நீலம் - 26
பகுதி ஒன்பது: 1. அணிபுனைதல்
இரவென்று ஒன்று எழுவதற்காக மட்டுமே உருவானது வெறுமை திரண்ட பகல். அதில் ஒவ்வொன்றும் ஒளியால் உருமறைத்து நிறம் கூச நிறை மிகுந்து அமர்ந்திருக்கும். தன்னை தான் உணர்ந்து தனித்திருந்து நாணும். உருவுள்ள அனைத்தும் ஒரு துளி இரவை தங்கள் காலடியில் கரந்திருக்கும். அவ்விருளுக்குள் தங்கள் எண்ணங்களை ஒடுக்கி வெற்றுப் புன்னகையை வெளிக்காட்டும். பகல் ஒரு பாழ்நிலம். வானம் வழிந்திறங்கி மண் மூடி விரியும் வீண்வேளை.
பகல் ஒரு காத்திருப்பு மட்டுமே. அனல் வழியும் வான்விழி முன் அமைதிகொள்ளல். ஒற்றைச் சொல்லை உருவிட்டு உருவிட்டு அமர்ந்திருக்கும் தவம். ஒன்றான ஒன்றை உள்ளறிந்து எடைகொள்ளல். பசுந்தளிர்கள் சோர்கின்றன. மலரிதழ்கள் மணமிழக்கின்றன. மலையருவிகள் புகைகின்றன. யமுனைமேல் ஆவிப்பெருமூச்சின் அலை கிளம்புகிறது. அதன் நீலவெளிமேல் எழுந்தாடும் நிழல்கள் ஆழத்து இருளின் அமைதியை மறைக்கின்றன. யமுனை இதுவே நான் என பகலில் ஒரு முகம் காட்டுகிறது. ஆழத்தில் அது கரந்த இரவு புன்னகைக்கிறது.
பாரிஜாதமோ பகலின் பொருள் அறிந்தது. இலைத்தகடுகள் விரித்து ஒளிவெம்மையை மட்டும் அள்ளிக்கொள்கிறது. அதன் மொட்டின் இதழ்களுக்குள் ஒருதுளியும் சிந்தாத மோகம் முகிழ்த்திருக்கிறது. அதன்மேல் சுற்றிச்சுற்றிவரும் கருவண்டு ஏங்கி இசையெழுப்புகிறது. தென்றல் வந்து தீண்டிச் சுழன்று கடந்தோடுகிறது. எங்கு புன்னகைப்பதென்று அறிந்தவள் அவள். தன் சங்கில் கரந்த மது எவருக்காக என்று உணர்ந்தவள். நீலக்கடம்பும் கோலக்குயிலும் மட்டுமே அறிந்த ஒன்றை புன்னகையென சூடி பகலெல்லாம் தவமிருப்பவள்.
வெயில் எழுந்து வெம்மைகொண்டு வெம்பிப் பழுத்து வழிதோறும் உதிரும் வேளைவரை இல்லத்தில் என்னோடு தனித்திருப்பேன். என் கரங்களில் வாழும் எட்டு திருமகள்களும் எழுந்து பணிசூழும் வேளை. அனல் கூட்டி அன்னம் சமைக்கிறேன். ஆக்கூட்டம் புரக்கிறேன். யமுனை நீர் கொண்டு கலம் நிறைக்கிறேன். அமுதளித்து ஆன்றோர் கால்பணிகிறேன். இவள் எங்கள் குலக்கனி என்று என் மாமியே சொல்லக்கேட்கிறேன். கூடைக்குள் நாகம்போல் என்னுள் நானிருந்து விழிமின்ன நெளிகின்றேன்.
வண்ண மலரெடுத்து ஒருசரடில் கோர்ப்பதுபோல் கண்ணன் குழலிசையில் எண்ணமெல்லாம் கோர்த்தமைப்பேன். கன்று கூவும் குழலோசை. அப்பால் காகங்களின் குழலோசை. மாமி கடிந்துரைக்கும் குழலோசை. நல்லகத்தாள் நகைகூறும் குழலோசை. இல்லமெங்கும் ஓடும் என் சலங்கையின் குழலோசை. அப்பால் யமுனை நதியில் காற்றோடும் குழலோசை. குழலோசை வழிகாட்ட இப்புவி நிகழும் மாயம் கண்டேன். குழலோசை இல்லாமல் ஒரு கணமும் இல்லையென்றறிந்தேன்.
அந்தி எழுகிறது. குருதி தோய்ந்த வாளை மெல்ல மண்மீது தாழ்த்துகிறது வானம். கிளைதேரும் பறவைகளின் குரல்கள் நிறைந்து வானத்தின் மோனம் குழம்புகிறது. முகமுள்ள அனைத்தும் செம்மை கொண்டு நாணுகின்றன. குளிர்ந்த யமுனைக்காற்று எழுந்து வருகிறது. பசுந்தழை வாடிய வாசம் சூடி என் இல்லத்தைச் சூழ்கிறது. இருக்கிறாய் என்கிறது. எழுக என்கிறது. என் ஆடைதொட்டசைத்து அகம் தீண்டி குளிர்வித்து மெல்ல நகைக்கிறது.
மாலையில் நான் மலர் பூக்கும் மரமாவேன். மஞ்சள்விழுதும் வாசமலர்ப்பொடியும் கொண்டு யமுனையில் இறங்கி நீராடுவேன். காளிந்தி நீர்ப்பரப்பாய் கரியோன் கரம் வந்து என் ஆடைபற்றி இழுக்க அள்ளிச்சுழன்று நாணுவேன். அங்கங்கள் எங்கும் அவன் விரல் ஓட முலைக்கண் விம்ம முகக்கண் சரிய அலைகளிலே ஆடிநிற்பேன். நீருக்குள் மூழ்கி நீலன் உடல்காண்பேன். அகன்ற மணிமார்பும் அணியெழும் தோளும் நீண்ட கைகளும் நீலவயிறும் குறுநரம்பும் சிறுசுழியும் தொட்டறிவேன். அவன்மேல் நீந்திச்செல்வேன். அவன் மேல் அமைந்து திளைப்பேன். மூச்சிழந்து அவனை முத்தமிடுவேன். வாய்நிறைய அவனை அள்ளி கொப்பளிப்பேன். ஒரு துளியேனும் அவனை உண்டபின்னரே மீண்டெழுவேன்.
“எத்தனை நேரமடி நீராடுவாய்? எழுந்து வருகிறாயா இல்லையா?” என்பாள் மாமி. எவர்குரலையும் நான் கேட்பதில்லை. என் விழிகள் எவர் நோக்கும் கொள்வதில்லை. “அந்தி என்று எழுந்தால் அவள் புத்தி திசைமாறும். பித்து தலைக்கேறி பேய்விழிக் கொள்வாள்” என்று என் நல்லகத்தாள் சொல்வாள். சிதல்புற்றில் குடியேறும் கருநாகம் நான். இவ்வுடலில் வாழ்கின்றேன். இம்முகத்தை இம்முலையிணையை இச்சிறு கைகளை இவ்விரு கால்களை இவ்வயிற்றை இளம்தொடையிணையை ஆள்கின்றேன்.
வேள்விக்கட்டைகள் கடைந்து கடைந்தெடுக்கும் கனல். வேங்கை விழியென மின்னி எழும் நீலச் சுடர். அவிதேடும் தென்னெருப்பு. வேத மொழிதேடும் எழுசுடர். வான வெளியெழுந்த முதல்கதிர். இவ்வனம் எரிக்கும் மின்மினி. இரவின் கிளையில் எழுந்த செம்மலர். இதழ் விரிந்து அமுதூறும் இன்மலர். கடலாழம் அறிந்த குதிரைமுகம். ஏழ்கடல் அள்ளி உண்ணும் குறுமுனிக் கமண்டலம். சிம்மக் குரலெழும் இருட்குகை. தன்னை தான் நோக்கும் தனித்த தவ விழி.
பாதவெண்மைக்கு செம்பஞ்சு குழம்பிடுவேன். நகம் தீட்டி மான்விழியாய் ஒளிரச் செய்வேன். விரல்தோறும் மணிவளையம் பூட்டுவேன். கணுக்காலில் கொலுசுமணி. முழங்காலில் செறிவளைகள். இடைசுற்றும் மேகலையில் எழுந்த மணிவிழிகள். அணிமூடும் அணியென்ன அணி? விழிமூடும் பொன்விழியில் பொறித்தது என்ன மொழி? கை வளைகள் குலுங்க காதணிகள் அணிவேன். காதணிக்கு சேர கைவளைகள் களைவேன். சங்குவளையும் நெளிவளையும் சக்கரவளையும் கொடிவளையும் மலர்வளையும் மான்விழிவளையும் மணிவளையும் தொடிவளையும் மாற்றி மாற்றி அணிந்து மனம் சலிப்பேன். கூடணையும் குருவிகள்போல கூவிச்சலித்து என் கைக்கொடியில் அமர்ந்து எழுந்து பூசலிடும் வளைக்கூட்டம்.
நகைகள் பூட்டி நின்றிருப்பதுதான் நானா? நாணி விழி கூசி ஒவ்வொன்றாய் களைவேன். அணிகளைந்து ஆடை களைந்து எஞ்சுவதை நோக்கி ஏங்கி திகைப்பேன். இம்முலை களைந்து தோள்களைந்து இடைகளைந்து அல்குல் தழல் களைந்து எழுந்தோட விழைவேன். அஞ்சி ஒருகணம் அங்கே நின்று பின் ஒவ்வொன்றாய் அள்ளி அணிந்து இங்குவருவேன். ஆடை மறைத்த உடல். அணிமின்னும் உடல். சொல் மறைத்த மனம். பொருள் மறைத்த அகம். அதோ ஆடியில் என் கண்கள். கொலை வஞ்சம் கொண்டோன் உடைமறைத்த குறுவாளின் நுனிமின்னல்.
கண்களை ஒளிக்கவே கண்ணனை அணிந்துகொள்கிறேன். என் தோள்வளையென மென்கதுப்பு கவ்வும் அவன் விரல்கள். என் இடைவளைக்கும் அவன் கைகள். என் முலைமேல் முத்தாரமென முத்தாடுவது அவன் செவ்விதழ்கள். அதன்மேல் பதிந்திருப்பவை பவழங்களல்ல பற்தடங்கள். நால்மணிகள் அல்ல நகக்குறிகள். என் கழுத்தில் ஒளிர்வது பதக்கமல்ல அவன் ஈர இதழ்த்தடம். என் கன்னங்கள் அணிவது அவன் மீசை முள்குத்திய மணிச்செதுக்கு. என் மூக்கிலாடுவது முத்தல்ல அவன் விழிமணி. நெற்றியில் துவள்வது அவனுக்கு நான் ஆட்பட்ட அத்தருணம். என்னை தழுவியிருப்பது அணியாகி வந்த கண்ணன். என் ஆடையென்றாகி ஆளும் கள்வன்.
கண்ணனை அணிந்தன கானகத்துச் செடிகள். வெண்முறுவல் பூத்தது முல்லை. கண்சிவந்தது அரளி. செம்முத்துகொண்டது தெச்சி. பால்துளித்தது தும்பை. பொன்கொண்டது கொன்றை. பூத்து பட்டணிந்தது வேங்கை.. நாணிக் கண்புதைத்தது செண்பகம். நாணிலாது பொதியவிழ்ந்தது பகன்றை. அஞ்சி விழிதூக்கியது அனிச்சம். குறுநகை எழுந்தது பாதிரி. வழியெங்கும் விழிகொண்டது ஆவாரம். நானும் அவனே என்றது குவளை. நானுமல்லவா என்றது நீலத்தாமரை. கானகனே உனக்காக முகம் எங்கும் மலர்பூத்தது மதகளிற்றுக்கூட்டம்.
வந்தது வனவசந்தம். விழிபூத்து நின்றது விண்மீன்வெளி. கீழே மலர் பூத்து கனத்தன மரக்குவைகள். இரவிலும் உறங்காது ஏங்கும் கருங்குயில். எழுநிலவு கண்டு கண்மலர்ந்த கானமயில். நீரோடைகளில் வழிகிறது நிலவு. சுனைகளில் சுழிக்கிறது அதன் ஒளிப்பொழிவு. முத்தமிடக் குவிந்த இதழே உடலானவன் நீ. முத்தத்தின் களிவெறியே ஒளியென்றானவன்.
நிலவுசூடிய இரவு. நீலவிழியொன்று எழுந்த நெற்றி. கனவுசூடிய இரவு. களவுக்குத் துணையாக காமன் அனுப்பிய கதிர். கைபிடித்துக்கொண்டுசெல்லும் கள்ளப்பெருந்தெய்வம். காமத்தில் நனைத்து காயவைத்து மீண்டும் எழுப்பும் கயவன். கொன்று உடலாக்கி உண்டு பசியாறி சென்று திரும்பும் முன் திசைவெளியில் உயிர்ப்பித்து இன்று பிறந்தாய் இனிக்கொள்க எல்லாம் என்று சொல்லி புன்னகைக்கும் மாயக்கொலைகாரன்.
கருநீல வண்ணன் வெண்ணிலவான மாயம்தான் என்ன? இன்றிரவில் இவ்வெழில் வனத்தில் வசந்தம் பெருகும் தளிர்மர ஒழுக்கில் இலைப்பரப்புகளில் படர்கிறது நிலவின் காமம். அள்ளி உண்டவை கண்கள். எரி எழக் கனன்றது இமையிலாக் கருங்கண். உலர்ந்து உலர்ந்து ஈரம் கொண்டன இதழ்கள். செவ்விதழ்கள். சொல்லற்ற இதழ்மலர்கள். கருஞ்சுடருள் செங்கனல். சொட்டிச் சொட்டி அசைகின்றன இலைநுனி நாக்குகள். பிறவிப்பெருந்திரை மறைத்த பெருநினைவுகள் எழுந்துவரும் வண்ணங்கள். ஆழத்தில் விழிகொண்டு நீரலைய சிறகசைத்து ஒளிதேடும் மீன்கணங்கள்.
நதியே, நீலநதியே, நீ இறங்கும் மலைச்சரிவில் நீ இழிந்த வான் சரிவில் எங்கு கொண்டாய் இவற்றை? நாணின்றி நான்குகரங்களால் அம்மானை ஆடுகின்றாய். அதோ எவரோ கால் ஒலிக்க வருகின்றார். அள்ளி வை ஆடைக்குள். இமைதாழ்த்தி அமர்ந்துகொள். இதயத் துடிநாதம் இருளே கேட்கும். குறுநிரையின் குழைந்தாடல் உன் கண்களே அறியும். ஏதுமறியா இளநங்கை என்று இங்கிருப்பாய் தோழி. உன் உடலெங்கும் மின்னும் அணிகொண்ட மணிவிழிகளுக்குள் அணையட்டும் உன் விழியொளிரும் ஒளிமணிகள்.
அணிசூடி அணியாகி என் அந்தி செல்கிறது. ஆடிமுன் நின்று நின்று சலிக்கிறேன். எங்கே என் அன்னம்? எங்கே என் மலர்ச்சரம் கொண்ட மணிவில்? முலை விம்மி மணிச்சரங்கள் அசைகின்றன. என் மொழி விம்மி முலைகள் எழுகின்றன. இவ்விளம் விரல்பற்றி எங்கிருந்தாலும் நினைப்பேன் என்றான். ஒருபோதும் உனைமறவேன் என்றான். கைபற்றி இடைசுற்றி குழல்நீவி இதழ் ஒற்றி எப்போதும் நீயே என்றான். எங்குளான்? இங்குள என் நினைவை ஒருகணமேனும் உணர்ந்தானா? ஆண்விழிகள் அகம் நோக்கும் ஒளியற்றவையா? முன்விரியும் வானமன்றி பின் சுருண்ட பாதையும் அவர் பார்ப்பதில்லையா? அவன் மார்பணிந்த என் முலைச்சாந்தின் மணம் அங்கிருக்குமா? அவன் தோள்வளைத்து விரிமுதுகில் நான் எழுதிய நகமுத்திரை காய்ந்திருக்குமா?
பொருள்வயின் பிரிந்தோர் புதுமழையுடன் வருவார் என்றான் பண்தேர்ந்த பாணன் அன்று. யாழ்தொட்டு இசைமீட்டி “விண் இருண்டு பண்பொழியும் மழைக்காலம்! இதுவே கண் நிறைத்த காதலுடன் அவன் அணையும் முல்லைப்பருவம்” என்றான். முல்லையும் பூத்தது. முகில்மலை எழுந்தது. மயில்குலம் தோகை விரித்தது. மான்கணம் மடப்பிடி தழுவியது. என் கைவளைகள் தாழ்கின்றன. குரல்தாழ்த்திச் சொல்கின்றன “இன்னுமென்ன தனிமை? இனியுமென்ன கண்ணீர்?” மழைச்சாரல் வருடிய மலைப்பாதைகளில் குதிரைக்குளம்புகள் ஒலிக்கின்றனவா? மரம் ஏறி அமர்ந்த மந்தி குரல் எழுப்புகின்றதா? தொலைதூர ஒலிக்கெல்லாம் திரும்புகின்ற சிறுபூனைச் செவியடி நான்.
மலர்கொண்டது நீலமணிக்கரும்பு. வெண்சாமர எழில்கொண்டது. கணுதோறும் கனிந்தது. கனியூறி ஒளிர்ந்தது. அதில் ஏறி திசை தாவ விரிந்தன ஐந்து மலர்கள். கூந்தல் மணம்கொண்ட முல்லை. விழியொளியாகும் குவளை. முலை மணம் கமழும் தாமரை. அடிவயிறாகும் அசோகம். அல்குல் ஆழ்மணம் கரந்த மாம்பூ. கிளைதோறும் செறிந்தன கிள்ளைகள். ஆயிரம் குரல் கொண்டு ஒரு சொல் கூவி ஆர்த்தன. அங்கே காலடி கேட்டேன். எங்கோ கழலொலி கேட்டேன். அனங்கன், அருணன், மதனன், மானஸஜன், காமன், புஷ்பபாணன். ஐந்து மலரால் பட்டு ஐம்புலனும் அழிந்தேன். அவன் நினைவொன்றே இங்கிருந்தது. ஆகமென்றாகி அமைந்தது அகம்.
மழையில் நிறைந்து வேனிலில் வறளும் மலைச்சுனை போல ஒவ்வொரு கணமும் உருவழிந்து மீண்டேன். காலடி ஓசையில் பூத்தேன். அது காற்றோசை என கணுதோறும் உதிர்ந்தேன். கழலோசை எனத் தளிர்த்தேன். அது கலமுருள்தல் என்று கருகினேன். பறவைச்சொல் இனிதென்று பசுமைகொண்டேன். பல்லி அதைச் சொல்லவில்லை என்று பாலையானேன்.
நீரில் ஊசலாடும் நதிக்கரை மூங்கிலின் வதையென்ன என்றறிந்தேன். ஒளியெனத் துள்ளி இருளென மூழ்கும் நதிமீனின் தவிப்பென்ன என்றறிந்தேன். காத்திருப்பு எனும் சொல்லில் இனி நான் கண்டடைய ஏதுமில்லை. கண்ணா, முழுமூடா, கண்கட்டி ஆடும் கள்வா. இனி என் முன் நீ வந்து எழிலாகி நின்றாலும் காத்திருக்கும் இன்பம் போலில்லை உன் கனியமுத முத்தமென்று கைநீட்டித் தள்ளுவேனா?
ஓவியம்: ஷண்முகவேல்
கண்பொத்தி நீ பின்வந்து அணைக்கையில் அதை கன்றின் நாபட்ட குளிரென்று கைதட்டி விலக்கினேன். நீ சிரித்த ஒலிகேட்டு திகைத்தெழுந்து கையுதறித் திரும்பினேன். என் உடல் அணிந்த நகையெல்லாம் விழியாக விரிந்ததுபோல் நீ அருகே நிற்கக் கண்டேன். “கண்ணா நீதானா? என் கண்ணை நான் ஏற்கலாமா?” என்றேன். “நானே. எனக்காக வாசமலர் சூடி வண்ணப்பட்டாடை சுற்றி வாசலில் விழிவைத்த வாசகசஜ்ஜிதை நீ!” என்றாய். “ஆம், இது மழைக்காலம். மண்ணும் விண்ணும் காத்திருக்கும் குளிர்ப்பருவம்” என்றேன்.
நாமிருவர் மட்டும் தனித்திருக்கும் இல்லம். உயிர்கொண்ட உடலைப்போல் சுவரெல்லாம் சிலிர்க்கக் கண்டேன். என் விழிநோக்கி “என்ன இது? நீ கன்னியல்லவா? ஒருகணமேனும் நாணலாகாதா?” என்றாய். “நாணுதற்கு நேரமில்லை. கை கண்டு கால் நாணும் உடலென்று ஒன்றுண்டோ?” என்றேன்.
அள்ளி எனை எடுத்து தன் அணிமார்பில் சேர்த்தான். அவன் தோளணிந்த தாரனைத்தும் பிய்த்து வீசினேன். சிரித்து ஏனென்றான். “இக்கணத்தில் இத்தோள்கள் என்னொருத்திக்கே உரிமை” என்றேன். அவன் என் செவிக்குள்ளே நகைத்த சிற்றொலியைக் கேட்டேன். என்குருதி நதியெங்கும் அலைகிளப்பும் சிரிப்பு. என் காட்டு இருளெங்கும் சுனைகள் சிலிர்க்கும் சிலிர்ப்பு.
“எத்தனை அணிகள். எத்தனை ஒளிகள். இத்தனைக்கும் உள்ளே எனக்காக ஏதுண்டு?” என்றாய். உன் தோளில் முகம் சேர்த்து இதழ் அழுந்திச் சிணுங்கி “கண்ணன் வருகையிலே நான் என்னதான் செய்வது?” என்றேன். சிவந்த முகம் தூக்கி “பார், இந்தச் சதங்கைகள் தாமரை வல்லிகள். என் இடையணிந்த மேகலையோ கொன்றை மலர்க்குலை. முலை தவழும் முத்தாரம் தென்னையிளம் பூமணிகள். தோள்வளையோ தாழைமடல். கைவளைகள் முல்லைத் தளிர்ச்சுருள்கள். வசந்தம் வருகையிலே மண் அணியும் அழகெல்லாம் கண்ணன் வருகையிலே நான் அணியவேண்டாமா?” என்றேன். மெல்ல அவன் செவியில் “இல்லை உன் மார்பணிந்த பெண் அணியும் அழகெல்லாம் எனக்களி” எனச் சிரித்தேன்.
அள்ளி எனை அவன் இளம்கையில் தூக்கி “மண்மகளை இவ்வாறு மருப்பேந்தி நிற்பதுவே என் வழக்கம்” என்றான். சிரித்து கூவி அவன் சிரத்தில் அடித்து என் கைவளைகள் உடைத்தேன். “வா, திருமகளாய் உன்னை ஆக்குகிறேன்” என்றான். அவன் விரல்தொட்ட இடமெல்லாம் மலர்பூக்கலானேன்.
என் நெற்றிமலர் எடுத்து நிலத்திட்டான். “அய்யோ அது வைரம்” என்றேன். “உன் நுதலொளிக்கு அது சிறுகல்லே” என்றான். குழல்முகில் தழுவிய பிறைநிலாவென்று இதழ்கொண்டு தொட்டான். முத்தாரம் மணியாரம் முலையழுந்தும் செம்பதக்கம் ஒவ்வொன்றாய் அகற்றி இதழொற்றினான். கைவளை சிணுங்கக் கழற்றினான். மேகலை மட்டும் அறிந்த மலர்முகர்ந்தான். நாணிக் கண்புதைக்கையில் “கைதொட கால்நாணலாகுமோ?” என்றான். “கைவிரல் நுனியையும் கண் அஞ்சுமல்லவா?” என்றேன். கூவிநகைத்து என் குழல்பற்றி சுழற்றி இதழ்முத்தம் ஈந்தான்.
என் வெறும்மேனிமீது புல்வெளிமீது தென்றல்போல் அவன் விழியோடியது. பின் பெருங்கடல்மீது புயல்போல அவன் மூச்சோடியது. “உன் உடல்கொள்ளும் மெய்ப்பே கண்ணனுக்கு பிடித்த அணி” என்றான். பின் அமர்ந்து என் காலெடுத்து தன் தலைசூடி “கண்ணன் அணியும் வைரமுடி இதுவே” என்றான்.
அந்தி எழுந்து அடர்ந்து இரவாகியது. சில்வண்டு நாதமொரு சரடாகி இணைத்த எண்ணங்கள் என்னும் கருநீல மலர்கள் ஆடும் இரவு. இரவெல்லாம் தனித்திருப்பவள் நான். இரவை உண்டு இரவை உயிர்த்து இரவிலாடி இங்கிருப்பவள். இரவின் குரல் தோடி. நீல அலைகளாக நெளிந்து நெளிந்தோடும் பண். தோடியெனும் நஞ்சு. நாகச்சுருளவிந்து மேகமென படமெடுத்தது. இருளுக்குள் இருளாக வழிந்தோடும் இமையா விழிச்சரடு. தோடிப்பெருக்கில் ஒரு ஓடம். அதிலொரு குழலேந்திய கரியோன். வெண்ணுரை பொங்கிய வெள்ளம். கூவிச் சரியும் அருவி. பின் விரிவெளியில் நெளிந்தொளிரும் பூபாளம்.