மாமலர் - 33

33. பெருந்துயர் சாளரங்கள்

எட்டாண்டுகாலம் ஆயுஸ் அவ்வரண்மனையின் சாளரங்களினூடாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மைந்தன் மீண்டு வரும் பாதையை பார்க்கிறான் என்று முதலில் அரண்மனையில் பேசிக்கொண்டனர். பின்னர் வருங்காலம் அவன் கண்களில் தெரிகிறது போலும் என்றனர். அவ்வாறு அமர்ந்திருக்கும் அரசனைப்பற்றிய செய்திகள் மக்கள் நாவில் பெருகின. சூதர் கதைகளாக மாறின. ஒவ்வொரு நாளும் மூதாதை தெய்வங்கள் வந்து அரசனிடம் பேசிச்செல்வதாக சொன்னார்கள். இருளில் தனித்து விழிகள் மட்டும் மின்னித் தெரிய அமர்ந்திருக்கும் அரசனைச் சூழ்ந்து நிழல் உருவங்கள் அசைவதைக் கண்டதாக ஏவலர் கதை வளர்த்தனர்.

ஓரிரு ஆண்டுகளுக்குள் அக்கதைகளாலேயே அவன் மறைக்கப்பட்டான். பின்னர் அக்கதைகள் வழியாகவே அவர்கள் அவனை அறிந்தனர். அணுக்கச்சேடியர் நால்வரன்றி எவரும் அவனை எண்ணாதாயினர். அரசனை முலைகொடுத்து வளர்த்த முதுசெவிலி அவனை மீண்டும் அவள் கையில் தவழ்ந்த மழலை என அடைந்தாள். அவள் மார்பிலும் கைகளிலும் விழிநோக்கா பைதல் என அவன் வாழ்ந்தான். ஆண்டுக்கொருமுறை அரசன் கோல் சூடி அரியணை அமரும் நிகழ்வுகளில் மட்டுமே அவனை குடிகள் நினைவு கூர்ந்தனர். ஒழிந்த அரியணையில் அரசனின் மணிமுடியையும் கோலையும் வைத்து முடிபூசெய்கை, கோல்நிலைச் சடங்கு, அடிகாணிக்கை போன்றவற்றை முடித்து அவை கூட்டி அவ்வாண்டும் அனைத்து முடிவுகளை எடுக்கும் பொறுப்பை அமைச்சர் சுதர்மனுக்கு அளித்தனர்.

நாளடைவில் ஒவ்வொன்றும் அதன் ஒழுக்கை தானே அடைகின்றது. நதிப்பெருக்கில் வீசப்பட்ட பொருட்கள் பெருகுதிசைக்கு முகம் திருப்பி, ஒன்றோடொன்று முட்டிமோதி தங்கள் ஒழுகுவடிவை தாங்களே அமைத்துக்கொள்வதுபோல. அன்றாடம் என்னும் பெருக்கு. அரிதையும் பெரிதையும் எளிதுக்கும் சிறிதுக்கும் வேறுபாடில்லாமலாக்கி தன்னுள் அடக்க அதனால் இயலும். சென்றதையும் வருவதையும் அக்கணம் என்று உருமாற்றகூடிய மாயம்  அது. அன்றாடத்தில் அனைத்தும் பயன்பாட்டுப் பொருள் மட்டுமே கொள்கின்றன. செயல்பாட்டு வடிவம் மட்டும் பூண்கின்றன. ஆகவே அனைத்தும் தங்கள் உட்பொருள் அழிகின்றன. நிலைவடிவு கரைகின்றன.

உட்பொருளும் நிலைவடிவும் அழிந்த ஒன்று இல்லை என்றாகிறது. அன்றாடத்தில் அன்றாடம் அன்றி பிறிதொன்றில்லை. அதை அறியும் உள்ளத்தின் தன்னிலை அன்றி பிறர் எவரும் இல்லை. அன்றாடத்திற்கு அப்பால் உண்மையில் ஏதேனும் உள்ளதா? அது அன்றாடத்தின் எளிமைகண்டு அகம்கசிந்த உள்ளம் விழைவது மட்டும்தானா? வெறும் எண்ணம் மட்டுமா? ஈவிரக்கமற்றது, இடைவெளியின்றி நிறைவது, எதிரீடற்றது, இறைவடிவமோ என்று மயங்கச்செய்வது. அன்றாடத்தின் பெருக்கில் முற்றிலும் மூழ்கி மறைந்து காலத்துளி ஒன்றாக மாறிப்போனான் ஆயுஸ்.

எட்டாண்டுகளுக்குப் பின்பு ஒருநாள் அவனை காலையில் நீராட்டி உணவூட்டுவதற்காக அவன் இரவெலாம் அமர்ந்திருந்த சாளரத்தை நோக்கி சென்ற முதுசெவிலி அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டாள். அணுகிச் சென்று தொட்டபோது அது வெம்மை கொண்டிருந்தது. எப்போதும் இறந்த உடலென அது குளிர்ந்து உலர்ந்திருக்கும். துணுக்குற்று மீண்டும் தொட்டபோது உள்ளிருக்கும் அனலை உணர்ந்தாள். “அரசே! அரசே!” என அழைத்தபோது எப்போதும்போல அவன் குரலறியவில்லை. அவனை கையிலேந்தி நீராட்டறைக்கு கொண்டுசெல்வதற்குள்ளாகவே அவ்வெம்மையால் அவள் கை கொதிக்கலாயிற்று. நீராட்டாமல் வெந்நீரால் உடல் துடைத்து திரும்ப மஞ்சத்தில் கொண்டு படுக்க வைத்தபின் அவள் ஓடிச்சென்று மருத்துவரிடம் சொன்னாள். அரசனின் செவிலியன்னையாகிய அந்த முதுமகள் மட்டுமே பதறி அழுதுகொண்டிருந்தாள். மருத்துவருக்கும் அமைச்சருக்கும் அரண்மனையில் பிற எவருக்கும் பதற்றமோ விரைவோ இருக்கவில்லை.

சேற்றுக்குள் மண்புழு நெளியும் அதிர்வை மேலே தொட்டறிவதுபோன்றது அவன் நாடி நோக்குவது என மருத்துவர் ஒவ்வொருமுறையும் உணர்வதுண்டு. அது கையில் அமைந்து உளம்காட்டும் மாயம்தானா என்றே எண்ணம் குழம்பும். அன்று நாடி அதிர்ந்து புரண்டுகொண்டிருந்தது. ஊர்த்துவம் எழுந்துள்ளது என்றே நாடி மீண்டும் மீண்டும் காட்டியது. கையை மெல்ல மஞ்சத்தில் வைத்துவிட்டு ஏறிட்டு நோக்கிய மருத்துவர் “கடும் சுரம். கவண்சரடென இழுபட்டுள்ளன நரம்புகள், உயிரை தெறிக்கவிட விழைகின்றன. இக்காய்ச்சலை உடல் தாங்குவது அரிது” என்றார்.

“என்ன சொல்கிறீர், மருத்துவரே? காய்ச்சல் என்பது நற்குறி அல்லவா? உடல்தளர்ந்தவர் காய்ச்சலில் எழுந்ததுண்டு அல்லவா?” என கேட்டபடி அவர்களின் பின்னால் சென்றாள் முதுசேடி. “ஆம், அதையே எதிர்நோக்குகிறேன்” என்றார் மருத்துவர். அவள் திரும்பி ஓடுவதைக் கண்டபின் “அன்னையரின் உள்ளம்போல விந்தை பிறிதேது? எதையும் நற்குறியென்றே அவர்களால் காணமுடியும்” என்றார் முதிய மருத்துவர். “முலையூட்டியவள். அவளால் தன் முலைகளில் இருந்து விடுபடவே முடியாது” என்றான் அவர் மாணவன்.

அரசன் அங்கிருக்கிறான் என்பதை அச்செய்தியினூடாகவே அறிந்தது அரண்மனை. அவன் இறக்கக்கூடுமென்ற எண்ணமே அச்செய்தியை விரைந்து பரவச்செய்தது. அதனூடாகவே தாங்கள் அதுவரை அவனை மறந்துவிட்டதை உணர்ந்து ஒவ்வொருவரும் குற்றவுணர்வு கொண்டனர். ஆகவே மிகைநெகிழ்வுடன் அரசனின் பெருமையை பேசிக்கொண்டார்கள். கண்ணீருடன் அவன் தோற்றத்தை, சிரிப்பை, கனிவை விதந்தனர். “சில பிறவிகள் இவ்வாறுதான், பிழை ஒன்றில்லாமலேயே வாழ்க்கையை தண்டனையாக ஏற்பவை” என்றார் முதியவர் ஒருவர். “அறத்தின்பொருட்டு இப்பெருந்துயரை இழுத்து தன் தலையில் சூடிக்கொண்டவர் மாமன்னர். அறம் அவரை அறியும்” என்றார் பிறிதொருவர்.

“இங்கு குருதிப்பழி அவர்மேல் கற்பாறையென அமைந்து நசுக்குகிறது. விண்ணில் அவர் தலையில் பல்லாயிரம் ஒளிமணிகள் பதிந்த அணிமுடிபோல் அது அமைந்திருக்கும்” என்றார் கவிஞர் ஒருவர். “ஆயினும் இது கொடுமை. தீங்குக்கும் அழிவுக்கும் முறையென ஒன்று உண்டு என நம்பியே மானுடர் இங்கு வாழ்கிறார்கள். தீங்கற்றோர் துயருறும்போது மானுடத்தை கட்டியிருக்கும் தொல்லறத்தின் சரடு அறுபடுகிறது” என்றான் ஓர் இளைஞன். “அறம் என்றால் ஆட்கொல்லி நோயா? எவரென்று அதற்கு தெரியாதா?” என சினந்தான் இன்னொருவன். ஆனால் அனைவரும் அவன் இறப்புக்காக காத்திருந்தனர், ஒரு துயரக்கதை உகந்த முறையில் உச்சத்துயரில் முடிவுறும் நிறைவுக்காக.

நாளுமென ஆயுஸ் நோய் முதிர்ந்தான். முற்றி உலர்ந்து ஒடுங்கினான். இடைநாழியிலும் அருகமைந்த கூடத்திலுமாக குலமூத்தாரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் காத்திருந்தனர். உள்ளே சென்று மீண்டுவரும் மருத்துவர் ஒவ்வொருமுறையும் மாற்றமென ஏதுமில்லை என்றனர். அருகிருந்து சேடியர் அவன் உடலெங்கும் மென்பஞ்சை ஒட்டவைத்து அதில் குளிர்ந்த நீரூற்றி காய்ச்சலை தணித்துக்கொண்டிருந்தனர். முதியசெவிலி அவன் அருகிருந்து அகலாது உடலை வருடிக்கொண்டே இருந்தாள். “நீரும் உண்ணவில்லை, சொல்லுக்கு விழியசைவும் இல்லை. மூச்சு ஓடுகிறது, நெஞ்சு அடிக்கிறது, பிறிதொன்றும் உயிர் என காட்டவில்லை” என்றார் மருத்துவர். “என் குரலை அவர் கேட்கிறார். குரலுக்கேற்ப விழி அசைகிறது” என்றாள் முதுசெவிலி.

நான்காவது நாள் அந்தியில் அவன் மெல்ல முனகினான். அருகிருந்த முதுசெவிலி  உவகைப்பெருக்குடன் கைகள் பதற வெளியே ஓடிவந்து “முனகுகிறார்” என்றாள். முதுகுலத்தலைவர் “அமைச்சரே, நீங்கள் செல்லுங்கள்” என்றார். “நானா? மருத்துவர் வரட்டும்” என்றான் சுதர்மன். “இக்கணம் தாங்களே அவர் அருகே இருக்கவேண்டும். இனி மருத்துவர் செய்வதற்கொன்றும் இல்லை. சொல் ஒன்று எஞ்சியிருப்பதனாலேயே இவ்விழிப்பு. அவ்வண்ணம் சொல்லென்று ஏதேனும் எழுமென்றால் அது தங்களுக்குரியது மட்டுமே” என்றார் குலத்தலவர். தயங்கியபடி கைகூப்பி சுதர்மன் உள்ளே சென்றான்.

தூசுமணம்போல, இருட்டின் மணம்போல, மட்குதலின் மணம்போல, இறப்பின் மணம் நிறைந்திருந்த அறைக்குள் ஆயுஸ் மென்பட்டுச் சேக்கையில் பிறிதேதோ கலத்திலிருந்து சிந்திய வடிவம் என கிடந்தான். உலர்ந்த இதழ்கள் அசைய இரு கைகளும் பளிங்கில் புழு என தவிக்க மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது அவன் உடல். முனகலென ஏதும் கேட்கவில்லை என அவன் எண்ணிய பின்னர்தான் அந்த வீணொலியே அம்முனகல் என உள்ளகம் உணர்ந்தது. அருகே சென்று காலடியில் வணங்கி நின்ற சுதர்மனை நோக்கி முதுசெவிலி அவன் முகத்தருகே செல்லும்படி கைகாட்டினாள்.

மஞ்சத்தருகே மண்டியிட்டு ஆயுஸின் இதழ்களுக்கு மிக அருகே தன் முகத்தை கொண்டுவைத்து “அரசே” என்றான் சுதர்மன். அவ்வொலியை உடல் பொருட்படுத்தவில்லை. மீண்டும் ஒருமுறை அழைத்தபோது நீண்ட குகைவழிக்கு அப்பால் எங்கோ எதிரொலி எழுவதுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது. அரசன் எங்கிருந்தோ கேட்கிறான் என்ற உணர்வு.  மீண்டும் மீண்டும்  “அரசே” என்று அழைத்தான். ஒவ்வொரு அழைப்பும் ஒன்றை பிறிதொன்று பின்னின்று உந்த முன்னகர்ந்து நீண்டு சென்று அவனுள் நுழைவதுபோல. ஓர் அழைப்பு சென்று தொட்டதும் இமைகளுக்குள் உருண்ட விழிகள் நிலைத்தன. இருகைகளும் பதைத்து எழத்துடிப்பவைபோல் அசைந்தன. நாக்கு வெளிவந்து கருகிய இதழ்களை நீவிச்சென்றது.

“அரசே நான்…” என்றான் சுதர்மன். “பத்மரா? பத்மரே!” என்றான் ஆயுஸ். ஒருகணம் திகைத்து உளம்நின்று பின் “ஆம், பத்மர்தான்” என்றான் சுதர்மன். “நன்று செய்தீர். நான் அதற்கு உற்றவனே” என்றான் ஆயுஸ்.  அவன் என்ன சொல்கிறான் என்று புரியாது சுதர்மன் நோக்கியிருந்தான். “இல்லையேல் நான் விடுதலை கொண்டிருக்கமாட்டேன். அது முடிவிலா வல்லமைகொண்டது.” முகத்தின் உணர்வு துணைக்கவில்லை என்றால் சொற்கள் எத்தனை பொருளற்றவை என்று சுதர்மன் திகைப்புடன் எண்ணிக்கொண்டான்.

“என் மைந்தன் ஆயுஸ்… என்னைப்போல் அவனும் இறப்பை அருகே நின்று காண்பான் போலும். பெருந்துயர் ஒன்றை என்னிடம் கோரிப்பெற்றான்” என்றான் ஆயுஸ். அவன் சொல்வதென்ன என்று உணர்ந்ததும் சுதர்மனுக்கு மெய்விதிர்ப்பு ஏற்பட்டது. தன் கைகளால் ஆயுஸின் கைகளை பற்றிக்கொண்டான். தொடுகையை உணர்ந்ததும் ஆயுஸ் கண்களைத் திறந்து இறுகிய கழுத்தை அசைக்காமல் விழி சரித்து சுதர்மனை நோக்கி  “சுதர்மரே” என்றான்.  “அரசே, தங்கள் அடியவன்” என்றான் சுதர்மன். “என் மைந்தன் மீண்டு வருவான். அதை நான் நன்கு அறிவேன். அவனை மீண்டும் காணும் பேறு எனக்கு மட்டும்தான் இல்லை” என்றான் ஆயுஸ்.

சுதர்மன் விழிநீர் வழிய கேட்டு அமர்ந்திருந்தான். “எந்தை எனக்களித்த உடைவாள் ஒன்று கரவறையில் உள்ளது. என் தந்தைக்கொடையென  அதை நகுஷனுக்கு அளிக்கிறேன். விண்ணுலகுக்குச் சென்று இந்திரனை வென்று அவ்வரியணையில்  அமருகையில் அவன் கையில் அந்த வாள் இருக்கவேண்டும், அது புரூரவஸின் வாள் என அவன் அமரர்க்கரசனிடம் சொல்லவேண்டும்.” சுதர்மன் “ஆணை” என்றான். மீண்டும் விழிகளை மூடி நா பதைத்தான் ஆயுஸ். சுதர்மன் விழிகாட்ட தேன் கலந்த நீரை சிறுகரண்டியால் அள்ளி அவன் நாவில் விட்டாள் முதுசெவிலி. மும்முறை அதை விழுங்கியபோது மீண்டும் சற்று உயிர்த்தெளிவு கொண்டான்.

பலமுறை நீள்மூச்சிழுத்து இருமுறை இருமியபின் அவன் சிலம்பிய குரலில்  “பெண்கள்!” என்றான். “என்ன?” என்று சுதர்மன் கேட்டான்.  “இச்சாளரங்களிலெல்லாம் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான். “யார்?” என்று சுதர்மன் மீண்டும் கேட்டான். “அறியேன்” என்றான் ஆயுஸ். “இளங்கன்னியர். மெலிந்த முதுபெண்டிர்.” சுதர்மன் “மூதன்னையரா?” என்றான். “அறியேன். அவர்களுடன்தான் நான் இதுநாள்வரை பொழுதும் இரவும்  பேசிக்கொண்டிருந்தேன்…” என்றான். “என்னைப்போலவே துயர்சுமந்தவர்கள். இங்கு சூழ்ந்திருக்கிறார்கள்.”

சுதர்மன் “யார்?” என்று மீண்டும் கேட்டான். “அறியேன். ஆனால் அரசிகள்” என்றபின் ஆயுஸ் நீண்ட மூச்சொன்றை விடுத்தான். மீண்டுமொரு மூச்செழும் என்று இயல்பாக எண்ணி சுதர்மன் நோக்கியிருந்தான். அது எழவில்லை என்பது சற்றுநேரம் கழித்தே தெரியவந்தது. ஐயுற்று சற்றே அருகில் சென்று அரசனின் முகத்தை பார்த்தான். வற்றி வெடித்த சேற்றில் எழுந்த பாறை என மூக்கு எழுந்த வறண்ட முகம் சிலைபோலிருந்தது. மூக்கருகே கை வைத்தபோது மூச்சிருக்கிறதா என்று அறியக்கூடவில்லை. சாளரக்காற்றில் வியர்வை குளிர்ந்தது. முதுசெவிலி அரசனின் கழுத்தில் கைவைத்தபின்  “நிறைவடைந்துவிட்டார்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

அரண்மனை முறைப்படி உணர்ச்சிகளை அடக்கி “நற்பொழுது நோக்கவேண்டும், முறைப்படி அறிவிப்புகள் எழவேண்டும்… பணிகள் உள்ளன” என்று சொல்லி எழுந்த முதுசெவிலியின் தன்கட்டுகள் ஒரே கணத்தில் அறுந்தன. வெடித்து அழுதபடி திரும்ப மஞ்சத்தில் சரிந்து அரசனின் தலையை எடுத்து தன் மார்போடணைத்தபடி “என் மைந்தா… என் செல்வமே…” என அவள் கதறினாள். “இப்பிறவியில் இதற்குமேல் துயர் எஞ்சியுள்ளதா? என் தெய்வமே… சென்று வா, என் குழந்தையே!” என்றாள். வெறியுடன் தன் தலையிலறைந்தபடி “எவர் பழிக்கோ துயர்சுமந்தாய். இனி தெய்வங்கள் சுமக்கட்டும் உன் பழியை.  உன்னை நின்று வாட்டிய அறம் நாண்கொள்ளட்டும். இனி இந்த வேளையில் இந்நகரின் அகல்சுடர்கள்  அனைத்தும் நடுங்கி அதிரட்டும். என் கண்ணே, என் அமுதே… உனக்கு முலைகொடுத்த மார்பில் அறைந்து சொல்கிறேன். உன் பழி இனி இக்குடியில் என்றும் தொடரட்டும்!” என கூவி அழுதாள்.

சுதர்மன் எழுந்து அரசனின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அழுகைக்குரல் கேட்டு கதவு திறக்க உள்ளே வந்த குலமூத்தோர் முதுசெவிலி நெஞ்சிலறைந்தபடி மயங்கி அரசன் உடல் மேலேயே விழுந்துவிட்டதை கண்டனர். நிமித்திகன் வெளியே சென்று அங்கே காத்து நின்றிருந்தவர்களிடம் “முரசுகள் முழங்குக! குருநகரியின் பேரரசர், சந்திரகுலத்துத் தோன்றல், பெரும்புகழ் புரூரவஸின் மைந்தர் விண்புகுந்தார்” என்று அறிவித்தான்.

tigerநகுஷனை அரண்மனையிலிருந்து கவர்ந்து செல்லும்பொருட்டு ஹுண்டனின் அமைச்சன் கம்பனன் உருவாக்கிய ஒற்றர் அமைப்பு மூன்றடுக்கு கொண்டிருந்தது. சேடியரென உருமாறி அரண்மனைக்குள் நுழைந்து  அனைவரும் ஏற்க பரவியிருந்த ஏழு நாகப்பெண்கள் அகத்தளங்கள், கரவறைகள், சுரங்கவழிகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் ஆராய்ந்து அவர்களுடன் மந்தணமுறையில் தொடர்புகொண்டிருந்த வெளியொற்றர்களுக்கு செய்தி சொன்னார்கள். அரண்மனைக்கு வெளியே கோட்டை முகப்பு வரை செறிந்திருந்த மரங்களின் இலைப்பரப்பினூடாகவே பரவியிருந்தனர் பச்சைப் பாம்புபோல் பிறர் விழிக்குத் தெரியாமல் இலையடர்வுக்குள்  இருக்கத்தெரிந்த பறக்கும் நாகர். அப்பால் அவர்களின் விரைவுப்படை வணிகர்கள் என புரவிகளுடன் காத்திருந்தது.

மைந்தனை தன் கையில் வாங்க பல நாட்கள் முயன்றாள் நாகசேடி. இறுதியில் வழக்கத்துக்கு மாறாக அவன் திமிறித் துள்ளவே ஆடை அவிழ்ந்த நிலையில் அவனை அவள் கையில் கொடுத்தாள் முதுசேடி. அக்கணமே தன் கையிலிருந்த கணையாழியால் அவன் தொடையில் மெல்ல குத்தி வலுகுறைக்கப்பட்ட நாகநஞ்சை உடலுக்குள் செலுத்தி அவனை துயில்கொள்ளச் செய்தாள். அவள் முன்னரே வெட்டி வழியமைக்கப்பட்டிருந்த வாயில் வழியாக வெளிப்போந்ததும் அவளிடமிருந்து அவனைப்பெற்று தோல்கிழியில் சுற்றி உடலில் கட்டிக்கொண்டு மரங்களினூடாகவே தாவி வெளிவந்தனர் பறக்கும் நாகர். கீழே மணம் குழப்பப்பட்ட நாய்கள் திசையறியாது குரைத்துக்கொண்டிருந்தன. அவர்களிடமிருந்து மைந்தனைப்பெற்ற விரைவுப்படையினர் புரவியில் காட்டைக் கடந்து மறுநாள் புலரிக்குள் ஹுண்டனின் நகரை அடைந்தனர்.

முன்னரே ஹுண்டனுக்கு செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளக்கிளர்ச்சியுடன் எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்த ஹுண்டனின் முன்பு மயங்கி கைகால் தளர்ந்து விரியக்கிடந்த மைந்தனை தூக்கிக்காட்டினான் கம்பனன். வாய் கோட புன்னகைத்து “நன்று, ஒரு காய்நகர்வில் இக்களத்தில் நான் வென்றேன். இனி நீ ஆடுக!” என எவரிடமோ என நோக்கி சொன்னான். விழிகளில் வினாகொண்ட கம்பனனிடம் “நான் இங்கிருந்து ஒரு நாற்களமாடுகிறேன். மறுதரப்பில் இருந்தாடுவது நூலோரால் ஊழென்று சொல்லப்படும் அறியமுடியாமை. பார்ப்போம்” என்றபின் குனிந்து  “இவனா அவளை மணக்கவிருப்பவன்? இவனா எனக்குப் போட்டியாக எழுந்த மணமகன்?” என்றான்.

அறியாது உரக்க நகைத்துக்கொண்டே கம்பனனிடம்  “மாபெரும் வேடிக்கை! பால்மணம் மாறாத இந்த மைந்தன் நான் விழையும் பெண்ணை என்னிடமிருந்து கவர்ந்து செல்லும் காதலன். கைக்குழவியுடன் பெண்போர் புரிந்த முதல் நாகன் நான்” என்றான். அவனால் நகைப்பை அடக்கவே முடியவில்லை. புன்னகைத்தபடி கம்பனன் சொன்னான் “அறியுந்தோறும் நாம் அறிவதொன்றே, இப்புவியில் எதுவும் இயல்பானது” என்றான். விழிவாங்காமல் அக்குழவியையே நோக்கினான். “பிறிது எதையும் நோக்கமுடியவில்லை. எதையும் எண்ணவும் இயலவில்லை. இக்குழவி என் மறுபகுதி எனத் தோன்றுகிறது. ஊழ் இதை மறுமுனையாக அமைத்துள்ளதா?” என்றான். குனிந்து நோக்கி கைகளைச் சுருட்டி இறுக்கியபடி “அள்ளி அணைத்து உடலுடன் இறுக்கவேண்டுமென வெறி கிளர்கிறது. கொன்று குருதி பூசிக்கொள்ளவேண்டும் என்று வஞ்சமும் எரிந்தெழுகிறது” என்றான்.

கம்பனன் “அது உண்மையிலேயே உங்கள் மறுபாதியென்றிருக்கலாம்” என்றான். ஹுண்டன் விழிதூக்க “அந்த முனிவர்மகளின் தீச்சொல்லின்படி இவன் உங்களை கொல்லவிருப்பவன்” என்றான். “ஆம்!” என கற்தொடையில் அறைந்து சிரித்த ஹுண்டன் “அதையும் நோக்கிவிடுவோம். என் விழைவையே மெய்யாக்குகிறேன். இவன் என் உடல்புகுந்து நான் என்றே ஆகுக!” என்றான்.  மீசையை நீவியபடி தனக்கே “நன்று!” என்றபின் திரும்பி தன் துணைவியரை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.

அரசியரான வித்யுதையும் விபுலையும் வந்து அவன் அருகே நின்றனர். “தேவியரே கேளுங்கள், பிறிதொருவரை முற்றிலும் என்னால் நம்ப இயலாதென்பதனால் இம்மைந்தனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இன்றிரவே இவன் கொல்லப்பட வேண்டும். இவன் ஊனை சமைத்து எனக்கு அந்தியுணவென பரிமாறுக! இது என் ஆணை” என்றான். அவர்கள் மெல்ல நடுங்குவது தெரிந்தது. “என்ன?” என்றான் ஹுண்டன். “ஆணை” என்றபடி வித்யுதை  மைந்தனை கையில் வாங்கிக்கொள்ள அவள் ஆடைநுனியை பற்றிக்கொண்டாள் விபுலை. இருவரும் தலைவணங்கி வெளியேறினர்.

“நானே அதை செய்திருப்பேனே? எதற்கு இங்கே கொண்டுவரவேண்டும்? கொல்வதென்றால் அங்கு அரண்மனையிலேயே இவனை கொன்றிருக்கலாம் அல்லவா?” என்றான் கம்பனன். “நான் இவனை காணவேண்டுமென்று விரும்பினேன். இவன் என் உடலென்றாக வேண்டுமென்பது ஊழ்போலும்” என்றான் ஹுண்டன். “இறுதிவரை என்னுடன் இவனும் இருப்பான்” என்றபடி மீண்டும் உரக்க நகைத்தான். உளக்கொந்தளிப்பில் நகைப்பவர்களின் விழிகள் நகைப்புக்கு மிக அப்பாலிருக்கும் என கம்பனன் கண்டிருந்தான். “அதை ஏன் அரசியர் செய்யவேண்டும்?” என்று அவன் கேட்டான்.

“இருவரும் மைந்தர் பிறக்காத துயரிலிருக்கிறார்கள். தங்கள் கைகளால் ஒரு மைந்தனைக் கொன்றால் அத்துயரிலிருந்து மீள்வார்கள்” என்றான் ஹுண்டன். “திகைக்காதே. நான் உளச்சிதைவடையவில்லை. நான் சொல்வது ஓர் மாறா உண்மை. நான் தொட்டு அறிந்து எடுத்துச் சூடிய ஒன்று” என்றபின் மெல்ல உடல் அசைத்து முன்னெழுந்து “ஒளிநோக்கி எழுந்து துயர்மீளலாம் என்று நூல்கள் சொல்லுகின்றன. அது கடினமான பாதை. இருள் நோக்கி விழுந்து துயர் மீள்வது மிக மிக எளிது. நான் நன்கு அறிந்திருக்கிறேன் அதை. அவ்வண்ணமே நான் மீண்டேன்” என்றபின் மீண்டும் உரக்க நகைத்தான்.

உடல் பாதி கல்லென்றானபின் எஞ்சியதில் நஞ்சு நிறைய அரசன் பித்தனைப்போல் ஆகிக்கொண்டிருப்பதை கம்பனன் உணர்ந்திருந்தான். அவ்வெண்ணத்தை விழிகளில் காட்டாமல்  “நன்று” என்றான். “பாதி கல்லென்றானால் மீதி உடலென்றமைய முடியாது, மூடா. அது அனலென்று எரிந்தாகவேண்டும்” என்றான் ஹுண்டன். “ஆம், அதை தாங்களே அறிவீர்கள்” என்ற கம்பனன் “நான் விடைகொள்கிறேன், அரசப்பணிகள் மிகுதியாக உள்ளன” என்றான். “அஞ்சாதே. உன்னை உண்ணும்படி சொல்லப்போவதில்லை. ஏனென்றால் இவ்வூனின் மொத்தமும் எனக்கே. இவனை நான் பகிர்ந்துகொள்ளமுடியாது. நான் என்னையும் இவனுடன் மட்டுமே இதுகாறும் பகிர்ந்துகொண்டுள்ளேன்” என்றான்.

கம்பனன் தலைவணங்க “நீ எண்ணுவதென்ன என்று எனக்குத் தெரியும். பித்தன் என்று, அல்லவா?” என்றான் ஹுண்டன். “ஆம், ஆனால் இளிவரலாகவோ வசையாகவோ அல்ல. பித்தும் வீரனுக்குப் பெருமையே” என்றான் கம்பனன். “அதை சொல்… சூதர்களும் பாடகர்களும் அவ்வாறே பாடுக!” என்று சொல்லி மீண்டும் நகைத்த ஹுண்டன் “ஒவ்வொரு நாளும் இருண்டு, கீழ்மை கொண்டு, கசந்து, கடுமையாகிறேன். அதனூடாக மேலும்மேலுமென கூர்கொள்கிறேன். அது என்னை விடுவிப்பதையே ஒவ்வொருகணமும் காண்கிறேன்” என்றான்.

எண்ணச்சுமையேற மீசையை நீவியபடி “கொன்றிருக்கிறேன், குறை எஞ்சாது வென்றிருக்கிறேன், மிதித்துக் கடந்திருக்கிறேன், தருக்கி நின்றிருக்கிறேன். இதுவரை என் உள்ளாழம் நடுங்கும் பெரும்பழி எதையும் இயற்றியதில்லை. இன்று அதற்கு ஆணையிட்டிருக்கிறேன். இவ்வாணையை இடும்போது என் உளம் தயங்குகிறதா, குரல் நடுங்குகிறதா என்று நானே நோக்கினேன். இல்லை, என் உள்ளே துலாமுள் அசைவுறவில்லை. அமைச்சரே, அவ்வண்ணமெனில் நான் முற்றிலும் விடுபட்டுவிட்டேன் என்றல்லவா பொருள்?” என்றான் ஹுண்டன். கம்பனன் “ஆம், அரசே” என்றான்.

“முதுநாகம் தன் நஞ்சை முத்தென்றாக்கிக் கொள்கிறது. அதன் ஒளியில் பிறர் காணா உலகொன்றை அது அடைகிறது” என்றான் ஹுண்டன். “நச்சுமணி சூடிய நாகத்தால் விண்ணில் பறக்க முடியும். நோக்குக, இத்தீமையின் விசையாலேயே என் கல்லுடலைத் தூக்கி எழுவேன். காற்றில் பறப்பேன். இந்நகரும் என் குடியினரும் அதைக் காணத்தான் போகிறார்கள்” என்று ஹுண்டன் சொன்னபோது முகம் சிவந்து கழுத்துநரம்புகள் புடைத்து அசைந்தன. “அதன்பின் அவளிடம் செல்வேன். அவள் மட்டுமே அறிந்த ஒரு வினாவை கேட்பேன். பிற எவரிடமும் நான் பகிராத ஒன்று அது.” கம்பனன் “நன்று அரசே, அவ்வண்ணம் நிகழட்டும்” என்றபடி வெளியேறினான்.