பிரயாகை - 21

பகுதி நான்கு : அனல்விதை – 5

கங்கைக்கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு மழைமூட்டம் கனத்திருந்த பின்மதியத்தில் பத்ரர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தார். அங்கநாட்டைக் கடந்ததும் கங்கை மேலும் மேலும் அகன்று மறுகரை தெரியாத விரிவாக ஆகியது. அதன் நீல அலைவிரிவில் பாய் விரித்துச்சென்ற வணிகப்படகின் அமரமுனையில் நின்று துருபதன் கரையை நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரர் அருகே வந்து “இன்னும் நான்குநாழிகைநேரத்தில் கல்மாஷபுரி வந்துவிடும் என்றனர் அரசே” என்றார்.

இமயமலையடிவாரத்தில் இருந்து மீண்டதும் துருபதன் முற்றிலும் மாறிவிட்டிருந்தார். அவரது மாற்றம் தௌம்ரரின் தவச்சாலையில் நிகழ்ந்தது என்று பத்ரர் அறிந்திருந்தார். பகீரதனின் கதையைக் கேட்டு அமர்ந்திருந்த அந்த இரவில் அவர் கண்ணெதிரே துருபதன் உருமாறிக்கொண்டிருந்தார். நாடக அரங்கத்தில் ஒரு திரை சரிந்து இன்னொன்று எழுவதுபோல அவர் உடலில் இருந்த நோயும் துயரும் கொண்ட துருபதன் மறைந்து அவர் அறிந்திருக்காத இன்னொருவர் எழுந்தார்.

அன்றிரவு அவர் குடிலில் இரவில் துயில் கலைந்து எழுந்தபோது அருகே துருபதனைக் காணாமல் திடுக்கிட்டு பதறி வெளியே ஓடிவந்தார். “அரசே, அரசே” என்று அழைத்தார். முற்றத்தில் மலைக்காற்று விரித்த மென்மணல் அலைகள்மேல் அவர் காலடியைக் கண்டார். அதைத்தொடர்ந்து ஓடி மூச்சிரைக்க கங்கைக்கரையை அடைந்தார். இருளுக்குள் கங்கையின் நுரைவெண்மையின் ஒளியில் நிழலுருவாக துருபதன் நிற்பது தெரிந்தது.

அருகே சென்றபோதே பத்ரர் துருபதனில் மாறுதலை உணர்ந்தார். அசைவற்று நின்ற அவரது உடலை பின்னாலிருந்து நோக்கியபோதே அந்த வேறுபாடு தெரிந்தது. வேறு எவரோ என்பது போல முழுமையான மாறுதல். மெல்ல அருகே சென்று பத்ரர் மூச்சிளைப்பாறினார். மூச்சொலியால் அவரை அறிந்து துருபதன் திரும்பி நோக்கினார். பத்ரர் என்ன சொல்வதென்று தெரியாமல் “குளிர் ஏறிவருகிறது அரசே” என்றார்.

துருபதன் “குளிரா? இல்லையே. என் உடல் கொதிக்கிறது. வியர்வை எழுவதுபோலத் தெரிகிறது. ஏனென்றால் இதோ பேருருக் கொண்டு நின்றிருப்பது ஆறல்ல. நெருப்பு. வெண்ணெருப்பு. பத்ரரே, நெருப்பின் ஒலியல்லவா அது? நெருப்பின் பசிக்கு அளவே இல்லை. அதை உணவு அணைக்கமுடியாது. உண்ணும்தோறும் வளரும் பசி என்றால் நெருப்பு மட்டுமே. நெருப்பைவிட ஆற்றல்மிக்க ஏதும் இப்புவியில் இல்லை. பிரம்மத்தின் புன்னகை ஒளி என்றால் அதன் சினமே நெருப்பு… வெண்ணிற நெருப்பு இன்னும் அழுத்தமானது. செந்நிற நெருப்பு தன்னை நெருப்பென காட்டிக்கொள்கிறது. வெண்ணிற நெருப்பு அதில் எரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் வெம்மைகொண்டது…”

சிலகணங்கள் அது துருபதனா ஏதேனும் மாயத்தோற்றமா என்றே பத்ரர் ஐயுற்றார். துருபதன் பேசிக்கொண்டே இருந்தார். உள்ளே ஓடும் சொல்லோடை அப்படியே இதழ்கள் வழியாக வெளிவருவதுபோல. ஏதேனும் கானகத்தெய்வம் அவரில் குடியேறிவிட்டதா என்று தோன்றியது. சொற்களின் பெருக்கு. ஆனால் பொருளற்ற சொற்களாக அவை இருக்கவில்லை. பேசிப்பேசி அவர் தன்னை முழுமையாக மீண்டும் உருவாக்கிக்கொள்கிறார் என்று தோன்றியது. முந்தையகணம் வரை இருந்த துருபதனை முழுமையாக அழித்து வெண்சுவராக்கி அதன்மேல் அவர் தன்னை வரைந்து எடுத்துக்கொண்டிருந்தார். துளித்துளியாக.

“நான் பேசுவதை நீங்கள் வியக்கிறீர்கள் என அறிகிறேன் பத்ரரே. பேசப்பேச என்னுள் சொற்கள் ஊறிக்கொண்டே இருக்கின்றன. பேசாதுபோனால் அவை எடைகொண்டு என் அகத்தை அடைத்துவிடும் என தோன்றுகிறது” என்றார் துருபதன். “நான் இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தேன். குரலில்லாமல் என்னை கேட்டுக்கொண்டிருந்தேன். பேசும்போது குரல் எழுகிறது. அது துணையாக ஒருவர் அருகே நின்றிருக்கும் உணர்வை அளிக்கிறது. தன்குரலைக் கேட்கவே மானுடர் பேசுகிறார்கள்.”

இரவெல்லாம் துருபதன் பேசிக்கொண்டிருந்தார். “இரவு எவ்வளவு மகத்தானது. இருட்டைப்போல அழகுள்ளது எதுவும் இல்லை. அது நம்மை தனித்துவிட்டுவிடுகிறது. நம் உடலை நாம் பார்க்கும் வதையை வெல்கிறோம். நம் நெஞ்சு நேரடியாகவே இருளில் கரையமுடியுமெனத் தோன்றுகிறது. அங்கே விண்மீன்கள் இருளில் வெறும் உணர்வுகளாக எண்ணங்களாக ஆன்மாவாக நின்றிருக்கின்றன. நானும் இங்கே அவ்வாறுதான் நின்றிருக்கிறேன். எங்களை இணைத்திருக்கிறது பிரபஞ்ச இருள்… முடிவிலியை நிறைக்க இருளால் மட்டுமே முடியும்.”

கைநீட்டி துருபதன் கூவினார் “அங்கே விண்ணில் நின்றிருக்கும் துருவனைத்தான் நோக்கிக் கொண்டிருந்தேன். எத்தனை பெரிய தனிமை. அதை நம்மிடம் சொன்னது யார்? ஆம்… தௌம்ரர்… அவர்தான் சொன்னார். துருவனை தனிமையின் ஒளிப்புள்ளி என்று சொல்வேன். இத்தனை பெரிய இருள் சூழ்ந்திருக்கையில்தான் அந்தத் தனிமையின் ஒளியின் அழுத்தம் கூடுகிறது. தனித்திருப்பதன் குளிர். சொல்லின்மையின் எடை. வானில் தனித்திருப்பது எப்படிப்பட்டது? தெரியவில்லை. ஆனால் மண்ணில் தனித்திருப்பதைக் கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியும். பத்ரரே, துருவனைத்தவிர நான் இன்று அருகிருக்க விழைவது வேறேதுமில்லை. விடிந்தபின்னரும் என் விழிகளில் துருவன் எஞ்சியிருப்பான். கங்கையில் துருவனைக் கண்டதை நம்மிடம் சொன்னது யார்? ஆம், தௌம்ரர்தான் சொன்னார்.”

மறுநாள் முதல் துருபதன் வெறியுடன் உணவுண்ணத் தொடங்கினார். மீண்டும் மீண்டும் குடிப்பதற்கும் தின்பதற்கும் எதையாவது கேட்டுக்கொண்டிருந்தார். “சக்ரசேனா, மூடா, என்னசெய்கிறாய்? உணவு கொண்டுவா” என்று கூவினார். அவர் உணவை உண்பதைக் காண பத்ரருக்கு மேலும் அச்சமெழுந்தது. பலமுறை தயங்கியபின் “அரசே, நீங்கள் அதிகமாக உணவுண்ணுகிறீர்கள். அது நல்லதா என்று ஐயுறுகிறேன்” என்று அவரிடம் சொன்னார். துருபதன் “பத்ரரே, நான் உண்ணும் உணவெல்லாம் அக்கணமே எரிந்தழிகின்றன. என்னுள் இருக்கும் நெருப்புக்கு உணவு போதவில்லை” என்றார். “ஆனால்… இப்படி இடைவெளியில்லாமல்…” என்று பத்ரர் சொல்லத் தொடங்க “நானும் மருத்துவநூலை அறிவேன் பத்ரரே, உண்ட உணவு எஞ்சியிருந்தால்தான் நஞ்சாகும்… உணவில்லை என்றால் என் உடலின் அனலில் குருதிகூட எரிந்தழியக்கூடும்.”

மிகச்சில வாரங்களிலேயே அவர் உடல்கனத்து வலுப்பெற்றுவிட்டார். இமயமலைப்பயணமும் தேவப்பிரயாகையின் பூசையும் அவரை மீட்டுவிட்டன என்று அவர் மைந்தர்கள் நம்பினார்கள். குலதெய்வத்திற்கு நன்றிக்கடன் பூசனைகள் செய்யப்பட்டன. ஆனால் துருபதனிடமிருந்த வேறுபாடு மெல்லமெல்ல அவர்களுக்கும் தெரியத்தொடங்கியது. திரும்பிவந்தபின் அவர் அரசப்பொறுப்பை ஏற்கவேயில்லை. ஒருநாள் கூட மணிமுடி சூடி அரியணையில் அமரவில்லை. பகல்முழுக்க தன் அறைக்குள்ளேயே இருந்தார். அவைநிமித்திகர்களை வரவழைத்து நிமித்தச்சுவடிகளை வரவழைத்து வாசித்தார். அந்தியில் வெளியே சென்று கங்கைக்கரையில் வானளாவ நெருப்பெழச்செய்து அதனருகே நின்றிருந்தார். நெருப்பைச் சுற்றிவந்து கைகளை விரித்து “எழுக எழுக” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

பத்ரரிடம் மட்டுமே அவர் பேசினார். பத்ரர் அங்கிருக்காததுபோல அவரது சொற்கள் வந்துகொண்டே இருந்தன. அத்தனை நேரம் பேசியும்கூட பேசப்பட்டவை மீளமீள வரவில்லை என்பதை உணர்ந்ததும் பத்ரர் துருபதனின் உள்ளம் செயல்படும் வீச்சை எண்ணி வியந்தார். பித்தில் ஒருவரின் ஞானம் விரியமுடியுமா? அதுவரை துருபதனில் அவர் சிந்தனையை கண்டதில்லை. வெளிநோக்கி விரியும் அகத்தை அறிந்ததில்லை. “சித்தம் மீது புறவுலகத்தை ஏற்றி வைத்திருக்கிறோம் பத்ரரே. அது விலகினால் அடையும் விடுதலை அது” என்றார் மருத்துவர் கிரீஷ்மர்.

துருபதன் எப்போதும் நெருப்பைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். நெருப்பைக்கொண்டு அனைத்தையும் விளக்கிவிடமுயல்பவர் போல. “எண்ணியிருக்கிறோமா பத்ரரே? இப்புவியில் உள்ள அனைத்தும் இருத்தல் கொண்டவை. ஒன்றே ஒன்றுதான் அழிதலே இருப்பாகக் கொண்டது. காலத்தையும் வெளியையும் சுமந்துகொண்டிருக்கின்றன அனைத்தும். நெருப்போ அவற்றை ஒவ்வொரு கணமும் உதறிக்கொண்டிருக்கிறது. நெருப்பென்றால் என்ன என்று எண்ணினீர்கள்? நெருப்பென்றால் நெளிவு. மாட்டேன் மாட்டேன் என உதறும் விரைவு. வேண்டாம் வேண்டாம் என மறுக்கும் திமிறல்.”

அப்படியே அவர் சொல்லிக்கொண்டே செல்வார். “நெருப்பென்றால் இவ்வனைத்தும் அழியும் கணத்தின் காட்சிவடிவம். பிரம்மத்திற்கு எதிராக பொருள்கள் கொண்ட சினமல்லவா நெருப்பு? நான் இல்லை நான் இல்லை என்று சொல்லும் இருப்பு அல்லவா அது? நெருப்பு ஒரு நாக்கு. விண்ணை நோக்கி அது மண்ணின் அழியாத சொல் ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கிறது. நெருப்பென்பது மண்ணிலிருந்து விண்ணுக்குச் செல்லும் தெய்வங்களின் ஒளிமிக்க பாதை. ஒவ்வொரு கணமும் இப்புவியை அழித்துக்கொண்டே இருக்கும் ஒன்றை நம்பி இங்கு நாமெல்லாம் வாழ்கிறோம் என உணர்ந்திருக்கிறோமா?”

“பத்ரரே, நெருப்பென்பது அழிவு. ஆக்கத்தை விட ஆயிரம்கோடி மடங்கு பெரியது. ஆக்கத்தைவிட இறைச்சக்திகளுக்கு விருப்பமானது. ஆகவேதான் வேள்விக்குளங்கள் தோறும் அது நின்றெரிகிறது. சொல்லப்போனால் இங்கே உள்ளவை இரண்டே. நெருப்பும் நெருப்பு அல்லாதவையும். நெருப்பல்லாத அனைத்தையும் உண்ணுவதே நெருப்பின் இயல்பென்பதனால் பசியும் உணவுமன்றி இங்கு ஏதும் இல்லை என்று சொல்வேன். நெருப்பை அன்றி மானுடன் அறிவதற்கேதுமில்லை இங்கே.” பத்ரர் திகைத்த விழிகளுடன் நோக்கியிருப்பார். “நெருப்பை வளர்ப்பதுபோல புனிதமானது ஏதுமில்லை. நெருப்புக்கு அவியிடுவதைப்போல மகத்தானது ஏதுமில்லை. நெருப்பில் மூழ்கி அழிவதுபோல முழுமையும் வேறில்லை.”

வெறித்த விழிகளுடன் கைகளை நீட்டி துருபதன் கூவினார் “ஸ்வாகா! அன்னையே ஸ்வாகா! இப்புவியை ஒரு கவளமாக உண்டு பசியாறுக. ஸ்வாகா! அனைத்தையும் அழித்து நடமிடுக. மண்ணை விண்நடனமாக ஆக்கும் பெருவல்லமையே ஸ்வாகா!” அப்படியே வெறிகொண்டு கைகளை ஆட்டியபடி நடனமிட்டார். இரவெல்லாம் அங்கே நெருப்பைச்சுற்றி ஆடிச் சோர்ந்து விடிகாலையில் அப்படியே கரியும் புகையும் படிந்த உடலுடன் விழுந்து துயில்வார். அவரை மெல்ல தூக்கி மஞ்சத்துக்கு கொண்டுசெல்வார்கள்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

ஒருநாள் பின்காலையில் பத்ரர் அரண்மனைக்கு வந்தபோது ஒரு சுவடியுடன் ஓடிவந்த துருபதன் சொன்னார் “நான் தேடிய விடை கிடைத்துவிட்டது. பத்ரரே, நான் காத்திருந்தவர்கள் இவர்களே” பத்ரர் சுவடியை வாங்கி அதை வாசித்தார். “இவர்கள்…” என அவர் சொல்லத் தொடங்கும்போதே “அதர்வ வைதிகர்களான யாஜரும் உபயாஜரும். எண்ணியன எய்தும் பூதவேள்வியின் கலையறிந்தவர்கள். பத்ரரே, நான் ஆணையிட்டுவிட்டேன். வணிகக்கலம் ஒன்று ஒருங்குகிறது. நாம் இப்போதே வணிகர்களாக வேடமிட்டுச் செல்கிறோம்” என்றார்.

“அரசே, நீங்கள் வேண்டுவதென்ன?” என்றார் பத்ரர். “நான் பகீரதன். மண்ணில் ஒரு பெருநதியை இறக்கவிருக்கிறேன்” என்றார் துருபதன். “இதோ என் சிதாகாசத்தில் அந்த நதி நிறைந்து கொந்தளிக்கிறது. அதை இம்மண்ணிலிறக்கியாகவேண்டும்.” முகம் விரிந்து கண்கள் ஒளிர நகைத்து “அமுதநதி அல்ல அது, நச்சுப்பெருக்கு. இப்புவியை அழிக்கும் ஆலகால கங்கை… அதைத்தான் இவர்களைக்கொண்டு இங்கு கொண்டுவரப்போகிறேன்” என்றார்.

படகு கரையணைந்தது. மூட்டைகளுடன் துருபதனும் பத்ரரும் இறங்கிக்கொண்டனர். கல்மாஷபுரி எப்போதாவது சிறுவணிகர்கள் மட்டும் வந்துசெல்லும் சந்தை கொண்ட சிற்றூர். ஊரின் தென்கிழக்கு எல்லையாக ஓடிய கங்கைக் கரையில் சிறு கோயில்களும் அவற்றை ஒட்டி அன்ன சத்திரங்களும் நிறைந்திருந்தன. அவற்றில் ஒன்றில் தங்கி இளைப்பாறிவிட்டு கூலவணிகர்கள்போல நகர்வீதியிலும் சந்தையிலும் அலைந்தனர். அதர்வ வைதிகர்களான யாஜர், உபயாஜர் சகோதரர்களைப்பற்றி நேரடியாக விசாரித்தபோது வைதிகர் எவரும் அவர்களின் பெயர்களையே கேள்விப்பட்டிருக்கவில்லை என்று தெரிந்தது. வணிகர்களும் அவர்களை அறிந்திருக்கவில்லை.

பின்னர் மதுக்கடைகளில் விசாரித்தனர். மூன்றுநாட்களுக்குப்பின் கங்கையோரத்தில் சதுப்புக்குழி ஒன்றுக்குள் நின்ற பேராலமரத்தின் அடியில் இருந்த தொழுநோயாளிகளுக்கான மதுக்கடை ஒன்றில் அவர்கள் சந்தித்த வேளாப்பிராமணன் ஒருவன் யாஜரைப்பற்றி சொன்னான். மெலிந்து உள்நோக்கி வளைந்த உடலும் பெரிய மஞ்சள்நிறப் பற்களும் தெறித்துவிழுவதுபோன்ற தவளைக் கண்களும் உருகி அழிந்த மூக்கும் வளைந்து குறுகிய விரல்களும் கொண்டிருந்த பீதாகரன் “ஆம், நானறிவேன்” என்று சொல்லி நகைத்து “ஆனால் நான் அதை தங்களுக்கு ஏன் சொல்லவேண்டும்?” என்றான்.

பத்ரர் அவனுக்கு கள் வாங்கி அளித்தார். “மீன்… மீனில்லாமல் கள் உண்பது வைதிகருக்கு அழகல்ல” என்று அவன் கைதூக்கி சொன்னான். அப்பால் இருந்த தொழுநோயாளிகள் நகைத்தபடி மின்னும் கண்களால் அவனை நோக்கினர். ”தாங்கள் விழைவதை உண்ணலாம் வைதிகரே” என்றார் பத்ரர். “நன்று, வேள்வியை நான் மறந்தாலும் வேள்வி என்னை மறக்கவில்லை. எரிகுளத்தை வயிற்றில் ஏந்தியிருக்கிறேன்” என்றான் பீதாகரன்.

அவர்களின் முகங்கள் எல்லாம் ஒன்றே போல இருப்பதாக பத்ரர் எண்ணினார். பின்னர்தான் அது மூக்கு இல்லாமலிருப்பதனால் தோன்றுவது என்று புரிந்துகொண்டார். அவர்களனைவருமே பிச்சை எடுத்து வாழ்பவர்கள். தொழுநோயாளி குபேரனின் வடிவம் என்று வணிகர் நம்பினர். ஆகவே அவர்களைக் கண்டதுமே பார்வையை விலக்கிக்கொண்டு நாணயங்களை விட்டெறிந்து விலகிச்சென்றனர். அனைவரிடமும் மடிச்சீலைகளில் நாணயங்கள் குலுங்கின. கள்விற்றவனும் தொழுநோயாளியாக இருந்தான். அவன் மூங்கில் குழாய்களில் ஊற்றி அளித்த கள்ளை வாங்கிக்கொண்டு மணல்மேல் கூடி அமர்ந்து பேசிச்சிரித்தபடி அவர்கள் குடித்தனர்.

பத்ரர் பீதாகரனுக்கு சுட்டமீனும் கள்ளும் வாங்கிக்கொடுத்தார். அவன் மூங்கில்கோப்பையை விரலற்ற கைகளால் பொத்தி எடுத்து ஒரே மூச்சில் குடித்து காய்ந்த புல் போன்ற தாடிமயிரில் கள்வழிய நகைத்து “அருமையான கள். அதோடு இணைந்த மீன். ஆகவே நீங்கள் விரும்பும் தகவலைச் சொல்லி விரைவில் உங்களை நரகத்துக்கு அனுப்புவது என் கடமை” என்று சொல்லி கண்சிமிட்டினான். தொழுநோயாளிகள் உரக்க நகைக்க “ஆம், அவர்கள் கைகளும் குறுகட்டும். முகம் எழில் பெறட்டும்” என ஒரு முதிய தொழுநோயாளி சொன்னார். “உத்தமரே, மூக்கு என்பது மானுடருக்கு தேவையற்ற உறுப்பு. பாருங்கள், நாங்களெல்லாம் அதை தவம் செய்து இழந்திருக்கிறோம்.” மீண்டும் நகைப்புகள்.

மஞ்சள்நிறப் பற்கள். பீளைபடிந்த கண்கள். கருகிய மரக்கிளைகள் போன்ற கைகால்கள். “எங்களிடமிருந்து நீங்கள் அறிந்துகொள்ளும் அனைத்துச்செய்திகளும் உங்கள் உலகில் பொருள்மிக்கவையே” என்றார் கிழவர் ஒருவர். “ஏனென்றால் நாங்கள் உங்கள் உலகிலிருந்து உதிர்ந்திருக்கிறோம். உங்கள் நகரங்களின் வேர்களில் மட்கிக்கொண்டிருக்கிறோம்.” இன்னொருவர் “எங்களுக்கு காமமும் குரோதமும் மோகமும் இல்லை. அவற்றை எங்கள் உடல் தாங்குவதில்லை. நாங்கள் யோகிகள்” என்றார்.

பீதாகரன் மேலும் ஒரு கோப்பை கள்ளை குடித்தபின் “மாமனே, அவர்கள் தேடுவது யாஜ உபயாஜர்களின் ஊரை மட்டுமே” என்றான். “ஆம், அவர்கள் வழியாக மிக விரைவில் எங்களை வந்தடையலாம்” என்றார் கிழவர். “அனைத்துச் செல்வங்களையும் அடையும் அதர்வ வேதத்தை அறிந்தவர்கள் யாஜர்கள். முன்பு ஒருமுறை ஒருவன் அப்படி அதர்வம் வழியாக அனைத்தையும் அடைந்தான்.” விரல்கள் உதிர்ந்த இருகைகளையும் தூக்கிக் காட்டி “முடிவிலாக் கருவூலம் கொண்டவன். எங்கள் குலதெய்வம் அவனே” என்றார். பீதாகரன் உரக்க நகைத்து “இந்த எளிய வணிகர்களையும் வடதிசைக் காவலனாகிய குபேரன் வாழ்த்துவானாக” என்றான். அங்கிருந்த அனைவரும் உரக்க நகைத்தனர்.

அவர்கள் வேண்டுமென்றே நகைத்துக்கொண்டிருப்பதாக பத்ரர் எண்ணினார். அவர்கள் அங்கே வந்திருப்பது அவர்களுக்கு உள்ளே எங்கோ அமைதியின்மையை அளிக்கிறது. அதை வெல்ல நகைப்பு எனும் பாவனையை பூணுகிறார்கள். தங்கள் ஊனம் மீது தொட்டுத்தொட்டுச் செல்லும் பிறர் பார்வையை வெல்லும் வழி அந்த ஊனத்தையே ஏளனத்துடன் தூக்கிக் காட்டுவதுதான் என்று கற்றவர்கள்.

கிழவர் எழுந்து அவர்களின் அருகே வந்து நின்றார். கையில் மூங்கில் கோப்பையுடன் சற்று ஆடியபடி நின்று “திசைகளில் முதன்மையானது வடதிசை. மானுடன் முதலில் வகுத்த திசை அதுவே. அங்கேதான் விண்ணின் மாறாத மையப்புள்ளியாக துருவன் நிலைகொள்கிறான்” என்றார். “வடதிசையை ஆள்பவர் எங்கள் தெய்வம் குபேரனே. வணிகர்களே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். என்றும் மாறாத நிலைபேறுள்ளவர் இருவரே. துருவனும் அவன் திசையை ஆளும் குபேரனும்.” அங்கிருந்துகொண்டே ஒருவன் உரக்க “மாமனே, துருவனுக்கும் அங்கம் குறையும் அரியநோய் உண்டா?” என்றான். அவர்கள் மீண்டும் உரக்கநகைத்தனர்.

“இவர்களுக்கெல்லாம் களி ஏறிவிட்டது. இனி இரவெல்லாம் குடித்துக்குடித்துச் சிரிப்பார்கள். நான் அதிதூய வைதிகக் குலப்பிறப்புடையவன், இந்த இழிசினருடன் நான் இணையமுடியாது. அதற்கு இன்னமும் மும்மடங்கு நான் குடித்தாகவேண்டும்” என்றான் பீதாகரன். “ஆகவே நீங்கள் இன்னும்கூட தாராளமாக நாணயங்களை எடுத்து வைக்கலாம்.” பற்களைக் காட்டி நகைத்து “வைதிகனுக்கு கள்ளையும் தானமாக அளிக்கலாம் என்று ஒரு ஸ்மிருதி சொல்கிறது. அது எந்த ஸ்மிருதி என்று நான் சொல்லமுடியும். ஆனால் அதற்கும் நான் மூக்குவழிய கள் அருந்தியாகவேண்டும்” என்றான்.

கள்ளில் முழுமையாக மூழ்கி தலைதொங்கி முன்னும்பின்னும் ஆடியபடி பீதாகரன் யாஜரும் உபயாஜரும் இருக்கும் ஊரைப்பற்றி சொன்னான். “அதன்பெயர் மிருண்மயம்… அதாவது அவர்கள் இருக்குமிடத்துக்கு மிக அருகே உள்ள ஊரின் பெயர் மிருண்மயம், அவர்கள் காட்டுவாசிகள்” என்றான். “வணிகர்களே, நான் மேலும் கள்ளருந்த முடியும். நான் ஆடும் விசையிலேயே கள்ளை செரித்துவிடுவேன்… ஆகவே…” பத்ரர் எழுந்து கொண்டதும் அவன் பதறி கையை விரித்து “நான் மேலும் உங்களுக்கு உதவமுடியும் உத்தமர்களே. நீங்கள் அங்கே சென்றதும் பார்த்தேயாகவேண்டிய பத்து பரத்தையரை உடல்விவரணையுடன் நான் சொல்வேன்…“ அவர்களின் பின்னால் அவன் குரல் ஒலித்தது “அவர்கள் என்பெயரைச் சொன்னால் மட்டுமே வாயிலைத் திறப்பார்கள்…”

மிருண்மய கிராமத்தில் மகாவைதிகர்கள் வாழும் வேதியமங்கலத் தெருவில் அவர்கள் நுழைந்து, முதல் வேதியரிடம் யாஜர்களைப்பற்றி விசாரித்தபோதே அவர் முகம் பீதியில் நெளிவதைக் கண்டார்கள். தெருவோரத்து வீட்டு வரிசைகளில் திண்ணைகள் மீது அமர்ந்திருந்த மற்ற வைதிகர்கள் எழுந்து உள்ளே செல்ல, விசாரிக்கப்பட்ட வைதிகர், “வழி சொன்னால் அந்தப்பாவமும் என் சிரசில் ஏறும் வணிகர்களே. ஆபிசாரம் செய்யும் அதர்வ வைதிகனைப்பற்றி நினைப்பதும்கூட நெறி தவறுவதே என்பார்கள்…” என்றார்.

கோயிலைச் சுற்றிவந்த பிறகும் எவரும் அவர்களுக்கு உதவவில்லை. பத்ரர் “எப்படியும் அவர்கள் இந்த ஊரில்தான் இருக்கிறார்கள். வேதியர் இடங்களுக்கு அப்பால் அவர்கள் வாழவும் வாய்ப்பில்லை. சுற்றி வந்து பார்ப்போம்” என்றார். துருபதன் “இம்மண்ணில் ஒளித்துவைக்கமுடியாதது நெருப்பு ஒன்றே. அவர்களை நாம் ஒருபோதும் தவறவிடமுடியாது. கண்களை நோக்குவோம். கனல் உள்ள கண் என்றால் அது அவர்களை அறிந்திருக்கும்” என்றார். பத்ரர் தலையசைத்தார்.

கங்கையை நோக்கி செல்லும் சிறு சந்து ஒன்றில் மக்கள் நடந்து செல்வதனால் உருவாகும் தடம் இருந்தது. மழைக்காலத்தில் தெருவின் நீர் கங்கையை அடையும் அந்த ஓடை மற்ற நாட்களில் பாதையாக இருக்கிறது என்று பத்ரர் எண்ணினார். அவர்கள் அதில் இறங்கி நடந்து சென்றபோது வலப்பக்கம் கரிய கற்களால் கட்டபட்ட வீடு ஒன்றை கண்டார்கள். மற்ற வேதியர் வீடுகளெல்லாம் புல்வேய்ந்ததாக இருக்க அதன் கூரையும் கல்லால் ஆனதாக இருந்தது. முற்றமெங்கும் புல் அடர்ந்து சருகுகள் குவிந்து அது வாழ்விடம்போலவே தெரியவில்லை. ஆனால் முற்றத்தின் ஓரமாக வேதியர் அணியும் மரக்குறடுகள் கிடந்தன.

பத்ரர் “இதுதான் அவர்களின் இடம் என்று எனக்கு தோன்றுகிறது” என்றார். “இதுவா?” என்று துருபதன் தயங்க “அவர்கள் இவ்வூரில் வாழ்கிறார்கள் என்றால் அது இந்த இடமாகவே இருக்க முடியும்” என்றார் பத்ரர். தயங்கியபடி துருபதனும் பத்ரரும் அந்த வீட்டை நெருங்கியபோது “யார்?” என்று பிளிறல் போன்ற குரல் கேட்டது. அவர்கள் நின்றுவிட்டனர். ஏழடிக்குமேல் உயரம்கொண்ட பேருடல் மனிதன் ஒருவன் அவர்களை நோக்கிவந்தான். அவன் முகம் பலவகைகளில் சிதைந்து கோரமாக இருந்தது. நாசியே இல்லை. மயிர்மண்டிய இரு துளைகள். தொங்கும் கனத்த உதடுத்துண்டுகள்.

“வணங்குகிறோம் காவலரே. காஸ்யபகுலத்தின் மகாவைதிகரான யாஜ மகாபாதரை தரிசிக்க வந்தவர்கள் நாங்கள்” என்றார் பத்ரர். அவன் ஐயத்துடன் சிலகணங்கள் நோக்கியபின் “எது குறித்து” என்றான். “ஒரு பூதவேள்வி குறித்து அவரிடம் பேசவேண்டும்…” அவன் முகம் சதையாலான பிண்டம்போல உணர்வற்று இருப்பதைக் கண்டு பத்ரர் தன் மடியிலிருந்து ஒரு வைரமணியை எடுத்துக் காட்டினார். “நாங்கள் பாஞ்சால நாட்டு பெருவணிகர்கள்.”

அவன் கண்களின் ஐயம் விலகியது. “உள்ளே வாருங்கள்…” என்று அழைத்துச் சென்றான். அந்த வீட்டிற்கு கல்லாலேயே கதவுகள் இருந்தன. அவன் அந்த கனத்த கற்கதவை எளிதாகத் தூக்கி விலக்கி தலைகுனிந்து உள்ளே சென்று “வருக” என்றான். உள்ளே சென்றதும் துருபதன் மலைத்துப்போய் பத்ரரை பார்த்தார். அது ஒரு அரண்மனையின் உள்ளறைபோல இருந்தது. அங்கிருந்த பொருட்களில் பெரும்பாலானவை பொன்னால் ஆனவை என்பதையும் அவற்றில் மின்னிய கற்கள் தூய மணிகள் என்பதையும் பத்ரர் கண்டார். கருவூல அறைக்குள் செல்லும்போது எழும் உள்ளக்கிளர்ச்சியும் அச்சமும் கலந்த நிலைகொள்ளாமையை அடைந்தார்.

அவர்கள் அந்த அறையில் நின்றிருக்க அந்த அரக்கமனிதன் உள்ளே சென்று மறைந்தான். உள்ளே எங்கோ அவன் ஏதோ மொழியில் அவர்களின் வருகையை சொல்வது கேட்டது. பத்ரர் அங்கிருந்த பொருட்களை திரும்பத்திரும்ப நோக்கினார். மாமன்னர்களின் கருவூலங்களில் மட்டுமே இருந்திருக்கக்கூடியவை. ஒரு பொற்பீடத்தின் அடியில் பக்கவாட்டில் சரிந்து கிடந்த மணிமுடி ஒன்றைக் கண்டு அவர் திகைத்த கணம் மின்னலில் நகரை பார்ப்பவர் போல அவர் அனைத்தையும் கண்டுவிட்டிருந்தார்.

“அரசே, வேண்டாம். நாம் திரும்பிவிடுவோம்” என்று அவர் துருபதனின் கைகளை பற்றினார். “ஒருபோதும் இச்செயல் நலம் பயக்கப்போவதில்லை. பேரழிவை அன்றி எதையும் இது அளிக்காது. அதை இப்போது மிகத்தெளிவாகவே காண்கிறேன். வேண்டாம், திரும்பிவிடுவோம்” என்றார்.

துருபதன் கையை உதறி “ஆம், அதை நானும் அறிவேன். என் நெஞ்சில் எரியும் அனலால் இப்புவியே எரிந்தழியட்டும். அதைப்பற்றி நான் எண்ணப்போவதில்லை” என்றார். “அரசே, நம்மை அந்த தொழுநோயாளிகளிடம் இட்டுச்சென்ற ஊழின் வழியை நான் உணர்கிறேன். அவர்களின் ஒவ்வொரு சொல்லும் வேதமென பொருள் கொள்கிறது இப்போது” என்றார் பத்ரர்.

“அவர்களுடன் இருக்கையிலேயே அப்பொருளை முழுமையாகவே நான் உணர்ந்துவிட்டேன்” என்று துருபதன் சொன்னார். “வடதிசையில் வாழும் துருவனின் நிலைமாறாமை பற்றி தௌம்ரர் சொன்னதைத்தான் அவர்களும் சொன்னார்கள். பத்ரரே, நான் செய்வதும் தவமே” என்றார். பத்ரர் தவிப்புடன் “அரசே” என்றபின் மேலே சொல்லெழாமல் தவித்தார்.

துருபதன் பெருமூச்சுடன் “பத்ரரே, துர்வாசர் எனக்களித்ததே நான் மீள்வதற்குரிய சிறந்த வழி. அது எனக்கு உதவவில்லை என்றால் நான் இங்கு வந்துதான் ஆகவேண்டும். ஊழின் நெறி அதுவே. அவ்வண்ணமே ஆகுக” என்றார்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்