பிரயாகை - 20

பகுதி நான்கு : அனல்விதை – 4

எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல” என்றார். உருளைப்பாறைப்பரப்பின் சரிவில் கங்கை பெருகி ஓடும் ஒலி இருளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. “ஆயிரம் கைநீட்டி அன்னமிட்டுச்செல்லும் இக்கங்கையும் தன்னில் முற்றிலும் தனித்திருக்கிறாள்.”

நெருப்பைச் சுற்றி அவரது மாணவர்கள் சற்று விலகி அமர்ந்திருந்தனர். புலித்தோலிருக்கையில் துருபதன் அமர்ந்திருக்க அருகே சற்று பின்னால் பத்ரர் அமர்ந்திருந்தார். இமயமிறங்கி வந்த குளிர்காற்று அவர்கள் போர்த்தியிருந்த கம்பளியாடையின் மென்மயிர்ப்பரப்பை சிலிர்க்கச் செய்தபடி கடந்துசென்றது. பத்ரர் துருபதனை ஓய்வெடுக்க அழைத்துச் செல்லவேண்டுமென்பதைப்பற்றிதான் எண்ணிக்கொண்டிருந்தார். துருபதன் தொடர்ந்து இரண்டுநாழிகை துயில்வதே அரிதாகிவிட்டிருந்தது. இரவில் எழுந்து விண்மீனை நோக்கியபடி அவர் நின்றிருப்பதை பலமுறை கண்டிருக்கிறார். அவர் நோக்கி நிற்பது மேலே வானின் மையமாக நிலைகொண்ட துருவனைத்தான் என்று அவர் அறிந்திருந்தார்.

நான்குநாட்களுக்கு முன்னர் தேவப்பிரயாகையில் இருந்து திரும்பும் வழியில் ரிஷ்யசிருங்க மலையின் அடியில் அமைந்த தேவதாரு வனத்தில் தன் சீடர்களுடன் குடிலமைத்துத் தங்கியிருந்த தௌம்ரரை அவர்கள் சந்தித்தனர். மலைப்பாதையில் அவர்களின் வழிகாட்டியாக வந்த வேடன் கால்தவறி கங்கையில் விழுந்து இறந்தபின் அவர்களின் வழி தவறிவிட்டிருந்தது. ஒருநாள் கூடுதல் ஆகியும்கூட ரிஷிகேசத்தின் கங்கையிறக்கத்தை அவர்கள் அடையமுடியவில்லை. உணவு தீர்ந்துகொண்டிருந்தது. அனைவரும் பதறிவிட்டிருந்தனர். வழிதவறி இமயமலைச்சரிவில் இறந்து வெள்ளெலும்புக்குவியல்களாக காணக்கிடைத்த நூற்றுக்கணக்கானவர்களின் நினைவுகள் அவர்களை அலைக்கழித்தன. ஆனால் துருபதன் எதையும் எண்ணியவராக தெரியவில்லை. வரும்போதிருந்த சோர்வெல்லாம் விலகி அவருள் வற்றாத ஊக்கம் குடியேறிவிட்டதைப்போல தோன்றியது.

மலைச்சரிவில் ஆழத்தில் கங்கையோரமாக காட்டுக்குள் எழுந்த புகையைக் கண்டு பத்ரர் “அது ஒரு குருகுலமாக இருந்தால் கங்கை நம் மீது கனிவுடன் இருக்கிறாள் என்று பொருள். காட்டுத்தீ என்றால் இன்னும் சிலநாழிகை நேரத்தில் நாம் சாம்பலாவோம்” என்றார். துருபதன் ஒன்றும் சொல்லாமல் புகையை நோக்கிக்கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து “ஆம், அது வேள்விப்புகைதான். தேவதாருக்காட்டில் நெருப்பு இத்தனைநேரம் தங்காது” என்றார் பத்ரர். புகையை இலக்காக்கி அவர்கள் நடந்தனர். அந்திசாயும் நேரத்தில் தௌம்ரரின் குடிலை கண்டுகொண்டனர்.

“கங்கையில் எவருமே தொடமுடியாத ஆழத்து நீரோட்டம் ஒன்றுண்டு என்பார்கள்” என்றார் பத்ரர். தன் சிந்தனை அறுபட்டு திகைத்தவர் போல தௌம்ரர் திரும்பிப் பார்த்தார். பின்பு தலையசைத்தபடி “ஏழுமாதங்களுக்கு முன் நாங்கள் மேருவின் மடித்தட்டில் இருந்தோம். கோமுகத்தில் ஊறிப்பெருகும் கங்கையின் அருகே. பல்லாயிரம் கரங்கள் கொண்டு பெருகிச்செல்லும் அன்னையை ஒரு கைக்குழந்தையாக அங்கே கண்டோம்.” அவர் முகம் அந்நினைவில் மலர்ந்தது. அவரது மாணவர்களில் யாரோ பெருமூச்சுவிடும் ஒலி கேட்டது. “அங்கே அன்னை தன் நெஞ்சில் ஒரு தனி வைரம்போல துருவனை சூடியிருப்பதைக் கண்டோம். அலைகளில் ஆழத்தில் அமைந்த நிலை விண்ணில் மறைந்தபின்னும் நீரில் எஞ்சியிருந்தது.”

பத்ரர் வியப்புடன் கைகூப்பி “அரிதான காட்சி. விண்ணவரும் உகக்கும் காட்சி” என்றார். “முனிவரே, அதன் பொருளென்ன என்று எண்ணுகிறீர்கள்?” என்றார் துருபதன். தௌம்ரர் “ஒரு பெருநிகழ்வின் குறியடையாளம் அது. என் உள்ளுணர்வு சொன்னது, அது மண்ணில் பிறக்கவிருக்கும் கங்கையின் மகள் என” என்றார். பத்ரர் தரையில் கோடுகளை இழுத்து அவற்றின் சந்திப்புகளில் கூழாங்கற்களை வைத்தபடி “அது நிகழ்ந்த நேரம் மிகச்சரியாக எதுவென்று சொல்லமுடியுமா?” என்றார்.

தௌம்ரர் மாணவனை நோக்கித் திரும்ப அவன் எழுந்து சென்று ஓர் ஓலையை கொண்டுவந்து கொடுத்தான். பத்ரர் அதை வாங்கி அந்த நேரத்தின் அடிப்படையை கணித்து அதற்கேற்ப கூழாங்கற்களை இடம் மாற்றிவைத்தார். பலமுறை சிறிது சிறிதாக மாற்றி துல்லியமாக்கியபின் நிமிர்ந்து கவலையுடன் “முனிவரே, அது நற்குறி என எப்படி சொல்கிறீர்கள்?” என்றார். “அறியேன். என் ஆன்மாவை நம்பி சொன்னேன்” என்றார் தௌம்ரர். “நிமித்தங்கள் நன்மை நிகழுமென சொல்லவில்லை. பேரழிவை அல்லவா அறிவுறுத்துகின்றன?” என்றார் பத்ரர்.

“நிமித்திகரே, நன்மையும் தீமையும் நமது எளிய மானுட அறிவைக்கொண்டு அறியற்பாலதா என்ன? ஆம், ஒருவேளை மானுடகுலத்திற்கு பேரழிவாக இருக்கலாம். கோடானுகோடி பிற உயிர்க்குலங்களுக்கு பெருநன்மையாக இருக்கலாம். நாம் ஏதறிவோம்?” என்றார். “இருந்தாலும்…” என்று பத்ரர் தொடங்க “எது வகுத்துரைக்க ஒண்ணாததோ அதுவே லீலை எனப்படும் நிமித்திகரே. நீர் நுனியைக்கொண்டு முழுமையை கற்பனைசெய்பவர்” என்றார் தௌம்ரர். “அன்னையின் ஆடை நுனிபோதும் மகவுக்கு, அன்னையை அறிய” என்றார் பத்ரர். தௌம்ரர் புன்னகைசெய்தார்.

நெடுநேரம் அசைவிழந்திருந்த துருபதன் உடலசைவும் வாயசைவும் ஒலிக்க மீண்டு, “அந்த இடம் எது?” என்றார். “அது கங்காமுகம். விஷ்ணுபாதத்திற்கு நேர்கீழே உள்ளது. யுகயுகங்களுக்கு முன்னர் கங்கை மண்ணுக்குப் பெருகிவந்த இடம் அதுவே” என்றார் தௌம்ரர். “புராணகதாமாலிகையில் கங்கை மண்ணுக்குவந்த கதையை பரமேஷ்டிமுனிவர் சொல்கிறார். அன்று கோசலத்தை ஆண்ட சூரியவம்சத்தைச் சேர்ந்த பகீரதன் என்னும் அரசன் கங்கையை மண்ணுக்குக் கொண்டுவந்து சேர்த்தான். ஆகவேதான் மண்ணிலிறங்கிய கங்கை பாகீரதி என்றழைக்கப்படுகிறாள்.”

“மகத்தான தவங்களே மகத்தானவை மண்ணிலிறங்க படிக்கட்டுகளாகின்றன” என்று தௌம்ரர் சொல்லத் தொடங்கினார். கோசலத்தை ஆண்ட இக்ஷுவாகு குலத்து மன்னன் பகீரதன் இளையோனாகவே அரியணை அமர்ந்தவன். பல்லாண்டுகாலமாக எந்நேரமும் மதுமயக்கில் இருந்த அவன் தந்தை ஒருநாள் இரவில் அரண்மனையின் மஞ்சத்து அறையிலிருந்து எழுந்தோடி ஏழ்மாடத்தில் இருந்து களமுற்றம் நோக்கி குதித்து உடல் சிதறி இறந்தார். குலச்சபையின் தேர்வுக்கு ஏற்ப அவரது முதல் மைந்தனாகிய பகீரதன் அரசகட்டிலேறியபோது நெடுங்காலமாக மன்னனால் கைவிடப்பட்ட அரசு சீர்குலைந்திருந்தது. கருவூலம் ஒழிந்திருந்தது. பகைவர்கள் பெருகியிருந்தனர். மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர்.

பகீரதன் இளமையிலேயே அறிவில் உறுதிகொண்டவன் என அறியப்பட்டிருந்தான். அவனுக்கு மூத்தோர் சொல் துணையிருந்தது. சொல்லை அறியும் அடக்கமும் அமைந்திருந்தது. அறிந்து தெளிந்து அறமும் ஆண்மையும் துணைவர நெறி விலகாது ஆட்சி செய்து அனைத்தையும் சீரமைத்தான். கோசலம் மீண்டும் தன் பெருமையை அடைந்தது. அதன் கருவூலம் மழைக்கால ஊருணி போல நிறைந்தது. அதன் குடிகள் வசந்தகாலப்பறவைகள் போல மகிழ்ந்தனர். அங்கே விண்ணகத்தேவர்கள் வந்திறங்கி விளையாடிச்சென்றனர். விலங்குகளும் சிற்றுயிர்களும் நிறைவடைந்தன.

அரியணை அமர்ந்த நாள் முதல் பகீரதன் தன் அரண்மனை முற்றத்தில் அதிகாலையிலேயே வந்து குழுமும் துயருறும் குடிமக்களின் குரல்களையே கேட்டுவந்தான். அவன் முடியேற்றபின் பன்னிரண்டாண்டுகளில் அக்குரல்கள் மெல்ல மெல்ல இல்லாமலாயின. அவன் செய்வதற்கேதுமில்லாமால் ஆகியது. பகலில் அரியணையைச் சுற்றி ஒலிக்கும் அக்குரல்கள் மறைந்தபின் இரவில் அவன் தன் மஞ்சத்தைச் சூழ்ந்து ஒலிக்கும் குரல்களைக் கேட்கலானான்.

இனம்புரியாத மிக மெல்லிய குரல்கள். ஆனால் நெடுந்தொலைவிலெங்கோ ஒலிக்கும் கதறல்கள் அவை என அவன் அறிந்தான். ஒன்றுடன் ஒன்று கலந்து பெருந்திரளின் ஓலமாக அவை ஒலித்தன. துயில் வந்து இமை கனக்கும்போது அவை ஒலிக்கத்தொடங்கும். அவன் அவற்றை கூர்ந்து கேட்கும்தோறும் மங்கலடைந்து பின்வாங்கும். துயில் எழுந்து சித்தம் கரைகையில் அலைபோல பெருகிப்பெருகி வந்து கனவை அறைந்து உடல் விதிர்க்க விழித்தெழச்செய்யும். எழுந்து நெடுநேரம் உடல் நடுங்குவான்.

தொன்மையான மதுவும் சிவமூலிகைப்புகையும்கூட அவனை துயில்கொள்ளச்செய்யவில்லை. ஒவ்வொருநாளும் துயிலின்மையால் எரியும் கண்களுடன் உலர்ந்த உதடுகளுடன் விழித்தெழுந்தான். தன் அமைச்சர்களிடமும் மருத்துவர்களிடமும் அக்குரல்களைப்பற்றி சொன்னதும் அவர்கள் திகைத்து ஒருவர் விழியை ஒருவர் நோக்குவதைக் கண்டான். மூத்த அமைச்சரான பீதர் அழுகையை அடக்கியபடி திரும்பிக்கொண்டார். தளகர்த்தரான பிங்கலர் “ஆவன செய்வோம் அரசே” என்றார்.

பகீரதனின் அரண்மனையைச் சுற்றிலும் இரவில் மெல்லிய பேச்சொலிகூட எழலாகாது என வகுத்தனர் அமைச்சர்கள். மருத்துவர் அவன் செவிகளை தூய்மை செய்தனர். சித்தம் கரைக்கும் மருந்துகளை அளித்தனர். ஆனால் குரல்கள் மேலும் வலுப்பெற்றன. இரவில் அரசன் முற்றிலும் துயில் இழந்து படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அவன் உடல் மெலிந்து வெளிறியது. கண்கள் நிழல் சூழ்ந்து சிவந்து பழுத்தன. எந்நேரமும் இமைகனக்கும் துயில்சோர்வை அறிந்தான். பகலிலும் அரைத்தூக்கத்தை அடைந்தான். விழிப்பினூடாக கனவு எழுந்தது. பின்னர் விழிப்பென்பதே கனவுக்குள் நிகழும் ஒரு சிதறலாக ஆகியது.

“சித்தம்கலைதலின் ஒரு நிலையா இது? மருத்துவர்களே, நான் பித்தனாகிவிட்டேனா?” என்று மீண்டும் மீண்டும் மருத்துவர்களிடம் கேட்டான் பகீரதன். “அரசே, நீங்கள் உங்கள் இருப்பை உணரும்வரை சித்தத்துடனேயே இருக்கிறீர்கள். இது உங்கள் அகம் கொள்ளும் ஒரு நடிப்பு. அதற்கான காரணங்களை கண்டுசொல்கிறோம்” என்றார் மருத்துவரான சுஃப்ரர். “ஏன் இந்தக் குரல்கள்? எங்கிருந்து எழுகின்றன இவை?” என்று தலையை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு அவன் கூவினான்.

“அரசே, மானுட உள்ளத்தை ஆயிரம்தலைகொண்ட நாகம் என்றே நூல்கள் சொல்கின்றன. ஈராயிரம் விழிகள். ஆயிரம் நாவுகள். ஆயிரம் தலைக்குள் ஆயிரம் எண்ணங்கள். அதன் ஒற்றை உடல் அவற்றையெல்லாம் இணைத்து ஒன்றாக்கி வைத்திருக்கிறது. எனினும் எவருக்குள்ளும் அவை ஒன்றுடன் ஒன்று முட்டிமோதிக்கொண்டுதான் இருக்கும்” என்றார் சுஃப்ரர். “ஆயினும் அது நாகம். மகுடிக்கு மயங்கியாகவேண்டும்…”

ஒருநாள் அரியணையில் அவன் சோர்ந்து அரைத்தூக்கத்தில் சரிந்திருக்கையில் காதில் மிகத்தெளிவாக ஒரு குரல் “இளையோனே” என்றது. உடல் அதிர அவன் விழித்தெழுந்து பதைத்து நோக்கினான். “அழைக்கிறது!” என்றான். அச்சத்துடன் “அது என்னிடம் உரையாடுகிறது…” என்று கூவியபடி எழுந்துகொண்டான். அவன் சபையினர் திகைத்து நோக்கி அமர்ந்திருந்தனர். “அழைப்பு! அழைப்பு!” என்று அவன் கைநீட்டி கூவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருக்க எழுந்து வெளிமுற்றம் நோக்கி ஓடி திறந்த வான் கீழே நின்று கைவிரித்தான். கண்கள் கூச மேகங்களை நோக்கி “யார்? யாரது?” என்று கூவினான். அவன் பின்னால் ஓடிவந்த அமைச்சரும் சபையினரும் பதைப்புடன் நின்றனர்.

பின்னர் அவன் காதில் எந்நேரமும் அக்குரல்கள் கேட்கத்தொடங்கின. கலைந்து எழுந்த ஓலங்கள் மெல்ல இழைபிரிந்து தனிக்குரல்களாயின. வலியிலும் துயரிலும் கதறும் ஒலிகள் அவை. தன்னை நோக்கி கை நீட்டி அவை கதறுகின்றன என்று அவன் உணர்ந்தான். இருளில் அவை மிக அருகே என கேட்டன. கைநீட்டி அவ்வொலியை தொட்டுவிடலாம் என்பதுபோல. “எங்கோ அவர்கள் பெருந்தனிமையில் துயருறுகிறார்கள். யார் அவர்கள்? கண்டு சொல்லுங்கள்” என தன் அமைச்சர்களுக்கு ஆணையிட்டான். அவர்களின் ஒற்றர்கள் நாடெங்கும் அலைந்து ஏதும் அறியாது மீண்டு வந்தனர். “நம் தேசத்துக்குள் துயருறுவோர் என எவருமில்லை அரசே” என்றனர். “இல்லை, நாமறியாது எங்கோ பெரும் வதை நிகழ்ந்துகொண்டிருக்கிறது… என் செங்கோல் சென்றெட்டாத எங்கோ” என்று பகீரதன் சொன்னான்.

ஆனால் அவன் செவிக்குரல்கள் தெளிவடைந்தபடியே வந்தன. ஒருநாள் அவன் துயின்று விழிக்கும் கணத்தில் மெல்ல தோளைத்தொட்டு “இளையோனே, நாங்கள் சிறைபட்டிருக்கிறோம்” என்றது ஒரு குரல். அதன் குளிர்ந்த விரல்நுனி அவனை துள்ளி விழச்செய்தது. “இங்கே முடிவே இல்லாத இருள்” என்றது இன்னொரு குரல். “எத்தனை காலம்!” என ஒரு குரல் உடைந்து அரற்றியது. “யார்? யாரென்று சொல்லுங்கள்!” என்று கூவியபடி எழுந்து நின்றான். ஓடிச்சென்று வாளை உருவி இருளுக்குள் அதைச் சுழற்றியபடி அறைக்குள் சுற்றிவந்து மூச்சிரைக்க நின்றான். அவனைச்சுற்றி இருளுக்குள் மூச்சொலிகள் நிறைந்திருந்தன.

நூலோரையும் நிமித்திகரையும் வரவழைத்து அக்குரல்களைப்பற்றி கேட்டான் பகீரதன். அவர்களும் ஏதுமறியாதவர்களாக இருந்தனர். “அது வேறுலகங்களின் ஒலிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களே கனிந்து நம்மிடம் பேசாதவரை நாம் அவற்றை அறிவதே இயலாது அரசே” என்றார் நிமித்திகரான பர்வர். சுஃப்ரர் “அரசே, அக்குரல்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். அவை உங்கள் கனவுலகிலிருந்து எழுபவை. ஸ்வப்னஃபாஷணம் என்று சொல்லப்படுகின்றன…” என்றார். “ஸ்வப்னத்தில் இருந்து அவை சுஷுப்திக்கு சென்றாகவேண்டும். அங்கிருந்து துரியத்தின் முடிவிலியில் உதிர்ந்து மறையவேண்டும். அலையடிக்கும் ஸ்வப்னத்தின் கடலில் சில துமிகள் இவ்வாறு திசைமாறி ஜாக்ரத்தில் வந்து தெறித்துவிடுகின்றன.”

ஓர் இரவில் தன் தலைக்குள் ஒலிக்கும் அக்குரல்களைக் கேட்டு தாளாது நிலையழிந்து சுற்றிவந்த பகீரதன் தலையால் சுவரை ஓங்கி முட்டினான். குருதி வழிய எழுந்தபோது “இளையோனே, எங்குளாய்?” என ஒரு குரல் தலைக்குள் அலறியது. எழுத்தாணியை எடுத்து செவிகளுக்குள் குத்தி இறக்கப்போனான். உள்ளே இருந்து இன்னொரு குரல் “இளையோனே” என்றது. கைகள் நடுங்க அமர்ந்திருந்தவன் ஓர் அலறலுடன் ஓடி ஏழ்மாடத்து உப்பரிகைக்குச் சென்று கீழே விரிந்த இருள் நிறைந்த முற்றம்நோக்கி குதிக்கப்போனபோது இன்னொரு குரல் “நில் இளையோனே, எங்களுக்கு எவருமில்லை” என்றது.

அன்று காலை பகீரதன் தன் அரசைத் துறந்தான். தன் இளையோனை அரசனாக்கிவிட்டு மரவுரி அணிந்து தன்னந்தனியனாக காடேகினான். காட்டுக்குள்ளும் அக்குரல்கள் அவனுடன் இருந்தன. அவற்றிடமிருந்து தப்ப அவன் மரக்கூட்டங்களிலும் புல்வெளிகளிலும் பாறைச்சரிவுகளிலும் ஓடினான். பின் உடல்களைத்து ஓரடியும் முன்வைக்கமுடியாமல் ஒரு மலைச்சுனை அருகே நின்றபோது அவன் தன் துயருக்கான காரணத்தை உணர்ந்தான். அதுவரை அக்குரல்களை அவன் அஞ்சினான். அவற்றைத் தவிர்க்கவும் விலகவுமே முயன்றான்.

அங்கே நின்ற ஆலமரத்தின் அடியில் கண்மூடி அமர்ந்து அக்குரல்களை கேட்க ஆரம்பித்தான். வெளிக்குரல்களை முழுமையாகவே அகற்றி அவற்றை நோக்கிச் சென்றான். “வருக இளையோனே” என்றது ஒருகுரல். “தலைமுறைகளாக நாங்கள் தேடியலைந்தவன் நீ” என்றது இன்னொருகுரல். இருளை விலக்கி விலக்கி அவன் சென்றான் “இளையோனே, நூற்றியெட்டு தலைமுறைகளாக ஒவ்வொரு கோசல மன்னனிடமும் நாங்கள் முறையிடுகிறோம். எங்கள் குரலைக் கேட்டு இங்கே வரும் முதல் மன்னன் நீ. நீ வாழ்க!” என்றது குரல்.

“நீங்கள் யார்? நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் பகீரதன். “கீழுலகின் முடிவிலா இருளில் வாழும் நாங்கள் உன் முன்னோர். இங்கிருந்து எங்களுக்கு மீட்பு வேண்டும்” என்றனர். “நான் என்ன செய்யவேண்டும் மூதாதையரே? வேண்டுமென்றால் நானும் உங்களுடன் அவ்விருள்வெளியில் முடிவிலி வரை வாழ்கிறேன்” என்றான். “தன் முன்னோருக்குச் செய்யவேண்டியதே மானுடனின் முதல்கடமை. அவன் பிறப்பதற்குள்ளாகவே உருவானவை அவை. பிறந்தபின் உருவானவையே பிற என்று கற்றிருக்கிறேன். எதை ஆற்றவும் நான் சித்தமே” என்றான்.

மைந்தா, நீ எங்கள் குருதியின் துளி. மண்ணில் நீ அள்ளி விடும் நீர் மட்டுமே எங்களை வந்தடையும்” என்றனர் முன்னோர். “நான் செய்யவேண்டியதென்ன?” என்றான் பகீரதன். “நீ செய்யக்கூடுவது ஒன்றே. முடிவிலா காலம் மடிந்து மடிந்து சுருண்ட இவ்விருளில் விடாயும் பசியும் எரியும் சிதைமேல் ஒவ்வொரு கணமும் நாங்கள் வாழ்கிறோம். எங்களுக்கு அன்னமும் நீரும் அளி அது ஒன்றே இயல்வது” என்றனர். “எந்தையரே, நானிருக்கும் காலம் வரை அதைச்செய்கிறேன். ஆனால் அதன்பின்னரும் காலம் அப்படியேதானே இருக்கும். உங்களை விண்ணுலகுக்குச் செலுத்த நான் செய்யவேண்டியது என்ன?” என்றான் பகீரதன்.

“இளையோனே, கோசலத்தை ஆண்ட சூரியகுலத்து இக்ஷுவாகுக்களின் மாமன்னன் சகரரின் நூறு மைந்தர்கள் நாங்கள்” என்று மூதாதையர் சொல்லத்தொடங்கினர். நெடுங்காலம் முன்பு எங்கள் தந்தை சகரர் நூறு அஸ்வமேத வேள்விகள் செய்து பாரதவர்ஷத்தை முழுமையாகவே வென்று தன் செங்கோலை நிலைநாட்டினார். தோல்வியடைந்தவன் இரங்கத்தக்கவன். தகுதிக்குமேல் வெற்றிபெற்றவன் மேலும் இரங்கத்தக்கவன். வெற்றி எங்கள் தந்தையின் விழிகளை மறைத்தது. நூறாவது அஸ்வமேத நிறைவுநாளில் ஆணவத்துடன் “இனி நான் வெல்வதற்கேதுள்ளது?” என்று சொல்லி நகைத்தார்.

அப்போது வெளியே அன்னசாலையில் உணவு உண்டுகொண்டிருந்த கன்னங்கரிய திராவிடநாட்டு யோகி ஒருவன் உரக்க நகைக்கத் தொடங்கினான். அவனருகே இருந்தவர்கள் அவனை அடக்க முயல அவன் மேலும் மேலும் வெடித்து நகைத்தான். நகைத்தபடி எழுந்து எச்சில் கையை உதறியபடி நடந்தான். அவன் காணிக்கை கொள்ளாமல் செல்வதைக் கண்ட அமைச்சர் பின்னால் ஓடிச்சென்று அவனைத் தடுத்து வணங்கி பரிசில்பெற்று வாழ்த்திச்செல்லும்படி கோரினார்.

சடைக்கற்றைகளை அள்ளி தோளுக்குப்பின்னால் வீசி திரும்பி வெறிமின்னிய கண்களுடன் அவன் சொன்னான் “உங்கள் அரசன் ஒரு மூடன். அடுப்பிலிருக்கும் பாத்திரத்தை மட்டுமே அறிந்தவன். அதனுள் நிறைந்த அமுதை அறியமாட்டான். அதன் அடியில் எரியும் அனலையும் அறியமாட்டான். அவன் பரிசிலை நான் பெற்றால் என் ஞானமும் கறைபடும். விலகுக!” அவன் நகர் நீங்கிச் செல்வதற்குள் அச்செய்தியை சகரருக்கு ஒற்றர்கள் அறிவித்தனர்.

மாமன்னர் சகரர் குதிரையில் விரைந்தோடி அந்த யோகியை வழிமறித்தார். “நீ சொன்னதற்கு பொருள் சொல்” என்றார். “மூட மன்னா, நீ செய்தது மண்ணை மட்டும் வெல்வதற்கான அஸ்வமேதம். மண்ணில் நிறைந்துள்ளது விண். அடியில் எரிகிறது பாதாளம். அவற்றை வென்றபின் ஆணவம் கொண்டு நகைத்தபடி எனக்கு பரிசில்கொடு. பெற்றுக்கொள்கிறேன்” என்றான். சகரரை நோக்கி கைநீட்டி நகைத்தபடி விலகிச்சென்றான்.

பின்னால் ஓடிச்சென்று அவன் சடையைப்பற்றி நிறுத்தி சகரர் கூவினார் “என்னால் இயலாதென்று சொல்கிறாயா? மூவுலகையும் வெல்லும் ஆற்றல் எனக்கில்லை என்கிறாயா?” அவன் மேலும் நகைத்து அவர் கையை தட்டினான். “முயற்சிசெய். தலைமுறைக்கொருமுறை ஒருவனை இறைசக்திகள் தேர்வுசெய்கின்றன. மானுடத்தின் ஆற்றலையும் எல்லைகளையும் தாங்களே சோதித்து அறிந்துகொள்வதற்காக” என்றபின் நடந்து விலகினான்.

மாமன்னர் சகரர் வெறிகொண்டவரானார். பாரதவர்ஷத்தின் அத்தனை வைதிகர்களையும் வரவழைத்தார். மூவுலகையும் வெல்லும் அஸ்வமேதம் ஒன்றை அமைக்க ஆணையிட்டார். வைதிகர் திகைத்து பின் வணங்கி அப்படி ஒரு வேள்வியை மானுடன் செய்யவியலாது என்றனர். “செய்தாகவேண்டும்… முடியாதென்று சொல்பவர்கள் எனக்குத் தேவையில்லை” என்று சகரர் கூவினார். “அதற்கு வேண்டுவதென்ன? இவ்வுலகின் அனைத்து நதிகளையும் நெய்யாக்கி அவியூட்டுகிறேன்… அனைத்து மலைகளையும் சமித்தாக்குகிறேன்….” வைதிகர் “ஆனால் வேதம் எல்லையுள்ளது அரசே. விண்ணில் வாழும் வேதத்தின் ஒருதுளியே மண்ணுக்கு இதுவரை வந்திருக்கிறது” என்றனர்.

ஒருநாள் வேசரநாட்டிலிருந்து கனகர் என்னும் பெருவைதிகர் தன் மாணவர்களுடன் அரசரைத் தேடிவந்தார். மூவுலகையும் வெல்லும் அஸ்வமேதத்தை அவர் இயற்றியளிப்பதாக சொன்னார். “நான் கேட்பவை அனைத்தும் வரவேண்டும். மறுசொல் சொல்லப்படுமென்றால் அக்கணமே நான் எழுந்து தென்திசை நோக்கி செல்வேன்” என்றார் கனகர். “அவ்வண்ணமே” என்றார் சகரர். அமைச்சர்களை அழைத்து கருவூலநிதிக்குவையை முழுக்க அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கச் சொன்னார். தன் நால்வகைப்படைகளையும் கனகருக்கு சேவகர்களாக ஆக்கினார். தானே காவலனாக வேள்விமுகத்தில் தண்டேந்தி நின்றார்.

கனகர் வெள்ளிக்கால்களும் பொன்னாலான உடலும் வைரங்கள் பதிக்கப்பட்ட வாலும் கொண்ட இயந்திரக்குதிரை ஒன்றைச் செய்யும்படி சிற்பிகளிடம் ஆணையிட்டார். நூற்றெட்டு நாள் செய்த யாகாஸ்வ பூசையின் இறுதியில் அந்த சிற்பக்குதிரை செங்கனல் போன்ற வைரங்களால் ஆன விழிகளைத் திறந்தது. கனகர் அதன் சரடை வேள்வித்தூணில் பிணைத்திருந்த பொன்வாளால் அறுத்தார். பொற்பிடரி குலைத்து மும்முறை கனைத்து காலெடுத்துவைத்து நடக்கத் தொடங்கியது. அதன் கால்பட்ட இடங்களில் எல்லாம் மண் குழிந்தது. “இந்த ஒவ்வொரு குழியும் பச்சைமானுடக் குருதியால் நிறையவேண்டும்” என்றார் கனகர். குருதித்தடங்களால் பூமியைத் தைத்தபடி அது நடந்துசென்றது.

அங்கே வேள்விச்சாலையில் இருந்த வைதிகர் நெருப்பில் அக்குதிரை செல்லும் வழியைக் கண்டனர். மன்னரின் நால்வகைப் படைகளும் அதன் கால்தடங்களை தொடர்ந்து சென்றனர். அந்தப் பொற்குதிரை மும்முறை உலகை வலம் வந்தது, விந்தியமலையில் இருந்த ஒரு பெரும் பிலம் வழியாக பாதாளத்தை அடைந்தது. ஏழு உலகாக விரிந்த இருள்வெளி வழியாக ஓடிக் கடந்து வந்தது. பின் இமயத்தின் பனிமுடிகளில் ஏறியது. மேகங்களில் தாவி விண்ணில் நுழைந்து ஒளிமிக்க ஏழுலகங்களையும் கடந்து மறைந்தது.

சகரர் எழுந்து நின்று கூத்தாடினார் “வென்றேன்! வென்றேன்!” என கூவினார். “அந்த யோகி எங்கிருந்தாலும் இழுத்துவாருங்கள். அவன் என் பாதங்களைப் பணிந்து என் பரிசிலைப் பெறட்டும்” என்றார். “பொறுங்கள் அரசே, நம் குதிரை மீண்டுவந்து இந்த வேள்வித்தூணில் மீண்டும் கட்டப்படும்போதுதான் அஸ்வமேதம் முடிவடைகிறது” என்றார் கனகர். விண்ணுலகம் ஏழையும் ஒவ்வொன்றாக அந்தக் குதிரை வெல்வதை வைதிகர் நெருப்பின் திரையில் கண்டனர். ”இதோ…இதோ” என்று சகரர் கூவிக்கொண்டே இருந்தார். அவரது மெய்சிலிர்த்து கண்களில் நீர்வழிந்தது.

ஆனால் விண்ணிலிருந்து இமயச்சரிவுக்கு இறங்கிய குதிரை அங்கேயே நின்றுவிட்டது. அது மீண்டு வரவில்லை. அது இருக்குமிடமும் தெரியவில்லை. “மறைந்துவிட்டது அரசே” என்றனர் வைதிகர். “எங்கே? மூவுலகையும் காட்டுங்கள்” என்று சகரர் கூவினார். “அரசே, மூவுலகங்களுக்கு அப்பாலும் பேருலகங்கள் உள்ளன. மாமுனிவர்களின் தவ உலகங்கள். பெருங்கவிஞர்களின் கனவுலகங்கள்…” என்றார் கனகர். சினந்து தோள்தட்டி எழுந்த சகரர் வெறிகொண்டு கூவினார். “சென்று அப்புரவி எங்குள்ளதோ அந்த இடத்துக்கு உரிமையாளனைக் கொன்று அதை கொண்டுவருக!”

“மன்னரின் ஆணைப்படி நூறு மைந்தர்களான நாங்கள் இமயமலையின் பல்லாயிரம் அடுக்குகள்தோறும் சென்று ஆராய்ந்தோம்” என்றனர் மூதாதையர். “ இறுதியில் மலைச்சரிவில் ஒரு மூங்கில் குடில் அருகே முளையில் அந்தப்புரவி கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம்.” அவர்களின் குரலில் இருந்த துயரத்தைக் கேட்டு பகீரதன் பெருமூச்சுடன் அமர்ந்திருந்தான்.

அக்குடிலில் தன் மாணவருடன் இருந்தவர் கபிலர் என்னும் முனிவர். மெலிந்த கரிய உடலும் சடைமுடி செறிந்த தலையும் கொண்டவர். நாங்கள் சென்று குதிரையை அவிழ்த்தோம். அவர் கைநீட்டி எங்களைத் தடுத்தார். “இளையோரே, கோடைகாலத்தில் எனக்கு நீர் கொண்டுவரும்பொருட்டு ஒரு புரவிக்காகத் தேடியபோது தானாக வந்தது இது. இதை நான் விடமுடியாது” என்றார். “இது வேள்விக்கான பொற்குதிரை. இதுவா உங்களுக்கு நீர் கொண்டுவரவேண்டும்?” என்றோம். “மானுடனோ விலங்கோ அவர்கள் எடுத்த வடிவை வாழ்ந்தாகவேண்டும்” என்றார் கபிலர். “இப்புரவி இன்று உயிருடன் இருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகாலம் நீரள்ளினால் மட்டுமே இதன் புரவிவாழ்க்கை நிறைவடைந்து இது விண்ணகம் செல்லமுடியும்.”

சினம் கொண்டு கூவியபடி வாளுடன் அவர் தலையை வெட்ட பாய்ந்து சென்றோம். “மைந்தர்களே, நீங்கள் யாரென நானறிவேன். மூவுலகையும் வெல்லலாம். தவ உலகங்களை வெல்ல அரசர்களால் இயலாது. என் உலகில் நீங்களும் உங்கள் தந்தையும் சிற்றெறும்புகள். விலகிச்செல்லுங்கள்” என்றார் கபிலர். நாங்கள் அவரை வெட்டினோம். எங்கள் வாள்கள் அவர் காலடியில் புல்லிதழ்களாக மாறி விழக்கண்டோம். ஒரு கையசைவில் எங்களை அவர் சிற்றெறும்புகளாக ஆக்கினார். அள்ளி ஒரு சிறு குழிக்குள் போட்டார். அந்த இருண்ட பாதை வழியாக இருள் விலகாத பாதாள உலகுக்குள் வந்து விழுந்தோம்.

“வேள்வி முறிந்தமையால் கனகர் திரும்பி தங்கள் நாடுசேர்ந்தார் நாங்கள் மறைந்ததை அறிந்த எந்தை பித்தரானார். எங்களை உலகமெங்கும் தேடினார். பாதாள உலகை அவரது பார்வை வந்தடைய முடியவில்லை. இருள் வெளியில் வாழ்ந்த நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அழைத்தோம். எங்களை மீட்கும்படி மன்றாடினோம். எங்கள் குரல்களால் அலைக்கழிக்கப்பட்ட எந்தை எங்களுடன் பேச விரும்பி தவித்து பதைத்து அலைந்தார். துன்பம் தாளாமல் ஒருநாள் தன் உடைவாளை நெஞ்சில் பாய்ச்சிக்கொண்டு மறைந்தார். அதன்பின் நாங்கள் அழைக்கும் கோசல மன்னர்களெல்லாம் பித்தானார்கள். உச்சத்தில் உளமுடைந்து உயிர்விட்டார்கள். எங்கள் குரலை முழுதாகக்கேட்கும் முதல் மன்னன் நீ. எங்களை விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும்” என்றனர் முன்னோர்.

“நான் உங்களை விண்ணேற்றுகிறேன்” என்றான் பகீரதன். ”அது அவ்வளவு எளிதல்ல இளையோனே. எங்கள் பெரும்பாவத்தை விண்கங்கையின் நீர் படாமல் கழுவமுடியாது. நீ விண்ணேறி கங்கையை அடையலாம். ஆனால் அங்கே நீ விடும் நீர்க்கடன் எங்களுக்கு பயனற்றது. இந்த இருள்வெளியில் எங்களுக்கு அந்த நீர் வந்து சேர முடியாது. மண்ணில் விடும் நீரே பாதாளத்தை அடையமுடியும்” என்றனர். “அப்படியென்றால் விண்ணக கங்கையை மண்ணுக்குக் கொணர்கிறேன். அந்த நீரால் உங்களுக்கு கடன் முடிக்கிறேன்” என பகீரதன் சொன்னான். “இயல்வதல்ல அது. இறையும் அஞ்சும் பணி” என்றனர் முன்னோர்.

“அது நிகழ்ந்தாகவேண்டும் மூத்தோரே.” தலைதூக்கி தன் கண்முன் ஒளிவிட்ட துருவ விண்மீனை நோக்கி பகீரதன் சொன்னான் “நிலைபேற்றின் ஒளியே, என்னில் திகழ்க!” அச்சொல்லுடன் அவன் ஆலமரத்தடியில் அமர்ந்தான். அந்த ஒற்றைவிண்மீனின் மாற்றமில்லாமை அன்றி அவன் நெஞ்சில் ஏதுமிருக்கவில்லை. அவனைச்சுற்றி காலம் கடந்து சென்றது. பருவங்கள் மாறின. மலைப்பாறைகள் பொடியாகி மணலாகி மறைந்தன. கடல்கள் வற்றி மீண்டும் ஊறின. விண்ணில் ஆயிரம் தூமகேதுக்கள் வந்து சென்றன. அவன் அப்புள்ளியிலேயே இருந்தான்.

தன்னுள் விரிந்த சித்தப்பெருவெளியில் அவன் பிரம்மனைக் கண்டான். திசைமுகங்களுடன் தோன்றிய முதற்கவிஞன் “மைந்தா நீ வேண்டுவதென்ன?” என்றான். “விண்கங்கை மண்ணில் நிகழவேண்டும்” என்றான். “நீ கேட்பதென்ன என்றறிவாயா? கோடானுகோடி விண்மீன்களை தன் அலையொளிமின்னல்களாகச் சூடி பெருகியோடுபவள் அவள். அவளுடைய துளியினும் துளி கூட மண்ணுலகை கூழாங்கல் போலச் சுருட்டி விண்ணில் வீசிவிடும்…” என்றான் பிரம்மன். “நீ முழுமையை கேள். அழியாத நிலையை கேள். விண்ணளந்தோனின் பதம் கேள். அளிக்கிறேன்.” “கங்கையன்றி எதையும் ஏற்கமாட்டேன்” என்றான் பகீரதன்.

“கங்கையின் தலைவன் விண்ணளந்த பெரியவன். அவனிடம் கேள்” என்று சொல்லி பிரம்மன் மறைந்தான். மீண்டும் ஊழி உதித்து ஆழிவிரிந்து குமிழியென புவி எழுந்து உயிர்தழைக்கும் காலம்வரை பகீரதன் தவமிருந்தான். ஆழியும் வெண்சங்குமாக இறைவன் அவன் முன் தோன்றினான். “கங்கையை அருள்க இறைவா, அதுவன்றி நீயே ஆயினும் வேண்டேன்” என்றான் பகீரதன். “அழிவற்ற வினாவுக்கு விடை அளிக்கப்பட்டாகவேண்டும். மைந்தா, உன் நாட்டில் கங்கை பெருகியோடுக” என்றது பரம்பொருள்.

பாற்கடலோனின் ஆணைப்படி விண்ணில் வந்து பெருகி நின்றாள் கங்கை. இடியோசையென மேகங்களைத் தழுவிப்பெருகிய குரலில் “பகீரதனே, என் ஒரு துளியை உன் மண்ணுக்கு அளிக்கிறேன். ஆனால் அவளை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் உன் மண்ணுக்கில்லை என்றுணர்க. வெற்புகள் இடிந்து தூளாகும். புவிக்கோளம் தன் அச்சுவிட்டுச் சிதறி இருள்வெளியில் மறையும்” என்று சொன்னாள். பகீரதன் “நீ இறங்க நான் தர்ப்பைப்பீடம் அமைக்கிறேன்” என்றான். நகைத்து “அமைத்ததும் என்னை அழை” என்று சொல்லி மறைந்தாள் விண்கங்கை.

மீண்டும் காலத்தை தன்னுள் மடிக்கத் தொடங்கினான் பகீரதன். சுழன்று சுழன்று சென்ற அம்முடிவிலியின் ஒருபுள்ளியில் மானும் மழுவும் நாகமும் நிலவும் ஏந்தி செந்நெருப்புவண்ணன் தோன்றினான். “இறைவ, கங்கையை மண்ணிறக்கும் தர்ப்பைப்பீடம் ஒன்றே நான் வேண்டுவது” என்றான் பகீரதன். அவ்வண்ணமே ஆகுக என்றான் இறைவன்.

“தென்திசைகொண்ட தெய்வம் தன் விரிசடையை தர்ப்பைப்புல் இருக்கையாக விரித்தது. அதில் விண்ணக கங்கை பல்லாயிரம்கோடி அருவிகள் போல பொங்கி விழுந்தாள் என்கின்றது புராணம்” என்றார் தௌம்ரர். “அவளுடைய பெருவிசையில் விண்ணகம் அதிர்ந்து விண்மீன்கள் திசைமாறின. ஆனால் செந்தழலோனின் சடையில் ஒரு நீர்த்துளியாக மறைந்தாள். கங்கையை நோக்கி கைவிரித்து கண்விழித்து அமர்ந்திருந்த பகீரதன் கண்டது விண்ணையும் மண்ணையும் கருமேகக்குவைகள் போல மூடிநிறைத்திருந்த சடைவிரிவைத்தான்.”

“மறுகணமே மீண்டும் ஊழ்கத்தில் அமர்ந்து ஏழு ஊழிக்காலத்தை அவன் கடந்தான் என்கிறது புராணம்” தௌம்ரர் சொன்னார். “தவமுடிவில் அவன் பிறைசூடியபெருமானின் இடப்புறம் அமைந்த பிராட்டியை எழுப்பினான். தன்னெதிரே குளிர்நகை விரிய வந்து நின்ற தேவியிடம் கங்கையை மண்ணிலிறங்கச்செய்யவேண்டுமென சொல்கேட்டான். கங்கையைக் கரந்ததை தன்னிடமிருந்து மறைத்தான் என்றுணர்ந்த அன்னை அவனிடம் சடைக்கூந்தல் விரித்து ஆடும் கொடுகொட்டியை ஆடும்படி கோரினாள். அப்பனும் அன்னையும் ஆடிய ஆடல் மின்னல்கதிர்களென விண்ணை நிறைத்து இடியோசையென திசைகளை சூழ்ந்தது. அவிழ்ந்த விரிசடையில் இருந்து சரிந்து கங்கை மண்ணில் மேருமலைமேல் விழுந்தாள்.”

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

“கங்கை நீரில் தன் மூதாதையருக்கு நீர்க்கடன் செய்து அவர்களை இருள்வெளியில் இருந்து மூதாதையர் உலகத்திற்கு அனுப்பினான் பகீரதன். அவன் தவத்தால் மண்ணில் இறங்கிய பெருக்கையே பாகீரதி என்கிறோம். அலைகளாக எழுந்தவள். ஆயிரம் கோடி கரங்களாக விரிந்து அமுதூட்டுபவள். வேரில் நீராகவும் கனியில் அமுதாகவும் மலர்களில் தேனாகவும் நிறைபவள். இப்பாரதவர்ஷம் அவள் முலையூட்டிப் புரக்கும் மகவு” தௌம்ரர் சொன்னார். “அன்னையின் பெருவிரல் நகம் முதலில் பட்ட இடம் மேருமலையுச்சி. அவள் பாதம் பதித்து நின்ற இடம் கோமுகச் சுனை. அங்கேதான் நாங்கள் துருவனை கண்டோம். அன்னையின் அலைகளுக்குள் அணையா விழைவொன்று குடியேறியதென்று அறிந்தோம்.”

தன் மாணவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “இப்புராணக்கதையின் பொருளை அறிய யோகநூலை கற்றுத்தெளியவேண்டும். பரம்பொருளின் ஒருதுளியே பெருவெளி. அகண்டாகாசம் என அதைச் சொல்கின்றன யோகநூல்கள். அதை நிறைக்கும் பாலொளிப்பெருக்கு மண்ணில் இறங்குவது மானுடனின் அகவெளியிலேயே. அதை சிதாகாசம் என்கின்றன யோகநூல்கள். விண் நிறைத்து சித்தம் நிறைத்து பின் மண் நிறைத்துப் பெருகும் பேரன்பையே கங்கை என வணங்குகின்றன உயிர்க்குலங்கள்.”

பத்ரர் துருபதனின் முகத்தை எரியும் நெருப்பின் ஒளியில் கண்டார். அவர் விழிகள் தழலை ஏற்று ஒளிவிட்டுக்கொண்டிருந்தன.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்