பன்னிரு படைக்களம் - 15

[ 13 ]

அவ்விரவில் ஜராசந்தன் எங்கு தங்குகிறான் என்பதை நோக்கிவர பத்மர் தன் ஒற்றர்களை அனுப்பியிருந்தார். அவன் ஐங்குலத்தலைவர்களில் வல்லமைமிக்கவர் எவரோ அவருடன்தான் தங்குவான் என்று கணித்தார். மகதம் மருதநிலத்தவர்களின் நாடு. வேளிர்களின் தலைவரான உரகர் அரசருக்கு நிகரானவராகவே அவர்களால் மதிக்கப்பட்டார். அவரது வீட்டுக்கு அவன் சென்று தங்கினால் அவர் அவனை ஆதரிக்காமலிருக்க முடியாது. அதை பயன்படுத்தி பிற குலத்தலைவர்கள் ஓரிருவரை தன்பால் இழுக்கமுடியும் என அவர் எண்ணினார்.

ஆனால் ஒற்றர்கள் வந்து ஜராசந்தன் நகர்மன்றிலேயே இருக்கிறான் என்று சொன்னார்கள். அரண்மனைமுற்றத்திலிருந்து சென்ற மக்கள்திரள் நகர்மன்றை அடைந்ததும் நின்றது. அவர்கள் நடுவே ஓர் உடைந்த தேரின்மேல் ஏறி நின்ற ஜராசந்தன் உரத்த குரலில் “நான் காட்டிலிருந்து வருகிறேன்” என்று பேசத்தொடங்கினான். எந்த முகமனும் இல்லாமல் அவன் பேசத்தொடங்கியதே அவர்களை மகிழச்செய்தது. “நான் காட்டிலிருந்து வருகிறேன்” என்பதையே அவன் பலமுறை சொன்னான். அவர்கள் சிரித்தும், கூச்சலிட்டும், மெல்ல அமைவது வரை அவன் காத்துநின்றிருந்தான்.

“அங்கே மலைத்தெய்வங்கள் வாழ்கின்றன. அவை குருதிகொள்பவை. பலி கேட்பவை” என்று அவன் தொடர்ந்தபோது கூட்டம் முழுமையாக அமைதிகொண்டது. “அவை விண்ணில் வாழும் தெய்வங்கள் அல்ல. பாதாளத்தில் வாழ்பவை. பாதாளத்திலிருந்து மேலே வருவதற்கான வழி ஒன்று உள்ளது. அங்கே வரமாதாவின் சித்திரம் உள்ளது.” அவன் சொல்வன மிக எளிய நேரடிக்கூற்றாக இருந்தன. ஆனால் ஒவ்வொருவரும் அவற்றிலிருந்து மேலும் மேலும் பொருள்கொண்டனர்.

“அங்கே இருளில் மகாபலி வாழ்கிறார். அவரை வாமனன் தலையில் மிதித்து மண்ணுக்குள் செலுத்தினார். அங்கேதான் ராவணப்பிரபு வாழ்கிறார். ஹிரண்யகசிபு அங்கே வாழ்கிறார். கார்த்தவீரியனும் மகிஷாசுரனும் ரக்தபீஜனும் அங்கே வாழ்கிறார்கள். என் அன்னை அந்த வழியாக இருண்ட பாதாளத்திற்குச் சென்றாள். அவளை நான் தொடர்ந்துசென்றேன். என்னிடம் அன்னை பேசினாள். அங்கே இந்த மண்ணை ஆண்ட அசுரப்பேரரசர்கள் உணவும் நீருமில்லாமல் இருக்கிறார்கள் என்று அவள் சொன்னாள். தான் ஆண்ட மண்ணில் இப்போதும் அறம் தழைக்கிறதல்லவா என்று மகாபலி கேட்டதாக என் அன்னை சொன்னாள்.”

மிகச்சில சொற்களிலேயே அவன் அப்பெருங்கூட்டத்தை விழிகளின் திரளாக மாற்றி அமரச்செய்துவிட்டான் என்றனர் ஒற்றர். “எவ்வண்ணம் அது நிகழ்ந்தது என்று அறியேன் அமைச்சரே. தேர்ந்த சொல்வலர்கூட அத்தகைய முற்றான சூழ்கையை அவர்கள் மேல் நிகழ்த்திவிடமுடியாது. அவர்கள் பலதிறப்பட்டவர். சந்தைக்கு வந்த வணிகர்கள், வேளாண்குடிகள், சிறுவர்கள். தெருவில் அலையும் களிமகன்களும் புறகுடிகளும்கூட அவர்களில் இருந்தனர். சொல்லறியாத கூட்டம்” என்றான் ஒற்றன் கீர்த்திமான்.

“தற்செயலாக அமைந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால் அனைத்தும் சரியாக அமைந்துவிட்டன” என்றார் பத்மர். “மாபெரும் உரைகள் அமைய நான்கு அடிப்படைகள் தேவை. ஒன்று, அதற்குரிய வரலாற்றுநாடகத்தருணம். இரண்டு, அதை சொல்பவனின் மாறுபட்ட உடற்தோற்றம். மூன்று, அவன் உருவாக்கும் தொல் நினைவுகள். நான்கு, அப்பேச்சு நேரடியாக நெஞ்சிலிருந்து எழுந்து வருவது.”

இரண்டாவது ஒற்றன் சர்வன் தலையசைத்து “ஆம், அவன் பேச்சு அத்தகையது. நெடுநேரம் அவன் பேசவில்லை. ஆனால் ஒவ்வொரு சொல்லிலும் ஏதோ உட்குறிப்பு இருந்தது” என்றான். “முதலில் மக்கள் அவனைநோக்கி சிரித்துக்கொண்டிருந்தனர். எப்போது அவனை அவர்கள் வணங்கத்தொடங்கினர் என்பதை என்னால் கணிக்கவேமுடியவில்லை.”

பத்மர் புன்னகைத்து “அதை வரலாற்றில் எவரும் கணித்ததில்லை. மக்களிலிருந்து ஒருவன் எழுந்து வருகிறான். அவன் பெரும்பாலும் அவர்களிலேயே கடையன். அவர்கள் அவனை குனிந்து நோக்கி அறிவிலி என்றும் அழுக்கன் என்றும் ஏளனம் செய்கிறார்கள். அவன் பேசும் நேரடிப்பேச்சுக்களை கனிவுடன் நகையாடியபடி கேட்கிறார்கள். தங்களைவிட கற்றவர்கள், பீடம்கொண்டவர்கள் பேசும் பேச்சுக்களை கேட்கையில் அவர்களிடம் முன்னரே உருவாகிவிடும் எதிர்ப்பு நிலை அப்போது இருப்பதில்லை. ஆகவே அவன் சொற்கள் நேரடியாக அவர்களின் உள்ளங்களுக்குள் செல்கின்றன. அவை அங்கே வளர்கின்றன. அவன் அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கு நெருக்கமானவனாக ஆகிவிடுகிறான்.”

சர்வன் “ஆம், அவர்கள் சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அவன் துள்ளி தேர்த்தட்டின் மேல் ஏறியபோது சிறுவனைக்கண்டு சிரிக்கும் முதியவர் போலிருந்தனர்” என்றான். “அவன் சொற்கள் வல்லமைகொண்டவை. மூதாதையர் வாழும் காட்டை, மலைத்தெய்வங்கள் வாழும் காட்டைச் சேர்ந்தவன் என்கிறான். அவன் தெய்வங்கள் இருண்ட ஆழத்திலிருந்து எழுபவை. இங்கோ நகரில் அரசரின் தெய்வங்கள் விண்ணிலிருந்து வந்து பொற்பூச்சிட்ட கோபுரங்களுக்குக் கீழே மணியும் மலரும் சூடி காவியமும் இசையும் கேட்டு பூசனைபெற்று அமர்ந்திருக்கின்றன. இம்மக்கள் அனைவரும் விண்ணாளும் தெய்வங்களை வழிபடுகிறவர்களே. ஆனால் இவர்கள் அனைவரின் குலதெய்வங்களும் ஆழுலகில் வாழும் பேய்த்தெய்வங்கள். பலிகொள்ளும் காட்டுத்தெய்வங்கள். மிக எளிதாக அவன் எதிர்நிலை ஒன்றை உருவாக்கிவிட்டான்.”

உச்சிப்பொழுதில் வந்த ஒற்றர்கள் ஊர்மன்றில் கலைநிகழ்ச்சிகள் நடப்பதாக சொன்னார்கள். ஒற்றன் குசன் “அங்கே ஆடிக்கொண்டிருப்பவர்கள் நூலறிந்த அரண்மனைச் சூதர்கள் அல்ல. தெருமுனைப்பாடகர்கள். கழைக்கூத்தாடிகள். அவர்களுடன் கள்ளுண்டு நிலைமறந்த களிமகன்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அமைச்சரே, அவர்களுடன் அவனும் ஆடிப்பாடுகிறான். கழைக்கூத்தாடிகளே வியக்கும் வகையில் கயிற்றிலும் மூங்கிலிலும் ஏறி தாவுகிறான்” என்றான்.

இன்னொரு ஒற்றனாகிய சாம்பவன் “அவர்கள் நடுவே குரங்கு போல தாவுகிறான். எருதுபோல தசைவலிமை காட்டுகிறான். யானையைப்போல மற்போரிடுகிறான். இந்நகரில் உள்ள அத்தனை மல்லர்களையும் வென்றுவிட்டான். பன்னிரு மல்லர்களை ஒரே வீச்சில் தூக்கி வீசினான். பாரதவர்ஷத்தில் அவனுக்கு நிகரான மல்லர் என்று பீஷ்மரையும் திருதராஷ்டிரரையும் மட்டுமே சொல்லமுடியும் என்கிறார்கள் மக்கள்” என்றான்.

பத்மர் பெருமூச்சுவிட்டு “மிகச்சிறந்த உத்தி. அவன் மக்கள் எனும் நுரையை கலக்கிக்கொண்டே இருக்கிறான். நாளை அவைக்கு வரும்வரை அவர்களை கலையவிடமாட்டான்” என்றார். சாம்பவன் “இரவில் அவர்கள் கலைந்தாகவேண்டுமே?” என்றான். “விடமாட்டான். அவன் அங்கேயே இருப்பான். மக்களுக்கு அவன் ஒரு திருவிழாவை அளிக்கிறான். அவர்கள் செல்லமாட்டார்கள்.”

பின்னுச்சி வேளையில் வந்த ஒற்றன் “அனைவருக்கும் வணிகர்கள் உணவிடுகிறார்கள். உண்டாட்டு என்றே சொல்லவேண்டும். கள்ளும் ஊனும் கட்டின்றி கிடைக்கின்றன அங்கே” என்றான். பத்மரின் அருகே அமர்ந்திருந்த கிருதி “நன்றியற்ற நாய்கள். நம் கால்களை நக்கி நலம் கொண்டவர்கள். இவனை ஒழித்ததும் வணிகர்களின் குருதியால் சந்தையை கழுவுகிறேன்” என்று பற்களைக் கடித்தான். “இளவரசே, இத்தகைய திருவிழாக்கள் அனைத்திலும் வணிகர்கள் முன்னிற்பார்கள். அது அவர்களின் வணிகத்திற்காக மட்டும் அல்ல. அவர்களிடமிருக்கும் ஏதோ குற்றவுணர்ச்சி இத்தகைய தருணங்களில் மக்களுடன் சேர்ந்து நிற்கத் தூண்டுகிறது. அவர்களின் இயல்பு அது” என்றார் பத்மர்.

இரவும் ஜராசந்தன் அங்கேயே இருந்தான். மாலைசரிந்ததும் மன்றுமுழுக்க பல்லாயிரம் பந்தங்கள் எரியத்தொடங்கின. உப்பரிகையில் நின்றாலே அந்த வெளிச்சத்தை பார்க்கமுடிந்தது. “அது காட்டுத்தீ. எச்சரிக்கையாக இல்லையேல் முற்றழிவை அளிக்கும்” என்று பத்மர் சொன்னார். “ஆனால் பெரும்பாலான காட்டுத்தீக்கள் இயல்பாக உடனே அணைந்துவிடுகின்றன… பார்ப்போம்.” கிருதி பற்களைக் கடித்தபடி “நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம் அமைச்சரே. இங்கே இவர்களை பகுத்துப்பிரித்து அறிவதில் பொருளே இல்லை. இறங்கி தலைகளை வெட்டித்தள்ளுவோம். பகுப்பாய்வை பின்னர் அவையமர்ந்து குடித்தபடி செய்வோம்” என்றான். ஜயசேனனும் பிருகத்சீர்ஷனும் “ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்றார்கள்.

“இளவரசே, இவன் ஒரு முகம்தான். மக்களின் இவ்வெழுச்சியை சோர்வாக ஆக்காமல் இதை நம்மால் முழுதும் வெல்லமுடியாது” என்றார் பத்மர். “அமைச்சரே, மக்கள் என்றும் எப்போதும் படைவல்லமையால்தான் வெல்லப்படுகிறார்கள். எதிரிநாட்டினருக்கு மாற்றாகவே படைகள் உள்ளன என்பது மன்னர்கள் சொல்லும் பொய். அனைத்துப்படைகளும் மக்களுக்கு எதிரானவைதான்” என்றான் கிருதி. “அது பிருஹஸ்பதியின் ராஜ்யநீதியில் உள்ள வரி. நானும் அறிவேன்” என்றார் பத்மர். “நான் நோயை புரிந்துகொண்டு மருத்துவம் செய்வதைப்பற்றி பேசுகிறேன். நோய்கண்ட இடத்தை அறுத்துவீசலாம். அது சிறிய நோய்களுக்கே பொருந்தும்.”

கிருதி சினத்துடன் கைகளைத் தட்டியபடி எழுந்து “நாளை அவையில் நடக்கவிருப்பதை நாங்கள் முடிவுசெய்துவிட்டோம் அமைச்சரே. நாளை அவை கூடியதும் நேராக கொற்றவை ஆலயத்திற்குச் செல்ல அரசர் திட்டமிட்டிருக்கிறார். அங்கே வெறியாட்டுகொள்ளும் மூன்று பூசகர்களுமே அவனை மாறுதோற்றமிட்டு வந்த இழிமகன் என்றும் அவன் வருகையால் நகர் அழுக்குற்றது என்றும் அறிவிப்பார்கள். அவன் குருதியை கொற்றவை நாடுகிறாள் என்றும் அவன் தலை அவள் காலடியில் வைக்கப்பட்டாகவேண்டும் என்றும் கோருவார்கள். அங்கேயே அவனைக் கொன்று கொற்றவைக்கு பலியிட்டு மீள்வோம்” என்றான்.

பத்மர் “ஆனால் அங்கே உங்கள் அன்னையர் இருப்பார்கள். அரசரும் இருப்பார்” என்றார். “ஆம், அவர்கள் இருந்தாகவேண்டும்” என்றான் கிருதி. “இளவரசே, அவர்களுக்குத் தெரியும் அவன் அவர்களின் மைந்தன் என்று. பார்த்த முதல்கணத்திலேயே” என்றார் பத்மர். “அதெப்படி?” என்று பிருகத்சீர்ஷன் கேட்க “எனக்கும் தெரியும்” என்றார் பத்மர். “நான் தயங்குவது அதனால்தான். அவன் அரசேறலாகாது, நீங்களே முடிசூடவேண்டுமென அன்னையர் நேற்று முடிவெடுத்தனர். ஆனால் அவன் தங்கள் மகனல்ல என்று சொல்ல அவர்களின் உள்ளுறைந்த தெய்வங்கள் ஒப்பவில்லை. நாளை அவன் கொல்லப்படுவதையும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.”

கிருதி ஒருகணம் திகைத்தான். தம்பியரை நோக்கியபின் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது ஒரு வலிப்பு போல அவன் முகம் உருமாறியது. கழுத்துத்தசைகள் இழுபட்டன. “அவ்வண்ணமெனில் முன்னரே அவர்கள் அவன் குருதியை காணட்டும். அதற்குப்பின் இந்த ஊசலாட்டமே இராது” என்றபின் அவன் வெளியேறினான். அவர்களின் முகங்களை அவர்கள் சென்றபின்னரே பத்மர் நினைவுகூர்ந்தார். ஒற்றை உணர்ச்சியால் ஒன்றென்றே ஆகிவிட்டிருந்தன. அம்முகங்கள் அவர் முன் முடிவில்லாது சென்றுகொண்டிருப்பதாக தோன்றியது.

இரவெல்லாம் மன்றில் களியாட்டு நிகழ்ந்துகொண்டிருந்தது. “சலிக்காதவனாக இருக்கிறான் அமைச்சரே. அவன் இதுவரை குடித்த மதுவுக்கு எருதும் களிறும் கூட சரிந்திருக்கும். ஆடவும் பாடவும் போரிடவும் தெரிந்திருக்கிறான். அங்கே இப்போது நடந்துகொண்டிருப்பது கீழ்மையின் களியாட்டம்” என்றான் ஒற்றன். “அரசர் என்ன செய்கிறார்?” என்று பத்மர் கேட்டார். “அங்கு நிகழ்வன அனைத்தையும் வந்து சொல்லும்படி ஆணையிட்டார்” என்றான்.

பத்மர் பின்னிரவில் பிருஹத்ரதனின் மஞ்சத்தறைக்கு சென்றார். துயிலிழந்து சாளரத்திற்கு அருகே நின்றிருந்த பிருஹத்ரதன் கவலையுடன் திரும்பி “என்ன நிகழ்கிறது அமைச்சரே?” என்றார். “அங்கே இரவுபகலாக களியாட்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது…” என்றார் பத்மர். “ஆம், அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவன் என் மைந்தன் அல்ல. அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றார். பத்மர் ஒன்றும் சொல்லாமல் நோக்கி நின்றார். “என் குருதியிலிருந்து இப்படி ஓர் இழிமகன் உருவாக முடியாது. என் எதிரே வந்து தருக்கி நின்று பேசிய அக்காட்டாளனை நான் அறியேன்.”

பத்மர் “நாளை தெய்வங்கள் சொல்லட்டும்” என்றார். “ஆம், தெய்வங்கள் சொல்லும். சொல்லியாகவேண்டும்” என்றார். அமைச்சர் வந்திருப்பதை அறிந்து சிற்றறையிலிருந்து உடையை சீரமைத்தபடி வந்த அணிகையும் அன்னதையும் “அவனை நாம் ஏன் இன்னமும் விட்டுவைத்திருக்கிறோம்? எங்கள் மைந்தருக்கே அறைகூவலாக அவன் எழுவான் என்றால் எதற்காக தயங்குகிறோம்?” என்றனர்.

பத்மர் அவர்களின் விழிகளை நோக்கினார். நிலையின்மையின் துளிகூடத் தெரியாத தெளிந்த விழிகள். அவர் பெருமூச்சுவிட்டு “நம் மக்கள் அவனை நம்புகிறார்கள். அவர்களின் எழுச்சி சற்று தணியட்டும்” என்றார். “அதை அவன் தூண்டியல்லவா விடுகிறான்?” என்றாள் அன்னதை. “ஆம், ஆனால் நாளைக்குள் அவர்கள் தளர்ந்துவிடுவார்கள். பட்டம் ஒருநாளைக்குமேல் வானில் நிற்கமுடியாதென்பார்கள்” என்றார் பத்மர்.

பிருஹத்ரதன் “இப்படி ஒரு நிகழ்வு இதற்கு முன் அமைந்ததில்லை” என்றார். “அவன் என் மகன் என்று சொன்னபோது ஒருகணம் என் உள்ளம் திகைத்தது உண்மை. நெடுநாட்களுக்குப்பின் அந்த நகைகளை பார்க்கிறேன். அத்துடன் அச்செயலின் குற்றவுணர்ச்சி என்னுள் உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் மீண்டெழுந்து வருவதைப்பற்றிய ஆழ்கனவுகள் என்னுள் இருந்தன. அவையே எனக்கு ஆறுதலும் அளித்தன. அக்கனவை சென்று தொட்டது அந்த நகைகள்” என்றார். “ஆனால், அவன் தோள்களைப் பார்த்தேன். அவை எப்படி அவ்வாறு இருக்கமுடியும்? அவை…” என்றபின் அன்னதையை பார்த்தார். அவள் சாளரம் நோக்கி திரும்பிக்கொண்டாள். அணிகை “அதை நாம் ஏன் பேசவேண்டும்? அது என்றோ மறைந்த கதை” என்றாள். “ஆம் அரசி, அவை சென்றகதைகள். நாளையே இந்தக்கதையை முடிப்போம்” என்றார் பத்மர்.

[ 14 ]

பத்மர் மறுநாள் காலையை இரவின் நீட்சியென்றே அறிந்தார். அமைச்சில்லத்திலிருந்து தன் மாளிகைக்குச் சென்று நீராடி உடைமாற்றி மீளும்போதே ஒற்றர்கள் அவருக்காக காத்திருந்தனர். கீர்த்திமான் “அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள்” என்றான். “துயின்றவர்கள் அனைவரும் விழித்துக்கொண்டார்கள். விழித்ததுமே மீண்டும் கள்ளுண்ணத் தொடங்கிவிட்டார்கள்.” பத்மர் முகத்தில் கவலையை காட்டிக்கொள்ளாமல் “அவன் அங்கிருந்தே அரண்மனைக்கு வர எண்ணுகிறானா?” என்றார். “ஆம் என்றே நினைக்கிறேன்” என்றான் கீர்த்திமான்.

“அவனிடம் குலத்தலைவர்களைக் கொண்டு பேசவையுங்கள். அவன் அப்பெருந்திரளுடன் அரண்மனைக்குள் நுழைய முடியாது. அவர்களில் தேர்ந்த பன்னிருவரை உடனழைத்து வரட்டும். அவர்களுக்கு அவையிலும் இடமளிக்கப்படும்” என்றார். “அப்பன்னிருவரை அவன் எப்படி தேர்வுசெய்வான்? அங்கே மேல் கீழென எவரும் இன்னும் உருவாகவில்லை” என்றான் சர்வன். “உருவாகியாகவேண்டும். ஒருவேளை அதன் வழியாகவே இப்போதிருக்கும் எழுச்சி அடங்கக்கூடும்” என்றபின் பத்மர் புன்னகைத்துவிட்டு அரண்மனைக்குள் நுழைந்தார்.

காலையில் முழுதணிக்கோலத்தில் அவைக்கு வந்து அமர்ந்திருந்தார் பிருஹத்ரதன். உடன் அவர் தேவியரும் இளவரசர்களும் இருந்தனர். “அரசே, ஒற்றுச்செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தேன்” என்றார் பத்மர். “ஆம், அச்செய்திகளை நானும் கேட்டேன். ஒன்றுமே நிகழவில்லை. குடி, களியாட்டு அவ்வளவுதான். அதைத்தவிர எதையும் சொல்லவில்லை எவரும்” என்றார் பிருஹத்ரதன்.

அணிகை “அவன் எப்போது இங்கு வருகிறான்?” என்றாள். “குடிமன்று கூடவேண்டும் அல்லவா? புலரிக்குப்பின் மூன்றாம் நாழிகை என்று வகுத்துள்ளோம்.” அன்னதை “இந்தக் குலத்தலைவர்கள் இங்கே என்ன செய்யவிருக்கிறார்கள்?” என்றாள். கிருதி “அவர்களுக்கு இடம் உருவாவதே இத்தகைய பூசல்களின்போதுதான். இதில் அவர்கள் நம்முடன் பேரம் பேசுவார்கள்” என்றான். “வேளிர்குடித்தலைவரிடம் ஒருசெய்தியை அனுப்பியிருக்கிறேன்” என்றார் பத்மர்.

அச்செய்தியை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது கிருதி அதைக்கேட்கும் பொறுமையில்லாமல் எழுந்து சென்று சாளரம் வழியாக நோக்கினான். அவர்கள் அந்தத் தருணத்தின் தயக்கத்தை வெல்ல வீண்சொற்களை கொண்டு தாயமாடினர். சலிப்புடன் அசைந்து அமர்ந்தனர். அவ்வப்போது பொருளில்லா நகைச்சுவை எழ அனைவரும் மிகையாகவே நகைத்தனர். “எப்படியாயினும் நம் நகரில் ஜரர்கள் வந்து வழிபடும் ஓர் ஆலயம் அமையவிருக்கிறது” என்று ஜயசேனன் சொன்னபோது பிருஹத்ரதன் வெடித்துச்சிரித்தார். ஆனால் அவர் விழிகளில் சிரிப்பே இருக்கவில்லை.

சர்வன் உள்ளே வந்து தலைவணங்கினான். “சொல்!” என்றார் பிருஹத்ரதன். “பெண்கள் பெருந்திரளாக அவனுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். பத்மர் திகைப்புடன் “பெண்களா? அவர்களாக வருகிறார்களா?” என்றபடி எழுந்தார். “இது அவர்களுக்கான திருவிழா அல்லவா? அவர்கள் வருவார்கள்” என்றார் பிருஹத்ரதன். “இல்லை அரசே, அன்னையர் உள்ளுணர்வு கொண்டவர்கள். பாதுகாப்பின்மையுணர்வே அவர்களின் படைக்கலம். அவர்கள் தன்னிச்சையாக எழமாட்டார்கள்” என்றார். “எத்தனை பெண்கள்?” என்றார் பிருஹத்ரதன். “பெருந்திரள். அவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் கிளம்பி களத்துக்கு வந்தபடியே இருக்கிறார்கள்.” பத்மர் “அது இயல்பானதல்ல” என்றார்.

பிருஹத்ரதன் “அவன் ஜரையின் மைந்தன். அது பெண்களை கவர்ந்திருக்கலாம்” என்றார். “பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து என் மைந்தர் இருவரும் காட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது நகர் ஒருவாரம் துயர்கொண்டது. அன்று உருவான குற்றவுணர்ச்சியை இப்போது ஈடுசெய்கிறார்கள்.” பத்மர் “இல்லை அரசே. பெண்களை கொண்டுவரும்படி அவன் ஆணையிட்டிருக்கவேண்டும்” என்றார். பிருஹத்ரதன் “எதற்காக? இங்கே அவைநுழைபவர்கள் மிகச்சிலர்தான். முற்றத்தில் பெண்கள் நின்றிருப்பதனால் என்ன நன்மை?” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே பத்மர் அவை விட்டு வெளியே ஓடினார். அவரைத் தொடர்ந்து ஒற்றர்கள் சென்றனர்.

“படைத்தலைவர்களை அழையுங்கள்! நம் படைகள் கவசமும் கலமும் கொண்டு சித்தமாகட்டும். அரண்மனைக்கோட்டையின் வாயில்கள் உடனே மூடப்படவேண்டும்” என்று கூவியபடியே பத்மர் தன் அலுவல்மன்று நோக்கி ஓடினார். அவர் இடைநாழியை அடைவதற்குள்ளாகவே மக்களின் பேரொலி எழுந்து அரண்மனைச்சுவர்கள் அனைத்தையும் அறைந்தது. “என்ன நிகழ்கிறது?” என்று கூவியபடி பிருஹத்ரதன் தன் அவைக்கூடத்திலிருந்து வெளியே ஓடிவந்தார். பத்மர் “கதவுகளை மூடுக! அனைத்துக் காவலர்களும் அணிகொள்க!” என்று கூவியபடி கீழிறங்கி பெருங்கூடம் நோக்கி ஓடினார்.

உள்ளே ஓடிவந்த அரண்மனைக் காவலன் “அமைச்சரே, பெருந்திரளாக மக்கள் கோட்டையை மீறி உள்ளே நுழைந்துவிட்டனர். அரண்மனைக்குள் நுழையப்போகிறார்கள்” என்று கூவிக்கொண்டிருக்கையிலேயே உள்கோட்டையிலிருந்து பெயர்க்கப்பட்ட பெரிய கற்கள் வந்து அரண்மனைச் சாளரங்களை அறைந்தன. “நமது படைவீரர்கள் அவர்களை விட்டுவிட்டார்கள். முன்னிரையில் மைந்தரை ஏந்திய அன்னையரைக் கண்டதும் படைக்கலம் தாழ்த்திவிட்டனர்” என்று இன்னொரு படைத்தலைவன் கூவினான். “வெளிக்கோட்டைப் படைகள் வரட்டும்… உடனே” என்று கிருதி பின்னால் ஓடிவந்தபடி ஆணையிட்டான். “வெளிக்கோட்டைப்படைகள் நகருக்குள் நுழையவே முடியாது இளவரசே. அத்தனை தெருக்களும் மக்களால் மூடப்பட்டுள்ளன” என்றான் படைத்தலைவன்.

மேலும் மேலும் கற்கள் வந்து அரண்மனைமேல் விழுந்தன. முகப்புக்கதவை மூடமுயன்ற ஏவலர் தெறித்து பின்னால் விழ மக்கள்பெருக்கு பிதுங்கி கூச்சலிட்டபடி உள்ளே பீரிட்டது. அவர்கள் கைத்தடிகளையும் தேர்களில் இருந்து பிடுங்கிய ஆரங்களையும் ஆணிகளையும் பலவகையான எடைகொண்ட பொருட்களையும் படைக்கலங்களாக கையில் ஏந்தியிருந்தனர். சிரித்துக்கூச்சலிட்டபடியும் வெறிநடமிட்டபடியும் கண்ணில் கண்டதையெல்லாம் உடைத்தனர். “என்ன இது? இது நம் அரசரின் அரண்மனை” என்று கூவியபடி முன்னால் சென்று கைவிரித்து அவர்களைத் தடுத்த முதிய தலைமை ஏவலனை அவர்கள் சிரித்தபடி தூக்கி தலைமேல் வீசி பந்தாடினர். அவன் அலறியபடி மண்ணில் விழ அவன்மேல் பலநூறு கால்கள் மிதித்து துவைத்தன.

பத்மர் “அரசே, இளவரசே, அரண்மனைவிட்டு நீங்குவோம். வேறுவழியில்லை…” என்றபடி திரும்பி ஓடினார். “ஏன்? இந்த வெற்றுக்கூட்டத்தை அஞ்சியா நாம் ஓடுவது?” என்றபடி கிருதி பின்னால் வந்தான். “அவர்கள் பித்துகொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் எதையும் செய்யமுடியும்” என்றார் பத்மர். “இது அவனால் உருவாக்கப்படுவது. இப்போது அவன் அரண்மனையை கைப்பற்றுவான் என்றால் நம் படைகளும் அவனையே துணைக்கும்… அவன் தன்னை அரசகுருதி என்று சொல்லிக்கொள்கிறான். ஆகவே அவர்களுக்கு எந்தத்தடையும் இருக்காது” என்று பத்மர் சொன்னார். “பேசிக்கொண்டிருக்கும் நேரமல்ல இது. இப்போது நம்மை அவர்கள் சிறைப்பற்றுவார்கள் என்றால் அனைத்தும் முடிந்துவிடும். நாம் விலகிச்செல்லவேண்டும். உடனே செய்யவேண்டியது அதைத்தான்” என்றார்.

பிருஹத்ரதன் “அவனிடம் நான் பேசுகிறேன். இவர்களுக்காக நாம் விலகிச்சென்றால் எனக்குப் பெருமை இல்லை” என்றார். “அரசே, இப்போது செய்யக்கூடுவது ஒன்றும் இல்லை. வெறிகொண்டுவரும் இக்கூட்டம் உங்களை சிறுமைசெய்யக்கூடும். தாங்கள் அஞ்சுவதையும் மதிப்பதையும் ஒருமுறை சிறுமைசெய்துவிட்டால் மானுடருக்குள் உள்ள தீயதேவர்கள் எழுந்துவிடுவார்கள். அதை அவர்கள் பெரும் களியாட்டாகவே செய்யத்தொடங்குவார்கள். அதன்பின் அவர்கள் கண்ணில் நாம் மீளவே முடியாது” என்றார் பத்மர்.

“இப்போது அரண்மனைவிட்டு அகல்வோம். நம்மை இழந்தால் இவர்கள் அரண்மனையை சூறையாடுவார்கள். குருதியும் வீழும். அதை இந்நகரின் மூத்தவர் ஏற்கமாட்டார்கள். இன்று பெண்களை முன்னால் பார்த்து விலகிநின்ற படைகளும் குற்றவுணர்ச்சிகொள்வார்கள். அரசரைக் காக்க மறந்த பழியை அவர்கள் அடைவார்கள். நாம் வெளியே சென்று நாம் இருக்குமிடத்தை அரசுநிலை என அறிவிப்போம். இவனை தீயதெய்வங்களை வழிநடத்திவந்த காட்டாளன் என கூறுவோம். இவன் அரசகுருதி அல்ல என்று அறிவிக்கவேண்டும். ஷத்ரிய அரசர்களின் உதவியை நாடவேண்டும். இவனை களையெடுக்க அதுவே வழி.”

பிருஹத்ரதன் “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. என் மக்களா? நான் ஐம்பதாண்டுகாலம் குழவிகள் என புரந்தவர்களா?” என்றார். இன்னொரு பெருங்கதவு வீழும் ஓசை கேட்டது. படிகளில் மக்கள் கால்களின் பேரோசையும் குரல்களின் முழக்கமும் கலந்து பெருக ஏறிவந்தனர். “நேரமில்லை அரசே. இது அமைச்சனாக என் ஆணை!” என்றார் பத்மர். பிருஹத்ரதன் “ஆம், அமைச்சர் சொல் கேட்போம்” என்று ஆணையிட்டார்.

பிருஹத்ரதனும் இரு துணைவியரும் நான்கு இளவரசர்களும் பத்மரும் அரசரின் மஞ்சத்தறைக்குள் புகுந்து அங்கிருந்த சுரங்க அறைக்குள் சென்றனர். கரந்தமைந்த கதவுகளைத் திறந்து மண்ணுக்கு அடியில் சென்ற புதைபாதையினூடாக நடந்தனர். “அரசு துறந்துசெல்கிறோம் அமைச்சரே. உபரிசிரவசுவின் கொடிவழிவந்தவன் குடிகளுக்கு அஞ்சி தப்பி ஓடுகிறேன்” என்றார் பிருஹத்ரதன்.

“நாம் தப்பி ஓடவில்லை. நாம் இத்தாக்குதல் நிகழும்போது அரண்மனையிலேயே இல்லை. கொற்றவைக்கு பூசை செய்து குறிச்சொல் கேட்க வெளியே வந்திருக்கிறோம். நாமில்லாததை அறிந்த அக்கீழ்மகன் அரண்மனையை சூறையாடுகிறான்” என்றார் பத்மர். “நாம் வெல்லவேண்டும். இப்போது முதன்மையானது அதுவே. வென்றவன் எழுதுவதே வரலாறென்பது.”

குறுகியபாதையில் தவழ்ந்துசெல்லும்போது பிருஹத்ரதன் “நம் தலைக்குமேல் நகரம் கொந்தளிக்கிறது” என்றார். “அரசே, வீண் எண்ணங்களை நிறுத்துவோம்” என்றார் பத்மர். “அவன் என் மகன்!” என்று திடீரென்று அன்னதை கூவினாள். “நான் அவனிடம் சென்று பேசியிருப்பேன். என்னை அவன் ஏற்றுக்கொள்வான்.” கிருதி இருளில் விலங்குபோல முனகினான். “ஆம், எங்களை அவனுக்குத்தெரியும்! அவன் எங்கள் மைந்தன்!” என்றாள் அணிகை.

“வாயை மூடச்சொல்லும் அமைச்சரே. இவர்களை இங்கேயே வெட்டிப்போட்டுவிட்டுச் செல்லவும் தயங்கமாட்டோம்” என்றான் கிருதி. “வெட்டுவாயா? எங்கே வெட்டு பார்ப்போம்! இழிமகனே, நீ செய்த கீழ்ச்செயலால்தான் இப்படி ஒளிந்தோடுகிறோம். எல்லாம் உன்னால்தான்” என்றார் பிருஹத்ரதன். “வாயைமூடுங்கள். இனி ஒரு சொல் சொன்னாலும் வாளை எடுப்போம்” என்றான் பிருகத்புஜன். “வெட்டு! அடேய் ஆண்மையிருந்தால் வாளை எடு!” என்று பிருஹத்ரதன் திரும்பி அவன் கழுத்தைப்பிடித்தார்.

“அரசே, வேண்டாம். இது ஆழம். இங்கே எந்த நெறிகளுமில்லை…” என்று பத்மர் அவர் தோளைப்பிடித்து விலக்கினார். பிருஹத்ரதன் மூச்சிரைத்தபடி “இவர்களைவிட அவனைப்பெற்றமைக்கே மகிழ்கிறேன். கீழ்மக்கள். பிறரை புழுவென எண்ணும் பேதைகள்” என்றார். ஜயசேனன் “நீங்கள்தான் கீழ்மகன். உங்கள் கீழ்மை எழுந்து அதோ வந்து நின்றிருக்கிறது” என்று கூவ பிருகத்சீர்ஷன் “அவன் உங்கள் குருதி அல்ல. மைந்தனில்லை என்று காட்டுக்குச் சென்று அதர்வவேதம் பயிலும் இழிசினருக்கு மனைவியரை அளித்து பெற்றவன்… அவனுடன் சென்று அமர்ந்திருங்கள்…” என்றான்.

அணிகை “சீ, வீணனே” என்று அவனை அறைய அவன் அவளை திருப்பி அறைந்தான். “அறிவிலியே, இதுகூட தெரியவில்லையா உனக்கு? நீங்கள் ஒருநாள் கழுவில் அமர்ந்திருப்பீர்கள். ஆம், கழுவமர்ந்து நரகுலகு செல்வீர்கள்” என்று அணிகை கூச்சலிட்டாள். “அரசி, அரசே, வேண்டாம். சொல்லெடுக்கவேண்டாம். இவ்விருள்வழியை எப்படியேனும் கடப்போம்” என்றார் பத்மர். “ஆம், கடந்துசெல்வோம். வேறுவழியே இல்லை” என்றார் பிருஹத்ரதன் தளர்ந்த குரலில்.

கண்ணீரும் வசைச்சொற்களுமாக அவர்கள் இருண்ட பாதையில் நடந்தனர். கோட்டைக்கு வெளியே மேற்குபக்கம் இருந்த குறுங்காட்டிலமைந்த கொற்றவை ஆலயத்தின் தேவிசிலையின் பின்பக்கம் பதிக்கப்பட்டிருந்த கற்பலகையைத் தூக்கி வெளியே வந்தபோது பத்மர் ஆறுதலுடன் “தெய்வங்களே…” என்றார். கண்கள் கூசின. இருண்ட கனவொன்றை விட்டு வெளியே வந்தவர்களைப்போல அவர்களின் முகங்கள் திகைத்திருந்தன.

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

வெண்முரசு சென்னை விவாதக்குழுமம் இணையதளம்