தீயின் எடை - 27

திருஷ்டத்யும்னன் தேரிலேறி நின்று சூழ நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை ஒரு மானுட அசைவுகூட இருக்கவில்லை. பதிந்து உறைந்த கரிய அலைகளைப்போல மானுட உடல்கள் தெரிந்தன. அவை மெல்ல நெளிந்து ததும்பிக்கொண்டிருப்பது போலவும் அசைவிலாது அமைந்துவிட்டவை போலவும் தோன்றியது. முகில்திரள்கள் விளிம்போடு விளிம்பு பொருந்தி இணைய வானம் இருண்டபடியே வந்தது. வானில் பறவைகள் என ஏதுமில்லை. அவை மழைக்கு அஞ்சி காடுகளுக்குள் சென்றுவிட்டன என்று தோன்றியது.

அவன் அந்தத் திரளில் ஒருவனாவது எழக்கூடும் என எதிர்பார்த்தான். ஒருவன் எழுந்தே ஆகவேண்டும் என எண்ணினான். ஒருவன் எழமாட்டானா என ஏங்கினான். ஒருவன் எழுந்தால் என்ன ஆகப்போகிறது? எழும் ஒருவன் முற்றிலும் பொருளற்றவன். அவன் ஏற்கெனவே இறந்துவிட்டவனைப்போலத்தான். ஆனால் ஒருவன் எஞ்சுவதென்பது ஒரு மறுப்பு. தெய்வங்களிடம் சொல்ல மனிதனுக்கு ஒற்றைச் சொல்லேனும் எஞ்சியிருக்கிறது என்னும் உறுதிப்பாடு. அவன் விழிகள் பதைத்துப்பதைத்து அந்த உடல்விரிவில் அலைந்தன. உடல்களாலான சேறு. நுரை என அது உடைந்து அழிந்துகொண்டிருந்தது. சரிந்திருந்த யானைகளும் புரவிகளும்கூட கரிச்சேறால் மூடப்பட்டு கொப்புளங்கள் போலிருந்தன.

ஒரு விலங்குகூடவா எழவில்லை? ஒரு புரவிகூடவா? புரவிகளால் இயலும். அவை மிக எளிதாக இங்கிருந்து தப்பிச்செல்ல முடியும். மானுடராலும்கூட இயலும். இந்தப் பேரழிவை இன்று காலையிலேனும் உணராதவர் எவருமிருக்க இயலாது. ஆனால் எவரும் தப்பவில்லை. காட்டுத்தீ எழுகையில் பறவைகள் கூட்டம்கூட்டமாக அதில் வந்து விழுந்து உடல்பொசுங்கி மறைவதை அவன் கண்டிருக்கிறான். மிகப் பெரியவை கொள்ளும் ஈர்ப்பு அளவற்ற ஆற்றல்கொண்டது. சிறியவை அதிலிருந்து தப்பவே முடியாது. மிகப் பெரிய சுழிகள் அவை. கடுவெளி புவிமேல் திறந்த கரிய துளைகள். பொன்றாப் பசிகொண்ட வாய்கள்.

குருக்ஷேத்ரம் ஓசையற்றிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். ஆனால் அவன் அதை அக்கணம் வரை ஓசைப்பெருக்காகவே உணர்ந்துகொண்டிருந்தான். சென்ற இருபது நாட்களுக்கும் மேலாக அது ஓசையிட்டபடியே இருந்தது. கடல் என. ஓவியத்தில் எழுந்த கடலிலும் ஓசை எழும் என்பார்கள். பின்னிரவிலும் புலரியிலும் அது முற்றடங்கியிருக்கையிலும் உள்முழக்கமென ஓசை கேட்டுக்கொண்டேதான் இருக்கும். ஓசையின்மையை உணர்ந்ததுமே அவ்வெளி ஓசையற்றதாக ஆகியது. வெறும் ஓவியப்பரப்பென ஆகி விழிமலைக்கச் செய்தது. செவிகளைக் குத்தும் ஓசையின்மை.

அவனுள் ஒன்று பதைபதைத்தது. தலையால் அந்த வெளியை அறைந்து அறைந்து உலுக்க முயன்றது. இறந்த அன்னையின் உடல்மேல் முட்டிமுட்டி எழுப்ப முயலும் குழவிபோல. பின்னர் சலித்து அதன் மேலேயே விழுந்தது. ஓர் உயிர்கூட எஞ்சவில்லையா? ஒரு துளிகூடவா? அவனுக்குள் பெருங்கலம் கவிழ்வதுபோல் ஒன்று நிகழ்ந்தது. தலையில் அறைந்துகொண்டு ஓங்கி வீறிட்டான். தலைக்குள் சிக்கிக்கொண்ட எதையோ அறைந்து அறைந்து உடைத்து விடுவிக்க விழைபவன்போல. தன் வாயில் இருந்து எழுந்த விலங்கொலியை அவன் கேட்டான். தேர்த்தட்டில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் விரல்மடக்கித் தூக்கி வலிப்பெழுந்தவன்போல் தசைகள் அதிர்ந்து உடல் துடிக்க கூவி அழுதான்.

அங்கே சூழ்ந்திருந்தவர்கள் அவனை திரும்பி நோக்கினர். எவரும் எதுவும் சொல்லவில்லை. வெறித்த விழிகளுடன் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் தொய்ந்து சரிந்து தேர்த்தட்டிலேயே படுத்தான். கருக்குழவிபோல் உடலை சுருட்டிக்கொண்டான். ஒரு சுருளாக ஆகி, சுழியாக மாறி, புள்ளியாக சிறுத்து மறைந்துவிட விழைபவன்போல. அவன் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. அவ்வப்போது வலிப்பு என ஓர் அதிர்வெழுந்து மீண்டும் அடங்கியது. சாத்யகி கைகளைக் கட்டி நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தான். சகதேவன் நகுலனின் அருகே சென்று நின்றான். பின்னர் இருவரும் உடல்தொட்டுக்கொண்டனர். மெல்ல உடல்பதிந்து ஒருவர் என ஆயினர். சுருதகீர்த்தியும் சுருதசேனனும் தேர்த்தட்டில் குருதிவழிய விழுந்து நினைவழிந்தனர். சிகண்டி நிலைத்த விழிகளுடன் குருக்ஷேத்ரத்தை நோக்கிக்கொண்டு நின்றார். அக்காட்சியை உள்வாங்காதவர்போல. அல்லது துளித்துளியாக அதை அறிந்துகொண்டிருப்பவர்போல.

கொடுங்கனவு ஒன்றைக் கண்டு திருஷ்டத்யும்னன் விக்கலோசை எழுப்பியபடி எழுந்து அமர்ந்தான். அவன் முன் இளைய யாதவர் களத்தை நோக்கியபடி மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். விழிகள் திறந்திருந்தன. உதடுகளில் ஒரு சொல் திகழ்வதன் அசைவின்மை. கைகளை மடியில் வைத்து ஊழ்கத்திலென கால்மடித்து நுகத்தில் அமர்ந்திருந்தார். அவன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் குழலில் மயிற்பீலி காற்றில் நலுங்கிக்கொண்டிருந்தது. அவன்மேல் எடைமிக்க அடி ஒன்று விழுந்ததுபோல் அக்கனவை நினைவுகூர்ந்தான். அவ்விசையில் அவன் உடல் முன்னோக்கிச் சரிந்து தேர்த்தட்டில் அவன் முகம் அறைபட்டது. கையூன்றி நிமிர்ந்து பின் தூணைப் பற்றியபடி எழுந்து நின்றான். “யாதவரே!” என்றான். மீண்டும் உரக்க “யாதவரே!” என்றான். மன்றாட்டென, அலறல் என  “யாதவரே! யாதவரே!” என கூவினான்.

இளைய யாதவர் விழித்துக்கொண்டு அவனை நோக்கி புன்னகைத்தார். “போர் முடிந்துவிட்டது” என்று அவன் சொன்னான். அச்சொற்கள் நாவிலெழுந்ததுமே அதுவரை கொண்ட அத்தனை உணர்வுக்குழம்பல்களும் சுருங்கி அச்சொற்களாக மாறின. அது எளிதாக, கையாள உகந்ததாக இருந்தது. “போர் முடிந்துவிட்டது, யாதவரே” என்று அவன் சொன்னான். “களத்தில் எவரும் எஞ்சவில்லை…” அவன் அச்சொற்கள் வழியாக உளம் மாறிக்கொண்டே சென்றான். “ஒருவர் கூட… ஒருவர்கூட எஞ்சவில்லை.” அவனுள் விந்தையானதோர் தித்திப்பு எழுந்தது. “நாம் சிலரே எஞ்சியிருக்கிறோம்” என்றான். இனிமையும் தண்மையும் மென்மையுமான ஒன்று. “இங்கே நாம் இருக்கிறோம்” என்றான். நான் இருக்கிறேன். நான் எஞ்சியிருக்கிறேன். நான் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறேன். நான் நான் நான்… அவன் உள்ளம் களிகொண்டது. “இது வெற்றி! முழுமையான வெற்றி, யாதவரே!” என்றான்.

இளைய யாதவர் அவனை நோக்கி புன்னகை செய்து “நமக்கு பணிகள் எஞ்சியிருக்கின்றன. மைந்தர்கள் நோயுற்றிருக்கிறார்கள். அவர்கள் குருதி வார்ந்து உயிர்துறக்கக் கூடும்” என்றார். திருஷ்டத்யும்னன் முழுச் சித்தம் கொண்டு “ஆம், உடனே அவர்களுக்கு மருத்துவம் செய்யவேண்டும்” என்றான். “இங்கே அருகே சிற்றூர்களில் மருத்துவர்கள் இருக்கலாம்… மழை வரவிருக்கிறது. முதலில் தேவையானவை கூரைகள்.” இளைய யாதவர் “சூழ நெடுந்தொலைவிற்கு மானுடர் எவருமில்லை” என்றார். “ஆனால் அரைநாள் தேர் செல்லும் தொலைவில் சிற்றூர்கள் உள்ளன. மைந்தர்களை தேரிலேற்றிக்கொண்டு அங்கே செல்க! அதற்கு முன் அவர்களின் குருதிப்புண்களுக்கு கட்டுகள் போடவேண்டும்… பிற எவருமில்லை இங்கே. மைந்தர் அவர்களே தங்களை நோக்கிக்கொள்ள வேண்டியதுதான். புண்படாதவர்கள் யௌதேயனும் பிரதிவிந்தியனும்தான்… அவர்கள் அதை முன்னெடுக்கட்டும்.”

நகுலன் “மூத்தவர் எங்கே?” என்றான். சாத்யகி “அரசர் மயங்கி விழுந்துவிட்டார். நாங்கள் இங்கு வருகையில் மயங்கிக்கிடக்கும் அரசரின் அருகே இளைய பாண்டவர் வெறுமனே அமர்ந்திருப்பதை கண்டோம்” என்றான். “அவரை எழுப்புக… அவர் ஆற்றவேண்டிய பணிகள் எஞ்சியிருக்கின்றன” என்றார் இளைய யாதவர். “அவர் உளம் களைத்திருக்கிறார். அவரால் சொல் தொகுக்க இயலுமென்றே தோன்றவில்லை” என்று சகதேவன் சொன்னான். “அவரால் இயலும்” என்று மட்டும் இளைய யாதவர் சொன்னார். திருஷ்டத்யும்னன் தன் சங்கை ஊத மிக அப்பால் யௌதேயனின் மறுசங்கொலி கேட்டது. பின்னர் பிரதிவிந்தியனின் சங்கொலி எழுந்தது. சிகண்டி அங்கே நிகழ்வன எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சாத்யகி காற்றிலாடும் திரைச்சீலைபோல நிலையற்ற உடலுடன் அசைந்துகொண்டிருந்தான். குளிர்ந்த காற்று ஒன்று களத்தின்மேல் ஊதிச்சென்றது. களம் இறுதிமூச்செறிவதுபோலத் தோன்றியது.

யௌதேயனும் பிரதிவிந்தியனும் புரவிகளில் அருகே வந்தனர். திருஷ்டத்யும்னன் “மைந்தர்களில் புண்பட்டவர்கள் எவரெவர்?” என்றான். பிரதிவிந்தியன் அப்பால் தேரில் நினைவிழந்து கிடந்த சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் நோக்கிவிட்டு “இவர்கள் இருவரே மிகுதியாக புண்பட்டவர்கள், மாதுலரே. அங்கே தந்தையருகே சதானீகனும் புண்பட்டிருக்கிறான். அவனுக்கு கட்டுகள் இட்டிருக்கிறோம். நினைவழிந்திருக்கிறான். சுதசோமனும் சர்வதனும் இளைய தந்தை பீமசேனனுடன் சென்றிருக்கிறார்கள். நிர்மித்ரனை தந்தைக்குக் காவலாக அங்கே வில்லுடன் நிறுத்தியிருக்கிறோம். அவனுக்கும் ஆழ்ந்த புண்கள் இல்லை” என்றான். “மைந்தர்கள் அனைவரும் உடனே குருக்ஷேத்ரத்தில் இருந்து அகலட்டும். அருகில் இருக்கும் சிற்றூரின் இல்லங்களில் அவர்களை தங்கவையுங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.

இளைய யாதவர் “சிகண்டியும் நீங்களும் சாத்யகியும் உடன் செல்க!” என்றார். “மைந்தருக்குக் காவலாக உடனிருங்கள். விலகிச்செல்ல வேண்டியதில்லை.” திருஷ்டத்யும்னன் “ஆனால் இப்போது எதிரிகளென எவருமில்லை, யாதவரே” என்றான். இளைய யாதவர் “இது ஆணை” என்றார். “ஆம்” என திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான். அப்பால் புரவிகளில் இரு சிற்றுருவங்கள் அணைவதைக் கண்டு பிரதிவிந்தியன் “அவர்கள் சர்வதனும் சுதசோமனும்… உடன் இளைய தந்தை பீமசேனன் இல்லை” என்றான். நகுலன் “மைந்தரை மீட்க முயலுங்கள்” என எரிச்சலுடன் ஆணையிட்டான். சர்வதனும் சுதசோமனும் போர்க்களத்தைக் கண்டு திகைத்தவர்கள் போலிருந்தனர். அதை விரைந்து கடக்க விழைபவர்கள்போல புரவிகளை முடுக்கினர். உடல்களின்மேல் தாவித்தாவி அருகணைந்தன அவர்களின் புரவிகள்.

பிரதிவிந்தியனும் யௌதேயனும் தேர்களில் ஏறி சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் புரட்டிப்போட்டு அவர்களின் ஆடைகளைக் கொண்டும் தங்கள் ஆடைகளைக் கொண்டும் புண்களை கட்டினார்கள். யௌதேயனிடம் குடுவையில் புளித்த கள் இருந்தது. அதை துளித்துளியாக புகட்டினார்கள். சுருதகீர்த்தி முனகினான். பிரதிவிந்தியனும் யௌதேயனும் அத்தருணத்தில் தனி ஆற்றல் கொண்டவர்களாகத் தோன்றினர். அவர்களால் இயற்றப்படத்தக்க செயல் ஒன்றை கண்டடைந்தவர்கள்போல. பிறர் ஆற்றலற்றிருக்கையில் தாங்கள் அவர்களைக் காப்பவர்களாக, மேலெழுந்தவர்களாக உணர்ந்தவர்கள்போல. பிரதிவிந்தியன் மெல்லிய குரலில் ஆணைகளை பிறப்பிக்க யௌதேயன் அவற்றை விரைந்து முடித்தான்.

சர்வதன் அருகே வந்தபடியே கடுமையான வலிகொண்டதுபோல சுருங்கி அதிர்ந்த முகத்துடன் குரல் நடுங்க “தந்தையும் அரசரும் மறைந்துவிட்டனர்… காட்டுக்குள் சென்றுவிட்டனர்” என்று கூவினான். “களத்தில் அஸ்தினபுரியின் அரசருடன் போரிட்டுக்கொண்டிருந்தோம்… ஒரு தருணத்தில் தந்தையும் அவரும் மட்டும் தனித்துப் போரிடலாயினர். எங்களால் அவர்களை தொடர முடியவில்லை. தனி கதைப்போர் நிகழ்ந்தது. தாவித்தாவிப் போரிட்டபடியே காட்டுக்குள் சென்றனர். நாங்கள் உடன்சென்றோம். அவர்கள் மரங்களுக்குமேல் மறைந்துவிட்டிருந்தனர்…” என்றான். “யாதவரே, நாம் சென்று தந்தையை காக்கவேண்டும். ஏழுமுறை அஸ்தினபுரியின் அரசர் தந்தையைத் தூக்கி நிலத்தில் அறைந்தார். அவருடைய கதை தந்தையின் தலையை சிதைக்காமல் இருந்தது நாங்கள் உடனிருந்தமையால் மட்டுமே. இப்போது அவர் தனித்து காட்டுக்குள் சென்றிருக்கிறார். எங்களிடமிருந்து அவரைப் பிரித்து கொண்டுசெல்வதே அரசரின் நோக்கம் என்று தோன்றுகிறது.”

சுதசோமன் “தந்தை அவரை வெல்லமுடியாது. அது இன்றைய போரில் கண்கூடாகத் தெரிந்தது. அவர் கார்த்தவீரியன்போல தோள்பெருகி வந்து தாக்கினார். அவருடைய கதையின் எடை மிகப் பெரியது. அதை எளிதில் சுழற்றும் கலையை அவர் கற்றிருக்கிறார். தந்தையின் கதை பலமுறை உடைந்து தெறித்தது. தரையில் கிடந்த வெவ்வேறு கதைகளை எடுத்துப் போரிட்டபடி அவர் தொடர்ந்து சென்றார்…” என்றான். “அவர் உடலில் பல இடங்களில் வலுவான அடிகள் விழுந்தன. அவருடைய பற்கள் தெறித்து உதிர்வதை நான் கண்டேன். ஒரு கண் வெளியே பிதுங்கி நின்றிருக்கிறது. காது அறுந்து தொங்குகிறது. அவருடைய இடக்கையின் எலும்புகள் நொறுங்கியிருக்கின்றன. அந்தக் கை இறந்த நாகம்போல தொங்கிக்கிடக்கிறது. அவரால் மரங்களின்மேல் கதையுடன் தாவ முடியாது…”

சர்வதன் அழத்தொடங்கினான். “யாதவரே, அவர் இப்பொழுது உயிருடன் இருப்பாரா என்பதே ஐயம்தான்… நாம் காட்டுக்குள் செல்வோம். சூழ்ந்துகொண்டு அவரை காப்பாற்றுவோம்… இப்போரை நாம் வென்றாலும் தந்தையை இழந்துவிட்டால் எதற்குமே பொருளில்லை.” இளைய யாதவர் “அவர் இறந்து எழுந்தவர். மறையமாட்டார்…” என்றார். “நீங்கள் உங்கள் உடன்பிறந்தாருடன் செல்க… அவர்களை நோக்கிக்கொள்க!” சர்வதன் “யாதவரே, நாங்கள் தந்தையை விட்டுச்செல்லப் போவதில்லை” என்றான். “இது என் ஆணை” என்றார் இளைய யாதவர். சுதசோமன் “நீங்கள் எங்கள் தாதை. எங்கள் குடிக்கு நீங்களே காவல்” என்றான். கண்ணீர் வழிய கைகளை விரித்து “தந்தை மீள்வார் என்னும் சொல்லை வெறுமனே சொல்லமாட்டீர்கள் என நினைக்கிறேன்” என்றான். திணறும் குரலில் “அவர் இல்லாத உலகில் நாங்கள் வாழமாட்டோம். அதை நீங்கள் அறிவீர்கள்” என்றான்.

இளைய யாதவர் விழிகளை திருப்பிக்கொண்டு “செல்க!” என்று மட்டும் சொன்னார். அவர்கள் சென்று தேர்களில் ஏறிக்கொண்டார்கள். “அரசரும் அர்ஜுனனும் மட்டும் இங்கே வரட்டும்” என்றார் இளைய யாதவர். பிரதிவிந்தியன் “ஆணை” என்றான். அவர்களின் தேர்கள் நகர திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் சிகண்டியும் உடன்சென்றனர். தேர்கள் அகன்று செல்ல அதை நோக்கிக்கொண்டிருந்தபின் திரும்பிய சகதேவன் “மூத்தவர் உயிர்பிழைப்பாரா, யாதவரே?” என்றான். “பிழைத்தாக வேண்டும்” என்றார் இளைய யாதவர். “இந்தக் களத்திற்குப் பின் எவர் வாழ்ந்தாலும் மடிந்தாலும் எப்பொருளும் இல்லை” என்று சகதேவன் சொன்னான். நகுலன் திடுக்கிட்டு அவனை நோக்கியபின் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டான். குளிர்ந்த காற்று ஒற்றைவிசை என களத்தை கடந்துசென்றது. அதில் நீரின் வெக்கையும் இருந்தது. வானில் உறுமல்போல் இடியோசை எழுந்தது.

சகதேவன் “இக்களத்தை என்ன செய்வது?” என்றான். நகுலன் திரும்பிப்பார்க்க இளைய யாதவர் அதை கேட்டதாகவே தெரியவில்லை. சகதேவன் “இந்த உடல்களை இங்கிருந்து அகற்ற இயலாது” என்றான். “நம்மிடம் ஏவலர் என எவருமில்லை. இந்தக் களத்திற்கு சில நாட்களில் வந்துசேரும் அளவிற்கு அருகே எவருமில்லை. எரியூட்டலாமென்றால் இச்சேற்றில் எரி எழுவதற்கு ஏராளமான விறகு தேவைப்படும். அதை கொண்டுவந்து குவிப்பதற்கும் பலர் தேவை.” அவன் பேச விழைவதை அறிந்து நகுலன் கேட்பவன்போல வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். “இப்படியே கைவிட்டுவிட வேண்டியதுதான். இந்த நிலம் ஒரு மாபெரும் வயிறு என சூதர்கள் பாடுகிறார்கள். இங்கு வந்த அனைவரையும் உண்டுவிட்டது. இவர்களை இறுதியாக விழுங்கிக்கொள்ளட்டும்.” நகுலன் “ஆம்” என்றான். சகதேவன் “முன்பு விருத்திரனின் படைகளைக் கொன்ற இந்திரன் பெருக்கிய குருதியால் இந்நிலம் சிவந்தது. இன்று கருமைகொண்டுவிட்டது” என்றான்.

தொலைவில் இரு புரவிகள் துள்ளியும் திரும்பியும் தாவியும் உடல்களைக் கடந்து அணுகிக்கொண்டிருந்தன. சகதேவன் “மூத்தவர் மீண்டுவிட்டார்” என்றான். நகுலன் “அவர் எப்போதுமே எளிதாக மீள்கிறார்” என்றான். சகதேவன் புன்னகைத்து “சொற்கள் மழைபோல, அனைத்தையும் கழுவிவிடும் ஆற்றல்கொண்டவை” என்றான். “இளையவர் விடுபடவில்லை. அவரால் இதிலிருந்து இனி ஒருபோதும் விடுபட இயலுமென்றும் தோன்றவில்லை.” அவர்கள் அணுகி வந்து விசையழிந்தனர். யுதிஷ்டிரன் புரவியிலிருந்தபடியே “யாதவனே, மந்தன் எங்கே?” என்றார். இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. “யாதவனே, என்ன ஆயிற்று பீமனுக்கு?” என்றார் யுதிஷ்டிரன். நகுலன் “வந்துகொண்டிருக்கிறார், மூத்தவரே” என்றான். “அவன் எங்கே? என்ன ஆயிற்று அவனுக்கு?” என்றபடி யுதிஷ்டிரன் அணுகிவந்தார்.

நகுலன் “அவர் வந்துவிடுவார் என்று இளைய யாதவர் சொன்னார்” என்றான். யுதிஷ்டிரன் வந்து மூச்சிரைக்க கடிவாளத்தை இழுத்துப்பற்றியபடி “எங்கே அவன்? துரியோதனனைத் தொடர்ந்து சென்றான் என்றனர் மைந்தர். அவனால் துரியோதனனை வெல்லமுடியாது என நாம் அனைவரும் அறிவோம். அவன் பலராமனின் அணுக்க மாணவன். அவரிடமிருந்து அறியாக் கலை சில கற்றவன்… மந்தன் உயிருடன் இருக்கிறானா?” என்றார். நகுலன் ஒன்றும் சொல்லவில்லை. “யாதவனே, என்னிடம் சொல்” என்றார் யுதிஷ்டிரன். “அவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றார் இளைய யாதவர். “துரியோதனன் இந்நிலையில் அவரை கொல்லமுடியாது. முயன்றால் கொன்றுவிடலாம். ஆனால் முழுப் படையையும் அனைத்துச் சுற்றத்தையும் இழந்தவனின் உள்ளம் அதற்குரிய ஆற்றலைக் கொள்ளாது.”

யுதிஷ்டிரன் தளர்ந்து “ஆம், அவ்வாறே தோன்றுகிறது. அதுவே நிகழவேண்டும்” என்றார். அர்ஜுனன் அங்கில்லாதவன் போலிருந்தான். நகுலன் “இப்போர் முடிந்துவிட்டது என்று தோன்றவே இல்லை” என்றான். இளைய யாதவர் “முடியவில்லை” என்றார். யுதிஷ்டிரன் திகைப்புடன் திரும்பி “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “இப்போரின் முதல் விதை சகுனியோ பிறரோ அல்ல. அது இருப்பது துரியோதனனிடம். அவன் இருக்கும் வரை இப்போர் முடிவடைவதில்லை” என்றார். யுதிஷ்டிரன் பெருமூச்சுடன்  “ஆம்” என்றார். நகுலன் “அவரை வீழ்த்த இந்நிலையில் மூத்தவரால் இயலாது” என்றான். இளைய யாதவர் “அவரை காட்டில் தேடிக் கண்டடைய இயலாது. இக்களத்திலேயே காத்திருப்பதன்றி வேறு வழியில்லை” என்றார்.

யுதிஷ்டிரன் களைப்புடன் “தெய்வங்களே!” என்றார். திரும்பித்திரும்பி சூழ விரிந்திருந்த களத்தை நோக்கிய பின் “யாதவனே, நாம் வேறெங்காவது செல்லலாம். இக்களத்தில் என்னால் நிற்க முடியவில்லை… இங்கே கணம் நூறுபேர் இறந்துவிழுந்தபோதுகூட என்னால் நின்றிருக்க முடிந்தது… இந்த அமைதியை என்னால் தாள இயலவில்லை” என்றார். “இங்குதான் நின்றிருக்கவேண்டும்… இக்காட்சி நமக்குள் நுழைந்து அமைந்தாகவேண்டும். எனில் மட்டுமே இங்கே முடிகிறது இது என நாம் அகத்தே ஏற்போம்” என்று இளைய யாதவர் சொன்னார். “இது உற்றவர் இறந்தால் உடலை நூற்றெட்டுமுறை நோக்கவேண்டும் என முன்னர் மூத்தோர் வகுத்ததற்கு நிகர். அவர்கள் இல்லை என நம் ஆழம் ஏற்றாகவேண்டும்.” யுதிஷ்டிரன் “என்னால் முடியவில்லை. என் வயிறு கொப்பளித்துக்கொண்டே இருக்கிறது” என்றார். அதைச் சொன்னதுமே உடல் அதிர குனிந்து வாயுமிழ்ந்தார். ஓவெனும் ஒலியுடன் வயிறு ஒட்டி துடிக்க வாயுமிழ்ந்தபடியே இருந்தார்.

பின்னர் எழுந்து மூக்கையும் முகத்தையும் துடைத்துக்கொண்டார். அவருடைய கண்கள் கலங்கி வழிந்தன. “இதை நோக்காமலிருக்கவும் முடியவில்லை. விழிமூடிக்கொண்டால் உள்ளே விரிவது மேலும் பெரிய சாவுப்பரப்பு. அதை மறைக்க விழிதிறந்து இதை நோக்கியாக வேண்டியிருக்கிறது” என்றார். “நோக்குக! இதை இங்கே முடித்துக்கொள்க! இதுவாகி விளைந்த அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கு வேறு வழியில்லை” என்றார் இளைய யாதவர். சகதேவன் ஓங்கி வாயுமிழ்ந்தான். யுதிஷ்டிரன் அவனை திரும்பி நோக்கியபின் தலையை அசைத்தார். நகுலனும் வாயுமிழத் தொடங்கினான். யுதிஷ்டிரன் சலிப்புடன் “நரகம்! கெடுநரகம்!”” என்றார்.

முகில்கள் முற்றாக மூட களம் நன்றாகவே இருண்டது. வானும் மண்ணும் ஒரே கருமைகொள்ள விழிகளின் ஒளி அணைந்துவருவதாக உளமயக்கு எழுந்தது. தொலைவில் சிறிய அசைவை யுதிஷ்டிரன் கண்டார். திடுக்கிட்டு ஒலியெழுப்பிய பின்னர் அதை மீண்டும் நோக்கினார். அந்தச் சாவின் வெளியில் உயிரசைவே சாவின் உருவெனத் தெரிந்தது. நகுலன் “மூத்தவர்!” என்றான். யுதிஷ்டிரன் “அவனா?” என்றபடி கூர்ந்து நோக்கினார். “அவனேதான்!” என்றார். பீமன் மெல்ல உருத்தெளிந்தான். அவன் புரவியில் வரவில்லை. வெறும் கைகளை வீசியபடி நடந்து வந்தான். அவன் அணுகுவதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர். நெடும்பொழுதாகியது. பலமுறை வானம் முனகி அதிர்ந்தது. மின்னல் எழவில்லை என்றாலும் களம் ஒளிகொண்டு அமைந்தது.

பீமன் அருகணைந்து “மூத்தவரே, துரியோதனன் தப்பிவிட்டான்” என்றான். நகுலன் “தப்பி ஓடுகிறாரா? எங்கே?” என்றான். பீமன் “அவன் ஒளிந்துகொள்ளப் போவதில்லை. வேறெங்கோ செல்கிறான்… என்னை அறைந்து வீழ்த்திவிட்டு கொல்லும்பொருட்டு பாய்ந்தான். கீழுள்ள பிலம் ஒன்றுக்குள் மறைந்தேன். மீண்டும் எழுந்தபோது அவன் மறைந்துவிட்டிருந்தான்” என்றான். யுதிஷ்டிரன் “நன்று… அவன் மறைந்தே போகட்டும்” என்றார். இளைய யாதவர் “இல்லை, அவரை கொன்றாகவேண்டும்… எங்கிருந்தாலும் தேடிப்பற்றி போரிட்டு வீழ்த்தவேண்டும். அவர் இருக்கும்வரை இப்போர் முடிவதில்லை” என்றார். யுதிஷ்டிரன் “ஆனால்…” என்று சொல்ல இளைய யாதவர் “அவர் பயணி அல்ல. உடன்பிறந்தாரும் கர்ணனும் இன்றி எங்கும் செல்பவரும் அல்ல. அவர் செல்லக்கூடிய இடங்கள் சிலவே… அவற்றைக் கண்டறிவது மிக எளிது” என்றார்.

“சொல்லுங்கள், இப்போதே கிளம்புகிறேன்” என்றான் பீமன். “நீங்கள் தனியாகச் செல்லவேண்டியதில்லை மூத்தவரே, நாங்களும் உடன் வருகிறோம்” என்றான் நகுலன். “ஐவரும் செல்க! உடன் நானும் இருப்பேன்” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரன் சில கணங்கள் இளைய யாதவரை கூர்ந்து நோக்கிவிட்டு “அவ்வண்ணமே” என்றார். திரும்பி அர்ஜுனனைத் தொட்டு “இளையோனே” என்றார். அர்ஜுனன் திடுக்கிட்டு துள்ளி அகன்று அலறினான். “என்ன? என்ன?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். அவன் இளைய யாதவரைப் பார்த்து அஞ்சி மேலும் அலறி பின்னடைந்தான். “இளையோனே, என்ன? என்ன?” என்று யுதிஷ்டிரன் கூவினார். அர்ஜுனன் நடுங்கியபடி நின்றான். பீமன் அருகணைந்து அர்ஜுனனின் தோளை பற்றிக்கொண்டு “என்ன? கனவுகண்டாயா?” என்றான்.

அர்ஜுனன் விழிகளில் இருந்து நீர் வழிய ஆம் என தலையசைத்தான். “வருக… தேரிலேறிக் கொள்க!” என்று பீமன் அவன் கைகளை பற்றினான். அர்ஜுனன் இளைய யாதவரை நோக்கியபின் அஞ்சிப் பின்னடைந்து “வேண்டாம்…” என்றான். யுதிஷ்டிரன் “என் தேரில் ஏறிக்கொள்க, இளையோனே!” என்றார். அர்ஜுனன் “என் வில்… காண்டீபம்” என்றான். “அதை நான் கொண்டுவருகிறேன். நீ மூத்தவருடன் தேரிலேறிக்கொள்” என்று பீமன் சொன்னான். அர்ஜுனனின் தோளைப்பற்றி “ஒன்றுமில்லை. இக்களத்தில் இருள்தெய்வங்கள் குடியேறுகின்றன. இளையவன் கடந்துநோக்கும் விழிகள் கொண்டவன்” என்றார். நகுலனும் சகதேவனும் வெறுமனே கூர்ந்து நோக்கி நிற்க யுதிஷ்டிரன் அர்ஜுனனை அழைத்துச்சென்று அருகே நின்ற தேரில் ஏற்றிக்கொண்டார். களைப்புடன் தேரில் ஏறி தேர்த்தட்டில் ஓய்ந்து அமர்ந்து அவன் கைகளில் முகம் புதைத்துக்கொண்டான்.

யுதிஷ்டிரன் “நீங்கள் முன்னால் செல்க! இளையோனும் நானும் தொடர்ந்து வருகிறோம்” என்றார். இளைய யாதவரிடம் நகுலன் “நீங்கள் தேரிலேறிக் கொள்க யாதவரே, இம்முறை நான் தேர் தெளிக்கிறேன். போர் முடிந்துவிட்டது” என்றான். இளைய யாதவர் “இல்லை, நான் தேர் தெளிக்கவே வந்தேன்” என்றார். அவர் தேரின் அமரத்தில் ஏறிக்கொள்ள நகுலனும் சகதேவனும் அந்தத் தேரில் ஏறினர். இளைய யாதவர் அத்தேரில் உயிரிழந்து தொங்கிய நான்கு புரவிகளை அவிழ்த்து சரியச்செய்தார். எஞ்சிய புரவிகளின் கழுத்தில் மெல்ல வருடி அவற்றை ஆறுதல்படுத்தினார். மெய்ப்புகொண்டு விழிகளை உருட்டி நீள்மூச்செறிந்தபின் அவை கால்களை தூக்கி வைத்து கிளம்பின. களத்திலிருந்து பின்னகர்ந்து அவருடைய தேர் செல்ல யுதிஷ்டிரனின் தேர் தொடர்ந்து சென்றது.