மழைப்பாடல் - 45

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்

[ 2 ]

அவை நிறைந்து அமர்ந்திருந்தவர்களை தன் உடலால் பார்த்தபடி, விழிகளை வெட்டவெளியில் மிதக்கவிட்டு காற்றில் மிதந்துவரும் பொன்னிறமான புகைச்சுருள் போல குந்தி நடந்துவந்ததை விதுரன் தன் ஐம்புலன்களாலும் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த அனைவர் விழிகளும் அவளில் குவிந்திருக்க விதவிதமான மெல்லிய உடலசைவுகள் அவையில் பரவின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முடிந்ததும் அமைதி நிலவியது. எவரோ மெல்ல இருமினர். யாரோ ஒருவருடைய கங்கணம் மெல்லக்குலுங்கியது. எவரோ மெல்லியகுரலில் ஏதோ சொன்னார்கள்.

குந்திபோஜன் எழுந்து வணங்கி “அவையினரே, உங்கள் வருகையால் அனைவரும் இந்தச் சிறிய யாதவநாட்டை சிறப்பித்திருக்கிறீர்கள். இங்கே என் அறப்புதல்வி பிருதையின் மணத்தன்னேற்பு நிகழ்வை குலமுறைப்படி நடத்தும்படி எனது போஜர் குலத்தின் மூத்தாரை கோருகிறேன்” என்றார். அவையில் இருந்த மூன்று யாதவ முதியவர்கள் எழுந்து வணங்கினார்கள். போஜன் வணங்கி நிற்க ரிஷபரும் மூன்று துணையமைச்சர்களும் சென்று அவர்களை வணங்கி அவைமுகப்புக்கு இட்டு வந்தனர்.

மூன்று யாதவர்களும் வெண்ணிறப் பருத்தியாடை உடுத்து கழுத்தில் குன்றிமணிமாலைகளும் மஞ்சாடிமாலைகளும் அணிந்திருந்தனர். இடையில் மூன்று சுற்றாக சணல் கயிற்றைச்சுற்றிக்கட்டி தங்கள் குலக்குறியான வளைதடியை கையில் ஏந்தியிருந்தனர். அவர்கள் வந்து அவையை மும்முறை பணிந்து வணங்கினர். அவர்களில் இளையவர் “அவையினரே, ஆநிரை காத்தல் என்பது மானுடர்க்கு கானுறை மாயோன் வகுத்த முதற்பெருந்தொழில். அத்தொழில்செய்யும் ஆயர்களே மண்பயனுறச்செய்யும் முதற்குடிகள். எங்கள் குலத்துதித்த இளவரசியின் மணநிகழ்வு தொன்மையான ஆயர்முறைப்படியே ஆகவேண்டுமென விழைகிறோம்” என்றார்

இரண்டாமவர் “வீரர்களே முன்பெல்லாம் ஏறுதழுவி பெண்கொள்ளும் வழக்கமே இங்கிருந்தது. ஆயர்களும் வில்லெடுக்கத் தொடங்கியபின்னர் அவ்வழக்கம் அரசர்களுக்குரியதாக கொள்ளப்படுவதில்லை. ஆயினும் கன்று ஏற்புச் சடங்குகள் வழியாகவே ஆயர்குலத்து மணம்கோடல் நிகழவேண்டுமென்பதனால் மூன்று போட்டி நிகழ்வுகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. மூன்றில் ஒன்றை வெல்பவரே இவ்வரங்கில் இளவரசியின் மாலைகொள்ளத் தகுதியுள்ளவர் என்று கொள்வோம்” என்றார்.

மூன்றாமவர் “நிகழ்வுகளை எங்கள் மாணவர்கள் இங்கே விளக்கியுரைப்பார்கள்” என்றார். அதன்பின் வெண்குன்றுபோன்ற உடலும், கூரிய இரும்புமுனைகள் பதிக்கப்பட்ட கொம்புகளும் கொண்ட பெரும் எருது ஒன்று மூக்குவளையத்தில் கட்டப்பட்ட கயிற்றால் வழிநடத்தப்பட்டு அவைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் கொழுத்த திமில் இடப்பக்கமாகச் சரிந்து அசைந்தது. கழுத்துக்குக் கீழே தசைமடிப்புகள் அலையலையாக வளைந்து தரை தொடும்படி தொங்கிக்கிடந்தன. எலும்பே தெரியாமல் இறுகிய தசை மூடி மெழுகியிருந்த அதன் உடல் நதிநீர்ப்பரப்பு போல ஆங்காங்கே சிலிர்த்தது. கனத்த குளம்புகள் கல்தரையை உரசும் ஒலி அவை முழுக்க ஒலித்தது. அது நடந்த எடையால் அவைமுற்றம் அதிர்ந்தது.

எருது கொம்பு தாழ்த்தி தரையை முகர்ந்தபின் மூச்சு சீற தலைதூக்கி அவையை நோக்கியது. தசைச்சுருள்கள் மடிந்து சூழ்ந்த அதன் முகத்தில் சேற்றில் பாதி புதைந்த கருங்கல்சில்லு போல விழிகள் ஈரம் மின்ன தெரிந்தன. தேன்கூடு போன்ற மூக்குக்கருமைக்கு அடியே கனத்த தாடையின் நீட்டி நின்ற முள்முடிகளில் வாய்நீர்க்கோழையின் துளிகள் திரண்டு மணியாகி நின்றன. முன்னங்காலைத் தூக்கி ஊன்றி அது உடல் எடையை மாற்றிக்கொண்டது. கண்களின் ஈரத்தைச் சுற்றிப்பறந்த சிறு பூச்சிகளை உதற தலையைக் குலுக்கியது. வாழைப்பூநிற நாக்கை நீட்டி தன் விலாவை தானே நக்கிக்கொண்டது.

மூத்தாரின் மாணவன் சபைஏறி “வீரர்களே, இந்த எருது ஒவ்வொருவர் பீடத்துக்கு அருகிலும் வரும். இருக்கை விட்டெழாமலேயே இதன் கழுத்தில் கட்டுக்கயிறைச் சுற்றிக்கட்டுவதே போட்டியாகும். ஒருமுறை மட்டுமே முயலவேண்டும். கட்டமுடியாதவர்கள் அவைவிட்டு வெளியேறவேண்டும். எவரும் ஆயுதங்களெதையும் பயன்படுத்தலாகாது” என்றான். சேவகர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கட்டுக்கயிற்றைக் தாலத்தில் கொண்டுவந்து நீட்டினர்.

பாண்டு புன்னகையுடன் “முதலில் எருது எங்குள்ளது என நீ எனக்குச் சொல்லவேண்டும் விதுரா” என்றான். விதுரன் “இளவரசே, நாம் அதைக் கட்டும்படி ஆகாது. மதுராபுரியின் இளவரசரே கட்டிவிடுவார். நாம் அடுத்த போட்டியையே சந்திக்கவிருக்கிறோம்” என்றான். பாண்டு நகைத்தபடி “ஆம், அவன் என்ன இருந்தாலும் யாதவன்” என்றான். எருதின் மூக்குவளையம் அகற்றப்பட்டது. ஒருவன் அதை பின்னாலிருந்து ஊக்க அது அமர்ந்திருந்தவர்களின் முன் பக்கம் வழியாக திமில் குலுங்க, விலாத்தசை அதிர நடந்தது.

முதல் யாதவ இளைஞன் கனத்த கரிய உடல் கொண்டிருந்தான். தோலாடையை மார்பின்மேல் போட்டு கல்மணிமாலையும் மரக்குழையும் அணிந்திருந்தான். கூர்ந்த கண்களுடன் கயிற்றை எடுத்து எருதின் கழுத்தை நோக்கிக் கொண்டுசென்றான். எருது அவனை திரும்பிநோக்கியதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் உடலை முன்னால் சரித்து எருதை அணுகியதும் தலையை பக்கவாட்டில் சாய்த்து ஈ ஒன்றை ஓட்டுவது போல மிக எளிதாக கொம்பைத் திருப்பி தலையைத் தூக்கியது. அதன் கொம்பு அவன் விலாவைக்குத்தி விலாவெலும்புக்குள் சென்று சிக்கிக்கொள்ள அதன் தூக்கிய தலையுடன் அவனும் அலறியபடி மேலே எழுந்தான்.

கைகால்களை இழுத்து உதறியபடி அடைத்த குரலில் அலறிக்கொண்டு சமநிலை தவறி அதன் திமிலைப்பற்றிக்கொள்ள கை பதறித் துழாவினான். கையின் பிடி வழுக்க காளையின் முகத்தில் தன் வயிறு உரசிச்சரிய அவன் துடித்த கைகால்களுடன் அதன் முன் விழுந்தான். கீழே கிடந்து அதிர்ந்த அவன் உடலில் இருந்து அதன் உயர்ந்த கொம்பு வரை அவன் குடல் மஞ்சள்கொழுப்பு படிந்த செந்நிற சகதிக்குழாயாக இழுபட்டு அவன் துடிப்பில் அசைந்து வழுக்கி நழுவிச்சரிந்து அவன் மேலேயே விழுந்தது. அவனைச்சுற்றி குருதி கொப்பளித்து கல்தரையில் வழிய அவன் வயிறு செந்நிறமாகத் திறந்து உள்ளே குடல்கள் கொதிக்கும் செங்கூழ் என கொப்பளிப்பது தெரிந்தது.

அவை சிலைவிழிகளுடன் அக்காட்சியை நோக்கி அமர்ந்திருக்க கம்சன் புன்னகையுடன் தன் தொடையில் அடித்துக்கொண்டான். சல்லியன் அரைக்கணம் கம்சனை நோக்கியபின் திரும்பினான். யாதவனின் இருகால்களும் குருதியில் வழுக்கி வழுக்கி இழுபட்டன. தலை பின்னகர்ந்து வாய் திறந்து, நாக்கு பதைபதைக்க, சேற்றுக்குழியின் குமிழிகள் உடையும் ஒலியுடன் துடித்தான். எருது அவனை குனிந்துகூட பாராமல் அவனைத் தாண்டி காலெடுத்துவைத்து அடுத்த யாதவன் முன் வந்து நின்றது.

அவன் உள்ளம்பதற அசையாமல் அமர்ந்திருந்தான். அவன் தாடை இறுகியசைவது தெரிந்தது. சேவகன் பின்னால் தட்ட எருது அடுத்த யாதவன் முன்னால் வந்தது. மூன்று யாதவர்கள் அஞ்சி அமர்ந்திருக்க நான்காமவன் கயிற்றை எடுத்தான். எருதின் உடல் சிலிர்த்தது. அது உலைத்துருத்தி என மூச்சிரைத்தது. அவன் எருதின் கொம்பை நோக்கியபடி ஒரு கையால் கயிற்றை நீட்டினான். மறுகையால் அது கொம்பைச்சரிக்குமென்றால் பிடிக்க ஒருங்கினான். ஆனால் அசையாமல் நின்ற எருது ஒருகணத்தில் முழுமையாகத் திரும்பி அவன் நெஞ்சில் தன் தலையால் நேருக்கு நேராக ஓங்கி முட்டியது.

யாதவன் அலறி பீடத்துடன் பின்னால் விழ அவன் சேவகன் அவனைப்பிடிக்க முன்னகர்ந்தான். அச்சேவகனை குத்தித் தூக்கி தன்பின்னால் சரித்தபின் நாகமெனச் சீறியபடி திமிலசையக் குனிந்து உடைந்த விலாவை கையால்பொத்தியபடி எழுந்து விலகமுயன்ற யாதவனை தன் வேல்நுனிக்கொம்புகளால் குத்தியது எருது. அவன் அலறியபடி உடல் அதிர்ந்து ஒருகையால் தரையை ஓங்கி அறைந்தான். எருது கொலைக்காகப் பழக்கப்பட்டது என விதுரன் உணர்ந்தான். அது வெறியுடன் அவனைக் குத்தி தூக்கிப்போட்டது. அவன் உடலுக்குள் புகுந்த கொம்பை ஆட்டித் துழாவியது. நிமிர்ந்தபோது அதன் வெண்ணிற பெருமுகம் முற்றிலும் செந்நிறமாக மாற கொம்புநுனிகளில் இருந்து நிணம் வழுக்கி முகத்திலும் கழுத்திலும் விழுந்து கீழே சொட்டியது. சீறியபடி அது தலையை அசைத்தது.

கொழுவிய குருதித்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும் முகத்துடன் மேலும் அது நடந்தபோது எந்த யாதவனும் கைநீட்டவில்லை. கம்சன் மீசையை இடக்கையால் நீவியபடி புன்னகையுடன் அது தன்னை நோக்கி வருவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவையே அவனைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என அவன் அறிந்திருந்தான். கீழே நெளிந்த உடல்கள் அமைதியடைந்தன. அவற்றை அரண்மனைச் சேவகரும் அந்த யாதவர்களின் அணுக்கத்தோழர்களும் சேர்ந்து எடுத்து விலக்கினர்.

கம்சனுக்கு முன்னால் இருந்த யாதவன் கைநீட்டுவது போல சற்று அசைய எருது மூச்சு சீறி தோலைச் சிலிர்த்தது. அவன் அசைவிழந்து மூச்சடக்கிக் கொண்டான். சேவகன் தட்ட எருது கம்சனின் முன்னால் வந்து நின்றது. அது வரும்போதே அவன் தன் சால்வையை விலக்கி கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு சிறிய விழிகளால் கூர்ந்து நோக்கிக் காத்திருந்தான். எருது அவனருகே வந்தபோது அவன் அந்தக்கயிற்றை தன் சேவகனிடம் கொடுத்து விட்டான்.

எருது அவன் முன் நின்று முன்னங்காலை மெல்ல தரையில்தட்டி குனிந்து கொம்பை ஆட்டியது. அதன்மேல் குருதி சிறிய குமிழிகளாகவும் கட்டிகளாகவும் மாறி வழிந்த நிலையில் உறையத்தொடங்கியிருந்தது. கம்சன் அதை ஒரு கணம் நோக்கினான். பின்பு நினைத்திருக்காத கணத்தில் அதன் கழுத்தில் ஓங்கி கையால் வெட்டினான். அந்த ஓசையில் அவை திகைத்தது. அடிபட்ட எருது திரும்புவதற்குள் அவன் அதன் வலக்கொம்பை தன் இடக்கையால் பற்றி முழுவல்லமையுடன் இழுத்து வளைத்து வலக்கையால் மீண்டும் அதன் காதுக்குப்பின்பக்கம் ஓங்கி அறைந்தான்.

எருது நிலைகுலைந்தாலும் கொம்பை விடுவித்து அவனை குத்தித்தூக்க முயன்றது. கம்சன் தன் கழுத்துநரம்புகளும் தோள்தசைகளும் தெறிக்க, தாடை இறுகி கடிபட, முழு வல்லமையாலும் அதன் கொம்பை வளைத்து அதன் தலையை நிலம்நோக்கிச் சரித்தான். அது கால்களை முன்னால் நீட்டி வைத்து எழ முயல அவன் தன் இடக்காலால் அதன் கால்களைத் தட்டினான். எருது நிலையழிந்து சரிந்து விழுந்தது. அதன் தலையை தன் இடக்கையால் வளைத்து மடியோடு சேர்த்து இறுக்கியபடி அதன் கழுத்தில் ஓங்கி அறைந்தான் கம்சன். ஒரே இடத்தில் ஐந்துமுறை அவன் அறைந்ததும் எருதின் வாய் திறந்து கனத்த நாக்கு வெளியே வந்தது.

கொம்பைப்பிடித்த கையை விடாமல் எருதின் தலையை உடலுடன் அழுத்திப்பிடித்து வலக்காலால் அதன் முன்காலை அழுத்தி மிதித்து அதன் அடிக்கழுத்தை அடித்துக்கொண்டே இருந்தான். அதன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடங்கி கால்கள் மண்ணை உதைத்து ஓய்வது வரை. அவன் அதை அறைந்ததுமே ஏதோ சொல்ல எழுந்த இளையவரை மூத்தவர் கையசைத்து அடக்கினார். எருதின் வாயிலிருந்து கொழுத்த குருதி வழியத்தொடங்கியது. அதன் உடல் முற்றிலும் அசைவிழந்து விழிகள் மேலேறி வெண்ணிறச் சிப்பிகளாகத் தெரிந்தன.

VENMURASU_EPi_96_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

கம்சன் அந்தக்குருதியைத் தொட்டு தன் மீசையில் தடவி நீவியபின் கையை நீட்ட சேவகன் கட்டுக்கயிற்றைக் கொடுத்தான். அதை எருதின் கழுத்தில் கட்டியபின் அதை காலால் உதைத்துத் தள்ளினான். அதன்குருதியிலேயே வழுக்கி அது அசைந்துவிலகியது. தொங்கிய நீள்நாக்கு அவ்வசைவில் ஆடியது.

“கம்சரே, எந்த யாதவனும் எருதைக் கொல்வதில்லை” என்றார் இளைய குலமூத்தவர் உரக்க. “எங்கள் கண்முன் நம் குலச்சின்னத்தை அவமதித்திருக்கிறீர்கள்.” கம்சன் கோணலான உதடுகளுடன் சிரித்து “தன்னைக்கொல்லவரும் பசுவையும் கொல்லலாமென்பது விதி” என்றான். “ஆனால்…” என அவர் தொடங்கியதும் மூத்தவர் கையமர்த்தி தன் மாணவனிடம் தலையசைத்தார்.

அவன் முன்னால் வந்து வணங்கி அடுத்த போட்டியை அறிவித்தான். சிவந்த நிறமான பசு ஒன்று அவைமுன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. “அவையோரே, இப்பசுவின் கழுத்தில் உள்ள வளையத்தை உடைக்காமல் கழற்றி எடுப்பவர் வென்றார். பிறர் அவை நீங்கலாம். அதற்குரிய நேரம் ஒரு மூச்சு” என்றான் மாணவன். பசு சேவகனால் முதல் ஷத்ரிய மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவன் திகைப்புடன் அந்த இரும்பு வளையத்தைப்பார்த்தான். திரும்பி தன் சேவகனைப்பார்த்தபின் வளையத்தைத் தூக்கி கொம்புவழியாக கழற்ற முயன்றான். கொம்புக்கு மிகக்கீழே இருந்தது அது.

அடுத்த ஷத்ரியன் அந்த வளையத்தை தன் புஜங்களால் வளைத்து கொம்பை நோக்கி இழுக்கமுயன்றான். அவன் தோற்றதுமே பிற அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அந்தவளையம் பசுவின் கொம்புகள் வழியாக வரவே முடியாதென்று. திகைப்புடன் சிலர் தொட்டுப்பார்த்து விலகினார்கள். சிலர் கையையே நீட்டவில்லை. பாண்டு விதுரனைப் பார்த்தான். விதுரன் “அதை சல்லியர் செய்துவிடுவார்” என்றான். பாண்டு “எப்படி?” என்றான். விதுரன் “தெரியவில்லை. ஆனால் செய்துவிடமுடியும் என சல்லியர் நினைப்பதை முகத்தில் காண்கிறேன்” என்றான்.

சல்லியன் முன் பசு கழுத்து வளையத்துடன் வந்து நின்று தலையை ஆட்டியது. அவனையே அவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது. சல்லியன் அந்த வளையத்தை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் அதன் இருபக்கமும் தன் கையை வைத்து அழுத்தி நீள்வட்டமாக்கினான். பசுவின் கழுத்தெலும்பு இறுகும்படி வளையத்தை நீட்டியபின் அதன் நீள்முனையை ஒரு கையால் பற்றி பசுவின் மூக்கை இன்னொரு கையால் பிடித்தான். அதன் வாய்நீரைத் தொட்டு அதன் மூக்குஎலும்பில் நன்றாகப்பூசினான். அவன் என்னசெய்யப்போகிறான் என்று ஷத்ரியர் திகைக்க யாதவகுலமூத்தார் புன்னகை புரிந்தனர்.

சல்லியன் பசுவின் மூக்கையும் தாடையையும் சேர்த்துப்பற்றி ஒரே வீச்சில் அழுத்திப் பின்னால் உந்தி தாடையை கழுத்தோடு முடிந்தவரை ஒட்டி அதே கணம் வளையத்தின் நீள்நுனியை முன்னால் இழுத்து அதற்குள் பசுவின் மூக்கையும் தாடையையும் அழுத்திச்செலுத்தி மேலே தூக்கினான். பசுவின் எச்சில்பரவிய முகஎலும்பு வழியாக இரும்புவளையம் வழுக்கி மேலேறியதும் கொம்பு வழியாக அதை உருவி மேலே தூக்கி எடுத்து அவைக்குக் காட்டினான். பசு வலியுடன் கழுத்தை உதறி காதுகளை அடித்துக்கொண்டது. ஒருகணம் திகைத்தபின் அவை ஆரவாரமிட்டது.

குலமூத்தார் “யாதவர்களில் ஷத்ரியர்களைத் தேடினோம். ஷத்ரியர்களில் யாதவர்களைத் தேடினோம். இனி ஷத்ரியர்களில் அறிஞனைத் தேடுவோம்” என்றார். அவர் கையசைத்ததும் நான்கு பேர் உள்ளே ஓடினர். பின்வாயிலில் இருந்து ஒரு பெரிய இரும்புக்கூண்டு சக்கரங்கள் கொண்ட வண்டிமேல் வைக்கப்பட்டு சேவகர்களால் தள்ளிக் கொண்டுவரப்பட்டது. அதற்குள் ஒரு புலி நிலைகொள்ளாமல் இரும்பு உரசும் ஒலியில் உறுமியபடி வாலைச் சுழற்றிச் சுற்றிவந்தது. வண்டி நின்றதும் சமநிலையிழந்து அமர்ந்து மீண்டும் எழுந்தது. அவையைக் கண்டு அஞ்சி பதுங்கி வாய் திறந்து செந்நாக்கையும் வெண்பற்களையும் காட்டி உறுமியது.

மாணவன் “அவையோரே, இந்த அவைக்குக் கொண்டுவரப்படும் ஏழு இளங்கன்றுகளில் ஒன்றை நீங்கள் இக்கூண்டுக்குள் அனுப்பலாம். ஏழு மூச்சு நேரம் கன்று கூண்டினுள் இருக்கவேண்டும். அதை இப்பசித்தபுலி கொல்லும் என்றால் அதை உள்ளே அனுப்பியவரும் அக்கணமே தன் வாளை தானே பாய்ச்சி உயிர்துறக்கவேண்டும். கன்றை தேர்வுசெய்யாதோர் விலகிக்கொள்ளலாம்” என்றான். விதுரன் “இது என்ன போட்டி?” என்றான். “அந்தப்புலி பசியுடனிருப்பதை வாயைப்பார்த்தாலே அறியமுடிகிறது.”

பாண்டு அந்தப் புலியின் கண்களை உற்று நோக்கினான். “மிகவும் அஞ்சியிருக்கிறது” என்றான். பின்பு தலைதூக்கி பின்னால் நின்றிருந்த விதுரனிடம் “அதை நான் தெரிவுசெய்கிறேன்” என்றான். விதுரன் “நீங்கள்…” என்றதும் அவன் சிரித்தபடி “என் அன்னையின் பாவைப்பேழையில் புலிகளும் கன்றுகளும் ஒன்றாகவே இருக்கும்” என்றான். அவன் கண்களை நோக்கியபின் விதுரன் “ஆம் இளவரசே, அஸ்தினபுரி ஒருபோதும் தோற்றுப் பின்மாறலாகாது” என்றான்.

மறுபக்கம் வெண்ணிறமும் கருநிறமும் செந்நிறமும் கொண்ட ஏழு இளம்பசுக்கன்றுகள் சேவகர்களால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. கன்றுகளைக் கண்டதும் பதுங்கியிருந்த புலி எழுந்து கம்பியருகே வந்து பார்த்தது. மெல்லிய மலரிதழ்போல நெளிந்த விளிம்புகள் கொண்ட நாக்கை நீட்டி கடைவாயை நக்கியபடி முரசுத்தோலை கோலால் நீவியதுபோன்ற ஒலியில் முனகியது. வாலைத்தூக்கியபடி பரபரப்புடன் கூண்டுக்குள் சுற்றி வந்தது. சபையில் இருந்த அனைத்து ஷத்ரியர்களும் திகைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தனர்.

பாண்டு மெல்ல எழுந்து கையசைத்து சேவகனை அழைத்தான். அவற்றில் முற்றிலும் வெண்ணிறமாக நின்ற இளம்கன்று ஒன்றைச் சுட்டி அதை இழுத்துவரச்சொன்னான். அவையெங்கும் வியப்பு உடலசைவின் ஒலியாக வெளிப்பட்டது. கம்சன் முனகியபடி முன்சரிந்து அமர்ந்தான். கன்றை இழுத்துவந்த சேவகனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. பாண்டு எழுந்து சென்று கூண்டின் கதவை மெல்லத்திறந்து கன்றை உள்ளே விடும்படிச் சொன்னான். ஒரு கணம் தயங்கியபின் சேவகன் கன்றைத் தூக்கி கூண்டுக்குள் விட்டான்.

கன்று எதையும் உணராமல் கூண்டுக்குள் நின்றது. கம்பிகளில் உடலை உரசியபடி அது நடந்தபோது புலி பதுங்கிப் பின்னகர்ந்தது. கன்று புலியை ஆர்வத்துடன் பார்த்தபின் புல்லை மெல்வதுபோல தலையை அசைத்தபடி ’ம்பேய்’ என குரலெழுப்பியது. புலி உறுமியபடி உடலை நன்றாகச் சுருட்டி கூண்டின் மூலையில் பதுங்கி அமர்ந்து மீசை சிலிர்க்க வாயை முழுமையாகத் திறந்து ஓசையின்றி தன் வெண்பற்களைக் காட்டியது. கன்று திரும்பி வெளியே நின்ற தன் தோழர்களைப்பார்த்தபின் வாலைத்தூக்கி சிறுநீர் கழித்தது.

புலி கன்றை ஒன்றும் செய்யப்போவதில்லை என்று அவை உணர்ந்ததும் அனைவரும் மெல்ல இருக்கைகளில் சாய்ந்தமர்ந்தனர். சேவகன் கூண்டைத்திறந்து கன்றை வெளியே இழுத்தான். அது வெளியே வரத்தயங்கியதுபோல அசையாமல் சிலகணங்கள் நின்றபின் எம்பிக்குதித்து வெளிவந்தது. கூண்டு மூடப்பட்டதும் புலி மெல்ல எழுந்து வந்து கூண்டுக்கம்பிகள் வழியாக வெளியே நோக்கியது. கண்களை மூடிமூடித் திறந்தபின் வாய் திறந்து உறுமியபடி திரும்பவும் சுற்றிவரத்தொடங்கியது.

விதுரன் “அது ஒரு பூனை. பகலில் அதன் கண்கள் கூசுகின்றன. ஆகவேதான் வெண்ணிறக் கன்றை அனுப்பினீர்கள்” என்றான். பாண்டு சிரித்தபடி “ஆம், எனக்கே கண்கள் கூசிக்கொண்டிருக்கின்றன” என்றபடி பட்டுத்துணியால் கண்களைத் துடைத்துக்கொண்டான். விதுரன் புலியை மீண்டும் பார்த்தான். அதன் கண்களிலிருந்து வழிந்த நீரில் பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. கண்களை மூடிமூடித் திறந்தபடி அது சுற்றிவந்தது. விதுரன் “ஆம், அடர்கானகத்துப்புலி. இத்தனை ஒளியை அது அறிந்திருக்காது” என்றான்.

குலமூத்தார் எழுந்து “அவையினரே, இன்று இளவரசியின் தன்னேற்பு மணநிகழ்வில் மூவர் மட்டுமே பங்கேற்கவியலும்” என்றார். சேவகர் மூன்று இருக்கைகளைக் கொண்டு வந்து அவைநடுவே சிம்மாசனத்துக்கு எதிராகப் போட்டனர். “மதுராபுரியின் இளவரசரும் மாத்ரநாட்டு இளவரசரும் அஸ்தினபுரியின் இளையமன்னரும் அப்பீடங்களில் அமரவேண்டுமென கோருகிறோம்” என்றார் குலமூத்தார். அமைச்சர் மூவர் வந்து மூவரையும் அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தனர்.

“மார்த்திகாவதியின் இளவரசி தன் மணமகனை ஏற்க எழுந்தருள்கிறார்” என்று நிமித்திகன் அறிவித்ததும் மங்கல இசை முழங்கத்தொடங்கியது. இரு சேடியர் ஒரு பெரிய தாலத்தில் இருந்த செந்தாமரைமலர்களால் ஆன மாலையை குந்தியின் கையில் கொடுத்தனர். இருபக்கமும் சேடியர் வர குந்தி கையில் மலர்மாலையுடன் மெல்ல நடந்து வந்தாள். பொற்குடக்கழுத்துபோன்ற அவள் இடைக்குக் கீழே கால்கள் பட்டாடையை அலையிளகச்செய்து அசைந்தன. மேகலையின் பதக்கவரிசைகள் ஒளியுடன் பிரிந்து இயைந்து நெளிந்தன. பொன்னோசையும் மணியோசையும் பட்டோசையும் அவ்வொளியின் ஓசையென எழுந்தன.

அவளிடம் ஓர் ஆண்மைச்சாயலிருந்ததை விதுரன் அறிந்தான். திரண்ட தோள்களிலும் இறுகிய கைகளிலும் வலுவான கழுத்திலும் அது தெரிந்தது. நடந்தபோது அவள் தோள்கள் குழையவில்லை. கையில்தூக்கிய மலர்மாலை அசையவுமில்லை. நெருங்கி வரும்தோறும் அவள் என்னசெய்யப்போகிறாளென விதுரன் உணர்ந்துகொண்டான். அவனுடைய ஒரு கால் மட்டும் மெதுவாக நடுங்கிக்கொண்டிருந்தது. பாண்டு அவளைப்பார்த்தபின் திரும்பி சல்லியனைப் பார்த்தான்.

மூவரையும் நெருங்கிவந்த குந்தி தன் கையிலிருந்த தாமரை மாலையை பாண்டுவின் கழுத்தில் போட்டாள். அவள் நெருங்கியபோது சல்லியனை நோக்கி அனிச்சையாகத் திரும்பியிருந்த பாண்டு ஒரு கணம் கழித்தே என்ன நிகழ்கிறதென உணர்ந்தான். இரு கைகளாலும் மாலையைப் பற்றியபடி அவன் செயலிழந்து அமர்ந்திருக்க அவையெங்கும் வியப்பொலியும் பின்பு விதவிதமான பேச்சொலிகள் கலந்த இரைச்சலும் எழுந்தது.

கம்சன் சிலகணங்கள் என்ன நிகழ்ந்ததென்றே உணராதவன் போல அவையையும் குந்தியையும் மாறி மாறி நோக்கினான். குந்தி மாலையை அணிவித்தபின் பாண்டுவை வணங்கிவிட்டு அவையை வணங்கத் திரும்பியபோது கம்சன் தன் தொடையை ஓங்கி அறைந்தபடி பாய்ந்து எழுந்தான். “என்ன இது? என்ன நடக்கிறது இங்கே?” என்று உடைந்த குரலில் உரக்கக் கூவினான். அவன் உடலுக்கு அக்குரல் மென்மையானதாக இருந்தது. “இது சதி! நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்” என்றான். பதற்றமாக சுற்றி நோக்கியபடி “எங்கே என் படைகள்… இதோ இவளை நான் சிறையெடுத்துச்செல்லப்போகிறேன்… ஆம்!” என்றான்.

சல்லியன் திடமான உரத்த குரலில் “ஷத்ரியர் அவையில் அது நடக்காது கம்சரே. இளவரசி எதை விரும்புகிறாரோ அதுவே இங்கு விதி” என்றான். குந்திபோஜனும் தளபதிகளும் வாட்களை உருவினர். கம்சன் “இவளை கொண்டுபோகமுடியாவிட்டால் கொன்றுவிட்டுச் செல்கிறேன்” என்றபடி தன் வாளை உருவி அதே விரைவில் குந்தியை வெட்ட முயன்றான். ஆனால் அக்கணமே சல்லியன் அவன் வாள்கரத்தை வலக்கையால் பிடித்து இடக்கரத்தால் அவன் தோளை அழுத்தி அவனை செயலற்று நிற்கச்செய்தான். கம்சன் இடக்கையால் தன் கட்டாரியை உருவி சல்லியனை குத்தப்போக சல்லியன் கம்சனை தூக்கிச் சுழற்றி தரையில் அறைந்தான்.

வாள் உலோகச் சிலும்பலுடன் தெறித்துவிலக பேருடல் மண்ணில் அறைந்து அதிர்வொலியெழுப்ப கம்சன் மல்லாந்து விழுந்தான். புரண்டு எழுந்து நின்றபோது அவன் ஆடைகள் கலைந்து தரை நோக்கி நழுவின. காளையின் குருதி செங்கருமையாகப் படிந்த மார்புடனும் முகத்துடனும் வெறியுடன் பற்களைக் கடித்துக்கொண்டு மூச்சிரைத்தான். அதற்குள் அவனைச்சுற்றி குந்திபோஜனின் தளபதிகள் வாட்களுடன் கூடினர். “மறுமுறை எழமுடியாது போகலாம் கம்சரே” என்று சல்லியன் மென் சிரிப்புடன் சொன்னான்.

கம்சன் பற்களைக் கடித்து உறுமியபோது அவன் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவையை சுற்றிநோக்கிய அவன் அவனைநோக்கிச் சிரித்த கண்களையும் பற்களையும்தான் கண்டான். தன் மேலாடையைக்கூட எடுக்காமல் அவையை விட்டு வெளியே ஓடினான். சல்லியன் “இளவரசியின் விருப்பப்படி மணநிகழ்வு முழுமைகொள்ளட்டும் குந்திபோஜரே” என்றான். அவையிலிருந்த யாதவரும் ஷத்ரியரும் ‘ஆம் ஆம்’ என்றனர்.

குந்திபோஜன் சூதர்களை நோக்கித் திரும்ப அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். வெளியே அரண்மனையின் அறிவிப்பு மணி ஒலிக்கத் தொடங்கியது. அதைக்கேட்டு கோட்டைமீதும் காவல்மாடங்களிலும் இருந்த பெருமுரசுகள் ஒலிக்கத்தொடங்கின. நகரமெங்கும் மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி இலைகள்மேல் மழைபோல எழுந்தது. குந்திபோஜன் “அஸ்தினபுரியின் இளையமன்னரை மணமண்டபத்துக்கு அழைக்கிறோம்” என்றார்.

விதுரன் பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். அவை இறந்துகொண்டிருக்கும் பாம்பின் உடல்போல குளிர்ந்து அதிர்ந்து நெளிந்தன. “இளவரசே எதையும் எண்ணாதீர்கள். நீங்கள் மணமேடை ஏறியாகவேண்டும்… விழுந்துவிடக்கூடாது” என்று விதுரன் பாண்டுவின் காதில் சொன்னான். நடுங்கி அதிர்ந்த உதடுகளும் ஆடிக்கொண்டிருக்கும் தலையுமாக பாண்டு “ஆம்… ஆம்” என்றான்.