நீலம் - 25

பகுதி எட்டு**: 3.** ஒன்றே அது

நீலக்கடலுக்கு அப்பால் சாலமலைத் தீவில் ஏழு தலைகொண்டு எழுந்து நின்ற துரோணாச்சல மலையரசன் மைந்தனாகப் பிறந்தான் கிரிராஜன். பன்னிருவரில் இளையோன். பைதலென தந்தை மடிதவழ்ந்தோன். கரியன். இளந்தளிர் விரிந்த மரமெழுந்த மேனியன். விண்ணின் குளிர்மேகம் கனிந்திறங்கும் நீலமுடியன். வெள்ளி மலையருவி எழும்குரலில் பிள்ளைமொழி பேசும் பேரழகன்.

அன்றொருநாள் காசி நகர்புகுந்து கங்கை நதியாட பேரொளிக்கதிராய் வான்வழி சென்ற புலத்திய மாமுனிவர் தீவில் இறங்கி துரோணமலையை வாழ்த்தி அருள்புரிந்தார். மலைக்குழவியை தன் மடிமீதமர்த்தி வானிலும் கடலிலும் விளையாடினார். மலையன் சொல்லும் மழலை கேட்டு மனம் களித்தார். அவன் சிறுமார்பு நனைத்திழியும் அருவிதொட்டு குளிர்ந்தார். கரும்பாறை மார்பை கைசோரத் தழுவினார். சிம்மக்குரல் எழுந்தோங்க அவன் சீறி எழும் சினம் கண்டு நகைத்தார்.

பிள்ளைமாயம் பின்வாங்கி போகுமிடம் தெளிந்து வர புலத்தியர் மலையரசை வணங்கி மைந்தனிடம் விடைபெற்றார். மலைமகவு கைநீட்டி ஏங்கியழக்கண்டு “என்னுடன் வருகிறாயா இளையோனே? கங்கை நதியும் காசிநகரும் இமயமுடியும் மேருப்பனியும் காட்டுவேன் உனக்கு” என்றார். “நான்! நான்!” என்று மலைக்குழவி கைநீட்டி மகிழ்ந்து எழக்கண்டு அள்ளி தோளிலேற்றி வானத்தில் ஏறி வடதிசை வந்தார்.

கருவெள்ளம் சுழித்தெழுந்த காளிந்தி நதிகண்டு “கங்கை! கங்கை இது! கங்கை!” என்று கைவீசி காலுதைத்து கரியன் துள்ளிவிழ அவன் நிறைபெருகி நிலையழிய முனிவர் கைநழுவி அவனை கரையிலே இறக்கிவைத்தார். மீண்டும் அவனை அள்ளியெடுக்க அவர் குனிந்து கைநீட்ட “இங்கிருப்பேன். இனிமேல் எழமாட்டேன். சங்கிருக்கும் சிறுகையும் சக்கர மறுகையும் பங்கய விழியும் கொண்டு பாலன் ஒருவன் வந்து என்னுடன் ஆடுவதை அகமெங்கும் கண்டேன். இதுவே என் இடமாகும், இங்கென் நிறையழியும்” என்றது மலைமகவு.

ஆயர்குலத்து மூத்தோரே, அறிவறிந்து அமைந்த தாதையரே, அன்று வந்து இங்கே தங்கியது இம்மலைக் குழந்தை. வற்றா மழையால் வறலுறா புல்வெளியால் நற்றா நிரைகாக்கும் நலத்தால் இதை கோவர்த்தனம் என்றனர். ஆயர்குலம் காக்கும் புதல்வன். ஆநிரை வாழ்த்தும் முதல்வன். கருநீலப் பட்டின் முந்தானை நுனி விரித்து காளிந்தி தழுவிச்செல்லும் கரியன். மேகக்குடை கவித்து மின்னல் முடிசூடும் மன்னன். அவன் வாழ்க! அவன் சாரலில் வாழும் ஆநிரைகள் வாழ்க. அவை புரக்கும் ஆயர்குலம் வாழ்க!

பிருந்தாவனத்துப் பெரும்பாணன் பிருஷதன் கைமுழவு மீட்டி கனத்த குரலெழுப்பி கரியன் புகழ்பாடி நின்றான். அவனைச்சூழ்ந்து கைதட்டி மகிழ்ந்தாடி கள்மயக்கும் களிமயக்கும் கூடி நின்றது ஆயர்ப்பெருங்குடி. “இன்று வந்தது இந்திரப்பெருவிழா! இங்கெழுக இன்கள்ளும் மங்கையரும். எழுக சிறியோர். எழுந்தாடுக நறியோர். கொழுந்தாடுக செந்தழல். நிலைமறந்து நின்றாடுக காமம்!” என்றான். “ஆம் ஆம் ஆம்” என்றது கூட்டம்.

நெய்க்குடங்கள் நிறைய நுரையெழும் கள்சுமந்து வந்தனர். மலரும் மாவின் மணமெழும் அப்பமும் கொண்டுவந்தனர். ஊன்சோறும் கனிச்சாறும் படைத்தனர். கொற்றவைக்கும் காளிக்கும் குலம் காக்கும் கூளிக்கும் பலியிட்டு வணங்கினர். அடிநிலம் ஆளும் அரவரசுக்கும் திசையாளும் நால்வருக்கும் அன்னமும் மலரும் கன்னல் இன்சோறும் அளித்தனர். பலியுண்ட தெய்வங்களின் புன்னகைக்கும் பெருவிழிகள் ஒளிகொண்ட விண்மீன்கள் என இருளெழுந்து தெரிய தலைமீதெழுந்தது திசையில்லா வெளிவிரிவு.

வெள்ளைப்பசுவொன்றை கொம்புதீட்டி கூராக்கி வெள்ளிமணிகட்டி மலர்மாலை அணிவித்து ஆயர்குடிகளெல்லாம் ஆடலிட்டு கொண்டுசென்றனர். அதன் குளம்பமைந்த குழிதொட்டு மண்ணெடுத்து சிரமணிந்து “குலம் காக்கும் தாயே! எங்கள் நலம் காக்க வேண்டும் அம்மா” என்று கூவினர். முழவுகளும் கொம்புகளும் மேளங்களும் தாளங்களும் கூடி ஒலிக்க கூத்திட்டு பின்தொடர்ந்தனர்.

மழைமேகம் இறங்கிவரும் மலைச்சாரலில் அமைந்த இந்திரனின் ஆலயத்தில் ஆயரெல்லாம் கூடினர். வெண்களிறு மருப்பேறி மின்னல் படை ஏந்தி விண்ணவர்கோன் அமர்ந்திருந்தான். அவன் முன் அன்னக்குவையும் அக்காரக்குவையும் கன்னல்சாறும் கள்ளும் படைத்திருந்தனர். ஆலயத்து முற்றத்தில் அமைந்த பலிபீடம் குருதிமலர்சூடி காத்திருக்க, அருகெழுந்த கம்பத்தில் பசுவைக்கட்டி கைகூப்பி வணங்கி சூழ்ந்தனர். அதன் மேல் பட்டாடை விரித்து நெற்றியில் திலகமிட்டனர். சங்கும் சல்லரியும் கிணையும் கின்னரியும் முழங்க அதை வலம் வந்து நீர்தெளித்து தூய்மை செய்தனர்.

“முகில்களின் அரசே எழுக! மின்னல் கதிர்களின் இறைவா எழுக! புல்வெளிகளை புரப்பவனே எழுக! எங்கள் ஆநிரை காக்கும் ஐயனே எழுக! பால்பெருக வருக! எங்கள் குடி விரிய வருக! நூல் துலங்க வருக! எங்கள் நெறி நிலைக்க வருக! விண் ஒளிர பொலிக! மண்ணில் மலர் மிளிர பொலிக!” என்று ஆயர்குலத்து முதுபூசகர் கூவினார். “விண்புரக்கும் தேவர்கள் இங்கு வருக! மண் நிறைக்கும் தேவர்கள் இங்கு வருக! இப்பலிபீடம் நிறைக்கும் தூயகுருதியை உண்டு மகிழ்க!”

கருவறை நீங்கி கொலை வாளுடன் வந்த பூசகர் சுற்றி நடமிட்டு சுழற்றி அலறி “இங்கெழுக தேவர்கள்! எங்கள் பலியுண்க நால்வரும்!” என்று கூவினார். ஓங்கும் வாள் எழுந்து ஒளி அசைய தன் கைதூக்கி எழுந்து குரலெழுப்பினான் கண்ணன். “நில்லுங்கள் பூசகரே. என் ஐயம் தீர்த்து இவ்வன்னைப் பசுவை பலிகொள்ளுங்கள்” என்றான். சினம் கொண்டு கை ஓங்கி நந்தன் ஓடிவந்தார். “என்ன செய்கிறாய்? கரியவனே, காலமெல்லாம் நாம் கடைப்பிடித்த நெறி இது” என்றார். “தந்தையே, செய்யும் செயலேதும் சொல்லால் நிலைநிறுத்தப்பட்டாகவேண்டும். சொல்லற்ற செயலோ வேரற்ற மலைமரமாகும். என் சொல் எதிர்த்து தன்சொல் சொல்லட்டும் இப்பூசகர்” என்றான் கண்ணன்.

“நாலாயிரம் வருடத்து நடைமுறை ஈதென்பார் என்னில் சொல் நிறுத்திய குடி மூத்தார். வைரக்கோலேந்தி முகில்கூட்டம் மேய்ப்பான், வண்ண வில்லேந்தி மண்நிறைக்கும் மழையாவான். விண்ணவர்க்கு அரசன். வேந்தருக்கு வேந்தன். வெண்களிறும் செங்கதிரும் விரிசுடர் மணிமுடியும் கொண்டோன். மழையே புல்லாகி பாலாகி நெய்யாகி நம் உணவாகி உயிராகி வேதச்சொல்லாகி விளைகின்றது என்பார். அவன் குடிகள் நாம். அவன் கொடையில் வாழ்கின்றோம். அவன் சொல்லில் அமைகின்றோம். அளிப்பவனுக்கு படைப்பதுதான் அடைவோர் கடனாகும். வெண்பசுவொன்றை அளித்து விண்ணவனை வணங்குதல் ஆயர்குடிகளெல்லாம் ஆற்றிவரும் செயலாகும்” என்றார் பூசகர்.

“ஆயரே கேளீர்! ஆநிரைகள் பேணாமல் நீர்நிலைகள் தேக்காமல் நாமிருந்தால் நம்குடிக்கு நலம் விளையும் என்பீரா?” என்றான் கண்ணன். “நற்செயலே நலமாக விளைகிறது” என்று நந்தன் பதில் சொன்னார். “நம் கையின் செயலாலே நாம் வாழ்வோம் என்றிருக்க தேவர்கள் செய்வதென்ன? தேவர்தம் செயலாலே நம் வாழ்க்கை என்றால் நாம் செய்ய ஏதுண்டு?” என்று கண்ணன் கேட்டான்.

“ஆனால் விண்ணவர் அருளாமல் மண்ணிலேது வாழ்வு?” என்றார் நந்தகோபர். “விண்ணவரை ஆளும் வெண்கடலோன் அருளுண்டு. அவன் கண்ணசைவில் வாழும் இந்த ககனங்கள் அனைத்தும். பண் ஒன்றே பலியாக பெற்று அருளும் பெரியோன். அன்னவர்க்கே அடிமைசெய்வோம்” என்றான் கண்ணன். “பூசகரே கேளீர். இவ்வன்னைப் பசுவை அறுத்திடும் செயலுக்கு விண்ணவன்தான் பொறுப்பா? இல்லை உங்கள் வேரும் விழுதும் கொள்ளும் அப் பழியா?” என்றான். திகைத்து “இது விண்ணவன் கொள்ளும் பலியல்லவா?” என்றார் அவர். “விண்ணவன் பலி விழைந்தால் தன் வைரக்கோல் கொண்டு அவனே அதை அடையட்டும். நம் கை வாள் முனையால் நம் அன்னை கழுத்தை நாமே அறுத்திடலாகுமா?” என்றான் கண்ணன்.

சொல்லிழந்து நின்ற சுற்றத்தை நோக்கி “இதோ இப்பசுவை நான் மீட்கிறேன். இதன் கழுத்தணிந்த கயிறை அறுக்கிறேன். நான் செய்தல் பிழை என்றால் விண்ணவன் இறங்கி வருக. அவன் வெண்மின்னல் கோல் என்னில் பதிக. அவன் இடியோசை சான்றாகுக!” என்று சொல்லி கண்ணன் அப்பசுவை விடுதலைசெய்தான். அஞ்சி உடல் நடுங்கி பின் விண்நோக்கி வியந்தபின் “கண்ணன் சொல் வாழட்டும். இக்குடியில் இனிமேல் அவன் சொன்ன முறையே அமையட்டும்” என்றார் நந்தர்கோபர். ஆய்ச்சியர் குரலெழுப்பி “அவ்வாறே ஆகுக!” என்றனர். அஞ்சி நின்ற ஆயர் குடியினரும் “அவ்வண்ணமே” என்றனர்.

“இந்திரனும் சூரியனும் எமனும் வருணனும் இலைநுனியின் பனித்துளிகள். அவர்கொண்ட ஒளியெல்லாம் அழியாத பெருங்கதிர் ஒன்றின் அருளாகும். ஒளியுருவானவனை ஒன்றேயாகி நின்றவனை உருவாகி அருவாகி கருவான திருவை வணங்குவோம். அவன் பலியேதும் கேட்பதில்லை. பழியேதும் கொள்வதில்லை. நற்சொல்லில் நற்செயலில் நல்லெண்ணம் கொண்டு வேள்விசெய்வோம். பகிர்ந்துண்டு களிப்போம். பாடலும் ஆடலும் கூடுவோம். எவர் பழியும் நமக்கில்லை. எம்முடன் இருக்கும் எந்தையின் பேரரருள்” என்றான் கண்ணன். “ஆம், ஆம், ஆம்” என்றது ஆயர்ப்பெருங்கூட்டம்.

ஆயரே, அன்னையரே, அன்று நான் கண்டேன் விண்ணிலெழுந்த மின்னல் விழியொன்றை. கீழ்த்திசை சரிவில் கருமேகம் உறுமக் கேட்டேன். ஆடலும் பாடலும் நகையாடலும் உண்டலும் குடித்தலுமாய் என்னைச்சுற்றி கழல்களும் சிலம்புகளும் வளைகளும் வாள்களும் ஒலித்தெழுந்து சூழ நான் மட்டும் தனித்து நின்றேன். வான் சினந்தெழுந்ததை நான் அறிந்துகொண்டேன். அதை கூவியறிவிக்க கூடும்செவியின்றி நாவில் சொல்தவிக்க நெஞ்சில் எண்ணம் பதைக்க ஆவினத்தோர் கூடும் அரங்கெல்லாம் சுற்றிவந்தேன்.

இரவெழுந்தது. விண்ணில் அரவக் கண்ணெழுந்தது. அப்பால் இருளின் பெண்ணெழுந்தாள். அவள் பேய்க்குழலெழுந்தது. அதில் ஆடும் வெறியெழுந்தது. கனல்எழுந்த களியாட்டு கடுகிநின்ற நதிக்கரையில் கம்பமெல்லாம் எழுந்தன. கனல் போன்ற கொடித்துணிகள் துடிதுடிக்கும் ஒலிகேட்டேன். பின்னர் வண்டின் சிறகுகள் போல இலைநுனிகள் அதிரும் ஒலிகேட்டேன். கூடணந்த காகங்கள் சிறகொடுக்கி சுருங்கக் கண்டேன். நண்டும் எலியும் நச்சரவக் குழவிகளும் வளை தேரக் கண்டேன். நரிகளும் நாய்களும் அளை தேர்ந்து அணையக்கண்டேன். வான் கிழியும் மின்னல் மேகக்குவை அதிரும் இடியோசை. இல்லையென்றே விரிந்த இருள்வெளியில் வேதச்சொல் ஒன்று விளங்கக் கேட்டேன்.

முதல்துளி விழுந்ததும் இளையோர் கூவிச் சிரித்தனர். அவர்கள் இடைபற்றி நின்ற துணையோர் கள்கலம் தூக்கி கூவினர். அத்திப்பழம் உதிர்வதுபோல் மெத்தென்ற ஒலியெழுப்பி அம்புகள் போல சீறிவந்து மண் தைத்து மலைச்சரிவெங்கும் விழுந்தன மழைத்துளிகள். கூரைகள் கொந்தளித்தன. கரும்பாறைப் பரப்புகள் கோலேற்ற முரசுகளாயின. பின்னர் வானெழுந்த வெள்ளமே திசைநான்கும் என ஆனது. வெள்ளித்திரை போல நின்று உலைந்தது. வெள்ளச் சுவர் போல சூழ்ந்து மறைத்தது. ஓங்காரமாகி ஒலித்தது மாமழை. உள்ளே ஆங்காரம் கொண்டு சிரித்தது கருமுகில். ஒளியதிரும் மழைத்தாரை நீர்நாணல் புதரென அடர்ந்தது. கருநீர் மயிர் சிலிர்த்து கரடியெனச் சினந்தது.

அரவுக்கூட்டம் வளைவிட்டெழுந்ததுபோல் ஆயிரம் நீர்ப்பெருக்குகள் நெளிந்திறங்கிச் சூழ்ந்தன. சிவந்த படம் வளைத்து சரிவுகளில் சீறின. அரவுண்டு பருத்தெழும் அரசநாகம் போல கரிய உடல் வீங்கி கரை நக்கி எழுந்தது காளிந்தி. கரைநின்ற பெருமரங்கள் கொம்பு குத்தி மண்டியிடும் வேல்பட்ட யானைகள்போல் நீர்தொட்டுச் சரிந்தன. இலைக்குவையும் கிளைக்கவையும் அலைகளில் ஆட மூழ்கி வேர் பிடுங்கி கைவிரித்து வெள்ளத்தில் சென்றன. கன்றை அன்னையென படிகளை நக்கியது வெள்ளச் செந்நாக்கு. தீத்தழல்போல் எழுந்து திண்ணைகளை எரித்தழித்தது. மண்சுவர் கரைத்து புல்கூரை சரித்து மழைவெள்ளம் கொண்டுசென்ற இல்லங்கள் மேலேறி நாய்கள் நிற்கக் கண்டோம்.

“இந்திரன் சினந்தான். இனி ஒரு கதியில்லை. ஏழைக்குலம் காக்கும் மந்திரம் ஏதுமில்லை. ஆநிரைகள் சாகும். ஆயர்குடி அழியும். மலைவெள்ளம் எழுந்து நம் இல்லங்கள் மண்ணாகும்” என்று ஒரு மூதாயர் கூவக்கேட்டேன். “முற்கதைகள் அறிந்த மூத்தோர் இருக்க சொற் களிக்கும் சிறுவன் வழிகாட்டலாகுமோ? பலியடையா விண்ணவனின் பெருஞ்சினத்தை ஆற்றும் வழியறிந்தோர் எவருண்டு?” என்றார். ”காலித் தொழுவங்கள் கால்சரிந்துவிட்டன. கன்றுகள் நடுங்கி குரலெழுப்புகின்றன. பசுக்கூட்டம் நீரில் பதைத்து நிற்கின்றது. இனி ஒன்றே வழியாகும். இந்திரன் அடிபணிவோம். குற்றமெல்லாம் பொறுத்து அவன் நம் குடிவாழ அருள்செய்வான்” என்றார் மூதாயர்.

ஆபுரக்கும் கோல் தூக்கி கண்ணன் எழுந்தான். “மூத்தோரே, அன்னையரே, ஆயர்குலத்தோரே, கேளுங்கள். யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும் வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல்!” என்றான். ”என் சொல்லை நம்பி எழுவோர் இப்பாதத் தடம் தொடர்க!” என்று நடந்தான். அக்கணமே யசோதை தன் ஆக்களுடன் பின் எழுந்தாள். ஆய்ச்சியர் கூட்டம் அவள் காலடியில் கால்வைத்துச் செல்ல ஆயர்களும் அவ்வழியே தொடர்ந்தனர். மலைச்சரிவில் ஏறி மேடு நோக்கிச் சென்றனர்.

ஆவளரும் மலை நோக்கி ஆயர்குடி கனிந்தோன் சொன்னான். “இதுவே நாம் தங்கும் இடமென்றறிக. இக்குகைக்குள் அமர்ந்து இம்மழையை நாம் வெல்வோம்.” கோவர்த்தனம் அமர்ந்த மலைக்குவையின் கீழே கோபாலர் குடிபுகுந்தார். மைந்தரும் கன்றுகளும் மார்போடணைத்த குழவிகளும் சேர அன்னையர் அமர்ந்துகொண்டனர். உடலோடு உடல்சேர்த்து உயிர்கள் இதம் கொண்டன. வெளியே வானக்குளிரெல்லாம் வாரிப்பொழிந்து வெறிகொண்டு ஆடி விரிகூந்தல் சுழற்றி நின்றிருந்தது நில்லாப் பெருமழை.

எந்தையரே, என் சொல் வாழும் குடியினரே, கேளுங்கள். இடியோசை எழுந்தொலிக்க திசைநிறைத்த நாற்கரத்தில் திரண்ட மின்னல் படைகளுடன் விண்ணெழுந்த வியனுருவை நான் கண்டேன். அவன் செவ்விழிகள் சினம் கொண்டு மின்னி அணையக் கண்டு அஞ்சவும் மறந்து நின்றேன். “ஆயிரம் தலைமுறைகள் என் அடிபணிந்த ஆயர்குடிகள் இவர். இன்றென் ஆணையை இவர் மீற ஒருபோதும் ஒப்பேன்” என்று அவன் முழங்கிய வான்சொல் கேட்டேன். “எங்கே இவர் தலைவன்? என் சொல்லை மீறும் வழிசொன்ன சிறுவன்? என் சரம்கொண்டு அவர் குலம்நின்று போகையில் தன் கரம் கொண்டு அவன் வந்து அரண்செய்யலாகுமோ? நன்று! நன்று! இன்றே அதைக் காண்பேன்!” என்று அவன் முரசொலிபோல் இடியெழுப்பும் ஆணவமொழி கேட்டேன்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

மாரிப்பெரும் பெருக்கில் மாநதிகள் பொங்கி மலையிறங்கி வந்தன. புரவிப்படைபோல செம்பிடரி அலையடிக்க பெருகிவரும் குளம்புகள் ஓலமிட பாய்ந்து சரிவிறங்கின. அருவியெனப் பொழிந்து பசுங்காட்டை நீர்க்காட்டால் மூடி நிறைத்தன. ஆவளரும் மலையிடுக்கில் ஆயர்குலம் தங்கிய குகையின் கூரையென அமைந்த கரும்பாறை உடைந்து விழுந்தது. வானாக நீர் நிற்க திசையாக நீர் சூழ உடல்குறுக்கி உயிர் ஒடுக்கி கூவி அழுதனர் அன்னையரும் ஆயரும். கன்றுகொண்ட பசுக்களும் காளைக்கூட்டங்களும் எழுப்பிய ஒலி எழக்கேட்டு ஊழி முழுத்ததோ பாழி எழுந்ததோ என்று எண்ணி நானும் அஞ்சி அங்கே நின்றேன்.

அன்னையரே கேளீர்! ஆயர்குடி வந்த இளையோரே கேளீர்! புவிவிரிவே, காலப்பெருக்கே, காலத்தை உண்ணும் கடுவெளியே, வெளிசுருண்ட கவிச்சொல்லே கேளீர்! எளியோன், ஏழைப்பாணன், சொல்கொண்டு வான் படைப்போன் செப்பும் மொழியே சான்றாகி நிற்கட்டும். என் இருவிழியாலே நான் கண்டேன். மலைவிலகிய மடைதனிலே கண்ணனைக் கண்டேன். கன்னங்கரியோன், காளிந்தி கிளைநதிபோல் காலிரண்டும் கொண்டோன். மேகக்குவைபோல மேலெழுந்துவந்தான். தன் இடக்கையை நீட்டி கோவர்த்தன மலையை எடுத்தான். குடையாக அதைப்பிடித்து குகைக்கூரை மூடிக்கொண்டான்!

ஆம், நான் கண்டேன். ஆயிரம் விழியால் கண்டேன். ஆனதொரு புலனால் கண்டேன். மதகரிபோல் மலைஅசைந்து வரக்கண்டேன். மரங்கள் கூத்தாடும் மாமழையை வாங்கி அது விண் நிறைந்து விளங்கக் கண்டேன். கரியபெருந்தோளில் மேலாடை சரிவதுபோல் கரும்பாறை இழியும் அருவிக்குலம் கண்டேன். முகில்சூடும் முடிமீது இடியோசை ஒலித்து நிற்க ஆங்கே இந்திரன் திகைத்து கைசோர்ந்து நிற்கக் கண்டேன்.

எழுந்தது இடிமேளம். மேகக்குவைகளில் வலுத்தது துடிதாளம். எடுத்த நீலப் பாதம் மீது எழுந்தது மணியுடல். சுட்டிய சிறுவிரல்மேல் சுழன்றது மலைமகவு. என் கண்ணிரண்டும் காண, கருத்தழிந்து சுருங்க அங்கு நின்ற நான் அறிந்தேன். எங்கும் நிறைந்த பொருளொன்றின் ஏதுமான பெருவடிவம். கண்ணா, கண்ணிரண்டு அளித்து காட்சிப்பயனாகி மண்நிறைந்து நின்ற மணிவண்ணா. அக்கணத்தில் அழிந்தேன். அங்கு நின்றெரிந்தேன். எந்தன் சொல்பெருகிப் பொழிந்த பேரருவிகள் இழியும் கருமலைச்சாரலில் நின்றிருக்கும் கடம்பே. என் வண்ணங்களெல்லாம் வழிந்தோட எஞ்சும் இருளே!

ஒற்றைக் கைவிரல் ஒன்றுகுவித்து அவன் எற்றிவிளையாட, மலை பெற்ற மகவது துள்ளிநகைத்தொரு பிள்ளைநடமாட, வரிசிலை ஏந்திய வாரணன் அன்று அவன் புவிகாத்த கதைபோல, விரிமலை ஏந்திய விண்மகன் இன்றொரு புதுக்கதை செய்கின்றான். சிற்றிடையோடு சிறுகழல் மணிகளும் சேர்ந்து சுழன்றாட, நெற்றியிலே விழும் குறுநிரை வளைந்து நெளிந்தாட, வெற்றியெழும் தடந்தோள் இணை விம்மி எழுந்தாட, பெற்றியெழும் பெருநடமெழுந்தது சிறியோன் விழி நாட!

கருமுகிலாடிடும் மலைமுடி கொண்டு அவன் களித்து நின்றாட கருவினில் ஆடிய உருவெழுந்து என் அகக் கனவு நிறைத்தோட பெருவெளியெங்கணும் பெருகிய நீர்வெளி அரங்கத் திரையாகும். இங்கென் சொல்லில் எழுவது சொல்லை அழித்து எஞ்சிடும் மொழியாகும். நடமிடும் மழையலை. ஆடி சுழன்றிடும் கருமலை. அங்கே நின்றருளியது என் நெஞ்செழுந்த பெருநிலை.

கடுவெளியே, காரிருளே, ககனத்து அலைவிரிவே, அகம்நிறைக்கும் அழகே, மொழியே, சொல்லே, சுவையே, என் கைவந்த பொருளே, என் கண்நிறைந்த உருவே வருக! கண்ணா, ஆயர்குல மைந்தா வருக! நந்தன் குடிப்பிறப்பே என் முன் வந்தருள்க! என் சிந்தையள்ளும் சிற்றுருவாய் என் முன் நின்றருள்க! நான் கலம் நிறைத்து அமுதூட்ட கடிந்தொரு மொழிசொல்ல கைநிறைத்து தாலாட்ட கண்நிறைத்து பார்த்திருக்க கன்னங்கரியோனாகி வருக! கண்ணின் கருமணியாகி வருக! கண்ணா வருக! நீயலாது பிறிதிலாது என்னில் நிலைகொள்க! ஓம் ஓம் ஓம்!

வெண்முரசு விவாதங்கள்