வண்ணக்கடல் - 8
பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்
[ 5 ]
விண்ணகப் பேராற்றல்களை அன்னையராக தன்பின் அணிவகுக்கச்செய்த கார்த்திகேயன் சூரபதுமனுக்கு எதிராக படைஎழுச்சி கொண்டபோது பதினான்குலகத்து தேவர்களும் நாகங்களும் அவனை வந்து அடிபணிந்து கைக்கொடையாக படைக்கலம் அளித்து மகிழ்ந்தனர். பொற்கவசம் இளஞ்சூரியன் போல சுடர, பச்சைநீலப்பேரொளி மயில்தோகையென விரிய கீழைவானில் சுப்ரமணியன் எழுந்தபோது அடியிலிகளின் அரசனாகிய வாசுகி கருமேகச்சுருள் போன்ற பேருருவமாக அவன்முன் விரிந்தான். “தேவ, என் இனிய மைந்தர் இருவரை தங்கள் மெய்க்காவலிணைகளாகக் கொள்க!” என்றான். “இவர்களை ஜயன், மகாஜயன் என்று நான் அழைக்கிறேன். வெற்றியையே மைந்தராக்கிக் கையளிக்கிறேன். அருள்க!”
செம்மஞ்சள் சுடர்விட்ட இரு நாகமைந்தர்களை அவன் கந்தனின் காலடியில் வைத்தான். உருகிவழிந்தோடும் பொன்னோடைகள் என பொலிந்த அவ்விருவரும் தங்கள் நுனிவாலை விண்மேகத்திலூன்றி பொன்னிறப்படமெடுத்து ஒளிரும் செங்கனல் விழிகள் உறுத்து அனல்நா பறக்க பாகுலேயன் முன் நின்றனர். அவன் தன் சிறு குழந்தைக் கரங்களால் அவர்களின் படத்தைத் தொட்டு “என்றுமிருப்பீராக!” என்று வாழ்த்தினான். அவன் அவர்களின் நெற்றியில் தொட்ட இடம் வெண்ணீற்று வரியெனத் திகழ்ந்தது. அவன் செவ்வேலும் சேவல்கொடியும் கொண்டு போருக்குச் சென்றபோது பறக்கும் பொற்சாட்டைகளென அவர்கள் அவனுடன் சென்றனர்.
யுகயுகங்களுக்குப்பின் ஜயனும் மகாஜயனும் காலைநேரத்தின் பொன்னொளிக் கீற்றாக விண்ணில் பறந்து செல்லும்போது கீழே ஒரு இனிய தந்தை தன் கையளவு சிறிய மைந்தனை நீட்டிய முழங்கால்மேல் படுக்கச்செய்து வெயில்காயச்செய்வதைக் கண்டனர். அது அமுதவேளை. தெய்வங்கள் கண்விழிக்கும் பொற்கணம். “தம்பி, இக்கணம் இவனுக்குரியதென்று சொல்கின்றது காலச்சுருள்” என்றான் ஜயன். “ஆம்” என்றான் மகாஜயன். இருவரும் இரு பொன்மேகத்தீற்றலாக காட்டின்மேல் இறங்கினார்கள். அருகே பூத்து நின்றிருந்த பொன்னிற வேங்கையின் மலர்க்குவையில் குடியேறினார்கள். இளங்காற்றில் அது அசைந்தபோது பொன்னொளித் துணுக்காகப் பறந்துவந்து விழிசொக்கிக் கிடந்த குழந்தையின் மெல்லிய சிறுபுயங்களில் குடியேறினார்கள்.
வைகானச மாதம் பதிநான்காம் நிலவின் அதிகாலையில் துயிலும் பெருவீரனின் உடலில் தசையிறுகி நெளிய மெல்லப்புரண்டெழுந்த மகாஜயன் “இன்று போர் நிகழவிருக்கிறது மூத்தவரே” என்றான். மெல்ல நீண்டு மடிந்து வயிற்றுக்கெழுந்த ஜயன் “ஆம்… நன்று” என்றான். மகாஜயன் தன் விரிந்த பத்தியை நீட்டி தமையனின் முகத்தைத் தொட்டான். “நிகர்ப்போர்… அதைக்காண விண்ணில் தெய்வங்கள் எழுவர்.” மெல்ல தம்பியைத் தழுவி “ஆம்” என்றான் ஜயன். அவர்கள் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டு பிணைந்து தழுவிக்கொண்டனர்.
தன் அசைவை தானறிந்து எழுந்த பீமன் மரவுரித்தொட்டிலில் எழுந்து அமர்ந்துகொண்டு இருளுக்குள் காற்றோசையாகவும் சீவிடின் ரீங்காரமாகவும் ஓநாய் ஊளையாகவும் தன்னைச்சூழ்ந்திருந்த காட்டை உற்றுநோக்கினான். எழுந்து தன் பெருங்கைகளைத் தூக்கி முதுகை நெளித்தபின் நடந்து காட்டுக்குள் சென்றான். துயிலாது வேலுடன் அமர்ந்திருந்த சேவகன் தலைவணங்கினான். பீமன் காட்டுச்செடிகள் நடுவே மெல்லிய நிறமாறுதலாகக் கண்ணுக்குத்தெரிந்த சிறுபாதை வழியாக நடந்தான்.
சிலகணங்கள் கைகளை தொங்கவிட்டு தென்கிழக்கை நோக்கி நின்றான். தன் கைகள் தன்னிச்சையாகப் பிணைந்து நெளிவதை உணர்ந்தவனாக அவற்றை மார்புடன் கட்டிக்கொண்டான். பின் அங்கே நின்றிருந்த பெரிய தோதகத்தி மரத்தில் தொற்றி மேலேறிச்சென்று உச்சிக்கிளையை அடைந்து அங்கே நின்றபடி இருளுக்குள் கூர்ந்து நோக்கினான். மிகத்தொலைவில் சிறிய மின்மினிக்கூட்டம்போல அஸ்தினபுரியின் கோட்டையின் குழியாடி குவித்தளித்த எரிந்த பந்தங்களின் ஒளியைக் கண்டான்.
அஸ்தினபுரியின் துயில்கூடத்தில் காசியப பிரஜாபதிக்கு தனு என்னும் விண்நாகத்தில் பிறந்த மைந்தனாகிய கேது தன்மேல் பதிந்த விழியூன்றுதலை உணர்ந்து மெல்லச் சிலிர்த்தெழுந்தான். கரிய தசைப்புடைப்புகள் இறுகி அசைய எழுந்து நீண்டுசென்று தலை எடுத்து மெல்லச் சீறி “தம்பி” என்றான். காசியபருக்கு சிம்ஹிகை என்னும் சடைநாகத்தில் பிறந்தவனாகிய ராகு அதைக்கேட்டு சிலிர்த்துக்கொண்டு மெல்ல அசைந்து எழுந்தான். “மூத்தவரே!” என்றான். “போர் வருகிறது தம்பி!” என்றான் கேது. ராகு படமெடுத்து அவனருகே வந்து “ஆம்… முதல்பெரும்போர்!” என்றான்.
“போரில் நாம் எதிரியை அறிகிறோம். எதிரி நம்மை நமக்கு அறிவிக்கிறான்” என்றான் கேது. “உடலே கைகளாக போரிடும் பெருவல்லமை நமக்கு மட்டுமே உண்டு. இன்று நாம் அதன் உச்சங்களை அறிவோம்.” அவ்வெண்ணத்தால் புடைத்தெழுந்த ராகு பாய்ந்து வந்து கேதுவின் முகத்தை தன் முகத்தால் முட்டிக்கொண்டான். கேது தம்பியை தன் உடலால் அள்ளிக்கொள்ள இருவரும் உடலுரசும் ஒலிகளுடன் பிணைந்து இறுகி அதிர்ந்து பின் விலகி மீண்டும் பிணைந்தனர்.
அப்பால் கூடத்தின் இருளுக்குள் இருந்து அவர்களின் உடன்பிறப்புகளான விப்ரசித்தி, சம்பரன், நமுசி, பாலோமன், அசிலோமன், கேசி, துர்ஜயன், ஆயசிரஸ், அஸ்வசிரஸ், அஸ்வன், சங்கு, மகாபலன், கர்கன், அமூர்த்தா, வேகவான், மானவான், சுவர்பானு, அஸ்வபதி, விருஷபர்வன், அஜகன், அஸ்வகிரீவன், சூக்ஷன், துகுண்டன், ஏகபாத்து, ஏகசக்ரன், விரூபாக்ஷன், ஹராஹரன், நிகும்பன், கபடன், சரகன், சலபன், சூரியன், சந்திரமஸ் என்னும் முப்பத்துமூன்று நாகங்களும் தங்கள் துணைவர்களுடன் வளைந்தெழுந்தன. அவை ஒன்றுடன் ஒன்று தழுவி பின்னி இணையும் நெளிவுகள் கூடமெங்கும் அலையிளகின.
மறுநாள் அஸ்தினபுரியின் கிழக்கு வாயில் முகப்பில் ஜயனும் மகாஜயனும் தங்களை எதிர்க்கவந்த ராகுவையும் கேதுவையும் கண்டுகொண்டு சீறி நெளிந்தெழுந்தனர். பத்தி விரித்த மகாஜயனின் தலைமேல் தன் தலையை அழுத்திய ஜயன் “தம்பி, வேளை வரவில்லை. பொறு!” என்றான். “இக்கணமே! இங்கேயே!” என்றான் மகாஜயன். “அக்கணம் நம் கையில் இல்லை தம்பி!” என்றான் ஜயன். அப்பால் யானைமேலிருந்த ராகு எழுந்து படம்புடைத்து எழ கேது அவன் மேல் படிந்து “இப்போதல்ல… இங்கல்ல” என்றான். “ஏன்? ஏன்?” என்றான் ராகு. “நாகங்கள் விதிவகுக்கும் களங்களில் மட்டுமே ஆடவேண்டியவர்கள்” என்றான் கேது.
கீழே யானைமருப்பிலிருந்து தொங்கிய முதுபெண் நாகமான சக்தை நெளிந்தெழுந்து தன் சிறிய தலைதூக்கி செந்நா அசைய ஜயனையும் மகாஜயனையும் நோக்கினாள். பின் படமெடுத்து மருப்பை அடைந்து உரக்கச் சீறினாள். கரிய கேது வந்து தன் நுனிநாவால் அதன் ஈரநாவைத்தொட்டான். “ஆம். அவர்கள்தாம்” என்றான். ஊர்கோலம் செல்லும்போதெல்லாம் சக்தை நீண்டு நீண்டு ஜயனையும் மகாஜயனையுமே சுட்டிக்கொண்டிருந்தாள்.
அரண்மனை முகப்பில் நின்றிருந்தபோது சக்தை “இதோ வருகிறான்… இதோ நம்மருகே வந்துகொண்டிருக்கிறான்” என்றபடி மூச்சு சீறி நெளிந்து காற்றில் வளைந்தெழுந்து நீண்டாள். கேது அதை அணைத்து “ஆம், இன்றுதான் அவ்வேளை. பொறு அன்னையே” என்றான். ஜயனும் மகாஜயனும் தலைகள் பிணைத்து அசைவிழந்து ராகுவையும் கேதுவையும் நோக்கிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு தசையையும் ஒவ்வொரு தசையும் அறியும் கணங்கள் மெல்ல கடந்துசென்றன.
விலகிச்சென்றபோது மெல்ல தசை நெகிழ இயல்படைந்த பெருமூச்சுடன் ஜயன் “மகத்தான அரவுடல்கள்!” என்றான். “நமக்கிணையானவர்கள். ஒவ்வொரு தசைநாரிலும் ஒவ்வொரு அசைவிலும்.” மகாஜயன் “கரியவர்கள்… வெறுப்புக்குரியவர்கள்” என்றான். “ஆம், நாம் அவர்களின் வெறுப்புக்குரியவர்கள். இந்த ஆடலில் எதிரெதிர் களங்களில் நிற்கவைக்கப்பட்டிருக்கிறோம்…” மகாஜயன் பொருமியபடி தன் தசைகளைப் புடைத்து மெல்ல அதிரச்செய்தான்.
“பொன்னிறமானவர்கள்!” என்று ராகு கேதுவிடம் சொன்னான். “இருளின் முடிவின்மையோ ஆற்றலோ அற்ற புழுக்கள்.” கேது அமைதியான அசைவுகளுடன் தன் உடலுக்குள் புரண்டபடி “ஆம், ஆனால் ஒளி நெடுந்தூரம் ஊடுருவுவது. அதற்குத் தடைகளே இல்லை” என்றான். “நெரித்து இறுக்கி உண்டுவிடவேண்டும்” என்றான் ராகு. “உனக்குள் நாகமணியாக அவன் ஒளிவிடுவான்” என்று கேது சொன்னான். சீறியெழுந்த ராகு “என்ன சொல்கிறீர்கள் மூத்தவரே? நாம் அவர்களிடம் தோற்கவிருக்கிறோமா?” என்றான். “நானறியேன். ஆனால் இருளும் ஒளியும் ஒருபோதும் போரை முடித்துக்கொள்வதில்லை” என்றான் கேது.
அன்று பகலெல்லாம் அவர்கள் பொறுமையழிந்து அசைந்து முடிச்சிட்டு நிமிர்ந்தும், அணைத்துப்புரண்டும், படம்கோர்த்து நெளிந்தும் காலத்தை தாண்டிக்கொண்டிருந்தனர். நீரில் திளைத்தபோதும் பொன்னணிகள் பூட்டப்பட்டபோதும் நிலையற்றிருந்தனர். பின்மதியத்தின் இரண்டாம்நாழிகை முதல் அங்கம் முதல்கணிகையில் தொடங்கவிருக்கும் மற்போருக்காக வடக்குக் கோட்டைக் களமுற்றத்தில் அனுமனின் சிற்றாலய முகப்பில் சென்று நின்றபோது அதுவரை இருந்த நிலையின்மை மறைந்து கல்நாகங்களென கனத்து குளிர்ந்து அமைதிகொண்டனர்.
தம்பியர் சூழ துரியோதனன் அனுமன் ஆலயத்தின் முன்னால் வந்து நின்றான். புலித்தோல் அரையாடை மட்டும் அணிந்து கருந்தோள்களில் தோள்வளைகளும் கணுக்கையில் கங்கணமும் விரிந்த மார்பில் மணியாரமுமாக அவன் வந்தபோது கூடிச்சூழ்ந்திருந்த படைவீரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அரண்மனைப்பாதையில் தருமன் துணைவர யானைத் தோலாடை அணிந்து, அணிகளேதுமில்லாத திறந்த மார்புடன் பீமன் வந்தபோதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. துரியோதனன் அனுமனை இடை வளைத்து வணங்கி கைகளைக் கூப்பியபடி முன்னால் சென்றான். பீமன் அனுமனை எண்முனையும் நிலம்தொட வணங்கி துளி மண் எடுத்து சிரத்திலணிந்து கைகூப்பியபடி களத்துக்கு வந்தான்.
சூழ்ந்திருந்த கூட்டத்தை நோக்கியபின் துரியோதனன் கையசைத்ததும் முதுசூதரான சமரன் முன்னால் வந்து கைகளில் இருந்த கோலை மேலே தூக்கினார். களம் அமைதிகொண்டது. “வீரர்களே, இங்கே மூத்த இளவரசர் துரியோதனரும் இளையவர் பீமசேனரும் இரட்டையர்போரில் ஈடுபடவிருக்கிறார்கள். இது களிப்போர். எனினும் களப்போரின் நெறிகளனைத்தும் கொண்டது. வீரம் திகழும்போது விண்ணிலெழும் தெய்வங்களை எல்லாம் இக்கணம் இங்கே அழைக்கிறேன். பேராற்றலின் தலைவனாகிய வாயுவை, அவன் மைந்தனாகிய அனுமனை இவ்வரங்கை ஆளும்படி பணிந்து கூறுகிறேன்” என்றார். கூடிநின்றவர்கள் கை தூக்கி ‘வாழ்க! வாழ்க!’ என ஒலித்தனர்.
“இக்களிப்போர் அரங்குக்கு களநடுவராக அமைந்து நெறியாளும்படி களரிகுருநாதரான சம்பரரை அஸ்தினபுரியின் அரசரின் பெயரால் அழைக்கிறேன்” என்றார் சமரன். சம்பரர் கூட்டத்திலிருந்து முன்னகர்ந்து கைகூப்பி “இளவரசர்களே, வீரர்களே, களமுற்றத்தில் மூத்தோரோ முதற்குருக்களோ இருக்கையில் அவரையே களநடுவராக அழைக்கவேண்டுமென்பது மரபு. இங்கே இன்று கௌதம குலத்தில் பிறந்தவரும் சரத்வானின் மைந்தருமாகிய கிருபர் வந்திருக்கிறார். அஸ்தினபுரி நீங்கி கிருபவனத்தில் தன் குருகுலத்தில் வாழ்ந்திருந்த பேராசான் இத்தருணத்தில் இங்கே வந்தமைந்தது நம் நல்லூழ். மைந்தர்களின் இக்களிப்போரை அவரே முன்னின்று நிகழ்த்தியருளவேண்டுமென விழைகிறேன்” என்றார்.
ஓவியம்: ஷண்முகவேல்
அங்கிருந்த எவருமே கிருபரை கண்டிருக்கவில்லை. அவரைப்பற்றிய பழங்கதைகளையே கேட்டிருந்தனர். சந்தனு மன்னர் காட்டில் கண்டெடுத்த இரட்டைக்குழந்தைகளை அரண்மனையின் அறச்சாலைக்குக் கொண்டுவந்து வளர்த்ததையும் அறச்சாலையில் வளர்ந்தமையால் அவர்கள் கிருபர் என்றும் கிருபி என்றும் அழைக்கப்பட்டதையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களின் தந்தையான சரத்வான் இளமையிலேயே அவர்கள் இருவரையும் வந்து அழைத்துச்சென்றுவிட்டார். தந்தையிடம் வில்வித்தையின் எல்லைகளைக் கற்றுத் தேர்ந்தபின் கிருபர் கிருபவனத்திலேயே தனுர்வேதியாக அமர்ந்துவிட்டிருந்தார்.
மெலிந்து இறுகிய சிற்றுடலும் தலைமேல் குவையாகக் கட்டிய கருங்குழலும் சுருண்ட கரிய தாடிக்கற்றைகளுமாக எழுந்து வந்த கிருபர் அனல் சூழ்ந்தது போல செந்நிற கேழைமானின் தோலை அணிந்திருந்தார். நீண்ட மெல்விரல்கள் கொண்ட கைகளைக் கூப்பியபடி “ஆம், ஒரு நன்னிமித்தம்தான் இது. வாழ்க!” என்றார். கூடி நின்றவர்கள் கிருபரை வாழ்த்தி கூவினர்.
துரியோதனன் முன்னால் சென்று “ஆசிரியரே, இந்தப்போர் தங்கள் மடியில் குழந்தைகள் செய்யும் பூசலென்று காணுங்கள்” என்று சொல்லி அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். “நலம் திகழ்க” என்று அவர் வாழ்த்தினார். பீமன் அவர் பாதங்களை வணங்கி “தங்களிடம் போர்க்கலை கற்கும் முதற்தருணமாக இது அமையட்டும் ஆசிரியரே” என்றான். அவர் வெண்பற்கள் காட்டி நகைத்து “அவ்வண்ணமே ஆகுக” என்றார்.
கிருபர் கைகளைத் தூக்கி “அஸ்தினபுரியின் மண்ணில் இந்த வைகானச பூர்ணிமைநாளில் குருகுலத்து மைந்தர்கள் இருவரும் செய்யும் முதல் இரட்டையர்போர் இங்கே நிகழவிருக்கிறது. மூதாதையர் மகிழட்டும். தேவர்கள் மகிழட்டும். ஐந்துபேராற்றல்களும் மகிழட்டும். திசையானைகள் மகிழட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். கூட்டம் கைதூக்கி ‘ஓம் ஓம் ஓம்’ என்றது.
“மைந்தர்கள் களமிறங்கட்டும்” என்றார் கிருபர். துரியோதனனும் பீமனும் தங்கள் கச்சைகளை இறுக்கியபின் குனிந்து களத்தின் மண்ணைத் தொட்டு சென்னியில் அணிந்து வணங்கி கைகளை மண்ணில் உரசிக்கொண்டு கனத்த கால்களைத் தூக்கி வைத்து களத்தின் மையத்துக்குச் சென்றனர். “மைந்தர்களே, அன்னை பிருத்வியின் மடியில் கணந்தோறும் பல்லாயிரம் உடல்கள் மல்லிட்டுக்கொண்டிருக்கின்றன. போரின் வழியாகவே ஆற்றல்கள் தங்களை அறிந்துகொள்கின்றன. ஐம்பெரும்பூதங்களும் ஒவ்வொரு கணமும் மற்போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. போரே வேள்விகளில் தூயது. பிறிதொன்றிலாத அவி என்பது குருதியேயாகும்” என்றார்.
அவர் கையசைத்ததும் துரியோதனன் மெல்ல குனிந்து தன் இரு கைகளையும் நீட்டிக்கொண்டான். அவன் விரல்கள் குவிந்து நாகபடங்கள் போல நெளிந்தன. அரைமண்டியில் கால்களை வைத்து பீமனின் கண்களையே நோக்கியபடி களத்தில் வலம்நோக்கி அசைந்து நடந்தான். அவனெதிரே பீமன் இடைதாழ்த்தி நின்று தன் கைகளை நீட்டி மெல்ல வலம்நோக்கி அசைந்தான். வேங்கைகள் பதுங்கும் அசைவு. கனத்த விறகிலேறும் நெருப்பின் அமைதி. பீமனின் கைகள் ஐந்துதலைபுடைத்த நாகங்கள் போலிருந்தன.
“தம்பி, நீ மகாஜயனை கவனி. அவன் பேராற்றல் கொண்டவன்” என்றான் கேது. “ஆம், நான் அவனாகவே இருக்கிறேன்” என்றான் ராகு. “வல்லமை கொண்ட கருநாகம் ராகு. அவனை கவ்வுவதெப்படி என்று பார் தம்பி” என்று ஜயன் ஆணையிட்டான். மகாஜயன் “ஆம், மூத்தவரே. அவனுடைய இருளே என் விழிகளாக இருக்கின்றது” என்றான். நாகங்கள் காற்றில் நா நீட்டி தலைநெளித்து உடல் முறுக்கி அசைந்தன. ஒன்றின் அசைவு அக்கணமே பிறிதின் உடலில் நிகழ்ந்தது. ஒன்று சீறியபோது பிறிது சீறி எம்பியது. நடுவே நின்ற காற்று அஞ்சி சிலிர்த்துக்கொண்டது.
விண்ணவர் வகுத்த ஒருகணத்தில் நான்கு நாகங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துகொண்டன. வெண்ணிறக் கருநிறத் தசைகள் ஒன்றேயென ஆகி இறுகிக் கவ்வி ஒன்றை ஒன்று உடைத்து சிதைக்க முயன்றன. பின் பெரும் சீறலுடன் அவை விடுவித்துக்கொண்டு விலகித்தெறித்து சினம் கொண்டு காற்றில் துடித்து தவித்தன. மீண்டும் பாய்ந்து கவ்விக்கொண்டு இறுகி அதிர்ந்தன. ஒன்றையொன்று உருவி விடுவித்து வளைந்து பேரொலியுடன் அறைந்துகொண்டன.
ஜயன் கேதுவை மடித்துத் திருப்பி வளைத்து பின்பக்கமாகக் கொண்டுசெல்ல அவன் தசைகள் இறுகி நரம்புகள் புடைக்க வெட்டுண்டதுபோலத் துடித்தான். ஒருகணத்தில் கேது மறுபக்கமாக ஜயனைத் தள்ளி மடித்து ஓங்கியறைந்தான். சீறியெழுந்து வந்த மகாஜயனை கேது கவ்விச் சுருட்டி உதறி வளைக்க ஜயன் எழுந்து அவர்கள் நடுவே புகுந்து விலக்கி கேதுவை ஓங்கியறைந்தான். அறைபடும் அரவுடல்களின் ஒலியை கூடிநின்ற ஒவ்வொருவரும் காதால் கண்களால் தோலால் உணர்ந்தனர். கூட்டமெங்கும் மூச்சொலிகள் உரத்து ஒலித்தன.
கணந்தோறும் பெரும்பாம்புகளின் சினம் ஏறிக்கொண்டே சென்றது. அவை அறைந்தன, பின்னி நெரித்து இறுகித் தெறித்து உடைந்து விலகி சீறி மீண்டும் கவ்விக்கொண்டன. ஒற்றை அரவுடல்சுருளாக மாறி பேரொலியுடன் மண்ணை அறைந்து விழுந்தன. புழுதியில் புரண்டு திளைத்து துடித்து அவை எழுப்பிய மேகத்தில் அவையே மறைந்தன. பின் எழுந்து விலகி தொய்ந்து களைத்து நெளிந்தன. இயலாமையே வெறியாக மாற மீண்டும் பாய்ந்து கவ்விப்புரண்டன. புழுதிபடிந்து வண்ணம்மாறிய நாகப்பேருடல்களில் எழுந்த வியர்வை பனித்து சேறாகி வழிந்து மண்ணில் சொட்டிச் சிதறியது.
சூழ்ந்திருந்த கூட்டம் மூச்சே ஓசையாக ததும்பிக்கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான நாகங்கள் சீறி எழுந்து காற்றில் நெளிந்த அலையடிப்புக்கு நடுவே நான்கு பெருநாகங்களும் ஒன்றைப் பிறிதொன்று அறிந்து ஒன்றுள் ஒன்று சுருண்டு புடவியழிந்து காலமழிந்து திளைத்துக் கொண்டிருந்தன. அலையடிக்கும் பாம்புகள். சிறியவை மெலிந்தவை எலும்பெழுந்தவை. செதிலரித்தவை. எண்ணை மின்னுபவை. அவையனைத்தும் நாவுகளாகி ஒன்றையே ஓசையின்றிக் கூவின ‘கொல்! கொல்! கொல்!’
நேரம் செல்லச்செல்ல அரவுடல்கள் களைத்து வலுவிழந்தன. அறைபட்டு வீங்கிய தசைகள் வலியில் விம்மின. தொய்ந்து நீர்ப்பாம்புகள் போல சொட்டித் துவண்டன. அசைந்து தலைதூக்கவே அவை முழு உடலையும் நெரித்து வளைந்தெழவேண்டியிருந்தது. பலமுறை தலைதூக்கி துவண்டு விழுந்து , பின் எழுந்ததுமே சீறிப்பறந்து சென்று மீண்டும் பிணைந்துகொண்டன. விலகி தலைகளால் அறைந்து உடல்களால் மோதி துடிதுடித்து மீண்டும் பற்றிக்கொண்டன.
மாலையிறங்கிக்கொண்டிருந்தது. தென்சரிவில் இருண்ட இருமேகங்களாக ராகுவும் கேதுவும் தோன்றி நெடுமூச்சுடன் நோக்கி நின்றனர். மேற்குச்சரிவில் பொன்னொளிர் கவசத்துடன் தேவசேனாபதி தன் காவலர்களின் போரை நோக்கினான். நாற்றிசை தேவர்களும் கைகளைக் கட்டிக்கொண்டு விழியிமைக்காமல் நோக்கினர். குளிர்ந்த அந்திக்காற்று மேற்கிலிருந்து ஏரியலைகள்மேல் தவழ்ந்து பாசிமணத்துடன் வீசிக் கடந்துசென்று வடக்குக்கோட்டையைத் தாண்டி புராணகங்கையின் மரக்கூட்டங்களை உலையச்செய்தது.
இருபக்கமும் மாறிமாறி தூக்கி வீசப்பட்ட நான்கு பெருநாகங்களும் புழுதியில் ஈரத்துடன் நெளிந்து புரண்டன. “என் தசைகள் தளர்ந்துவிட்டன மூத்தவரே” என்றான் மகாஜயன். “இக்கணத்தில் அவை சிதைந்தழியுமென்றால் அதுவே இறுதி விடுதலை. எழுக!” என்று சொல்லி ஜயன் ஓங்கி மண்ணை அறைந்து எழுந்தான். “இனி என்னால் முடியாது மூத்தவரே” என்றான் ராகு. “இதோ, விண்ணக மூதாதையருக்கு நாம் கடன்தீர்க்கும் கணம் இது… எழுக!” என்று சொல்லி தலைசொடுக்கி நிலத்தைக் கொத்தி எழுந்தான் கேது.
இடத்தொடையை ஓங்கியறைந்து வளைந்தெழுந்து வாய்திறந்து சீறிப்பாய்ந்தான் ராகு. அவன் உடலைக் கவ்வி வளைத்து இறுக்கிக்கொண்டான் மகாஜயன். கேதுவும் ஜயனும் மாறி மாறி அறைந்துகொண்டனர். உடல்பிணைத்து இறுகி முடிச்சாகி மேலுமிறுகி ஓருடலாகி ஒற்றைத் தசைக்கோளமென புழுதியில் உருண்டனர். கொப்பளிக்கும் புழுதியென துள்ளிச்சுழன்றனர். மெல்லமெல்ல முறுகி முறுகி வந்த முடிச்சு இறுதிக்கணத்தில் அசைவிழந்தது. கணங்கள் நீடித்தன. அத்தனை நாகங்களும் தொய்ந்து உடலில் தொங்கின. அசைவற்ற குளத்து மீன்கூட்டங்களென விழிகள் நிலைத்தன.
நாகச்சுருளில் குடிகொண்ட அசைவின்மை சென்றுகொண்டே இருந்தது. கிருபர் வானை நோக்கினார். சூரியனின் உருகிய மேல்வட்டம் தொடுவான்வில்லின் கீழிறங்கி மறைந்ததும் கைகளைத் தூக்கி ‘ஜயவிஜயீபவ!’ என்று கூவினார். நடந்து வந்து கீழே கிடந்த மைந்தர்களின் கைநுனிகளைப்பற்றி எதிர்த்திசையில் வளைத்து கால்களால் அவர்களின் புயங்களை மிதித்து நொடியில் விலக்கி பிரித்து அகற்றி வீசினார். “போர் முடிந்தது!” என்று கூவினார்.
புழுதியில் கால்களையும் கைகளையும் பரப்பி சடலங்களென இருவரும் மல்லாந்து கிடந்தனர். கிருபர் “பேராற்றல்களின் மைந்தனாகிய அனுமனை வாழ்த்துக! இத்தருணத்தில் அவன் அருள் இருமைந்தர்கள் மேலும் பொழிவதாக” என்றார். ‘வாழ்க! வாழ்க!’ என ஒலித்தது கூட்டம். கைத்திரள்கள் மேலெழுந்து அசைந்தன. துச்சாதனன் ஓடிச்சென்று தன் தமையன் அருகே அமர்ந்து அவன் தோள்களைப் பற்றிக்கொண்டான்.
தம்பியின் கைகளைப்பிடித்து மெல்ல உடலைத் தூக்கி இடதுமுழங்காலை மடித்து மண்ணில் ஊன்றி மறுகையை தரையில் ஊன்றி உடலைத் தாங்கி வியர்வை ஊறிச் சொட்டிய குழல்கற்றைகள் முகம் மறைத்துத் தொங்க துரியோதனன் அமர்ந்திருந்தான். பின்னர் இடக்கையையும் மண்ணில் ஊன்றி வலக்காலையும் மடித்து எழுந்துகொண்டான். சற்று தள்ளாடியபின் கால்களை விலக்கி வைத்து நின்று இடையில் கையூன்றி கீழே கிடந்த பீமனைப் பார்த்தான்.
பீமனுக்கு அருகே தருமன் சென்று “மந்தா… மந்தா” என்று குனிந்து அழைத்தான். பீமனின் உடலில் மெல்லிய அசைவு எழுந்தது. அவனுடைய வலதுகரம் மண்ணில் துழாவி அசைந்தெழுந்து மார்பின்மேல் படிந்தது. இரு உள்ளங்கால்களும் மெல்ல அசைந்தன. துரியோதனன் தன் குழல்கற்றைகளை பட்டுச்சரடால் கூட்டிக்கட்டியபடி அவனருகே சென்று குனிந்து கைகளை நீட்டி “தம்பி எழுக!” என்றான்.
பீமன் தன் கையை நீட்டியதும் துரியோதனன் கைகள் அதைப்பற்றிக்கொண்டன. ‘குருகுலம் வாழ்க! ஹஸ்தியின் நகர் வாழ்க!’ என்று கூடிநின்ற வீரர்கள் பேரொலி எழுப்பினர். பீமனை தன் கனத்த கைகளால் தூக்கினான் துரியோதனன். பீமன் சற்று தள்ளாடி இன்னொரு கையால் துரியோதனன் தோள்களைப்பற்றிக்கொண்டு நிலைப்படுத்திக்கொண்டான். ஒரு கணம் அவன் விழிகளை நோக்கிய துரியோதனன் அவனை அப்படியே அள்ளி தன் மார்புடன் அணைத்துக்கொண்டான். “நீ என் முதல் தம்பி. எவருக்காகவேனும் உயிர்கொடுப்பேனென்றால் அது உனக்காக!” என்றான்.
இருவரும் ஒருவர் இதயத்தை ஒருவர் கேட்டபடி தழுவிக்கொண்டு நின்றனர். துரியோதனன் பெருமூச்சுடன் விலகி பீமனின் இரு தோள்களிலும் கையை வைத்து “என் அகத்தை முழுதும் நிறைப்பவன் நீ மட்டுமே தம்பி. உன்னை நான் பார்த்திருக்கிறேன். கைகோர்த்திருக்கிறேன்” என்றான். “என் கனவில். ஒரு காட்டுயானையாக வந்து என் துதிக்கையை நீட்டி உன் தோள்களைத் தொட்டேன்.” பீமன் திகைப்புடன் “ஆம்… நானும்” என்றான். துரியோதனன் “கனவிலா?” என்றான். பீமன் “ஆம். ஒரு சதுப்பில் வேங்கைமரத்தடியில் நான் நின்றிருந்தேன். நீங்கள் என்னை நோக்கி கைகளை நீட்டியபடி வருவதைக் கண்டேன். அப்போதுதான் நான் ஒரு யானை என்று அறிந்தேன்” என்றான்.
“மைந்தர்களே, இறப்பே நிகழுமென்றாலும் போர் ஓர் விளையாட்டு. ஏனெனில் வாழ்க்கை இன்னொரு விளையாட்டு. இப்புடவியோ பெருவிளையாட்டு” என்றார் கிருபர். “ஆடலுக்கதிபனையும் அறிதுயிலனையும் அன்னையையும் வணங்கி நீராடச்செல்லுங்கள்!” இருவரும் அங்கே சிறுகற்களாக பதிட்டைசெய்யப்பட்டிருந்த இறையுருவங்களை வணங்கி மேற்கே ஏரி நோக்கிச் சென்றனர்.
பிறிதொருவர் புகமுடியாத தனியுலகில் தோள்தழுவி அகம்தழுவி அவர்கள் பேசிக்கொண்டு நடந்தனர். அக்கணம் அனைத்துச் சொற்களையும் கண்டடைந்தவர்கள்போல பேசிக்கொண்டே இருந்தனர். இனியொருபோதுமில்லை என்பதுபோல உரக்கச் சிரித்தனர். ஒவ்வொரு கூற்றுக்கும் நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் கிளர்ந்தெழுந்து பீமனைத் தழுவிக்கொண்டான் துரியோதனன். பின் கண்ணீருடன் தாழ்ந்த குரலில் “உன்னை ஒரு கலமென உணர்கிறேன் தம்பி. என் ஆன்மாவை முற்றிலும் உன்னில் பெய்துவிட விழைகிறேன்” என்றான்.
நான்கு நாகங்களும் ஐயத்துடன், சினத்துடன் ஒன்றை ஒன்று உணர்ந்தன. மெல்லத் தலைதூக்கி கேதுவை முகர்ந்த ஜயன் “இன்னொரு களம் வரும்…” என்றான். “அந்த இரண்டாவது களமே இறுதியானது…” கேது மெல்ல உடல்முறுக்கி நெளிந்து பதில் சொன்னான். “ஆம், அதுவே உண்மையான களம். இது வெறும் தொடக்கம்தான்.” மகாஜயனை மெல்லத் தொட்டான் ராகு. அவன் சீறி எழுந்து நெளிந்து விலகிக்கொண்டான். “இறுதிக்களத்துக்காக ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறேன்” என்றான் மகாஜயன்.