தீயின் எடை - 22
யுதிஷ்டிரன் திசையழிந்தவராக சரிந்துகிடந்த தேர்த்தட்டு ஒன்றை பற்றியபடி நின்றார். இளைய யாதவர் தேரிலிருந்து இறங்கி அவர் அருகே ஓடிவந்தார். “யாதவனே” என யுதிஷ்டிரன் விம்மினார். “என் கொடுங்கனவுகளில் எல்லாம் நான் கண்டது இதைத்தான். நான் அஞ்சியது இதை மட்டும்தான். என் மைந்தரும் உடன்பிறந்தாரும் மறைந்து நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். நகுலனும் சகதேவனும்…” என்று இளைய யாதவரின் தோளைப் பற்றியபடி அரற்றினார். “அஞ்சற்க, அரசே. அவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை” என்றார் இளைய யாதவர். “என்ன சொல்கிறாய்? நானே கண்டேன்! என் இளையோர் வீழ்ந்ததை என் கண்களாலேயே கண்டேன்!” என்றார் யுதிஷ்டிரன்.
“அவர்களின் பணி முடியவில்லை” என்றார் இளைய யாதவர். “அவர்கள் எழுந்தாகவேண்டும்.” யுதிஷ்டிரன் “அவர்கள் இறக்கவில்லையா? மெய்யாகவே இறக்கவில்லையா? தெய்வமென நின்று சொல்க யாதவனே, அவர்கள் இறக்கவில்லையா?” என்று கூவினார். “அவர்கள் இறக்காமல் இக்களம் முடிவடையாது. பெருநிகழ்வுகளுக்கும் அருஞ்செயல்களுக்கும் பின் அந்த மானுடர் இறந்தாகவேண்டும் என்பது தெய்வங்களின் நெறி. முற்றிறப்புக்கு மாற்றாக சிற்றிறப்பு நன்று. உடற்குறையும் இறப்பே. உற்றாரின் இறப்பு, நம்பிக்கையின் இறப்பு, ஆணவத்தின் இறப்பு என இறப்புகள் பலவகை. ஆத்மாவின் இறப்பே எஞ்சாத இறப்பு என்பார்கள். இங்கு இறந்து மீளாத வரை அவர்களால் இனி வாழமுடியாது.” யுதிஷ்டிரன் “தெய்வங்களே!” என நெஞ்சில் கைசேர்த்து விம்மினார்.
“அவர்கள் உடலில் பாய்ந்த நஞ்சு முகில்களில் இருந்து மலைப்பாறைகளை அடைந்தது. தங்கள் அம்புகளை அத்தகைய நச்சுப்பாறைகளில் தீட்டித்தீட்டி அவர்கள் உருவாக்குகிறார்கள். நரம்புகளில் பாயும் அந்த அம்பு கொல்லும்திறன் வாய்ந்தது. ஆனால் இந்தக் களம் இன்று ஈரமாக உள்ளது. மண் தசையென மாறி அனைத்து உடல்களையும் ஒன்றாக இணைத்துள்ளது. அந்நஞ்சு ஓர் உடலிலிருந்து களம் முழுக்க பரவுகிறது. ஆகவே ஆற்றலிழக்கிறது.” யுதிஷ்டிரன் துடிப்புடன் “அவர்கள் உயிரிழக்கவில்லை என்றால்…” என்றார். கையைத் தூக்கி ஏதோ சொல்லமுயன்று வாய் இழுபட தத்தளித்தார். பின்னர் உளம் கிழிபட விம்மியழுதபடி நிலத்தில் அமர்ந்தார். “தெய்வங்களே! தெய்வங்களே!” என்றார்.
“நமக்கு பொழுதில்லை. அவர்களை களத்திலிருந்து மீட்டாகவேண்டும். மாற்று செய்தாகவேண்டும்” என்றார் இளைய யாதவர். “என்ன செய்யவேண்டும்? என் உயிரின் ஒரு பகுதியை அளிப்பதென்றாலும் செய்கிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “வருக!” என இளைய யாதவர் அவரை அழைத்துச்சென்றார். களத்தில் மிகப் பெரும்பாலானவர்கள் வீழ்ந்துவிட்டிருந்தார்கள். குவிந்து கிடந்த உடல்களை மிதித்தபடி அவர்கள் சென்றனர். யுதிஷ்டிரன் “எங்கிருக்கிறார்கள்? யாதவனே, எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்றார். “அவர்கள் விழுந்தபோதே அந்த இடங்களைத்தான் நான் அடையாளம் கண்டு நினைவில் நட்டுக்கொண்டேன்” என்றார் இளைய யாதவர். தேரில் நின்றிருந்த அர்ஜுனனை நோக்கி “என்ன செய்கிறாய், பார்த்தா? வருக!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அவர் குரலை அர்ஜுனன் கேட்டதாகவே தெரியவில்லை. “அவரை அழைக்கவேண்டாம். அவர் இக்களத்தின் இறுதிக்கணத்தில் இருக்கிறார்” என்றார் இளைய யாதவர்.
“இதோ!” என்று யுதிஷ்டிரன் கூவினார். “மந்தன்! மந்தன்!” என்று கைகளை விரித்து அலறினார். இடையிலிருந்து சங்கை எடுத்து ஊதினார். “எங்கே ஏவலர்? ஏவலர் வருக! மருத்துவர்கள் வருக!” இளைய யாதவர் “அவர்கள் எவரும் இப்போது உயிருடன் இல்லை” என்றார். யுதிஷ்டிரன் திகைத்து சூழ நோக்கி “ஆம். கால்களில் நிலைகொள்பவர் எவருமே இங்கில்லை” என்றார். சூழ நோக்கி “எவருமில்லையா? எவருமில்லையா? மருத்துவர்களே” என்றார். கீழே குவிந்துகிடந்த உடல்களிலிருந்து ஒரு முதியவர் கையூன்றி எழுந்தார். “அரசே!” என்றார். “நீர் மருத்துவரா?” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், நான் மருத்துவனாகவே இக்களத்திற்கு வந்தேன்” என்றார் அவர். “என் பெயர் சியாமளன்… அஸ்தினபுரியின் மருத்துவன் நான்.”
யுதிஷ்டிரன் “சியாமளரே, என் இளையோனை காப்பாற்றுங்கள்…” என்று குனிந்து விழிநீருடன் கூவினார். சியாமளர் எழுந்து நின்று அருகே கிடந்த இருவரை கால்களால் உதைத்தார். “எழுக… எழுக” என்றார். அவர்கள் ஆழ்துயிலில் இருந்து என எழுந்தனர். “ஆசிரியரே” என்றனர். “எழுக… இளவரசர்களை காக்கும்படி ஆணை” என்றார் சியாமளர். “அறத்தோனின் ஆணையை தலைக்கொள்க, எழுக!” அவர்கள் கையூன்றி எழுந்தனர். அவர்களின் விழிகள் வெறித்திருந்தன. உடலெங்கும் நரம்புகள் கரிய மண்ணில் கரிய வேர்கள் என புடைத்திருந்தன. கரிய உடல்களின் பரப்பிலிருந்து அவர்கள் முளைத்து தனித்து எழுந்தவர்கள் போலிருந்தார்கள். எழுந்தபோது அவர்களின் உடலில் இருந்து ஆவி எழுந்தது. சேறு வழிந்து சொட்டியது. தள்ளாடி நடந்தபடி “எங்கே அவர்கள்?” என்றார் சியாமளர். “இங்கிருக்கிறார்கள்” என்று அவருடைய மாணவன் சொன்னான்.
இளைய யாதவர் உடல்களை அகற்றி பீமனின் உடலைத் தொட்டு புரட்டினார். அவன் வாயில் பற்கள் இறுகி கிட்டித்திருந்தன. விழிகள் துறித்து இரு வெண்சிப்பிகள் போலிருந்தன. உடலெங்கும் நரம்புகள் இறுகி, கழுத்தில் தசைநார்கள் இழுபட்டு, பற்கள் இளித்திருக்க தலைகீழாக தொங்குபவன் போலிருந்தான். “நரம்புகளை மின்நஞ்சு தாக்கியிருக்கிறது… மின்னற்கொடி வானிறங்கி மானுடரைத் தாக்குவதற்கு நிகர் அது” என்றார் சியாமளர். “அந்த மின்னம்புகளில் இரண்டு தேவை… தேடி எடுங்கள்.” அதற்குள் யுதிஷ்டிரனே இரண்டு அம்புகளை எடுத்து நீட்டினார். “ஆம், இவைதான். இந்த நீல முனைகளில் உள்ளது மின்னலின் நஞ்சு” என்றார் சியாமளர். இரு நீல முனைகளையும் ஒன்றுடன் ஒன்று உரசினார். பின்னர் அவற்றை பீமனின் இரு காதுகளிலும் வைத்தார். அவன் உடல் தீ பட்டதுபோல் துள்ளியது.
இருமுறை துள்ளி அடங்கியதும் அவன் இமைகள் அசைந்தன. முகம் உயிர்ப்பு கொண்டது. மூச்சு ஓடத் தொடங்கியது. அவனைப் பிடித்து உலுக்கி “மந்தா! மந்தா!” என்று யுதிஷ்டிரன் கூவினார். “மந்தா, எழுக! எழுக, மந்தா! நீ சாகவில்லை… மந்தா, எழுக!” என்று அழுகையில் உடைந்த குரலில் அழைத்தார். பீமனின் வாய் அசைந்தது. நாக்கு கடைவாயில் துழாவ தொண்டைமுழை ஏறியிறங்கியது. அவன் வாயோரம் கோழை வழிய விழிநீர் கன்னங்களில் கரிய சேற்றில் கோடிட்டது. அவனை உலுக்கி “மந்தா! மந்தா!” என கூவிக்கொண்டிருந்தார் யுதிஷ்டிரன். ஒரு கணத்தில் அவன் யுதிஷ்டிரனின் குரலை கேட்டான். “மூத்தவரே” என்றான். மறுகணமே கைகளை ஊன்றி எழுந்தமர்ந்தான். “என்ன ஆயிற்று? எங்கே மைந்தர்?” என்றான். “அவர்களையும் மீட்கவேண்டும்… சல்யர் கொல்லப்பட்டார்” என்றார் இளைய யாதவர். பீமன் தன் உடலில் தைத்திருந்த அம்புகளின் தண்டுகளை பிடுங்கி எறிந்தான். அவற்றின் பொருத்துவாய்களில் சேறு படிந்து குருதி நின்றுவிட்டிருந்தது.
“அரசே, இனி பீமசேனனே போதும்… நீங்கள் அப்பால் அமர்ந்திருங்கள்.” யுதிஷ்டிரன் “என் மைந்தர்… எங்கிருக்கிறார்கள்…” என்றார். “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்… நீங்கள் அமர்ந்திருங்கள்” என்றான் பீமன். யுதிஷ்டிரன் “அவர்களை நான் கண்டடைகிறேன்” என்று பதறினார். “உங்கள் பதற்றமே எங்களுக்கு தடை… அமர்க!” என பீமன் உரத்த குரலில் சொல்ல யுதிஷ்டிரன் பின்னடைந்து தளர்ந்து கவிழ்ந்த தேரின் சகடங்களில் அமர்ந்தார். வெறித்த விழிகளால் அவர்கள் மைந்தர்களை உடல்களிலிருந்து அகழ்ந்து எடுப்பதை கண்டார். “நகுலன்… நகுலன்!” என்று கைசுட்டி கூவினார். “ஆம், பார்த்துவிட்டோம்” என்று பீமன் சொன்னான். சுருதகீர்த்தியின் நெஞ்சில் பாய்ந்திருந்த அம்பிலேயே சல்யரின் மின்னம்புகளைத் தொட்டு உடலை அதிரச்செய்தார் சியாமளர்.
மருத்துவர்கள் தொட்டுப் புரட்டி மின்தொடுகை அளிக்க அவர்கள் ஒவ்வொருவராக எழுந்தனர். நகுலன் எழுந்ததுமே சூழுணர்ந்து திடுக்கிட்டு “எங்கே இளையவன்?” என்றான். மறுகணமே துள்ளி எழுந்து “அவன் அங்கே வீழ்ந்தான்… அங்கே” என்று ஓடினான். அவர்கள் அனைவரும் மீண்டு எழுந்துவிட்டதை யுதிஷ்டிரன் கண்டார். ஒருவரை ஒருவர் மெல்ல தொட்டுக்கொண்டனர். நகுலன் சகதேவனை தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டான். சர்வதனின் தலையை மெல்ல வருடி சுதசோமனின் தோளை தொட்ட பின் அவர்களை நோக்காமல், ஒரு சொல்லும் உரைக்காமல் பீமன் அப்பால் சென்றான். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் உடலை நீட்டி கைதூக்கினர். சிகண்டி எழுந்து களைப்படைந்தவர்போல கவிழ்ந்த தேரின் குடம் மேல் அமர்ந்து நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தார்.
சகதேவன் சூழ நோக்கிய பின் “போர் முடிந்துவிட்டது, யாதவரே. களத்தில் எவருமே இல்லை…” என்றான். “அங்கே போர் நிகழ்கிறது இன்னமும்” என்றார் இளைய யாதவர். அவர் சுட்டிக்காட்டிய இரு எல்லைகளிலும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. “சகுனி இன்னமும் களத்தில் இருக்கிறார். அவர் இருக்கும் வரை துரியோதனனும் இருப்பார்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் சீற்றத்துடன் எழுந்துகொண்டு “அவ்விழிமகனை நானே கொல்கிறேன்” என்றார். இளைய யாதவர் “அவரிடம் உங்கள் அம்புகள் விசைகொள்ளா” என்றார். “ஏன்?” என்றார் யுதிஷ்டிரன். “ஏனென்றால் அவரும் நீங்களும் வேறல்ல.” யுதிஷ்டிரன் திகைத்து பின் தளர்ந்து தலைகுனிந்தார். இளைய யாதவர் “நகுலனும் சகதேவனும் அவரை வெல்லட்டும்… பீமசேனன் துரியோதனனை வெல்லட்டும்… இன்னும் ஒரு நாழிகையில் இங்கே போர் முடிந்துவிடும்” என்றார்.
யுதிஷ்டிரன் களத்தை நோக்கினார். சியாமளர் மண்சிலை நீர்பட்டு கரைந்து உருவழிவதுபோல மடிந்து சேற்றில் அமர்ந்தார். அவருக்கு அப்பால் அவருடைய மாணவர்களும் அவ்வாறே தளர்ந்து தொய்ந்தனர். யுதிஷ்டிரன் அச்சத்துடன் அவர்களின் உடல்களை பார்த்தார். சியாமளரின் இடைக்குக் கீழே உடலே இருக்கவில்லை என்று தோன்றியது. அவருடைய மாணவர்களும் உடல் சிதைந்திருந்தனர். அவர்கள் விழுந்து விழிநிலைத்து அங்கே நெளிந்தசைந்த உடல்பரப்பில் பதிந்து விழிக்கு அறியாதவர்களாக ஆனார்கள். அது ஒரு கொடுங்கனவு. ஆனால் அவர்கள் எழுந்து வந்தனர். உயிரளித்தனர். அவர்களில் ஏறிவந்தவை பாதாளதெய்வங்களா என்ன? அவர்கள் எழுந்து வந்த அதே இடத்தில் விழிப்பதற்கு முன் இருந்த அதே வடிவில் மீண்டும் சென்றமைந்துவிட்டதாக யுதிஷ்டிரன் எண்ணினார்.
“மூத்தவரே, நீங்கள் பின்னடைந்து ஓய்வெடுங்கள்… மைந்தர் உங்களுடன் இருக்கட்டும்” என்றான் சகதேவன். “இளையோனே, சகுனி வஞ்சம் கொண்டவர்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “ஆம், ஆனால் இப்போது அவர் என்றும் இருந்ததைவிட நாங்கள் வஞ்சம் கொண்டிருக்கிறோம்” என்றான் சகதேவன். இளைய யாதவர் தேரிலேறிக்கொள்ள நகுலன் அதில் ஏறி நின்றான். யுதிஷ்டிரன் “அர்ஜுனன் எங்கே?” என்று கேட்டார். அவன் அப்பால் பின்பக்கம் நோக்கி நிற்பதை கண்டார். நகுலன் “செல்க! செல்க!” என்று ஆணையிட தேர் எழுந்து உடல்களின்மேல் ஏறிவிழுந்து அகன்றது. சுருதகீர்த்தியும் சுருதசேனனும் நகுலனுடன் சென்றனர். பீமனுடன் அவன் மைந்தர்கள் செல்ல பிரதிவிந்தியனும் யௌதேயனும் சாத்யகியை தொடர்ந்தனர்.
அவர்கள் செல்வதை யுதிஷ்டிரன் நோக்கிக்கொண்டிருந்தார். விண்ணில் முகில்கள் எழுந்து திரண்டுகொண்டிருக்க ஒளி அணைந்துகொண்டிருந்தது. வடமேற்கே சென்ற முகில்கள் எடைகொண்டு நிலைகொள்ள தென்கிழக்கிலிருந்து எழுந்தவை அவற்றை முட்டிமுட்டிச் செறிந்தன. கரிய உருவங்கள் மேலும் கருமைகொள்ள காற்றில் நீர்த்துளிகள் பொழியத் தொடங்கின. தெற்கிலிருந்து வீசிய குளிர்காற்று நடுங்கச் செய்தது. வானிலிருந்து ஓங்கி ஊதியதுபோல ஒரு காற்றலை வந்து அறைந்து சுழித்து அகன்றபோது சிலகணங்கள் அங்கே நிறைந்திருந்த அழுகலின் கெடுமணம் அகன்றது. பின் வெம்மையலை என வந்து மூக்கை அறைந்தது.
அர்ஜுனன் குனிந்து களத்தில் விழுந்த வீரன் ஒருவனின் தோலாடையை கிழித்தெடுத்து தான் அணிந்தான். அவன் கவசங்களை ஒவ்வொன்றாக எடுத்து அணிந்தான். அவன் அசைவுகளிலிருந்த துயில்தன்மையை யுதிஷ்டிரன் வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். அவனுள் வேறேதோ கனவு ஓடிக்கொண்டிருக்கிறது என்று தோன்றியது. “இளையோனே” என்றார். அக்கனவை கலைக்கலாமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால் அக்கனவு நீடிக்கலாகாது என்றும் தோன்றியது. அது உளைச்சேறு போன்ற கனவு. மிகமிக மென்மையானது. பற்றிக்கொண்டால் யானையும் தப்பமுடியாத பேராற்றல் கொண்டது. எது கொல்லுமோ அதை விழையச் செய்வது. எது துன்பமோ அதை சுவை சுவையென காட்டுவது. அவர் கைகளை வீசி “இளையோனே, நோக்குக! இளையோனே” என கூவினார்.
அர்ஜுனன் செய்வதை அதன் பின்னரே அவர் கண்டார். அவன் ஆடைகளை அணிந்து அவற்றின்மேல் கவசங்களை அணிந்தபின் மேலும் கவசங்களை அணிந்தான். அவற்றின் மேல் ஆடைகளை அணிந்தான். கையில் கிடைத்த அனைத்துக் கவசங்களையும் ஆடைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக அணிந்துகொண்டிருந்தான். அவை அனைத்துமே கரிய சேற்றால் ஆனவை போலிருந்தன. அவன் உடல் கருமையாக வீங்கிப்பெருப்பதுபோல் தோன்றியது. “இளையோனே, என்ன செய்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் கூவினார். “இளையோனே, நோக்கு. நீ செய்வதென்ன?” அர்ஜுனன் அவரை நோக்கிவிட்டு அவர் உருவம் உள்ளத்தில் பதியாமல் குனிந்து கீழே கிடந்த ஆடை ஒன்றை எடுத்தான். அது ஆடை அல்ல, ஆடை பதிந்த தடம். ஆனால் அவனால் அது ஆடையல்ல என்று உணர முடியவில்லை. சேற்றை விரல்களால் அள்ளிக்கொண்டே இருந்தான். “இளையோனே! இளையோனே” என யுதிஷ்டிரன் கூவினார்.
அர்ஜுனன் திரும்பி நோக்கியபோது அந்த விழிகளைக் கண்டு அவர் அஞ்சினார். அவை முற்றிலும் அயலானவையாக இருந்தன. மானுடரில் மாண்டோர் எழும்போது மட்டுமே அந்த நோக்கை அவர் கண்டிருக்கிறார். “இளையோனே, என்ன செய்கிறாய்?” அர்ஜுனன் அவரை நோக்கி புன்னகைத்தான். யுதிஷ்டிரன் எழுந்து அவனை அணுகி தோளைப் பற்றி உலுக்கினார். “என்ன செய்கிறாய்? நீ கவசங்கள் அணிந்துவிட்டாய். மீண்டும் மீண்டும் ஏன் அணிகிறாய்?” அர்ஜுனன் தன் உடலை தானே நோக்கினான். “ஆம்” என முனகினான். பின்னர் “ஆம்” என சொல்லிக்கொண்டு தலையை அசைத்தான். “கழற்று அதை” என்றார் யுதிஷ்டிரன். அவன் மீண்டும் தன் உடலை நோக்கிய பின் சலிப்புடன் “வேண்டாம், மூத்தவரே” என்றான்.
யுதிஷ்டிரன் “நீ அடைந்த வெற்றி இந்த ஞாலம் உள்ளளவும் புகழப்படுவது. அந்தக் கண்ணேறு இன்று கழிந்தது என்று கொள்க… நீ தெய்வங்கள் விழைந்ததை அளித்துவிட்டாய். இளைய யாதவன் சொன்னதை நான் சொல்கிறேன்” என்றார். “தெய்வங்களிடம் சொல்க, ஆம் நான் வெறும் மானுடனே! அதை உணர்ந்துவிட்டேன் என்று சொல்க! அதன்பின் நிகழ்ந்ததை முற்றாக மறந்துவிட்டு இங்கு மீள்க! இனி ஒரு வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. இது ஒரு பிறந்தெழல் என கூட்டுக!” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் பொருள்கொண்டானா என்று எண்ண முடியவில்லை. “இளையோனே, போர் முடிகிறது. இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுதான். நாம் பேரிழப்புகளை அடைந்தோம். ஆனால் நம் மைந்தரும் உடன்பிறந்தாரும் எஞ்சியிருக்கிறார்கள். அவ்வண்ணமாவது தெய்வங்கள் நம்மிடம் கனிந்தன.”
அர்ஜுனன் தலையசைத்தான். அவன் பேசியபோது அக்குரலே அவர் அறிந்ததாக இருக்கவில்லை. “ஆம், தெய்வங்கள் கனிவுகொள்பவை. இறுதித்துளி ஆணவத்தையும் பெற்றுக்கொண்டு தங்கள் கொடைகளை அளிக்கின்றன.” அவன் உரக்க நகைத்து “நாக்கை பிடுங்கிவிட்டு நற்சுவையை அளிப்பதைப்போல” என்றான். “நீ இக்கசப்பையே வெல்லவேண்டும்…” என்று யுதிஷ்டிரன் முகம்சுளித்தபடி சொன்னார். “இந்தத் தருணத்திலிருந்து உன்னில் முளைவிட்டு வளரப்போவது இது. இதை வெல்க… வேறுவழியே இல்லை, இதை வென்றாகவேண்டும்.” அர்ஜுனன் சூழ நோக்கி “அவர்கள் எங்கே?” என்றான். “சகுனியை வெல்லச் சென்றிருக்கிறார்கள்” என்றார் யுதிஷ்டிரன். “அவர் ஒரு நாழிகைக்குள் வீழ்வார் என்றும் அவர் வீழ்ந்தபின் துரியோதனன் களம்நிற்கப்போவதில்லை என்றும் யாதவன் சொல்கிறான்.”
“சகதேவன் சகுனியை கொல்வான், ஐயமில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். மீண்டும் வெற்று நகைப்புடன் “சூதாடிகளில் ஒருவரையேனும் அவன் கொல்லட்டும். அகம் அடங்கி இங்கிருந்து மீள்வான்” என்றான். யுதிஷ்டிரன் விழிகள் தாழ்த்தி தலையை அசைத்தார். அர்ஜுனன் சென்று ஒரு தேர்த்தட்டில் அமர்ந்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கொண்டான். “அவர் என் தேரிலிருந்து இறங்கிவிட்டார். அவன் தேரை ஓட்டுகிறார். அவன் இப்போது அர்ஜுனன் ஆவான். அவன் கையில் இருக்கும் வில் காண்டீபமும் ஆகும்” என்றான். “இதை நிகழ்த்தி அவர் அடைவதுதான் என்ன? மூத்தவரே, தெய்வங்கள் ஏன் இத்தனை இரக்கமற்றவையாக இருக்கின்றன?” யுதிஷ்டிரன் அவனை திகைத்த விழிகளால் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். அர்ஜுனன் மீண்டும் உரக்க வெற்றுநகைப்பை எழுப்பினான். முகம் நகைக்கையில் விழிகள் ஒழிந்துகிடந்தன.
“இக்களத்திலிருந்து இறக்காமல் மீள்பவர் தற்கொலை செய்துகொள்வார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “நாம் மண்மேல் நிலைகொள்ளவில்லை. இங்குள்ள ஒவ்வொன்றுக்கும் நாம் அளித்துள்ள பொருள்மேல் நிலைகொண்டிருக்கிறோம். பதினெட்டு நாட்களில் அத்தனை பொருட்களையும் முற்றாக அழித்துவிட்டோம்.” யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். அர்ஜுனன் “அவர் இந்தக் களத்தை மெழுகிப்பூசிவிட்டார். இனி அவருக்கு உரியதை இதன்மேல் எழுதுவார்” என்றான். யுதிஷ்டிரன் “நாம் இப்பேச்சை விடுவோம்… இன்னும் சற்றுநேரம்…” என்றார். அச்சொல் சென்று ஏதோ நரம்பை தொட்டதுபோல அர்ஜுனன் விதிர்ப்புற்று எழுந்தான். கீழிருந்து கூரிய அம்பொன்றை எடுத்து தன் கழுத்தை நோக்கி கொண்டுசெல்ல யுதிஷ்டிரன் பாய்ந்து அவன் கையை பற்றிக்கொண்டார். “இளையோனே வேண்டாம், இது என் ஆணை! என் ஆணை, இளையோனே!”
அம்பை வீசிவிட்டு அர்ஜுனன் விம்மி அழுதான். தலையை ஓங்கி அறைந்தபடி குவிந்திருந்த பிணங்கள் மீதே அமர்ந்தான். யுதிஷ்டிரன் அவன் உடல்குலுங்க அழுவதை நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் ஒரு சொல்லும் உரைக்காமல் பின்னடைந்து தானும் அமர்ந்தார். அவன் அழுது ஓய்ந்து மெல்ல மீள்வதை நோக்கிக்கொண்டிருந்தார். மிக அப்பால் சங்கொலி கேட்டது. அது சாத்யகியின் அறிவிப்பு என அவர் உணர்ந்தார். மெல்லிய துடிப்புடன் எழுந்தமர்ந்தார். மீண்டும் செவிகொண்ட பின் “கிருதவர்மன் வீழ்ந்தான்… கிருதவர்மனை சாத்யகி வீழ்த்திவிட்டான்” என்றார். அர்ஜுனன் அதை செவிகொள்ளவில்லை. யுதிஷ்டிரன் நிலையழிந்து உடல் ததும்பினார். “ஒரு வாழ்த்தொலிகூட இல்லாத சாவு… இங்கே சாவு முற்றாக பொருளழிந்துவிட்டது” என்றார்.
மீண்டும் ஒரு சங்கொலி எழுந்ததும் அவ்வொலி கேட்ட திசைநோக்கி சற்று சென்று இடையில் கைவைத்து நின்று “அது திருஷ்டத்யும்னனின் கொம்பொலி. வீழ்ந்தவர் கிருபர்!” என்றார். “கிருபரை பாஞ்சாலன் வீழ்த்த முடியுமா என்ன? ஆனால் இக்களத்தில் மாணவர்கள் ஆசிரியரை வென்றுகொண்டிருக்கிறார்கள்.” அவர் கைகள் பதறி அசைய “வீழ்த்தப்பட்டுவிட்டார்… ஓர் எளிய அறிவிப்பை அளிக்கக்கூட நம்மிடம் எவருமில்லை” என்றார். “இனி எஞ்சியிருப்பவர் அஸ்வத்தாமன்… அவரை எவர் வெல்லமுடியும்? அவரே களம்விட்டு செல்லவேண்டும்…” சங்கொலி எழுந்தது. “சிகண்டி! சிகண்டி!” என்றார் யுதிஷ்டிரன். “அஸ்வத்தாமனை அவர் வீழ்த்திவிட்டாரா என்ன?” செவிகூர்ந்து “அஸ்வத்தாமனை சிகண்டி புறம்கண்டார். அஸ்வத்தாமன் களம்விட்டு அகன்றார்” என்றார்.
யுதிஷ்டிரன் கொந்தளிப்புடன் திரும்ப வந்து அர்ஜுனனிடம் “இளையோனே, முழு வெற்றி… முழு வெற்றி அணுகி வருகிறது. இனி எஞ்சுபவர் சகுனி… அதன்பின் இக்களத்தில் துரியோதனன் தனித்து நிற்பான்!” என்றார். அர்ஜுனன் வேறெங்கோ இருந்தான். “இளையோனே, அஸ்வத்தாமனே வெல்லப்பட்டார்!” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவனை தன் சொற்கள் சென்றடையவில்லை என உணர்ந்து அவன் ஆணவத்தை சென்று தொடும் சொல்லை எடுத்தார். “உன்னால்கூட வெல்லப்பட இயலாதவர், பாஞ்சாலரின் வில் முன் பணிந்தார்.” மீண்டும் கூர்ந்து நோக்கி “பீஷ்மரை வென்ற புகழுடன் இதுவும் அவருக்கு அமையும்” என்றார். அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கவில்லை. யுதிஷ்டிரன் சோர்வுடன் தலையசைத்து “இங்கே தனித்து நின்றிருக்கிறேன்… முற்றிலும் தனித்து நின்றுள்ளேன்” என்றார்.
அர்ஜுனன் நீள்மூச்சுகளுடன் நிலைமீண்டான். தலையை உலுக்கி தன்னிடமிருந்தே விடுபட்டான். பின்னர் நிமிர்ந்து யுதிஷ்டிரனை நோக்கி “நான் மீண்டும் அவரை பார்க்க விழைகிறேன், மூத்தவரே” என்றான். “அவர் சொன்ன அத்தனை சொற்களும் என்னுள் மறைந்துவிட்டிருக்கின்றன. சொன்ன அந்த முகம் மட்டுமே நினைவில் எஞ்சுகிறது. மீண்டும் அவர் அதை சொல்லவேண்டும் என விழைகிறேன்.” யுதிஷ்டிரன் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்து எழுந்து அகன்றுவிடவேண்டும் என்னும் தவிப்பே அவரிடம் எஞ்சியிருந்தது. அவனை அவர் உள்ளாழத்தில் அஞ்சினார்.
“ஒருவேளை இனி பல்லாயிரம் முறை பல்லாயிரம் பல்லாயிரம் முறை அது சொல்லப்படக்கூடும்” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் அதன் ஒவ்வொரு சொல்லும் இப்போது பொருள்மாறுபாடு கொண்டுவிட்டது. இக்களத்தில் நின்று அதை மீண்டும் ஒவ்வொரு ஒலித்துளியாக நினைவுகூர வேண்டும். ஒவ்வொன்றிலும் உறையும் தெய்வங்களை மீட்டெடுக்க வேண்டும். அவ்வண்ணம் காலமடிப்பு தோறும் அதை கண்டெடுக்க வேண்டும் போலும்.” யுதிஷ்டிரன் “ஆம், இளையோனே. இங்கே இளைய யாதவனின் அழியாச் சொல் நிலைநாட்டப்பட்டுவிட்டது. இந்த யுகத்திற்கான பொருள் நிறைவுகொண்டது” என்றார். இரு கைகளையும் விரித்து “இக்களத்திலிருந்து ஒரு படைவீரன்கூட எஞ்சப்போவதில்லை. இதோ இன்னும் அரைநாழிகைப் பொழுதில் இப்போர் இங்கே முடியும்… அனைத்தும் இங்கேயே நிறைவுறும்” என்றார்.
கீழே கிடந்த உடல்களில் ஒன்று விழிதிறந்து “இன்னும் இல்லை” என்றது. “என்ன?” என்று யுதிஷ்டிரன் அதட்டினார். “இங்கல்ல” என்றது அது. “யார்? யார்?” என்றார் யுதிஷ்டிரன். அந்த உடல் வலியின் நெளிவை காட்டியது. முகம்சுளித்து பற்கள் உதடுகளை கடித்து இறுக்க மெல்ல அதிர்ந்து பின் விடுபட்டது. “யார்? யார் அது?” என யுதிஷ்டிரன் கூவினார். நிமிர்ந்து அர்ஜுனனை நோக்கியபோது அவன் அவரை திகைப்புடன் நோக்கிக்கொண்டிருப்பதை கண்டார். மீண்டும் அந்த முகத்தை நோக்கினார். அது இறந்து நெடுநேரம் ஆயிற்று என்றே தோன்றியது.