நீர்ச்சுடர் - 54

பகுதி : எட்டு விண்நோக்கு – 4

விதுரர் சுகோத்ரனிடம் “அப்போது உன் அகவை என்ன?” என்றார். “ஆறு. நான் இலக்கணக் கல்வியை முடித்து நெறிநூல்களை கற்கத் தொடங்கியிருந்தேன்” என்றான் சுகோத்ரன். “அந்த அகவையில் அது பெரிய பொறுப்புதான்” என்றார் விதுரர். “ஆம், ஆனால் அந்த அகவையில் என்பதால்தான் என்னால் உறுதியான முடிவை எடுக்கமுடிந்தது” என்றான் சுகோத்ரன்.

நான் அந்த ஏட்டுச் சுவடியுடன் அங்கேயே அமர்ந்திருந்தேன். சிற்றறை அது. அதன் ஒவ்வொரு அணுவும் இன்று என என் காட்சியில் உள்ளது. நான்கு சாளரங்களினூடாகவும் ஒளி உள்ளே வந்தது. அந்தச் சுவடி நன்கு வெளிச்சம் படும் இடத்தில் இருந்ததனால் அது சுடர்விடுவது போலிருந்தது. அறைக்குள் வந்த காற்றில் திரைச்சீலைகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. என்னிடம் அது உசாவுவதுபோல தோன்றியது. எந்தக் கலையும் தன்னை முற்றளிக்கும்படி கோருகிறது. முற்றளிக்காதவனை அது ஏளனம் செய்கிறது. ஒரு கலையின் பொருட்டு பிற அனைத்தையும் இழப்பவனே அக்கலையை அடைகிறான். அக்கலையில் அவன் தேர்வான் என்றால் பிற அனைத்தையும் அக்கலையே அவனுக்கு அளிக்கும்.

ஆனால் பிற அனைத்தையும் விடுவதற்கான முடிவு எடுப்பது அத்தனை எளிதல்ல. முதிரா அகவையில் எடுத்த முடிவு அது. அதை எத்தனை நூறு முறை மீண்டும் எடுத்திருப்பேன். கனவுகளிலேயே வளர்க்கப்பட்ட ஷத்ரியனாகிய எனக்கு அளிக்கப்பட்டது. எழுக, விரிக என்னும் ஆணை. தாதையே கூறுக, உலகு நோக்கி விரிக என்ற ஆணையை ஒவ்வொரு ஷத்ரியனுக்கும் விதைப்பது அக்குலமா, அவனுக்கு அளிக்கப்படும் கல்வியா, அவன் குருதியா? அறியேன். ஆனால் ஷத்ரியனை நிலைகொள்ளாமலாக்குவது, அவன் ஒருகணமும் எங்கும் அமையாதவனாக ஆக்குவது அதுதான்.

இதோ குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் இத்தனை ஷத்ரியர்கள் முட்டி மோதி உயிர்துறந்திருப்பது அவர்களுக்குள் விதைக்கப்பட்ட அக்கனவினால்தான். அது பேரழிவை உருவாக்கும் தீச்சொல்போல. கனவெனினும் கடந்து போக முடியாத ஒன்று. ஷத்ரியர்கள் என்னும் குலம் ஏன் உலகில் உருவானது? ராஜஸமென்னும் இயல்நிலையின் மானுட வடிவங்கள் அவர்கள். இப்புடவியை நெய்திருக்கும் மூன்று விசைகளில் அதுவே முதன்மையானது. எழுவிசை அது. இக்களத்தில் படைப்பிறையால் வைக்கப்பட்ட கருக்கள் ஷத்ரியர். அழிப்பதும் அழிவதும் அவர்களின் இயல்பு. விலங்குகளில், பூச்சிகளில்கூட ஷத்ரியர்கள் உண்டு என்பார்கள்.

மண்மீதான பற்றை துறப்பது சூத்திரர்களுக்கு கடினம். பொன்மீதான பற்றை துறக்கும் வைசியர் அதனினும் அரியர். சொல்மீதான ஈர்ப்பை அறுக்க அந்தணன் அருந்தவம் செய்யவேண்டும். தாதையே, வெற்றிமேல் ஷத்ரியன் கொள்ளும் விழைவை அறுப்பது இயல்வதே அல்ல. அவன் ஷத்ரியன் அல்லாமல் ஆகவேண்டும் அதற்கு. விஸ்வாமித்திரரும் ஜனகரும் கடந்துசென்றனர். அதற்கு முன் அவர்கள் தங்களை படிகளாக்கி தாங்களே மிதித்தேறி அந்தணர் ஆயினர்.

நான் அன்று பகல் முழுக்க அங்கு அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு கணமாக அச்சுவடி நோக்கி செல்கிறேன் என்று தோன்றியது. ஒவ்வொரு கணத்திலும் அச்சுவடியிலிருந்து என்னைத் தடுக்கும் பெருவிசைகளை உணர்ந்திருந்தேன் என்று தோன்றியது. அச்சுவடி மட்டும் ஒளிவிட அறை இருண்டு அமைந்தது. சுவடியின் அருகே இருந்த சிற்றகலின் வெளிச்சத்தில் அதை பார்த்தபடி அந்தியில் அமர்ந்திருந்தேன். எண்ணெய் தீர்ந்து அகல் அணைய சுவடி இருளில் மறைந்தது. இருளுக்குள் அதன் இருப்பு இருந்தது. அருகே நான் அமர்ந்திருந்தேன். பின்னர் அது மட்டுமே இருந்தது, நான் இல்லாமலிருந்தேன். பின்னர் அது மறைந்தது நான் இருந்துகொண்டிருந்தேன். பிறகு வேறெங்கோ எங்கள் இருவரையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

முழு இரவும் அங்கு அமர்ந்திருந்தேன். மறுநாள் புலரி எழுவதை ஓசைகளினூடாக உணர்ந்தேன். புலரியா என்று எண்ணியபோது திகைப்பாக இருந்தது. அத்தனை பொழுது அங்கு அமர்ந்து எதை எண்ணினேன் என்று பின்னாட்களில் பலமுறை தொகுத்துப் பார்த்தேன். எதையுமே எண்ணவில்லை, வெற்றுச் சொற்களால் நெஞ்சை நிரப்பிக்கொண்டு அங்கு அமர்ந்திருந்தேன் என்று தோன்றியது. சலிப்புற்று எழுந்து ஓடிவிடவேண்டும் என்று எண்ணி, ஆனால் உடலை அங்கிருந்து எடுக்க இயலாமல்தான் அங்கேயே படிந்திருந்தேன். சாளரங்கள் ஒளி கொண்டன. ஒளி சரிந்து உள்ளே விழுந்தது. முதற்கதிர்! அதன் செம்பொன் நிறம்!

அச்சுவடி அவ்வொளியில் மீண்டும் பொலியத் தொடங்கியது. இப்போது முற்றிலும் புதிதாக இருந்தது. அவ்விரவில் அது எங்கோ கிளம்பிச்சென்று மீண்டதுபோல. புடவி முழுக்க நிறைந்திருக்கும் பேரிருள் ஒன்றில் கரைந்திருந்து மீண்டும் உயிர்கொண்டதுபோல. அவ்விருள்தான் புடவிகள் அனைத்தையும் இணைக்கும் சரடு. இருளே அனைத்துக்கும் பொருள் அளிக்கிறது. நிமித்திகனின் ஊடகம் இருள். அவன் மொழியிலெழுவது இருள். இருளின் அளவிடமுடியாமையையே அவன் ஊழென்று விளக்குகிறான். அளியென்று ஆக்கி ஆறுதலென சமைத்து அளிக்கிறான்.

நிமித்திகன் அறியக்கூடுவதில் ஒரு பகுதியை மட்டுமே நாம் நிமித்தநூலில் கற்கிறோம். மொழி தொடும் இடமே சிறிது. மொழியில் நாம் உளம் திறக்கும் இடம் அதைவிட சிறிது. உளம் திறக்கும் இடத்தை நாம் உலகியலுக்கு விளக்குவது அதைவிட சிறிது. ஏரியல்ல அது, கடல். ஆழி, பரவை, அலகிலி. அதை என் உள்ளத்தில் அள்ளிக்கொள்ளவேண்டும். ஆனால் நான் அதில் இறங்கிவிடவேண்டும். என் முன் அதன் கரை வளைந்திருந்தது. மாபெரும் நாவுகள் என அலைகள் கொந்தளித்தன.

அச்சம் ஏற்பட்டு நான் எழுந்தேன். என்னால் அது இயலாதென்று தோன்றியது. ஆழியில் குதிப்பவன் கரையை முற்றாக மறந்துவிடவேண்டும். ஆடை அனைத்தையும் முற்றாக களைந்துவிடவேண்டும். பெயரை, அடையாளங்களை, உறவை இழந்துவிட வேண்டும். ஆழியன்றி பிறிதொன்று இருக்கக் கூடாது. ஆழியாகவே மாறிவிடவேண்டும். ஆழியில் எதுவும் சிறு துளியே. பெருங்கலங்கள் கூட. தீவுகள் கூட துளிகளே.

நான் அவ்வறையிலிருந்து வெளியே செல்வதற்காக திரும்பிய கணம் சாளரத்தினூடாக வாள் வீச்சென ஒரு சிறு பறவை உள்ளே வந்து சுழன்று திரும்பிச் சென்றது. ஒருகணம் கூட இல்லை. அதை நான் பார்க்கவே இல்லை. அதன் வீச்சொலியை மட்டுமே கேட்டேன். அதன் காற்று அசைவென்று உடலைத் தொட உணர்ந்தேன். மெய்ப்பு கொண்டு அங்கேயே நின்றேன். சுவர் சாய்ந்து மெல்ல அமர்ந்தேன். என் உடல் துள்ளி நடுங்கிக்கொண்டிருந்தது. என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. இரு கைகளையும் கோத்து மடியில் வைத்து இறுக்கிக் கொண்டிருந்தேன்.

தௌம்ரர் உள்ளே வந்து “என்ன முடிவெடுத்திருக்கிறாய்?” என்றார். “ஆசிரியரே, நான் நிமித்தநூல் கற்கிறேன், நிமித்திகனாகிறேன்” என்றேன். “அறுதி முடிவா இது?” என்று அவர் கேட்டார். “ஆம், அறுதியாக” என்று நான் சொன்னேன். ஆசிரியர் மகிழ்ந்தாரா? முகம் மலர்ந்ததா? இன்றுகூட அதை என்னால் உணர முடியவில்லை. இத்தனை தொலைவுக்கு அந்த நாளை, அக்கணங்களை விரித்து விரித்து சொல்லாக்கிக் கொண்டபின்னரும் அவர் முகம் பொருளில்லாத சொல் எனவே நினைவில் நீடிக்கிறது.

ஆசிரியர் என்னை அருகே அமர்த்தி, ஏட்டுச் சுவடியை எடுத்து மடியில் வைத்து “நோக்கு” என்றார். அது பட்டு நூலால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. மிகத் தொன்மையான ஏடு. தாளியோலையில் எழுதப்பட்டது. பொன்னிற ஓலை காலத்தால் பழுப்பு நிறமாகி சாம்பல் நிறமாக மாறிவிட்டிருந்தது. “இது சூரியதேவரின் பிரஹதாங்க பிரதீபத்தின் பதினெட்டாவது அங்கம். இது ஊழ் குறித்தது. இதில் உன் கை திறக்கும் பகுதியை காட்டு” என்றார்.

நான் அதன் செம்பட்டுச் சரடை சுற்றி பிரித்து அதை செங்குத்தாக அடுக்கி ஏட்டு அடுக்கின் வரிகளின்மேல் விரலோட்டி “தெய்வங்களே!” என்று எண்ணியபடி ஒரு பக்கத்தில் விரலமிழ்த்தி அதை பிரித்து வைத்தேன். தாளியோலையின் அப்பக்கத்தில் எழுத்தாணியால் மிக மெலிதாகக் கீறி எழுதப்பட்ட எழுத்துக்களின் மீது மஞ்சளும் சுண்ணமும் கலந்த செஞ்சாந்து பூசப்பட்டிருந்தது. ஒருகாலத்தில் செவ்வண்ணத்தால் எழுதப்பட்ட எழுத்துக்கள். பின்னர் உலர்ந்த குருதியென்றாகி பின்னர் கருங்கோடுகளாக சமைந்து அதிலிருந்தன .

தௌம்ரர் “அதில் ஒரு சொல் மீது உன் கையை வை” என்றார். நான் விழி தழைக்க “நோக்காது வை” என்றார். நான் சுட்டுவிரலை அதன்மேல் நிறுத்தி ஒருகணம் காத்திருந்தேன். அவ்வேட்டில் ஒரு வார்த்தை எனக்காக காத்திருக்கிறது என்று தோன்றியது. அச்சொல் எது? அது முன்னரே எனக்காக காத்திருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக. சூரியதேவர் பிருஹதாங்க பிரதீபத்தை எழுதிய காலம் முதலே அது என்னுடையது. எனக்கு முன் பல்லாயிரம் கைகள் அதை தடவியிருக்கும். அவர்கள் அனைவரையும் என்னுடன் இணைக்கிறது. அது அச்சரடில் மேலும் மேலும் ஆளுமைகளை கோத்து ஒரு மாலையை அமைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு நோக்கம் இருக்கக்கூடும். அச்சொல் முதல்முறையாக அவர் உள்ளத்தில் எழுந்தபோது, கற்றுச்சொல்லியால் முதலில் சுவடியில் எழுதப்பட்டபோது நான் அங்கு நின்றிருப்பேன்.

“கையை வை” என்று தௌம்ரர் சொன்னார். பிறிது எண்ணாமல் நான் கையை வைத்தேன். அவர் அச்செய்தியை படித்தார். “எப்போதும் அலகு நிமிர்ந்திருக்கும் பறவை” என்ற வரியைப் படித்து முகம் மலர்ந்து “நன்று, அழகிய வரி” என்றார். “என்ன பொருள்?” என்று கேட்டேன். “அலகு நிமிர்ந்திருக்கும் பறவை என்பது ஓர் அழகிய நிமித்தம்” என்றார் தௌம்ரர். “ஆசிரியரே, அதன் பொருளென்ன?” என்றேன். உண்மையில் அப்போது என் கற்பனையில் அப்பறவையை கண்டுவிட்டிருந்தேன்.

“பறவைகளில் இருவகை உண்டு. அமர்ந்திருக்கையில் குனிந்து நிலம் நோக்கும் பறவை ஒன்று. எக்கிளையில் அமர்ந்தாலும் தலையை வான் நோக்கி நிமிர்த்தியிருக்கும் பறவை பிறிதொன்று. நோக்குக, பறவைகள் விண்ணையும் மண்ணையும் நோக்கும்! சிறகு விண்ணுக்கு கால் மண்ணுக்கு. விழி விண்ணுக்கு அலகு மண்ணுக்கு. ஆனால் பசித்து இரை தேடி அமர்ந்திருக்கையிலும் வான் நோக்கி அமர்ந்திருக்கும் பறவைகள் சில உண்டு. சிட்டுக்குருவி நிலம் நோக்குவது மிகவும் குறைவு.”

“ஆம், சிட்டுக்குருவி நிலம் நோக்கி நான் பார்த்ததில்லை” என்றேன். “மைந்தா, ஒவ்வொரு கணமும் மண்ணில் இரைநோக்கி வாழவேண்டிய ஊழ் அதற்கு இருக்கிறது. அது ஊழை அறியவும் செய்கிறது. ஆயினும் தன் கூரலகை வானை நோக்கியே நிமிர்த்தியிருக்கிறது. கிளையிலிருந்து எழும்போது எப்போதும் மேலே நோக்கியே எழுகிறது. சுழன்று கீழிறங்கினாலும் மேலே நோக்கி சென்றுவிடுகிறது. அலகு மேல் நோக்கிய பறவை… நன்று” என்றார். “சின்னஞ்சிறு பறவை… உலகோர் விழிகளுக்கு தென்படாமலேயே வாழவும்கூடும் அது… ஆற்றலற்றது. எளிதென்பதையே ஆற்றல் எனக்கொண்டது… நன்று.”

எழுந்து என்னை தன்னருகே நிறுத்தி “என் தாள் பணிந்து இச்சுவடியை பெற்றுக்கொள். உனக்கு அனைத்து நலன்களும் கூடும்” என்றார். நான் எழுந்து அவர் கால்களைத் தொட்டுச் சூடி வாழ்த்து பெற்றேன். “தெளிக! தெளிந்து அவற்றை கடந்து செல்க! நிறைவடைக!” என்று அவர் வாழ்த்தினார். பின்னர் பிரஹதாங்க பிரதீபத்தை பட்டு நூல் சுற்றி என் கையில் அளித்து “இது உன்னிடம் இருக்கட்டும். இதில் இல்லாத எதுவுமே இல்லை” என்றார். “இங்கு வெளியே விரிந்து கிடக்கும் ஒவ்வொன்றும் இதில் உள்ளது. வான்விரிவு அனைத்தையும் அள்ளி வைத்திருக்கும் நீர்த்துளியின் ஆடிப்பரப்பு போன்றது இது. இது ஒரு கடல். அழியாத பெருவிரிவு. என்றும் மானுடர் இதில் வந்து மூழ்கித்துழாவி உசாவிக்கொண்டேதான் இருப்பார்கள்.”

“அவர்களுக்கு உரியதை அவர்களுக்கு அளிக்கும். அவர்களுக்கு வழி காட்டும், ஆறுதல்படுத்தும், செயலூக்கத்தை அளிக்கும். உரிய தருணத்தில் செயலின்மையும் அவர்களுக்கு கூறும். அதன் நாவென்று நீ ஆகுக! கோடானுகோடி இலை முளைத்த மரம்போல நா முளைத்த சுவடி இது. ஒரு நாவு உன்னுடையதென்று ஆகுக! நிமித்திகன் நா ஆலயத்து மணியின் நாவுக்கு நிகரானது. அது தெய்வச்சொல் என்பார்கள். தன்னை தெய்வத்துக்கு ஒப்புக்கொடுத்தவனே அவ்வாறு ஆகமுடியும். ஒப்புக்கொடு. எச்சமிலாது அளிக்கையில் எஞ்சும் ஒன்று உண்டு. அதுவே நிறைவென்பது. ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவர் என்னை வாழ்த்தினார்.

“அவரை வணங்கி நான் பிருஹதாங்க பிரதீபத்தை பெற்றுக்கொண்டேன். என் கையில் எப்போதும் அச்சுவடியை வைத்திருப்பேன்” என்று சுகோத்ரன் கூறினான். “நான் அவரிடம் ஐந்தாண்டுகள் கற்றேன். அதன்பின் அவரிடம் விடைபெற்று மீண்டும் கற்கும்பொருட்டு ஆசிரியர்களை நாடிச் சென்றேன்” என்றான் சுகோத்ரன். “இங்கே நிகழ்ந்தவை எதையும் நான் முழுமையாக அறியவில்லை. என் கல்வியே தவமென சூழ்ந்திருந்தது. அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அன்னையரைச் சந்திக்கும் பொருட்டு சிலமுறை வந்தேன். தந்தையர் கானேகியிருப்பதை அறிந்தேன். ஆனால் என் உள்ளம் விலக்கம் கொண்டிருந்தது.”

விதுரர் “அது நன்று. இக்களத்திலிருந்து அவ்வாறு ஒருவர் விலக்கப்பட்டது மிக நன்று” என்றார். “ஆனால் அவ்வாறு விலக்கப்பட்டதன் பழியை நான் அடைகிறேன். நான் பயிலும் அனைத்து கல்விநிலைகளிலும் கோழையென்றே கருதப்படுகிறேன். சாவுக்கு அஞ்சி நூலுக்குள் ஒளிந்துகொண்டவன் என்று என்னை சூதர்கள் எண்ணுகிறார்கள். இப்போர் முடிந்த செய்திகள் வரும்போது ஒருகணம் அது மெய்யோ என்று எனக்கும் தோன்றியது. அவ்வெண்ணத்திலிருந்து என்னால் தப்ப இயலவில்லை. ஆகவேதான் இங்கு கிளம்பி வந்தேன். இத்துயரின், அழிவின் நினைவுகளில் உழன்ற பின்னரும் என்னிடம் எஞ்சுவதென்ன என்று பார்க்கலாம் என்று தோன்றியது” என்று சுகோத்ரன் கூறினான்

“ஆம், வந்தது நன்றே” என்றார் விதுரர். அவர் பேசவந்ததை பேசவிரும்புவதுபோலத் தோன்றினார். சுகோத்ரன் அதற்காகக் காத்திருந்தான். அவர் சற்றுநேரம் இருளை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “உன் நிமித்தநூல் என்ன சொல்கிறது, அஸ்தினபுரியின் எதிர்காலம் பற்றி?” என்றார். “நான் கணிக்கவில்லை. நெறிகளின்படி நான் என் வாழ்க்கையையும் என் உற்றார் வாழ்க்கையையும் கணிக்கக் கூடாது” என்றான்.

விதுரர் “ஆம், அதை அறிவேன். ஆயினும் நீ உன்பொருட்டன்றி பிறர் பொருட்டு அதை செய்யலாம். அஸ்தினபுரியின் எதிர்காலமே இனி பாரதவர்ஷத்தின் எதிர்காலம். அதை கணிக்காமல் எவரும் பிற எதையும் கணித்துவிட முடியாது” என்றார். “மெய்தான். அஸ்தினபுரியின் எதிர்காலத்தை நான் கணித்தேன். அது குடிபெருகி வாழும். நீடித்த அமைதியை காணும். செல்வமும் சிறப்பும் அமையும்” என்றான். விதுரர் “வேறெந்த நாடுகள் சிறப்புறும்?” என்றார். “மாளவமும் கலிங்கமும் வங்கமும் வாழும். மகதம் பெருஞ்சிறப்புடன் எழும் ஒரு காலம் வரும்” என்றான் சுகோத்ரன்.

விதுரர் பெருமூச்சுவிட்டு “நெடுங்காலத்திற்கு முன் என் அன்னை சத்யவதியின் அவையில் ஒரு நிமித்திகன் அதை சொன்னான். அதன்பின் அதை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். அன்று மகதம் சிறுநாடு. அதன்பின் அதை விரித்து எடுத்தவன் அரக்க குடிப்பிறப்பு கொண்ட ஜராசந்தன்… எவ்வண்ணம் அது பாரதவர்ஷத்தை முழுதாளும்? சலித்து அதுவே ஊழ் போலும் என விட்டுவிடுவேன். இன்றும் அதே உளத்தயக்கத்தையே அடைகிறேன்” என்றார்.

மீண்டும் ஒரு சொல்லின்மை வந்தமைந்தது. விதுரர் சற்று கடந்துசென்று மீண்டும் சொல்லெடுத்தார். “நீ உன் மூதன்னை குந்தியை சந்திக்கவேண்டும். அவர் உன்னிடம் சிலவற்றை கோர விழையலாம்” என்றார். “நான் சிலமுறை அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் வந்துள்ளேன். அவரைச் சந்திக்கும் விழைவு இருந்தது. அவர் விரும்பவில்லை” என்றான் சுகோத்ரன். “அவர் என்னை அரண்மனைச்சூழலில் இருந்தே விலக்கிவிட்டிருந்தார். என் அன்னையிடம் அவன் முழு நிமித்திகனாக வரட்டும், முதிர்வுக்கு முன் அவன் உங்களையெல்லாம் சந்திப்பதே கூட நன்றல்ல என்றார். அதன் பின் நான் கல்விநிலையிலிருந்து வெளிவரவே இல்லை” என்றான் சுகோத்ரன்.

“அவர் இன்று பிறிதொருவராக ஆகிவிட்டிருக்கிறார்… இன்று அவர்…” என்று விதுரர் தொடங்க “உய்த்துணர முடிகிறது. ஆனால் இன்றைய நிலையில் எந்நிமித்திகரும் அவர்களை காணலாகாது. அவர்களால் மூதன்னைக்கு எப்பயனும் இல்லை” என்றான் சுகோத்ரன். விதுரர் “உன்னை இளங்குழவி என கானகம் அனுப்பியது உன் தந்தை எடுத்த முடிவு” என்றார். “இன்று நிகழ்ந்துவிட்ட அனைத்தையும் அவர் முன்னுணர்ந்திருக்கலாம். மூழ்கும் தோணியில் இருந்து கைமகவை கரை நோக்கி எறிவதுபோல உன்னை அவர் தௌம்ரருக்கு அளித்திருக்கலாம்.”

“அந்நாளில் அம்முடிவைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். நிமித்தஞானம் மட்டும் மொழிக்கு முன்னரே கற்கப்படவேண்டும். சொற்களுக்கு உலகியல் அளிக்கும் பொருளே இயல்பாகக் கிடைப்பது. அதற்கு முன்னரே காலமும் வானமும் அளிக்கும் மெய்ப்பொருளை அறிந்தவனே நிமித்தவியலின் மெய்மையை தொடமுடியும். மொழியறிந்த பின் நிமித்தநூல் கற்பவன் நிமித்தஞானத்தை தானறிந்த உலகியல் மொழிக்குபெயர்த்து புரிந்துகொள்பவன். அவன் புரிந்துகொள்ளலாம், உணர்ந்துகொள்ளல் இயலாது. இது கல்லையும் மண்ணையும் அளக்கும் கணக்கு அல்ல, வான்முகிலையும் காற்றையும் அளக்கும் கணக்கு என்றார்.”

“நிமித்தநூல் ஆசிரியரிடமிருந்தே என் மைந்தன் மொழியையும் கற்கவேண்டும். அவன் வந்து நின்றிருக்கையில் அவனிடமிருந்து நான் மேலும் கற்கவேண்டும் என்றார். என்னால் அதை மறுக்கமுடியவில்லை” என்று விதுரர் தொடர்ந்தார். “உன் தாலிக்காப்பு விழவுக்கு மறுநாளே தௌம்ரர் தன் ஏழு மாணவர்களுடன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தார். மூதரசி குந்தி உன்னை ஒரு பொற்தாலத்தில் படுக்கவைத்து பொன்நாணயங்களால் மூடி இரு கைகளால் எடுத்து அவருக்கு அளிக்க அவர் வணங்கி பெற்றுக்கொண்டார். அரசியர் தேவிகையும் கரேணுமதியும் பலந்தரையும் விழிநீர் உகுத்ததை கண்டேன். உன் அன்னை வெற்றுவிழிகளுடன் நோக்கி நின்றார். நீ விழிமுன் இருந்து அகன்றதும் பெருமூச்சுடன் திரும்பினார். கால்தளர்ந்து மயங்கிவிழுந்தார்.”

“நான் அன்று உளம்கொந்தளித்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொந்தளிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. பின்னர் அனைத்தும் நலம் திகழ்வதற்கே என என்னை தேற்றிக்கொண்டேன். ஒருவன் அகன்றிருப்பது இன்றியமையாதது என உன் தந்தை நெஞ்சில் எழுந்த தெய்வம் ஆணையிடுகிறது போலும் என எண்ணிக்கொண்டேன். அது நன்று என இன்று உறுதிகொண்டிருக்கிறேன். நீ இவ்வண்ணம் வந்து அமர்ந்திருக்கையில் தெய்வங்களையும் மூதாதையரையும் மீள மீள அழைத்து நன்றி சொல்கிறேன். உன் மூதன்னையும் உன் வருகையை அறிந்தால் விழிநீர் சிந்துவார். ஒருவேளை அவர் இன்று கொண்டிருக்கும் அப்பெருந்துயர் சற்றே அகலவும்கூடும்.”

சுகோத்ரன் “இல்லை, அது மிகவே வாய்ப்பு” என்றான். விதுரர் “என்னை விட நீ அறிந்தவன்” என்றார். சுகோத்ரன் “என் அன்னையையும் சந்திக்கவேண்டும். புலரி எழட்டும்” என்றான். விதுரர் “ஆம், அவர் மகிழக்கூடும்” என்றார். “இல்லை, மேலும் துயருறுவார்” என்றான் சுகோத்ரன். “ஏன்?” என்று விதுரர் கேட்டார். சுகோத்ரன் புன்னகை செய்தான். “ஏன்?” என்று மீண்டும் விதுரர் கேட்டார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு சொல்லொழிந்தார். “நீ வந்தது ஒரு அருநிமித்தம். நம் குடிக்கே ஒரு பெருவாய்ப்பு. தெய்வங்களின் ஆணையே இதுவென இருக்கலாம்” என்றார். அவன் அதைச்செவிகொள்ளாமல் இருளை நோக்கி விழிநிலைக்கவிட்டு அமர்ந்திருந்தான்.

அவர் பேசவந்தது அப்போதும் அவர்களுக்கு நடுவே நின்று தத்தளித்தது. நேரடியாகவே அதை நோக்கி செல்லவேண்டும் என அவர் முடிவெடுப்பதை சிறு உடலசைவே காட்டியது. ஆனால் சொல்லுக்காக வாய் அசைவுகொண்டதுமே அவர் உள்ளம் பின்னடைய உதடுகள் திறந்தபடி நின்றன. ஒரு கணம் சிலை என ஆகி உறைந்து பின் எண்ணம் வேறெங்கோ முட்டிக்கொள்ள பெருமூச்சுவிட்டு திரும்பிக்கொண்டார். அவன் அவரை நோக்கி “அஞ்சவேண்டியதில்லை. அஸ்தினபுரிக்கு குருகுலத்தின் குருதித்தொடர்ச்சி உண்டு” என்றான்.

“ஆம், அதை வேறு நிமித்திகர்களும் கூறியிருக்கிறார்கள்” என்றார் விதுரர். “அது எவராக இருக்கக்கூடும் என நான் உன்னிடம் கேட்கப்போவதில்லை” என்றார். மீண்டும் அந்தத் தவிப்பு. பிறகு நீள்மூச்செறிந்து “உன்னால் விராடநாட்டரசி உத்தரையின் பிறவிநூலை கணிக்கமுடியுமா?” என்றார். அவன் புன்னகையுடன் “ஆம்” என்றான். விதுரர் மெல்லிய பரபரப்புடன் “அதை நானே வரைந்து கொண்டுவந்துள்ளேன்…” என்று இடையிலிருந்து ஓர் ஓலையை நீட்டினார். அவன் புன்னகையுடன் அதை வாங்கினான். அதை கூர்ந்து நோக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் கண்களை மூடி சற்றுநேரம் ஊழ்கத்திலமைந்தான்.

பின்னர் விழிகளைத் திறந்து அவரை நோக்கி “நன்று சொல்வதென்றால், விராடஅரசியின் மைந்தன் நாடாள்வான்” என்றான். “அவனுக்கு நாகத்தீங்கு உண்டு. ஆனால் அவன் கொடிவழியினர் இங்கே பல தலைமுறைக்காலம் நீடித்து வாழ்வார்கள்.” விதுரர் வெறும்விழிகளால் நோக்க “தீது என்றால் அவருக்கு நீடித்த வாழ்வு இல்லை. இந்த ஆண்டே ஒரு சாவிடரை காட்டுகிறது பிறவிநூல். வலுவானது” என்றான். “ஆனால் அது அவருக்கு விடுதலையே. எட்டு களங்களிலிருந்தும் கடுந்துயர் வந்து தாக்கும் நிலையில் இருக்கிறார். தன்னினைவு கொள்வதே பெருவலியை அளிக்கும் அளவுக்கு சூழ்துயர்.”

விதுரர் பெருமூச்சுவிட்டார். சுகோத்ரன் “மேலும் சொல்லலாம், ஆனால் நீங்கள் அறியவேண்டுவதென்ன?” என்றான். “அம்மைந்தனின் பிறவித்தருணத்தை கணிக்க முடியுமா? அதைக்கொண்டு அவன் வாழ்வை கணிக்கலாகுமா? எளிய நிமித்திகர்களால் இயலாது” என்றார் விதுரர். “அனைத்து நிமித்திகர்களாலும் இயலும். நீங்கள் கேட்கவிருப்பதை குடிக்கு வெளியே ஒரு நிமித்திகரிடம் கேட்க விழையவில்லை, அவ்வளவுதான்” என்றான் சுகோத்ரன். “ஆம்” என்று விதுரர் சொன்னார். “தாதையே, அவன் குருகுலத்துக் குருதியினன். அதற்கப்பால் அவன் பிறப்பு குறித்து ஆராய நமக்கு உரிமை இல்லை” என்றான் சுகோத்ரன்.

“ஆனால்…” என்று விதுரர் சொல்லெடுக்க சுகோத்ரன் ஊடே புகுந்து “எவருடைய பிறப்பையும் ஆராயும் உரிமை பிறருக்கில்லை. அன்னையரின் கருப்பைக்குள் விழிசெலுத்துவது தவமுனிவரின் ஊழ்கத்தைக் கலைக்கும் பழியைச் சேர்ப்பது” என்றான். விதுரர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் எழுந்துகொண்டு “நெறி எதுவாயினும் ஆகுக! இங்கே ஒரு சிறுபழி சேராமல் கடக்க இயலுமா என்பதே என் உசாவல். நன்று, நீயே அறிந்திருப்பாய். உன்னால் அதை தவிர்க்க முடியும். நீ குருகுலத்துக் குருதியினன். எஞ்சும் ஒரே மைந்தன். நீ உரிய முடிவை எடுத்தால் போதும்” என்றார்.

சுகோத்ரன் மறுமொழி சொல்வதற்குள் விதுரர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து இருளுக்குள் நடந்து அகன்றார். சுகோத்ரன் அவரை நோக்கியபடி இருந்தான். பின்னர் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு இருளை நோக்கி அமர்ந்திருந்தான்.