மழைப்பாடல் - 44
பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
[ 1 ]
மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின் கொம்பினால் ஆனதாகவே இருந்தது. கொம்பை ஊதிய சேவகன் மும்முறை தலைவணங்கி தன் மர மேடையிலிருந்து இறங்கியதும் சபையில் அமைதி பரவியது. வெளியே பெய்து கொண்டிருந்த சிறு மழையின் மெல்லிய ஒலி மட்டும் அந்த விரிந்த மண்டபத்தை நிறைத்திருந்தது.
கூரையை தாங்கி நின்ற கனத்த மரங்களாலான தூண்களில் உயரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டுப் பாவட்டாக்கள் இளங்காற்றில் யானை மத்தகங்கள் போல அசைந்தன. இருபக்கமும் கட்டப்பட்டிருந்த துணிச்சாமரங்கள் யானையின் காதுகளாக வீசின. ஒவ்வொரு தூணுக்குக் கீழேயும் நின்று சாமரங்களை சரடால் இழுத்துக்கொண்டிருந்த சேவகர்கள் யானைகளை கட்டுப்படுத்திய பாகர்கள் போலிருந்தனர். தொடர்ந்து பெய்த மழையினால் மண் குளிர்ந்திருந்ததனால் உள்ளே அந்தச் சிறிய காற்றே கூதல் போல குளிரைப் பரப்பியது.
நீள்வட்ட வடிவில் பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் முதல் எல்லையில் இருந்து தொடர்ச்சியாக யாதவர்கள் அமர்ந்திருந்தனர். தங்கள் குலங்களின் இலச்சினைகள் பொறிக்கப்பட்ட தலைப்பாகைகளுடன் கழுத்தில் கல்மணி ஆரங்கள் அணிந்து தோலாடைகள் மேல் பளபளக்கும் குத்துவாள்களுடன் அமர்ந்திருந்த அவர்கள் மனக்கிளர்ச்சியுற்றவர்களாக அருகே இருந்தவர்களிடம் பேசியபடியும், உடலை அசைத்தபடியும், அவ்வப்போது சிரித்தபடியும் தெரிந்தனர். அவர்களுக்குப்பின்னால் நின்றிருந்த சேவகர்கள் அவ்வப்போது நறுமணப்பாக்கை அளித்தனர்.
யாதவர் வரிசையின் முடிவில் கம்சன் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த விதத்தை பிற அனைவருமே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர். இரு தொடைகளையும் நன்றாக விரித்து பீடத்தின் இருபக்கங்களிலும் தன் கனத்த கைகளை ஊன்றி சிவந்த விழிகளால் அவையை பார்த்துக் கொண்டிருந்தான். சதைமடிந்த கழுத்தில் அவன் அணிந்திருந்த மணிமாலைகளும் சரப்பொளி ஆரங்களும் பதக்கமாலைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து சதை திரண்ட மார்பை நிறைத்து உருண்ட வயிற்றின் மீது அமர்ந்திருந்தன. சபையை சுற்றிவந்த அவன் விழிகள் மறு எல்லையில் அவனுக்கு நேர் முன்னால் இருந்த சல்லியனைப் பார்த்ததும் விலகிக் கொண்டன. மீண்டும் சபையைச் சுற்றி சல்லியனை வந்தடைந்தன.
ஷத்ரியர்களின் வரிசையின் இறுதி எல்லையில் அமர்ந்திருந்த சல்லியன் கரிய நெடிய உடலும் நீண்ட கரங்களும் கொண்டிருந்தான். ஒரு கையால் தன் கூரிய மீசையை வருடியபடி அவையில் எவரையும் பார்க்காமல் தொலைவில் ஆடிய பட்டுப்பாவட்டாவை நோக்கி பார்வையை நாட்டியிருந்தான். ஆனால் அவனுடைய மொத்த அகப்பார்வையும் கம்சனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று விதுரன் உணர்ந்தான்.
சபையில் ஷத்ரியர் வரிசையில் நாலாவதாக பாண்டு அமர்ந்திருந்தான். இரு கைகளையும் மார்புடன் சேர்த்து கட்டியபடி தலைகுனிந்து தனக்குள் ஆழ்ந்தவனாக அவன் தென்பட்டான். அவ்வப்போது வாயை இறுக்கி பெருமூச்சுவிட்டு மெல்ல அசைந்தான். அவையில் இருந்த எவரும் அவனை முன்னர் பார்த்திருக்கவில்லை. அவன் நுழைந்ததும் அவை முழுக்க ஓர் அசைவு பரவிச் சென்றது. அனைவரும் திரும்பி அவனை நோக்கினர். அத்தனை பேரும் அடைந்த வியப்பே ஒரு மெல்லிய ஒலியாக மாறி எழுந்தது. உடனே அவர்கள் இயல்பு நிலை மீண்டு அசைய அவ்வசைவு இன்னொரு அலையாக பரவிச் சென்றது.
பாண்டு விதுரனின் கையைப் பற்றியபடி வெண்பனி போன்ற தலைமுடி காதுகளில் சரிய குனிந்து தரையை நோக்கியபடி நடந்தான். அவ்வறையில் பரவியிருந்த ஒளி அவன் கண்களை மறைத்தது. தரையின் மரப்பலகைகள் எழுந்து தெரிவது போல அவனுக்குத் தோன்றியது. பலமுறை காலை தவறாக எடுத்துவைத்து தடுமாறினான். விதுரன் அவன் தோளைத் தொட்டபடி “இளவரசே, சமநிலம்தான். நிமிர்ந்து செல்லுங்கள். பலபத்ரர் நிற்பதற்கு முன்னாலுள்ள இருக்கையில் அமருங்கள்” என்றான். “பலபத்ரர் எங்கே?” என்றான் பாண்டு. “நான் சொல்கிறேன். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்” என்று விதுரன் மிகமெல்லிய ஒலியில் கூறினான்.
பலபத்ரர் பாண்டுவைக் கண்டதும் சபை நடுவே இறங்கி பதறியபடி மார்புச்சதைகள் குலுங்க ஓடிவந்து அவனை கைப்பிடித்து அழைத்துச்சென்று பீடத்தில் அமரச் செய்தார். விதுரனின் முழுக்குருதியும் முகத்தில் பாய்ந்தேறி காது மடல்களும் இமைகளும் வெம்மை கொண்டன. விதுரனை நேக்கிய பலபத்ரர் அவனுடைய கடும் சினத்தை புரிந்து கொண்டாரென்றாலும் அவர் செய்தது என்ன என்பதை உணரவில்லை. “அமைச்சரே, அரசரின் மருத்துவரை இருக்கைக்குப் பின்னாலேயே நிற்கும்படிச் சொன்னேன்” என்று பதற்றத்துடன் சொன்னார்.
விதுரன் மூச்சை இழுத்து சீராக விட்டு தன்னுடைய சினத்தை ஆற்றிக் கொண்டான். பலபத்ரர் குனிந்து பாண்டுவிடம் “இளவரசே, என்ன தேவை என்றாலும் வலது பக்கம் திரும்பிப் பாருங்கள். அந்தத் தூணருகே நான் நின்றிருப்பேன்” என்றார். பாண்டு நிமிர்ந்து இளநகையுடன் விதுரனைப் பார்த்தான். அவனுடைய இமைகள் கொக்கிறகுகள் போல இருந்தன. கீழே விழிகள் குருதிச் சிவப்புக்குள் இரு சிவந்த பாம்பு முட்டைகள் போல அசைந்தன.
விதுரன் பலபத்ரரிடம் “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். “இல்லை அமைச்சரே, இளவரசர் நேற்றே உடல்நலமில்லாமல்…” என்று பலபத்ரர் ஆரம்பித்தார். அவரது உடல் பதற்றத்தில் வியர்த்திருந்தது. விதுரன் அவரது பழுத்த முதிய விழிகளையும் வியர்வை பரவிய மோவாயையும் பார்த்தான். தன்னுள் ஊறிய வெறுப்பை பல்லைக் கடித்து அடக்கியபடி “நான் இளவரசரின் அருகிலேயே இருப்பேன் அமைச்சரே. நீங்கள் மண்டபத்தை விட்டு வெளியே செல்லுங்கள்” என்றான்.
பலபத்ரர் பாண்டுவைப் பார்த்துவிட்டு “இளவரசருக்குத் தேவையான தலையணைகளை… ” என்று தொடங்கவும் விதுரன் பட்டைக் கிழிக்கும் குறுவாள் போன்ற குரலில் “கிழட்டு மூடா, இக்கணம் நீ வெளியே செல்லாவிட்டால் நாளை கழுவில் ஏற்றப்படுவாய்” என்றான். பலபத்ரர் அச்சத்தில் உறைந்து திறந்த வாயுடன் அப்படியே நின்றார் “ம்” என்றான் விதுரன். பலபத்ரர் எலிபோல பதறி ஓடி எதிர்வாயில்வழியாக வெளியேறினார்.
விதுரன் “இயல்பாகச் சாய்ந்து கொள்ளுங்கள் இளவரசே… எவர் விழிகளையும் பார்க்க வேண்டாம்” என்றான். பாண்டு “அவர் பீஷ்மரின் தோழர். நீ அவரை அப்படி நடத்தியிருக்கக் கூடாது” என்றான். “சொல்லித் தெரிய வேண்டிய இடத்தில் அமைச்சன் இருக்கலாகாது” என்றான் விதுரன். “விதுரா, அவர்…” என்று பாண்டு சொல்லத் தொடங்க “அது முடிந்துவிட்டது. நான் என் முடிவுகளை விவாதிப்பதில்லை” என்றான் விதுரன்.
“எது வேண்டுமானாலும் செய். நான் சொன்னதை நீ எந்தக் காலத்தில் கேட்டிருக்கிறாய்?” என்றான் பாண்டு. விதுரன் தலைதூக்கி ஷத்ரியர் விழிகளைப் பார்த்தான். எவரும் நேரடியாக விழிதிருப்பி பாண்டுவை பார்க்கவில்லை. ஆனால் அவர்களின் கண்கள் சுழன்று சுழன்று வந்து பாண்டுவையே தொட்டு மீண்டன. கம்சன் ஒரே ஒரு முறை நேருக்கு நேராக பாண்டுவைப் பார்த்தான். இகழ்ச்சியுடன் வாய் சற்றே திறந்திருந்தது. அப்போது குந்திபோஜனின் நிமித்திகன் உள்ளே வர அந்தத் திறந்தவாயுடனேயே பார்வையை அப்பக்கமாக திருப்பிக்கொண்டான். பிறகு அவன் பாண்டுவை பார்க்கவேயில்லை. சல்லியன் பாண்டுவை பார்த்தானா என்பதையே விதுரனால் கவனிக்க முடியவில்லை. ஆனால் பார்க்காமலிருக்க மாட்டான் என்று விதுரன் அறிந்திருந்தான்.
“அவன்தான் சல்லியனா?” என்று பாண்டு கேட்டான். விதுரன் ”ஆம்” என்றான். “அழகன்!” என்றான் பாண்டு. விதுரன் பதில் கூறவில்லை. “அவனுக்குத்தான் குந்தி மாலையிடப் போகிறாள்.” விதுரன் பேசாமல் நின்றான். “அப்படி அவள் நினைத்தால் அதுவே சிறந்த முடிவாக இருக்கும்” என்றான் பாண்டு. அவன் தன்னைச் சீண்டுவதற்காகவே அப்படிச் சொல்கிறான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
காலையில் பாண்டுவின் சேவகன் வந்து அவன் படுக்கைவிட்டு எழ மறுப்பதாகச் சொன்னபோது விதுரன் திகைத்து “இன்னுமா எழவில்லை?” என்றான். “அவர் உடல்நிலை நலமாக உள்ளதல்லவா?” சேவகன் “உடலுக்கு ஒன்றுமில்லை” என்றான். விதுரன் பார்த்தான். “அவருக்கு தங்களிடம் ஏதாவது பேசுவதற்கு இருக்கலாம்” என்றான் சேவகன். விதுரன் எழுந்து சால்வையைச் சுற்றியபடி நடந்து பாண்டுவின் படுக்கையறைக்குச் சென்றான்.
மஞ்சத்தில் பாண்டு ஒருக்களித்து சாளரத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான். சாளரத்தின் திறந்த வாயில் வழியாக அப்பால் நின்றிருந்த சந்தன மரம் காற்றிலாடுவது தெரிந்து கொண்டிருந்தது. விதுரன் உள்ளே வந்ததை அவன் காலடியோசையால் உணர்ந்ததை தோள் குறுகல் காட்டியது. “இளவரசே என்ன இது? தாங்கள் அணியும் ஆடையும் ஏற்க வேண்டுமல்லவா?” என்று இயல்பாகத் தொடங்கினான் விதுரன்.
கலங்கிய விழிகளுடன் திரும்பி “நான் உன்னிடம் நேற்று காலை என்ன சொன்னேன்?” என்று பாண்டு கேட்டான். “நேற்றா? காலையில் உங்களுக்கு உடல்வெப்பம் இருந்தது.” பாண்டு “ஆம் அதை நானும் அறிவேன். ஆனால் என் வெம்மையில் என் அறைக்கு வந்த உன்னிடம் நான் ஏதோ சொன்னேன். அது என்ன?” என்றான். விதுரன் “அதை நான் சரிவர நினைவுகூரவில்லை இளவரசே” என்றான்.
“தம்பி நீ ஒன்றை நினைவுகூரவில்லை என்று சொன்னால் அது நினைவுகூர விரும்பவில்லை என்றே பொருள்படும்” என்றான் பாண்டு. “ஆம். அவ்வாறுதான்” என்று விதுரன் சொன்னான். “நான் சொன்னவை என்ன என்று எனக்குத் தெரியும். சரியான சொற்களில் சொன்னேனா என்றுதான் உன்னிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள விரும்பினேன்” என்றான் பாண்டு.
‘‘நாம் அதை பிறகு பேசுவோம். தாங்கள் மணநிகழ்வுக்குக் கிளம்பவேண்டும்” என்றான் விதுரன். “தம்பி இது இரண்டாவது சுயம்வரம்” என்றான் பாண்டு. விதுரன் அவன் சொல்ல வருவது அதுதான் என நன்கறிந்திருந்தபோதிலும் உள்ளம் பதறுவதை உணர்ந்தான். பாண்டு “இதேபோல கங்கையில் படகில் சென்று பிதாமகர் என் அன்னையரை கவர்ந்து வந்தார்” என்றான். “ஆம். அது அனைவரும் அறிந்த கதை” என்று விதுரன் கூறினான். “தம்பி நீ பேரறிஞன். மாபெரும் மதியூகி. உலகில் அனைவரையுமே உன்னால் வெல்ல முடியும். ஆனால் பேரறிஞர்களும் மதியூகிகளும் தோற்கும் ஓர் இடம் உண்டு.”
விதுரன் “நான் விவாதிக்க விரும்பவில்லை. காசி நாட்டு இளவரசியரை பிதாமகர் பீஷ்மர் கவர்ந்து வந்தது சரியானதென்றே நான் இன்றும் நினைக்கிறேன். அது அஸ்தினபுரியை காத்தது. அதற்காக அஸ்தினபுரி மீது அம்பாதேவியின் தீச்சொல் விழுந்தது என்கிறார்கள். ஆனால் அவ்வண்ணம் நோக்கினால் தீச்சொல்விழாத தேசம் என்ற ஒன்று இப்புவியில் இருக்க இயலாது” என்றான்.
கசப்பை உச்சமாக வெளிப்படுத்தும் சிரிப்பு ஒன்றை பாண்டு அடைந்திருந்தான் என்று விதுரன் அறிவான். பாண்டு சிரித்து “நான் ஒரு அரசியல் மதியூகியாக பிறக்காமலிருக்க முற்பிறவியில் தவம் செய்திருக்கிறேன்” என்றான். “இளவரசே, தாங்கள் இந்த சுயம்வரத்தில் கலந்துகொள்வதாக முடிவெடுத்துதான் இத்தனை தொலைவு வந்திருக்கிறோம். அது நம் பிதாமகரின் ஆணை” என்று விதுரன் சொன்னான்.
“பிதாமகர் எடுக்கும் இரண்டாவது பெரும் பிழைமுடிவு இது. அன்று கங்கையை சிறை கொண்டு வந்தார். இப்போது யமுனையை சிறை கொண்டு செல்ல வந்திருக்கிறார்” பாண்டு சொன்னான். “என் தந்தை பிதாமகர் செய்த பிழையின் விஷத்தை அன்று உண்டார். இன்று எனக்காக அதை கிண்ணத்தில் ஊற்றுகிறார்” பல்லைக்கடித்து “உயிருடனும் உணர்வுடனும் சதுரங்கக் காயாக இருக்க இயலாது” என்றான்.
விதுரன் “உங்கள் ஐயங்களுக்கு நான் விளக்கமளிக்க இயலாது இளவரசே… நான் இந்த ஆட்டத்தை ஒருங்கமைக்கவில்லை. இதை பிதாமகர் ஏன் முன்னெடுக்கிறார் என்றும் அறியேன். ஆனால் இது எப்படி முடியும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்” என்றான். பாண்டு ஏறிட்டுப்பார்த்தான். “இம்முறை பிதாமகரின் கரங்களை படைகள் மீறிச் செல்லவிருக்கின்றன.” பாண்டுவின் பார்வை கூர்மைகொண்டது.
பாண்டுவின் பார்வையை நோக்கியபடி விதுரன் கூறினான் “அஸ்தினபுரிக்கு மருகியாக மகளைத்தர இயலுமா என்று கேட்டு பலபத்ரரின் தூது வந்தபோது குந்திபோஜன் வேறு எந்த முடிவை எடுத்திருக்க இயலும்? பீஷ்மர் காசிநாட்டு இளவரசியை கவர்ந்து சென்ற கதையை பாரதவர்ஷத்தில் அனைவரும் அறிவர். மார்த்திகாவதியின் இளவரசி மாபெரும் மதியூகி என்று புகழ்பெற்றிருக்கிறாள். அவளுக்கும் என்ன நிகழும் என்று தெரியும். ஆகவேதான் இந்த சுயம்வர நாடகத்தை முன்வைத்திருக்கிறார்கள்.”
பாண்டு சில கணங்கள் விதுரனின் விழிகளை நோக்கியபின் “யார் அவன்?” என்றான். “மாத்ர நாட்டு இளவரசர் சல்லியன்” என்றான் விதுரன். பாண்டு புன்னகையுடன் “அவர் வந்திருக்கிறாரா என்ன? அவரைப்பற்றி சேடியர் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். விதுரன் “ஆம். அழகர் என்றும் வீரர் என்றும் புகழ் பெற்றிருக்கிறார். அவரை மார்த்திகாவதியின் இளவரசிக்கு முன்னரே தெரியும் என்றும் சொன்னார்கள்” என்றான்.
பாண்டு சிரித்தபடி எழுந்தான். “ஆம் அதுவே இந்த நாடகத்தின் மிகச்சிறந்த முடிவாக இருக்க முடியும். அழகிய மதியூகியான இளவரசி. அழகிய வீரனாகிய இளவரசனுக்கே மனைவியாக வேண்டும். காட்டில் ஒரு மான் தன் இணையைத் தேடிக்கொள்வது போல இயல்பாக அது நிகழவேண்டும.” “ஆம் இளவரசே, இது நம் பிதாமகரின் ஆணை… நாம் அதன் பொருட்டு வந்திருக்கிறோம். இந்த நாடகத்தை நாமும் சிறப்புற ஆடிவிட்டு மீள்வோம்.”
பாண்டு கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி “பெரிய எடையொன்றை உடலில் இருந்து இறக்கி விட்டது போலிருக்கிறது விதுரா… காலையில் என்னை நான் செயலற்ற பாவையாக, பிறர் விரலசைவுக்கு ஆடும் இழிமகனாக உணர்ந்தேன். இப்போது இந்த விளையாட்டு என் வாழ்வின் சுவைமிக்க நிகழ்வுகளில் ஒன்று என்று தோன்றுகிறது” என்றான். “நான் இன்று ஒரு பார்வையாளன் மட்டுமே, இல்லையா?” உரக்கச்சிரித்து “மஞ்சளரிசியையும் மலரையும் ஓங்கித்தூவ என் கைகளுக்கு விசையிருக்குமென நினைக்கிறேன்.”
அவை காத்திருந்தது. எத்தனை சுயம்வரங்கள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் பாரதவர்ஷத்தின் அரசியல் விளையாட்டு மாறுபடுகிறது. இவை ஒவ்வொன்றும் சதுரங்கத்தின் ஒரு புதிர்நிலைகள். விதுரன் அப்பால் அமர்ந்திருக்கும் பீஷ்மரை ஒரு கணம் நோக்கி மீண்டான். பாண்டு தலையை மேலே தூக்கினான். விதுரன் குனிந்தான். “இந்த நாடகத்தில் தலைவன் சல்லியன் என்றால் நான் விதூஷகன். என் முன்னால் அமர்ந்திருக்கும் இவன் யார்?” என்றான்.
“இளவரசே இவர் மதுராபுரியின் இளவரசர். பெயர் கம்சன்” என்றான் விதுரன். “இவன் ஐயமே இல்லாதவனாக இருக்கிறானே…” விதுரன் மெல்ல நகைத்து “அவனும் ஐயமேயின்றி அமர்ந்திருக்கும்படி செய்யப்பட்டிருக்கிறான்.” பாண்டு சிரித்தபடி “விதுரா, இந்த அவையில் அத்தனை பேரின் ஐயமும் அப்படி நீக்கப்பட்டிருக்குமா என்ன?” என்றான். விதுரன் புன்னகை செய்தான். அவர்கள் சிரிப்பதை அவையே திரும்பிப் பார்த்தது. பாண்டு உள்ளே நுழைந்தபோது பலபத்ரரின் மூடத்தனத்தால் உருவான ஏளனம் அவர்களின் இயல்பான சிரிப்பால் சற்று விலகிவிட்டிருப்பதை விதுரன் கண்டான்.
மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முழங்க முழுதணிக்கோலத்தில் வெண்குடையும் கவரியும் சூடி வந்த குந்திபோஜனும் அரசி தேவவதியும் வணங்கியபடி அவைநுழைந்து சிம்மாசனத்தில் அமர்ந்தனர். குந்திபோஜனின் விழிகள் முதலிலேயே பீஷ்மரை தேடிக் கண்டு கொண்டன. உடனே அவர் உடலில் பணிவைக்காட்டும் ஓர் அசைவு நிகழ்ந்தது. அதைக் கண்டதும் சல்லியன் இயல்பாகத் திரும்பி பீஷ்மரைப் பார்த்தான். உடனே பாண்டுவை நோக்கிய பின் அரைக்கணத்தில் திரும்பிக் கொண்டான்.
குந்திபோஜனின் அரியணைக்குப் பின்னால் வீரன் அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்தபடி நின்றான். இருபக்கமும் தாசிகள் கவரி வீசினர். அவருடைய அமைச்சர் ரிஷபர் கையில் செங்கோலை ஏந்தி அவர் முன்வந்து அருகே நின்றார். ஆனால் குந்திபோஜன் தன் உடல்குறுகல் வழியாகவே அவையனைத்தையும் பொருளற்றவையாக ஆக்கிவிட்டிருந்தார். ஆனால் அங்கு அமர்ந்திருந்தவர்களில் சல்லியனைத்தவிர பிறர் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சல்லியனின் கைகளில் தோளில் தொடைகளில் எங்கும் ஏளனம் வழிந்தது.
விதுரன் திரும்பி பீஷ்மரைப் பார்த்தான். அவர் அப்பால் குலமூதாதையர் அமர்ந்திருந்த வரிசையின் முகப்பில் தன் பீடத்தில் நிமிர்ந்த முதுகுடன் இறுக்கமான கழுத்துடன் அசையாத பார்வையுடன் அமர்ந்திருந்தார். கோயிலில் அமர்ந்திருக்கும் சிலைபோல. விதுரன் அந்தப் புதுச்சூழலில் அவரைப் பார்க்கும் போது அவருடைய அந்த நிமிர்வு மிக வேறுபட்டுத்தெரிவதாக எண்ணிக்கொண்டான். எதிரே பெருகிவரும் நதியொன்றுக்கு நெஞ்சு கொடுத்து நிற்பது போல.
குந்திபோஜனின் அரச நிமித்திகன் மேடை ஏறி தன் கோலைத்தூக்கி அங்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று சுயம்வர அறிவிப்பை அளித்தான். மங்கல இசையும் வேதியரின் மறைமுழக்கமும் சூழ குந்திபோஜன் எழுந்து சபையை வணங்கியபின் கையில் செங்கோலுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தார். வெளியே அரசப் பெருமுரசு ஒலித்தது. கம்சன் தன் பெரிய தொடைகளை கைகளால் வருடியபடி பெருமூச்சு விட்டான். அவன் பார்வை சல்லியனைத் தொட்டு மீண்டதும் கை மீசையை நீவி பின்னால் ஒதுக்கியது.
நிமித்திகன் பழைய கொம்புவாத்தியம் போல தடையின்றி ஒலித்த குரலில் அறிவித்தான். “சந்திரக்குலத்தோன்றல் யதுவின் குருதிவழிவந்த யாதவ குலத்து நூற்றெட்டு பெருங்குடிகளில் முதன்மையானதான விருஷ்ணி குலத்தின் தலைவர் சூரசேனரின் புதல்வியும் மார்த்திகாவதியின் தலைவரும் போஜர் குலத்துச் செம்மலுமான குந்திபோஜரின் அறப்புதல்வியுமான குந்திதேவி என்னும் பிருதைதேவியாரின் திருமணத் தன்னேற்பு பெருமங்கலம் இங்கு இந்த அவையில் நிகழவிருக்கிறது. ஆநிரைகளின் முறைமைபோல மூதன்னையை முறைவழியாகக் கொண்டது யாதவப் பெருங்குலம். இங்கே பெண்ணே குருதித் தோன்றல். கருப்பையே குலத்தின் ஊற்று. ஆகவே இளவரசியின் தேர்வும் முடிவும்தான் முடிவானது. அதற்கு அப்பால் மூத்தோர் சொல்லோ தெய்வ ஆணையோகூட செல்ல முடியாதென்றறிக!”
நிமித்திகன் தொடர்ந்தான் “இளவரசி பிருதை அரசுசூழ்தலை முறைப்படி ஏழு நல்லாசிரியர்களிடமிருந்து கற்றுத் தேர்ந்தவர். மார்த்திகாவதியில் தங்கித் தவமியற்றிய முதுபெரும் முனிவர் துர்வாசரின் அணுக்கமாணவியாக அமர்ந்து அறமும் பொருளும் மெய்யறிவும் ஊழ்கமும் கற்றவர். ஐவகைப் படைக்கலங்களையும் இருகைகளாலும் ஆற்றும் வல்லமை கொண்டவர். இந்த மார்த்திகாவதி நகரும் அரசும் இளவரசி குந்திக்கு உரியவை என்றறிக!”
நிமித்திகன் கைதூக்கியதும் சூதர்கள் மங்கலவாத்தியங்களை ஒலித்தனர். நிமித்திகன் உரத்தகுரலில் “மார்த்திகாவதியின் இளவரசி மன்று சூழ்கிறார்” என்று அறிவித்தான். அவையின் சூழ்வட்டத்திலும் வெளியே களமுற்றத்திலும் கூடிநின்ற குடிமக்கள் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். பெருமுரசும் கொம்பும் சங்கும் சல்லரியும் மணியும் மங்கலச் சிலம்பும் ஒலித்தன. முதலில் நிறைகுடம் ஏந்தி வேதம் பாடி நீர் தெளித்த முதுவைதிகர் எழுவர் வந்தனர். மலரும் தீபமும் மஞ்சளும் பொன்னும் மங்கலப்பட்டும் தானியங்களும் நிறைகுடமும் என்று சப்தமங்கலங்களை ஏந்திய அரண்மனை மகளிர் தொடர்ந்து வந்தனர்.
மங்கல வாத்தியங்களை இசைத்தபடி சூதர்கள் அவர்களுக்குப்பின்னால் வர குந்திதேவி இருபக்கமும் இருசேடியர் அணுக்கத்தாலமும் மங்கத்தாலமும் ஏந்தி வர பின்னால் வந்த சேடி வெண்குடை பிடித்திருக்க கவரி வீசிய சேடியர் மருங்குசூழ உள்ளே வந்தாள்.