தீயின் எடை - 28

தன்னைச் சூழ்ந்திருந்த உடல்களை உணர்ந்தபின் இடநினைவு மீண்டு எழுந்துகொள்ள முயன்ற கிருபர் அவ்வுடல்கள் அத்தனை எடைகொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார். உந்தி உந்தி மேலெழ முயலுந்தோறும் அவை மேலும் எடைகொண்டன. மேலிருந்து களிபோன்ற கரிய சேறும் உடன் உள்ளே வழிந்தது. அதன் பின்னரே தான் ஒரு பிலத்திற்குள் விழுந்திருப்பதை உணர்ந்தார். சிகண்டியுடன் போரிட்டபடி பின்னடைந்ததையும் தன் தேர் கவிழ்ந்ததையும் நினைவுகொண்டார். தன் உடலுக்குமேல் உடல்களின் அடுக்குகள் இருக்கக்கூடும். அந்த ஆழத்தில் ஒலி என ஏதும் வந்தடையவில்லை.

அங்கே அவ்வண்ணம் கிடந்தபடி வெளியேறுவதற்கான வழிகளை எண்ணத்தொடங்கினார். கண்களை மூடியபோதுதான் தன் உடல் மெல்ல அமிழ்ந்துகொண்டே இருப்பதை உணர்ந்தார். மேலிருந்து உடல்கள் உள்ளே சரிந்துகொண்டே இருந்தன. எந்நிலையிலும் அவர் உள்ளே விழுந்த வழியினூடாக வெளியேற இயலாது என்று தோன்றியது. பிலங்கள் ஒற்றை வாயில்கொண்டவையாக இருப்பதில்லை. அவற்றுக்குள் நுழைந்த நீர் வெளியேறுவதற்கான வழிகள் இருந்தாகவேண்டும். முந்தையநாள் களத்தில் எழுந்த அனல் நிலத்தை இறுகச்செய்து வெடிப்புகளை உருவாக்கி தொடர்ந்த மழையில் அவ்வெடிப்புகளை நெகிழச்செய்து ஆழத்துப் பிலங்களுக்கான புதிய திறப்புகளை உருவாக்கியிருக்கிறது. அந்த நீர் வழிந்தோடியிருக்க வேண்டும்.

விழிகளால் அவ்விருளில் எப்பயனும் இல்லை. அவர் செவிகளை கூர்ந்தார். உடல் கூர்ந்தது. கீழே காற்று ஓடிக்கொண்டிருப்பது முதலில் தெரிந்தது. அதன்பின் நீர் விழுந்து செல்லும் ஓசை. தன்னைக் கவ்வியிருந்த உடல்களில் இருந்து மெல்ல விடுவித்துக்கொண்டார். தன் உடல் எழுந்த இடத்தில் மேலிருந்து விழுந்த உடல்கள் செறிந்துவிடலாகாது. தன்மேல் அணைத்ததுபோல் கிடந்த விரைத்துப்போன உடலைப் பற்றி குறுக்காக நகர்த்தி வைத்தார். அதற்கு அடியில் மெல்ல உடலை நழுவச்செய்து அதைக் கொண்டே மேலும் சரிந்த உடல்களை நிறுத்தி அதை பொருத்தினார். உடல்கள் சரிந்து அந்தத் தடையில் முட்டித் தயங்கி அவ்வுடல்களே ஒரு அணையென்றாக நிலைகொண்டன.

அவர் மேலும் மேலும் தன்னை கீழிறக்கிக்கொண்டார். பின்னர் உடலுக்குக் கீழே காற்றை உணர்ந்தார். ஆழம் மிகுதியாக இருக்கக்கூடுமோ? ஆனால் பிலத்தின் அடியில் சேறுதான் இருக்கும். மேலிருந்து உதிர்ந்த வேலோ வாளோ கிடக்குமென்றால் ஒன்றும் செய்வதற்கில்லை. இனி செய்யவேண்டியது அதுமட்டுமே. அவர் தன்னை உதிர்த்துக்கொண்டார். அவர் உடலை பற்றியிருந்த பிலத்தின் விளிம்பு மண் இடிந்து உடன் வந்து அவர் மேலேயே விழுந்தது. ஆழம் மிகுதியில்லை. அவர் விழுந்தது மேலும் உடல்களின் மேல்தான். ஆனால் அவ்வுடல்கள் அசைவுகொண்டிருந்தன. உயிருடன் இருக்கிறார்களா? கையூன்றி எழுந்தபோது அவ்வுடல்கள் அசையும் செதில்கள் கொண்டிருப்பதை உணர்ந்தார். திடுக்கிட்டு எழுந்து நிலைதவறி மீண்டும் விழுந்தார். மீண்டும் எழுந்து நின்றபோதுதான் தரை என அவர் எண்ணியது சுருண்டு நெளிந்து உடலால் நிலம்நிறைத்திருந்த நாகங்கள் என கண்டார்.

அவருடைய உடலளவே ஆன மாநாகங்கள். கையளவும் தொடையளவும் ஆனவை. விரலளவும் மண்புழுவளவும் ஆனவை. அவருடைய உடல் கூசி அதிர்ந்துகொண்டிருந்தது. பின்னர் ஓர் எண்ணம் ஏற்பட்டது. அவை நஞ்சுள்ளவை அல்ல. எனில் இதற்கு முன்னரே அவரை கடித்திருக்கும். அந்நெளிவசைவின்மேல் நடக்க இயலாது. மேலும் அவர் அவற்றின்மேல் கால்வைக்க கூசினார். கைநீட்டிப் படுத்து நாக உடல்களின் அலைகளினூடாக நீந்தி பிலத்தின் கரையோரமாகச் சென்றார். பிலத்தின் சுவர் செம்மண் எனத் தோன்றியது. தொட்டதும் பாறையெனக் காட்டியது. அதன் சொரசொரப்பில் விரல்களால் பற்றிக்கொண்டு அவர் தொற்றினார்.

பின்னர் இருளுக்குப் பழகிய விழிகளால் பிலத்தின் அமைப்பை பார்த்தார். மூன்று கிளைகளாக விரிந்து அகன்றுசென்றது. ஒன்றினூடாக காற்று வந்துகொண்டிருந்தது. பிற குகைகளினூடாக அக்காற்று அகன்று சென்றது. வந்த காற்றில் அவர் நீரின் மணத்தை உணர்ந்தார். அது பசுமையின் மணம் என உடனே உள்ளத்திற்குள் மாறியது. அவர் சுவரில் தொற்றியபடி அதை நோக்கி சென்றார். அந்த வழிக்குள் புகுந்துகொண்டபோது அதில் கீழே கரிய மினுப்புடன் எண்ணைஒழுக்கென நாகங்கள் சென்றுகொண்டிருப்பதை பார்த்தார். அவர் சுவர்ப்பாறையை பற்றியபடி செல்லும்போதே அது கனவே என்னும் எண்ணத்தை அடைந்தார். ஏனென்றால் அதேபோல ஒரு நிகழ்வை அவர் எங்கோ முன்னர் படித்திருந்தார். அர்ஜுனனின் நாகருலகப் பயணம் பற்றிய காவியமா அது?

காவியங்கள் நேரடியாக கனவுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. காவியங்களுக்கு கனவுகளை முற்றாகவே மாற்றியமைக்கும் ஆற்றலுண்டு. முன்னதாக இருக்கும் கனவுகளேகூட பழைய காவியங்களால் உருவாக்கப்பட்டவை. மானுடம் காணும் பொதுக்கனவுகளே காவியங்கள். வெறும் கனவுகள். அவை மண்ணுக்கு அடியில் இந்நாகருலகுபோல் இருந்துகொண்டிருக்கின்றன. மேலே நிகழ்வன அனைத்தையும் உள்ளிழுத்து ஆழிருளில் செறியச் செய்கின்றன. நஞ்சும் ஒளியும் கொள்ளச் செய்கின்றன. ஓசையில்லாமல் வழிந்தோடி நம் மொழிக்குள் குடியேறச் செய்கின்றன. நாகம் பதுங்கிச் சுருண்டு இருக்கும்பொருட்டே உருக்கொண்ட உடல்.

அவர் அப்பால் ஒளியை கண்டார். அது வெளியே இருந்து வரும் ஒளி என முதலில் எண்ணினார். ஆனால் அத்தகைய ஒளி வெளியே இருக்கவில்லை என நினைவுகூர்ந்தார். அங்கே பகல் தொடர்கிறதென்றாலும்கூட அது முன்மாலையாகவே இருக்கவேண்டும். இது பகலொளி. இது வேறு ஏதோ ஒளி. அவர் தயங்கினாலும் அங்கு செல்லாமலிருக்க வழியில்லை என எண்ணிக்கொண்டார். அணுகுந்தோறும் ஒளி மிகுந்து வந்தது. வட்டவடிவத் திறப்பு ஒன்றுக்குள் இருந்து எழுந்தது அவ்வொளி. நிலவொளிபோல் வெண்மையும் தண்மையும் கொண்டது. நிலவொளியைவிட மின்னுவது. அவர் அருகணைந்தபோது அச்சூழலே அவ்வொளியில் மெருகுகொண்டு அதிர்வதை கண்டார்.

அதற்குள் நுழைவதற்கு முன் நின்று சற்று எண்ணம் கூர்ந்தார். ஒருவேளை நான் இறந்துவிட்டிருக்கலாம். அல்லது இது கனவாக இருக்கலாம். இரண்டாயினும் அஞ்சுவதொன்றில்லை. இதை பார்த்தபின் அறியாமல் இங்கிருந்து அகல இயலாது. அவர் அவ்வொளிக்குள் நுழைந்தார். அவர் உடலின் அத்தனை மயிர்க்கால்களும் ஒளிகொண்டு நின்றன. நிழல் விழாத ஒளி என பின்னர் உணர்ந்தார். அவ்வாயிலை அடைந்து உள்ளே நோக்கினார். உள்ளே நூற்றுக்கணக்கான பெருஞ்சுருள்களாக எழுந்து உச்சியில் ஐந்து தலைவிரித்து அமைந்திருந்த மாநாகம் ஒன்றை கண்டார். அதன் மைய முகம் மானுடத்தோற்றம் கொண்டது. உதடுகளில் நகைப்புடன் “வருக, ஆசிரியரே” என்றது. ஆனால் விழிகள் நாகமணிகளாகவே நீடித்தன.

அவர் வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தார். “நான் சரத்வானின் மைந்தனாகிய கிருபன். விற்தொழில் ஆசிரியன். தங்களை சந்திக்கும் பேறுபெற்றேன்” என்றார். “நான் கார்க்கோடகன். என்னை நீங்கள் கேட்டிருக்கலாம். உங்கள் கதைகளில் வாழ்கிறேன். அகங்களில் சுருண்டிருக்கிறேன்” என்றது நாகம். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று கிருபர் சொன்னார். “வருக!” என்றது நாகம். அதன் உடலின் ஒரு வளைவு அலையென எழுந்து பீடமென ஆகியது. “அமர்க… இவ்வுலகில் அனைத்தும் நாக உடலால் ஆனவை. இருளும் ஒளியும்கூட.” கிருபர் அதன்மேல் அமர்ந்தார். “எங்கு வந்திருக்கிறீர்கள் என்று அறிவீர்களல்லவா?” என்றது கார்க்கோடகன். “ஆம், அறிவேன்” என்றார் கிருபர்.

“இங்கு வந்தவர்களில் சிலரே மீண்டிருக்கிறார்கள்” என்று கார்க்கோடகன் சொன்னது. “ஏனென்றால் இப்பெரிய உலகைக் கண்டபின் அங்கு சென்று வாழ்வது எளிதல்ல. அது பருப்பொருட்களின் இணைவுகளால் ஆனது. இன்றுநேற்றுநாளை என முக்காலம் கொண்டது. சென்றகாலம் மறதியிலும் வருங்காலம் அறியாமையிலும் மூடியிருப்பதனால் நிகழ்கணத்தில் நின்று நடுங்கும் வாழ்க்கை கொண்டது. அவ்வுலகின் மெய்யான உணர்வு ஒன்றே, பதற்றம். அச்சமென, விழைவென, காமமென பலநூறு உணர்வுகளாக அதுவே உருக்கொள்கிறது. இங்கு அப்பதற்றம் இல்லை” என்றது கார்க்கோடகன். “நீங்கள் விழைந்தால் இங்கே வாழமுடியும். முன்னரே பதஞ்சலி முனிவர் இங்கு வாழ்கிறார்… அவர் தலைமையில் பல்லாயிரம் முனிவர்கள் நாகருலகை அணிசெய்கிறார்கள்.”

“என் ஒரு நாத் தொடுகையில் நீங்கள் அமரத்தன்மை பெற இயலும்” என்று கார்க்கோடகன் தொடர்ந்தது. “உங்கள் உடற்குருதி அமுதென்றாகும். உங்கள் நா பிளந்து ஒலியென்றும் பொருளென்றும் பிரியும். அதன்பின் ஒலியும் பொருளும் முயங்குதலின் முடிவிலா ஆடலான மொழி மறைந்துவிடும். உங்கள் விழிகள் இமைக்காமலாகும். அதன்பின் கணங்களின் தொடரான காலம் மறைந்துவிடும். அறுபடாத கடுவெளிக்காலம் அமையும். இப்புடவி தோன்றி மறையும் ஒன்றென்று தன்னை காட்டாது. என்றென்றுமிருக்கும் ஒன்றென்று ஆகும். இங்கு அழிவும் அழிவின்மையும் இல்லையென்பதனால் தெய்வங்களும் இல்லை.” கிருபர் பெருமூச்சுவிட்டார். “இங்கிருப்பதற்கான வழி ஒன்றே. அங்கே உங்களுக்கு ஒரு துளியும் எஞ்சலாகாது. முற்றறுத்து இங்கே உதிரவேண்டும்.”

கிருபர் “அங்கே எனக்கு எஞ்சியுள்ளவை என்ன என்று அறியேன்” என்றார். “என் விழிகளை நோக்குக! அங்கே எஞ்சியிருப்பவற்றை காண்பீர்கள்” என்றது கார்க்கோடகன். கிருபர் அதன் விழிகளை நோக்கினார். பெருமூச்சுவிட்டு அமைதியடைந்தார். “அங்கே ஒன்றுமில்லை” என்றார். “நீங்கள் சென்றடைய எதுவும் மிஞ்சவில்லை.” கிருபர் “ஆம்” என்றார். மீண்டும் மீண்டும் பெருமூச்சுகளை விட்டுக்கொண்டிருந்தார். “நீங்கள் அங்கு மீள்வதென்றால் இங்கிருந்து ஒரு துளி நஞ்சை பெற்றுக்கொள்ளலாம். அங்குள்ள உங்கள் வினை முடிக்க அது படைக்கலமும் வழித்துணையும் ஆகும். அங்கு நீங்கள் விழையும் வடிவை அது கொள்ளும். வஞ்சமும் சினமும் ஆகி வளரும். பழியென ஓயாமல் ஊறும். கரவென்றும் சூதென்றும் ஆற்றல் கொள்ளும். ஒருபோதும் உறங்காத உள்ளத்தை அளிக்கும். அங்கு அது அழிவின்மை என்றே பொருள்படும்.”

கிருபர் “நான் அங்கு இயற்றுவதற்கும் ஒன்றுமில்லை” என்றார். “எனக்கென அங்கே எஞ்சுவது எது என்றும் அறியேன். ஆனால் உள்ளம் அங்கே மீள்கிறது.” கார்க்கோடகன் சீறல் ஒலியெழுப்பி நகைத்து “நன்று, நீங்கள் செல்லலாம். நீங்கள் விழையும் கணம் என் அமுதுடன் நான் உங்கள் முன் தோன்றுவேன்” என்றது. கிருபர் “நான் விழைவதென்ன என்று எனக்கே தெளிவில்லை” என்றார். “நான் அறிவேன்” என்று கார்க்கோடகன் புன்னகைத்தது. கிருபர் வணங்கி எழுந்துகொண்டார். கார்க்கோடகனின் உடலின் அலை எழுந்து அவரைத் தூக்கி வெளியே செலுத்தியது. பிலத்தின் விளிம்பைச் சென்றடைந்ததும் அவர் அதன் பாறைமுனையை எட்டிப் பற்றிக்கொண்டார். உடலை உந்தி வெளியே செலுத்தி தன்னை பிதுக்கி இழுத்து நிலத்தின்மேல் ஏறினார். இடையாடை அவிழ்ந்து பிலத்தின் இடுங்கிய வழிக்குள் சிக்கிக்கொள்ள சேற்றில் வழுக்கியபடி வெற்றுடலுடன் அவர் வெளியே வந்தார்.

தன்னைச் சூழ்ந்திருந்தது குருக்ஷேத்ரம் அல்ல என்று கிருபர் கண்டார். இலைகள் சொட்டி இலைகள் மேல் விழும் ஓசையுடன் குறுங்காடு செறிந்திருந்தது. இலைப்பரப்புகள் ஒளியில் பளபளத்து அசைந்தன. அவர் தன்மேல் இருந்த கரிய விழுக்கு அந்த மென்மழையில் நனைந்து வழிந்து உடலில் இருந்து கீழிறங்கும் கோடுகளை குனிந்து நோக்கினார். அருகில் எங்கோ நீர்நிலை இருப்பதை புதர்கள் காட்டின. யானைக்காதென திரும்பிய காட்டுசேம்பிலைகள். பேரிலைப் பகன்றைகள். நீர் நிறைந்த வன்பூசணிகள். இலைகளிலிருந்து சிறிய பச்சைத் தவளைகள் எழுந்து பாய்ந்து இலைகளில் தொற்றி விழி உருட்டி அசைந்தாடின. தண்டுசெழித்த நீர்ப்புல்களினூடாக சிற்றோடைகள் சரிந்தோடின. அவ்வழியே நடந்தார்.

இலைகளுக்கு அப்பால் பச்சைநிற ஒளி என அவர் சிறிய நீர்நிலையை கண்டார். சேற்றுப்புல்லில் கால்பதிந்து நீர் ஊறிப்பெருகும் தடம் அமைய நடந்து அதன் அருகணைந்தார். குளத்தின் நீர்ப்பரப்பு மென்மழையில் மெய்ப்பு கொண்டிருந்தது. கரையில் சப்பைக்கல் வடிவில் இருந்த தவளைகள் கால்பெற்று சுண்டப்பட்டு எழுந்து நீர்ப்பரப்பில் தங்களை எறிந்துகொண்டு அலைவட்டங்களை கிளப்பின. வாள்கள் என வட்டங்களின் விளிம்புகள் மோதித் தழுவி கரைந்து உருவழிந்து கரைச்சேற்றில் நாவென்று மாறி நெளிந்தன. தவளைகள் துடுப்புக்கால்களை உதைத்துத் துழாவி மிதந்துசென்றன. முகில்செறிந்த வான் பரப்பின்மேல் ஒரு நீர்ப்பாம்பு தலைமட்டும் சிறு நெற்றென மிதந்து நின்றிருக்க வால் ஆழத்தில் நெளிய அசைவிலா விழிகளுடன் நின்றது.

கிருபர் நீரில் இறங்கி இடைவரை மூழ்கினார். அடித்தரையில் சேறில்லை, மென்மணல் காலை வாங்கிக்கொண்டது. காட்டில் சிற்றோடைகளென ஊறி வந்து தேங்கிய நீரின் தண்மையை உடலில் உணர்ந்தார். தாடை இறுகச்செய்யும் குளிர். ஆழ மூழ்கி எழுந்தபோது உள்ளத்தின் எடையனைத்தும் அகன்றிருப்பதை, சோர்ந்து தொங்கிய முகத்தசைகள் புன்னகையில் என விரிந்திருப்பதை உணர்ந்தார். மூழ்கி எழும்தோறும் தோல் உரிந்து உரிந்து அகல்வதுபோல புதிதாக மாறிக்கொண்டிருந்தார். நீருள் சென்று அடியில் படிந்திருந்த மென்மணல்மேல் சிற்றுயிர்கள் வரைந்த கோட்டுவடிவங்களை நோக்கினார். விழிமலைத்த சிறிய மீன்கள் அவர் கண்முன் சிறகுகள் உலைய நீந்தின. அவர் உடலைத் தொட்டு வருடியபடி நீர்ப்பாம்பு சென்றது.

அவர் எழுந்து கரையை அணுகி விளிம்பிலிருந்து மென்மணலை அள்ளி உடலில் தேய்த்து உரசிக் கழுவினார். உள்ளங்கைகளிலும் மேல்கால்களிலும் குருதி படிந்திருந்தது. கரைந்து நீரில் பரவி கலங்கி அது அகன்றபோது கைக்கோடுகளிலும் விரல்வரிகளிலுமெல்லாம் குருதி படிந்திருந்ததை கண்டார். தேய்க்கத் தேய்க்க தோல்வண்ணம் துலங்க குருதி வரிகளும் குருதிப் புள்ளிகளும் மேலும் மேலும் எழுந்து தெரிந்தன. ஏழுமுறை மணல் அள்ளிப் பூசி உடலை கழுவினார். கரையேறி சேற்றுக்கரையில் படர்ந்திருந்த திருதாளி இலைகளைக் கிள்ளிச் சேர்த்து கைகளில் வைத்து கசக்கி முடியிலும் தாடிமீசையிலும் தேய்த்துக்கொண்டார். நுரையும் பசையுமாகத் தேய்த்து விரல்களைச் செலுத்தி குழல்கற்றைகளை உருவி நீவித் தேய்த்து மூழ்கி எழுந்தார். கைகளை விட்டு தாடியை நீவி நீவி தூய்மை செய்தார்.

மேலே எழுந்தபோது தாடி மிக மென்மையாக ஆகிவிட்டிருந்ததை உணர்ந்தார். பதினெட்டு நாள் போரில் முகத்தில் எழுந்த இன்னொரு முகம்போல அது கெட்டியாக மாறிவிட்டிருந்தது. முடிகள் கம்பிகளென்றாகி தடித்து, வியர்வையில் நெகிழ்ந்து நரம்புகளாகி, குருதிவிழுது பூசி தசையென்றே மாறி களத்திற்கு வந்த ஒவ்வொருவரின் முகமும் நீண்டு வளர்ந்து தோற்றம் மாறியது. அவர்கள் முன்பு கொண்டிருந்த உணர்ச்சிகள் மாறின. போர்க்களம் அனைவருக்கும் சமைத்தளித்த முகம். துயரமும் சீற்றமும் குழப்பமும் தனிமையும் என. அது மாறாத முகம். தன் முகம் எப்படி இருந்தது? அதில் திகைப்பு மட்டுமே இருந்திருக்கவேண்டும்.

அந்த முகம் இந்த நீரில் கரைந்து மறைந்துவிட்டிருக்கிறது. அதிலிருந்த உணர்வுகளும் கரைந்துவிட்டிருக்கவேண்டும். அவர் தாடியில் கையோட்டிக்கொண்டே இருந்தார். இளமையில் தாடி மிகமிக மென்மையானதாக இருக்கிறது. முகத்தின்மேல் ஒரு பூச்சு என பரவுகிறது. ஓர் உணர்வு பருவடிவமாகக் குடியேறி அவ்வண்ணமே நிலைப்பதுபோல. பின்னர் அது செறிகிறது. பின் மெல்ல மெலிகிறது. அப்போது அதுவே முகமென்று ஆகிவிடுகிறது. அவருடைய தாடி தெளிந்த வெண்ணிறம் கொண்டது. பீஷ்மரின் தாடியும் துரோணரின் தாடியும் பனிவெண்ணிறம்கொண்டவைதான். அவை குருக்ஷேத்ரத்தில் குருதிபட்டு சிவந்தன. நிறம் மங்கி மரவுரி போலாயின. அவற்றில் கருமை மீள்வதுபோலக்கூடத் தோன்றியது.

களத்திலிருந்து திரும்பும் பீஷ்மரை ஒருமுறை கண்டபோது அவர் இளமைகொண்டுவிட்டதாக உளம் மயங்கி பின்னரே அவர் கண்டுகொண்டார், அவருடைய தாடியின் வண்ணம் அடர்ந்தமையால் எழுந்த உளமயக்கு அது என. அவள் குருதி பூசி நீவி குழல் முடித்தாள். இங்கே குருதி பூசப்படாத குழல் எவருக்கு உள்ளது? அங்கே யுதிஷ்டிரனும் இந்நேரம் குருதி பூசிய குழலை கழுவி நீவிக்கொண்டிருக்கக் கூடும். அன்றி அதையே தன் மணிமுடியென அவன் சூடவும்கூடும். இருள்முகச் சைவர்கள் தன் குருதியை தானே பூசி மயிரை சடையாக்குவார்கள். ரக்தஜடா என்று அதை அழைப்பார்கள். காலபைரவன் குடியேறும் சடை அது என்பார்கள். குருதிச்சடைகள் இக்களமெங்கும் பெருகியிருந்தன.

தலைமயிரைச் சுழற்றி முன்னாலிட்டபோது முடிநுனியிலிருந்து செங்குருதி வழிந்தது. திகைத்து புண் ஏதுமிருக்கிறதா என தலைக்குள் கைவிட்டுப் பார்த்தார். மீண்டும் நீரில் அலசியபோதுதான் தலைமயிரிலிருந்தே அந்தக் குருதி கரைந்து வருகிறது என்று தெரிந்தது. மீண்டும் மூழ்கி எழுந்து அலசியபின் கரையேறி இன்னொருமுறை தாளியிலை பறித்து கசக்கித் தேய்த்து நீராடினார். நீரில் கரையும்தோறும் உடலில் இருந்து பசுங்குருதி வாடை வீசுவதாகத் தோன்றியது. நான்குமுறை தலைமுடியை திருதாளி இலைச்சாறால் கழுவினார். கரையேறி எழுந்து கைகளை நீட்டிப் பார்த்தபோது தோல் ஊறிச்சுருங்கி நகங்கள் மென்மையாகி கை ஒளி கொண்டிருந்தது. கால்கள் அகழ்ந்தெடுத்துக் கழுவிய கிழங்குகள் போலிருந்தன. கைவிட்டு தலைமயிரை நீவி பின்னால் சரித்தார். கைகளை நீட்டியபோது அதிர்ச்சியுடன் நக இடுக்குகளிலிருந்த கருங்குருதியை கண்டார்.

தளர்ந்து மீண்டும் சேற்றிலேயே அமர்ந்தார். பற்கள் கிட்டிக்க கண்களை மூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அருகில் நின்றிருந்த நாணலை ஒடித்து அதைக்கொண்டு கைவிரல்களிலும் கால்விரல்களிலும் நகங்களைக் கிண்டி குருதிப்பாடுகளைக் களைந்து தூய்மை செய்தார். இனி எங்கிருக்கும் குருதி? உள்ளங்காலை கரையோரமிருந்த பாறையில் உரசி உரசிக் கழுவினார். கைகளை மணலில் தேய்த்தார். எழுந்து சென்று குச்சி ஒன்றை ஒடித்துவந்து பல்துலக்கினார். மீண்டும் மூழ்கி உடலை அலம்பி எழுந்தபோது எங்கோ குருதிக்கறை எஞ்சியிருப்பதாகத் தோன்றியது. தன் உடலையே குனிந்து நீரில் பார்த்தார். நீர்நிழல் நிறமற்றிருந்தது. நீரை அள்ளி முகத்தில் விட்டுக்கொண்டபோது இமைமயிர்கள் கையில் பட்டன. அவை மெல்லிய கம்பிகள் போலிருந்தன. விரல்களால் இமைமயிர்களைத் தொட்டு உருவி எடுத்தபோது கரிய குருதிப்பிசுக்கு வந்தது.

குமட்டல் எழுந்து அவர் உடல் குனிந்தது. சேற்றுப்பரப்பிலேயே சற்றுநேரம் அமர்ந்திருந்தார். பின்னர் மீண்டும் குனிந்து திருதாளியை அள்ளிக் கசக்கி முகத்தில் பூசினார். இமைமயிர்களை ஒவ்வொன்றாக விரல்களால் பற்றி நீவி இழுத்து தூய்மை செய்தார். மூழ்கிக் கிடந்தபோது கரையேறுவதே ஒவ்வாமையை உருவாக்கியது. அக்காற்றில் குருதி இருக்கிறது. நான் மேலெழுந்ததுமே வந்து என்னை சூழ்ந்துகொள்கிறது. இத்தனை நாள் இக்குருதி என் மீது படிந்திருக்கிறது. தோலுக்குமேல் ஒரு தோல் என. ஆடைக்கு அடியில் இன்னொரு ஆடை என. அது எவ்வகையிலும் தெரியவில்லை. அங்கு அனைவரும் அப்படித்தான் இருந்திருப்பார்கள். ஆகவே எவருக்கும் எவரையும் மாறுபாடாகத் தெரியவில்லை. அக்களத்தையே குருதிப்படலம் மூடியிருந்திருக்கிறது. ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும். அங்கிருந்த படையின் பேருடல் மூடிய தோல் அது.

உடலெங்கும் குருதி. குருக்ஷேத்ரத்தில் எவரும் குருதியை கழுவிக்கொள்ள இயலாது. நீர் இருந்தால்கூட ஒவ்வொருநாளும் குருதியை கழுவிக்கொள்ள இயலுமா என்ன? அவ்வண்ணம் கழுவிக்கொண்ட பின் மீண்டும் போருக்கெழ இயலுமா? ஒவ்வொருநாளும் குருதி படிந்த கைகளால் உணவுண்டனர். குருதியை உண்டனர். துளித்துளியாக. சுவைகண்ட பின்னர் நேரடியாகவே அருந்தலாயினர். எதிரியின் குருதி. தன் குருதியையும்தான். குருதிச்சுவை கொண்ட தெய்வங்கள் மானுடரில் எழுந்து நிகழ்த்திய போர். பதினெட்டு நாட்களில் எத்தனை பேரின் குருதி என் உடல் மேல் தெறித்திருக்கும்! என் உடல்குருதியும் வழிந்து உடன்கலந்திருக்கும். குருதியாடிய உடல்கள் குருதியில் ஊறிய ஆடைகள். ஆனால் படைக்கலங்களில் குருதி ஒட்டுவதில்லை. சுவைத்தவற்றை அக்கணமே நாக்கு தூய்மை செய்துகொள்கிறது. மீண்டும் மீண்டும் சுவை தேடுகிறது. நாக்கும் ஓர் அனல். அனல் எதனாலும் தூய்மை இழப்பதில்லை. நாக்கு பருவடிவம் கொண்ட குருதி. திளைப்பது, சுவைப்பது.

அங்கே அன்னையர் வந்தால் மைந்தரை அடையாளம் கண்டுகொண்டிருக்க முடியாது. அவர்கள் முகர்ந்தறிந்த குருதிமணம் மைந்தரில் இருக்காது. அன்னையின் முலைப்பாலின் மணமே குருதிமணம் ஆகிறது என்பார்கள். அது அன்னையின் கருவறைநீரின் மணம் என்பார்கள். குருதியென அப்படையினரின்மேல் படர்ந்திருப்பவர்கள் பல்லாயிரம் பல்லாயிரம் அன்னையர். சிதையேறியவர்களும் மண்புதைந்தவர்களும் பற்பல குருதிகளை கொண்டிருப்பார்கள். குருதிமணம் கொண்டு ஆத்மாக்களைத் தேடி சிதைக்கும் இடுகாட்டுக்கும் வரும் தெய்வங்கள் எவரை கண்டுகொள்ளும்? இமைகளில் குருதி. புருவங்கள் குருதியுறைந்த வடுக்கள்போல. விழிகளுக்குள் சென்றிருக்குமா இக்குருதி? இவை எவருடைய குருதி? பெயரறியாத வீரர்களின் குருதி. இதோ என்னருகே ஓர் விண்புகுந்த அன்னை மீண்டு வந்து “என் மைந்தனின் குருதியை நீ அணிந்திருக்கிறாய்” என்றால் நான் என்ன மறுமொழி சொல்வேன்?

காட்டுக்குள் இருள் செறியத் தொடங்கியது. அவர் நீரிலிருந்து எழுந்து கரையை அடைந்து தலைமயிரை கைகளால் வகுந்தார். பின்னர் ஒரு மயிர்க்கற்றையை எடுத்து முகர்ந்து பார்த்தார். பசுங்குருதியின் வாடை. சற்றுமுன் வெட்டப்பட்ட ஊனிலிருந்து என. அவர் உள்ளம் செயலற்று சொல்லின்றி சற்று நேரம் அங்கேயே நின்றார். சலிப்புடன் தலையை அசைத்துக்கொண்டு குளத்திலிருந்து விலகி நடந்தார். நடக்கும்தோறும் உடலெங்கும் குருதியை உணர்ந்தார். கைநகங்களை நோக்கினார். குனிந்து கால்நகங்களை  ஒவ்வொன்றாக பார்த்தார். குருதி குருதி குருதி என உள்ளம் அவர் உடலையே துழாவித் தேடியது. நினைவுகூர்ந்து காதுக்குள் சுட்டுவிரலை விட்டு எடுத்துப்பார்த்தார். விரலில் நீர்பட்டுக் கரைந்த குருதி படிந்திருந்தது.

ஒரு விம்மலோசை அவருடைய ஆழத்திலிருந்து எழுந்தது. திரும்ப ஓடி குளத்தில் பாய்ந்தார். நீருக்குள் மூழ்கி அடித்தளத்துடன் படிந்து மூச்சடக்கிக் கிடந்தார். எழுந்து கரையை அடைந்து மண்ணையும் இலைகளையும் அள்ளி உடலெங்கும் பூசிக்கொண்டார். காதுகளிலும் மூக்கிலும் மண்ணையும் குச்சிகளையும் விட்டு துழாவிக் கழுவினார். குருதி எங்கிருந்து வருகிறது? என் உடலுக்குள் புகுந்துகொண்டுவிட்டதா? தோலில் ஊறி உள்ளே நுழைந்து என் குருதியுடன் கலந்துவிட்டிருக்கிறதா? என் குருதிதான் மயிர்க்கால்கள் வழியாக ஊறி வெளியே வழிகிறதா? என் குருதியை முழுக்க வெளியே ஊற்றிவிடவேண்டும். மிக எளிது, என் கழுத்தை வெட்டிக்கொண்டு விழுந்தால்போதும். இறுதித்துளிவரை வெளியேறவேண்டும். ஒரு துளியும் உள்ளே எஞ்சலாகாது…

இரவெல்லாம் அவர் அந்தக் குளத்திலேயே இருந்தார். பலமுறை எழுந்து மண்ணையும் தழைகளையும் அள்ளி உடலெங்கும் பூசி நீராடினார். மீண்டும் மீண்டும் மூழ்கி எழுந்தார். பலமுறை அங்கிருந்து எழுந்து நடந்து புதர்களுக்குள் சற்றுதொலைவு சென்று தன் உடலில் எங்கேனும் குருதியின் வீச்சத்தை உணர்ந்து மீண்டும் வந்து நீரில் பாய்ந்தார். இரவு கடந்து சென்றதை அவர் அறியவில்லை. காலைப்பறவைகளின் ஒலியையும் செவிகொள்ளவில்லை. நீர்ப்பரப்பின் கருமை வெளிறிக்கொண்டே இருந்தது. புதர்களினூடாக விழியறியா புலரி மென்கதிர் வந்து நீர்ப்பரப்பைத் தொட்டு அகஒளி பெறச் செய்தது. இலைநிழல்கள் நெளிந்தசையத் தொடங்கின. நாணல்கள் நாகங்களாகி நீருள் அமிழ்ந்தன.

குளத்திற்குள் எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து மூழ்கியும் நீந்தியும் எழுந்து தலையையும் உடலையும் உரசிக்கழுவியும் திளைத்துக்கொண்டிருந்த கிருபர் தன் கைகள் தன்னருகே இரு நாகங்கள் என நீந்துவதைக் கண்டு திடுக்கிட்டு பின்னகர்ந்தார். பின் அவை தன் கைகள் என உணர்ந்து கால்துழாவியபடியே முகத்தருகே நீட்டிப்பார்த்தார். நீர்க்கொடிகள் என அவை ஈரம் ஒட்டாத வழவழப்பை அடைந்திருந்தன. அவற்றின் செவ்வண்ணம்தான் புலரி எழுந்துவிட்டது என்பதை அவருக்குக் காட்டியது. சூழ நோக்கியபோது காடு பசுமைபெறத் தொடங்கிவிட்டிருந்தது. இலைவிளிம்புகள் கூர்கொண்டிருந்தன. பறவைகள் தலைக்குமேல் கூச்சலிட்டுக் கொந்தளித்தன.

கிருபர் இளைஞனைப்போல கைசுழற்றி வீசி நீந்தி கரையேறி சேற்றில் சென்று நின்றார். ஆடையற்ற உடலுடன் நடந்து காட்டுக்குள் சென்று கீழே உதிர்ந்து கிடந்த பாளைகள் சிலவற்றை எடுத்து நாணலால் தைத்து இடையாடை என அணிந்துகொண்டார். குழலை நீவி திரிகளாக்கி பின்னாலிட்டபின் திரும்பி அந்தக் குளத்தை பார்த்தார். அது ஒரு கண் என இமைப்பின்றி உயிரசைவுகொண்டிருந்தது. காட்டின் நோக்கு அவர்மேல் நிலைத்திருந்தது.

காட்டுக்குள் நடந்தபோது உள்ளம் குளிர்ந்து அமைதிகொண்டிருந்தது. சொற்கள் மிக மெல்ல துளித்து உருக்கொண்டு உதிர்ந்தன. தன் காலடிகளின் சீரான ஓசையை கேட்டுக்கொண்டிருந்தார். கனிந்த பழங்களுடன் தழைந்து நின்ற வாழை ஒன்றைக் கண்டதும் பசியை உணர்ந்தார். அருகணைந்து அதன் கனிகளை பிடுங்கிக்கொண்டு அப்பால் சென்று ஒரு மரத்தடியில் வேர்ப்புடைப்பின்மேல் அமர்ந்தார். முதற்பழத்தை உரித்து உண்ணும்பொருட்டு வாயருகே கொண்டுசென்றபோது தன் கையை பார்த்தார். விரல்களை நீட்டி கூர்ந்து நோக்கியபோது சிறுவிரலின் நகத்தின் கீழ்வளைவில் மெல்லிய கோடுபோல குருதியைக் கண்டார்.