மாமலர் - 34
34. கைகள் அறிவது
கைகளில் மைந்தனை ஏந்தியபடி அகத்தளத்திற்குச் சென்ற விபுலையும் வித்யுதையும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தனர். உயிரற்றவைபோல ஆகிவிட்டிருந்த தன் கைகளில் இருந்து மைந்தன் நழுவி விழுந்துவிடுவான் என்று வித்யுதை அஞ்சினாள். தங்கள் அறைக்குச் சென்று வாயிலை மூடியதுமே கையிலிருந்த குழவியை மெத்தைமேல் வீசினாள் வித்யுதை. அருவருத்ததுபோல் கைகளை உதறியபடி சுவரோடு சாய்ந்து நின்று மூச்சிரைத்தாள். திகைப்புடன் அதை நோக்கியபடி ஏதோ சொல்ல நாவெடுத்து அவளே எண்ணியிராத சொற்களை சொன்னாள் “இது ஏன் இத்தனை எடை கொண்டிருக்கிறது?”
“இந்திரனை வெல்லும் மைந்தன் இவன் என்கிறார்கள். ஆகவே அகவைக்கு மேல் வளர்ச்சி கொண்டிருக்கிறான்” என்றாள் விபுலை. சொற்கள் அவர்களின் உறைந்த உள்ளத்தை அசைவுகொள்ளச் செய்தன. “இவனை நம் கைகளால் கொல்ல வேண்டுமென்று அரசரின் ஆணை” என்றாள் வித்யுதை. விபுலை வெறித்த விழிகளுடன் நோக்க “கொன்று கறிசமைத்து அவர் உண்ணக்கொடுக்கவேண்டும் என்பது…” என்றாள். விபுலை மெல்ல முனகினாள். “பிள்ளைக்கறி…” என்றாள் வித்யுதை. “நம் குலங்களில் முன்பு அவ்வழக்கம் இருந்துள்ளது” என விபுலை முனகினாள். “என்ன?” என்றாள் வித்யுதை புருவம் சுளிக்க.
“முதன்மை எதிரியை கொன்றுவிட்டால் அவன் ஊனை உண்பது.” வித்யுதை “உண்மையாகவா?” என்றாள். “நான் கதைகளில் கேட்டதுதான். எதிரி நம்மையே எண்ணிக்கொண்டிருந்தவன். ஆகவே நம்முடைய ஒரு பகுதியென்றே ஆனவன். அவனைக் கொல்கையில் நம்மில் ஒரு பகுதியும் இறக்கிறது. அந்த இழப்பிலிருந்து நாம் மீள்வது அரிது. ஆகவேதான் முதன்மை எதிரி இல்லாமலானதுமே எதிர்த்து வாழ்ந்தவர்கள் தனிமைகொண்டு நோயுற்று அழிகிறார்கள். ஆகவே எதிரியை உண்டு தன் உடலென்று ஆக்கிக்கொள்கிறார்கள்.” வித்யுதை பெருமூச்சுவிட்டாள். பின்னர் “அப்படியென்றால் இவன் இனிமேல் அவருடன் இருப்பான்” என்றாள். “இவன் இந்திரனை வெல்வது அவர் உடலில் ஏறித்தான் போலும்” என்றாள் விபுலை. அந்தத் தருணம்பொருந்தா நகையாடலுக்கு வித்யுதையும் சிரித்துவிட்டாள்.
அவர்கள் இயல்பாகி பீடங்களில் அமர்ந்து பேசத்தொடங்கினர். “இவனைக் கொல்ல என்னால் இயலுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்றாள் வித்யுதை. “அரசர் ஆணையை நாம் மீறலாகாது. கொன்றே ஆகவேண்டும்” என்றாள் விபுலை. “ஆம்” என பெருமூச்சின் ஒலியில் வித்யுதை சொன்னாள். இருவரும் மீண்டும் திரளாத சொற்கள் உள்ளே குமிழிகளென அலைவுற கைகளை நெரித்தபடியும் உதடுகளை கடித்தபடியும் அமர்ந்திருந்தனர். வித்யுதையின் முகம் பெருவலி கொண்டதுபோல் இருப்பதை விபுலை கண்டாள். தன் முகமும் அவ்வாறுதான் இருக்கிறதுபோலும் என எண்ணிக்கொண்டாள்.
“இல்லை” என்று உரத்த குரலில் வித்யுதை கூவினாள். “என்னால் முடியாது. நான் இதைச் செய்யப்போவதில்லை. மாறாக குறுவாளால் என் கழுத்தை அறுத்துக்கொள்ளப் போகிறேன்.” விபுலை “அதை நீ செய்தாலும் அரசரின் ஆணையை மீறியவளாவாய். அது நீ நம் குலத்து மூதன்னையர் முன் நாகச்சுருளைத் தொட்டு அளித்த சொல்லுறுதியை மீறுவதுதான்” என்றாள். வித்யுதை மூச்செறிந்து முகம் வியர்க்க “கண்ணை மூடிக்கொண்டு அக்கத்தியை இதன் நெஞ்சில் ஆழ்த்தினால் என்ன?” என்றாள். “ஆம், அதுவே நாம் செய்யவேண்டியது” என்றாள் விபுலை. வித்யுதை தன் இடையில் இருந்த குறுவாளை எடுத்து தரையில் வீசி “இதோ கிடக்கிறது. உன்னால் முடியுமென்றால் சென்று குத்தி அதை கொல்!” என்றாள்.
இருவருக்கும் நடுவே உலோக ஒலியுடன் வந்து விழுந்து ஒளிர்ந்தது கத்தி. அதன் உறையிலிருந்து சற்றே வெளிவந்து நா காட்டியது. அறியாத எவரோ அதை பாதி உருவிவிட்டதுபோல. விபுலை அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து கண்ணுக்குத் தெரியாத காலொன்றால் உதைக்கப்பட்டவள்போல் பதறி பின்னகர்ந்தாள். “எளிதல்ல” என்றாள். “நம் இருவராலும் எண்ணவும் இயலாது” என்று வித்யுதை சொன்னாள். “ஆம்” என்றாள் விபுலை. குழந்தையை நோக்கிக்கொண்டிருந்த வித்யுதை “ஏன் அதை அரசர் நம்மிடம் சொன்னார்? நாம் அதைச் செய்வோம் என ஏன் அவர் எண்ணினார்?” என்றாள். “அவர் செல்லும் பாதைக்கு நம்மை இழுத்துச் செல்கிறார். நீயும் நானும் அவருடன் சென்றுகொண்டிருக்கவில்லை என்று அவர் அறிவார்” என்றாள் விபுலை.
வித்யுதை “நாம் இருவரும் அன்னையர். நம் வயிறுதிறந்து மைந்தரை பெறாதிருக்கலாம். பெறாத மைந்தர் பல்லாயிரவரை முலையூட்டி மடி நிறைத்து தோள்சூடி வளர்த்திருக்கிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் தனிமையில் அம்மைந்தரின் சிரிப்புகளும் விழியொளியும் நிறைந்திருக்கின்றன. நம்மையன்றி பிறர் அதை அறிய முடியாது” என்றாள். “என் தலை வெடிக்கிறது. நினைவறிந்த நாள் முதல் கொழுநனுக்கு எதிராக ஒரு சொல் எண்ணலாகாது என்று பயிற்றுவிக்கப்பட்டவள் நான். இதைச் செய்யவில்லையென்றால் நான் செய்வதற்கு ஒன்றே உள்ளது. மீண்டும் சென்று அவர் காலில் விழுந்து என்னைக் கொல்லும்படி கோரவேண்டும்” என்றாள் விபுலை.
“அவர் உன்னை கொல்வார்” என்றாள் வித்யுதை. “பின் அப்பழிக்காக மேலும் உளம் இருண்டு நகைப்பார். நீ இருள்வெளியில் உழல்வாய்.” விபுலை விழிதூக்கி “வேண்டாம். அப்பழியையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டாம். மைந்தனை அளித்து அவர் குலம்வாழச் செய்யாத இழிமகளாகிய நான் அவருக்களிப்பது இப்பழியொன்றே என்றாக வேண்டாம்” என்றாள். அச்சொல்லைக் கேட்டதும் வித்யுதையும் உளம்விதும்பிவிட்டாள். மீண்டும் நெடுநேரம் அவர்கள் தங்களுக்குள் ஆழ்ந்திருந்தனர். மூச்சொலிக்க விழித்த வித்யுதை “என்ன செய்வது?” என்றபின் “இதுவரை அனைத்திலும் நாம் செய்வது ஒன்றே. முதுசேடி மேகலையிடம் கேட்போம்” என்றாள்.
“ஆம்” என்று சொல்லி கதவைத் திறந்து வெளியே சென்று அங்கே முன்னரே வந்து பணிந்து நின்றிருந்த முதுசேடியை உள்ளே வரச்சொன்னாள். அவர்களின் சொற்களை எல்லாம் அவள் கேட்டிருந்தாள் என மேகலையின் விழிகள் காட்டின. அவள் வந்து கட்டிலில் கிடந்த மைந்தனைப் பார்த்து “கவர்ந்து வரப்பட்ட குருநகரியின் இளவரசன் இவன் அல்லவா?” என்றாள். “ஆம், இவனைக் கொல்லும்படி எங்களுக்கு அரசரின் ஆணை. அதை நாங்கள் மீற முடியாது என நீ அறிவாய். கொல்லும் துணிவும் எங்களுக்கு வரவில்லை” என்றாள் வித்யுதை. “ஆம். உங்களால் முடியாது, அரசி” என்றாள் மேகலை. “நாங்கள் என்ன செய்வது?” என்றாள் விபுலை. “அரசர்கள் கொலை செய்ய வேண்டுமென்பதில்லை. அவர்கள் ஆணையிட்டாலே போதும், அது அவர்கள் செய்ததாகவே பொருள்படும். இக்குழவியைக் கொல்லும்படி எவருக்கேனும் ஆணையிடுங்கள். உங்கள் கணவரின் ஆணையை நிறைவேற்றியவர்களாவீர்கள்” என்றாள் மேகலை.
இருவரும் தங்களைக் கட்டியிருந்த சரடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவர்கள்போல் முகம் மலர்ந்தனர். “ஆம், அது நெறியென்றால் அதை செய்வோம்” என்றாள் வித்யுதை. “எவரிடம் ஆணையிடுவது?” என்றாள் விபுலை. “தங்கள் சேடி நான். எனக்கு ஆணையிடுங்கள். தங்களின் பொருட்டு இக்குழவியை நான் கொல்கிறேன்” என்றாள். “நன்று, அதை செய்” என்றாள் வித்யுதை. “ஆம்” என்றாள் விபுலை. “உன்னால் முடியுமா?” மேகலை “நான் பழிகொள்ளப்போவதில்லை, ஆகவே தயங்கமாட்டேன். அரசப்பணியில் அறப்பொறுப்பு ஏவலர்க்கில்லை” என்றாள். “நன்று, அது நிகழ்க!” என்று வித்யுதை சொன்னாள்.
மேகலை குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அவளுக்குப்பின் மெல்ல நடந்து சென்று அவள் விழிமறைவதைப் பார்த்தபின் நீள்மூச்சுவிட்டு உடல் தளர்ந்தாள் விபுலை. வித்யுதை கதவை மீண்டும் தாழிட்டாள். கால்கள் குளிர்ந்து வலுவிழக்க கைகளால் பீடத்தைப்பற்றியபடி சென்று மஞ்சத்தில் அமர்ந்த விபுலை “உண்மையிலேயே அவளால் கொல்ல முடியுமா?” என்றாள். வித்யுதை “அது அவள் பணி. கொல்லவில்லை என்றால் அவள் பணிமுறை பிறழ்ந்தவள். நாம் ஆணையிட்டுவிட்டோம். ஆகவே நம் கடன் முடிந்தது. அதற்குப்பின் நாம் எண்ண வேண்டியதில்லை” என்றாள். “அந்தப் பழி நம்மைச் சூழும்” என்றாள் விபுலை. “ஆம், அதை நாம் சுமக்கவேண்டும். அதுவே அரசரின் ஆணை” என்றாள் வித்யுதை.
“அரசர் கேட்டால் என்ன சொல்வது?” என்றாள் விபுலை. “மைந்தனை கொன்றுவிட்டோம் என்று சொல்வோம். அவ்வாணையை இடும்போதே நாம் அதை செய்துவிட்டோம் என்றுதான் பொருள்” என்றாள் வித்யுதை. இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டனர். “நான் சற்று படுக்க விரும்புகிறேன்” என்றபடி அதே மஞ்சத்திலேயே வித்யுதை படுத்துக்கொண்டாள். விபுலை கால்களை நீட்டிக்கொண்டு “நீ உணவருந்தி வரலாம்” என்றாள். “என்னால் இயலாது” என்றாள் வித்யுதை. விபுலை “ஆம், இன்றிரவு என்னால் துயிலவும் முடியுமென்று தோன்றவில்லை” என்றாள். இருவரும் நீள்மூச்சுகள் விட்டுக்கொண்டனர்.
நெடுநேரத்திற்குப் பின் விபுலை “நீ உன் சொற்களால் அம்மைந்தனை கொல்லும்படி ஆணையிடவில்லையே?” என்றாள். “ஆம், அதை செய் என்றே சொன்னேன். கொலை என்று நான் சொல்லவில்லை. அச்சொல் என் நாவுக்கு பேரெடை” என்றாள் வித்யுதை. “நானும் வெறுமனே ஆமென்றே சொன்னேன்” என்றாள் விபுலை. வித்யுதை “நம்மால் சொல்லமுடியாது” என்றாள். விபுலை “அரைப்பழியே உனக்கு வரும், அதில் கால்பழியே எனக்கு, அல்லவா?” என்றாள். “நாம் ஏன் இதை பேசவேண்டும்?” என்று வித்யுதை சொன்னாள். “இதை சொல்லிச் சொல்லி நாம் பெருக்கிக்கொள்ள வேண்டியதில்லை. இக்கணம் இதை மறந்துவிடுவோம் என்று முடிவெடுப்போம்.”
“ஆம்” என்றாள் விபுலை. இருவரும் விழிகளை மூடி படுத்திருந்தனர். மீண்டும் நெடுநேரத்திற்குப் பின் விபுலை “அழகிய மைந்தன்! அவனில் பிற மைந்தரிடமில்லாத ஒன்று இருந்தது” என்றாள். “ஆம், அவன் எளிதில் இறக்கக்கூடியவன் அல்ல” என்றாள் வித்யுதை. விபுலை ஒருக்களித்து கைகளை நீட்டி அவளைத் தொட்டு “உண்மையாகவா? அவன் இறக்கப்போவதில்லையா?” என்றாள். “நீயே எண்ணிப்பார். இந்திரனை வெல்வான் என்று நிமித்திகர் குறியுரைத்த மைந்தன் அவன். இவ்வாறு ஒரு எளிய சேடியின் கையால் உயிர் துறக்கும் ஊழ் கொண்டவன் அல்ல.” விபுலை பரபரப்புடன் “அப்படியென்றால் அவன் உயிர் பிழைத்திருப்பானா?” என்றாள்.
“நாம் அதை ஒருபோதும் அறிய முயலக்கூடாது. நாம் ஆணையிட்டுவிட்டோம். நம் கடன் முடிந்தது” என்றாள் வித்யுதை. “ஆம்” என்றாள் விபுலை. மீண்டும் இருவரும் அமைதியாயினர். பின்னர் விபுலை மெல்ல விசும்பும் ஒலி கேட்டது. வித்யுதை விழிதிருப்பி நோக்க “பெண்ணென்று படைத்து கருவறை அமைக்காத வீண்தெய்வங்கள்…” என்றாள். வித்யுதை கலங்கிய விழிகளுடன் நோக்கியிருந்தாள். “நம் வயிறு திறந்திருந்தால் இந்த ஆணையை முகம் நோக்கி சொல்லியிருப்பாரா அரசர்? பிள்ளையில்லாதவள் என்றால் எப்பழிக்கும் அஞ்சாள் என எண்ணுகிறார்கள் அல்லவா?” என்றாள் விபுலை. “நம்மைச் சூழ்ந்த ஒவ்வொருவராலும் நாம் நாள்தோறும் தீச்சொல்லிடப்படுகிறோம், தோழி” என்றாள் வித்யுதை.
அன்று பகல் முழுக்க அவர்கள் அவ்வறையில் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாமலேயே அமர்ந்திருந்தனர். உச்சிப்பொழுது அணைந்ததும் அறைக்கு வந்த மேகலை “தங்கள் ஆணை நிறைவேற்றப்பட்டுவிட்டது, அரசியரே. மைந்தனைக் கொன்று ஊன் சமைக்கப்பட்டு சித்தமாக உள்ளது” என்றாள். “அரசரிடம் சொல்!” என்றாள் வித்யுதை. மேகலை தலைவணங்கி வெளியே சென்றாள். இருவரும் மீண்டும் அமைதிக்கு திரும்பினர். “அது குழவியின் ஊன் அல்ல” என்றாள் வித்யுதை. “ஒருவேளை அவ்வாறு இருந்தால்?” என்று விபுலை கேட்டாள். “இருக்காது…” என்றாள் வித்யுதை. “ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒரு பங்கு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது அல்லவா?” என்று விபுலை கேட்டாள். “ஊழுக்கு அவ்வாய்ப்பை அளிப்போம்” என்று வித்யுதை சொன்னாள்.
சற்றுநேரத்தில் அவர்களுக்கு அரசனிடமிருந்து அழைப்பு வந்தது. இருவரும் சென்று அவன் மஞ்சத்தின் அருகே நின்றனர். “என் ஆணை நிறைவேற்றப்பட்டுவிட்டதா?” என்று ஹுண்டன் கேட்டான். “ஆம் அரசே, நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஊனுணவு சித்தமாக உள்ளது” என்றாள் வித்யுதை. “என் உடல் தொட்டு ஆணையிடுங்கள்” என்றான் ஹுண்டன். இருவரும் அவன் உடலைத் தொட்டபடி “தங்கள் ஆணை எங்களால் நிறைவேற்றப்பட்டது” என்றார்கள். முகம் மலர்ந்த அவன் “கொண்டுவருக!” என்றான்.
அவர்கள் வெளியே சென்றபோது வெள்ளிக்கலங்களில் ஊனுணவு வெம்மை பறக்க ஒருங்கியிருக்க மேகலையும் ஏழு சேடியரும் காத்து நின்றனர். “இந்த ஊன் அந்த மைந்தனுடையதா?” என்றாள் வித்யுதை. “இல்லை, இருக்க வாய்ப்பில்லை” என்று விபுலை சொன்னாள். “ஒரு வாய்ப்பு உள்ளது. கடலில் கைப்பிடி என” என்றாள் வித்யுதை. அவ்வெண்ணமே அவர்களின் முகங்களை கோணலாக்கி கண்களில் ஈரம் படரச்செய்தது. நடுங்கும் கைகளுடன் அவர்கள் பரிமாறிய ஊனுணவை ஹுண்டன் அள்ளி உண்டான். ஒரு கை எடுத்ததும் நிமிர்ந்து அவர்களின் கண்களை நோக்கினான். வெடித்து நகைத்துக்கொண்டு “ஆம், இது அவன் ஊனே” என்றபடி உண்டான்.
“நன்று, என்னால் தயக்கமில்லாது உண்ணமுடிகிறது. முற்றிருளை அடைந்துவிட்டேன். இனி ஒளியின் அழைப்பு அளிக்கும் இடர்கள் இல்லை” என்றபின் கற்தொடையில் அறைந்து வெறிசிவந்த கண்களுடன் நகைத்தான். “இனி இருள் நிறைந்த ஏழுலகங்களில் உங்கள் இருவரின் தோள்களையும் பற்றியபடி என்னால் நடக்க முடியும்” என்றான். நகைத்து நகைத்து அவன் விழிகளில் இருந்து நீர் வழியத்தொடங்கியது.
மேகலை இளமைந்தனை தனக்கு அணுக்கமான ஓர் ஒற்றனிடம் அளித்து காட்டில் எங்கேனும் கொண்டு விட்டுவிடச் சொன்னாள். “காட்டிலா? விலங்குகளுக்கு உணவாகவா?” என்றான் அவன். “அவன் அவ்வாறு இறக்கமாட்டான். அவனுக்குப் பின்னால் ஊழின் பணியாட்கள் தொடர்கிறார்கள்” என்றாள் மேகலை. ஒற்றன் அக்குழவியை கொண்டுசென்று காட்டுக்குள் ஒரு முதுபலவின் பொந்தில் வைத்துவிட்டு மீண்டான். நாகநஞ்சின் வீச்சு குறைந்ததும் விழித்துக்கொண்ட நகுஷன் பசிகொண்டு வீரிட்டு அலறத்தொடங்கினான்.
அவ்வழுகையைக் கேட்டது காட்டில் வாழ்ந்த குரங்குக்குலம் ஒன்று. அதன் மூதன்னை எச்சரிக்கையுடன் அருகே வந்து மைந்தனை நோக்கியது. பின்னர் அருகே வந்து அவனை எடுத்து முலைகளுடன் அணைத்துக்கொண்டது. மைந்தன் அவனே முலைதேடி உறிஞ்சி உண்ணத்தொடங்கினான். இன்னொரு அன்னைக்குரங்கு அருகே வந்து “எனக்கும்…” என்றது. ஏழு அன்னையரின் பாலையும் ஆண்குரங்குகள் கொண்டுவந்து அளித்த கனிகளையும் தேனடையையும் உறிஞ்சிக் குடித்தபின் அவன் பசியடங்கி அவர்களை நோக்கி சிரித்தான். “நீ எங்களுடன் இரு” என்றாள் மூதன்னை.
குரங்குகளுடன் குரங்கு என அவன் காட்டில் வாழ்ந்தான். மரங்களுக்குமேல் தாவவும் கனிதேர்ந்து உண்ணவும் கிளைகளிலேயே உறங்கவும் கற்றுக்கொண்டான். அவனை காட்டில் சந்தித்த குரங்குக்குலத்தில் ஒரு குரங்கு “முன்பு எங்கள் குலத்துடன் ஒருவன் இதைப்போல வாழ்ந்தான்” என்றது. “அவன் பின்னர் காட்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்து மட்கி மண்ணில் மறைந்தான்.” குரங்குகளுடன் செல்கையில் அவன் காட்டுக்குள் அமைந்த சோலைசூழ் சிறுகுடில் ஒன்றை கண்டான். “அங்கு ஓர் அழகிய இளம்பெண் வாழ்கிறாள். எங்கள் தந்தையர் காலம் முதலே அங்கிருக்கிறாள். அந்த மலைப்பாறைபோலவே அவளும். மாறுவதே இல்லை” என்றது முதுகுரங்கு.
அவன் அச்சோலையை அணுகி மரக்கிளையில் ஒளிந்து அமர்ந்து அவளை நோக்கினான். அவள் ஒரு மலர்மரத்தடியில் தனியாக அமர்ந்து தனக்குள் சிரித்துக்கொண்டு மலர்மொக்குகளைக் கொண்டு நாற்களமாடிக்கொண்டிருந்தாள். அவள் பற்களின் ஒளியை அவன் விடாய் அகலா உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான். உள்ளே சென்று அவளிடம் பேசவேண்டுமென விழைந்தான். “அவர்கள் மானுடர். நம் மொழி அவர்களுக்கு புரிவதில்லை. அவர்கள் போடும் ஓசை நமக்கும் பயனற்றது” என்றாள் குரங்கன்னை. “அவள் அழகி” என்றான் நகுஷன். “ஆம், உன் விழிகளுக்கு அவள்தான் அழகியெனத் தெரிவாள். நம் குலத்தில் நீ மணம் கொள்ளமாட்டாய்” என்றாள் குரங்கன்னை.
அன்னையின் ஆணைப்படி மறுநாள் மூன்று குரங்குகள் காட்டுக்குள் ஊடுருவிச்சென்றன. அங்கே ஒரு தவக்குடிலில் முனிவர் ஒருவர் மாணவர்களுக்கு சொல்புகட்டுவதைக் கண்டபின் திரும்பிவந்து அன்னையிடம் இடமுரைத்தன. அன்னை நகுஷனிடம் வந்து “உன்னை இங்குள்ள முனிவர்குடிலுக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளோம், செல்க!” என்றாள். “நானா? நான் எதற்காக அங்கே செல்லவேண்டும்?” என்றான் நகுஷன் திகைத்து. “நீ விழைபவள் மானுடப்பெண். அவள் உன்னை விழையவேண்டும் என்றால் நீ அவள் சொல் பழகவேண்டும். அவளைப்போல் ஆடையணிந்து அணிபுனைந்து அவள் உலகில் நுழையவேண்டும்” என்றாள் அன்னை. “இல்லை, நான் விழையவில்லை” என அவன் அன்னையை தழுவிக்கொண்டான். “நீ சென்றாகவேண்டும்… இது என் ஆணை!” என்ற அன்னை அவன் தழுவலை விடுவித்து விலகிச்சென்றாள்.
குரங்குகள் நகுஷனைக் கொண்டுவந்து அந்த குருநிலையின் வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றன. உள்ளே அப்போது மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். உணவைக் கண்டதும் நகுஷன் பாய்ந்து சென்று பிற மாணவர்களை உந்தியும் பற்களைக்காட்டிச் சீறியும் நகங்களால் கீறியும் விரட்டிவிட்டு அள்ளி வெறியுடன் உண்ணலானான். மாணவர்களின் குரல்கேட்டு குடிலில் இருந்து வெளியே வந்த வசிட்டர் அவனைக் கண்டதும் முதலில் திகைத்தார். அப்பால் நோக்கிநின்றிருந்த குரங்குகளைக் கண்டதும் புரிந்துகொண்டு அவனருகே வந்தார். அவனிடம் குரங்கு மொழியில் “நீ யார்?” என்றார். “நான் மனிதமொழியை கற்கவேண்டும் என என் அன்னை சொன்னாள்… அதோ அவள்” என்று அவன் சொன்னான்.
வசிட்டர் அவனை தன் கல்விநிலையில் சேர்த்துக்கொண்டார். அவனுக்கு மானுடச் சொல் பயிற்றுவித்தார். முதலில் குரங்கன் என அவனை வெறுத்த பிற மாணவர்கள் அவன் கற்றுக்கொண்ட விரைவைக்கண்டு திகைப்படைந்தனர். பன்னிரு நாட்களில் அவன் மானுடமொழி பேசலானான். ஒரு மாதத்தில் நூல் நவிலத் தொடங்கினான். அவன் கைத்திறனும் விழிக்கூர்மையும் கண்டு இயல்பால் அவன் ஒரு ஷத்ரியன் என வசிட்டர் முடிவெடுத்தார். அவனுக்கு வேலும் வாளும் வில்லும் கற்பிக்க தன் மாணவர்களில் ஷத்ரியர்களாகிய இருவரை ஏற்படுத்தினார். “அவன் கற்றுக்கொள்ளவில்லை, வெறுமனே நினைவுகூர்கிறான். நாங்கள் அறிந்தவைக்கு ஒருபடி மேல் என்றே எப்போதும் சென்று நிற்கிறான்” என்றனர் அவர்கள்.
வசிட்ட கல்விநிலையின் அத்தனை மாணவர்களும் அவனுக்கு அணுக்கர்களாயினர். அவர்களை ஒன்றெனத் திரட்டவும் மேல்கீழ் வகுக்கவும் அவனால் எளிதில் இயன்றது. ஆணையிடும் குரலை அவன் குருதியிலேயே கொண்டிருந்தான். வானில் குரங்குகளும் மண்ணில் மாணவர்களுமாக அவன் ஒரு சிறுபடையை வைத்திருக்கிறான் என்றனர் குருநிலையின் ஆசிரியர்கள். “அவன் படைநடத்தி நிலம்வென்று முடிசூடுவான், ஐயமே இல்லை. ஈரிலையே சொல்லிவிடும், விதை ஏதென்று” என்றார் வசிட்டர்.
பாஞ்சாலத்து அரசன் தன் அமைச்சருடன் வந்து வசிட்டருக்கு குருவடி பணிவுச் சடங்கு முடித்து திரும்பிச்சென்ற மறுநாள் ஊர்ச்சந்தைக்கு பொருள்வாங்கச் சென்ற குருநிலையின் மாணவர்களைத் தொடர்ந்து வழிநோக்கி வந்த ஒரு கொள்ளையர் கூட்டம் கொலைப்படைக்கருவிகளுடன் காட்டுக்குள் ஊடுருவி வசிட்டகுருநிலை மேல் தாக்குதல் நடத்தியது. குரங்குகளும் குருநிலை மாணவர்களுமாக அவர்களைத் தோற்கடித்து சிறைப்பிடித்து கைபிணைத்துக்கட்டி இழுத்துச்சென்று சந்தை வணிகர்களுக்கு அடிமைகளாக விற்று அச்செல்வத்தை சாலைபேணும் அறநிலைகளுக்கு அளித்துவிட்டு திரும்பிவந்தனர்.
ஆயினும் நகுஷன் தனித்தவனாகவும் இருந்தான். நண்பர்களுடனும் குரங்குகளுடனும் ஆடிமகிழ்ந்து களைத்து அமர்கையில் அள்ளி விலக்கப்பட்ட தனிமை அவன்மேல் வந்து படியும். அதை அவர்களும் உணர்ந்திருந்தனர் என்பதனால் அப்போது ஓசையின்றி விலகிச்செல்ல வேண்டுமென்றும் அறிந்திருந்தார்கள். அத்தனிமையை அவனே கலைத்து மீண்டு எழும்போது புன்னகையுடன் அருகிருக்கும் குரங்கிடமோ மானுடனிடமோ “நன்று, நான் இங்கிருக்கிறேன்” என்பான்.
அதையும் கடந்த ஆழ்ந்த தனிமை அவனில் அமைகையில் கிளம்பிச்சென்று காட்டில் அமைந்த அந்த சோலைக்குடிலின் எல்லைக்கு அப்பால் நின்றிருக்கும் மாபெரும் சாலமரத்தின் இலைத்தழைப்புக்குள் அமர்ந்து அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் கன்னியை நோக்கிக்கொண்டிருப்பான். இளமைந்தனாக அவன் காணத்தொடங்கியபோது இருந்ததுபோலவே அவள் இருந்தாள். ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாகப் பிறந்தெழுவதுபோல. “ஒவ்வொருநாளும் மலர்கள் மலர்ந்து மாலையில் உதிர்வதைக் கண்டபின்னரும் எப்படி அவள் மாறாமலிருக்கிறாள்?” என்று அவன் வசிட்டரிடம் கேட்டான். “ஒவ்வொரு மலரும் வாடாமலிருக்கும் அருள்கொண்டே வருகின்றன. ஏதோ வடிவில் இவ்வுலகு அதைத் தொடுகிறது. அக்கணமே அவை காலத்தால் பற்றப்படுகின்றன” என்றார் வசிட்டர்.
ஒவ்வொருமுறையும் அங்கு சென்று முழுநாளும் நோக்கியிருந்தபின்பும் அவன் ஆசிரியரிடம் திரும்பாமல் காட்டின் எல்லையில் இருந்த ஒரு பெரிய மரப்பொந்துக்கு சென்றான். பெரும்பன்றிபோல பலநூறு சிறுமுலைகள் தொங்க குறுங்கிளை விரித்து நின்ற அப்பலாமரத்தின் பொந்துக்குள் சிறுவன் ஒருவன் படுக்குமளவே இடமிருந்தது. அங்கே இலைகளைத் திரட்டி அடுக்கி மெத்தை செய்து வைத்திருந்தான். மலைப்பாம்புபோல அவன் அதற்குள் சுருண்டு இறுகிப்படுத்து கண்களை மூடிக்கொள்வான். ஓரிருநாட்கள்கூட உணவும் நீருமின்றி உறக்கமும் விழிப்புமின்றி அவன் அங்கே கிடப்பதுண்டு. அவன் அங்கே கிடப்பதை அவன் நண்பர்களும் குரங்குகளும் அறிவர் என்பதனால் எவரும் அவனை தேடுவதில்லை. பின்னர் எழுந்து காய்ச்சல் படர்ந்த விழிகளுடன் திரும்பிச்செல்வான். செல்லும்வழியில் உள்ள சுனையில் இறங்கி மூழ்கி நீராடி எழும்போது மீண்டுவந்திருப்பான்.
அங்கே படுத்துக்கொண்டால் மட்டும் அவனுக்கு விந்தையான கனவுகள் எழுந்தன. பேருவகையில் வாய்விரிந்து பற்கள் மின்ன கண்கள் துறுக்கும் ஒரு முகம் அண்மையில் எனத் தெரிந்தது. சிரிப்பு கலந்த குரல். வலுவான பெரிய கைகள் அவனைத் தூக்கி சுழற்றுகின்றன. மென்சேக்கையில் படர்ந்த உடல்வெம்மையும் வியர்வை மணமும். மயிர்படர்ந்த மார்புக்குரியது அந்த மணம். பிறிதொன்று முதுமை மணம்கொண்ட முலைமென்தசை. காதில் மட்டுமே ஒலிக்கும் அவள் குரல். சாளரங்களின் ஒளி வெள்ளிப்பட்டைகளாக விழுந்துகிடக்கும் அரண்மனை இடைநாழி. சிலம்பொலிக்கும் கால்கள். உலைந்து நெளியும் ஆடைநுனிகள். பெண்குரல்கள், சிரிப்புகள்.
பிறகொரு படுக்கை. அதில் உடலுறைந்துகிடக்கும் பேருருவனின் கரிய முகம். அவன் மீசையின் நாகவால் நெளிவு. இரு பெண்கள். இருவரும் அவனை நோக்கி பேசிக்கொண்டிருந்தனர். அழுது தேறி மீண்டும் பேசினர். ஒருத்தி குறுவாளை எடுத்தபோது அவன் நெஞ்சு அதிர்ந்தது. அவள் அதை வீசிய ஒலியை அவன் மணியோசை என கேட்டான். அவனை ஒருத்தி கொண்டுசெல்கிறாள். அவன் காதில் “இந்திரனை வெல்வாயா? இந்திரனையேவா?” என அவள் கேட்டாள். அடுமனையின் எரிதழல். அவன் ஒரு வெள்ளாட்டை பார்த்தான். இளமையானது. அதன் சுண்ணக்கல் போன்ற கண்கள். அது அவனை குனிந்து முகர்ந்தது. பெருமூச்சு அவன்மேல் பட்டது. “சென்றுவருக!” என்றது. அவன் அதை நோக்கிக்கொண்டிருந்தான். “இப்படித்தான் எப்போதும். அந்தத் துலா இரக்கமற்றது.”
அவன் கைகால்களை உதைத்து மெல்ல நெளிந்தான். “நஞ்சு நெகிழ்கிறது, விரைவில்.” எவர் குரல் அது? அவனை கைகள் தூக்கியபோது அந்த வெள்ளாட்டின் ஓசையை கேட்டான். அதை எவரோ பிடிக்கிறார்கள். பின்னர் துருத்திமூச்சு என ஓர் ஒலி. குமிழிவெடிக்கும் ஒலி. குருதிமணம். அல்லது முலைப்பால் மணம். அவனுக்கு குளிரத்தொடங்கியது. அவன்மேல் எறும்புகள் ஊர்ந்தன. அவன் அழத்தொடங்கினான். அந்த வெள்ளாடு இறங்கி வந்தது. குனிந்து அவனை நோக்கியது. “நானேதான்” என்றது. அவன் அதை நோக்கி கைநீட்டினான். அது அவனை அள்ளி முலைகளில் சேர்த்துக்கொண்டது. ஆட்டின் மொழியில் “அழாதே” என்றது. அக்குருதியின் மணம். அவன் அதை ஆவலுடன் அள்ளிக்கவ்வி சுவைக்கலானான்.
அவன் ஓசைகேட்டு விழித்தபோது மூங்கில்பாடையில் ஓர் உடலுடன் எண்மர் அந்த மரத்தடி நோக்கி வந்தனர். முன்னால் ஒருவன் சங்கு ஊதியபடி நடந்தான். இருவர் பறையொலிக்க தொடர்ந்தனர். பிறர் தலைகுனிந்து நடந்தனர். பாடை சுமந்தவர்கள் அதை அந்த மரத்தடியில் வைத்தனர். பாடையில் இருந்த உடலில் கண்கள் அசைவதை அவன் கண்டான். “உயிர் எஞ்சியிருக்கிறது” என்று ஒருவன் சொன்னான். முதியவர் ஒருவர் “அவர் இறுதிநினைவில் இட்ட ஆணை. மைந்தனாக உன்னை அது ஆள்கிறது. பிறிதேதும் நீ செய்வதற்கில்லை” என்றார். இன்னொருவன் “நாம் என்ன செய்வது?” என்றான். “இறந்துவிட்டாரென்றே கொண்டு அனைத்துச் சடங்குகளையும் செய்து ஊர்மீள்வோம். இது இருக்கப்பிண்டம் என்னும் தொல்சடங்கு. முன்னரும் பலமுறை நம் குடியில் இது நிகழ்ந்துள்ளது” என்றார் முதியவர்.
அவர்கள் அந்த உடலில் வாய்க்கரிசி இட்டு, காலடியில் மலர்சொரிந்து சுற்றிவந்து வணங்கினர். மைந்தர்கள் இருவரும் தோள்குலுங்க அழ பிறர் அவர்களை அணைத்து ஆறுதல்சொல்லி நடத்திச்சென்றனர். தெற்குநோக்கி மும்முறை சங்கை முழக்கியபின் அவர்கள் திரும்பிச்சென்றனர். மைந்தன் ஒருவன் திரும்பி நோக்கி கைநீட்டி அழுதான். முதியவர் “திரும்பிநோக்கலாகாது” என அவனை கைபற்றி தோள்தள்ளி கொண்டுசென்றார். செல்லும் வழியில் ஒருவன் கால்தளர்ந்து விழப்போனான். இருவர் அவனை பற்றிக்கொண்டனர். அவர்கள் காட்டைவிட்டு அகன்றதும் மீண்டும் மும்முறை சங்கு முழங்கியது.
நகுஷன் இறங்கி கீழே வந்து எச்சரிக்கையுடன் அருகே சென்று குனிந்து அந்த உடலை நோக்கினான். அதன் மூச்சு அவ்வப்போதுமட்டும் எழுந்தது. விழிகள் இமைக்குள் உருண்டுகொண்டே இருந்தன. அவன் அவ்வுடலை தொட்டு உலுக்கினான். மெல்லிய முனகலுடன் வாய் திறந்து உள்நாக்கு தவளைவாய் என தவித்தது. அவன் ஓடிச்சென்று இலைகோட்டி சுனைநீர் அள்ளி வந்து அசைந்த வாயில் விட்டான். விடாயணையும் தண்மையை உணர்ந்த தலை சற்று மேலெழுந்தது. நீரை துழாவித்துழாவி உண்டது வாய். விழிகள் தொடப்பட்ட புழு என அசைந்து அசைந்து பின்பு விரிசலிட்டன. அவன் உருவை நிழலென அறிந்து திடுக்கிட்டு திறந்தன.
“யார்?” என்றார் அவர். “என் பெயர் கானிகன்… இங்கே வசிட்டர்குருநிலையின் மாணவன்” என்றான் நகுஷன். அவருடைய பழுத்துச்சிவந்த விழிகள் அவனை நோக்கி தவித்தன. பின் நோக்கு நிலைக்க நிலம் வளைந்து அவரை மேலே உந்தியதுபோல உடல் எழுந்தது. கைகள் மேலெழுந்து அவன் கைகளை தொட்டன. “இளவரசே!” என்று காற்றென அவர் கூவினார். மூச்சும் சொல்லும் ஒன்றாக பீரிட்டுத் தெறித்தன. “நீங்கள் குருநகரியின் அரசர் ஆயுஸின் மைந்தர். உங்கள் பெயர் நகுஷன்.” எஞ்சிய ஆற்றலும் அழிய மெல்ல மண்ணில் படிந்து கைகள் தளர்ந்தன. இமைகள் எடைகொண்டு அழுந்தின. வாய் நிலைத்தது. மூச்சு எழவில்லை என்பதை சற்றுநேரம் கழித்து அவன் உணர்ந்தான்.