மாமலர் - 48
48. நில்லாத்துலா
துலாவின் நடுமுள்ளென நடுங்கி நின்றிருக்கும்படியே அறத்தை தெய்வங்கள் அமைத்தன. எனவே தோன்றிய நாள்முதல் தேவரும் அசுரரும் போரிடுவது நின்றதில்லை. எவரும் முற்றிலும் வென்றதுமில்லை, முற்றழிந்ததுமில்லை. அழிந்தாலும் மீண்டு எழும் வல்லமை கொண்டிருந்தது தேவர்கள் கொண்டிருந்த அறம். ஒரு துளி ஆயிரமென கோடியென பெருகும் ஆற்றல் கொண்டிருந்தது அசுரர்களின் மறம். அமுதம் தேவர்களின் உணவு. நஞ்சே அசுரர்களுக்குரியது. அமுதோ நஞ்சின் இளையோள். தேவர்களின் ஆசிரியர் பிரஹஸ்பதி. அவருடைய முதல் மாணவராகிய சுக்ரரோ அசுரர்களுக்கு வழிகாட்டியென்றானார். அறிந்து கடந்தமையின் அமைதி பிரஹஸ்பதியில் நிறைந்திருந்தது. அறிந்து நிறையாத விசையே சுக்ரரை ஆண்டது. அப்போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை.
கசியப பிரஜாபதிக்கு திதியில் பிறந்த அசுரகுடியான தைத்யர்களில் பெரும்புகழ்பெற்ற ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும் பிறந்தனர். ஹிரண்யகசிபுவுக்கு அனுஹ்லாதன், ஹ்லாதன், பிரஹ்லாதன், சம்ஹ்லாதன் என்னும் மைந்தர்கள் பிறந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அசுரகுலம் பெருகிப்பரந்தது. சம்ஹ்லாதனில் ஆயுஸ்மான், சிபி, பாஸ்கலன் என்னும் மைந்தர்கள் பிறந்தனர். பிரஹ்லாதனிலிருந்து விரோசனன் பிறந்தான். விரோசனனின் மைந்தன் மகாபலி. அவன் மைந்தன் பாணன். ஹிரண்யாக்ஷனின் மைந்தர் சம்பரன், சகுனி, த்விமூர்த்தன், சங்கு, அஸ்வன் என்னும் அசுரகுலத் தலைவர்கள்.
பேராற்றல் கொண்ட தைத்யர்களில் ஒருவன் சூரபத்மன். அவனிடமிருந்து பானுகோபன், அக்னிமுகன், வஜ்ரபாகு, ஹிரண்யன் என்னும் மைந்தர்கள் பிறந்தனர். சிம்மவக்த்ரன் தாரகாசுரன் என்னும் பேராற்றல்மிக்க அசுரர்களும் அக்குலத்தில் எழுந்தவர்களே. சிம்மவக்த்ரனின் மைந்தன் மகாசூரன். தைத்யர்கள் நூறுமேனி முளைக்கும் விதைகள். விருத்திரன், நரகன், மகிஷன், ரக்தபீஜன் என அவர்களின் குலமூதாதையர் ஆயிரத்தொருவர். அவர்களின் குலங்களோ பன்னீராயிரம். அவர்களின் குடிகள் பதினெட்டு லட்சம். அவர்களின் எண்ணிக்கை கணம்கோடியென பெருகுவது. பெருகுவதால் அழிவின்மையை அடைந்தவர்கள் திதியின் மைந்தர்.
கசியபருக்கு திதியில் பிறந்த மைந்தனாகிய விருஷபர்வன் இறங்கி கங்கைக்கரையில் மகாதைத்யகம் எனும் நகரை அமைத்தான். அங்கு முடிசூடி அசுரர் குலம் செழிக்க ஆண்டான். அவன் கொடிவழி வந்த நூற்றெட்டாவது விருஷபர்வனின் ஆட்சியில் பாரதப் பெருநிலம் அசுரர்களின் கோலால் முழுதாளப்பட்டது. அவர்களின் சொல் செல்லாத மலையேதும் இமயத்தில் இருக்கவில்லை. கீழைக்கடல்களை அவர்களின் ஆணை ஆண்டது. நாவலந்தீவின் தென்முனையில் அவர்களின் கொடி பறந்தது. மேலை வெம்பாலையில் அனைத்து சாலைகளிலும் அவர்களின் காவல் அமைந்திருந்தது. அவர்களின் வேதமே நெறியென்று அமைந்தது.
மண்ணை வெற்றி கொண்டபின் விண்ணிலும் கொடி நிறுத்த விருஷபர்வன் விழைந்தான். ஒவ்வொருநாளும் அதற்கென வழியெண்ணி தன் அரண்மனையில் நிலையழிந்து உலவினான். அந்நாட்களில் தன் அவைக்கு வந்த நாரதரின் கால்களைப் பணிந்து “விண்ணுலாவியாகிய முனிவரே சொல்லுங்கள், அரசனின் பாதை எது?” என்றான். நாரதர் “அரசன் விதையெனில் முளையாகவேண்டும். செடியெனில் மரமாகவேண்டும். மரமெனில் காடாகவேண்டும். எந்நிலையிலும் வளர்ந்துகொண்டிருப்பதே அவனுக்குரிய நெறி” என்றார்.
“முனிவரே, நான் மண்ணை முழுதாள்கிறேன். இனி நான் செல்ல விண் ஒன்றே உள்ளது” என்றான் விருஷபர்வன். “நான் மண்ணில் அடங்குவேன் என்றால் என்ன ஆகும்?” நாரதர் “போதுமென்று எண்ணும் அரசனின் அரச இயல்பு ஒளிமங்கும். தேங்குவது நதியல்ல, பசியற்றது நெருப்பும் அல்ல” என்றார். “ஆம், நான் விண்ணை வெல்ல விழைகிறேன். இந்திரனின் அரியணையே இனி என் இலக்கு” என்றான் விருஷபர்வன். “சொல்லுங்கள், நான் விண்ணை வெல்லும் வழி எது?”
நாரதர் “உன் விழைவு பிழையல்ல. அதில் நீ வீழ்வதும் அறமே” என்றார். “இன்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே. அங்கு அவர்களை சொல்லளித்து வழிநடத்த மாமுனிவராகிய பிரஹஸ்பதி இருக்கிறார். நிகரான ஒருவர் உங்களுக்கும் அமையும்வரை தேவர்களுடன் நீங்கள் நிகர்நின்று போரிட இயலாது” என்றார். “முனிவரே சொல்லுங்கள், பிரஹஸ்பதிக்கு நிகரான முனிவர் யார்?” என்று விருஷபர்வன் கேட்டான்.
“ஒரு பேரறிஞருக்கு நிகரான பிறிதொரு அறிஞர் அவரது மாணவராகவே இருக்க இயலும்” என்று நாரதர் சொன்னார். “அதை அறியாத அறிஞரில்லை. எனவே தன் அறிதலில் ஒரு பகுதியை ஒருபோதும் அவர் மாணவனுக்கு அளிப்பதில்லை. தனக்கு இறுதித்துளி அறிவு அளிக்கப்படவில்லை என்று அறியாத மாணவனும் இல்லை. தான் அறிந்தவற்றிலிருந்து அவ்வறியாத பகுதியை கற்கும்பொருட்டு கற்பனையையும் அறிவையும் ஆழத்தையும் கூர்தீட்டிச் செலுத்தி தன் ஆசிரியன் அறியாத பிறிதொன்றை அவன் சென்றடைகிறான். ஆசிரியனை மாணவன் கடந்து சென்றாகவேண்டும் என்பது இப்புவி வாழவேண்டுமென்று எண்ணும் பிரம்மத்தின் ஆணை” என்ற நாரதர் “பிரஹஸ்பதியின் மாணவர் சுக்ரர். பிரஹஸ்பதியின் ஆழத்து அமைதியிலிருந்து முளைத்தெழுந்த அனல் அவர்” என்றார்.
விருஷபர்வன் கங்கைக்கரையில் குடிலமைத்து தவம்செய்திருந்த சுக்ரரை சென்று தாள்வணங்கி அசுரர்களின் ஆசிரியராக வந்து அமையும்படி வேண்டினான். “நான் உனக்கு அனைத்து அறிதல்களையும் அளிக்க முடியும், அசுரர் தலைவனே. ஆனால் தேவருக்கு நிகராக உன்னை அமைத்தல் என்னால் இயலாது” என்று சுக்ரர் சொன்னார். “அமுது உண்ட தேவர்கள் அழியாப் பேறு கொண்டவர்கள். அசுரரோ அழிந்து மீளுருவாக்கம் கொள்பவர். சிறு ஒளித்துளி பேரிருளை விலக்குவதுபோல தேவர்களால் அசுரர்கள் அழிக்கப்படுகிறார்கள் என்பதே புடவியின் நெறி” என்றார்.
விருஷபர்வன் “ஆம், அந்த அறியமுடியாத எல்லையால் கட்டுப்படுத்தப்பட்ட பெருங்கடல் நாங்கள். அதை கடக்கும்பொருட்டே தங்கள் காலடிபணிய வந்தோம். தங்களால் அது இயலுமென்று மாமுனிவராகிய நாரதர் சொன்னார்” என்றான். அச்சொல்லால் ஆழத்தில் ஒரு நச்சுத்துளி மகிழ்வுகொள்ள அதை கண்களிலிருந்த ஒளி வெளிக்காட்ட சுக்ரர் “ஆம், எதுவும் என்னால் இயல்வதே. ஆனால் அதை நான் இயற்ற விழையவில்லை. இங்கு எதன்மேல் அனைத்தும் அமைந்துள்ளதோ அதை நான் அழிக்கலாகாது, செல்க!” என்றார். அவரது உறுதியைக் கண்டு ஏமாற்றம்கொண்டு வணங்கி விருஷபர்வன் திரும்பிச்சென்றான்.
மறுநாள் விண்ணில் தேவரும் கந்தர்வரும் யக்ஷரும் கின்னரரும் கிம்புருடரும் கூடிய வேள்வி ஒன்றில் தன் ஆசிரியரைக்கண்டு பணிந்த சுக்ரர் விருஷபர்வன் தன்னிடம் வந்து வணங்கி உதவிகோரியதை சொன்னார். “அழிவின்மை அசுரர்களுக்குரியதல்ல என்பது புடவியின் பெருநெறிகளில் ஒன்று. அதை அவனுக்குணர்த்தி திருப்பி அனுப்பினேன்” என்றார். அப்போது மெல்லிய புன்னகை ஒன்று பிரஹஸ்பதியின் முகத்தில் வந்து மறைந்ததை அவர் கண்டார். ஆழ்புலன் ஒன்று கூர்மைகொள்ள “தாங்கள் எதை எண்ணி உவகை கொண்டீர்கள், ஆசிரியரே?” என்றார்.
தன்னை திரட்டிக்கொண்டு “தேவர்களின் அழிவின்மை அமுதத்தால் அமைகிறது. அசுரர்கள் அதை உண்ணவில்லை” என்றார் பிரஹஸ்பதி. “ஆம், அதை அனைவரும் அறிவோம். தாங்கள் எண்ணி புன்னகைத்தது அதனால் அல்ல” என்று சுக்ரர் சொன்னார். “அதை நான் அறிந்தாகவேண்டும், ஏனென்றால் அப்புன்னகை என்னை நோக்கி தொடுக்கப்பட்டது.” “சஞ்சீவினி என்னும் ஊழ்கநுண்சொல் ஒன்றுள்ளது. தேவர்களின் அழிவின்மையை பிறருக்கும் அளிப்பது அது. அதை எண்ணிக்கொண்டேன்” என்றார் பிரஹஸ்பதி. “தேவர்களின் அழிவின்மை என்பது ஒரு சொல்லின் அழிவின்மை மட்டும்தான்.”
“அதை தாங்கள் அறிவீர்களா?” என்று சுக்ரர் கேட்டார். “இல்லை. அதை முதல் தெய்வங்கள் மூன்றே அறியும். தேவரோ முனிவரோ அதை எய்த இயலாது” என்று பிரஹஸ்பதி சொன்னார். “அப்படியென்றால் அதை நீங்கள் எவ்வண்ணம் அறிந்தீர்கள்?” என்றார் சுக்ரர். “என் ஆசிரியரான அகத்தியர் அதைப்பற்றி சொன்னார். அறியத்தேவையில்லாத அறிவு அது. அதை அறிந்தவன் அறியாமையின் ஆணவத்தை அடையக்கூடும் என்றார்.” சுக்ரர் ஆசிரியர் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தார். பிரஹஸ்பதியின் அப்புன்னகையை அவரால் கடந்துசெல்ல முடியவில்லை.
மீண்டு தன் தவச்சாலை நோக்கி நடக்கையில் அவ்வெண்ணம் பெருகி குவிந்து மேலெழுந்தது. தன்னிடமிருந்து தன் ஆசிரியர் மறைத்துள்ள அறிதலின் உச்சம் அதுவே என்று எண்ணலானார். மாணவன் மிஞ்சிச் செல்லலாகாது என்று எண்ணும் ஆசிரியனின் சிறுமை. ஓர் அறிவின் முடிவு என ஒன்று உண்டு என்றால் அதுவே அவ்வறிவின் மையமும் உயிரும். அதையறியவில்லை என்றால் எதையுமே அறியவில்லை என்றே பொருள்.
மறுநாள் பிரஹஸ்பதியின் குருநிலைக்குச் சென்று அவரது தனியறைக்குள் நுழைந்து நெற்றி மண்பட வணங்கி காலடியில் அமர்ந்து சுக்ரர் கேட்டார் “ஆசிரியரே, தாங்கள் அறிந்தவற்றில் நானறியாது எஞ்சுவதென்ன?” அவர் விழிகளை நோக்கி “நான் அறிந்தவை அனைத்தையும் உனக்களித்துவிட்டேன். நான் அடைந்தவை சில உன்னால் அடையமுடியாதவை” என்றார். சினத்தை அடக்கியபடி “நான் அடைவதற்கரியது எது?” என்றார் சுக்ரர். “அடக்கம், இவ்வினாவை என்னிடம் கேட்கலாகாதென்று நீ அறிவாய். கேட்காமலிருக்க முடியவில்லை உன்னால்.”
தன் சினத்தையே ஆற்றலெனக்கொண்டு அக்கணத்தின் தடையை கடந்துசென்று சுக்ரர் கேட்டார் “சொல்லுங்கள், சஞ்சீவினி எனும் நுண்சொல்லை நீங்கள் அறிவீர்களல்லவா?” பிரஹஸ்பதி புன்னகையுடன் “ஏன் இந்த ஐயம் உனக்கு? அவை நடுவே உரைத்தேனல்லவா? முதல் மூவர் மட்டிலுமே அறிந்த சொல் அது. பிறர் அதை அறிந்தால் இப்புடவியின் நெசவே மாறிப்போகும். ஆக்கத்தாலும் அழிவாலும் ஊடுபாவாக ஓடி அமைந்தது இவ்வெளி. ஒரு முடிச்சு அவிழ்ந்தால் இவையனைத்தும் அழியும்” என்றார். சினத்தை தன்னுள் நிறுத்தி எழுந்து வணங்கி சுக்ரர் வெளியேறினார். செல்லும் வழியில் ஓடிய சிற்றோடை அருகே நின்று ஒரு பிடி நீரள்ளி கிழக்கு நோக்கி நீட்டி தனக்கென ஆணையுறுதி ஒன்றை விடுத்தார். “ஆம், எனக்கு மறுக்கப்பட்ட சஞ்சீவினியை நான் அடைவேன். ஒருபோதும் அதை அடையாமல் அமையமாட்டேன்!”
தன் தவக்குடிலில் சென்றமர்ந்ததுமே பிற அனைத்தையும் ஒதுக்கி தன்னுள் ஒடுங்கி அதை தேடிச்செல்லலானார். உண்மையென ஒன்றுண்டேல் அது இப்புடவியில் எங்கேனும் இருக்கவேண்டும். புடவியில் எங்கேனும் ஒன்றுண்டேல் அது அதன் ஒவ்வொரு துளியிலும் அமைந்தாக வேண்டும். வெளியே ஒன்றுண்டேல் அது உள்ளிலும் அமைந்தாகவேண்டும். உள்ளே அமைந்ததை அறிய உள்நுழைவதொன்றே வழி. தன் உடலென்றும் உள்ளமென்றும் சித்தமென்றும் கனவென்றும் ஆழ்தலென்றும் பெருக்கென்றும் ஆன ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு இதுவல்ல இதுவல்ல என்று கடந்து சென்றார்.
ஒவ்வொன்றும் தன்னை ஒன்று நூறு ஆயிரம் என முடிவிலாது பெருக்கிக்கொண்டிருப்பதை கண்டார். உடலென்பது அவ்வளர்தலே. உள்ளமென்பது அப்பெருக்கே. சித்தமென்பது அத்தொடர்தலே. கனவென்பது அப்பரவுதல். ஆழமென்பது அச்சுழிப்பு. முழுமை என்பது மேலுமொன்றின் முழுமை நோக்கி எழுதல். ஒவ்வொன்றும் தான் பிறிதொன்றாயின. தன்னை நுண்மையாக உருமாற்றின. உருமாறும்பொருட்டு அழிந்தன. அழிந்தமையிலிருந்து எழுந்தன. அழியாத ஒன்றை எங்கும் அவரால் காண முடியவில்லை.
ஆயிரம் அகஆண்டுகளுக்குப்பின் அவர் அறிந்தார், அனைத்தும் மாறும் என்றால் அனைத்தும் இல்லையென்றே பொருள். இவையனைத்தும் இங்கிருப்பதே மாறுதல்களுக்கு அப்பால் மாறாத ஒன்று உள்ளதென்பதற்கு சான்று. பிறந்திருக்கும் மானுடரில் மாறாது கடந்து செல்கின்றன முகங்கள். முளைத்து அழிந்து முகிழ்ப்பவை அனைத்திலும் நிலைத்திருக்கின்றன வடிவங்கள். அழிந்து உருவாகும் அனைத்திலும் அழியாதிருப்பதே அதுவென்று தன்னை காட்டுகிறது. பின்னர் ஒரு கணத்தில் அவர் அதை கண்டுகொண்டார். விழிதிறந்து நிலம் தொட்டு “ஆம்! ஆம்! ஆம்!” என்று மும்முறை சொன்னார். சஞ்சீவினியென்னும் நுண்சொல்லை அவர் அடைந்தார்.
எழுந்தபோது இடைவரை சடை வளர்ந்து மடிமீது தாடி விழுந்து உடல் மெலிந்து விழி குழிந்து பற்கள் உதிர்ந்து பேயுருக்கொண்டிருந்தார். மெல்ல நடந்து வெளிவந்து அவ்வழி சென்ற இடையப் பெண்ணொருத்தியிடம் இளம்பால் இரந்து அவள் குடம் சரித்துக் கொட்டிய அமுதை ஏழுமுறை உண்டு மீண்டார். உயிர்மீண்டதும் மீண்டும் நடந்து தன் ஆசிரியரின் தவக்குடிலை அடைந்தார். வெளியே நின்று “பிரஹஸ்பதி முனிவரை வெளியே வரச்சொல்க! மெய்யுணர்ந்த சுக்ரன் வந்துள்ளேன்” என்றார்.
அவ்விலக்கமும் ஆணையும் பிரஹஸ்பதியின் மாணவர்களை அச்சுறுத்தியது. ஒருவர் சென்று சொல்ல பிரஹஸ்பதி புன்னகையுடன் வெளிவந்தார். “வருக, சுக்ரரே!” என்றார். “உம்மிடம் சொல்பெற நான் வந்த காலம் முடிந்துவிட்டது. நீர் அறிந்த சஞ்சீவினி இன்று எனக்கும் தெரியும். மெய்யறிதலில் நாமிருவரும் அணுவிடை குறையாத நிகர்நிலை கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீர் அறியாததும் நான் அறிந்திருக்கக்கூடும்” என்றார் சுக்ரர். பிரஹஸ்பதி சிரித்து “சஞ்சீவினியை நான் அறியவில்லை. தேவரோ மானுடரோ அதை அறியவும் இயலாது” என்றார்.
“நானறிவேன்” என்று ஓங்கி தன் தொடையில் அறைந்தார் சுக்ரர். “இதோ…” என்று குனிந்து கீழே விழுந்து கிடந்த சருகொன்றைத் தொட்டு அச்சொல்லை சொன்னார். உயிரும் ஒளியும் மென்மையும் மீண்டு சருகு இளந்தளிராயிற்று. “சுட்டுங்கள், இறந்த எதையும்! இக்கணமே அதை உயிர் கொண்டெழச் செய்து காட்டுகிறேன்” என்றார் சுக்ரர். திரும்பி அப்பால் முன்பெங்கோ இறந்து எலும்பெனக் கிடந்த பறவை ஒன்றை நோக்கி அந்நுண்சொல்லை சொன்னார். உயிர்கொண்டு சிறகடித்துப் பறந்து அகன்றது ஒரு காகம்.
திகைத்து சொல்லற்று நின்ற பிரஹஸ்பதியை நோக்கி அத்திகைப்பாலேயே அவர் அந்த ஊழ்கச்சொல்லை அறியார் என உணர்ந்து “சஞ்சீவினியை நானறிவேன். நீர் அறிந்த சஞ்சீவினியால் ஓருயிரையேனும் எழுப்பிக் காட்டும்! இல்லையேல் என் அடிபணிந்து என் மாணவரென்று அமையும்” என்றார் சுக்ரர். பிரஹஸ்பதி “சஞ்சீவினியை நானறியேன் என்று உம்மிடம் சொன்னது உண்மை. ஆம், அறியேன்” என்றார். “எனில் இக்கணமே என் அடிபணிக! இனி நீர் தேவர்களுக்கு ஆசிரியர் அல்ல. அப்பொறுப்பை நானே ஏற்கிறேன்” என்றார். பிரஹஸ்பதி “அடிபணிவதில் எப்போதும் தயங்கியவனல்ல. ஆனால் தேவர்குலத்து நல்லாசிரியரென்பது நான் அமர்ந்திருக்கும் இடமல்ல. தேவர்களால் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது அது. அதை தேவரே மறுக்கவேண்டும். தேவர் தலைவரிடம் சென்று பேசுக!” என்றார் பிரஹஸ்பதி.
“ஆம், அதை செய்கிறேன்” என்று சொல்லி சுக்ரர் திரும்பி நடந்தார். இந்திரனின் அவைக்குள் எவரும் தடுக்காது உள்ளே நுழைந்து, அங்கிருந்த முனிவரும் தேவரும் திகைத்தெழுந்து நிற்க, முகமனோ வாழ்த்தோ உரைக்காது உரத்த குரலில் “இந்திரனே, இது என் ஆணை! உன் முதலாசிரியர் பிரஹஸ்பதியைவிட மேலும் அறிந்தவன் நான். இனி அவரல்ல, நானே உன் குலத்துக்கு ஆசிரியரென்று அமரவிருக்கிறேன்” என்றார். சினத்துடன் ஏதோ சொல்லெடுத்து பின் அதை தனக்குள் அடக்கி தருவித்த புன்னகையுடன் கைகூப்பி இந்திரன் “முனிவரே, அறிந்தவற்றால் அவர் எங்களுக்கு ஆசிரியர் அல்ல. ஆனவற்றால் அங்கு அமர்ந்திருக்கிறார். நீங்கள் அறிந்தவை எவ்வகையில் எங்களுக்கு உதவக்கூடும் என்று சொல்லுங்கள்” என்றான்.
சுக்ரர் “நான் சஞ்சீவினி எனும் நுண்சொல்லை அறிவேன். இறந்தவரை உயிர்ப்பிப்பேன்” என்றார். இந்திரன் மெல்ல நகைத்து “அதனால் எங்களுக்கென்ன பயன்? நாங்கள் இறப்பதில்லையே?” என்றான். சினம் கொண்டு உடல் நடுங்க “நானறிந்த இறுதி மெய்மை இது” என்றார் சுக்ரர். “ஆம், ஆனால் அது எங்கள் அன்றாட இயல்பு. சுக்ரரே, எழுவது அரசனின் இயல்பு. அவனருகே நின்று அவ்வெழுச்சியை நிகர்செய்வதே ஆசிரியனின் பொறுப்பு. பொன்றா பொலியா நிகர்நிலையே ஆசிரியனின் மெய்யென கொள்ளப்படும். நீர் அடைந்த எதுவும் அதை உமக்கு அளிக்கவில்லை. இங்கல்ல எவ்வரசிலும் அமைச்சனென ஆசிரியனென அமையும் தகுதி உமக்கில்லை. சென்று வருக!” என்றான் இந்திரன்.
எழுந்த சினத்தால் கைகால்கள் பதற நிலைகொள்ள முடியாமல் தழலென நின்று ஆடியவராக சுக்ரர் கூவினார் “ஆம், செல்கிறேன். என்னை வருந்தியேற்று அமரவைக்க தைத்யர்களின் ஆசிரியபீடம் காத்துள்ளது. இங்கு சொன்ன இச்சொற்களின் மெய்ப்பொருள் என்னவென்று இன்னும் சில நாட்களில் அறிவாய்.” இந்திரன் “நீர் ஆணவம்கொண்டிருக்கிறீர். அழிவீர்!” என்றான். “பார்ப்போம்” என்று சொன்ன சுக்ரர் திரும்பி நடந்து மண்ணிறங்கி மகாதைத்யகத்தின் வாயிலில் வந்து நின்றார். அவரை வழிமறித்த அசுரனை நோக்கி “உனது அரசனிடம் சென்று சொல்! கோட்டைக்கு வெளியேவந்து என் தாள் பணிந்தால் என் வலக்காலை அவன் தலைமேல் வைக்க சித்தமாக இருக்கிறேன் என்று” என்றார்.
திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கி வீரர்கள் மறுசொல்லெடுப்பதற்குள் முதிய அசுரனொருவன் “இதோ சொல்கிறேன்” என்று சொல்லி புரவியிலேறி அரண்மனை நோக்கி சென்றான். சற்று நேரத்திலேயே தேரில் விரைந்து வந்த விருஷபர்வன் புழுதி படிந்த உடலைத் தட்டியபடி பாய்ந்திறங்கி ஓடிவந்து அவ்விரைவிலேயே முகம் மண்ணில்பட எண் உறுப்புகளும் பொருந்த சுக்ரரின் கால்களில் தன் தலையை வைத்தான். வலக்காலை தூக்கி அவன் தலைமேல் வைத்து “உன் குலத்திற்கு இறப்பின்மையை அளிக்கிறேன், அசுரகுலத்தரசே” என்றார் சுக்ரர்.
சுக்ரர் விருஷபர்வனின் அமைச்சராக ஆன செய்தியை அறிந்தபோதும்கூட அதன் நிகழ்பொருள் என்னவென்று இந்திரன் உணரவில்லை. “ஆயிரம் தைத்யர்குலங்களை கண்டிருக்கிறோம். பல்லாயிரம் முறை அவர்களுடன் போரிட்டிருக்கிறோம். நிலமென ஒன்று எஞ்சவேண்டுமென்று எண்ணும் பிரம்மம் எங்கோ கோல் கைக்கொண்டு அரியணை அமர்ந்திருக்கும்வரை கடல் கரைகடக்க முடியாதென்றறிக! அவர்கள் விரும்புவதை இயற்றட்டும்” என்று தன் அவையில் அமர்ந்து ஏளனமாக சொன்னான்.
சுக்ரர் விருஷபர்வனின் அசுரகுருவாக வந்த செய்தியை மண்ணெங்கும் பரவிக்கிடந்த தைத்யர்கள் அறிந்தனர். குடிகளாகவும் குலங்களாகவும் திரண்டு பாடியும் ஆடியும் மகிழ்வு கொண்டாடி அவர்கள் மகாதைத்யகத்தை வந்தடைந்தனர். கார்காலத் தொடக்கத்தில் முகில்கணங்கள் விண் நிறைப்பதுபோல அசுரப்படை பெருகியது. அவர்களின் போர்முரசின் ஓசை இடியென அமராவதியில் ஒலித்தது. “மீண்டும் போருக்கெழுகிறார்கள். காடு தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டு அழிந்தாலொழிய புதுமுளைகள் முளைக்க இயலாதென்று அறிந்திருக்கிறேன். அவர்கள் திரளட்டும், நாம் படையுடன் கிளம்பலாம்” என்றான் இந்திரன். தேவர்கள் நகைத்தனர்.
அமராவதியின் போர்முரசு ஒலித்தபோது அமுதுண்டு காமம் கொண்டாடிக் கொண்டிருந்த தேவர்கள் தங்கள் படைக்கலங்களுடன் திரண்டனர். அவர்களுக்கு முன்னால் வியோமயானத்தில் மின்படை ஏந்தி அமர்ந்திருந்த இந்திரன் “செல்க!” என ஆணையிட்டதும் பாற்கடல் அலைஎழுந்ததுபோல் தேவர் படை போருக்குக் கிளம்பியது. விண்சரிவில் இரு பெருக்குகளும் விரைந்து வந்து ஒன்றையொன்று சந்தித்தன. இரவும்பகலும் பொருதி அந்திச்செம்மையென குருதி பெருகலாயிற்று.
போரென்பது பெருமுயக்கம். ஒன்று பிறிதை அறியும் பித்து. ஒன்று பிறிதை ஊடுருவும் உவகை. ஒன்றென்றிருத்தல். இரண்டென்று ஆழம் தவித்தல். ஒன்றென்றாக்கும் ஒல்லாப்பெருஞ்சிறை உடைபடும் திளைப்பு. இரண்டென்றாகி ஒன்று பிறிதை நோக்கும் திகைப்பு. பெருகுவதும் அழிவதுமென திகழும் மெய்மை. கொள்வதும் கொடுப்பதுமென இனிய வெறுமை. மெய்மையென மறுபெயர் சூடிய இன்மை. தேவர் படை அசுரர்களை கொன்று வீழ்த்தி கடந்தது. விண்ணேறி வந்த அசுரர்கள் காட்டெரி அணைந்தபின் கரித்துகள் மழையென உதிர்வதுபோல இறந்து மண்ணை நோக்கி பொழிந்தனர்.
மகாதைத்யகத்தில் சஞ்சீவினியெனும் ஊழ்க நுண்சொல்லை உரைத்து தன் கமண்டலத்து நீரை அமுதென ஆக்கிய சுக்ரர் அதை அங்கிருந்த அக்ஷயம் என்னும் மாபெரும் தடாகத்தில் ஊற்றினார். “இது அமுது. இறந்த ஒவ்வொருவர் மீதும் இதை வீசுக! இது அவர்களை எழுப்பும்” என்றார். அசுரர்படைகள் அத்தடாகத்து நீரை தோல்குடுவைகளிலும் பெருங்கலங்களிலுமாக அள்ளிக்கொண்டு சென்று இறந்து உதிர்ந்தவர்களின்மேல் தெளித்தனர். அந்நீர் தொட்டதுமே துயிலில் விழித்தவர்கள்போல உடல் சிலிர்த்து கண் விழித்து எழுந்த அசுரர்கள் எங்கிருக்கிறோமென உணர்ந்து மறுகணமே பெருஞ்சினம் கொண்டு போர்க்குரல் எழுப்பியபடி பாய்ந்து படைக்கலங்களை எடுத்தனர்.
பெருகிச் சூழ்ந்த கருமுகில்கள் பெய்து நிறைந்த பின்னும் ஒழியாமல் கற்பாறையோ என இருப்பதைப்போல் அசுரப்படை குன்றாமலிருப்பதை இந்திரன் உணர்ந்தான். மேலும் மேலுமென விரைவுகொண்டு அவர்களை வென்று கொன்று அகற்ற கீழ்த்திசையிலிருந்து பெருகி வந்து நிறைந்துகொண்டிருந்தனர். முடிவுறாதது அப்போர் என்றுணர்ந்ததும் “இப்படியே இவ்வண்ணமே இப்போர் தொடரட்டும். நான் செல்வழி சூழ்ந்து வருகிறேன்” என ஆணையிட்டுவிட்டு அமராவதிக்கு திரும்பினான்.
பிரஹஸ்பதியை சென்று கண்டு பணிந்து “என்ன நிகழ்கிறது, ஆசிரியரே? போர் மாபெரும் வீண்செயலென்று ஆகிவிட்டிருக்கிறது. நீரால் அணையா நெருப்பு புடவியை அழிக்கும் என்று தெய்வங்களுக்கு தெரியாதா?” என்றான். “ஆம், தெய்வங்கள் மட்டுமே அறிந்த சஞ்சீவினி எனும் நுண்சொல் அவர் கையில் உள்ளது. இறந்தவர்கள் எழுந்து வருகிறார்கள். எனவே கொல்வதில் பொருளொன்றுமே இல்லை” என்றார் பிரஹஸ்பதி. “நாம் என்ன செய்வது? போரிட்டாகவேண்டும், அது நம் கடன்” என்று இந்திரன் சொன்னான்.
“நம் விசையும் அவர்கள் அளிக்கும் எதிர்விசையும் நிகர்நிலை கொள்ளும் ஓர் எல்லையில் இப்போர் நிலைக்காது நடந்துகொண்டிருக்கட்டும். காலமில்லை என்பது நமது ஆற்றல். பெருகுவது அவர்களின் வழி. இப்படியே இது செல்லட்டும். அதற்குள் ஒரு மாற்று கண்டுபிடிப்போம்” என்றார் பிரஹஸ்பதி. இந்திரன் “ஆனால் நம்மிடமுள்ளது காக்கும் எண்ணம். அவர்கள் கொண்டுள்ளது வெல்லும் விசை. அணுவிடை பெரியது அது. ஆகவே இறுதியில் அதுவே வெல்லும்” என்றான். “தெய்வங்கள் அருள்வர்” என்றார் ஆசிரியர்.
நாளும் பொழுதுமற்ற தேவவெளியில் அப்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. இந்திரனிடம் மீண்டு வந்த பிரஹஸ்பதி “சஞ்சீவினி நுண்சொல்லை சுக்ரரிடமிருந்து கற்காமல் இப்போர் முடியாது. நம்மில் ஒருவர் சென்று அதைக் கற்று மீளவேண்டும். அச்சொல்லைக்கொண்டு அசுரர்களால் கொல்லப்பட்டு மூச்சுலகில் வாழும் அத்தனை மானுடரையும் எழுப்புவோம். கணந்தோறும் பெருகும் அவர்களைக் கொண்டு அசுரர்களுக்கு அழியா எல்லையொன்றை வகுப்போம். அது ஒன்றே வழி” என்றார். “எப்படி அந்நுண்சொல்லை அவரிடமிருந்து கற்பது? அவருக்கு அணுக்கமான மாணவர்கள் என்று எவருமில்லை. அப்படியே ஆனாலும் இறுதி மெய்மையென அதை அவர் அளிப்பார் என்று சொல்ல முடியாது” என்றான் இந்திரன்.
“என் மைந்தன் கசனை அனுப்புகிறேன். அவன் இளையோன், அழகன். இன்சொல் கொண்டவன், இசையறிந்தவன். அவனால் சுக்ரரை உளம் கவரமுடியும்” என்றார். நம்பிக்கையின்றி நோக்கிய இந்திரனிடம் “அவன் அவருக்கு மைந்தனைப்போல. என் மாணாக்கனாக இங்கு இருக்கையில் அவனை தன் தோளில் தூக்கி வளர்த்தவர் சுக்ரர். அவருள் வாழும் தந்தை அவனை நோக்கி கனியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவன் வென்று வருவான்” என்றார் பிரஹஸ்பதி. “ஆம், அதை நோக்குவோம். நமக்குப் பிறிதொரு வழியில்லை” என்று இந்திரன் சொன்னான்.