பன்னிரு படைக்களம் - 16
[ 15 ]
மேற்கு எல்லையிலிருந்த காவல்நிலையிலிருந்து தேர்களை பெற்றுக்கொண்டு குறுங்காடுவழியாகத் தப்பி கங்கைக்கு மறுபக்கமிருந்த கிருஷ்ணபாகம் என்னும் சிறுநகரை சென்றடைந்தனர் பிருஹத்ரதனும் அரசியரும் மைந்தரும். செல்லும் வழியெல்லாம் கிருதி வசைபாடிக்கொண்டே வந்தான். “நான் அப்போதே சொன்னேன், தொடக்கத்திலேயே அக்கீழ்மகனை எளிதில் வென்றிருக்கலாம். எதையும் ஒரு கொள்கையென்றாக்காமல் உங்களால் செயல்பட முடியாது… வாளால் வெட்டப்படவேண்டியவனை சொல்லால் வருடிக்கொண்டிருந்தீர்கள்.”
பத்மர் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. தொலைவிலிருந்து நோக்கியபோது ராஜகிருஹம் மழைபெய்யும் குளம்போல கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பல இடங்களில் புகை எழுந்து வானில் கலைந்தது. “அவன் நகரை எரிக்கிறான்” என்றார் பிருஹத்ரதன். “இல்லை அரசே, அவன் மக்களின் எழுச்சிக்கு இடமளிக்கிறான். நகரிலும் அரண்மனையிலும் ஒரு சிறுபகுதியை எரிக்காமல் அவர்களால் அமையமுடியாது” என்றார் பத்மர். “அது அவர்களின் இறந்தகாலம்.”
பிருஹத்ரதன் பெருமூச்சுவிட்டு “இதைப்போல இதற்குமுன்பு நடந்ததே இல்லை” என்றார். “மூன்றுமுறை நடந்துள்ளது. இருநூறாண்டுகளுக்கொருமுறை இவ்வண்ணம் நிகழ்கிறது” என்றார் பத்மர். “கணக்குகளை சொல்லும். இந்த இழிமகனை வெல்லும் வழிகேட்டால் மட்டும் பொறுத்திருக்கும்படி சொன்னீர்கள்…” என்று ஜயசேனன் அவர் முகத்தின் நேராக கைநீட்டி சொன்னான்.
அவர்கள் கிருஷ்ணபாகத்தை அடைந்து அரண்மனைக்குள் சென்றபோது களைத்துச் சோர்ந்திருந்த பிருஹத்ரதன் “அமைச்சரே, எந்தை முன்பு ஒரு ஜரர்குலத்துச் சிறுவனை நெடுகப்போழ்ந்தார் என்று சொல்கிறார்களே, உண்மையா?” என்றார். பத்மர் தலையசைத்தார். “அப்பழியே இன்று இந்த காட்டாளனாக எழுந்து வந்து நம் முன் நிற்கிறது என்கிறார்கள். அதை உண்மை என்றே கொள்கிறேன்” என்றார். பத்மர் தலைகுனிந்து உடன் நடந்தார்.
அன்று முழுக்க பறவைச்செய்திகள் வந்துகொண்டே இருந்தன. ராஜகிருஹ நகரத்தில் ஒருபகுதி கொந்தளிக்கும் மக்களால் எரிக்கப்பட்டது. பெரும்பாலானவை வணிகர் இல்லங்களும் பண்டநிலைகளும்தான். அரண்மனையில் ஊழியர்குடியிருப்புகள் எரிந்தன. அரசவையை அவர்கள் உடைத்துச் சூறையாடினர். ஆனால் கருவூலம் வீரர்களால் காக்கப்பட்டது. “விந்தை, வணிகர்கள் அவர்களுக்கு துணைநின்றனர் அல்லவா?” என்றார் பிருஹத்ரதன்.
“அரசே, எளியவர்களின் முதல்சினம் எப்போதும் வணிகர்களிடம்தான். அவர்கள் வணிகர்களிடம்தான் நாளும் போரிலிருக்கிறார்கள்.” பிருஹத்ரதன் “அதை வணிகர்களும் அறிந்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களுக்கு உணவளிக்கிறார்கள்” என்றார். “ஆம், உணவளிக்கும் வணிகர்கள்தான் மக்களின் சினத்தை மட்டுப்படுத்துகிறார்கள்” என்றார் பத்மர். “கருவூலத்தை அவர்கள் ஏன் சூறையாடவில்லை?” என்றார் பிருஹத்ரதன்.
“அவர்களுக்கு அது கோயில்கருவறை. சினமிருந்தாலும் அச்சமும் எஞ்சியிருக்கும். ஜராசந்தன் நேற்றே கருவூலத்திற்கு காவலிட்டிருப்பான்” என்றார் பத்மர். “நம் உண்மையான கருவூலம் அங்கே அரசமாளிகைக்கு அடியில் ஒளிந்திருக்கிறது. அதை அவனால் அடையமுடியாது. அரசரோ அரசியரோ அன்றி பிறருக்கு அவ்வழி தெரியாது” என்றார் பத்மர்.
பிருஹத்ரதன் பெருமூச்சுடன் “அனைத்தும் கைவிட்டுச்சென்றுவிட்டன என்னும் உணர்வை நான் அடைந்துவிட்டேன் அமைச்சரே. இனி போரிட என்னால் இயலாது” என்றார். “அரசே, ஷத்ரியர்களின் வழி அதுவல்ல” என்றார் பத்மர். “ஆம். ஆனால் என் இம்மைந்தர் இன்னமும் கடையர். நான் எவருக்காக போரிடவேண்டும்?” என்றார் பிருஹத்ரதன்.
பத்மர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சாளரம் வழியாக அந்தச் சிறியநகரை நோக்கினார். அங்குள்ளவர்கள் ராஜகிருஹ நகரில் நிகழ்ந்தவற்றை அறிந்திருந்தனர். பரபரப்புடன் சாலையில் நடந்துகொண்டிருந்தனர். அவர்களை அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அவர்களுக்குள் ஓடும் எண்ணம் என்ன? எந்த ஆட்சியாளனாவது அவர்களை முழுமையாக அறிந்துவிடமுடியுமா என்ன? அங்கே ராஜகிருஹ நகரில் வெறிகொண்டு கூத்தாடும் எளிய மக்கள் முந்தையநாள் வரை ஆட்டுமந்தைகளாக இருந்தவர்கள் அல்லவா?
அந்தியில் வந்த செய்திகள் அச்சுறுத்தின. எங்கோ ஒரு புள்ளியில் மக்களின் களிவெறியாட்டு கொலைநோக்கி சென்றது. அவர்களிடம் பணம்பெருக்கு வணிகம் செய்யும் ஒருவனை அவர்கள் கிழித்துக்கொன்று முச்சந்தியில் தொங்கவிட்டனர். அதைச்சூழ்ந்து நின்று குருதியை அள்ளி தங்கள் முகங்களில் பூசிக்கொண்டு நடனமிட்டனர். அதன்பின் கொலைகள் தொடர்ந்து நடக்கத் தொடங்கின. வணிகர்கள், நாள் காவல்வீரர்கள், ஆலயப்பொறுப்பாளர்கள் என அவர்களால் வெறுக்கப்பட்டவர்கள் தேடித்தேடி கொல்லப்பட்டனர். பின்னர் கொலைக்காகவே கொலை என்றாயிற்று.
“ராஜகிருஹ நகர்த்தெருக்களில் சேறென குருதி மிதிபடுகிறது. அத்தனை மக்களும் குருதியிலாடி ரத்தபீஜர்கள் போல தெரிகிறார்கள்” என்று ஒற்றனின் ஓலை சொன்னது. இரவு கொழுக்கும்தோறும் கொலைவெறியாட்டு விரைவுகொண்டது. “இப்போது படைவீரர்களும் கொலைக்கலங்களுடன் இறங்கிவிட்டனர். தங்கள் தலைவர்களை கொல்கிறார்கள். ஷத்ரியப் படைத்தலைவர்கள் எவரும் இப்போது எஞ்சவில்லை” என்றது மந்தணச்செய்தி.
நள்ளிரவுக்குப்பின் “இங்கே நிகழ்வது பொருளற்ற கொலை. ஒரு கொலையாவது செய்துவிடவேண்டும் என்னும் எளிய மானுடனின் விழைவின் வெளிப்பாடு மட்டுமே. நகர் முழுக்க சிதைந்த உடல்களும் குருதியும் மிதிபடுகின்றன. இருளில் குருதிவாடையும் அலறல்களும் வெறியாட்டுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன” என்றது ஓலை. இரவு முழுக்க கொலைவெறியாடலின் செய்திகள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. விடியலில் “விடிந்தது. வானைவிட சிவந்துள்ளது நகரம்” என்று செய்திவந்தது.
“அங்கே உள்ள படைகள் என்னதான் செய்கிறார்கள்?” என்று பத்மர் செய்தியனுப்பினார். “ஷத்ரியப்படைகள் நகரத்தின் தெற்குவாயிலைத் திறந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அடித்தளப்படைகள் நகரை முழுமையாக கையகப்படுத்திக்கொண்டிருக்கின்றன” என்றது ஒற்று. “ஷத்ரியப்படைகள் நிலைகுலைந்துள்ளன. அவர்களிடம் தலைமை இல்லை. அரசர் உயிருடனிருக்கும் செய்தியை இங்கே அறிவித்தாகவேண்டும். அரசரையும் இளவரசர்களையும் ஜராசந்தன் கொன்று உண்டுவிட்டான் என்று இங்கே சூதர்கள் பாடுகிறார்கள்.”
பத்மர் அரசரிடம் “ஆம், தாங்கள் இருப்பதை அறிவித்தாகவேண்டும். இல்லையேல் நகரில் நம்மைச்சார்ந்து எண்ணுபவர்களும் நம்பிக்கை இழப்பார்கள். நம்பிக்கையிழந்தால் அவர்கள் அவனை ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்கள். மானுட இயல்பே அதுதான்” என்றார்.
“ராஜகிருஹநகருக்கு வெளியே கொற்றவை வழிபாட்டுக்கு வந்திருக்கும் அரசர் பிருஹத்ரதன் நகரில் நிகழும் கிளர்ச்சியை அறிந்திருக்கிறார். விரைவிலேயே பெரும்படையுடன் நகர் புகுவார். கிளர்ச்சிசெய்பவர்கள் கழுவிலேற்றப்படுவார்கள்” என்று ஒரு பறவைச்செய்தியை பத்மர் ராஜகிருஹ நகருக்கு அனுப்பினார். அதை பட்டோலைகளில் எழுதி நகர்மூலைகளில் தொங்கவிடும்படி ஒற்றர்களுக்கு ஆணையிட்டார். “அவை உடனடியாக அகற்றப்படும். ஆனால் செய்தி வந்தது என்பதை வாயும்செவியும் கொண்டுசெல்லும்” என்றார் பத்மர்.
அன்றுகாலை ராஜகிருஹத்திலிருந்து முதல் ஷத்ரியப்படைப்பிரிவு கிருஷ்ணபாகத்துக்கு வந்தது. அவர்கள் சோர்ந்துபோய் துயிலில் என நடந்தனர். பலருக்கு உடலில் காயங்கள் இருந்தன. அரசரைப்பார்த்ததும் வீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி போர்முழக்கமிட்டனர். மேலும் மேலும் ஷத்ரியப்படைகள் வந்துகொண்டிருந்தன. “நாம் இங்கிருக்கிறோம் என்பதை இனிமேல் மறைக்கமுடியாது” என்றார் பத்மர். “அவன் நம்மை நாளையே தாக்கக்கூடும்… அதற்குள் நாம் கோட்டையை வலுப்படுத்தியாகவேண்டும். படைகளை சீரமைக்கவேண்டும். நோயுற்றவர்கள், காயம்பட்டவர்கள் எவரும் படைமுன் செல்லவேண்டாம். அவர்களின் சோர்வு பிறருக்கும் பரவக்கூடியது.”
உச்சிப்பொழுதுக்குள் ராஜகிருஹநகரிலிருந்து வந்த ஷத்ரியப்படைகளால் கிருஷ்ணபாகம் நகர் நிறைந்து விம்மத்தொடங்கியது. வீரர்கள் தெருக்களிலும் மன்றுகளிலும் தங்கினர். “அவன் இப்போது நகரைவிட்டு வரமுடியாது. இன்றைக்குள் நகரத்தை அவன் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் மக்கள் அவனை எதிர்க்கத் தொடங்கிவிடுவார்கள்” என்றார் பத்மர். “வன்முறையாடும் மக்கள் சிறுபகுதியினரே. இல்லங்களில் ஒளிந்திருப்பவர்களே மிகுதி.” பிருஹத்ரதன் “அவனிடம் படைகள் இல்லை. அடித்தளப்படைகளைக்கொண்டு அவன் நகரை ஆள முடியாது” என்றார்.
பத்மர் பகல்முழுக்க படைகளைச் சீரமைக்கும் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். கிருதி மட்டிலுமே அரண்மனையில் இருந்தான். பிறமூவரும் நகரில் புரவிகளில் அலைந்துகொண்டிருந்தனர். “நாளை பகலிலேயே ஜராசந்தனின் படைகள் கிருஷ்ணபாகநகரை தாக்கக்கூடும்” என்று ஒற்றுச்செய்தி வந்தது. “அது எப்படி?” என்று பத்மர் கேட்டார். “அந்நகரைப் பாதுகாக்கவே அவனிடம் படைகள் இல்லையே?” கிருதி “அவன் வரட்டும். ஷத்ரியர் ஆற்றல் என்ன என்று அவனுக்குக் காட்டுவோம்” என்று சொன்னான்.
ஆனால் அன்று அந்தியிலேயே ஜராசந்தன் படைகொண்டுவந்து கிருஷ்ணபாகநகரை தாக்கினான். முதலில் அரையிருளில் பிருஹத்ரதனையும் இளவரசர்களையும் வாழ்த்தியபடி பந்தங்களுடன் குறுங்காடுவழியாக வந்தவர்கள் எஞ்சிய ஷத்ரியப்படைகள் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள். அவர்களின் முதல்நிரை கோட்டைவாயிலைத் தாக்கி உட்புகுந்து வெட்டத்தொடங்கியபின்னரே அவர்கள் ஜராசந்தனின் படைகள் என்றறிந்தனர்.
போர்முரசுகள் ஒலிக்கக்கேட்ட பின்னரும்கூட பத்மர் என்ன நிகழ்கிறதென்பதை புரிந்துகொள்ளவில்லை. கிருதி வந்து “போர்முரசல்லவா?” என்றபோது “பிழையாக முழக்குகிறார்கள் போலும்” என்றார். மேலும் மேலுமென ஜராசந்தனின் படைகள் உள்ளே வந்தன. சற்றுநேரத்திலேயே கிருஷ்ணபாகநகரம் அவர்களால் நிறைந்தது. “இளவரசே, தப்பி ஓடுங்கள். இந்நகரைக் காக்க நம்மால் முடியாது” என்றார் பத்மர். “வீணன்… அவனுக்கு எப்படி இத்தனை படைவல்லமை?” என்றான் கிருதி.
குருதி வழியும் உடலுடன் படைமுகப்பிலிருந்து அப்படியே ஓடி உள்ளே வந்த பிருகத்சீர்ஷன் “மூத்தவரே, அவர்கள் அசுரப்படையினர். அவன் சுற்றுமுள்ள ஆசுரநாடுகள் அனைத்துக்கும் நேற்றே செய்தியனுப்பி படைகளை கொண்டுவரச்சொல்லியிருக்கிறான்” என்றான். பின்னால் ஓடிவந்த ஜயசேனன் “அசுரப்படைகள். காட்டுமக்கள்” என்று கூவினான்.
ஆசுரநாட்டு சிற்றரசர்கள் அனைவருக்கும் கிளர்ச்சி தொடங்கியநாளே ஜராசந்தன் ஓலைகளுடன் தூதர்களை அனுப்பியிருந்தான். அவர்களை ராஜகிருஹநகருக்கு வராமல் கிருஷ்ணபாகநகருக்குச் செல்லும்படி பணித்திருந்தான். அசுரப்படைகளை நடத்திவந்த வஜ்ரபாகு மூன்றுமுறை மகதத்தின் ஷத்ரியர்களால் வெல்லப்பட்டவன். அவன் ஊர்கள் சூறையாடப்பட்டன. அவன் குடியினர் கொன்றழிக்கப்பட்டனர். அவன்படைகள் பெருவஞ்சம் கொண்டிருந்தன.
கிருஷ்ணபாகம் தெருக்களில் குருதி ஓடத்தொடங்கியது. நான்கு இளவரசர்களும் அரண்மனைக்குள் வந்ததும் “தப்பிச்செல்வோம். நமக்கு வலுவான போர்முனை இனிமேல்தான் உள்ளது. அசுரர் நமக்கெதிராக வந்ததை பாரதவர்ஷத்தின் ஷத்ரிய மன்னர் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அத்தனை ஷத்ரியநாடுகளும் அசுரர்களின் நாடுகளுக்குமேல்தான் தங்கள் அரசுகளை அமைத்துள்ளன. அசுரர் எழுவதென்பது அடிமண் வெடிப்பதுபோல. இவனை முளையிலேயே அவர்கள் கிள்ளுவார்கள்…” என்றார் பத்மர்.
கிருதி பதைப்புடன் “இப்போது எங்கே செல்வது பத்மரே?” என்றான். “இங்கிருந்து வெளியேறுவோம். முதலில் வங்கத்திற்குச் செல்வோம். புண்டர நாட்டின் வாசுதேவன் அசுரர்களுக்கு எதிராக படைகொண்டு நின்றிருக்கும் தருணம் இது. நாம் அவனுடன் இணைந்துகொள்வோம்.” கிருதி “சொல்லறிந்த நாள்முதல் வங்கர்கள் நம் எதிரிகள்” என்றான். “ஆம், ஆனால் அசுரர்கள் நம் அனைவருக்கும் பொது எதிரிகள்” என்றார் பத்மர்.
பிருஹத்ரதன் “நான் வரப்போவதில்லை” என்றார். “என்ன சொல்கிறீர்கள் அரசே?” என்றார் பத்மர். “நான் என்றும் பௌண்டரிக வாசுதேவனை என் எதிரி என்றே நினைத்திருக்கிறேன். குலமிலியான அவனை எந்த அவையிலும் நிகராக நடத்தியதில்லை. இன்று அவன் அவையில் சென்று அடிபணிந்து அமர்வதைவிட என் மைந்தன் கையால் இறக்கிறேன்” என்றார்.
சினத்துடன் ஏதோ சொல்லவந்த கிருதியை கையமர்த்தித் தடுத்து பத்மர் “அதுவும் நன்றே. அரசே தாங்கள் ஜராசந்தனிடம் அடைக்கலமாகுங்கள். என்ன செய்தாலும் அவனை அரசன் என்றோ மைந்தன் என்றோ ஏற்கவேண்டாம்” என்றார். “ஆம், அவனை என்னால் ஏற்கமுடியாது. உபரிசிரவசுவின் அரியணையில் ஜரன் அமர்ந்தால் என் முன்னோர் என்னை பொறுத்தருளமாட்டார்கள்” என்றார் பிருஹத்ரதன்.
வெளியே செல்கையில் கிருதி “அவர் இங்கே இருக்க நாங்கள் செல்வதெப்படி?” என்றான். பத்மர் “புரிந்துகொள்ளுங்கள் இளவரசே. அவனுடன் இருக்கையில் அரசர் அவனை ஏற்கவில்லை என்றால் அதுவே மக்களிடையே பேச்சாகும்” என்றார். கிருதி “அவன் அவரை கொல்வான்” என்றான். “அப்படி நிகழ்ந்தால் அதுவும் நன்றே. அவன் பெரும்பழி சூழ்ந்தவனாவான். அவனை வென்றபின் நம்மால் அவனை எளிதில் கழுவேற்ற முடியும்.”
வஜ்ரபாகுவின் படைகள் அரண்மனையை வென்று உள்ளே வந்தபோது அங்கே அரசரும் தேவியரும் மட்டுமே இருந்தனர். அமைச்சரும் இளவரசர்களும் கரவுப்பாதை வழியாக தப்பிச் சென்றுவிட்டிருந்தனர். கங்கையில் சென்ற வணிகப்படகு ஒன்றில் மாறுதோற்றத்தில் ஏறி புண்டரநாட்டின் எல்லைக்குச் சென்றிறங்கியபோது அரசரும் தேவியரும் சிறைபிடிக்கப்பட்டு ராஜகிருஹத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட செய்தியுடன் பறவை அவர்களைத் தேடி வந்தது.
இரவில் அவர்கள் புண்டரநாட்டின் தலைநகரான புண்டரவர்த்தனத்தை அடைந்தனர். அங்கு முன்னரே அவர்கள் வரும் செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. காவலர்தலைவன் அவர்களை அரண்மனைக்கு அழைத்துச்சென்றபோது அவர்கள் களைத்திருந்தனர். கிருதி “இவர்கள் நம்மை எப்படி நடத்துவார்கள் அமைச்சரே? படைகளின்றி வந்துள்ளோம்…” என்றான். “படைகளை நாம் திரட்டமுடியும். அதற்கு இன்னும் வாய்ப்புள்ளது. ஷத்ரியர் அவனை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை” என்றார் பத்மர். தங்களுக்கான அரண்மனையில் அவர்கள் தங்கியபோது உளச்சோர்வை உடற்களைப்பு மறைத்தது.
வெயிலெழுவது வரை ஓய்வெடுத்து எழுந்து அணிகொண்டு பௌண்டரிக வாசுதேவனின் அவைக்குச் சென்றனர். அவர்களை அழைத்துச்செல்ல இளைய அமைச்சன் ஒருவன் வந்திருந்தான். “இவன் அமைச்சனா, வெறும் கணக்கனா? நாம் புண்டரநாட்டினும் மும்மடங்கு பெரிய மகதத்தின் அரசகுலம். நம்மை அழைத்துச்செல்ல மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்புவதல்லவா முறை?” என்றான் கிருதி.
“நாம் இங்கே அவர்களின் உதவிகொள்ள வந்தவர்கள். அரசமுறையாக வரவில்லை” என்றார் பத்மர். “அதை நாம் உணரவேண்டுமென விரும்புகிறான் வாசுதேவன்.” பிருகத்சீர்ஷன் “மகதத்தை நாம் வென்றால் படைகொண்டு வரப்போவது புண்டரத்தின்மேல்தான். இந்த இழிசினன் அணிந்துள்ள மணிமுடியை நம் கால்களால் பந்தாடி விளையாடவேண்டும்” என்றான். பத்மர் புன்னகைசெய்தார்.
அவர்களை இருநாழிகைநேரம் அவைக்கு வெளியே நிற்கச்செய்தனர் ஏவலர். “அரசர் அமைச்சு சூழ்கிறார். காத்திருக்கும்படி கோரினார்” என்றார் அவையமைச்சர். “என்ன இது அமைச்சரே? அரசதூதர்களைக்கூட இப்படி நிற்கச்செய்யும் வழக்கமில்லை” என்றான் ஜயசேனன். “நாம் பொறுத்துதான் ஆகவேண்டும். நமக்கு வேறுவழியே இல்லை” என்றார் பத்மர்.
அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டபோது பத்மர் மெல்ல “இப்போது நமக்கு மாற்று ஏதுமில்லை. அவனுக்கு அவைபுகும் குடிகள் அரசனுக்கு அளிக்கும் வணக்கத்தை அளிப்போம்” என்றார். “என்ன சொல்கிறீர்கள்? நம் மூத்தவர் மகதத்தின் பட்டத்து இளவரசர்” என்றான் பிருகத்சீர்ஷன் பல்லைக் கடித்தபடி. “ஆம், ஆனால் இப்போது நம் அரசருக்கே மணிமுடி இல்லை” என்றார் பத்மர்.
கிருதி “ம்?” என்று உறும அவன் விழிகளை நோக்கி “ஆம், அதுவே நடைமுறை உண்மை. அதனுடன் பொருந்துவோம். நாம் இன்று இவ்வரசனை வென்றெடுத்தாகவேண்டும். இவன் உதவியில்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது” என்றார் பத்மர். “இவன் பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனை அஞ்சுகிறான். அவன் நரகாசுரனின் குருதிவழிவந்தவன். அசுரர்களைபற்றிய இவன் அச்சத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளமுடியும். நாம் இவனுக்கிழைத்த சிறுமைகளுக்கு ஈடுசெய்ய விழைவான். அதை அவனுக்கு அளிப்போம். இது நம் களம் அல்ல, அவனுடைய களம். அவனுடைய நீக்கம்” என்றார். கிருதி பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.
அவர்கள் அவை நுழைந்து பௌண்டரிக வாசுதேவனுக்கு முழுத்தலைவணக்கம் அளித்தனர். “பெரும்புகழ்கொண்ட புண்டரநாட்டின் அரியணை வீற்றிருக்கும் பாலியின் கொடிவழிவந்த பேரரசர் வாசுதேவரை வணங்குகிறேன். இவர் மகதத்தின் பட்டத்து இளவரசர் கிருதி. இவர்கள் இளையோர் பிருகத்சீர்ஷரும் பிருகத்புஜரும் ஜயசேனரும். இவர்கள் தங்கள் அடிபணிகிறார்கள்” என்றார் பத்மர்.
இளவரசர்கள் தலைவணங்கி முகமன் சொன்னபோது பௌண்டரிக வாசுதேவன் உதடுகளில் பெருஞ்சிரிப்பு பரவியது. கரியதோள்களும் நீண்ட கைகளும் கொண்டிருந்த வாசுதேவன் தலையில் மயிற்பீலி சூடியிருந்தான். யாதவ வாசுதேவனுக்கு மாற்றாக தன் பெயரும் பேசப்படவேண்டும் என்று விழைவுகொண்டிருந்தான். தன்னை பௌண்டரிக வாசுதேவன் என சூதர்கள் பாடுவதை விரும்பினான். அதைக்குறித்த பல பகடிகளை பத்மர் கேட்டிருந்தார். “தங்கள் கரியபெருந்தோள்களே பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய படைக்கலங்கள் என்று அறிந்திருக்கிறேன். இப்போது கண்டேன். வாசுதேவர் என்றால் அது தாங்களே என்றுணர்ந்தேன்” என்றார்.
தொடையிலறைந்து உரக்க நகைத்த பௌண்டரிக வாசுதேவன் “நன்று… நீங்கள் என் அவைக்கு வந்ததும் நல்லூழே. உங்களுக்கு ஆவன செய்ய நான் உளம்கொண்டிருக்கிறேன். இந்த அவையும் உங்களிடம் கருணைகொண்டிருக்கிறது. அமர்க!” என்றான். “நான் செய்யக்கூடுவது யாது?” என்றான். “மகதத்தின் மணிமுடிக்குரியவர் இவர். இவரது முடியை அசுரர் முறையிலாது கைப்பற்றியிருக்கிறார்கள். ஷத்ரியர் அதற்கெதிராக அணிதிரளவேண்டும். படையும் துணையும் அளித்து அக்காட்டாளனை வெல்ல உதவவேண்டும்” என்றார் பத்மர்.
“பத்மரே, இன்றுகாலை வந்த செய்தி இது. இன்று மாலை அங்கே ராஜகிருஹத்தில் ஜராசந்தனை தன் முதல்மைந்தனாக அறிவித்து முறைப்படி மகதத்தின் முடியை சூட்டுகிறார் மகத அரசர் பிருஹத்ரதன். உடனமர்கிறார்கள் அவரது அரசியர். தனக்குப்பின் தன்மூதாதையர் மணிமுடியை எவர் சூடவேண்டும் என்பது அரசர்கள் எடுக்கும் முடிவு. அதில் பிறநாட்டவர் தலையிடுவதில்லை” என்றான் பௌண்டரிக வாசுதேவன்.
[ 16 ]
ஓராண்டுகாலம் மகதம் கொலைப்பித்துகொண்ட மலைத்தெய்வங்களால்தான் ஆட்டிப்படைக்கப்பட்டது. பௌண்டரவர்த்தனத்திற்கு ஒவ்வொருநாளும் ராஜகிருஹத்தில் நிகழ்ந்த கொலையாட்டின் செய்திகள்தான் வந்துகொண்டிருந்தன. காலையில் அன்றைய தலையெண்ணிக்கையுடன்தான் பறவைச்செய்திகள் வந்தன. படைத்தலைவர்கள், அமைச்சர்கள், அரசுப்பொறுப்பாளர்கள், சுங்கநாயகங்கள், ஓலைக்காரர்கள், ஒற்றர்கள் என கொலைக்களம் சென்றுகொண்டே இருந்தனர். குருதி பெறுந்தோறும் மேலும் விடாய்கொண்டன அத்தெய்வங்கள். வணிகர்களும் குலத்தலைவர்களும் கொலையுண்டனர்.
கொலைகள் அனைத்தும் வெளிப்படையாக பொது இடங்களில்தான் நடைபெற்றன. கொலைகளுக்கான புதியவழிகள் கண்டடையப்பட்டன. முச்சந்தியில் நெய்யூற்றி எரிக்கப்பட்டார்கள். தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு உடல்நீர் வழிந்தோடி இறந்தனர். வெல்லப்பாகு தூவி கைகள் கட்டப்பட்டு பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் உணவாக்கப்பட்டனர். மெல்லியதோல்சவ்வு ஒட்டப்பட்ட தோலுடன் கைகள் கட்டி வெயிலில் போடப்பட்டனர். அத்தோலை உரித்தெடுத்த புண்ணில் உப்பு பூசப்பட்டு மீண்டும் வெயிலில் விடப்பட்டனர். கங்கையின் பொரிமணலை இரைப்பை நிறைத்து ஊட்டி ஊர்மன்றில் விடப்பட்டனர். மெல்லிய சுருள்கம்பிகளை அழுத்திச்சுருட்டி அப்பங்களில் வைத்து விழுங்கும்படிச் செய்யப்பட்டனர். யானைகள் இருபக்கமும் நின்றிழுக்க இரண்டாக கிழிக்கப்பட்டனர். குதிரைகளில் கட்டப்பட்டு நகர்முழுக்க இழுத்துச்செல்லும்படிச் செய்யப்பட்டனர். ஒவ்வொருநாளும் உடல்வெட்டப்பட்டு அந்த ஊனையே சமைத்து உணவாக அளிக்கப்பட்டனர்.
ராஜகிருஹம் வெறிகொண்டு குருதியாடியது. அதன் வானில் ஊன் தின்று சுவைகண்ட பறவைகள் எப்போதும் சூழப்பறந்தன என்றார்கள். அங்கிருந்து ஷத்ரியர் தப்பி ஓடி பௌண்டரிகவர்த்தனத்திற்கு வந்துகொண்டிருந்தனர். எல்லைகாத்த பன்னிரு படைப்பிரிவுகள் பௌண்டரிகவர்த்தனத்திற்கு வந்து சேர்ந்தபோது கிருதி தன்னம்பிக்கை கொண்டான். “அங்கே அந்த அரக்கன் மேல் மக்களின் கசப்பு எழுந்துள்ளது. அவனை நாம் நம் தேர்க்காலில் கட்டி நகரெங்கும் இழுத்துச்செல்லும் நாள் அணுகிவருகிறது” என்றான். “ஒவ்வொருநாளும் கனவில் அவன் குருதியை நான் குடிக்கிறேன்” என்றான் ஜயசேனன்.
ஆனால் நேர்மாறாகவே மக்களின் உள்ளம் செல்கிறது என்பதை பத்மருக்கு வந்த தூதுச்செய்திகள் உணர்த்தின. ஓர் அரசன் அக்கொடுமைகளில் ஒன்றைச்செய்தால்கூட மக்கள் அவனை தலைமுறைகளுக்கு வெறுப்பார்கள். பழிகொண்ட மண்ணிலிருந்து குடிகளுடன் கிளம்பிச்செல்வார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் செய்யும் அத்தனை கொடுமைகளுடனும் அவர்களின் கனவுகள் இணைந்துகொண்டன. அவர்கள் அக்கொடுநிகழ்வுகளை ஆதரித்தனர். ஆதரிப்பதற்குரிய தொடக்கச்சொற்களை மட்டும் சூதர்கள் உரியமுறையில் எடுத்தளித்தால்போதும். அவற்றை அவர்கள் நெய்யெரி என வளர்த்துக்கொண்டனர்.
“அவர்கள் ஒவ்வொருவரும் அவனாக நின்று அவற்றை இயற்றுகிறார்கள். அவன் அரசன் அல்ல, வீரத்தலைவன். மக்கள் வீரர்களை வழிபடுகிறார்கள். வீரர்களுக்கு தங்கள் குருதியை மகிழ்வுடன் அளிக்கிறார்கள். அவன் உண்ட குருதியின்பொருட்டே அவனை கொண்டாடி தெய்வமாக்குகிறார்கள்” என்றார் பத்மர். “கார்த்தவீரியன் குடித்த குருதிக்கு இன்னமும் இவன் நிகர்செல்லவில்லை.” கிருதி “இந்தக்கொள்கைகள் எவையும் எனக்கு புரியவில்லை. மக்கள் அவனை வெறுக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்” என்றான்.
“வெறுப்பார்கள். அதற்கு அவன் வெல்லப்படவேண்டும். அவன் தோற்ற மறுகணமே அவர்கள் அவன் கொடுமைகளை காணத் தொடங்குவார்கள். அவனை இழித்தும் பழித்தும் உரைப்பார்கள். அவன் வெல்லற்கரியவன் என்பதனால்தான் கொண்டாடுகிறார்கள். தோற்றுவிட்டான் என்றால் அவன் எளியவன் ஆகிவிடுகிறான். வெல்லற்கரிய தேவனுக்கு கொடுமைகளை ஆற்றும் உரிமையுண்டு என எண்ணுகிறார்கள். அவன் தங்களைப்போன்றவனே என்றால் தங்களைக் கட்டுப்படுத்தும் நெறிகளும் நம்பிக்கைகளும் அவனுக்கும் இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள்.”
எரிச்சலுடன் தலையை அசைத்து கிருதி எழுந்துசென்றான். “அவன் குருதியை என் கைகளில் அள்ளி முகத்தில் பூசவேண்டும். அதன்பின்னரே இச்சொற்களை புரிந்துகொள்ளும் தெளிவெனக்கு அமையும்” என்றான். “அமைச்சர் சொல்வது உண்மை. அவர் மக்களுடன் சேர்ந்து களியாடுகிறார். ஒவ்வொருநாளும் ஒருவர் இல்லத்தில் உணவருந்துகிறார். அவர்களின் குழந்தைகளை அரண்மனைக்கு கொண்டுசென்று விளையாடுகிறார். அன்னையர் அவரை தங்கள் மைந்தன் என்றே நினைக்கிறார்கள்” என்றான் ராஜகிருஹத்திலிருந்து வந்த ஒற்றன்.
“ஏழைகளின் விழிநீரை அறிந்தவர் என்று அவரை சொல்கிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். “ஒருமுறை குழந்தை ஒன்று பாழ்கிணற்றில் விழுந்தது. வீரர் குதிப்பதற்கு முன்னரே தான் குதித்து அதை மீட்டார். அவரே மருத்துவரிடம் கொண்டுசென்றார். அக்குழந்தை கண்விழித்தெழும்போது அள்ளி நெஞ்சோடணைத்து கண்ணீர்விட்டார்.” கிருதி “நடிகன்” என்று சினத்துடன் சொன்னான். “இல்லை இளவரசே, அது நடிப்பல்ல. நடிப்பை எளியோர் எளிதில் உணர்ந்துகொள்வர். அத்துடன் அத்தனைநாள் தொடர்ச்சியாக சலிப்பின்றி நடிக்கவும் எவராலும் இயலாது” என்றார் பத்மர்.
“அவர் ஒருவரல்ல இருவர் என்கிறார்கள்” என்று கீர்த்திமான் சொன்னான். “அவரது இடப்பக்கமும் வலப்பக்கமும் நிகரானவை அல்ல. இடப்பக்கத்திற்கு இருக்கும் வல்லமை வலப்பக்கத்திற்கு இல்லை. மக்களுக்கு வலப்பக்கத்தையும் கொடியோருக்கு இடப்பக்கத்தையும் காட்டுபவர் என்று அவரைப்பற்றி சூதர்கள் பாடுகிறார்கள்.” கிருதி சலிப்புடன் “கதைகள்… கதைகளுடன் போரிடுவதைப்போல கடினமானது பிறிதொன்றில்லை” என்றான்.
மகதத்தின் ஷத்ரியர்கள் பௌண்டரிகவர்த்தனத்தில் ஒன்றுகூடினர். நகருக்கு வெளியே அவர்களின் படைகள் குறுங்காட்டில் குடில்களில் வாழ்ந்தன. புண்டரநாட்டின் படைகளை போருக்கனுப்ப இயலாது என்று பௌண்டரிக வாசுதேவன் சொல்லிவிட்டான். “மகதம் பெரும்நாடு. அதை நான் பகைத்துக்கொண்டால் எனக்கு இருபக்கமும் அசுரர்கள் அமைவார்கள். ஜராசந்தன் பகதத்தனுடன் கைகோத்துக்கொண்டால் நான் அழிவது திண்ணம்” என்றான். “பிற ஷத்ரியர்களின் உதவியை நாடுங்கள். அஸ்தினபுரியின் உதவி பெற்றால் நீங்கள் வெல்லக்கூடும்.”
மகதப்படைகள் ஒவ்வொரு கணமும் என பெருகிக்கொண்டிருந்தன. “அவன் ஜரையின் மைந்தன். ஆசுர குடியே அவனுக்குத் துணைவர அது ஒன்றே போதும்” என்றார் பௌண்டரிக வாசுதேவனின் அமைச்சர் சுபத்ரர். “மதுராவின் சூரசேனனின் மைந்தன் கம்சனின் ஆதரவுப்படைகள் இன்று நகரை அடைந்துவிட்டன என்றார்கள். சேதியின் தமகோஷனின் படைகள் முன்னரே வந்துவிட்டன. மகதம் எவ்வகையிலும் வல்லமை குன்றவில்லை. அதை வெல்லும் ஆற்றல் கொண்டது அஸ்தினபுரி. ஆனால் அங்கே அரசர்கள் இல்லை. முடிசூடிய பாண்டு காட்டிலிருக்கிறார். விழியற்ற திருதராஷ்டிரர் களம்நிற்க இயலாதவர். சூதர் விதுரரின் ஆட்சியில் அரசு நிகழ்கிறது. இன்று ஷத்ரியர் எவரும் உங்களுடன் வரப்போவதில்லை.”
ஒவ்வொருநாளும் ஷத்ரிய அரசர்களுக்கு தூதனுப்பிக் கொண்டிருந்தார் பத்மர். எவரும் உதவவில்லை. கலிங்கமும் மாளவமும் மட்டும் சிறிய நிதிக்கொடை அளித்தன. பத்மர் உளம்தளர்ந்தார். “நாம் போரில் வெல்லப்போவதில்லை இளவரசர்களே. நாம் போரிடக்கூடும் என்பதை மட்டுமே இந்தப் பகடைக்களத்தில் காய் என முன்வைக்கமுடியும். அதைக்கொண்டு ஆடுவோம். ஒருசில ஊர்களாவது எஞ்சுமென்றால் அதுவே நமக்கு நன்று” என்றார். “அவ்வூர்களில் அமர்ந்து நாம் அந்த இழிசினனுக்கு கப்பம் கட்டி வாழவேண்டுமா என்ன? அமைச்சரே, நான் உபரிசிரவசுவின் கொடிவழி வந்தவன்” என்றான் கிருதி.
“ஆம், ஆனால் பிருஹத்ரதரும் அக்கொடிவழி வந்தவரே. அவர் அங்கே ஜராசந்தனின் அரண்மனையில் மகிழ்ந்திருக்கிறார். ஆலயங்களில் பூசனைகள் செய்கிறார். நூலறிவோருடன் மன்றுகூடுகிறார். அவரது அரசியர் தங்கள் முதல்மைந்தனுடன் கலைக்கூடங்களில் அமர்ந்து இசையும் நடனமும் சுவைக்கிறார்கள்” என்றார் பத்மர். “ஆம், அதற்கான விலையை அவர்கள் அளிப்பார்கள்” என்று கிருதி வஞ்சத்துடன் கைகளை இறுக்கினான். பத்மர் சோர்வுடன் “அவன் எதிர்ப்பவர்களால் வளர்க்கப்படுகிறான்” என்றார். கிருதி “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். பத்மர் பெருமூச்சுடன் எழுந்துகொண்டார்.