தீயின் எடை - 29
காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் கிருபர் தன் உள்ளம் மானுடருக்காக ஏங்குவதை உணர்ந்தார். நாகர்களின் அடியுலகில் இருந்தபோது அவர் மேலே வர விரும்பியது ஏன் என்று அப்போது புரிந்தது. மானுட உடல்களை விழிகள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. உற்றவர் அறிந்தவர் என்றில்லை, எவராயினும். ஏவலரோ வழிப்போக்கரோ. ஆணோ பெண்ணோ குழவியோ முதியவரோ. மானுட உடல்கள். அவற்றின் அசைவுகள். குரல்கள். அவற்றின் வியர்வையும் மூச்சும் அளிக்கும் மணம். அனைத்திற்கும் மேலாக அவை அளிக்கும் சூழுணர்வு. அதிலிருந்து திரண்டு உருவாகிறது அவருடைய தன்னுணர்வு.
கிருபர் பெரும்பாலும் பேசுபவர் அல்ல. அவைகளில் மட்டுமே அவர் ஓரளவேனும் பேசினார். அவர் ஆசிரியர் என்பதனால், அவர் குரல் அங்கே எழுந்தாகவேண்டும் என்பதனால். தனியாக இருக்கையில் பெரும்பாலும் அமைதியிலாழ்ந்திருப்பார். இளமையிலேயே பேச்சு உள்ளடங்கி விழிகளும் செவிகளும் மட்டுமாக எங்கும் இருப்புகொள்ள அவர் கற்றிருந்தார். தந்தையின் அவையில் அவர் மிக இளமையிலேயே சென்றமைந்தார். தந்தை அவரை தன் மாணவர்களில் கடையனாகவே கருதினார். அவர் தன்னைவிட மூத்தவர்களின் எட்டு அடுக்குகளுக்கு அடியிலிருந்தார். ஆகவே கேட்பவராகவே உருவானார். அவர் முதிர்ந்து முன்நிரையை அடைந்தபோதுகூட பிறர் பேச தான் கேட்பவராகவே தொடர்ந்தார். தன் குரல் என எவரையேனும் கண்டடைந்தார். பீஷ்மரோ துரோணரோ பேசுகையில் அவர்களின் குரல் வழியாக அவர் வெளிப்பட்டார். அப்பால் அவர் எடுக்க என ஒரு சொல்லும் எஞ்சியிருக்கவில்லை.
ஆனால் அவர் தனிமையில் இருப்பதே இல்லை. அவர் கற்பிக்கத் தொடங்கியதே எந்நேரமும் இளையோருடன் இருக்கலாகும் என்பதனால்தான். புலரியில் முதல் மாணவனின் முகம் நோக்கியவாறுதான் அவர் எழுந்துகொள்வார். மாணவர்களின் குழுக்கள் வந்தபடியே இருக்கும். அந்திக்கடன்கள் முடிந்து மாணவர்களுடன் நூலுசாவிய பின் அவர்கள் மஞ்சத்திற்குக் கீழே படுத்துக்கொள்ள அவர்களின் மூச்சொலிகளைக் கேட்டபடி துயில்வார். அவர்களிடமும் அவர் மிகையாகப் பேசுவதில்லை. கற்பிக்கும்போதுகூட தேவையான சொற்களை மட்டுமே உரைத்தார். அவற்றையும் மாணவர்களின் விழிநோக்கிக் கூறாமல் பொதுவிலென காற்றில் ஒலிப்பது அவருடைய வழக்கம்.
பாடங்களுக்கு வெளியே அன்றாட வாழ்க்கையில் அவர் ஓரிரு சொற்களையே கையாண்டார். குருநிலையில் அவருடைய குடிலில் மண்ணாலான குடமும் மரத்தாலான இரு குவளைகளும் ஈச்சையோலைப் பாய்கள் நான்கும் ஆடைகளைச் சுருட்டிவைக்கும் இரண்டு கூடைகளும் மட்டுமே இருந்தன. அவர் உள்ளத்திற்குள்ளும் அவ்வண்ணம் சொற்கள் குறைவு என்று மாணவர்கள் தங்களுக்குள் இளிவரல் உரைப்பதை அவர் அறிவார். அவர்கள் குருநிலையில் நுழைகையில் சொல்பெருகும் உள்ளம்கொண்ட இளையோராக இருப்பார்கள். ஓசை மட்டுமாகவே பேசிக்கொண்டிருப்பார்கள். இருக்கிறோம் என தங்களுக்குக் காட்டுவதற்காகவே சொல்லாடுவார்கள். அவர்களுக்கு அமைதி என்பது இன்மை. துயிலும் இறப்பும் போன்ற ஒன்று.
“ஒன்று சொல்ல பிறிதொரு சொல்லும் தேவையென்றால் அது சொல்லப்படவே இல்லை” என்று கிருபர் அவர்களிடம் சொல்வதுண்டு. “சொல்பெருக்கும் வீரன் படைக்கலத்தில் பயிற்சியை இழக்கிறான். ஒவ்வொரு சொல்லுக்கும் விழியிலும் செவியிலும் ஒரு துளி ஆற்றலை வீணடிக்கிறீர்கள் என்றே கொள்க!” மாணவர்கள் மெல்லமெல்லத்தான் சொல்லடங்குவார்கள். சொல்நின்ற பின்னரே அவர்களின் விழிகள் கூர்கொள்ளத் தொடங்கும். ஒருவன் வில்லில் அம்புகூட்டி குறிநோக்கும்போது அவனுள் சொற்கள் முற்றடங்கிவிட்டிருக்கவேண்டும். அம்பு எழுகின்ற அக்கணம் அவனில் உள்ளமென்று ஒன்று இருக்கலாகாது. “விற்கலை என்பது உள்ளம் கடத்தல்” என்று கிருபர் அவர்களிடம் சொல்வார். “சொற்களை வெல்க! சொற்களையே உள்ளம் என்று சொல்கிறோம்.”
அவரிடம் தந்தை சொன்ன அறிவுரை அது. சொற்களை குறைத்துக்கொள்க! உன் சித்தம் பெருகும். குறைவாகப் பேசுபவனின் சொற்கள் ஒவ்வொன்றும் ஆழம் கொள்கின்றன. அவன் மொழி இருபுறமும் கூர்கொண்ட வாள் என்றாகிறது. சொற்களை பெருக்கப் பெருக்க சொற்களின் பொருள் குறைகிறது. சொல்பெருக்குபவன் சொல்லித்தீராமல் மேலும் சொல்லெடுப்பதையும் சொல்குறைபவன் சொல்வது குறைந்து அமைதியாலேயே உணர்த்துவதையும் காண்பாய். அம்புத்தூளியில் குறைவான அம்புகளை வைத்திரு. இல்லத்தில் மிகக் குறைவான பொருட்களையே கொண்டிரு. உன்னைச் சூழ்ந்து மானுடன் அமைத்த பொருட்கள் குறைவாகவே இருக்கட்டும்.
மானுடன் பொருட்களை உருவாக்குகையில் அவற்றை சொற்களால் நிரப்புகிறான். அவன் ஒரு சொல்லை கண்டடைந்த பின்னரே அப்பொருளை உருவாக்குகிறான். ஒரு சொல்லை ஒரு பொருள்மேல் ஏற்றும் முயற்சியே பொருள்சமைத்தல் என்பது. இரும்பை வேல் என்றும் பொன்னை அணி என்றும் ஆக்குதல். அச்சொல்லைவிட எஞ்சியிருக்கும் பொருளை அப்பொருளிலிருந்து செதுக்கிச் செதுக்கி அகற்றுகிறான். அச்சொல்லாக அப்பொருளை நிலைநிறுத்துகிறான். ஆனால் பொருளேறிய சொல் முடிவிலாப் பொருள் கொள்ளவேண்டியிருக்கிறது. தெய்வங்கள் அதற்கு அளித்த அமைதி குலைந்துவிடுகிறது. நூறுநூறாயிரம் பொருள்கொண்ட பின்னரும் அப்பொருட்களிலிருந்து அது வெளியேறிக்கொண்டே இருக்கிறது. அதை பிடித்துப் பிடித்து பொருட்களில் அடைக்க முயல்கிறார்கள் அறிஞர்.
நோக்குக, மானுடன் தான் சமைத்த பொருட்களை எவ்வண்ணமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று! அணிகளாக்குகிறான். பிறவற்றுடன் பொருத்துகிறான். பிறவற்றிலிருந்து பிரிக்கிறான். மானுடனின் உள்ளச்செயல் என்பது சூழ்ந்திருக்கும் பொருட்களை பொருள்கொள்வதுதான். தெய்வங்கள் படைத்த பொருட்கள் முழுமைகொண்டவை. அவற்றை நோக்கி சொற்களை ஏவும் மானுடன் சொற்கள் சென்றடையாததை புரிந்துகொள்வான். அச்சொல்லின்மையே அவற்றை முடிவற்றதாக ஆக்குகிறது. தான் சமைத்த பொருட்கள் தான் அளிக்கும் அனைத்துச் சொற்களையும் பெற்றுக்கொள்வதை காண்கிறான். ஆகவே சொல்பெய்துகொண்டே இருக்கிறான். சொற்கள் பொருள்களின்மேல் மழையென பெய்துகொண்டே இருக்கின்றன. மழை பாறைகளை அரிக்கிறது. மலைகளையும் கரைக்கிறது. நகரங்களின் அவைகளில் மொழி மலையுச்சிப் பாறை என தேய்ந்துவிட்டிருப்பதை காண்க!
சொல்லிச்சொல்லி சொல்லின்மையை அடைவது தந்தையின் இயல்பு. அவர் ஆண்டில் ஒருமாதம் மட்டுமே எதையேனும் கற்பிப்பார். மற்ற மாதங்களில் மாணவர்கள் அவருடன் இருப்பார்கள். அவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். ஆசிரியர் கற்பிக்காதவற்றை கற்பவனே நல்ல மாணவன், அவன் ஆசிரியனாகி நின்று அதை கற்கிறான் என்று ஒருமுறை துரோணர் சொன்னார். கிருபர் தன் தந்தையிடமிருந்து சொல்லடங்கி தன்னுள் தான் மடிந்து மடிந்து சுருங்கி இன்மையென்றாகி இருப்பதை கற்றுக்கொண்டார். குகைக்குள் ஊழ்கத்தில் இருக்கையில் குகைச்சுவரிலிருக்கும் ஓவியங்களில் ஒன்றென சென்று படிந்துவிடுவார். அவர் குகைச்சுவரிலிருந்த தொல் ஓவியங்களில் இருந்து எழுந்தவர் என்றே ஒரு சூதர்கதை உண்டு. மறைந்த முனிவர்கள் அனைவரும் சென்றுபடியும் ஓவியப்பரப்பு அது. சொற்களுக்கு அப்பால் நின்றிருப்பது.
தந்தை தவத்திலாழ்ந்து குகைகளுக்குள் இருக்கையில் மாணவர்கள் உடனிருப்பார்கள். ஊழ்கம் பயில்வார்கள். நூல்நவில்வார்கள். வில்தேர்வார்கள். ஆனால் அவர் அவர்களை உணர்வதே இல்லை. அவர் விழித்திருக்கையிலும் உடனிருக்கும் எவரையும் உணர்வதில்லை என்று தோன்றும். அவர் தன்னை அடையாளம் காண்கிறாரா என்றே கிருபர் ஐயுற்றதுண்டு. அவர் எந்த மாணவனையும் தனித்தறியமாட்டார். என்றாலும் எல்லா மாணவரையும் அகம்புகுந்து அறிவார் என்றனர் மூத்த மாணவர்கள். சொல்லற்றவர்களுக்கு ஒற்றை நோக்கில் சிக்கும் ஓர் அசைவே போதும். ஒரு விழிமின் போதும். சின்னஞ்சிறு பறவைகள் அவ்வண்ணம் அரைக்கணத்தில் மானுடரை அளந்துவிடுவதை கிருபர் கண்டிருக்கிறார்.
அவர் அஸ்தினபுரியின் அரசமைந்தருக்கு ஆசிரியராக அமைந்தபோது திருதராஷ்டிரர் அவருக்கு மணம்புரிந்துவைக்க விழைந்தார். அவருக்கான குருநிலையை அமைத்து அளித்த திருதராஷ்டிரர் அவரை என்றும் ஆசிரியராகவே நடத்தினார். அவர் அங்கேயே உரிய அந்தணப் பெண்ணை மணக்கலாம் என்று அவர் விதுரரிடம் சொன்னார். கிருபர் அதை செவிகொள்ளவில்லை. பின்னர் கிருபியுடன் துரோணர் அங்கே வந்துசேர்ந்தபோது துரோணரிடம் அவ்வெண்ணத்தை அரசர் சொன்னார். “அவர் விழையும் பெண்ணை தெரிவுசெய்யலாம். அந்தப் பெண்ணின் தந்தை விழையும் கன்னிச்செல்வம் எதுவோ அதை அவருக்கு நான் அடிக்காணிக்கையாக அளிப்பேன். அந்தப் பெண் விழையும் இல்லத்தையும் அமைத்துக்கொடுப்பேன். அவர் மைந்தர் இந்நகரில் பிறக்கவேண்டும். இங்கு அவருடைய குருதி என் கொடிவழிகளுக்கும் துணையாக நிலைகொள்ளவேண்டும்” என்றார்.
துரோணர் “அவர் குருநிலையில் வளர்ந்தவர். அங்குள்ளவர்களை மட்டுமே அறிந்தவர். இங்கே நகரில் பிறந்து குடியில் வளர்ந்த அந்தணப் பெண் அவருடன் இல்லம்பகிர இயலுமா என்று அறியேன். அவரிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றார். அவர் கூற கிருபி தமையனிடம் அதை கேட்டாள். “நீங்கள் இல்லறம் சூழவேண்டும், மூத்தவரே. உங்கள் குருதி முளைக்கவேண்டும். உங்களுக்கு நீரும் அன்னமும் அளிக்கும் கைகள் எழவேண்டும். மண்ணில் உயிர்கள் அனைத்திற்கும் தெய்வங்கள் இட்ட ஆணை அது.” கிருபர் “என்னால் அதை எண்ணிப்பார்க்க இயலவில்லை…” என்றார். “அதை நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லை என அறிவேன். ஆனால் வாழ்வின் நான்கு நிலைகளில் ஒன்று அது. அந்தப் படியில் ஏறாமல் அடுத்த படியை தொட இயலாது என்பர்” என்றாள் கிருபி.
கிருபர் “நானும் அதை அறிவேன். ஆனால் என் உள்ளம் எண்ணும் முறை பிறிதொன்று. ஒருமுறை அரசர் என்னிடம் நான் அமர்ந்து எழுதுவதற்கும் சுவடிகளை வைப்பதற்கும் ஒரு தந்தக்கால் பீடத்தை பரிசாக அளித்தார். அக்கணமே நான் எண்ணியது என் குடிலில் அதை வைக்க இடம் உண்டா என்றுதான். இல்லை என்பதனால் மறுத்துவிட்டேன். ஒரு பெண்ணுக்கான இடம் என் அகத்தே இல்லை என நினைக்கிறேன்” என்றார். கிருபி அவரை சற்றுநேரம் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் “உடன்பிறந்தவரே, பெண் இன்றி வாழ்தல் இயலுமா உங்களுக்கு?” என்றாள். கிருபர் தாழ்ந்த குரலில் “பெண் இன்றி வாழ்வதைப் பற்றி நான் சொல்லவில்லை” என்றார். “காமம் இன்றி வாழ்தல் எளிது. காமம் திகழும் இடங்களை முழுக்க பிற செயல்களால் நிறைத்துக்கொள்ளவேண்டும். காமம் தனிமையில்தான் தோன்றிப் பெருகும். நான் எனக்கு கணநேரமும் தனிமையை அளிப்பதில்லை.”
கிருபி பெருமூச்சுவிட்டாள். அவள் சொல்லவருவதை அவர் புரிந்துகொண்டார். மேலும் சற்றுநேரம் அமர்ந்திருந்த பின் கிருபி எழுந்து அகன்றாள். மறுநாள் துரோணர் அவரிடம் “நீங்கள் பெண்கொள்ளப் போவதில்லை என அறிந்தேன், கிருபரே. ஆனால் காமஒறுப்பு நோன்பை எவரும் தானாகவே கொள்ளக் கூடாது. அதை ஆசிரியரே அளிக்கவேண்டும். தகுதியறிந்து முற்றுணர்ந்து அளிக்கும் ஆசிரியரின் சொல்லை பற்றிக்கொண்டே அலைப்பரப்பை கடக்க இயலும்” என்றார். கிருபர் “நான் இயல்பாகவே அந்நெறியில்தான் இருக்கிறேன். ஆனால் இவ்வுலகுக்கு நான் அவ்வண்ணம் ஒரு தோற்றம் கொண்டாகவேண்டும் எனில் அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.
துரோணரின் கோரிக்கையை ஏற்று அவருடைய தந்தையின் முதன்மை மாணாக்கர்களில் ஒருவரான சுதீபர் காட்டிலிருந்து வந்தார். அவரும் சரத்வான் என்றே அறியப்பட்டார். சரத்வானிலிருந்து தன்னளவு சரத்வானை அள்ளிக்கொண்டவர் அவர் என்றனர். குருநிலையில் ஏழு நாட்கள் அவர் கிருபருடன் தங்கினார். ஏழு நாட்களும் ஒருசொல்லும் உரைக்கவில்லை. அவரை நோக்குவதாகவும் தெரியவில்லை. பெரும்பாலான நேரம் சோலைக்குள் தவத்தில் இருந்தார். காலையிலும் மாலையிலும் வில்பயின்றார். ஏழாம் நாள் அவர் கிருபரை அருகிருந்த நீர்நிலைக்கு அழைத்துச்சென்றார். நீர்ப்பரப்பை சுட்டிக்காட்டி “நோக்குக” என்றார். அவர் தயங்கி நின்றார். “நோக்குக!” என்றார் சரத்வான். கிருபர் குனிந்து நீரில் நோக்கினார். “எப்போதும் இவ்வுருதான் எழுகிறதா?” என்றார் சரத்வான். கிருபர் “ஆம்” என்றார்.
“ஆணும் பெண்ணும் இரட்டையராகப் பிறப்பது நல்லூழும் தீயூழும் ஆகும்” என்று சரத்வான் தன்னுள் சொல்லிக்கொண்டார். மறுநாள் காலை அவரை எழுப்பி புலரிக்கதிர் எழும் ஓடைக்கரைக்கு அழைத்துச்சென்று கிழக்குநோக்கி அமரச்செய்து தர்ப்பைமுனையால் அவர் நெற்றியில் குருதிக்கோடிழுத்து வேதச்சொல் உரைத்து காமஒறுப்பு நோன்பை அவருக்கு அளித்தார். “இந்தக் குருதிவடு வழிநடத்தட்டும்… ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். சரத்வானை வணங்கி அவர் அளித்த மரவுரியை பெற்றுக்கொண்டார். அணிந்திருந்த வெண்பருத்தி ஆடையைத் துறந்து மரவுரி அணிந்தார். அவர் காமஒறுப்பு நோன்பு கொண்டுவிட்டதை துரோணருக்கு அறிவித்துவிட்டு சரத்வான் நகர்நீங்கினார். பின்னர் எவரும் அவரிடம் மணம் குறித்து பேசவில்லை. துரோணர் மட்டும் ஒருமுறை “நீர் காமஒறுப்புக்கே செல்வீர் என முன்னாளிலேயே கிருபி சொன்னாள்” என்றார். கிருபர் மறுமொழி சொல்லவில்லை.
ரிஷபசாயா என்றழைக்கப்பட்ட சோலைக்குள் இருந்தது கிருபரின் குருகுடில். ஆலும் அரசும் கோங்கும் வேங்கையும் கொன்றையும் மகிழமும் மண்டிய காட்டுக்குள் பலகைகளாலும் ஈச்சைத்தட்டிகளாலும் கட்டப்பட்ட குடில்கள் இருந்தன. கிருபர் தன் மாணவர்களுடன் அங்கே தங்கியிருந்தார். கிருபியும் துரோணரும் கங்கைக்கரை குருநிலையில் தங்கியிருந்தனர். பின்னர் கிருபி தனியாக கங்கைக்கரையில் தனக்கென குடில் ஒன்றை அமைத்துக்கொள்ள துரோணர் தன் மாணவர்களுடன் வாழத்தொடங்கினார். அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தை ஆட்சிசெய்யத் தொடங்கியதும் கிருபியும் அங்கே சென்றாள். அவள் சென்றதை கிருபர் பதினைந்து நாட்கள் கழித்தே அறிந்தார். துரோணரை அவர் அரசவைகளிலேயே சந்தித்தார். துரோணரின் நிழல் என உடனிருந்தார். கிருபி அகன்றபின் துரோணர் அவருடன் மேலும் அணுக்கமானார். துரோணரின் ஐயங்களையும் தயக்கங்களையும் கசப்புகளையும் ஆழுள்ள விழைவுகளையும் அறிந்த ஒருவராக அவரே இருந்தார்.
துரோணருக்கு அணுக்கமானவராக ஆகுந்தோறும் அவர் அஸ்வத்தாமனுக்கு அயலானார். அஸ்வத்தாமன் துரோணரிலிருந்து பிறந்து துரோணரை முற்றுதறி எழுந்த ஒருவன்போல் தோன்றினான். தன்னில் இருந்து தான் விடுபடுவதற்கான துரோணரின் கனவே அவன் என்று தோன்றியது. அவனைக் காணும்போது முதலில் ஏற்படுவது விலக்கம். அவன் முற்றிலும் அறியாத ஒருவனாக தோன்றினான். பின்னர் பேசப்பேச அவனில் மிகமிக மெலிதாக வெளிப்படும் துரோணரின் சாயல்கள் அவரை அணுக்கம் கொள்ளச் செய்யும். அவர் அவனை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பார். பித்தளைக் குமிழில் தோன்றிமறையும் துளியுரு என அவனில் துரோணர் எழும் தருணத்திற்காக. அக்கணத்தை நீட்டி நீட்டி அத்தருணத்தை அமைத்து அதில் அவனுடன் இருப்பார். அவன் அகன்ற பின்னர் அவன் அத்துளியே என எண்ணிக்கொள்வார்.
அவனில் கிருபி தோன்றுவதே இல்லை. அவளுடைய துளிகூட அவனில் இல்லை. தோற்றத்தில், அசைவுகளில், மொழியில், விழிமின்னில். அவனை ஏந்திய கலம். ஆனால் தான் ஏந்திய நீரில் தன்னை சற்றும் கலக்காத பளிங்குக் கலம். அவள் எங்குமே கலந்ததில்லை போலும். ஆகவேதான் முற்றாகவே விலக்கிக்கொள்ள அவளால் இயன்றது. அவள் உத்தரபாஞ்சாலத்தில் தனித்து குடிலில் தங்கியிருப்பதை ஒருமுறை அவருடைய மாணவன் சொன்னான். “அவர் தங்கியிருக்கும் அக்குடிலுக்குள் சென்றேன். இக்குடில் என்றே உளமயக்கு ஏற்பட்டது, ஆசிரியரே. இவ்வளவு குறைவான பொருட்கள். இதே பொருட்கள் என்றுகூடத் தோன்றியது.”
அவர் கிருபியின் அக்குடிலை அகக்கண்ணால் கண்டார். அதற்குள் இருந்த அத்தனை பொருட்களும் நெடுநாட்களுக்கு முன்னரே சொற்களை உதறி தங்கள் இயல்பான பொருளின்மைக்கு சென்றுவிட்டிருந்தன. நீர் நிறைந்திருந்த கலம் நிறைவென்றும் ஒழிவென்றும் இருநிலைக்கு அப்பால் தளும்பிக்கொண்டிருந்தது. அவள் பேசுவதே இல்லை என்றார்கள். இளமையில் கிருபியும் அவரும் தங்களுக்குள் மட்டுமே பேசிக்கொள்பவர்களாக இருந்தனர். குருநிலையில் அவள் அடுமனைகளில் வளர்ந்தாள். அவர் வேள்விச்சாலைகளில். ஆனால் அவள் நாளெல்லாம் பிரியாமல் அவருடன் இருந்தாள். அவர்களுக்குள் உரையாடிக்கொள்வதற்கென்றே ஒரு மொழி உருவாகியிருந்தது. உதிரிச்சொற்களாலானது. உடைந்த சொற்களால் ஆனதாக மாறியது. பின்னர் வெற்றொலிகளையும் சொற்களாக்கினர். ஒன்றை இன்னொன்றால் சுட்டினர்.
அந்த மொழியை கேட்கும் பிறர் அவர்கள் பேசுவதென்ன என்று தெரியாமல் திகைத்தனர். ஆகவே பிறர் செவிகொள்கிறார்கள் என்றாலே அவர்கள் பேச்சை நிறுத்திக்கொண்டார்கள். கிருபிதான் பேசிக்கொண்டே இருப்பாள். பெண்களுக்குரிய நுண்ணுணர்வால் எவர் செவிகூட்டுகிறார்கள் என்பதை அவள் உடனே உணர்ந்துகொண்டாள். அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அவள் தனக்குரிய பெயர்களை போட்டிருந்தாள். முகில் என்று அவள் தந்தையை அழைத்தாள். அவள் சூழ இருந்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு துளியாக தொட்டு எடுத்து தனக்குரிய உலகமொன்றை படைத்தாள். அந்தத் தனியுலகை சொல்லிச்சொல்லி முழுமை செய்யவேண்டியிருந்தது. நிறைவே அடையாத ஓவியனின் தூரிகை அவள் நாக்கு. அவள் அவரை அதற்குள் இட்டுச் சென்றாள். அவருக்குக் காட்டுவதன்பொருட்டு அந்த உலகை அவள் திசைதிருப்பினாள். அது அப்போது மெல்ல உருமாறியது. ஒவ்வொன்றும் இடம்மாறி கலைய மீண்டும் பதற்றத்துடன் சொல்லெடுத்துக் குவித்தாள்.
எழுத்தறிவு பெற்று நூல்களுக்குள் நுழைந்தபோது அவர்கள் அகலத் தொடங்கினர். தந்தையே அருளிய சப்தாங்கப் பிரதீபம் என்னும் தனுர்வேதநூலைக் கற்றதுமே அவர் பிறிதொருவராக ஆனார். அவருடைய கைவிரல்கள் மாறுபட்டன. கைமுத்திரைகள் பிறிதொன்றாயின. விழிகள் உடன் மாறுதல்கொண்டன. அவள் தனக்குரிய நூல்களினூடாகச் சென்றாள். அவர்கள் சந்திப்பது அரிதாகியது. சந்திக்கையில் அவர்கள் விழிதொட்டுக்கொள்ளாமலானார்கள். விழிகள் எப்போதேனும் தொட்டுக்கொண்டால் அவர் இளஞ்சிறுமியான கிருபியை கண்டடைந்தார். அது அவரை திடுக்கிடச்செய்து நாளெல்லாம் நிலையழிந்திருக்க வைத்தது. ஆகவே கூடுமானவரை அவர் அவளை தவிர்த்தார். அவள் துரோணரை மணமுடித்துச் சென்றபோது ஆறுதல் கொண்டார். அக்கணமே அவளை மறக்க முடிவெடுத்தார்.
தனுர்வேதம் கணந்தோறும் வாயில்கள் திறப்பது. உபவேதங்களில் நிமித்தவியலும் மருத்துவமும் வில்லியலும் சிற்பவியலும் பயில்வோரை பிறிதிலாது ஆழ்த்திவைக்கும் ஆற்றல்கொண்டவை. அவை சொல்லியல் போலவோ சொல்லாடலியல் போலவோ ஓர் அமைப்பை உருவாக்கி அதனுள் கொண்டுசென்று முட்டிமுட்டி திசையழியச் செய்வன அல்ல. சொல்லில் கற்றவற்றை மறுகணமே நிகழ்த்தியும் பார்க்கவேண்டும். சொல்லும் நிகழ்வும் கொள்ளும் நுண்ணிய முரண்பாடு சித்தத்தை சிதறடிப்பது. சொல்லும் நிகழ்வும் முற்றிலும் ஒத்திசைவது, சித்தத்தை உறையச்செய்வது. முரண்பாடுகள் காண்கையில் ஒத்திசைவு தேடுவதும் ஒத்திசைவு காண்கையில் முரண்பாட்டுக்காக அலைவதும் உள்ளத்தை ஆழ்த்தும் பித்துக்கள். அவர் பிறிதொன்றிலாதவரானார்.
மீண்டும் அவளை அஸ்தினபுரியில் சந்தித்தபோது அவள் முற்றிலும் மாறிவிட்டிருந்தாள். முன்பென்று ஒன்றில்லாதவளாக ஆகக் கற்றவர்கள் பெண்கள். அவர் கண்களை நோக்கி பேசினாள். அன்னையருக்குரிய சொற்களை உரைத்தாள். கனிந்தும் கடிந்தும் அவருடன் சொல்லாடியபின் அவள் சென்றபோது அவர் ஓர் இழப்புணர்வை அடைந்தார். தான் இழந்தது என்ன என்று அவர் உணர்ந்திருக்கவுமில்லை. அதை நெஞ்சால் துழாவியபின் சலித்து அவ்வண்ணமே விட்டுவிட்டார். அன்று அந்திக்கடனுக்காக நீராடும்பொருட்டு சுனைக்குச் சென்று நீரள்ளக் குனிந்தபோதுதான் நீர்ப்பாவை என அவர் அந்த முகத்தை முதலில் கண்டார்.
முதல்நாள் நெடும்பொழுது அவர் அதை பார்த்துக்கொண்டிருந்தார். சிறிய இலைகளை எடுத்துவீசி அந்த முகம் உயிர்பெற்று நெளியச்செய்தார். பெரிய கற்களை வீசி அது அலையாகி மறையச்செய்தார். அலைதிரண்டு மூடி அது மீண்டும் உருவானபோதும் அதே தோற்றம் கொண்டிருந்தது. நீருக்குள் மிக ஆழத்திலிருந்து அந்த விழிகள் அவரை கூர்ந்து நோக்கின. அவர் அந்தியிருண்டு இருள் சூழ்வது வரை அங்கிருந்தார். பின்னர் நீர்ப்பரப்புகள் அனைத்திலும் அவர் அந்த முகத்தை நோக்கினார். அது காலமற்றதாக இருந்தது. நோக்க நோக்க அவர் மாறிக்கொண்டே இருக்க எங்கோ அது என்றுமென இருந்துகொண்டிருந்தது.
கிருபர் அருகே தேங்கிக்கிடந்த நீரின்மேல் குனிந்து அதன் ஒளிர்ந்த பரப்பில் பார்த்தார். அவருடைய முகம் அதில் தெளிந்தது. வெண்ணிறத் தாடி காற்றில் காய்ந்து மென்பிசிறுகளாக பறக்கத் தொடங்கியிருந்தது. தாடிக்குள் மறைந்த சிறிய உதடுகள். மூப்பில் சற்றே மடிந்த மூக்கு. துயர்கொண்ட, தனிமைகொண்ட, களைத்த விழிகள் அவரை கூர்ந்து நோக்கின. அவர் நோக்கி நெடுநாட்களான முகம். அதில் துரோணரின் சாயல் இருந்தது. மீண்டும் நோக்கியபோது அஸ்வத்தாமனின் சாயல் தோன்றியது. பெருமூச்சுடன் நிமிர்ந்து காட்டை நோக்கியபின் நடக்கத் தொடங்கினார்.
ஒரு மானுட உருவத்திற்கான விழைவு. உயிர்காக்கும் ஒற்றைக் கைப்பற்றல் என. அப்போது எவரையாவது பார்த்தால் நேராகச் சென்று அவனை கட்டித்தழுவிக்கொள்வோம் என தோன்றியது. அவன் கிராதனோ நிஷாதனோ ஆயினும். கொலைஞனோ நோயுற்றவனோ ஆயினும். ஆனால் அவர் பிறரை தொடுவதில்லை. சரத்வான் அவருக்குச் சொன்ன காமஒறுப்பு நோன்பின் நெறிகளில் ஒன்று அது. “செவிகளாலும் கண்களாலும் அறிவனவற்றை உள்ளம் தொட்டு உகந்ததை எடுத்துக்கொள்கிறது. விழைந்த வகையில் உருமாற்றிக்கொள்கிறது. தொடும்போது உள்ளம்கடந்து ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன நாம் அறியாதவை” என்று சரத்வான் சொன்னார். “தொடப்படும்போது மட்டும் விழித்தெழும் தெய்வங்கள் உடலில் உண்டு. தொடுகையினூடாக மட்டுமே ஊடுருபவையும் உண்டு. விழிகளையும் நாவையும் செவியையும் மூக்கையும் நாம் ஆளலாம். தொடுகை நமக்கு முற்றிலும் அப்பாற்பட்டது.”
அவர் தன் மாணவர்களை மிக அரிதாகவே தொட்டார். அவர்கள் தன்னைத் தொட ஒருபோதும் ஒப்பவில்லை. தொடும்போதுகூட பெரும்பாலும் ஆடைகள் மேலேயே கைகள் படும்படி நோக்கிக்கொண்டார். படைக்கலம் பயிற்றுவிக்கையில் படைக்கலங்களை மட்டுமே தொட்டார். எப்போதேனும் தொடநேர்ந்தால் உடனே நீராடினார். அவரை மானுடர் தொடலாகாது என மாணவர் அறிந்திருந்தனர். அவருடைய படைக்கலநிலையில் பெண்களும் குழந்தைகளும் நுழைவதில்லை. ஆனால் துரோணர் எப்போதும் அவரை தொட்டுப்பேசினார். அவர் தோள்களில் கைவைத்து நடந்தார். அவர் நோக்காமலிருந்தால் தொட்டு அழைத்தார். அவர் அத்தொடுகை ஒன்றையே அணுக்கமாக அறிந்திருந்தார்.
தொலைவில் ஓர் மானுட அசைவை கிருபர் கண்டார். ஒருகணத்தில் அது எவரென்றும் தெரிந்தது. இருமுறை அழைத்தும் குரல் எழவில்லை. “யாதவரே! யாதவரே!” என அவர் அழைத்தார். காட்டுவிலங்குபோல கைகளை தழைத்து குனிந்து நடந்துகொண்டிருந்த கிருதவர்மன் அதை கேட்கவில்லை. அவன் உடல் கரிச்சேறால் மூடப்பட்டிருந்தது. ஆயினும் அவன் எப்படி மானுடன் எனத் தோன்றினான் என அவர் வியந்தார். “யாதவரே!” என்று கூவியபடி அவர் அருகே சென்று அவனைத் தொட கைநீட்டியபின் தயங்கினார். அவன் அவரை திரும்பி நோக்கிய பின்னரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின்னர் கண்களில் ஒளி வந்தது. “ஆசிரியரே!” என்றான்.
“நீங்கள் பிழைத்துவிட்டீர்கள் என எண்ணவே இல்லை. அக்களத்திலிருந்து நம் தரப்பில் எவரும் எஞ்சவில்லை என்று எண்ணினேன்” என்றார் கிருபர். “நானும் அவ்வண்ணமே எண்ணினேன். பிலத்திற்குள் விழுந்தமையால் உயிர்தப்பினேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை. எல்லாம் கனவு என்று தோன்றுகிறது… என்னை நாகங்கள் தூக்கி வெளியே வீசின என்று என் உள்ளம் மயங்குகிறது…” கிருபர் “நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள். அது உண்மை. பிற எதையும் எண்ணவேண்டியதில்லை” என்றார். “இதோ நாம் இங்கிருக்கிறோம். இங்கிருந்து அனைத்தையும் தொடங்குவோம். நாம் மீண்டும் காணவேண்டும் என வகுக்கப்பட்டிருக்கிறது.”
கிருதவர்மனின் உடலில் தசைகள் அழுகத் தொடங்கியிருந்தன. நெடுநாளான சடலத்திலிருந்து என அவனிடமிருந்து சீழின் வாடை எழுந்தது. அவன் தோள்களிலும் விலாவிலும் வெள்ளெலும்புகள் சேற்றிலெழுந்த வேர் என வெளித்தெரிந்தன. அவன் வாய் திறந்தபோது கரிய நாக்கு விடாய்கொண்டதுபோல துழாவிச்சென்றது. “ஆசிரியரே” என்று அழைத்த கிருதவர்மனின் குரல் உடைந்தது. “போர் முடிந்தது. ஒருவர்கூட எஞ்சவில்லை… அரசரும் அஸ்வத்தாமனும் என்ன ஆயினர் என்றே தெரியவில்லை.”
கிருபர் “அரசர் மறையவில்லை என்றே என் உள்ளம் சொல்கிறது. அஸ்வத்தாமன் இறப்பற்றவன்” என்றார். “நாம் அவர்களை கண்டடைய முடியும்…” கிருதவர்மன் எண்ணியிராக் கணத்தில் “ஆசிரியரே” என்று கூவியபடி அவரை அள்ளி கட்டிக்கொண்டான். அவர் மார்பில் முகம் சேர்த்து ஓசையுடன் அழத்தொடங்கினான். அவர் அவனை அணைத்துக்கொண்டு “யாதவரே! யாதவரே!” என்றார். தேற்றுவதெங்கனம் என அவருக்குத் தெரியவில்லை. “வேண்டாம், யாதவரே. நாம் எஞ்சியிருக்கிறோம். நாம் எஞ்சியிருப்பதே முதன்மையானது… அதுவே தெய்வ ஆணை” என்றார். அதை தனக்கே மீண்டும் சொல்லிக்கொண்டார்.