செந்நா வேங்கை - 68

tigபுலரி எழத்தொடங்கியபோது உத்தரன் தன் படைமுகப்பிலமைந்த சிறுமுற்றத்தில் வில்பயின்றுகொண்டிருந்தான். நூறு அகல்சுடர்கள் நிரையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்க அவன் அம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுடர்களை அணைத்தன. எட்டாவது அம்பு குறிபிழைத்ததும் வில்லை தரையில் ஊன்றி சலிப்புடன் தலையை ஆட்டியபடி திரும்பியபோது அங்கு நின்றிருந்த தன் ஒற்றனும் அணுக்கனுமாகிய கஜனை பார்த்தான். ஏவலன் அளித்த பன்னிரு அம்புகளை எடுத்து மேலும் எய்தான். அவற்றில் ஒன்பதாவது அம்பு பிழைத்தபோது வில்லை திரும்ப அளித்துவிட்டு கஜன் நின்றிருக்கும் இடத்தை பார்த்தான்.

அவன் நோக்குபட்டதும் கஜன் தலைவணங்கினான். அதிலிருந்த குறிப்புணர்ந்து போதும் என்று ஏவலனிடம் கைகாட்டிவிட்டு கையுறைகளை கழற்றியபடி அவன் அருகே சென்றான். கஜன் “செய்தி உள்ளது” என்றான். “சொல்க!” என்றபடி சிறு மரப்பீடத்தில் உத்தரன் அமர்ந்தான். கஜன் அருகே வந்து முழந்தாளிட்டு “ஒவ்வாச் செய்தி, அரசே” என்றான். “தந்தையா?” என்று உத்தரன் கேட்டான். சில நாட்களாகவே ஒவ்வொரு நாளும் காலையில் அந்நாளை முழுக்க கசப்பு கொள்ளவைக்கும் விராடரைப்பற்றிய ஒரு செய்தியை அவன் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தான்.

கஜன் “இல்லை” என்றபின் “நேற்று நமது படைப்பிரிவுக்குள் எட்டு விலைப்பெண்டிரை அழைத்து வந்திருக்கிறார்கள் நம் வீரர்கள்” என்றான். அச்செய்தியை முழுக்க உள்வாங்கிக்கொள்ளாமல் “எவர்?” என்று அவன் கேட்டான். “நமது படைவீரர்கள் அருகில் உள்ள சிற்றூர்களிலிருந்து விலைப்பெண்டிரை மாறுதோற்றம் அளித்து கூட்டிவந்திருக்கிறார்கள். அவர்கள் இரவு முழுக்க இங்கு தங்கியிருக்கிறார்கள்” என்றான் கஜன். “எவர் அழைத்துவந்தது?” என்று அப்போதும் முழு அழுத்தத்தையும் பெறாதவனாக உத்தரன் கேட்டான். “நமது பன்னிரண்டாவது வில்லவர் பிரிவு” என்றான் கஜன்.

“அவர்களா?” என்று தொடங்கிய உடனே சினம்கொண்டு முகம் சிவக்க உடல் பதற எழுந்த உத்தரன் “படைப்பிரிவுக்குள் கூட்டிக்கொண்டு வந்தார்களா? அப்படியெனில் அது சிலர் மட்டுமே செய்த மந்தணம் அல்ல. படைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தெரியாமல் அது இயல்வதே அல்ல” என்றான். கஜன் “ஆம், அரசே. படைகளின் எல்லைக்காவலர்கள், அப்பால் சிற்றூர்களுக்கு சென்று மீளும் ஒற்றர்கள், பணியாட்கள், நூற்றுவர் தலைவர்கள் அனைவருக்கும் தெரியாமல் இது இயல்வதே அல்ல” என்றான்.

உத்தரனால் நிலைகொள்ள முடியவில்லை. தன் உடலிலேயே விம்மித் ததும்பியபடி அவன் கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டான். பற்களைக் கடித்து “முழுப் படைப்பிரிவும் சேர்ந்து இயற்றியிருக்கிறார்கள் இதை” என்றான். “ஆம் இளவரசே, முழுப் படைப்பிரிவும்” என்று கஜன் சொன்னான். உத்தரன் எழுந்து என்ன செய்வதென்றறியாமல் கைகளை வீசி “இழிவு! கீழ்மை! இதைவிடப் பேரிழிவு நம் நாட்டிற்கு நிகழப்போவதில்லை” என்று கூவினான். முகம் உருகிநெளிய “இது என் ஆணை! இதில் தொடர்புடைய அனைவரையும் சிறைபிடித்து இழுத்துவாருங்கள். இம்முற்றத்திலேயே அனைவர் தலைகளையும் மண்ணிலுருட்ட ஆணையிடுகிறேன்… இல்லை கழுவேற்றுகிறேன். அலறிச் சாகவேண்டும் அவர்கள்… இவ்வீணர்களுக்கு தண்டனை பிறிதில்லை. பெற்ற அன்னையின் முகத்தில் காறி உமிழ்ந்த கீழ்மக்கள்” என்றான்.

கஜன் சொல்லில்லாமல் நின்றான். “என்ன தயக்கம்? படைத்தலைவர் வருக! இப்போதே தொடர்புடைய அனைவரும் சிறைபிடிக்கப்படவேண்டும். இந்தப் பொதுமுற்றத்தில் வெயிலில் அவர்கள் கழுவேற வேண்டும்” என்றான் உத்தரன். கஜன் “ஒரு முழுப் படைப்பிரிவையும் கழுவேற்றுவதோ தலைகொய்வதோ இயல்வதல்ல, இளவரசே” என்றான். “குறைந்தது ஆயிரம்பேர் கொல்லப்படவேண்டும். அதற்கு ஈராயிரம் படைவீரர் பணியாற்றவேண்டும். இந்நிலையில் அது ஒரு பெருநிகழ்வு. எந்தப் படைத்தலைவரும் அப்பிழையை செய்யமாட்டார்கள். அது போர்முனையில் நின்றிருக்கும்போது உருவாக்கும் உளச்சோர்வு பெரிது.”

“மேலும் இப்பொழுது முழுப் படைப்பிரிவின் பொறுப்பும் தங்களுக்கில்லை. இதை இன்று தலைமை தாங்குபவர் திருஷ்டத்யும்னரே. தண்டிக்கும் உரிமை அவருடையது” என்றான் கஜன். “இவர்கள் விராடர்கள். எனது படைவீரர்கள்” என்று உத்தரன் சொன்னான். “அல்ல, பிறரும் பொறுப்பில் இருக்கிறார்கள். நமது அடையாளம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் படைகள் முழுமையாகவே ஒன்றென கலந்துள்ளன. அணிவகுக்கப்பட்ட பின்னர் அவை அந்தந்த அரசர்களின் தனி ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல” என்றான் கஜன்.

உத்தரன் “சரி, அவ்வண்ணமெனில் கிளம்பி என்ன நிகழ்ந்ததென்பதை திருஷ்டத்யும்னரிடம் சொல்கிறேன். அவர் தண்டிக்கட்டும்” என்றான். “அவர் இவர்களை தண்டிக்கும்படி எனக்கு ஆணையிட்டாரென்றால் நான் என் கைகளால் இவ்விழிமக்களை கொல்கிறேன்.” கஜன் “அவ்வாறு தாங்கள் கூறுவது மாண்புடையது. ஆனால் உடன் பிறிதொன்றையும் சொல்லியாகவேண்டும். இது நமது படைப்பிரிவில் மட்டும் நிகழவில்லை. இங்கு வருவதற்கு முன் வேறு ஒற்றர்கள் சிலரிடமும் சொல்லாடினேன். நேற்று மட்டும் ஆறு படைப்பிரிவுகளில் விலைப்பெண்டிர் அழைத்துவரப்பட்டுள்ளனர்” என்றான். “ஆறு படைப்பிரிவுகளிலா? எத்தனை பேர்?” என்றான் உத்தரன். “எப்படியும் நூறு பெண்டிருக்கு குறைவிருக்காது” என்றான் கஜன்.

உத்தரனால் மீண்டும் சொல்லெடுக்க இயலவில்லை. நிலையழிந்து கைகளை உரசிக்கொண்டான். பலமுறை சொல்தவித்தபின் உடைந்த குரலில் “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு போர்முனையில் நிகழ்வதுண்டா? இதற்கு ஏதேனும் முன் வரலாறுண்டா?” என்றான். “இறப்புக்கு முன் இவ்வாறு படைவீரர்கள் நடந்துகொள்வார்களா என்ற ஐயம் எனக்கும் இருந்தது. ஆனால் நூல்களிலோ முதிய ஒற்றர் கூறும் பட்டறிவிலோ இவ்வாறு நிகழ்ந்ததே இல்லை” என்றான் கஜன்.

“போருக்கு முந்தையநாள் வரை படைவீரர்கள் உவகைகொண்டாடுவார்கள். அச்சமின்மையை நடிப்பார்கள். இறப்பு பொருளற்றுப்போனதன் விடுதலை அது. ஆனால் போருக்கு ஒருநாள் முன் ஒவ்வொரு படைவீரரும் தங்கள் உணர்வுகளின் உச்சத்தில் நிற்பார்கள். தங்கள் இறப்பு நிகழுமென்றால் அது ஒரு பெரும் கொள்கையின் பொருட்டே ஆகவேண்டும் என்று அவர்களின் உள்ளம் விழைவதனால் அக்கொள்கைகளை எண்ணி எண்ணி பெருக்கி உணர்வுக்கொந்தளிப்புகளை அடைவதையே இவ்விரவில் அவர்கள் செய்வார்கள். சொல்லப்போனால் அவ்வுணர்வின் எழுச்சியால் ஒவ்வொரு கணமும் போர் வரவேண்டுமென்று விரும்பி உடல்துடிப்பு கொள்வார்கள். மக்களையோ குழந்தைகளையோ முற்றாக தவிர்ப்பார்கள். பலியாடுகள் ஒன்றையொன்று முட்டி பலிபீடத்திற்கு தங்களை செலுத்திக்கொள்வதுபோல படைவீரர்கள் செல்வார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்று கஜன் சொன்னான்.

“எனில் இது எப்படி நடந்தது? இதன் பொருளென்ன?” என்று உத்தரன் கேட்டான். “கீழ்மை! இத்தகையதோர் கீழ்மை நம் படைகளில் நிகழுமென்று எண்ணவேயில்லை” என்று நிலத்தில் காறி உமிழ்ந்தான். “நம் குடிப்படைகளில் மட்டும் இது நிகழவில்லை என்பது மட்டுமே பெருத்த ஆறுதல்” என்று கஜன் சொன்னான். “தாங்கள் இதை திருஷ்டத்யும்னரிடமோ பேரரசரிடமோ சொல்லும்போது இதையும் சேர்த்து சொன்னீர்கள் என்றால் நம் குடிக்கென தனி இழிவுகளென எதுவும் வரப்போவதில்லை.”

உத்தரன் சற்றே சோர்ந்து மீண்டும் அமர்ந்தவனாக “ஆம், மெய்தான்” என்றபின் கசப்புடன் புன்னகைத்து “இழிவிலும் ஒரு சிறுதுளி நல்லூழ்” என்றான். பின்னர் “எவ்வாறு இது நிகழ்கிறது?” என்றான். தனக்கே என “இதன் பொருள் என்ன?” என்று அரற்றினான். “இதன் பொருள் ஒன்றே. இப்படைத்திரள்வை ஒருவகையான களியாட்டென்றே இப்போது எண்ணுகிறார்கள்” என்றான் கஜன். “என்ன சொல்கிறாய்?” என்றான் உத்தரன்.

அவன் சொல்வதை புரிந்துகொள்ள முயன்றவனாக உத்தரன் கூர்ந்து பார்த்தான். “ஏனென்றால் இது போர்முகப்பின் உணர்ச்சி அல்ல. பல்லாயிரம் பேர் ஓரிடத்தில் திரளும்போது திரளும் களியாட்டு மட்டுமே. ஆகவே இது விழவுக்குரிய உளநிலை. அது எப்போதும் காமத்தை நோக்கியே திரும்புகிறது” என்றான் கஜன். “போரில் எங்குமே காமம் இல்லை. போர் முடிந்தபின் மீண்டும் எழும் விழவுணர்வே காமத்தை நோக்கி செல்கிறது. போருக்கு முன் அவ்வாறு நிகழ்வதென்பது மிகப்பெரிய பிழை ஒன்று நிகழ்ந்துள்ளது என்பதையே காட்டுகிறது.”

“ஆம், நான் இதை திருஷ்டத்யும்னரிடம் விரித்துரைக்க வேண்டும்” என்றபின் “உன்னிடம் சான்றுகள் உள்ளனவா?” என்றான் உத்தரன். “ஆம், அரசே. எட்டு ஒற்றர்கள் சான்றுரைக்கிறார்கள். எங்களை அரசவைக்கு அழைத்தால்கூட அங்கு வந்து கூற சித்தமாக உள்ளோம் என்றனர்” என்றான் கஜன். உத்தரன் “நான் இப்போதே கிளம்புகிறேன். திருஷ்டத்யும்னரை சந்தித்து…” என்று சொல்லத்தொடங்க இடைமறித்த கஜன் “பொறுத்தருள வேண்டும், அரசே. இத்தருணத்தில் திருஷ்டத்யும்னரை சந்திப்பதைவிட நேரடியாக மாமன்னர் யுதிஷ்டிரர் அவைக்குச் செல்வதே சிறந்தது. திருஷ்டத்யும்னர் அந்த அவைக்கு வருகையில் அனைத்தையும் இயல்பாக பேசுங்கள்” என்றான். புரியாமல் கூர்ந்து நோக்கியபடி உத்தரன் “ஏன்?” என்று கேட்டான்.

“தங்களைப்போலவே திருஷ்டத்யும்னரும் நிலைகுலையும் செய்தி இது. ஏனெனில் பாஞ்சாலப் படையிலும் பதினொரு விலைப்பெண்டிர் நுழைந்திருக்கிறார்கள். நாம் பயிலாத அரைமலைகுடிப் படையினர். அவர்களோ தொல்வரலாறு மிக்க ஷத்ரியப் பெருங்குடிப் படையினர். நம் படையினர் அனைவருக்கும் முன்காட்டாக திகழவேண்டியவர்கள். திருஷ்டத்யும்னர் அதை எண்ணி பெருமிதம் கொண்டவர். பல்வேறு சொற்களில் அதை அரசர் அவைகளிலும் உரைத்தவர். அவருடைய படைகளில் இவ்வண்ணம் நிகழ்ந்தது என்ற செய்தியால் தங்களைவிட பலமடங்கு அவர் நிலைகுலைவார்” என்றான் கஜன்.

“ஆம்” என்று உத்தரன் சொன்னான். “அங்கே அரசவையில் இளைய யாதவர் இருப்பார். அங்கு சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் அவர் முன்னிலையிலேயே என்பதை நாமனைவரும் அறிவோம். ஒவ்வொன்றுக்கும் உட்பக்கம் சென்று பார்க்கவும் ஒவ்வொன்றையும் பிறவற்றுடன் இணைத்து முழுமைநோக்கை சென்றடையவும் அவரால் மட்டுமே இயலும். அவர் இருக்குமிடத்தில் இச்செய்தியை முன்வையுங்கள்” என்று கஜன் சொன்னான். உத்தரன் “ஆம்” என்றபடி எழுந்துகொண்டான். கஜன் “இச்செய்தியை இன்று ஒரு நோய் அறிவிப்பாகவே பார்க்கவேண்டும். இவ்வாறு நிகழ்ந்தது பிழையென்றல்ல, இவ்வாறு நிகழ்வதற்குரிய உளநிலை ஏன் இங்கு உருவாயிற்றென்பதை எண்ணவேண்டும். அதை இளைய யாதவர் கண்டறிந்து சொல்லக்கூடும்” என்றான்.

ஒருகணத்திற்குப் பின் அவன் விழிகளை கூர்ந்து நோக்கி உத்தரன் “நீ சொல், ஏன் இந்த உளநிலை இங்கு எழுந்தது?” என்றான். கஜன் “அதை உய்த்துணர்ந்து கூறும் அரசறிவன் அல்ல நான். எனக்குத் தோன்றியது நமது படைகள் இங்கு போர் மெய்யாகவே நிகழும் என்று நம்பவில்லை என்று” என்றான். “ஏன்?” என்று உத்தரன் கேட்டான். “அறியேன். ஆனால் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்பிவிடுவோம் என்ற எண்ணம் நமது படைவீரர்களிடம் பரவலாக உள்ளது. ஆகவே இது ஒரு போர்நடிப்பு மட்டுமே என எண்ணுகிறார்கள். நமது குடிகளில் ஆண்டுதோறும் விழவுகளில் போர்நாடகம் வழக்கமானதே. ஒரு சிறு மாற்றுப்போர் நிகழலாம். அல்லது இருபுறமும் படைகளை கொண்டு நிறுத்தி உளப்போர் ஒன்றை நிகழ்த்தி இருதரப்பும் திரும்பிச் செல்லலாம். இதுவே நம் படைகளின் எண்ணமென்று தோன்றுகிறது” என்றான் கஜன்.

“ஏவலர்கள், கடைநிலைப் படைவீரர்கள் சிலரிடம் உரையாடியபோது அவர்கள் இவ்வெண்ணம் கொண்டிருப்பதை அறிந்தேன்” என்று கஜன் சொன்னான். உத்தரன் “நீ கூறிய அனைத்தையும் நான் அவையில் கூறுகிறேன். இளைய யாதவர் மேலும் அறிய விழைகின்றார் என்றால் உன்னை அவைக்கு அழைக்கிறேன். நீ என்னுடன் வந்து அவைக்கு வெளியே நின்றிரு” என்றான்.

tigயுதிஷ்டிரரின் அவை நடத்துனனாகிய யௌதேயன் மாளிகை வாயிலிலேயே உத்தரனை எதிர்கொண்டு தலைவணங்கி முகமனுரைத்து “தங்களுக்கு சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா, விராடரே? அன்றி அழைப்பின் பொருட்டா வந்தீர்கள்?” என்றான். “இல்லை. மந்தணச்செய்தி ஒன்று, உடனடியாக…” என்று உத்தரன் சொன்னான். “சொல்பெற்றுவருகிறேன். பொறுத்தருள்க!” என்றபின் வணங்கி யௌதேயன் உள்ளே சென்றான்.

உத்தரன் நிலையழிந்தவனாக காத்திருந்தான். யௌதேயன் வெளியே வந்து “தங்களுக்கு அழைப்பு” என்றான். “உள்ளே எவர் இருக்கிறார்கள்?” என்று உத்தரன் கேட்டான். “அரசருடன் இளையோர் நால்வரும் இருக்கிறார்கள். இளைய யாதவரும் படைத்தலைவர்களும் இருக்கிறார்கள்” என்றான் யௌதேயன். “பாஞ்சாலர் இருக்கிறாரா?” என்று உத்தரன் கேட்டான். “ஆம்” என்று யௌதேயன் சொன்னான்.

உத்தரன் யுதிஷ்டிரரின் அவைக்குள் நுழைந்து தலைவணங்கி “அரசரை வணங்குகிறேன். வெற்றி சூழ்க!” என்று முகமனுரைத்தபின் தனக்குரிய பீடத்தில் அமர்ந்தான். அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த சொல்லாடலை நிறுத்தி அவனை நோக்கிய யுதிஷ்டிரர் “விரைவுச்செய்தி ஒன்றுடன் வந்திருக்கிறீர் என்று உணர்கிறேன்” என்றார். “ஆம் அரசே, எனது ஒற்றன் இன்று காலை வந்து சொன்ன செய்தி கருதுவதற்குரியது என்று தோன்றியது. ஆகவே வந்தேன்” என்றான்.

அனைவர் விழிகளும் கூர்கொண்டு தன்னை நோக்குவதை உணர்ந்த உத்தரன் எவரையும் நோக்காது விழிதாழ்த்தி நிகழ்ந்த அனைத்தையும் கூறினான். பலமுறை அங்கு சொல்லவேண்டியதை நெஞ்சுக்குள் ஓட்டியிருந்ததனால் அவனால் சுருக்கமாகவும் பிறழ்வுகளின்றியும் உரைக்க முடிந்தது. அவ்வாறு கூறுவதனூடாக அனைத்தையும் தொகுத்துக் கொண்டமையினாலேயே அவன் உள்ளத்திலிருந்த சுமை அகன்று எளிதானது.

அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே திருஷ்டத்யும்னன் சீற்றத்துடன் எழுந்துவிட்டான். அவன் முடித்ததும் “இங்கு இச்செய்தியை சொல்ல வருவதற்குள் அவர்கள் சிறையிடப்பட்டிருக்கவேண்டும்… அவ்வீணர்களின் குருதியீரம் படிந்த கையுடன் இங்கு நுழைந்திருக்கவேண்டும்” என்று கூவினான். “பாஞ்சாலரே, என் படையில் மட்டும் அல்ல. பாஞ்சாலப் படையிலும் இதுவே நிகழ்ந்துள்ளது என்கின்றான் என் ஒற்றன்” என்றான் உத்தரன். திருஷ்டத்யும்னன் தீப்பட்டவனாக துடித்து பின்வாங்கி மீண்டும் எரிந்தெழுந்து முன்னால் வந்து “பொய்… ஒருபோதும்…” என சொல்லெடுப்பதற்குள் இளைய யாதவர் “அவர் சொல்வது உண்மை” என்றார். திருஷ்டத்யும்னன் வாய்திறந்து கை அசைவிழக்க அப்படியே நின்றான். பின் ஓசையுடன் தன் இருக்கையில் விழுந்தமைந்தான்.

யுதிஷ்டிரர் கலங்கிவிட்டிருப்பது தெரிந்தது. அவையெங்கும் அமைதி சூழ்ந்திருந்தது. பீமன் இரு கைகளையும் இறுகப்பொருத்தி தோள்தசைகள் புடைத்தசைய பற்கள் கிட்டித்த குரலில் “பாஞ்சாலரே, நீர் என்ன சொல்கிறீர்? உங்கள் படைகளிலிருந்து தொடங்கவேண்டியிருக்கிறது” என்றான். யுதிஷ்டிரர் “பொறு இளையோனே, பெருஞ்சினத்திற்குரிய தருணமொன்று அமையுமென்றால் நான் சினம்கொள்ள மாட்டேன் என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வதே முதலில் செய்யவேண்டியது” என்றார்.

“சினம்கொள்ள வேண்டிய இடத்தில் சினம் கொள்ளாதவனை கோழை என்பார்கள்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் “பொறு” என்று கூரிய குரலில் சொன்னதும் “நன்று. படையை கலைத்துவிட்டு பெருங்களியாட்டுக்கு ஆணையிடுங்கள். அது ஒன்றே எஞ்சியிருக்கிறது. இந்த அவையில் எனக்கு பணியேதுமில்லை” என்று பீமன் திரும்பினான். “நில்! அவை முடிந்த பிறகு நீ செல்கிறாய்” என்றார் யுதிஷ்டிரர். தன் தொடையில் ஓங்கி அறைந்து பற்களைக் கடித்து “ஆணை!” என்றபின் பீமன் சற்றே பின்னடைந்து கைகளை மார்பில் கட்டியபடி தூண்சாய்ந்து நின்றான்.

யுதிஷ்டிரர் திருஷ்டத்யும்னனிடம் “சொல்க!” என்றதும் அவன் தன் உடலை உந்தி எழுந்து கைகூப்பி உடைந்த குரலில் “அரசே, இச்செய்தி எனக்கு நஞ்சு ஊட்டப்படுவதற்கு நிகர். இவ்வண்ணம் நிகழுமென்று சற்று முந்தைய கணம் வரை என் தந்தை சொல்லியிருந்தாலும் வாளுருவியிருப்பேன். ஆனால் இன்று எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. செய்வதற்கொன்றே உள்ளது, இவ்வவைவிட்டு நீங்கி வாளை வானில் வீசி என் கழுத்தை காட்டுவது” என்றான். “உங்கள் உயிரும் படைகளும் உங்களுக்குரியதல்ல. அவற்றுக்குரியவன் நான்” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

திருஷ்டத்யும்னன் எடையுடன் தன் பீடத்தில் அமர்ந்து தன் தலையை கையால் ஓங்கி அறைந்தான். அவன் உடல் துவண்டு விதிர்ப்பதை உத்தரன் கண்டான். அக்கையிலேயே தலையை சாய்த்து உடலை இறுக்கி பின் மெல்ல நெகிழவிட்டான். யுதிஷ்டிரர் அவனை சிலகணங்கள் நோக்கியபின் பிறரிடம் “என்ன நிகழ்கிறது? நமது படைகள் இத்தனை கீழ்மையில் எப்படி திளைக்கின்றன? அதுவும் படைப்பிரிவுக்குள் விலைமகளிரை கொண்டுவருவதென்பது…” என்றபின் “அவர்களில் எவர் ஒற்றர் என்று எவரும் அறிய முடியாது. அனைத்து காவலரண்களும் பயனற்றுவிட்டன. ஒரே செயலினூடாக இங்கிருப்பது படையல்ல வீணர் திரளென்று நிறுவிவிட்டார்கள்” என்றார்.

சகதேவன் “மூத்தவரே, வீணில் இங்கே அமர்ந்து சொல்பெருக்கிக்கொண்டிருப்பதில் பொருளில்லை. அது மேலும் மேலும் நம்மை சோர்வுறுத்தவே செய்யும். இதன் பொருளென்ன என்பதை எண்ணுவோம். முதலில் இத்தருணத்தில் இவ்வாறு ஒன்று இங்கு நிகழ்வது தெய்வங்களின் ஆணை என கொள்வோம். விண் ஆற்றல்கள் நமக்கு எச்செய்தியையோ சொல்லியுள்ளன. அதை முழுமையாக உள்வாங்குவதே நாம் செய்யவேண்டியது” என்றான். “உன் எண்ணத்தை சொல்” என்று சோர்வுடன் யுதிஷ்டிரர் சொன்னார்.

“அதற்கு முன் விராடரிடம் ஒற்றர் சொன்னதென்ன? இது ஏன் நிகழ்கிறது என்று ஒற்றன் எண்ணுகின்றான்?” என்று சகதேவன் கேட்டான். உத்தரன் “போர் நிகழாதென்று நமது படைகள் எண்ணுகின்றன என்று என் ஒற்றன் கஜன் நினைக்கிறான்” என்றான். யுதிஷ்டிரர் திகைப்புடன் “ஏன்?” என்றார். “அதை அவனால் உய்த்துணர இயலவில்லை” என்றான் உத்தரன். யுதிஷ்டிரர் “ஏன் அவ்வாறு அவர்கள் எண்ணவேண்டும்?” என்றார். எவரும் மறுமொழி உரைக்கவில்லை

அனைவரும் அரைவிழியால் இளைய யாதவரை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் அங்கிலாதவர் போலிருந்தார். அவர் எங்கிருக்கிறாரோ அங்கு தானும் இருப்பவன் போலிருந்தான் அர்ஜுனன். யுதிஷ்டிரர் சகதேவனிடம் “நாம் என்ன செய்வது, இளையோனே?” என்றார். “படையில் ஒருசிலர் அவ்வாறு எண்ணுகிறார்களா? முழுப் படையும் அவ்வெண்ணம் கொண்டுள்ளதா என்றுதான் நாம் இப்போது அறியவேண்டும். முழுப் படையும் அவ்வெண்ணம் கொண்டுள்ளதென்றால் அது பெருநோய். ஒருசிலர் அவ்வாறு எண்ணுகிறார்கள் என்றால் அது பிறழ்வு. பிறழ்வை வெட்டி சீரமைக்கவேண்டும். அவர்களில் எவரும் உயிருடன் இருக்கக்கூடாது” என்றான் சகதேவன்.

திருஷ்டத்யும்னன் எழுந்து “இக்கணமே கிளம்புகிறேன். இதனுடன் தொடர்புடைய அனைவரையும் கொன்று தலையுருட்ட ஆணையிடுகிறேன்” என்றான். “ஒருபோதும் அதை செய்யலாகாது. பல்லாயிரம் பேரை நாமே கொலை செய்வதென்பது நம் உடலிலேயே நமது கைவாளை பாய்ச்சிக்கொள்வதற்கு நிகர். அந்தக் கை பின்னர் எதிரியுடன் போருக்கென எழாது. பட்ட காயம் உயிர் பிரிக்கும்” என்று சகதேவன் சொன்னான்.

“பிறழ்வு கொண்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அத்தண்டனையே நமக்கு மேலும் ஊக்கமூட்டுவதாக அமையவேண்டும். பிறழ்வுக்கு உட்பட்ட படைப்பிரிவு அனைத்தையும் இணைத்து ஒரு படையை உருவாக்குவோம். அப்படையை முன்னால் அனுப்பி எதிரிப்படையுடன் மோதவிட்டு முழுமையாகவே களப்பலி கொடுப்போம். அது நமது படைகளுக்கு வஞ்சத்தை பெருக்கும். உளவிசை கூட்டி களமெழச் செய்யும்.”

“ஆம், அதுவே உகந்த வழி” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆனால் அதற்கு முன் முழுப் படையும் அவ்வாறு எண்ணுகின்றதா என்று நாம் அறியவேண்டியுள்ளது” என்று சகதேவன் சொன்னான். பின்னர் திரும்பி யௌதேயனிடம் “இங்கிருந்து படைகளுக்குள் செல்க! ஒரு மரக்கவசத்தை எடுத்துச் சுழற்றி படைமேல் வீசு. அது சென்று எவர் மேல் விழுகிறதோ அவ்வீரனை அழைத்து வா” என்றான். யௌதேயன் தலைவணங்கி வெளியே சென்றான். உத்தரன் “ஒருவீரன் என்றால்…” என்றான். “இது ஒற்றைப்பெருக்கு. அதில் ஒருவன் தகுதியான சான்றே” என்றான் சகதேவன்.

அவர்கள் நிலையழிந்தவர்களாக காத்திருந்தனர். ஒவ்வொருவரின் விரல்களும் ஒவ்வொருவகையில் அசைந்துகொண்டிருப்பதை உத்தரன் பார்த்தான். ஆனால் அவன் மிக எளிதாகிவிட்டிருந்தான். எவ்வகையிலோ அவன் அகம் அறிந்துவிட்டிருந்தது, அது படை முழுக்க நின்றிருக்கும் உளச்சோர்வு என்று. திருஷ்டத்யும்னனின் உடலின் துடிப்பை நோக்கி அமர்ந்திருந்தபோது அவன் ஆழ்ந்த துயரை அடைந்தான். அவனுடைய இறப்பின் தருணம் அது என்று தோன்றியது.

யௌதேயன் அடிநிலைப்படைவீரன் ஒருவனுடன் அவைக்குள் வந்தான். தலைவணங்கி “அரசே, நான்காவது அக்ஷௌகிணியின் பன்னிரண்டாவது படைப்பிரிவைச் சேர்ந்த இவன் பெயர் சுமுகன். படையில் சேர்ந்து ஏழாண்டுகளாகின்றன. அஸ்தினபுரியிலிருந்து இந்திரப்பிரஸ்தத்திற்கும் அங்கிருந்து உபப்பிலாவ்யத்துக்கும் வந்தவன்” என்றான். அவ்வீரன் நிலத்தில் மண்டியிட்டு அரசரை வணங்கினான். அவன் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை உத்தரன் கண்டான்.

சகதேவன் அவனிடம் “சுமுகரே, இது அரசரின் அவை. தெய்வம் குடியிருக்கும் ஆலயத்தின் முகப்பில் நின்றிருப்பதைபோல் உணர்க!” என்றான். உடல் முழுக்க நடுக்கத்துடன் அவன் மும்முறை வணங்கினான். “நான் கோருவதற்கு மெய்யுரைக்கவேண்டும். எங்களிடம் ஒரு சொல்லும் ஒளிக்கப்படலாகாது. நீரே உம் உள்ளத்திற்கு கரப்பதாகவும் அது அமையலாகாது” என்று சகதேவன் சொன்னான். சுமுகன் ஓசையின்றி தலைவணங்கினான். “சொல்க, இங்கு எப்போது போர் நிகழுமென எண்ணுகிறீர்?”

சுமுகன் மீண்டும் தலைவணங்கினான். இருமுறை வாயை அசைத்தாலும் ஓசை எழவில்லை. “அஞ்சவேண்டாம், சொல்க!” என்றான் சகதேவன். சுமுகன் தன் குரலை திரட்ட உடலை கசக்குவது தெரிந்தது. பலமுறை முயன்றும் மூச்சு எழவில்லை. “அமைதிகொள்க! உம்மை திரட்டிக்கொள்க! இங்கு நீர் சொல்லும் எதன்பொருட்டும் தண்டிக்கப்படமாட்டீர். இங்கு நீர் சொல்லும் எச்சொல்லுக்காகவும் அரசர் உமக்கு பரிசளித்து நிலைஉயர்வும் அளிப்பார்” என்றான்.

சுமுகன் தன் ஆடையை சீர் செய்தான். கைகளை பலமுறை இறுகச் சுருட்டிபற்றி விட்டான். பின்னர் “இங்கு போர் நிகழுமென்று நான் எண்ணவில்லை, அரசே” என்றான். யுதிஷ்டிரர் மெல்ல அசைந்தமைந்தார். “ஏன்?” என்று சகதேவன் கேட்டான். “ஏனெனில் இங்குள பெரியவர்களும் பிற அனைவரும் போர் நிகழாதென்றே சொல்கிறார்கள்” என்றான் சுமுகன். “படைத்தலைவர்கள்கூட போர் நிகழாதென்று எண்ணுகிறார்கள். அவர்களின் செயல்கள் அனைத்திலும் அது தெரிகிறது.”

“ஏன் போர் நிகழாது?” என்று சகதேவன் கேட்டான். “ஏனெனில் இருபுறமும் நின்றிருப்பவர்கள் உடன்குருதியினர். அரசருக்கு அஸ்தினபுரியின் அரசர் மீதும் அவருக்கு நம் அரசர் மீதும் உள்ள மதிப்பு ஒவ்வொரு நாளும் தெளிந்து வருகிறது. எக்கணமும் பகை மறந்து தோள்தழுவும் நிலையிலேயே இருவரும் இருக்கிறார்கள். நேற்று முன்னாள் நமது அரசர் எதிரிப்படைபிரிவுக்குச் சென்றபோது அவர்கள் அரசவாழ்த்தளித்து வரவேற்றார்கள். எதிரியின் முதற்படைத்தலைவரே கால்தொட்டு வணங்கி வாழ்த்தி அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் மூத்தவர்களை அரசர் வணங்கியபோது அவர் வெல்வார் என்று வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள்.”

“அவர்கள் சொல் பிறழாது. எனவே அரசர் வெல்வார்” என்றான் சுமுகன். “ஆனால் அவர்கள் மறுதரப்பில் இருப்பதால் அவர்களும் வெல்வார்கள். அதுவே அவர்கள் சொன்னதற்கு மெய்ப்பொருள். இருவரும் வெல்லும் போரென்றால் அது அமைதிச் சாத்து மட்டுமே. அதுவே நிகழும்.” யுதிஷ்டிரர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். சகதேவனின் விழிகளை சந்தித்தபின் அடக்கிக்கொண்டார். “அப்படியென்றால் இப்பெரும்படைத்திரள் எதற்காக என்று எண்ணுகிறீர்?” என்றான் சகதேவன்.

சுமுகன் “இருதரப்பும் படைகளை திரட்ட முடிகிறதென்று ஒருவருக்கொருவர் காட்ட விரும்புகிறார்கள் என்று எங்கள் படையின் மூத்தவர் காலர் சொன்னார். அவர்கள் பதினோரு அக்ஷௌகிணி, நாம் ஏழு. ஆகவே அவர்களைவிட நாம் குறைவானவர்கள். அந்தக் கணக்கின்படி மண்ணும் கருவூலமும் பகுத்துக்கொள்ளப்படும். அமைதிச் சாத்தை குடிமூத்தோரும் அமைச்சரும் ஒப்புகையில் இதுவே அளவுகோலாக இருக்கும்” என்றபின் “அமைதிச்சாத்து உருவாகிவிட்டதென்றும் இன்னும் ஓரிரு நாட்களில் அது நிகழுமென்றும் சொன்னார்கள்” என்றான்.

“நன்று, உன் சொற்கள் எங்களுக்கு பயனுள்ளவை. வருக!” என்று யுதிஷ்டிரர் அழைத்தார். அவன் அருகே சென்று வணங்க தன் அருகே நின்ற நகுலனிடமிருந்து ஒரு செப்புக் கணையாழியை வாங்கி அவனுக்களித்து “இதை கொள்க! உன் படையில் ஒருநிலை மேலுயர்ந்தவனாவாய்” என்றார். சுமுகன் தலைவணங்கி “அரும்பேறு பெற்றேன். என் குடி தங்களை வாழ்த்துகிறது, அரசே” என்றான். பின்காட்டாமல் நகர்ந்து வெளியே சென்றான்.

யுதிஷ்டிரர் “நாண் அவிழ்ந்த வில்போல் கிடக்கிறது நம் படை” என்றார். சகதேவன் “ஆம். இவர்களை மீண்டும் போருக்கெழச் செய்வதென்பது எளிதல்ல” என்றான். பீமன் “இதைத்தான் நான் சொன்னேன். எதிரியிடம் சென்று கால்பணிவது, வாழ்த்து பெறுவது எல்லாம் சூதர்கள் பாடுவதற்குரியது. போரில் சூதர்சொல்லை வைத்து வெற்றி அமைவதில்லை. வெற்றி பெற்றவனுக்குப்பின் நாய்போல் வால் குழைத்துச் செல்வது அது” என்றான்.

யுதிஷ்டிரர் “நெறிகளைப்பற்றி நாம் இங்கு சொல்லாடவேண்டாம். நான் செய்ததில் எனக்கு மாற்று எண்ணமே இல்லை” என்றார். “எனக்கு மாற்று எண்ணமுள்ளது. நெறிகளின்படி தோற்று களத்தில் உயிர்விட எனக்கு விருப்பமில்லை. நெறிமீறியேனும் வெல்வதற்கே விழைவேன். நெறிகடந்துசென்றேனும் என் குலமகளின் வஞ்சம் முடிப்பதே என் காடு எனக்கு அளித்த அறம்” என்றான் பீமன்.

“மந்தா, இனி நீ அவையில் ஒரு சொல்லும் எடுக்கவேண்டாம். இது என் ஆணை” என்றார் யுதிஷ்டிரர். “எந்த அவையிலும் உண்மையில் என் உளச்சொற்களை நான் சொன்னதே இல்லை. வெற்று எதிர்வினைகளையே ஆற்றியிருக்கிறேன்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் “முறைமைகள் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. அவை நமக்கு நன்றையே விளைவிக்கும். அதில் எனக்கு அணுவீடும் ஐயமில்லை” என்று மீண்டும் சொன்னார். “மூத்தவரே, அம்முறைமைகளினால்தான் இத்தனை உளச்சோர்வு நம் படைகளில் பரவியிருக்கிறது” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “ஆம், அவ்வாறாயினும் என் நிலையில் மாற்றில்லை” என்றார்.

“ஆனால் முறைமைகள் இல்லாவிட்டாலும் அவ்வுளச்சோர்வு எழுவதற்கு வாய்ப்புண்டு. முதல் நாள் படைத்தலைமை ஏற்று பிதாமகர் பீஷ்மர் வில்லுடன் வந்து நின்றால் நமது படைவீரர்கள் எத்தனை பேர் போர் வெறி கொண்டு எதிர்த்து நின்றிருப்பார்கள்? இன்னும் நமக்கே அந்த உளத்துணிவு இல்லை. உண்டென்று சொல்பவர்கள் குரலுயர்த்தலாம்” என்றான் சகதேவன். “மூத்தவரே, தாங்கள் சொல்க! பிதாமகர் பீஷ்மர் எதிர்வந்து நின்றால் ஒருகணமும் உங்கள் உளம் தயங்காதா? பிதாமகர் பால்ஹிகர் கதையுடன் வந்து நின்றால் உங்கள் கதையுடன் எதிர்சென்று நிற்பீர்களா? அவர்கள் தலையுடைத்து வீசுவீர்களா?”

பீமன் மெல்லிய உறுமலுடன் தலையை அசைத்து முகத்தை திருப்பிக்கொண்டான். “மாட்டீர். நாம் அனைவருமே அவ்வாறுதான். ஆகவே அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றான் சகதேவன். “இவ்வுளச்சோர்வை கடப்பதெப்படி என்று மட்டுமே நாம் எண்ணவேண்டும்.” பீமன் மீண்டும் உறுமினான். “இளைய யாதவர் சொல்வதை எதிர்நோக்குகிறேன்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அவையினர் அனைவரும் அவரை நோக்க அவ்விழித்தொடுகைகளால் அவர் விழிப்புற்று அவையை நோக்கினார். பின்னர் மேலாடையை சீரமைத்தபடி நிமிர்ந்து அமர்ந்தார்.

இளைய யாதவர் சகதேவனிடம் “இன்று காலை உனக்கு கௌரவர்களிடமிருந்து ஓலை எதுவும் வந்ததா?” என்றார். “நான் கிளம்புகையில் ஓலைகள் வந்தன. பிரித்துப் பார்க்கவில்லை” என்று சகதேவன் சொன்னான். “அவற்றை நான் பார்ப்பதுண்டு” என்று இளைய யாதவர் சொன்னார். “ஓர் ஓலை துரியோதனனிடமிருந்து வந்தது. அதில் இன்று ஒளியெழும் காலை உன்னை அவர் தனியாக சந்திக்க வருவதாக தெரிவித்திருக்கிறார்.” அவையில் வியப்பொலி எழுந்தது. பீமன் திகைப்புடன் சகதேவனை நோக்கினான்.

சகதேவன் “தனியாகவா?” என்றான். “ஆம், தன் தம்பியும் தானும் மட்டுமே படைக்குள் நுழைவதாகவும், உன்னை சந்தித்து சொல்கேட்டு மீள்வதாகவும் கூறியிருக்கிறார். அதற்கான படையொப்புதல் கேட்டு திருஷ்டத்யும்னருக்கும் ஓலை போயிருக்கிறது” என்றார். திருஷ்டத்யும்னன் “நானும் காலையில் ஓலைகளை பார்க்கவில்லை” என்றான். பீமன் “ஏன் அவன் உன்னை பார்க்கவேண்டும்?” என்று கேட்டான். யுதிஷ்டிரர் “ஆம் இளையோனே, எதற்காக?” என்று கேட்டார்.

“சகதேவன் நிமித்த நூல் தேர்ந்தவன் என்பதை நாம் மறந்துவிட்டோம்” என்று இளைய யாதவர் சொன்னார். “இப்பொழுதில் நிமித்தம் நோக்கி அவன் என்ன இயற்றப்போகிறான்?” என்றார் யுதிஷ்டிரர். பீமன் எரிச்சலுடன் “இப்பொழுது எதற்காக நிமித்தநூல் தேர்வார்கள்? போருக்கு நாள்குறிக்க வருகிறான். உரிய பொழுதை சகதேவன் குறித்தளிக்க வேண்டுமென்று கோருவான்” என்றான். “இதன் பொருளென்ன? மெய்யாகவே எனக்கு புரியவில்லை, இதன் பொருளென்ன?” என்று யுதிஷ்டிரர் கேட்டார்.

“அரசே, நேற்றுமுன்னாள் நீங்கள் காட்டிய அப்பெரும்போக்குக்கு நிகர் செய்யப்படுகிறது. கூப்பிய கையுடன் இங்கு வந்து சகதேவனைக் கண்டு நாள்குறித்துச் சென்றால் அதன் பொருளென்ன? அது நீங்கள் சென்று பீஷ்மரையும் துரோணரையும் வணங்கி வாழ்த்து பெற்று வந்ததற்கு ஒரு படி மேலானது” என்றார் இளைய யாதவர். “இத்தருணத்தில் அதை ஏன் செய்கிறார்?” என்று நகுலன் கேட்டான். “மெய்யாகவே போருக்கு உகந்த பொழுதை கேட்டறிய விரும்பியிருக்கலாம். பிற எவரையும்விட அவர் நம்பும் நிமித்திகர் சகதேவனே” என்றார் இளைய யாதவர்.

“ஆம், சகதேவன் தன் கலைக்கு பிழை இயற்றமாட்டான் என்று அவன் அறிந்திருப்பான்” என்றார் யுதிஷ்டிரர். “அதைவிட தன் வருகை இங்கு உருவாக்கும் உளச்சோர்வை அறிந்திருக்கிறார், ஐயமே இல்லை. அவர் இங்கு வந்து சென்றால் நமது படைகள் போர் முடிந்துவிட்டது என்ற உணர்வையே அடைவார்கள். நாம் அவருடன் அமைதிச்சாத்துக்கு சென்றே ஆகவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார்.

“அமைதிச்சாத்து ஒன்று நிகழும் என்றால் நமக்கு எவ்வுரிமையும் கிடைக்கப்போவதில்லை” என்று யுதிஷ்டிரர் சொன்னார். இளைய யாதவர் “இத்தருணத்தில் நாம் செய்வதற்கொன்றுமில்லை. இன்னும் ஓரிரு நாழிகையில் துரியோதனன் நமது படைப்பிரிவுக்குள் நுழைவார். முறைப்படி அவரை வரவேற்போம். யுதிஷ்டிரருக்கு அங்கு அளிக்கப்பட்ட அதே அரசமுறைமைகள் அவருக்கும் அளிக்கப்படட்டும்” என்றார்.

“ஆம்” என்று யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். உத்தரன் அதுவரை இருந்த உளக்கூர் நிலை தளர கைகளை தளர்த்தி பீடத்தில் கால்நீட்டி அமர்ந்தான்.