தீயின் எடை - 23

சகுனி களத்தில் தேரில் நின்று அம்புதொடுத்து போரிட்டபடி தன்னை இருபுறமும் பின்தொடர்ந்து காத்து வந்த மைந்தர்களை பார்த்தார். வலப்பக்கம் விருகனும் இடப்பக்கம் உலூகனும் வழிநடத்த மைந்தர்கள் விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும் விந்தனும் உத்பவனும் வந்துகொண்டிருந்தனர். அவர்களின் அம்புகளால் அமைக்கப்பட்ட வேலிக்குள் அவர் சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த அம்புகளில் பெரும்பாலானவை அவருடைய மைந்தரின் அம்புகளால் தடுக்கப்பட்டன. உலூகனின் அம்புகள் விசையும் விரைவும் கொண்டவை. விருகனின் அம்புகள் எடைமிக்கவை. அவை எதிரம்புகளை வெல்வதன் சிறிய மணியோசைகள் அவரை சூழ்ந்திருந்தன.

களத்திற்கு வந்த முதல் நாளே அவர் தன் மைந்தர்களை தன் பாசறைக்கு அழைத்து அவர்கள் தன் மெய்க்காவலராகவோ புறங்காப்பவராகவோ எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும் என்று ஆணையிட்டார். பெரும்பாலான பொழுதுகளில் படைகளுக்குப் பின்புறம் முழுப் படையையும் நோக்கி ஆணையிடும் இடத்தில் அவர் இருந்தமையால் அவர்களும் போர்முனைக்கு அரிதாகவே சென்றனர். ஆகவே பதினேழு நாள் போரிலும் அவர்கள் உயிர்பிழைத்திருந்தனர்.  ஒருவர்கூட உடற்குறை இல்லாமல் எஞ்சினர். ஆனால் அவர்கள் அக்களத்தில் இருப்பதை கௌரவப் படையில் எவருமே தனித்துணரவில்லை. சகுனியின் நிழல்கள் என்றே அவர்கள் தோன்றினார்கள். ஒருமுறையேனும் அவர்கள் அவைகளில் தங்களை காட்டியதில்லை. களத்திலும் தனித்து வில்லுடன் எழவும் இல்லை.

முதல் நாளுக்குப்பின் சகுனியே அவர்களை முற்றாக மறந்தார். அவர்கள் அவரிடமிருந்து தனி ஆணைகள் எதையும் பெறவில்லை. ஒவ்வொரு நாளும் போர் முடிந்து அவர் தேர் திருப்பி கௌரவப் படைகளுக்குள் நுழையும்போது உடன் வந்து அவருடைய பாசறைக்கு அருகிலேயே நின்று பின்னர் திரும்பி தங்கள் பாசறைகளுக்கு சென்றனர். எப்போதுமே அவரிடம் சொல்ல அவர்களிடம் ஏதுமிருக்கவில்லை. பதினேழாம் நாள் போர் முடிந்த அன்று இருளில், மழையின் ஈரத்தில் கால்பழக்கத்தால் தன் பாசறை இருந்த இடம் நோக்கி சென்று தன்னியல்பாக அங்கு பீடத்தை தேடிய பின்னரே வெற்றிருளை சூழ உணர்ந்து திடுக்கிட்டபோது சகுனி தன் மைந்தரை நினைவுகூர்ந்தார். அவர் உடலுக்குள் இருந்து ஓர் உடல் எழுந்து வந்து அருகே நிற்பதைப்போல அவ்வெண்ணம் அருகே இருப்புணர்த்தியது.

விழிகளை சூழ ஓட்டி இருளுக்குள் மெல்லிய முழக்கமென நிறைந்திருந்த கௌரவப் படையை கூர்ந்து நோக்கினார். அதற்குள் அவர்கள் இருக்கிறார்களா என்று உள்ளம் துழாவியது. முந்தைய நாள் அவர் போர்முகப்பிலிருந்து திரும்பியபோது அவர்கள் உடனிருந்தார்களா என்று அவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவேளை முந்தைய நாட்களிலேயே அவர்களில் சிலர் களம்பட்டிருக்கவும் கூடும் என்ற எண்ணம் எழுந்ததும் அவர் உளம் அதிர்ந்தார். பின்னரே அது எவ்வளவு பொருத்தமற்ற உளஓட்டம் என்று உணர்ந்து நீள்மூச்செறிந்தார். மைந்தர்களில் எவரேனும் களம்பட்டிருந்தால் உறுதியாக அவரிடம் அவர்கள் தெரிவித்திருப்பார்கள். அவர்களுக்கு நீர்க்கடனும் அனற்கடனும் ஆற்ற அவரை அணுகியிருப்பார்கள்.

அவ்வெண்ணம் எழுந்ததும் மீண்டும் அவர் உடல் மெய்ப்பு கொண்டது. பதினேழாம் நாள் போரின் அந்தியில் களத்திலிருந்தவர்கள் எவரின் பெயர்களும் தனித்து உரைக்கப்படவும் இல்லை, அவர்களின் உடல்கள் தனித்து அறியப்படவும் இல்லை. களம் நிறைத்து கொழுந்தாடி எழுந்த பெருஞ்சிதையில் அவருடைய மைந்தர்களும் ஆகுதியாகியிருக்கக்கூடும். அந்த இரவு அவ்வெண்ணத்துடன் அவரால் அமர்ந்திருக்க இயலவில்லை. எழுந்து இருளுக்குள்ளேயே தலையை அசைத்தபடியும் சுட்டு விரல் அசைத்தும் தனக்குத்தானே பேசியபடியும் சுற்றி நடந்தார். அப்போது தன் மைந்தரை தன்னை வந்து சந்திக்கும்படி ஆணையிட எந்த வழியும் இல்லை. ஒலிகள் எதுவும் கேட்கப்படவில்லை. ஒளியால் இடப்படும் ஆணைகளை எவரேனும் நோக்குகிறார்களா என்றும் தெரியவில்லை.

வேறு வழியில்லை. மறுநாள் போருக்கெழும் வரை காத்திருந்தே ஆகவேண்டும். மீண்டும் சென்று அமர்ந்துகொண்டு தலையை அசைத்தார். சற்று நேரம் கழித்தே இல்லை இல்லை என்று தான் தலையசைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். கண்களை மூடி இமைகளுக்குள்ளும் அதே இருளை உணர்ந்தார். என் மைந்தருக்காக அஞ்சுகிறேனா என்ன? இக்களத்தில் பல்லாயிரம் பல்லாயிரம் இளைஞர் களம்பட்டனர். அரசமைந்தர் வீழ்ந்தனர். என் நெஞ்சிலும் தோளிலும் தூக்கி வளர்த்த கௌரவர்களும் அவர்களின் மைந்தர்களும் வீழ்ந்தனர். எவருடைய இறப்பும் என்னை துயரடையச் செய்யவில்லை. ஓர் இறப்புச் செய்தி செவியில் விழுந்ததுமே அதன் பொருட்டு எவர் எவ்வண்ணம் உணரக்கூடும், படைகளில் அதன் விளைவு என்னவாக இருக்கக்கூடும் என்பதையன்றி பிறிதொன்றை நான் எண்ணியதே இல்லை.

துரியோதனனுக்கு நிகராக அவர் உள்ளத்தில் நிறைந்திருந்த துச்சாதனனின் இறப்புகூட சற்றும் உள உலைவை உருவாக்கவில்லை. இறந்த துச்சாதனனை நினைவுகூரும்போதுகூட அவன் எங்கோ இருந்துகொண்டிருக்கிறான் என்ற உள மயக்கை அடைந்தார். அக்களத்தில் அவர்கள் அனைவரும் விழக்கூடும் என்று முன்னரே தெரிந்திருக்குமோ தனக்கு என்று ஒரு முறை அவர் எண்ணியதுண்டு. அது எப்படி தெரியக்கூடும் என்று உள்ளம் வியந்தாலும் இல்லை மெய்யாகவே தோன்றியிருந்தது என்று பிறிதுளம் அழுந்த மென்குரலில் கூறிக்கொண்டும் இருந்தது. இவர்களை வைத்து ஆடினேன். இழப்பெனத் தெரிந்தே. என் எல்லையை காணும்பொருட்டு. இல்லை அவன் எல்லையை காணும்பொருட்டு. இவ்விழப்புகளை அமைத்தவன் அவன்.

ஆனால் என் மைந்தருக்காக துயர்கொள்கிறேன். என் மைந்தர்! என் மைந்தர்! என் மைந்தர்! இன்று என் அகத்தே அரற்றிக்கொண்டிருக்கிறேன். முன்பு இச்சொற்கள் என் மூச்சுக்கு அடியில் ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தன. என் மைந்தர். அவர்கள் இறந்தபின் நான் வாழ முடியாது. ஏனென்றால் அவர்களே நான். எத்தனை இழிவு! அளவிலாச் சிறுமை இவ்வெண்ணம். ஆனால் இச்சிறுமை இல்லாத எவரேனும் உள்ளனரா என்ன? இப்போரே இங்கே இருக்க, ஆழப் பதிய, என்னை அறிய, என்னைக் கடக்க, எஞ்சவிட்டுச்செல்ல நான் நிகழ்த்துவது. நான் நான் நான் என நான் அரற்றாத நாளில்லை. நான் என்பதன் மறுவடிவல்லவா என் மைந்தர். மைந்தரையும் களமிறக்கிப் பொருதுபவன் தன்னைவிடப் பெரிய ஒன்றின்பொருட்டு நிலைகொள்பவன். எனில் துரியோதனன் அத்தகையவனா என்ன?

அத்தகைய உளப்பிளவுகளும் அகத்திசையழிவுகளும் நிகழ்கையில் உடனடியாக எழுந்து உடலை விரித்து காலை சற்றே அசைத்து முன்னால் நீட்டி வைப்பது அவருடைய பழக்கம். காலின் புண்ணிலிருந்து எழுந்து அலையலையாக உடலைத் தாக்கும் வலி அவருக்குள் இருக்கும் உளக்குலைவு அனைத்தையும் தொகுத்து கூர்கொள்ளச் செய்துவிடும். நீரில் வீசப்படும் வலை ஒற்றைச்சரடில் இழுபட்டு அம்புமுனை எனக் குவிந்து எழுவதுபோல. வலி ஓர் ஊழ்க நுண்சொல் என அவர் உள்ளத்தை ஒருங்கிணைத்தது. அதன் தாளம் அவர் எண்ணங்களின் ஒழுங்காக மாறியது. இந்த வலி என் தோழன். என் வழிகாட்டி. என்னுடன் உருமாறி வந்து அமைந்திருக்கும் எனக்குரிய தெய்வம்.

என்றேனும் இந்த வலி அகலுமென்றால் உளம் சிதறி நான் பித்தனாகிவிடக்கூடும். விண்ணுலகு செல்கையில் அனைத்து வலிகளும் அகன்றுவிடும் என்பார்கள். இவ்வலி இன்றி அங்கு பிறிதொருவனாக இருப்பேன். என் முகத்தில் எப்போதும் இருக்கும் இந்தச் சுளிப்பு மறைந்திருக்கும். நறுமணங்களையும், இனிய வண்ணங்களையும், மெல்லிசையையும், இன்சுவைகளையும், நுண்ணிய அழகுகளையும், உயர்ந்த எண்ணங்களையும் அறிபவனாக மாறியிருப்பேன். ஆனால் இப்போதுபோல இலக்கு தேரும் அம்பென முந்தும்கூர் கொண்டிருக்க மாட்டேன். சிதறிப்பரவி வெற்று அலையென்றாகி இருப்பேன். அது சகுனி அல்ல. சகுனி என எழுந்தமைக்கு முன்பிருந்த வடிவம். சகுனி இங்கே இவ்வண்ணம் திரண்டவன். அரவுப் பல்லில் ஆலம் திரண்டதுபோல். இன்று நான் என எண்ணுவது என் குவியத்தை. என் இலக்கு அது. என் பசி அது. கரிய மூக்கு நுனியால் இழுத்துச் செல்லப்படும் குருதிமணம் பெற்ற பாலைவன ஓநாய் நான்.

தன்னுள்ளிருந்த அந்த நஞ்சை ஓநாய் எனக்கு அளித்துவிட்டிருக்கிறது. அதன் வயிற்றில் எரியென கொதித்து, நாவில் நீரென ஊறுவது. பற்களில் ஒளி கொள்வது. கண்களில் கூர் கொள்வது. செவிகளில் குவிந்து நுனியசைவது. வாலில் நெளிவது. கால்களில் காற்றை அறியச் செய்வது. அவர் அந்த ஓநாயை அருகிலெனக் கண்டார். அது இருளுக்குள் அவரை நோக்கியபடி நின்றிருந்தது. அதன் மயிர்ப்பிசிறுகள் காற்றில் அலைபாய்ந்தன. மிக மெல்ல அது முனகியது, யாழ்நரம்பு காற்றில் அதிர்வதுபோல கேட்கும் கேளாச் சிற்றொலி. அதன் நஞ்சு என்னை வாழவைக்கிறது. அதன் அருள் என்னை ஆற்றல்கொண்டவனாக ஆக்கியது. இப்புவியை நஞ்சுகளே ஆக்கி ஆட்டுவிக்கின்றன. விண்ணூர்பவனின் துயில் தாங்கும் நஞ்சு. ஆலகாலனின் கழுத்தமைந்த நஞ்சு. வாசுகியின் நா நிறைத்த நஞ்சு. நான்முகனின் எழுத்தாணிக்கூரிலும் அந்நஞ்சே வாழ்கிறது.

தன்னை புறவயப்படுத்திக்கொள்ளும் பொருட்டு சூதாடுவது அவர் வழக்கம். நிலையழியும் போதெல்லாம் நாற்களத்தைப் பரப்பி கரு நிரத்துவார். பருவடிவில் நாற்களமும் கருக்களும் இல்லாதபோது விழி மூடி எண்ணத்திலேயே களம் பரப்பி காய்விரித்து முழுமையாக ஆட அவரால் இயலும். போர் சூழ்ந்தபின் நாற்களமாடல் முற்றாகவே அவர் உள்ளத்திலிருந்து மறைந்துவிட்டது. முதல்முறையாக குருக்ஷேத்ரத்தைப் பார்த்த அக்கணமே அது அகன்றது என எண்ணிக்கொண்டார். மீண்டும் எண்ணி எண்ணி அதை எடுக்கையில்கூட ஆழத்திலிருந்து வெறுமனே அச்சொல் மட்டுமே எழுந்து வந்தது. எப்பொருளும் அளிக்காத ஓர் ஒலியென அது அவர்முன் கிடந்தது.

அவர் மீண்டும் தன் மைந்தரை நினைவுகூர்ந்தார். அவர்கள் எப்படி அவர் விழிகளுக்குத் தெரியாதவர்களாக ஆனார்கள்? அவர் அவர்களிடம் பேசுவதே இல்லை. அவர்களும் பேசாதபோது நடுவே திரண்ட அமைதி இரு சாராரிலும் குடியேறியது. விழிகளும் முகமுமே அவர்கள் பேசிக்கொள்ள போதுமானதாக ஆகியது. உலூகனின் ஓசையின்மையை அவர் முதலில் உணர்ந்தது ஒருமுறை அவனுடன் காட்டிற்குள் வேட்டைக்குச் செல்கையில். கங்கைக்கரைக் காட்டில் அவர் புரவியில் அம்புடன் ஒரு சிறுத்தையைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். அது அவரை முன்னரே உணர்ந்துவிட்டிருந்தது. ஆகவே முழுமையாகவே புதர்களுக்குள் உடல்மறைத்து புழுவைப்போல ஊர்ந்து சென்றது. செவிகூர்ந்தால் மட்டுமே அதன் உடல் மண்ணில் உரசும் ஒலி கேட்டது. அது அவரையும் ஓசையற்றவராக ஆக்கியது.

ஒருகணத்தில் முற்றிலும் தனிமையை உணர்ந்து திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தபோது உலூகன் தன் பின்னால் உடனிருப்பதை கண்டார். மைந்தன் உடனிருக்கையில் தந்தை உணரும் தனிமை ஒன்று உண்டென்பதை அப்போது உணர்ந்தார். அவன் விழிகளை பார்த்தபோது அதிலும் தன் இருப்பை காண இயலாது திகைத்து பின்னர் “நீ உடனிருந்தாயா?” என்றார். ஆம் என அவன் முகக்குறி காட்டினான். “உன் புரவிக்குளம்படிகளைக்கூட நான் கேட்கவில்லை” என்றார். அதற்கும் அவன் மறுமொழி ஏதும் சொல்லவில்லை. பின்னர் திரும்பி புரவியை ஓட்டியபோது அவன் உடன் வருகிறானா என செவி கூர்ந்தார். புரவிக்குளம்படியின் சீரான தாளம் மட்டுமே இருந்தது. ஒரு மானுடன் தொடர்வதன் உளப்பதிவு எதுவும் உருவாகவில்லை.

விந்தைதான்! இது என் உள மயக்கு போலும். மானுடர் இருப்பை மானுடர் உணரும் நுண்புலன் ஒன்று உண்டு. முற்றிருளில், முற்றிலும் ஓசையின்றி, மணமின்றி, காற்றசைவின்றி ஒருவர் அணுகினால்கூட மானுடர் எவ்வண்ணமோ அதை உணர்ந்துவிடமுடிகிறது. இவனை என்னால் உணர முடியவில்லை என்றால் இவன் பயின்றிருப்பது ஏதோ ஒன்று உண்டு. இவன் குடியில் அசுரக் குருதி உள்ளது. அசுரர்களும் அரக்கர்களும் கந்தர்வர்களிடமிருந்து கற்ற கலைகளில் ஒன்று அறியாது தொடர்தல், மறைந்து அருகிருத்தல். எனில் எப்போதும் இவன் என்னுடன் இருக்கிறானா? நான் சற்றுமறியாமல்?

அன்று மீளமீள காட்டிற்குள் அவன் இன்மையென தன்னுடன் இருப்பதை பல கோணங்களில் அவர் உய்த்தறிந்துகொண்டிருந்தார். பின்னர் உளச்சோர்வும் விலக்கமுமாக அதை உறுதி செய்தார். அவன் இன்மை என்றே ஆகக் கற்றவன். பின்னர் பல முறை தனியறைகளில், அவைகளில் இன்மை என்றே அவன் இருப்பதை உணர்ந்தபின் ஒருமுறை அவனிடம் கேட்டார் “நீ முற்றமைதி கொண்டிருக்கிறாய். உன் விழிகளாலேயே பெரும்பாலும் பேசுகிறாய். ஏன்?” அவன் தலைவணங்கி உதட்டசைவால் அறியேன் என்றான். “நீ உடனிருப்பதை நான் உணர்வதே இல்லை.” உலூகன் அதற்கும் விழிக்குறியே காட்டினான். “நீ என்னை தொடர்கிறாயா? என்னை ஒற்றறிகிறாயா?” அவன் வெறுமனே நோக்க அவர் அவன் விழிகளை சிலகணங்கள் நோக்கிவிட்டு விழிவிலக்கிக் கொண்டார்.

அதன் பின்னர் ஒருநாள் அவனுடைய முகக்குறி நினைவிலெழுந்தபோது அது மிக அணுக்கமானது என்பதை உணர்ந்தார். மிக நன்கறிந்தது அது. ஆம், அதுதான். ஏன் அதை இத்தனை நாள் உணராமல் போனேன்? அந்த அமைதி அவன் அன்னையிடமிருந்து வந்தது. அவளில் எஞ்சியிருப்பது.

உலூகனின் அன்னையை ஒருமுறை கங்கைக்கரையில் வேட்டைக்குச் சென்றபோது அவர் பார்த்தார். அதுவரை அவருக்கு பெண்கள் எப்போதாவது தேவைப்படும் இளைப்பாறலாக மட்டுமே இருந்தனர். அவருடைய மஞ்சத்தறைக்கு வந்து சென்ற பெண்களின் முகங்களை அவர் நினைவுகூர்ந்ததே இல்லை. வேறெப்போதாவது அவர்களை நேரில் பார்க்கையில் அவர்களின் விழிகள் கணம் ஒளிர்ந்து மறையும் அறிமுகம்கூட அவருக்கு எதையும் நினைவுறுத்துவதில்லை.

ஒருமுறை அவருடன் இருந்த பரத்தை முன்னரே பலமுறை அவர் அவளிடம் வந்ததைப்பற்றி கூறியபோது துணுக்குற்று “உன்னிடமா? எப்போது?” என்று அவளிடம் கேட்டார். அவளை அச்சொற்கள் புண்படுத்த அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். “சொல், உன்னிடமா? நானா?” என்றார். அவள் துயருற்றவள் என புன்னகைத்தாள். அவர் ஏளனமாக நகைத்து “எனக்கு உன் ஆத்மா தேவையில்லை. அதை நான் புணரமுடியாது” என்றார். அவள் விழிகளில் மிக மெல்லிய நஞ்சு குடியேறியது. அப்போது அவர் அதை உணரவில்லை. அவள் புன்னகைக்கிறாள் என்று தோன்றியது. புன்னகை அவள் முகத்தில் இல்லை என்றும் தெரிந்தது. பின்னர் அதை பேசுகையில் கணிகர் சொன்னார் “பெண்டிரிடம் உள்ளது அந்த நச்சுப்பூமுள். பரத்தையர் அதை படைக்கலமாக்கும் கலையை பயின்றவர்கள்.”

அவர் “ஏன் நகைக்கிறாய்?” என்றார். அதன் பின்னரே அவள் புன்னகைத்தாள். “சொல்” என்றார். “இவ்வண்ணம் சொல்பவர்கள் பெண்களின் உடல் சலித்து ஆத்மாவை தேடி அலைவார்கள். பெண்ணுக்கு முன் மண்டியிடுவார்கள். அவள் காலடியை தலைசூடுவார்கள்.” சகுனி ஒருகணம் திகைத்தபின் உரக்க நகைத்து “தீச்சொல் இடுகிறாய் அல்லவா?” என்றார். “இல்லை, அவ்வாறு நிகழ்கையில் என்னை நினைவுகூர்க!” என்றாள். அவர் அவளை கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்தார். “உடலைப் புணரவே இயலாது காந்தாரரே, ஆத்மாவை மட்டுமே புணரமுடியும். ஒருகணமேனும் பெண் ஆத்மாவை உங்களுக்கு அளிக்கவேண்டும். உடலை மட்டுமே புணர நேர்ந்தால் ஆண்கள் தங்கள் உடலை வெறுப்பார்கள். கசந்து தசையுருகி அழிவார்கள்” என்றாள்.

சகுனி ஏளனத்துடன் “உன் ஆத்மாவைத்தான் அனைவருக்கும் பகிர்கிறாயா என்ன?” என்றார். “ஆம், ஒரு துளியையேனும்… அவ்வாறன்றி இவ்வாழ்வில் சித்தம் பிறழாமல் திகழமுடியாதென்று புரிந்துகொண்டேன்” என்றாள் அவள். சகுனி “நன்று. ஊருணி என உன் ஆத்மாவை உணர்கிறாய் போலும்” என்றார். “ஆம், அல்லது முலையூட்டும் அன்னை என” என்றாள். சகுனி அவளை மேலும் ஏளனம் செய்ய எண்ணினார். ஆனால் சொற்கள் எழவில்லை. அவள் அவர்மேல் முழு வெற்றியை விழைந்தாள். “சென்றமுறை வந்தபோது நீங்கள் பின்னிரவில் வலியால் முனகினீர்கள். அறைக்குள் ஓர் ஓநாய் இருப்பதாக கனவில் உரைத்தீர்கள். அன்று நான் அடைந்த கனிவாலேயே உங்களை இன்று நினைவுகூர்ந்தேன்.”

அந்நிகழ்வை அவர் மறந்துவிட்டார். ஏனென்றால் அது பெண்ணின் ஆணவம் சிறுமைகொண்டமையால் எழுந்த சொல் என அவரிடம் கணிகர் சொன்னார். “மெய்யாகவே அப்பெண் சற்றே அன்னை. இல்லையேல் உங்களை என்றுமென கசந்துபோகச் செய்யவும் அவளால் இயலும்.” சகுனி பெண்கள் தன் வாழ்வில் ஒருபோதும் ஊடுருவப்போவதில்லை என்றே எண்ணியிருந்தார். புராணகங்கைக்குள் தனித்து வேட்டைக்குச் செல்வது அவருடைய இயல்பு. அப்போது அவருடைய உள்ளம் பறப்பதை போலிருக்கும். தன் உள்ளத்தை எப்போதும் எடைமிக்க பாறாங்கல்லென தன் உடலை அழுத்தி மண்ணோடு நிறுத்தியிருக்கும் ஒன்றாகவே அவர் உணர்ந்திருந்தார். புரவியில் விசைகொண்டு செல்கையில் மட்டும் அது உடலிலிருந்து எழுந்து மேலாடைபோல் காற்றில் பறக்கும். பின்னர் நெடுந்தொலைவுக்கு அப்பாலென சென்று சிறகடித்து உடன்வரும். அவ்வப்போது அவரை விட்டுவிலகி எங்கோ சென்றுவிடும்.

உள்ளம் இல்லாதிருக்கும் அத்தருணங்களின் விடுதலைக்காகவே அவர் புரவியை அதன் உச்சவிசையில் செலுத்த விழைந்தார். ஆனால் அஸ்தினபுரியின் எத்தெருவிலும் அவரால் அவ்வண்ணம் புரவியில் செல்ல இயல்வதில்லை. நகரம் பல்லாயிரம் கண்களுடன் அவரை நோக்கிக்கொண்டிருந்தது. புராணகங்கையின் காந்தாரக் குடியிருப்புகளுக்கு அப்பால் அதன் புல்வெளிப்பரப்பும் மென்சதுப்பு நிலமும் முற்றாகவே விழிகள் அற்றவை. புரவியில் விரைந்து சென்று அது காலோய்ந்து நிற்கையில் தானும் மூச்சிரைக்க மீண்டு வரும்போது காலிலிருந்து வலி மாறா ஊழ்கநுண்சொல் என ஒலிக்கத்தொடங்கும். அத்தனை பொழுது அது தன்னை கைவிட்டிருந்தது என்றுணர்கையில் நிறைவும் ஏக்கமும் ஒருங்கே எழும்.

அவ்வாறு கங்கையின் கரையில் புரவி ஓய்ந்தது. அதை மென்சேற்றில் நடக்கவிட்டு நாணற்பரப்பைக் கடந்து கரைப்பாறையொன்றின் மேல் ஏறி நின்றார். வியர்வை சொட்டும் புரவிமீது உடல் அனல் அடங்க அமர்ந்திருந்தபோது எதிரில் சதுப்புக் கரையில் தூண்டில் வீசி அமர்ந்து மெல்ல பாடிக்கொண்டிருந்த இளம்பெண்ணொருத்தியை அவர் கண்டார். புரவியின் காலடி ஓசைகளைக்கூட கேட்காமல் அவள் தன் பாட்டில் ஆழ்ந்திருந்தாள். பொருள் துலங்காத காட்டுமொழிப் பாடல். அவளிட்ட தூண்டில்மிதவை சற்றே தழைந்தது. அவள் “ஓ! ஓ!” என ஒலியெழுப்பி கழை தழைத்து மீன் இரைவிழுங்கி அகல இடமளித்தாள். பின்னர் கழையை இழுத்தபடி எழுந்தாள். கழை சுழன்றெழ வெள்ளி மீனொன்று காற்றில் துள்ளித் துள்ளிப் பறந்து சேற்றில் வந்து விழுந்து வாலை அறைந்து எழுந்து நடமிட்டது.

அவள் எழுந்து சிறுமியைப்போல் கைவீசி நடனமிட்டாள். கூச்சலிட்டு நகைத்தாள். பின்னர் அந்த மீனை எடுத்து வாலைப்பற்றி வெயிலில் காட்டி திருப்பிப் திருப்பிப் பார்த்து சிரித்தாள். அவள் முழங்கை அளவுக்குப் பெரிய மீன். வெள்ளிவாளுறை போன்ற செதுக்குகள் கொண்டது. இரு நீலமணிகள் என விழிகள். அதை கூடையில் வைக்கும்பொருட்டு திரும்பியபோது பாறை மேலிருந்த அவரைக் கண்டு புருவம் சுருங்க கூர்ந்து நோக்கியபின் மீனை மூங்கில் கூடையில் இட்டுவிட்டு “யார்?” என்றாள். அஸ்தினபுரியில் ஒருவர் அவ்வாறு தன்னை கேட்க முடியுமென்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார். “நீ யார்?” என்று அவர் அவளிடம் கேட்டார். “நான் நீங்கள் யாரென்று முதலில் கேட்டேன்” என்று அவள் சொன்னாள். தூண்டிலையும் கூடையையும் எடுத்துக்கொண்டு சரிவில் மேலேறி வந்து நின்று “இந்தக் காட்டிற்குள் புரவியில் எவரும் வருவதில்லை” என்றாள்.

“நீ இங்கிருக்கிறாயா?” என்றார். “ஆம், என் அன்னை இக்காட்டில் இருக்கிறார்.” அவர் அவளுடைய வெண்ணிறத் தோலையும் வெள்ளி மின்னிய கண்களையும் பார்த்து “நீ காந்தாரக் குடியை சேர்ந்தவளா?” என்றார். “என் தந்தை காந்தாரர், அன்னை அசுரகுடியினள்” என்றாள். “உன் தந்தை காந்தாரப் படையில் இருக்கிறாரா?” என்று அவர் கேட்டார். அவள் “அவர் மறைந்துவிட்டார். சௌவீரர்களுடனான போரில் கொல்லப்பட்டார்” என்றபின் “நீங்கள் காந்தாரர் என்று எண்ணுகிறேன். உங்கள் தாடி பொன்னிறத்தில் உள்ளது” என்றாள். சகுனி புன்னகைத்து “உன் பெயரென்ன?” என்றார். “என்னை ஆர்ஷி என்பார்கள்” என்றபின் “என் தந்தை காந்தாரத்தில் பிங்கலசிலை என்னும் ஊரைச் சேர்ந்தவர். அங்கிருந்து காந்தாரப் படைகளுடன் இங்கு வந்தார். என் அன்னையை இங்குதான் மணந்துகொண்டார்” என்றாள்.

“உன் தந்தை பெயரென்ன?” என்று சகுனி கேட்டார். அவள் மீண்டும் நகைத்து “இப்போதும் நீங்கள் யாரென்று சொல்லவில்லை” என்றாள். “என் பெயர் சகுனி. நான் காந்தாரத்தின் இளவரசன்” என்றார். “இளவரசர் முதிய அகவை கொண்டிருக்கிறீர்கள்” என்று அவள் நகைத்தாள். தன்னை அவள் நம்பவில்லையென்று தெரிந்ததும் சகுனியின் புன்னகை பெரிதாகியது. அவ்வாறு பிறிதொருவராக அவள் முன் நிற்பதில் விந்தையான ஒரு விடுதலையை அவர் உணர்ந்தார். அவர் என அவர் எண்ணிய எதுவும் அவள் முன் நின்றிருக்கவில்லை. அவரே அல்ல என அவர் எண்ணிய அவ்வுடல் மட்டுமே அவளால் அறியப்பட்டது. “நான் காந்தாரப் படையிலிருக்கிறேன். என்னை உன் தந்தைக்கு தெரிந்திருக்ககூடும். உன் தந்தை பெயரென்ன?” என்று அவர் மீண்டும் கேட்டார்.

“கிலஜ குலத்தைச் சேர்ந்தவரான வஜ்ரபாகு” என்று அவள் சொன்னாள். “யானைக்கொட்டிலை அவர்தான் பேணினார்… அவருக்கு யானைமேல் பித்து மிகுதி என என் அன்னை சொன்னார். மதம்கொண்டு காணாமலான ஓர் யானையைத் தேடி காட்டுக்குள் வந்தபோதுதான் என் அன்னையை அவர் பார்த்தாராம்” என்றாள். சகுனி சிரித்து “காந்தாரர்கள் யானை மேல் தீராப் பித்து கொண்டவர்கள்” என்றார். “ஆம், இங்கிருந்து காந்தாரத்திற்கு ஆண்டுதோறும் யானைகளை கூட்டம் கூட்டமாக கொண்டு செல்வார்கள் என்று தந்தை சொன்னார். ஓரிரு ஆண்டுகளிலேயே அவை மெலிந்து தோற்கூடாரம் போலாகிவிடும். அவை இறந்த பின்னர் தோலை உரித்து கூடாரங்களாக மாற்றிவிடுவார்கள். அந்த இடத்திற்கு புதிய யானைகள் வந்து சேரும்.”

அவள் பேசுவதில் விழைவுமிகுந்தவளாகத் தெரிந்தாள். சொல்பொழிந்துகொண்டே இருந்தாள். “யானைகளுக்கு இலையும் தழையும் அன்னமும் உணவாக அளித்தால் மட்டும் போதாது. அவற்றின் கண்களுக்கு பசுமையை காட்ட வேண்டும், அவற்றின் விழிகளில் மழைக்கார் நிறைந்த வானம் தெரியவேண்டும் என்று காந்தாரர்களுக்கு புரிந்ததே இல்லை என்றார் தந்தை.” சகுனி புன்னகைத்து “உண்மை, அது இங்கு வந்த பின்னர்தான் தெரிகிறது” என்றார். “ஆனால் காந்தாரத்து ஓநாய் மழைநனைந்தால் இறந்துவிடும்.” அவள் அதை செவிகொள்ளாமல் தனக்குத்தானே சிரித்து “இங்கிருந்து செல்லும் யானைகள் அங்குள்ள கூடாரங்களைக் கண்டு யானைகள் என எண்ணி அஞ்சுவதும் அழைப்பதும் உண்டாம். யானைத்தோல் கூடாரங்கள் விழிதொடும் எல்லைவரை அங்கே விரிந்திருக்கும் என்று தந்தை சொன்னார். காற்றில் அவை உப்பித்தணிகையில் யானைகள் அசைவதுபோலத் தோன்றுமாம்” என்றாள்.

சகுனி ஓர் ஒவ்வாமையை உணர்ந்தார். அவள் அதை உணராமல் “அவர் நன்றாகப் பேசுபவர். யானைகள் அவ்வண்ணம் காந்தாரத்தில் அழிவின்மையை எய்துகின்றன என்றார்” என்றாள். அவருடைய புரவி அவர் உள்ளத்தை உணர்ந்து தும்மியபடி பிடரி சிலிர்த்துக்கொண்டு கீழிறங்கலாயிற்று. அவர் புன்னகைத்து “நன்று, என் புரவி விடாய்கொண்டிருக்கிறது” என்றார். அவள் “வருகிறேன், நானும் செல்லவேண்டும்…” என்றாள். அவர் புரவியை சரிவிலிறக்கி கங்கை நோக்கி சென்றார். அவள் துள்ளி குதித்து தனக்குத்தானே பாடியபடி காட்டிற்குள் சென்று மறைவதைக் கண்டார். தன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதை நீர் அள்ளக் குனிந்தபோது உணர்ந்தார்.

காட்டில் இருந்து திரும்பும்போது அவர் அவளையே நினைத்துக்கொண்டிருந்தார். அவளைப்பற்றிய எண்ணங்கள் தன்னிடமிருந்து விலகவே இல்லை என்பதை அஸ்தினபுரிக்குள் நுழைந்தபின் உணர்ந்தார். அவ்வெண்ணங்களை கூர்ந்து நோக்கியபோது அவை பொருளில்லாதவை, மிகச் சிறியவை, மீளமீள நிகழ்பவை எனக் கண்டார். ஆகவே அவை உடனே விலகிவிடும் என கருதினார். ஆனால் மிகப் பெரிய எண்ணங்கள், மிக ஆழமான உணர்வுகளே அவ்வண்ணம் விரைந்து அகல்கின்றன என்று பின்னர் உணர்ந்தார். பெரியவையும் ஆழமானவையும் முழுக்க நிகழ்ந்துவிடுகின்றன. பெய்து வெளுத்துவிடுகின்றன. சிறியவை பூமுள் என பதிந்தவை. உள்ளத்தால் வருடி வருடி வளர்க்கப்படுபவை.

ஒரு மாதம் அவர் அவளைப்பற்றிய எண்ணங்களுடன் போராடினார். போராடும்போது அது வளர்வதை உணர்ந்து உளம் ஒழிந்தார். அப்போது அது அறியாமல் பேருருக்கொண்டு எதிர்பாராதபடி எதிர்வந்து நின்றது. அவளை மீண்டும் கண்டால் அது ஒழியும் என புராணகங்கைக்குள் சென்றார். அவளைக் கண்டறிய இயலவில்லை. காணாதபோது அவள் உருவம் மேலும் தெளிவடைந்தது. ஒருவேளை இனிமேல் காணவே முடியாதோ என எண்ணியபோது தொடலாம் போலும் என அருகணைந்து நின்றது. அவள் உண்மையில் இல்லையோ, அது வெறும் விழிமயக்கோ என எண்ணியபோது பேருருக் கொண்டது. ஒரு நிலையில் அவர் வேறு எண்ணமேதும் அற்றவராக ஆனார்.

அவர் உடல் நலிந்தது. விழிகள் உள்நோக்கியவையாக ஆயின. செவிகள் சொல்கேளாமல் மூடிக்கொண்டன. அவருடைய வாயில்கள் மூடிக்கொண்டே செல்வதை கணிகர் கண்டார். “காந்தாரரே, உங்கள் உள்ளத்தில் இருப்பவள் ஒரு பெண். அவள் எவர் என்று மட்டும் சொல்லுங்கள்” என்று அவர் கேட்டார். அவர் விழிகளை நோக்கியபின் தயங்கி “அவள் பெயர் ஆர்ஷி” என்றார். அச்சொல்லை அவர் நாவால் உரைப்பது அதுவே முதல்முறை என அறிந்தார். முகம் சிவக்க மூச்சுத் திணற “அவள் பெயர் ஆர்ஷி” என மீண்டும் சொன்னார். கணிகர் நகைத்து “நன்று, சில மரங்கள் அடித்தடி முற்றிய பின் பூவிடுகின்றன” என்றார். சகுனி நாணி செவிகள் சிவந்து விழிகள் ஈரம்கொள்ள தலைதாழ்த்தினார். பின்னர் எழுந்து அங்கிருந்து அகன்றார்.

ஆனால் அன்று மாலையே அவர் கணிகரைச் சென்று கண்டார். “வருவீர்கள் என அறிவேன்… சொல்க!” என்றார் கணிகர். அவர் அனைத்தையும் சொன்னார். “என்னால் இதை கடக்க முடியவில்லை. கடந்தேயாக வேண்டும். நீங்களே ஒரு வழி சொல்லவேண்டும்” என்றார். “அவளை கொண்டுவருக! அவளை புணர்க! வேறு எந்த வழியும் இல்லை. மானுடர்களுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும்கூட அதுவே வழி” என்றார் கணிகர். சீற்றத்துடன் “விளையாடாதீர்கள்” என்றார் சகுனி. “மெய்யாகவே அது ஒன்றே வழி… வேறு ஏதும் செய்ய இயலாது” என்றார் கணிகர். “சிறுமைசெய்கிறீர்கள்” என்றபடி சகுனி எழுந்து அகன்றார்.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் அவரே உணர்ந்தார், அதுவே மெய் என. அவருடைய அகம் அவரை புதிதாகக் கண்டடைந்த தருணம் அது. அங்கே அவள் முன் அவ்வண்ணம் நின்றிருந்த சகுனியை அவரால் உதறவே முடியாது. அவராக அமைந்து வாழ்ந்தாலொழிய அது தீராது. அவரால் அந்த சகுனியை ஒப்ப இயலவில்லை. ஆனால் அவர் தானில்லை என எண்ணவும் இயலவில்லை. அந்த சகுனி விடுதலைபெற்றவராக இருந்தார். முகம் மலர்ந்தவராக, தனக்குத்தானே இனிய சொல் பேசிக்கொள்பவராக. முன்பொருநாள் அவர் இவ்வாறாக ஆகும்பொருட்டு திரும்பிய பாதைமுனையில் இன்னொரு வழியில் திரும்பியிருந்தால் அவ்வண்ணம் ஆகியிருக்கக்கூடும்.

மூன்றாம் நாள் அவர் தன் மஞ்சத்தறைக்குள் நுழைந்தபோது உள்ளே ஒரு பெண் எழுந்து அஞ்சி அறைமூலைக்குச் சென்று நிற்பதை கண்டார். “யாரது? நான் ஆணையிடவில்லையே. யார்?” என்று அவர் கூவினார். ஏவலன் வந்து பணிந்து நிற்க “யார் இவளை கொண்டுவந்தது?” என்றார். “கணிகரின் ஆணை” என்றான் ஏவலன். அதற்குள் அவர் உள்ளம் உணர்ந்துவிட்டிருந்தது, அது அவளே என. அவருள் பிறிதொருவன் எழுந்தான். அவர் அவளருகே சென்றார். அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவர் அவளுடைய முகத்திரையைப் பற்றி அகற்றினார். விழிநீர் திரண்ட அவள் முகத்தை நோக்கி “ஆர்ஷி” என அழைத்தார். புன்னகையுடன் “நீ இருக்கவேண்டிய இடம் இதுவே. இங்கு நீ விழைவதை அடையலாம்” என்றார்.

அவள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. “சொல், உனக்கு என்ன வேண்டும்?” என்று அவர் கேட்டார். “இந்நகரில் நீ முதன்மை அரசியருக்கு நிகரானவள். காந்தாரத்தில் நீயே அரசி” என்றார். அவள் நிமிர்ந்து அவர் விழிகளை நோக்கினாள். அவள் நோக்கில் ஒரு சொல் இருந்தது. அவர் அதை அறிந்ததும் குன்றினார். அவர் உடல் நடுங்கத் தொடங்கியது. “சொல், நீ ஆணையிடுவது என்ன? என்னை உன் அடியவனாகவே கொள். உன்னையன்றி இந்நாட்களில் நான் நினைத்தது ஏதுமில்லை” என்றார். அவள் விழிதாழ்த்திக்கொண்டாள். அவ்விழியில் எழுந்ததே அவள் அவரிடம் உரைத்த இறுதிச்சொல். அதன்பின் அவள் முற்றாக அணைந்து தன்னை வெறும்பாவையென ஆக்கிக்கொண்டாள். அவருடைய இரு மைந்தரை அவள் ஈன்றாள். ஆயினும் அவள் விழிகளில் எப்போதும் சொல்லின்மையே திகழ்ந்தது.

உலூகனின் விழிகளிலும் அதையே சகுனி கண்டார். அதை தெளிவாக உணர்ந்த அன்று அவர் நீள்மூச்சுகள்விட்டபடி தன் மஞ்சத்திலேயே நெடும்பொழுது படுத்திருந்தார். இருள் அவரை சூழ்ந்திருந்தது. மிக அப்பாலிருக்கும் ஓசைகளை எல்லாம் அள்ளிக் கொண்டுவந்து அருகே நிறைத்து வைக்கும் இருள்.