நீலம் - 37
பகுதி பன்னிரண்டு**: 2.** கொடி
இடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர்! உலகிலேயே பெரிய மலர்!” என்று கூவினாள். “தலைசுழலுமடி… எழமுடியாமல் படுப்பாய். விழவுகாண முடியாமலாவாய்” என்றாள் நீர்க்குடம் தளும்ப நடந்து சென்ற கீர்த்திதை. “பெரிய மலர்…” என்று ராதை துள்ளி கைகளை விரித்துக் காட்டினாள்.
புன்னகையுடன் கீர்த்திதை உள்ளே சென்றாள். அடுமனையின் மரச்சாளரம் வழியாக அவளறியாமல் எட்டிப் பார்த்தாள். வெண்மணல் விரிந்த முற்றமெங்கும் வண்ண மலர்களென ராதை மலர்ந்துகொண்டே இருப்பதைக் கண்டாள். அவள் அமர்ந்து படைத்த மலரெல்லாம் அவ்வண்ண இதழ்களுடன் கண்களிலும் காற்றிலும் எஞ்சியிருந்தன. பால்கலத்தை அடுப்பில் வைத்து பசுங்கீரை கட்டுடன் அமர்ந்தாள்.
அவள் அன்னை அனங்கமஞ்சரி உள்ளறையில் எழுந்தாள். “கீரையை என்னிடம் கொடு. நெய்நெயுக்கும் பணி உள்ளதல்லவா?” என்று வந்தமர்ந்தாள். இல்லச்சுவரில் எழுந்த வண்ணநிழல் கண்டு “வருவது யார்?” என எட்டிப்பார்த்தாள். “என்னடி செய்கிறாள் உன்மகள்? இன்னமும் சிறுமியா இவள்? இவ்வயதில் உன்னை நான் கருவுற்றேன்” என்றாள். “புத்தாடையை பூவாக்குகிறாள்” என்று நகைத்தாள் கீர்த்திதை. கண்சுருக்கி பெயர்மகளை நோக்கி கனிந்து புன்னகைத்து “வெறும் பிச்சி…” என்றாள்.
“ராதையெனப் பெயரிட்டது தாங்கள் அல்லவா?” என்றாள் கீர்த்திதை. “ஆம், என் இல்லத்தில் சுடராக என் தமக்கை என்றுமிருக்க விழைந்தேன். உனக்கு என் அன்னைபெயரிட்டேன். உன் வயிற்றில் அவள் வந்து பிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டேன்” என்றாள். “கையில் எடுத்து இவள் கண்களைக் கண்டபோதே நினைத்தேன். இவள் அவளே. என் அரசி. என் குலத்தெழுந்த தெய்வம்.”
கீர்த்திதை பால்வட்டம் அசைவதை நோக்கி நின்றாள். “என்னைக் கொஞ்சியதில்லை என் தமக்கை. என் முகம் கூட அவள் நெஞ்சில் இருக்கவில்லை. எங்கிருந்தோ வந்த குழலிசை கேட்டு ஏங்கி காத்திருந்தாள். கானல் அலைந்த கண்கள் கொண்டிருந்தாள்” என்று அனங்கமஞ்சரி சொல்லிக்கொண்டாள். கீரை ஆய்வதை நிறுத்தி “என் நெஞ்சுள்ள வரையிலும் நினைத்திருப்பேன் அவளது தெய்வம் எழுந்த திருவிழிகளை. இம்மண்ணையும் அவ்விண்ணையும் அள்ளி உண்டாலும் அடங்காத விடாய் கொண்டவை. அலை கொதிக்கும் கடல்விழிகள். அனைத்துமறிந்த பேதைவிழிகள்!” நீள்மூச்சு விட்டு “அவ்விழிகளுடன் இம்மண்ணில் அவள் வாழ்வது எப்படி? அவ்வொளிகொண்டு அவள் காண இங்குள்ளதுதான் என்ன?”
“அவள் தேடியது எதை? கண்டடைந்து நிறைந்தது எதை?” என்றாள் கீர்த்திதை. “மண்ணில் காலூன்றும் மானுடர் அறியாத மந்தணம் அல்லவா அது” என்றாள் அனங்க மஞ்சரி. “ஆயர்குடி எந்நாளும் அதை அறியவே போவதில்லை. அவளை அறிந்தோர் இப்புவியில் எவருமில்லை” என்று சொல்லி “என்னடி இது? கீரை கொய்கையில் கீழே பார்க்கமாட்டீர்களா?” என்றாள். நீலத்துழாய் எடுத்து நீட்டிக்காட்டி “கிருஷ்ணதுளசி. கோவிந்தன் பெயர்சொல்லாமல் கொய்வது பெரும்பாவம்” என்று எழுந்தாள். அகத்தறைக்குள் எரிந்த அகல்சுடர் முன் அதைவைத்து “ஆயர்குலத்து அரசே, அடியோரை காத்தருள்க” என்றாள். பால்கலம் பொங்கக்கண்டு “கண்ணா காக்க!” என்றாள் கீர்த்திதை.
உள்ளே ஓடிவந்த ராதை “பாலாடை பாலாடை!” என்று கூவி துள்ளினாள். “நில்லடி பிச்சி… உனக்குத்தானே?” என்று சொல்லி பாலாடையை மெல்ல கரண்டியால் எடுத்து அதன்மேல் அக்காரப்பாகை ஒருதுளி சொட்டி அவளிடம் அளித்தாள். அதை எடுத்துக்கொண்டு அவள் வெளியே ஓட “எங்குசெல்கிறாள்?” என்றாள் அனங்கமஞ்சரி. “அங்கே அவளுடன் பேசும் ஒரு பூனை இருக்கிறது” என்றாள் கீர்த்திதை.
பாலாடையுடன் வந்தவளைக் கண்டு பாரிஜாதம் சலிப்புற்ற குரலில் முனகி எழுந்து உடலை வளைத்தது. வால்தூக்கி பின் நீட்டி வாய்திறந்து நாவளைத்து அருகே வந்தது. மீசை நக்கி கால்பதித்து அமர்ந்து “ராதையே?” என்றது. ராதை பாலாடையை அதன்முன் வைத்தாள். எழுந்துவந்து கண்மூடி தலைசரித்து சிறுசெந்நா வளைத்து நக்கத்தொடங்கியது. “பாரிஜாதம்” என்று ராதை அதை அழைத்தாள் ஒருகண்ணைத் திறந்து ‘படுத்தாதே’ என்றபின் மீண்டும் நக்கியது. ஐயம் கொண்ட காலடிகளுடன் அருகணைந்தன இரு காகங்கள்.
மரங்களுக்கு அப்பால் கொம்போசை எழக்கேட்டு முகவாய் தூக்கி செவிகூர்ந்தாள் ராதை. பின்னர் பாவாடை பறக்க புரிகுழல் அலையடிக்க தாவி ஓடினாள். பர்சானபுரியின் சாலைகளெங்கும் வெண்மணல் விரிக்கப்பட்டிருந்தது. மாவிலைத் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்கி அசைய மலரெழுந்த காடுபோலிருந்தது ஊர். புத்தாடை உடுத்து பூச்சூடிய பாகை அணிந்து ஆயர்கள் அங்கிங்காய் கூடி நின்றனர். யமுனைக்கரை மேட்டில் எங்கும் முகங்கள் நிறைந்திருந்தன. நீலக்கடம்பின் கிளை தொற்றி ஏறிய ராதை நிலத்துதிர்ந்த மலர்களுக்கு ஈடுசெய்வதுபோல் அமர்ந்துகொண்டாள். நீர்பெருகி ஓடும் யமுனையை நோக்கி இருந்தாள்.
கருடக்கொடி காற்றில் படபடக்க பாய்மரம் புடைத்தசைய பெரும்படகு ஒன்று கரையணைந்தது. அதன் முகப்பில் நின்றிருந்த வீரன் மணிச்சங்கம் எடுத்து ஊத கரையெங்கும் காற்றெழுந்ததுபோல கிளையசைவு பரந்தது. அதற்கப்பால் ஏழு அணிப்படகுகள் மங்கல மஞ்சள்கொடியும் செந்நிற கருடக்கொடியும் மாந்தளிரென எழுந்த பாய்களுமாக வந்தன. அவற்றில் வீரரும் சூதரும் விறலியரும் பாங்கிகளும் நிறைந்திருந்தனர். யாழும் முழவும் குரவையும் குழலும் முழங்கின. ஏழு பொன்வண்டுகள் இசைமுழக்கி அணைகின்றன என்று எண்ணினாள் ராதை.
கரையில் கூடிய யாதவ மூத்தோர் கன்றுக்கொடி ஏற்றி வாழ்த்துரை எழுப்பினர். குறுமுழவும் சிறுமுரசும் குழல்கொம்பும் மணிச்சங்கும் முழங்கின. “படகு! படகு! படகு!” என ராதை பூக்குலைகள் உதிர கிளை உலுக்கி எம்பி குதித்தாள். “மரம் நின்ற மயிலே இறங்கு கீழே” என்றார் மலர் பெய்து உடல் நனைந்த முதியவர் ஒருவர். கண்சுருக்கம் நெளிய கனிந்த நகைப்புடன் “பர்சானபுரியின் பிச்சியல்லவா நீ?” என்றார்.
புத்தாடை அணிந்து புதுநகை ஒளிர அன்னையும் மூதன்னையும் வருவதை ராதை கண்டாள். “என் அன்னை! இன்றுதான் அவள் புத்தாடை அணிந்திருக்கிறாள்” என்று சொல்லி சிரித்தாள். “எங்கள் பசுக்கள் இன்று அவளை அஞ்சும். அருகணைந்தால் முட்டும்.” ஆயர் இருவர் அவளை நோக்கி நகைத்தனர். “ஆயர்குடியின் பசுக்களும்தான் இன்று அணிகொண்டுள்ளன” என்றார் ஒருவர். “இன்று இக்கரையில் பூக்காத மரம் ஒன்றில்லை” என்றார் இன்னொருவர்.
அருகணைந்த அன்னை ராதையிடம் “இறங்கு கீழே. ஏனைய பெண்களைப்போல் இருந்தாலென்ன நீ?” என்றாள். “பர்சானபுரியின் ராதைக்கு பாதங்கள் மண்ணில் படாது அன்னையே” என்று முதியவர் நகைத்தார். மூதன்னை விழிகளில் நீர் படர்ந்து முகம் கனத்து நிற்பதை ராதை கண்டாள். “மூதன்னையே” என்றாள். அவள் முகம் திருப்பாமை கண்டு இதழ்கோட்டி அழகு காட்டினாள்.
அலைகளில் ஆடும் அரண்மனை போல வந்தது அணிப்பெரும்படகு. பன்னிரு சிறகு கொண்ட பறவை. பதினாறு துடுப்புகளால் நீந்தும் மீன். அதன் முகப்பில் நின்ற வீரன் சங்கொலி எழுப்பியதும் கரையெங்கும் பொங்கி வான் தொட்டன வாழ்த்தொலிகள். படகின் முகப்பில் பாய்களின் நிழலில் காவலர் சூழ நின்றிருந்த கரியோனை ராதை கண்டாள். அவன் கருங்குழலில் சூடிய நீலப்பீலி கண்டாள். நிலையழிந்து கால் தவற அள்ளி கிளைபற்றினாள். அவள்மேல் மலருதிர்த்துக் குலுங்கியது மரம்.
சிறகொடுக்கி விரைவழிந்து சற்றே திரும்பி கரையடுத்தது படகு. அதன் விலாவிரிந்து ஒரு பாதை நீண்டு கரைதொட்டது. வீரர் நால்வர் வந்து அதை துறையில் கட்டினர். நிமித்திகன் முதலில் வந்து நின்றான். தன் இடைச்சங்கு எடுத்து ஒலியெழுப்பினான். “ஆயர்குலத்து அதிபர், மதுராபுரியும் மாநகர் துவாரகையும் ஆளும் மாமன்னர் கிருஷ்ண தேவர் வருகை” என அறிவித்தான். வாழ்த்தொலிகள் நடுவே கருமுகம் விரிய இருகரம் கூப்பி கால்வைத்து வந்தார் கிருஷ்ணர். அவர் குழல் சூடிய பீலியில் எழுந்த நீலவிழியை மட்டுமே ராதை நோக்கியிருந்தாள்.
ஆயர் குடிமூத்தார் அரசரை வணங்கி ஆன்ற முறைசெய்து அழைத்துச்சென்றனர். குடித்தலைவர் இல்லத்தில் கிருஷ்ணர் அமர்ந்திருக்க சாளரமெங்கும் நிறைந்தன சிரிக்கும் பெண்முகங்கள். குடியருகே எழுந்த கொன்றை மீதேறி கூரை இடுக்கின் சிறுதுளை வழியாக ராதை அவரை நோக்கி நின்றாள். பூமஞ்சத்தில் இளைப்பாறி பசும்பால் அருந்தி அமர்ந்தார் அரசர். அருகே கைகட்டி வாய்பொத்தி நின்றனர் குடிகள்.
ஆயர்குல மருத்துவன் ஒருவன் வந்து பணிந்து “அடியேன் மலைமருத்துவன். நிகழ்வது அறிந்த நிமித்திகன். மண்நிறைத்தோடும் யமுனையின் வழிகளை அறிந்தவன். அரசர் கைபற்றி நாடிநோக்க அருளல் வேண்டும்” என்றான். புன்னகை விரிய “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் கிருஷ்ணர். அவரது கரிய கைபற்றி கண்மூடி தியானித்து மருத்துவன் சொன்னான். “பாண்டவர் முடிமீட்ட கைகள். பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள். பாரதப்போர் முடித்த கண்கள். அரசர்குழாம் பணியும் அடிகள். ஆற்றுவது ஆற்றி அமைந்த நெஞ்சம்.”
செவ்வரி ஓடிய கண்களால் நோக்கி “திருமகளும் நிலமகளும் சேர்ந்த மணிமார்பு. திசையெல்லாம் வணங்கும் திருநாமம். யுகமெனும் பசுக்களை வளைகோல் கொண்டு வழிநடத்தும் ஆயன்” என்றான். பின்னர் மேலும் குரல் தாழ்த்தி “நாண் தளர்ந்து மூங்கிலானது வில். மரமறிந்து சிறகமைந்தது புள். வினைமுடித்து மீள்கிறது அறவாழி. நுரை எழுந்து காத்திருக்கிறது பாலாழி” என்றான். புன்னகை மேலும் விரிய தன் கையில் அணிந்த மணியாழி உருவி அவன் கையில் கொடுத்தார். “வாழ்க!” என்று சொல்லி அவன் சிரம் தொட்டார்.
“இக்குடியின் தலைவர் இவர். இகம்நீத்த ஸ்ரீதமரின் மைந்தர். எங்கள் குலத்தரசி ராதையின் மருகர்” என்றார் மூதாயர். “இன்று எங்கள் தேவியின் திருநாள். தொண்ணூறு வருடங்களுக்கு முன்பு ஃபாத்ரபத மாதம் சுக்லாஷ்டமி நன்னாளில் திருக்கேட்டை நட்சத்திரத்தின் சதுர்பாதத்தில் அதிகாலையில் அன்னை பிறந்தாள். திருமகளே கருப்புகுந்தாள் என்னும் உருவழகு கொண்டிருந்தாள். விண்நிறைந்த ஒளியொன்றால் விழிகள் நிறைந்திருந்தாள். கன்னியாகவே கனிந்தாள். மாலைமலரென உதிர்ந்தாள்.”
திரும்பும் வைரம் என திருவிழிகள் கொண்டன. செவ்விதழில் சொல்லேதும் எழாமல் கிருஷ்ணர் எழுந்தார். “அன்னையின் ஆலயத்துக்கு அரசரை அழைத்துச்செல்லுங்கள்” என்று அமைச்சர் மந்தணம் உரைத்தார். “வருக அரசே. வழி இதுதான்” என்று ஸ்ரீதமரின் மைந்தன் சக்திதரன் வணங்கி அழைத்துச்சென்றான். எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்துசென்றார். ஆயர்குடிகளும் மூத்தோர்கணங்களும் அவரைத் தொடர்ந்தனர்.
யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள். கன்னி அன்னை. காதலரின் தெய்வம். ராதையின் களித்தோழி. மரக்கிளை உலுக்கி மலருதிர்ப்பாள். புல்நாரால் பூதொடுத்து அணிவிப்பாள். காட்டுத்தேனும் கனிந்த பழங்களும் கொண்டுவந்து அளிப்பாள். முல்லை அரும்பெடுத்து சோறாக்கி அல்லி இலை கிள்ளி கறியாக்கிப் படைப்பாள். கல்விழி மலராது காட்சி எழாமல் அங்கிருப்பாள் அன்னை. எவரையும் நோக்காத விழிகொண்டவள். ஏதொன்றும் அறியாது நின்றிருப்பவள்.
அன்னையின் ஆலயத்தின் முன் அரசர் நின்றார். காற்றேற்ற சுனைபோல கரிய திருமேனி நடுங்க கண் கலுழ்ந்து வழிய கைகூப்பினார். நீள்மூச்சு நெஞ்சுலைத்தது. நெடுந்தோள்கள் குறுகின. திரும்பி அமைச்சரிடம் இலைநுனிப் பனித்துளி என நின்று தயங்கி உதிர்ந்த சொல்லால் “வேய்குழல்” என்றார். அங்கிருந்தோரெல்லாம் அலைமோதினர். “வேய்குழலா?” என்றார் பேரமைச்சர். “வேய்குழலையா கேட்டார்?” என்றார் சிற்றமைச்சர். “குழலூத ஒரு பாணனையும் கொண்டுவருக” என்றார் தளபதி.
கூட்டத்தில் நின்றிருந்த அனங்கமஞ்சரி “இளவயதில் வேய்குழலூதி இசைநிறைக்க அறிந்திருந்தார்” என்றாள். “யார், நம் அரசரா?” என்று பேரமைச்சர் திகைத்தார். ‘அரசரா?’ என்றார் மேலமைச்சர். முழு ஊரும் ஓடி மூச்சிரைக்க திரும்பி “வேய்குழல்களெல்லாம் ஆநிலைகளில் உள்ளன என்கிறார்கள்…” என்றார் சிற்றமைச்சர். “வேய்குழலொன்று உடனே செய்யமுடியுமா?” என்று பேரமைச்சர் கேட்டார். ராதை “என்னிடம் சிறு வேய்குழல் ஒன்றிருக்கிறது. நீலக்கடம்பின் மேல் ஒளித்து வைத்திருக்கிறேன்” என்றாள். “கொண்டு வா… உடனே” என அமைச்சர் பதறினார்.
ராதை ஓடிச்சென்று எடுத்துவந்த வேய்குழலை பணிந்து மன்னரிடம் அளித்தார் அமைச்சர். கைநீட்டி அதை வாங்குகையில் கண்கள் சுருங்கி மீண்டன. கனத்த இமைப்பீலிகள் சரிந்தன. துளைதோறும் தொட்டு கைகள் தேடின. பின் தலைதூக்கி அமைச்சரை நோக்கி கையசைத்தார். “அகலுங்கள். இங்கு எவரும் நிற்கலாகாது. அரசர் விழிதொடும் தொலைவில் ஒரு முகம்கூட நிற்கலாகாது” என்றார் அமைச்சர்.
அனைவரும் வணங்கி அகல அறியாமல் ராதை ஒதுங்கினாள். காலோசை இல்லாமல் கடம்பின் பின் ஒளிந்தாள். தன்னைச் சூழ்ந்து அசைந்து மறையும் கால்களைக் கண்டு தழைக்குள் அமர்ந்திருந்தாள். தனிமை சூழ்ந்ததும் குழலை இதழ்சேர்த்தார் கிருஷ்ணர். விரல்கள் துளைகளில் ஓடின. இதழில் எழுந்த காற்று இசையாகாது வழிந்தோடியது. சிரிப்பை அடக்கி சிறுகைகளால் இதழ்பொத்தி அமர்ந்திருந்தாள் ராதை.
ஓவியம்: ஷண்முகவேல்
குழல் மொழி கொண்டது. குயில்நாதம் ஒன்று எழுந்தது. ‘ராதே’ என அது அழைத்தது. காற்றில் கைநீட்டிப் பரிதவித்து ‘ராதே! ராதே! ராதே!’ என மீளமீளக் கூவியது. கண்டடைந்து குதூகலித்து. ‘ராதை! ராதை! ராதை!’ என கொஞ்சியது. கல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள். கல்விழிகள் காட்சிகொண்டன. குமிழிதழ்கள் முறுவலித்தன. சுற்றி எழுந்து சுழன்று நடமிட்டது செவ்விழி. பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.
[**நீலம்** முழுமை**]**
வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்