வெண்முகில் நகரம் - 91

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 10

சுதுத்ரியின் கரைக்கு பூரிசிரவஸ் வந்துசேர்ந்தபோது மாலை சிவக்கத் தொடங்கியிருந்தது. அவனுடைய புரவி நன்கு களைத்திருந்தது. கோடையில் நீர் மேலும் பெருகுவது சிந்துவின் தங்கைகளின் இயல்பு என்பதனால் நீர்விளிம்பு மேலேறி வண்டிப்பாதை நேராகவே நீரில் சென்று மூழ்கி மறைந்தது. கரையோரத்து மரங்களெல்லாம் நீருக்குள் இறங்கி நின்றிருக்க நீருக்குள் ஒரு தலைகீழ்க்காடு தெரிந்தது. மழைக்கால நீர்ப்பெருக்கின் கலங்கலும் குப்பைகளும் சுழிப்புகளும் இன்றி மலையுச்சிப் பனி உருகி வந்த நீர் தெளிந்து வானுருகி வழிவதுபோல சென்றது. கரையோரங்களில் சேறுபடிந்திருக்கவில்லை.

அவனுடைய புரவி விடாய்கொண்டிருந்தது. நீரின் மணத்தைப்பெற்றதும் அதுவும் விரைவுகொண்டு தலையை ஆட்டியபடி முன்னால்சென்றது. அவன் நதியின் அருகே சென்றதும் குளிரை உணர்ந்தான். நெருங்க நெருங்க உடல் சிலிர்த்தது. புரவியை விட்டு இறங்கியதும் அது நேராக நீரை நோக்கி சென்றது. கரைமரத்தில் கட்டப்பட்ட படகில் இருந்த முதியகுகன் உரக்க “வீரரே, நீரை குதிரை அருந்தலாகாது. பிடியுங்கள்” என்றான். அவன் குதிரையைப் பிடித்து கடிவாளத்தை இழுத்தான். அது தலையைத் தூக்கி கழுத்தை வளைத்து பெரிய பற்கள் தெரிய வாய் திறந்து கனைத்தது. விழிகளை உருட்டியபடி சுற்றிவந்தது.

“நீர் மிகக் குளிர்ந்தது. மேலே ஆலகாலமுண்ட அண்ணலின் காலடியில் இருந்து வருகிறது. அது உயிர்களுக்கு நஞ்சு… அதன் கரிய நிறத்தை பார்த்தீர்களல்லவா?” என்றான் குகன். பூரிசிரவஸ் திரும்பி நோக்கினான். “அதோ, அந்த வயலில் தேங்கியிருக்கும் நீரை குதிரைக்கு அளியுங்கள். அது இளவெம்மையுடன் இருக்கும்” என்றான். அவன் குதிரையை இழுத்துக்கொண்டுசென்று வயலில் நிறுத்த அது ஆவலுடன் குனிந்து நீரை உறிஞ்சியது. “அதுவும் இந்நதிதான். ஆனால் அவள் அகம் கனிந்து முலைசுரந்தது அது.”

குதிரையுடன் அணுகி “நான் மறுகரை செல்லவேண்டும்” என்றான். “நீர்ப்பெருக்கு வல்லமையுடன் இருக்கிறது. நான் துழாவிக்கொண்டுசெல்லமுடியாது. என் கைகள் தளர்ந்துவிட்டன” என்றான் குகன். “என் மைந்தர்கள் அதோ மறுகரையில் இருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கச் சொல்கிறேன்.”

பூரிசிரவஸ் படகில் அமர்ந்தபடி “இங்கு பெரிய படகுகள் உண்டல்லவா?” என்றான். “ஆம், ஆனால் பார்த்தீர்களல்லவா? படகுத்துறை நீருள் உள்ளது. கோடைநீர் பெருக்கில் துறையை பன்னிருநாழிகை தெற்காக கொண்டுசென்றுவிடுவார்கள்.” பூரிசிரவஸ் “அதுதான் சாலையெங்கும் பொதிவண்டிகளையே காணமுடியவில்லை” என்றான். “வழியில் நீங்கள் கேட்டிருக்கலாம்” என்றான் குகன். “எங்கு செல்கிறீர்கள்?”

பூரிசிரவஸ் “பால்ஹிகநாட்டுக்கு…” என்றான். “அப்படியென்றால் நீங்கள் ஆறு சிந்துக்களை கடக்கவேண்டுமே. நீங்கள் தெற்காகச் சென்று கடந்துசெல்வதே நன்று… பிற ஆறுகள் இன்னும் விரைவுள்ளவை.” பூரிசிரவஸ் “ஆம். அதைத்தான் செய்யவேண்டும்” என்றான்.

நீரில் படகு அணுகுவதை பார்த்தான். அதில் ஒரே ஒரு வீரன் மட்டும்தான் இருந்தான். அவனுடைய குதிரை அசையாமல் தலைதாழ்த்தி நின்றது. அதன் கடிவாளத்தை பிடித்தபடி அவன் குறுக்குப்பட்டைப்பலகையில் தலைதூக்கி நீரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அதனாலேயே அவனுக்கு அவனை பிடித்திருந்தது. பெரும்பாலான பயணிகள் படகிலிருக்கையில் கரைகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீரை நோக்குபவர்கள் இன்னும் ஆழமானவர்கள். கலைந்து பறக்கும் அவனுடைய குழல்கற்றையை நோக்கிக்கொண்டிருந்தான்.

அவன் பறந்து அணுகுவதுபோல தோன்றியது. அல்லது எதுவுமே நிகழாமல் நடுவே இருக்கும் காலமும் வெளியும் சுருங்கிச்சுருங்கி அவர்களை அணுகச்செய்வது போல. அவனுடைய விழிகள் தெரிந்தன. மேலும் அணுகியபோது அவன் யாதவன் என்பதை ஆடைகட்டப்பட்டிருந்ததில் இருந்தும் கழுத்தின் இலச்சினையிலிருந்தும் உணர்ந்தான்.

படகு மரங்களுக்குள் புகுந்தது. அதை ஓட்டிய இளம் குகர்கள் துடுப்பால் அடிமரங்களை உந்தி உந்தி அதை விலக்கியும் செலுத்தியும் நெருங்கி வந்தனர். படகு சரிந்துகிடந்த பெரிய மரத்தை அணுகியதும் அதைத் திருப்பி விலா உரச நிறுத்தினர். இளைஞன் எழுந்து தன் குதிரையின் கழுத்தை தட்டினான். அது நீரை நோக்கி தயங்கி உடலை பின்னால் இழுத்தது. அவன் நீரில் குதித்து முழங்காலளவு நீரில் நின்று அதை இழுத்தான். குதிரை விழிகளை உருட்டி பெருமூச்சுவிட்டபின் மெல்ல நீரில் இறங்கியது.

அதன் உடல் குளிரில் சிலிர்க்க வால் தூக்கி பச்சை நிறமாக சிறுநீர் கழித்தது. அந்த மணமறிந்த பூரிசிரவஸ்ஸின் குதிரை தொலைவில் தலைதூக்கி கனைத்தது. இளைஞனின் குதிரை ஏறிட்டு நோக்கி விழியுருட்டி மறுமொழி சொன்னது. அவன் அதன் கடிவாளத்தைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்று வயலருகே மரத்தில் கட்டினான். பூரிசிரவஸ் அவனை நோக்க அவன் புன்னகை செய்தான். தோள்களில் சூடு போட்டது போன்ற தழும்புகள். அவன் தொழும்பனா என்ற வியப்பும் தொழும்பர்கள் புரவியேற முடியாதே என்ற எண்ணமும் ஏற்பட்டது.

“நான் மறுகரை செல்லவேண்டும் குகர்களே” என்றான் பூரிசிரவஸ். “வீரரே, நீரின் விசை மிகையாக உள்ளது. இக்கரை வருவதற்குள் கைசோர்ந்துவிட்டோம்” என்றான் ஒருவன். “தாங்கள் இங்கு தங்கி நாளை செல்லலாமே!” பூரிசிரவஸ் “இல்லை, நான் சென்றாகவேண்டும்…” என்றான். மூத்தவன் “ஒருவரே செல்வதாக இருந்தால்…” என்று சொல்ல “பொன் அளிக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் சற்று இளைப்பாறிக்கொள்கிறோம்” என்று இளையவன் சொன்னான். முதுகுகன் “நான் இன்கடுநீர் காய்ச்சுகிறேன். அருந்திவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும் என்றபின் திரும்பி “வீரரே, இன்கடுநீர் அருந்துகிறீர்களா?” என்றான். “ஆம்” என்றான் அவன்.

வீரன் அருகே வந்து வணங்கி “நான் யாதவனாகிய சாத்யகி. தாங்கள்?” என்றான். “நான் பால்ஹிகன், பூரிசிரவஸ் என்று பெயர்.” அவன் முகம் மலர்ந்து “ஆம், கேட்டிருக்கிறேன். உண்மையில் இருமுறை சேய்மையில் பார்த்துமிருக்கிறேன். சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் “நினைவில் நிற்காத முகம்தான்” என்றான். சாத்யகி “அதுவும் நன்றே… எங்கு செல்கிறீர்கள்?” என்றான். “தமையன் உடனே வரும்படி செய்தி அனுப்பியிருந்தார். ஆகவே நாடு திரும்புகிறேன்.”

சாத்யகி “தனியாகவா?” என்றான். “ஆம், நான் எப்போதுமே தனியாக புரவியில் செல்வதை விரும்புகிறவன்.” “நானும்தான்” என்றபடி சிரித்தான் சாத்யகி. “அமருங்கள்” என்றதும் படகின் விளிம்பில் அமர்ந்தான். இரு இளம் குகர்களும் சற்று விலகி அமர்ந்து வெற்றிலைமெல்லத் தொடங்கினர். முதியவன் அடுப்பு மூட்டி கலத்தை வைத்தான். “நீங்கள் இளையயாதவரின் அணுக்கர் என அறிவேன்” என்றான் பூரிசிரவஸ். சாத்யகி சிரித்தபடி “நான் இளைய யாதவரின் தொழும்பன். என் தோள்குறிகளை நீங்கள் பார்ப்பதைக் கண்டேன்” என்றான். “தொழும்பர் என்றால்…?” சாத்யகி “அவருக்கு அடிமைசெய்வேன்” என்றான்.

பூரிசிரவஸ் அவன் விழிகளை சற்று நேரம் நோக்கியபின் “அவ்வாறு அடிமையாக என்னால் முடியுமென்றால் அது என் பிறவிப்பேறென்றே எண்ணுவேன்” என்றான். “அவ்விழைவு உண்மையானதென்றால் நீங்கள் இதற்குள் அடிமையாகியிருப்பீர்கள். நீங்கள் உள்ளூர எதுவோ அதுவாகவே ஆகிறீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்து ”உண்மைதான். நான் காற்றில் பறக்கும் முகில். வடிவமோ திசையோ அற்றவன்” என்றான்.

“அஸ்தினபுரியில் மணிமுடிசூட்டுவிழா சிறப்புற நிகழ்ந்ததை அறிந்தேன். என்னை இளைய யாதவர் துவாரகையில் இருக்கச்செய்துவிட்டார். இப்போது அவர் துவாரகைக்கு கிளம்புகிறார். என்னை அர்ஜுனருடன் இருக்கச் சொன்னார். நான் அவரிடம் வில்வித்தை கற்கிறேன்.”

பார்த்ததுமே அவன் வெளிப்படையாகப் பேசத்தொடங்கியது பூரிசிரவஸ்ஸுக்கு பிடித்திருந்தது. “மிகச்சிறப்பான விழா. நீங்கள் இருந்திருந்தால் அழியா நினைவாக இருந்திருக்கும்” என்றான். “பாஞ்சால இளவரசியும் மூத்த பாண்டவரும் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்தனர். துரியோதனரும் துச்சாதனரும் இருபுறமும் நின்று அவர்களை அழைத்துச்சென்று அமரச்செய்தனர். அதன்பின் துரியோதனருக்கே அஸ்தினபுரியின் மணிமுடியை மூத்தபாண்டவர் அளித்தார். அவர் தட்சிணகுருநாட்டை மூத்தபாண்டவருக்கு அளித்தார்.”

சாத்யகி “நாடு இரண்டாகியது இல்லையா?” என்றான். “ஆம், ஆனால் குடி ஒன்றாகியது. ஒவ்வொருவரும் மாறிமாறி தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டனர். எங்கும் உவகையும் சிரிப்பும்தான் நிறைந்திருந்தது. அரசகுடியினரிலிருந்து அது அவையினருக்கும் நகருக்கும் பரவியது… நகரமே சிரித்துக் களித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.”

சாத்யகி “பால்ஹிகரே, உள்ளங்கள் ஒன்றாயின என்றால் ஏன் நாடுகள் பிரியவேண்டும்?” என்றான். பூரிசிரவஸ் அந்த நேரடிவினாவின் முன் திகைத்து சொல்லிழந்தான். ”நாடுகள் பிரிகின்றன என்பது மட்டுமே உண்மை. பிற அனைத்தும் அவர்கள் அறியாமல் செய்யும் நடிப்புகள். அந்த உண்மையை தங்களிடமே மறைத்துக்கொள்வதற்காக மிகையுணர்ச்சி கொள்கிறார்கள். தெய்வங்கள் மானுடரை கண்கட்டி விளையாடச்செய்யும் தருணம் இது.”

பூரிசிரவஸ் சீண்டப்பட்டு “அப்படி உடனே சொல்லிவிடவேண்டியதில்லை… உண்மையில்…” என தொடங்க “அப்படியென்றால் நாட்டை பிரிக்கவேண்டியதில்லை என்று சொல்லியிருந்தால் அத்தனை உணர்வெழுச்சியும் தலைகீழாக ஆகியிருக்கும். சிந்தித்துப்பாருங்கள். அப்படி எவரேனும் சொன்னார்களா? இளைய யாதவர் சொல்லமாட்டார். விதுரரோ மாமன்னரோ சொல்லியிருக்கலாம் அல்லவா?” என்றான் சாத்யகி.

பூரிசிரவஸ் “சொல்லவில்லை” என்றான். “அத்தனைபேருக்கும் தெரியும். ஆகவேதான் அவர்கள் சொல்லவில்லை.” பூரிசிரவஸ் சிலகணங்களுக்குப்பின் “ஆம், உண்மைதான்” என்றான்.

அவர்களிடையே அமைதி நிலவியது. சாத்யகி அதை குலைத்து ”எப்போது இந்திரப்பிரஸ்தத்தின் பணிகள் தொடங்குகின்றன?” என்றான். “அவர்கள் இன்னும் சிலநாட்களில் தட்சிணகுருவுக்கே செல்லப்போகிறார்கள். பாண்டவர்களும் அவர்களின் அரசிகளும். அங்கே அவர்கள் தங்குவதற்கான பாடிவீடுகளை கட்டத்தொடங்கிவிட்டனர். வளர்பிறை முதல்நாளில் இந்திரப்பிரஸ்தத்திற்கான கால்கோள்விழா என்றார்கள். பாஞ்சாலத்திலிருந்து சிற்பிகள் வருகிறார்கள்.”

சாத்யகி “படகுகளை எடைதூக்கப் பயன்படுத்தும் கலையை துவாரகையின் சிற்பிகள் கற்பிப்பார்கள். விரைவிலேயே முடித்துவிடமுடியும்…” என்றான். “இந்திரனுக்குரிய நகரம் என்றார்கள். துவாரகையை விடப்பெரியது என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்.” சாத்யகி புன்னகைசெய்தான். “இந்திரப்பிரஸ்தம் எழுவதைப்பற்றி கௌரவர்கள் கவலைகொள்ளவில்லை. ஜயத்ரதர்தான் சினமும் எரிச்சலுமாக பேசிக்கொண்டிருந்தார்” என்றான் பூரிசிரவஸ்.

சாத்யகி “அவருக்கென்ன?” என்றான். “அவருக்கு திரௌபதியின் மீது தீராத வஞ்சம் இருக்கிறது” என்றான் பூரிசிரவஸ். “ஏன்?” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. “காம்பில்ய மணநிகழ்வில் தோற்றதை எண்ணிக்கொண்டிருக்கிறாரா?” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் “போரிலும் தோற்றிருக்கிறார்” என்றான். “போரில் அவமதிப்புக்குள்ளானவர் அங்கநாட்டரசர் அல்லவா?” பூரிசிரவஸ் “அவரும் வஞ்சம் கொண்டிருக்கலாம்” என்றான்.

சாத்யகி புன்னகையுடன் “நீர் வஞ்சம் கொண்டிருக்கிறீரா?” என்றான். “நானா? எவரிடம்?” என்று பூரிசிரவஸ் திகைப்புடன் கேட்டான். சாத்யகி சிரிப்பு தெரிந்த விழிகளுடன் “நீர் இழந்த பெண்ணிடம். அவளை மணந்தவரிடம்” என்றான். அவ்வேளையில் முதியகுகன் இன்கடுநீர் கொண்டுவந்தான். மூங்கில்குவளைகளில் அதை எடுத்துக்கொண்ட அசைவில் பூரிசிரவஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டான். “நீர் விரும்பவில்லையேல் சொல்லவேண்டியதில்லை” என்றான் சாத்யகி.

“யாதவரே, உம்மிடம் நான் கொள்ளும் அணுக்கம் எவரிடமும் அறிந்திராதது” என்றான் பூரிசிரவஸ். “நான் இழந்தேன். துயர்கொண்டிருக்கிறேன். வஞ்சம் கொள்ளவில்லை.” சாத்யகி “அது நன்று” என்றான். “அந்த வஞ்சத்தால் எஞ்சியவாழ்நாள் முழுக்க நீர் அனைத்து இன்பங்களையும் இழந்துவிடக்கூடும்.” பூரிசிரவஸ் “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் அதை இவ்வேளையில் சொற்களாக கேட்கையில் அகம் உறுதிகொள்கிறது” என்றான்.

சாத்யகி “சில வேளைகளில் இழப்புகூட நமக்கு உகந்ததாக இருக்கலாம் பால்ஹிகரே. நாகத்தை பற்றித் தூக்கிப் பறக்கும் பருந்து எடைமிகுந்தால் உகிர்தளர்த்தி அதை விட்டுவிடும். ஆனால் சிலநேரங்களில் நாகம் அதன் கால்களைச்சுற்றிவிடும். சிறகு தளர்ந்து இரண்டும் சேர்ந்து மண்ணில் விழுந்து இறக்கும். யாதவர்களின் ஒரு கதை இது” என்றான். பூரிசிரவஸ் திகைப்பு நிறைந்த கண்களுடன் சாத்யகியை பார்த்தான். அவன் அனைத்தும் அறிந்து சொல்வதுபோல தோன்றியது. ஆனால் எப்படி அறிந்தான்?

சாத்யகி சிரித்து “அஞ்சவேண்டாம். நான் எதையும் அறிந்து சொல்லவில்லை” என்றான். பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். சாத்யகி மேலும் சிரித்து “ஆனால் ஜயத்ரதரைப் பற்றி சொன்ன உங்கள் விழிகளில் அறியவேண்டிய அனைத்தும் இருந்தன” என்றான். பூரிசிரவஸ்ஸால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சாத்யகி “நாம் இளைஞர்கள் ஏன் இத்தனை எளியவர்களாக இருக்கிறோம்?” என்றான். பூரிசிரவஸ் “நம்முடைய இடரே நம்மை சிக்கலானவர்கள் என்று மதிப்பிட்டு நம்மிடம் பழகும் பெரியவர்களால்தான்” என்றான். சாத்யகி தேவைக்குமேல் உரக்கச்சிரித்து “ஆம், அது உண்மை” என்றான்.

குகர்கள் எழுந்தனர். “கிளம்பலாம் வீரரே. இருட்டுவதற்குள் மறுகரை சென்றுவிடவேண்டும்” என்றான் ஒருவன். “நான் வருகிறேன் யாதவரே. நாம் மீண்டும் சந்திக்கவேண்டும்.” சாத்யகி “நாம் சந்தித்துக்கொண்டேதான் இருப்போம் என நினைக்கிறேன் பால்ஹிகரே. நீங்கள் எனக்கு மிக அண்மையானவர் என்று என் அகம் சொல்கிறது” என்றான். பூரிசிரவஸ் கைவிரிக்க சாத்யகி அவனை தழுவிக்கொண்டான். “வருகிறேன்” என மீண்டும் சொல்லிவிட்டு பூரிசிரவஸ் சென்று படகில் ஏறினான். முதியகுகன் அவன் புரவியை அவிழ்த்து வந்தான்.

“இதே சிரிப்புடன் செல்லுங்கள்” என்று சாத்யகி கூவினான். பூரிசிரவஸ் “ஆம், இனி சிரிப்புதான்” என்றான். புரவி நீரில் நடந்து நின்று சிலிர்த்து சிறுநீர் கழித்தது. சாத்யகியின் புரவி திரும்பி கனைத்தது. குகன் புரவியின் புட்டத்தை அடிக்க அது பாய்ந்து படகில் ஏறி அதன் ஆட்டத்திற்கு ஏற்ப எளிதாக உடலை சமன் செய்துகொண்டு நின்றது. குகர்கள் இருவரும் ஏறி துடுப்புகளால் மரங்களை உந்தினார்கள். அந்திச்செவ்வெயிலில் சாத்யகியின் முகத்தை நோக்கி பூரிசிரவஸ் கையை தூக்கினான். “சென்றுவருக!” என்றான் சாத்யகி உரக்க. “இத்தருணம் வாழ்க!” என்றான் பூரிசிரவஸ்.

[வெண்முகில்நகரம் நிறைவு]