவளை ஒருமுறை கதாயுதப்போருக்கு அழைத்துப்பார்க்கவேண்டும்” என்றான்.

அவர்கள் அருகே நெருங்கியபோது உடலெங்கும் மைந்தருடன் தடுமாறி நின்ற துச்சளை கர்ணனைப் பார்த்து “மூத்தவரே, நீங்களா?” என்று உரக்கக்கூவி அவனை நோக்கி வந்தாள். அவர்கள் இருவருக்கும் குறுக்காக ஓடிய சிறுவன் ஒருவனைப்பிடித்து தூக்கி இடையில் வைத்தபடி குனிந்து கர்ணனின் காலைத்தொட்டு சென்னி சூடினாள். அவள் குனிந்தபோது இரு குழந்தைகள் உதிர்ந்தன. “அத்தை! அத்தை!” என பின்னால் குழந்தைகள் கூச்சலிட்டன. “த்தை த்தை” என்று ஒரு கைக்குழந்தை அவள் ஆடையில் தொங்கிக்கிடந்தது.”த்தை !இத்தை! தை! “ என பலவகையான ஒலிகளால் அவள் சூழப்பட்டிருந்தாள்.

“உன் தந்தையைப் போலவே பேருடல் கொண்டவளாகிவிட்டாய்” என்றான் கர்ணன். “ஆம், மூத்தவரே. குழந்தைப்பேறுக்குப் பிறகு மேலும் இருமடங்கு உடல் கொண்டுவிட்டேன்” என்றாள் துச்சளை. “அதைத்தானே சொல்கிறோம்” என்று துச்சலன் சொன்னான். “நான் அங்கேயே பார்த்தேன்… நீ பெருத்துவிட்டாய் என்று சொன்னேன்.” அவள் குனிந்து கௌரவர் கால்களைத்தொட்டு வணங்கினாள். அவள் கரியஉடல் வார்ப்பிரும்புபோல பளபளத்தது. கைகள் திரண்டு மலைப்பாம்புபோல் ஈரம்தெரிய நின்றன. உள்ளங்கைகள் மட்டும் செந்தளிர் இலைகள்போல சிறியவையாக சிவந்திருந்தன.

உடலெங்கும் அவள் அணிந்திருந்த நகைகளை இளைய கௌரவர்கள் பிடுங்கி தரையெங்கும் பரப்பிவிட்டிருந்தனர். ஒரு குழந்தை அவள் மேல் மண்ணை வாரி இறைத்து “த்தை த்தை” என்றது. அதன் மேல்வாயில் இருபற்கள் வெண்ணிறமாக தெரிந்தன. எச்சில் மார்பில் வழிந்திருந்தது. “எத்தனை குழந்தைகள்!” என்றாள் துச்சளை குனிந்து அதன் வாயை துடைத்தபடி. “எல்லாருக்கும் முதல்பல் மேல்வாயில்தான்… வியப்பாக இருக்கிறது.” குனிந்து “உலகையே எலிகளைப்போல கறம்பித் தின்கிறார்கள்” என்றான் துர்முகன்.

“பல்லக்கில் இருக்கையில் அலைபோல் இறங்கி அவர்கள் வருவதை பார்த்தேன் மூத்தவரே. ஒரு கணம் நெஞ்சைப் பற்றிக்கொண்டு நான் அழுதேன்” என்றாள். துச்சலன் “இங்கும் பெண்கள் அழுகிறார்கள்” என்றான். சுபாகு “தங்கையே, உன்னைப் பார்ப்பதற்காக சிந்துநாடு வரவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் இங்கு நாங்கள் நூற்றுவரும் உடனிருக்கவேண்டுமென்பது தமையனின் ஆணை” என்றான். “சுஜாதன் ஏழுநாட்கள் அங்கநாட்டுக்குச் செல்வதற்கே மூத்தவர் கண்கலங்கி விடைகொடுத்தார்.”

“ஆம், நீங்கள் அவருடன் இருக்கவேண்டும். நீங்கள் ஒரே உடல்” என்றாள் துச்சளை. “நானே இந்நகரைவிட்டு இனி திரும்பிபோகவேண்டுமா என்று ஐயுறுகிறேன்.” துச்சலன் “நீ சிந்துநாட்டுக்கு அரசி” என்றான். அவள் உதட்டைச் சுழித்து “அது என்ன ஊர்? ஏழு ஆறுகள் ஓடும் நிலம் என்று பெருமை வேறு” என்றாள். “ஏழு ஆறுகள் ஓடுவதென்பது எளிய செய்தியா என்ன?” என்றான் கர்ணன். “நீங்கள் ஒன்றும் சொல்லவேண்டியதில்லை மூத்தவரே. அரசு முறைமைகள் எனக்கு சலிப்பூட்டுகின்றன. அங்குள்ள ஒரே சிறப்பு மீன்உணவு கிடைத்துக்கொண்டே இருப்பதுதான்.” துச்சகன் “அதுதானா உன் உடலின் நுட்பம்?” என்றான்.

“குழந்தை எங்கே?” என்றான் கர்ணன். “அவனை நகர்புகச் செய்யவே நான் வந்திருக்கிறேன்.” துச்சளை “பின்னால் அவனுக்கென ஒரு பொற்பல்லக்கு வருகிறது” என்றாள். “செவிலியர் அவனை வைத்திருக்கிறார்கள். ஒரு குழந்தையுடன் சீராடுவதற்கெல்லாம் எனக்கு பொழுதில்லை. என் கைநிறைய பிள்ளைகள் வேண்டும். இதைப்போல” என்றாள். “இப்போதுதான் ஒரு குழந்தை வந்திருக்கிறது உனக்கு” என்றான் துர்முகன். கர்ணன் “அவள் திருதராஷ்டிர மாமன்னரின் குருதி. முயன்றால் நூறு குழந்தைகளை பெற்றுக்கொள்வதும் அரிதல்ல” என்றான். “உண்மையிலேயே அப்படித்தான் விழைகிறேன். என் முதுமையில் இதைப்போல் என்னைச் சூழ்ந்து ஆயிரம் குழந்தைகள் ஆடுமென்றால் விண்ணிலிருக்கும் தெய்வங்கள் அழைத்தாலும் செல்லமாட்டேன்” என்றாள்.

கர்ணன் “குழந்தையைக் காட்டு கரியவளே” என்றான். “அவனை சிந்துநாட்டின் கொடிபறக்கும் பல்லக்கில்தான் அஸ்தினபுரிக்குள் கொண்டுவரவேண்டும் என்பது அவன் தந்தையின் விருப்பம்” என்றாள் துச்சளை. “நன்று… அந்தப் பல்லக்குதானே?” என்றான் கர்ணன். கரடிக்கொடியுடன் ஒருவீரன் முன்னால் புரவியில் வர பொற்பூச்சு மின்னிய பெரியபல்லக்கு எட்டுபோகிகளால் சுமக்கப்பட்டு வந்தது. “நம் குழந்தைப்பெருக்கு இன்னும் அதை சுற்றிக்கொள்ளவில்லை… நல்லூழ்தான்.”

துச்சளை தன்னைச் சுற்றி கூச்சலிட்டு சிரித்தாடிய இளையோரை நோக்கி “ஐயோ! என் கைகள் பதறுகின்றன. உள்ளம் ஏங்குகிறது. இத்தனைபேரையும் அள்ளிக்கொஞ்சி ஆளுக்கொரு முத்தமிட்டு முடிப்பதற்கே நான் இங்கு தங்கும் நாட்கள் போதாதே!” என்றாள். “முற்றிலும் போதாது” என்றான் துச்சலன் உரக்க நகைத்தபடி. “ஏனென்றால் ஒவ்வொரு நாளும் அவர்கள் பிறந்து கொண்டிருக்கிறார்கள். நீ இங்கு பார்ப்பது பாதிதான். இன்னும் தொட்டிலிலும் மஞ்சத்திலுமாக பலநூறு இளைய கௌரவர்கள் கிடக்கிறார்கள்.”

துச்சளை அச்சொற்களால் உளம் தூண்டப்பட்டு நெஞ்சில் கைவைத்து கண்ணீர்மல்க விம்மினாள் “எண்ணும்போதே என்னால் தாளமுடியவில்லை மூத்தவரே. பாரதவர்ஷத்தில் அஸ்தினபுரி போல விண்ணவரின் வாழ்த்துபெற்ற வேறொரு மண் உண்டா என்ன?” என்றாள். கர்ணன் “ஆம், இங்கு அத்தனை மரங்களிலும் கனி நிறைந்ததுபோல் தோன்றுகிறது” என்றான். “நாடோடிக் குறவர்கள்தான் இத்தனை மைந்தருடன் இருப்பதை பார்த்திருக்கிறேன்” என்றான் சுபாகு. துச்சலன் “இவர்களுடன் ஒரு நாழிகை நாம் இருந்தால் நாமும் தோற்றத்தில் மலைக்குறவர்களாக ஆகிவிடுவதைப் பார்க்கலாம்” என்றான்.

அருகே பணிந்து மென்குரலில் “அரசே, முறைமைக்கு பிந்துகிறது” என்று கனகர் சொன்னார். “இளவரசரை நகர்நுழைய வைக்கவேண்டிய நற்காலம் ஆகிவிட்டது.” “ஆம், முதலில் அதை செய்வோம்” என்றபடி கர்ணன் நடந்தான். “அவருக்காக அஸ்தினபுரியின் மணிப்பல்லக்கு சித்தமாக உள்ளது…” என்றார் கனகர். “இளவரசர் என்ன? இதோ இங்கே இத்தனை இளவரசர்கள் இருக்கிறார்கள். அவன் இவர்களில் ஒருவன்தான். அவனுக்கென சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை” என்றாள் துச்சளை. “இல்லை தங்கையே, அவனுக்கு நூற்றிரு மாமன்கள் இருக்கிறார்கள். தலைமாமன் நேரில் வந்திருக்கிறார். செய்யவேண்டிய வரிசைகளை செய்தாக வேண்டும்” என்றான் துச்சலன்.

“ஆம், அவர் கையால் வரிசை செய்யப்படுவதென்பது அவனை விண்ணிறங்கி வெய்யவன் வாழ்த்துவது போல” என்று சொன்ன துச்சளை “வாருங்கள் மூத்தவரே” என்று அவன் கையை பற்றினாள். கர்ணன் “மைந்தன் என்ன நிறம்? உன்னைப்போல் கருமையா?” என்றான். “ஆம்” என்ற துச்சளை திரும்பி “எங்கே சிந்துநாட்டரசர்?” என்றாள். “அவர் நகர்வலம் செல்லத் தொடங்கிவிட்டார் அவருக்கென்று வெள்ளையானை ஒன்று அஸ்தினபுரியின் அரசரால் சித்தமாக்கப்பட்டுள்ளது” என்றான் ஜலகந்தன்.

“வெள்ளையானையா?” என்றாள் துச்சளை. பின்பு சிரிப்பை பொத்திக்கொண்டு “அவரது வெற்று ஆணவத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் விதுரர். மூத்தவரே, ஒர் அணியைக் கண்டால், ஓர் அரசமுறை பாடலைக்கேட்டால் இத்தனை மகிழ்வு கொள்ளும் எளிய உள்ளத்தை நான் பார்த்ததில்லை” என்றாள். “இளையவளே, அவரை நான் அஞ்சிக்கொண்டிருந்தேன்” என்றான் கர்ணன். “எதற்காக?” என்றாள் துச்சளை. அவள் புருவத்தில் சிறுமுடிச்சொன்று விழுந்தது. “அவரை நான் கலிங்கத்தில் சிறுமை செய்தேன்” என்றான். “அது களத்தில் அல்லவா? தன் வரனறியாது மிஞ்சிப்பாய்பவர் தோற்பதே சிறுமைதான்.” கர்ணன் “அதுவல்ல, நான் சற்று மிகையாகவே செய்தேன்” என்றான். “ஆம், அதை நான் அறிவேன். அஸ்தினபுரியே அன்று அந்த சிறுமைப்படுத்தலை கொண்டாடியது…” என்று துச்சளை புன்னகைத்தாள். “அதனாலென்ன?” கர்ணன் “அவர் என்மேல் வஞ்சம் கொண்டிருந்தால் அதில் பிழையே இல்லை” என்றான்.

“மூத்தவரே, உண்மையில் கடும் வஞ்சம் கொண்டுதான் கலிங்கத்திலிருந்து மீண்டார். என்னிடம் வந்து உங்களை பழிதீர்க்கப்போவதாக சொன்னார். நான் அவரிடம் நீங்கள் வெறும் ஒரு மலைச்சுனை. விண்ணாளும் சூரியனிடம் போரிடும் ஆற்றல் உங்களுக்கில்லை. வெல்வது மட்டுமல்ல, தோல்வி கொள்வதிலுமே பெருமை ஒன்றுள்ளது, அப்பெருமையை இழந்துவிடுவீர்கள் என்றேன். சினந்து என்னிடம் வஞ்சினம் உரைத்தபோது அவரை அறியாது உங்கள் பிறப்பு குறித்து ஒருசொல் வாயில் எழுந்தது. நான் கைநீட்டி போதும் என்றேன். என் விழிகளை நோக்கியவர் நடுங்கிவிட்டார்.”

துச்சளை சிரித்து “ஏனென்றால் நான் துரியோதனரின் தங்கை. அதை அக்கணம் நன்குணர்ந்தார். என் விழிகளைப் பார்த்தபின் பிறிதொரு சொல்லும் சொல்லாமல் இறங்கிச் சென்றார். அதன்பின் இன்றுவரை உங்களைப்பற்றி ஒருசொல்லும் சொன்னதில்லை” என்றாள். கர்ணன் “ஏன் அப்படி செய்தாய்? அவர் ஓர் அரசர்” என்றான். “மூத்தவரே, தங்கையென நான் இருக்கையில் அச்சொல்லை அவர் சொல்லியிருக்கலாமா?”

கர்ணன் விழிநெகிழ தோளில் கையை வைத்தான். துச்சலன் “நன்று செய்தாய். ஆனால் இளையவளே, வெறும் சொல்லென அது போயிருக்கக்கூடாது. ஓங்கி ஓர் அறை விட்டிருக்கவேண்டும். அச்சொல்லுக்கு அதுவே நிகர் நின்றிருக்கும்” என்றான். “என்ன சொல்கிறாய் அறிவிலி?” என்று கர்ணன் சினத்துடன் திரும்பினான். “மூத்தவரே, நாங்கள் ஷத்ரியராயினும் சர்மிஷ்டையின் அசுரர்குலத்துக் குருதியினர். எங்கள் மூத்தவர் இலங்கையாண்ட பத்துத்தலையர். நாங்கள் அவருக்காக உயிர்விட்ட தம்பியர். அரசமுறைமைகளால் அல்ல அன்பினாலேயே அசுரர் குலம் கட்டப்பட்டுள்ளது” என்றான் துச்சலன்.

கர்ணன் தலையசத்து “எப்போது நகையாடுகிறீர்கள், எப்போது சினம் கொள்கிறீர்கள் என்று உங்களுடன் இத்தனைநாள் இருந்தும் என்னால் கணிக்கக்கூடவில்லை” என்றான். துச்சலன் “நாங்கள் உங்களுக்கும் மூத்தவருக்கும் உயிர்பொருளாவி படையலிட்டவர்கள்…” என்றான். கர்ணன் “நன்று” என்றான். கனகர் கைகளை வீசி அணிப்பரத்தையரை அவர்களுக்கு அருகே செல்லும்படி சொன்னார். அதற்குள் இளைய கௌரவர் அந்தப் பல்லக்கை அடையாளம் கண்டுகொண்டிருந்தனர். அவர்களை அஞ்சி அது நிலத்தில் இறக்கப்பட்டிருந்தது.

அதன் திரைச்சீலைகள் பிடுங்கி வீசப்பட்டிருந்தன. உள்ளே இருந்த இரு முதியசெவிலியரும் துணிச்சுருளுக்குள் இருந்த மைந்தனை நெஞ்சோடணைத்தபடி நடுங்கிக்கொண்டிருந்தனர். அத்துணிச்சுருளைப் பிடித்து குட்டிக்கௌரவர்கள் இழுத்தனர். அவர்கள் அஞ்சி கூச்சலிடுவது அவர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக இருந்தது. துச்சளை கைநீட்டி “அஞ்சவேண்டாம். அவர்கள் கையிலேயே கொடுத்துவிடுங்கள்” என்றாள். ”அரசி!” என்றாள் முதியவள். “அவர்கள் கையில் கொடுங்கள்” என்றாள் துச்சளை. துச்சலன் “என்ன சொல்கிறாய்?” என கேட்க “அவன் அவர்களுடன் வளரட்டும்” என்றாள்.

“அரசியாரே… காவலரே’ என்று செவிலியர் கூவினர். காவலர் துச்சளையை நோக்கி திகைத்து நின்றார்கள். செவிலியர்களிடமிருந்து குழந்தையை இரு இளையகௌரவர்கள் பிடுங்கிக்கொண்டுவிட்டனர். அவர்கள் பதறியபடி பின்னால் வர குழந்தையைச் சுற்றியிருந்த பட்டுத்துணியை ஒருவன் கழற்றி வீசினான். ஒளி மணியாரங்களும் அணி வளைகளும் கணையாழிகளும் கால்தளையும் அணிந்திருந்த கரிய சிறுகுழந்தையை ஒருவன் தூக்கி வானில் வீசினான். இன்னொருவன் அதை பிடித்துக்கொண்டான். கூச்சலிட்டபடி அவன் தூக்கி வீச பிறிதொருவன் பிடித்துக்கொண்டான். மாறிமாறி அவர்கள் நகைத்துக்கூவியபடி குழந்தையை விண்ணிலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.

33

கர்ணன் முதலில் திகைத்து ,பின்பு கூர்ந்துநோக்கி குழந்தை சிறுவாயைத் திறந்து நகைத்துக் கொண்டிருந்ததைக்கண்டு சிரித்தான். துச்சளை சிரித்தபடி “மகிழ்கிறான். இவர்களுடன் இருப்பதுபோல் அவன் வாழ்க்கையில் உவகை மிகுந்த தருணங்கள் வேறெங்கும் வாய்க்கப்போவதில்லை” என்றாள். “விண்ணிலேயே இருக்கிறான், மண்ணுக்கு இறங்க விழைவற்றவன்போல” என்றான் கர்ணன். துச்சளை “இளையோரே, மைந்தனை அவன் மாமனிடம் கொடுங்கள்” என்றாள்.

அக்கணமே “இதோ” என்று ஒருவன் குழந்தையை கர்ணனை நோக்கி எறிந்தான். கர்ணன் அதை பிடித்துக்கொண்டான். சுழற்றி மார்போடணைத்தான். குழந்தை கால்களை உதைத்து உடலைத் திருப்பி மென்வயிற்றில் தசைமடிப்புகள்விழ இளைய கௌரவரை நோக்கி வளைந்து திரும்பி கைநீட்டி திமிறியது. கால்களால் கர்ணனின் வயிற்றை உதைத்தது. “அவர்களிடம் செல்லவே விரும்புகிறான்” என்றான் கர்ணன். துச்சளை “ஆம், சினம் கொள்கிறான்” என்றாள். “இவனுக்கும் சிந்துநாட்டுக்கும் தொடர்பே இல்லை. இன்னொரு கௌரவன்” என்றான் துச்சலன் குனிந்து குழந்தையின் கன்னத்தைத் தடவியபடி. குழந்தை இரு பற்களைக்காட்டி அவனை கடிக்க எம்பியது. அவன் சிரித்துக்கொண்டே கைகளை விலக்கி “கௌரவக்குருதியேதான்” என்றான்.

கர்ணன் குனிந்து குழந்தையின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு “என்ன ஒரு இனிய மணம்! இளையவளே, சுஜாதன் அங்கநாட்டுக்கு வந்திருந்தான். அவனை இளையோனாக எடுத்து முத்தமிட்டதை நினைவு கூர்ந்தேன். அவன் பெருந்தோள்களை அணைந்தபோது நெஞ்சுவிம்மி கண்ணீர் உகுத்தேன்” என்றான். “சுஜாதன் எங்கே?” என்றாள் துச்சளை. “அவனை அரசவையில் இருக்க மூத்தவர் ஆணையிட்டுவிட்டார். எங்களில் அவனே நூல்கற்றவன். ஒரு சுவடியை எவ்வளவு நேரம் வாசிக்கிறான் தெரியுமா?” என்று துர்முகன் பெருமையுடன் சொன்னான்.

“அவன் ஒருவனே இளைய கௌரவர்களில் இன்னும் மணமுடிக்காதவன்” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் மீசை வேல்நுனிபோல் கூர்மை கொண்டுவிட்டது” என்றான் துச்சலன். “அரசமகளை மட்டுமே மணப்பேன் என்று சொல்கிறான். கௌரவர் என்றாலே அரசகுடியினர் அச்சம் கொள்கிறார்கள்” என்றான் சுபாகு. கர்ணன் தன் முத்திரை மோதிரத்தை அருகிலிருந்த சேடியின் தாலத்தில் இருந்த செஞ்சாந்தில் முக்கி குழந்தையின் நெற்றியில் சூரியக்குறியை இட்டான். பின்பு குனிந்து தரையில் இருந்து ஒரு துளி அஸ்தினபுரியின் மண்ணை எடுத்து குழந்தையின் உதடுகளில் வைத்தான்.

சற்று மேலெழுந்து வளைந்த மேலுதடுகளும் சிறிய கீழுதடுகளுமாக எச்சில்வழிய இருந்த குழந்தை ஆவலுடன் அவன் கையை சுவைத்து முகம்சுளித்து துப்பியது. உடனே பால்நினைவு எழ அன்னையை நோக்கி தாவியபடி சிணுங்கத்தொடங்கியது. “எங்களிடம் கொடுங்கள்! குழந்தையை எங்களிடம் கொடுங்கள்! நாங்கள் அவனுக்கு மேலும் மண்ணை ஊட்டுகிறோம்!” என்று தனுர்வேகன் கூவினான். அவனருகே நின்ற கஜபாகுவும் தீர்க்கபாகுவும் “மண்ணை ஊட்டுகிறோம்! மண்ணை ஊட்டுகிறோம்!” என்று கீச்சுக்குரலில் கூவ கோழிக்குஞ்சுகள் என ஏராளமான குரல்கள் கூவின. தரைமூடியபடி பல மண்டைகள் தென்பட்டன.

“எங்கு பார்த்தாலும் ஒரே முகம்” என்று துச்சளை சொன்னாள். “என் தமையன் சூரியன் படிகக்கற்களில் என பெருகிவிட்டார்.” “பெருகியவன் அவனல்ல, திருதராஷ்டிர மாமன்னர்” என்றான் கர்ணன். “அவர் சிகைக்காய். இவர்களெல்லாம் அதன் நுரைகள் என ஒரு சூதன் பாடினான்.” துச்சளை சிரித்து “ஆம், உண்மை” என்றாள். “இப்புவியில் இவ்வண்ணம் புதல்வரால் பொலிந்தவர் பிறிதெவருமில்லை.” கீழே இளையோர் “எங்களிடம் கொடுங்கள்! நாங்கள் மண்ணை ஊட்டுகிறோம்” என்று கூவினர். “அது பாலை தேடுகிறது” என்றாள் துச்சளை. “நாங்கள் அதற்கு யானையின் பாலை ஊட்டுவோம்” என்றான் சற்று மூத்தவனாகிய பாகுலேயன்.

கர்ணன் “யானைப்பால் குடித்தால்தான் இவர்களுடன் ஆடமுடியும் தங்கையே” என்றான். இளையோனாகிய சங்கரன் “அத்தை, என் ஆடையை காணவில்லை” என்று அவள் கையைப்பிடித்து ஆட்டினான். அதற்குள் ஒருவன் குழந்தையை அவன் கையிலிருந்து பிடுங்கினான். கூவிச்சிரித்தபடி அது கால்களை உதறியது. குழந்தையுடன் அவர்கள் அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை நோக்கி ஓடினார்கள். துச்சளை “இனி அவனை நான் கையில் தொடுவதே அரிதாகிவிடும் என்று நினைக்கிறேன்” என்றாள். துர்முகன் “அவன் ஓரிரு மாதங்களில் நடக்கத் தொடங்கினால்கூட வியப்பில்லை தங்கையே. இங்குள்ள குழந்தைகளெல்லாம் தமையன்களிடம் ஓடி மிகவிரைவிலேயே விளையாடத் தொடங்கிவிடுகின்றன” என்றான்.

கர்ணன் துச்சளையிடம் “வருக!” என்றபடி கோட்டையை நோக்கி திரும்பினான். காலடியில் ஏதோ இடற திரும்பிப் பார்த்தால் இருகுழந்தைகள் அவன் ஆடையை பற்றிக்கொண்டு மாறிமாறி பூசலிட்டபடி நின்றிருந்தன. அவன் இரண்டு பேரையும் கையில் தூக்கி தோளில் ஏற்றிக்கொண்டான். “என்னிடம் ஒன்றை கொடுங்கள்” என்றாள் துச்சளை. அவள் காலடியில் இருந்த இன்னொரு மைந்தனைக் காட்டி “இங்கென்ன குழந்தைகளுக்கா குறைவு? எங்கு பார்த்தாலும் அவர்கள்தான்” என்றான் கர்ணன். சிரித்தபடி ஆம் என்று சொல்லி துச்சளை கீழிருந்து மேலும் இரு குழந்தைகளை தன்மேல் ஏற்றிக்கொண்டாள். உடலெங்கும் குழந்தைகளுடன் கூவிச்சிரித்தபடி அரண்மனைக் கோட்டைவாயிலை நோக்கி சென்றாள். அவளுக்கு இருபக்கமும் கர்ணனும் கௌரவர்களும் உடலெல்லாம் மைந்தருடன் நடந்தனர்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்