திசைதேர் வெள்ளம் - 78

bowசுபாகு பாண்டவப் படையின் எல்லையை அடைந்து முதற்காவலரணின் முன் நின்றான். காவலர்தலைவன் வந்து அவனுடைய கணையாழியை வெறுமனே நோக்கிவிட்டு செல்லும்படி தலைவணங்கினான். அவனுக்கு தன் வருகை முன்னரே தெரிந்திருக்கிறது என சுபாகு உணர்ந்தான். படைகளின் நடுவே சென்றபோது தன் மேல் மொய்த்த விழிகளிலிருந்து அங்கிருந்த அனைவருக்குமே தன் வருகை தெரிந்துள்ளது என்று தெளிந்தான். அவர்கள் அவனை வெறுப்புடன் நோக்குவது போலிருந்தது. பின்னர் அது வெறுப்பல்ல, ஒவ்வாமையும் அல்ல, வெறும் வெறிப்பே என தோன்றியது. தங்களை மீறியவற்றின் முன் மானுடர் கொள்ளும் செயலின்மையின் விழிவெளிப்பாடு அது.

நான்காவது காவலரணில் அவனை திருஷ்டத்யும்னனிடம் அழைத்துச்சென்றார்கள். அவன் விற்கொடி பறந்த பாடிவீட்டின் முன் காத்து நின்றான். உள்ளிருந்து வந்த காவலன் நுழைவொப்புதல் அளித்ததும் உள்ளே சென்று அங்கே மான்தோலிட்ட பீடத்தில் அமர்ந்திருந்த திருஷ்டத்யும்னனை வணங்கி முகமனுரைத்தான். திருஷ்டத்யும்னன் முகத்தில் எவ்வுணர்வும் இருக்கவில்லை. தன் அகத்தை புறச்செயல்களைக்கொண்டு நன்கு வகுத்துக் கொள்பவர்களுக்குரிய தற்கட்டுப்பாட்டுடன், அசைவின்மையுடன் இருந்தான். “நான் பாண்டவ அரசர் யுதிஷ்டிரரை பார்க்கும்பொருட்டு அனுப்பப்பட்ட தூதன்” என்றான் சுபாகு.

“அவருக்கு செய்தி அளிக்கப்பட்டுள்ளது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நீங்கள் அவரை சந்திக்கலாம். உங்கள் செய்தி எம் படைகளையோ அவரையோ உளச்சோர்வுறுத்தும் பொருட்டு திட்டமிட்டதாக இல்லை என நினைக்கிறேன். அவ்வாறு திட்டமிடப்பட்டதாகத் தெரிந்தால் உம்மை நான் சிறைப்படுத்த நேரும்” என்றான் திருஷ்டத்யும்னன். “நீங்கள் உளச்சோர்வடைவதோ ஊக்கம்கொள்வதோ எங்களிடம் இல்லையே” என்று சுபாகு சொன்னான். “நான் செய்தியை சொல்வதற்கு மட்டுமே பணிக்கப்பட்ட தூதன்.” திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப் பின் “நன்று” என்று சொல்லி எழுந்துகொண்டு “நானும் உம்முடன் வருகிறேன்” என்றான்.

அவர்கள் யுதிஷ்டிரரின் தலைமையிடத்தை நோக்கி புரவிகளில் சென்றனர். பாண்டவப் படையினர் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். திருஷ்டத்யும்னன் பீஷ்மரின் உடல்நிலைகுறித்து கேட்பான் என அவன் நினைத்தான். ஆனால் மீசையை நீவியபடி புரவியின்மேல் திருஷ்டத்யும்னன் வெறுமனே அமர்ந்திருந்தான். சுபாகுவின் வருகையை அறிவித்து முரசுகள் முழங்கின. சுபாகு ஏதோ எண்ணிக்கொண்டு திரும்பி வடமேற்கே பார்த்தான். பீஷ்மரின் படுகளம் தனியாக அனல்செம்மையால் சூழப்பட்டு தெரிந்தது. அவன் திரும்பிப் பார்த்ததைக்கூட திருஷ்டத்யும்னன் நோக்கவில்லை.

யுதிஷ்டிரரின் பாடிவீட்டின் முகப்பில் யௌதேயன் காவல்பொறுப்பில் இருந்தான். அவன் தன் கணையாழியை அளித்ததும் அதை வாங்காமல் தலைவணங்கி “பிதாமகர் எவ்வண்ணம் இருக்கிறார், தந்தையே?” என்றான். சுபாகு முகம் மலர்ந்து “எஞ்சியிருக்கிறார். தன் இறப்பை தானே முடிவெடுக்கும் நிலையில்” என்றான். யௌதேயன் தலைவணங்கி “அவர் யோகி” என்றான். அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சதானீகன் “அவர் எங்களுக்கான செய்தி எதையேனும் சொன்னாரா?” என்றான். “என்ன செய்தி?” என்று சுபாகு கேட்டான். சதானீகனின் விழிகள் தழைந்தன.

யௌதேயன் “நேரடியாகவே சொல்லலாம். அவர் எங்கள் குலத்தின்மேல் தீச்சொல் என எதையேனும் விடுத்தாரா?” என்றான். “அவர் பெருந்தந்தை… தந்தையர் எந்நிலையிலும் மைந்தரை வாழ்த்துவதை மட்டுமே அறிந்தவர்கள்” என்றான் சுபாகு. யௌதேயன் விழிகள் கனிய “ஆம்” என்றான். “இந்த ஆட்டத்தில் அவர் நமக்களித்த அனைத்துமே தந்தையின் கொடை எனக் கொள்க!” என்ற சுபாகு “மைந்தர்கள் அனைவரும் நலம் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் யௌதேயன். “அபிமன்யூவிற்கு இன்று சற்றே புண் மிகுதி என அறிந்தேன்” என்றான் சுபாகு. “ஆற்றும் தகைமை கொண்டவைதான்” என்றான் யௌதேயன். “நலம்பெறுக!” என்று வாழ்த்தியபின் சுபாகு யுதிஷ்டிரரின் குடிலை நோக்கி சென்றான்.

யுதிஷ்டிரரின் குடிலில் முன்னரே பீமனும் நகுலனும் சகதேவனும் வந்திருந்தார்கள் என்பது அவர்களின் கொடிகள் பறந்த தேர்கள் வெளியே நிற்பதிலிருந்து தெரிந்தது. சாத்யகி குடிலுக்கு வெளியே நின்றிருந்தான். சுபாகுவைக் கண்டதும் அருகே வந்து தலைவணங்கி “அரசர் தங்களுக்காக காத்திருக்கிறார், கௌரவரே” என்றான். “இளைய யாதவரும் இளைய பாண்டவர் அர்ஜுனரும் இருக்கிறார்களல்லவா?” என்றான் சுபாகு. “இல்லை, அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று சாத்யகி சொன்னான். “அவர்களும் வரட்டும். பாண்டவர்கள் ஐவரும் அடங்கிய அவைக்காகவே நான் தூது வந்திருக்கிறேன்.”

“இளைய பாண்டவர் அரசவைக்கு வருவதே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், அறிவேன். ஆனால் என் தூது ஐவருக்குமாகத்தான்” என்றான் சுபாகு. “நான் வெளியே காத்திருக்கிறேன். அவைக்குள் நுழைகையில் அவர்கள் ஐவரும் இருந்தாகவேண்டும்.” சாத்யகி “நன்று” என்றபின் உள்ளே சென்றான். திருஷ்டத்யும்னன் “இளைய பாண்டவர் இன்றும் வருவது ஐயமே” என்றான். “செய்தியனுப்புக!” என்றான் சுபாகு. “செய்தி பலமுறை சென்றுவிட்டது, தூது ஐவருக்குமாக என்று சகுனியின் ஆணையும் சொல்லப்பட்டுள்ளது” என்றான்.

தேர் வந்துநின்ற ஓசை கேட்டு இருவரும் திரும்பி நோக்கினர். விரைவுச் சிறுதேரிலிருந்து இளைய யாதவர் முதலில் துள்ளி இறங்கினார். தொடர்ந்து தயங்கிய காலடிகளுடன் இளைய பாண்டவன் இறங்கினான். தேர்ப்பாகன் தேரை அப்பால் கொண்டு செல்ல அவர்கள் இருவரும் பாடிவீட்டை அணுகினர். சுபாகு தலைவணங்கி “துவாரகையின் அரசருக்கு வணக்கம்” என்றான். “நலம்திகழ்க!” என இளைய யாதவர் வாழ்த்தினார். அவன் அர்ஜுனனை வணங்கி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். இளைய பாண்டவன் அவன் தலையைத் தொட்டு சொல்லின்றி வாழ்த்தினான்.

“நான் தங்களுக்காகவே காத்து நின்றுள்ளேன்” என்றான் சுபாகு. இளைய யாதவர் “அபிமன்யூவின் புண்கள் சற்று கடுமையானவை. மருத்துவநிலைக்கு சென்றிருந்தோம்” என்றார். சுபாகு “ஆம், சொன்னார்கள்” என்றபின் இளைய பாண்டவனிடம் “எங்களிடம் மிகச் சிறந்த தென்னக மருத்துவர் சிலர் இருக்கிறார்கள். சாத்தன், ஆதன் என இருவர். அகத்திய வழிவந்தவர்கள். தாங்கள் விழைந்தால் அவர்களை இங்கே அனுப்புகிறேன். மைந்தனின் உடலை அவர்கள் ஒருமுறை நோக்கட்டும்” என்றான். இளைய யாதவர் “ஆம், அது நன்று. அகத்திய மரபு நரம்புநிலை மருத்துவம் தேர்ந்தது” என்றார். இளைய பாண்டவன் நலிந்த குரலில் “நலம்பெறுவான் என்றனர் மருத்துவர்” என்றான்.

சாத்யகி உள்ளிருந்து வந்து தலைவணங்கினான். “முறைமைப்படி முழுதவையில் நான் என் செய்தியை உரைக்கவேண்டும். நீங்கள் அவைக்குச் சென்று அமர்ந்தபின் நான் உள்ளே நுழைகிறேன்” என்றான் சுபாகு. இளைய யாதவர் புன்னகைத்து “ஆம், அவை ஒருங்கவேண்டும் அல்லவா?” என்றபின் சுபாகுவின் தோளை மெல்ல தொட்டுவிட்டு உள்ளே சென்றார். இளைய பாண்டவன் தளர்ந்த காலடிகளுடன் தொடர்ந்தான். சாத்யகி அவர்களுடன் உள்ளே சென்றுவிட்டு மீண்டு வந்து தலைவணங்கினான். சுபாகு உள்ளே நுழைந்தான்.

அவையின் நடுவே பீடத்தில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரரை வணங்கி “அஸ்தினபுரியின் அரசரிடமிருந்து உபப்பிலாவ்யத்தின் அரசருக்கு நல்வணக்கம். நான் அரசரின் செய்தியுடன் வந்த தூதன்” என்றான் சுபாகு. “நலம் சூழ்க! தூதை சொல்க!” என்றார் யுதிஷ்டிரர். சுபாகு மீண்டுமொருமுறை தலைவணங்கி “குருகுலத்து மூத்தவருக்கு இளையவனின் வணக்கம்” என்றான். யுதிஷ்டிரர் சற்று முகம் மலர்ந்து “நன்று நிறைக, இளையோனே!” என்றார். “மூத்தவரே, நம் குலமூதாதையின் களவீழ்ச்சியை முறைப்படி அறிவிக்கும்பொருட்டு என் மூத்தவர் என்னை அனுப்பியிருக்கிறார்” என்றான் சுபாகு. அவையில் எழுந்த அசைவையும் மூச்சொலியையும் உடலால் உணர்ந்தான்.

சுபாகு “நம் முதுதந்தையும் சந்தனுவின் மைந்தருமாகிய தேவவிரதர் நேற்று போரில் நிலம்சரிந்தார். அவருடைய உடல்நிலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துகொண்டிருக்கிறார். அவரை இறுதியாகக் காணவும் வணங்கி நற்சொல் பெறவும் அவர்களின் மைந்தர்களாகிய தங்களுக்கும் தங்கள் இளையோருக்கும் பொறுப்பும் உரிமையும் உள்ளது. அதை அறிவுறுத்தவே வந்தேன்” என்றான். யுதிஷ்டிரர் கைகளால் தலையைத் தாங்கி அவனை நோக்கியபடி அமர்ந்திருந்தார்.

பீமன் “அவரிடமிருந்து தீச்சொல் எழுமெனில் நன்றே என எண்ணுகிறீர்கள் போலும்” என்றான். “தீச்சொல் எழுமென எண்ணுகிறீர்களா நீங்கள்?” என்றான் சுபாகு. பீமன் சொல்லிழந்தான். சுபாகு “மாறாக முழுதுளம் கனிந்த வாழ்த்தை அவர் அவர்மேல் அம்புகளைத் தொடுத்து களத்தில் வீழ்த்திய இளைய பாண்டவர் பார்த்தருக்கே அளிப்பார்” என்றான். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர். சுபாகு “இது வெறும் முறைமையறிவிப்பு. இதை நாங்கள் அறிவிக்கவில்லை என்று ஆகக்கூடாது. எங்களை எண்ணி நீங்கள் தயங்கவும் கூடாது. மூத்தவரே, பிதாமகர் வீழ்ந்துகிடக்கும் அந்நிலப்பகுதியை கௌரவ அரசர் இருவருக்கும் பொதுவான நிலமாக அறிவித்திருக்கிறார். அங்குள்ள காவலர்களுக்கும் அது அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றான்.

திருஷ்டத்யும்னன் “முறைமைகளின்படி அவர் மறைந்தால் நீர்க்கடன் பொறுப்பு கொண்ட அனைவரும் அவரைச் சென்று கண்டு தாள்பணிந்தாகவேண்டும்” என்றான். யுதிஷ்டிரர் “அதற்கான நெஞ்சுரம் நம்மிடம் உண்டா, பாஞ்சாலரே? அவர் முன் சென்று நின்றிருக்க நம்மால் இயலுமா?” என்றார். திருஷ்டத்யும்னன் “நாம் நாணும் எதையும் செய்யலாகாது. செய்தபின் எதன்பொருட்டும் நாணுதலும் ஆகாது” என்றான். “என்னால் இயலும். இங்கு எவரும் வரவில்லை என்றால் உங்கள் சார்பில் நான் செல்கிறேன்” என்றான் பீமன். சகதேவன் “நாம் ஐவருமே சென்றாகவேண்டும். குறிப்பாக மூத்தவர் பார்த்தர்” என்றான். “ஆம், செல்வதே முறை. ஆனால் எப்படி செல்வது? எண்ணுகையிலேயே என் கால்கள் தளர்கின்றன” என்றார் யுதிஷ்டிரர்.

“அத்தனை பிழையுணர்வு அளிக்கும் ஒன்றை நீங்கள் செய்திருக்கலாகாது” என்றான் பீமன். “இனி அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்று இளைய யாதவர் கடுமையான குரலில் சொன்னார். “நாம் உடனே கிளம்புவோம். அவரைச் சென்று கண்டு அடிபணிந்து அவர் அளிப்பவை எவையாக இருப்பினும் பெறுவோம்.” யுதிஷ்டிரர் “ஆனால்…” என்று உடைந்த குரலில் சொன்னார். இளைய யாதவர் சற்றே எரிச்சல் கலந்த குரலில் “அரசே, அவரை நாம் வீழ்த்தியது அவருடைய சொல்லில் இருந்து ஆணைபெற்றுத்தான். ஆகவே நாம் அவர் எண்ணாத பிழை எதையும் செய்யவில்லை. அவரைச் சென்று கண்டு வாழ்த்துபெறுதல் நாம் அவரை வஞ்சகத்தால் வீழ்த்தினோம் என்னும் வீண்பழியிலிருந்து நம்மை காக்கும். அவருடைய ஆணையைத்தான் நாம் தலைக்கொண்டோம் என உலகம் அறியட்டும். செல்வோம்” என்றார்.

யுதிஷ்டிரர் “ஆம்” என்றபின் சுபாகுவிடம் “நாங்கள் இப்பொழுதே வந்து பிதாமகரின் தாள்பணிகிறோம் என்று சொல்க!” என்றார். “ஆணை” என சுபாகு தலைவணங்கினான். நகுலன் “நமது படைகள் இதைப்பற்றி என்ன எண்ணுமென்றும் நாம் கணிக்கவேண்டியிருக்கிறது” என்றான். “அதைப்பற்றி எனக்கு கவலையில்லை” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரர் சொன்னார். “கவலைகொள்ளவேண்டும்… நாம் பிதாமகரைச் சென்றுகண்டு சொல்பெற்றதே மிகப் பெரிய சோர்வை இங்கே உருவாக்கியதை நாம் அறிவோம். அரவானை களப்பலி கொடுத்தே நாம் அதை மீட்டோம்” என்றான் நகுலன்.

யுதிஷ்டிரர் “ஆம், ஆயினும் எனக்கு கவலை இல்லை. நான் அவரால் வாழ்த்தப்பட்டேன் என்றால் மகிழ்வேன். தீச்சொல்லிடப்பட்டேன் எனில் நிறைவடைவேன்” என்றார். இளைய யாதவர் “அரசே, தாங்கள் செல்வதே நன்று. இளையோர் உடன்வரட்டும். அவர் தங்கள் குலமூதாதை. நாளை அஸ்தினபுரியின் அரசர் என நீங்கள் முடிசூடி அமர்ந்திருக்கையில் சொல்லப்படும் மூதாதையர் பெயர்நிரையில் அவருடையதும் இருக்கும்” என்றார். “ஆம், நான் இப்போதே கிளம்புகிறேன்” என யுதிஷ்டிரர் எழுந்தார்.

நகுலன் “தங்கள் ஆணை அதுவெனில் அவ்வாறே ஆகுக!” என்றான். யுதிஷ்டிரர் அர்ஜுனனை நோக்கி “எழுக இளையோனே, இது நம் கடன்!” என்றார். அர்ஜுனன் அசையாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “வருக, நாம் கிளம்பியாகவேண்டும்!” என்றார் யுதிஷ்டிரர் மீண்டும். அர்ஜுனன் அசையவில்லை. அவன் இமைகளும் கீழே சரிந்து நிலைத்திருந்தன. “பார்த்தா, அவரைச் சென்று பார்ப்பது உன் கடன்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவர் அளிப்பது எதுவாக இருந்தாலும் பெற்றுமீள்க! அதை தவிர்ப்பது அஞ்சுவதென்றே பொருள்படும்.”

சீற்றத்துடன் அர்ஜுனன் “ஆம், நான் அஞ்சுகிறேன்” என்றான். விழிகளில் நீர் மின்ன “என் கீழ்மையை. அவர்முன் சென்று நின்றிருக்கையில் நான் சிறுத்து எறும்பென, அணுவென ஆகப்போவதை” என மூச்சிரைத்தான். புன்னகையுடன் இளைய யாதவர் “ஆம், அவ்வாறு நிகழலாம். ஆனால் நீ வான்வெளியில் தலைதூக்கி நின்று நான் என்று தருக்கிய தருணங்கள் உண்டு. அப்போது அறிந்தவற்றை அணுவென்றும் இன்மையென்று ஆகி நின்றிருக்கையில் மெய்யா என்று உசாவுக! இது ஒரு நல்வாய்ப்பு” என்றார். ஏதோ சொல்ல வந்த அர்ஜுனன் வலிகொண்டவனாக தலையை அசைத்தான்.

“பார்த்தா, உண்ணாநோன்பு கொண்டவன் பசியாலும் நோயாளன் வலியாலும் தவமியற்றுவோன் துயராலும் விடுதலையடைகிறார்கள் என்பது தொல்நூல் கூற்று” என்றார் இளைய யாதவர். “இவையனைத்தும் மெய்மையின் தருணங்களே என்று உணர்க! செல்க!” பீடத்தின் கைப்பிடிகளை இறுகப் பற்றியபடி அசையாமலிருந்த அர்ஜுனன் “ஆம்” என்றபடி எழுந்து யுதிஷ்டிரரை அணுகி “செல்வோம்” என்றான். சுபாகு “நீங்கள் வரும் செய்தியை நான் என் படைகளுக்கு அறிவிக்கிறேன், அரசே” என்றான்.

bowயுதிஷ்டிரர் தம்பியருடன் நான்கு தேர்களில் கௌரவப் படைமுகப்பை அணுகியதும் அரசருக்குரிய வரவேற்பை அளிக்க முரசுகள் முழங்கின. படையினர் பெரும்பாலும் துயில்கொண்டுவிட்டிருந்தமையால் அந்த அமைதியில் முரசொலி உரக்க எழுந்து இருளை நிறைத்தது. இரு படைகளுக்கும் நடுவே அமைந்திருந்த வெற்றுநிலத்தை அவர்களின் தேர்கள் கடந்தபோது எழுந்த ஓசையை இருபக்கமும் இருந்த படைவீரர்கள் அறிந்திருந்தனர். அன்று என்ன நிகழும் என்பதையும் ஒருவாறாக உய்த்துணர்ந்திருந்தனர்.

முரசொலி கேட்டு யானைகள் சில குரலெழுப்பின. அவர்களை வரவேற்க அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடன் துச்சாதனனே வந்திருந்தான். அவர்கள் அருகணைந்ததும் கொம்பு ஓசையிட்டமைந்தது. துச்சாதனன் இருபுறமும் துர்மதனும் துச்சலனும் துணைவர ஏழு அடி முன்னால் வந்து தலைவணங்கி “அஸ்தினபுரியின் படையெல்லைக்குள் உபப்பிலாவ்யத்தின் அரசருக்கு நல்வரவு. உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு அமைவதாக!” என முறைமைச் சொல் உரைத்தான். யுதிஷ்டிரர் சொல்லில்லாமல் கைதூக்கி வாழ்த்து அளித்தார்.

துச்சாதனன் “பாண்டவ இளையோர் நால்வருக்கும் நல்வரவு” என தலைவணங்கிய பின் “உங்களை இளையோன் சுபாகுவே அழைத்துச்செல்வான்” என்றான். யுதிஷ்டிரர் தலையசைத்தார். துச்சாதனன் மீண்டும் தலைவணங்கி புறம்காட்டாமல் விலகிச்சென்றான். யுதிஷ்டிரர் திரும்பி “செல்வோம்” என்று சுபாகுவிடம் சொன்னார். சுபாகு அவர்களை அழைத்துச்செல்ல ஐவரும் மெல்லிய காலடிகளுடன் தொடர்ந்து வந்தார்கள்.

படைகளின் முன்விளிம்பு வழியாக வடக்கு நோக்கி செல்கையில் பாண்டவர்கள் நால்வரும் நடுங்கிக்கொண்டிருப்பதை சுபாகு பார்த்தான். பீமன் மட்டும் பெரிய கைகளை வீசியபடி நிமிர்ந்த தலையுடன் தோளில் சரிந்த நீள்குழல்சுருள்கள் காற்றில் அலைபாய கால்களை தூக்கி வைத்து நடந்தான். அர்ஜுனன் எதையுமே பார்க்கவில்லை. நகுலனும் சகதேவனும் நிலம்நோக்கி நடந்தனர். யுதிஷ்டிரர் கைகளை கூப்புவதுபோல நெஞ்சோடு சேர்ந்திருந்தார்.

பந்தங்களால் சூழப்பட்ட பீஷ்மரின் படுகளம் இருளில் மிதப்பதுபோலத் தெரிந்தது. அங்கு நின்றிருந்த மருத்துவர்களின் நிழல்கள் செவ்வொளி எழுந்த கரிய வானில் பேருருக்கொண்டு அசைந்தன. யுதிஷ்டிரர் “அவர் இறந்துவிடவில்லை அல்லவா?” என்று கேட்டார். அவ்வினாவிலிருந்த பொருளின்மையை உணர்ந்த சுபாகு “அவ்வாறு முரசுகள் ஒலிக்கவில்லை, மூத்தவரே” என்றான். “ஆம், அவர் மறைந்தால் முரசொலி எழும்” என்றார் யுதிஷ்டிரர். பீமன் “அவர் இறந்துவிட்டதாகவே முரசொலி எழுந்தது. இறக்கவில்லை என இன்னொரு முரசொலி. மீண்டும் முரசொலித்தாலும் நம் வீரர்கள் நம்பப் போவதில்லை” என்றான்.

ஏன் இக்கட்டுப் பொழுதுகளில் மானுடர் பொருளிலாது பேசுகிறார்கள் என்று சுபாகு எண்ணிக்கொண்டான். ஆனால் பேசுவது அந்தத் தருணத்தின் இறுக்கத்தை எளிதாக்கியது. அப்போது எதை பேசினாலும் பொருளில்லாததாகவே இருக்கும். அப்போது பொருள்கொள்வது இளிவரல் மட்டுமே. பொருளில்லாமையையே பொருளெனக் கொள்ள இயல்வது இளிவரலில் மட்டும்தான். அப்படி எண்ணியதுமே அவன் முதிய சூதரை பார்த்துவிட்டான். அவர் காவல்மாடத்தில் அமர்ந்திருந்தார். அவர்களைக் கண்டதும் ஆவலுடன் முகம் மலர எழுந்து நின்றார். சுபாகு எரிச்சல் கொண்டான். ஆனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது என்று உணர்ந்தான். அதன்பின் அவர் அத்தருணத்தில் சொல்லப்போவதென்ன என்ற ஆர்வமும் எழுந்தது.

முதிய சூதர் கைகளை விரித்து அவர்களை தடுப்பதுபோல் அருகே வந்தார். முன்னால் சென்ற சுபாகுவிடம் “நில்லுங்கள், அரசே. தங்கள் ஆணையின்படி நான் உள்ளே சென்று அவரை பார்த்தேன். அவருடைய அம்புகள் எவை எனத் தெளிந்தேன். அவை அந்தக் களத்தில் இருந்து பொறுக்கப்பட்டவை. ஆம், அவர்மேல் படாமல் குறிதவறிய அம்புகளைக்கொண்டு அந்த மஞ்சம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார். கண்களைச் சிமிட்டியபடி “அந்த மஞ்சம் அமைக்கும் கலை எவ்வாறு உருவானது என கண்டுபிடித்தேன். இளமையில் அவர் அம்புகளால் கங்கைக்கு அணைகட்டினார் என்றார்கள். அந்த அணையமைக்கும் கலையே இங்கே மஞ்சமென்றாகியிருக்கிறது. கங்கைக்கு கரைகட்டுதல்!” என்றார்.

“ஆனால் அவர் பெருவீரர்!” என்று சூதர் கூவினார். “அவரால் நீருக்கு மட்டுமல்ல நெருப்புக்கும் காற்றுக்கும்கூட அணைகட்ட முடியும். ஏன் முயன்றால் வானுக்கே அணைகட்டுவார். அந்த அணை முழுமையடையாது, ஏனென்றால் அது முழுமையடைய இயலாது. முழுமையடையாத செயல்களை செய்பவர்களே பெரியவர்கள். ஏன் என்று சொல்கிறேன், அச்செயல்களை தொடங்கினாலே போதும், செய்ததாகவே பொருள்கொள்ளப்படும். இவர்கள் யார்? பாண்டவர்கள் போலிருக்கிறார்கள்… இந்த முதியவர் கௌதமகுலத்து முனிவர் அல்ல என்றால் யுதிஷ்டிரராக இருக்கலாம். இவர் பலாஹாஸ்வ முனிவர் அல்ல என்றால் பீமன். அவர் சரத்வான் அல்ல என்றால்…”

“போதும்” என்று பீமன் உறுமினான். யுதிஷ்டிரர் கைகூப்பி “சூதரே, நாங்கள் பாண்டவர்கள். எங்கள் பிதாமகரை பார்த்துவரச் செல்கிறோம். வழிவிடுங்கள்” என்றார். “ஆம், அது உகந்த செயல்தான். பெரிய தீங்குகள் இழைக்காத தருணங்களிலெல்லாம் நாம் முறைமைகளை கைவிடாது பேணவேண்டும்… அதுவே அரசநெறி” என்றார் முதிய சூதர். “தங்கள் வாழ்த்துக்கள் அமையட்டும்” என்று கைகூப்பியபின் யுதிஷ்டிரர் முன்னால் நடந்தார். முதிய சூதர் பின்னால் வந்தபடி “நானும் உடன்வந்தால் உங்கள் பெருமையை அவரிடம் சொல்வேன்” என்றான். சுபாகு “வேண்டாம்” என்றான்.

“வேண்டுமென்றால் உங்கள் பெருமையை உங்களிடமே சொல்கிறேன். அவர் உடலில் சிகண்டியின் அம்பையும் அர்ஜுனரின் அம்பையும் பிரித்தறியவே முடியவில்லை என்றார்கள்” என்றபடி அவர் தொடர்ந்து வந்தார். “அம்புகளில் வேறுபாடில்லை என்பதை அறியாமல்தான் பிதாமகர் உயிர்விடத் துணிந்திருக்கிறார்.” சீற்றத்துடன் பீமன் திரும்பினான். “மந்தா!” என்றார் யுதிஷ்டிரர். “களம்பட்டவர்கள் தங்கள் உயிரைக் குடித்த படைக்கலத்தை கையில் ஏந்திக்கொண்டுதான் விண்ணுலகு எய்துவார்கள் என்று கதைகள் சொல்கின்றன. பீஷ்ம பிதாமகர் கொண்டுசெல்லும் அம்பு எவருடையதாக இருக்கும் என்று ஆவலாக சூதர்குலமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. உண்மையில் அதற்காகவே நான் வந்தேன்.”

அவர் மேலும் ஊக்கம் கொண்டு கைதூக்கி “அந்த அம்பு ஒரு ஆணிலியுடையதாக இருக்கும் என்று நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள். நிமித்திகர் பொய்யுரைப்பதில்லை, உறுதியாக அது ஆணிலியின் அம்பே. ஆனால் எவருடைய அம்பு என்பது அப்போதும் ஐயத்திற்குரியதே” என்றார். சீற்றத்துடன் திரும்பிய பீமன் “போதும்” என்றான். “நான் சொல்லவருவது விராடநாட்டு பிருகந்நளை…” என்றார். “வாயை மூடு… இல்லையேல் தலையை அறைந்து உடைப்பேன்” என்றான் பீமன். “அதனால் பயனில்லை. நாங்கள் இளிவரல் சூதர், கீழ்வாயாலும் பாடுவோம்” என்றார் முதிய சூதர்.

“சூதரே, செல்க! இனி சொல்லெடுக்க வேண்டாம்” என்றபின் சுபாகு கண்காட்ட எல்லைக்காவலன் வந்து அவரைப் பார்த்து “உம்” என உறுமினான். அவர் அஞ்சி பின்னடைந்து “இவன் என்னை முன்னர் இருமுறை அறைந்தான். இவன் குடியில் சூதர்களை அறையும் வழக்கம் உள்ளது” என்றார். அவர்கள் முன்னால் செல்ல அவர் “கல்வியறிவில்லாதவர்கள் என்னைப்போன்ற காவிய ஆசிரியனை கையாளும்படி விட்டுச்செல்வதுதான் அரசர்களுக்கு அழகா?” என அப்பால் நின்று உரக்கக் கேட்டார்.

அவரை காவலன் வேலால் உந்தி கொண்டுசென்றான். அவர் அவனிடம் திமிறியபடி “இவர்கள் கல்லாக் களிமகன்கள். ஆண்கள் பெறும் கல்விஅறிவுதான் பெண்களை அழகிகளாக்குகிறது என்ற உண்மையை அறியாத வெற்று வேல்தாங்கிகள்!” என்று பின்னால் நின்று கூவினார். “நீங்கள் களம்படும்போது நான் புகழ்ந்து பாடுவேன். ஆயிரமாண்டுகளாக எங்கள் பாடலுக்காக நாங்கள் ஷத்ரியர்களை போர்க்களங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம்!” யுதிஷ்டிரர் திரும்பி நோக்கிவிட்டு தலைகுனிந்து நடந்தார். பீமன் உறுமியபடி தன் கைகளை உரசிக்கொண்டான்.