வண்ணக்கடல் - 58
பகுதி எட்டு : கதிரெழுநகர்
[10 ]
இறந்த நாரையை தூக்கிக்கொண்டு கர்ணன் நடக்க அர்ஜுனன் பின்னால் சென்றான். மலைச்சரிவில் அதை ஒரு பாறைமேல் வைத்துவிட்டு கர்ணன் கைகளைக்கூப்பி சரமமந்திரத்தைச் சொன்னான் “இந்த உடலுக்குரிய ஆன்மாவே, என் செயலைப் பொறுத்தருள்க. இக்கொலையினால் நான் அடையும் பாவத்தை அறத்துக்காக நான் இயற்றும் நற்செயல்களால் மும்மடங்கு ஈடுகட்டுகிறேன். என் அம்புகளுக்குக் கூர்மையும் என் விழிகளுக்கு ஒளியும் என் நெஞ்சுக்கு உறுதியுமாக உன் அருள் என்னைச் சூழ்வதாக. ஆம், அவ்வாறே ஆகுக!” பறவையைத் தொட்டு வணங்கிவிட்டு அவன் மெல்ல பின்னகர்ந்து வந்து நின்றான்.
அர்ஜுனன் மெல்லியகுரலில் “உன்திறனை ஏற்கிறேன், அதை சிலநாட்களிலேயே நான் கடந்தும் செல்வேன்” என்றான். “ஆனால் நீ என் குருநாதருக்கு பாதசேவை செய்வதை ஏற்கமாட்டேன். இனி உன் கரங்கள் அவர் பாதங்களைத் தொடுமென்றால் அதை வெட்டி எறிவேன்” என்றான். கர்ணன் திரும்பி அவனை நோக்கி “அதை நீங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும். அவரது ஆணையை நான் மறுக்க முடியாது” என்றான். அர்ஜுனன் உரக்க “அவர் அருகே நீ வரலாகாது. அவர் ஆணையிடும் இடத்தில் நீ இருக்கலாகாது” என்றான். கர்ணன் திடமாக “இளவரசே, நான் இங்கே அவரிடம் மாணவனாக இருக்கிறேன். அவரது சொற்களை கேட்குமிடத்திலேயே நான் இருக்கமுடியும்” என்றான்.
அர்ஜுனன் திரும்பி கண்களில் நீருடன் முகம் சுழித்து பற்கள் தெரிய “சூதா, நீசப்பதரே, இனி நீ குருநாதரின் அருகே வந்தால் உன்னை அங்கேயே கொல்வேன்…” என்றான். “ஆம், அதைச் செய்ய நீங்கள் முயலலாம்” என்று மெல்லிய ஏளனப்புன்னகையுடன் கர்ணன் சொன்னான். “நீ சூதன்… உன்னை என் படைகளைக்கொண்டு கட்டி இழுத்துச்சென்று கழுவிலேற்றுவேன்… இக்கணமே அதைச்செய்ய என்னால் முடியும்” என்றான் அர்ஜுனன். “ஆம், முடியும் இளவரசே. அதற்கான காரணத்தையும் உங்களால் குருநாதரிடம் சொல்லமுடியும்” என்றான் கர்ணன். “ஆனால், அப்படியொரு பொய்யைச் சொன்னபின்னர் உங்கள் அம்பில் அறம் திகழுமென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்!”
என்னசெய்வதென்றறியாமல் அர்ஜுனன் உடல் தவித்து பின்பு கால்களைத் தூக்கிவைத்து திரும்பி விலகிச்சென்றான். சற்று நடந்தபின் திரும்பி வெறியுடன் “மூடா, உன்னைக்கொல்ல எனக்குக் காரணம் தேவை. ஆனால் உன் தந்தையைக் கழுவிலேற்றலாம். அதற்கான காரணத்தை அவனே ஒவ்வொருநாளும் உருவாக்கிக்கொள்வான்” என்றான். கர்ணன் உடலெங்கும் அதிர்ந்தெழுந்த கடும் சினத்துடன் தன் வில்லை எடுத்தபோது அதன் நாண் அதிர்ந்தது. உரத்தகுரலில் “பேடியின் மகனே, என் அன்னைக்கோ தந்தைக்கோ சிறு தீங்கிழைக்கப்பட்டால்கூட இந்த குருகுலமுற்றத்தில் உன் தலையை வெட்டி வீழ்த்தி என் காலால் உருட்டுவேன்” என்றான்.
தன்னிலையிழந்த அர்ஜுனன் குனிந்து தன் மரப்பாதுகையை எடுத்து கர்ணன் மேல் வீசினான். “சீ, விலகு இழிமகனே. நீயா என்னுடன் வில்கோர்ப்பது?” என்றான். தன்னருகே வந்த பாதுகையை விலகித் தவிர்த்துவிட்டு கர்ணன் பற்களைக் கடித்து கைநீட்டி “ஆம் நான்தான். நான் கர்ணன். சூதன்மகன். நான் உன்னை அறைகூவுகிறேன். நீ ஆண்மகன் என்றால் வந்து என்னுடன் வில்முகம் கொள். நீ தோற்றாயென்றால் இதோ நீ வீசிய இந்தப் பாதுகையை உன் தலையில் ஏந்தி என்னிடம் பொறுத்தருளக் கோர வேண்டும்… இல்லையேல் நீ பேடியின் மைந்தன் மட்டுமல்ல, பேடியும்கூட” என்றான்.
அர்ஜுனன் சிலகணங்கள் அசையாமல் நோக்கி நின்றான். அவன் விழிகளைக் கண்ட கர்ணன் அவ்வெறுப்பின் வெம்மையைக் கண்டு ஒரு கணம் அஞ்சினான். அது அவனைப்பற்றிய அச்சமல்ல என்றும் மானுட உள்ளத்தில் வெறுப்பெனக் குடியேறும் அந்த மாபெரும் தெய்வத்தைப்பற்றிய அச்சம் என்றும் மறுகணம் அறிந்தான். “உன் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். உன்னைக் கொல்லாமல் அல்லது சாகாமல் இத்தருணத்தை என்னால் கடக்கமுடியாது” என்றான் அர்ஜுனன். “நீ வந்த நாள்முதல் நான் ஒருபோதும் முழுமையாகத் துயின்றதில்லை. எண்ணக்கொதிப்பின்றி தனிமையில் அமர்ந்ததுமில்லை. இன்றே அந்தப் பெருவதை முடிவுக்கு வரட்டும்!”
“இடம்?” என்றான் கர்ணன். “இதே இடம். மதியம் குருநாதர் துயின்றபின்னர்” என்றான் அர்ஜுனன். “ஆம், அறிக தெய்வங்கள்” என்றான் கர்ணன். இருவரும் அச்சொற்களைக் கேட்டதுமே ஒரு மெல்லிய சிலிர்ப்பை அடைந்தனர். தெய்வங்கள் அறிகின்றனவா? மாபெரும் அடிமரங்களென மண்ணில் காலூன்றி தலைக்குமேல் ஓங்கி மேகங்களில் தலையுரச தெய்வங்கள் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றனவா? அவற்றின் பார்வைக்கு முன் இரு சிற்றுயிர்களென அவர்கள் களமாடுகிறார்களா என்ன?
அதை அச்சமென்று சொல்வதா என்று கர்ணன் மீண்டும் மீண்டும் சிந்தித்தான். அச்சமில்லை. அச்சமென்றால் இறப்புக்கு, அவமதிப்புக்கு, இழப்புக்கு அஞ்சவேண்டும். இல்லை, இதுவும் அச்சம்தான். ஆனால் ஏனென்றறியாத அச்சம். இருத்தலின் அடியிலா ஆழத்தைக் காண்கையில், இன்மையின் முடிவிலியை எதிர்கொள்கையில், சிந்தனை காலப் பெருவெறுமையைச் சென்று முட்டுகையில், தனிமையில் உருவாகும் அச்சம். உயிரென்பதால், மானுடனென்பதால் எழும் அச்சம். தன் சின்னஞ்சிறுமையை உணரும்போது எழும் உணர்வு.
அந்த அச்சத்திலிருந்து விடுபட்டதும் அங்கே சொன்ன சொற்களில் வந்து விழுந்தது சித்தம். ஒவ்வொரு சொல்லும் அனல்கோளமென அவன் மேல் வந்து விழுந்து அகம்பதறச்செய்தது. அக்கணமே வில்லுடன் எழுந்து அவன் தலையை வெட்டி உருட்டவேண்டுமென்று வெறியூட்டியது. அவற்றிலிருந்து எண்ணத்தை விலக்கும்தோறும் அவற்றை நோக்கியே சென்று விழுந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அந்த வலி கூடிக்கூடி வந்தது. ஒரு கட்டத்தில் அந்த வலியை விரும்பியே அகம் அங்கே சென்றுகொண்டிருக்கிறதா என்று எண்ணினான். வதைகளைப்போல ஈர்ப்பு மிக்க வேறேதுமில்லை. துன்பத்தை சுவைக்கும் ஏதோ ஒரு புலன் உயிர்களின் அகத்தில் குடியிருக்கிறது. நக்கிநக்கி புண்ணை விரிவாக்கிக்கொள்கிறது விலங்கு. அனலை நாடியே சென்று விழுகின்றன பூச்சிகள்.
கண்களை மூடி அமர்ந்திருக்கையில் தசையும் எலும்பும் வலிகொண்டு தெறிப்பதைப்போலவே அகமும் வலிப்பதை அறியமுடிந்தது. பற்களைக் கடித்து கைகளை முட்டிபிடித்து இறுக்கி அவ்வலியை அறிந்தான். வலியை உயிர்கள் விழைகின்றன. மானுடமே வலியை விரும்புகிறது. ஏனென்றால் வலி அகத்தையும் புறத்தையும் குவியச்செய்கிறது. சிதறிப்பரந்துசெல்லும் அனைத்தையும் தன்னை மையம் கொள்ளச்செய்கிறது. வலிகொண்டவன் பொருளின்மையை உணரமுடியாது. வெட்டவெளியில் திகைக்கமுடியாது. வெறுமையில் விழமுடியாது. அவனுக்குத் தனிமையில்லை. வலி பொருளும் மையமும் சாரமும் அருளுமாக அவனுடன் இருந்துகொண்டிருக்கும். வலியை வாழ்த்துகிறேன். வலியாகி வந்திருக்கும் இந்த வஞ்சப்பெருந்தெய்வத்தை வணங்குகிறேன்…
வலியின் ஒரு கட்டத்தில் அதை உதறி திமிறிமேலெழுந்து மூச்சிழுக்கையில் வரவிருக்கும் அக்கணம் ஓங்கி நிற்கக் கண்டான். அந்த அச்சத்தை சிலந்திவலையில் விழுந்த இரும்புக்குண்டு போல உணர்ந்தான். இதோ, இன்னும் சற்றுநேரத்தில். அவ்வச்சத்தை சிலகணங்களுக்குமேல் எதிர்கொள்ளமுடியாது. உடனே திரும்பி அந்த வலியை நோக்கிச் சென்றான். வலியில் மூழ்கி நீந்தித் திளைத்து, வலியை பீடமாக்கி அமர்ந்து தவம்செய்து, வலியின் பெரும்பாறையைச் சுமந்து நசுங்கி, வலியின்றி பிறிதொன்றிலாதாகி, வலி வலி வலி என்னும் சொல்லேயாகி, வலித்தமர்ந்து எழுந்து விழிசிவந்து உலகை நோக்கினான். சொற்களைப்போல கூரியவை எவை? கருணையின்மையின் அக்கொடூரத்தெய்வம் சொற்களில் மட்டுமே அமரக்கூடியது….
அன்று பகலெல்லாம் கடும் வெம்மையும் புழுக்கமும் இருந்தது. உடல்கள் உருகி வழிவதுபோல வியர்வை வழிந்தது. துரோணர் முன்னதாகவே வகுப்பை முடித்துக்கொண்டு படுத்துக்கொள்ள அர்ஜுனன் மயிலிறகு விசிறியால் விசிறினான். துரோணர் துயிலத்தொடங்கியதும் திரும்பி கர்ணனின் விழிகளை ஒருகணம் நோக்கிவிட்டு எழுந்து தன் வில்லை மெல்ல எடுத்துக்கொண்டு விலகிச்சென்றான். சிலகணங்கள் கழித்து கர்ணன் தன் வில்லை எடுத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்தான். காட்டில் இருந்து குருகுலம் நோக்கிச் சரிந்துவந்த மண்ணில் அவர்கள் ஏறிச்சென்றனர். சிலகணங்களுக்குப்பின் கர்ணன் வியப்பூட்டும் உண்மையொன்றை அறிந்தான். அந்த அச்சமும் வலியும் முற்றிலும் விலகிச்சென்றுவிட்டிருந்தன. இனிய எதிர்பார்ப்பு ஒன்று மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. அவன் எதிர்கொள்ளப்போகும் முதல் எதிரி. அவன் செய்யப்போகும் முதல்போர்…
அவர்கள் மீண்டும் அந்த மலைச்சரிவுக்கு வந்து நின்றனர். கீழே ஓடிக்கொண்டிருந்த எட்டு ஓடைகளில் நீர் மதியவெயிலில் வெண்தழல்களாக நெளிந்தது. வானில் பறவைகள் எவையும் பறக்கவில்லை, ஆனால் அப்பால் மரக்கூட்டங்களில் அவை வழக்கத்துக்கு மாறாகக் கலைந்து எழுந்து அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தன. காற்று நீராவியால் கனத்து அசைவின்றி இருந்தது. அர்ஜுனன் தன் மான்தோல் மேலாடையைக் கழற்றி கீழே வீசினான். இடைக்கச்சையை இறுகக் கட்டிக் கொண்டு கூந்தலை தோல்பட்டையால் சுற்றிக்கொண்டான். அச்செயல்கள்மூலம் அவன் தனக்குள் உறுதியை நிறைத்துக்கொள்வதாக கர்ணன் எண்ணினான். அவனுக்கும் முதல்போர் அதுவாக இருக்கும், அவனுடைய முதல் எதிரி.
அர்ஜுனனுடைய அசைவுகளை கூர்ந்து நோக்கிக்கொண்டு கால்பரப்பி நின்றிருந்த கர்ணன் விந்தையான ஓர் உணர்வை அடைந்தான். எதிரில் நின்றிருப்பதும் அவனே. அக்கரிய தோள்கள், இறுகிய சிறு வயிறு, சிறுமயிர்க்கற்றை பரவிய நடுமார்பு. தன்னுள் எழுந்த புன்னகையை உணர்ந்ததுமே அவனுள் அக்கணம் வரை இருந்த பரபரப்பும் அகன்றது. மறுகணம் பெரும் வெறுமை ஒன்றை உணர்ந்தான். களத்தைக் காண சித்தம்பெற்ற சதுரங்கக் காயின் வெறுமை. சூழ்ந்து நின்றிருக்கும் தெய்வங்கள் எவை? பசுமைகொண்ட மண்ணாக, சுழன்றுசெல்லும் காற்றாக, ஒலிக்கும் நீராக, பறவைக்குரலாக, மேகக்குவைகளாக அவர்கள் நோக்கிக்கொண்டிருந்தனர்.
அர்ஜுனன் தன் வில்லை எடுத்துக்கொண்டு வந்து களத்தில் நிற்க எதிரே கர்ணன் நின்றான். இருவரும் கால்களைச் சற்று வளைத்து ஸ்வஸ்திகம் செய்து மண் தொட்டு வணங்கி பின்னகர்ந்தபோது கர்ணனின் பின்பக்கத்திலிருந்து குளிர்ந்த காற்று வந்து அவர்களின் குழல்களையும் கச்சை நுனிகளையும் அசைத்தபடி கடந்துசென்றது. அர்ஜுனன் கொக்கு போல இயல்பாகக் காலெடுத்துவைத்து பின்னகர்ந்தான். கால்முனைகளை ஊன்றி முட்டுகளை இறுக்கி வைசாகத்தில் அர்ஜுனன் நிற்க கர்ணன் அவன் விழிகளை நோக்கியபடி தன் கால்களை அன்னப்பறவைபோல அகற்றி மண்டலத்தில் நின்றான். இருவர் விழிகளும் ஒன்றுடனொன்று பின்னிக்கொண்டன, இரு ஆன்மாக்களும் ஒன்றைஒன்று ஆழத்தில் தொட்டுக்கொண்டன. அர்ஜுனன் வில் நாணேறிய ஒலியைக் கேட்டதுமே கர்ணனின் வில் நாணேற்றிக்கொண்டது.
கர்ணன் அர்ஜுனனின் பாதங்களின் ஒழுங்கையும் அவன் தோள்களின் இறுக்கத்தையும் நோக்கியபடி மெல்ல காலெடுத்துவைத்து சுற்றிவந்தான். அவர்களைச் சூழ்ந்திருந்த ஒளியின் நிறம் மாறியது. அர்ஜுனனின் அம்புநுனியில் மின்னிய வெண்சுடர் பொன்னிறமாயிற்று. அவன் கூந்தல்பிசிறுகள் செந்நிறக் கொடித்தளிர்ச் சுருள்களாக மாறின. அர்ஜுனன் தன் கைத்தசை ஒன்றை அசைக்க எண்ணிய அக்கணமே அதை அறிந்த கர்ணன் கைத்தசையும் அசைய இரு வில்களும் பொறுமையிழந்து அசைந்துகொண்டன. அலையடித்த குளிர்காற்றில் சிறிய ஒளிப்பிசிறுகளாக விழுந்தது புல்விதைகள் என கர்ணன் முதலில் எண்ணினான். அவை உடல்முடிகளின்மீது ஒளித்துகள்களாக அமைந்தபோதுதான் மழை என உணர்ந்தான்.
மிக அப்பால் வானம் உறுமியது. அந்த எதிரொலி எங்கெங்கோ ஒலித்து ஒலித்து அடங்க மிக அருகே உரத்த ஓசையுடன் இடி எழுந்தது. தன் தலைக்குப்பின்னால் சூரியன் இருந்தமையால் அர்ஜுனனின் தலைக்குப்பின்னால் வானவில் ஒன்று எழுவதை கர்ணன் கண்டான். இருவரும் அக்கணத்தின் இருபக்கங்களிலாக மிகமெல்ல நடனமிட்டனர். ஒருவரை ஒருவர் நிரப்பி, ஒருவரை ஒருவர் பெருக்கி. பகையற்ற, வஞ்சங்களற்ற, சொற்களற்ற, இருப்பேயற்ற ஒரு கணம். விம்மலோசையுடன் வந்த அர்ஜுனனின் அம்பை உடலைத்திருப்பி தவிர்த்தகணம் கர்ணனின் அம்பு சென்று அர்ஜுனனை கொடியென வளையச்செய்தது. அக்கணம் உடைந்து நூறுநூறாயிரம் கணங்களாக, யுகங்களாக சிதறிப்பரவியது.
விம்மிக்கொண்டே இருந்த விற்களில் இருந்து எழுந்த அம்புகள் இருவரையும் கடந்துசென்று மண்ணில் ஊன்றி அதிர்ந்தன. ஒவ்வொரு அம்பும் ஒரு சொல்லாக இருந்தது. வஞ்சமென, பகையென, காழ்ப்பென, பொறாமையென சொல்சுமந்த அம்புகள் அனைத்தும் சென்று முடிந்தபின் பொருளின் சுமையற்ற அம்புகள் ஒலியற்ற சொற்களென பறந்துகொண்டிருந்தன. ஊடும் பாவுமென ஓடும் தறிபோல அவர்களை இணைத்து ஒரு படலமென அவை வெளியை நிறைத்தன. ஒவ்வொரு அம்பும் இன்னொருவர் சித்தத்தை அடைந்தது. சித்தத்தைச் சுமந்தெழுந்து பறந்தது. பின் அவர்கள் நடுவே அம்புப்படலமாக அவர்களின் சித்தம் பருவடிவுகொண்டிருந்தது. அதற்கு இருபக்கமும் யாருடையதோ என இரு தனியுடல்கள் நடனமிட்டுக்கொண்டிருந்தன.
அந்தக் களிமயக்கில் அவர்கள் காலத்தை மறந்தனர். அம்புமேல் அம்பாக, சொல்மேல் சொல்லாக அவர்களறிந்த ஞானமெல்லாம் எழுந்து திகழும் தருணம். உடலால் ஆளப்பட்ட வில் உடலை ஆளும் தருணம். இதுவதுவுதுவென விரிந்த வெளி முழுக்கச் சுருங்கி இறுகி அவர்களைச் சூழ்ந்து அதிரும் வேளை. வாழ்வும் இறப்பும் விழைவும் துறப்பும் வெற்றியும் வீழ்ச்சியும் என அறிந்த ஒவ்வொன்றும் பொருளிழந்து வெளித்த வெளியில் இருவர் மட்டும் நின்று ஒருவரை ஒருவர் முடிவிலாது நோக்கிக்கொண்டிருந்தனர்.
பீமனின் குரல் வெடித்தெழுவது வரை அவர்கள் அவன் வருவதை அறியவில்லை. “பார்த்தா, நிறுத்து… நிறுத்து சூதா!” என்று கூவியபடி மேடேறிவந்த பீமன் தன் கீழே கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து வீச அதை சுழன்று தவிர்த்த கர்ணனை நோக்கி ஓடிவந்து அதே விசையால் ஓங்கி அறைந்து வீழ்த்தினான் பீமன். முழங்கும் குரலில் வெறுப்பில் சுருங்கிய முகத்துடன் “நீசப்பிறவியே, உன்னை நான் எச்சரித்தேன். ஷத்ரியரிடம் வில்கோர்க்கும் தகுதி உனக்கெப்படி வந்தது?” என்றான். தன் வில்லை எடுத்தபடி எழுந்த கர்ணன் “தன்னை அறைகூவும் எவருடனும் மானுடன் போரிடலாமென்பது நெறி, மூடா!” என்றான்.
“இழிமகனே, உன்னிடம் நெறிநூலை விவாதிக்கவேண்டுமா நான்? போ, சென்று குதிரைநெறி கற்றுக்கொள்… போடா!” என்று கையை ஓங்கியபடி பீமன் முன்னால் வந்தான். அர்ஜுனன் “மூத்தவரே, அவனை அறைகூவியவன் நான்” என்றான். சினந்து திரும்பி “வாயை மூடு மூடா. சூதனை எதற்கு போருக்கு அறைகூவுகிறாய்? அவன்மேல் உனக்கு சினமிருந்தால் கழுவிலேற்ற ஆணையிடு… அவன் குலத்தையே கருவறுக்கச் சொல். சூதனிடம் வில்கோர்க்கவா நீ வில்வேதம் கற்றாய்?” என்றான். அர்ஜுனன் மேலும் ஏதோ சொல்ல வர “பேசாதே, இன்னொரு சொல் பேசினால் உன் தலையை பிளப்பேன்” என்று பீமன் கூவினான்.
கர்ணன் தன் வில்லை எடுப்பதற்குள் “நில்லுங்கள்!”’ என துரோணரின் குரல் கேட்டது. சரிவில் அஸ்வத்தாமன் மேலேறி ஓடிவந்தான். “நிறுத்துங்கள்… குருநாதரின் ஆணை” என்றான். அவனுக்குப்பின்னால் துரோணரும் கௌரவர்களும் ஓடிவந்தனர். துரோணர் “வில்லை கீழே போடுங்கள். இது யாருடைய போர்? யார் அறைகூவியது?” என்றார். அர்ஜுனன் “நான் அறைகூவினேன் குருநாதரே, இவ்விழிமகன் உங்கள் மாணவனாக அமைய நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றான். விழிகள் கரைய இடறிய குரலில் “எனக்கு நிகராக இவனும் தங்கள் பாதம் தீண்டுவதைப் பார்ப்பதை விட உயிர்துறக்கவே விழைவேன்” என்றான். அவன் விழிகளைக் கண்ட துரோணர் ஏதோ சொல்லவருவதுபோல கர்ணனை நோக்கினார்.
கர்ணன் திடமான குரலில் “இளையபாண்டவரே, இதோ என் வில். இவ்வில்லால் நான் உங்கள் ஷத்ரியகுலத்தையே அறைகூவுகிறேன். சூதனாகிய நான் வில்லேந்தி உன் நாட்டை கைப்பற்றுகிறேன். என்னை ஷத்ரியன் என்று அறிவிக்கிறேன். முடிந்தால் நீயும் உன் தம்பியரும் என்னை எதிர்கொள்ளுங்கள்… என்னை கொல்லமுடிந்தால் கொல்லுங்கள்” என்று சொல்லி தன் வில்நாணை அடித்து விம்மலோசையை எழுப்பினான். “கையில் வில்லேந்தக் கற்றவன் அதை ஏந்தும் தகுதிகொண்டவன் என்பதே பிரஹஸ்பதி ஸ்மிருதி சொல்லும் நெறி. அது பொய் என்றால் குருநாதர் சொல்லட்டும்.”
அனைவர் கண்களும் துரோணரை நோக்க அவர் “ஆம், பிரஹஸ்பதி ஸ்மிருதியின் ஆணை அதுவே” என்றார். கௌரவர்கள் உரக்க ‘ஆகா’ என குரலெழுப்பினர். பீமன் உதடுகள் ஏளனமாக வளைந்தன. “ஆம், அப்படி ஒரு நெறி உள்ளது. குலசேகரனாகிய எவனும் வில்லேந்தி மண்கொள்ளமுடியும். மண்ணைக் காக்கமுடிந்தால் அவன் ஷத்ரியனே” என்றான். “ஆனால் முதல் விதி அவன் குலமுடையவனாக இருக்கவேண்டும். குலமிலிக்கு எவ்வுரிமையும் இல்லை. சொல் உன் குலமென்ன?” கர்ணன் “நான் சூதர்குலத்தைச் சேர்ந்தவன். அதிரதனின் மைந்தன்” என்றான்.
“அவ்வண்ணமென்றால் இதோ ஓடும் நீரைத் தொட்டுச் சொல், உன் தந்தை அதிரதன் என்று. நீர் உனக்குச் சான்றுரைக்கட்டும்” என்றான் பீமன். கர்ணன் கையில் எழுந்து நின்ற வில் தாழ்ந்தது. கால்கள் பதற அவன் துரோணரை நோக்கினான். அவன் உலர்ந்த உதடுகள் மெல்லப்பிரியும் ஒலி அனைவருக்கும் கேட்டது. “சொல், நீரைத்தொட்டுச் சொல். உன் தந்தை சூதனாகிய அதிரதனே என்று” என்று கூவினான் பீமன். கர்ணன் தன் கால்கள் மண்ணில் வேரூன்றியது போல நின்றான். “இல்லை என்றால் உன் குலம் என்ன? உன் தந்தை யார்?” என்றான் பீமன். அதே சினத்துடன் திரும்பி “குருநாதரே, ஒரு குலமிலிக்கு வில்வேதம் கற்பிக்க உங்கள் நெறிகள் ஒப்புகின்றனவா?” என்றான். துரோணர் விழிகளைத் தாழ்த்தி நின்றார்.
“கீழ்மகனே, உன் தந்தையின் பெயரைச்சொல்லி வில்லை எடு…” என்று பீமன் மீண்டும் சொன்னதும் கர்ணன் தோள்கள் தளர்ந்தன. விழப்போகிறவன் போல மெல்லிய அசைவொன்று அவன் உடலில் கூடியது. திரும்பிச்செல்வதுபோல ஓர் அசைவு துரோணர் உடலில் எழுந்தது. மறுகணம் அவர் திரும்பி கர்ணனை நோக்கி கைநீட்டி “இனியும் ஏன் இங்கே நிற்கிறாய்? மூடா, போ! சென்று சிதையேறு! இந்த இழிபிறவியை எரித்தழித்து விண்ணடை… இதற்குமேல் என்ன வேண்டுமென இங்கே நிற்கிறாய்? இதைவிட வேறென்ன கிடைக்குமென எண்ணினாய்?” என்று கூவினார். அவரது நீட்டிய கை பதறியது. “நீ உன்னை ஆக்கிய தெய்வங்களாலேயே இழிவுசெய்யப்பட்டவன். உன்னை இழிவுசெய்து அவர்கள் தங்களை இழிமகன்களாக்கிக் கொண்டார்கள். சென்று நெருப்பில்குளி… போ!” என்று கூவியபின் திரும்பி சரிவில் ஓடுபவர் போல இறங்கிச் சென்றார். அஸ்வத்தாமன் அவருக்குப்பின்னால் ஓடினான்.
வில்லை கீழே போட்டுவிட்டு கர்ணன் அங்கேயே நின்றான். பீமன் “அனைவரும் குருகுலத்துக்குச் செல்லுங்கள்” என்று கௌரவர்களை நோக்கி ஆணையிட்டான். அவர்கள் கர்ணனை நோக்கியபின் தலைகுனிந்து விலகி நடந்தனர். “பார்த்தா, வா” என்று அர்ஜுனன் தோளைப்பிடித்தான் பீமன். அர்ஜுனன் உடல் திமிறுவது போல அசைந்தது. “வா!” என்று அழுத்தமான மெல்லியகுரலில் அழைத்து அவனை தள்ளிக்கொண்டு சென்றான் பீமன்.
ஓவியம்: ஷண்முகவேல்
கர்ணனை நோக்கிவிட்டு தலைகுனிந்து சென்ற அர்ஜுனன் “அவன் இங்கே பயிலட்டும். அவனை நான் களத்தில் எதிர்கொள்கிறேன்” என்றான். “பேசாதே!” என்று பீமன் உறுமினான். “அவனை நான் அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “மூடா!” என்று அவனை ஓங்கி அறைந்தான் பீமன். மண்ணில் விழுந்து கன்னத்தைப்பற்றியபடி அர்ஜுனன் திகைத்து நோக்க “மூடா! மூடா !மூடா!” என்று பீமன் உடலே நரம்புகளால் இறுகப்பின்னப்பட்டிருக்க, பல்லைக் கடித்தபடி சொன்னான்.