பன்னிரு படைக்களம் - 28

[ 9 ]

ராஜகிருஹத்தில் ஜராசந்தன் தன் புலவர்அவையில் நூலாய்ந்துகொண்டிருக்கையில் ராஜசூய வேள்விக்காக இந்திரப்பிரஸ்தத்தில் கொடிஏறிய செய்தி வந்தடைந்தது. ஓசையற்ற காலடிகளுடன் அவனை அணுகிய அமைச்சர் காமிகர் மெல்ல குனிந்து செவியில் அச்செய்தியைச் சொல்ல முகத்திலும் விழிகளிலும் இருந்த புன்னகை சற்றும் நலுங்காமல் அதைக் கேட்டு தலையசைத்து அவர் செல்லலாம் என்று கைவிரித்தபின் எதிரே அமர்ந்திருந்த உசிநார நாட்டுப் புலவரிடம் “சோமரே, நந்தி என்று வெள்ளெருது ஏன் சொல்லப்படுகிறது?” என்றான்.

சோமர் “அது தன் அழகால் உள்ளத்தை மகிழ்விப்பதனால்” என்றார். “இருவிழியால் இயல்வதையும் மூன்றாம்விழியால் இன்மையையும் காணத்தெரிந்தவனுக்கு நந்தி மட்டுமே அளிக்கும் அழகு என்ன?” என்று ஜராசந்தன் கேட்டான். பிரக்ஜோதிஷ நாட்டு திரிகாலர் “நந்திதேவர் தாளத்தால் இறைவனை மகிழ்விப்பவர்” என்றார். “நன்று, இப்புடவியை இயக்கும் தாளத்தின் தலைமகன் நந்தி. இப்புவியில் இன்பமென்பதும் தாளமென்பதும் ஒன்றே” என்று ஜராசந்தன் சொன்னான்.

“அது எங்ஙனம்?” என்று தென்னகத்துப் புலவராகிய சடாதரர் கேட்டார். “இன்பமென்பது இது அது என்றிலாத பெருவெளியிலிருந்து நாம் மொண்டு எடுப்பது என்கின்றன நூல்கள். பெருவெளி என்பது பருவெனச் சமைந்த இசையே. அதன் நெறியென நின்றிருப்பது தாளம். தாளமே அதை துண்டுகளாக்குகிறது. முன்பின் என்றும் இன்றுநாளை என்றும் இருத்தலின்மை என்றும் பிரித்தாடுகிறது. இன்பமென்பது ஒரு தாளம் மட்டுமே” என்று ஜராசந்தன் சொன்னான். “நாம் அறிபவை அனைத்தும் அதிர்வுகளென அறியாத எவருளர்?”

சடாதரர் “அவ்வண்ணமெனில் துயரமும் ஒரு தாளமே” என்றார். “உண்மை, ஆனால் துயரமும் ஒருவகை இன்பமே” என்று ஜராசந்தன் சொன்னான். “அது தலைகீழாக திருப்பப்பட்டிருக்கிறது. அடைவதற்குமுன் சுவைப்பனவற்றை எளிய உள்ளங்கள் இன்பம் என்கின்றன. அடைந்தபின் சுவைகொள்வனவற்றை அவை துன்பம் என்று நினைவுகூர்கின்றன.” திரிகாலர் “ஆம், உண்மை” என்றார். “கடந்தகாலத்தின் இன்பங்களை பேசிக் கொண்டிருப்பவர்களை அரிதாகவே கண்டிருக்கிறேன். துன்பங்கள் காலப்பெருக்கில் எவ்வண்ணம் இன்பங்களாகின்றன என்ற விந்தையை தன்னுள் எண்ணி வியக்காத எவரும் இப்புவியில் இருக்க வாய்ப்பில்லை.”

“புடவி சமைத்துக்கலைத்து ஆடும் கூத்தன் இன்பத்தின் கைத்தாளத்தில் முழுதமைந்திருப்பது முற்றிலும் பொருத்தமே” என்றபடி சுவடியை மூடி பட்டுநூலில் சுற்றி பீடத்தில் வைத்துவிட்டு ஜராசந்தன் சாய்ந்துகொண்டான். கைலாசதர்சனம் என்னும் அக்குறுங்காவியத்தின் ஆசிரியராகிய நேத்ரர் ஜராசந்தன் மேலும் சொல்லும் பொருட்டு கைகட்டி அப்பால் நின்றிருந்தார். “இனிய சொல்லாட்சிகள். நவில்தொறும் விரியும் நூல்நயம். நன்று நேத்ரரே” என்றார் திரிகாலர். முகம் மலர்ந்த நேத்ரரைப் பார்த்து “கவிஞரே, வடபுலம் தொட்டு தென்கடல் வரை சிறகு விரிக்கும் புள்ளென வியாசர் தன் பெருங்காவியத்துடன் சொல்பெருக்கி நம்மைச் சூழ்கையில் இச்சிறு நூலின் இடமென்ன?” என்றான் ஜராசந்தன்.

நேத்ரரின் முகம் வாடியது. “ஆம், நானும் அதை அறிவேன்” என்றார். “ஆனால் ஒவ்வொரு இலைத்துளியிலும் சொட்டும் நீர் தானே கடலெனும் எண்ணம் கொண்டிருக்கிறது. அவ்வாறன்றி அது இங்கு திரண்டு உருப்பெற்று ஒளி கொள்ள முடியாது” என்றார். “நன்று” என்று தொடையில் தட்டியபடி ஜராசந்தன் நகைத்தான். “நீர் சொல்கூட்டுவதன் நோக்கமென்ன என்று உரைத்துவிட்டீர். அதன் பயனென்ன என்று நான் எண்ணவேண்டும்” என்றான். “அரசே, வண்ணமலர்கள் பூத்துக்குவிந்த மலர்வெளியிலும் நிறமற்ற மணமற்ற மிகச்சிறிய மலர்கள் விரிகின்றன. துளித்தேனுடன் வான் நோக்கி காத்திருக்கின்றன” என்று நேத்ரர் சொன்னார்.

“ஆம், அவற்றைத்தேடி மயிரிழைபோன்ற தேன்குழல் கொண்டு சிறுபூச்சிகள் சிறகு ரீங்கரித்து வரும்” என்றபடி ஜராசந்தன் எழுந்தான். “நான் தேனருந்தும் யானை. பராசரரேகூட என் துதிக்கையின் ஒரு மூச்சை நிரப்பாதவர்தான். எனக்கு தென்கடல் என அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது.” அவன் திரும்பியபோது அருகே நின்றிருந்த அவன் செயலமைச்சன் சிறிய பொற்தாலமொன்றை நீட்டினான். அதில் நாணயங்களும் மலரும் மஞ்சளும் இருந்தன. அதைப்பெற்று நேத்ரருக்கு அளித்து “நன்று சூழ்க! புல்லில் ஒவ்வொரு விதையிலும் ஒரு காடு எழக்கூடும் என்று பராசரரின் காவிய மாலிகையில் ஒரு வரி உள்ளது. சொல் நிறைக! சித்தம் எஞ்சும் கணம் வரை சொல் துணைக்கலாகுக!” என்று வாழ்த்தினான்.

அவர் தலைவணங்கியதும் திரும்பி அவை அமர்ந்த புலவர்களை ஒவ்வொருவரையாக மலர்ந்த முகமும் இன்சொல்லும்கொண்டு வணங்கி விடைபெற்று அவைக்கூடம் விட்டு வெளியே வந்தான். அறைக்கு வெளியே காத்திருந்த அமைச்சர் காமிகர் ஓடிவந்தார். “என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? அறிவிலி. இறுதியாக வந்த செய்தியை சொல்!” என்று பற்களைக் கடித்தபடி ஜராசந்தன் கூவினான். “செய்தியைச் சொல்லிவிட்டு இங்கேயே நின்றிருக்கிறாயா? இழிமகனே, இன்றே உன்னை கழுவில் அமரச்செய்கிறேன். எங்கே நம் படைத்தலைவர்கள்? அத்தனைபேரும் இக்கணமே இங்கே வந்தாகவேண்டும்…” என்று கைவிரல்களைச் சுருட்டி காற்றில் வீசி கூச்சலிட்டான்.

காமிகர் அவன் கைகளுக்கு அப்பால் சென்று நின்றபடி “ஆணை அரசே. உடனே தங்கள் ஆணை நிறைவேற்றப்படும்…” என்றார். “புழுக்கள். கால்களால் தேய்த்தே அழிக்கப்படவேண்டிய சிற்றுயிர்கள்…” என்று அவன் தொண்டை நரம்புகள் புடைக்க கூவினான். “ராஜசூயமா? நான் அவர்களுக்கு காட்டுகிறேன் வேள்வி என்றால் என்னவென்று. அவர்களுக்கு பசுங்குருதியின் வேள்வியைக் காட்டுகிறேன்…” இருகைகளையும் ஒன்றுடனொன்று ஓங்கி அறைந்தான். செல்லும் வழியில் நின்றிருந்த மரத்தூணை ஓங்கி உதைத்தான். மேல்கட்டமைப்பே அதிர்ந்து தூசு உதிர்ந்தது. “இதற்காகவே காத்திருந்தேன்… என் கைகளால் அந்த ஐந்து குடியிலிகளின் தலைகளையும் கொய்கிறேன்.”

அவன் அனல்பட்ட யானை என உடல் கொந்தளிக்க அங்குமிங்கும் அலைமோதினான். கதவுகளை ஓங்கி அறைந்தான். தூண்களில் தோள்களால் முட்டினான். அவன் சினமறிந்த அரண்மனை ஏவலர்  பதுங்கிக்கொண்டனர். செல்லும் வழியில் வேலுடன் நின்றிருந்த காவலனை “என்ன செய்கிறாய் இழிமகனே? துயில்கிறாயா?” என்று கூவியபடி சென்று ஓங்கி அறைந்தான். சுருண்டு கீழே விழுந்து உடலதிர்ந்த அவனை எட்டி உதைத்தான். பற்களைக் கடித்தபடி வெறிமிக்க முகத்துடன் திரும்பி காமிகரை நோக்கி “இன்னுமா இங்கு நின்றிருக்கிறாய்? இழிமகனே, இதோ என் ஆணை. நமது படைகள் எழட்டும். இந்திரப்பிரஸ்தம் நோக்கி எட்டுத்திசைகளிலிருந்தும் சூழட்டும். ஒவ்வொரு இந்திரப்பிரஸ்தக் குடிமகனும் மறுசொல்லின்றி தலைகொய்யப்பட வேண்டியவனே… அந்நகர் இருக்குமிடத்தில் சாம்பலும் செங்கல்லும் எஞ்சியபிறகு மீள்வோம்” என்றான்.

காமிகர் “ஆணை அரசே! இதோ ஆணை படைகளுக்கு பிறப்பிக்கப்படும்” என்றபடி தொலைவிலேயே குறுகிய உடலுடன் நடந்தார். அவன் உறுமியபடி தன் அறைக்குள் சென்று பீடத்தில் அமர்ந்தான். மெல்லிய வியர்வை பூத்திருந்த உடலுடன் அசையாமல் தலைகுனிந்து அவன் அமர்ந்திருக்க முதிய ஏவலன் கயிறுசுற்றிய கலத்தில் புளித்துக்கொதித்த இமயமலையடிவாரத்துத் தொல்மதுவுடன் வந்து நின்றான். மதுவின் வாடை விழித்தெழச்செய்ய அவன் அதை வாங்கி இருகைகளாலும் தூக்கி அருந்தினான். அவன் குடிக்கும் ஒலி மட்டும் அறைக்குள் கேட்டது. பெருமூச்சுடன் கலத்தை கீழே வைத்துவிட்டு மேலாடையால் வாயை துடைத்தான். நீள்மூச்சுகள் எழுந்தமைய தலைகவிழ்ந்து அசையாமல் அமர்ந்திருந்தான்.

காமிகர் அருகே வந்து “ஆணைகளை முழுமையாக உரைக்க அருள் புரியவேண்டும் அரசே” என்றார். அவன் நிமிர்ந்து தன் சிறிய சிவந்த விழிகளால் அவரை நோக்கினான். அவர் “இந்திரப்பிரஸ்தத்தில் நால்வகைப்படைகளும் இன்றுமுதல் குழுமத்தொடங்கிவிட்டன” என்றார். “ஆம், ராஜசூயத்தின் கொடி படைகளால் ஒவ்வொரு கணமும் காக்கப்படவேண்டுமென்று நெறியுள்ளது” என்றான்.

“அனைத்து தொல்குடிப்படைகளையும் திரட்டியிருக்கிறார்கள். மதுராவிலிருந்து யாதவப்படைகள் வந்துகொண்டிருக்கின்றன. யவன படைக்கலங்களும் பீதர்நாட்டு எரிபொருட்களும் அவர்களிடம் உள்ளன” என்றார். அவன் வியர்வை பொடிந்து துளிபரவிய நெற்றியுடன் அவரை எவர் என்பதுபோல நோக்கினான். “நாளையே ராஜசூயத்தின் செய்தியுடன் இந்திரப்பிரஸ்தத்தின் தூதன் இங்கு வரக்கூடும்” என்றார் காமிகர்.

அவன் உளம்கலைந்து அசைவுகொண்டு “நான் நமது சிற்றரசர்கள் அனைவரையும் உடனே பார்க்க விழைகிறேன்” என்றான். காமிகர் “ஒரு போரை இந்திரப்பிரஸ்தத்தினர் உன்னுகிறார்கள் என்பதில் ஐயமில்லை” என்றார். ஜராசந்தன் கைகளைக் கோத்து உதடுகளை கைகளால் நீவியபடி “ஆம்” என்றான். காமிகர் “ஆநிரை கவர்தல் ராஜசூயத்தின் முதன்மை நிகழ்வுகளில் ஒன்று. பீமனின் படைகள் நம் எல்லைக்குள் புகுந்து ஆநிரை கவருமென்றால் அதை போருக்கான அறைகூவலாகவே நாம் எண்ணவேண்டும். நாம் ஆநிரைகளை மீட்டுவராவிட்டால் ராஜசூயத்திற்குப் பணிந்து தாள்வில் அனுப்பப்போகிறோம் என்றே பொருள் கொள்ளப்படும்” என்றார்.

ஜராசந்தன் அதற்கும் “ஆம்” என்றான். அமைச்சர் “நமது எல்லைகள் அனைத்திற்கும் ஓலை அனுப்பி அரசாணையை அறிவிக்கிறேன். எங்கும் இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் ஊடுருவ விடலாகாது. நம்மை அறியாது சில கன்றுகளை கொண்டு சென்றால்கூட அது தோல்வியென்றே பொருள்படும்” என்றார். ஜராசந்தன் நிமிர்ந்து புன்னகைத்து “அவ்வாறு நிகழாது. பீமன் நானறிய என் ஆணைக்குட்பட்ட நிலத்திலிருந்து மட்டுமே ஆநிரை கவர்ந்து செல்வான். அது எனக்கான அறைகூவலென ஒலிக்கவேண்டுமென்பதில் ஒவ்வொரு தளத்திலும் எண்ணம் கொள்வான்” என்றான். “எல்லைக்காவலுக்கு ஆணையிடுங்கள். பிறகென்ன என்பதை நான் உரைக்கிறேன்.”

தலைவணங்கி திரும்பிய அமைச்சரை ஜராசந்தன் பின்னாலிருந்து அழைத்தான். “அமைச்சரே, உடனடியாக நமது தூதன் சேதி நாட்டுக்கு செல்லவேண்டும். பிறிதொருவன் சிந்து நாட்டுக்கு செல்லட்டும். மேலும் ஒருவன் உத்தர பாஞ்சாலத்துக்குச் சென்று அஸ்வத்தாமனை சந்திக்கவேண்டும். மூவரும் செய்திகேட்ட கணமே அஸ்தினபுரிக்குச் சென்று துரியோதனனை சந்திக்கும்படி கோருகிறேன்” என்றான்.

“அஸ்தினபுரியின் அரசனுக்கு அவர்கள் உணர்த்தவேண்டிய ஒன்றுண்டு. ராஜசூய வேள்வி என்பது இறப்புக்கான நாளை எண்ணிக்கொண்டிருக்கும் முதுபேரரசர்களை விண்ணில் நிறுத்தும்பொருட்டு வைதிகர் செய்யும் சடங்கு. பிறர் அவரை சத்ராஜித் என ஒப்புவது ஓர் மங்கலவழக்கு மட்டுமே. உருவாகி கொடி நிலைக்காத ஓர் அரசு அதை நிகழ்த்தவிருக்கிறதென்றால் பாரதவர்ஷத்தின் தலைநாடு என்று தன்னை அது அறிவிக்க எண்ணுகிறது என்றே பொருள்.”

“அது நிகழ்ந்தபின் உயிர்வாழும் காலம் வரை தருமனே குருகுலத்தின் முதல்வனும் பாரதவர்ஷத்தின் தலைவனுமாக இருப்பான். அவனை களத்தில் கொல்லாமல் துரியோதனன் தனிமுடி சூடி ஆளமுடியாது. எவ்வண்ணமாயினும் அஸ்தினபுரி இந்திரப்பிரஸ்தத்திற்கு ஆட்பட்டது என்றே நூலோர்களால் கொள்ளப்படும்” என்று ஜராசந்தன் தொடர்ந்தான். “ராஜசூயம் நிகழ்ந்தால் இழிவுகொள்வது பிற அரசர் எவரையும்விட துரியோதனனே. அது நிகழவேண்டுமா என்பதையும் அவனே முடிவெடுக்கவேண்டும்.”

காமிகர் “ஆம், அதையே நான் எண்ணினேன்” என்றார். “துரியோதனரின் ஒப்புதல் இன்றி ராஜசூயம் நிகழவிருக்காது. ஒப்புதல் அளிப்பார் என்றும் தோன்றவில்லை.” ஜராசந்தன் கையை வீசி “அரிது நிகழ்த்தும் சொல்வலன் ஒருவன் அவர்களிடம் இருக்கிறான். இத்தருணத்தில் அவனும் அஸ்தினபுரிக்கு கிளம்பிவிட்டிருப்பான். அவன் அங்கு செல்வதற்குள் நம் அரசர்கள் அங்கிருந்தாகவேண்டும். சகுனியையும் கணிகரையும் அவர்கள் சந்திக்கவேண்டும்” என்றான். “பாண்டவர்களுக்கு உகந்ததைச் சொல்லும் அமைச்சர் ஒருவர் அங்கிருக்கிறார். அவரது சொற்கள் தடுக்கப்பட்டாக வேண்டும்.”

“காந்தாரர் சகுனி உளம் தளர்ந்திருக்கிறாரோ என்று ஐயுறுகிறேன்” என்றார் காமிகர். “அவருக்கு மகதத்துடன் பகைமை உண்டு. அதை எண்ணுகிறாரா?” ஜராசந்தன் “ஆம், பகைமை உண்டு. ஆகவேதான் நம் படைக்கூட்டுக்கு அஸ்தினபுரி ஒப்பவில்லை. ஆனால் அத்தனை கூரிய பகையல்ல அது. எனக்கும் சகுனிக்கும் இடையே ஒன்றுமில்லை. பகை எந்தை பிருஹத்ரதருக்கும் அவருக்கும்தான்” என்றான் ஜராசந்தன். புன்னகையுடன் “ஒருவகையில் பிருஹத்ரதர் எனக்கும் பகைவரே.”

அமைச்சர் விழிகளில் கேள்வியுடன் நிற்க “இவையனைத்தும் சொல்சூழ்கையில் மானுட உள்ளம் செயல்படும் முறைமை. இவையனைத்துக்கும் அப்பால் உள்ளது சகுனி ஏன் அம்முடிவை எடுத்தார் என்னும் நுண்மை. ஆனால் நானும் அவ்வண்ணமே இயங்குபவன். என் வாழ்வெங்கும் பெரிய முடிவுகளை நானே அறியாத உள்விசையால்தான் எடுத்துள்ளேன்” என்றான் ஜராசந்தன்.

அமைச்சர் “அது உரியமுறையில் சொல்சூழ்ந்து எடுக்கப்பட்டதல்ல என்றால் நாம் முயன்று அதை மாற்றிவிடமுடியும்” என்றார். உறுதியான குரலில் “முடியாது” என்று சொல்லி ஜராசந்தன் புன்னகைத்தான். “அத்தனை சொல்சூழ்கைகளும் நிகழும் களத்துக்கு அப்பால் கருவறை இருளில் தெய்வம் அமர்ந்திருப்பதுபோல் அம்முடிவு அமர்ந்திருக்கும், அதை மாற்ற முடியாது.”

“இனி ஒருபோதும் மகதத்துடன் அஸ்தினபுரியின் படை இணைய சகுனி ஒப்பமாட்டார். ஆனால் இந்திரப்பிரஸ்தத்திற்கு ராஜசூயத்துக்கான ஒப்புதல் அளிக்காமல் இருக்க துரியோதனனை நம்மால் செலுத்த முடியும்.” உதடுகள் அசைய எழுந்த வினா ஒன்றை ஓசையின்றி அடக்கிக் கொண்டார் அமைச்சர். அவர் விழிகளை நோக்கியே அதை அறிந்து ஜராசந்தன் “நீங்கள் எண்ணுவது சரி, இத்தருணத்தில் இந்திரப்பிரஸ்தத்துடன் ஒரு போரை நான் விழையவில்லை” என்றான். “அது அச்சத்தினால் அல்ல. எதிரியின் வல்லமையை நான் இன்னும் முழுதாக அறிந்துகொள்ளவில்லை என்பதனால்.”

காமிகர் “அங்கு யாதவர்கள் அன்றி பிறிதெவரும் துணையில்லை” என்றார். ஜராசந்தன் “ஆம், நான் எண்ணுவது படைகளை அல்ல. ஒருவனை மட்டுமே” என்றான். “அவன் எண்ணம் ஓடும் வழிகளை மட்டுமே பாரதவர்ஷத்தில் இன்றுவரை என்னால் தொடரமுடியாமல் இருக்கிறது. என்றேனும் ஒருமுறை நான் எண்ணி கைவைக்கும் புள்ளியில் எண்ணியவாறு அவன் வந்து நின்றான் என்றால் அவனை ஒருமுறை வென்றேன் என்ற தருக்கை அடைவேன். அதன்பின் எக்களத்திலும் அவனை எதிர்கொள்ள என்னால் இயலும்.” நீள்மூச்சுடன் “பார்ப்போம்” என்றபின் அவன் கைகளை விரித்தான்.

“ஆணைகளை நிறைவேற்றுகிறேன் அரசே” என்றபின் காமிகர் மீண்டும் தலைவணங்கினார். சென்று தன் பீடத்தில் அமர்ந்தபின் ஜராசந்தன் “குருதி விழுமென்பதில் ஐயமில்லை. முதற்பலி எவரென்றுதான் என் உள்ளம் ஒவ்வொரு தலையாக தொட்டுச் செல்கிறது. எவர்?” அவன் தன் முன் நாற்களம் பரப்பிய குறுபீடத்தை இழுத்துப்போட்டு ஒவ்வொரு கருவாக எடுத்து அதில் பரப்பினான்.

“வேட்டைவிலங்குபோல நான் முகர்ந்து செல்லவேண்டியது அவன் காலடி மணத்தை மட்டுமே. அவனையன்றி பிறிதெவரையும் நான் அறியவேண்டியதே இல்லை. அவளைக்கூட…” நிமிர்ந்து காமிகரை நோக்கி “அமைச்சரே, அவனை முற்றறிதல் எவருக்காயினும் இயல்வதா? அவன் மாற்றுடல் எனத் தொடரும் இளைய பாண்டவனுக்காயினும்?” என்றான்.

அமைச்சர் “எதிரிகளே நன்கறிகிறார்கள்” என்றார். ஜராசந்தன் “ஆம், ஆனால் நான் எதிரியும் அல்ல. அணுகும்தோறும் அவன் முற்றெதிரியின் உள்ளத்துடன் விளையாடி எதிரியல்லாதாக்குகிறான்” என்று தொடைகளில் அறைந்தபடி சாய்ந்தமர்ந்தான். “மீன்! துயிலாதது, இமைக்காதது, துழாவுவதே இருப்பென்றானது. ஒவ்வொரு அசைவாலும் நீரைக்கலக்கி தன்னை மறைத்துக்கொள்வது. நூறு ஆயிரம் லட்சமென மாற்றுருக்களை உருவாக்கி தன்னைச்சுற்றி பரப்பி அதில் ஒளிந்தாடுவது.”

“காமிகரே, அவன் வெற்றி என்ன என்றறிவீரா? அவன் தான் எடுக்கும் அத்தனை உருக்களையும் தானென்றே ஆக்கி அதில் முழுதமைகிறான். அவை மாற்றுரு என அவனே அறியாதபோது எதிர்நிற்பவன் அறிவதெப்படி?” என்று ஜராசந்தன் தலையை அசைத்தான். “என்ன செய்கிறான் இங்கு? ஒவ்வொன்றையும் உள்நுழைந்தறிந்தபின் அவன் இங்கு அடைவதற்கேது? வெல்வதற்குத்தான் ஏது?”

எவர் முன்போ சொல்லிழந்து திகைத்தவன் போல அமர்ந்திருந்த ஜராசந்தன் கலைந்து திரும்பி “இத்தருணத்தில் அவன் செல்லவிருப்பது எவரிடமென்று நான் அறிகிறேன். அஸ்தினபுரியின் பேரரசி காந்தாரியிடம். அங்கே மகளிர்மாளிகையே அவனுக்கு அணுக்கமானது என்கிறார்கள். துரியோதனனின் துணைவி பானுமதி அவன் சொல்லையே ஏற்பவள். அதன்பின் திருதராஷ்டிரரிடம் செல்வான். வெல்லமுடியாதவன். அவர்களோ அவன் மேல் ஆழம் கனிந்த எளியோர்” என்றவன் தலையசைத்தான். “ஆம், அங்குதான் செல்வான். அதற்குப்பின் அவன் கொள்ளப்போகும் முதற்களப்பலி எவரென்று இக்களம் சொல்கிறது.”

சுட்டுவிரலால் தொட்டுத்தொட்டு சென்று ஒரு காயில் நின்றான். “எளிய விலங்கு. ஆனால் முதற்பலி அவன்தான்” என்றான். “யார்?” என்றார் அமைச்சர். “நடிகன்… ஆடிப்பாவை” என்று ஜராசந்தன் நகைத்தான். புரிந்துகொண்ட காமிகர் “பௌண்டரிக வாசுதேவனை அவர் ஒரு பொருட்டென்றே எண்ணமாட்டார் என நான் எண்ணியிருந்தேன்” என்றார். “அப்பேருருவுக்கு முன் அவர் ஒரு நுண்ணுயிர்.”

ஜராசந்தன் நகைத்து “பெருங்களிறுகள் சிலசமயம் சிற்றுயிர்களை துரத்தித்துரத்தி மிதித்தழிப்பதை கண்டிருக்கிறேன்” என்றான். “காமிகரே, நாம் ஆணவத்தால் கொல்கிறோம். அச்சத்தால் கொல்கிறோம். அதற்கு நிகராகவே அருவருப்பினாலும் கொல்கிறோம்.” காமிகர் புரியாமல் தலையசைத்தார்.

[ 10 ]

ஏகசக்ரபுரியில் பெருவைதிகர் கலிகரின் மைந்தரான சுஃப்ரரின் இல்லத்தில் தங்கி வேதம் பயின்றுகொண்டிருந்தான் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் யுதிஷ்டிரரின் மைந்தன் பிரதிவிந்தியன். முன்பு கலிகர் பேருருவம் கொண்டு மலையமர்ந்து ஏகசக்ரபுரியை துயரிலாழ்த்திய பகனை கொன்றார் என்று தொன்மங்கள் பாடின. ஆகவே கலிகர் பிராமணர்களுக்கு வேதம் கற்பிக்கும் தகுதியை இழந்தார். ஆனால் ஷத்ரியர் அவரிடம் வேதம் கற்க வரலாயினர். நாளடைவில் அனைத்து அரசர்களின் மைந்தர்களும் கூடி வேதம்பயிலும் இடமாக ஏகசக்ரபுரி மாறியது. கலிகரின் மைந்தர் சுஃப்ரர் வைதிகர்களில் அரசன் என்று புகழ்பெற்றார். ஏகசக்ரபுரியின் முழு ஆட்சியுரிமையும் அவரிடமே இருந்தது. அவருக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பெரும் செல்வக்கொடை அளிக்கப்பட்டது.

எக்காலத்திலும் ஏகசக்ரபுரி அயலார் எவருடைய ஆட்சியிலும் இருக்கவில்லை என்று அவர்கள் பெருமைகொண்டிருந்தனர். வடக்கே உசிநாரர்களின் எல்லை முடிந்து கோசலத்தின் எல்லை தொடங்குவதற்கு முந்தைய விடுபட்ட நிலம் அது. இருபக்கமும் மலைகள் சூழ்ந்து அங்கு ஓர் நிலமிருப்பதையே எவருமறியாமலாக்கியிருந்தன. ஏகசக்ரபுரியின் மைந்தர் சரயு வழியாக கோசலத்தின் பிரகதம் என்னும் முதல்துறைமுகத்திற்குள் சென்று அங்கிருந்து பிற ஊர்களுடன் வணிகமாடினர்.

பிரகதத்திற்கு முன்னால் ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயூவின் பெருக்கு பாறைகள் வழியாக நுரைத்து பொங்கிச் சரிந்த இடத்தை கோசலத்தின் படகுகள் அடைந்து நின்றுவிட அதற்கப்பால் நாணல்களால் ஆன ஏகசக்ரபுரியினரின் சிறுபடகுகள் மட்டுமே செல்ல முடிந்தது. பாறைகளில் தங்கள் படகுகளை கொடிச்சரடுகளில் கட்டி மேலேற்றி மீண்டும் எதிரொழுக்கில் செல்லும் பயிற்சி கொண்டிருந்தனர் அவர்கள்.

ஏகசக்ரபுரிக்கு வந்த இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர் சுரேசர் சுஃப்ரரின் கல்விநிலையை அடைந்து இளைப்பாறியபின் அரசமைந்தருக்குரிய வேதவகுப்பில் அமர்ந்திருந்த சுஃப்ரரிடம் தன் செய்தியை சொன்னார். இந்திரப்பிரஸ்தத்தில் நிகழும் ராஜசூயவேள்வியிலேயே பிரதிவிந்தியனுக்கு இளவரசுப்பட்டம் கட்டுவதாக அவை முடிவுசெய்திருப்பதாகவும் அதன்பொருட்டு அவனை அழைத்துச்செல்ல வந்திருப்பதாகவும் சொன்னார்.

அங்கிருந்த கலிங்க, மாளவ, விதர்ப்ப, கூர்ஜரநாட்டு இளவரசர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். “இவரா இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர்?” என்று கலிங்கஅரசன் ஸ்ருதாயுஷின் மகன் சத்யதேவன் சிரித்தபடி கேட்டான். “வைதிகக் கல்வியை முடித்ததுமே இமயமலைக்குச் சென்று தவம் செய்யப்போவதாகத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறார்?”

சுரேசர் சிரித்தபடி “தவம் செய்வதில் என்ன பிழை? அரசர்கள் தவம் செய்து விண்ணகம் அடைந்த கதைகள் எத்தனை உள்ளன? ஆனால் அதற்கு இன்னமும் காலம் உள்ளது” என்றார். மூத்த கலிங்க இளவரசனாகிய சத்யதேவன் “எப்போது?” என்றான். சுரேசர் சிரிக்காமல் “நாற்பதாண்டுகளுக்கு முன்பு இமயம் சென்று தவம் செய்து முனிவராக ஆவதாக யுதிஷ்டிரர் முடிவெடுத்தார். அவருடைய பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. அவர் சென்றபின்னரே இளவரசரின் பணிகள் தொடங்குகின்றன. அவை முடிவுற்றபின்னர் இளவரசரும் காடேகலாம்” என்றார்.

கலிங்க இளவரசர்களில் இளையவனாகிய சத்யனுக்கு புரியவில்லை. “அப்படியென்றால் நெடுநாட்களாகுமா?” என்றான். அவன் மூத்தவனாகிய சக்ரதேவன் “போடா” என்று அவன் தலையை தட்டினான். “அப்போது அவர் முதியவராகிவிடுவாரே?” என்று மீண்டும் சத்யன் கேட்க அனைவரும் நகைத்தனர்.

பிரதிவிந்தியன் கிளம்பும்போது இளவரசர்கள் கூடி அவனை வழியனுப்பி வைத்தனர். “நான் அங்கிருக்கமாட்டேன். நகரம் எனக்கு சலிப்பூட்டுகிறது” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “நகர்கோள்விழவுக்குச் சென்று அங்கிருந்த ஒவ்வொருநாளும் நான் சலித்து தனிமைகொண்டிருந்தேன். அங்கிருந்து கிளம்பிய அன்றுதான் படகில் நன்கு துயின்றேன். என் இடம் இதுவே. இங்கு வருவேன்” என்றான்.

அவன் தோளைத்தொட்ட சுஃப்ரர் “இளவரசே, இந்திரப்பிரஸ்தத்தின் கொடியை விந்தியனுக்கு அப்பாலும் பறக்கவிடுபவர் என்று உங்களுக்கு பிரதிவிந்தியன் என்று பெயரிட்டார் உங்கள் அன்னை. நீங்கள் மண் நிகழ்ந்த நாள் முதலே மீண்டும் திரும்ப முடியாத பயணத்தில்தான் இருக்கிறீர்கள்” என்றார்.

“என்னால் அதையெல்லாம் செய்யமுடியாது. அந்த நகர் அசுரமன்னர்களின் மணிமுடிபோல ஆணவத்தின் அடையாளமாகவே எனக்கு தெரிகிறது. நான் இங்கு மீள்வேன்…” என்றான் பிரதிவிந்தியன். “என் பெயரின் பொருள் அதுவல்ல என்று எந்தை என்னிடம் சொன்னார். பேரறிவை நோக்கி செல்பவன் என்றே அதற்குப்பொருள்.” சுரேசர் “பெயர்களை பெற்றோர் எப்பொருளில் இட்டனர் என்பது எவ்வகையிலும் பொருட்டல்ல அரசே. பெயருக்கு பொருள் அளிப்பவர்கள் நாமே” என்றார். பிரதிவிந்தியன் பெருமூச்சுவிட்டான்.

ஏகசக்ரபுரியிலிருந்து படகில் சரயூ வழியாக பிரகதம் வந்து அங்கிருந்து தேரில் யமுனையை அடைந்து படகில் இந்திரப்பிரஸ்தத்தின் எல்லைக்கு முன்னதாகவே கரையணைந்தனர். சிறுபடகுகள் அணையும் அத்துறையில் இறங்கும்போது “ஏன் இங்கு இறங்குகிறோம்?” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “இளவரசே, தாங்கள் ஆநிரை கவர்ந்த பின்னர்தான் நகர்புகவேண்டும். அதுவே நெறி” என்றார் சுரேசர்.

“ஆநிரை கவர்வதா? நானா? பிறர்பொருளை கவர்வதற்கு நான் என்ன கள்வனா? அமைச்சரே, வேதநூல் பயில்பவனின் எட்டு அறங்களில் இரண்டாவது களவாமை” என்றான் பிரதிவிந்தியன். “ஆம், ஆனால் அரசர்கள் களவுதலுக்கு அப்பெயர் இல்லை. அது திறை என்றும், வரி என்றும், காணிக்கை என்றும், கவர்தலென்றும் பலபெயரில் அழைக்கப்படுகிறது” என்று சுரேசர் சொன்னார்.

“ஆநிரை கவர்தல் என்னால் இயலாது” என்றான் பிரதிவிந்தியன். “ஆம், அதை நன்கறிந்தே இங்கு அதற்கான முறைமைகளை செய்துள்ளோம்” என்றார் சுரேசர். அங்கே நூறு பசுக்கள் கொண்டுவந்து கட்டப்பட்டிருந்தன. “இவை கவரப்பட்டவையா?” என்று அவன் கேட்டான். “இல்லை, இந்திரப்பிரஸ்தத்திற்கு உரியவைதான். ஆயர்குடியிலிருந்து காணிக்கையாக பெறப்பட்டவை” என்றார் சுரேசர். “அவ்வண்ணமாயினும்கூட இவற்றை களவாடினேன் என்று காட்டியபடி நான் நகர்புக முடியாது” என்றான் பிரதிவிந்தியன்.

“அரசே, ஆநிரை கவராது இளவரசன் நகர்புகுந்தால் முடிசூட நூலொப்புகை இல்லை.” பிரதிவிந்தியன் “எந்நூல் அதை உரைக்கிறது? களவுசெய்பவனே அரசன் என்றுரைக்கும் ஸ்மிருதி எது?” என்றான். “அரசே, முன்பு முதற்களவு செய்த ஒருவனிலிருந்தே தலைவன் உருவானான். பெருங்களவு புரிந்தவன் அரசன் என்றானான்” என்றார் சுரேசர். “என்னால் இயலாது. இதற்கு நான் ஒப்பமாட்டேன்” என்றான். “இது தங்கள் தந்தையின் ஆணை” என்று சுரேசர் சொன்னபோது “நான் என்ன செய்வேன்?” என்று அவன் கலங்கினான்.

“அரசே, தாங்கள் புரவியேறி நகர்நுழையுங்கள். தாங்கள் சென்றபின் இந்த ஆவினங்கள் நகர்நுழையும்” என்று சுரேசர் சொன்னார். “நான் இவற்றை களவுகொண்டேன் என அறிவிக்கலாகாது. எவர் கேட்டாலும் அப்படி சொல்லலாகாது.” சுரேசர் “இல்லை, சொல்லப்போவதில்லை. ஆனால் நீங்கள் கொண்ட களவு இது என நகர்மாந்தர் பிழையாக எண்ணினால் அதை மறுக்கப்போவதில்லை” என்றார். சிலகணங்கள் எண்ணியபின் “அவ்வாறே ஆகுக!” என்றான் பிரதிவிந்தியன். சுரேசர் புன்னகைத்தார்.

இளவரசன் தன் புரவி நோக்கி சென்றபோது ஆநிரை காத்து நின்றிருந்த காவலர்தலைவன் சுரவர்மன் “ஒப்புக்கொண்டுவிட்டாரா?” என்றான். “அறம் பேசுபவர்கள் அனைவரும் அதை எப்படி கைவிடவேண்டும் என்பதற்கான நெறி ஒன்றையும் கற்றுவைத்திருப்பார்கள் சுரவர்மரே” என்றார் சுரேசர். “இவர் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் முனிவரின் மைந்தர்.” சுரவர்மன் சுற்றிலும் பார்த்துவிட்டு உரக்க நகைத்தான்.