செந்நா வேங்கை - 44

tigபானுமதி தாழ்வான சாய்ந்த பீடத்தில் தலைசரித்து கால்நீட்டி அமர்ந்து மார்பில் கைகளைக் கட்டியபடி விழிமூடி கேட்டுக்கொண்டிருக்க அவளுக்கு இருபுறமும் அமர்ந்த கற்றுச்சொல்லிப் பெண்டிர் ஓலைகளை படித்துக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கற்றுச்சொல்லிக்கும் இரு எடுத்தளிப்புச் சேடியர் வலமும் இடமுமென அமர்ந்து ஒருத்தி சுவடியை கொடுக்க பிறிதொரு சேடி வாங்கி மீண்டும் பேழையில் அடுக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கற்றுச்சொல்லி ஓர் ஓலையை படித்து முடித்ததுமே பானுமதி ஒற்றைச் சொல்லால் ஆமென்றோ அல்லவென்றோ ஆணையிட்டாள். அரிதாக தன் எண்ணத்தை உரைத்து ஆவன செய்யவேண்டியவற்றை கூறியதுமே அவற்றை ஆணை என அவர்கள் எழுதிக்கொண்டனர். ஒரு கற்றுச்சொல்லி ஒரு ஓலையை படித்து முடித்ததுமே அடுத்தவள் தன் கையில் எடுத்து வைத்திருந்த ஓலையை படிக்கத்தொடங்கினாள். ஆகவே இடைமுறியாத ஒற்றை ஒழுக்கென அவ்வோலைத்திரள் ஒலித்துக்கொண்டிருந்தது.

பெரும்பாலானவை அஸ்தினபுரியின் தொல்குடி மறவர்களின் இல்லங்களுக்கு அரண்மனைக் கருவூலத்திலிருந்து அளிக்கவேண்டிய பொருட்கொடைகளை பற்றியவை. ஓர் இல்லத்தில் மூவருக்கு மேல் போருக்குச் சென்றிருந்தால் மூன்றுகழஞ்சும், ஒருவர் மட்டும் போருக்குச் சென்றிருந்தால் அரைக்கழஞ்சுமென பொன் அளிக்கப்பட்டது. அஸ்தினபுரியை சுற்றியிருந்த அனைத்துச் சிற்றூர்களிலிருந்தும் போருக்கென அளிக்கப்பட்ட உலர் உணவு, நெய், மரவுரி போன்ற பொருட்களுக்கு அவர்களுக்கு வகுக்கப்பட்டிருந்த அளவுக்குமேல் மட்டும் பொன்னில் விலை மதிப்பிடப்பட்டது. ஆனால் அந்தப் பொன்னை போர் முடிந்தபின்னர் கருவூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படி அரசியின் முத்திரை பொறிக்கப்பட்ட ஓலையே அளிக்கப்பட்டது. எத்தனை பெற்றாலும் போதாதபடி படைப்பிரிவின் களஞ்சியக் காப்பாளர்கள் மேலும் மேலும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “படை என்பது காட்டெரி. உண்ணும்தோறும் பசிபெருகுவது. உண்பதை சாம்பலாக்கி சென்ற இடம் கருக்கி முன் செல்வது” என்றார் அமைச்சர் மனோதரர்.

அஸ்தினபுரியின் காவல்படைகள் அனைத்து நிலைகளிலிருந்தும் திரும்பப் பெறப்பட்டு போர்ப்படைகளின் நிரைகளுடன் சேர்க்கப்பட்டன. சாலைமுனைகள், சாவடிகள், காவல்நிலைகள், சிற்றூர்முகப்புகள் அனைத்திலும் ஆங்காங்குள்ள போர்ப்பயிற்சிகொண்ட இளம்பெண்களை இணைத்து காவல்நிலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கான செயல்முறைமைகளும் தலைமைப்பொறுப்புகளும் வகுத்து அளிக்கப்பட்டிருந்தன. அவையனைத்தும் அரண்மனையிலிருந்து அரசியின் முத்திரைகொண்ட ஓலைகளாக வழங்கப்பட்டன. பெண்டிரில் வில்பயின்றவர்களும், வாள்தேர்ந்தவர்களும், புரவி ஊர்பவர்களும் அடங்கிய ஒரு குழுவிற்கு தொல்மறவர் குடியிலிருந்து முதிய போர்வீரர் ஒருவர் தலைமை தாங்கினார்.

முதுவீரர் இல்லாத இடங்களில் மூதன்னையர் அங்கே அமைக்கப்பட்டார்கள். தலைமை தாங்கும் முதுமகள் வளர்ந்த மைந்தரை களத்திற்கு அனுப்பிய அன்னையாகவும், ஓரிருமுறையாவது காவல் பணிபுரிந்த முன்பழக்கம் கொண்டவளாகவும் இருக்கவேண்டுமென்று பானுமதி ஆணையிட்டாள். ஆனால் பல சிற்றூர்களில் படைக்கலப் பயிற்சிகொண்ட பெண்டிர் எவரும் இருக்கவில்லை. அஸ்தினபுரியின் எல்லைக்குள் போரென்றும் பூசலென்றும் ஏதேனும் நிகழ்ந்து பல தலைமுறைகள் ஆகிவிட்டிருந்தன. பல சிற்றூர்களில் பெண்களுக்கான களரிகளே நெடுங்காலத்துக்கு முன் முற்றாக நின்றுவிட்டிருந்தன. தங்கள் குலதெய்வங்களின் வழிபாட்டிற்கு என வாள் எடுத்து ஏழுமுறை நடைவரிசை செய்யும் அளவுக்கு பயின்ற பெண்டிரே அஸ்தினபுரியின் பல குடிகளில் இருந்தனர். முறையாக வாள்தேர்ந்தவர்கள் நகரிலிருந்து தொலைவில் காடுகளின் எல்லையில் அமைந்த சிற்றூர்களை சார்ந்தவர்கள்.

படைக்கலம் பயின்ற பெண்டிரை சிறு குழுக்களாக்கி நாடெங்கும் சென்று பொறுப்பேற்கும்படி அரண்மனையிலிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. தங்கள் மகளிரை வெளியே அனுப்ப அக்குடிகள் மறுத்தன. புது ஊர்களில் அப்பெண்டிர் படைக்கலத்துடன் சென்று பொறுப்பேற்றுக்கொண்டபோது அங்கிருந்த பெண்டிர் அவர்களை ஏற்றுக்கொள்வதில் பூசல்களும் முரண்பாடுகளும் எழுந்துகொண்டே இருந்தன. அப்பூசல்களை பேசித் தீர்ப்பளிக்கும் உரிமை மறக்குடி மூதன்னையருக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு அந்த உரிமையை அளிக்கும்பொருட்டு அரண்மனையிலிருந்து அரசியின் முத்திரைச் சாத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு தருணத்திலும் உருவான எதிர்ப்புகளையும் முரண்பாடுகளையும் மறுக்கமுடியாதபடி அரசமுத்திரையுடன் வந்த அரசியின் ஆணையே தீர்த்துவைத்தது.

ஓர் இடத்து நெருப்பு அணைக்கப்படுகையில் பிறிதோரிடம் பற்றிக்கொண்டது. ஒவ்வொன்றையும் முன்னரே எதிர்பார்த்து அங்கே அரசியின் ஆணை சென்று நின்றது. மெல்ல மெல்ல அரசியின் ஆட்சி என்பது அனைத்து இடங்களையும் தொட்டுப்பின்னி விரிந்த பெருவலை என்பதை அனைவரும் புரிந்துகொண்டார்கள். அவளுடைய பேருரு தெரியுந்தோறும் அவர்கள் அவளை அஞ்சவும் பணியவும் தொடங்கினர். அவள் ஆணையுடன் வருபவர்களின் கண்களிலும் நாவிலும் அவள் திகழ்ந்தாள். ஆனால் அவள் எவரையும் தண்டிக்கவில்லை, எங்கும் குருதிவீழ்த்தவில்லை. அவள் அனைத்தும் அறிந்திருக்கிறாள் என்ற எண்ணமே அவளை ஆற்றல்கொண்டவளாக்கியது. “நேற்றுவரை உறைக்குள் இருந்தது இக்கூர்வாள்” என்றனர் மூத்தோர். “எட்டாம் நிலவு வரை கொற்றவையின் படைக்கணங்கள் ஆளும், எட்டாம் நாள் அன்னையின் விழிகளால் புவி புரக்கப்படும்” என்றனர் சூதர்.

போர்முன்பொழுதுக்கு உரிய ஒவ்வொரு செயலும் முற்சுட்டு ஏதுமில்லாத புதியது. ஆகையால் அமைச்சர்கள் ஒவ்வொரு தருணத்திலும் குழம்பினர். அரசமுத்திரையின் சொல்லுறுதி அனைத்து இடங்களிலும் தேவைப்பட்டது. சிற்றமைச்சர்கள் நாட்டை நூற்றெட்டு சிறுபிரிவுகளாக பிரித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக பொறுப்பேற்றுக்கொண்டு ஆண்டனர். அனைத்துச் செய்திகளையும் சுவடிகளிலாக்கி பானுமதியிடம் சாத்து பெற்று அரசாணைகளாக்கிக் கொண்டார்கள். ஆகவே ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாணைகளை பானுமதி அளித்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு ஓலையையும் தான் செவிகொள்ளாமல் முத்திரை அளிக்கலாகாதென்றும் அவளுக்கு உறுதியிருந்தது. பொழுதிடைவெளிகளில் எல்லாம் அவள் அமர கற்றுச்சொல்லிகள் ஓலைகளுடன் அருகமைந்தனர். அவர்கள் அவள் அமரும் தருணம் நோக்கி எப்போதும் உடனிருந்தனர்.

சென்ற சில மாதங்களாகவே அஸ்தினபுரியிலும் சூழ்ந்திருந்த காடுகளில் அமைந்த படைநிலைகளிலும் புலரி முதல் பின்னிரவு வரை ஓயாது சந்திப்புகளும் அவைநிகழ்வுகளும் விருந்துகளும் நிகழ்ந்துகொண்டிருந்தன. அஸ்தினபுரிக்கு வரும் ஷத்ரிய அரசர்களுடன் அரசியர் இருந்தார்களென்றால் அவர்களின் குலநிலையின்படி பட்டத்தரசியோ, அரசியரில் ஒருவரோ நேரில் சென்று வரவேற்கவேண்டியிருந்தது. அவர்களுக்கான விருந்துகள் அரண்மனையில் தொடர்ந்து நிகழ்ந்தன. அரசர் கூட்டிய அவைகளில் அவள் ஆணைபிறப்பிக்கப்படும் பொழுதுகளில் மட்டுமேனும் அமரவேண்டியிருந்தது. ஏதேனும் ஓர் அவையில் அமராமலாகி ஓரிரு சொல்லாடல்களை விட்டுவிட்டால்கூட அந்தக் குறை அனைத்து ஆட்சிச்செயல்களிலும் பரவி விரிந்து இடர்களை உருவாக்கியது. ஒரு சிறு விடுபடல் செயல்மிகுந்தோறும் வளர்ந்து வெல்லமுடியாத பூதமென முன்னால் நின்றது. எங்கோ எதுவோ தன் அறிதலுக்கு அப்பால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்ற பதற்றத்தால் அவள் அனைத்து அவைகளிலும் அமர்ந்திருந்தாள். அவற்றில் பெரும்பாலான அவைகள் வீண் முறைமைகளும் வெற்று ஆணவப் பரிமாற்றங்களுமாக பொழுதை வீணடித்தன.

ஒவ்வொருநாளும் ஆணைகொள்ள அவைக்கு வரும் ஆட்சியிடர்கள் பெருகின. ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழிறங்குவதுபோல என்று அவளுக்கு தோன்றியது. முதலில் மேல்நிலையின் பெரிய இடர்கள் எழுந்து வந்தன. அவற்றை தீர்க்கும்தோறும் கீழிருந்து இடர்கள் மேலே வந்தன. முதலில் வந்தவை எண்ணிக்கையில் குறைவாகவும் பொதுத்தன்மை மிக்கவையாகவும் இருந்தன. பின்னர் வரத்தொடங்கியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவையாகவும், இடத்துக்கும் குலத்துக்கும் மானுடருக்கும் ஏற்ப மாறுவனவாகவும் இருந்தன. ஒவ்வொரு நாளும் என அவை பெருகிப்பெருகி வந்தன. ஓர் இடரை அரசவை தீர்த்துவைத்தது என்றால் அதுவே அத்தகைய நூறு இடர்களில் சிக்கியவர்களுக்கு நம்பிக்கை அளித்து அவை நோக்கி கொண்டு வரச்செய்தது.

ஒரு கட்டத்தில் அவள் திகைத்து செயலிழந்தாள். அத்தனை சிற்றூர்களின் அத்தனை ஆட்சிச்சிக்கல்களையும் தானே கையாளவேண்டுமோ என்று எண்ணி மலைத்தாள். ஆனால் அறியாத ஏதோ புள்ளியிலிருந்து அவை முன் எழும் இடர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அவள் விடுத்த ஆணைகளிலிருந்தே முறைமைகளும் நெறிகளும் உருவாகி வந்தன. அவை கண்ணுக்குத்தெரியாத ஆட்சியாளராக, கைவிடுபடைப்பொறியாக மாறி பல்லாயிரம் கண்களும் செவிகளும் கைகளுமாக பெருகி நாட்டை வளைத்துக்கொண்டன. அந்த அருவமான ஆட்சியாளரின் மேல் அவள் அமர்ந்திருந்தாள். அது தன்னைக் கடந்து எதையும் மேலே அனுப்பத் தயங்கியது. தன்னைக் கடந்து ஒன்று மேலே செல்வதே தன் ஆளுகைக்கு ஊறு என எண்ணியது. தனக்குரிய ஆணைகளை மட்டுமே அது அவளிடமிருந்து பெற்றுக்கொண்டது. அதன்பின் அரியவையும் முதன்மையானவையுமான நிலைகளுக்கு மட்டுமே அவளிடமிருந்து ஆணை கோரப்பட்டது.

படைகள் திரளத் தொடங்கியதும் புதிய இடர்கள் எழுந்தன. அஸ்தினபுரியின் படைகள் பிற அரசப்படைகளுடன் இணைந்தபோது எழுந்த நூற்றுக்கணக்கான ஆட்சியிடர்களும் ஆணவப்பூசல்களும் அந்தந்த படைத்தலைவர்களாலேயே தீர்க்கப்பட்டன. படைத்தலைவர்களுக்கு அதற்கென முன்னரே உறுதிசெய்யப்பட்ட முறைமைகள் இருந்தன. படைகளிடையே பொது இயல்பு இருந்தது. கடுந்தண்டனைகளை படைவீரர்களுக்கு அளிக்கவும் இயன்றது. முறைமையற்ற பொதுத்தன்மையே இல்லாத குடிப்பெருக்கை கடுந்தண்டனைகள் இல்லாமல் அச்சத்தாலும் குடிமுறைமைகளாலும் ஆள்வதென்பது பன்மடங்கு சுமை என அவள் உணர்ந்தாள்.

அனைத்துப் படைப்பிரிவுகளும் ஒன்றென்றாகி கௌரவப் படை என்று பொதுமுகமும் உள்ளமும் கொண்டபோது அவை ஆங்காங்குள்ள ஊர்களுடன் ஒழியாது பூசலிட்டன. பொருள் பிடுங்கின, பெண் கவர்ந்தன, முதியோரையும் தெய்வங்களையும் சிறுமை செய்தன. குடிகளின் அனைத்து முறையீடுகளும் அவளிடமே வந்தன. முதலில் அவள் அச்செய்திகளால் சீற்றம் கொண்டாள். அவற்றை படைத்தலைவர்களிடமும் இறுதியாக துரியோதனனிடமும் கூறினாள். அவர்கள் அதை பொருட்டெனக் கருதாது சிரித்து கடந்தனர். “போருக்கெழும் படைகளின் இயல்பு அது. அவை கொதித்தபடியேதான் இருக்கும். வஞ்சமும் சினமும் மறுபக்கம் காமத்தாலும் ஆணவத்தாலும் நிகர்செய்யப்பட்டவை. அகிபீனா அளித்து வெறியேற்றப்பட்ட களிறு போன்றது போர்முகம் கொள்ளும் படை. அணுகுவோர்தான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என்றான் துரியோதனன்.

இறுதியாக அவள் சென்று பீஷ்மரிடம் சொன்னாள். “அது அவ்வாறுதான், அரசி. ஆண் எனும் தருக்கின் பெருந்தொகையையே படை என்கிறோம். அது பல்லாயிரம் கால்களும் கைகளும் ஒற்றைவிழைவும் கொண்ட விலங்கு” என்று அவர் சொன்னார். “அவர்கள் நம் குடிகளை காக்கும்படை… நம் குடிகளை அவர்கள் சூறையாட நாம் ஒப்பலாகுமா?” என்றாள். பீஷ்மர் “அது அமைதிக்காலத்துப் படை. அங்கே ஒவ்வொருவரும் தனியர். ஆகவே குலமும் குடியும் முறையும் முகமும் கொண்டவர். போர்ப்படை ஒற்றைப்பெருந்திரள் மட்டுமே. அது போர் செய்ய மட்டுமே பயன்படும். குருதியை மட்டுமே விரும்பும். அதற்கு நம்மவர் பிறன் என்று வேறுபாடு இல்லை” என்றார் பீஷ்மர். “இறக்கப்போகிறோம் என்னும் உணர்வு பெரும் விடுதலை ஒன்றை அளிக்கிறது, அரசி. அது அளிக்கும் முதன்மை விடுதலை அறவுணர்விலிருந்துதான்.”

போர் நெருங்குந்தோறும் குலதெய்வங்களுக்கும் நீத்தாருக்கும் போர்த்தெய்வங்களுக்கும் உரிய பூசனைகள் பெருகி வந்தன. ஒவ்வொரு நாளும் வழிபடவேண்டிய தெய்வங்கள் பெருகிவந்ததைக்கண்டு ஒருமுறை அவள் மெல்லிய புன்னகையுடன் காந்தாரியிடம் “ஒரு தருணத்தில் அஸ்தினபுரியில் போரில் மடிந்த அனைவருமே தெய்வங்களாகி இங்கு மீள்வார்கள் போலும். கணந்தோறும் குருதி கொள்பவர்கள் பெருகிவருகிறார்கள்” என்றாள். காந்தாரி அப்புன்னகையை உணராமல் “ஆம், எந்தப் போரையும் முன்னரே நிகழ்ந்த போர்களின் தொடர்ச்சியென்று எண்ணிக்கொள்ளாமல் மானுடரால் வாளேந்த இயலாது. வழிவழியாக வந்த ஒன்றின் பொருட்டே மானுடர் தலைகொடுக்க ஒருங்குகிறார்கள்” என்றாள்.

அஸ்தினபுரியின் அத்தனை மறக்குடியினரும் தங்களுக்கென அறுகொலைத் தெய்வங்களையும் களப்பலித் தெய்வங்களையும் நீத்தார் தெய்வங்களையும் கொண்டிருந்தனர். தெற்குக் காடெங்கும் பல்லாயிரக்கணக்கான நடுகற்கள் இருந்தன. அவை புதர்களுக்குள் சருகு மூடி மறைந்து பல தலைமுறைகளாக எவராலும் நினைவுகூரப்படாமல் காத்திருந்தன. குடிமூத்தாரின் உள்ளத்து ஆழத்தில் அவை எஞ்சின. போர் அணுகிவருந்தோறும் ஒவ்வொரு நாளும் என அவர்கள் அம்மூத்தவர்களின் கனவுகளில் தோன்றி குருதி கோரினர். துயரும் தனிமையும் வெறுமையுமாக வந்து “விடாய்கொண்டிருக்கிறோம் மைந்தர்களே, எங்களை நினைவுகூர்க!” என்றனர்.

கருக்கிருட்டு வெளிறத்தொடங்குவதற்குள்ளாகவே ஒவ்வொரு நாளிலும் அஸ்தினபுரியின் குடிகள் பெருநிரையாக அஸ்தினபுரியின் தெற்கு வாயிலினூடாக அப்பால் விரிந்திருந்த காடுகளுக்குள் நுழைந்து பரவினர். அவர்கள் செல்வதற்காக தெற்கு இடுகாடுகள் முழுக்க மூங்கில்கள் நடப்பட்டு இரவெல்லாம் பந்தங்கள் எரியவிடப்பட்டன. புதர்கள் நீக்கப்பட்டு வெளிப்போந்த நடுகற்கள் செவ்வொளியில் குருதியூறிய தசைத்துண்டுகள் என நின்றன. நிழல் பெருகிய மக்கள்திரள் பேருருக்கொண்ட மூதாதையரால் கொண்டு செல்லப்படுவதுபோல் தோற்றமளித்தது. நடுகற்களுக்கு செங்காந்தள், செவ்வரளி, தெச்சி மாலைகள் சூட்டி கள்ளும் ஊன்சோறும் படைத்து வழிபட்டனர். அறுகொலைத் தெய்வங்களுக்கு மட்டும் சிற்றுயிர்களை குருதி கொடுத்து அப்பசுங்குருதியில் அன்னம் உருட்டி படைத்து வணங்கினர்.

சென்றவர்கள் தெற்குக்காட்டினூடாகவே அப்பால் சென்று சுழன்று மேற்கு வாயிலினூடாக நகருக்குள் நுழைவதற்கு ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. காவல் மாடத்தில் நின்றிருந்தவர்கள் தெற்கு வாயிலின் வழியாகச் சென்று மேற்கு வாயில் வழியாக வந்த மக்கள்திரளின் சுழிப்பை கண்டனர். பெரும் சகடமொன்று மெல்ல சுழல அஸ்தினபுரி தேரென்றாகி எங்கோ சென்றுகொண்டிருப்பதுபோல் விழிமயக்கு கூட்டியது அது. பலிகோரும் நீத்தோர் எண்ணிக்கை பெருக குடியினர் ஒவ்வொருவரும் தனித்தனியாக அப்பொறுப்பை ஏற்றனர். இறுதியில் அகவைமுதிராத சிறுமியர்கூட தனியாக சென்று குருதி அளித்து நீத்தோருக்கு பலிகொடுத்து மீண்டனர்.

பானுமதியும் அரசியரும் ஒவ்வொருநாளும் அஸ்தினபுரியின் மூத்தோருக்கு குருதி பலியளித்தார்கள். குலதெய்வங்களுக்கு வழிபாடு நடந்தபடியே இருந்தது. அவைநிகழ்வும் ஒற்றர்கூடலும் விருந்துகளும் ஒழிய எஞ்சும் சிறுபொழுதுகளில் ஓய்வெடுக்கையில் கற்றுச்சொல்லிகள் படித்துக்காட்டிய ஓலைகளைக்கேட்டு ஆணைகளை பிறப்பித்தாள். மீண்டும் மீண்டும் ஒரே சொற்றொடர்களில் அமைந்த ஒரே ஆணைகளே அவ்வோலைகளில் இருந்தன. அரசாணைகளின் சொற்றொடர்களை மாற்றலாகாதென்பது தொல்நெறி. சொல்லிச் சொல்லி ஐயமோ குழப்பமோ அற்றவையாக மாறிவிட்டிருந்தன அச்சொற்றொடர்கள். அச்சொற்றொடர்களின் தொன்மையே அவற்றின் மறுக்க முடியாமையை உருவாக்கியது. எனவே பழைய ஓலைகளைப் பார்த்து புதிய ஓலைகள் எழுதப்பட்டன. பெயர்களும் இடங்களும் எண்களும் மட்டுமே மாறிக்கொண்டிருந்தன.

ஏழு சிறகுள்ள காற்றாடி ஒன்று முடிவிலாது சுழன்றுகொண்டிருப்பதுபோல அந்த ஓலைகள் என்று அவளுக்கு தோன்றியது. பொதுவாக ஏழு வகையான ஆணைகளே அவ்வோலைகளில் பெரும்பகுதி. ஆனால் மீளமீள ஒன்றே நிகழ்வதுபோல ஒருகணமும் ஒவ்வொரு ஓலையிலும் ஒருதுளி தனிவாழ்க்கை இருப்பதாக மறுகணமும் தோன்றிக்கொண்டிருந்தது. மீண்டும் வழக்கமான ஒரு ஓலை என்று தோன்றியது. கேட்ட மறுகணமே அவ்வாணையிலிருந்து ஒரு முகம் தெளிந்தெழுந்தது. ஒரு துயர் தனித்து தோன்றியது. எங்கோ அதற்காகக் காத்திருக்கும் இரு விழிகள் கண்முன் என தெரிந்தன. எனவே கொடைகள் எதையும் அவள் விலக்கவில்லை.

பன்னிரண்டு நாள் அவள் தொடர்ந்து ஆணைகளை பிறப்பித்த பின் கனகர் அவளை அணுகி பலமுறை தயங்கி “இது என் சொல் அல்ல, அரசி. கருவூலக் காப்பாளர்கள் என்னிடம் சொன்னதை தங்களுக்கு உரைக்கிறேன். தாங்கள் அனைத்து பொருட்கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டுமென்பதில்லை. ஒரு படைபெயர்வென்பது கருவூலம் எட்டு திசைகளில் உடைத்துக்கொண்டு வெளியே ஒழுகுவதற்கு நிகரானது. அஸ்தினபுரியின் கருவூலம் அடியிலி வரை நிறைந்தது என்பது தொல்கூற்று. அது ஓரளவுக்கு உண்மை. ஆயினும் இப்பெரும்படையெழுச்சி என்பது நமக்கே தாங்கக்கூடியதாக இல்லை. உண்மையில் படையெழுச்சியை எண்ணியபோது பொருளைப்பற்றி ஒருகணம்கூட நான் கவலைகொள்ளவில்லை. பாரதவர்ஷத்தையே படைகொண்டு வெல்லும் அளவுக்கு செல்வம் இங்குள்ளது என்று எண்ணினேன். ஆனால் ஒவ்வொரு கணமுமென பொன்னும் மணியும் அகன்று கருவூல அறைகள் வெறுமையாவதை கண்டேன். அரசி, நமது கருவூலத்தில் பத்திலொன்றுகூட இப்போது எஞ்சவில்லை” என்றார்.

பானுமதி “ஆனால் படைக்குச் செல்பவர்கள் இங்கு தங்கள் மைந்தர்கள் நம்மை நம்பி வாழ்வார்கள் என்று எண்ணி செல்கிறார்கள். குடிகளில் தந்தை இல்லாதபோது அரசனின் கோலே தந்தை. அஸ்தினபுரியின் எல்லைக்குள் எந்தக் குழந்தையும் உணவின்றி இருக்க நான் ஒப்பமாட்டேன்” என்றாள். “அது தேவைதான், அரசி. ஆனால் நாம் எண்ணியதைவிட மேலும் சில நாட்கள் போர் நீளுமென்றால் நம் கருவூலம் அதை தாளாமல் ஆகும். பொருளில்லாமல் போர் பின்னடையுமென்றால்…” என்று அவர் தயங்க “பொருளால் எப்போரும் வெல்வதில்லை. அள்ளக்குறையாத கருவூலம் நமக்கு இருக்கிறது. அவர்களிடம் என்ன இருக்கிறது? பாஞ்சாலமும் விராடமும் அளிக்கும் செல்வம் அளவுக்குட்பட்டது. எப்படி படைக்கான பொருட்களை அவர்கள் திரட்டினார்கள்?” என்றாள் பானுமதி.

“அரசி, அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் நிஷாதர்களும் கிராதர்களும். அவர்களுக்கு பொருளென்று பெரிதாக ஏதும் தேவையில்லை. அங்கு களஞ்சியத்திலிருந்து படைகளுக்கு உணவே அளிக்கப்படுவதில்லை என்று ஒற்றர்கள் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் செல்லும் வழியிலேயே எலிகளையும் பாம்புகளையும் பிற சிற்றுயிர்களையும் வேட்டையாடி உணவு கொள்கிறார்கள். படைவீரர்களே காடுகளில் புல்லரிந்தும் கிளைவெட்டியும் விலங்குகளுக்கு தீனி சேர்க்கிறார்கள். மரவுரி அணிந்து வெறுந்தரையில் துயில்கிறார்கள். இங்கு நமது படைகளில் பெரும்பாலானவர்கள் ஷத்ரியர்கள். உண்பதிலும் குடிப்பதிலும் எக்குறையையும் அவர்கள் தாங்குவதில்லை” என்றார் கனகர். “நமது படைச்செலவுகளில் பெரும்பகுதி அரசர்களுக்கு நாம் அளித்த விருந்தும் அவர்களின் அகம்படியினருக்கான செலவுகளும்தான். இங்கு தொடர்ந்து நிகழ்ந்த அவையமர்வுகள் எத்தனை செலவுமிக்கவை என தாங்கள் அறிவீர்கள்.”

பானுமதி எரிச்சலுடன் “பல தருணங்களில் இங்கு நிகழ்வது படையெழுச்சியா பெருவிழவா என்றே எனக்கு ஐயம் வருகிறது. ஒரு படையெழுச்சிக்கு ஏன் இத்தனை கூத்தும் நாடகமும்? ஏன் இத்தனை சூதர்கள் உடன்வரவேண்டும்? செல்வத்தில் ஒரு பகுதி சூதர்களுக்கும் பரணி பாடும் புலவர்களுக்கும் அளிக்கப்படுகிறது” என்றாள். “இவற்றில் சற்றும் குறைவைக்க முடியாது, அரசி. அவர்களின் சொற்களால்தான் நம் படைகள் ஊக்கம் பெற வேண்டும்” என்றபின் கனகர் “ஆனால் மறுபக்கம் அப்படி அல்ல. நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் தாங்களே பாடிக்கொள்வார்கள். தாங்களே நடனமிடுவார்கள். தாங்களே மகிழ்வு கொண்டாடுவார்கள்” என்றார். பானுமதி “இயல்பாகச் செய்யும் ஒவ்வொன்றுக்கும் இங்கு நாம் பொருள் அளிக்கிறோம். பெண்டிரும் குழந்தைகளும் உண்பதற்கு கணக்கு பார்க்கிறோம் அல்லவா?” என்றாள். கனகர் மறுமொழி சொல்லாமல் தலைவணங்கினார். “செல்க!” என்று பானுமதி கைகாட்டினாள்.

tigஏவல் பெண்டு வந்து அப்பால் நின்று தலைவணங்க சுவடியை படித்துக்கொண்டிருந்த கற்றுச்சொல்லி ஒருகணம் நிறுத்தினாள். விழி திறந்த பானுமதி “என்ன?” என்றாள். “அரசியர் தாரையும் அசலையும் வந்துள்ளனர்” என்றாள். “வரச்சொல்” என்று கைகாட்டியபின் அவள் மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள். கற்றுச்சொல்லி ஓலையை மீண்டும் படிக்கத்தொடங்கினாள். எல்லைப்புறத்து மறக்குடியான மிருகர்களில் ஆண்கள் அனைவருமே போருக்கு சென்றுவிட்டிருந்தனர். உடற்குறை கொண்ட மூவர் மட்டுமே ஊரில் எஞ்சியிருந்தனர். அம்மூவரும் அங்குள பெண்டிரை மணப்பார்கள் என்றால் வரும் தலைமுறையில் குடியின் ஆண்மை குறையக்கூடும் என்றும், தகுதியான படைவீரன் ஒருவன் அக்குடியில் போருக்குச் செல்லாது எஞ்சவேண்டும் என்று மூதன்னை ஒருத்தி கோரியிருந்தாள். அதற்கு அக்குடியில் பதினெட்டு அகவை நிறைந்த ஓர் இளைஞன் போருக்குச் செல்லாது குடியில் தங்க வேண்டுமென்று அரசாணை கோரப்பட்டிருந்தது.

அவ்விளைஞனின் பெயர் பானுமதியை புன்னகைக்க வைத்தது. மகாவஜ்ரன். அவன் முகத்தை அவள் அருகெனக் கண்டாள். ஒருவேளை தன் குடியின் ஆண்கள் அனைவருக்காகவும் காமம் பயிலப்போகிறவன். பெருவெள்ளத்தில், காட்டெரியில் அழியாது எஞ்சும் பொருட்டு கலத்தில் வைத்து உருக்கி ஒட்டப்பட்டு நூறு அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட விதைநெல். அவள் ஆணையை பிறப்பித்துவிட்டு போதுமென்பதுபோல் கைகாட்டினாள். அசலையும் தாரையும் உள்ளே வந்து வணங்கினர். கற்றுச்சொல்லிகள் தங்கள் சுவடிகளுடன் எழுந்து செல்ல தாரை அவளருகே வந்து அமர்ந்து “இரு விருந்துகள் முடிந்தன. இனி இன்று விருந்துகள் ஏதும் இருக்காதென்று எண்ணுகிறேன்” என்றாள். “ஆம், இனி விடைபெறல்கள் மட்டுமே” என்று பானுமதி சொன்னாள்.

“நாளை காலையில் அஸ்தினபுரியிலிருந்து அனைத்து படைப்பிரிவுகளும் விலகிச்செல்லும். ஒரு நாளில் அனைத்தும் பிறிதொன்றென மாறும். சென்ற சில மாதங்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஓயாது பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். நாளை பொழுதுக்குப்பின் வெறுமனே இங்கு அமர்ந்திருக்கப்போகிறோம்” என்று அசலை சொன்னாள். தாரை “வெறுமனே அமர்ந்திருக்கப்போவதில்லை, காத்திருக்கப்போகிறோம்” என்றாள். “செயலாற்றுகையில் ஒருநாள் ஒருகணமென்றாகும். காத்திருக்கையிலோ ஒருகணம் ஒரு ஆண்டுக்குமேல் நீளம் கொண்டது.”

அசலை “இப்போர் எத்தனை நாட்கள் நீடிக்குமென்று எண்ணுகின்றீர்கள், அரசி?” என்றாள். பானுமதி “இப்போது அதை எவராலும் கூறிவிட இயலாது. நேற்று அரசவையில் அரசரும் பிறரும் பேசுவதை வைத்து பார்த்தால் மூன்று நாட்களில் போர் முடிந்துவிடும். பீஷ்மப் பிதாமகருக்கு நிகர்நிற்க அங்கு எவருமில்லை. அவருக்கெதிராக அர்ஜுனனின் வில் உறுதிகொள்ளவும் வாய்ப்பில்லை. மூன்று பொழுதணைவுக்குள் போர் முடித்து வில்லை திரும்ப வைத்து முடியை அரசருக்கு உறுதி செய்வதாக பீஷ்மர் வஞ்சினம் உரைத்திருக்கிறார்” என்றாள். தாரை “அதை எவரேனும் உள்ளூர நம்பினரா?” என்றாள். “ஏன்?” என்று பானுமதி கேட்டாள். தாரை “மூன்று நாட்களுக்கு மட்டுமேயான உணவுடன் இங்கிருந்து எவரேனும் கிளம்பிச் செல்வார்களா?” என்றாள்.

பானுமதி “அதெப்படி? எந்தப் போருக்கும் அவ்வாறு செல்ல இயலாது. ஒரு நாழிகைப்பொழுதுக்கு மட்டுமே போர் நீடிக்கும் என்று எண்ணினாலும்கூட பலநாட்களுக்குரிய உணவும் வைக்கோலும் கொண்டு செல்ல வேண்டும்” என்றாள். தாரை “பலநாட்களுக்குரிய உணவு கையிலுள்ளது என்பதே போர் நீடிக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கும்” என்றாள். அசலை சலிப்புடன் “நாம் அதைப்பற்றி ஏன் பேசவேண்டும்?” என்றாள். “நாம் வேறெதைப்பற்றியாவது பேசியிருக்கிறோமா?” என்று தாரை கேட்டாள். பானுமதி “மெய்தான். இங்கு எவரும் வேறெதைப்பற்றியும் எண்ணுவதில்லை” என்றபின் “மானுடர் எப்போதாவது தனித்தனியாக எதையேனும் எண்ணுகிறார்களா என்றே ஐயம் வருகிறது. தாங்கள் தனியான எண்ணம் கொண்டிருப்பதாக அவர்கள் கருதலாம். ஆனால் எப்போதும் மானுடம் ஒன்றாகவே எண்ணம் சூழ்கிறது. ஒரு நகரம், ஒரு குடி, ஒற்றை எண்ணத்தையே அது கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் அதில் ஒரு துளி என்றே உளம் கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

அவர்கள் சற்றுநேரம் சொல்லவிந்தனர். பானுமதி எழுந்து “நான் ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். வந்த அவ்வண்ணமே ஓய்வெடுக்க அமைந்தேன்” என்றாள். தாரை “விதுரர் இன்று அந்தியில் கிளம்பவிருக்கிறார் என்றார்கள். தாங்கள் அறிவீர்களல்லவா?” என்றாள். “ஆம்” என்று பானுமதி சொன்னாள். தாரை “அவர் தன் மூத்தவரிடமும் ஒப்புதல் பெற்றுவிட்டார். அரசரிடமோ இளையோரிடமோ கூறாமல் கிளம்புகிறார். அவ்வாறு அவர் கிளம்புவது எவ்வகையிலும் நமக்கு மாண்பல்ல” என்றாள்.

பானுமதி “அதைத்தான் நானும் எண்ணினேன். ஆனால் இத்தருணத்தில் அரசரோ அவர் தம்பியரோ அவரை ஒருபொருட்டென எண்ணுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்களுக்கு அவர் ஒரு சீண்டலாகவும் இடையூறாகவும் தோன்றத் தொடங்கி நெடுநாட்களாகிறது. அவரை பார்க்கையிலேயே அரசரின் முகம் சுளிக்கிறது. அரசவைகளுக்கு அவர் வருவதை தவிர்க்கும்படி கனகரிடம் சொல்லி அனுப்பியிருந்தார். பேரரசர் வரும் அவைகளுக்கு மட்டுமே அவர் வருவது வழக்கம். உண்மையில் போருக்குக் கிளம்புவதற்கு முந்தைய நாளே விதுரர் அவ்வாறு கிளம்பிச் செல்வதை அரசர் பெரிதும் விரும்புவார். நாளை காலை அவர் இங்கிருந்தார் என்றால் அவரிடம் விடைபெற்றுச் சென்றாகவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏனெனில் குருதிவழியில் அவர் அவர்களுக்கு தந்தை. ஆம், அதை தவிர்க்கத்தான் விதுரர் கிளம்புகிறார்” என்றாள்.

“அரசி, அரசரின் பொருட்டு தாங்கள் சென்று அவருக்கு நல்விடை அளிக்கவேண்டும்” என்றாள் அசலை. பானுமதி “நான் என்ன சொல்வது?” என்றாள். “வெறும் முறைமைச் சொற்களே போதும். உண்மையில் தாங்கள் சொல்வதற்கொன்றே உள்ளது. அவர் மீண்டு வரும்போது அவர் இருக்கை அவ்வண்ணமே அவருக்காக காத்திருக்கும். அதை முடிகொண்ட அரசிதான் சொல்லவேண்டும்” என்றாள் அசலை. பானுமதி “ஆம், அதை நானே சென்று சொல்லலாம் என்று எண்ணுகிறேன். நீங்களும் உடன் வருக!” என்றாள்.