வெண்முகில் நகரம் - 90

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 9

திரௌபதி குனிந்து மூன்றுமுறை அஸ்தினபுரியின் மண்ணை வணங்கி அதன் ஒரு துளியை எடுத்து நெற்றி வகிட்டில் அணிந்துகொண்டதும் இசை அடங்கியது. சூதர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் மங்கலைகளும் பின்வாங்கி தேர்களை நோக்கி சென்றனர். அப்பால் தேர்கள் அணிவகுப்பதற்கான ஆணை ஒலித்தது.

சௌனகர் வணங்கியபடி சென்று திரௌபதியை அணுகி “அஸ்தினபுரி தங்கள் பாதங்களை அன்னை என ஏற்று மகிழ்கிறது இளவரசி. இந்த நாள் இந்நகரின் வரலாற்றில் அழியாநினைவாக நீடிக்கும். பாஞ்சால ஐங்குலங்களின் மகளை, துருபதரின் செல்வத்தை, பாரதவர்ஷத்தின் திலகத்தை அரசகுலத்தின் சார்பில் அரசரின் சார்பில் அஸ்தினபுரியின் மக்களின் சார்பில் அடியேன் தலை கால்தொடப் பணிந்து வரவேற்கிறேன்” என்றார்.

திரௌபதி புன்னகையுடன் “எனக்குரிய மண்ணுக்கு வந்துள்ளதாக எண்ணுகிறேன் அமைச்சரே. நான் புல்லாகவும் புழுவாகவும் புள்ளாகவும் இங்கு முன்னரே பலமுறை பிறந்திருக்கிறேன். இன்று மீண்டுவந்துவிட்டேன்” என்றாள். பூரிசிரவஸ் அவளை நோக்கியபடி நின்றான். அவள் ஒவ்வொரு சொல்லையும் நூறுமுறை ஒத்திகைபார்த்தவள் போல தெளிவான உச்சரிப்புடன் அனைவருக்கும் கேட்கும்படி ஆனால் குரல் சற்றும் உயராமல் சொன்னாள்.

சௌனகர் மீண்டும் பணிந்து “அதை நிமித்திகர் சொல்லிவிட்டனர் இளவரசி. அஸ்தினபுரியின் மக்களும் உயிர்களனைத்தும் அவர்களை ஆளும் அரசிக்காகவே காத்திருக்கின்றனர் என்று. இந்த நகரம் இன்றுவரை இதற்கிணையான வரவேற்பை எவருக்கும் அளித்ததில்லை. இங்கிருந்து கோட்டைவரை அரசப்பெருந்தேர் தங்களுக்காக வந்துள்ளது. அணித்தேர்நிரையும் காவலர்களும் அகம்படி செய்வார்கள். அங்கிருந்து அரண்மனை வரை பட்டத்துயானைமேல் நகர்வலம் ஒருக்கப்பட்டுள்ளது” என்றார். திரௌபதி “அவ்வாறே ஆகுக!” என்றாள்.

”இவர் படைத்தலைவர் வீரணகர். அவர் படைத்தலைவர் ஹிரண்யபாகு. இருவரும் தங்களுக்கு காவல்துணை என உடன்வருவார்கள்” என்றார் சௌனகர். அவர்கள் இருவரும் வணங்கி முகமன் சொன்னார்கள். அவள் புன்னகையுடன் அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு இன்மொழி சொன்னாள். திருஷ்டத்யும்னன் திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “இளவரசியின் தேருக்கு முன்னால் தேர்கள் செல்வதாக இருந்தால் புழுதியடங்கும் தொலைவுக்கு முன்னால்தான் செல்லவேண்டும்… போய் சொல்லும்” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கி பின்னால் நகர்ந்தான்.

உண்மையில் அந்த இடத்தைவிட்டு விலகியது அவனுக்கு ஆறுதலைத்தான் அளித்தது. தேர்களை அணுகி பாகர்களுக்குரிய ஆணைகளை அளித்தபடி முன்னால் சென்றான். குதிரைகள் நுகங்களில் கட்டப்பட்டு வால்சுழற்றி கடிவாளத்தை மென்றுகொண்டிருந்தன. திரௌபதி கங்கைக்கரையில் இருந்து நடக்கத்தொடங்கியபோது மீண்டும் இசை முழங்கியது. அவள் வந்து பொற்தேரில் ஏறியதும் இசைச்சூதர்கள் முன்னால் சென்ற தேரில் ஏறினர். இசைமுழங்கியபடி நாற்புறமும் திறந்த அந்தத்தேர் முதலில் சென்றது. தொடர்ந்து அணிப்பரத்தையர் ஏறிய மூன்று தேர்கள் சென்றன.

புழுதியடங்கும் இடைவெளி உருவானபின் சௌனகர் கைகாட்ட பொற்தேர் அசைந்து கிளம்பியது. அதன் வெண்திரைகள் காற்றில் நெளிந்தன. அமுதகலசக்கொடி துவண்டது. மூங்கில்விற்களின் மேல் அன்னப்பறவை என அசைந்தபடி அது சாலையில் உருளத்தொடங்கியது. திருஷ்டத்யும்னன் தன் தேரில் ஏறிக்கொண்டான். சௌனகர் அதன்பின்னால் வந்த தனது தேரை நோக்கி ஓடினார். ஹிரண்யபாகுவும் வீரணகரும் தங்கள் வெண்புரவிகளில் ஏறி தேரின் இருபக்கமும் வந்தனர். படைக்கலங்கள் ஏந்திய வீரர்கள் அதைத்தொடர்ந்து சீரான நடையில் புரவிகளில் சென்றனர்.

கிருதர் ஓடிவந்து “பொதிகளை இறக்கி தேர்களில் பின்னால் கொண்டுசெல்லும்படி அமைச்சர் சொன்னார்… பொதிகளை இறக்க நேரமாகும். அவர்கள் அதற்குள் கோட்டையை அடைந்துவிடுவார்கள்” என்றார். “அணியூர்வலம் மெதுவாகவே செல்லும் கிருதரே… மேலும் அவர்கள் படகுகளுக்குள் தேர்களில் முன்னரே பொதிகளை ஏற்றித்தான் வைத்திருப்பார்கள். நாம் தேர்களை உருட்டியே இறக்கமுடியும்” என்றான். கிருதர் படகுகளை நோக்கி ஓடினார்.

அவன் சொன்னதுபோலவே தேர்களில் முன்னரே செல்வப்பொதிகள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றை வினைவலர் தள்ளி பாலம் வழியாக துறைமேடைக்கு கொண்டுவந்தனர். படகுகளின் அடித்தட்டில் இருந்து புரவிகள் வெளியே வந்து கால்களை உதறிக்கொண்டன. பாஞ்சால வீரர்கள் அவற்றை தேர்களில் விரைந்து கட்டத்தொடங்கினர் . நிலத்தை உணர்ந்த குதிரைகள் கால்களால் உதைத்து கனைத்தன. குனிந்து பூக்களைப் பொறுக்கி உண்ணமுயன்றன. புதிய மணங்களுக்காக மூக்கைத் தூக்கி பெரிய ஓட்டைகள் சுருங்கி விரிய மூச்சிழுத்தன. பிடரி குலைய தலையை வளைத்து தொலைவில் செல்லும் தேர்களை நோக்கின.

“பின்னால் தேர்கள் வரட்டும் கிருதரே… இளவரசி கோட்டைக்குள் நுழையும்போது இவை அவருடன் இணைந்துகொள்ளும் என எண்ணுகிறேன்” என்றபின் பூரிசிரவஸ் புரவியை செலுத்தினான். குறுங்காட்டுக்குள் நுழைந்து ஒற்றையடிப்பாதை வழியாகவே விரைந்தான். பக்கவாட்டில் மரங்களுக்குள் இசையும் வண்ணங்களுமாக அணியூர்வலம் செல்வதை பார்த்தபடி கடந்து சென்றான். கோட்டையை அடைந்தபோது அங்கே பெருங்கூட்டம் திரண்டிருப்பதை கண்டான். அவனுடைய புரவி வந்ததையே அவர்கள் கிளர்ச்சியொலியுடன் எதிர்கொண்டனர். பல்லாயிரம் பார்வைகளை அவன் கூச்சத்துடன் தவிர்த்தபடி கடந்து சென்றான்.

காவலர்தலைவன் “நெருங்கிவிட்டார்களா இளவரசே?” என்றான். “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபடி உள்ளே சென்றான். கிழக்குவாயிலில் நூற்றெட்டு யானைகள் முகபடாம் அணிந்து தந்தக்காப்பும் பட்டுவிரிப்பும் காதுமணிகளும் மின்ன வேங்கைமரம்பூத்த நிரை போல அசைந்தாடி நின்றிருந்தன. அவற்றின் மேல் அம்பாரிகள் செம்பட்டு இருக்கைகளுடன் பொன்னிற பிடிகளுடன் விண்ணில் என அசைந்தன. யானைகளின் செவிகளைப்பிடித்தபடி பாகர்கள் நின்றனர்.

நகரில் அவன் கண்ட அத்தனை அலங்காரங்களையும் முழுமையாக மறைத்துவிட்டிருந்தது கூட்டம். அவர்களெல்லாம் யாதவர்களா என்று நோக்கிக்கொண்டே சென்றான். யாதவரும் வணிகரும் உழவரும் இணையாகவே கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வண்ண ஆடைகள் அணிந்து மலர்த்தாலங்களை ஏந்திய பெண்கள்தான் எங்கும் கண்ணுக்குப் பட்டனர். திரௌபதியிடம் பெண்களுக்கு உள்ள ஈர்ப்ப்பு அவனுக்கு வியப்பளித்தது. கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக பெண்களை திரௌபதிதான் கிளரச்செய்கிறாள் என்று நினைத்துக்கொண்டான்.

அரசப்பாதையில் அரண்மனைத்தேர்கள் வந்தபடியே இருந்தன. நூற்றுக்கணக்கான தேர்கள். ஒவ்வொரு தேருக்கும் புரவியை சாலையோரமாக ஒதுக்கி வழிவிட்டான். நூறு இளவரசிகளும் நூறு தேர்களில் செல்கிறார்கள். அவர்களின் நாட்டிலிருந்து வந்து முடிசூட்டு நிகழ்வுக்காகக் காத்திருக்கும் இளவரசர்கள் அரசகுடியினர் செல்கிறார்கள். நகரில் மக்களுக்கு நிகராகவே அரசகுடியினரும் இருக்கிறார்கள் போலும். அரசமுறைமைகளனைத்தும் மறைந்துவிட்டிருக்கின்றன. அரசக்கொடி பறந்த தேர் ஒன்றை ஒரு குதிரைக்காவலன் தடுத்து ஒரு யானையை கடத்திவிட்டான்.

சாலையின் இருபக்கமும் அத்தனை இடங்களிலும் மனிதமுகங்களே தெரிந்தன. சாளரங்களில் உப்பரிகைகளில் கூரைவிளிம்புகளில். அவர்கள் விடிவதற்கு முன்னரே இடம்பிடித்திருக்கவேண்டும். திரௌபதியின் வருகை மட்டுமல்ல அவர்களுக்கு. அதன்பொருட்டு ஒட்டுமொத்த நகரமுமே தன்னை ஒரு கலையரங்காக ஆக்கிக்கொண்டிருந்தது. முகபடாமணிந்த யானைகளும் இறகணிசூடிய புரவிகளும் கவச உடையணிந்த காவலர்களும் வண்ணத்தலைப்பாகைகள் அணிந்த ஏவலர்களும் சூதர்களும் அயல்நாட்டினரும் அவர்களை மகிழ்விக்க நடித்துக்கொண்டிருந்தனர்.

அந்த எண்ணம் வந்ததுமே அனைத்தும் அப்படி தோன்றத்தொடங்கிவிட்டது. உண்மையிலேயே நடித்துக்கொண்டிருந்தனர் அவர்கள். அவர்கள் மேல் நூற்றுக்கணக்கான விழிகள் படும்போது அவ்விழிகளுக்கு எதிர்வினையாற்றாமலிருக்கமுடியவில்லை. கீழே கிடந்த ஒரு தலைப்பாகைச்சுருளை ஒரு வீரன் வேல்நுனியால் சுண்டி எடுத்து சுழற்றி அப்பால் இட்டான். குதிரையில் சென்ற ஒருவன் தேவையில்லாமலே அதை வால்சுழற்றி தாவச்செய்தான். தானும் கேளிக்கையாளனாகி நடித்துக்கொண்டிருக்கிறோமோ என அவன் நினைத்துக்கொண்டான். அந்நினைப்பே அவன் அசைவுகளை செயற்கையாக ஆக்கியது.

அரண்மனை கோட்டை வாயிலை நோக்கி சென்றபோது காலைவெயில் சரிவாக பெய்யத்தொடங்கியிருந்தது. மாளிகைநிழல்கள் மாளிகைச்சுவர்களில் விழுந்து அவற்றின் நிறத்தை மாற்றின. அரண்மனைவளாகத்தின் அத்தனை மாளிகைகளும் மலர்சூடியிருந்தன. மக்கள்கூட்டம் குறையக்குறைய அலங்காரங்கள் வண்ணச்செறிவாக பார்வையை நிறைத்தன. மக்கள்திரளாக கொந்தளித்தபோது வண்ணச்சிதறல்களே அழகாகத்தெரிந்தன. ஆனால் அப்போது அலங்கரிக்கப்பட்ட சீரான வண்ணங்கள் உறுத்தின.

கோட்டைவாயிலில் அவனை நிறுத்தி புரவியை அங்கேயே விட்டுவிடவேண்டும் என்றார்கள். அவன் குலைவாழைகளும் ஈச்சங்குலைகளும் மலர்மாலைகளுமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வாயிலைக் கடந்து உள்ளே விரிமுற்றத்தை அடைந்தான். அங்கே அனைத்தும் சித்தமாக இருந்தன. தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் ஏதுமில்லை. இசைச்சூதர்களும் வைதிகர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் ஏவலர்களும் நிறைந்திருந்தனர். அங்கு அத்தனைபேர் இருந்தது அவர்களின் ஓசையின்மையால் திகைப்பை அளித்தது.

மனோதரர் மாளிகைப்படிகளில் இடையில் கைவைத்து நின்றிருந்தார். அவனைக் கண்டதும் “எத்தனை நாழிகையில் கோட்டையை அடைவார்கள்?” என்றார். “மூன்றுநாழிகை ஆகலாம்” என்றான். “சௌனகர் இல்லாததை உணரமுடிகிறது. என்னால் இவர்களை மேய்த்துவிடமுடிகிறது. அரசகுடியினரிடம் பேச எனக்கு சொல்லில்லை” என்றார் மனோதரர். “யாரிடம் பேசவேண்டும்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பட்டத்து இளவரசரும் இளவரசர்களும் திரௌபதிதேவியை கோட்டைவாயிலில் வரவேற்பார்கள். அரசரும் விதுரரும் இளவரசியை இங்கே அரண்மனை வாயிலில் வரவேற்பார்கள். காந்தார அரசியர் இளவரசிக்கு நறுந்திலகம் இட்டு இல்லமேற்றுவார்கள். பாண்டவர்களும் யாதவஅரசியும் உடனிருப்பார்கள். இதுதான் எனக்கு சொல்லப்பட்டது. இளவரசர்கள் இன்னும் சித்தமாகவில்லை. பன்னிருவர் வந்து கூடத்தில் காத்திருக்கிறார்கள்.”

பூரிசிரவஸ் “விதுரர்?” என்றான். “அவர் அமைச்சுநிலையில் இருக்கிறார். அரசர் சித்தமாகிவிட்டார். காலையில் இருந்தே அவருக்கு அணிசெய்கை நடந்துகொண்டிருக்கிறது. சற்றுமுன் நினைத்துக்கொண்டு ஒரு பழைய மணியாரத்தை கேட்டார். அது கருவூலத்தில் பழைய நகைகளின் பெயர்நிரையில் சேர்ந்துவிட்டது. அதைத்தேடி எடுத்துக்கொடுப்பதற்குள் அடுத்த கணையாழிக்கான ஆணை வந்துவிட்டது. நகைகளால் அவரது எடை இருமடங்காகப் போகிறது.” பூரிசிரவஸ் “நான் விதுரரை பார்க்கிறேன்” என்றான்.

பூரிசிரவஸ் இடைநாழி வழியாகச்சென்று அமைச்சுமாளிகையை அடைவதற்குள் எதிரே குண்டாசி வந்தான். தொலைவிலேயே அவன் களிமயக்கில் இருப்பது தெரிந்தது. தூண்களின் கீழே காறித்துப்பியும் அவ்வப்போது சுவரைப்பற்றியபடி நின்றும் வந்தவன் அவனைப் பார்த்ததும் சுட்டிக்காட்டினான். அவன் உள்ளம் சற்று பிந்தித்தான் வந்து இணைந்துகொண்டது. “நீ பால்ஹிகன்… நீ…” என்றான்.

பூரிசிரவஸ் கடந்து செல்ல விழைந்தான். ஆனால் நின்றுவிட்டான். “என்னை விழியிழந்தவரிடம் கூட்டிக்கொண்டு செல்… இந்தத் தூண்கள் மிகவும் தள்ளித்தள்ளி இருக்கின்றன” என்றான் குண்டாசி. பூரிசிரவஸ் “இல்லை கௌரவரே, நான் உடனே சென்றாக வேண்டும்” என்றான். “நான் விழியிழந்தவரிடம் ஒன்று கேட்கவேண்டும். உன்னிடம் சொல்கிறேன். நீயே கேள். யானை ஏன் முட்டைகளிட்டு அடைகாப்பதில்லை? ஏன்?” அவன் அஹ் என்று சிரித்தபோது எச்சில் மார்பில் வழிந்தது. “ஏனென்றால் முட்டை உடைந்துவிடும்.” அவன் வாயைத்துடைத்தபடி சிரித்தான்.

பூரிசிரவஸ் கடந்து சென்றான். குண்டாசி கைநீட்டி “இல்லையேல் துரியோதனனிடம் கேள். மூத்த கௌரவரிடம் கேள்” என்றான். அவன் சென்றபோது பின்னால் குண்டாசியின் சிரிப்பின் ஒலி கேட்டது. அவன் விரைந்து நடந்து அமைச்சுமாளிகைக்குள் நுழைந்தான்.

ஏவல்நாயகங்கள் தொடர விதுரரே எதிரில் வந்தார். ”என்ன நிகழ்கிறது?” என்றார். “இளவரசி வந்துகொண்டிருக்கிறார்.” விதுரர் “பால்ஹிகரே, கர்ணன் இன்னும் வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவரது அணுக்கர்களுக்கும் பாகனுக்கும் தெரியவில்லை. அவர் வராததனால் மூத்த இளவரசர்கள் அறையிலேயே இருக்கிறார்கள். அவர் வராதது தெரிந்துவிடக்கூடாது என துரியோதனர் நினைக்கிறார்…” என்றார். பூரிசிரவஸ் ”நான் தேடிப்பார்க்கிறேன்” என்றான்.

“ஒற்றர்கள் பலதிசைக்கும் சென்றிருக்கிறார்கள்… நீரும் பாரும்” என்றார் விதுரர். “என்ன சொல்ல? என் தலையெழுத்து… பேரரசர் கீழே இறங்கும்போது மைந்தர்களைத்தான் கேட்பார்.” விதுரர் ஒரு கணம் தயங்கி அவனை அருகே அழைத்தார். மெல்லிய குரலில் ”அங்கரும் துரியோதனரும் இணைந்து இளவரசியை நகருக்குள் அழைத்துவரவேண்டும் என்பது மூத்தவரின் ஆணை. ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் உறுதியாக சொல்லிவிட்டார்” என்றார். பூரிசிரவஸ் “நான் அவரிடம் பேசுகிறேன்” என்றான்.

திரும்பி ஓடிச்சென்று புரவியில் ஏறி அங்கமாளிகை நோக்கி சென்றான். அவன் அங்கிருக்கமாட்டான் என்று தெளிவாகவே தெரிந்தது. புரவியை நிறுத்திவிட்டு நின்று எண்ணங்களை ஓடவிட்டான். எதுவும் புலப்படவில்லை. வெறித்த விழிகளுடன் கூட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றான். அவனை முட்டியபடியும் தள்ளியபடியும் கூட்டம் சென்றுகொண்டிருந்தது. வணிகத்தெருவிலிருந்து களிமகன்கள் ஒருவன் இன்னொருவனை தலைக்குமேல் தூக்கியபடி கூவியார்ப்பரித்துக்கொண்டு சென்றனர். அவன் குதிரையை இலக்கின்றி திருப்பியபோது அது வால்தூக்கி சாணிபோட்டது. அதன்மேலேயே சிறுநீர் கழித்தது. இயல்பாக ஓர் அகக்காட்சிபோல குதிரைச்சாலையில் இருப்பதை அவன் உணர்ந்தான்.

குதிரைச்சாலையை நெருங்கும்போது வந்த நாற்றம் சற்றுமுன் குதிரை சாணியிட்டு சிறுநீர் கழித்தபோது எழுந்தது என நினைத்துக்கொண்டு அவன் புன்னகைசெய்தான். புரவியை நிறுத்திவிட்டு இறங்கியதுமே அவன் அங்கே கர்ணன் இருப்பதை உணர்ந்துகொண்டான். அவனை நோக்கி வந்த சூதன் “தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “அவர் இங்கே என்ன செய்கிறார்?” என்றான். “அவர் நாளும் வருவார். புரவிநூல் எழுதுவதற்காக குதிரைகளை ஆராய்கிறார்.”

சுமைதூக்கும் புரவிகள் மட்டுமே அப்போது அங்கிருந்தன. இரவெல்லாம் பணியாற்றிக் களைத்த அவை விழிமூடி தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி தூண்சாய்ந்து நின்று துயின்றன. அருகே ஒரு மூங்கில் மேல் கர்ணன் அமர்ந்திருந்தான். அவன் முன்னால் நின்று கையிலிருந்த சவுக்கை தூக்கித்தூக்கி அதிரதர் பேசிக்கொண்டிருந்தார். பூரிசிரவஸ் அருகே சென்றதும் கர்ணன் திரும்பி நோக்கினான். “மூத்தவரே, தங்களை தேடித்தான் வந்தேன்” என்றான். கர்ணன் முகத்தில் வந்து மறைந்த வலியை பூரிசிரவஸ் கண்டான். அதை அவன் தன்னுடையதென உணரமுடிந்தது.

“நான் இங்கில்லை என்று சொல்லமுடியுமா பால்ஹிகரே?” என தணிந்த குரலில் கர்ணன் கேட்டான். “ஏன் பொய் சொல்லவேண்டும்? அங்க மன்னன் வரவிரும்பவில்லை. போய் சொல்லும்” என்றார் அதிரதன். பூரிசிரவஸ் பேசாமல் நின்றான். கர்ணன் விழிகளைத் தாழ்த்தி மெல்லிய குரலில் “என்னால் மேலும் அவமதிப்புகளை தாளமுடியாது இளையோனே…” என்றான். ”இதில் அவமதிப்பு என்பது…” என்று பூரிசிரவஸ் தொடங்க கர்ணன் “உமக்குத்தெரியும்” என்றான். ”ஆனால் இது பேரரசரின் ஆணை மூத்தவரே. தங்களுக்காக மூத்த இளவரசர் அங்கே காத்திருக்கிறார். தாங்கள் செல்லவில்லை என்றால் அவரும் செல்லப்போவதில்லை. அதற்கான தண்டனையை அவரே அடைவார்.”

கர்ணன் சினத்துடன் விழிதூக்கி “அவர் ஏன் செல்லாமலிருக்க வேண்டும்?” என்றான். “நீங்கள் கொள்ளும் இதே உணர்வுகளால்தான்” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் அவனை நோக்கிவிட்டு மீசையை முறுக்கத் தொடங்கினான். “அரசர் காம்பில்யப்போர் பற்றி அறிந்திருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் தலையசைத்தான். “ஆகவேதான் உங்கள் இருவரையும் வாளேந்தி அகம்படி வர ஆணையிடுகிறார்… அதைச்செய்யும் ஆண்மை உங்கள் இருவருக்கும் உள்ளதா என பார்க்க நினைக்கிறார்.” கர்ணன் “ம்” என மெல்ல உறுமினான். “செல்லாமலிருந்தால் அதற்கு ஒரே பொருள்தான், நீங்கள் அஞ்சுகிறீர்கள், நாணுகிறீர்கள். அதை பேரரசர் விரும்பமாட்டார்.”

கர்ணன் ஒரு சொல்லும் பேசாமல் மீசையை முறுக்கியபடி அமைதியாக இருந்தான். அதிரதன் “அங்கமன்னர் சிந்திக்கிறார் என்று பேரரசரிடம் சென்று சொல்லும்” என்றார். கர்ணன் எழுந்து “செல்வோம்” என்றான். “தாங்கள் ஆடையணிகள்…” என்று பூரிசிரவஸ் சொல்ல “தேவையில்லை” என்று சொல்லி அவன் ஒரு புரவியை அவிழ்த்தான். “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். பால்ஹிகரே, நீரும் வருகிறீரா?” பூரிசிரவஸ் “இல்லை நான் கோட்டைமுகப்புக்கு செல்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் இளவரசி வந்து விடுவார்” என்றான்.

கிழக்குக்கோட்டைவாயிலில் புன்னைமரப்பூக்கள் பரவிய பெருக்கு போல வண்ணத்தலைப்பாகைகளால் ஆன பரப்பு அலையடித்தது. ஓசைகள் இணைந்து முழக்கமாகி ஓசையின்மையாக மாறியிருந்தன. காவலர் செல்வதற்கான வழியினூடாக அவன் சென்றான். கோட்டைக்காவலர்தலைவன் அவனைக்கண்டு “நான் எங்காவது ஓடிவிடப்போகிறேன் இளவரசே. இத்தனை கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் படைகளுக்கு இல்லை…” என்றான். “கூட்டம் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளும்… அஞ்சவேண்டாம்” என்று அவன் சொன்னான். குறுகிய மரப்படிகள் வழியாக கோட்டைக்குமேல் ஏறிச்சென்று முதல் காவல்மாடத்தில் நின்று நோக்கினான்.

கோட்டையின் இருபக்கமும் மக்களின் தலைகளால் ஆன பெருக்கு சுழித்தது, தேங்கியது, அலையடித்து ஒதுங்கி மீண்டும் இணைந்தது. அதன் ஓசை கோட்டைச்சுவர்களில் மோதி பல இடங்களில் இருந்து வந்து சூழ்ந்துகொண்டது. அவன் விழியோட்டிக்கொண்டு திரும்பியபோது அஸ்தினபுரியின் மாபெரும் கைவிடுபடைகளை கண்டான். முறுக்கப்பட்ட இரும்புவிற்களில் பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான அம்புகளுடன் அவை முள்ளம்பன்றி போல உடல்சிலிர்த்து நின்றிருந்தன. அதன்பின் அவன் கைவிடுபடைகளை மட்டுமே நோக்கினான். நூற்றுக்கணக்கான சதக்னிகள், ஆவசக்கரங்கள், சகஸ்ராவங்கள், ஸ்தானபாணங்கள். அவையனைத்தும் ஒவ்வொரு நாளும் பேணப்பட்டு எண்ணைமின்ன அக்கணம் தொடுக்கப்பட்டவை போல மறுகணம் எழப்போகிறவை போல நின்றிருந்தன.

அவை விடுபடுமென்றால் மறுபக்கம் பெருகிக்கிடக்கும் பல்லாயிரம் பேரை ஓரிரு கணங்களில் கொன்றழிக்கமுடியும். அங்கே குருதிபெருகி மண் சேறாகும். என்ன எண்ணங்கள் என அவன் விழிதிருப்பிக்கொண்டான். ஆனால் மீண்டும் பார்வை அவற்றை நோக்கியே சென்றது. அவன் கண்களை மூடிக்கொண்டான். ஓசைகள் வழியாக மேலும் பெருங்கூட்டத்தை அறிந்தான். ஆனால் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. மண்ணில் அதுவரை நிகழாத பெரும்போர். குருதியின் மணம். அவன் விழிகளை திறந்தபோது முதற்கணம் பெருதிரள் மாறிமாறி வெறியுடன் கொன்றுகொண்டிருப்பதை கண்டான். நடுக்கம் கடந்த மறுகணத்தில்தான் திரௌபதி கோட்டைமுகப்பில் வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான்.

இரண்டு ஆற்றுநீர்ப்பெருக்குகள் இணைவதுபோல திரௌபதியுடன் வந்த கூட்டமும் காத்து நின்ற கூட்டமும் இணைந்தன. மேலிருந்து பார்க்கையில் திரௌபதியின் பொற்தேர் விண்ணிலிருந்து விழுந்த ஒரு பெரிய காதணி போல இளவெயிலில் மின்னியது. கூட்டத்தின் அலைக்கழிப்பில் சுழன்றது. கோட்டைக்குள் மெல்லமெல்ல அது நுழைவதை கண்டான். கோட்டையின் முகவாயிலுக்குள் அது நுழைந்ததும் ஓடிச்சென்று மறுபக்கம் பார்த்தான். அவனுக்குக் கீழே முரசு மாடத்தில் மூன்று பெருமுரசுகளையும் கோல்காரர்கள் வியர்வை வழிய தசைகள் இறுகி நெகிழ கழிகளால் முழக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை விழிகளால்தான் பார்க்கமுடிந்தது. ஓசையை வானை நிறைத்திருந்த கார்வை முழுமையாக உள்ளிழுத்து கரைத்துக்கொண்டது.

கோட்டைக்குக் கீழே திரௌபதியின் பொற்தேர் தோன்றியதும் அப்பகுதியே கொந்தளித்தது. வீசும் கைகளும் எம்பிக்குதிக்கும் தலைகளும் பொங்கியமையும் ஆடைகளுமாக வண்ணக்கடல் அலையடித்தது. அந்தத் திரள்பெருக்கின் மீது தேர் பொன்வண்டு போல மெல்ல ஊர்ந்தது. அது நின்றதும் எதிரே யானைநிரைக்கு முன்னால் வாளுடன் நின்றிருந்த கர்ணனும் துரியோதனனும் நடந்துவந்து தேர்வாயிலை அடைந்தனர். தலைவணங்கி தேர்க்கதவை அவர்கள் திறக்க திரௌபதி வெளிவந்தாள். கூப்பிய கைகளுடன் தேர்வாயிலில் நின்றாள்.

வாழ்த்தொலிகளும் பல்வேறு இசைக்கருவிகளின் ஓசையும் இணைந்து உருவான அதிர்வால் அக்காட்சியே திரைச்சீலை ஓவியமென அலையடித்தது. பல்லாயிரம் கைகளிலிருந்து எழுந்து விழுந்த மலர்களும் மஞ்சளரிசியும் பொன்னிற அலைகளென தெரிந்தன. திரௌபதி நகரின் மண்ணில் கால்வைத்ததும் பதினாறு எரியம்புகள் ஒன்றாக வானில் எழுந்து வெடித்து எரிமலர்களாக விரிந்து விண்மீன்களாக மாறி பொழிந்தன.

திரௌபதியை கர்ணனும் துரியோதனனும் அழைத்துச்சென்று ஒரு பட்டுவிரிக்கப்பட்ட மரமேடைமேல் ஏற்றி நிறுத்தி இருபக்கமும் வாளுடன் நின்றனர். பானுமதியும் அசலையும் துச்சளையும் சேடியர் மங்கலத்தாலங்களுடன் இருபக்கமும் வர அவளை எதிர்கொண்டு வரவேற்று நெற்றியில் நறுந்திலகமிட்டு அரிமலர் தூவி வாழ்த்தினர். அவர்களுக்குப்பின்னால் நூற்றுவரின் இளவரசிகள் அனைவரும் முழுதணிக்கோலத்தில் நிரைவகுத்திருந்தனர். கௌரவ மணமகளிரும் இளவரசிகளும் அனைவரும் ஒன்றேபோல இளஞ்சிவப்பு நிறமான அரையாடைகளும் சால்வைகளும் தலையாடைகளும் அணிந்திருந்தனர். அத்தனை உயரத்திலிருந்து பார்க்கையில் இளஞ்செந்நிற மலர்மாலையின் நுனியில் நீலத்தாமரையை குச்சமாக கட்டியதுபோல திரௌபதியும் இளவரசிகளும் தெரிந்தனர்.

பொன்னால் ஆன அம்பாரியில் செம்பட்டு இருக்கையுடன் பட்டத்துயானை வந்து நின்றது. முகபடாமும் பட்டுத்தொங்கல்போர்வையும் தந்தக்காப்பும் காதுமலர்களுமாக பேருருவம் கொண்ட பொன்வண்டு போலிருந்தது. கர்ணனும் துரியோதனனும் திரௌபதியை அதனருகே அழைத்துச்சென்றனர். பட்டுநூலேணிவழியாக அவள் ஏறி அம்பாரியில் கைகளைக்கூப்பியபடி அமர்ந்தாள். முரசுகள் ஏற்றப்பட்ட முதல்யானை கிளம்பி எறும்புகளை வகுந்து கருவண்டு செல்வதுபோல கூட்டத்தை ஊடுருவிச்சென்றது. அதன்பின் கொம்புகள் ஏந்திய சூதர்களுடன் இரண்டாவது யானை. அணிப்பரத்தையர் ஏறிய மூன்று யானைகள் சென்றபின் பட்டத்து யானை திரௌபதியுடன் சென்றது.

களிவெறிகொண்ட மக்கள் கைகளை வீசி ஆர்ப்பரித்தனர். இருபக்கமும் உப்பரிகைகளில் இருந்து அவள்மேல் மஞ்சளரிசியும் மலர்களும் பொழிந்தன. முகில்களை காலால் அளைந்து வானில் நடப்பவள் போல அவள் அசைந்தசைந்து சென்றாள். அதைத்தொடர்ந்து பானுமதி ஏறிய யானை. அதன்பின் துச்சளையின் யானையும் அசலையின் யானையும் தொடர்ந்தன. கௌரவரின் மணமகளிர் ஒவ்வொருவரும் ஒரு யானைமேல் ஏறி நிரைவகுத்துச்சென்றனர். யானைகளின் நிரை கொன்றைமலர்ப்பரப்பில் வளைந்துசெல்லும் கரிய நாகம்போல மொய்த்து அலையடித்த தலைப்பாகைகளின் வண்ணக்கொந்தளிப்பின் நடுவே சென்றது.

பூரிசிரவஸ் அந்த வரிசை சென்று மறைவதை நோக்கிக்கொண்டிருந்தான். அந்தக்கூட்டத்தில் எங்கோ அந்த சார்வாகனும் இருப்பான் என்று தோன்றியது. ஆனால் திரள் தனியென எவருமில்லாமலாக்கிவிட்டிருந்தது. அவன் விழிகள் தேடித்தேடி சலித்தன. பின்னர் பெருமூச்சுடன் அவன் படிகளில் இறங்கத் தொடங்கினான்.