நீர்ச்சுடர் - 55

குதி எட்டு : விண்நோக்கு – 5

முற்புலரியில் சுகோத்ரன் கண்விழித்து எழுந்தான். அவன் திண்ணையில் அமர்ந்தபடியே துயில்கொண்டுவிட்டிருந்தான். எழுந்து நின்றபோதுதான் உடலின் வலி தெரிந்தது. சூழ்ந்திருந்த இருளில் நூற்றுக்கணக்கான செந்நிற ஒளித்துளிகள் அலைந்தன. பந்தங்கள், பளிங்குக்குழாய் போட்டு மூடப்பட்ட பீதர்விளக்குகள், சிற்றகல்கள். தொலைவில் கங்கையின் கரையோரமாக ஒளியாலான ஒரு நீண்ட வேலி தென்பட்டது. அவன் உள்ளே சென்று உஜ்வலனை தட்டி எழுப்பினான். அவன் தொட்டதுமே உஜ்வலன் எழுந்துகொண்டு வாயைத் துடைத்துவிட்டு “விடிந்துவிட்டதா?” என்றான். அப்போது இளஞ்சிறுவன் என்றே தோன்றினான்.

“ஆம்” என்று சுகோத்ரன் சொன்னான். “நீங்கள் துயில்கொள்ளவில்லையா?” என்று அவன் கேட்டான். “சற்று கண்ணயர்ந்தேன்” என்றான் சுகோத்ரன். “துயிலவில்லை என்பதுபோல் உள்ளன விழிகள்…” என்றான் உஜ்வலன். கைகளை விரித்துச் சோம்பல்முறித்துக்கொண்டு “நீங்கள் துயிலப்போவதில்லை என அறிந்திருந்தேன். ஏனென்றால் நீங்கள் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறீர்கள்” என்றபடி வெளியே சென்றான். சுகோத்ரன் அவனை நோக்கியபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றான். காலைக்காற்று குளிருடன் இருந்தது. கங்கையிலிருந்து சேற்றுமணம் கொண்ட காற்று வீசியது. ஆடிமாதம் மழைக்குப்பின் கங்கைநீரின் மணம் அது. உஜ்வலன் திரும்பி வந்து “முடிவெடுக்க தயங்குபவர்கள் தங்களைப்பற்றி தாங்களே புரிந்துகொண்டவர்கள் அல்ல. அல்லது பிழையாக வகுத்துக்கொண்டவர்கள்” என்றான். மறுமொழியாக “செல்வோம்” என்று மட்டும் சுகோத்ரன் சொன்னான்.

அவர்கள் மரவுரியுடன் கங்கைக்கு நீராடச் சென்றனர். செல்லும் வழியெங்கும் மூங்கில்தூண்களில் மீன்நெய்ப் பந்தங்கள் நடப்பட்டு ஒளிவிரிக்கப்பட்டிருந்தது. தரையில் பலகைகளைப் பரப்பி வழி அமைத்திருந்தனர். அவை நடந்தவர்களின் உடையிலிருந்து சொட்டிய ஈரத்தால் வழுக்கின. நீராடுவதற்கு கங்கையில் தண்டுகளை அறைந்து பலகைகளை பரப்பி படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டிருந்தன. நீராடி முடித்த ஏவலரும் சூதரும் குளிரில் தோள்களைக் குறுக்கியபடியும், பற்களை இறுக்கி மூச்சொலியில் பேசியபடியும் எதிரே வந்தனர். அந்தணர்கள் முந்தைய நாள் இரவே வேள்விப்பந்தலுக்குச் சென்றுவிட்டிருந்தனர் போலும் என சுகோத்ரன் எண்ணிக்கொண்டான். தொலைவில் வேள்விநிலையிலிருந்து வேதச்சொல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அது காலையின் காட்டொலியுடன் இயல்பாக இணைந்துகொண்டது. அவ்வொலியை பெரும்பாலும் அவன் காலையொலியுடன் இணைந்தே கேட்டிருந்தான்.

கங்கைநீர் குளிர்ந்திருந்தது. அதன்மேல் கரையிலிருந்த செவ்வொளி அலைகொண்டது. படிக்கட்டை அடைந்தபோதே அந்தக் குளிர் காற்றில் ஈரமெனக் கசிந்து பரவி வந்து தொட்டு சிலிர்ப்பை உருவாக்கியது. மரப்படிக்கட்டில் உடல் செறிந்து ஏராளமானவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். உஜ்வலன் அக்குளிரில் பேச்சிழந்தவன் போலிருந்தான். அவன் பேசாமலிருந்தபோது சுகோத்ரன் தன் உள்ளம் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப்போல உணர்ந்தான். உஜ்வலன் மரவுரியை உடுத்திக்கொண்டு படிகளின்மேல் கைகளை மார்பில் கட்டியபடி தோள்களைக் குறுக்கி நின்றான். அவ்வப்போது குளிர்நீர் உடலில் பட்டதுபோல மூச்சொலியுடன் உலுக்கிக்கொண்டான். சுகோத்ரன் சீரான அசைவுகளால் ஆடைகளைக் களைந்துவிட்டு படியில் நின்று இருண்ட பெருக்காகச் சென்ற கங்கையை நோக்கினான்.

விடிவெள்ளி எழவில்லை. வானமெங்கும் விண்மீன்கள் நிறைந்துகிடந்தன. பலநாட்கள் வானம் மழைமூடிக் கிடந்தமையால் விண்மீன்களைப் பார்த்தே நெடுநாட்களாகிவிட்டன என அவன் எண்ணிக்கொண்டான். கைகளைக் கூப்பி கண்மூடி கங்கையைப் போற்றும் பாடலை நாவசையாமல் சொன்னபடி அவன் நீரில் இறங்கினான். நீரின் குளிரில் உடல் மெய்ப்புகொள்ள கூப்பிய கைகள் நடுங்க தோள்கள் குறுக மணலில் கால் உழல இடைவரை சென்று நின்றான். நீரில் ஒழுகிச்சென்ற சிறிய சருகுகள் திடுக்கிடச்செய்தன. “அன்னையே!” என முனகியபடி நீரில் மூழ்கி எழுந்து குழலை அள்ளி பின்னாலிட்டான்.

உஜ்வலன் கரையிலேயே நீரை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். அவனை ஒருமுறை நோக்கியபின் சுகோத்ரன் மீண்டும் மூழ்கினான். பின்னர் கைவீசி நிந்தி நீருக்குள் சென்றான். அலைகளின் பக்கவாட்டு அசைவு மாறியது. மையப்பெருக்கு இளவெம்மையுடன் இருந்தது. அதில் கங்கையின் ஆழத்திலிருக்கும் மெல்லிய சாம்பல் கலந்த மணம் இருந்தது. அவன் மூழ்கி நீந்தி எழுந்து தலையை உதறிக்கொண்டு நோக்கியபோதும் உஜ்வலன் அங்கேயே நின்றிருந்தான். அவன் உஜ்வலனை அழைக்கலாமென எண்ணிய கணம் அவன் மீன்போல கைகளைக் குவித்து நீட்டி நீரில் பாய்ந்து அம்பென உள்ளே சென்றான்.

அவன் தன்னருகே எழுந்தபோது சுகோத்ரன் அவனுடைய சிரிக்கும் பற்களின் ஒளியைக் கண்டான். “இன்னும் அரைநாழிகையில் நாமகள்பொழுது… இதை இரவென்றுதான் சொல்லவேண்டும்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் “ஆம்” என்றான். “வேள்வியை நேற்று அந்தியிலேயே தொடங்கிவிட்டனர். நள்ளிரவில் நிறைவுசெய்து ஒரு நாழிகைக்குள் அடுத்த நாள் வேள்வியை தொடங்கியிருக்கிறார்கள்…” என்று அவன் சொன்னான். “தௌம்யர் அனைத்தையும் முறைப்படி செய்பவர்” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் மூழ்கி அப்பால் எழுந்தான். கைகளால் நீரை உந்தி எழுந்து மீண்டும் மூழ்கினான். அவன் தன் சிற்றிளமையியே நீடிப்பதுபோலத் தோன்றியது.

நீந்தி அருகே வந்து நீரை உமிழ்ந்தபின் “இளவரசே, நீங்கள் ஏதேனும் முடிவை எடுத்தீர்களா?” என்று உஜ்வலன் கேட்டான். “இல்லை” என்றான் சுகோத்ரன். “முடிவெடுக்காமல் அங்கே செல்வது நன்றல்ல… முடிவெடுக்க குழம்புகிறீர்கள் என்பதே நம்மை பிழையாக அவர்களுக்குக் காட்டும்” என்றான் உஜ்வலன். “என்னால் முடிவெடுக்க இயலவில்லை” என்றான் சுகோத்ரன். “ஏன்?” என்று உஜ்வலன் கேட்டான். “எனக்குத் தெரியவில்லை. என்னால் இன்னமும் முடிவெடுக்க இயலவில்லை” என்றான் சுகோத்ரன்.

“இதில் நீங்கள் ஒற்றை முடிவையே எடுக்க முடியும். அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசர். அல்லது முற்றாகக் குடிதுறத்தல்… குடிதுறப்பது என்பது ஒருவகை சாவு” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “துறவு என்பது துறப்பனவற்றைவிட மேலான சிலவற்றைப் பற்றிக்கொண்டால் மட்டுமே பொருளுள்ளதாகிறது. துறந்தவை அனைத்தையும் மிகச் சிறியவை என ஆக்கும் ஒன்றைச் சென்றடையவில்லை என்றால் துறந்தவை பேருருக்கொள்ளும். சூழ்ந்துகொண்டு துயர் அளிக்கும். பல்லாயிரம் கைகள் கொண்டு பெருகி நம்மை அள்ளி திரும்ப இழுத்துக்கொள்ளும்” என்றான் உஜ்வலன்.

“நாம் துறக்கும்போது நலமும் அழகும் கொண்டவையாக இருப்பவை துறந்து தோல்வி கண்டு மீண்டு வருகையில் திரிந்து இருட்தெய்வங்களால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதையே காண்போம். துறந்து மீண்டவர் கவ்விக்கொண்டதில் இருந்து மீளவே முடியாது. ஆகவேதான் இயலாத் துறவு பழி சேர்க்கும் என்கிறார்கள் மூத்தோர்” என்று உஜ்வலன் சொன்னான். “ஏன் இயலாத் துறவை மேற்கொள்கிறோம்? நம்மை நாம் மிகையாக மதிப்பிட்டுக்கொள்கிறோம் என்பதனால். நம் ஆற்றலை, நம் தேடலை, நம் ஊழை. நாம் எந்நிலையில் நின்றிருக்கிறோம் என்று அறிவதே அறிவு அளிக்கும் முதற்பயன்.”

சுகோத்ரன் பெருமூச்சுவிட்டு நீரில் மூழ்கினான். நீருக்குள் இலைகள் அவனை வந்து தொட்டுத் தொட்டுச் சென்றன. குமிழிகள் வெடிக்கும் ஒலி காதில் விழுந்தது. எழுந்து மூச்சை அள்ளி உண்டபோது அருகே உஜ்வலன் அவனை நோக்கி நீந்தி வந்தான். “உங்களைப்பற்றி நீங்கள் அறிய முடியவில்லை என்றால் உங்களுக்கு அணுக்கமானவரிடம் கேளுங்கள் நீங்கள் எவர் என. அவர்கள் ஆடி என உங்களைக் காட்டுவார்கள். ஆம், ஆடி அழுக்கு கொண்டிருக்கும், வளைந்திருக்கலும் ஆகும். ஆயினும் அது ஆடி. அது கொள்வன அனைத்தையும் கொடுத்தாகவேண்டும்.”

“என்னிடம் கேளுங்கள், நான் சொல்கிறேன். நீங்கள் எவரென்று சொல்கிறேன்” என்றான் உஜ்வலன். “சொல்லுங்கள், நான் யார்?” என்று சுகோத்ரன் புன்னகையுடன் கேட்டான். “நீங்கள் ஷத்ரியர். அக்குடிக்குரிய அனைத்து குருதியியல்புகளும் கொண்டவர். உங்கள் தந்தை பெரும்போர் ஒன்றை நுண்ணிதின் கண்டார். குலமே அழியக்கூடும் என்று உணர்ந்தார். ஆகவே உங்களை அந்தச் சுழியிலிருந்து அகற்றினார். உங்கள் தற்தெரிவால் அல்ல தந்தையின் ஆணையால் நிமித்தநூல் கற்க வந்தீர்கள். வந்தபின் அதை ஏற்றுக்கொண்டீர்கள்.”

“ஆம், நான் ஏற்றுக்கொண்டேன். அது முழுக்கமுழுக்க என் தெரிவு. ஆசிரியர் என்னிடம் இருந்தே அம்முடிவு எழவேண்டும் என்று சொன்னார்” என்றான் சுகோத்ரன். “நானும் அதைக் கேட்டிருக்கிறேன்” என்றான் உஜ்வலன். “சொல்லுங்கள், அம்முடிவை எடுக்கையில் நீங்கள் அரண்மனை வாழ்க்கையின் இன்பங்கள் என்ன என்று அறிந்திருந்தீர்களா? ஒரு போர்வெற்றியின் கொண்டாட்டத்தையாவது அடைந்திருந்தீர்களா? குடிப்பெருக்கின் முன் முடிசூடி தலைமகன் என நின்றதுண்டா? சூதரும் புலவரும் புகழ்பாட காலமே நான் என தருக்கியதுண்டா?”

சுகோத்ரன் “இல்லை” என்றான். “எனில் எதை தெரிவுசெய்தீர்கள்? நீங்கள் அறிந்தது ஒன்றே ஒன்று. அதைத் தெரிவுசெய்வதற்குப் பெயர் முடிவெடுத்தலா என்ன?” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் நீரலைகளை நோக்கிக்கொண்டிருந்தான். “நீங்கள் தெரிவுசெய்யவில்லை, செலுத்தப்பட்டீர்கள்” என்று உஜ்வலன் தொடர்ந்தான். “ஐயமே தேவையில்லை. உங்களுக்குள் உறைபவன் ஷத்ரியன். அவன் நாடுவது முடியும் மண்ணும் வெற்றியும் புகழுமே. அதை அணுக்கனாகிய நான் அறிவதுபோல் எவரும் அறியமாட்டார்கள். பிறிதொன்றை எண்ணித் தயங்கவேண்டியதில்லை. முடிவெடுங்கள்…”

சுகோத்ரன் பெருமூச்சுடன் “நன்று, உங்கள் சொற்களும் என் முடிவுக்கு உதவட்டும். நான் இத்தருணத்தை ஊழ் எங்ஙனம் வகுக்கப்போகிறது என்று நோக்கி நின்றிருக்கிறேன். இது இவ்வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு எனக்கு உதவக்கூடியது” என்றான். மறுமொழி சொல்லாமல் உஜ்வலன் நீரில் மூழ்கி அப்பால் சென்று எழுந்து “மனிதர்கள் தங்களிடம் தாங்களே சொல்லிக்கொள்ளும் பொய்கள் அளவுக்கு வேறெங்கும் சொல்வதில்லை. தெய்வங்களிடம்கூட” என்றான். சிரித்தபடி மீண்டும் மூழ்கினான்.

அவர்கள் நீராடி குடில்மீளும்போது உஜ்வலன் அமைதியாக இருந்தான். உடைமாற்றி உணவுண்டு கிளம்புவதற்குச் சித்தமாகிக்கொண்டிருக்கையில் உஜ்வலன் மீண்டும் பேசத்தொடங்கியிருந்தான். “அவர்களுக்கு ஏன் உங்கள் நினைவே எழவில்லை? எப்படி அவர்கள் உங்களை மறக்கலாம்?” என்றான். “ஏனென்றால் நீங்கள் மலைமகள் மைந்தன். பால்ஹிகர்களை அவர்கள் இன்னமும் அஞ்சுகிறார்கள். நிகர்நிலத்து மைந்தன் ஒருவனை அவர்கள் தங்கள் அரசனாக நாடுகிறார்கள். அவன் நிஷாதக்குருதி கொண்டவன் என்றாலும் தாழ்வில்லை என எண்ணுகிறார்கள்.”

“அவர்கள் இன்று எண்ணுவதென்ன என்று மெய்யாகவே உங்களுக்குப் புரியவில்லையா? இன்று எஞ்சும் குருகுலத்துக் குருதி அபிமன்யுவின் மைந்தனுடையது என்று காட்டவும் அதை அரியணை நிறுத்தவும் முயல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அபிமன்யுவின் பெயர் தேவை. விராடனின் மகள் வயிற்றிலெழுந்தவன் என்பதனால் அந்த மைந்தனுக்கு நிஷாதர்களின் ஆதரவு இருக்கும். அவன் யாதவ அன்னையின் பெயர்மைந்தன் என்பதனால் அவன் யாதவக்குருதியினன் என்றும் நிலைநாட்டமுடியும்…” என்று உஜ்வலன் தொடர்ந்தான். “உண்மையில் இந்தப் போரில் வெற்றியுடன் மீண்டிருப்பவர்கள் யாதவர்களே. அடுத்த மூன்று தலைமுறைக்காலம் யாதவர்களின் குருதியுறவு அஸ்தினபுரியின் ஆற்றலாக நிலைகொள்ளும்.”

“எண்ணி நோக்குக. அவர்களின் பெரும்பகுதியினர் இன்னமும் எஞ்சுகிறார்கள். அவர்களின் நகரம் எஞ்சுகிறது. அவர்களின் இரு அரசர்களும் அவ்வாறே ஆற்றலுடன் நீடிக்கிறார்கள். ஆகவே யாதவர்களே இனி பாரதவர்ஷத்தின் பேராற்றல் மையம். அவர்களின் ஆதரவு தேவை என்றால் சுபத்ரையின் மைந்தனின் குருதி இங்கே ஆளவேண்டும்… அத்துடன் நிஷாதர்களின் ஆதரவும் இருக்குமென்றால் ஐயமே தேவையில்லை, அவன் பாரதவர்ஷத்தை ஆள்வான். இது இயல்பான மறதி அல்ல. இது அரசியல் சூழ்ச்சி. எனக்கு அதில் ஐயமே இல்லை.”

அச்சொற்கள் சுகோத்ரனின் செவிகளின் வழியாக ஒழுகிச்சென்றபடியே இருந்தன. வெளியே வந்தபோது அவர்களுக்கான ஒற்றைப்புரவி வண்டி ஒருங்கி நின்றிருந்தது. அதில் ஏறிக்கொண்டு யுதிஷ்டிரனின் குடில் நோக்கிச் சென்றார்கள். “அங்கே அரசர் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் இயற்றவேண்டிய கடமை என்ன என்று அறிந்துகொள்ளலாம்” என்றான் சுகோத்ரன். செல்லும் வழியெங்கும் குடில்நிரைகளில் செந்நிறச் சுடர்களுடன் அகல்விளக்குகளும் பீதர்நாட்டு பளிங்குக்குழல் விளக்குகளும் எரிந்துகொண்டிருந்தன. குடில்களுக்குள் பெண்களின் பேச்சொலிகளும் கலங்கள் முட்டிக்கொள்ளும் ஓசையும் கேட்டன.

“அங்கே பெண்டிர் விழித்திருப்பார்கள்” என்று உஜ்வலன் சொன்னான். “அவர்கள் தங்கள் கணவர்களுக்கு சொல்லளித்திருப்பார்கள். தங்கள் மைந்தர்களை விண்ணுக்கு அனுப்பும்படி ஆணையிட்டிருப்பார்கள்.” சுகோத்ரன் வெறுமனே திரும்பி நோக்கினான். “அரசியர் நோன்பிருந்து தங்கள் மைந்தருக்காக வேண்டிக்கொண்டிருப்பார்கள்.” பேச்சினூடாக எண்ணிக்கொண்டு “உங்கள் அன்னையை நீங்கள் சந்திக்கவில்லை” என்றான் உஜ்வலன். “ஆம்” என்றான் சுகோத்ரன். “நீங்கள் சென்று சந்திக்கலாம். அவர்கள் உள்ளம் நிலைகுலைந்திருப்பதாகச் சொன்னார்கள்” என்றான் உஜ்வலன்.

சுகோத்ரன் எண்ணத்தை ஓட்டியபடி சற்று நேரம் நின்றான். “ஆம், பார்த்துவிடுவோம்” என்றான். உஜ்வலன் “அரசரின் ஆணையை நாம் கேட்பதற்குள் அன்னையின் சொல்லை கேட்பது நன்று” என்றான். அவர்கள் இருளுக்குள் நடந்து சென்றனர். எதிர்ப்பட்ட சேடி ஒருத்தியிடம் “மத்ரநாட்டு அரசி விஜயையின் குடில் எங்குள்ளது?” என்று சுகோத்ரன் கேட்டான். “அதோ அந்தக் குடில். குடில்வாயிலில் இருப்பவள் பூர்ணை. அவள் சிபிநாட்டு செவிலி… அவளுடைய அரசியும் அதே குடிலில்தான் இருக்கிறார்கள்” என்றாள் சேடி.

குடிலை நெருங்கியபோது உஜ்வலன் “அன்னை சொல்வதை ஆணை என்றே கொள்க” என்றான். “அன்னை என்ன சொன்னாலும் அது ஆணையா?” என்றான் சுகோத்ரன் புன்னகையுடன். “ஆம், அன்னை என்றால் அவர் பிறிதொன்று சொல்ல வாய்ப்பில்லை” என்றான் உஜ்வலன். “நான் அன்னையைக் கண்டு நெடுநாட்களாகின்றன” என்றான் சுகோத்ரன். “அன்னை உங்களை எண்ணிக்கொண்டிருப்பார். அவர் உங்களை எதிர்பார்த்திருப்பார். சொல்லவேண்டியவை அவருக்குள் கனிந்து கூர்கொண்டிருக்கும்” என்றான் உஜ்வலன்.

குடில் முன் வண்டி நின்றது. அவர்கள் இறங்கியதும் பூர்ணை அவனை அடையாளம் கண்டுகொண்டாள். கூப்பிய கைகளுடன் சொல்லின்றி எழுந்து நின்றாள். “நான் அன்னையை…” என்று அவன் சொன்னான். “வருக, இளவரசே” என அவள் உள்ளே அழைத்துச்சென்றாள். அவன் தலைகுனிந்து உள்ளே செல்ல உஜ்வலன் வெளியே நின்றான். சுகோத்ரன் இருமுறை திரும்பி உஜ்வலனை நோக்கிவிட்டு உள்ளே நுழைந்தான். பூர்ணை உஜ்வலனிடம் “நீங்களும் உடன் செல்லலாம்” என்றாள். “நான் செல்ல ஒப்புதல் உண்டா?” என்றான் உஜ்வலன். “செல்க, அவருக்கு துணை தேவை” என்று பூர்ணை சொன்னாள். உஜ்வலன் உடன் நுழைந்தான்.

குடிலுக்குள் இரு மஞ்சங்களில் மேலாடையால் முகத்தை மூடிக்கொண்ட இருவர் அமர்ந்திருந்தார்கள். அசைவில்லாதவர்களாக. அங்கே இரு பொருட்கள் இருப்பதாகவே சுகோத்ரனுக்குத் தோன்றியது. பூர்ணை முன்னால் சென்று ஒருத்தியின் மேலாடையை விலக்கினாள். சுகோத்ரன் தன் அன்னையை அடையாளம் கண்டான். நெடுநாட்களுக்கு முன் அவன் கண்ட முகம் அல்ல. அந்த முகம் முதிர்ந்து இறந்து மட்கிவிட்டது போலிருந்தது. அவன் உள்ளம் எந்த உணர்ச்சியும் இல்லாமலிருந்தது.

அவள் விழிகள் அவனை நிலைகுத்தி நோக்கின. எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. “அரசி, தங்கள் மைந்தன்” என்று பூர்ணை சொன்னாள். “தங்கள் மைந்தன் இதோ வந்திருக்கிறார். கண்முன் நிற்கிறார். அரசி… இதோ உங்கள் மைந்தன் சுகோத்ரன்” என்றாள். அவள் விழிகளில் மணிகள் நிலையற்று அலைந்தன. வறண்டு சுருங்கி உதடுகள் உலர்ந்து உள்ளிழுத்துக்கொண்டிருந்த முகம் மரத்தாலான பாவை போலிருந்தது. தீய சடங்குகளுக்காக அசுரகுடியினர் உருவாக்கும் பாவை.

பூர்ணை அவனிடம் “பேசுக, உங்கள் குரல் கேட்கட்டும்” என்றாள். அவன் “அன்னையே, நான்தான் சுகோத்ரன்… உங்கள் மைந்தன் சுகோத்ரன்… அன்னையே” என்றான். அவளிடம் எந்த மெய்ப்பாடும் ஏற்படவில்லை. “மைந்தர்களின் இறப்பை கேட்டு இப்படி ஆகிவிட்டார்கள்… தாங்கள் உயிருடனிருப்பதையே மறந்துவிட்டிருக்கிறார்கள்” என்றாள் பூர்ணை. அவன் அவள் விழிகளை நோக்கினான். அந்த வெற்று நோக்கு இரு கூரிய முனைகளாக அசையாது நின்றிருந்தது.

“நானும் இறந்துவிட்டேன் என்றா எண்ணுகிறார்கள்?” என்றான் சுகோத்ரன். “அவ்வாறல்ல… ஒவ்வொரு மைந்தனின் இறப்பும் அவர்களை கொந்தளிக்கச் செய்தது. கற்பனையில் சாவுகள் மேலும் பெருகின. ஒவ்வொரு நாளுமென நிலையழிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் மைந்தர்களிடம் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை” என்றாள் பூர்ணை. “எனில் அவர்களுக்கு தன் மைந்தன் உயிருடனிருப்பது தெரியாது. அவரை மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர் அழிந்துவிட்டார் என எண்ணுகிறார்கள்” என்றான் உஜ்வலன். பூர்ணை தயக்கத்துடன் “ஆம்” என்றாள்.

“அவர்களின் மைந்தன் உயிருடன் இருப்பதை அவர்கள் அறியவேண்டும். அறிவிக்கவேண்டியது நம் கடமை. அவர்கள் மீளக்கூடும்…” என்றான் உஜ்வலன். திரும்பி சுகோத்ரனிடம் “சொல்க, நீங்கள் சாகவில்லை என்று சொல்க…” என்று கைபற்றி உலுக்கினான். சுகோத்ரன் ஒருகணம் எண்ணியபின் “அவர்கள் அவ்வாறே இருக்கட்டும். துயர் மிக்கதென்றாலும் அவர்கள் இன்றிருக்கும் இந்நிலையில் பேருணர்வென ஒன்றுள்ளது. என் அன்னை மைந்தரிடம் வேறுபாடு காணாமலேயே இருக்கட்டும்” என்றான்.

“அறிவின்மை… அறிவின்மையின் உச்சம்” என்று உஜ்வலன் கூவினான். “அவர்கள் உயிர்மீள்வார்கள். முன்னிருந்த நிலையை அடையவும்கூடும்.” சுகோத்ரன் “ஆம், ஆனால் தன் மைந்தனையும் பிற மைந்தரையும் வேறுபடுத்தி நோக்குபவர்களாக ஆகிவிடுவார்கள். தன் மைந்தன் சாகவில்லை என மகிழ்வது பிற மைந்தர் இறந்தமைக்கு மகிழ்வதாகவே திரிபடையலும் ஆகும். அது மானுட இயல்பு… அது நிகழவேண்டியதில்லை” என்றபின் அன்னையை ஒருகணம் நோக்கினான். அருகணைந்து குனிந்து விஜயையின் கால்களை தொட்டு வணங்கினான்.

அவள் அவன் வணங்குவதை அறியவில்லை. அவன் எழுந்தபோது அவன் தலையின் அசைவைக் கண்டு திடுக்கிட்டு கையை எடுத்தாள். அக்கை அவன் தோளில் பட திகைப்புடன் அவன் தோளில் மீண்டும் கையை வைத்தாள். தவிப்புடன் அவள் கை அவன் தோளிலும் கைகளிலும் பரவி அலைந்தது. விரல்கள் நடுநடுங்கின. அவள் முகமெங்கும் தசைகள் நெளிந்தன. மெலிந்து நரம்பு முடிச்சுகள் பரவிய கழுத்து அதிர்ந்தது. உறுமல்போல ஓர் ஓசை அவளிடமிருந்து எழுந்தது. அவள் எழுந்து தன் இரு கைகளாலும் அவனை அள்ளி அணைத்து உடலுடன் இறுக்கிக்கொண்டாள்.

அவன் அவள் பிடியில் மூச்சுத்திணறினான். அவளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றான். அவள் அவனை வெறிகொண்டு முத்தமிட்டாள். விலங்குபோல அவனை மாறி மாறி கவ்வினாள். அவன் தோளில் அறைந்தாள். நெஞ்சில் குத்தினாள். பின்னர் உடல் தளர்ந்து அவன் கைகளிலேயே நினைவழிந்து விழுந்தாள். பூர்ணை அவளை ஏந்திக்கொள்ள அவளை மெல்ல பீடத்தில் அமர்த்தினார்கள். அவன் கையை விலக்கியதும் அவள் நினைவுமீண்டு பதற்றத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். “போகாதே… போகாதே” என்றாள்.

“இல்லை அன்னையே, செல்வதில்லை. இங்குதான் இருப்பேன்” என்று அவன் சொன்னான். “இங்கேயே இரு… என்னுடன் இரு” என்றாள். உடனே விந்தையான ஒலியெழுப்பி நகைக்கத் தொடங்கினாள். அவ்வுணர்வுகள், அவ்வசைவுகள், அந்த ஓசைகள் அனைத்துமே விலங்குகளுக்குரியவை என்று தோன்றியது. நகைத்து நகைத்து உடல் குலுங்கினாள். அவன் உடலை கைகளால் சுற்றிக்கொண்டு அவன் இடையில் தலையைச் சாய்த்தாள். பெருமூச்சுடன், கண்ணீர் வழிய மீண்டாள். “நீ போகக்கூடாது. இங்கிருக்கவேண்டும்” என்றாள். “ஆம் அன்னையே, இங்கேதான் இருப்பேன்” என்றான் சுகோத்ரன்.

அவள் மெல்ல கண்களை மூடினாள். இமைகள் நீருலர்ந்து ஒட்டிக்கொண்டன. முகம் மலர்ந்திருந்தது. உதடுகள் எதையோ முணுமுணுப்பவைபோல அசைந்தன. நீள்மூச்சொலி எழுந்தது. அவன் ஆடையைப் பற்றிய கைகள் தளர்ந்தன. அவள் தலை துயிலில் தழைந்தது. கைகள் பிடிவிட்டு விழுந்தன. அவள் விழித்துக்கொண்டு “உம்” என்றாள். உடனே எழுந்துகொண்டு “நீ போகக்கூடாது. இங்கே உன்னை சிலர் சென்றுவிடும்படி சொல்வார்கள். அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவன் நீ. அந்த நிஷாதகுலப் பெண்ணின் கருவிலிருப்பவனை இளவரசனாக ஆக்க எண்ணுகிறார்கள்… நீதான் குருகுலத்தின் குருதியின் எச்சம். மெய்யான இளவரசன் நீ. பட்டம் உனக்குரியது” என்றாள்.

சுகோத்ரன் மறுமொழி ஏதும் சொல்லவில்லை. “ஆம், இப்போது தெரிகிறது அது. இத்தனை சாவுகள் ஏன் என்று. இளவரசர் அனைவரும் மடிந்தது நீ முடிசூடவேண்டும் என்பதற்காகவே. நீ அரியணை அமரவேண்டும் என்பதே ஊழ். அதன்பொருட்டே இவையெல்லாம்…” அவள் அவன் தோள்களை நடுங்கும் கைகளால் பற்றிக்கொண்டாள். “நீ அரியணை அமர்வாய். மும்முடி சூடி பாரதவர்ஷத்தை ஆள்வாய். உன் குருதிவழி இங்கே நிலைகொள்ளும். என் வழியாக மலைவாழ் மத்ரர்கள் பாரதவர்ஷத்தை ஆளும் செங்கோலைச் சென்றடைவார்கள்… ஆம், அதுதான் ஊழ்.”

“நான் கிளம்புகிறேன், அன்னையே…” என்று சுகோத்ரன் சொன்னான். “நீர்க்கடனுக்கான வேள்வி தொடங்கிவிட்டது. நான் சென்றாகவேண்டும்.” விஜயை அவன் கையை பிடித்துக்கொண்டு “எனக்கு சொல் அளித்துவிட்டுச் செல்… இங்கிருப்பாய் என்று… மணிமுடிசூடுவாய் என்று… சொல்!” என்றாள். “நான் சொல் அளிப்பதில்லை, அன்னையே” என்றான் சுகோத்ரன். “இது நான் கோரும் சொல். உன் அன்னை கோரும் சொல்” என்றாள் விஜயை. “நான் நிமித்தநூல் கற்றவன். ஊழை அறியும் ஆற்றல்கொண்டவன். நிமித்திகர் வஞ்சினம் உரைக்கலாகாது, ஆணையிடவும் கூடாது” என்றான் சுகோத்ரன்.

“நிமித்தநூலை தூக்கி வீசு… அது உனக்கு இனி தேவை இல்லை. இதுவும் என் ஆணைதான். அடிபணிந்திருக்கும் ஊழ்கொண்டவர் தன்னை ஆள் என அமைத்துக்கொள்ளும்பொருட்டு அதைக் கற்றார். அதனாலேயே கோழை என்றானார். நிமித்தநூல் சூதர்களுக்குரியது. பாரதவர்ஷத்தின் பேரரசனுக்கு அது எதற்கு… நான் சொல்வதைக் கேள். இது என் ஆணை…” என்று விஜயை கூவினாள். சுகோத்ரன் தலைவணங்கி கைகூப்பிவிட்டு குடிலைவிட்டு வெளியே சென்றான்.

விஜயை “நில், நான் ஆணையிடுவதைச் செய்” என்று கூவியபடி அவனுக்குப் பின்னால் வந்தாள். அவன் திரும்பி நோக்காமல் நடக்க உஜ்வலனும் உடன் சென்றான். அவள் குடில்வாயிலைப் பற்றிக்கொண்டு நிற்க அவளை பூர்ணை ஏந்திக்கொண்டாள். “மைந்தா, சொல்வதை கேள். உன் அன்னையின் ஆணை இது” என விஜயை கூவிக்கொண்டே இருந்தாள். அவர்கள் தேரிலேறிக்கொண்டார்கள். சுகோத்ரன் “அரசரின் குடிலுக்குச் செல்க” என பாகனுக்கு ஆணையிட்டான்.