பன்னிரு படைக்களம் - 29

[ 11 ]

சேதி நாட்டிலிருந்து சிசுபாலன் ஏழு வழித்துணைவர்களும் அமைச்சர் பாவகரும் உடன்வர கங்கைக்கரையை அடைந்து அங்கிருந்து புரவிகளில் கிளம்பி பின்னிரவில் அஸ்தினபுரிக்கு வந்து சேர்ந்தான். அவனுடைய வரவறிவிக்கும் பறவைச்செய்தி அன்று உச்சிப்பொழுதில்தான் அஸ்தினபுரிக்கு வந்து சேர்ந்திருந்தது. கோட்டை வாயிலுக்கே கனகர் வந்து அவனை முகமன் சொல்லி வரவேற்று அரண்மனைக்கு கொண்டு சென்றார். அவன் வரவு மந்தணமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தமையால் அமைச்சர்கள் செல்லும் எளிய கூட்டுத்தேரில் நகர்த்தெருக்களினூடாக எவரும் அறியாது சென்று அவனுக்கென அளிக்கப்பட்டிருந்த மாளிகையை அடைந்தான்.

அன்று காலையிலேயே உத்தர பாஞ்சாலத்திலிருந்து அஸ்வத்தாமன் அஸ்தினபுரிக்கு வந்திருந்ததை செல்லும் வழியிலேயே கனகர் சொன்னார். சிந்துவிலிருந்து ஜயத்ரதன் வந்து கொண்டிருப்பதாகவும் மறுநாள் உச்சிக்குள் அவன் வந்து சேரக்கூடும் என்றும் தெரிவித்தார். சிசுபாலன் பதற்றத்தில் தேர்த்தட்டிலேயே நிலைகொள்ளாது அங்குமிங்கும் நடந்தான். கனகர் அவனுடைய அசைவுகளை ஓரக்கண்ணால் வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தார். சிசுபாலன் “அஸ்தினபுரியின் அரசர் எப்படி இருக்கிறார்? நோயுற்றிருக்கிறார் என்று ஒற்றர்கள் வழியாக அறிந்தேன்” என்றான். ஒற்றர்கள் என்ற சொல்லை சொல்லியிருக்கக்கூடாதென்று உடனே உணர்ந்து அவன் விழிகளை திருப்ப கனகர் கண்களில் பளிச்சிட்ட புன்னகையுடன் “தேறியிருக்கிறார். ஆனால் பலநாட்களாக அவை அமர்வதோ மக்களுக்கு முன் காட்சியளிப்பதோ இல்லை. அவர் உள்ளத்தில் நிகழ்வதென்ன என்று எவருக்கும் தெரியவில்லை” என்றார்.

சிசுபாலன் திரும்பி “ஏன்?” என்றான். அதையும் கேட்டிருக்கக் கூடாதென்று உடனே எண்ணினான். “அறியேன்” என்றார் கனகர். பின்பு “தங்கள் ஒற்றர்கள் அறிவித்திருப்பார்களே?” என்று அவனைப் பார்க்காமலே சொன்னார். சிசுபாலன் சீண்டப்பட்டு “ஆம், அறிந்தேன். அவர் இந்திரப்பிரஸ்தத்தின் அரசியின் காலில் குப்புற விழுந்ததை நானே நேரில் பார்த்தேன்” என்றான். கனகரை புண்படுத்திவிட்டோம் என்று எண்ணி திரும்பி அவரைப் பார்த்து அவர் மாறாபுன்னகையுடன் இருப்பதைக் கண்டு விழிதிருப்பிக்கொண்டான். “அவரது வஞ்சம் அதுதான் என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான் சிசுபாலன் தணிந்த குரலில். “மானுட உள்ளத்தை தெய்வங்கள் ஆள்கின்றன” என்று கனகர் பொதுவாக சொன்னார்.

மாளிகையின் முதன்மைஅறைக்குள் அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தி கனகர் வணங்கினார். ஏவலர் வந்து பணிந்து நின்றனர். “தங்கள் வருகையை அரசருக்கு அறிவிக்கிறேன் அரசே. முறைப்படி தங்கள் தூதுச் செய்தியை இன்றே அரசருக்கு அறிவிக்க விழைகிறீர்களா?” என்றார். சிசுபாலன் “இல்லை. நான் அரசமுறைத்தூதாக வரவில்லை. சைந்தவரும் வரட்டும். நாங்கள் மூவரும் இணைந்து அவரிடம் பேசவிருக்கிறோம்” என்றான். உடனே ஏன் அனைத்தையும் இவரிடம் சொல்கிறேன் என எண்ணி சலித்தான். கனகர் மீண்டும் விழிகளில் மின்னி மறைந்த புன்னகையுடன் “நன்று, அதற்குமுன் தாங்கள் பேரமைச்சர் விதுரரையும் இளைய காந்தாரரையும் சந்திக்க விழையக்கூடும். இங்குதான் அஸ்வத்தாமன் இருக்கிறார். காலையில் அவரையும் சந்திக்கலாம்” என்றார்.

“அஸ்வத்தாமன் எங்கிருக்கிறார்? நான் இப்போதே அவரை பார்க்கலாமா?” என்றான் சிசுபாலன். “அவர் தன் தந்தையின் குருகுலத்திற்கு சென்றிருக்கிறார். அது கங்கைக் கரையில் இங்கிருந்து இரண்டு நாழிகை பயணத்தொலைவில் இருக்கிறது. தங்களை சந்திக்க காலையில் இங்கு வருவார்” என்றார் கனகர். “நன்று” என்று சிசுபாலன் தலைதாழ்த்தினான். வணங்கி கனகர் விடைபெற்றதும் மீண்டும் நிலைகொள்ளாதவனாக கூடத்தில் அலைந்தான். ஏவலர் வந்து அழைத்தபோது கலைந்து மீண்டு அவர்களுடன் சென்று நீராடி உடைமாற்றி மாளிகை முகப்பில் வந்தமர்ந்தான். இரவின் ஒலிகள் மாறுபடத்தொடங்கின. ஆவணி மாதத்து விண்மீன்கள் சாளரம் வழியாக தெளிவாக தெரிந்தன.

நில்லாது வந்த நீண்ட பயணத்தால் அவன் உடல் மிகவும் களைத்திருந்தது. மஞ்சத்திற்குச் சென்று படுக்க வேண்டுமென்று விழைந்தான். ஆனால் உளம் பரபரத்துக் கொண்டிருந்ததனால் துயில முடியாதென்றும் தோன்றியது. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து செய்திகளைப் பெற்று தனக்கு அளிக்க வேண்டுமென்று தன்னுடன் வந்த சேதி நாட்டின் அமைச்சர்  பாவகரிடம் ஆணையிட்டிருந்தான். செய்தி ஏதும் வருமா என்று எண்ணியபோதே காலை வரை பாவகர் வந்து அழைக்கமாட்டார் என்று தோன்றியது. நீள்மூச்சு விட்டு எழுந்து மஞ்சத்துக்கு சென்று படுத்தான். அவன் எண்ணியதற்கு மாறாக படுத்ததுமே மஞ்சம் அவனை இழுத்து புதைத்துக் கொண்டது. சிதைந்து உருமாறிக்கொண்டே இருந்த காட்சிகளினூடாகச் சென்று துயிலில் ஆழ்ந்து பிறிதொரு பிறப்பில் என விழித்தெழுந்து இறுதியாக வந்த எண்ணத்தை நினைவுகூர்ந்தான். அவன் உடலில் அறியா பரபரப்பு ஒன்று நிறைந்திருந்தது.

அவன் கண்டது மின்னி சுழன்று அருகணைந்து பட்டாம்பூச்சி போல சுற்றிப்பறக்கும் ஒரு படையாழியை.  சிற்றிளமைக் கனவிலேயே அது அவனுக்குள் வந்துவிட்டது. நெடுநாள் அதை ஒரு விந்தைப்பறவை என்றே எண்ணியிருந்தான். அல்லது அவன் வளரும்தோறும் அது தன்னை ஒரு படையாழியாக மாற்றிக்கொண்டது. அச்சுறுத்தியது, துரத்திவந்தது, குருதிவடிவாகவும் மின்வடிவாகவும் வந்து சூழ்ந்தது. அக்கனவை வெல்லும்பொருட்டு அதிலிருந்து விலகி ஓடிய நாட்களுக்குப்பின் ஒரு தருணத்தில் தானும் படையாழி பயில்வதே அதை வெல்லும் வழி என்று கண்டு கொண்டான். அவ்வெண்ணம் லகிமாதேவியின் ஸ்மிருதியை வாசித்துக்கொண்டிருந்தபோது தோன்றியது. “குருதிக்கு குருதி ஒன்றே நிறைநிற்கும்.”

படைக்கலப்பயிற்சி அளிக்கும் சித்ரசேனர் “அரசே, கண்ணும் கையும் உலகறிந்தபின் படையாழி கற்பது அரிது” என்றார். “நான் கற்க முடியும், கற்றே ஆகவேண்டும்” என்று அவன் சொன்னான். சித்ரசேனர் படையாழிகளில் பயில்வதற்குரிய ஒன்றை அவனுக்கென மதுராவின் கடைத்தெருவிலிருந்து வாங்கிவரச்செய்தார். கூரற்ற விளிம்புகள் கொண்ட இரும்புப் படையாழி உணவுண்ணும் சிறிய தட்டு போலிருந்தது. அதை கையில் முதலில் வாங்கியதுமே அதன் எடைதான் அவனை திகைப்புறச்செய்தது. “இத்தனை எடைகொண்டதா இது?” என்றான். “எடைதான் அதன் ஆற்றல்” என்றார் சித்ரசேனர். “இத்தனை எடையை எப்படி வீசுவது?” என்றான். “நேராக வீசினால் இது நெடுந்தூரம் செல்லாது. தோளும் சலிக்கும். இதை காற்றில் மிதக்கவிடவேண்டும்.”

அவன் அதன் முனையை விரலால் தொட்டு “இது கூரற்று உள்ளதே?” என்று கேட்டான். “அரசே, படையாழி கட்டற்றது. அது உடலுறுப்பு போல ஆன்மாவுடன் இணைந்தபின்னரே  அதற்கு கூரமையமுடியும். இல்லையேல் எய்தவன் கழுத்தையே அது அறுக்கும்” என்றார் சித்ரசேனர். அக்கணமே அவன் தன் கழுத்தில் அதன் கூரிய முனை கிழித்துச்செல்லும் தண்மையை உணர்ந்தான். பிறகெப்போதும் கழுத்திலொரு நுண்தொடுகையை உணராமல் அதைத் தொட அவனால் முடிந்ததில்லை. பயிற்சியின் முதல் நாள் படையாழியை இலக்கு நோக்கி எறிந்தபோது அவன் முற்றிலும் நினைத்திருக்காத திசை நோக்கி அது காற்றில் எழுந்து வளைந்து சென்று எண்ணியிராதபடி வளைந்து திரும்பி அவன் தலைக்கு மேல் வந்து பின்னாலிருந்த மரத்தில் முட்டி விழுந்தது. அதன் வண்டுமுரள்தலை அவன் காதருகே கேட்டான். ஒரு கணம் அது தனக்கென திட்டங்களும் விழைவுகளும் கொண்ட பிறிதொரு இருப்பு என்னும் திகைப்பை அவன் அகம் அடைந்தது.

அன்று வெறிகொண்டு நூறு முறை அதை சுழற்றி எறிந்து முடித்தபோது எவ்வகையிலும் தன் கைக்கு அடங்காத தனி உள்ளம் அது என்று அவன் உறுதி கொண்டான். படைக்கலப் பயிற்சி நிலையத்தில் அதை கொக்கியில் மாட்டிவிட்டு திரும்பும்போது அவனுடன் வந்த சித்ரசேனர்  “அது எளிய படைக்கலமல்ல அரசே” என்றார். “ஒருவன் மட்டிலுமே இன்று போரில் அதை கையாள்கிறான்.” அவன் திரும்பி அவர் முகத்தை பார்க்காமல் நடந்து தன் மஞ்சத்தறையை அடைந்தான். பிறிதெவரையும் பார்க்க விழையாது நிலையற்று உலவிக்கொண்டிருந்தான்.

தன் எண்ணங்கள் எங்கெங்கு தொட்டு எத்திசையில் எல்லாம் சரிகின்றன என்று எண்ணியபோது ஒரு கணம் திகைத்து இத்தனை ஆணவம் கொண்டவனா நான் என்று கசந்தான். பின்பு அவ்வாணவத்தை தானன்றி பிறிதெவரும் அறியமாட்டார்களே என்று எண்ணி ஆறுதல்கொண்டான். பின்பு கூரிய நச்சுப்படைக்கலம் ஒன்றுடன் இருளில் ஒளிந்திருக்கும் உணர்வு ஏற்பட்டு தனக்குத்தானே புன்னகைத்தான். அன்றிரவு துயிலில் அப்படையாழியை அவன் மீண்டும் கண்டான். அது இளமை முதல் அவனை தொடர்ந்து சுழன்று பறந்த அப்படையாழி அல்ல என அறிந்ததும் உவகையில் தோள்கள் துள்ளின.

அது அன்று படைக்கலப் பயிற்சி சாலையில் அவன் கண்ட படையாழியும் அல்ல. முற்றிலும் புதிய ஒன்று. ஆனால் அவன் அதை நன்கறிந்திருந்தான். கூச்சலிட்டபடி தாவிச்சென்று கைநீட்டி அதை பற்றினான். அவன் கையில் பறவை என சிறகடித்து அதிர்ந்து நிலையழிந்து நிகர்மீண்டது. வீசும் காற்றுக்கேற்ப அசைந்து சிறகு ஒதுக்கி விரித்தது. அதன் கூர்முனையை அவன் தன் விரலால் வருடினான். நெஞ்சு அக்கூரை எங்கோ ஆழத்தில் உணர்ந்ததும் உடல் மெய்ப்புகொண்டது.  அதை தூக்கி வீசியபோது தன் விருப்பால் என அவன் விரலில் இருந்து எழுந்து காற்றில் சறுக்கி மிதந்து சென்று அவன் நோக்கிய இலக்கை துண்டுபடுத்தி சற்றே சரிந்து காற்றிலேறி சுழன்றபடி அவன் விரல் நோக்கி வந்தது. நீட்டிய விரல் மீது  பட்டாம்பூச்சி போல வந்தமர்ந்து எடையற்று அமைதிகொண்டது.

தன் அரண்மனையில் அன்று விழித்துக்கொண்டபோது அவன் உடல் உவகையில் பரபரப்பு கொண்டிருந்தது. எழுந்து படிகளில் இறங்கி படைக்கலப்பயிற்சி நிலைக்கு சென்றான். அங்கே தன் அறையில் துயின்றுகொண்டிருந்த சித்ரசேனரை எழுப்பி  “படைக்கலவீரரே, எழுக! இப்போது நான் படையாழி பயிலப்போகிறேன்…” என்றான்.  “அரசே, இது பின்னிரவு” என்றார் அவர். “ஆம், படையாழியின் அகக்கணக்கை இப்போது நான் கற்றுக்கொண்டேன். முன்பு அதை கையில் எடுத்தபோது அது அசைவின்மையை உள்ளுறையாகக் கொண்ட ஒரு பருப்பொருளென்று என் விழியும் கையும் சித்தத்திற்கு சொல்லின. சித்ரசேனரே,  படையாழி ஓர் உயிர். அசைவையே உள்ளுறையாகக் கொண்டது. அமர்ந்திருக்கையிலும் பறவையின் சிறகு செயல்பட்டபடியேதான் உள்ளது. வருக!” என்றபடி அவன் பயிற்சிக் களத்துக்குச் சென்று படையாழியை எடுத்தான்.

அதை கையால் வருடி விரலில் நிகர்நிலைகொண்டு நிலைக்கச்செய்தபின் தூக்கி மேலெறிந்து கையால் பற்றி ஒருகணம் நின்றான். பின்பு அதை நிலத்தில் வீசினான். “இது வெறும் தட்டு சித்ரசேனரே. உயிருக்கு  அஞ்சி வெறும் தட்டில் பயின்றால் ஒருபோதும் கூரிய படையாழியை நான் கையிலெடுக்கப் போவதில்லை. படையாழியின் ஆற்றல் அதன் கூர்முனையில் உள்ளது. கூர்முனை அற்ற படையாழி அலகற்ற பறவை. அதற்கு காற்று வழிவிடுவதில்லை. கூர்கொண்ட படையாழியை கொண்டு வருக!” என்றான். “அரசே…” என்று சித்ரசேனர் சொல்லத்தொடங்கியதும் கையமைத்து “என் ஆணை” என்றான்.

“அரசே, இங்கு படையாழி ஏந்துபவர்கள் இல்லை. தங்கள் அன்னை யாதவநாட்டிலிருந்து இங்கு வந்தபோது கொண்டுவந்த பழைய படையாழி ஒன்றுள்ளது. மூதாதையருக்கு முன் பூசனைக்கு வைப்பதற்காக மட்டுமே அதை வைத்திருக்கிறோம். முன்பு தங்கள் தாய்வழி மூதாதை சூரசேனரால் போரில் பயன்படுத்தப்பட்டது. கார்த்தவீரியர் கையிலிருந்தது என்கிறார்கள். குருதிவிடாய் கொண்ட கூர் கொண்டது. எடுத்து மாற்றுகையிலேயே இதுவரை பன்னிருவர் கைகளை வெட்டி குருதிச்சுவை கண்டுள்ளது” என்றார். “கொண்டு வருக!” என்றான் சிசுபாலன்.

சித்ரசேனர் கொண்டுவந்த படையாழி இருமடங்கு எடையுடன் இருந்தது. அதை கையில் எடுத்ததுமே ஒருபுறம் சரிந்து நழுவி விழப்பார்த்தது. அவன் உடல்பதற அதைப்பற்றி தன் விரலில் நிலை நிறுத்தினான். காற்றில் சிறு சில்லையில் சிறகு குலைத்தும் வால்நீட்டியும் உடல்மாற்றி நிலையமைந்தும் அமர்ந்திருக்கும் பறவையென அது அவன் கையிலிருந்தது. அதன் முனைபட்டு விரல் வெட்டுண்டு குருதி சொட்டுவதை காலில் உணர்ந்தான். சித்ரசேனர் “முதற்குருதி” என்றார். “ஆம், அது என் குருதியே ஆகுக!” என்று அவன் அதை தூக்கி மும்முறை சுழற்றி வீசினான். மெல்லிய விம்மலுடன் காற்றில் எழுந்து சுழன்று சென்று இலக்கைத் தொட்டு கீறி துடித்து சரிந்து கீழிறங்கி மண்ணில் பதிந்து நின்றது.

அஞ்சி நின்ற சித்ரசேனர் நீள்மூச்செறிந்தார். “இதை நான் பயில்வேன்” என்றான் சிசுபாலன். மீண்டும் அதை கையில் எடுத்து மடியில் வைத்து அதன் கூர்முனையை சுட்டுவிரலால் மெல்ல வருடினான். “இதை நான் முன்னரே கண்டுள்ளேன்” என்றான். “அரசே, இதன் மறு இணையே இளைய யாதவரின் கையிலுள்ளது என்பார்கள். கார்த்தவீரியனின் அவைக்கொல்லனால் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை இவை.” அவன் புன்னகையுடன் அதை நோக்கி “ஆம், இது என் நெஞ்சில் அமரவேண்டும் சித்ரசேனரே. இது என் உடலென்றாக வேண்டும்” என்றான்.

சித்ரசேனர் அவன் விழிகளை தவிர்த்தார். அவன் மீண்டும் அதை வீசினான். சீறிச்சென்று மரப்பாவை ஒன்றை வெட்டி அவனை நோக்கி உறுமியபடி வந்தது. நெஞ்சு திடுக்கிட்டு அப்படியே மண்ணில் குப்புற விழுந்தான். பின்னால் சென்று தூணைவெட்டி நின்றது. அவன் எழுந்து புழுதியை தட்டியபடி சென்று அதை அசைத்து உருவி எடுத்தான். தூண் முனகலோசையுடன் முறிந்து வளைந்தது. “ஆற்றல் மிக்கது” என்று அவன் சொன்னான். சித்ரசேனர் பெருமூச்சுவிட்டார்.

பல்லாண்டுகாலம் ஒவ்வொருநாளும் அவன் அதை பயின்றான். இரவுகளில் மஞ்சத்தில் அதை அருகே வைத்து துயின்றான். ஒவ்வொருமுறை அவன் இலக்குகளை சென்று வெட்டி மீண்டு அவன் கையில் வந்து அமர்ந்ததும் அது தினவடங்காது எழ முயன்றது. பின்பு அவன் இலக்குகளை அதுவே முடிவு செய்தது. சேதி நாடு அண்டை நாடுகளுடன் மோதிய படையெழுச்சிகளில் காற்றில் குருதி சிதறப்பறந்து சென்று உயிருண்டு மீண்டது. குருதி உண்ணும்தோறும் அதன் ஒளி மிகுந்து வந்தது. இலக்கு பிழைப்பது அதற்கே விருப்பமல்லாததாக ஆயிற்று.

என்றும் எங்கும் அவன் படையாழியுடன் சென்றான். அவனை எண்ணியவர்கள் அனைவரும் அப்படையாழியுடனேயே நினைவு கூர்ந்தனர். ஆனால் அவன் கனவிலிருந்து படையாழி முற்றிலும் அகன்றது. நெடுநாட்களுக்குப்பின் சத்யபாமையை வேட்கச்சென்று மீண்ட நாளில் நெஞ்சுள் எழுந்த அனல் தாளாமல் இரவெல்லாம் மது அருந்தி மத்தெழுந்த தலையை இறகுத் தலையணையில் புதைத்து துயிலாது புரண்டு ஒற்றைச் சொற்கள் கசிந்து சொட்டிய நாவுடன் தளர்ந்து சரிந்து மூடி பின் துடித்துத் திறந்து கலங்கி வழிந்து மீண்டும் இமைசரிந்த விழிகளுடன் தன் மஞ்சத்தறையில் இரவைக்கழித்து புலரிப் பறவைக்குரல் கேட்டபின்னரே சித்தம் மயங்கி துயிலில் ஆழ்ந்தபோது மீண்டும் அப்படையாழி அவன் கனவில் எழுந்தது.

பின்னர் ருக்மிணியை இழந்தபின். பின்னர் மதுராவின் படைகளை வென்று துரத்தி மீண்டபோது. உடல் நலமின்றி காய்ச்சலில் தலை கொதிக்கும் ஆழ்துயிலில் பலமுறை கண்டான். எப்போதேனும் எண்ணி எண்ணி துயில் மறக்கும்போது விடியலில் அவன் அரைமயக்கில் அப்பாலிருந்த இருளிலிருந்து மெல்லிய சிறகு முழக்கத்துடன் அது எழுந்து வந்தது. அதன் கூரின் ஒளி ஒரு புன்னகை. ஒரு விழிமின்னல். ஒரு சொல்லில் ஒளிந்த வஞ்சப்பொருள்.

மஞ்சத்திலிருந்து எழுந்து தாழ்ந்து எரிந்த நெய்விளக்கின் திரியை சற்று தூண்டியபின் ஏவலன் கொண்டு வைத்திருந்த தன் படைக்கலப் பொதியை அவிழ்த்து அதனுள் கரடித்தோல் உறையிட்டு வைக்கப்பட்டிருந்த படையாழியை எடுத்தான். அதன் கூரை நுனிவிரலால் வருடிக் கொண்டிருந்தபோது உடலில் எங்கும் பரவியிருந்த பதற்றம் மெல்லக்குறைவதுபோல் தோன்றியது. அழுத்தினாலென்ன என்று எப்போதும் போல் உள்ளம் எழ, மறுவிசையால் அதைத் தடுத்து அக்கூரிய முனைவழியாக மலர்மேல் என விரலின் தோல்பரப்பை ஓடவிடுவது அவன் வழக்கம். அது முதுகெலும்பில் ஒரு சிலிர்ப்பை உருவாக்கி, மெல்ல உடலெங்கும் மெய்ப்பு என பரவி, விழி கசியவைக்கும் கிளர்ச்சியை அளிக்கும்.

அதை கையில் எடுத்தபடி எழுந்து சுடரின் ஒளியில் அதன் கூரிய நுனியை பார்த்துக் கொண்டிருந்தான். யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பி மூடிய கதவை பார்த்தபின் அதை தூக்கி காற்றில் சுழற்றி பறக்கவிட்டான். சாட்டை என ஒலித்து அறைக்குள் சுழன்று அவனருகே வந்தது. கைநீட்டி அதைப்பற்றி விரலில் எடுத்தபின் மீண்டும் அதன் கூர்முனையை கையால் தொட்டான். இருளிலிருந்து கண்மின்ன எழும் பாதாளதெய்வம் போல் ஓர் எண்ணம் எழுந்து உள்ளங்கால் குழிவை கூசவைத்தது. இரும்பைக் கடித்ததுபோல் பற்கள் புளித்தன. வேண்டாம், வேண்டாம் என ஒவ்வொரு கணமும் அவன் எண்ணங்களின் அழுத்தத்தால் விம்மி விரைத்து ஒன்றிலிருந்து ஒன்றென செல்ல சட்டென்று அப்படையாழியை எடுத்து காற்றில் வீசினான்.

வீம்புடன் உறுமியபடி அறைக்குள் சுற்றி வந்து அவ்விசையில் சுழன்று அவன் கழுத்தை நோக்கி அது வந்தது. சட்டென்று குனிந்து அதை தவிர்த்தான். அவன் குழல் சுருளொன்றை சீவிச் சென்றபடி சுழன்று சுவரைக் கீறி ஓலமிட்டு மீண்டும் அவன் கழுத்தை நோக்கி வந்தது. குனிந்து அதை தவிர்த்தபோது காதின் மிக அண்மையில் ஒலித்த அதன் பாம்புச்சீறல் அவன் உள்ளத்தை கடும் குளிரென வந்து தொட்டது. விரைவழிந்து அவன் கைநோக்கி வந்த படையாழியை பற்றி அதன் சுழற்சியை நிறுத்தித் தூக்கி அதன் கூர்முனையை பார்த்தான். அதில் ஒரு குருதித்தீற்றலின் மென்கோடு இருப்பதாக விழியை சித்தம் மயக்கியது. அவன் பெருமூச்செறிந்து தளர்ந்தான்.

அதை மடியில் வைத்தபடி மஞ்சத்தில் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். உடலிலிருந்து வெம்மையுடன் குருதி ஒழுகி வெளியேறிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. கைகளும் தோள்களும் உடற்கட்டிலிருந்து விடுபட்டு தளர்ந்தன. கால்விரல்கள், கைமுனைகள்,  காதுமடல்கள், மூக்குநுனி என ஒவ்வொன்றாக குளிர்ந்தன. விழிகள் சோர்ந்து அறை மங்கலாயிற்று. இமைகள் தாழ்ந்தன. இறுதியாக சித்தத்தில் எஞ்சிய உதிரிச்சொற்கள் சிறகு நனைந்த சிறு பூச்சிகள் போல ரீங்கரித்தபடி ஒன்றுடன் ஒன்று   ஒட்டி அங்கேயே கிடந்தன. எவரோ எதையோ சொன்னார்கள். அவன் இறந்த உடலாக கிடந்தான். அவனது தளர்ந்த இருகைகளுக்குமேல் இரு கரியபெருங்கைகள் முளைத்தெழுந்தன. யாருடையவை இவை என அவன் திகைத்தான்.

“இல்லை, இவை என்னுடையவை அல்ல” என்று ஓசையற்று உள்ளம் கூவியபோது மூடிய விழிகளுக்குமேல் நெற்றியில் ஒரு விழி திறந்தது. அதன் சுழன்றநோக்கில் அவ்வறை செங்குருதிவழியும் சுவர்களும் நிணம்பரவிய தரையும் கொண்டிருந்தது. அகல்சுடர் குருதித்துளியாக எரிந்தது. அருகே அவன் ஒருவனை கண்டான். “நீயா?” அவன் கால்கள் மட்டுமே தெளிவாக தெரிந்தன. குருதியில் ஊன்றிநின்ற பாதங்கள் ஊன் நக்கி உண்ணும் புலியின் நாக்குபோலிருந்தன. “ஆம்” என்று அவன் சொன்னான். “துயில்க!” என்றான் அவன். “நான் துயின்றுகொண்டிருக்கிறேன்.” அவன் “உன் மூவாவிழி துயில்க!” என்றான். “ஆம்” என்று அவன் தன் மூன்றாம்விழியை மூடினான். இருவிழிகளும் விழித்துக்கொண்டன. அவன் மஞ்சத்தில் கிடந்தான். கதவை மெல்ல ஏவலர் தட்டிக்கொண்டிருந்தனர்.

அவன் விழித்தபோது அவன் மார்பின்மேல் படையாழி இருந்தது. எழுந்து கதவைத்திறந்தபோது உள்ளே வந்த அமைச்சர் பாவகர் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து செய்தி வந்துள்ளது அரசே” என்றார். அவன் தலையசைத்தான். “இளைய யாதவர் நேற்றே இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் அபிமன்யுவும் பிற இளவரசர்களும் தனித்தனியாக படைகொண்டு ஆநிரை கவர சென்றிருக்கிறார்கள்.  இந்திரப்பிரஸ்த நகருக்கு யாதவப் படைகள் வந்து கொண்டுள்ளன.” அவன் கோட்டுவாய் விட்டு கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தான். “நன்று” என்றபின் திரும்பி படுக்கையருகே பீடத்தில் கிடந்த தன் சால்வையை நோக்கி சென்றான்.

“இளைய யாதவர் அஸ்தினபுரிக்கு இன்று வரக்கூடும் என்று அங்குள்ள நம் ஒற்றன் கருதுகிறான். அரண்மனையில் அவர் அஸ்தினபுரிக்கு வருகிறார் என்னும் பேச்சு நிலவுகிறது” என்றார் பாவகர். சிசுபாலன் திரும்பி “ஆம், நானும் அதை எதிர்பார்க்கிறேன்” என்றான். “அதற்கு முன் சைந்தவர் நகரடைந்துவிடுவார். இன்று மாலையிலேயே துரியோதனரிடம் நமது அமர்வு நிகழும்.” அமைச்சர் திரும்புகையில் அறைக்குள் கிடந்த குழல் கற்றையை நோக்கி திகைத்து குனிந்து அதை கையில் எடுத்தார். அச்சத்துடன் “அரசே!” என்றார். துடித்த கண்களால் திரும்பி சேக்கை மேல் கிடந்த படையாழியை பார்த்துவிட்டு “அரசே!” என்று மீண்டும் அழைத்தார்.

“பயின்றேன்” என்றான் சிசுபாலன். “இது தங்கள் குழல்சுருள்” என்றார் அமைச்சர். “ஆம்” என்றான். “அரசே, இது தங்களை நோக்கி வந்திருக்கிறது. அதற்கு தங்கள் உடலில் ஒரு துளி குருதியை இப்போதே கொடுப்பது நன்று” என்றார் பாவகர். சிசுபாலன் அவர் விழிகளை நோக்க  ”படையாழிகளில் குருதி விடாய் கொண்ட தெய்வங்கள் உறைகின்றன. எண்ணி எழுந்தவற்றை அவை முடிக்காது அமைவதில்லை. தாங்கள் விரலால் தொட்டு ஒரு துளிக்குருதி அளித்தால் போதும், அவை இப்போதைக்கு அடங்கும்” என்றார். சிசுபாலன் “துளிக்குருதியில் விடாய் அடங்கும் தெய்வம் உள்ளதா?” என்றான். “இல்லை, தெய்வங்களுக்கு இம்மானுடத்தையே அருந்தினாலும் விடாய் அடங்குவதில்லை. ஆனால் ஒரு துளி குருதி அளிப்பதென்பது அவ்விழைவுக்கு முன் நம் ஆணவம் மண்டியிடுகிறது என்பதை காட்டுகிறது” என்றார் அமைச்சர்.

புன்னகையுடன் “என் ஆணவம் அதன்முன் தருக்கியே நிற்கட்டும்” என்றான் சிசுபாலன். “அரசே…” என அவர் ஏதோ சொல்லவர “மரங்களின் சாறுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையுணர்வு ஆத்மாவின் ஆழத்தில் உள்ளது அமைச்சரே. ஹிரண்யாசுரனுக்கு கட்டின்மை, ஹிரண்யகசிபுவுக்கு சினம், மகாபலிக்கு பெருந்தன்மை, ராவணப்பிரபுவுக்கு பெருவிழைவு, கார்த்தவீரியருக்கு அஞ்சாமை, கம்சருக்கு அறியாமை. தண்டும் இலையும் காயும் அச்சுவையே. கனிதலும் அச்சுவைதான்” என்றான் சிசுபாலன். பின் சிரித்து “என் சுவை ஆணவம் என்று கொள்க! அதனூடாகவே நான் வெல்வேன், கடந்துசெல்வேன்” என்றான். திரும்பி அப்பால் நின்ற நீராட்டறை ஏவலனை நோக்கி செல்வோம் என்று சிசுபாலன் கையசைத்தான்.